அங்காடித் தெரு – மினி விமர்சனம்


அங்காடித் தெருவின் பலமும் பலவீனமும் ஒன்றேதான் – அதன் கதைக் களம். இயக்குனருக்கு ரங்கநாதன் தெரு எப்படி இயங்குகிறது, சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி ஒரு அங்காடியில் வேலை செய்யும் கீழ் மட்ட ஊழியர்கள் எப்படி எல்லாம் சக்கையாக பிழியப்படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நமக்கு சொல்ல விருப்பம். அதே நேரத்தில் ஒரு கீழ் மட்ட ஊழியனின் கதையை சொல்லவும் விருப்பம். காட்டின் கதையை ஒரு மரத்தின் கதையை வைத்து சொல்ல நினைத்திருக்கிறார். இது ரொம்ப கஷ்டமான வேலை. அவருக்கு அதில் தோல்விதான். ஆனால் இப்படி ஒரு களம் தமிழ் படங்களில் வந்ததே இல்லை. படத்தில் வரும் அநேக காரக்டர்கள் உண்மையான மனிதர்களாகத் தெரிகிறார்கள். அவர்களில் நிறம், உருவம் எல்லாம் பார்த்து பார்த்து காஸ்டிங் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த விதத்தில் நல்ல முயற்சிதான்.

இது மினி விமர்சனம். நீளமான விமர்சனம் எழுதுவதாக நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். அதனால் நான் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப்போவதில்லை. அப்புறம் புதுப் படத்துக்கு விவரமாக கதை எழுதி spoiler உருவாக்கும் உத்தேசம் இல்லை. ஹீரோ ஹீரோயின் கதை மோதல், பிறகு காதல் கதைதான் – ஆனால் சுவாரசியமாகப் போகிறது. ரங்கநாதன் தெருவை பற்றி நமக்கு சொல்ல சேர்க்கப்பட்டிருக்கும் உப கதைகள் அனேகமாக மெயின் கதையுடன் ஒட்டவில்லை. ஆனால் அவையும் சுவாரசியமாகத்தான் இருக்கின்றன. இரண்டு இடங்கள் எனக்கு பிடித்திருந்தன. ஒன்று மகா மோசமாக நாறும் கழிவறையில் வாழும் வழியைக் காண்பவன் பற்றிய உபகதை; இன்னொன்று காதலர்கள் பிரியப் போகிறார்கள் என்ற மாதிரி திரைக்கதையை அமைத்துவிட்டு ஹீரோ “நான் நல்லா யோசிச்சுட்டேன், நாம உடனடியா கல்யாணம் பண்ணிக்கணும்” என்று சொல்லும் இடம் – அப்படி சொல்வது ப்ராக்டிகல் இல்லைதான், முக்கால்வாசி பேர் பிரியத்தான் செய்வார்கள், ஆனால் இப்படி சொல்வதுதான் படம் முழுவதும் ஊடுருவி இருக்கும் சோகத்துக்கு நல்ல மாற்றாக அமைகிறது.

எனக்கு வசனம் எல்லாம் ரசிக்கத் தெரியாது. நான் கடைசியாக ரசித்த வசனம் மனோகரா, பராசக்தி படங்களில்தான். ஆனால் சில இடங்களில் வசனம் நன்றாக அமைந்திருக்கிறது என்று எனக்கே தெரிகிறது. “வானாகி மண்ணாகி” கடவுள் வாழ்த்து பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம், ஃபெயிலான நண்பனை அவன் அப்பா ராகு காலத்தில பொறந்தவனே என்று திட்டும்போது அதற்கு அவன் கொடுக்கும் கவுண்டர், பட்டணத்து பொண்ணு-ஹீரோ காதலில் வெளிப்படும் ஜெயமோகனின் “குசு”ம்பு என்று ஒரு லிஸ்ட் வருகிறது.

கீழ்மட்ட ஊழியர்கள் வாழும் விதம் மிக நன்றாக வந்திருக்கிறது – உண்மையை அடிப்படையாக கொண்டதால்தான் இப்படி வந்திருக்கிறது. சின்ன சின்ன காரக்டர்கள் – ஹீரோயினின் தங்கையின் எஜமானி அம்மா, மாட்டிக் கொள்ளும் இன்னொரு காதலன்-காதலி, நண்பன் காதலிக்கும் பெண், விளம்பரத்தில் நடிக்கும் ஸ்னேஹா, கடை முதலாளி மாதிரி பலர் – நன்றாக வந்திருக்கிறது. நல்ல நடிப்பு. அதுவும் கதாநாயகி அஞ்சலி கலக்குகிறார். கூட வரும் நண்பனுக்கு நல்ல ரோல். அந்த அடி போடும் அண்ணாச்சி கலக்குகிறார். ஹீரோ நன்றாக நடித்திருக்கிறார்.

முதலில் வரும் கிராமத்து சீன்களும் – அது இன்று ஒரு cliche மட்டுமே, ஜெயமோகனால் கூட அதில் ஒன்றும் புதுமையாக எழுத முடியவில்லை – இரண்டாம் பாதியில் வரும் ஒரு பாட்டும் படத்தின் டென்ஷனை குறைக்கின்றன. ஃப்ளாஷ்பாக்காக இல்லாமல் நேரடியாகவே கதையை சொல்லி இருக்கலாம்.

அவள் அப்படி ஒன்று அழகில்லை பாட்டு எனக்கு பிடித்திருந்தது.

மற்ற பாட்டு எதுவும் நினைவு வரவில்லை.

இந்த மாதிரி படங்கள் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் போக்கிரி, வில்லு, ஆதவன் மாதிரி படங்கள்தான் நம் தலைவிதி என்று ஆகிவிடும். நண்பர் ராஜன் கூட்டம் சேர்த்து ஐந்து பேரைத் தேற்றி முதல் நாள் முதல் ஷோ கூட்டிக் கொண்டு போனார். அவர் இல்லாவிட்டால் அந்த ஷோவை மூன்று நான்கு பேர்தான் பார்த்திருப்பார்கள். எத்தனையோ பணம் செலவழிக்கிறீர்கள், போய்ப் பாருங்கள்! சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் செர்ரா அரங்கில் ஓடுகிறது. லோக்கல் ஆட்கள் போய்த்தான் பாருங்களேன்!

பத்துக்கு ஏழு மார்க். B grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயமோகனுக்கு வந்த கடிதங்கள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் விளக்கம்
எழுத்தாளர் அ. முத்துலிங்கம், எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் பா. ராகவன், நண்பர் திருமலைராஜன் எழுதிய விமர்சனங்கள்
உப்பிலி ஸ்ரீனிவாசுக்காக இந்த சுட்டி – சரவண கார்த்திகேயனின் விமர்சனம்

செர்ரா தியேட்டர் தளம்