இயக்குனர் தங்கர் பச்சான்


இந்த தளத்தில் சாதாரணமாக நான் “புது” படங்களை பற்றி எழுதுவதில்லைதான். தங்கர் பச்சானின் எழுத்துகளை பற்றி கூட்டாஞ்சோறு தளத்தில் எழுதினேன், சரி அவர் படங்களை பற்றி இங்கே எழுதுவோமே என்றுதான்.

தங்கர் பச்சான் இயக்கிய படங்களில் நான் சொல்ல மறந்த கதை, அழகி, பள்ளிக்கூடம் ஆகியவற்றை பார்த்திருக்கிறேன். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஒன்பது ரூபாய் நோட்டு பார்த்ததில்லை.

நான் பார்த்த படங்களில் வரும் மனிதர்கள் – குறிப்பாக இந்த சைடி காரக்டர்களில் வருபவர்கள் – உண்மையான, நகமும் சதையும் உள்ள மனிதர்களாக தெரிகிறார்கள். தமிழ் சினிமாவில் இது பெரிய விஷயம். ஒரே காரக்டரை திருப்பி திருப்பி பல படங்களில் செய்பவர்கள் அதிகம் இங்கே. நம்பியார், மேஜர், ரங்காராவ், எம்.ஆர். ராதா, கே.ஆர். விஜயா, மனோகர், டெல்லி கணேஷ், பூர்ணம், வடிவேலு, விஜய் போன்றவர்கள் மிக தெளிவாக தெரிபவர்கள். திறமை இருந்தாலும் வீனடிக்கப்படுவார்கள்.

சொல்ல மறந்த கதைதான் எனக்கு மிகவும் பிடித்த படம். தொய்வில்லாமல், நம்பகத்தன்மை உள்ள காரக்டர்கள். ஏழை மாப்பிள்ளையாக பிடித்தால், முதலில் வேலை வேலை என்று கத்தினாலும், வீட்டோடு இருந்து சொத்தை பார்த்துக் கொள்வான் என்று நம்பும் கொஞ்சம் திமிர் உள்ள மாமனார், வேலைக்கு போய் தன் காலில் நிற்க வேண்டும் என்று துடிக்கும் மாப்பிள்ளை, இதை பற்றி எல்லாம் பெரிதாக யோசிக்காத, ஆனால் எல்லாம் சுமுகமாக முடிய வேண்டும் என்று நினைக்கும் மனைவி, மாப்பிள்ளையின் தம்பி, மச்சினி, அப்பா, அம்மா, வேலைக்காரப் பெண், மாமியார், குடும்ப நண்பர் ஜனகராஜ், மேலதிகாரி மணிவண்ணன் குடும்பம் எல்லாருமே மிக நன்றாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். பொருந்தாத ஒரே பாத்திரம் புஷ்பவனம் குப்புசாமிதான். அவரை பார்த்தால் கஷ்டப்படுகிற மாதிரியா தெரிகிறது?

சேரனுக்கு மிக பொருத்தமான ரோல். நன்றாக நடித்திருந்தார். பிரமிட் நடராஜன் கலக்கிவிட்டார். ரதி, தம்பியாக வருபவர், மச்சினியாக வருபவர், ஜனகராஜ், அப்பாவாக வருபவர் எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள். புதுமையான கதை இல்லைதான், ஆனால் தொய்வில்லாத திரைக்கதை. சிறு கோபங்கள் மெதுவாக பெரிதாக வெடிப்பது நன்றாக வந்திருக்கும்.

அழகி பெரிதாக பேசப்பட்டது. பேசப்பட்ட அளவுக்கு அதில் விஷயமில்லை. சிறு வயது காதல் நன்றாக வந்திருக்கும். பார்த்திபன் நந்திதா தாசை பார்த்து வருத்தப்படுவது நன்றாக வந்திருக்கும். பண்ருட்டி நண்பர்கள் பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு வருவது, பேசுவது எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் தேவயானி மாதிரி ஒரு பேக்கு மனைவி எங்கே பார்க்க முடியும்? அவருக்கு பார்த்திபனுக்கும், நந்திதாவுக்கும் நடுவே உள்ள உறவு புரிவதே இல்லையாம். ஆனால் above average தமிழ் படம் என்பது உண்மைதான்.

பள்ளிக்கூடம் ஒரு mixed bag. நம் ஒவ்வொருவருக்கும் உள்ள நாஸ்டால்ஜியாவை நன்றாக பயன்படுத்தி இருப்பார். பள்ளி, கல்லூரி நட்பு இப்போதைக்கு இருக்கும் பணம், அந்தஸ்து ஆகியவற்றை வைத்து மாறுவதில்லை என்பது உண்மையோ பொய்யோ – அப்படித்தான் நினைக்க நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அது இங்கே நன்றாக வெளிப்பட்டிருக்கும். ஆனால் ஸ்ரேயா ரெட்டி சீன்கள் எல்லாமே வேஸ்ட். அப்புறம் பிரசன்னா நரேன் (திருத்திய நல்லதந்திக்கு நன்றி!) சுபம் போடுவதற்காக திடீரென்று மனம் மாறி சிநேகாவை கல்யாணம் செய்து கொள்வது கொஞ்சம் ஃபாஸ்டாக நடந்து விடுகிறது.

தங்கர் பச்சான் உலகின் தலை சிறந்த டைரக்டர்களில் ஒருவர் இல்லைதான். தமிழில் கூட தலை சிறந்த டைரக்டர் இல்லைதான். ஆனால் அவரது படங்கள் above average ஆக இருக்கின்றன. அவரது படங்களில் வரும் மனிதர்கள் கார்ட்போர்ட் கட்அவுட்களாக இல்லை. வட மாவட்டங்களின் பின்புலம் அவரது படங்களில் நன்றாக வெளிப்படுகிறது. இவை அத்தனையும் நல்ல விஷயங்கள், அதனாலேயே பார்க்கலாம்.