Water (2005)


டைரக்டர் – தீபா மேத்தா

கதை பால்ய விவாக கொடுமையினால் பாதிக்கப்பட்ட சுய்யா (சரளா – குழந்தை நட்சத்திரம்) என்ற கதாபாத்திரத்தை சுற்றி அமைந்துள்ளது. 1930களின் இறுதியில் வட இந்தியா. வக்கீல் நாராயண் (ஜான் ஆப்ரகாம்) கண்ணில் படுகிறார் அழகான கல்யாணி (லிஸா ரே). காதல் மலர்கிறது. நாராயன்னின் தாய் (வஹீதா ரஹ்மான்) வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த தன் மகன், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் சந்தோஷம் அடைகிறார். பிறகு என்ன திருமணம் தானே? அது தான் இல்லை.

ஒரு பெரும் பிரச்சனை. கல்யாணி, சுய்யாவை போல், கணவன் யார் என்றே தெரியாமல் பால்ய விதவையாக, ”சமுதாயத்திற்கு ஆகாது” என்று ஒதுக்கப்பட்ட விதவைகள் சென்று சேரும், விதவைகள் ஆஸ்ரமத்தில் வந்து சேர்ந்து இப்பொழுது ஒரு பெண்ணாக உருவாகியிருக்கிறார். நாரயண் கல்யாணியை மணப்பது 1938ல் ஒரு பெரும் புரட்சியாக இருந்தாலும், பிரச்சனை அதைவிட இடியாப்பச் சிக்கல்.  ஆஸ்ரமத்தின் பாஸ் (பெண் மொட்டை Boss) மதுமதி (மனோரமா) – மூத்த விதவைப் பாட்டி – அக்கறையில் இருக்கும் செல்வாக்கு மிகுந்த ஊர் ”பிராமணர்களுக்கு” ஆஸ்ரமத்தின் இளம்விதவைகளை அனுப்பி வருமானத்திற்கு வழி செய்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் கல்யாணி ஒருவர். காந்திய வழியில் வாழும் நாராயன்னுக்கு அது ஒரு பிரச்சனையில்லை. ஊர் “பிராமணர்களில்” ஒருவர் தன்னுடைய தந்தை. அது தான் சிக்கல்.  அவர் ஒத்துக் கொண்டாலும் கல்யாணி என்ன சொல்வார்?

ஆஸ்ரமம் என்று பெயர்தானே தவிர அது ஒரு டஞ்சன். பல சைஸில், பல வயதில் விதவைகள். ஒவ்வொருவருக்கும் மனதில் ஒவ்வொரு ஏக்கங்கள். தீபா மேத்தா மனதில் உரைக்கும்படி காட்சி அமைப்புகளை ஏற்ப்படுத்தியிருக்கிறார். பழமைவாதிகளும் மனம் நெகிழும் படி ஒன்றும் அறியா விதவைகளின் அவலங்கள் திரைகதை படுத்தப்பட்டிருக்கிறது. அனேகமாக நடிகர்கள் அனைவரும் மிகவும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். சுய்யா ஆத்திரம் (மதுமதியின் உடலை அமுக்கி விடும் பொழுது), கனிவு (ஒரு விதவைப் பாட்டிக்கு லட்டு வாங்கி கொடுக்கும் பொழுது) முதலிய பாவங்களை அருமையாக வெளிப்படித்தியிருக்கிறது.

சகுந்தலா (ஸீமா பிஸ்வாஸ்) சுய்யாவை காப்பாற்றுவதற்க்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக இல்லாமல், அறிவு பூர்வமான விவாதங்களிர்க்காக கையண்டிருப்பது  பிரில்லியண்ட் டாக்டிக். விவாதம் அளவாக இருந்தது. ஆழமாக இல்லாததால் வாய்ப்பை நழுவ விட்டது போல் தோன்றுகிறது. பல காட்சிகளை இலங்கையில் படமாக்கியிருக்கிறார்கள். ரம்மியமான சூழ்நிலைகளை மனதில் சாட்சாத்கரம் செய்து அதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தீபா மேத்தா ஒரு ஜீனியஸ் தான்.  அனுராக் காஷ்யப் வசனம். அருமையான மரம் ஒன்று காண்பிகிறார்கள். உண்மையான மரமா, செயற்கை மரமா என்று தெரியவில்லை.

ஒரு ஹெவி சப்ஜெக்ட் என்றாலும் இரண்டரை மணி நேரம் quality timeஆக இருந்தது மனதுக்கு திருப்தி. இப்படி ஒரு சினிமா பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது போல் ஒரு உணர்வு. எந்த மொழிப்படம் என்ற உணர்வே இல்லை. மீண்டும் ஒரு முறை கண்களையும் காதுகளையும் தீட்டிக் கொண்டு மனைவியுடன் பார்க்கவேண்டும்.

நண்பர் உப்பிலி சீனிவாஸுடன் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது, அவருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்று கூறினார். சப்ஜெக்ட் சிலருக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன். பாரலல் சினிமா மனநிலைகளயும் சார்ந்தது என்று நீண்ட சிந்தனைக்குப் பிறகு உணர்ந்துகொண்டேன். (விஜய் சினிமா போல் பூலியன் மதிப்பீடுகள் இருக்கமுடியாது. அதுவே Water போன்ற படங்களின் வெற்றியும் ஆகிறது.)

மார்க் – பத்துக்கு எட்டு.

தொடர்புடைய சுட்டி

திரைப்படத்தில் பங்கேற்றவர்களின் நீண்ட  பட்டியல்