சிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்


இன்னுமொரு விகடன் விமர்சனம், நன்றி விகடன்!

டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.

வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

ஷீலா: இந்தப் படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்புக்கு அடுத்தபடியா என்னைக் கவர்கிறது ‘எடிட்டிங்’. அதுவும் அந்த ரேப்பிங் ஸீனில் எடிட்டிங் ரொம்ப நல்லா இருந்தது. அதேபோல, லதாவின் நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.

வதூது: டைரக்டரோட திறமைக்கு எடுத்துக்காட்டா அந்த ரேப் ஸீன்லே ரிக்கார்டு வால் யூமை அதிகப்படுத்துவதுபோல் காட்டுவது நன்றாக இருக்கிறது. ரேப் முடிஞ்சதும் ரிக்கார்டில் ஊசி தேய்ந்துகொண்டிருப்பது நல்ல டெக்னிக்!

ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!

(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.

ரவிச்சந்திரனை சந்தித்த சாரதா


ரவிச்சந்திரனை சந்தித்த அனுபவத்தை சாரதா இங்கே எழுதி இருக்கிறார். ஓவர் டு சாரதா!

நான் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு கல்ச்சுரல் விழாவுக்காக தோழிகள் சிலர் நாட்டிய நாடகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். (அந்த நாட்டிய நாடகத்தில் நான் இல்லை, காரணம் நாட்டியம் பார்க்க மட்டுமே தெரிந்தவள் நான்). அதற்கு இசையமைக்க நல்ல இசையமைப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்யலாம் என்று யோசித்து, கடைசியில் ‘முத்து’ என்பவரை போடலாம் என்று முடிவெடுத்தனர். திரு முத்து, அப்போது இசை ஞானி இளையராஜா ட்ரூப்பில் இசை உதவியாளர்களில் ஒருவராக இருந்தார். அவரைச் சந்திக்க சென்ற சின்ன குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டனர். (இம்மாதிரி திரையுலக சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்க செல்லும் குரூப்பில் நானாக ஒட்டிக்கொள்வது வழக்கம். காரணம் நான் ஒரு சினிமா பைத்தியம் என்பது தெரிந்த விஷயம்).

மாலை சுமார் ஆறு மணியிருக்கும். மயிலாப்பூர் சித்திர குளத்துக்கு சற்று தொலைவில் ஒரு தெருவில்தான் முத்து குடியிருந்தார். விசாரித்துக் கொண்டே அவருடைய வீட்டை அடைந்தோம். அவரது வீட்டுக்கு எதிரே சின்னதாக ஒரு அழகிய பங்களா தென்பட்டது. வாசலில் போர்டு எதுவும் இல்லை. பார்த்தால் யாரோ பெரிய புள்ளியின் வீடுஆக இருக்கும் என்பது மட்டும் தெரிந்தது. யாராவது பெரிய பிஸினஸ்மேன், அல்லது அதிகாரி வீடாக இருக்கும் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டே முத்துவின் வீட்டுக்குள் சென்று அவரிடம் கல்லூரி நாட்டிய நாடகத்துக்கு இசையமைக்கக் கேட்டோம். அவர் டைரியைப் புரட்டிப் பார்த்துவிட்டு நாங்கள் கேட்ட அந்த தேதியில் அவர் முக்கியமான ரிக்கார்டிங்கில் வாசிக்க இருப்பதாகச் சொல்லி, எங்கள் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனிடையே அவருக்கு ஏதோ முக்கியமான போன் வரவே, ‘ஸாரி, வருத்தப்பட்டுக்காதீங்க. அவசரமா போக வேண்டியிருக்கு. என் மனைவியிடம் பேசிவிட்டு எல்லோரும் டீ சாப்பிட்டு விட்டுப் போங்க’ என்று எங்களிடம் சொல்லி விட்டு, வாசலில் நின்ற பைக்கில் ஏறிப் பறந்தார். முத்துவின் மனைவி எங்களிடம் அன்போடு உரையாடினார். அப்போது எதார்த்தமாக, எதிரில் இருக்கும் பங்களா வீட்டில் இருப்பது யார் என்று கேட்டோம். ‘உங்களுக்குத் தெரியாதா?. நடிகர் ரவிச்சந்திரன் சாரும், அவர் மனைவி ஷீலாவும் அந்த வீட்டில் இருக்காங்க’ என்று சொல்லி, இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இப்போது எங்களுக்குள், ‘ஏய் எப்படியாவது அவங்களை சந்திச்சிட்டுப் போகலாம்டி. இந்த மாதிரி சந்தர்ப்பம் இனிமே கிடைக்காது’ என்று சொல்ல, எங்களில் ஒருத்தி, ‘நாம நினைச்சவுடன் அவங்களை சந்திக்க முடியுமா?. திடீர்னு வாசலில் போய் நின்னா உள்ளே விடுவாங்களா?’ என்று சந்தேகம் கிளப்ப, இன்னொருத்தி, ‘ஒரு ஐடியா, இவங்க (முத்துவின் மனைவி) மூலமாகவே பெர்மிஷன் கேட்போமே’ என்று சொல்லி அவங்களிடம் சொல்ல (இதனிடையே டீ வந்தது, குடித்தோம்). நாங்க சொன்னதைக் கேட்டு சிறிது தயங்கிய அவர், பின்னர் போன் செய்தார். ரிஸீவரை கையில் பொத்திக்கொண்டு, எங்களிடம் ரகசிய குரலில் ‘சார்தான் பேசுறார்’ என்றவர் போனில், ‘சார், நான் எதிர் வீட்டிலிருந்து முத்துவின் மனைவி பேசுறேன். இங்கே வந்த சில கேர்ள் ஸ்டூடண்ட்ஸ் அவரைப் பார்க்க வந்தவங்க உங்களைப் பார்க்க பெர்மிஷன் கேட்கிறாங்க…(gap)… அப்படியா?..(gap).. ரொம்ப தேங்க்ஸ் சார்’ என்று ரிஸீவரை வைத்தவர், ‘சார் வரச் சொல்றார்’ என்றதும், எங்கள் மனதுக்குள் சந்தோஷம். முத்துவின் மனைவிக்கு நன்றி சொல்லிவிட்டு, எதிர் வீட்டுக்குப் போனோம். வாசலில் நின்றவரிடம் விஷயத்தைச் சொல்ல, உள்ளே போய் கேட்டு வந்தவர், ‘உள்ளே போங்க’ என்றார்.

கூடத்தில் சோபாவில் பூப்போட்ட லுங்கி, ரோஸ் கலர் காட்டன் ஜிப்பா அணிந்து, ரிலாக்ஸ்டாக நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரன், எங்களைப் பார்த்ததும் பேப்பரை மடித்துக் கொண்டே, ‘வாங்க வாங்க, உட்காருங்க. நீங்கள்ளாம் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?’ என்றவாறு பேச்சைத் துவக்கினார். சோபாவில் உட்கார்ந்ததும் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். ‘ரொம்ப சந்தோஷம், நான் நடிச்ச படங்கள்ளாம் பார்த்திருக்கீங்களா?’ என்று அவர் கேட்டதும், தோழிகள் மெல்ல என்னை உசுப்பினார்கள் (காரணம், அந்தக் கூட்டத்தில் நான்தான் அதிகமாக சினிமா பார்ப்பவள், நினைவிலும் வைத்திருப்பவள்). காதலிக்க நேரமில்லையில் ஆரம்பித்து வரிசையாக அவர் படங்களைப் பற்றியும் அவர் நடிப்பையும் சொல்லத் துவங்கியதும், பாதியிலேயே சற்று சத்தமாக சிரித்தவர், ‘ஏது, காலேஜ்ல போயி பாடம் படிச்ச மாதிரி தெரியலையே. பாதி நாள் தியேட்டரிலேதான் குடியிருந்திருப்பீர்கள் போலிருக்கு’ என்று மீண்டும் சிரித்தார். திடீர்னு போறோமே எப்படி பேசுவாரோ என்று நினைத்துப் போன எங்களுக்கு, அவர் பேசிய விதம் ரொம்ப ரிலீஃப் ஆக இருந்தது. ரொம்ப சகஜமாக பேசினார்.

‘ஷீலா மேடம் இருக்காங்களா?’ என்றதும், ‘ஷீலா ஒரு மலையாளப் பட ஷூட்டிங் போயிருக்காங்க. இங்கே மெட்ராஸ்லதான். வர நைட் பதினோரு மணியாகும்னு இப்போதான் போன் பண்ணினாங்க’ என்றார். ‘அப்போ உங்களுக்கு இன்னைக்கு ரெஸ்ட் டேயா சார்?’ என்று கேட்டோம். ‘இல்லேம்மா, காலைல ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிச்சிட்டு இப்போதான் நாலு மணிக்கு வந்தேன். இங்கேதான் ஓஷியானிக் ஓட்டல்ல சீன் எடுத்தாங்க. நாளைக்கும் கண்டினியூட்டி இருக்கு’ என்றார். அவரது சகஜமான பேச்சு கொஞ்சம் தெம்பைத் தந்ததால் நான் தைரியமாகக் கேட்டேன், ‘ஏன் சார் ஃபைட் சீன்ல டூப் போடுறாங்க?. டூப் இல்லாமல் எடுத்தால் என்ன?’ என்று கேட்டதும், தோழிகள் என்னை இடித்து ‘ஏய் என்னடி இதெல்லாம்’ என்று சொன்னதைப் பார்த்துவிட்ட ரவி சார், ‘தடுக்காதீங்க, அவங்க கேட்கட்டும்’ என்றவர், சோபாவின் கைப்பிடியில் கையை ஊன்றி தீர்க்கமாக என் கண்ணைப் பார்த்தபடியே பெரிய லெக்சர் கொடுக்க ஆரம்பிச்சார்…..

‘அதாவதும்மா, இந்த மாதிரி டூப் போடறதுல பல விஷயங்கள் அடங்கி இருக்கு. அதாவது கதாநாயகர்கள் ஆன நாங்க ப்ரொபெஷனல் ஃபைட்டர்ஸ் கிடையாது, ஸ்டண்ட் மாஸ்டர் சொல்லிக் கொடுக்கிறதை வச்சு செய்றோம். சில சமயம் நம்மை மீறி மிஸ் ஆச்சுன்னா, கீழே விழுந்து பலமா அடிபட்டா ஒண்ணு உயிருக்கு ஆபத்து, அல்லது உடல் உறுப்புகளுக்கு ஆபத்து, அடுத்து அடிபட்டு படுத்துட்டோம்னா மொத்த படப் பிடிப்பும் நின்னு போயிடும். ப்ரொட்யூசருக்கு பெரிய அளவுல லாஸ் வரும்.

ரெண்டாவது, டூப் ஃபைட்டர்ஸுக்குத்தான் அந்த டைமிங் கரெக்டா தெரியும். அதாவது ஒரு மாடியிலிருந்து, கீழே ஓடும் ஒரு ட்ரக்கில் குதிக்கணும்னா, எப்போ குதிச்சா, ட்ரக் அந்த இடத்துக்கு வரும்போது கரெக்டா அதன்மீது விழுவோம்னு அவங்களுக்குத்தான் தெரியும். அதுமாதிரி கரெக்டா குதிச்சிடுவாங்க. நாங்க குதிச்சா, கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவ்வளவுதான்.

அடுத்து ஸ்டண்ட் யூனியனில் இருப்பவங்களுக்கு இம்மாதிரி ஃபைட் படங்கள்ளதான் வாய்ப்பு கிடைக்கும். வருமானமும் கிடைக்கும். அதை நாம ஏன் தட்டிப் பறிக்கணும்?. அவங்களுக்கு பாலச்சந்தர் சார் படத்திலோ, கே.எஸ்.ஜி.சார் படத்திலோ வாய்ப்புக்கிடைக்காது. எம்.ஜி.ஆர்.சார் படம், என் படம், ஜெய்சங்கர் படம், இப்போ ஒரு பத்து வருஷமா சிவாஜி சார் படங்கள்ளேயும் பைட் சீன் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஸோ, இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ளேதான் அவங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும். இதை நீங்க ஸ்டூடண்ட்ஸ்ங்கிறதாலே சொல்றேன். நீங்களே பிரஸ் ரிப்போர்ட்டரா வந்திருந்தா சொல்லியிருக்க மாட்டேன். பிரச்சினையாயிடும் (சிரித்தார்).

இன்னொரு முக்கியமான விஷயம் கால்ஷீட் பிரச்சினை. நாங்க ஹீரோக்கள் ஒரே சமயத்துல நாலைந்து படங்கள்ளதான் நடிப்போம், ஆனா எங்களோடு காம்பினேஷன் சீன்ல நடிக்கிற கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பல படங்கள்ள நடிச்சிக்கிட்டிருப்பாங்க. வி.எஸ்.ராகவன் சார், வி.கே.ஆர்.சார், மேஜர் சார், மனோரமா மேடம் இவங்கள்ளாம் ஒரே நேரத்துல முப்பது, நாற்பது படங்கள்ள நடிச்சிக்கிட்டு இருக்குறவங்க. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இவங்க கிட்டே கால்ஷீட் வாங்கியிருப்பாங்கன்னு நமக்குத் தெரியும். நாம பெரிய பந்தாவா டூப் போடாம செய்றேன்னு செஞ்சு அடிபட்டு ஒரு பதினைந்து நாள் படுத்துட்டோம்னா போச்சு. எல்லோர்கிட்டே வாங்கின கால்ஷீட்டுமே வேஸ்ட் ஆயிடும். அப்புறம் அவங்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து கால்ஷீட் வாங்குவது லேசான விஷயமா? அதே தேதியிலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு படத்துக்கும் கொடுத்திருப்பாங்க. அதனால் தயாரிப்பாளர் மாசக்கணக்கா வெயிட் பண்ண வேண்டி வரும். ஷெட்யூல்படி படத்தை முடிக்கலைன்னா எவ்வளவு பெரிய லாஸ்ல கொண்டுபோய் விடும் தெரியுமா?’ என்று முடித்தார். என் சிறுமதியை நான் நொந்துகொண்டேன். அதே சமயம் பரவாயில்லை, கேட்டதால்தானே இவ்வளவு விவரமும் சொன்னார் என்று சமாதானம் அடைந்தேன். (அடேயப்பா டூப் போடுறதுல இவ்வளவு அட்வான்டேஜ் இருக்கா!)

மேலும் சிறிது நேரம் சில விஷயங்களைப் பற்றிப் பேசினோம். எங்கள் ஒவ்வொருவருடைய படிப்பைப் பற்றியும் கேட்டறிந்தார். இதனிடையே பணியாளர் டீயும் பிஸ்கட்டும் கொண்டு வந்து வைத்தார். ‘சார் நாங்க முத்து சார் வீட்டுல இப்போதான் டீ சாப்பிட்டோம்’ என்று சொன்னதும், ‘அது அவர் வீட்டுக்கு போனதுக்கு. இப்போ என் வீட்டுக்கு வந்ததுக்கு சும்மா அனுப்ப முடியுமா?. டீதானே. எத்தனையும் சாப்பிடலாம். எடுத்துக்குங்க’ என்றார்.

‘சார், உங்களை சந்திப்போம்னு ஒரு மணி நேரத்துக்கு முன் வரை நினைக்கவேயில்லை. பெர்மிஷன் கொடுத்ததுக்கும், ஒரு விருந்தினரைப் போல கவனிச்சதுக்கும் ரொம்ப தேங்க்ஸ் சார்’ என்றோம் கோரஸாக. ‘என்ன பெரிசா செஞ்சுட்டேன்னு தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க. நாம இன்னைக்கு சந்திக்கணும்னு ஆண்டவன் எழுதி வசிருக்கான். அதான் உங்களைக் கொண்டு வந்து சேர்த்துட்டான். நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணூம். ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு மணி நேரம் நல்லா ரிலாக்ஸ்டா போச்சு. ஷீலாவைப்பார்க்கணும்னா இன்னொரு நாளைக்கு போன் பண்ணி கேட்டுகிட்டு வாங்க’ என்று வாசல் வரை வந்து அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

முத்து எங்களுக்கு இசையமைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எல்லாம் போச்சு. மாறாக, ரவிச்சந்திரன் அவர்களின் சந்திப்பும் உரையாடலும் மனம் முழுக்க நிறைந்தது. எதிர் வீட்டிலிருந்த முத்துவின் மனைவியைச் சந்தித்து மீண்டும் நன்றி தெரிவித்து விட்டு வந்தோம். ஆட்டோ பிடிக்கணும் என்ற எண்ணம்கூட இல்லை. சளசளவென்று பேசிக்கொண்டே ‘லஸ் கார்னர்’ வரை நடந்தே வந்தோம்.

இந்தச் சந்திப்புக்குப்பின் ரவிச்சந்திரன் என மனதில் பல படிகள் உயர்ந்துவிட்டார். இந்த திரி துவங்கியதற்கு அவருடன் எதிர்பாராமல் நேர்ந்த அந்த சந்திப்பும் ஒரு காரணம் எனலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
ஃபோரம்ஹப்பில் ரவிச்சந்திரன் திரி
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்

பின்குறிப்பு: ஒத்மான் தமீன் பொறுக்க முடியாமல் இள வயது ரவிச்சந்திரனின் ஒரு புகைப்படத்தை அனுப்பி இருக்கிறார், அவருக்கு நன்றி!

துலாபாரம் – Thulabaram (1969)


1969ல் வெளி வந்தது. 1968ல் மலையாளத்திலும் வந்திருக்கிறது. ஏ.வின்செண்ட் இயக்கத்தில், அடூர் பஷி , பிரேம் நசீர், சுகுமாரன் நாயர், ஷீலா (வத்சலாவாக), மற்றும் சாரதா நடித்திருக்கிறார்கள். சாரதாவுக்கு 3 ஊர்வசி விருது கிடைத்ததாக செய்தி.

நடிகர்கள் – AVM ராஜன், மேஜர் சுந்தர்ராஜன், பாலையா, நாகேஷ், முத்துராமன் வி.எஸ்.ராகவன், சுருளிராஜன், என்னெத்தெ கன்னெய்யா, கரிகோல்ராஜ், பீலி சிவம், செந்தாமரை
நடிகைகள் – காஞ்சனா, சாரதா, S.N.லக்‌ஷ்மி, காந்திமதி
பாடல்கள் – கண்ணதாசன்
இசை – தேவராஜன்
டைரக்‌ஷ்ன் – ராமன்னா

வத்சலா (காஞ்சனா)வக்கீல். மூன்று கொலைகள் செய்த தோழிக்கே அதிக பட்சம் தண்டனை வாங்கி கொடுக்க முயல்வது மூலம் காட்சி தொடங்குகிறது. எதனால் என்பது தான் கதை. பிளாஷ்பாக். சத்திய மூர்த்தி (மேஜர்) விஜயாவின் (சாரதா) அப்பா.  சத்தியத்தையும்,  தர்மத்தையும் கடைபிடிப்பவர்.பாபு (முத்துராமன்), விஜயா, வத்சலா ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். பாபுவுக்கும்,
விஜயாவுக்குமிடையில் அன்பு மலர்கிறது. (அல்லது எல்லோரும் அப்படி நினைக்கிறார்கள்) சத்திய மூர்த்தி இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்த பேஷண்ட்.  நீதி தன் பக்கமிருப்பதால் கோர்ட்டில் தன் வீட்டை பாலசுந்தரத்திடமிருந்து (ராகவன்) மீட்பதற்கு கேஸ் நடத்தினார்.  வக்கீல் சம்பந்தம் (பாலையா) தன் கட்சிக்காரர் சத்தியமூர்த்திக்கு நியாயமான முறையில் வழக்காடாததால் கேஸ் தோற்றுவிடுகிறது.  வீடு போய்விடுகிறது. சத்தியமூர்த்தியும், விஜயாவும் தெருவுக்கு வந்து விடுகிறார்கள். எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பண்ணமுடியாத நிலைமையில் மூன்றாவது முறை அட்டாக் வந்து விஜயாவை தனியாக ராமுவிடம்( ஏவிஎம் ராஜன்) விட்டு விட்டு போய்விடுகிறார். பாபு கைவிட்டு விட ராமு கைகொடுக்கிறார்.

வறுமையில் வாடுகிறார்கள். ராமுவும் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு முதலாளி ராகவனிடம் மோதி உயிரையும், குடும்பத்தையும் தனியாக விட்டு விடுகிறார்.  சோகம் கூரையை பிய்க்கிறது.  அதற்க்கு பிறகாவது கடவுள் கூரை பிய்ந்த அந்த் ஓட்டை வழியாக சந்தோஷத்தை பொழிகிறாரா? பொதுவாக விஜய் படங்களாக இருந்தால் ஃபார்முலா படி இந்த இடத்தில் ஒரு பாட்டு ஆரம்பித்து அது முடிவதற்குள் விஜய் கோடீஸ்வர விஜயாகி, சுபம என்று நம்மை சந்தோஷமாக் வீட்டுக்கு அனுப்பி வைப்பர்கள். ஆனால் இது விஜய் படமில்லை. (விஜயா படம்) பிய்ந்த கூரை வழியாக விஜயாவுக்கு மேலும் மேலும் சோக மழையை அனுப்பி வைத்து தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார் கடவுள். என்னவோ விஜயாவை ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல் விடமாட்டேன் என்று அடம்பிடித்து ஒரு வழியாக குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்து, அதிலும் திருப்ப்தி அடையாமல் விஜயாவை கொலைகாரியாக்கிவிட்டு ஒரு வழியாக திருப்தி அடைகிறார். சுபத்திற்கு பதில் விதி ஸ்டைலாக வீரப்பா சிரிப்பு சிரிக்கிறது. அப்பப்பா! சாரதாவை எத்தனை பேர்தான் கைவிடுகிறார்கள், கடவுளையும் சேர்த்து!

சாரதா (சில சமயங்களில் சிவாஜி போல் உணர்ச்சி வசப்பட்டாலும்) பரவாயில்லை. மிகையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு நடிக்கிறாரே தவிர, மிகை என்று உறுதியாக கூற முடியாத நடிப்பு. காஞ்சனாவிற்கு ரோல் இன்னும் கொடுத்திருக்கலாம். பாலையாவுடன் மோதும் காட்சிகள் பலம். வசனங்களை இன்னும் ஆழத்திற்கு சென்று மேலும் பலப்படுத்தியிருக்கலாம்.நியாய அநியாய தர்கத்திற்கு அருமையான வாய்ப்பு. நழுவவிட்டு விட்டது போலிருக்கிறது. சாரதவின் காரக்டர் மூலம் கதை இவ்வளவு சீரியஸாக ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, அவரது ஏமாற்றத்திற்கு ஒருவகையில் காரணமான முத்துராமன் சர்வ காஷுவலாக அந்த ஆங்கிலோ இந்திய கல்லூரி மாணவியைப் பார்த்து “ஹாய்” என்று சொல்லி பின்னால் போவது காரக்டரை வலுப்படுத்துகிறது, தெளிவு படுத்துகிறது.சிலர், தங்களால் பிற சிலரின் வாழ்க்கையே அழிந்து போகியிருக்கிறது என்ற எண்ணமோ குற்ற உணர்ச்சியோ எதுவும்  தெரியாமல் பவணி வருவார்கள் என்ற உலக யதார்தத்தை வெளிப்படுத்தும் பாபுவின் காரக்டரில் வழக்கம் போல் முத்துராமன் வெளுத்து வாங்குகிறார்.ஏமாற்றம் அளித்த காரக்டர் மேஜர் சுந்தர்ராஜன். எவ்வளவோ திறமை அவரிடமிருந்தும் இருந்தும், நன்றாக உபயோக படுத்திக்கொள்ளாமல் வேஸ்ட் பண்ணிவிட்டார்களே!

”சிரிப்போ இல்லை நடிப்போ” – பாடல் பரவாயில்லை – ”சங்கம் வளர்த்த தமிழ்” – தமிழின் பெருமையை பாடுகிறது. ”காற்றினிலே, பெரும் காற்றினிலே” ஜேசுதாஸின் குரலில் சோகத்தை புழிகிறது. ”பூஞ்சிட்டு கன்னத்தில்” பாட்டு இனிமை.

முடிவு இன்றைக்கும் விவாதத்திற்கு உரியதே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஆர்வி, சாரதா நல்ல கருத்துக்கள் வைத்திருப்பார்கள்.

10க்கு 6.5