ரேப்பு கரூன் க்யா உசுகி


இது நடந்தது எண்பதுகளில். எங்கள் காலேஜில் (Govt . College of Engg. சேலம்) டிவி வரவே இன்னும் ஒரு வருஷம் இருந்தது.

காலேஜுக்கு பக்கத்தில் ஒரு தாபா (dhaba) திறந்திருந்தார்கள். அனேகமாக அது தமிழகத்தின் முதல் தாபாவாக இருந்திருக்கலாம். ராத்திரி முழுவதும் திறந்திருக்கும், லாரி டிரைவர்களை குறி வைத்து ஆரம்பிக்கப்பட்டது அது. எங்கள் காலேஜ் மெஸ்ஸில் ஆறு மணிக்கே போய் ஆறேழு தோசையை சாப்பிட்டுவிட்டு ராத்திரி பன்னிரண்டு ஒரு மணிக்கு பசிக்கிறதே என்று யோசிக்கும் எங்களுக்கு அது ஒரு வரப்ரசாதமாக இருந்தது. மட்டர் பன்னீர், பைங்கன் பர்த்தா, ஆலு கோபி என்று இது வரை கேள்விப்பட்டிராத பல ஐட்டங்களை வெட்டிக் கொண்டிருந்தோம். ஹிந்தி மட்டுமே தெரிந்த கடைக்காரர்களும் தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நாங்களும் ஒரு மாதிரி குன்சாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தோம். ராத்திரி இரண்டு மணிக்கு ஏதோ புரியாத ஹிந்திப் பாட்டு ஒலிக்க, கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து ஒரு கட்டை மீது சாப்பாட்டை வைத்து சாப்பிடுவது ஒரு புது அனுபவமாக இருந்தது.

ஒரு நாள் இரவு நானும் நண்பன் சிவகுருநாதனும் சாப்பிடப் போனோம். ஒரு அருமையான பாட்டு பின்னணியில். செம பீட்! பாட்டை ரெகார்ட் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தோம். வாட் மூவி திஸ் சாங் என்று நாங்கள் கேட்டது கடைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை. சரி பாட்டை உன்னிப்பாக கேட்டுக்கொண்டு போய் எங்கள் கூடப் படிக்கும் வடநாட்டு நண்பன் ஷிவேந்தர் டோகரிடம் கேட்டால் சொல்லிவிட்டுப் போகிறான் என்று பாட்டை உன்னிப்பாக கேட்டுக்கொண்டோம். இந்த மதராசப் பட்டினத்தில் ஆர்யாவும் நண்பர்களும் மங்க்யூ மங்க்யூ என்று உருப்போட்டுக் கொண்டே வருவார்களே அந்த மாதிரி நாங்களும் பாட்டை முனகி கொண்டே வந்தோம். ராத்திரி இரண்டரை மணிக்கு ஷிவேந்தர் கதவை இடித்தோம். அவன் பல கெட்ட வார்த்தைகளில் (அவனுக்கு நாங்கள் கற்றுக் கொடுத்திருந்த தமிழ் வார்த்தைகள் அவைதான்) திட்டிக் கொண்டே கதவைத் திறந்தான். இந்த மாதிரி பாட்டு கேட்டோம், என்ன பாட்டு இது, என்ன படம் என்று விசாரித்தோம். அவனும் திட்டிக் கொண்டே சரி வார்த்தைகளை சொல்லுங்கடா என்றான். நாங்கள் இருவரும் சொன்னோம் – “ரேப்பு கரூன் க்யா உசுகி

அவன் அப்டியே ஷாக்காயிட்டான். டே அப்படின்னா “Shall I rape her” என்றுதானடா அர்த்தம், அப்படி ஒரு பாட்டே கிடையாதுடா என்றான். நாங்கள் பாடியும் காட்டினோம். இல்லை பாட எல்லாம் வேண்டாம், நீங்கள் சொன்னதே போதும் என்று ஓடப் பார்த்தான். போடா உனக்கு ஹிந்தியும் தெரியவில்லை, ஒரு மயிரும் தெரியவில்லை என்று அவனை இரண்டு மொத்து மொத்திவிட்டு தூங்கப் போனோம். மீண்டும் அந்த கடைக்காரனிடம் இந்த பாட்டை எப்படி போடச் சொல்வது என்று தெரியவில்லை. மறந்தே போய்விட்டோம்.

இரண்டு மூன்று வருஷம் கழித்து கரக்பூர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக் படிக்கும்போது இந்த பாட்டை சித்ரஹாரில் பார்த்தேன். நீங்களும் பாருங்கள்.

சிவகுருவுக்கு கடிதம் எழுதினேன் – அது ரேப்பு கரூன் க்யா உசுகி இல்லை தாரீஃபு கரூன் க்யா உஸ்கி என்று. பாட்டு சாந்த் ச ரோஷன் செஹரா, படம் காஷ்மீர் கி கலி, பாடியவர் முகமது ரஃபி, இசை ஓ.பி. நய்யார், நடித்தவர்கள் ஷம்மி கபூர்+ஷர்மிளா தாகூர்.