சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்


கணையாழி இன்னும் வருகிறதா என்று தெரியாது. ஆனால் சுஜாதா எழுதிய “கணையாழியின் கடைசி பக்கங்கள்’ இந்த காலத்து ப்ளாக்களின் முன்னோடி. சுருக்கமாக (எப்பவுமே வார்த்தைகளை வீணடிக்க மாட்டார்), சுவாரசியமாக எழுதப்பட்டவை. கணையாழி களஞ்சியம் என்ற தொகுப்பில் சில கடைசி பக்கங்களை படித்தேன். ஒன்று சினிமா பற்றியது.

இதை எழுதும்போது சுஜாதா டெல்லியில் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் பழைய படங்கள்தான் டெல்லிக்கு வரும்போல. இதை முழுவதுமாக இங்கே தரப்போவதில்லை. சில பகுதிகள் மட்டும்.

சுஜாதா நல்லபடியாக சொன்ன படங்கள் இவை.

அன்னை – பானுமதியின் நடிப்பை சிலாகித்திருக்கிறார். சில சமயங்களில் கண்ணீர் வந்ததாம். ஆனால் கூட இருக்கும் எல்லாரும், குறிப்பாக இளம் நடிகர்கள் (பெயர் குறிப்பிடவில்லை, ஹரிநாத் ராஜாவும் சச்சுவும் என்று நினைக்கிறேன்) சொதப்பிவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். பானுமதியை தவிர எனக்கு கண்ணில் தெரிந்த நடிகர்கள் ரங்காராவும் (பரவாயில்லை), ஸௌகாரும் (ஓவர் ஆக்டிங்) மட்டும்தான். இவர் கண்ணில் எல்லாரும் பட்டிருக்கிறார்கள்.

பாலச்சந்தரின் அந்த நாள், இது நிஜமா – அந்த நாள் பற்றி சாரதாவின் கருத்துகள் இங்கே, ராஜ்ராஜின் கருத்துகள் இங்கே, எனது கருத்துகள் இங்கே. இது நிஜமா கல்யாணராமனின் inspiration என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பாதை தெரியுது பார், உன்னை போல் ஒருவன் – நான் இரண்டையும் பார்த்ததில்லை. இதை எல்லாம் போட்டிருக்கக்கூடாதா?

நாலு வேலி நிலம் – இது படமாக வந்ததே தெரியாது. தி. ஜானகிராமனின் கதை. பாட்டுகள் இதை கெடுக்கின்றன என்று சொல்லி இருக்கிறார்.

குமார ராஜா – சில பகுதிகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி இருக்கிறார். எனக்கு தெரிந்த ஒரே விஷயம் சந்திரபாபு பாடிய “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” பாட்டு மட்டும்தான். பார்த்ததில்லை.

அவருக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பிடிக்கவில்லை. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார். நான் பார்த்து பல வருஷம் இருக்கும், பார்த்த போது படம் பிடித்துத்தான் இருந்தது.

வாலி மீது பாய்ந்திருக்கிறார். கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார். வாலி கேட்டால் கண்ணதாசனை காப்பி அடிப்பதில் எனக்கு பெருமைதான் என்று சொல்லி இருப்பார்.

சிவாஜி மீது ஏகமாக பாய்ந்திருக்கிறார். verbatim ஆக – “இவர் முக்கால் வாசிப் படங்களில் கேவிக் கேவி அழுகிறார். பின்னால் தாடி வளர்க்கிறார். அல்லது கை கால் கண் பார்வை ஏதாவது ஒன்று இழக்கிறார். இப்படி இல்லாத படங்கள் மிக சிலவே!…”

ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.

கே. பாலச்சந்தரை பற்றி குறிப்பிடவில்லை. அதனால் அனேகமாக இது அறுபதுகளின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது என் யூகம்தான், எழுதப்பட்ட தேதி புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. அப்பவே சிவாஜியை பற்றி இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்களா?

கணேஷ் வசந்த்


நான் தொடங்கி இருக்கும் இன்னொரு வலைப் பதிவு. இன்னும் கொஞ்சம் flesh out செய்துவிட்டு பிறகு அறிவிக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் சிலர் அதற்குள் அங்கே எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் அறிவித்துவிட்டு ஜல்லி அடிக்கலாம். மேலும் யாராவது சேர்ந்து ஜல்லி அடிக்க வருவீர்களோ என்று ஒரு நப்பாசை…

P.S. இதற்கு சேர்ந்து மில்லி அடிக்க வருகிறோம் என்ற ரேஞ்சில் ஒரு மறு மொழியை எதிர்பார்க்கிறேன். படிப்பவர்கள் யாராவது சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதியில் இருக்கிறீர்களா? இருந்தால் கில்லி அடிக்கலாம். நான் வசிப்பது நூவர்க்கில்…