அவார்ட் கொடுக்க வேண்டியதுதான்


சன் டிவி கொண்டாடி முடித்துவிட்டார்கள் போல தெரிகிறது. அடுத்த வாரத்திலிருந்து இந்த ஸ்லாட்டில் காமெடி டைம் வரப்போகிறதாம். (வெங்கட்ரமணன் கொடுத்த இன்ஃபர்மேஷன்.) என் மனைவி அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விடுகிறாள்.

பல குறைகள் இந்த ப்ரோக்ராமில் உண்டு – விளம்பரப்படுத்தி விட்டு மாற்றுவது, போடாமல் இருப்பது, ரொம்ப ராண்டமாக படங்களை தேர்வு செய்வது, எத்தனையோ நல்ல படங்களை போடாமல் விட்டது (ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், திரும்பிப் பார், கூண்டுக் கிளி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மலைக் கள்ளன், மங்கையர் திலகம், மனம் போல் மாங்கல்யம், பெண்ணின் பெருமை, மந்திரி குமாரி, பதி பக்தி, பாச மலர், பாவ மன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா, புதிய பறவை, நெஞ்சில் ஓர் ஆலயம், வல்லவனுக்கு வல்லவன், ஞான ஒளி, கௌரவம், துணிவே துணை, வீட்டுக்கு வீடு, காசேதான் கடவுளடா, தீர்க்க சுமங்கலி, பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, நீர்க்குமிழி, பணமா பாசமா, கர்ணன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்), எத்தனையோ மட்டமான படங்களை போட்டது (தேன் கிண்ணம், ஹலோ பார்ட்னர், வந்தாளே மகராசி போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்) மாதிரி நிறைய சொல்லலாம். தூர்தர்ஷனின் ஆரம்பக் காலம் போல unprofessional ஆக இருந்தது.

ஆனால் விளம்பரங்கள் வராத நிலையில், இந்த மாதிரி படங்களை திரையிட துணிச்சல் வேண்டும். நிறைய நல்ல படங்களும் திரையிடப்பட்டன – அந்த நாள், சந்திரலேகா, கப்பலோட்டிய தமிழன், நவராத்திரி, எங்க வீட்டுப் பிள்ளை மாதிரி. பல குறைகள் இருந்தாலும் இதற்காக சன் டிவிக்கு ஒரு அவார்ட் கொடுக்கலாம்.

நானும் பக்சின் உதவியுடன் இந்த ப்ரோக்ராமை வைத்து இரண்டு மூன்று மாதங்கள் ஓட்டிவிட்டேன். பலரது அறிமுகம் கிடைத்தது. சிலரை இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது – சாரதா, ப்ளம், வெங்கட்ரமணன், பிசுப்ரா, சுபாஷ், பிமுரளி80, ராஜ்ராஜ், இன்னும் பலர் என்று அது ஒரு லிஸ்ட் இருக்கிறது.

அடுத்தது இந்த ப்ளாகில் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். உங்களிடமிருந்து ஏதாவது யோசனைகள்?

முத்தான திரைப்படங்களின் முடிவு?


நேற்றும் தங்கமலை ரகசியத்தை காணோம். இன்றும் வெண்ணிற ஆடையை காணோம். அடுத்த வாரப் படங்கள் அறிவிக்கப்பட்ட மாதிரி தெரியவில்லை. அவ்வளவுதானா?

சன் டிவி ரகசியம்


வாரம் பூராவும் விளம்பரப்படுத்திவிட்டு கடைசியில் தங்கமலை ரகசியம் படத்தை போடவில்லை. எதற்காக விளம்பரப்படுத்த வேண்டும், வியாழன் விஜய தசமி என்று தெரியாதா, நம்பர் ஒன் நம்பர் ஒன் டிவிக்கு ஒரு காலண்டர், பஞ்சாங்கம் வாங்கக்கூட வக்கில்லையா, விஜயதசமி ப்ரோக்ராமிங் திட்டமிடும் டீமும் முத்தான திரைப்படங்கள் ப்ரோக்ராம் திட்டமிடும் டீமும் வட துருவத்திலும் தென் துருவத்திலும் இருக்கின்றனவா என்ற மர்மங்கள் ரகசியம் பரம ரகசியமாகவே இருக்கின்றன. கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு ஒரு தங்கமலை பரிசு!

குறவஞ்சி (Kuravanji)


பார்க்க முடியவில்லை. பக்சும் பார்க்கவில்லை. யாரும் எழுத வருகிறீர்களா?

பார்த்தவரையில் எழுதுகிறேன் – Bags

MGR வசன உச்சரிப்பு பிரமாதம். கணீரென்று இருந்தது.
இதில் எங்கிருந்து எம்ஜிஆர் வந்தார் என அதிர்ச்சியடைய வேண்டாம். மக்களாட்சி, அரசியல், ஏழை எளியவருக்கு உதவுதல், இப்படி ஃப்ரேம் பை ஃப்ரேம் காட்சிகள் அமைந்திருந்தால் அது சாதரணமாக எம்ஜிஆர் திரைப்படமாகத் தானே இருக்கவேண்டும். குறவஞ்சி நான் பார்த்தவரையில் காட்சிகள் இப்படித்தான் இருந்தது. ஒரே ஒரு மாறுதல். எம்ஜிஆருக்கு பதில் சிவாஜி.

1960ல் வந்த படம். விபரமாக எழுத முடியவில்லை. பிட் கொஞ்சமாகத்தான் அடிக்க முடிந்தது.

கதை – மு. கருணாநிதி
நடிகர்கள் – சிவாஜி கணேசன், பி.எஸ்.வீரப்பா, ஓ.ஏ.கே. தேவர்
நடிகைகள் – சாவித்திரி
டைரக்‌ஷன் – A. காசிலிஙகம்

எல்லைபுரம் அக்கிரமங்கள் அனைத்திலிருந்தும் தன் அரசாங்கம் பாதிக்கப்படாமல் ஆட்சி புரிந்துக்கொண்டிருக்கிறார் மன்னர். ஆனால் எல்லைபுரத்திலோ தளபதி பி.எஸ். வீரப்பாவின் ஓ.ஏ.கே. தேவரின் அட்டகாசம். அப்பொழுது தான் திருமணம் ஆன மணமகளை கடத்தி சென்றுவிடுவார்கள். மணமகனை தூக்கி வந்து அவருடைய சொந்த கிராமப் பகுதியில் கொண்டுவந்து கொன்றுவிடும் வீரர்களை மாறுவேடத்தில் இருக்கும் சிவாஜி (மன்னரின் மருமகன்) துவம்சம் செய்கிறார்.

இங்கே தான் சிவாஜி எம்ஜிஆரிடமிருந்து மாறுபட்டுவிட்டார். எம்ஜிஆராக இருந்தால், அவருடைய கத்தி, மணமகனை நோக்கி வீரர்களின் கத்தி பாயும் போது இடையில் வந்து தடுத்திருக்கும்.

பின்னர் மன்னரின் அரண்மனைக்கு வந்து மன்னரிடம் எம்ஜிஆர் பாணி வீரவசனங்களை பேசித் தள்ளுகிறார். சில சிவாஜி ரசிகர்கள் எம்ஜிஆருக்கு பதில் சிவாஜியை போட்டிருந்தால் பிய்த்து உதறியிருப்பார் என்று யோசிப்பார்கள். அப்படி பட்டவர்கள் இந்த படத்தை பார்த்து பிய்த்து உதறியிருக்கிறாரா எனத் தெரிந்துக் கொள்ளலாம். நான் பார்த்த வரையில் கொஞசம் பிய்த்து கொஞ்சம் கிழித்து உதறியிருக்கிறார். இருந்தாலும் எம்ஜிஆராக இருந்தால் ஆட்டோமேட்டிக்காக அட்ரீனல் சூடேறிவிடும்.
சிவாஜி நல்ல இளமையாக காட்சித் தருகிறார். அருமையாக விறுவிறுப்பாக சண்டை போடுகிறார். அதனால் எம்ஜிஆரும் சிவாஜியும் ஒன்று – சுபம்

(இது எம்ஜிஆர் vs சிவாஜி பிரச்சனையை வளர்க்குமா? குறைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்)

முழுவதும் பார்க்காததால் மார்க் (என்றாவது பார்க்கும் வரை) pendingல் இருக்கிறது.

நவராத்திரி II


பார்த்தி என்ற நண்பர் (மனிதர் யாரென்று தெரியாவிட்டாலும் இந்த மாதிரி படங்களை பார்க்க வழி செய்பவர் நண்பர்தான்) நவராத்திரி படத்தை இண்டர்நெட்டில் பார்க்க வழி செய்திருக்கிறார். ஏதாவது காப்பிரைட் ப்ராப்ளம் வந்து அவர் எடுப்பதற்குள் பார்த்துக்கொள்ளுங்கள்!

நவராத்திரி (Navaraatthiri)


முன்னால் இந்த ப்ரோக்ராமில் வந்த படம். இந்த முறை விகடனில் வந்த விமர்சனம் கீழே. நானும் எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்…

தன்னைப் பெண் பார்க்க மறுநாள் வரப் போகிறவன் தன் காதலன்தான் என்ற உண்மையை அறியாத பெண் ஒருத்தி, நவராத்திரி அன்று முதல் நாள் இரவு, வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். அதன் பின்னர், ஒன்பது இரவுகளில் ஒன்பது மனிதர்களைச் சந்திக்கிறாள். ஒவ்வொரு மனித ரும் ஒவ்வொரு ரகம், ஒவ்வொரு விதம்! நவரசங்களின் பிரதிநிதிகளாக ஒன்பது பேரைச் சந்தித்துப் புதுப்புது அனுபவங்களைப் பெறும் அந்தப் பெண், இறுதியில் தன் காதலனை அடைகிறாள்.

சேகர்: கதையே புதுமையானது, இல்லையா சந்தர்?

சந்தர்: தமிழ்ப் படங்களில் இது வரை கையாளப்படாத பிளாட். சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமையை வெளிக்காட்ட சிறந்த பாத்திரங்கள்.

சேகர்: ஆமாம் சந்தர், அவருடைய நூறாவது படமாம் இது! நடிப்பின் சிகரத்தையே தொட்டு விட்டார் இந்தப் படத்தில். ஒவ்வொரு ரஸத்தின் பிரதிநிதியாகத் தோன்றும்போதும், அந்த நபராகவே மாறி, தனித் தனியாக நிற்கிறார். இப்படி ஓர் உயர்ந்த நடிப்பைப் பார்ப்பதே அபூர்வம்தான்.

சந்தர்: யூ ஆர் ரைட் சேகர்! நடிப்பில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறார் சாவித்திரி.

சேகர்: நோ! நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

சந்தர்: என்னது?

சேகர்: ஆமாம், ஏதாவது குறைந்தால்தானே ஈடு கொடுப்பதற்கு? சிவாஜிக்கு இணையாகவே நடித்திருக்கிறார் சாவித்திரி. இந்த இருவரிடமும் நடிப்பின் இலக்கணத்தையே இந்தப் படத்தில் காண முடிகிறது.

சந்தர்: அதிலும், அந்தக் கடைசி காட்சியில் இருவரும் பேசாமல் நடித்திருப்பது…

சேகர்: ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்ற தத்துவத்திற்கு நடிப்பின் மூலம் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

சந்தர்: ஒன்பது பாத்திரங்களில் உனக்கு எந்தப் பாத்திரம் மிகவும் பிடித்திருக்கிறது சேகர்?

சேகர்: அப்படியெல்லாம் தனித்துச் சொல்லமுடியாது. அப்புறம் வரிசைப்படுத்திச் சொல்லு என்று கேட்பாய் போலிருக்கிறதே… எல்லாமே சிறப்புதான்! ஆனால், ஒன்றிரண்டு பாத்திரங்களில் அந்தந்த தன்மை தெளிவாக்கப்படவில்லை என்று தோன்றுகிறது.

சந்தர்: எதைக் குறிப்பிடுகிறாய்?

சேகர்: ‘பயம்’ பாத்திரம் வந்தபோது, அவன் பயந்தாங்கொள்ளியாக இல்லை. அவனைக் கண்டு கதாநாயகிதான் பயப்படுகிறாள். அதேபோல், அருவருப்பின்போது, அந்தப் பாத்திரம் அருவருப்பு உணர்ச்சியை அடையவில்லை; அதைப் பார்க்கும் நாம்தான் அந்த உணர்ச்சியை அடைகிறோம். கூடவே, கொஞ்சம் பாட்டு களிலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

சந்தர்: ஏன், பயித்தியக்கார ஆசுபத்திரி கதம்பப் பாட்டு பிடிக்கவில்லையா உனக்கு?

சேகர்: அது தனி! அந்தக் காட்சியில் வயிறு குலுங்கச் சிரிக்கலாம்.

சந்தர்: தெருக் கூத்தை ரசித் தாயா?

சேகர்: நல்ல கேள்வி, போ! அசல் தெருக்கூத்தையே கண் முன் காட்டிவிட்டார்கள். படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாயிற்றே அது!

சுந்தர்: யெஸ்! இப்படிப் பல சிறப்பு அம்சங்கள் இதில் உண்டு. எல்லாவற்றுக்கும் சிகரம், கடைசியில் வரும் பேசாத காட்சி!

சேகர்: கரெக்ட்! பேசாதவர்கள் பேசிச் சிரித்த பிறகு வரும் காட்சிகளில் நடந்துகொள்ளும் நடிப்பை, சிலர் விரசம் என்று கூடக் கூறலாம். ஆனால், அப்படிக் கூறுகிறவர்கள் கூட, அதுவரை உள்ள சிறப்புக்காக இந்தப் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.

சபாபதி (Sabapathi)


சபாபதி பற்றி எழுத கொஞ்சம் தாமதம் ஆகும். இப்போதைக்கு “ச” வரைக்கும்தான், பிறகுதான் “பாபதி”! மொத்தமாக நீங்கள் “சபாபதி” என்று படித்துக்கொள்ளுங்கள். சுருக்கமாக:

1. என்னை பொறுத்த வரை இதுதான் தமிழில் முதல் படம். இதற்கு முன்னால் வந்ததெல்லாம் பாட்டு களஞ்சியங்கள். த்யாக பூமி, சேவா சதனம் இரண்டும் பாட்டை நம்பி வரவில்லை என்று கேள்வி, ஆனால் நான் பார்த்ததில்லை.

2. அந்த காலத்து காமெடி நிறைய இடங்களில் சாயம் போய்விட்டது – நமக்கு சிரிப்பு வரமாட்டேன் என்கிறது.

3. ஆனால் அந்த ரயில் “வியாசம்” அபாரம்.

4. ஒரு pioneering effort என்ற விதத்தில் பார்க்கலாம். 10க்கு 6.5 மார்க். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: ராண்டார்கை சபாபதி பற்றி எழுதிய பத்தி