ஸ்ரீதர் – மதிப்பீடு


மணிவண்ணன், பயப்படாதீர்கள்!

ஸ்ரீதரை பற்றி ஒரு மதிப்பீடு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். மணிவண்ணன் “என்னங்க, உங்க ஸ்ரீதர் புராணம் நிற்கவே மாட்டேன் என்கிறதே” என்று அலுத்துக் கொண்டதும் ஹேமாவிடமிருந்து ஒரே திட்டு – “நீங்க எழுதறதை படிக்கறதே பத்து பேர்தான் – அவங்களையும் ஏன் கொடுமை பண்றீங்க” என்று. கு.கு. (குடும்பத்தில் குழப்பம்) உண்டாகாமல் இருக்க அந்த போஸ்ட் ட்ராஃப்ட் லெவலிலேயே நின்று போனது. இன்று தற்செயலாக அம்ஷன் குமார் எழுதிய மதிப்பீட்டை பார்த்தேன். ஏறக்குறைய என் மதிப்பீடும் இதுதான். என்ன, அவர் என்னை விட அருமையாக அதை எழுதி இருக்கிறார்.

அம்ஷன் குமார் திரைப்படங்களை பற்றி அருமையாக எழுதுபவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதற்கு முன் படித்ததில்லை. இது அருமையாக இருந்தது.

2008இன் படங்கள்


திடீரென்று போன வருஷம் எத்தனை தமிழ் படம் வந்தது, அதில் எத்தனை பார்த்தோம் என்று ஒரு ஆராய்ச்சி. நல்ல வேளையாக வந்த படங்களின் லிஸ்ட் இங்கே இருக்கிறது. சரியாக 101 படங்கள் வந்திருக்கின்றன. இதில் நான் 22 படங்களை பார்த்திருக்கிறேன். இவற்றுக்கான ஒன் லைன் விமர்சனகள் கீழே:

பீமா: டைம் வேஸ்ட் – விக்ரம் “பூடா, பூ” என்று உருகும் ஒரு காட்சிதான் தேறும்.
அஞ்சாதே: பார்க்கலாம். அந்த ஒற்றைக்கை நடிகர், பிரசன்னா, பாண்டியராஜன், கத்தாழக் கண்ணாலே பாட்டு எல்லாம் நன்றாக இருந்தது.
வெள்ளித் திரை: பார்க்கலாம். பிரகாஷ் ராஜ் ஹீரோ ஆக முடியாமல் அலைவது ரியலிஸ்டிக் ஆக இருந்தது.
சண்ட: டைம் பாஸ்
யாரடி நீ மோகினி: பார்க்கலாம். ரகுவரன் முதல் பகுதியிலும், சரண்யா இரண்டாம் பகுதியிலும் கலக்கினார்கள்.
நேபாளி: டைம் வேஸ்ட்.
சந்தோஷ் சுப்பிரமணியம்: ஜெனிலியா ஓவர் ஆக்ட் செய்தாலும், பார்க்கலாம். டைம் பாஸ்.
அறை எண் 305இல் கடவுள்: கட்டாயமாக பாருங்கள்
குருவி: கொலை. விவேக், விஜய், திரிஷா சென்னையில் கைப்பையை தேடி அலைவது மட்டும்தான் ரசிக்கும்படி இருந்தது. என் பெண்களுக்கு “நோக்கி நோக்கி நோக்கி நோக்கி” பாட்டு பிடித்திருந்தது.
தசாவதாரம்: குறைகள் இருந்தாலும் பார்க்கலாம். முழு விமர்சனம் இங்கே.
ஆயுதம் செய்வோம்: டைம் பாஸ். முழு விமர்சனம் இங்கே.
வல்லமை தாராயோ: “உன்னைத்தான் உன்னைத்தான்” பாட்டு நன்றாக இருந்தது. டைம் வேஸ்ட்.
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு: வேஸ்ட்
சுப்ரமணியபுரம்: பார்க்கலாம். முழு விமர்சனம் இங்கே.
குசேலன்: போர்.
சத்யம்: கொடுமை.
ஜெயம்கொண்டான்: பார்க்கலாம்.
தாம்தூம்: வேஸ்ட்
சரோஜா: பார்க்கலாம்.
ராமன் தேடிய சீதை: பசுபதிக்காக பாருங்கள்.
துரை: டைம் பாஸ்
சேவல்: ஏதோ

பாருங்கள் என்று சொல்லக்கூடிய படங்கள், அறை எண் 305இல் கடவுள், ராமன் தேடிய சீதை மட்டும்தான். தசாவதாரம், அஞ்சாதே, சுப்ரமணியபுரம் வித்தியாசமான படங்கள். ஜெயம்கொண்டான், வெள்ளித்திரை, சந்தோஷ் சுப்பிரமணியம், யாரடி நீ மோகினி, சரோஜா பார்க்கலாம். ஆயுதம் செய்வோம் டைம் பாஸ்.

சிறந்த வில்லன் நடிகர் யார்?


நம்பியாரை பற்றி படித்தவர்கள் சொன்னவை


ராண்டார்கை எழுதியது இங்கே.

நம்பியாரின் இன்னொரு முகம் பற்றி உஷா சொன்ன ராஜநாயகம் போஸ்ட் இங்கே.

தாஸ் சொல்கிறார்: சபரி மலைக்கு போவதற்கு எம்ஜிஆர் அனுப்பும் மாலையை அணிந்துதான் நம்பியார் போவாராம். சரத் பாபு நம்பியாரின் மாப்பிள்ளை என்று தாஸ் உறுதிப்படுத்துகிறார்.

சாரதா சொல்வதென்னவென்றால்:
நம்பியார் சுத்த சைவம். அதை தன்னுடைய இளமைக் காலத்திலிருந்து இன்று வரை கடை பிடித்து வருபவர். இத்தனைக்கும் அவர் குடும்பம் ஒரு அசைவக்குடும்பம். இருந்தும் விடாப்பிடியாக தன் கொள்கையில் உறுதியாக இருந்து வருபவர். தன்னுடைய பணிரெண்டாவது வயது வரையில் பால் கூட அருந்த மாட்டாராம், அது மாட்டு ரத்தம் என்ற உணர்வின் காரணமாக என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

எம்.ஜி.ஆருடன் ஏராளமான படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தும் கூட நம்பியார் இதுவரை அரசியல் மேடைகளில் ஏறியதும் கிடையாது, எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததும் கிடையாது. (பிற்காலத்தில் அவரது மகன் – சுகுமாரன் நம்பியார் – பா.ஜ.க.வில் இருக்கிறார்).

நம்பியார் எந்த ஊருக்கு வெளிப்புறப் படப்பிடிப்புக்கு சென்றாலும், தன் மனைவி கையால் சமைத்துத்தான் சாப்பிடுவார். அதற்காக தன் சொந்த செலவில் தன் மனைவியை அழைத்துப்போவார். ஒருமுறை ஒரு தயாரிப்பாளர், நம்பியாரின் மனைவிக்கும் சேர்த்து தன் கம்பெனி செலவில் விமான டிக்கெட் எடுத்து விட்டார். ஆனால் நம்பியார் அதை மறுத்து விட்டார். “நான் மட்டும்தான் உங்கள் படத்தில் நடிக்கிறேன், என் மனைவி நடிக்கவில்லை. அவரை எனக்கு உணவு சமைப்பதற்காக, அதாவது சொந்தக்காரணத்துக்காக அழைத்து வருகிறேன்” என்று கூறி, அதற்கான விமான டிக்கெட் தொகையை தன் சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொண்டார். (இந்தக்காலத்தில் இப்படியும் ஒருவர்..!!!!!)

இவரிடம் நடிகர்கள் மட்டுமல்லாது, மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய.

ஒரு இணைப்பு செய்தி: 1973-ம் ஆண்டுக்கான ‘சிறந்த மேக்கப்மேன்’ விருது பெற்றவர் நம்பியாரின் மேக்கப் மேன் திரு. ராமு. படம்: உலகம் சுற்றும் வாலிபன். (தகுதியானவருக்கு கிடைத்த தகுதியான விருதுகளில் இதுவும் ஒன்று. அந்தப் படத்தில் மட்டும் நம்பியார் தன் குரலைக் காட்டாமல் இருந்திருந்தால், அது நம்பியாரே அல்ல என்று என்று எந்த கோயிலிலும் சத்தியம் செய்யலாம். அவ்வளவு நேர்த்தியான மேக்கப்).

‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’ பாடல் மட்டுமல்லாது, மாடர்ன் தியேட்டர்ஸ் ‘கவிதா’ படத்தில் வரும் ‘பறக்கும் பறவைகள் நீயே’ என்ற டூயட் பாடல் நம்பியாருக்குத்தான். அத்துடன் தூறல் நின்னு போச்சு படத்தில் ‘என் சோக கதையைக்கேளு தாய்க்குலமே’ பாடலிலும் ‘ஏரிக்கரை பூங்காற்றே’ பாடலிலும் பாக்யராஜுடன் இவரும் பாடியிருப்பார். (’மன்னாதி மன்னனை பார்த்தவன் நான், அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்’ என்று துவங்குவது இவர்தான்)

நம்பியாரை பற்றி பக்ஸ் எழுதியது இங்கே, இங்கே.

ஆர்வி எழுதியது இங்கே.

சரத்பாபுவும் நம்பியாரும்


சரத் நம்பியாரின் மருமகனாமே மாப்பிள்ளையாமே? உண்மைதானா?

நம்பியார்


பல நாட்களாக பக்ஸ் கலக்கிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு நானும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.

ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரைப் பற்றி நம் உண்மையான கருத்தை மறைப்பது பொய். எனக்கு நம்பியார் என்ற நடிகரை பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை. எல்லா படங்களிலும் ஏறக்குறைய ஒரே நடிப்புதான். கையை பிசைந்து கொண்டு, ஜம்புவையும் மருதுவையும் (அது ஏன் அடியாட்களுக்கு சுப்பிரமணி, ராமசாமி என்றெல்லாம் பேர் வைக்க மாட்டார்களா?) யாரையாவது அடிக்க சொல்வது எல்லாம் ஒரு வேஸ்ட். திறமையான வில்லன் நடிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. ரகுவரன், பிரகாஷ் ராஜ் போன்றவர்களுக்கு எந்த விதத்திலும் ஈடாகாது. அந்த காலத்து நடிகர்களான எம்.ஆர். ராதா, பி.எஸ். வீரப்பா போன்றவர்களை இவரை விட பார்க்கலாம். என்ன, மனோகரை விட பெட்டர். எனக்கு அசோகனை பார்த்தால் சிரிப்பு வரும், இவரை பார்த்தல் அதுவும் வருவதில்லை. பக்ஸ் சொன்ன உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கூட, “அந்த பெட்டியை கொடுத்துடு” வசனத்தை விட அசோகன் உருகி உருகி “முருகன், நீங்க பெரிய மேதை முருகன்” என்று சொல்வதுதான் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.

ஆனால் மக்கள் மத்தியில் வில்லன் என்றால் நம்பியார்தான். எம்ஜியார் நம்பியார் காம்பினேஷன் மாதிரி வராது என்று சொல்வார்கள். எம்ஜிஆர் நல்ல நடிகர் இல்லாவிட்டாலும் எல்லாருக்கும் பிடித்தவர். அந்த மாதிரிதான் நம்பியாரும். எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படமான ஆயிரத்தில் ஒருவனில் அவரும் நன்றாக செய்திருந்தார். எங்க வீட்டுப் பிள்ளையில் எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை, ஆனால் பிரபலமான ரோல்.

நம்பியாரின் பொற்காலம் என்றால் அது ஐம்பதுகள்தான். அவரும் அப்போது நன்றாக வசனம் பேசக்கூடிய ஒரு நடிகர். வேலைக்காரி, சர்வாதிகாரி, மந்திரி குமாரி, உத்தம புத்திரன் போன்ற படங்களில் நன்றாக செய்தார். (மந்திரி குமாரியில் அவரை கள்ள பார்ட் நடராஜன் மிஞ்சிவிட்டார்.) அவரும் எம்ஜிஆரும் ராஜா ராணி படங்களில் கத்தி சண்டை போடுவது சாதாரணமாக நன்றாக இருக்கும். அரச கட்டளையில் அவரும் எம்ஜிஆரும் ஒரு அசத்தலான சண்டை போடுவார்கள். ஆயிரத்தில் ஒருவனில் இரண்டு பேரும் கலக்குவார்கள்.

நினைவில் நிற்கும் இரண்டு விஷயங்கள்:
1. எம்ஜிஆரிடம் ஒரு பாட்டி “உனக்குத்தான் ராசா எங்க வோட்டு, ஆனா இந்த நம்பியார்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு” என்று சொன்னாராம்.
2. எதோ ஒரு படத்தில் வடிவேலு அவரிடம் “எம்ஜிஆர் போன பிறகு உனக்கு ரொம்ப துளுத்து போச்சு!” என்பார்.

நெஞ்சம் மறப்பதில்லை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம். அதில் அவர் வரும் காட்சிகள், குறிப்பாக கடைசியில் அவர் புதைகுழியில் மூழ்கும் காட்சி உறைய வைக்கும். அந்த பெருமை ஸ்ரீதருக்கும் வின்சென்டுக்கும் உரியது என்றாலும், நம்பியாரை நினைவு கூரக்கூடிய படங்களில் அதுவும் ஒன்று.

அவர் நடித்து நான் பார்க்க விரும்பும் படம் திகம்பர சாமியார். பிரிண்ட் இருக்குமா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து மக்களை பெற்ற மகராசியில் அவருக்கு ஒரு டூயட் உண்டு – “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா” வேறு பாட்டு ஏதாவது உண்டா தெரியவில்லை.

கிட்டத்தட்ட தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கிறார். அவர் பல மாற்றங்களை பார்த்திருப்பார். சொந்த வாழ்க்கையில் புனிதர் என்று சொல்வார்கள். சினிமா உலகத்தில், அதுவும் நாற்பதுகளிலிருந்து நடித்து வரும் ஒருவருக்கு இப்படிப்பட்ட இமேஜ் இருப்பது அதிசயம்தான். நிறைந்த வாழ்வு வாழ்ந்து மறைந்த அவருக்கு என் அஞ்சலி.

AVM படங்கள் தொகுப்பு


நக்கீரன் AVM திரைபடஙகளை ஒரு பதிலில் தொகுத்து கொடுத்திருக்கிறார்.  அதை ஒரு பதிவாக ப்ரொமோட் செய்துவிட்டேன். நன்றி நக்கீரன்.

(மணிவண்ணன் மறுபடியும் கொதித்து எழும் வரை AVM பற்றி எழுதிக் கொண்டிருக்கலாம்.  ஆனால் அப்படி போரடிக்கும் வரை எழுதாவிட்டாலும், ஒன்று, இரண்டு பதிவுகளோடு நிறுத்திக் கொள்வோம். )

AVM Anjali
———-

List of AVM movies

Year Film
2009 Vettaikaran-Announced
2008 Ayan -Filming
2007 Sivaji: The Boss
2006 Thirupathi
2004 Perazhagan
2003 Priyamana Thozhi
2002 Anbe Anbe
2002 Gemini
1997 Minsaara Kanavu
1994 sethupathi I.P.S
1993 Yajamaan
1993 Aa Okkati Adakku
1991 Managara Kaval
1990 Bamma Maata Bangaru Baata
1989 Raja Chinna Roja
1987 Samsaaram Oka Chadarangam
1987 Manidhan
1987 Paer Sollum Pillai
1985 Mr Bharath
1984 Nallavanukku Nallavan
1984 Naagu
1984 Munthanai Mudichu
1983 Thongadhae thambi Thongadhae
1983 Paayum Puli
1982 Sakalakala Vallavan
1980 Murattuk Kalai
1980 Punnami Naagu
1973 Jaise Ko Taisa
1972 Akka Thamudu
1972 Dil Ka Raja
1971 Bomma Borusa
1969 Mooga Nomu
1968 Do Kaliyaan
1967 Bhakta Prahlada
1966 Letha Manasulu
1965 Chitti Chellelu
1965 Naadi Aada Janme
1964 Pooja Ke Phool
1963 Penchina Prema
1962 Main Chup Rahungi
1962 Manmauji
1962 Pavithra Prema
1961 Chhaya
1961 Papa Pariharam
1960 Bindya
1960 Kalathur Kannamma
1959 Barkha
1958 Bhookailas
1952 Paraasakthi
1957 Bhabhi
1957 Miss Mary
1956 Bhai-Bhai
1956 Chori Chori
1956 Nagula Chaviti
1955 Vadina
1954 Antha Naal
1953 Jatakaphalam
1953 Ladki
1953 Sangham
1951 Bahar
1949 Jeevitham
1947 Naam Iruvar

From Manivannan:
நன்றாக ஞாபகமில்லை, ஆனால் சிலது ஞாபகம் உள்ளது.
80களில் AVM குடும்பத்தில் பிளவு ஏற்ப்பட்டது, சரவணனும் பாலசுப்பிரமணியனும் ஒரு பக்கமும் குமரனும் தாயாரும் (ராஜேஸ்வரி அம்மாள்) ஒரு பக்கமும் நின்றார்கள். குமரனும் AVM என்னும் பானரில் சில படங்கள் தயாரித்தார். பிரபு நடித்த சூரக்கோட்டை சிங்ககுட்டி முதல் படம் என நினைக்கின்றேன். ரொம்ப நாளைக்கப்புறம் “அஆஇஈ” என்னும் ஒரு படத்தை இப்போது தயாரிக்கிறார்.

ஸ்ரீதர் பக்கம்


ஸ்ரீதரை பற்றி எழுதிய போஸ்ட்களை இங்கே ஒருங்கிணைத்திருக்கிறேன். முகப்பில் “ஸ்ரீதருக்கு அஞ்சலி” என்று தெரியும். வேறு ஏதாவது நல்ல பக்கங்கள் தென்பட்டால் சொல்லுங்கள், அவற்றையும் சேர்த்து விடலாம்.

தேனிலவு (Thenilavu)பழைய பாட்டு பைத்தியம் பிடிக்க ஆரம்பித்த காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த குரல் என்றால் ஏ.எம். ராஜாதான். மிகவும் பிடித்த பாட்டு எது என்று கேட்டால் கொஞ்சம் யோசிக்கிற மாதிரி பாவ்லா பண்ணிவிட்டு 3 பாட்டுகளை சொல்வேன். “தென்றல் உறங்கிய போதும்”, “பாட்டு பாடவா”, “காற்று வெளியிடை கண்ணம்மா”.

தேனிலவு சித்ராலயாவின் முதல் படம். ஸ்ரீதர் ரிஸ்கை ரொம்ப சிம்பிளாக குறைத்து விட்டார். அழகான ஹீரோ, ஹீரோயின், காஷ்மீர், அற்புதமான பாட்டுகள். படத்தில் கனமான செண்டிமெண்ட்கள் எதுவும் கிடையாது. ஒரு தயாரிப்பாளராக ரொம்ப புத்திசாலித்தனமான கணக்கு. கதாசிரியராக தோல்வி. ஒரு அரைத்த மாவு கதை. இந்த படத்தை மட்டும் பார்த்துவிட்டு அவரது ரசிகர்கள் கூட ஸ்ரீதர் ஒரு மேதை என்றோ, புதுமை விரும்பி என்றோ சொல்லிவிட முடியாது.

1961இல் வந்த படம். ஜெமினி, வைஜயந்திமாலா, தங்கவேலு, நம்பியார், வசந்தி நடித்தது. ஸஹஸ்ரநாமம் போலிஸ் அதிகாரியாக வருவாரோ? தங்கவேலுவின் மனைவியாக வருபவர் யார் என்றும் ஞாபகம் வரவில்லை. ஏ.எம். ராஜா இசை.

இலக்கணம் தவறாத கதை. பணக்கார தங்கவேலு, தன் இரண்டாவது மனைவி, வை. மாலாவுடன் காஷ்மீருக்கு ஹனிமூன் போவார். ஜெமினியை தன் புது மானேஜர் என்று நினைத்துக்கொண்டு அவரையும் காஷ்மீருக்கு கூட்டிப் போவார். இப்படி ஒரு ஹனிமூன் எங்கேயும் கேள்விப்பட்டிருக்க முடியாது. உண்மையில் புது மானேஜரோ நம்பியார். வை. மாலாவும் ஜெமினியும் தமிழ் சினிமா இலக்கணப்படி காதல் வசப்பட, நம்பியாரும் தமிழ் சினிமா இலக்கணப்படி சதி செய்ய, ஜெமினியை போலீஸ் தேடும். கடைசியில் தமிழ் சினிமா இலக்கணப்படி உண்மைகள் வெளி வர, தமிழ் சினிமா இலக்கணப்படி காதல் ஜோடி சேர்ந்து, தமிழ் சினிமா இலக்கணப்படி சுபம்!

போட்டின் பின்னால் ஜெமினி ஒரு பலகையில் பாடிக்கொண்டே வருவதும், படகு வீடுகளும், அந்தக் காலத்தில் நல்ல கிம்மிக்காக இருந்திருக்கும். யாருக்கும் பெரிதாக வேலை இல்லை. வை. மாலா அவ்வப்போது கண்களை சிமிட்டிக்கொண்டு ஆடுகிறார். ஜெமினி அவரது மிருதுவான குரலில் ஸாஃப் டாக பேசுகிறார். நம்பியார் சதி செய்கிறார். கதை முடிந்து விட்டது. கதை காஷ்மீரை காட்டவும், பாட்டு பாடவும் ஒரு சட்டம், அவ்வளவுதான்.

இரண்டாவது கதாநாயகியான வசந்தி பிற்காலத்தில் தி.மு.க. எம்.எல்.ஏவாக இருந்த, ௬௭இல் காமராஜரையே தோற்கடித்த சீனிவாசனின் மனைவி. தேனிலவு வசந்தி என்றே அழைக்கப்பட்டவர்.

பாட்டுக்கள் சூப்பரோ சூப்பர். ஸ்ரீதரின் எல்லா படங்களிலுமே பாட்டுகள் அருமையாகத்தான் இருக்கும். ஆனால் இந்த படத்தில் ராஜாவும் அவரும் ஒரு high performance zoneஇல் இருந்திருக்கிறார்கள். உபசாரத்துக்காக சொல்லவில்லை, பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை. எத்தனை முறைதான் அருமை, அபாரம், அற்புதம், அமர்க்களம், அசத்தல், அதிசயம், அபூர்வம், அழகு, ஆனந்தம் என்று எழுதுவது?


பாட்டு பாடவா என் சின்ன வயது உள்ளத்தை தொட்ட பாட்டு.


ஓஹோ எந்தன் பேபி நல்ல மெட்டு, ஆனால் வரிகள் அவ்வளவு நன்றாயில்லை என்பது என் எண்ணம்.

சின்ன சின்ன கண்ணிலே பிற்காலத்திலே என்னை மிக impress செய்த பாட்டு.

நிலவும் மலரும் பாடுது அருமையான பாட்டு.

காலையும் நீயே மாலையும் நீயே அற்புதமான பாட்டு. ஆனால் பார்க்க சகிக்க வில்லை. ரொம்ப artificial ஆக இருக்கும்.

மலரே மலரே தெரியாதா ஒரு மாற்று குறைவுதான், ஆனால் நல்ல பாட்டு.

ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன் ஒன்றுதான் கொஞ்சம் சுமாரான பாட்டு.

எல்லா பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.

படத்தில் ராஜா பின்னணி இசை அமைக்க மாட்டேன் என்றதாகவும் எம்ஜிஆர் தலையிட்டு ஸ்ரீதருக்கும் அவருக்கும் சமரசம் செய்து வைத்ததாகவும் தாஸோ மணிவண்ணனோ சொன்னார்கள். யார் சொன்னது என்று சரியாக நினைவு வரவில்லை. ஆனால் இதற்கு பின் ஸ்ரீதர் எம்எஸ்விக்கு மாறிவிட்டார்.

பாட்டுக்காக பாருங்கள். வைஜயந்திமாலாவின் தீவிர ரசிகர்கள் இருந்தால் பாருங்கள். பாட்டுக்களால் 10க்கு 6 மார்க். C grade.

தோளின் மேலே பாரம் இல்லே – நி. நி. நி. II


நினைவெல்லாம் நித்யா பற்றி எழுதும்போது இந்த பாட்டை எப்படி மறந்தேன்? இந்த பாட்டு உலக மகா சிறந்த பாட்டு என்று அப்போது நினைக்கவில்லை. ஆனால் நண்பர்கள் வட்டாரத்தில் இந்த பாட்டு ரொம்ப பிரபலம். “மாமேன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்” பாட்டின் இடத்தை இந்த பாட்டு பிடித்துக் கொண்டது.

அப்படியே தலையை சிலுப்பிக்கொண்டு “மாமா மாமா மாமா மியா” என்று பெண்கள் பள்ளி பக்கத்தில் கத்தி பாடிக்கொண்டே போவோம். ஸ்டைலாம். என்ன, கொஞ்சம் வேகமாக போவோம். அடுத்த கட்டடம் எங்கள் பள்ளி, எங்கள் வாத்தியார் யாராவது பார்த்துவிட்டால் கதை கந்தலாகிவிடுமே என்று ஒரு பயம். அதை விட பெரிய பயம் யாராவது பெண்கள் குனிந்த தலையை தூக்கி நம்மை பார்த்துவிட்டால் என்ன செய்வது என்பது. யாராவது பெண் கிட்டே வந்து ஹலோ என்று சொல்லி இருந்தால் வார்த்தையே வந்திருக்காது என்று நினைக்கிறேன். பே பே பெப்பே என்று ஏதாவது உளறி இருப்போம்.

அந்த அசட்டுத்தனம் நிறைந்த பருவம் திரும்பி வராதுதான். ஆனால் இப்போது வேறு அசட்டுத்தனங்கள் ஸ்டாக் இருப்பதால் குறை ஒன்றும் இல்லை.

பாட்டை இங்கே கேட்கலாம்.