விஜய் – அன்றும் இன்றும்


ஃபோட்டோக்கள் தீர்ந்துவிட்டது, இந்த “அன்றும்-இன்றும்” தொடருக்கு ஒரு ப்ரேக் விடலாம் என்று நினைத்தேன். ஆனால் விமல் இன்னும் அனுப்பி இருக்கிறார். அவருக்கு நன்றி!

இந்த செட் ஃபோட்டோக்கள் முடிந்த பிறகு ப்ரேக் விடுகிறேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

தொடர்புடைய பதிவுகள்:
அர்விந்த் சாமி – அன்றும் இன்றும்
தேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்
ஜெயசித்ரா – அன்றும் இன்றும்
காஞ்சனா – அன்றும் இன்றும்
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்
எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்
சரோஜா தேவி – அன்றும் இன்றும்
சரிதா – அன்றும் இன்றும்
ஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்
த்ரிஷா – அன்றும் இன்றும்
வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்

இந்த வருஷ தமிழ் படங்கள்


வெற்றி பட லிஸ்ட் இந்த பதிவில் இருக்கிறது. வசதிக்காக இங்கே கீழே கொடுத்திருக்கிறேன்.

பிளாக்பஸ்டர் ஹிட் – அயன்
சூப்பர்ஹிட் – படிக்காதவன்
ஹிட் – யாவரும் நலம், சிவா மனசுல சக்தி, நாடோடிகள், மாசிலாமணி, வெண்ணிலா கபடி குழு, அருந்ததி (டப்பிங் படம்)
சராசரிக்கு மேலே – பசங்க
சராசரி – மாயாண்டி குடும்பத்தார்

ஆச்சரியமாக இருக்கிறது – இந்த லிஸ்டில் முக்கால்வாசி படம் பார்த்திருக்கிறேன். எல்லாம் லோக்கல் மளிகை கடையில் கிடைத்த டிவிடிக்கள்தான். அநேகமானவை திருட்டு டிவிடியாக்கத்தான் இருக்க வேண்டும். பாதி என் டிவிடி ப்ளேயரில் ஓடுவது இல்லை.

பார்த்தவற்றில் நாடோடிகள், பசங்க இரண்டும் பரவாயில்லை. சுமாரான படங்கள்தான் என்றாலும் இந்த வருஷம் வந்த படங்களில் இவை இரண்டும்தான் டாப்.

வெ.க. குழு கபடி பகுதி நன்றாக இருந்தது, முடிவு மிக செயற்கை.

அயன் தியேட்டரில் பார்த்தேன். பார்க்கக் கூடிய மசாலா. படிக்காதவனும் அப்படித்தான். சிவா மனசுல சக்தி அப்படித்தான்.

யாவரும் நலம் டிவிடி கொண்டு வந்தும் நேரம் இல்லாததால் அங்கும் இங்கும் கொஞ்சம் பார்த்தேன். அருந்ததி இரண்டு முறை டிவிடி மாற்றியும் ஒலி மிக மோசமாக இருந்ததால் பார்க்கமுடியவில்லை.

மா. குடும்பத்தார், மாசிலாமணி பார்க்கவில்லை. பார்ப்பேனா என்றும் சொல்வதற்கில்லை.

மாசிலாமணி, அயன், படிக்காதவன் இவை ஓடியதில் சன் டிவிக்கு பெரும் பங்கு இருக்க வேண்டும். எக்கச்சக்க விளம்பரம்.

இவற்றை தவிர குறிப்பிடப்பட வேண்டிய படம் நான் கடவுள். நான் கடவுள் சுமாரான படம்தான். என் கண்ணில் கதை வீக். ஆனால் பிச்சைக்கார பின்புலம், ஆர்ட் டைரக்ஷன் ஆகியவை நன்றாக இருந்தன.

சமீபத்தில் பார்த்த தோரணை படமும் பார்க்கக் கூடிய மசாலா. நியூட்டனின் மூன்றாம் விதி இன்னும் நன்றாக எடுத்திருந்தால் நல்ல மசாலாவாக இருந்திருக்கும்.

பார்க்க விரும்பும் படம் காஞ்சிவரம். பிரகாஷ் ராஜ் விருது எல்லாம் வாங்கி இருக்கிறார். டிவிடி இன்னும் வரவில்லை போல.

பார்த்ததிலேயே மகா போர் படம் வில்லு. விஜய்க்கு என்ன ஆச்சு? போக்கிரி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு என்று எல்லா படமும் மகா தண்டமாக இருக்கிறதே? கில்லி விஜய் திரும்ப வர மாட்டாரா? பொதுவாக பெரிய கைகளையே காணோமே? ரஜினியை விடுங்கள், கமல், அஜித் யாரையுமே காணோமே?

வெங்கையாவா வேங்கையாவா! – திரையுலக வரலாறு 5


அந்த காலத்து திரைப்படம் என்றால் அந்த காலத்து விஜய் அல்லது அந்த காலத்து சூர்யா வந்து உலகமே எதிர்க்கும் காதலர்களை, தன் வாதத் திறமையால் அந்த உலகம் ஸ்த்ம்பிக்கும்  ”லா பாயிண்டுகள” எடுத்து விட்டு  ஒரு வழியாக கத்திகளும், ரிவால்வர்களும் சோகமாகிப்போய் வன்முறை அப்பாக்கள் கையிலிருந்த நழுவ, சேர்த்து வைத்து,  காதலர்களை ரயிலில் ஏற்றி விட்டு, தன் காதல் மட்டும் சக்ஸஸ் ஆகாமல் ஒன்றிரண்டு கண்ணீர் துளிகளுடன் சோகமாக ரயிலை பார்த்து ஆரம்பித்த டாட்டா சினிமா பார்க்க வந்த ரசிகர்களில் வந்து முடியும் டைரக்டோரியல் டச்சுடன் “இவரது காதல் அர்ப்பணம் தொடரும்” என்று திரையின் ஒரு பாதியை ஆக்ரமிக்கும் வாசகங்களுடன் வீட்டிற்க்கு போய் சேரும் வரை விக்கி விக்கி அழுவதற்க்கு கணிசமாக சோகத்தை பேக் செய்து கொடுக்கும் ஒரு ஃபுல் சர்வீஸ் “எண்டர்டெயின்மெண்ட்” பேக்கேஜ் இல்லை. மாறாக ஐரோப்பியர் ஒருவர் விக்டோரியா பப்ளிக் ஹாலில் கதை கத்தரிக்காய் ஒன்றும் இல்லாத ”ஓடும் குதிரைகள்” அல்லது “தவழும் பாப்பாக்கள்” அல்லது காமிராவை ஆஃப் செய்ய மறந்த பொழுது அனாவசியத்துக்கு வந்து விழுந்த மண் தரைகள், கால்கள போன்ற காட்சிகள் தான் அன்றைய தமிழ் ரசிகர்களை வசீகரித்தவைகள். இந்தப் பேரானந்தக் கொடுமையைப் பார்க்க தமிழர்கள் கலங்காமல் காசை அள்ளிக் கொடுத்தார்கள். ஐரோப்பியர் கலங்காமல் காசை அள்ளினார். இன்று ஹாண்டிகாமில் ”நல்லா விழவில்லை, அழித்துவிடுங்கள்” என்று கோபமாக மணைவி கட்டளையிடும் காட்சிகளின் தரத்தை சேர்ந்தவையாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்பது என் ஊகம்.

சாமிகண்ணு வின்செண்டும் மக்களை எண்டர்டெய்ன் பண்ணியவர்களில் ஒருவர். 20ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் இப்படி ஒன்றும் இல்லாததெற்கெல்லாம் பரவசப்பட்டு  சினிமா பார்த்து வந்த் நிலமையில் இருந்த ரசிகர்களுக்கு முன்னேற்றமாக கதையுடன் கூடிய பரவசங்களை கொடுத்தவர்கள் தான் நடராஜ முதலியார், ஆர். வெஙகையா, ஆர். பிரகாஷ், மற்றும் பலர். இரண்டாவது பத்தாண்டில் தான் ஓரளவு சினிமா டேக் ஆஃப் பண்ணியது எனலாம். இன்னும் சரியாக சொல்லப்போனால் முப்பதுகளில் தான் சினிமா டாப் கியாருக்கு மாறியது.  நாம் முன்னரே நடராஜ முதலியார் பற்றி மாவு அறைத்து விட்டோம்.

R. Vengaiah

R. Vengaiah

ரகுபதி வெங்கையாவும், ரகுபதி பிரகாஷ்ஷும் சக்கை போடு போட்ட தந்தையும் மகனும். 1914ல் கெய்ட்டி தியேட்டரை தொடங்கிய வெங்கையா மகனுடன் சேர்ந்து  “கிழக்கின் நட்சத்திரம்” (Star of the East) என ஒரு ஸ்டுடியோவை நிறுவினார்.  வெங்கையா இந்த காலகட்டத்தில் பல திரைப்படங்களை வெளியிட்டார். நடராஜ முதலியாருக்கு கீச்சகவதம் என்றால் வெங்கையாவுக்கு பீஷ்மவதம். இதோ பட்டியல்:

பீஷ்மவதம் (1922)

நந்தனார் (1924)

சமுத்ர மதனம் (1923)

கஜேந்தர மோக்‌ஷம் (1924)

உஷா ஸ்வப்னா (1924)

திரௌபதி பாக்யா (1924)

மஹாத்மா கபீர்தாஸ்(1925)

R. Prakash

R. Prakash

லைலா என்ற பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்தார் பிரகாஷ். எக்கச்சக்க காசுகள் ரசிகர்கள் பைகளிலிருந்து இந்த தந்தை-மகனின் பைகளுக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தது. அண்டை நாடுகளுக்கும் இவர்கள் புகழ் கப்பலேரி போயிற்று. பணமாக உறுமாறி திரும்பி வந்தது.

பிரகாஷும் கப்பலேறினார். ஏற்கனவே காமிராமேன் ஆன பிரகாஷ் தன் திறமையை சத்தாக்க இங்கிலாந்து சென்றார். திரைப்படத் தயாரிப்பை முறையாக லண்டனில் “பேக்கர்ஸ் மோஷன் பிக்ஸ்ர்” ஸ்டுடியோவில் கற்றார். ஹாலிவுட் போனார். டி.ட்பிள்யூ. கிரிஃப்ஃபித் மற்றும் சிசில் பி டிமெல்லுடன் பணி புரிந்தார். வென்றார். வந்தார். மேலும் படங்கள் தந்தார்.

”முருகா, அந்தப் பொட்டிய கொடுத்துடு…”


எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? சைனாவில்…என்று நினைக்கிறேன். அல்லது தாய்லாந்தில். நம்ம எம்.என்.ந்ம்பியார் தான் இப்படி வசனம் பேசியது. ”உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்திற்க்காக ஒரு புத்த பிட்சு வேடமணிந்து (உண்மையான புத்த பிட்சுக்கள் இருவரை அடித்துக் கட்டிப் போட்டுவிட்டு) விஞ்ஞானி எம்.ஜி.ஆர்ரிடம் ”முருகா, அந்த பொட்டிய கொடுத்துடு” என்று பேசுவது இது.  இவர் இவ்வாறு வில்லத்தனமாக “பஞ்ச் டையலாக்” எத்தனையோ பேசியிருக்கிறார். கூர்ந்து கவணித்தால் தான் மனதில் நிற்க்கும். ஏனென்றால், அவருடைய வசனங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். டைலாக்கின் மத்தியில் கரைந்து போய் விட்டிருந்தது. ஆனாலும் இதை ரசிப்பவர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.

இவர் வில்லத்தனம் தத்ரூபமாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் ஒரு பெயர் உண்டு. இவர் ”எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் வில்லனாக நடித்தது பல எம்.ஜி.ஆர். ரசிகர்களை பாதித்திருந்தது. அந்த படம் வெளிவந்த புதிதில், ஒரு முறை ஒரு வெளிப்புர படப்பிடிப்பின் பொழுது அங்கிருந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சேர்ந்து ஆத்திரத்தில் அவரை  அடிக்க போய்விட, அங்கு உடனிருந்த எம்.ஜி.ஆர்., த்னது ரசிகர்களை சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார். எவ்வளவு தான் ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர். மீது பாசமிருந்தாலும் இந்த அளவிற்கு வெறுப்பு தெரிக்க தத்ரூபமாக நடிக்காதிருந்தால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. நடக்காமலிருந்தால் நல்ல விஷயமே. ஆனால் இந்த நிகழ்ச்சி நம்பியாருடைய நடிப்பின் வெற்றியை பறை சாற்றும் ஒரு அளவுகோல் ஆக பரிமாணித்து விட்டிருந்தது.

இவர் வில்லன் வேடத்தில் மட்டும் ஜொலிக்கவில்லை. நகைச்சுவையிலும் வெளுத்துக் கட்டியிருக்கிறார். “தூறல் நின்னு போச்சு” என்ற திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இது தெரியும்.  நகைச்சுவையான் குஸ்தி வாத்தியாராக நடித்து அந்தப் படத்தின் மூலம் பல ரசிகர்களின் பெரு மதிப்பை பெற்றிருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் அந்தப் படத்தின் தொய்வில்லாமைக்கு இவரது கதாப்பாத்திரம் ஒரு முதுகெலும்பாக இருந்து உறுதுணை புரிந்தது. “என் சோகக் கதையை கேளு தாய்க்குலமே” என்று பாக்கியாராஜும் இவரும் சேர்ந்து ”மலையேறி” விட்டு அடிக்கும் லூட்டி அபாரமான பொழுது போக்கு. ஆஹா…இதெல்லாம் இனிமேல் வருமா? பாக்கியராஜ் இவரை இந்த கோணத்தில் தமிழகத்திற்கு அடையாளம் காட்டியதற்க்கு கிரெடிட் பெறவேண்டும்.

மேலும் இது அல்லாமல் சமீபத்தில் ஒரு குணசித்திர வேடத்தில் விஜய்யுடனும், நாகேஷுடனும் நடித்திருந்தார். அதிகம் ந்டிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், முடிந்த வரை அதிலும் அவர் அருமையாக அவருடைய ரோலை செய்திருந்தார். திரைப்படத்தின் பெயர் எனக்கு மறந்துவிட்டது.

இதையெல்லாம் விட நிஜ வாழ்க்கையில் நிதானம் தவறாத ஒரு பெரியவர். பலருக்கு சபரிமலையை அறிமுகப்படுத்தி வைத்து உத்வியிருக்கிறார். எல்லோரும் அவரை மதிப்பின் மிக உயரத்தில் வைத்திருந்தார்கள். சாமான்யமான மனிதர்களுக்கு இது கர்வத்தை கொடுத்திருக்கும். ஜெயமாலா என்ற கன்னட நடிகையும் சுதா சந்திரனும் ஐயப்பனை தொட்டு வணங்கியாதாகவும், 17வதோ, 18வதோ படியில் நடனமாடியாதகவும் பிதற்றிய பொழுது, இவருக்கு இருந்த மதிப்பை பயன் படுத்தி அவர்களுக்கு எதிராக கருத்துச் சொல்லியிருந்தாலே போதுமாயிருந்தது. பக்தர்களும், மக்க்ளும் அவர்கள் இருவர் மீதும் ஆவேசத்துடன் பாய்ந்திருப்பார்கள். ஆனால் இவர் அவர்கள் இருவரும் ஏன் அதை செய்திருக்கமுடியாது என்பதை விளக்கியது மட்டுமல்லாமல் அப்பொழுது அவர்கள் இருவரையும் கோவிலுக்குள் விடக்கூடாது என்ற சொன்ன அனைவருக்கும் ”இந்த ஒரு காரணத்திற்க்காக அவ்ர்களையும் பிற பெண்களையும் ஐயப்பனின் கோவிலுக்குள் விடக்கூடாது  என்று கூற ஒருவருக்கும் உரிமை கிடையாது” என்று பெருந்தன்மையுடன்  கருத்து கூறியிருக்கிறார். பெண்களை கோவிலுக்குள் ஏன் விடக்கூடாது என்பதற்க்கு அவர் அளிக்கும் விளக்கம் பெண்களை அவமதிக்கும் ஒன்று அல்ல. ஆண்கள் பலவீணமானவர்கள். அவர்கள் சிந்தனை சிதறும் என்றே பெண்களை விடுவதில்லை என்ற நிலைப்பாட்டை விளக்கினார்.

மனிதர் போய்விட்டாரே!