லிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்


(Eashwar Gopal’s Linga Review)

ரஜினி படம் என்றாலே ஒரு தீபாவளி போல் குதூகலம்தான். கதை இருக்கிறதோ இல்லையோ, முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடவேண்டும் என்ற தீவிரம் சற்று குறைந்து இருந்தது.  முதற்கண், எந்திரனோடு இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை முடித்துக்கொள்ளவேண்டும் என்ற சபதத்தை படம் வெளியாகும் தேதி அறிவித்தபின், கொஞ்சம் கை நடுங்க ஆரம்பித்தது.  பின் அசோக்கின் வற்புறுத்தலால் தலையை ஆட்டி வைத்தேன். 

கதைச்சுருக்கம் இதுதான்…..மக்கள் தண்ணீருக்காக அலைவதைப்பார்த்து பொறுக்க முடியாமல், ராஜாவாக இருக்கும் ரஜினி, 1940 களில் ஒரு அணை கட்ட தன் சொந்த காசில் முயற்ச்சிக்கிறார், அப்போது இருக்கும் ஆங்கில அரசாங்கம் அவரை கட்டவிடாமல் முட்டுக்கட்டை போட்டு பல விதங்களிலும் தொந்தரவு கொடுக்க அதையும் மீறி கட்டிக்கொடுத்து முடிக்கையில், அரசாங்க அதிகாரிகளின் சூழ்ச்சியால், மக்கள் நலனைக்கருதி எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு போய்விடுகிறார். அணை கட்டும்போது ஏற்படும் துர்மரணத்தை தவிர்க்க ஒரு சிவன் கோவிலையும் கட்டி அதில் மரகத லிங்கத்தை ப்ரதிஷ்டை செய்கிறார்.  அணையயும் கோவிலையும் திறக்க விடாமல் செய்து வி்டுகின்றனர். ஊர் மக்களுக்கு பின் தெரிய வருகிறது அவர் கட்டிய அணை உறுதியானது என்றும், அவர்கள் அரசாங்கத்தால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்றும். பின் அவர் ஊரை விட்டு போய் வேறு ஒரு ஊரில் வசித்து, வாரிசை உருவாக்கி சகாப்தத்தை முட்டித்துக்கொள்கிறார்.

அவரின் வாரிசான இன்னொரு ரஜினியை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்து கொண்டுவந்து அந்த கோவிலை திறக்கவைத்து சபதத்தை முடிக்க எண்ணுகிறார் ஊர்பெரியவர்.  அதை முடித்தார்களா, தேடின ரஜினி கிடைத்தாரா, என்பது மீதிக்கதை. 

ரஜினி என்ற மந்திரச்சொல்லே படத்திற்கு ப்ராண வாயு என்ற தாரக மந்திரத்தினூடே படத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள்.  ரஜினிக்கு வயது நன்றாக ஆகிவிட்டதால், என்னதான் அற்புதமான ஒப்பனைகளை செதுக்கி வைத்தாலும், அதையும் கிழித்துக்கொண்டு வயது முதிற்சி தெரிகிறது.  ஏன் அனுஷ்கா கூட வயதானவராக தெரிந்தாலும், பல காட்சிகளில் அழகாக இருக்கிறார்.  ஆனால், சோனாக்ஷி…..சாமி, நம்மூர் மீனாக்ஷியே போதும் என்கிற அளவுக்கு உள்ளார், அந்த ப்ரம்மாண்ட பாடலைத்தவிர.  இளம் வயதானதால் ஜோடி சரியாக செட் ஆகவில்லை என்று நினைக்கிறேன்.  அதிலும் ஒரு 20 வயசு பொண்ணுக்கு ஜாக்கட் அனியாமல் அந்தக்காலத்து நடப்பில் காண்பிப்பதாக செய்து – பொருத்தமேயில்லை.  ரவிக்குமார் சார் நாங்கள்ளாம் இளகிய மனதுடையவர்களாக இருக்கலாம் அதற்காக இப்படி பந்து, பந்தாக பூச்சுற்றக்கூடாது.

ரஜினி படத்தை தைரியமாக பார்க்கலாம் என்றால் அதற்கான அம்சம் முதலில் இந்து மதத்தை திட்டியோ, கிண்டலடித்தோ ஒரு காட்சி அமைப்பு இருக்காது.  இப்படத்திலும் அப்படியே.  அதற்கும் ஒரு நெஞ்சுரம் வேண்டும்.  படத்தை ஜவ்வு போல் இழுத்து, கொச கொசவென்று குழப்பி ஒரு முழு நீள ஆவணப்படம் போல் (டாகுமெண்ட்ரி) எடுத்திருப்பது ரசிக்கும் படி இல்லை.  எப்போதும்போல் பஞ்ச் வசனம் இதிலும் ஆங்காங்கே தூவி கைதட்டல் பெறுகிறார்.  வில்லன் ஜகபதி பாபுவிற்கு அதிகம் வேலை இல்லை.  அவர் எதற்காக பரம்பரை, பரம்பரையாக இந்த அணையை உடைக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பதற்கு காரணம் வலுவாக இல்லை.   அணை கட்டும்போது படம் ஒரே இழுவை…அந்த ஜாதி காட்சி, இந்தியன், கொடி, ஒரே உச்சக்கட்ட பாசம், அடுத்து வெறுப்பு, யாரையும் எளிதில் நம்புவது போன்ற தேவையில்லாக் காட்சிகள் – கோலி சோடா இரண்டு வேண்டும் தாகத்தைத்தீர்க்க.

பல இடங்களில் முல்லைபெரியாரு அணையின் சாயல் அங்கங்கு வசனத்தில் வந்துபோகிறது் (உம். எத்தனை அடி தேக்கினாலும், அணை வலுவானது என்ற வசனம் + அதில் பென்னி குயிக் தன் சொந்த காசில் கட்டினார், இங்கே ரஜினி மஹாராஜாவாக இருந்து தன் சொந்த சொத்தில் கட்டுகிறார்).  ரஜினியின் இயல்பான நடிப்பு அப்படியேதான் உள்ளது.  ஆனால் கடைசியில் பைக்கிலிருந்து பலூனில் போய் விழுந்து – வெடிகுண்டை காலால் உதைத்து அணைக்கட்டுக்குள் போய் விழச்செய்வெதல்லாம் —–உஸ்ஸ்ஸ்ஸ் “முடியல”.

முதல் ஒரு மணிநேரம் படம் விருவிரென்று போகிறது. சந்தானத்தின் நகைச்சுவை, சற்றேு அடக்கி வாசித்திருக்கிறார்.  படத்தில் மிகவும் ரசிக்கும்பட்டி இருப்பது அந்த அணையும், அதன் ப்ரஹ்மாண்டத்தினை படம் பிடித்த ரத்னவேலு கேமராவும்.  அருமை.

இசை: ரஹுமான் – தத்துவப்பாடலான உண்மை ஒருநாள் வெல்லும், என் மன்னவா பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும், மற்றபாடல்களுக்கு ரசிகர்கள் வெறித்தனமாக டீ வாங்கப்போவதை ரஜினியாலேயே தடுக்க முடியவில்லை.  பாவம் அவரே குழம்பிட்டாரு.

ரஜினி படங்களில் இருக்கும் மற்றொரு சங்கடம் ஒவ்வொரு காட்சியிலும் பல ஜனங்கள் இருப்பது.  இப்படத்திலும், அரசியல் வசனம் இல்லாமல் இல்லை. சந்தானம் – “அவர் நினைச்சா ஒரு கவர்னர், பி.எம்., ஏன் ஜனாதிபதியாகவே ஆக தகுதிஉடையவரு”…..ஹும்ம்ம் நினைப்புதான் புழப்ப கெடுக்கிறது.

வேறு வழியே இல்லையென்றால் போய்ப்பாருங்கள் – ரஜினி ரசிகராக இருந்து பார்த்தே ஆகவேண்டும், தலைவா, தலைவா என்று கதறுபவரா? பின் போய்ப்பாருங்கள்.  “பின் நீன் ஏன் போய்ப்பார்த்தாய்?” என்றால்……..ஹி…ஹி…நான் சோனாக்ஷி/அனுஷ்காவிற்காக போய்ப்பார்த்தேன்.

முழுநீள டாகுமெண்ட்ரி படம்….