காயத்ரி என்ற திரைப்படம்


(RVயின் பதிவு)

குமுதத்தில் “சுஜாதாவின் கதை” என்ற தொடரிலிருந்து:

“சுஜாதாவின் நாவல்களில் முதலில் படமாகியது காயத்ரி. பஞ்சுஅருணாசலம்தான் அந்தப் படத்தைத் தயாரித்தார்.

“தினமணி கதிரில் `காயத்ரி’ தொடராய் வரும்போதே அதை திரைப்படமா எடுக்கணும்னு நினைச்சேன். தொடர் முடிஞ்சதும் சுஜாதாவைபாம்குரோவ் ஓட்டல் ரூம்ல சந்திச்சேன். ரொம்ப எளிமையா பழகுனார். பெரிய எழுத்தாளர்களுக்கு இருக்கும் பந்தா எதுவும் இல்ல. எல்லாத்தையும் ரொம்ப ஆர்வமா கேட்டுட்டார். அப்போ அவருக்கு சினிமா ரொம்பப் புதுசு. அவரோட ஆர்வம் என்னை ரொம்ப கவர்ந்தது” என்று, தான் முதலில் சுஜாதாவைச் சந்தித்தது பற்றிச் சொல்கிறார் பஞ்சு அருணாசலம்.

“படம் வெளில வந்தபிறகு அந்தப் படத்தில் அவருக்கு அத்தனை திருப்தியில்லை. சினிமா திரைக்கதைக்காக சிலவற்றை மாற்றியிருந்தோம். அதைச் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டார். கதையாய் எழுதுவது வேறு. அதை சினிமாவுக்காக மாற்றுவது வேறு என்பதை உணர்ந்துகொண்டார்” என்கிறார் பஞ்சு அருணாசலம்.

சுஜாதாவும் `காயத்ரி’ கதைக்கு சினிமாவில் நடந்த சேதாரங்களைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அந்த முதல் பட அனுபவத்திலேயே சினிமாவின் சூட்சுமங்கள் அவருக்கு பிடிபட்டுவிட்டது.

“எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம் அது. ஒரு வகையில் `ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னை தயார்படுத்தியது” என்று சமீபத்தில் குமுதத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் சுஜாதா.

இங்கும்-அங்கும் (வானொலி நிகழ்ச்சி)


RVயும் Bagsம் Itsdiff வானொலிக்காக ஸ்ரீயுடன் சேர்ந்து கொடுக்கவிருந்த நிகழ்ச்சி ஒரு சில தொழில்நுட்ப கோளாறினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் ஒரு லைட் ப்ரொக்ராம் ஏற்பாடு ஆகியிருக்கிறது.

நிகழ்ச்சியின் பெயர்

இங்கும்-அங்கும்

(ஒரெ மெட்டில் ஹிந்தி தமிழ் பாடல்கள்)

 

March 9th 7. 30 am PST Very special program

Ingum/Angum

Hindi/ Tamil – Songs with similar tunes –Live

(இந்திய நேரப்படி புதன் இரவு – 8:30 )

 

Tune in and Enjoy the show

உத்தமபுத்திரன் – விகடன் விமர்சனம்


16-2-58 அன்று விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

முனுசாமி – மாணிக்கம்

மாணி: ஏண்ணே! நீ ‘உத்தமபுத்திரன்‘ பார்த்துட்டியா?

முனு: இல்லியே! நீ பார்த்துட்டியா? கதை என்ன?

மாணி: ஒரு ராணிக்குக் குழந்தை பிறக்குது. இது ராணியின் தம்பி நாகநாதனுக்குப் பிடிக்கலே. குழந்தையைக் கொல்ல ஏற்பாடு பண்றான். ராணிக்கு உடனே இரண்டாவதா, ஒரு குழந்தை பிறக்குது.

முனு: சரிதான். கொல்லச் சொன்ன அந்தக் குழந்தை என்ன ஆவுது?

மாணி: வழக்கம் போல அந்தக் கையாளு அந்தக் குழந்தையைக் கொல்லலே! ரகசியமா தன் பெண்சாதிகிட்ட கொடுத்து வேற இடத்துக்கு அனுப்பிடறான். ராஜா வீட்டுக் குழந்தை குடிசைலே நல்லவனா வளருது. அரண்மனையிலே இருக்கிற குழந்தையை சேனாதிபதி நாகநாதன் குடிகாரனா வளக்கறாரு; அக்கிரம ஆட்சி நடத்தறாரு.

முனு: சரி, நடிப்பைப் பற்றிச் சொல்லு!

மாணி: குடிசையில வளர்ற சிவாஜி கணேசன், குடிகாரனா வளர்ற சிவாஜிகணேசன்… ஆளு ஒண்ணுன்னாலும் வேஷம் இரண்டில்லே? ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிடறாங்க! ரெண்டு வேஷம் என்ன அண்ணே, 20 வேஷம் குடுத்தா லும் தத்ரூபமா நடிப்பாரு அவரு!

முனு: சரி; ஹீரோயின் எப்படி?

மாணி: பத்மினியாச்சே, கேக்கணுமா? மேக்கப் அள்ளுது; நடை, உடை, ஜடை மூணும் துள்ளுது; நடிப்பு வெல்லுது! ஆஹா! ஒரு சீன்லே நீளமா சடை போட்டு பூ வச்சுப் பின்னிக்கிட்டு வருது பாரு!

முனு: நம்பியாருக்கு என்ன வேஷம்?

மாணி: அவர்தான் ராணியின் தம்பி. வழக்கம் போல அமர்க்களப்படுத்தியிருக்காரு.

முனு: நம்பியார் வராரு இல்லே! அப்ப, கத்திச்சண்டை இருக்குமே?

மாணி: அது மட்டும் இல்லே! இரண்டு சிவாஜிகளுக்குள்ளேயே சண்டை நடக்குது!

முனு: காட்சி ஜோடனை?

மாணி: இயற்கைக் காட்சிகள் பிரமாதம்! மைசூர் பிருந்தாவனத்திலே ஒரு டான்ஸ் எடுத்திருக்காங்க. அற்புதம்! உயரமான கோட்டைச் சுவரிலேருந்து குதிரை மேல குதிக்கிறாரு சிவாஜி! நம்பவே முடியலே அண்ணே!

முனு: குதிரை தாங்குதா இல்லையா? அப்புறம் நீ ஏன் கவலைப்படறே? சரி, படம் எப்படி?

மாணி: ஒரு சில குறைங்க இருந் தாலும், நிச்சயமா இது ஒரு நல்ல படம் அண்ணே!