களத்தூர் கண்ணம்மா


படம் வந்தபோது (செப்டம்பர் 1960) விகடனில் வந்த விமர்சனம். கமலைப் பற்றி அப்பவே புகழ ஆரம்பித்துவிட்டார்கள்! நன்றி விகடன்!

சண்முகம் – மீனாட்சி

சண்: ஏன் மீனாட்சி, முகமெல்லாம் ஒரே வாட்டமா இருக்குது?

மீனா: களத்தூர் கண்ணம்மா படத்துக்குப் போயிருந்தேன். அநாதைக் குழந்தை ஒண்ணு படற கஷ்டத்தைப் பார்த்து என் மனசு ரொம்பச் சங்கடப்பட்டுதுங்க.

சண்: அப்படி என்ன உருக்கமான கதை அது?

மீனா: களத்தூர் ஜமீன்தாரோட பிள்ளை ராஜா, அவங்க ஜமீன்லேயே வேலை பார்க்கிறவருடைய பெண் கண்ணம்மாவைக் காதலிச்சு, ரகசியக் கலியாணம் பண்ணிக்கறாரு. கலியாணம் ஆனவுடனேயே மனைவியைப் பிரிஞ்சு, சீமைக்குப் போறாரு. கல்யாண விஷயம் ஜமீன்தாருக்குத் தெரிஞ்சு போவுது.

சண்: அப்புறம் மூணு பேரும் தனித்தனியா பிரிஞ்சுடுவாங்க. திரும்பி வந்த ராஜா கண்ணம்மாவைக் காணாமல் தவிப்பான். கடைசியிலே எல்லாம் ஒண்ணு கூடுவாங்க. அவ்வளவுதானே!

மீனா: ஆமாம். அந்தப் பையன் நடிப்புதான் எல்லாரையும் உலுக்கிடுச்சு. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே‘ன்னு முருகன் படத்துக்கு எதிரிலே நின்னு அந்தப் பையன் பாடியது ரொம்ப உருக்கமா இருந்துதுங்க. சாவித்திரியும் ஜெமினி கணேசனும் கண்ணம்மாவும் ராஜாவுமா வராங்க. காதலியா வரபோதும் சரி, கண் கலங்கித் தவிக்கிற மனைவியா வரபோதும் சரி, கொடுத்த வேஷத்தை நல்லாச் செய்திருக்கு சாவித்திரி.

சண்: ஜமீன்தார் யார்? பாலையாவா?

மீனா: ஆமாம். அவர் நடிப்புக்குச் சொல்லணுமா! சுப்பய்யாதான் வேலைக்காரனா வராரு. கொஞ்சம் ‘ஓவரா’ நடிக்கிறாரு. ஆனால், பிறந்த குழந்தையை அநாதை ஆசிரமத்திலே கொண்டுபோய் விடற இடத்திலே, அந்தக் குழந்தை துணியைப் பிடிச்சுக்குது. அதை அவர் விலக்கிக்கிட்டு வர இடம் ரொம்ப நல்லா இருந்தது.

சண்: டைரக்ஷன் பீம்சிங்கா?

மீனா: ஆமாம். எப்படிச் சரியா சொன்னீங்க?

சண்: மறந்துட்டியா? இதே மாதிரி காட்சியை பாகப் பிரிவினையிலே பார்க்கலியா நீ?

மீனா: இந்தக் குறையெல்லாம் உங்களுக்குத்தான் படும். எனக்கென்னவோ, இதில் அழுகைக்குதான் அதிக இடம் இருக்கு, சிரிக்கவே முடியலேங்கறது ஒண்ணுதான் குறையாகப்பட்டது. நான் பார்த்த நல்ல தமிழ்ப் படங்களிலே களத்தூர் கண்ணம்மாவைக் கண்டிப்பா சேர்த்துக்குவேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

நடிகை சாவித்ரியைப் பற்றி எழுத்தாளர் சிவசங்கரி


சாவித்திரி கோமாவில் இருந்தபோது அவரை சிவசங்கரி பார்த்திருக்கிறார். அந்த நெகிழ்ச்சியான அனுபவம் பற்றி அவர் எழுதி இருப்பது கீழே. தகவல் கொடுத்த விமலுக்கு நன்றி!

அன்று… அப்போது எனக்கு என்ன வயசிருக்கும்? பத்து..? பதினொன்று..?

என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று!

எங்கு பார்ப்பது? எப்படிப் பேசுவது?

”பாண்டிபஜார் ராஜகுமாரி தியேட்டருக்குப் பக்கத்துலதானாம் சாவித்திரி வீடு.” தெருப் பெயர், வீட்டு நம்பர் தெரியாது. யாரையாவது நிறுத்தி ‘நடிகை சாவித்திரி வீடு எது?’ என்று கேட்கக் கூச்சம். தணிகாசலம் செட்டி தெரு, டாக்டர் சிங்காரவேலு தெரு
என்று ஒவ்வொன்றாகப் புகுந்து புறப்பட்டோம். பெரிசாய்க் காணப்பட்ட வீடுகளின் முன் நின்று, சாவித்திரியின் முகம் தெரிகிறதா என்று தேடினோம்.

எங்கள் அதிர்ஷ்டம்… மாரீஸ் மைனர் காரை தானே ஓட்டிக்கொண்டு சாவித்திரி எங்களைக் கடந்து சென்றார். ஓட்டமும் நடையுமாக அந்த வண்டியைத் தொடர்ந்தோம். நல்லவேளையாக, நாலாவது வீட்டு காம்பவுண்டுக்குள் அந்தக் கார் நுழைந்துவிட்டது.

பொசு பொசுவென்று மூச்சுவிட்டுக்கொண்டு, கேட்டைத் தாண்டி, போர்ட்டிகோவில் நின்றோம்.

”எவரும்மா அதி?” – தெலுங்கில் ஒரு பெரியவரின் வினவல்.

”சாவித்திரியைப் பார்க்கணும்.”

”அதெல்லாம் முடியாது. அவங்க வீட்டுல இல்லே!”

”இப்பப் பார்த்தோமே, தானே வண்டியை ஓட்டிண்டு வந்தாங்களே..!”

”அது சாவித்திரி இல்லே, அவங்க அக்கா! போங்க, போங்க..!”

மனுஷர் பொய் சொன்னதும் எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. ஆனால், அடுத்த நிமிஷம்… யார் செய்த புண்ணியமோ, சாவித்திரியே வாசலுக்கு வந்து விட்டார்.

மேக்கப் போட்ட முகம்; கோடு போட்ட ஷிபானோ ஏதோ… மெல்லிய புடவை; திலகம்; சிரிப்பு; அழகு.

”யாரும்மா?”

”நாங்க உங்க ஃபேன்ஸ். ரொம்ப நேரமா வெயில்ல காத்திட்டிருக்கோம்.”

”அப்படியா? ஷூட்டிங்லேர்ந்து நேரா இப்பதான் வரேன். சாப்டுட்டுத் திரும்பப் போகணும். சொல்லுங்க, என்ன வேணும்?”

”ஆட்டோகிராப்…”

”அவ்வளவுதானே… கொடுங்க.”

நீட்டிய புத்தகத்தை மாரீஸ் மைனர் கார் மேல் வைத்து ‘சாவித்திரி’ என்று இடது கையால் கையெழுத்துப் போட்டார்.

கிட்டத்தில் – ரொம்பக்கிட்டத்தில், அவர் சேலை நம் மேல் படுமளவுக்குக் கிட்டத்தில் நின்று பார்த்தபோது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

நாங்கள் ”மனம்போல மாங்கல்யத்தில் உங்க நடிப்பு பிரமாதம்” என்று சொல்லவும், அவர் சிரித்தார். ”தாங்க்ஸ்” என்றார்.

அந்தச் சிரிப்பும் குரலும் ரொம்ப நாட்களுக்கு மனசில் பசுமையாக இருந்தது நிஜம்.

இன்று…

சாவித்திரி உடம்பு சரியில்லாமல் படுத்து ஒரு வருஷமாகிவிட்டது!

அண்ணா நகர்; சின்ன வீடு; வாசலில் பழசாகி, உதிரும் நிலையில் ஒரு தென்னங்கீற்றுப் பந்தல்.

நுழைந்ததும் ஒரு ஹால்.

மேஜை மேல் – ஒருக்களித்து உட்கார்ந்து, தலையை மேலே நிமிர்த்தி, கூலிங்கிளாஸ், பூப்போட்ட சேலையில் அழகாய்க் காட்சி தரும் சாவித்திரியின் படம். ஈரம் பளபளக்கும் உதடுகளோடு சிரிக்கும் சாவித்திரியின் இன்னொரு ஓவியம்! மங்கி, பாலீஷ் இழந்த கேடயங்கள் ஓரிரண்டு…

கிழிந்த அழுக்கு சோபாக்கள், காற்றில் ஆடும் பழைய கர்ட்டன்கள், சொறி பிடித்த வெள்ளை நாய் ஒன்று….

முன்கூட்டியே தெரிவித்துவிட்டுச் சென்றதால் மகன் சதீஷூம், உறவினர் வெங்கடரத்தினம் பாபுவும் வரவேற்று அமரச் சொன்னார்கள்.

”அம்மகாருவைப் பார்க்கிறீங்களா?”

உள்ளே இன்னொரு அறைக்குள் நுழைகிறோம்.

படுக்கையில் எலும்புச்சுருளாக அவர். ரொம்ப சூம்பிப் போன கை, கால்கள்… கறுத்துப்போன தோல்… மூன்று வயசுப் பிள்ளையின் வளர்த்தி. மூடின கண்கள்; மூக்கிலிருந்து ஓடும் ரப்பர் குழாய்; மழமழவென்று வாரி இரட்டைப் பின்னலாகப் பின்னி, மடித்துக் கட்டப்பட்ட முடி; சிவப்புப் பொட்டு.

”அம்மகாரு ச்சூடு… அம்மகாரு இக்கட ச்சூடு! மீ ப்ரெண்ட் ஒச்சுண்டாரு… ச்சூடும்மா” என்று நர்ஸூம் பாபுவும் குனிந்து குரல் கொடுக்க, சாவித்திரி மெதுவாகக் கண்களைத் திறக்கிறார்.

உள்ளுக்குள் என்னமோ வேதனை இருக்கிற தினுசில் கைகளை இப்படியும், அப்படியும் சுழற்றுகிறார்; மஞ்சள் ஏறிப்போன பற்களை ‘நக் நக்’ கென்று கடிக்கிறார்; அரை நிமிஷம் என்னை உறுத்துப் பார்க்கிறார். திரும்ப கண்களை மூடி, அமைதியாகிறார்.

ஹோ… சாவித்திரியா! இவரா!

நவரசங்களையும் விழியோரத்தில் நிறுத்தி, உதட்டசைவால் அனைவரையும் ஆக்கிரமித்து, நடிகையர் திலகம் என்ற பட்டப் பெயரோடு பவனி வந்த சாவித்திரி இவரா?

இல்லை, இல்லை… நம்பமாட்டேன்! சத்தியம் பண்ணினாலும் இது சாவித்திரி என்று ஒப்புக் கொள்ளமாட்டேன்.

கண்ணில் ஊறிவிட்ட ஜலத்தைச் சமாளிப்பதற்காகத் தலையைக் குனிந்து கொள்கிறேன். கவனத்தை அறையின் மற்ற விவரங்களில் செலுத்துகிறேன்.

ஒரு பக்கமாய் ஸ்டெரலைஸ் செய்யும் பாத்திரம்… ஒரு மேஜையில் காம்ப்ளான், ப்ரொடீனெக்ஸ், மருந்துகள்… உடம்புப் புண்களைத் தவிர்க்க ‘ஆல்ஃபாபெட்’ என்ற படுக்கையை உபயோகிக்கிறார்கள்.

இது குமிழ் குமிழான ரப்பராலான படுக்கை. மின்சாரத்தில் இயங்கி, சிறு அலைகளை உண்டாக்குவதன் மூலம் காற்றோட்டத்தை உண்டாக்கி, நோயாளியின் உடம்பை ரணத்திலிருந்து காக்கிறது.

”இந்தப் படுக்கை இல்லேன்னா அம்மகாரு நிலைமை மோசமா ஆகியிருக்கும்…”

இதைத் தவிர டானிக், மருந்து வகையறா… முழு நேர நர்ஸ் ஒருவர்…

சாவித்திரிக்கு பெங்களூரில் கோமா வந்தபோது அதை முதலில் பார்த்த நபர் சாவித்திரியின் பதினாறு வயசு மகன் சதீஷ் தான்.

”ஒரு வாரமா ராப்பகலா ஷூட்டிங் இருந்ததால, அம்மா இன்ஸூலின் போட்டுக்காம விட்டுட்டாங்க. பெங்களூர் போன அன்னிக்கு ராத்திரி வெறும் வயித்தோட இஞ்ஜெக்ஷன் போட்டுக்கிட்டுப் படுத்துட்டாங்க. மூணு மணி சுமாருக்கு நான் பாத்ரூம் போக எழுந்தப்ப அம்மா வாயில நுரையோட, நினைவிழந்து படுத்திருந்தாங்க. இதுக்கு முன்னால இரண்டு மூணு தடவை அம்மாவுக்கு ‘கோமா’ வந்து, உடனே கவனிச்சதுலே சரியாயிருக்கு. இந்த முறைதான் ஏனோ இப்படிப் பெரிசா படுத்துட்டாங்க” என்கிறார்.

நாலு பேராய், பத்துப் பேராய் சாவித்திரி அபிமானிகள் யார் யாரோ வந்து, ஜன்னல் வழியாக சாவித்திரியைப் பார்த்து விட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை பேரின் அன்புக்கும் பரிவுக்கும் பிரார்த்தனைக்கும் பலன் இருக்கவேண்டும். தனித்துத் தவிக்கும் பிள்ளைக்காகவாவது சாவித்திரி மயக்கத்திலிருந்து மீண்டு வரவேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்: சாவித்திரி – புகைப்படங்கள்

சாவித்ரி – அந்த கால அரிய புகைப்படங்கள் 1


விமல் இப்படி ஒரு ஃபோட்டோ சீரிஸ் ஆரம்பிக்கலாமே என்று சொன்னார். நான் அன்றும் இன்றும் சீரிஸில் மிச்ச எல்லாவற்றையும் (இன்னும் கூட வரும்) போட்டுவிட்டு இங்கே வரவே இத்தனை நாளாகிவிட்டது. இந்த சீரிசை அவர் தொடர்வாரா என்று தெரியாது. 🙂


முதலில் சாவித்திரி.

தொகுக்கப்பட்ட பக்கம்: இப்போதைக்கு ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

பணமா பாசமா – ஆர்வியின் விமர்சனம்


அறுபதுகளில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ஒரு நட்சத்திர இயக்குனர். சாரதா, கற்பகம், கை கொடுத்த தெய்வம் மாதிரி பல படங்கள். ஸ்ரீதர், பீம்சிங், ஏ.பி. நாகராஜன், இளம் கே. பாலசந்தர் எல்லாரும் ஓரளவு middle-of-the-road படம் எடுத்தார்கள். கே.எஸ்.ஜி செண்டிமெண்ட் படங்கள் எடுத்தார். Subtlety எல்லாம் எதிர்பார்க்க முடியாது. படம் பொதுவாக வசனங்கள் மூலம்தான் நகரும். ஆனால் பாத்திரங்கள் ஓரளவு நம்பகத் தன்மை உடையவையாக இருக்கும். அப்படி நம்பகத் தன்மை இல்லாவிட்டாலும் சுவாரசியமாகவாவது இருக்கும். கற்பகத்தில் அபூர்வமான மாமனார்-மருமகன் உறவு உண்டு; அதே நேரத்தில் சாவித்திரி, கே.ஆர். விஜயா, முத்துராமன், எம்.ஆர். ராதா எல்லாருக்கும் ஸ்டீரியோடைப் ரோல். சாரதாவில் அந்த காலத்துக்கு அதிர்ச்சியான கதை. கை கொடுத்த தெய்வத்தில் எங்கேயும் இல்லாத உலக மகா பேக்கு சாவித்திரி (அந்த ரோலில் அவர் புகுந்து விளையாடினார் என்பது வேறு விஷயம்). சின்னஞ்சிறு உலகத்தில் முற்பாதியில் பொய்யே சொல்லாத ஜெமினி, பிற்பாதியில் பொய் மட்டுமே சொல்வார். முற்பாதியில் சிரிக்கத் தெரியாத நாகேஷ் பிற்பாதியில் சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக் கொண்டிருப்பேன் என்று பாட்டு பாடுவார். இந்த மாதிரி ஆட்களையும் மாற்றங்களையும் சினிமாவில்தான் பார்க்க முடியும். ஆனால் நம்பகத் தன்மை எப்படியோ, சுவாரசியமான பாத்திரங்கள். ஷெர்லாக் ஹோம்ஸின் நம்பகத் தன்மை குறைவுதான், ஆனால் என்ன?

பணமா பாசமாவில் எஸ். வரலக்ஷ்மியும் டி.கே. பகவதியும் கே.எஸ்.ஜியின் பலம் பலவீனம் இரண்டும் தெரிகிறது. பகவதி underplay செய்கிறார். அலட்டிக் கொள்ளவில்லை. அவர் பாத்திரம் வரலக்ஷ்மியின் பாத்திரத்துக்கு counterpoint – அதனால் முழு நம்பகத் தன்மை இல்லை. ஆனால் நல்ல படைப்பு. வரலக்ஷ்மி மறு துருவம். ஸ்டீரியோடைப் ரோல், cliche – மிகை நடிப்பில் அவர் எங்கியோ போயிட்டார். ஸ்டேடஸ் பார்க்கும் அம்மா ரோல் (இதே மாதிரி பூவா தலையா படத்திலும்) ஆனால் சுவாரசியமான பாத்திரப் படைப்பு.

தெரிந்த கதைதான் – பணக்கார வரலக்ஷ்மி, அவர் சொன்னதுதான் வீட்டில் சட்டம். அப்பா பகவதியின் வார்த்தை எடுபடாது. மகன் நாகேஷ் சினிமா விதிப்படி ஏழைப் பெண், எத்தனையோ பாத்தியே இம்மாம் பெரிசு பாத்தியா என்று பாட்டு பாடி எலந்தப்பயம் விற்கும் விஜயநிர்மலாவை லவ்வுகிறார். மகள் சரோஜா தேவி ஏழை ஓவியர் ஜெமினியை லவ்வுகிறார். வித விதமாய் சூடிதார் போட்டு வந்து அவர் முனனால் நிற்கிறார். ஜெமினி அவரை திரும்பிப் பார்ப்பதில்லை. ஒரு நாள் ஜெமினி புடவை, பூ, புஸ்பம் என்று வசனம் பேசுவதை கேட்டுவிட்டு புடவையோடு வந்து ஜெமினிக்கு நூல் விடுகிறார். காதல் மன்னனோடு கல்யாணம், அம்மா வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். நாகேஷ் இதுதான் சாக்கு என்று விஜயநிர்மலாவை மணந்து வீட்டுக்கு கொண்டு வருகிறார். வரலக்ஷ்மியின் பாச்சா வி. நிர்மலாவிடம் பலிக்கவில்லை. நாகேஷும் வி. நிர்மலாவும் வாழைத்தண்டு போல உடம்பு அலேக் அலேக் என்று இன்னொரு டூயட் பாடுகிறார்கள். தீபாவளி வருகிறது. அம்மா ஏழை மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் காஸ்ட்லி புடவை அனுப்புகிறார். மகளோ நூல் புடவை திருப்பி அனுப்புகிறார். அம்மா முழ நீளம் வசனம் பேசிவிட்டு சரி வந்த புடவையை எதற்கு விடவேண்டும் என்று அதையும் கட்டிக் கொண்டு மகளை பார்க்க போக, எல்லாரும் ஒன்று சேர்ந்து, சுபம்!

கதை ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் க்ளைமாக்ஸ் நன்றாக அமைந்திருந்தது. அப்பா அம்மா அனுப்பிய புடவையுடன் ஏழை மகளை பார்க்கப் போவது, மகள் நூல் புடவை அனுப்புவது, அம்மா அந்த புடவையைக் கட்டிக் கொண்டு மகளை பார்க்கப் போவது எல்லாம் நல்ல சீன்கள்.

பகவதி நன்றாக நடித்திருப்பார். எஸ். வரலட்சுமிக்கு இந்த மாதிரி ரோல் எல்லாம் ரொம்ப சுலபம். ஊதி தள்ளிவிடுகிறார். இயக்குனரின் திறமை கடைசி சீன்களில் வெளிப்படுகிறது. ஜெமினி வந்து போகிறார். சரோஜா தேவி வழக்கம் போல கொஞ்சல்ஸ். கடைசி சீன்களில் மட்டும்தான் அவருக்கு வேலை. நாகேஷுக்கும், வி. நிர்மலாவுக்கும் பெரிய வேலை இல்லை.

கண்ணதாசன் பல முறை எலந்தப்பயம் பாட்டு எழுதியதற்காக தன்னைத் தானே நொந்து கொண்டிருக்கிறார். தமிழ் மக்களின் ரசனை எவ்வளவு மட்டம் என்று எழுதி இருக்கிறார். வரிகள் எப்படியோ, பாட்டுக்கு நல்ல பீட்! ஜவஹர் சொல்வது போல எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் இந்த பாட்டுக்கு மிக அற்புதமாக பொருந்துகிறது, படம் வெற்றி பெற இந்த பாட்டும் ஒரு முக்கிய காரணம். யூட்யூப் லிங்க் கீழே.

நினைவிருக்கும் இன்னொரு பாட்டு வாழைத்தண்டு போல உடம்பு அலேக்! நாகேஷைப் பார்த்து கொத்தவரங்கா போல உடம்பு அலேக் என்று பாடுவது வெகு பொருத்தம்! ஏ.எல். ராகவனின் குரல் நாகேஷுக்கு பொருந்தும். யூட்யூப் லிங்க் கீழே.

மாறியது நெஞ்சம் என்ற நல்ல மெலடி பாட்டும் உண்டு. யூட்யூப் லிங்க் கீழே.

மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல பாட்டும் இந்த படத்தில்தான் போலிருக்கிறது. அதுவும் நல்ல பாட்டுதான்.

1968 இல் வந்த படம். ஜெமினி கணேசன், சரோஜா தேவி, நாகேஷ், விஜயநிர்மலா, பகவதி நடித்திருக்கிறார்கள். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம். இசை யார்? எம்.எஸ்.வி.யா, மாமா கே.வி. மகாதேவனா? மாமாதான்.

பார்க்கலாம். கடைசி சீன்களுக்காக, பாட்டுகளுக்காக, ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்பதற்காக. பத்துக்கு ஆறு மார்க். C+ grade.

தொடர்புடைய பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: பணமா பாசமா விகடன் விமர்சனம்

மதனா எழில் ராஜா


சிறு வயதில் மிகவும் விரும்பிக் கேட்ட பாட்டு. பாட்டிலேயே ஏதோ கதை தொக்கி நிற்கிறதே! அதுவும் மின்னல் இடை அழகும் அன்ன நடை அழகும் கண்கள் கண்டதுண்டோ என்று ஜிக்கி பாடுவார்; உடனே ஆ, நீங்களா என்று அதிர்ச்சியுடன் பெண் குரல்; ஆண் ஆமாம் நான்தான் என்று சாட்டையை சொடுக்குவார். உண்மையில் இந்த இடம்தான் அப்படியே மறக்க முடியாமல் இருக்கிறது. பாட்டின் ஆரம்பத்தை விட இந்த இடம்தான் அப்படியே நினைவில் இருக்கிறது.

நினைவு வரும் வேறு சில வரிகள் –
என்னைப் போல ஒரு பெண்ணை உன்னுடைய கண்கள் கண்டதுண்டோ?

படம் பார்க்க வேண்டும் என்று சிறு வயதில் மிக ஆசை. ஆனால் படம் என்ன என்று அப்போது சரியாகத் தெரியாது. இப்போது செல்லப் பிள்ளை என்று தெரிகிறது. இசைப் பைத்தியமான என் மாமியார் கண்டுபிடித்து சொன்னார். கே.ஆர். ராமசாமி, சாவித்ரி நடித்திருக்கிறார்கள். ராண்டார்கை ஒரு பதிவு எழுதி இருக்கிறார். என் சிறு வயதில் எந்த டென்டுக் கோட்டையிலும் வந்த ஞாபகமும் இல்லை. உடுமலை நாராயண கவி எழுதியதாம்; சுதர்சனம் இசை. பாட்டு, வீடியோ இணையத்தில் கிடைக்க மாட்டேன் என்கிறது. யாராவது லிங்க் கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள்!

தொடர்புடைய பதிவு:
ராண்டார்கையின் குறிப்புகள்

தெலுங்கு படங்கள்


கொல்லப்புடி மாருதி ராவ் தனக்கு பிடித்த தெலுங்கு படங்களை பற்றி இங்கே சொல்கிறார். கொல்லப்புடி தெலுங்கு நடிகர், எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது எல்லாம் வாங்கி இருக்கிறார். நம்மூர் டெல்லி கணேஷ் மாதிரி stature உள்ள தெலுங்கு நடிகர்.

அவரது லிஸ்டும் என் குறிப்புகளும்:

  • யோகி வேமனா: நான் பார்த்ததில்லை. நாகையா, எம்.வி. ராஜம்மா நடித்து, கே.வி. ரெட்டி இயக்கியது. கே.வி. ரெட்டி பெரிய இயக்குனர் – புகழ் பெற்ற மாயா பஜார், பாதாள பைரவி ஆகியவை இவர் இயக்கியவைதான். விஜயா (வாகினி) ஸ்டுடியோஸ் தயாரிப்பு. வேமனா புகழ் பெற்ற தெலுங்கு கவிஞர் – நம் அவ்வையார் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
  • லைலா மஜ்னு: – நான் பார்த்ததில்லை. நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்து, சி.ஆர். சுப்பராமன் இசையில், பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது.
  • சவுகாரு: நான் பார்த்ததில்லை. என்.டி. ராமராவ், ஸௌகார் ஜானகி நடித்து எல்.வி. பிரசாத் இயக்கியது. விஜயா ஸ்டுடியோஸ் தயாரிப்பு. ஸௌகார் ஜானகிக்கு உள்ள அடைமொழி இந்த படத்திலிருந்து வந்ததுதான். அவரது முதல் படம். எல்.வி. பிரசாத் முதல் தமிழ் படமான காளிதாசிலும், முதல் தெலுங்கு படமான நடித்திருக்கிறார். கமலஹாசனின் ராஜ பார்வை படத்தில் மாதவிக்கு தாத்தாவாக நடிப்பார். மனோகரா, இருவர் உள்ளம், மிஸ்ஸியம்மா ஆகிய படங்களை இயக்கியவர் இவரே.
  • தீக்ஷா – ஜி. வரலக்ஷ்மி, யாரோ ராம்கோபால் நடித்து, ஆத்ரேயா பாடல்களுடன், கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கியதாம். கேள்விப்பட்டது கூட இல்லை.
  • தேவதாஸ்: ஏ.என்.ஆர்., சாவித்ரி, சி.ஆர். சுப்பராமன் இசை, வேதாந்தம் ராகவையா இயக்கம். இதுதான் எல்லாவற்றிலும் சிறந்த தேவதாஸ் என்று கருதப்படுகிறது – குறைந்த பட்சம் தெலுங்கர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ஓ ஓ ஓ தேவதாஸ் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
  • மல்லேஸ்வரி: பிரமாதமான படம். கிருஷ்ண தேவராயர் ஒரு இரவு பானுமதி தன காதலனிடம் தான் ராணி போல வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். அவளை தனது அந்தப்புரத்துக்கு கூட்டி வருகிறார். ஏ.என்.ஆர்., என்.டி.ஆர். நடித்து, எஸ். ராஜேஸ்வர ராவ் இசையில் பி.என். ரெட்டி இயக்கியது.
  • விப்ரநாராயணா: தொண்டரடிபொடி ஆழ்வாரின் கதை. ஏ.என்.ஆர்., பானுமதி நடித்து, பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். பார்த்ததில்லை.
  • மாயாபஜார்: அருமையான படம். சாவித்ரி, ரங்காராவ் இருவருக்காக மட்டுமே பார்க்கலாம். இசையில் கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் கலக்கி இருப்பார்கள். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர். வேறு. என்.டி.ஆர். இந்த மாதிரி படங்களால்தான் தெலுங்கர்களின் கண்ணில் தேவுடுவாகவே மாறிவிட்டார். இயக்கம் கே.வி. ரெட்டி. தயாரிப்பு விஜயா ஸ்டுடியோஸ்.
  • மூக மனசுலு: ஏ.என்.ஆர., சாவித்ரி. பார்த்ததில்லை.
  • மனுஷுலு மாறாலி: சாரதா நடித்தது. பார்த்ததில்லை.
  • பிரதிகடனா:விஜயசாந்தி நடித்து கிருஷ்ணா இயக்கியது. பார்த்ததில்லை.
  • சங்கராபரணம்: எனக்கு கர்நாடக சங்கீதத்தை கேட்டால் ஓட வேண்டாம் என்று தைரியம் கொடுத்த படம். முதன் முதலாக ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த படம். (க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் 2.10 பைசா டிக்கெட்டை இரண்டரை ரூபாய்க்கு வாங்கினோம்) பாட்டுகள் மிக அருமையாக இருந்தன. கவர்ச்சி நடனம் இல்லாவிட்டால் படம் வேஸ்ட் என்று நினைத்த ஸ்கூல் நாட்களிலேயே இந்த படம் எங்கள் செட்டுக்கு பிடித்திருந்தது. கே.வி. மகாதேவன், எஸ்பிபி, மஞ்சு பார்கவி எல்லாரும் கலக்கிவிட்டார்கள். சோமயாஜுலு, கே. விஸ்வநாத் இருவருக்கு இதுதான் மாஸ்டர்பீஸ்.
  • சுவாதி முத்யம்:தமிழர்களுக்கு தெரிந்த படம்தான். கமல் “நடிப்பதற்காக” எடுக்கப்பட்ட படம். பார்க்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ராதிகா ஹீரோயின், கே. விஸ்வநாத் இயக்கம். வடபத்ர சாயிக்கு பாட்டில் இழையோடும் சோகம் மிக நன்றாக இருக்கும். இசை யார், இளையராஜாவா?
  • ஓசே ராமுலம்மா: தாசரி நாராயண ராவ் இயக்கி நடித்தது. விஜயசாந்தியும் உண்டு. பார்த்ததில்லை.
  • அயித்தே: நீல்காந்தம் என்பவர் இயக்கிய நியூ வேவ் சினிமாவாம். கேள்விப்பட்டதில்லை.
  • ஷிவா: ராம் கோபால் வர்மாவின் முதல் படம். நாகார்ஜுன், அமலா நடித்தது, இளையராஜா இசை. இது வெளியானபோது நான் செகந்தராபாதில் வாழ்ந்தேன். பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஒரு cult film என்றே சொல்லலாம். இன்று யோசித்துப் பார்த்தால் அப்போது புதுமையாக இருந்த திரைக்கதைதான் காரணம் என்று தோன்றுகிறது. மிகவும் taut ஆன, நம்பகத்தன்மை நிறைந்த காலேஜ் காட்சிகள். ரவுடி ரகுவரன், அரசியல்வாதி கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மிக லாஜிகலாக யோசித்தார்கள்.
  • இவற்றுள் யோகி வேமனா, தேவதாஸ், மல்லேஸ்வரி, விப்ரநாராயணா, மாயாபஜார், லைலா மஜ்னு, சவுகாரு, சங்கராபரணம் போன்றவற்றை க்ளாசிக்குகள் என்று சொல்லலாம். நான் பார்த்தவற்றில் மல்லேஸ்வரி, மாயாபஜார், சங்கராபரணம், ஷிவா ஆகியவற்றை சிபாரிசு செய்வேன். நான் சிபாரிசு செய்யும் மற்ற படங்கள்: குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா, கீதாஞ்சலி. மாயாபஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா ஆகியவற்றை 20 வருஷங்களுக்கு முன் செகந்தராபாதில் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம் – தியேட்டர் பாதி நிறைந்திருக்கும், பார்ப்பவர்கள் மிகவும் என்ஜாய் செய்து பார்ப்பார்கள். (அதே போல் பழைய ஹிந்தி படங்களை ஹைதராபாத் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம். பார்ப்பவர்கள் உண்மையில் என்ஜாய் செய்வார்கள். சி.ஐ.டி. படத்தில் வஹீதா ரெஹ்மான் கஹி பே நிகாஹென் கஹி பே நிஷானா என்று பாடிக் கொண்டு வரும்போது தியேட்டர் கூட சேர்ந்து ஆடியது.)

    தயாரிப்பாளர், நடிகர் பாலாஜியை பற்றி ஆர்.பி. ராஜநாயஹம்


    பாலாஜி பற்றிய பதிவுக்கு வந்த ஒரு மறுமொழியில் ராஜநாயஹம் பாலாஜி பற்றி எழுதியதை யாரோ (கிருஷ்ணமூர்த்தி?) சுட்டி இருந்தார்கள். நான் கவனிக்க தவறிவிட்டேன். ராஜநாயஹத்தின் பதிவில் பாலாஜி தவிர பல விஷயங்கள் இருப்பதால், பாலாஜி பகுதியை மட்டும் இங்கே சவுகரியத்துக்காக கொடுத்திருக்கிறேன்.

    ‘திரும்பி பார்க்கிறேன் ‘ நிகழ்ச்சி ஜெயா டி வி இல் கே .பாலாஜி பேசியதை மறக்க முடியாது. பாலாஜியின் Method of speaking சிலாகிக்க வேண்டிய விஷயம். You should look gracefully old என்பதை அவருடைய முதிய தோற்றம் சொல்லாமல் சொல்லியது. நாற்பது படங்கள் தயாரித்த பாலாஜி இன்றைய படத்தயாரிப்பு விரயங்களை, நடிகர் நடிகைகளின் கேரவன் வேன் உள்பட வெளிப்படையாக கேள்வி கேட்டார்.

    பாலாஜியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார். கிருஷ்ணமாச்சாரியின் இரண்டாவது தாரம் மலையாள பெண். இந்த இரண்டாவது தாரத்தின் மகன்தான் பாலாஜி. இப்படி அபிமான தாரத்தின் மகனாக பிறந்ததால் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை ‘திரும்பி பார்க்கிறேன் ‘ நிகழ்ச்சியில் பாலாஜி சொன்னார்.

    ஜெமினி கணேசனின் உற்ற நண்பர். நாகேஷ் திரையுலகில் நுழைய காரணமானவர் பாலாஜி. இவருடைய நாடகத்தில் நடித்த ரெஜினா பின் நாகேஷ் மனைவி. படித்தால் மட்டும் போதுமாவில் சிவாஜிக்கு அண்ணனாக, பலே பாண்டியாவில் கூட சிவாஜியுடன் நடித்திருந்தாலும் ஜெமினி கணேசனின் சிபாரிசில்தான் சிவாஜியை இவர் தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது.

    நடிகராக திரையில் கதாநாயகனாக , இரண்டாவது கதாநாயகனாக , காமெடியனாக , வில்லனாக(Glamour Villain!) நடித்தவர் . இவருடைய ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக, ஸ்பஷ்டமாக இருக்கும்.

    நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை பார்த்துக்கொண்டே ‘பிரேமபாசம் ‘ படத்தில் ஜெமினிக்கு தம்பியாய் நடிக்கும்போது ஜெமினி கணேசனின் மூன்றாவது திருமணத்திற்கு உதவியவர். ஜெமினி-சாவித்திரி சரசத்திற்கு காவல் நின்றவர் பாலாஜி.

    ஒப்பனை அறையில் சாவித்திரிக்கு மொக்கை போடும்போது ஜெமினி “டே பாலாஜி ! சாவித்திரி அப்பா வர்ரானா பார்ரா. வந்தா உடனே சிக்னல் கொடு”

    வேலாயுதம் தன் இரண்டாவது மனைவியாக நடிகை கே.ஆர். விஜயாவை திருமணம் செய்யவும் துணை நின்றவர்தான் பாலாஜி .

    பி பி ஸ்ரீனிவாசின் பல ஹிட் பாடல்கள் இவருக்கு கிடைத்தது!

    “ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்”

    “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்! நெருப்பாய் எரிகிறது”

    “பண்ணோடு பிறந்தது கானம். குல பெண்ணோடு பிறந்தது நாணம்”

    “நல்லவன் எனக்கு நானே நல்லவன்”

    “பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை”

    “ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்!”

    “உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
    வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ”

    “இரவு முடிந்து விடும். முடிந்தால் பொழுது புலர்ந்து விடும்”

    ஜெயலலிதா (போராட்டமான தன் அரசியல் சூழலிலும்) பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது கண்ணீர் விட்டார். அந்த கண்ணீர் உண்மையிலே சுத்தமானது. அவர் சொன்னது கூட மிகை இல்லை. அவருடைய அண்ணனை இழந்து விட்டார்.

    பாலாஜி பற்றி மறு பக்கமாக சில விஷயங்கள் உண்டு. யாருக்குதான் அப்படி ஒரு மறு பக்கம் இல்லை? சொல்லுங்கள்!

    ராஜநாயஹம் இப்போதெல்லாம் பதிவு எழுதுவது குறைந்துவிட்டது. 😦

    ஆதி மனிதன் பாட்டு கீழே.

    தொடர்புடைய பதிவுகள்
    தயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு
    பாலாஜி பற்றி விகடனில் 1964-இல் வந்த ஒரு கட்டுரை
    பாலாஜியை பற்றி ரவி ஆதித்யா
    பாலாஜி பாட்டு லிஸ்ட்

    பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்கள்


    பிரகாஷ் ராஜ்

    பிரகாஷ் ராஜ்

    பிரகாஷ்ராஜ் பார்த்ததிலே பிடித்த பத்து திரைப்படங்கள் என்று ஒரு லிஸ்ட் விகடனில் வந்து பாஸ்டன் பாலாவால் மறுபதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த படங்களுக்கு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

    பராசக்தி – கொஞ்சம் வயதாகிவிட்டாலும் பார்க்கலாம். இந்த படத்துக்கு விமர்சனம் இங்கே. நீதி மன்ற வசனம் இங்கே.

    வீர பாண்டிய கட்டபொம்மன் – உணர்ச்சி கொந்தளிப்பும் பார்க்கக் கூடியதே. பாருங்கள்.

    எங்க வீட்டுப் பிள்ளை – அருமையான மசாலா. என் விமர்சனம் இங்கே, விகடன் விமர்சனம் இங்கே.

    கை கொடுத்த தெய்வம் – சின்ன வயதில் பிடித்திருந்தது. சாவித்ரி, ரங்காராவ், எம்.ஆர். ராதா, எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி, புஷ்பலதா எல்லாருமே நன்றாக நடித்திருப்பார்கள். சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டுக்காக மட்டுமே பார்க்கலாம். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம்.

    காதலிக்க நேரமில்லை – ஜாலியான யூத் படம். விமர்சனம், குறிப்புகள் இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே.

    நீர்க்குமிழி – முதல் பாதி சிரிப்பு, இரண்டாம் பாதி அழுகை என்று ஒரு ஃபார்முலா. பார்க்கலாம்.

    தில்லானா மோகனாம்பாள் – ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. நாகேஷ் அற்புதமாக நடித்திருப்பார். என் விமர்சனம் இங்கே, விகடன் விமர்சனம் இங்கே, நாதசுரக் கலைஞர்கள் பற்றி இங்கே.

    16 வயதினிலே – பார்க்கலாம். ஆனால் ஆஹா ஓஹோ என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

    உதிரிப் பூக்கள் – பார்த்ததில்லை.

    ஒரு தலை ராகம் – முப்பது வருஷங்களுக்கு முன்னால் நானும் தினமும் ட்ரெயின் ஏறி ஸ்கூலுக்கும் காலேஜுக்கும் போனவன். இந்த படம் அதனாலேயே பிடித்திருந்தது. மன்மதன் ரட்சிக்கனும், வாசமில்லா மலரிது மாதிரி அருமையான பாட்டுகள்.

    1956-இல் தமிழ் சினிமா


    31 படங்கள் வந்திருக்கின்றன. நான் பெண்ணின் பெருமை 1955-இல் வந்தது என்று நினைத்தேன், ஆனால் தமிழ் விக்கிபீடியா 1956 என்று சொல்கிறது. நான் பார்க்க விரும்புபவை குல தெய்வம், சதாரம், தாய்க்கு பின் தாரம், பெண்ணின் பெருமை, ராஜா ராணி. பார்த்தவை அமர தீபம், தெனாலி ராமன், பாச வலை, மதுரை வீரன், ரங்கூன் ராதா. எனக்கு அலிபாபாவும் நாற்பது திருடர்களும் இந்த வருஷம்தான் வந்தது என்று ஞாபகம்.

    பெண்ணின் பெருமை, குல தெய்வம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, இருந்தாலும் ஏனோ பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. பெண்ணின் பெருமையில் ஒரு பாட்டை இங்கே காணலாம். சதாரம் புகழ் பெற்ற நாடகம் என்று கேள்வி. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே என்ற பாட்டு இந்த படத்தில்தான். தாய்க்கு பின் தாரம் எம்ஜிஆர் நடித்து வெற்றி பெற்ற முதல் சமூகப் படம். தேவர் ஃபில்ம்ஸ் தயாரிப்பு. ஆனால் அதற்கு பிறகும் எம்ஜிஆர் திருடாதே (1961) வரும் வரைக்கும் சமூகப் படங்கள் பக்கம் போகவில்லை, ஏனென்று தெரியவில்லை. ஆஹா நம்மாசை நிறைவேறுமா என்ற அருமையான பாட்டு இந்த படத்தில்தான். பாட்டை இங்கே கேட்கலாம். ராஜா ராணியில் சிவாஜி பல ஓரங்க நாடகங்களில் கலக்குவார் என்று கேள்வி. ஒரு காட்சி கீழே.

    அமர தீபம் நன்றாக ஓடியது. முக்கோணக் காதல் கதை. ஸ்ரீதர் அப்போதே தன் கை வேலையை ஆரம்பித்துவிட்டார். இப்போது ரசிக்காது. சிவாஜி அழகாகவே இருப்பார். பத்மினி, சாவித்ரி இருவரும் நாயகிகள். அருமையான பாட்டுகள். தேனுண்ணும் வண்டு, ஜாலிலோ ஜிம்கானா, நாடோடி கூட்டம் நாங்க தில்லாலங்கடி லேலே, இதெல்லாம் ஞாபகம் வருகிறது. தேனுண்ணும் வண்டு மிக அற்புதமான பாட்டு. இசை சலபதி ராவ்.

    தெனாலி ராமன் போர் அடித்தது. சிவாஜிதான் தெ. ராமன். என்.டி.ஆர். கிருஷ்ணதேவராயரோ?

    பாச வலை அனேகமாக எம்.கே. ராதா ஹீரோவாக நடித்த கடைசி படமாக இருக்கும். போர். அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை, லொள் லொள் லொள் போன்ற ஹிட் பாட்டுகள் உடையது.

    மதுரை வீரன் எம்ஜிஆரை மிகவும் மேலே ஏற்றியது. பானுமதி, பத்மினி இருவரும் நாயகிகள். இன்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் விரும்பப்படும் படங்களில் ஒன்று. ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா (தீன கருணாகரனே நடராஜா மெட்டேதான்), ஆடல் காணீரோ, நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே மறக்க முடியாத பாட்டுகள். மற்ற பாட்டுகள் நினைவு வரவில்லை. பாட்டுகளை இங்கே கேட்கலாம். ஏச்சுப் பிழைக்கும் பாட்டுக்கு எம்ஜிஆர் நன்றாக டான்ஸ் ஆடுவார். ஆடல் காணீரோ பாட்டு கீழே.

    ரங்கூன் ராதாதான் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள கடைசி படம் என்று நினைக்கிறேன். நாவலை கொஞ்சம் bowdlerize பண்ணி இருப்பார்கள். சிவாஜி நன்றாக நடித்திருப்பார். தலை வாரி பூச்சூடி உன்னை என்ற பாரதிதாசன் பாட்டு இந்த படத்திலா? சரியாக நினைவில்லை. இதை பற்றி ராண்டார்கை எழுதிய ஒரு கட்டுரை இங்கே.

    எல்லாவற்றிலும் எனக்கு பிடித்தது அலிபாபாதான். என் பெண்கள் கூட ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன். என்றாவது வீடியோ கொண்டுவந்து காட்ட வேண்டும். அதைப் பற்றி அடுத்த பதிவில்.

    மிஸ்ஸியம்மா


    விஜயா பிக்சர்ஸ் எடுத்த தெலுங்கு படங்களில் மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகியவை முதல் தர பொழுதுபோக்கு படங்கள். குடும்பத்தோடு சென்று ரசிக்கக் கூடியவை. 1988, 89-இல் கூட ஹைதராபாதில் இந்த படங்களுக்கு தியேட்டர்களில் கூட்டம் அம்மும். (ஆனால் அவை கொஞ்சம் மோசமான தியேட்டர்களில்தான் வரும்) அவர்கள் எடுத்த பாதாள பைரவி, அப்பு சேசி பப்பு கூடு (தமிழில் கடன் வாங்கி கல்யாணம்) ஆகியவற்றையும், பின்னாளில் எடுத்த ராமுடு பீமுடு (தமிழில் எங்க வீட்டுப் பிள்ளை) ஆகியவற்றையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர்., ரேலங்கி, சாவித்ரி, ரமணா ரெட்டி, ஜமுனா, எஸ்.வி. ரங்காராவ், கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகிய கூட்டம் இந்த படங்களில் இடம் பெறும். தமிழிலும் இந்த படங்கள் எடுக்கப் படும். சாதாரணமாக ஜெமினி ஹீரோவாக நடிப்பார். ரேலங்கிக்கு பதில் தங்கவேலு. தஞ்சை ராமய்யா தாஸ் பாட்டெழுதுவார், சமயங்களில் வசனமும் எழுதுவார்.

    தமிழில் இந்த படங்கள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கும். அவர்கள் காட்டும் கிராமங்கள், விவசாயம் ஆகியவை கோதாவரிக் கரையில் நடப்பது போல்தான் தோன்றும், காவேரிக் கரையில் இல்லை. அதனால் பொதுவாகவே இந்த படங்களை தெலுங்கில் பார்க்கத்தான் எனக்கு பிடிக்கும். அனேகமாக தெலுங்கு ஸ்டாண்டர்டை எட்டிவிட்ட படங்கள் என்று மிஸ்ஸியம்மாவையும், மாயா பஜாரையும் சொல்லலாம்.

    மிஸ்ஸியம்மா 1955-இல் வந்த படம். ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ், ஜமுனா, தங்கவேலு நடித்தது. எழுதியவர் சக்ரபாணி. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். இயக்கம் எல்.வி. பிரசாத். தெலுங்கில் மிஸ்ஸம்மா. ஜெமினிக்கு பதிலாக என்.டி.ஆர். தங்கவேலுக்கு பதிலாக ஏ.என்.ஆர். ஹிந்தியில் மிஸ் மேரி என்று வெளி வந்தது. ரங்காராவுக்கு பதிலாக ஓம் பிரகாஷ். ஏ.என்.ஆருக்கு பதிலாக கிஷோர் குமார். சாவித்ரிக்கு பதிலாக மீனா குமாரி. ஜெமினியே ஹீரோ. எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றி. தெலுங்கில் க்ளாசிக் அந்தஸ்து.

    அருமையான படம். படத்தின் கதையில் எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் கிடையாது. சினிமா பார்த்தவர்கள் எல்லாரும் சுலபமாக யூகிக்கக் கூடிய திருப்பங்கள்தான். (எரிக் செகாலின் லவ் ஸ்டோரி கதை மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்) ஆனால் ஜெமினி-சாவித்ரி கெமிஸ்ட்ரி படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ் நன்றாக நடித்திருப்பார்கள். பாட்டுகளோ அற்புதம்!

    பணக்கார மிராசுதார் ரங்காராவ் தன் கிராமத்தில் ஒரு ஸ்கூல் நடத்துவார். சில காரணங்களால் கணவன் மனைவி பட்டதாரி டீம் ஒன்று தன் ஸ்கூலை நடத்த வேண்டும் என்று விளம்பரம் கொடுப்பார். வேலையில்லா பட்டதாரிகளான ஜெமினியும், கிறிஸ்துவப் பெண் சாவித்ரியும் கணவன் மனைவி போல் நடித்து அந்த வேலையை வாங்கிக் கொள்வார்கள். ரங்காராவின் முதல் பெண் சிறு வயதிலேயே காணாமல் போய்விடுவாள். இரண்டாவது சிறு பெண் ஜமுனா. ஜெமினி-ஜமுனா விகல்பமின்றி பழகுவதை கண்டு சாவித்ரிக்கு பொறாமை. அவர் திடீரென்று தன் பெயர் மேரி, தான் மேரியை வணங்கப் போகிறேன் என்று “எனை ஆளும் மேரி மாதா” என்று பாட்டு பாட ஆரம்பித்துவிடுவார். வேலையை காப்பாற்றிக் கொள்ள ஜெமினி சாவித்ரிக்கு கொஞ்சம் மூளை கலங்கிவிட்டது என்று பொய் சொல்லி சமாளிப்பார். கடைசியில் சாவித்ரிதான் காணாமல் போன முதல் பெண் என்று தெரிய வர, ஜெமினி-சாவித்ரிக்கு உண்மையிலேயே திருமணம் நடக்க, ஜமுனா தன் முறை மாமன் தங்கவேலுவை மணக்க, சுபம்!

    பாட்டுக்கள் அற்புதம். பிருந்தாவனமும் நந்த குமாரன், வாராயோ வெண்ணிலாவே, பழகத் தெரிய வேணும் ஆகிய மூன்றும் டாப் பாட்டுகள். ஏ.எம்.ராஜாவின் குழைந்த குரல் மிக அற்புதமாக பொருந்துகிறது. பழகத் தெரிய வேணும் மெட்டிலேயே அமைந்த தெரிந்து கொள்ளனும் பெண்ணே அவ்வளவு பிரபலமாகவில்லை. படியுமென்றால் முடியாது என்று ஒரு நல்ல பாட்டு. உமக்கு நீரே எனக்கு நானே எனக்கும் என் மனைவிக்கும் மிக பிடிக்கும். கல்யாணம் ஆன புதிதில் சண்டை வந்தால் இதை பாடிக் கொள்வோம். இதைத் தவிர எனை ஆளும் மேரி மாதா, மாயமே நானறியேன், அறியாப் பருவமடா ஆகிய பாட்டுகளும் இருக்கின்றன. பாட்டுகள்தான் யூட்யூபிலும் கிடைக்கவில்லை, MP3யும் கிடைக்கவில்லை.
    ஆளை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல பிருந்தாவனமும் நந்த குமாரன் ஹிந்தியில் கீழே.

    ஏ. கருணாநிதியையும் இந்த ஹிந்திப் பாட்டில் பார்க்கலாம்!

    தெலுங்கில் ராவோயி சந்த மாமா (வாராயோ வெண்ணிலாவே)

    மொத்தத்தில் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B+ grade.