ஆலயம் – பழைய தமிழ் திரைப்படம்


ஆலயம் (1967) 1967-க்கான சிறந்த தமிழ் திரைப்படம் விருது பெற்றது.

பிலஹரி எழுதிய நெஞ்சே நீ வாழ்க நாடகம்தான் மூலம். இயக்குனர்கள் பீம்சிங்கின் சீடர்களான திருமலை-மகாலிங்கம். மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், வி.கே. ராமசாமி, மனோரமா, ஸ்ரீகாந்த், சோ ராமசாமி, ஏ. கருணாநிதி, டைப்பிஸ்ட் கோபு, பக்கோடா காதர் நடித்திருக்கிறார்கள். டி.கே. ராமமூர்த்தி இசை.

1967-க்கு நல்ல திரைப்படம்தான். வழக்கமான காதல் மோதல் பாசம் குடும்பம் என்ற கருக்களிலிருந்து விலகி இருப்பதாலேயே தனியாக நிற்கிறது. இன்று கொஞ்சம் வயதாகிவிட்டாலும் பார்க்கலாம்.

எளிய கதைதான். மேஜர் அப்பழுக்கற்ற நேர்மையாளர், அதனால் அலுவலகத்திலும் சரி, ஊரிலும் சரி நிறைய மரியாதை. மேஜருக்கு 5000 ரூபாய் லஞ்சம் தர வருபவரை மேஜர் விரட்டிவிடுகிறார். ஆனால் மேஜரின் மாப்பிள்ளைக்கு திடீரென்று பண நெருக்கடி. நாலு மணிக்குள் 5000 ரூபாய் புரட்டாவிட்டால் சிறை செல்ல வேண்டியதுதான். மேஜர் என்ன செய்யப் போகிறார்?

முதலில் தன் மீது எக்கச்சக்க மரியாதை வைத்திருக்கும் முதலாளி ஸ்ரீகாந்திடம் கடன் கேட்க முயற்சிக்கிறார். ஆனால் ஸ்ரீகாந்த் இவர் வாயைத் திறக்கும் முன் தற்செயலாக நாளை வருமான வரி கட்ட 10000 ரூபாயை எப்படியாவது புரட்ட வேண்டும் என்கிறார். லஞ்சம் வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கிறார். ஸ்ரீகாந்த் மேஜரின் நேர்மையை புகழ்ந்து பேசுவதை கேட்கிறார், மனம் மாறுகிறார். நண்பர் ஒருவர் மகள் கல்யாணத்துக்காக கடன் வாங்கிய 5000 ரூபாயை இவரிடம் கொடுத்து எனக்கு வங்கி கணக்கு இல்லை, இரண்டு மாதம் கழித்து வாங்கிக் கொள்கிறேன் என்று இவரிடம் கொடுத்து வைக்கிறார். ஒரு உத்தரவாதமும் இல்லாமல் பணத்தை கொடுத்திருக்கிறாயே முட்டாளே என்று இன்னொரு அலுவலக குமாஸ்தா பேச அலுவலக பியூன் நாகேஷ் யாரை சந்தேகப்படுகிறாய் என்று கத்துகிறார்.

யாராவது என்னை அயோக்கியன் என்று சொல்லிவிட மாட்டார்களா, என் மீது நம்பிக்கை வைக்காமல் இருக்கமாட்டார்களா, அப்படி இருந்தால் என் மனத்தடைகள் நீங்கி நண்பனை ஏமாற்றுவேன் இல்லாவிட்டால் லஞ்சம் வாங்குவேன் என்று மேஜர் தவிக்கிறார். ஆனால் கடைசியில் மன உறுதி பெறுகிறார்; லஞ்சம் வாங்கலாம் என்று நினைத்தற்காக வேலையை ராஜினாமா செய்கிறார். மாப்பிள்ளையின் நெருக்கடி அதிர்ஷ்டவசமாக நீங்கிவிட, மேஜர் நிம்மதியில் இறந்தே போகிறார்.

மேஜரின் சிக்கல் சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. மெலோட்ராமா குறைவு. மேஜர் பிறழ முயற்சிப்பதும், ஆனால் அவரால் முடியாமல் போவதும் நன்றாக வந்திருக்கிறது. ஓரளவு டென்ஷன் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரைப்படத்தின் பலவீனம் அதன் சபா நாடகத்தன்மை. நகைச்சுவை வலிந்து புகுத்தப்பட்டிருக்கிறது. அலுவலகத்தில் வேலையைப் பார்க்காமல் ஸ்ரீராமஜயம் எழுதும் வி.கே. ராமசாமி, பத்திரிகைகளுக்கு கதை எழுதும் ஒரு குமாஸ்தா, மனோரமாவை சைட்டடிக்கும் சோ, மனோரமா-நாகேஷ் காதல் என்பதெல்லாம் கதையின் டென்ஷனை குறைக்கிறது. உதாரணத்துக்கு ஒரு நகைச்சுவைக் காட்சியில் வி.கே. ராமசாமியின் துணிகளை அலுவலகத்துக்கு எடுத்து வரும் வண்ணான். வண்ணானாக வருபவர் நன்றாகவே நடித்திருக்கிறார்,  கழுதையை ஹூம் என்று விரட்டிக் கொண்டே இருப்பது இயல்பாக இருக்கிறது, ஆனால் காட்சி செயற்கையாக இருக்கிறது.

டைப்பிஸ்ட் கோபுவுக்கு இதுதான் முதல் திரைப்படம். (நாணல் என்றும் எங்கோ படித்திருக்கிறேன்.) அலுவலகத்தில் டைப்பிஸ்ட். நாடகத்திலும் அவருக்கு இதே பாத்திரம்தான். நாடகத்தில் அவருக்கு வசனமே கிடையாதாம். திரைப்படத்தில் ஒரே ஒரு வசனம் பேசுகிறார். அப்படி இருந்தும் நாடகத்தில் நினைவில் நிற்கும்படி நடித்ததால்தான் டைப்பிஸ்ட் கோபு என்று அழைக்கப்பட்டாரம்.

பாடல்கள் எதுவும் நினைவில் நிற்கவில்லை.

வித்தியாசமான கதை மற்றும் மேஜர், ஏ. கருணாநிதி நடிப்புக்காக நூற்றுக்கு 65 மதிப்பெண் தருகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்

அடுத்த வீட்டுப் பெண்


திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (27-3-1960) நன்றி, விகடன்!

முனுசாமி – மாணிக்கம்

மாணிக்கம்: அண்ணே, தலைவர் ராஜிநாமா பண்ணிவிட்டா கழகத்திற்கு அடுத்த தலைவர் நான்தாங்கறாரு கருணாநிதி!

முனுசாமி: அப்படியா? எந்தக் கூட்டத்திலே சொன்னாரு தம்பி?

மாணி: கூட்டத்திலேயா? நான் சினிமாவிலே சொல்றேன் அண்ணே! ‘அடுத்த வீட்டுப் பெண்’லே காமெடியன் கருணாநிதி, காரியம் கைகூடும் கழகத்துத் தலைவர் தங்கவேலு ராஜிநாமா செய்தா நான்தான் அடுத்த தலைவர்னு சொல்றாரு.

முனு: ஓகோ! படம் எப்படி தம்பி?

மாணி: நல்லா இருக்குது அண்ணே!

முனு: என்ன, ஒரு வார்த்தையிலே முடிச்சுட்டே?

மாணி: கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னேன். விளக்கமா வேணும்னாலும் சொல்றேன். அடுத்த வீட்டுப் பெண் லீலாவைக் காதலிக்கிறாரு மன்னாரு. லீலா கொஞ்சம் முரட்டுப் பெண். ஆனால், சங்கீதத்திலே ரொம்பப் பித்து. அதனாலே அவளோட காதலை அடைய மன்னாரு தன் நண்பன் குரலை இரவல் வாங்கி, பெரிய பாடகரா நடிச்சு, கடைசியிலே அந்தப் பெண்ணையே கலியாணம் செய்துக்கறாரு. இதுதான் கதை.

முனு: கதை ரொம்ப சாதாரணமாத்தானே இருக்குது?

மாணி: இது கதைக்காக எடுத்த படமில்லே அண்ணே, காமெடிக்காக எடுத்த படம்.

முனு: ஹீரோ யார்?

மாணி: ஹீரோவே கிடையாது!

முனு: என்னது?

மாணி: ஆமாம் அண்ணே! எல்லாக் காமெடியர்களும் நடிக்கிறாங்க. தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், கருணாநிதி, பிரண்ட் ராமசாமி, சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், பக்கிரிசாமி

முனு: ஹீரோயின் அஞ்சலிதேவிதானே!

மாணி: ஆமாம். இது என்ன கேள்வி?

முனு: முக்கிய கேள்விதான். ஹீரோயினை யார் காதலிக்கிறாரோ, அவர்தானே ஹீரோ!

மாணி: அப்படிச் சொல்லப் போனா கதையிலே டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ. ஆனால் படத்திலே தங்கவேலுதான் ஹீரோ! அடேயப்பா! பிரமாதப்படுத்தறாரு அண்ணே!

முனு: அஞ்சலி எப்படி தம்பி?

மாணி: கேட்கணுமா? அப்படியே மனசிலே நிக்குது. ஆட்டமும், பாட்டும், துடிப்பான பேச்சும், ஜப்பான்காரப் பெண்ணாக வந்து கீச்சு மூச்சுனு பேசறதும், குலுக்கி மினுக்கி நடக்கறதும்… ரொம்பப் பிரமாதம் அண்ணே!

முனு: நீ சொல்றதைப் பார்த்தா…

மாணி:- கலர் டான்சுக்காகவும், காமெடிக்காகவும் இந்தப் படத்தைக் கட்டாயம் பார்க்கணும் அண்ணே!

தொகுக்கப்பட்ட பக்கம்: விகடன் விமர்சனங்கள், திரைப்படங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன்


சிவாஜியைப் பற்றி பொதுவாக சொல்லப்படும் குறை அவர் ஓவர்ஆக்ட் செய்கிறார், மெலோட்ராமா என்பதுதான். உண்மையில் குறை அதுவல்ல. மெலோட்ராமா என்பது ஒரு விதமான ஸ்டைல். பாய்ஸ் நாடகங்கள், தெருக்கூத்து, ஜப்பானிய கபூகி நாடகங்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், musicals எல்லாவற்றுக்கும் ஒரு ஸ்டைல், இலக்கணம் இருக்கிறது. சிவாஜியின் படங்களையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். குறை அவர் படங்கள் – அதுவும் பிற்காலப் படங்கள் – அவருக்கு “நடிக்க” ஸ்கோப் உள்ள காட்சிகளின் தொகுப்பாக இருப்பதுதான். சினிமா என்பது வெறும் சீன்களின் தொகுப்பல்ல. இதை அவரும் உணரவில்லை, அவர் காலத்து இயக்குனர்களும் உணரவில்லை. அந்த காலத்து ரசிகர்கள் உணர்ந்தார்களா என்பதும் சந்தேகமே.

இதனால்தான் அவரது significant number of படங்கள் உணர்ச்சிகளின் உச்சத்தை வெளிப்படுத்தும் சீன்களின் தொகுப்பாக, அவர் மட்டுமே வியாபித்திருக்கும் கதைகளாக, மிக சுலபமாக கிண்டல் அடிக்கப்படுபவையாக இருக்கின்றன. கமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் – சிவாஜி சிங்கம், ஆனால் அவருக்கு தயிர் சாதம் மட்டுமே போடப்பட்டது என்று. அதில் உண்மை இருக்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த குறைகளை சுலபமாக தாண்டுகின்றது. கட்டபொம்மன் உணர்ச்சிப் பிழம்புதான். ஓவர் ஆக்டிங், மெலோட்ராமா, over the top performance போன்ற வழக்கமான “குற்றச்சாட்டுகளை” அள்ளி வீசலாம்தான். ஆனால் யாராக நடிக்கிறார்? ஒரு larger than life icon, நாட்டுப்புற பாட்டுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தொன்மம், சரித்திரத்தை தாண்டி ஐதீகமாக மாறிவிட்ட ஒரு மனிதனை இப்படி நடித்துக் காட்டுவது மிக பொருத்தமாக இருக்கிறது.

கட்டபொம்மன் ஜாக்சன் துரையை பார்த்து எங்கள் மங்கலப் பெண்டிருக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா என்று கேட்டாரா என்பது சந்தேகம்தான். அப்படி கட்டபொம்மன் கர்ஜித்திருந்தால் அது ஜாக்சன் துரைக்கு புரிந்திருக்குமா என்பது அதை விட பெரிய சந்தேகம். ஆனால் சிவாஜி கொண்டு வருவது சரித்திரத்தை தாண்டிப்போய்விட்ட கட்டபொம்மன் என்ற இதிகாச மனிதரை. கட்டபொம்மனை ஒரு இதிகாசமாக, தொன்மமாக, icon ஆக மாற்றியதில் நாட்டுப்புற பாடல்களுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே அளவு பங்கு இந்த நடிப்புக்கும் உண்டு. இந்த performanceஇன் தாக்கம் இல்லாத தமிழ் நடிகர் யாருமில்லை. பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன் மூன்று படங்களும் மெலோட்ராமா என்பது கெட்ட வார்த்தை இல்லை என்பதை இன்றும் உணர்த்தும் படங்கள்.

பந்துலு சிறந்த தயாரிப்பாளர். பணம் முக்கியம்தான், ஆனால் படம் நன்றாக வருவது அதை விட முக்கியம் என்று நம்பியவர். கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் மாதிரி படங்களில் பணத்தை வாரி இறைத்தார். வெள்ளைக்காரனை எதிர்த்து போராடியவர்களை திரைப்படத்தில் கொண்டு வந்ததற்காக எப்போதும் நினைவிளிருப்பார். (கன்னடத்தில் கிட்டூர் ராணி சென்னம்மா எடுத்தார். சென்னம்மா கன்னட கட்டபொம்மி.)

1959-இல் வந்த படம். சிவாஜி, எஸ். வரலக்ஷ்மி, ஜெமினி, பத்மினி, ஓ.ஏ.கே. தேவர், ராகினி, ஜாவர் சீதாராமன், வி.கே. ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், ஏ. கருணாநிதி, டி.பி. முத்துலட்சுமி நடித்தது. ஜி. ராமநாதனின் அற்புதமான இசை. பந்துலுவே இயக்கினார் என்று நினைக்கிறேன்.

சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களில் அனல் பறக்கிறது. அவற்றை ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க சிம்மக் குரல். பத்திக்கிச்சு!

இதற்கும் கதை எழுத வேண்டுமா என்ன?

சிவாஜி ஜாக்சன் துரையிடம் பேசுவது தமிழ் சினிமாவில் ஒரு seminal moment. Enough said.

ஜெமினி-பத்மினி காதல் கதை படத்தின் வீக்னஸ். படத்தின் தீவிரத்தை குறைக்கிறது. அதுதான் இயக்குனரின் எண்ணம், என்றாலும் சுலபமாக தம் அடிக்க வெளியே போய்விடலாம். படத்தின் தீவிரத்தை அதிகரிக்க ஊமைத்துரையின் காரக்டரை டெவலப் செய்திருக்கலாம். ஓ.ஏ.கே. தேவருக்கு ஏதாவது வசனம் உண்டா என்று யோசித்துப் பார்க்கிறேன், அவர் வாயை திறந்த மாதிரியே தெரியவில்லை. அதே போல எட்டப்பனும் ஒரு கார்ட்போர்ட் கட்அவுட்தான். ஜாவர் ஒருவர்தான் படத்தில் கொஞ்சம் நிற்கிறார்.

பாட்டுகள் அபாரம். ஜி. ராமநாதன் கொன்றுவிட்டார்.

இன்பம் பொங்கும் வெண்ணிலாதான் என் ஃபேவரிட். அதுவும் பிபிஎஸ் “உன்னைக் கண்டு” என்று கேட்கும் தருணம்!

எஸ். வரலக்ஷ்மி கலக்கிய படம். அவருடைய கனமான குரல் என்ன சுகமாக “சிங்காரக் கண்ணே உன் தேனூறும் செவ்வாயால்” என்று பாடுகிறது? அதுவும் “உன் வாய் முத்தம் ஒன்றாலே” என்ற வார்த்தைகளை கொஞ்சம் வேகமாக பாடுவது மிக நன்றாக இருக்கும். “மனம் கனிந்தருள் வேல்முருகா” குழந்தைகளுக்கு சாமி பாட்டாக சொல்லித் தரலாம். அப்புறம் “டக்கு டக்கு” என்று ஒரு பாட்டு. கேட்கக் கூடிய பாட்டுதான், ஆனால் இதை எல்லாம் கருணை காட்டாமல் எடிட்டிங் டேபிளில் கட் பண்ணி இருக்க வேண்டும். படத்தின் ஓட்டத்தில் ஒரு ஸ்பீட்பிரேக்கர் மாதிரி வரும்.

ஜி. ராமநாதனின் பாட்டுகள் எப்போதும் இரண்டு வகை. ஒன்று கர்நாடக சங்கீதத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட highbrow பாட்டுகள். இரண்டு நாட்டுப்புற பாட்டு, டப்பாங்குத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட lowbrow பாட்டுகள். “மாட்டு வண்டியை பூட்டிக்கிட்டு” இரண்டாவது வகை. நல்ல, ஆனால் கவனிக்கப்படாத பாட்டு. “ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி” என்ற இன்னொரு நல்ல பாட்டும் “அஞ்சாத சிங்கம் உன் காளை” என்று ஒரு சுமாரான பாட்டும் உண்டு. ஆத்துக்குள்ளே பாட்டு (ஏ.கருணாநிதி நகைச்சுவை பகுதி எல்லாமே) ஸ்பீட்ப்ரேக்கர்தான்.

Highbrow வகையில், நாடக பாரம்பரியம் உள்ள பாட்டு போகாதே போகாதே என் கணவா. எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை. அதுவும் படமாக்கப்பட்ட விதம்! சின்னப்பிள்ளைக்கு சொல்கிற மாதிரி வாழை மரம் விழக் கண்டேன் என்றால் ஒரு வாழை மரத்தை வெட்டி காண்பிப்பார்கள். அதுவும் பத்மினியின் ஓவர்ஆக்டிங் வேறு கொடுமையாக இருக்கும்.

சிவாஜிக்கு பாட்டு கிடையாதோ? வெற்றி வடிவேலனே என்று ஒரு தொகையறா வரும் அது யார் பாடுவதாக வரும் என்று நினைவில்லை. சிவாஜிதானோ?

வேறு பாட்டுகள் எனக்கு நினைவில்லை. சாரதா எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

சிவாஜியின் seminal நடிப்பு, பந்துலுவின் நல்ல தயாரிப்பு, ஜி. ராமநாதனின் அற்புதமான இசை, எஸ். வரலக்ஷ்மியின் குரல், எடுத்துக்கொள்ளப்பட்ட subject matter ஆகியவற்றுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.

தொடர்புடைய பதிவுகள்
வீரபாண்டிய கட்டபொம்மன் விகடன் விமர்சனம்
ம.பொ.சி – ஒரு மதிப்பீடு
கப்பலோட்டிய தமிழன்
மனோகரா, விகடன் விமர்சனம்
பராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்
ஆயிரத்தில் ஒருவன்
எஸ். வரலக்ஷ்மி அஞ்சலி

வீரபாண்டிய கட்டபொம்மன் – விகடன் விமர்சனம்


படம் வந்தபோது – மே 1959 – விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

மாணி: வெற்றிவேல்! வீரவேல்!

முனு: என்ன தம்பி, முதல் காட்சியே பார்த்துட்டியா?

மாணி: முதல் முழக்கம் செய்த தமிழ் மகனுடைய படம். தமிழிலே முதல் சரித்திரப் படம். பார்க்காம இருப்பேனா? அதிலும் சிவாஜி நடிப்பு இருக்கே…

முனு:- ஒண்ணும் சொல்லாதே தம்பி!

மாணி:- ஏன் அண்ணே..?

முனு:- அவர் நடிப்பைப் பற்றி இனி யாரும் புகழ வேண்டிய அவசியம் கிடையாது. அவர் ஒரு தனிப்பிறவி தம்பி! சரி, சண்டைக் காட்சியெல்லாம் எப்படி இருக்கு?

மாணி: நல்லா எடுத்திருக்காங்க அண்ணே! இங்கிலீஷ்கார சோல்ஜர்களும் தமிழ்நாட்டு வீரர்களும் ரொம்ப ரோசமாச் சண்டை போடறாங்க. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளைக்காரன் குண்டு போட்டுத் தகர்த்தெறிகிற காட்சியைப் பார்க்கிறபோது, இவ்வளவு கொடுமை செஞ்சிருக்கிறானே வெள்ளைக்காரன், அவனைச் சாதாரணமா ஊருக்குப் போக விட்டுட்டோமேன்னு தோணிச்சண்ணே!

கவிதையும் வசனமும் கரும்பு போல் இருக்கு. காதலும் வீரமும் போட்டி போட்டுக்கிட்டு வருது.

முனு: காதலர்கள் யார் யார்?

மாணி: ஜக்கம்மாவா எஸ். வரலட்சுமி வருது. சொந்தக் குரல்லே இரண்டு பாட்டு உருக்கமா பாடுது. நல்லா நடிச்சிருக்குது. ஊமைத் துரையா ஓ.ஏ.கே. தேவரும், அவரு மனைவியா ராகினியும் வராங்க. ஊமைத்துரையைப் பேருக்குப் பொருத்தமா விட்டுட்டாங்க.நடிப்புக்கு அதிக வாய்ப்பில்லே! வெள்ளையத் தேவரா ஜெமினி கணேசன் வராரு.

முனு: வெள்ளையம்மா யாரு?

மாணி: பத்மினிதான்! ‘போகாதே போகாதே என் கணவா’ன்னு பாடி வழியை மறைக்கிறபோது பெண் குலமே அழுதுடும். கணவன் போரில் இறந்தவுடனே, தானும் போர்க்களத்திலே குதிச்சு பழி வாங்கற காட்சியைப் பார்த்தா ஆண் குலத்துக்கு வீரம் வந்துடும். வீரத் தமிழ் மங்கைன்னா அதுதான் அண்ணே!

முனு: கலர் எப்படி?

மாணி: கண் குளிர்ந்தது அண்ணே! வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் குளுகுளுன்னு இருக்கு. திருச்செந்தூர் முதல் ஜெய்ப்பூர் வரைக்கும் பார்க்கப் பார்க்க அழகாயிருந்தது. பணச் செலவைப் பார்க்கவேயில்லை.

முனு: மற்ற நடிகர்களைப் பற்றி ஏதாவது…

மாணி: வி.கே. ராமசாமி எட்டப்பனா வராரு. ஜாவர் சீதாராமன் பானர்மென் துரையா வந்து பஸ்டு கிளாஸா நடிச்சிருக்காரு. இன்னும் கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால், பக்கிரிசாமி, முத்துலட்சுமி…

முனு: எல்லாருமே இதை ஒரு பாக்கியமா எண்ணி நடிச்சிருப்பாங்க தம்பி. சரி, அப்புறம்..?

மாணி: பிரமாண்டமான சண்டைகளுக்கு நடுப்புற குளோசப்லே வர கத்திச் சண்டைகள் சுமார்தான்! டைரக்டர் பி.ஆர்.பந்துலு முதல்லே நேரிலே வந்து, அவையடக்கமாப் பேசறாரு. அப்புறம், படம் பூரா அவருடைய திறமை தெரியுது.

முனு: மொத்தத்திலே…

மாணி: பார்த்தவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத படம் கட்டபொம்மன். சிவாஜி கணேசன் அப்படி நடிச்சிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை தரும் படம் அண்ணே!

தொடர்புடைய பதிவுகள்
ம.பொ.சி. – ஒரு மதிப்பீடு

மிஸ்ஸியம்மா


விஜயா பிக்சர்ஸ் எடுத்த தெலுங்கு படங்களில் மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகியவை முதல் தர பொழுதுபோக்கு படங்கள். குடும்பத்தோடு சென்று ரசிக்கக் கூடியவை. 1988, 89-இல் கூட ஹைதராபாதில் இந்த படங்களுக்கு தியேட்டர்களில் கூட்டம் அம்மும். (ஆனால் அவை கொஞ்சம் மோசமான தியேட்டர்களில்தான் வரும்) அவர்கள் எடுத்த பாதாள பைரவி, அப்பு சேசி பப்பு கூடு (தமிழில் கடன் வாங்கி கல்யாணம்) ஆகியவற்றையும், பின்னாளில் எடுத்த ராமுடு பீமுடு (தமிழில் எங்க வீட்டுப் பிள்ளை) ஆகியவற்றையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர்., ரேலங்கி, சாவித்ரி, ரமணா ரெட்டி, ஜமுனா, எஸ்.வி. ரங்காராவ், கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகிய கூட்டம் இந்த படங்களில் இடம் பெறும். தமிழிலும் இந்த படங்கள் எடுக்கப் படும். சாதாரணமாக ஜெமினி ஹீரோவாக நடிப்பார். ரேலங்கிக்கு பதில் தங்கவேலு. தஞ்சை ராமய்யா தாஸ் பாட்டெழுதுவார், சமயங்களில் வசனமும் எழுதுவார்.

தமிழில் இந்த படங்கள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கும். அவர்கள் காட்டும் கிராமங்கள், விவசாயம் ஆகியவை கோதாவரிக் கரையில் நடப்பது போல்தான் தோன்றும், காவேரிக் கரையில் இல்லை. அதனால் பொதுவாகவே இந்த படங்களை தெலுங்கில் பார்க்கத்தான் எனக்கு பிடிக்கும். அனேகமாக தெலுங்கு ஸ்டாண்டர்டை எட்டிவிட்ட படங்கள் என்று மிஸ்ஸியம்மாவையும், மாயா பஜாரையும் சொல்லலாம்.

மிஸ்ஸியம்மா 1955-இல் வந்த படம். ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ், ஜமுனா, தங்கவேலு நடித்தது. எழுதியவர் சக்ரபாணி. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். இயக்கம் எல்.வி. பிரசாத். தெலுங்கில் மிஸ்ஸம்மா. ஜெமினிக்கு பதிலாக என்.டி.ஆர். தங்கவேலுக்கு பதிலாக ஏ.என்.ஆர். ஹிந்தியில் மிஸ் மேரி என்று வெளி வந்தது. ரங்காராவுக்கு பதிலாக ஓம் பிரகாஷ். ஏ.என்.ஆருக்கு பதிலாக கிஷோர் குமார். சாவித்ரிக்கு பதிலாக மீனா குமாரி. ஜெமினியே ஹீரோ. எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றி. தெலுங்கில் க்ளாசிக் அந்தஸ்து.

அருமையான படம். படத்தின் கதையில் எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் கிடையாது. சினிமா பார்த்தவர்கள் எல்லாரும் சுலபமாக யூகிக்கக் கூடிய திருப்பங்கள்தான். (எரிக் செகாலின் லவ் ஸ்டோரி கதை மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்) ஆனால் ஜெமினி-சாவித்ரி கெமிஸ்ட்ரி படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ் நன்றாக நடித்திருப்பார்கள். பாட்டுகளோ அற்புதம்!

பணக்கார மிராசுதார் ரங்காராவ் தன் கிராமத்தில் ஒரு ஸ்கூல் நடத்துவார். சில காரணங்களால் கணவன் மனைவி பட்டதாரி டீம் ஒன்று தன் ஸ்கூலை நடத்த வேண்டும் என்று விளம்பரம் கொடுப்பார். வேலையில்லா பட்டதாரிகளான ஜெமினியும், கிறிஸ்துவப் பெண் சாவித்ரியும் கணவன் மனைவி போல் நடித்து அந்த வேலையை வாங்கிக் கொள்வார்கள். ரங்காராவின் முதல் பெண் சிறு வயதிலேயே காணாமல் போய்விடுவாள். இரண்டாவது சிறு பெண் ஜமுனா. ஜெமினி-ஜமுனா விகல்பமின்றி பழகுவதை கண்டு சாவித்ரிக்கு பொறாமை. அவர் திடீரென்று தன் பெயர் மேரி, தான் மேரியை வணங்கப் போகிறேன் என்று “எனை ஆளும் மேரி மாதா” என்று பாட்டு பாட ஆரம்பித்துவிடுவார். வேலையை காப்பாற்றிக் கொள்ள ஜெமினி சாவித்ரிக்கு கொஞ்சம் மூளை கலங்கிவிட்டது என்று பொய் சொல்லி சமாளிப்பார். கடைசியில் சாவித்ரிதான் காணாமல் போன முதல் பெண் என்று தெரிய வர, ஜெமினி-சாவித்ரிக்கு உண்மையிலேயே திருமணம் நடக்க, ஜமுனா தன் முறை மாமன் தங்கவேலுவை மணக்க, சுபம்!

பாட்டுக்கள் அற்புதம். பிருந்தாவனமும் நந்த குமாரன், வாராயோ வெண்ணிலாவே, பழகத் தெரிய வேணும் ஆகிய மூன்றும் டாப் பாட்டுகள். ஏ.எம்.ராஜாவின் குழைந்த குரல் மிக அற்புதமாக பொருந்துகிறது. பழகத் தெரிய வேணும் மெட்டிலேயே அமைந்த தெரிந்து கொள்ளனும் பெண்ணே அவ்வளவு பிரபலமாகவில்லை. படியுமென்றால் முடியாது என்று ஒரு நல்ல பாட்டு. உமக்கு நீரே எனக்கு நானே எனக்கும் என் மனைவிக்கும் மிக பிடிக்கும். கல்யாணம் ஆன புதிதில் சண்டை வந்தால் இதை பாடிக் கொள்வோம். இதைத் தவிர எனை ஆளும் மேரி மாதா, மாயமே நானறியேன், அறியாப் பருவமடா ஆகிய பாட்டுகளும் இருக்கின்றன. பாட்டுகள்தான் யூட்யூபிலும் கிடைக்கவில்லை, MP3யும் கிடைக்கவில்லை.
ஆளை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல பிருந்தாவனமும் நந்த குமாரன் ஹிந்தியில் கீழே.

ஏ. கருணாநிதியையும் இந்த ஹிந்திப் பாட்டில் பார்க்கலாம்!

தெலுங்கில் ராவோயி சந்த மாமா (வாராயோ வெண்ணிலாவே)

மொத்தத்தில் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B+ grade.

மறக்க முடியுமா (Marakka Mudiyuma)


1966இல் வந்த படம். எஸ்.எஸ்.ஆர்., தேவிகா, காஞ்சனா, முத்துராமன், சோ, எஸ்.வி. ஸஹஸ்ரநாமம், மேஜர், சாரங்கபாணி, எஸ்.என். லக்ஷ்மி, ஏ. கருணாநிதி நடிப்பு. கலைஞரின் கதை. டி.கே. ராமமூர்த்தி இசை. முரசொலி மாறன் தயாரித்து இயக்கி இருக்கிறார்.

தமிழ் நாட்டில் நல்லதங்காள் பாரம்பரியம் என்று ஒன்று உண்டு. சோகத்தை பிழிந்து எடுத்துவிடுவார்கள். இதுவும் அதே மாடல்தான். கடைசியில் சோ தேவிகாவை பார்த்து ஒரு வசனம் பேசுகிறார் – “வாழ்க்கையிலே வர வேண்டிய ட்ராஜெடி எல்லாம் உங்களுக்கு வந்துவிட்டதே” என்று. படத்துக்கு ஒன் லைனர் என்ன என்று கலைஞரும் மாறனும் டிஸ்கஸ் செய்து இருந்தால் இதுதான் என்று முடிவு செய்திருப்பார்கள்.

சிறு வயதில் தேவிகாவின் தாய் அவுட். அப்பா குருடாகி வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். இரண்டு தம்பிகளும் பிரிந்துவிடுகிறார்கள். எஜமான் மேஜரின் மகனான முத்துராமனை லவ் செய்வது தெரிந்து மேஜர் வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். ஆனால் முத்துராமன் வீட்டை விட்டு ஓடி வந்து தேவிகாவை கல்யாணம் செய்து கொள்கிறார். என்னடா ரொம்ப நேரமாக சோகம் எதுவும் இல்லையே என்று இயக்குனர் உடனே முத்துராமனை தீர்த்துவிடுகிறார். நடுவில் ஒரு தம்பியான எஸ்.எஸ்.ஆர். மீது திருட்டு பட்டம். ஜெயிலில் இருந்து வரும் ஏழையான எஸ்.எஸ்.ஆர் இன்னொரு ஏழையான தன் தம்பி சோவுடன் சேர்ந்து ரேசுக்கு போகிறார், தண்ணி அடிக்கிறார், பிறகு எல்லாவற்றிலும் பெரிய பாவமான மேலை நாட்டு நடனம் ஆடுகிறார். இந்த மாதிரி “கலாசார சீரழிவு” எல்லாம் அந்த காலத்தில் ஃப்ரீ போலிருக்கிறது. கலைஞர் இப்போது டாஸ்மாக்காவது ஃப்ரீ ஆக்கி அந்த பொற்காலத்தை மீண்டும் கொண்டுவரலாம்.

தேவிகாவும் சோவும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். குழந்தைக்கு மருந்து வாங்க சோ தன் அப்பாவிடம் – அவர் இப்போது ஒரு குருட்டு பிச்சைக்காரன் – பணம் திருடப் போய் போலீசில் சிக்கிக் கொள்கிறார். ஆனால் அப்பாவும் சோவும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்கிறார்கள். குழந்தையை காப்பாற்ற தேவிகா தன் மானத்தை மிகுந்த தயக்கத்துடன் விற்கத் தயாராகிவிட்டார். அந்த மானத்தை வாங்க “காகித ஓடம் கடலலை மீது” என்று குடும்பப் பாட்டை பாடிக்கொண்டே போதையில் எஸ்.எஸ்.ஆர். வருகிறார். பாட்டை அக்கா தொடர, எஸ்.எஸ்.ஆருக்கு உலகமே சுழல, அக்கா மிச்ச பாட்டை பாடி முடித்துவிட்டு தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்ள, எல்லாரும் கொஞ்சம் வசனம் பேசி விட்டு திருந்தி எஸ்.எஸ்.ஆரும் காஞ்சனாவும் கல்யாணம் செய்துகொண்டு, எஸ்.எஸ்.ஆர். என் அக்காவை மறக்க முடியுமா என்று சொல்லி சுபம்! (ஹீரோயின் செத்தாலும் எனக்கு சுபம்தான்!)

எஸ்.எஸ்.ஆரும் தேவிகாவும் சந்திக்கும் காட்சி powerful காட்சி. இப்போதும் ரத்தம் உறைகிறது. நாற்பது வருஷங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? இந்த படம் ஆரம்பித்ததிலிருந்து என் மாமியார் இது மோசமான படம், பார்க்க வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இந்த காட்சியில் ஏற்பட்ட aversionதானோ என்னவோ?

இந்த படத்தை பார்த்துதான் யாதோன் கி பாராத் படம் எடுத்தார்களா என்ன? சிறு வயதில் பிரியும் சகோதர சகோதரிகள், குடும்பப் பாட்டு, ரயில் வண்டியில் பிரியும் குழந்தைகள், அக்கா தம்பிகள் சந்திக்கும்போது காகித ஓடம் பாட்டு பின்னணி இசையில் என்று பல முறை பார்த்திருக்கும் தீம்கள் எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியதா?

ஹிந்துக் கடவுள்கள் ரோல் செய்ய மாட்டேன் என்று சொல்லி இலட்சிய நடிகர் என்று பட்டம் வாங்கிய எஸ்.எஸ்.ஆர்., இதில் கிருஷ்ணன் ரோல் போடும் நடிகராக வருகிறார். 🙂

ஆச்சரியப்படும் விதமாக தேவிகா underplay செய்கிறார்.

ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. எனக்கு கதை, பாட்டு இவற்றை மட்டும்தான் ரசிக்கத் தெரியும். நானே ஒளிப்பதிவை கவனித்தேன் என்றால் நன்றாக இருந்திருக்கவேண்டும்.

மருந்துக்கு கூட ஒரு நகைச்சுவை காட்சி இல்லை. மாறன் தைரியசாலிதான். தப்பாக எழுதிவிட்டேன். எஸ்.எஸ்.ஆர் சமைக்கும் காட்சிகள் நகைச்சுவை காட்சிகள்தான், சிரிப்புதான் வரவில்லை. இது சோகப் படம் என்பதாலோ என்னவோ இதெல்லாம் ஒரு நகைச்சுவையா என்று நமக்கு சோகம் ஏற்படுகிறது.

காகித ஓடம்” பாட்டு வரப்போகும் சோகத்தை அருமையாக கோடி காட்டுகிறது. சுசீலாவின் குரல் ஜாலம் செய்கிறது. இதை போன்ற எனக்கு “தேவன் கோவில் மணியோசை” பாட்டிலும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு கதை உண்டு. பாட்டு எழுத வந்திருந்த மாயவநாதன் ட்யூனை கொடுங்க கொடுங்க என்று ராமமூர்த்தியை பிய்த்து எடுத்தாராம். கோபம் வந்த ராமமூர்த்தி “மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் – இதுதான்யா ட்யூன்” என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம். இதைக் கேட்ட கலைஞர் “காகித ஓடம் கடலலை மீது” என்று எழுதினாராம். டிஎம் எஸ், சுசீலா இருவரும் பாடும் ஒரு வெர்ஷனும் உண்டு.

“வானும் நிலமும் வீடு” என்ற ஏ.எல். ராகவன் பாட்டு நான் முன்னால் கேட்டதில்லை. அருமையான எழுத்து.
“வானும் நிலமும் வீடு
காற்றும் மழையும் உணவு
காலும் கையும் ஆடை
ஏழை வாழ்வு சிம்பிள்”
எளிமையான அருமையான வார்த்தைகள். பாட்டு பிரமாதம். சோவுக்கு ஆடத் தெரியாவிட்டாலும் படமாக்கப்பட்டிர்ந்த விதமும் பிரமாதம். எழுதியவர் மாயவநாதன்.

“எட்டி எட்டி ஓடும் போது கொதிக்குது நெஞ்சம்” திருச்சி தியாகராஜன் எழுதி டிஎம் எஸ் பாடியது.
“ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்கும்” கலைஞர் எழுதி டிஎம் எஸ், சுசீலா பாடியது.
“வசந்த காலம் வருமோ” என்ற சுரதா எழுதிய பாட்டும் இதில்தானாம். ஆனால் கட் செய்துவிட்டார்கள். அது நல்ல பாட்டு.

ஜோடி பிரிந்ததற்கு பின் ராமமூர்த்தி இசை அமைத்த படங்கள் மிக குறைவு (நான், மறக்க முடியுமா, சாது மிரண்டால்). நான் ஹிட். இதுவும் ஹிட். பிறகு அவருக்கு ஏன் மேலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை?

எதிர்பாராமல் வந்த “வானும் நிலமும் வீடு” பாட்டு, “காகித ஓடம்” பாட்டு, எஸ்.எஸ்.ஆரும் தேவிகாவும் சந்திக்கும் காட்சி ஆகியவற்றுக்காக பார்க்கலாம். டிவியில் மெகா சீரியல்கள் பார்ப்பவர்கள் தைரியமாக பார்க்கலாம், பைசா வசூல் ஆகிவிடும். 10க்கு 6 மார்க். C grade.

கப்பலோட்டிய தமிழன் (Kappalottiya Thamizhan)


எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி படம் இதுதான். சிவாஜிக்கும் அப்படித்தான். தமிழின் சிறந்த படங்களில் ஒன்று. இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பே என் அம்மா எனக்கு இதைப் பற்றி ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தார். முதல் முறையாக பார்க்கும்போது பன்னிரண்டு வயதிருக்குமோ என்னவோ. வ.உ.சிக்கு தண்டனை அளிக்கப்பட்டதும் தூத்துக்குடியே பற்றி எரிவது போல் ஒரு காட்சி உண்டு. அந்தக் காட்சியில் எனக்கும் எதையாவது உடைக்கவேண்டும் என்று தோன்றியது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

ஓரளவு வயது வந்த பிறகுதான் சிவாஜி என்ற இமேஜைத் தாண்டி வ.உ.சி. என்ற ஒரிஜினல் மீது பிரமிப்பு உண்டாக ஆரம்பித்தது. பணக்கார பின்னணி. தூத்துக்குடி நகரத்தையே தன் கட்டுக்குள் வைக்கும் leadership skills. பலரையும் பணம் முதலீடு செய்யவைத்து, ஒரு கம்பெனியை உருவாக்கி established கம்பெனியுடன் போட்டி போட்டு சமாளிக்கும் management skills. ஆங்கில அரசை எதிர்த்தால் ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது தெரிந்தும் எதிர்த்த தைரியம். அவரை அந்த ஆபத்தை நோக்கி செலுத்திய சக்தி எது? எப்படி இது அவரால் முடிந்தது? என்னால் முடியாத விஷயம். இவராவது அதற்கு பிறகு பெரிய ரிஸ்க் எடுக்கவில்லை.சுப்ரமணிய சிவா அதற்குப் பிறகும், தொழுநோய் தாக்கிய பிறகும், சாகும் வரை போராடினார். இந்த உறுதி இவர்களுக்கு எப்படி ஏற்பட்டது?

வ.உ.சியின் இமேஜை உருவாகியதற்கு பெரிய காரணம் ம.பொ. சிவஞானம் எழுதிய கப்பலோட்டிய தமிழன் என்ற புத்தகம். 1946இலோ என்னவோ முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. பிறகு சின்ன அண்ணாமலை அதை பிரமாதமாக மார்க்கெட் செய்து பிரபலமாக்கினார். இந்த படத்துக்கும் “மூலக்கதை” அந்த புத்தகம்தான். தற்செயலாக மயிலாப்பூரில் உள்ள பூங்கொடி பதிப்பகத்தில் ஒரு முறை நுழைந்தபோது இந்த புத்தகத்தின் மறுபதிப்பு கிடைத்தது. ம.பொ.சிக்கு இவர் ஒரு தெய்வப்பிறவி என்பது தெளிவாகத் தெரிந்தது. இன்று நாட்டில் வ.உ.சி. பற்றி இருக்கும் இமேஜ் இந்தப் புத்தகத்தின் மூலமும், இந்த படத்தின் மூலமும் உருவானவையே. அதனால் இவரைப் பற்றிய நடு நிலைமையான மதிப்பீடு சரியாக பிடிபடவில்லை. என் வாழ்க்கையில் இவரைப் பற்றிய ஒரு criticism கூட நான் படித்ததில்லை. உதாரணத்துக்கு ஒன்று. இவர் ஜெயிலில் இருந்து வெளி வந்தது 1912இல். 1936இல் இறந்தார். அரசியலில் இருந்து விலகிவிட்டார். Jail broke him. தவிர பணக் கஷ்டங்கள், குடும்பக் கஷ்டங்கள். அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. இதில் தவறென்ன இருக்கிறது? இந்த உண்மையை ஒத்துக்கொண்டால் அவரது தியாகங்கள் மகத்தானவை இல்லை என்று ஆகிவிடுமா என்ன? ஆனால் எல்லாரும் அவருக்கு காந்திய வழி பிடிக்காததால்தான் அரசியலில் இருந்து விலகிவிட்டார் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். இது ஒன்றுதான் காரணம் என்றால் 1912இலிருந்து திலகர் மறைந்த 1920 வரைக்கும் ஈடுபட்டிருக்கலாமே? நம் நாட்டில் ஒரு ஹீரோவின் மேல் ஒரு சின்ன மறு கூட இருக்ககூடாது!

அடுத்த முறை இந்த படத்தை பார்த்தால் எந்த வித preconceived notionsஉம் இல்லாமல் ஒரு சினிமா என்ற அளவில் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். படத்தில் ஓட்டைகள் தெரிகின்றன, இருந்தாலும் இது ஒரு நல்ல படம் என்பது நிச்சயமாக தெரிந்தது.

முதலில் ஓட்டைகள்:

  1. வ.உ.சியும் சிவாவும் கலெக்டர் வின்ச்சிடம் பேசும் காட்சி ரொம்ப ஓவர். பாரதி எழுதிய இரண்டு பாட்டுகளை வைத்துக்கொண்டு இந்த காட்சியை உருவமைத்திருக்கிறார்கள். ஆனால் ஜில்லா கலெக்டரிடம் அவரது ஆதிக்க வெறியைப் பற்றி ஒரு திறமையான மானேஜரான வ.உ.சி. பேசி இருப்பார் என்பது நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் (கட்டபொம்மன் ஜாக்சன் துரையிடம் பேசும் காட்சியைப் போல) மிகவும் என்ஜாய் செய்த காட்சி இது.
  2. ஜெமினி, சாவித்ரி பகுதி எதற்கு? ஒரே லாபம் A++ grade பாட்டான “காற்று வெளியிடை“தான். அதுவும் அந்த வெடிகுண்டு காட்சிகள் சுத்த வேஸ்ட்.
  3. பிரிட்டிஷ் கம்பெனி இலவசமாக டிக்கெட் தந்ததா என்று தெரியாது, ஆனால் அப்படி அவர்கள் தந்திருந்தால் வியாபாரிகளும் பிரயாணிகளும் அதில்தான் போயிருப்பார்கள். வ.உ.சியின் கம்பெனி திவால் ஆக வேண்டியதுதான். விக்கிபீடியாவிலிருந்துTo thwart the new Indian company they resorted to the monopolistic trade practice of reducing the fare per trip to Re.1 (16 annas) per head. Swadeshi company responded by offering a fare of Re.0.5 (8 Annas). The British company went further by offering a free trip to the passengers plus a free umbrella, which had ‘S.S.Gaelia’ and ‘S.S.Lawoe’ running nearly empty. By 1909 the company was heading towards bankruptcy. இந்த உண்மையை ஒத்துக்கொண்டால் என்ன குறைந்துவிடும்? எதற்காக தன் பேச்சினால் வ.உ.சி. பிரயாணிகளையும், சரக்குகளையும் சுதேசி கப்பலுக்கு திருப்பினார் என்று காட்ட வேண்டும்?
  4. வ.உ.சி. ஒரு தலித்தை தத்து எடுத்துக்கொண்டார் என்பதெல்லாம் டூ மச். 1960இன் மதிப்பீடுகளை 1905இல் சுமத்தும் முயற்சி.
  5. 1960இல் எல்லாரும் மேல் சட்டையோடு அலைந்தார்களா? முக்கால்வாசி பேர் மேல் துண்டோடுதான் திரிந்திருப்பார்கள். இங்கே நாவிதர் கூட மேல் சட்டையோடுதான் அலைகிறார். பிராமணர் வீட்டு நடுக் கூடத்தில் தலையை மழிக்கிறார்.
  6. 1905இல் சாவித்ரி வயது பெண்ணுக்கு பெண்மணிக்கு அது வரை திருமணம் ஆகாமல் இருக்குமா?

1962இல் வந்த படம். சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, டி.கே. ஷண்முகம் (சுப்ரமணிய சிவா), எஸ்.வி. சுப்பையா(பாரதி), நாகையா, ஃப்ரெண்ட் ராமசாமி, ஓ.ஏ.கே. தேவர், டி.எஸ். துரைராஜ், ஏ. கருணாநிதி, டி.பி. முத்துலக்ஷ்மி, எஸ்.வி. ரங்காராவ், அசோகன், பாலாஜி (வாஞ்சிநாதன்), சாரங்கபாணி நடித்திருக்கிறார்கள். பி.ஆர். பந்துலு தயாரித்து திலகராகவும் நடித்திருக்கிறார். ஜி. ராமநாதன் இசை. எல்லாமே பாரதி பாடல்கள். இயக்கம் பந்துலு என்று நினைக்கிறேன், நிச்சயமாகத் தெரியவில்லை. வழக்கம் போல டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன், அதனால் நடிகைகள் பலரை அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை. சிதம்பரத்தின் மனைவியாக நடிப்பவர் யார்? ருக்மிணியாம். இவர் யாரென்று தெரியவில்லை. சாரதா, help! பிரபல நடிகை லக்ஷ்மியின் அம்மாவாம். (நன்றி, நல்ல தந்தி!)

வந்த புதிதில் இது ஒரு காங்கிரஸ் படம் என்ற கருத்து பரவலாக இருந்ததுதான் இது சரியாக ஓடாததற்கு காரணம் என்று எங்கேயோ படித்தேன். இது நன்றாக ஓடவில்லை என்பது ஒரு பெரிய சோகம். இதனால்தான் பாரதி படம் வர இத்தனை நாட்கள் ஆனதோ?

எஸ்.வி. சுப்பையாவின் நடிப்பு அபாரம். அவர் காட்டும் வேகம், “சொல்லிக் கொள்ளும். நன்றாக நானூறு முறை சொல்லிக் கொள்ளும்” என்று சொல்லும் அலட்சியம், மனைவி இரவல் வாங்கி வைத்திருக்கும் அரைப் படி அரிசியை குருவிகளுக்கு போடும் other worldliness, கடன்காரர்களிடம் “பராசக்தி கொடுப்பாள்” என்று சொல்லும் கையாலாகத்தனம் எல்லாமே அருமை. திரைக்கதை அமைத்தவருக்கு ஒரு சபாஷ்!

சிவாஜி சில சமயங்களில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தாலும், அது செயற்கையாகத் தெரியவில்லை. சிதம்பரத்தின் உறுதி, திறமை எல்லாவற்றையும் அருமையாக கொண்டு வந்திருக்கிறார். மிக சிறப்பான நடிப்பு! கட்டபொம்மனை அவரது மாஸ்டர்பீஸ் என்று சொல்வார்கள். அதன் திரைக்கதையில் ஒரு கூத்தின் செயற்கைத்தனம் இருக்கிறது. இந்த திரைக்கதையில் வெகு சில இடங்களில்தான் செயற்கைத்தனம் இருக்கிறது. திரைக் கதை அவரை ஒரு குறையும் இல்லாத மனிதராக சித்தரிப்பது ஒன்றுதான் குறை. மாசு மறுவற்ற நாயகனாக இல்லாமல் தன் குறைகளை வெல்லும் நாயகனாக சித்தரித்திருந்தால் சிவாஜியின் பாத்திரம் இன்னும் சோபித்திருக்கும்.

ஜி. ராமநாதனின் மாஸ்டர்பீஸ் இதுதான். திருச்சி லோகநாதனையும் சீர்காழியையும் பாடகர்களாக தேர்ந்தெடுத்தது ஒரு மாஸ்டர்ஸ்ட்ரோக். “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்“, “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்“, “வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம்“, “காற்று வெளியிடை கண்ணம்மா”, “ஓடி விளையாடு பாப்பா“, “வந்தே மாதரமென்போம்“, “நெஞ்சில் உரமுமின்றி“, “பாருக்குள்ளே நல்ல நாடு” எல்லாமே டாப் க்ளாஸ் பாட்டுக்கள். A++ grade பாட்டுக்கள். “உணவு செல்லவில்லை சகியே“, “சின்னக் குழந்தைகள் போல் விளையாடி” இரண்டுதான் ஒரு மாற்று கம்மியான பாட்டுக்கள். எல்லா பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.

பார்க்க வேண்டிய படம். பத்து superb பாட்டுக்கள், அருமையான நடிப்பு, ஒரு inspirational “நிஜக்”கதை. வேறென்ன வேண்டும்?10க்கு 8 மார்க். A grade.

P.S. இன்று (செப்டெம்பர் 10) காலை குமுதம் ரிபோர்ட்டரில் மதுரையில் வ.உ.சி. சிலைக்கு அருகே கம்யூனிஸ்ட் கட்சி எங்கோ தலித்துக்களுக்காக போராடுவதால் கோபம் அடைந்த சில பிள்ளைமார்கள் தி.மு.க. மூலம் வ.உ.சி.யை கம்யூனிஸ்ட்கள் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று தகராறு செய்வதாக படித்தேன். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. வ.உ.சியின் அடையாளம் அவர் பிள்ளை என்பது அல்ல. உ.வே.சாவின் அடையாளம் அவர் ஐயர் என்பது அல்ல. இவர்களின் பெயரில் இருக்கும் ஜாதிப் பெயர் அந்தக் காலத்து நாகரீகம், அவ்வளவுதான். தமிழ் நாட்டுக்கே ஆதர்சம் ஆன ஒருவரை ஏனய்யா ஒரு சின்ன ஜாதி வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கிறீர்கள்?

P.P.S நடிகர் திலகம் சைட்டில் உள்ள விமர்சனம் என் கருத்தில் முழுமையாக இல்லை. சாரதா, உங்களுக்கு வேறு ஏதாவது இங்கே லிங்க் செய்யக்கூடிய விமர்சனம் தெரியுமா?

மஹாதேவி (Mahadevi)


1958இல் வந்த படம். எம்ஜிஆரைத் தவிர பி.எஸ். வீரப்பா, சாவித்ரி, எம்.என். ராஜம், சந்திரபாபு, ஓ.ஏ.கே. தேவர், ஏ. கருணாநிதி, கே.ஆர். ராம்சிங், டி.பி. முத்துலக்ஷ்மி நடித்திருக்கிறார்கள். கண்ணதாசனின் கதை-வசனம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. சுந்தர் ராவ் நட்கர்னி என்ற மராத்தியர் இயக்கம்.

எம்ஜிஆருக்கு ஒரு வெற்றிப் படம். நல்ல பாட்டுக்களும், கண்ணதாசனின் சூடு பறக்கும் வசனங்களும், பி.எஸ். வீரப்பாவின் ரசிக்கத்தக்க வில்லன் நடிப்பும், அழகான எம்ஜிஆரும், கத்தி சண்டைக் காட்சிகளும் வெற்றிக்கு பின் பலமாக அமைந்தன.

கண்ணதாசனின் வசனங்கள் சிறப்பாக இருந்தன. எல்லாருக்கும் சுருக்கமான வசனங்கள்தான். ஆனால் பொருத்தமாக இருந்தன. கலைஞரின் மனோகரா வசனங்களின் வேகம் இதிலும் தெரிகிறது. மனோகரா வசனங்களில் அனல் பறக்கும், ஆனால் கொஞ்ச நேரத்துக்கு பிறகு திகட்டிவிடுகிறது. உண்மையில் சிவாஜி மனோகராவில் ராஜ சபையில் பேசும் நீள வசனத்தின் கடைசி பகுதிகள் வரும்போது எனது மூளை ஆஃப் ஆகிவிடுகிறது. என்றாவது ஒரு நாள் கான்சென்ட்ரேட் செய்து கேட்க வேண்டும், இல்லாவிட்டால் ஏதாவது வசனப் புஸ்தகம் படிக்க வேண்டும். இதில் எல்லாரும் ஒரு சமயத்தில் ஒன்று இரண்டு வாக்கியங்கள்தான் பேசுகிறார்கள். அது ஒரு பெரிய நிம்மதி!

டைட்டில்களில் மூலக்கதை ராம் கணேஷ் கட்கரி எழுதிய புண்யப்ரபாவ் என்ற நாடகமாம். இது எங்கே இருந்து வந்தது என்று நெட்டில் தேடினேன். இவர் 1885இல் பிறந்த ஒரு மராத்தியர். 34 வயதிலேயே இறந்துவிட்டார். இவர் எழுதிய நான்கே நாடகங்களும் அங்கே வெற்றி அடைந்தன. அதிலும் 1916இல் எழுதப்பட்ட புண்யப்ரபாவ் நம்மூர் மனோகரா போல புகழ் பெற்ற ஒன்றாம். டைட்டில்கள் பார்க்கும் வரை இது எனக்கு தெரியாது. பார்த்த பிறகு நெட்டில் சும்மா ராம் பிரகாஷ் கட்கரி, புண்யப்ரபாவ் என்று தேடினேன். 1916இல் எழுதிய நாடகம் என்று தெரிந்ததும் அசந்துவிட்டேன். ஒரு மராத்தி நாடகம் – அதுவும் 40 வருஷங்களுக்கு முன் வந்தது. அதை எம்ஜிஆரும் கண்ணதாசனும் எங்கே கேள்விப்பட்டார்கள்? எப்படி தேர்ந்தெடுத்தார்கள்? இந்த படத்தில் என்னை fascinate செய்யும் விஷயம் இதுதான்.

கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. கட்கரி இதை அனேகமாக தன் நண்பரும் அப்போது ஸ்திரீ பார்ட் புகழ், நாடகங்களின் ராஜா, (ஸ்திரீ பார்ட் நடிகரை ராணி என்று சொல்ல வேண்டுமோ?) பால் கந்தர்வாவுக்காக இதை எழுதி இருக்கிறார். கதையில் நாயகிக்குத்தான் முக்கியத்துவம். அவளுடைய கஷ்டங்கள்தான் கதையின் ஃபோகஸ். கதை இன்று போரடிக்கிறது. நமது சூழ்நிலையில் சொல்ல வேண்டுமென்றால் சாரங்கதாரா சங்கரதாஸ் ஸ்வாமிகள் எழுதியபோது மிகவும் சுவாரசியமான நாடகமாக இருந்திருக்கும். இன்று பார்க்கும்போது கதை போரடிப்பது இல்லையா? (BTW, சாரங்கதாரா நாடகம் இப்போது சாகித்ய அகாடெமியில் “இரு நாடகங்கள்” என்று கிடைக்கிறது.)

இயக்குனர் சுந்தர் ராவ் நட்கர்னிதான் ஹரிதாஸ் படத்தையும் இயக்கி இருக்கிறார். மங்களூர்காரரான இவரை ஏ.வி. மெய்யப்ப செட்டியார்தான் தமிழ் சினிமா உலகுக்கு அழைத்துவந்தாராம். இவர்தான் இந்த மராத்தி நாடகத்தைப் தேடிப் பிடித்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

இது பி.எஸ். வீரப்பாவின் படம். சாவித்ரி, ஏன் எம்ஜிஆருக்கு கூட இரண்டாவது இடம்தான். அவரது வில்லத்தனம்தான் படத்தை முன்னால் நகர்த்தி செல்கிறது. வீரப்பா சிவாஜி ரேஞ்சுக்கு நல்ல நடிகர் அல்லர். ஆனால் அவருக்கு ஒரு presence இருக்கிறது. அவரது கனத்த குரலும் உடல்வாகும் வில்லன் ரோல்களுக்கு நன்றாக பொருந்துகின்றன. இந்த படத்தில் எப்போதும் அவர் கண்களில் தெரியும் புன்சிரிப்பு அவரது வில்லத்தனத்தை இன்னும் எடுத்துக் காட்டுகிறது.

எம்ஜிஆரும் வீரப்பாவும் நண்பர்கள். வீரப்பா சாவித்ரி எம்ஜிஆரை மணந்த பின்னும் சாவித்ரியை விரும்புகிறார். அதற்காக பல சூழ்ச்சிகள் செய்து சாவித்ரியை ஜெயிலில் அடிக்கிறார், எம்ஜிஆரை குருடாகுகிறார், பன்ச் டயலாக் அடிக்கிறார், சாவித்ரியின் குழந்தையை கொள்கிறார். கடைசி காட்சியில் எம்ஜிஆர் குருடாக நடித்தார் என்றும், இறந்தது வீரப்பாவின் குழந்தை என்றும் தெரிகிறது. மனம் திருந்தி வீரப்பா தற்கொலை செய்துகொள்ள சுபம்! (தற்கொலை செய்துகொள்வதை சுபம் என்று வர்ணிப்பது நான் மட்டும்தான்)

பாட்டுகளை பொருத்த வரையில் “கண் மூடும் வேளையிலும்” சிறந்த பாட்டு. ஏ.எம். ராஜா, சுசீலா பாடியது. கண்ணதாசன். கண்ணதாசன் இந்த சிச்சுவேஷனுக்கு முதலில் “நானன்றி யார் வருவார்” என்ற பாட்டை எழுதினாராம். எம்ஜிஆர் அது ரொம்ப ஸ்லோ என்று சொல்லிவிட்டதால் “கண் மூடும்” என்று எழுதினாராம். ஆனால் “நானன்றி யார் வருவார்” பாட்டை மாலையிட்ட மங்கை படத்தில் உபயோகப்படுத்திக்கொண்டார்.

என்னுடைய ரசனைப்படி மிச்ச எல்லா பாட்டும் பி க்ளாஸ்தான். “சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா” எனக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் “சிங்காரக் கண்ணே உன் தேனூறும் செவ்வாயால்” பாட்டை நினைவுபடுத்துகிறது. இந்த பாட்டில் சொற்குற்றம் இல்லாவிட்டாலும் பொருள்குற்றம் இருக்கிறது. சிங்காரப் புன்னகையை பார்க்கிறோம், சங்கீத வீணையை கேட்கிறோம். இவை இரண்டையும் எப்படி ஒப்பிட முடியும்? வள்ளுவர் “குழலினிது யாழினிது என்பார் தம் மக்கள் அழகு முகம் பார்க்காதவர்” என்றா எழுதி இருக்கிறார்? “சிங்கார மழலையை காதார கேட்டாலே” என்றல்லவா எழுதி இருக்கவேண்டும்?

சந்திரபாபுவுக்கு இரண்டு பாட்டு. “தந்தனா பாட்டு பாடனும், துந்தனா தாளம் போடணும்”, “உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு”. இரண்டுமே feet tapping numbers. இந்த காலத்து குத்துப் பாட்டு எதுவும் கிடைத்திருந்தால் சந்திரபாபு கிழி கிழி என்று கிழித்திருப்பார். கூட ஆடும் நடிகை யார்? கூட பாடுவது ஜமுனா ராணியா இல்லை ரத்னமாலாவா என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்” பட்டுக்கோட்டை எழுதி டி எம் எஸ் பாடிய ஒரு பாட்டு. எனக்கு ரொம்ப பிடித்தமானது. யூட்யூபில் இருந்தது, தூக்கிவிட்டார்கள்.

மேலே உள்ள எல்லா பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.

“காக்கா காக்கா மை கொண்டா” எம்.எஸ். ராஜேஸ்வரி பாடியது. இங்கே கேட்கலாம்.

“சேவை செய்வதே ஆனந்தம்” டிஎம்எஸ், எம்.எஸ். ராஜேஸ்வரி பாடியது. “தாயத்து ஐயா தாயத்து” டிஎம்எஸ் பாடியது. இவற்றை இங்கே கேட்கலாம்.

இதை தவிர “ஏரு பூட்டுவோமே நாளை சோறு ஊட்டுவோமே”, “காமுகர் நெஞ்சில்”, “மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு” ஆகிய பாட்டுக்களும் இருக்கின்றன.

சாவித்ரிக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலும் எம்ஜிஆருக்கும் ஏ.எம். ராஜாவின் குரலும் பொருந்தவில்லை. ஆனால் பாட்டாக கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.

10 பாட்டில் ஒன்று டாப், 5 தேறும்.

பி.எஸ். வீரப்பாவுக்காகவும், கண்ணதாசனின் வசனங்களுக்காகவும், பாட்டுக்களுக்காகவும் பார்க்கலாம். 10க்கு 6 மார்க். C Grade.

ராண்டார்கையின் குறிப்பு

நான் பெற்ற செல்வம் (Naan Petra Selvam)


முன் குறிப்பிட்டது போல் 1956இல் வந்த படம். சிவாஜி, ஜி. வரலக்ஷ்மி, நம்பியார், சாரங்கபாணி, வி.கே. ராமசாமி, ஏ. கருணாநிதி, எம்.என். ராஜம் நடித்திருக்கிறார்கள். ஜி. ராமநாதன் இசை. ஏ.பி. நாகராஜன் கதை வசனம். ஏ.பி. நாகராஜன் இதிலும் ஒரு தருமி-நக்கீரன்-சிவன் காட்சியை வடித்திருக்கிறார். சிவாஜியே நக்கீரனாகவும் சிவனாகவும் நடிக்கிறார். திருவிளையாடல் படக் காட்சியில் இந்தக் காட்சியின் தாக்கம் தெரிகிறது. ஜி. வரலக்ஷ்மி அரிச்சந்திரா படத்திலும் சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.

“காட்டுக்குள்ளே கண்ட பூவு கண்ணைப் பறிக்குது” என்ற lowbrow பாட்டு மிகவும் நன்றாக இருந்தது. சுலபமான சந்தத்தில், நல்ல தாளத்தோடு அமைந்திருந்தது. திடீரென்று வீதியில் இரண்டு பேர் வந்து பாட்டுப் பாடி டான்ஸும் ஆடி பணம் சம்பாதிப்பார்கள். நான் சில பாம்பு பிடாரன்களைப் பார்த்திருக்கிறேன். லேகியம் விற்கும் மோடி மஸ்தான்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் இப்படி எந்த டான்ஸையும் பார்த்ததில்லை. இப்படி உண்மையிலேயே அந்தக் காலத்தில் நடக்குமா? இல்லை உடான்ஸா? யாராவது பார்த்திருக்கிறீர்களா?

“பூவா மரமும் பூத்ததே” என்ற பாட்டு பிரபலமானது. ஜிக்கியின் குரலில் ஒரு துள்ளல் இருக்கிறது. 

“வாழ்ந்தாலும் ஏசும்”, “நான் பெற்ற செல்வம்” என்ற பாட்டுக்கள் இன்றும் கேட்கப்படுகின்றன. டி.எம். சவுந்தரராஜன் 50களில் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில்தான் பாடுவார். இந்தப் பாடல்களில் அதை நன்றாக உணரலாம். அவரது ஆதர்சமான தியாகராஜ பாகவதரின் தாக்கம்தான்.

“மாதா பிதா குரு தெய்வம்” என்பதும் நல்ல பாட்டு.

கொஞ்சமாகவே திரைப் பாடல்கள் எழுதி இருக்கும் கா.மு. ஷெரிப் இந்தப் படத்தில் பல பாட்டுக்களை எழுதி இருக்கிறார். “காட்டுக்குள்ளே கண்ட பூவு”, “பூவா மரமும்”, “. நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” அவர் எழுதியவையே.

“நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.

கதை என்னவோ இழுவைதான். அப்பா சாரங்கபாணியை எதிர்த்துக்கொண்டு ஏழை வரலக்ஷ்மியை மணக்கும் சிவாஜி வாழ்க்கையில் உள்ள அத்தனை கஷ்டங்களையும் படுவார். ஏழ்மையிலே தவிப்பார், ஆனால் வேலை கீலை எதுவும் தேடாமல் தன் ஏழ்மையைப் பற்றியும் அப்பாவின் கடின உள்ளத்தையும் பற்றி நீள நீள வசனங்கள் பேசிக்கொண்டிருப்பார். அவருக்கு கஷ்டம் கொடுக்க விரும்பாத அவரது மைத்துனர் நம்பியார் வீட்டை விட்டு ஓடி தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சி செய்து தலையில் அடிபட்டு பைத்தியமாகிவிடுவார். அவர் வீட்டை விட்டு ஓடியது சிவாஜியின் நீள நீள வசனங்களை தாங்கமுடியாமல்தான் என்று நான் யூகிக்கிறேன். வேலை கிடைக்காத துயரத்தாலோ என்னவோ, சிவாஜி நடுவில் தனது மனைவியை கர்ப்பமும் ஆக்கிவிடுவார். தப்பித் தவறி அவருக்கு ஒரு வேலை கிடைக்கும், ஆனால் அவரது அப்பாவே அந்த வேலையையும் பறித்துவிடுவார். உடனே சிவாஜி “வாழ்ந்தாலும் ஏசும்” என்று பாட்டு பாடிக்கொண்டே நெடுந்தூரம் தன் மனைவியோடு நடந்து செல்வார். மனைவிக்கு மருந்து வாங்கப் பணம் இல்லாமல் திருடப் போவார். ஆனால் அங்கே அவரை மன்னித்து விட்டுவிடுவார்கள். என்னடா ஜெயிலுக்கு போகாமல் தப்பித்துவிட்டாரே, உணர்ச்சி பொங்க வசனம் பேசும் ஒரு வாய்ப்பு போய்விட்டதே என்று நினைத்தால், அந்த செய்தி தெரிந்து அவர் மனைவி அவமானத்தால் இறந்துவிடுவார். அப்போது சிவாஜி தன் சுயரூபத்தைக் காட்டி சிம்மக் குரலில் வசனம் பேசுவார். படம் முடியும் வேளையில் தன் காணாமல் போன மகனை தேடும் போது அவரை போலிஸ்காரர்கள் திருடன் என்று நினைத்து கைது செய்துவிடுவார்கள். அவரும் “நான் இந்த செல்வத்தை அல்ல, நான் பெற்ற செல்வத்தைத்தான் தேடுகிறேன்” என்று நமது கண்களை குளமாக்குவார். அவரும் அழுது, நம்மையும் அழவைத்துவிட்டு, கடைசியில் சிவாஜியும் அவரது அப்பாவும் 2 நாட்களுக்கு முன்னால் காணாமல் போன அவரது மகனும் சிறு வயதில் காணாமல் போன சிவாஜியின் தங்கையும் வீட்டை விட்டு ஓடிப் போய் பைத்தியமாக இருந்து குணமான சிவாஜியின் மைத்துனரும் எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்! செத்துப் போன மனைவியும், முதல் அரை மணி நேரத்திலேயே செத்துப் போன சிவாஜியின் மாமாவும் உயிர் பிழைத்து வந்திருந்தால் இன்னும் முழுமையாக இருந்திருக்கும். Director missed a trick!

பாட்டுக்களை மட்டும் கேட்கலாம்.

மணாளனே மங்கையின் பாக்கியம் (Manalane Mangaiyin Bagyam)


கதை பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை போல போய்க்கொண்டே இருக்கிறது. மாயாஜாலம், மந்திர தந்திரம், நாக கன்னி, பறக்கும் கம்பளம், கேட்டதைக் கொடுக்கும் கமண்டலம், சிவனும் பார்வதியும் வளர்க்கும் பிள்ளை என்று போய்கொண்டே இருக்கிறது. வேறு ஒரு போஸ்டில் சொன்னது போல மிக நீளமான படம். இதைப் பார்ப்பதற்கு பொறுமை வேண்டும். அதனால்தான் படம் முடிவதற்கு முன்னேயே விமரிசனம் எழுத ஆரம்பித்துவிட்டேன். நல்ல வேளையாக இப்போது டைட்டிலை சொல்லி விட்டார்கள், அதனால் படம் இன்னும் 15 நிமிஷத்தில் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். I spoke too soon. இன்னொரு பாட்டு போட்டுவிட்டார்கள்.

அஞ்சலி தேவியின் சொந்தப் படம். இசை அமைப்பாளர் ஆதி நாரயண ராவ் அஞ்சலி தேவியின் கணவர். ஜெமினியைத் தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் ஏ. கருணாநிதி, பாலாஜி, எஸ்.வி. சுப்பையா. வேறு சில முகங்களும் எங்கோ பார்த்த மாதிரி இருந்தன, ஆனால் யாரென்று தெரியவில்லை (டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன்). முன்பு ஒரு முறை அழகான நடிகர்கள் லிஸ்ட் போட்டிருந்தேன் – 60களின் சிவகுமார், 70களின் கமல், 90களின் அப்பாஸ்/அஜித் என்று. இவர்களுடன் 50களின் ஜெமினியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஜெமினியின் மிருதுவான குரலும் அவருக்கு ஒரு ப்ளஸ் பாயின்ட். வேதாந்தம் ராகவையா டைரக்ட் செய்திருக்கிறார். தெலுகிலும் தமிழிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தெலுகு பெயர் ஸ்வப்ன சுந்தரி என்று நினைக்கிறேன், நிச்சயமாகத் தெரியவில்லை. ஸ்வர்ண சுந்தரியாம், ஸ்வப்ன சுந்தரி வேறு ஒரு பழைய அஞ்சலி தேவி படம். தெலுகு version பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

மூன்று விஷயங்களை நம்பி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பாட்டுக்கள், மந்திரக் காட்சிகள், தாய்க்குலம் சென்டிமென்ட். 10-12 பாட்டுக்கள் இருந்திருக்கலாம். மூன்றரை மணி நேரம் ஆன பின்னும் படம் இன்னும் முடியவில்லை, இன்னொரு பாட்டு போட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. சில பாட்டுக்கள் பிரமாதம். “ஜகதீஸ்வரா ஸ்வாமி பரமேஸ்வரா” ஒரு கலக்கலான பாட்டு. வெஸ்டர்ன் க்ளாசிகல் இசையை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு நோட்டையும் கொஞ்சம் இழுத்துப் பாடுவதாலோ என்னவோ – எனக்கு சங்கீதம் தெரியாது. அதற்கு போடப்பட்டிருந்த செட்டும் மிகவும் நன்றாக இருந்தது. நடனமும் டாப். ” தேசுலாவுதே” இன்னொரு டாப் க்ளாஸ் பாட்டு. கண்டசாலாவின் குரல் ஜெமினிக்கு பொருந்துகிறது. “அழைக்காதே நினைக்காதே” பாட்டும் பிரமாதம். அந்தக் காலத்தில் ஒரு வழக்கம். காமெடியன்கள் கொஞ்சம் கொச்சையான மொழியில் எஸ்.சி. கிருஷ்ணன் போன்றவர்கள் குரலில் ஒரு lowbrow பாட்டு பாடுவார்கள். இந்தப் படத்தின் lowbrow பாட்டு நன்றாக இருந்தது – “எவண்டா என் முன்னே வந்து எதிர்ப்பவன் இங்கே”

மாயாஜாலக் காட்சிகளும் தய்க்குலம் சென்டிமென்ட்டும் படத்தை இழு இழு என்று இழுக்கின்றன. பாட்டுக்கள்தான் இந்தப் படத்தின் காலத்தைத் தாண்டி நிற்கும் ஒரே பலம். youtube-இல் தேடினேன், எதுவும் கிடைக்கவில்லை. dhool.com site-இலிருந்து தேசுலாவுதே பாட்டுக்கு ஆடியோ லிங்க் இங்கே . தேசு என்றால் வண்டு என்று அர்த்தமாம். வண்டுகள் மொய்க்கும் தேன் சிந்தும் மலரே என்று பொருள் வருகிறது.