பழைய தெலுகு திரைப்படம் – யோகி வேமனா


சமீபத்தில் யோகி வேமனா பற்றி படித்தேன். தமிழுக்கு அவ்வையார் போல தெலுகுக்கு வேமனா என்று நினைக்கிறேன். அப்போது யோகி வேமனா திரைப்படத்தைப் பற்றியும் தெரிந்தது. சரி கொஞ்சம் நேரம் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது.

படத்தின் revelation நாகய்யாதான். தெய்வமகன் சிவாஜி, வசந்தமாளிகை சிவாஜி என்று சிவாஜி ரசிகர்கள் சிலாகிப்பதைக் கேட்டிருக்கலாம். (நானும் தெய்வமகன் சிவாஜிக்கு ரசிகன்தான்). நாகய்யா – அழுமூஞ்சி நாகய்யா, ஒரே stereotype பாத்திரத்தில் மட்டுமே நான் பார்த்திருக்கும் நாகய்யா அந்த ஸ்டைலை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார். படத்தின் முதல் பாதியில் வேமனா போகி, தாசி பக்தர். Subtle ஆன உதட்டோரத்து சிறு சிரிப்பில், உடல் மொழியில், நடையில் அப்படியே கொண்டு வந்துவிட்டார். நடிப்பில் கலக்குகிறார்.

திரைப்படத்தின் அடுத்த takeaway எம்.வி. ராஜம்மா. ராஜம்மாவுக்கு தாசி பாத்திரம். எப்போதும் சோக முகத்துடன் வலம் வரும் ராஜம்மாவா இது! நன்றாகவே நடனமாடுகிறார்.

வேமனா பதினேழாம் நூற்றாண்டில் பிறந்தவராம். ஆனால் அவர் பிறப்பு, வாழ்வு பற்றி சரியான தரவுகள் இல்லையாம்.

திரைப்படத்தின் கதைப்படி வேமனா சிற்றரசர் குடும்பத்தில் பிறந்தவர். அவரது அண்ணியின் அரவணைப்பில் வளர்ந்தவர். அண்ணியின் மகள் ஜோதி மீது உயிரையே வைத்திருக்கிறார். இளம் வயதில் பெண் பித்தர். வீட்டில் இருக்கும் நகைகள், பணத்தை திருடிக் கொண்டு போய் தாசி வீட்டில் கொட்டுகிறார். அண்ணி/அண்ணன் யாரும் அவரை திருத்த முடியவில்லை. கப்பம் கட்ட வைத்திருந்த பணத்தை தாசியிடம் கொடுத்துவிட அண்ணனை ராஜா சிறை செய்துவிடுகிறார். பொற்கொல்லர் அபிராம் வேமனாவின் உயிர் நண்பர். இருவரும் ரசவாதம் செய்ய முயற்சிக்கிறார்கள்.  வேமனாவின் கையில் ஸ்வர்ணரேகை ஓடுகிறது, அதனால் வெற்றி கிடைக்கிறது. ரசவாதத்தில் மும்முரமாக இருக்கும்போது அண்ணன் மகள் ஜோதி இறந்துவிடுகிறாள். சோகத்தில் வீழும் வேமனா சாவின் ரகசியம் என்று அறிந்து கொள்ளத் தவிக்கிறார். சிவபெருமான் அருளால் அவரும் ஒரு யோகியாகிறார், அவ்வையார் மாதிரி நிறைய பாட்டு பாடுகிறார், கடைசியில் ஜீவசமாதி அடைகிறார்.

நமக்கு கிடைக்கும் தொன்மக் கதைகளின் படியும் ஏறக்குறைய இப்படித்தான். தாசி அண்ணியின் நகைகளைக் கேட்க, அண்ணியும் கொடுப்பதாகவும், அண்ணி தாசி முழு நிர்வாணமாக பின்னால் வளைந்து தன் மூக்குத்தியை எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க அந்த “ஆபாசக் காட்சியை” காணும் வேமனாவின் பெண் பித்து முடிவடைகிறது என்று ஒரு தொன்மக்கதை இருக்கிறது. பொற்கொல்லர் அபிராம் ஒரு சாமியாருக்கு காலம் காலமாக சேவை செய்வதாகவும், சாமியார் அபிராமுக்கு சர்வ சித்திகளையும் அருளும் தருணத்தில் அபிராமை ஏமாற்றி வேமனா அவற்றைப் பெற்றுக் கொள்வதாகவும் ஒரு தொன்மக்கதை இருக்கிறது. அண்ணன் மகள் இறப்பால் வேமனா உலகைத் துறந்து சன்னியாசி ஆவது தொன்மக்கதைகளில் இருக்கிறது.

வேமனாவின் பாடல்கள் மிகப் பிரபலமாம். தமிழில் நாம் அங்கங்கே அவ்வையார் பாடல்களை மேற்கோள் காட்டுவது போல ஆந்திராவில் இவர் பாடல்களை மேற்கோள் காட்டுவார்களாம். ஏதாவது தெரிந்திருந்தால் திரைப்படத்தை இன்னும் ரசித்திருப்பேன்.

எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். நாகையாவைத் தவிர மற்றவர்களில் நண்பர் அபிராமாக வரும் லிங்கமூர்த்தியும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

1947-இல் வெளிவந்த திரைப்படம். கே.வி. ரெட்டி இயக்கம். நாகையாவே இசை. சில பாடல்கள் இனிமையாக இருக்கின்றன.

நாகையாவின் நடிப்புக்காக கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தெலுகு திரைப்படங்கள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

பின்னூட்டமொன்றை இடுக