நாம் இருவர் – விகடன் விமர்சனம்


விகடனில் ஏவி.எம்மின் நாம் இருவர் படம் வந்தபோது எழுதப்பட்ட விமர்சனத்திலிருந்து ஒரு பகுதி… நன்றி, விகடன்!

ஆடல் பாடல் நல்ல பொழுதுபோக்கு

படங்களைத் தயாரித்து விடலாம். நூற்றுக்கணக்கில் கூடத் தயாரித்துவிடலாம். ஆனால், படிக்காத பாமரர்கள் மட்டுமின்றி, படித்த அறிவாளிகளும் கண்டு வியக்கும் முறையில் கலை நுணுக்கங்கள் நிறைந்த நல்ல படங்களாகத் தயாரிப்பது சிரமம். இந்தச் சிரமமான காரியத்தில் ஏவி.எம். புரொடக்ஷன்ஸார் பாராட்டக் கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது ‘நாம் இருவர்’.

எடுத்ததுமே நம்மைக் கவர்ந்து விடுகிறது, நடிகர்களின் வேஷப் பொருத்தம். அந்தந்த பாத்திரங்களுக்கு மிகவும் ஏற்ற நடிகர்களாகவே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அநேக படங்களில் காண்பிக்கப்படுவது போல் ’40 வயது வாலிபனும்’, ’35 வயதுப் பருவ மங்கையும்’ காதல் புரியவில்லை இப்படத்தில். உண்மையிலேயே இளம் வயதுள்ள டி.ஆர். மகாலிங்கமும், டி.ஏ. ஜெயலட்சுமியும் காதலர்களாகக் காட்சியளிக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது நமது உள்ளம் அப்படியே அவர்களோடு ஒன்றுபட்டு விடுகிறது. மீசை நரைத்தும் ஆசை நரைக்காத தந்தையின் பாகத்தில் கே. சாரங்கபாணி நடிக்கிறார். பல சமூகப் படங்களில் நடித்துள்ள பி.ஆர்.பந்துலு உத்தம அண்ணனாக வருகிறார். அசட்டு ஞானோதயத்தின் பாகத்தை ஹாஸ்ய நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் ஏற்று நடிக்கிறார். மற்ற நடிகர்கள் நாம் இருவர் நாடகத்தில் திறமையுடன் நடித்து அனுபவம் பெற்றவர்கள்.

நல்லதொரு பொழுதுபோக்காக இருப்பதற்குப் படத்தில் ஆடலும் பாடலும் ரொம்ப அவசியம் என்பதை உணர்ந்துள்ள ஏவி.எம். புரொடக்ஷன்ஸார் கண்ணுக்கினிய ஆடல்களையும் காதுக்கினிய பாடல்களையும் அமைத்திருக்கிறார்கள். ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ முதலிய பாரதியாரின் தேசிய கீதங்களை ஸ்ரீமதி டி.கே. பட்டம்மாள் அழகாகப் பாடியிருப்பதும், அந்தப் பாட்டுக்களுக்கு சிறுமி கமலா அபிநயம் பிடித்து அற்புதமாக ஆடியிருப்பதும், மனதை வசீகரிக்கக் கூடிய நல்ல அம்சங்கள். டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருக்கும் பாட்டுக்களும் படத்திற்கு ஒரு விசேஷ கவர்ச்சியை அளிக்கின்றன. சில பாட்டுக்கள், காலஞ்சென்ற கிட்டப்பாவின் பாட்டுக்களை ஞாபகப்படுத்துவதால், அவை கேட்போரைப் பரவசப்படுத்துகின்றன.

மகான் காந்தி மகான் என்ற பாட்டுக்கு “சிறுமி” கமலா இங்கே ஆடுகிறார்.

‘ஜே ஹிந்த்’, ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ முதலிய தேசிய கோஷங்களும், தேச பக்தர்களின் உருவப் படங்களும், அங்கங்கே சில சம்பாஷணைகளில் வரும் கருத்துக்களும் இக்கால மக்களின் மனப்போக்குக்கு ஏற்றவைகளாக இருப்பதால், படத்தின் வெற்றிக்கு அவை பெரிதும் உதவியாக இருக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

இன்னும் சிலாகிப்பதற்கு இப்படத்தில் எவ்வளவோ நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஒரே பேபி கமலாவை வைத்துக் கொண்டு, இரண்டு பேபி கமலாக்கள் நடனம் செய்வதாகக் காண்பித்திருக்கும் காமிராக்காரரின் திறமையைப் பாராட்டலாம். பாத்திரங்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவாறு சம்பாஷணைகளை இயற்றிக் கொடுத்திருக்கும் கதாசிரியர் ஸ்ரீ ப. நீலகண்டனின் திறமையையும் பாராட்டலாம்.

சென்ற உலக யுத்தத்தில் ஹிட்லர் பிரயோகித்த ‘வி-டூ’ என்ற ஆயுதம் அதன் வேகத்திற்குப் பிரசித்தி பெற்றது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பெயரே இப்படத்தின் ஆங்கிலப் பெயராக அமைந்திருப்பதனாலோ என்னவோ, படம் ஆரம்பம் முதல் கடைசி வரையில் விறுவிறுப்பும் வேகமும் உள்ளதாக இருக்கிறது. படத்தில் அலுப்புத் தட்டும் இடமே இல்லை!

ஸ்ரீ ஏவி.எம். செட்டியார் அவர்களின் திறமையில் நமக்கு அதிக நம்பிக்கை ஏற்படுகிறது. வசதிகள் நிறைய ஏற்படும்போது, இதை விடப் பன்மடங்கு மேம்பட்ட படங்களை அவரால் தயாரித்துத் தமிழ்நாட்டுக்கு அளிக்க முடியும் என்பதில் நமக்குச் சந்தேகமே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

தொடர்புடைய சுட்டி: மாலை மலரில் இந்த படம் உருவான கதை

தங்கப் பதக்கம் விகடன் விமர்சனம்


படம் வந்தபோது – 1974 – விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்! என் விமர்சனம் விரைவில் வரும்.

‘தங்கம் என்றால் இதுதான் மாற்றுக் குறையாத தங்கம்’ என்று கையில் எடுத்துக்காட்டுவது போல, போலீஸ் அதிகாரி என்றால் தன்னைப் போல்தான் இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் சிவாஜி கணேசனின் நடிப்பும் தோற்றமும் தங்கமா, வைரமா என்று வியக்கிறோம்!

காட்சிக்குக் காட்சி சிவாஜியின் கம்பீரத்தையும், கண்டிப்பையும், கடமை உணர்ச்சியையும், கனிவையும் பார்க்கும்போது எந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறார் என்று இனம் கண்டு கொள்ளப் பார்க்கிறோம். முடியவில்லை.

கடமையே உருவமான போலீஸ் அதிகாரிக்கு என்னைப் போல் கண்ணியமான ஒரு பெண்தான் மனைவியாக இருக்கமுடியும் என்று சொல்வது போல் லட்சிய மனைவியாக நடித்திருக்கும் கே.ஆர்.விஜயாவின் நிறைவை எப்படிச் சொல்வது? தங்கப் பதக்கத்தைத் தட்டிக் கொள்கிறார்!

ஸ்ரீகாந்திடம் நல்ல முன்னேற்றம். அப்பாவின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை அவமானப்படுத்தும் சந்தர்ப்பங்களைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சோவுக்குக் கான்ஸ்டபிள் பாத்திரம் ஒன்று போதாதா? கவுன்சிலர் களேபரம் கதைக்குத் தேவையில்லாத கூத்து!

மைனர் மனோகரை அங்கவஸ்திரத்தால் கட்டி இழுத்துப்போகும் போலீஸ் அதிகாரி, வழியில் மடக்குகிற அத்தனை பேரையும் கைத்தடியாலேயே அடித்து நொறுக்குவது இயற்கையாக இல்லை.

மகன் மீது போலீஸ் அதிகாரி காட்டும் கண்டிப்புக்குக் கதையில் கொடுக்கப்பட்டுள்ள அழுத்தம், அவன் தந்தையைப் பழி வாங்கத் துடிக்கும் அளவுக்கு எதிரியாக மாறுவதற்கும், தேசத் துரோகியாகக் கூடிய அளவுக்கு மாறுவதற்கும் கனம் சேர்ப்பதாக இல்லை.

ஜீப் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த கதை, யுத்தம்-ராணுவ ரகசியம் என்று வரும்போது தடுமாறுகிறது.

இத்தனை இருந்தும், எதையும் கண்டுகொள்ள விடாதபடி திசை திருப்பிவிடுகிறார் சிவாஜி.

தங்கப்பதக்கம் – சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஒரு தங்கப்பதக்கம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

நீரும் நெருப்பும் விகடன் விமர்சனம்


Neerum Neruppumபடம் வந்தபோது – அக்டோபர் 71இல் விகடனில் வந்த விமர்சனம். விமர்சனத்தை எழுதியவர் எம்.கே. ராதா! ராதாதான் இந்தப் படத்தின் ஒரிஜினலான அபூர்வ சகோதரர்கள் படத்தின் ஹீரோ, அதில் அவர் டபிள் ரோல் செய்திருந்தார். நன்றி, விகடன்!

என் விமர்சனத்தை நான் முன்னாலேயே எழுதிவிட்டேன், அதை இங்கே காணலாம்.

பல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.

முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.

இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.

‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.

‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.

திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!

மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.

மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.

பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.

பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: நீரும் நெருப்பும் – ஆர்வியின் விமர்சனம்

அந்தக் காலத்து பாட்டு ரெகார்டிங்


கொத்தமங்கலம் சுப்பு அந்தக் காலத்தில் பாட்டுகள் எப்படி ரெகார்ட் செய்யப்பட்டன என்றும் பேபி சரோஜா மோகம் பற்றியும் எழுதி இருக்கிறார். எனக்கு தெரிந்த ஒரு டீச்சருக்கு – இப்போது அறுபது அறுபத்தைந்து வயது இருக்கும் – பேபி சரோஜா என்றுதான் பெயர். ஏ.பி.எஸ். என்று கூப்பிடுவார்கள். விகடன் பொக்கிஷத்தில் பார்த்தது, விகடனுக்கு நன்றி!

அக்காலத்தில் பிளேபாக் முறை கிடையாது. நடிகருக்குப் பக்கத்தில் ஒரு பஜனை கோஷ்டி வந்து கொண்டிருக்கும். இடுப்பிலே ஆர்மோனியத்தைக் கட்டியிருப்பார்கள். பிடில்காரர் கையிலே பிடிலை வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டே நடந்து வருவார். மிருதங்கக்காரர், இடுப்பில் மிருதங்கத்தை வைத்துக் கொண்டு தட்டிக் கொண்டு வருவார். நடிகர் காமிரா எதிரில் பாடிக் கொண்டே நடந்து வருவார். பக்க வாத்தியக்காரர்கள் எல்லோரும் சற்று விலகி, காமிராவின் எல்லைக்குள் விழுந்து விடாமல் வந்து கொண்டிருப்பார்கள். நடிகரின் தலைக்கு மேல், ஒரு துரட்டிக் கொம்பில் சொருகிய மைக் பிரயாணம் செய்து கொண்டே வரும். பக்க வாத்தியமும் பாட்டும் ஒன்றாக ரிக்கார்ட் செய்யப்பட்டுவிடும்.

இதிலே ஒரு வேடிக்கை. நடு ஷூட்டிங்கில் காற்று திசை மாறி அடிக்க ஆரம்பிக்கும். நடிகர் பாட்டை மைக் ரிக்கார்டு செய்து விடும். ஆனால், பக்க வாத்தியத்தையெல்லாம் காற்று அடித்துக் கொண்டு போய் விடும். படத்திலே பாட்டைக் கேட்கும்போது, பாதிப் பாட்டில் பக்க வாத்தியம் கேட்கும்; இன்னொரு பாதியில் பக்க வாத்தியங்கள் கேட்காது. இன்று பிளேபாக் வந்துவிட்டது. இறைவனின் ஒரு குரலுக்குக் கட்டுப்பட்டு உலகம் நடப்பதுபோல இன்று தமிழ் சினிமா 4, 5 குரல்களுக்குக் கட்டுப்பட்டே நடந்து வருகிறது.

திடீர் திடீர் என்று, ஒரு வருஷத்தில் கட்டிய கட்டடங்களுக்கு எல்லாம் ‘சரோஜ், சரோஜ்’ என்று பெயர் வைத்தார்கள். அப்பொழுது பிறந்த பெண் குழந்தைகளுக்கு எல்லாம் சரோஜா என்று பெயரிட்டார்கள். காரணம், Baby Sarojaபேபி சரோஜா நடித்த பால யோகினி படம்தான். ஷெர்லி டெம்பிள் நடித்த படங்களையே பார்த்து மகிழ்ந்திருந்த நம் மக்கள், தமிழ்நாட்டில் ஒரு பேபி சரோஜாவைக் கண்டவுடன் சிந்தை மகிழ்ந்தனர். இப்படி ஒரு சின்னக் குழந்தையின் பெயரால் கட்டடங்கள் கிளம்பியதும், குழந்தைகளுக்குப் பெயரிட்டதும் சரித்திரத்திலேயே காண முடியாத விஷயம்.

இம்மாதிரி சினிமாவை நல்ல தொழிலாக்கி, நிறைய மக்கள் இதிலே ஆனந்தம் அடைய வேண்டுமென்று பாடுபட்டவர்கள் தமிழ் நாட்டில் எத்தனையோ பேர்! அவர்கள் எல்லோரும் இன்றைய சினிமா அபிவிருத்தியைப் பார்த்து ஆனந்திப்பார்கள். இன்று சினிமா வீறு கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குப் போட்டியாக, டெலிவிஷன் வரக் காத்துக் கொண்டு இருக்கிறது.

ஆனால், கலைகளில் எதையும் போட்டி என்று சொல்ல முடியாது. ரோஜா வந்ததற்காக மல்லிகை மறைந்து விடவில்லை; மருக்கொழுந்து வந்ததற்காக தாமரை மணம் வீசாமல் இல்லை. காலப்போக்கிலேயே மலர்வது கலை! என்றென்றைக்கும் அது வளருமே ஒழிய, மறையாது!

தொகுக்கப்பட்ட பக்கம்:

தொடர்புடைய பதிவுகள்:

மொகலே ஆஸம்


விகடனில் ஒரு ஹிந்தி படத்துக்கு விமர்சனம் வந்திருக்கிறது! புகழ் பெற்ற மொகலே ஆஜம் (செப்டம்பர் 1960) வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

சேகர் – சந்தர்

சந்தர்: சேகர், மொகலே ஆஸம் பார்த்துட்டியா?

சேகர்: பார்க்காமல் இருப்பேனா? தயாரிப்பாளர் ஆஸிப்பின் சாதனை அபாரம்தான்!

சந்தர்: அனார்கலி கதைதானே!

சேகர்: ஆமாம், ஆனால் முடிவை புது மாதிரியாகச் செய்திருக்காங்க. அதாவது, அக்பருடைய பெருமையை நிலைநாட்ட, அனார்கலியை கடைசியிலே சமாதியிலிருந்து அக்பரே தப்பிக்க வைக்கறதா காட்டறாங்க.

சந்தர்: ஓகோ! அனார்கலி கதைன்னா டிராஜிடியாகத்தான் இருக்கணும் என்கிற அபிப்பிராயத்தை மாற்றிப் புதுமையைப் புகுத்தியிருக்காங்களா?

சேகர்: ஆமாம், அதோடு இன்னும் பல புதுமைகள், அதிசயங் கள் இருக்கு. இந்தப் படத்தில் வர யுத்தக் காட்சியைப் போல இது வரை எந்த இந்தியப் படத்திலே யும் நான் பார்த்ததில்லே. அதே மாதிரி கண்ணாடி மாளிகை செட் ஒண்ணு போட்டிருக்காங்க. கண்கொள்ளா சீன்தான் அது!

சந்தர்: கலர் படமா?

சேகர்: முழுப் படமும் கலர் இல்லே. சில காட்சிகளைத்தான் கலரிலே எடுத்திருக்காங்க. அதுவும் ஷீஷ் மகால்லே நடக்கிற நடனத்தை, மாளிகையில் பதித்திருக்கிற அத்தனை கண்ணாடிகளிலும் பார்க்கிற போது, ‘ஆகா’ என்று நம்மை அறியாமலே சொல்லிவிடுகிறோம்.

சந்தர்: நடிப்பெல்லாம் எப்படி சேகர்?

சேகர்: பிருத்விராஜ் அக்பரா நடித்திருக்கிறார்; இல்லை, அக்பராகவே ஆகிவிடுகிறார். அவர் அதிகமாகப் பேசவில்லை. அவர் கண்கள்தான் பேசுகின்றன. அந்த நடையும், பார்வையும், பேச்சும்… அற்புதம் சந்தர்! அனார்கலியாக மதுபாலா வருகிறார். காதல் காட்சிகளில் மிக அழகாக விளங்குகிறார். நடிப்பும் நன்றாகத்தான் இருந்தது. சலீமாக திலீப் குமார் தோன்றுகிறார். இந்தப் படத்தில் அவருக்கு அதிக வேலையே இல்லை. கொடுத்த பாகத்தை நன்றாகவே செய்திருக்கிறார்.

சந்தர்: ஹிந்துஸ்தானி சாஸ்திரீய சங்கீதமோ?

சேகர்: இதென்ன கேள்வி? நௌஷத் சங்கீதமாயிற்றே! எல்லாம் ரியலிஸ்டிக்கா இருக்க வேண்டும் என்பதற்காக ஆஸிப் ரொம்பப் பாடுபட்டிருக்கிறார். கடைசியிலே அனார்கலியைத் தப்ப வைப்பதற்காக எடுக்கப்பட்ட காட்சி சரியாக இல்லை. ஆனால் பல லட்சம் செலவழித்து, பல வருஷம் சிரமப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிற இந்தப் படத்திலே இது போன்ற சிறிய குறைகளைச் சொல்லத் தோன்றவில்லை.

சந்தர்: அப்போ, பார்க்கவேண்டிய படம்தான் என்று சொல்லு!

சேகர்: அதில் என்ன சந்தேகம், பிரம்மாண்டமான இந்தப் படத்தைத் தயாரித்த ஆஸிப், இந்தியத் திரைப்பட உலகிற்கே ஒரு மாபெரும் சேவை செய்திருக்கிறார். ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்த்துப் பெருமைப்பட வேண்டிய படம் இது.

சிறந்த இந்திய படங்கள் என்று யாராவது லிஸ்ட் போடும்போது அதில் சாதாரணமாக மொகலே ஆஜம் இடம் பெறுவதைப் பார்க்கலாம். பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வு, T20 of Indian Cinema தேர்வு இரண்டிலும் இது சேர்க்கப்பட்டிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:

இந்திய சினிமா T20 – 20 சிறந்த இந்தியப் படங்கள்
பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா

விமர்சனம் என்றால் இப்படி!


எனக்கு எப்போதுமே சுருக்கமாக விமர்சனம் எழுத வரவில்லை என்று ஒரு எண்ணம் உண்டு. படத்தின் பங்களிப்பாளர்கள், கதை, அப்புறம் என் எண்ணங்கள், பாட்டுகள், grade போடுவது என்று எனக்கு ஒரு ஃபார்முலா காலப்போக்கில் உருவாக்கி இருக்கிறது. பதிவு எல்லாம் scroll செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு ஸ்க்ரீன் அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் ஃபார்முலாவை இந்த லட்சிய நீளத்துக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். என் போன்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க இன்றைக்கு இரண்டு விமரிசனங்கள் – குமுதம் பத்திரிகையில் படங்கள் ரிலீசானபோது வந்தவை என்று கேள்வி. வார்த்தைகள் சரியாக இருக்கின்றனவோ என்னவோ, ஏறக்குறைய இப்படித்தான் எழுதி இருந்தார்களாம்.

முதல் விமர்சனம் எம்ஜிஆர் நடித்த மாடப்புறா படத்துக்கு – நொந்து போயிருக்கிறோம். ஒன்றும் கேட்காதீர்கள்!

இரண்டாவது எஸ் எஸ் ஆர் நடித்த அவன் பித்தனா? படத்துக்கு – ஆம். யார் பித்தன், படம் பார்த்தவரா இல்லை எடுத்தவரா என்று தெரியவில்லை.

இரண்டு படத்தையும் நான் பார்த்ததில்லை. இந்த விமர்சனங்களுக்காகவே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவர்கள் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!

உப்பிலி ஸ்ரீனிவாஸ் இன்னும் சில சுருக்கமான விமர்சனங்களை குறிப்பிடுகிறார்.

  • பாய்ஸ் படத்துக்கு ஆனந்த விகடனில்: ச்சீய்!
  • சாவியில் சுப்பிரமணிய ராஜு எழுதிய ஒரு விமர்சனம்: படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம்? எவன் பார்த்தான்? (என்ன படம் தெரியவில்லையே?)
  • குமுதத்தில் அரசு பதில் பகுதியில்:
    கேள்வி: சோமனதுடி பார்த்தீர்களா?
    பதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.

    (எஸ்.ஏ.பி.க்கு உண்மையில் சோமனதுடி படம் பிடித்திருந்தது என்றும் ஆனால் அது சராசரி குமுதம் வாசகனுக்கு பிடிக்காது என்பதால் இப்படி கிண்டல் அடித்தார் என்றும் படித்திருக்கிறேன்.)
  • நடிகர் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்துக்கு கல்கி விமர்சனம் – கமர்ஷியல் கேசரி!
  • லிங்குசாமி இயக்கிய பையா படத்துக்கு விகடனின் விமர்சனம் – காதல் கொண்ட பெண் அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்விகடன் முழு பக்க விமர்சனம் எழுதி இருக்கிறது, நான்தான் தவறாக புரிந்துகொண்டுவிட்டேன்.
  • டோண்டு இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்களை இங்கே கொடுத்திருக்கிறார்.

    கொசுறு: உப்பிலி ஸ்ரீனிவாஸ் சரவண கார்த்திகேயன் எழுதிய யாவரும் நலம் விமர்சனத்தை ஒரு சுஜாதா பதிவுக்குள் இழுத்து போட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்!

    தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

    தொடர்புடைய பதிவுகள்:
    டோண்டுவின் பதிவு – இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்கள்
    உப்பிலி ஸ்ரீனிவாசின் உண்மைக்கு மிக அருகில் பதிவு

    பட்டணத்தில் பூதம்


    பட்டணத்தில் பூதம் கதையைப் பற்றி சாரதா விலாவாரியாக எழுதி இருக்கிறார். விகடன் விமர்சனத்தில் அந்தக் காலத்தில் இது எப்படி வரவேற்கப்பட்டது என்று தெரிகிறது. இனி மேல் புதிதாக என்ன எழுதுவது என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

    பாட்டுகள்: கோவர்த்தனம் ஏன் பெரிய இசை அமைப்பாளராக வளர முடியவில்லை என்று வியந்திருக்கிறேன். இதிலும் சரி, இது வருவதற்கு ஐந்தாறு வருஷம் முன் வந்த கைராசி படத்திலும் சரி பாட்டுகள் பெரிய ஹிட். ஆனால் கோவர்த்தனம் எம் எஸ்வியின் உதவியாளராகத்தான் முடிந்தார். ஏன் என்று தெரியவில்லை. இத்தனைக்கு இவர் ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான சுதர்சனத்தின் தம்பி. பல தொடர்புகள் இருந்திருக்கும்.

    பூவும் பொட்டும் விமர்சனத்தில் நான் கோவர்தனத்தை பற்றி எழுதிய சில வரிகள் –

    கோவர்தனம் ஒரு almost man. ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஆர். சுதர்சனத்தின் தம்பி. 1953இலேயே தனியாக ஜாதகம் என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். அவர் இசை அமைத்த முக்கால்வாசி படங்களின் இசை வெற்றி அடைந்திருக்கிறது. கைராசி, பட்டணத்தில் பூதம் போன்ற படங்களும் வெற்றி அடைந்தன. ஆனால் அவரது வாழ்க்கை உதவி இசை அமைப்பாளராகவே முடிந்துவிட்டது. சி.ஆர். சுப்பராமன், சுதர்சனம், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எம்எஸ்வி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ் எல்லாருக்கும் உதவி! தேவாவுக்கு கூட உதவியாக இருந்தாராம்! இவ்வளவு திறமை இருந்தும் ஏன் அவரால் ஒரு இரண்டாம் தட்டு இசை அமைப்பாளராகக் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது ஒரு புதிர்தான்.

    இளையராஜா வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் அவரும் கோவர்தனமும் சேர்ந்து ஒன்றாக இசை அமைப்பதாக இருந்ததாம். பஞ்சு அருணாசலம் வற்புறுத்தியதால் இளையராஜா தனியாக இசை அமைத்தாராம்.

    கண்ணதாசன் காமராஜரிடம் தான் காங்கிரசில் சேர விரும்புவதை குறிப்பாக சொல்லவே அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்று பாட்டு எழுதினாராம். எனக்கு நம்பிக்கை இல்லை. இது வந்தபோது கண்ணதாசன் தீவிர காங்கிரஸ்காரர் என்று நினைக்கிறேன். அப்படியே இல்லாவிட்டாலும் எழுதும் பாதி பாட்டு ரிலீஸ் ஆவதில்லை; படங்கள் எல்லாம் எப்போது ரிலீஸ் ஆகுமோ சொல்ல முடியாது. மேலும் காமராஜுக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். கண்ணதாசன் படம் ரிலீசாகி, பாட்டு ஹிட்டாகி, அதை காமராஜ் கேட்டு, இவரது உள்குத்தை புரிந்து கொண்டு இவரை சேர்த்துக் கொள்வார் என்று நினைத்திருந்தார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. கண்ணதாசனோ, கோவர்த்தனமோ, காமராஜரோ, இல்லை யாராவது சினிமாக்காரர்களோ இப்படி சொல்லி இருக்கிறார்களா? இல்லை இது சும்மா யாரோ கிளப்பிவிட்ட கதையா?

    சிவகாமி மகனிடம்தான் சிறந்த பாட்டு. கண்ணிலே கண்டதெல்லாம் காட்சியா, நான் யார் யாரென்று சொல்லவில்லை இரண்டும் நன்றாக இருக்கும். உலகத்தில் சிறந்தது எது சுமார். இதழ்கள் விரித்தது ராஜா என்றும் ஒரு பாட்டு இருக்கிறதாம். கேட்ட மாதிரியே இல்லை. எல்லா பாட்டையும் இங்கே கேட்கலாம்.

    படத்தின் சிறந்த காட்சியே அந்த செய்தித்தாளிலிருந்து எம்ஜிஆர் கிளம்பி வந்து நான் ஆணையிட்டால் என்று முழங்குவதும் சிவாஜி பாட்டும் நானே என்று பாடுவதும்தான். மிக அழகாக எடுக்கப்பட்டிருக்கும். ஸ்ரீனிவாஸ் வீடியோ சுட்டி கொடுத்திருக்கிறார்.

    கே.ஆர். விஜயா சிக்கென்று அழகாக இருந்த காலமும் உண்டு. 4 சிம்ரன் ஒன்றாக நிற்பது போல இருந்த காலமும் உண்டு. நல்ல வேளையாக இந்த படம் வந்த போது ஒல்லிதான். இதற்கப்புறம் நீச்சல் உடை போட்டுக் கொண்டு வரவில்லை என்று சாரதா எழுதி இருந்தார். இரண்டு மூன்று வருஷம் கழித்து எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் நீச்சல் உடை தேவைப்பட்டிருக்கும்! நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற வரிக்கு அவரை ஆடவிடலாம்!

    படம் பிராஸ் பாட்டில் என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாம். எஃப். அன்ஸ்டே எழுதிய நாவல் படமாகி இருக்கிறது. ராண்டார்கை இதைப் பற்றி விரிவாக சொல்கிறார். அவர் கட்டுரையில் அன்ஸ்டேயின் பெயர் தவறாக அச்சாகி இருக்கிறது. மேலும் ப. பூதம் படம் வந்த வருஷம் 1964 இல்லை, 67.

    பாஸ்கெட்பால் காட்சியை ஆப்சென்ட் மைண்டட் ப்ரொஃபசர் படத்தில் பார்த்திருக்கலாம். எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.

    நாகேஷ் காமெடி தேறவில்லை. ஜெய், விஜயா பார்க்க இளமையாக, அழகாக இருப்பார்கள். ஒரு நீளமான கிளிப் கீழே – ஜெய்யும் நாகேஷும் ஜாவரை முதல் முறை சந்திக்கிறார்கள்.

    1967-இல் வந்த படம். ஜெய்ஷங்கர், நாகேஷ், கே.ஆர். விஜயா, பாலாஜி, வி.கே. ராமசாமி, வி.எஸ். ராகவன், ஜாவர் சீதாராமன் நடித்திருக்கிறார்கள். கதை ஜாவர். இயக்கம் எம்.வி. ராமன். இசை கோவர்த்தனம். வெற்றிகரமாக ஓடிய படம். பத்துக்கு 6.5 கொடுக்கலாம். C+ grade.

    தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களில் பட்டியல்

    தொடர்புடைய சுட்டிகள்:
    பட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்
    பட்டணத்தில் பூதம் விகடன் விமர்சனம்
    பாட்டுகளை கேட்க
    ராண்டார்கை குறிப்பு
    Brass Bottle படம் IMDB தளத்தில்
    F. Anstey பற்றிய விக்கி குறிப்பு
    பூவும் பொட்டும் விமர்சனம்

    பட்டணத்தில் பூதம் – விகடன் விமர்சனம்


    பட்டணத்தில் பூதம்   (நன்றி – ஆனந்த விகடன் – விகடன் பொக்கிஷம் (24 -02 -2010 )

    காதலரைப் பிரிப்பதும், கடைசியில் அவர்களை ஒன்று சேர்ப்பதும், மூவாயிரம் வருடங்கள் ஒரு ஜாடியில் அடைபட்டுக் கிடந்த பூதத்தின் முக்கிய வேலை. அது நமக்கு முழு நேரப் பொழுதுபோக்கு.

    ஆகா! எத்தனை விதமான தந்திரக் காட்சிகள்! எத்தனை அழகான வண்ணக் காட்சிகள்! பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே! பத்திரிகை விளம்பரத்தில் இருக்கும் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் பாடுகிறார்களே!

    படத்தில் இருக்கும் கார் ஒன்று உயிர் பெற்று, பெரிதாகி, போர்டிகோவில் வந்து நிற்கிறது. ஹெலிகாப்டர், படகைத் துரத்துகிறது. அந்த ஹெலிகாப்டரை எதிர்த்து கார் ஒன்று வானத்தில் பறந்து செல்கிறது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்! துப்பாக்கிச் சண்டை – ஆவி கக்கும் பயங்கர டார்ச், மின்சாரக் கதவு… இங்கிலீஷ் சினிமா கெட்டுது போங்கள்!

    நாகேஷ் அந்த ஜாடியைக் கையில் வைத்துக் கொண்டு, விருந்து சாப்பிட முடியாமல் திண்டாடும்போது வயிறு வலிக்கச் சிரிக்கிறோம். முதலில் காதல் மன்னனாக இருக்கும் ஜெய்சங்கர், பின்னால் புரட்சி நடிகராக மாறுகிறார். நீச்சல் உடையில் இருக்கும் கே.ஆர்.விஜயா மழையில் நன்றாக நனைகிறார். அப்படியிருந்தும் ஜலதோஷம் பிடிக்கவேயில்லை! வில்லன் பாலாஜி தோள்பட்டையைக் குலுக்கும் ஸ்டைலுக்கு, கை குலுக்கி ‘சபாஷ்’ சொல்ல வேண்டும்.முன்பு ஆங்கிலத்தில் பேசிய பூதத்தை இப்போது தமிழில் பேச வைத்திருப்பவர் ஜாவர் சீதாராமன். பூதமாக வரும் அவருடைய நடிப்பு அற்பூதம்!

    பூதத்தின் சாதனை, ஒளிப்பதிவாளரின் வெற்றி!

    -ஜெய் ரவிகாந்த் நிகாய்ச்!

    பட்டணத்தில் பூதம் படத்தின்  இசை அமைப்பாளர் திரு . ஆர் . கோவர்த்தனம் .

    ஆர் .கோவர்த்தனம்  அவர்கள் ” ட்யூன்” போட்டு விட்டு பாடலை எழுதச் சொல்வதில் அவருக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை ,

    அவர் இசை அமைத்த எல்லாப் பாடல்களுக்கும் , பாடல்கள் தான் முதலில் எழுதப்பட்டது .  பிறகு தான் பாடலுக்கு ” ட்யூன் ” போடப்பட்டது !

    அதனால் அவர் இசை அமைத்த எல்லாப் பாடல்களும் ஜீவனுடன் இருக்கின்றன !

    இப்படி ஒரு கொள்கையை வைத்திருந்த ஆர். கோ . அவர்களுக்கும் ஒரு சோதனை வந்தது !

    ” பட்டணத்தில் பூதம் ” படத்திற்கு அவர் இசை அமைத்தபோது , அவர் வழக்கம் போல பாட்டு எழுதச் சொல்லி “ட்யூன் ”  போட்டார் .

    ஆனால் ஒரே ஒரு ” டூயட்” பாடலுக்கு ” கஜல் ” இசையில் பாட்டு அமைக்க அப்படத்தின் இயக்குனர் விரும்பினார் !

    எனவே கண்ணதாசனும் பாட்டை எழுதிக் கொடுத்துவிட்டு  சென்றார் !   கோவர்த்தன் ” கஜல் ” முறையில் இசை அமைக்க முயன்றார் ! முடியவில்லை !

    மறுபடியும் முயன்றார் !   முடியவில்லை ! கண்ணதாசனின் பாடல் வரிகளை மாற்றிக் கொடுத்தால்   முடியும் .

    ஆனால் கண்ணதாசன் அப்பாடலை மிகச சிறப்பாக எழுதிஇருந்ததால்,   கோவர்த்தனம் அதனை மாற்ற மறுத்துவிட்டார் .

    ( அதற்கு ஒரு காரணம் இருந்தது , அது பின்னர் உங்களுக்கு தெரியவரும் ! )

    எனவே , இயக்குனரின் அனுமதி பெற்று , ” கஜல் ” இசையைத் தள்ளி  வைத்து வீணையுடன் கூடிய மெல்லிசையை பயன்படுத்தி , ஓர்  அழகான பாடலை நமக்கு கொடுத்தார் !

    அந்தப் பாடல்தான் :

    ‘பட்டணத்தில் பூதம்’ (1967) படத்தில் இடம் பெற்ற,
    சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – எனை
    சேரும் நாள் பார்க்க சொல்லடி!
    வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி”

    67 பொதுத் தேர்தலின் போது தீவிர தேர்தல் பணிக்காக தன்னை அழைக்க காமராஜருக்கு கண்ணதாசன் விடுத்த விண்ணப்பமாக அப்போது இவ்வரிகள் அர்த்தம் கொள்ளப்பட்டது.

    செய்தித்தாளில் வீடியோ – பட்டணத்தில் பூதம் படத்தின் புகழ் பெற்ற “தந்திரக் காட்சி”

    சுஜாதா பதில்கள் – பாகம் 1  (உயிர்மை பதிப்பகம்)

    மா.வி. கோவிந்தராசன், ஆரணி.
    “பட்டணத்தில் பூதம்” என்கிற திரைப்படத்தில் பூதமாய் வருகிற ஜாவர் சீதாராமன் ஒரு செய்திப் பத்திரிகையைப் பார்ப்பார்.  அந்தப் பத்திரிகையில் சினிமா பார்ப்பதுபோல பாடல் காட்சி (பாட்டும் நானே பாவமும் நானே) வரும்.  அதுபோல இன்றைய விஞ்ஞானம் தருமா ?
    அதுபோல இன்றைய விஞ்ஞானம் தந்துகொண்டிருப்பதுதான் இன்டர்நெட் இதழ்கள்.  இதில் சோகம் இன்னமும் அந்த “பாட்டும் நானே” பாடலைத்தான் கட்டிக்கொண்டு அழுகிறோம்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்
    தொடர்புடைய பதிவுகள்: பட்டணத்தில் பூதம் – சாரதா விமர்சனம்

    பானுமதிக்கு கல்யாணம் ஆன கதை


    விகடனில் 72 ஃபெப்ரவரியில் தனக்கு திருமணம் ஆன கதையை பானுமதி எழுதி இருக்கிறார். அவரது வார்த்தைகளிலேயே:

    நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய புதிது. ‘கிருஷ்ண பிரேமா’ என்ற படத்தில் ஒரு சாதாரண வேஷத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்துக்கு ராமகிருஷ்ணா என்பவர் அசோஸியேட் டைரக்டராக இருந்தார்.

    “ராமகிருஷ்ணா இஸ் எ நைஸ் மேன்!” என்று எல்லாரும் சொல்வார்கள். அதைக் கேட்டுக் கேட்டு அவர் மீது எனக்கு ஓர் அன்பு ஏற்பட்டது. ஒரு நாள் என் தந்தையிடம், “அப்பா! நான் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்று சொன்னேன்.

    என் தந்தை திடுக்கிட்டுப் போனார். ஆனால், சமாளித்துக் கொண்டு, “அவருக்கும் அந்த விருப்பமிருக்கிறதா?” என்று கேட்டார். “எனக்குத் தெரியாது. நீங்களே கூப்பிட்டுக் கேளுங்கள்” என்றேன்.

    என் தாயார் எதிர்த்தார்கள். இருந்தாலும், என் தந்தையின் ஏற்பாட்டில் அவர் என்னைப் பெண் கேட்க வந்தார். வந்தவர் மிகவும் கண்டிப்பாகப் பேசினார்: “என்னிடம் பணம் இல்லை. படிப்பும், திறமையும் இருக்கிறது. இஷ்டமிருந்தால் உங்கள் பெண்ணைக் கொடுங்கள். என் வருமானத்துக்கேற்ப அவளை வசதியாக வைத்திருப்பேன். என்னோடு ஓர் ஓலைக் குடிசையில் வாழ்வதற்கும் அவள் தயாராக இருக்கவேண் டும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    என் தந்தை பயந்து, “இப்போதே இவ்வளவு கண்டிப்பாகப் பேசுபவர், பின்னாளில் உன்னைக் கொடுமைப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவரை மறந்து விடு!” என்று கூறினார்.

    “சரி, மறந்து விடுகிறேன். ஆனால், இன்னொருவரைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன். எப்போது நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தேனோ, அப்போதே நான் அவருக்கு மனைவியாகி விட்டேன்!” என்றேன்.

    அப்போதும் என் பெற்றோர் சம்மதிக்கவில்லை. விளைவு? பெற்றோருக்குத் தெரியாமல் எங்கள் திருமணம் நடந்தது.

    மணமக்கள் கோலத்தோடு ஆசி பெற வந்தோம். என் தாயார் எங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. தந்தையோ அழுதபடியே, “அப்பா அப்பா என்று சுற்றிச் சுற்றி வருவாயே… இப்போது அந்த அப்பாவிடம் கூடச் சொல்லாமல் திருமணம் செய்துகொள்ள உனக்கு எப்படியம்மா மனம் வந்தது?” என்று கேட்டார்.

    நானும் அழுதேன். அழுதபடியே, “அதுதான் விதி!” என்று சொன்னேன்.

    நன்றி விகடன்!

    பின்குறிப்பு: பானுமதி 15 16 வருஷம் கழித்து அளித்த ஒரு பேட்டியில் அப்பா கல்யாணத்துக்கு சம்மதித்தார் என்று சொல்லி இருக்கிறார்! எது நிஜமோ யானறியேன்!

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

    தொடர்புடைய பதிவுகள்:
    திரை உலக வாழ்வைப் பற்றி பானுமதி
    பானுமதியின் மாஸ்டர்பீஸ் – அன்னை

    பணமா பாசமா


    1968 மார்ச்சில் படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

    பணத்திற்கும் பாசத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் கதை.

    கருத்து பழையதாக இருந்தாலும், கையாண்டிருக்கும் முறையிலே புதுமை பளிச்சிடுகிறது. போலி கௌரவமும், தாய்ப் பாசமும் மோதி உணர்ச்சிக் குவியல்களை ஏற்படுத்துகின்றன. பல இடங்களில் படம் பார்க்கிறோமா என்பதை மறந்து, கதாபாத்திரங்களுடன் ஒன்றி விடுகிறோம்.

    உதாரணத்திற்கு, இரண்டு இடங்கள்:

    தன் மகள் ஏழைப் பையனைக் காதலிக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, அதை மனைவியிடம் பக்குவமாக எடுத்துச் சொல்கிறார் கணவர். மாடிப்படியின் மேலே மகள்; கீழே தாய்; இந்தக் குடும்பப் புயலின் நடுவே, அமைதியே உருவாக ஒரு புறத்தில் தந்தை; அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்… ஏதோ ஒரு குடும்பத்திற்குள் இருக்கிறோமோ என்ற பிரமை நமக்கு.

    குடிசையில் வாழும் மகளுக்குத் தீபாவளிக்காகப் பட்டுப் புடவை கொடுத்து அனுப்புகிறாள் தாய். அதை எடுத்துச் சென்ற தகப்பன், மகள் கொடுத்த சாதாரண வேஷ்டியையும் துண்டையும் போட்டுக் கொண்டு வீடு திரும்புகிறார். மனைவி முதலில் கொதிப்படைந்த போதும், கடைசியில் தானும் மகள் அனுப்பிய நூல் புடவையையே உடுத்திக் கொள்கிறாள். பாசத்தின் வெற்றியை இதைவிடச் சிறப்பாகச் சித்திரிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்!

    எஸ்.வரலட்சுமி தாயாக வருகிறார். கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ்வது என்பார்களே, அதை அற்புதமாகச் செய்திருக்கிறார்.

    தந்தையாக வருகிறார் பகவதி. இத்தனை நாள் வரை இப்படி ஒரு தந்தையைத் திரை உலகம் ஏன் புரிந்து கொள்ளவில்லை? பிரமாதம் என்ற வார்த்தை போதாது! உணர்ச்சிகளை ஆழமாகவும் அடக்கமாகவும் வெளிக்காட்டும் அந்தத் திறன் – இதுவரை எந்த அப்பா நடிகரும் கையாண்டிராத பாணி – ‘சபாஷ் பகவதி’ என்று எல்லோரையும் சொல்ல வைக்கிறது.

    சரோஜா தேவி சில இடங்களில் என்னவோ போல இருந்தாலும், தமது முத்திரையை ஆங்காங்கே பதிக்கிறார்.

    நாகேஷ் – விஜய நிர்மலா ஜோடி ஒரு சாராருக்கு மிகவும் பிடிக்கும். ‘எலந்தப்பழம்’ பாட்டு படு ஜோர் என்றால், அந்த ‘அலேக்’ – அது கொஞ்சம் அதிகமோ?

    ஆரம்பத்தில் படம் கொஞ்சம் ‘……..’ அடிக்கிறது. அதே போல, வில்லன் ஒருவன் வருவதும், விஷம் வைக்க முயல்வதும்…. இந்தக் கதைக்குத் தேவையா அதெல்லாம்?

    குறைகள் குறைவுதான். கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் திறமைக்கு இன்னொரு சான்றிதழ், ‘பணமா, பாசமா?’

    தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

    தொடர்புடைய பதிவுகள்: எதுவுமில்லை