இதயக்கனி – விகடன் விமர்சனம்


திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த (1975 செப்டம்பர்) விமர்சனம். நன்றி, விகடன்!

தேனிலவுக்குப் போய் வந்த அவசரத்தில் காபி எஸ்டேட் முதலாளி மோகனுக்கு போலீஸ் இலாகாவின் அழைப்பு வருகிறது. தன் கணவன் எஸ்டேட் முதலாளி மட்டுமல்ல, உளவு போலீஸ் அதிகாரி என்பதும் அப்போதுதான் தெரிகிறது இளம் மனைவிக்கு. துப்பு துலக்குவதற்காகத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கொலை வழக்கில், கொலையின் தொடர்பில் தேடப்படும் பெண் தன் மனைவியே என்பது தெரிந்ததும் மோகனுக்கு அதிர்ச்சி! மனைவியின் கடந்த கால நடவடிக்கைகளைக் கண்டறியும் முயற்சியில் மோகன் முனைய, ஒரு சதிகாரக் கும்பலே அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

எம்.ஜி.ஆரிடம் இளமை துள்ளுகிறது. காதல் சுவை சொட்டச் சொட்ட ராதா சலூஜாவுடன் ஆடிப் பாடுவதும், குறும்பு செய்வதும் கொள்ளைக் கவர்ச்சி! போலீஸ் அதிகாரியாகக் கடமையில் ஈடுபடும் போது எஸ்டேட் முதலாளிக்கு நேர் எதிரான ஒரு பாத்திரமாக எம்.ஜி.ஆர். மாறி விடுகிறார். சதிக் கும்பலுக்குள் புகுந்து அவர்களின் ரகசிய இடங்களுக்குச் சென்று வளைத்துப் பிடிக்கும் காட்சிகள் ‘திரில்’ மூட்டுகின்றன.

கதாநாயகி ராதா சலூஜாவின் தமிழில் மழலை கொஞ்சுகிறது. ஆனாலும், சாதுரியமாகச் சமாளித்திருக்கிறார். இந்தி நடிகை என்று எண்ண முடியாதபடி, காதல் நெருக்கத்திலும் உருக்கத்திலும் உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கிறார்.

கொலையில் சம்பந்தப்பட்ட மாலாவும் கதாநாயகி லட்சுமியும் இரட்டையர்கள் என்று கதையை அமைக்காமல் இருவரும் ஒருவரே என்பதை நம்ப வைத்திருப்பது நல்ல டெக்னிக். இறந்து போனதாகச் சொல்லப்படும் மாலா, உயிருடன்தான் இருக்கிறாள் என்று ராதா சலூஜாவை சதிக் கும்பலின் முன் கொண்டு வந்து வீரப்பா நிறுத்துகிறாரே, அங்கிருந்து தொடரும் சஸ்பென்ஸ், கடைசியில் அருமையாக அவிழ்க்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கு டயலாக் பேசி தேங்காய் சீனிவாசன் குலுங்க வைத்திருக்கிறார்.

மெர்க்காராவின் பசுமையும், பிச்சாவரம் உப்பங்கழியின் பயங்கரமும் படமாக்கப்பட்டுள்ள நேர்த்தி நெஞ்சை நிறைக்கிறது. ஒளிப்பதிவோடு இசையும், கலரும் போட்டியிட்டிருக்கின்றன.

இதயக்கனி இனிக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: விகடன் விமர்சனங்கள், திரைப்படங்கள்

நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்


நாடோடி மன்னன்

நண்பர் ஜெகதீஸ்வரனின் தளத்தில்தான் நான் எம்ஜிஆர் தான் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றி ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். ஜெகதீஸ்வரன் இந்த புத்தகத்திலிருந்து பல excerpt-களை பதித்திருக்கிறார்.

படத்தை உருவாக்க பாடுபட்ட சக நடிகர்கள் – நம்பியார், வீரப்பா, சரோஜா தேவி, பானுமதி, சந்திரபாபு, ஏன் எக்ஸ்ட்ராவாக வரும் துணை நடிகர்களைப் பற்றிக் கூட எழுதி இருக்கிறார் – இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு, வசனம் எழுதிய கண்ணதாசன், எடிட்டர் ஜம்பு, பின்னணியில் இருந்த இயக்குனர் கே. சுப்பிரமணியம், ஆர்.எம்.வீ. என்று அத்தனை பேரின் பங்கையும் பற்றி எழுதி இருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருக்கிறது!

இந்த தளத்திலிருந்து விகடன் விமர்சனம் மற்றும் உப்பிலி ஸ்ரீனிவாஸ் அளித்த விவரங்களையும் கூட போட்டிருக்கிறார், அவருக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கங்கள்:
நாடோடி மன்னன் புத்தகம் – Excerpts

நாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம், விகடன் விமர்சனம்

வஞ்சிக்கோட்டை வாலிபன்


Vanjikkottai Valibanமுப்பது வருஷத்துக்கு முன்னால் இன்றைக்கு டிவி எப்படியோ அப்படி ரேடியோ இருந்தது. விவித்பாரதி கேட்டு வளர்ந்த ஜெனரேஷன் அது. கடைத்தெருவில் நடந்து போனால் நாலு கடையிலாவது ரேடியோ பாட்டு கேட்கும். அப்படி காற்றினிலே வரும் கீதங்களில் இரண்டு கீதம் எப்போதும் என்னைப் பிடித்து நிறுத்திவிடும். என்ன அவசர வேலையாக இருந்தாலும் அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டுதான் அடுத்த அடி வைப்பேன். அதில் ஒன்று வஞ்சிக் கோட்டை வாலிபனின் போட்டி நடனப் பாட்டு.

என்ன அற்புதமான பாட்டு? காதல் என்பது இதுதானா என்று மெதுவாக ஆரம்பிக்கும். அப்புறம் கண்ணும் கண்ணும் கலந்து என்று கொஞ்சம் டெம்போ ஏறும். வீரப்பா சரியான போட்டியைக் கண்டு சபாஷ் போடுவார். வைஜயந்திமாலா களத்தில் ஜிலுஜிலுவென குதிப்பார். பத்மினி ஆறு பெருகி வரின் ஆணை கட்டலாகும் என்று சொல்லிப் பார்ப்பார். வை. மாலா இன்னொருத்தி நிகராகுமோ என்று அலட்டுவார். ஆடு மயில் முன்னே ஆணவத்தில் வந்தவரும் பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடுபவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடிப் பாடுவார்கள். சி. ராமச்சந்திரா சும்மா புகுந்து விளையாடிவிட்டார். வை. மாலா பாடும்போது ஒரு துள்ளல்; பத்மினி பாட்டில் சரணத்துக்கு சரணத்துக்கு ஏறிக் கொண்டே போகும் டெம்போ. ஆஹா!

இந்த பாட்டை கேட்டதிலிருந்தே படம் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் என் துரதிருஷ்டம், சின்ன வயதில் அக்கம்பக்கம் எங்குமே இந்தப் படம் திரையிடப்படவில்லை. சன் டிவியில் சில சமயம் ராஜா மகள் பாட்டு போடுவார்கள். வீடியோ லேசில் கிடைப்பதில்லை. கடைசியில் முழுவதும் பார்த்தது சன் டிவி தயவில்தான்.

சந்திரலேகா, அபூர்வ சகோதரர்களை விட ஒரு மாற்று குறைவுதான், ஆனால் நல்ல பொழுதுபோக்குப் படம். கப்பலில் ஜெமினி புரியும் சாகசம், கடைசியில் கோட்டையில் போடும் சண்டை எல்லாமே நன்றாக இருக்கும். வாசன் ஹிந்தியிலிருந்து சி. ராமச்சந்திராவை ஏன் இறக்குமதி செய்தாரோ தெரியாது, ஆனால் அவர் வூடு கட்டி அடித்திருக்கிறார்.

கதை சிம்பிள். ஜெமினி விசுவாசமான மந்திரி? மகன். ராஜ குடும்பத்தை சதி செய்து பி.எஸ். வீரப்பா துரத்திவிட்டு தான் ராஜாவாகிவிடுகிறார். ஆனால் மந்திரி இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார். ஜெமினியும் ராஜகுமாரி பத்மினியும் வழக்கம் போல காதலிக்கிறார்கள். நடுவில் வை. மாலாவின் தீவில் ஜெமினி மாட்டிக் கொள்கிறார். மாலா ஜெமினியைப் பார்த்து உருக, மாலா உதவியால் ஜெமினி மீண்டும் வஞ்சிக்கோட்டைக்கு வந்து போராட, ஆனால் மாலாவுக்கு பத்மினி விஷயம் தெரிந்துவிடுகிறது. போட்டி நடனம். மாலா ஜெமினியைக் காட்டிக் கொடுத்துவிடுகிறார். பிறகு தப்பிக்கவும் வைக்கிறார். அப்புறம் வழக்கம் போல சண்டை, மாலா முழ நீளம் வசனம் பேசி விட்டு இறக்கிறார்.

ராஜா மகள் இன்னொரு நீளமான நல்ல பாட்டு. பாப்புலரும் கூட.

நண்பர் ராஜு சிலாகிக்கும் ஒரு நல்ல பாட்டு வெண்ணிலவே தண்மதியே. வீடியோ

ஜாலியான பொழுதுபோக்குப் படம். பாட்டுக்காகவே பார்க்கலாம். பத்துக்கு 7 மார்க். B- grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கம்: விகடன் விமர்சனம்

வஞ்சிக் கோட்டை வாலிபன்


படம் வந்தபோது (மே 1958) விகடனில் வந்த விமர்சனம். கூடிய விரைவில் என் விமர்சனமும் வரும். நன்றி, விகடன்!

முனுசாமி – மாணிக்கம்

முனுசாமி: என்ன தம்பி, ரொம்ப வேகமாப் போய்க்கிட்டு இருக்கியே, எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறே?

மாணிக்கம்: கோட்டை யைப் பிடிக்கத்தான் புறப்பட்டேன்; நீ குறுக்கே வந்துட்டே. வஞ்சிக்கோட்டை வாலிபனிலே இடம் பிடிக்கப் போறேன்.

முனு: அதென்ன இந்நேரம் பொறுத்து? இப்ப இன்டர்வெல் முடிஞ்சிருக்குமே!

மாணி: படத்தை நாலுவாட்டி பார்த்துட்டேன் அண்ணே! இன்டர்வெல்லுக்கப்புறம் ஒரு டான்ஸ் போட்டி வருது. அதைப் பார்க்கத்தான் தினம் போய்க்கிட்டு இருக்கேன்.

முனு: அதென்னப்பா அவ்வளவு ஒசத்தியான போட்டி?

மாணி: வைஜயந்திமாலாவும் பத்மினியும் டான்ஸிலே போட்டி போட்டுக்கிட்டு ஆடியிருக்காங்க!

முனு: சரி, போட்டியிலே யாரு ஜெயிக்கறாங்க?

மாணி: படம் பிடிச்சவங்கதான்! இது உண்மையிலே கலைப் போட்டி இல்லே, அண்ணே! காதல் போட்டி. கடைசியில் காதல்தான் ஜெயிக்குது. ஒருத்தி தன் உயிரைக் கொடுத்து காதலனைக் காப்பாத்தறா; யாருகிட்டே போட்டிக்குப் போனாளோ, அவ கையையே பிடிச்சுக் காதலனிடம் ஒப்படைக்கிறா.

முனு: என்ன தம்பி இது, அதுக்குள்ளே முடிவுக்குப் போயிட்டியே, ஆரம்பத்தைச் சொல்லு!

மாணி: அது ஒரு பெரிய புயல் அண்ணே..!

முனு: காதல் புயலா? பொறாமைப் புயலா?

மாணி: இரண்டும் இல்லே! ஒரு கப்பல் புயலிலே மாட்டிக்குது. ஒரு வாலிபன் துணிச்சலா கம்பத்திலே ஏறி பாய்மரத்தை வெட்டிக் கப்பலைக் காப்பாத்திடறான். அந்தக் காட்சியே ரொம்ப ஜோர் அண்ணே! சும்மா இங்கிலீஷ் படம் பார்க்கறாப்போல இருக்குது.

முனு: ஜெமினி கணேசன்தானே அந்த வாலிபன்! அவரு எப்படி?

மாணி: பிரமாதப்படுத்தியிருக்காரு. கப்பல் பாய்மரத்துலே ஏறி, பாயை வெட்டறாரு பாரு… அடேங்கப்பா படா திரில்லு! கடைசி சீன்லே கோட்டை உச்சியிலே வீரப்பாவோடு கோடாலிச் சண்டை போட்டுக் குப்புறத் தள்ளறாரு. ஸ்டன்ட் செய்யறபோது எம்.ஜி.ஆர் கணக்கா இருக்குது; உணர்ச்சியா நடிக்கிறபோது சிவாஜி மாதிரி தோணுது. ரத்ன வியாபாரியா வரபோது சக்கைப் போடு போடறாரு; அடிமையா வந்து வைஜயந்தி எதிரில் நின்னு டாண்டாண்ணு பதில் சொல்றபோது, ‘சபாஷ்… சபாஷ்’னு சொல்லத் தோணுது.

முனு: வைஜயந்தி என்னமா வருது?

மாணி: தளதளன்னு வருது; ஜிலுஜிலுன்னு பாடுது. இந்தப் படத்திலே அதைப் பார்க்கிறபோது, மங்கம்மா சபதத்திலே அவங்க அம்மா வசுந்தரா ஆடினதும் பாடினதும் ஞாபகம் வருது. ‘ராஜா மகள்… ரோஜா மலர்’னு ஒரு டான்ஸ் ஆடுது பாரு..!

முனு: அது நாட்டியம் ஆடறது ஒரு அதிசயமா தம்பி!

மாணி: இல்லேண்ணே, நடிப்பும் ரொம்ப அபாரம். துண்டு துண்டா ஒரு வார்த்தைதான் பேசுது. எத்தனை அர்த்தம்… எத்தனை பாவம்..! எத்தனை உணர்ச்சியை அதிலே கொட்டுது தெரியுமா? கண்ணைச் சிமிட்டினா ஒரு குறும்புத்தனம்; உதட்டைக் கடிச்சா ஒரு உணர்ச்சி; நடந்தா ஒரு அர்த்தம்; உட்கார்ந்தா ஒரு பாவம்; நின்னா ஓவியம்; திரும்பினால் காவியம்..!

முனு: போதும்டா தம்பி, பத்மினி எப்படி?

மாணி: இது என்ன கேள்வி அண்ணே? பௌர்ணமியிலே நிலவுண்டான்னு கேக்கிற மாதிரி இருக்குது. பத்மினி ஆக்டைப் பத்திக் கேட்கறியே? அதுக்குக் குடுத்திருக்கிற வேஷமே நெஞ்சை உருக்குது.

முனு: கதையைச் சொல்லேன், கேட்போம்.

மாணி: நாட்டுக்காக தந்தை தன் வீட்டையே தியாகம் செய்யறார். கடமைக்காக மகன் காதலையும் உதறித் தள்ளிட்டு, தன் தகப்பனுக்கும் தாய்க்கும் தங்கைக்கும் தாய் நாட்டுக்கும் துரோகம் செய்தவனைப் பழி வாங்குகிறான். இதை வச்சுக்கிட்டு, கோட்டையும் கொத்தளமும் கப்பல் சண்டையும் பிரமாண்டமா எடுத்திருக்காங்க. படத்தைப் பார்த்தாலே பிரமிப்புத் தட்டுது! அழகு சொட்டுது!

இந்தப் படத்திலே இன்னொரு விசேஷம் அண்ணே! நம்ப வீரப்பா சிரிக்காமலே சிறப்பா நடிச்சிருக்காரு!

முனு: மொத்தத்திலே படம் எப்படி?

மாணி: நல்ல விறுவிறுப்பண்ணே! பார்க்கப் பார்க்கத் திகட்டல்லே! சந்திரலேகா மாதிரி ஜமாய்க்குது!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

நாடோடி மன்னன்


நாடோடி மன்னன்

நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்! அடுத்த இன்ஸ்டால்மென்டில் என் விமர்சனம்.

முனுசாமி – மாணிக்கம்

மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!

முனு: எதுக்கடா?

மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.

முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?

மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!

முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?

மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.

முனு: ரொம்பப் பெரிய படமாமே?

மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!

முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?

மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!

முனு: கத்திச் சண்டை உண்டா?

மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!

முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?

மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.

முனு: காமிக் இருக்குதா?

மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!

முனு: என்ன தம்பி சொல்றே?

மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கங்கள்:
நாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம்

நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்

தமிழ் தயாரிப்பாளர்கள்


போன பதிவு ஏவிஎம் செட்டியார் அளித்த ஒரு பழைய பேட்டி. செட்டியார் பற்றி நானும் ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன், எனக்கு தயாரிப்பாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. அதே நேரத்தில் நண்பர் சூர்யா தன் தளத்தில் சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி ஒரு அருமையான பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். சரி, தயாரிப்பாளர்களை பற்றி பொதுவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் தயாரிப்பாளர்களில் எஸ்.எஸ். வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், செட்டியார், தேவர் நான்கு பேரும் பல வருஷம் கொடி கட்டி பறந்தவர்கள்.

ஏவிஎம் செட்டியார்

ஏவிஎம் இத்தனை வருஷம் கழித்தும் நன்றாக இருப்பது பெரிய விஷயம். செட்டியார் நடுவில் ஒரு பத்து வருஷம் படமே வேண்டாம் என்று இருந்ததாகவும், அவர் இறந்த பிறகுதான் சரவணன் மீண்டும் முரட்டுக் காளை படத்துடன் அடுத்த இன்னிங்சை ஆரம்பித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கென்னவோ பெரிய செட்டியார் இருந்தபோதுதான் நல்ல படங்கள் வந்தன என்று தோன்றுகிறது. நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறுபதுகளின் முற்பாதி வரைக்கும் பல நல்ல படங்கள் வந்தன. சபாபதி, நாம் இருவர், ஓரிரவு, வாழ்க்கை, பராசக்தி, பெண், அந்த நாள், நானும் ஒரு பெண், அன்னை, மேஜர் சந்திரகாந்த் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சரவணன் வந்த பிறகு மசாலா படங்கள்தான் வருகின்றன.

எஸ்.எஸ். வாசன்

எஸ்.எஸ். வாசன் ஒரு பத்து வருஷம் கொடி கட்டி பறந்தார். மங்கம்மா சபதம், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் எல்லாம் பெரும் வெற்றி. நாற்பதுகளிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அவருக்கு அப்புறம் படம் எடுப்பதில் இண்டரஸ்ட் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரும்புத் திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு மாதிரி படங்கள் வந்தாலும், ஜெமினி ஃபில்ம்ஸ் அறுபதுகளிலேயே அமுங்கிவிட்டது.

டி.ஆர். சுந்தரம்

டி.ஆர். சுந்தரம் பெரிய ஆள். பாரதிதாசன், எம்ஜிஆர், கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் எல்லாரும் அவரிடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். மந்திரி குமாரி, திரும்பிப் பார், அலி பாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அறுபதுகளில் வல்லவன் சீரிஸ் – வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன் மாதிரி – படங்கள் மட்டுமே எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

தேவர்

இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தாலும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வட்டத்தில் name recognition இருந்த ஒரே தயாரிப்பாளர் தேவர்தான். தேவரின் மிருகப் படங்கள் எங்கள் வட்டத்தில் பெரிய ஹிட். புலியையும், சிங்கத்தையும், யானையையும் நாங்கள் வேட்டைக்காரன் மாதிரி ஏதாவது படத்தில் பார்த்தால்தான் உண்டு. (உயிர் காலேஜ் எல்லாம் போனதில்லை.)

தேவர் படங்கள் எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய காவியங்கள் இல்லை. அவருடைய ஆடியன்சுக்கு மன அளவில் ஒரு எட்டு வயதுதான் இருக்கும். எம்ஜிஆர், முருகன், மிருகங்கள் இவற்றை வைத்தே காலத்தை ஓட்டியவர். ஆனால் ஒரு நாளும் படம் பார்ப்பார்களை ஏமாற்றியதில்லை. அவர் கடை சமாசாரம் எப்படி இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. அது பிடிக்காதவர்கள் போக வேண்டாம்!

எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். எதுவும் எம்ஜிஆரின் சிறந்த படங்கள் லிஸ்டில் கூட வராது. வேட்டைக்காரன், நல்ல நேரம், தேர் திருவிழா, முகராசி இந்த மாதிரி படங்கள் நினைவு வருகின்றன. வேட்டைக்காரன், நல்ல நேரம் இரண்டும் பிரமாதமாக ஓடியன. இந்த நாலு படமும் தண்டம், இப்போது வேறு எதுவும் நினைவு வரவில்லை. எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். இவர் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

அவருக்கென்று ஒரு ஆஸ்தான டீம் இருந்தது. கே.வி. மகாதேவன், எம்.ஏ. திருமுகம், தூயவன், ஆரூர் தாஸ், நாகேஷ், மேஜர், அசோகன் இல்லாமல் அவர் சாதாரணமாக படம் எடுப்பதில்லை.

ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல், ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

அவருடைய படங்களில் தெய்வம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது. படம் நன்றாக இருக்கும் என்று இல்லை, தண்டம்தான். ஆனால் கோவில்களின் அந்த கால நிலையை ஒரு டாக்குமெண்டரி போல நன்றாக எடுத்திருப்பார்.

இவர்களைத் தவிரவும் பல தயாரிப்பாளர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். எம்ஜிஆர் புகழிலே கொஞ்சம் மங்கி தெரியும் பந்துலு, ஜூபிடர் சோமு, பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் பல வெற்றி படங்கள் எடுத்தாலும் தெலுங்கு கம்பெனியான விஜயா பிக்சர்ஸ் நாகி ரெட்டி, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், பி.எஸ். வீரப்பா, முரசொலி மாறன், ஸ்ரீதர், ஜி.என். வேலுமணி, ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர் படங்களை தயாரித்த கலாகேந்த்ரா, பாலாஜி, பிற்காலத்தில் ஜீவி, ஆர்.பி. சௌத்ரி, கமல், கோவைத் தம்பி, பிரகாஷ் ராஜ், என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர்களில் பலருக்கும் வேறு முக்கியமான முகங்கள் இருந்தன – எம்ஜிஆரை தயாரிப்பாளர் என்றா நினைவு வைத்துக் கொள்கிறோம்? அப்படி இல்லாதவர்கள் பலரும் நிலைத்து நிற்கவில்லை.

இன்றைக்கு இவர்களுக்கு சமமாக சொல்லக் கூடிய கோலிவுட் பாதுஷாக்கள் இருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

தேவரை பற்றி சாரதா இன்னும் விவரங்கள் தருகிறார்.

மேலும் சில படங்கள்: தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தொழிலாளி, கன்னித் தாய், தனிப் பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, காதல் வாகனம் ப்ளஸ் நீங்கள் சொன்ன படங்கள் நாலு. இவற்றில் சில மட்டும் 100 நாட்கள் என்ற எல்லைக்கோட்டைத் தொட்டன. பெரும்பாலானவை 50-ஐக்கூட கடக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழில் கண்ட ஒரே வெள்ளிவிழாப்படம் ஆட்டுக்கார அலமேலு மட்டும்தான். சில படங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் ஒரே மாதிரி இருக்கும். திருக்குறள் மாதிரி இரண்டு வரிக் கதைகளைத்தான் படமாக எடுப்பார். தேவர் படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கட்டின் பின்பக்கம் எழுதிவிடலாம் என்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு.

ஜெய்சங்கரை வைத்து கெட்டிக்காரன், நேர்வழி போன்ற குப்பைப் படங்களையும், அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற நல்ல படங்களையும் எடுத்தவர். ரவிச்சந்திரனை வைத்து மகராசி என்ற படத்தையும் எடுத்தார். சிவகுமாரை கதாநாயனாக வைத்து ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், (பழைய) ஸ்ரீகாந்தை நாயகனாகவும் பிரமீளாவை நாயகியாகவும் போட்டு கோமாதா என் குல மாதா ஆகிய வெற்றிப்படங்களை எடுத்தார். இடையிடையே ஏ.வி.எம்.ராஜனை வைத்து துணைவன், தெய்வம், திருவருள் என் பக்திப்படங்களின் பக்கமும் தலைநீட்டினார்.

ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தாய் வீடு மற்றும் கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை (எத்தனை தாய்கள்), ராம் லக்ஷ்மண் போன்றவை அவர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுகளால் தயாரிக்கப்பட்டவை. கடைசியாக ஆனந்த பாபுவை வைத்து தர்மம் என்ற படம் எடுக்கப்போக, படம் அட்டர் ஃப்ளாப். தேறவேயில்லை. தேவர் பிலிம்ஸ் அத்துடன் நொடித்துப்போனது. இதனிடையே வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை தலைதூக்க தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூடுவிழா கொண்டாடியது.

சின்னப்பா தேவர் யாரையும் எளிதில் நம்பி விடுவார். யாரும் அவரை சுலபமாக ஏமாற்றிவிடலாம். கே.வி.மகாதேவன் கூட வெறும் நாலு மெட்டுக்களை வைத்துக்கொண்டு அவருக்கு நாற்பது பாட்டுக்கள் போட்டுக்கொடுத்து விடுவார். தேவரின் நல்ல மனதுக்கு அவை பாப்புலராகிவிடும். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடியை கண்ணதாசன் தேவருக்கு அறிமுகப்படுத்த, தேவர் அவர்களுக்கு படங்களில் வாய்ப்புக்கொடுத்ததால், படங்களில் டைட்டில்களில் ‘கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்’ என்று போட்டு தங்கள் நன்றியை காணிக்கையாக்கினர்.

எனக்கு தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரிய ஹிட்கள் என்று நினைவு. என் impression டெண்டு கோட்டையில் இருந்த ரெஸ்பான்சை பார்த்து ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் சாரதா என்னை விட விஷயம் தெரிந்தவர். ஞாபகம் வராத எம்ஜியார் படங்களின் பேரை எடுத்து தந்த சாரதாவுக்கு நன்றி! எனக்கு அசோகன் அண்ணனாக வரும் படம் (தாய்க்கு தலை மகன்), அசோகன் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் படம் (தர்மம் தலை காக்கும்) என்றுதான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. எம்ஜிஆர் ஒரு படத்தில் பறந்து கூட போவார் என்று ஞாபகம். என்ன படமோ தெரியவில்லை.

சாரதா சொல்வது போல பாட்டுகள் – எம்ஜிஆர் படத்தில் கூட – பிரமாதமாக இருக்காது. சூர்யா சொல்வது போல மூன்று மாதத்தில் படம் எடுப்பதால் இருக்கலாம்.

ஞாபகம் வரும் இன்னும் சில படங்கள் – நீலமலை திருடன் (ரஞ்சன்), சொர்க்கம் நரகம், இளஞ்ஜோடிகள், தர்மத்தின் தலைவன். கோமாதா என் குல மாதா ஹிந்தியிலும் காய் அவுர் கௌரி என்று வந்தது.

தொகுக்க்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆரூர் தாஸ் தேவரை நினைவு கூர்கிறார்
பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம் பற்றி பதிவர் சூர்யா
தேவர் புத்தகம் பற்றி முகில், இதே புத்தகம் பற்றி பா. ராகவன்
தேவர் பற்றி முரளி கண்ணன்

பல்லாண்டு வாழ்க – என் விமர்சனம்


பல்லாண்டு வாழ்க காலேஜில் ஆடிட்டோரியத்தில் நண்பர்களோடு பார்த்த படங்களில் ஒன்று. என்ஜாய் செய்து பார்த்த படங்களில் ஒன்று. லதா வந்தால் போதும், எல்லாருக்கும் குஷி கிளம்பிவிடும். பாட்டுகளை திரும்பி திரும்பி பார்த்தோம் – பாட்டை கேட்டு ஒரு இருபது வருஷம் ஆகிவிட்டாலும் மாசி மாசக் கடசியிலே மச்சான் வந்தாரு இன்னும் நினைவிருக்கிறது. அதற்கு வயலினில் வரும் டொய்ங் டொய்ங்கும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

திருப்பி திருப்பி எம்ஜிஆர் கண்களை காட்டுவார்கள். அதில் எதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அதை கைதிகளால் மீற முடியாமல் இருப்பதாகவும் காட்டுவார்கள். தப்பித்துப் போகும் கைதிகள் கூட அண்ணா சிலையின் கண்களையோ, என்னவோ பார்த்து திரும்பிவிடுவார்கள் என்று ஞாபகம். ஹிந்தியில் சாந்தாராம் பற்றி அப்படி காட்டுவது இன்னும் பொருத்தமாக இருந்தது.

நம்பியார், மனோகர், வீரப்பா, வி.கே. ராமசாமி, தேங்காய், குண்டுமணி ஆகிய ஆறு குற்றவாளிகளை திருத்த முயற்சிக்கும் ஜெயிலராக எம்ஜிஆர். அவரை காதலிக்கும் பெண்ணாக லதா. கனவு காட்சிகள், பாட்டுகள். இன்னும் விவரங்களுக்கு விகடன் விமர்சனத்தை பார்த்து கொள்ளுங்கள்.

படம் நன்றாகத்தான் இருந்தது. தோ ஆங்கெனை விட சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் ரொம்ப அதிகம் இல்லை.

பாட்டுகள் சூப்பர்! மாசி மாசக் கடசியிலே, ஒன்றே குலமென்று பாடுவோம், சொர்கத்தின் திறப்பு விழா, போய் வா நதி அலையே, செல்லப் பாப்பா, புதியதோர் உலகம் செய்வோம் எல்லாமே அருமையான பாட்டுகள். செல்லப் பாப்பா பாட்டில் தகதகதைதை தகதகதைதை என்று வரும் கோரஸ் மிக அபாரமாக இருக்கும்.மாசி மாசக் கடசியிலே பாட்டில் வயலின் கொஞ்சும்.

பாட்டுகளை இங்கு கேட்கலாம்.

1975-இல் வந்த படம். மணியனின் சொந்த படம். இயக்கம் யாரென்று நினைவில்லை. இசை எம்எஸ்விதான் என்று நினைக்கிறேன், கே.வி. மகாதேவனோ என்று ஒரு சந்தேகம். ஹிந்தியில் தோ ஆங்கேன் பாரா ஹாத் என்று சாந்தாராம் எடுத்த படம். சாந்தாராம் எம்ஜிஆர்தான் ஹீரோ என்று தெரிந்ததும் உரிமையை கொடுக்க தயங்கினாராம் – மணியன் சொல்லி இருக்கிறார். பல்லாண்டு வாழ்க படம் சிறப்பு காட்சி அவருக்கு திரையிட்டு காட்டப்பட்டதும் தமிழ் உரிமையை மணியனுக்கு கொடுத்தது பெரிய தவறு என்று சொன்னாராம். தெலுங்கிலும் என்டிஆர், ஜெயசித்ரா நடித்து மணியன் தயாரித்தார். தெலுங்கில் தோல்வி. அதற்கு காரணம் ஜெயசித்ரா சரியாக நடிக்காததுதான் என்று மணியன் குறை சொன்னது நினைவிருக்கிறது.

பார்க்கலாம். எம்ஜிஆருக்கு வித்தியாசமான படம். 6.5 மார்க். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கம்: விகடன் விமர்சனம்

பல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்


பல்லாண்டு வாழ்க

பல்லாண்டு வாழ்க

படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (16-11-1975) நன்றி, விகடன்!

பன்னிரண்டு கைகள் – இரண்டு கண்கள்.

கருணையும் காந்த சக்தியும் கொண்ட இரண்டு கண்கள், கொலைக்கு அஞ்சாத பன்னிரண்டு கைகளைக் கருணைக் கரங்களாக மாற்றுகின்றன.

கொலைக் குற்றவாளிகளான ஆறு பயங்கரக் கைதிகளைச் சீர்திருத்த முன்வருகிறார் ஜெயிலர். போலீஸ் இலாகாவின் அனுமதியுடன் அவர்களைத் திறந்தவெளிக்கு அழைத்துச் செல்கிறார். கொலை வெறியும் குற்ற உணர்ச்சியும் அவ்வப்போது அவர்களிடம் குமுறி வெடிக்கின்றன. அதற்கெல்லாம் வடிகால் அமைத்துத் தந்து, தனது கருணையாலும் பார்வையாலும் பணிய வைக்கிறார் ஜெயிலர்.

கைதிகளைத் திருத்தும் முயற்சியில் ஜெயில் அதிகாரிக்கு ஏற்படும் சோதனைகளும், மனம் திருந்திப் புதிய மனிதர்களாக அவர்கள் உருவெடுக்கும் நிகழ்ச்சிகளும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கதையை வளர்த்துச் செல்கின்றன.

ஜெயில் அதிகாரி ஓர் இலட்சிய பாத்திரம். ஆரவாரமோ, பதற்றமோ இல்லாமல் கைதிகளை அன்பினால் வசப்படுத்தும் பாத்திரம். இந்த வித்தியாசமான பாத்திரத்தை ஏற்று எம்.ஜி.ஆர். நடிக்கவில்லை. முன்மாதிரியான ஓர் இலட்சிய அதிகாரியாகவே மாறியிருக்கிறார். கைதிகள் தன்னை எதிர்க்கும் சமயங்களில் அந்த எதிர்ப்புகளைப் பலப் பரீட்சையாக எடுத்துக் கொள்ளாமல், ஆத்திரம் தணியும் வரை மோதவிட்டு அமைதிப்படுத்தும் காட்சிகள் நெஞ்சைத் தொடுகின்றன. வெகு இயற்கையாக அமைந்துள்ள இந்தக் கட்டங்கள் மறக்க முடியாதவை.

கதாநாயகியும் கூட (லதா) சற்று மாறுபட்ட பாத்திரம்தான். இலட்சிய வேகத்தில் கடமையிலேயே கண்ணாக இருக்கும் ஜெயிலரை அடையத் துடிக்கிறாள் அந்தப் பெண். அவளுடைய ஆசை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி? கனவாகவும், நினைவாகவும் அந்தக் காட்சிகள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் ஆசை தீர ஆடிப் பாடுவதெல்லாம் கனவு, நினைவுக் காட்சிகளில்தான் என்றாலும், கண்ணைக் கவரத் தவறில்லை. இந்தக் கட்டங்களில் வெளிப்புறக் காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

ஆறு கைதிகளும் – மனோகர், குண்டுமணி, தேங்காய் சீனிவாசன், வீரப்பா, நம்பியார், வி.கே.ராமசாமி – சிறு சிறு ஃபிளாஷ் பேக் காட்சிகளின் மூலம் அறிமுகப் படுத்தப்படுவது சிறப்பான உத்தி. அதே போன்று, அவர்களின் பெயர்களை ஜெயிலர் கேட்கும் போது, பெயரைச் சொல்லாமல் உள்ளங்கை அடையாளத்தைக் காகிதத்தில் பதிய வைப்பதும் ரசிக்கத்தக்கது.

குரூரத்தின் மறு வடிவங்களான அந்தக் கைதிகளைக் கொண்டே நகைச்சுவைக் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தேங்காய் சீனிவாசனின் விளையாட்டுக்கள் முதல் மார்க் பெறுகின்றன.

குடிவெறியில் ஆறு கைதிகளும் லதாவை அணுகுவதும், ஜெயிலர் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதும் பரபரப்பான காட்சியாக இருந்தாலும், அந்தத் தவற்றை அவர்கள் உணர்ந்து வெட்கப்படும்போது ஒரு முத்திரையான காட்சிக்குரிய சிறப்பைப் பெற்று விடுகிறது. காய்கறி வியாபாரத்துக்குப் போன கைதிகள், ஜெயிலரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, தம்மைத் தாக்குகின்றவர்களை எதிர்த்து நிற்காமல் அடிபட்டுத் திரும்புவதும் அப்படியே! இது எம்.ஜி.ஆர் படமா என்ற கேள்வியை விட, இது அவருடைய லட்சியப் படம் என்று பதில் கூறும் அளவுக்குக் கருத்துச் சித்திரமாக அமைந்திருக்கிறது பல்லாண்டு வாழ்க!

அரசியல் பொடியோ, நெடியோ இல்லாமல் முழுக்க முழுக்க மனிதாபிமானம், லட்சியம் ஆகியவற்றின் வார்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் அடி நாதமாக சாந்தாராம் நிற்கிறார். அவருடைய தோ ஆங்கேன் பாரா ஹாத் இந்திப் பட மூலக் கதையின் வலுவும், சுவையும் சற்றும் குறையாமல் படமாக்குவதில் டைரக்டர் கே.சங்கரும், உதயம் புரொடக்ஷன்ஸ் கதை இலாகாவினரும் ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்கின்றனர். வசனங்களில் கருத்துச் செறிவும் அழுத்தமும் இருப்பது போலவே, இசையும் பாடல்களும் தரமாக அமைந்திருக்கின்றன.

எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பல்லாண்டு வாழ்க ஓர் இனிய சித்திரம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கம்: பல்லாண்டு வாழ்க – ஆர்வியின் விமர்சனம்

அலி பாபாவும் 40 திருடர்களும்


அலி பாபாவும் 40 திருடர்களும்

அலி பாபாவும் 40 திருடர்களும்

மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் சாகசக் கதைப் பிரியர் போலிருக்கிறது. அவர் ஆயிரத்தோர் இரவுகளிலிருந்து இந்த கதையை பிடித்திருக்கிறார். அருமையான த்ரில்லிங் கதை. கதை தெரியாதவர்கள் பார்த்தால் உண்மையிலேயே திருப்தி அடைவார்கள். மாஸ் ஹீரோவாகிக் கொண்டிருக்கும் எம்ஜிஆர், வீரப்பா, பானுமதி. ஒரு பிரமாதமான குகை. ஒன்பது முத்தான பாட்டுகள். பைசா வசூல்.
1956-இல் வந்த படம். எம்ஜிஆர், பானுமதி, பி.எஸ். வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி, சாரங்கபாணி, எம்.என். ராஜம், தங்கவேலு, ஓ.ஏ.கே. தேவர் நடித்தது. பின்னாளில் புதிய வார்ப்புகளில் தொடங்கி ஒரு ரவுண்ட் வந்த கே.கே. சவுந்தரும் ஒரு சிறு ரோலில் வருவார். இசை எஸ். தக்ஷிணாமூர்த்தி. பாடல்கள் மருதகாசி. இயக்கம் டி.ஆர். சுந்தரம்.

தெரிந்த கதைதான். பணக்கார அண்ணன் காசிம் (சக்ரபாணி) மனைவி பேச்சை கேட்டு தம்பி அலி பாபா (எம்ஜிஆர்), அம்மா, தங்கை எம்.என். ராஜத்தை விரட்டி விடுவார். அலி பாபா விறகு வெட்டி பிழைப்பார். அழகான பொண்ணுதான் என்று பாட்டு பாடி பிழைப்பு நடத்தும் மார்ஜியானாவையும் (பானுமதி) அவருக்கு டோலக் வாசிக்கும் சாரங்கபானியையும் முரடர்களிடமிருந்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருவார். மீண்டும் ஒரு நாள் விறகு வெட்ட காட்டுக்கு போகும்போது 40 திருடர்களையும், அவர்களது ரகசிய குகையையும் பார்ப்பார். அவர்கள் போனதும் குகைக்குள் நுழைந்து கொஞ்சம் செல்வத்தை அள்ளிக் கொண்டு வருவார். தங்கக் காசுகளை என்ன முடியாது, அளக்கவோ வீட்டில் ஒன்றுமில்லை. அண்ணன் வீட்டிலிருந்து ஒரு மரக்காலை இரவலாக வாங்கி வருவார். ஏழைகளான இவர்கள் எதை அளக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள அண்ணி மரக்காலின் அடியில் கொஞ்சம் புளியை ஒட்டி அனுப்புவார். புளியோடு ஒரு தங்கக் காசு போகும். அதைப் பார்த்து தங்கக் காசுகளை மரக்காலில் அளக்கும் அளவுக்கு இவர்களுக்கு எப்படி பணம் வந்தது என்று தெரிந்து கொள்ள அலி பாபாவுக்கு காசிம் ஒரு விருந்து கொடுப்பார். அலி பாபாவை மிகவும் வற்புறுத்தி ரகசியத்தை தெரிந்து கொள்ளும் காசிம் குகைக்கு போவார். ஆனால் வெளியே வரும் கட்டளை மறந்து விடும். திருடர்கள் அவரைக் கொன்று அவர் பிணத்தை துண்டுகளாக வெட்டி குகையில் ஒரு எச்சரிக்கையாக மாட்டி வைப்பார்கள். காசிம் திரும்பி வராததால் அலி பாபா குகைக்கு செல்வார். பிணத்தை கொண்டு வருவார். யாருக்கும் விஷயம் தெரியாமல் இருக்க தையல்கார தங்கவேலுவை அழைத்து பிணத்தை தைக்க சொல்வார் மார்ஜியானா. பிணம் காணமல் போனதால் ரகசியம் தெரிந்த மனிதரை திருடர்கள் தேடுவார்கள். அவர்கள் தந்திரத்தை மார்ஜியானா முறியடிப்பார். கடைசியில் வீரப்பா தங்கவேலு மூலமாக வீட்டை தெரிந்து கொள்வார். அங்கே மாறு வேஷத்தில் வருவார். ஆனால் மார்ஜியானா அவரை அடையாளம் கண்டு கொள்வார். எண்ணை பீப்பாய்களில் இருக்கும் திருடர்களை கொன்று ஆற்றில் வீசி விடுவார். வீரப்பா மார்ஜியானவை கடத்தி செல்ல, அலி பாபா அவரை பின் தொடர்ந்து குகைக்கு செல்ல, அங்கே ஒரு த்ரில்லிங் சண்டைக்கு பின் அலி பாபா வீரப்பாவை கொன்று, மார்ஜியானாவை மணந்து, சுபம்!

ஒரிஜினல் கதையிலிருந்து சில மாறுதல்கள் இருக்கின்றன. மார்ஜியானா ஒரிஜினலாக அலி பாபாவின் அடிமைப் பெண். அவளது திறமையை மெச்சி அலி பாபா அவரை தன் அண்ணன் மகனுக்கு மனம் செய்து வைப்பார்.

இந்த படத்தில் நடிப்பு கிடிப்பு என்பதெலாம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் திரைக் கதை நன்றாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அந்த குகை அற்புதம்! அதை திறக்க ஒரு பெரிய செக்கு மாதிரி ஒன்று சுழல்வதும், உள்ளே கொதிக்கும் நீருக்கு மேல் உள்ள குறுகலான பாலமும், அற்புதமான செட். வீரப்பா மிக பொருத்தமான casting. பானுமதி, எம்ஜிஆர் கூடத்தான். அதற்காகவே பாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் காண்பியுங்கள்.

பாட்டுகள் இந்த படத்தின் ஒரு பெரிய பலம். பாட்டுகள் கொஞ்சம் quaint ஆக இருக்கும். மருதகாசியின் வரிகள் மிக நன்றாக இருக்கும். என்ன அதிர்ஷ்டமோ எல்லாமே யூட்யூபில் இருக்கின்றன. நிறைய குத்துப் பாடல்கள்தான். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, எஸ்.சி. கிருஷ்ணன், ஜமுனா ராணி பாடிய சின்னஞ்சிறு பூவே எந்தன் சீனா கல்கண்டே பாட்டுதான். கீழே காணலாம்.

அழகான பொண்ணுதான் பாட்டு மிக பிரபலமானது.

மாசிலா உண்மைக் காதலே குத்துப் பாட்டு இல்லை. 🙂 படத்தில் மிக புகழ் பெற்ற பாட்டு இதுதான் என்று நினைக்கிறேன். ஏ.எம். ராஜா அபூர்வமாக எம்ஜிஆருக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

சலாம் பாபு பாட்டுக்கு ஆடுவது வஹீதா ரெஹ்மான்! அந்த காலத்து ஐட்டம் நம்பர் போல. வஹீதா ரெஹ்மான் இன்னும் பிரபலம் ஆகாத காலம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் திருடா திருடி படத்தில் இந்த பாட்டையே வண்டார் குழலி வண்டார் குழலி என்று காப்பி அடித்திருந்தார்கள்.

மற்ற பாட்டுகள் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனால் எனக்கு பிடிக்கும்.

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தங்கவேலு மேல் படமாக்கப்பட்டது. சமீபத்தில் ஜெயம்கொண்டான் படத்தில் இதை ரீமிக்ஸ் செய்திருந்தார்கள்.

நம்ம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு ஒரு நல்ல குத்துப் பாட்டு.

உன்னை விட மாட்டேன், என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டைக்குத்தான், அமீர் பூபதி ஆகியவை சுமாரான பாட்டுகள். இவற்றுக்கும் யூட்யூபில் வீடியோக்கள் இருக்கின்றன. இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

நல்ல சாகசக் கதை, அருமையான செட்கள், பாட்டுகள், டான்ஸ்கள் ஆகியவற்றுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். மொத்தத்தில் பத்துக்கு ஏழு மார்க். B grade.

ஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்


நான் 1950-54 கால கட்டத்தில் ஒவ்வொரு வருஷமும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்தவை மந்திரி குமாரி, ஓரிரவு, பராசக்தி, திரும்பிப் பார், அந்த நாள் மற்றும் மனோகரா. இவை எல்லாமே கலைஞர்/அண்ணா எழுதியதாகவும், திராவிட இயக்க தாக்கம் உள்ளதாகவும் இருக்கின்றன.

தமிழ் படங்கள் வர ஆரம்பித்து முதல் இருபது வருஷம் திராவிட இயக்கத்தின் பாதிப்பு எதுவுமே இல்லை. பாரதிதாசன் அன்றைய தமிழ் திரைப்பட நிலை எழுதிய ஒரு கவிதை கீழே.

என் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை!
ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!

வட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு!
மாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்!
வட மொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில பிரசங்கம்!
வாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்!
அமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்
அத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்!

கடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,
கண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி!
பரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்!
பதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு
சில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!
மகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்
இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

ஐம்பதுகளின் முற்பாதியில் தமிழ் சினிமா பாகவதர்/பி.யு.சின்னப்பா ஆகியோரின் தாக்கத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்திருந்தது. படம் என்றால் பாட்டு என்ற நிலை மாறி விட்டிருந்தது. ஆனால் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தமிழ் சினிமாவை கையில் வைத்திருந்த முதலாளிகளுக்கு தெளிவாகவில்லை. கலை கலைக்காக என்று படம் எடுத்தவர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து இந்த கால கட்டத்தில் அப்படி எடுக்கப் பட்ட படங்கள் ஏழை படும் பாடு (Les Miserables நாவலை படமாக்கி இருந்தனர்), என் வீடு (சாண்டில்யன் + நாகையா), மனிதன் (டி.கே.எஸ். சகோதரர்கள்) மற்றும் அந்த நாள், அவ்வளவுதான். இவற்றில் நான் பார்த்தது அந்த நாள் ஒன்றுதான். அது உலகத் தரம் வாய்ந்த படம்.

பிறகு என்ன மாதிரி படங்கள் எடுக்கப் பட்டன? சாகசப் படங்கள், குறிப்பாக ராஜா ராணி கதைகள் – மர்ம யோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக் கள்ளன் மாதிரி படங்கள் எடுக்கப்பட்டன, பொதுவாக நன்றாக ஓடின. திராவிட இயக்க தாக்கம் உள்ள படங்கள் – மந்திரி குமாரி, பொன்முடி, பராசக்தி, திரும்பிப் பார், பணம், போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. சில சமயம் ஓடின. பொதுவாக கலைஞர் வசனம் எழுதிய படங்கள் நன்றாக ஓடின. அதை விட்டால் புத்தகமாகவோ, நாடகமாகவோ வெற்றி பெற்றவை – தேவதாஸ், பராசக்தி, மலைக் கள்ளன், பொன்முடி, வேலைக்காரி, தூக்குத் தூக்கி, ரத்தக் கண்ணீர் போன்றவை படமாக்கப்பட்டன. பொதுவாக வெற்றி பெற்றன.

தயாரிப்பாளர்கள் ஓரளவு புதுமையான கதைகளை, சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வசனங்களை தேடி இருக்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புராணப் படங்களின் காலம் முடிந்துவிட்டது. பாட்டை மட்டும் வைத்து ஓட்டி விட முடியாது. சாகசக் கதைகள், மெலோட்ராமா கதைகள் ஆகியவற்றைத்தான் அவர்கள் தேடி இருக்கிறார்கள். குறிப்பாக, வெற்றி பெற்ற நாடகங்களையும், திராவிட இயக்கத்தினரையும் ஓரளவு தேடி இருக்கிறார்கள். ஏ.வி.எம். செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லாரும் இப்படித்தான். அதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் திராவிட இயக்க எழுத்தாளர்களை மாத சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருந்தாராம். ஜெமினி மட்டுமே விதிவிலக்கு போலிருக்கிறது.

இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் சினிமாவில் நுழைந்தனர். கலைஞர் சினிமாத் துறையில் பெரும் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்துடன் கொள்கை ரீதியாக பட்டும் படாமலும் இருந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா ஆகியோரும் வளர்ந்து கொண்டோ தேய்ந்து கொண்டோ இருந்தார்கள். அண்ணா, பாரதிதாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றவர்களும் கதை, வசனம், பாடல்கள் என்று பல விதங்களில் திரைப்படங்களுக்கு பணி ஆற்றினார்கள். கதை, வசனம், பாடல்கள் எழுதியவர்கள் எல்லாரும் அங்கங்கே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்க கருத்துகளை வசனங்களிலும், கதைகளிலும் புகுத்தினார்கள்.

1949-இல் வந்த வேலைக்காரிதான் முதல் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள படம் என்று நினைக்கிறேன். 1950-இல் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் பொன்முடி என்ற பேரில் மாடர்ன் தியெட்டர்சால் படமாக்கப்பட்டது. கலைஞர் மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதினர். 1951-இல் அண்ணாவின் ஓரிரவு (ஏவிஎம்) வெளிவந்தது. கலைஞர் தேவகி என்ற படத்துக்கு கதை வசனம் எழுதினர். ஏ.வி.பி. ஆசைத்தம்பி சர்வாதிகாரி படத்துக்கு வசனம் எழுதினார். 1952-இல் பராசக்தி (ஏவிஎம்) வெளிவந்தது. என்.எஸ்.கே. பணம் படத்தை எடுத்தார். (போட்ட பணத்தை எடுத்தாரா என்று தெரியவில்லை). பாரதிதாசன் வசனம், பாட்டுகளை வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் வளையாபதி படத்தை எடுத்தது. 1953-இல் திரும்பிப் பார் (மாடர்ன் தியேட்டர்ஸ்). கலைஞர், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா சேர்ந்து தயாரித்த நாம் இந்த வருஷம்தான் வந்தது. 1954-இல் ஏறக்குறைய பிரசார படமான ரத்தக் கண்ணீர், மனோகரா (ஜூபிடர்), மலைக்கள்ளன் (பக்ஷி ராஜா) கலைஞர் கை வண்ணத்தில். சுகம் எங்கே (மாடர்ன் தியேட்டர்ஸ்) வசனம் கலைஞரா, கண்ணதாசனா என்று குழப்பமாக இருக்கிறது. அண்ணா எழுதி, கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். நடித்த சொர்க்க வாசல், கலைஞர் கதை வசனம் எழுதிய அம்மையப்பன், கண்ணதாசன் கதை வசனம் பாட்டு எழுதிய இல்லற ஜோதி இந்த வருஷம்தான் திரைக்கு வந்தன. இதற்கு பிறகு வந்தவற்றில் ரங்கோன் ராதா (1956) ஒன்றுதான் குறிப்பிட வேண்டிய திராவிட இயக்கப் படம் என்பது என் கருத்து.

மேலோட்டமாக பார்த்தால் இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கம் ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வந்தது போலிருக்கும். சமூக பிரக்ஞை உள்ள கதைகள் படமாக்கப்பட்டனவோ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் சிலர் பணம் பார்த்தனர், அவ்வளவுதான். கலைஞர் குறிப்பிடத்த் தக்க வெற்றி அடைந்தார். வெகு விரைவில் நடிகர்கள் – குறிப்பாக சிவாஜி, எம்ஜிஆர் – ஆதிக்கத்துக்கு திரைப்படங்கள் சென்றன. எழுத்தாளார்களின் தேவை மங்கிவிட்டது. அண்ணா கூட பெரும் அளவில் வெற்றி பெறவில்லை. அவரது கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தன – ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான் – என்று. சினிமா உலகில் பெரும் பாதிப்பு இல்லை. முரசொலி மாறன் ஐம்பதுகளின் பிற்பகுதியில் சினிமா உலகில் நுழைந்து வசனம் எழுதினார், படங்களை திறமையாக தயாரித்தார். ஆனால் புகழ் பெறவில்லை. ஆசைத்தம்பி போன்றவர்கள் ஆளையே காணவில்லை. கொள்கைப் பிடிப்பு உள்ளவர் என்று சொல்லக் கூடிய எஸ்.எஸ்.ஆர். முதல் வரிசைப் படங்களில் இரண்டாவது ஹீரோ, இரண்டாம் வரிசைப் படங்களில் ஹீரோ என்றுதான் வளர முடிந்தது. கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கே. ஆகியோருக்கு தேய்முகம். கண்ணதாசன் பாட்டு எழுதி பெரும் வெற்றி பெற்றார், ஆனால் அவர் எழுதிய கதைகள் கொஞ்சமே – மஹாதேவி, சிவகங்கை சீமை, மாலையிட்ட மங்கை, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் மாதிரி. கலைஞருக்கு கூட இதற்கு பிறகு தேய்முகம்தான் – மனோகராவுக்கு பிறகு அவர் எழுதிய வசனங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை, அவரது வசனங்களுக்காக இதற்கு பிறகு யாரும் படம் பார்ப்பதில்லை.

திராவிட இயக்கத் தாக்கம் ஒரு short lived phase என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பதுகளின் பிற்பாதியில் தொடங்கிய எம்ஜிஆர்-சிவாஜி-ஜெமினி ஆதிக்கம் ஒரு பதினைந்து இருபது வருஷங்கள் நீடித்தது. இந்த short lived phase கதைக்கும், இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக மாறி இருந்தால் தமிழ் சினிமா நல்ல முறையில் மாறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.