நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்


இரண்டு வாரமாக இந்த பாட்டுதான் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கரம் மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க்கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

பாடும்போதே சுகமாக இருக்கிறது!

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என்ற வரிகளில் குறை காணலாம். அதுதான் முகத்தை மூடியாயிற்றே, அப்புறம் என்ன பயம்? ஆனாலும் பொன்வண்டொன்று என்று ஆரம்பிக்கும் படிமம் அழகாக இருக்கிறது!

காட்சி இன்று செயற்கையாக இருக்கிறது. அதுவும் ஜெய்ஷங்கர் காட்டும் ஸ்டைலும் எல். விஜயலக்ஷ்மியின் முக பாவமும் கொஞ்சம் outdated-தான். ஆனால் ஜெய் அணிந்திருக்கும் உடை இன்றைய ஃபாஷனுக்கு சரியாக இருக்கும்!

திரைப்படம் இரு வல்லவர்கள். பாடியவர்கள் டிஎம்எஸ், சுசீலா. எழுதியது யார்? இசை வேதாவா? 1966 -இல் வந்த திரைப்படம். ஜெய் ஹீரோ, மனோகர் ஆன்டி-ஹீரோ. இரு வல்லவர்கள் ஐந்து வருஷம் கழித்து ஹிந்தியில் ஹாத் கி சஃபாய் என்ற பேரில் வந்தது. ஜெய் ரோலில் ரந்தீர் கபூரும் மனோகர் ரோலில் வினோத் கன்னாவும் நடித்தார்கள். கிட்டத்தட்ட பத்து வருஷம் கழித்து அதை ரீமேக் புகழ் பாலாஜி சவால் என்று தமிழில் எடுத்தார். இரு வல்லவர்கள் படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய்தான் சவாலில் ஆன்டி-ஹீரோ ரோலில் நடித்தார். கமல் ஒரிஜினல் ஜெய் ரோலில்!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!


பாலகுமாரன் பிரபலமாக ஆரம்பித்திருந்த நேரத்தில் முந்தானை முடிச்சு கதை டிஸ்கஷனில் பங்கேற்றிருக்கிறார். அப்போதிலிருந்து அவருக்கு சினிமாவில் நுழைய ஆசை. கூடவே ஒரு தயக்கம். அப்புறம் நுழைந்துவிட்டார். அந்த அனுபவங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் சிறு memoir-தான் இந்த புத்தகம்.

முதல் முதலாக பாக்யராஜ் அவருக்கு அறுபது ரூபாய் ஃபீஸ் கொடுத்திருக்கிறார். இது எண்பதுகளின் முற்பாதியில். அப்போது பாக்யராஜுக்கு ஜி.எம். குமாரும் லிவிங்ஸ்டனும் உதவியாளர்கள். பாக்யராஜ் இவரையும் வந்து சேருங்கள் என்று கூப்பிட்டிருக்கிறார். குறைந்த சம்பளம், கொஞ்சம் பயம் – அதனால் பாலா மறுத்துவிட்டார். பிறகு மு. முடிச்சு படம் பார்த்தபிறகு கமல், சிவகுமார், சுகாசினி, பாலு மகேந்திரா எல்லாரிடமும் அறிவுரை கேட்டிருக்கிறார். யாரும் வா என்று சொல்லவில்லை. சிவகுமார் இவரை நீங்கள் ஏற்கனவே சபல கேஸ், இங்கே தப்பு பண்ண நிறைய சான்ஸ் என்று இடித்திருக்கிறார். சுகாசினி மூன்று வருஷத்துக்கு ஒரு முறை ஏதாவது தப்பு பண்ண வேண்டும் என்று விரதமா என்று கேட்டிருக்கிறார். கோபம், ஒரு கை பார்க்கிறேன் என்று இறங்கி இருக்கிறார். அப்போது கமல் வரவேற்றாராம்! முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும், யாரிடம் யோசனை கேட்கக்கூடாது என்று சொன்னாராம்!

சிந்துபைரவி படத்தில் உதவி இயக்குனர். வசந்த் இன்னொரு உதவி இயக்குனர். அனந்த் தலைமை நிர்வாகி மாதிரி. இவர் ஆஃபீஸ் போவது போல ஒன்பது மணி வாக்கில் போக நான்காவது நாள் அனந்து பிடித்து எகிறி இருக்கிறார். சிவகுமாரிடம் பொரும, அவர் “சவுகரியமா வளர்ந்துட்டீரு ஓய்!” என்று கமென்ட் விட்டிருக்கிறார். அப்புறம் பாலகுமாரன் கொஞ்சம் கொஞ்சமாக நெளிவு சுளிவுகளை புரிந்துகொண்டிருக்கிறார்.

சினிமாவின் சில முகங்களைப் பற்றி – இளையராஜாவின் “கர்வம்”, பாலச்சந்தரின் கோபம்+அன்பு, ஒரு டீமாக வேலை செய்வது என்று வெளியே தெரியாத முகங்களைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்: பாலகுமாரனும் சினிமாவும் – அருன்மொழிவர்மனின் பதிவு

களத்தூர் கண்ணம்மா


படம் வந்தபோது (செப்டம்பர் 1960) விகடனில் வந்த விமர்சனம். கமலைப் பற்றி அப்பவே புகழ ஆரம்பித்துவிட்டார்கள்! நன்றி விகடன்!

சண்முகம் – மீனாட்சி

சண்: ஏன் மீனாட்சி, முகமெல்லாம் ஒரே வாட்டமா இருக்குது?

மீனா: களத்தூர் கண்ணம்மா படத்துக்குப் போயிருந்தேன். அநாதைக் குழந்தை ஒண்ணு படற கஷ்டத்தைப் பார்த்து என் மனசு ரொம்பச் சங்கடப்பட்டுதுங்க.

சண்: அப்படி என்ன உருக்கமான கதை அது?

மீனா: களத்தூர் ஜமீன்தாரோட பிள்ளை ராஜா, அவங்க ஜமீன்லேயே வேலை பார்க்கிறவருடைய பெண் கண்ணம்மாவைக் காதலிச்சு, ரகசியக் கலியாணம் பண்ணிக்கறாரு. கலியாணம் ஆனவுடனேயே மனைவியைப் பிரிஞ்சு, சீமைக்குப் போறாரு. கல்யாண விஷயம் ஜமீன்தாருக்குத் தெரிஞ்சு போவுது.

சண்: அப்புறம் மூணு பேரும் தனித்தனியா பிரிஞ்சுடுவாங்க. திரும்பி வந்த ராஜா கண்ணம்மாவைக் காணாமல் தவிப்பான். கடைசியிலே எல்லாம் ஒண்ணு கூடுவாங்க. அவ்வளவுதானே!

மீனா: ஆமாம். அந்தப் பையன் நடிப்புதான் எல்லாரையும் உலுக்கிடுச்சு. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே‘ன்னு முருகன் படத்துக்கு எதிரிலே நின்னு அந்தப் பையன் பாடியது ரொம்ப உருக்கமா இருந்துதுங்க. சாவித்திரியும் ஜெமினி கணேசனும் கண்ணம்மாவும் ராஜாவுமா வராங்க. காதலியா வரபோதும் சரி, கண் கலங்கித் தவிக்கிற மனைவியா வரபோதும் சரி, கொடுத்த வேஷத்தை நல்லாச் செய்திருக்கு சாவித்திரி.

சண்: ஜமீன்தார் யார்? பாலையாவா?

மீனா: ஆமாம். அவர் நடிப்புக்குச் சொல்லணுமா! சுப்பய்யாதான் வேலைக்காரனா வராரு. கொஞ்சம் ‘ஓவரா’ நடிக்கிறாரு. ஆனால், பிறந்த குழந்தையை அநாதை ஆசிரமத்திலே கொண்டுபோய் விடற இடத்திலே, அந்தக் குழந்தை துணியைப் பிடிச்சுக்குது. அதை அவர் விலக்கிக்கிட்டு வர இடம் ரொம்ப நல்லா இருந்தது.

சண்: டைரக்ஷன் பீம்சிங்கா?

மீனா: ஆமாம். எப்படிச் சரியா சொன்னீங்க?

சண்: மறந்துட்டியா? இதே மாதிரி காட்சியை பாகப் பிரிவினையிலே பார்க்கலியா நீ?

மீனா: இந்தக் குறையெல்லாம் உங்களுக்குத்தான் படும். எனக்கென்னவோ, இதில் அழுகைக்குதான் அதிக இடம் இருக்கு, சிரிக்கவே முடியலேங்கறது ஒண்ணுதான் குறையாகப்பட்டது. நான் பார்த்த நல்ல தமிழ்ப் படங்களிலே களத்தூர் கண்ணம்மாவைக் கண்டிப்பா சேர்த்துக்குவேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

நாகேஷ்–25


அனுப்பிய விமலுக்கும், விகடனுக்கும் நன்றி!

நாகேஷ் மாறும் உடல் மொழி, ஏறி இறங்கும் குரல் ஜாலம், தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!

  1. பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்.
  2. பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா.
  3. பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
  4. இளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
  5. முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
  6. கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலர வைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!
  7. ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால் தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
  8. இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
  9. முதல் படம் `தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர். ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!
  10. `அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்!
  11. முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
  12. எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
  13. திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
  14. நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்!
  15. `அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்!
  16. இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்.
  17. டைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.
  18. பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
  19. `சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி.
  20. `நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.
  21. பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’
  22. `தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்!’
  23. தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.
  24. இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்.
  25. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாகேஷ் பக்கம்

நடிகர் முரளியின் இறுதி பத்திரிகை பேட்டி


முரளியைப் பற்றி போட்ட பதிவுகள் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் விமல் இன்னும் ஒரு நல்ல பதிவை அனுப்பி இருக்கிறார்.

முரளி என்ற நடிகரைப் பற்றி எனக்கு பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை. சில நல்ல படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் ஸ்டீரியோடைப் கல்லூரி மாணவன், காதலை பல விதங்களில் சொல்லாமல் இருப்பவன் என்று வந்து போயிருக்கிறார். ஆனால் அவரது காஃபி வித் அனு ஷோ பேட்டி, மற்றும் இந்தப் பேட்டியை பார்த்தால் ஒரு ஜாலியான, பந்தா இல்லாத, நல்ல அப்பாவாகத் தெரிகிறார். அடடா இந்த ஜாலியான மனிதரா இறந்து போனார் என்று தோன்றுகிறது.

நன்றி – தினகரன்

03.09.2010 தேதியிட்ட ‘தினகரன் வெள்ளி மலரில்(கவர் ஸ்டோரி பகுதியில்)’ முரளி அவரது மகன் அதர்வாவுடன் இணைந்து அவர் பேசியது டூயட் பேட்டியாக வந்ததாம். அதுவே அவரது இறுதிப் பேட்டியாக அமைந்துவிட்டது.
—————————————————————
முரளி: ஷோமுல் நீ பாட்டுக்கு ஹீரோவா நடிச்சிட்ட. நான்தான் தியேட்டர் தியேட்டரா அலைஞ்சிட்டிருக்கேன் தெரியுமா? (செல்லப்பெயர் விளக்கம்: அம்மா ஷோபா + அப்பா முரளி = ஷோமுல்)

அதர்வா: நீங்க ஏன் டாடி, வயசான காலத்துல இப்படி அலையுறீங்க?

முரளி: என்னது? ஒரு படத்துல நீ ஹீரோவா நடிச்சிட்டா நான் வயசானவனா? நான் இன்னிக்கும் ஹீரோதான்டா. இன்னும் மெடிக்கல் காலேஜ் பைனல் இயர் ஸ்டூடண்டுதான் தெரியுமா? நீ சினிமால அறிமுகமாகுறதுக்கு முரளி மகன்கற அடையாளம் போதும்தான். ஆனா, அடுத்த கட்டத்துக்கு போகணும்னா எல்லார் மனசுலயும் நீ ரிஜிஸ்டர் ஆகணும். அது ‘பாணா காத்தாடி’ல கிடைச்சிருக்கு. அதுக்காக நான் சும்மா இருந்துட முடியுமா? தியேட்டர் தியேட்டரா போயி, ‘இவன் என் மகன். பார்த்துக்குங்க’னு ரசிகர்கள்கிட்ட, ஒரு தகப்பனா கேட்க வேண்டியது என் கடமையில்லையா?

அதர்வா: சந்தோஷமா இருக்குப்பா. உங்க நம்பிக்கையையும், ஆசையையும் நிச்சயமா காப்பாத்துவேன். அதுக்காக நீங்க இன்னும் மெடிக்கல் காலேஜ் ஸடூடண்டா நடிப்பேன்னு சொல்றதைத்தான் தாங்கிக்க முடியல. உங்களை வச்சே, உங்களை கிண்டல் பண்ணி ‘பாணா காத்தாடி’ல சீன் வச்சும் திருந்த மாட்டேங்றீங்களே?

முரளி: நீ ஆயிரம் இருந்தாலும் அம்மா புள்ளைதானடா. அதான் அப்பாவை கிண்டல் பண்ற. சரி, என் மகன்தானே பண்ணிக்கட்டும்னு அந்த சீன்ல நடிச்சுக் கொடுத்தேன். இன்னிக்கும் ‘இதயம் ராஜா’னு சொன்னதும் ரசிகர்கள் என்னமா கைதட்டுறாங்க. 19 வருஷத்துக்கு முன்னாடி வந்த படம் இன்னும் ரசிகர்கள் மத்தியில நிக்குதுன்னா பாத்துக்க. அந்த மாதிரி உன் படங்களும் சாதிக்கணும்.

அதர்வா: உங்களோட எல்லாப் படமும் எனக்கு பிடிக்கும். ஆனா, ஏன் டாடி 14 ரீல் வரைக்கும் காதலைச் சொல்லாமலே இருக்கீங்க?

முரளி: ஷோமுலு குட்டி, அப்பா படத்துலதான்டா அப்படி. நிஜத்துல உங்கம்மாவை காதலிச்ச ஒரு வாரத்துல ‘ஐ லவ் யூ ஷோபா’னு அத்தனை லாங்வேஜ்லேயும் சொல்லிட்டேன். ஏன்னா அரை இஞ்சுக்கு மேக்கப் போட்டாலும் அப்பா கலரு உனக்குத் தெரியும். ஆனா, உங்கம்மா ரோஸ் கலரு. கொஞ்சம் அசந்தா வேற எவனாவது காதலைச் சொல்லிடப் போறானோன்னு பயம். அதனால டக்குன்னு சொல்லிட்டேன். நீயும் யாரையாவது காதலிச்சா டக்குன்னு சொல்லிடு. ஆனா, காதலிக்கிற பொண்ணு வெறும் மனைவியா மட்டும் இல்லாம ஒரு தாயாவும் இருப்பாளானு மட்டும் பாத்துக்க. ஏன் சொல்றேன்னா இன்னிக்கும் நான் இளமையா, மகிழ்ச்சியா இருக்கேன்னா அதுக்கு காரணம், உங்கம்மா எனக்கும் அம்மாவா இருக்கறதுதான்.

அதர்வா: அம்மாவுக்கு என்னமா ஐஸ் வைக்குறீங்க! (முரளி முகம் சுருங்க) சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் டாடி. அம்மா மேல நீங்க வச்சிருக்குற பாசம் எங்களுக்குத் தெரியும். அதேமாதிரிதான் நான், அக்கா, தம்பி எல்லாருமே. நீங்க ஷூட்டிங், ஷூட்டிங்குன்னு பாதிநாள் வெளியூர்லதான் இருப்பீங்க. ஸோ, நாங்க அம்மா கூட இருந்த நேரம்தான் அதிகம். அதனால அம்மா பிள்ளையாவே வளர்ந்துட்டோம். ஆனாலும் அதே அளவு பாசம் உங்க மேலயும் இருக்கு. எங்களுக்கு சுதந்திரம் கொடுத்து, அப்படி பாத்துக்கிட்டீங்க டாடி. ஆனா, நடிக்க மட்டும் சொல்லித் தர மாட்டேன்னு மறுத்துட்டீங்களே?

முரளி: அப்படியில்ல ஷோமுலு. நான் உனக்கு நடிப்புச் சொல்லித் தந்தா, நீ இன்னொரு முரளியாத்தான் வருவே. ஒரு முரளியவே தாங்க முடியாம சினிமாத் தவிக்குது. இதுல இன்னொரு முரளி தேவையா?. அதான் நாசர்கிட்ட அனுப்பினேன். நானெல்லாம் சும்மாடா, வேட்டிய மடிச்சுக் கட்டி அரிவாளைத் தூக்கிக்கிட்டு, சண்டை போட்டுக்கிட்டு, மைக்கை தூக்கி பாடிக்கிட்டு, சட்டைக் காலரை பிடிச்சுக்கிட்டு வசனம் பேசி, கடைசி வரைக்கும் காதலைச் சொல்லாத கேரக்டர்லேயே நடிச்சு முடிச்சாச்சு. என்னை விட நாசர் சார் மாதிரி கேரக்டர் ஆர்ட்டிஸ்டுங்ககிட்டதான் நடிப்பு கத்துக்க முடியும். அதான் அவர்கிட்ட அனுப்பி வச்சேன்.

அதர்வா: அக்காவை டாக்டராக்கின மாதிரி, என்னை இன்ஜீனியராக்கணும்னு ஆசைப்பட்டீங்க. நான் திடீர்னு நடிக்கணும்னு சொன்னப்போ நீங்க வருத்தப்பட்டீங்களா?

முரளி: நிச்சயமா இல்லை. நீ என்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே, நானும் உங்க அம்மாவும் உனக்குள்ள நடிக்கிற ஆசை இருக்குனு புரிஞ்சுகிட்டோம். நீ எங்களுக்கு பயந்து கதவைப் பூட்டிக்கிட்டு விடிய விடிய திருட்டுத்தனமா படம் பார்த்துக்கிட்டிருந்ததை கண்டுபிடிச்சோம். அப்பவே முடிவு பண்ணினேன். ஆஹா, நம்ம வீட்டுல இன்னொரு ஹீரோ இருக்கான்னு. அதுக்குப் பிறகுதான் நீ வந்து சொன்னே. சந்தோஷமா இருந்துச்சு. என்னைவிட உங்கம்மாவுக்கு பெரிய சந்தோஷம். ஏற்கெனவே ஒரு விஜய் இருக்குறதால உன்னோட பெயரை அதர்வான்னு மாத்தினா. (உச்சிஷ்ட மகா கணபதியின் இன்னொரு பெயர் அதர்வா!) நானும் சண்டை, டான்ஸ் கத்துக்க அனுப்பி வைச்சேன்.

அதர்வா: நல்ல காலம் டான்ஸ் கத்துகிட்டேன் டாடி. இல்லேன்னா, ‘முரளி பையன் அவர் மாதிரியே ஆடுறான்’னு எல்லாரும் கிண்டல் பண்ணியிருப்பாங்க.

முரளி: ‘பிரபுதேவாவப் பாருங்க, எப்படி ஆடுறாரு’னு என்னை கிண்டல் பண்ணுவ. நானும், ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து, தாமிரபரணி தண்ணிய வச்சு‘ன்னு ஆடியிருக்கேன். ஆனா, பிரபுதேவா பிரேக் உள்ள பைக். நான் பிரேக் இல்லாத மாட்டுவண்டி. என்னோட டான்ஸ் அவ்ளோதான் இருக்கும். ஆனா நீ ‘பாணா காத்தாடி’ல சூப்பரா ஆடியிருக்க. நம்மளால முடியாததை நம்ம பையன் செய்யறானேன்னு சந்தோஷப்பட்டேன்.

அதர்வா: உங்கள பாத்து ஹீரோவாக ஆசைப்பட்டாலும் கமல் சாரைப் பார்த்துதான் நடிக்க ஆசைப்பட்டேன். அவர்தான் எனக்கு மானசீக குரு. முதல்பட பூஜைக்கு நீங்க எனக்கு நான் ஆசைப்பட்ட காரை பிரசண்ட் பண்ணி, சர்ப்ரைஸ் கொடுத்தீங்க. கமல் சார் பூஜைக்கு வரலை. ஆனா, மறுநாள் அவர் ஆபீசுக்கு கூப்பிட்டு என்னோடு போட்டோ எடுத்து, அதை ஆள் உயரத்துக்கு ப்ளோ அப் பண்ணி அதுல, ‘தோளுக்கு மிஞ்சிய தோழா, தொழிலிலும் மிஞ்ச வாழ்த்துகள்’னு எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ரெண்டுமே எனக்குப் பொக்கிஷங்கள்.

முரளி: உனக்கு கமல் சார் மாதிரி, எனக்கு சிவாஜி சார். என்னதான் முட்டி மோதிப் பார்த்தும் அவர் பக்கத்துல கூட நெருங்க முடியல. நீயாவது கமல் சார் கிட்ட நெருங்க முடியாட்டியும் அவர் மாதிரி புதுசு புதுசா நடி. சினிமாவை வெறித்தனமா நேசி. சினிமால கிடைச்சதை சினிமாவுக்கே கொடு. வாழ்த்துகள் ஷோமுலு.

அதர்வா: தேங்க்ஸ் டாடி.
—————————————————————

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புள்ள சுட்டிகள்:
முரளியின் கடைசி ‌டிவி பேட்டி

முரளி – அஞ்சலி
பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்
முரளி பட லிஸ்ட்

சிறந்த 20 இந்திய படங்கள்


போன வருஷம் இப்படி 20 படங்களை இயக்குனர்களும் விமர்சகர்களும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த குழுவில் தமிழர்கள் – இயக்குனர் சேரன், விமர்சகர் கௌரி ராம்நாராயண் (இவர் கல்கியின் பெண்ணோ?) மற்ற இயக்குனர்களில் எனக்கு தெரிந்தவர்கள் – மதுர் பண்டார்கர் (பேஜ் 3), விஷால் பரத்வாஜ்(ஓம்காரா, மக்பூல், கமினே), நாகேஷ் குக்குனூர்(ஹைதராபாத் ப்ளூஸ்), ரிதுபர்னோ கோஷ்(ரெய்ன்கோட்). வேறு யாரையும் நான் கேள்விப்பட்டதில்லை. முழு விவரங்களுக்கு இந்த லிங்கைப் பார்க்கலாம்.

இவர்கள் தேர்ந்தெடுத்த படங்கள் கீழே. ஒரிஜினல் லிங்க் இங்கே. வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.

  1. ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா – பல வருஷங்களுக்கு முன் பார்த்தது. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து ஓடாகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. எனக்கு பிரமாதமாகத் தெரியவில்லை. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.
  2. சத்யஜித் ரேயின் சாருலதா – எனக்கு மிகவும் பிடித்த ரே படம். (இன்னொன்று அபராஜிதோ). மெதுவாகத்தான் போகும். அண்ணி-மச்சினன் உறவு எல்லை மீறுகிறதோ?
  3. சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி – பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபூர் சன்சார் மூன்றுமே மிக நல்ல படங்கள்தான். என் கண்ணில் அபராஜிதோதான் மிக சிறந்தது. பதேர் பாஞ்சாலியின் சின்ன கிராமத்தில் ஏழைக் குடும்பம். அக்காவுக்கும் தம்பிக்கும் வலிமையான பந்தம். அவ்வளவுதான் கதை. அபராஜிதோவில் அப்பா செத்துப் போய் அம்மா கஷ்டப்பட்டு தம்பியை படிக்க வைக்கிறாள். அபூர் சன்சாரில் தம்பி பெரியவனாகி, திடீர் கல்யாணம் செய்துகொண்டு, மனைவி (ஷர்மிளா தாகூர்) பிரசவத்தில் இறந்து, ஊர் ஊராக அலைகிறான்.
  4. ரமேஷ் சிப்பியின் ஷோலே – இதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த மசாலா படம். கப்பர் சிங், வீரு, ஜெய், பசந்தி, தாகூர், ராதா போன்ற முக்கிய பாத்திரங்களை விடுங்கள். சூர்மா போபாலி, ஜெயிலர் மாதிரி சின்ன பாத்திரங்களும் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும்.
  5. பிமல் ராயின் தோ பிகா ஜமீன் – நல்ல படம். அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்க ஏழை விவசாயி பால்ராஜ் சாஹ்னி கல்கத்தாவில் ரிக்ஷா இழுக்கிறார். ஆனால் இன்றைக்கு இந்த படம் ஒரு cliche ஆகிவிட்டது. ஏழை விவசாயி, வட்டிக்கு கடன் கொடுப்பவர் எல்லாம் பல படங்களில் சினிமாத்தனமாக வந்துவிட்டன. அது பிமல் ராயின் குற்றமில்லைதான், ஆனால் அப்படி பார்த்து பார்த்து அலுத்தவர்களுக்கு இந்த படத்தை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்.
  6. குரு தத்தின் ப்யாசா – இன்னொரு நல்ல படம். அருமையான பாட்டுகள். அருமையான ஒளிப்பதிவு. கவிஞன் materialistic உலகில் வாழ முடியாமல் தவிக்கிறான்.
  7. மிருனாள் சென்னின் புவன் ஷோம் – பார்த்ததில்லை.
  8. எம்.எஸ். சத்யுவின் கரம் ஹவா – அருமையான படம். இந்தியா பாகிஸ்தான் பிரிந்தாயிற்று. பால்ராஜ் சாஹ்னியின் குடும்பம் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. அவர் அண்ணா குடும்பம் சென்றுவிடுகிறது. அடுத்த ஜெனரேஷனில் கூட ஃ பரூக் ஷேக்கினால் ஒரு வேலை தேடிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் ஏன் பாகிஸ்தான் போய்விடக் கூடாது மாதிரி கேள்விகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. குடும்பம் முழுவதும் என்ன கஷ்டம் வந்தாலும் பாகிஸ்தான் போவதில்லை என்று உறுதியாக தீர்மானிக்கிறது.
  9. மெஹ்பூப் கானின் மதர் இந்தியா – இன்னொரு நல்ல படம். ஆனால் இதுவும் cliche-க்களை உற்பத்தி செய்தது. சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் முன்னேறும் நல்ல மகன், அதை எதிர்க்கும் “கெட்ட” மகன், மகனைக் கொல்லும் அம்மா (நான் படத்தில் கூட இப்படி ஒரு அம்மா வருவார்), கடன் சுமையில் அழுந்தும் குடும்பம், எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்தாரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வட்டிக் கடை முதலாளி என்று பல. அம்மாவாக நர்கீஸ், இளைய மகனாக சுனில் தத் (அம்மா மகன் வேடத்தில் நடித்து பிறகு மணம் புரிந்து கொண்ட ஒரே ஜோடி நர்கீஸ்-சுனில் தத்தான் என்று நினைக்கிறேன்), அப்பாவாக ராஜ்குமார் என்று பலரும் கலக்கலாக நடித்திருப்பார்கள்.
  10. கிரீஷ் காசரவல்லியின் கடஷ்ராத்தா – பார்த்ததில்லை.
  11. அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் – பார்த்ததில்லை.
  12. ஆசிஃபின் மொகலே ஆஜம் – சலீம்-அனார்க்கலி கதை. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். அக்பராக வருபவர் பிருத்விராஜ் கபூர். நாடகத்தன்மையோடு மிகை நடிப்பு. என்னவோ குதிரை மேல் போவது போல குதித்து குதித்துதான் நடப்பார். (முகமது பின் துக்ளக்கில் சோ நடப்பது போல, மாண்டி பைதான் அண்ட் தி ஹோலி கிரேய்லில் கிங் ஆர்தராக வருபவர் நடப்பது போல). திலீப் குமார் சலீம், மதுபாலா அனார்க்கலி. ப்யார் கியா தோ டர்னா க்யா பாடல் புகழ் பெற்றது.
  13. மணிரத்னத்தின் நாயகன் – அருமையான படம். கமல், ஜனகராஜ், சரண்யா, நாசர், நிழல்கள் ரவி, டின்னு ஆனந்த், டெல்லி கணேஷ் எல்லாருமே கலக்குவார்கள். இதைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதிதாக சொல்ல என்ன இருக்கிறது? (சேரன் push செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.)
  14. குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது. அருமையான ஒளிப்பதிவு.
  15. சத்யஜித் ரேயின் அப்பு trilogy – குழப்பவாதிகள்! பதேர் பாஞ்சாலி ஏற்கனவே சொல்லியாயிற்று, அப்புறம் என்னய்யா தனியாக அப்பு trilogy?
  16. விஷ்ணு தாம்லேவின் சந்த் துகாராம் – கேள்விப்பட்டிருக்கிறேன். பிரின்ட் இருக்கிறதோ என்னவோ?
  17. குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோன் – cult film. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் மகாபாரத நாடகம்!
  18. விஜய் ஆனந்தின் கைட் -ஆர்.கே. நாராயணின் அருமையான கதையை கொலை செய்துவிட்டார்கள். ஆனால் என்ன அருமையான பாட்டுகள்! தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
  19. பிமல் ராயின் மதுமதி – அற்புதமான பாட்டுகள். சுஹானா சஃபர் அவுர் ஏ மோசம் ஹசீன் ஒன்றே போதும். பார்க்க கூடிய படம்தான், ஆனால் சிறந்த பட வரிசையில் எல்லாம் சேர்க்க முடியாது. ஓம் ஷாந்தி ஓம் இந்த கதையை உல்டா செய்து எடுக்கப்பட்டதுதான்.
  20. ஹிரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் – எனக்கு மிகவும் பிடித்த படம். மணிரத்னத்தின் கீதாஞ்சலி மாதிரி கதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

தொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
T20 of Indian Cinema
T20 of Indian Cinema – படங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன?

பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா
என் டாப் டென் இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்

உலக படங்கள் – கமல் சிபாரிசுகள் I


கமலுக்கு பிடித்த உலகப் படங்கள் முதல் பகுதி கீழே. என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். பேரை க்ளிக் செய்தால் IMDB குறிப்புக்கு போகலாம். முழு லிஸ்டையும் இங்கே காணலாம்.

  1. Virgin Spring (Jungfrukällan), Ingmar Bergman – இங்கமார் பெர்க்மன் படம் எதுவும் இது வரை என்னால் பார்க்க முடிந்ததில்லை. அது என்னவோ ஒவ்வொரு முறை படம் கொண்டு வரும்போதும் ஏதாவது தடங்கல்.
  2. Wages of Fear (Le salaire de la peur), Henri-Georges Clouzot – மிக அருமையான படம். ஸ்லோவாக ஆரம்பிக்கும். முதல் பாதி வரை பில்டப்போ பில்டப். எங்கேயோ (தென் அமெரிக்கா?) ஒரு குக்கிராமம். அங்கே நாலு வெள்ளைக்காரர்கள். பணத்துக்கு ஏகத் தட்டுப்பாடு. ஒரு மல்டிநேஷனல் கம்பெனிக்கு வெடிமருந்து உள்ள இரண்டு லாரிகளை அபாயம் நிறைந்த ரூட் வழியாக கொண்டு போக வேண்டும். இரண்டாம் பாதி அப்படி கொண்டு போவது. அபாரமாக இருக்கும். இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் கலக்கலாம்.
  3. Rashomon, Akira Kurosawa – ராஷோமானைப் பற்றி தெரியாதவர்கள் மிகக் குறைவே. குரோசாவாவின் அற்புதமான படம். ஒரு இறப்பு, அதை நாலு பேர் நாலு விதமாக விவரிக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் குரோசாவாவின் சாதனை என்பது அவர் இதை விட சிறந்த படங்களை – அதுவும் ஒன்றல்ல, இரண்டு எடுத்ததுதான். இகிரு மற்றும் ரான். இகிரு மாதிரி ஒரு படம் சிவாஜிக்கு கிடைத்து, அவரும் அடக்கி வாசித்து நடித்திருந்தால்! ரான் கிங் லியர் நாடகத்தின் ஜப்பானிய வடிவம்.
  4. The Cranes are Flying(Letyat Zhuravli), Mikhail Kalatozov – கேள்விப்பட்டதில்லை.
  5. Das Boot, Wolfgang Petersen – ஒரு நீர்மூழ்கிக் கப்பல், அதற்குள் நடக்கும் கதை. நல்ல ஆக்ஷன் படம்.
  6. Amadeus, Milos Forman – நல்ல படம். மொசார்ட்டின் வாழ்க்கை, அவரது எதிரியும் போட்டியாளருமான சாலியரியின் கண்களில்.
  7. Hair, Milos Forman – பார்த்ததில்லை.
  8. Duel, Steven Spielberg – என்ன ஒரு படம்! ஒரு கார், ஒரு பெரிய (கண்டெய்னர் லாரி மாதிரி) ட்ரக், ஒரு கார் டிரைவர் அவ்வளவுதான் படத்தில். ட்ரக் டிரைவருக்கு கார் டிரைவர் மேல் காண்டு. மலைப் பாதையில் காரை தள்ளி விடப் பார்க்கிறான்.
  9. The Tenant (Le locataire), Roman Polanski – கேள்விப்பட்டதில்லை.
  10. Chinatown, Roman Polanski – இது மிகவும் சிலாகிக்கப்படும் படம். நல்ல படம்தான், ஆனால் பில்டப் இருக்கும் அளவுக்கு பிரமாதம் இல்லை. ஜாக் நிக்கல்சன் ஒரு ரஃப் அண்ட் டஃப் டிடெக்டிவ். அவர் சின்ன ஒரு கேசை துப்புத் துலக்கப் போய் பெரிய ஊழல், குடும்பத்தின் தகாத உறவு ஆகியவற்றை கண்டுபிடிப்பார்.
  11. La Strada, Federico Fellini – பார்த்ததில்லை. 8 1/2 என்று ஒரு படம் பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை. அதிலிருந்து ஃபெல்லினி என்றால் கொஞ்சம் பயம்.
  12. Au Hasard Balthazar, Robert Bresson – கேள்விப்பட்டதில்லை.
  13. The Brutalisation of Franz Blum (Die Verrohung des Franz Blum), Reinhard Hauff – கேள்விப்பட்டதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
கமல் சிபாரிசு செய்யும் உலகப் படங்கள் – முழு லிஸ்ட்
பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா
என் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்

அபூர்வ ராகங்கள் – என் விமர்சனம்


வேதாளத்தை தன முயற்சியில் சற்றும் தளராமல் மீண்டும் மீண்டும் தூக்கி தூக்கி செல்லும் விக்ரமாதித்தன் கடைசியில் வேதாளம் கேட்கும் ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் முழிப்பான் – ஒரு அப்பாவும் பையனும் முறையே மகளையும் அம்மாவையும் கல்யாணம் செய்து கொண்டால் அவர்களின் உறவு முறை என்ன? இதே கதையைத்தான் பாலசந்தர் சினிமாவாக ஆக்கி இருக்கிறார்.

1975இல் வந்த படம். கமல் ஹீரோவாக நடித்த முதல் படம் இதுதான் என்று நினைக்கிறேன். ரஜினிக்கு முதல் படம். நாகேஷுக்கும் பாலச்சந்தருக்கும் ஏதோ தகராறாம். ஒரு நாலைந்து வருஷம் நாகேஷ் பாலச்சந்தரின் எந்த படத்திலும் கிடையாது. இந்தப் படத்தில்தான் திரும்பி வருவார். ஸ்ரீவித்யாவுக்கும் ஹீரோயினாக இதுதான் முதல் படம் என்று நினைக்கிறேன். ஜெயசுதா அறிமுகமோ? நினைவில்லை. இவர்களைத் தவிர மேஜர். இசை எம் எஸ் வி. இயக்கம் பாலச்சந்தர்.

அடிதடி இளைஞன் கமல் அப்பா மேஜரோடு சண்டை போட்டுக்கொண்டு பெங்களூரை விட்டு சென்னைக்கு வருகிறான். யாரோ அடித்துப் போட்டுவிட, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனையோ ராகம் பாடும் பாடகி பைரவி அவனை காப்பாற்றி வீட்டில் தங்க வைக்கிறாள். பைரவியின் கணவன் ஓடிப் போய்விட்டான். மகளை மகள் என்று சொல்லாமல் – சொன்னால் காரியர் முன்னேறாது என்று – வளர்க்கிறாள். விஷயம் தெரிந்த மகளோ கொஞ்ச நாள் முன்தான் வீட்டை விட்டு போய்விட்டாள். பைரவியின் மாணவிகள் கமலை சைட் அடிக்கிறார்கள். உனக்கு யாரைப் பிடித்திருக்கிறது என்று பைரவி கேட்க, கமல் “ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி” என்று பாடுகிறான். பைரவி கடுப்பாகி தன் கணவன், மகளைப் பற்றி சொல்ல கமல் அதைப் பற்றி எல்லாம் கவலையே படவில்லை. பைரவியும் காதலில் விழுகிறாள். ஓடிப் போன ஜெயசுதா பெங்களூரில் மேஜரை சந்தித்து இரண்டு பெரும் திருமணம் செய்ய தீர்மானிக்கிறார்கள். மேஜர் ஜெயசுதாவின் அம்மாவை சந்திக்க வருகிறார். அவருக்கு விஷயம் தெரிகிறது. “கை கொட்டி சிரிப்பார்கள்” என்று பயப்படுகிறார். ஓடிப் போன கணவன் ரஜினிகாந்த் திரும்பி வருகிறான். கமல் அவனை மறைத்து வைக்க, நாலு பேருக்கும் விஷயம் தெரிய, ஸ்ரீவித்யா கேள்வியின் நாயகனை இந்த கேள்விக்கு பதில் கேட்கிறார். ஜெயசுதாவும் சேர்ந்து கேட்க, ரஜினிகாந்த் அங்கே வந்து இறக்க, அப்பா-மகன், அம்மா-மகள் இணைகிறார்கள். ஆனால் எந்த ஜோடியும் இணையவில்லை.

படத்திற்கு மூன்று பலங்கள். கமல், ஸ்ரீவித்யா, இசை.

கமல் sizzles. ஒரு angry young man ஆக புகுந்து விளையாடுவார். உண்மையிலேயே இளைஞர் வேறு – என்ன ஒரு இருபது வயது இருந்திருக்குமா? தியேட்டரில் ஜன கன மன போடும்போது அசையாமல் நிற்காதவனை அடிப்பதாகட்டும், தன மேல் சேற்றை வாரி இறைத்து போகும் கார்க்காரனைப் பார்த்து தேவடியாப் பையா என்று திட்ட, அந்த கார்க்காரன் திரும்பி வந்து என்ன சொன்னே என்று கேட்க, அவனுக்கு information கொடுப்பது போன்ற பாவனையுடன் மீண்டும் அதையே சொல்வதாகட்டும், திரும்பி வரும் ரஜினியுடம் பேசும் இடங்களாகட்டும், கலக்குகிறார்.

ஸ்ரீவித்யா எப்போதுமே அழகுதான். ஆனால் அது அழகுடன் இளமை சேர்ந்து வந்த காலம். அருமையான நடிப்பு. ஒரே குறைதான், ஜெயசுதாவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார், அம்மா மாதிரி இல்லை!

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்! எத்தனை அருமையான பாட்டு! கண்ணதாசனும் எம்எஸ்வியும் புகுந்து விளையாடுகிறார்கள்.

அதிசய ராகம் இன்னொரு அற்புதமான பாட்டு. ஜேசுதாசின் குரல் தேனில் குழைத்ததுதான்.

கேள்வியின் நாயகனே இன்னொரு அபாரமான பாட்டு. ஆனால் மற்ற இரண்டு போல அவ்வளவு பாப்புலர் ஆகவில்லை.

கைகொட்டி சிரிப்பார்கள் என்ற இன்னொரு பாட்டும் உண்டு. பாடியவர் எ.ஆர். ஷேக் முஹமது என்று சாரதா தகவல் தருகிறார். எனக்கு இந்த பாட்டு தேறவில்லை.

நாகேஷ் ஓவர்ஆக்டிங். மேஜர் ஓகே.

நல்ல ஒளிப்பதிவு.

நல்ல படம். பார்க்கக் கூடிய படம். பத்துக்கு எட்டு மார்க். (ஏழுதான் கொடுத்திருப்பேன், ஆனால் இசைக்காக எட்டாக்கிவிட்டேன்.) B+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: அபூர்வ ராகங்கள் விகடன் விமர்சனம்

அபூர்வ ராகங்கள்


ஆகஸ்ட் 1975இல் விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

”ஐந்து காரெக்டர்கள். ஒரு சின்ன போராட்டம். இதை ஒரு பரிசோதனையாக எடுத்திருக்கிறேன்” என்கிறார் டைரக்டர் பாலசந்தர்.

சுலபமாகச் சொல்லிவிட்டார் பாலசந்தர். ஆனால், சின்ன போராட்டமா அது!

பேசும் கண்கள்; எண்ணங்களைத் தெரிவிக்கும் அழகிய முகம்; ஒரு பாடகிக்கே உரித்தான களையுடன் கச்சேரியைத் துவங்குகிறார் ஸ்ரீவித்யா – எம். ஆர்.வி.பைரவி என்ற பாடகியாக! ‘ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம்…’ என்று பாடுகிறார். ஓர் இரண்டரை மணி நேரத்தில்தான் எத்தனை உணர்ச்சிகள்!

ஒரு பெரிய இசைக் கச்சேரியே திரைக்கதையாக நம் கண் முன் விரிகிறது.

நாட்டைச் சீர்திருத்த விரும்பும் ஒரு மாணவன், சமூகத்தின் அநீதிகளைக் கண்டு பொறுக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அடிபட்டுக் கிடந்த அவனை, கச்சேரி செய்து விட்டுத் திரும்பும் ஸ்ரீவித்யா எடுத்து வருகிறார். இரண்டு வாரம் அவர்கள் வீட்டில் தங்கிக் குணம் அடைகிறான். அங்கே அன்பு, அபிமானமாக, பற்றாக வளர்கிறது.

இளம் வயதில் கல்யாணம் செய்துகொண்ட பைரவி, கணவன் தன்னைக் கைக்குழந்தையுடன் விட்டுவிட்டு ஓடிப்போன நிலையில், ஒரு குழந்தைக்குத் தாயாய் இருப்பது தன் எதிர்கால இசை வாழ்க்கைக்கு ஊறு செய்யுமோ என்ற பயத்தில், தன் மகளையே அநாதை என்று கூறி எடுத்து வளர்க்கிறார். பலன்? வயது வந்த மகளுக்கு உண்மை தெரியும்போது மகள் வெகுள்கிறாள். தாயை உதாசீனம் செய்கிறாள். வீட்டை விட்டு வெளியேறி, மேஜர் சுந்தர் ராஜனின் வீட்டுக்குப் போய்ச் சேருகிறாள்.

மேஜரின் மகன் (கமல்ஹாசன்) பாடகி மீது காதல் கொள்கிறான். பாடகியின் மகள் (ஜெயசுதா) மேஜர் மீது காதல் கொள்கிறாள். கதையில் சிக்கல் துவங்கிவிட்டது.

இடையில், பாடகியின் ஓடிப்போன கணவன் (ரஜினிகாந்த்) கான்சர் பேஷன்ட்டாக வருகிறான். மகன், பாடகியை அழைத்துக் கொண்டு திருமணத்திற்குத் தந்தையின் அனுமதி பெற வீட்டுக்கு வருகிறான். அவரோ ‘நாளை உனக்குத் தாயாகப் போகும் பெண்ணைப் பார்’ என்று ஜெயசுதாவை அறிமுகப்படுத்துகிறார்.

‘அபூர்வ ராகங்கள்’ என்ற தலைப்பிலே அபூர்வமான காதல் போராட்டங்களை, வாழ்க்கைப் போராட்டங்களைக் காட்டிச் செல்கிறார் பாலசந்தர். கதாபாத்திரங்களுடன் ஐக்கியமாகிவிடுகிறோம். நடிப்பு, நடிகர்கள், நடிகைகள் என்பதெல்லாம் மறந்துபோக, வாழும் சில மனிதர்கள் திரையிலிருந்து வந்து நம்முடன் வாழத் துவங்கிவிடுகிறார்கள். பட முடிவில் பாடகியின் முகம், பேசும் விழிகள் நம் நினைவில் தேங்கிவிடுகிறது. பலாத்காரம் நிறைந்த இளைஞன் நம் அனுதாபத்தில் தோய்ந்துவிடுகிறான்.

பாலசந்தரின் படம் ஒரு நுட்பமான இனிய அனுபவம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: எதுவுமில்லை

ஓம்காரா


ஒதெல்லோ நாடகத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நான் பார்த்ததில்லை, ஆனால் படித்திருக்கிறேன். பிடிக்கவே இல்லை. ஒதெல்லோ ஒரு cliche ஆகிவிட்டது. தன்னை முழுதும் நம்பும் நண்பன் மனதை கலைக்கும் இயகோ, ஒதெல்லோவைத் தவிர வேறு யாரையும் நினைக்கக்கூட முடியாத டெஸ்டமோனா, எடுப்பார் கைப்பிள்ளை ஒதெல்லோ என்பதெல்லாம் மீண்டும் மீண்டும் வரும் stock characters ஆக மாறிவிட்டன. அதுவும் மேடை நாடகம். ஒதெல்லோ பேசுவார் பேசுவார் பேசிக்கொண்டே இருப்பார். நான் அங்கே போய் இவனை வென்றேன், இங்கே போய் இவனைக் கொன்றேன் என்று. இதை எல்லாம் எப்படி படிப்பது? நாடகத்தில் பேசிக் கொண்டே போனால் யார் கேட்பது? ராமன் எத்தனை ராமனடி நாடகத்தில் சிவாஜி ஒவ்வொரு பொம்மை கோட்டையாக காட்டி அதோ ராய்கர் கோட்டை, அதை பிடிக்கப் போய் என் நண்பனை இழந்தேன் என்று முழ நீளம் வசனம் பேசுவார். சிவாஜி மாதிரி ஒரு நடிகர் வசனம் பேசி நடிக்கும்போது கொஞ்சம் powerful ஆக இருந்தது – அதுவே பத்து நிமிஷம் ஆன பிறகு எப்போது முடியும் என்று தோன்ற ஆரம்பித்தது. ஒதெல்லோ நாடகத்தை படிக்கும்போது சரிதான், மிகச் சிறந்த நடிகர்களால் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க முடியுமோ என்னவோ, நாடகத்தில் இதை எல்லாம் பேசத்தான் முடியும், இது என்ன சினிமாவா என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் எந்த நாளும் மாக்பெத், ஜூலியஸ் சீசர் மாதிரி வராது என்று தோன்றியது.

ஓம்காரா பார்த்துத்தான் நான் ஒதெல்லோவை புரிந்துகொண்டேன். ஒதேல்லோவின் சந்தேகங்கள், டெஸ்டமோனாவின் innocence, இயகோவின் சூழ்ச்சி எல்லாம் இன்று cliche ஆக இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் என்றும் எங்கும் இருப்பவை. அவற்றை முதன் முதலாக ஷேக்ஸ்பியர் மேடையில் கொண்டு வந்தபோது அது மிகவும் சக்தி நிறைந்த ஒரு நாடகமாக, மனதை தொட்ட ஒரு நாடகமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஓம்காரா ஒதெல்லோவை இந்தியாவின் cow-belt மாகாணங்களுக்கு கொண்டு வருகிறது. எனக்கு ஹிந்தியின் accent எல்லாம் பார்த்து எந்த இடம் என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு ஹிந்தி தெரியாது. ஆனால் அனேகமாக மேற்கு உத்தரப் பிரதேசம் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். ஓம்காரா சுக்லா – ஓமி – (ஒதெல்லோ) ஒரு லோக்கல் எம்.எல்.ஏ.வின் (பூரா படத்திலும் அவர் பேர் சொல்வதில்லை, பாய்சாப் அவ்வளவுதான்) தலைமை அடியாள் – பஹூபலி. எம்.எல்.ஏ. ஜெயிலில் சர்வ சுகங்களுடனும் இருக்கிறார். அவர் மேல் ஒரு கேஸ் நடக்கிறது. அவருடைய வக்கீலின் பெண் டாலி (டெஸ்டமோனா) கல்யாண மேடையிலிருந்து ஓமியுடன் ஓடிவிடுகிறாள். ஜெயிலிலேயே விசாரிக்கும் எம்.எல்.ஏ. பாய்சாப் பெண் அவள் விருப்பப்படிதான் போயிருக்கிறாள் என்று ஓமிக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லிவிடுகிறார். அப்பா வக்கீல் தலை குனிவோடு திரும்பும்போது கடுப்போடு ஓமியிடம் சொல்கிறார் – பெத்த அப்பனையே ஏமாற்றும் பெண் உன்னையும் ஏமாற்றிவிடுவாள் என்று. ஓமியின் சேவையால் சாட்சிகள் உடைந்து, செத்துப்போய், பாய்சாப் ரிலீஸ் ஆகிவிடுகிறார். கல்யாணம் சுப முகூர்த்தத்துக்காக கொஞ்சம் தள்ளிப் போகிறது. டாலி ஓமி வீட்டில்தான் தங்கி இருக்கிறாள். ரிலீஸ் ஆன பாய்சாப் இப்போது எம்.பி. தேர்தலில் நிற்கப் போகிறார். ஓமிக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கிறார். ஓமி பஹூபலி பதவிக்கு தனக்கு உண்மையாக உழைத்த, தன் கூட்டத்தின் அறிவிக்கப்படாத உபதலைவன் லங்டாவை (இயகோ) விட்டுவிட்டு காலேஜ் கூட்டத்தில் பிரபலமாக இருக்கும் கேசு ஃபிரங்கியை பஹூபலி ஆக்குகிறான். லங்டா தன் தம்பி மாதிரி, தன் செய்கையை புரிந்து கொள்வான் என்று எதிர்பார்க்கிறான். வெறுத்துப் போகும் லங்டாவோ கேசுவுக்கும் டாலிக்கும் உறவு என்று நம்ப வைக்கிறான். ஓமிக்கு நம்பவும் முடியவில்லை, ஆனால் லங்டா செய்யும் சதிகளை தாண்டவும் முடியவில்லை. கல்யாண ராத்திரி அன்று டாலியை கொல்கிறான். லங்டா, லங்கடாவின் மனைவி, ஓமி எல்லாரும் இறக்கிறார்கள்.

படத்தின் பெரிய வலிமை ஒரு cow-belt சின்ன ஊரை, அரசியல் நிலையை தத்ரூபமாக கொண்டு வருவதுதான். அடியாள் அரசியல். கெட்ட வார்த்தை சாதாரணமாக புழங்குகிறது. சூத்தியா என்று சொல்லாத இடமே இல்லை.

சின்ன சின்ன விஷயங்களை செதுக்கி இருக்கிறார்கள். கேசுவை மாட்டிவிட லங்டா அவனை குடிக்க வைப்பான். சண்டை வரும் என்று தெரியும்போது வெளியே போய்விடுவான். சண்டையை தடுக்க ஓமி ஓடி வந்த பிறகுதான் லங்க்டாவும் வருவான் – லங்டா காதில் பூணூல் சுற்றி இருக்கும். (பிராமணர்கள் சிறுநீர் அல்லது நம்பர் டூ போகும்போது பூணூலை காதில் சுற்றிக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம் – அனேகமாக நனையாமல் இருப்பதற்காக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். 🙂 ) ஜெயிலில் போலீஸ்காரர்கள் லவுட்ஸ்பீக்கரில் செல் ஃபோன், துப்பாக்கி, அது இது உள்ளே கொண்டு வரக்கூடாது என்று கத்திக் கொண்டிருப்பார்கள். பாய்சாபை பார்க்க வந்திருக்கும் லங்டா இதெல்லாம் என்கிட்டே இருக்கு, என்ன பண்ணப் போறே என்று கேட்பான். ரயிலில் போய்க்கொண்டிருக்கும் பாய்சாப், சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த சொல்வார். வரும் கார்டிடம் வண்டியை ரிவர்சில் எடு, இவர்களை போன ஸ்டேஷனில் இறக்க வேண்டும் என்பார். அதிகாரத்தை எவ்வளவு சர்வசாதாரணமாக துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்று இதை விட நன்றாக காட்ட முடியாது. ஓமிக்கு படத்தில் ஆதா என்று ஒரு நிக்நேம். ஆதா என்றால் பாதி என்று அர்த்தம். ஓமியின் அப்பா பிராமணர், அம்மா “கீழ் ஜாதி”. அரை பிராமணனாம். ஓமிக்கு டாலிக்கு தன் மேல் காதல் என்று தெரியாது. டாலி எழுதும் முதல் காதல் கடிதத்தில் நீ என்னைக் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நீ கொன்றவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்துக் கொள் (அதாவது நான் தற்கொலை செய்து கொள்வேன்) என்று எழுதுவாள். கேசு டாலிக்கு I just want to say I love you என்ற பாட்டை கிடாரில் வாசித்துக் கொண்டே பாட சொல்லிக் கொடுப்பான். அப்போது botttom என்ற வார்த்தையை baa(d)am என்று சொல்ல வேண்டும் என்று சொல்லி சொல்லிப் பார்ப்பான். டாலிக்கு baatttam என்றுதான் வரும்! கிராமம், சிறு நகரக்காரர்களின் ஆங்கில உச்சரிப்பை நன்றாக காட்டி இருப்பார்கள். லங்டாவிடம் கேசுவுக்கும் டாலிக்கும் உறவு இருக்கிறதா இல்லையா? ஹான் யா நா என்று ஓமி கேட்டுக் கொண்டிருப்பான். அதற்குள் அவர்கள் கொல்ல வந்திருக்கும் ஆள் அருகே வந்துவிடுவான். அவனைக் கொன்றுவிட்டு ஒன்றுமே நடக்காதது மாதிரி விட்ட இடத்தில் ஓமி லங்டாவிடம் தன் கேள்வியை தொடருவான்.

செய்ஃப் அலி கான் (லங்டா) sizzles. எனக்கு தெரிந்து அவர் இரண்டு படங்களில்தான் பிரமாதமாக நடித்திருக்கிறார். தில் சாத்தா ஹை, மற்றும் ஓம்காரா. அவருடைய கட்டுமஸ்தான உடலும், கொஞ்சம் நொண்டி நடக்கும் நடையும் (லங்டா என்றால் நொண்டி), கலக்குகிறார். எல்லாருமே கலக்குகிறார்கள், ஆனால் இவர் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். அவரும் ரஜ்ஜுவும் ஒரு பெரிய கிணறு பக்கத்தில் உட்கார்ந்து தண்ணி அடிக்கும் சீன் அபாரம். ரஜ்ஜு தண்ணீரில் குதித்ததும் அவர் உருண்டு புரண்டு சிரிப்பது அற்புதமான சீன். கீழே க்ளிப்.

இன்னொரு க்ளிப் – செய்ஃப் தன் நண்பனிடம் அவன் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை ஓமி தூக்கிக் கொண்டு போகப் போகிறான் என்பதை சொல்கிறான்.

அஜய் தேவ்கன் அபாரம்.

கரீனா கபூருக்கு நடிக்கவும் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஜப் வி மெட் மாதிரி நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். இதில் அருமையாக நடித்திருக்கிறார். ஆனால் கலக்குவது கொங்கோனா சென் ஷர்மாதான். லங்டாவின் மனைவி, ஓமியின் உடன் பிறவாத சகோதரி. டாலியை தன் வீட்டுப் பெண்ணாக வரிக்கிறார். அவருடைய வீட்டுக்குத்தான் கல்யாண பாராத் (ஊர்வலம்) வரவேண்டும். ஒரு நல்ல டயலாக் – டாலி சொல்வாள் – ” என் பாட்டி சொன்னாங்க – ஒரு ஆம்பளயின் மனசுக்கு வழி அவன் வயித்திலேருந்துதான் தொடங்குதுன்னு” – இவள் அதற்கு பதில் – “அப்படியா? என் பாட்டி சொன்னாங்க வயித்துக்கு கொஞ்சம் கீழே இருந்து தொடங்குதுன்னு!”

நசீருதின் ஷா பாய்சாப். புதிதாக என்ன சொல்வதற்கு இருக்கிறது?

பிபாஷா பாசு (கேசுவின் காதலி) இரண்டு ஐட்டம் பாட்டுக்கு ஆடுகிறார். எனக்கு பிடித்த இடம். கேசு சொல்வான் “ஜபான் காட்லூங்கா!”. இவள் பத்தி சொல்வாள் – “காட்னே கா சாட்னே பி நஹி தேங்கே!” இதை மொழிபெயர்த்தால் மஜாவே இருக்காது, அதனால் ஹிந்தி புரிபவர்கள் மட்டும் சிரித்துக் கொள்ளுங்கள்!

இரண்டு ஐட்டம் பாட்டில் பீடி பாட்டு பெரிய ஹிட். நமக் இஸ்க்குகா பாட்டும் ஹிட். இரண்டு பாட்டையும் கீழே பார்க்கலாம்.

ஆனால் எனக்கு பிடித்த பாட்டு ஜக் ஜாரே குடியா – இங்கே பார்க்கலாம்.

ஒரு கிளாசிக் நாடகத்தை என் போன்ற philistines புரிந்து கொள்ளும்படி எடுத்த விஷால் பரத்வாஜுக்கு ஒரு சபாஷ்!

இந்த படத்தை தமிழில் எடுத்தால்: ஓமி ரோலுக்கு ரகுவரன் (சரி சூர்யா); லங்டாவாக பிரகாஷ் ராஜ் (மாதவன்); கரீனாவாக ஜோதிகா(நயனதாரா). நசீராக கமல்.

2006-இல் வந்த படம். விஷால் பரத்வாஜ் இயக்கம். அஜய் தேவ்கன், செய்ஃப் அலி கான், கரீனா கபூர், விவேக் ஓபராய், கொங்கோனா சென் ஷர்மா, பிபாஷா பாசு, நசீருதின் ஷா நடித்திருக்கிறார்கள். பத்துக்கு ஒன்பது மார்க். A grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: எதுவுமில்லை.