வியட்நாம் வீடு – சாரதாவின் விமர்சனம்


சாரதா கொடுத்த சுட்டியிலிருந்து மீள்பதிவு செய்திருக்கிறேன். நன்றி, சாரதா!

வியட்நாம் வீடு ஒரு quintessential சிவாஜி படம். ஆனால் வி. வீடு பற்றி எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதை நான் சிவாஜியின் இரண்டாம் நிலை படங்களில் ஒன்றாகத்தான் கருதுகிறேன். ஒரே நேரத்தில் சிவாஜி படங்களின் பலத்தையும் பலவீனத்தையும் காட்டும் படம். இப்படி நினைக்கும் என்னையே சாரதாவின் இந்த விமர்சனம் – இல்லை இல்லை புகழுரை – கவர்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காமல், ஓவர் டு சாரதா!

——————————————————————-
சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், நடிகர் திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைக் கொண்ட படங்களில் கண்டிப்பாக இடம் பெறுவது. ஏற்கெனவே விடிவெள்ளி (பிரபுராம் பிக்சர்ஸ்), பாசமலர், குங்குமம் (ராஜாமணி பிக்சர்ஸ்), புபுதிய பறவை (சிவாஜி பிலிம்ஸ்), அன்னை இல்லம் (கமலா பிக்சர்ஸ்), தெய்வ மகன் (சாந்தி பிலிம்ஸ்) போன்ற படங்கள் சொந்தப் படமாக இருந்தபோதிலும் ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் படமாக தயாரிக்கப்பட்டது. இப்போதும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் எம்ப்ளமாக நடிகர் திலகமும், ராஜாமணி அம்மையாரும் சாமி படங்களுக்கு பூஜை செய்வதைக் காட்டும்போது அங்கு வியட்நாம் வீடு படத்தின் கிளாப் போர்டு இருப்பதைப் பார்க்கலாம்.

ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒரு பிராமண குடும்பத் தலைவருக்கு பொறுப்பில்லாத பிள்ளைகளால் ஏற்படும் வாழ்க்கைப் போராட்டமே கதையின் ஆணிவேர். புதிதாக வீடு கட்டி குடி புகும் விழாவோடு படம் துவங்குகிறது. எல்லாவற்றிலும் கௌரவம் பார்க்கும் (கர்வம் அல்ல) பத்மநாப ஐயர். அதனால் பெயரே பிரஸ்டிஜ் பத்மநாபன். கோடு போட்டதுபோல வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு அதன்படியே நெறி பிறழாமல் வாழ நினைக்கும் அவருக்கு, ஜாடிக்கு ஏற்ற மூடியாக மனைவி சாவித்திரி (பத்மினி) அமைந்தாரே தவிர, அவரது பிள்ளைகளை அவரைப் போல நேர்கோட்டில் வளர்க்க முடியவில்லை. ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் பணி புரியும் மூத்தபிள்ளை ஸ்ரீதர் (ஸ்ரீகாந்த்). மனைவி சொல்லே மந்திரமாக மனைவியின் சொல்வதற்கெல்லாம் ‘பூம் பூம் மாடாக’ தலையாட்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. அவன் அடிமைத்தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாமனார், மாமியார் பற்றி வத்தி வைப்பதையே வேலையாக அலையும் அவன் மனைவி மாலா (ரமாப்ரபா). ரமாப்ரபாவுக்கு இப்படியெல்லாம் வில்லியாக நடிப்பில் கொடிகட்ட முடியுமா என்பது நமக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், மாமியாருக்கு எதிராக வில்லத்தனம் என்றால்தான் நம் பெண்கள் வெளுத்து வாங்குவாங்களே (ஆனால் நான் ரொம்ப நல்ல் பொண்ணுங்க, என் மாமியாரைக் கேட்டுக்குங்க).

இரண்டாவது மகனாக, அன்றைய கல்லூரி மாணவர்களின் ஸ்டைலில் நீளமாக தலைமுடி வளர்த்துக்கொண்டு அலையும் கல்லூரி மாணவன் (நாகேஷ்), இவர்கள் இருவருக்கும் கீழே பருவமெய்திய ஒரு தங்கை. குழந்தைகள் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே என்று எண்ணி மனதுக்குள் குமுறும் தந்தை, ஆனாலும் அவருக்கு வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆறுதல் சொல்லும் மனைவி. அதனால்தான் வேலையிலிருந்து திடீரென்று ரிட்டையர் ஆகும்போது அது அவருக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. கையில் தானே சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் அவர், நேராக அம்மாவின் படத்துக்கு முன்பு போய் நின்று கொண்டு “அம்மா, நான் ரிட்டையர் ஆயிட்டேன், உன் பிள்ளைக்கு இன்னைக்கு அம்பத்தஞ்சு வயசு ஆயிடுத்து. I AM COUNTING MY DAYS TO GRAVE” என்று குரல் உடைந்து தடுமாறுகிறார். அப்போது அங்கே வரும் மனைவியிடம் “சாவித்திரி, நான் ரிட்டயர் ஆயிட்டேண்டி” என்று சொல்ல “என்னன்னா சொல்றேள்? அதுக்குள்ளாகவா?” அன்று கேட்க “என்னடி பண்றது, திடீர்னு கூப்பிட்டு ‘உனக்கு வயசாடுச்சு, நீ வீட்டுக்கு போடா’ன்னு அனுப்பிச்சுட்டான். அந்த கம்பெனியோட வளர்ச்சிக்காக நான் என்னவெல்லாம் பாடுபட்டிருப்பேன்! எல்லாத்தையும் மறந்திட்டு போடான்னு அனுப்பிட்டானே” என்று குமுறும்போது முகத்தில், சோகம், ஏமாற்றம், விரக்தி, இனி மிச்சமுள்ள காலத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற அச்சம், இனி நாளையிலிருந்து வேலையில்லாதவனாகிவிட்டோம் என்ற சூன்யம்… எல்லாம் கலந்த கலவையாக அந்த ஒரு முகத்தில்தான் எத்தனை முகபாவம், என்னென்ன உணர்ச்சிப்பிரவாகம்!

(அடப்பாவி மனுஷா… எங்கிருந்தய்யா கத்துக்கிட்டே இதையெல்லாம்?. உனக்குப்பிறகு வந்தவர்கள் உன்னை காப்பியடித்து செய்திருக்கலாம். ஆனால் நீ யாரையும் காப்பியடிக்கவில்லையே..!. காரணம், உனக்கு முன் எவனும் இதையெல்லாம் செய்து காட்டவேயில்லையே… பின் எங்கிருந்து உனக்கு மட்டும் இப்படியெல்லாம்…!!!)

வேலை முடிந்து வீட்டுக்குள் நுழையும் மூத்த மகனிடம், தாய் மெதுவான குரலில் “டேய் ஸ்ரீதரா, உங்க அப்பா ரிட்டயர்ட் ஆயிட்டாருடா. நீ உங்க அப்பா கிட்டே போயி ‘அப்பா கவலைப்படாதீங்க, இனிமே குடுமபத்தை நான் பாத்துக்கறேன்’ன்னு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லுடா” என்ற் கெஞ்சுவது போல கேட்கும் தாயின் குரலுக்கு செவி மடுத்து அப்பாவின் அறைக்குப் போகப்போகும் கணவனை மனைவி மாலா வழி மறித்து, தன் அறைக்கு அழைத்துச்சென்று அவனுக்கு தூபம் போடுவது டிபிகல் நடுத்தர வர்க்க குடும்பத்தின் அச்சடித்த பிரதிபலிப்பு என்றால்…

அப்பா ரிட்டையர் ஆன முதல் மாதம் மகன் சம்பளத்தை வாங்கி வந்து தங்களிடம் தருவான் என்று எதிர்பார்த்திருக்கும்போது, அவன் வந்து “அம்மா, இந்த மாதத்துக்கு எனக்கும் மாலாவுக்கும் சாப்பாட்டுப் பணம்” என்று நீட்டுவது கொடுமை.

தங்களுக்குள் திறந்த புத்தகமாக வாழ்ந்து விட்ட பத்மநாபன்-சாவித்திரி தம்பதியினரிடையே, எந்த ஒளிவு மறைவுமில்லை என்பதை எடுத்துக் காட்டும் அந்த வசனம். ரிட்டையராகி வீடு வந்த பத்மநாபன், தயங்கி தயங்கி தன் மனைவியிடம் “சாவித்திரி, என்னுடைய சம்பளத்தில் இருந்து மாசாமாசம் எதுவும் சேர்த்து வச்சிருக்கியா?” என்று கேட்க “என்னன்னா, உங்களுக்கு தெரியாமல் நான் என்னைக்கு…”, முடிக்கும் முன்பாகவே அவர் “இல்லையில்லை, சும்மாதான் கேட்டேன்” என்று பதறும் இடம்.

பார்க்கில் வாக்கிங் போகும்போது எவனோ ஒருத்தன், “நாளைக்கு இந்நேரம் நான் பிரஸ்டிஜ் பத்மனாபனுடைய மாப்பிள்ளையாகியிருப்பேன்” என்று சொல்வதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோகும் அவர், வீட்டுக்குத் தெரியாமல் அந்த எவனோ ஒருவனுடன் ஓடிப்போகும் மகளை ரயில்வே ஸ்டேஷனில் தோளில் கைவைக்க, திரும்பிப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோகும் மகளை, கோபமும், ‘நீயாடி இப்படி’ என்று அதிர்ச்சியுமாக பார்க்கும் அந்த பார்வை, அந்த பாவம், அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு… நூறு பக்க வசனங்களுக்கு சமம்.

மனைவி மாலாவின் பேராசையால் அலுவலக வேலைகளில் ஊழல் செய்து லஞ்சம் வாங்கி தன் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் ஸ்ரீதர், அப்படி தவறான பாதையினால் ஏற்பட்ட கூடா நட்புகளின் காரணமாக மதுவருந்திவிட்டு, தள்ளடியபடி வீட்டுக்குள் நுழைய, அதைப் பார்த்து பதறிப் போன அம்மா, இந்த விஷயம் பத்பநாபனுக்கு தெரியாமல் மறைக்க, அவனது ரூம் வரை கொண்டு விட்டு விட்டுத் திரும்பும்போது, இத்தனையையும் பார்த்துக்கொண்டு கண்களில் ரௌத்ரமும், அதிர்ச்சியும் பொங்க பத்மநாபன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து பத்மினி அதிர்வது உச்சம்.

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவருக்கு இடையூறாக அண்ணனும் அண்ணியும் ட்ரான்ஸிஸ்டரில் சத்தமாக கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த தங்கை, அவர்களுடன் சண்டைபோட்டு, ட்ரான்ஸிஸ்டரைப் பிடுங்கி வீச, தங்கையை அவன் கை நீட்டி அடிக்க, தான் செல்லமாக வளர்த்த தன் மகளை கைநீட்டி அடிப்பதைப் பார்த்து பத்மநாபன் மகனை அடிக்க, அவனும் அவன் மனைவியும் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, அப்படியே கேமரா சுவரின் பக்கம் திரும்ப சுவரில் விரிசல். (சுவரில் தெரிவது விரிசல் மட்டுமல்ல, இயக்குனர் பி.மாதவனின் முகமும்தான்).

கோபித்துக்கொண்டு தன் தந்தை வீட்டுக்குப் போகும் மாலாவையும் ஸ்ரீதரையும், அவளுடைய தந்தை மட்டும் ஏற்றுக்கொள்வாரா? பிரஸ்டிஜ் பத்மநாபனின் சம்மந்தியாயிற்றே! வாசலிலேயே நிற்க வைத்து அவர்களைக் கண்டித்து, மீண்டும் பத்மநாபன் வீட்டுக்கே அழைத்து வருகிறார். நடந்தவற்றைக் கொஞ்சம் கூட மனதில் வைத்துக்கொள்ளாமல் “ஏன் இன்னும் நிக்கறேள்? மேலே போங்கோ” என்று அனுப்பிவைக்க, அவர்கள் மாடியில் ஏறும் சமயம் இன்னொரு பெரிய வில்லங்கம் வருகிறது. ஆம், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி விஜயன், தன் சக அதிகாரிகள் சகிதம் வீட்டை சோதனை போட வருகிறார். சோதனையின்போது, ஏராளமான சொத்துக்கள், நகைகள், பக்கத்து வீட்டுப் பெண் பெயரில் ஓடும் டாக்ஸி போன்றவை சிக்க பத்மநாபன் அதிர்ந்து போகிறார். ஸ்ரீதரை அரெஸ்ட் பண்ணி அழைத்துப் போகும்போது, மாலாவின் அப்பா வி.எஸ்.ராகவனைப் பார்த்து, “சம்மந்தி, பாத்தேளா? இந்த வீட்டோட பிரஸ்டிஜும் போயிடுத்து, ஜஸ்டிஸும் போயிடுத்து” என்று பத்மநாபன் புலம்பும்போது நம்மை பரிதாபத்தின் உச்சத்துக்கு கொண்டு போய்விடுவார்.


நம்மை நெஞ்சைப் பிழியும் இன்னொரு முக்கியமான கட்டம், ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்‘ பாடல் காட்சி. முதலிரண்டு வரிகளை மட்டும் பாரதியார் பாடலில் இருந்து எடுத்துக் கொண்டு, மேற்கொண்டு காட்சிக்கு தகுந்தாற்போல கவியரசர் கண்னதாசன் புனைந்த அற்புத பாடல், ‘மாமா’வும் ‘சின்ன மாமா’வும் (புகழேந்தி) சேர்ந்தமைத்த மனதை வருடும் மெட்டு. இந்த மாதிரிப் பாடல்களைப் பாடுவதற்கென்றே பிறந்த டிஎம்எஸ் பாட, அதற்கு நடிகர் திலகமும், நாட்டியப் பேரொளியும் முகபாவங்காளாலேயே உணர்ச்சிகளைக் கொட்ட…

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

பல்லவி முடிந்து இடையிசையில், கைப்பிடித்தபடி மணவறையை சுற்றி வரும் பஞ்சகச்சம் கட்டிய பத்மநாபன், மடிசார் கட்டிய சாவித்திரி தம்பதியின் இளமைக் கால நினைவுகள். அந்த நினைவில் தொடரும் அனுபல்லவி…

உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

நம்பிய பிள்ளைகள் ஏமாற்றி விட்டனர். விழுதுகளாய் நின்று தங்களைத் தாங்குவார்கள் என்று நம்பியிருந்த விழுதுகள் ஒவ்வொன்றாக மறைய, துவண்டு விழப் போகும் சமயம், மனைவி ஓடிவந்து தாங்கி அணைத்துக்கொள்ள…

சாலைச் சுமைதாங்கி போலே மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

மீண்டும் தம்பதிகளின் பழைய முதலிரவுக் காட்சி. மடிசார் மாமியின் மடியில் தலைவைத்து உறங்கும் இளைய பத்மநாபன். அவரது அழகான முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் சாவித்திரி, சட்டென்று காட்சி மாறி தரையில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் மடியில் தலை வைத்து தரையில் படுத்திருக்கும் பத்மநாபனைக் காணும்போது, கல்மனம் படைத்தவர்கள் தவிர அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும்.

முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும்
பிள்ளைக் குலமடியோ என்னை பேதமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
தேவையை யாரறிவார்… என்…… தேவையை யாரறிவார்
உன்னைப்போல தெய்வம் ஒன்றேயறியும்

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில்…. நீர் வழிந்தால்…. என் நெஞ்சில்…..
(இருவரின் விம்மல் நம் நெஞ்சுக்குள் ஊடுருவும்)

பாடல் முடிந்ததும் அமைதி, எங்கும் நிசப்தம், ஒரு கைதட்டல் இல்லை, விசில் இல்லை. மாறாக சத்தமில்லாத விம்மல்கள், கைக்குட்டைகளிலும், வேஷ்டி நுனிகளிலும், முந்தானையிலும் கண்களைத் துடைத்துக் கொள்ளும் ரசிகர் கூட்டம்.

எழுதியவர் இல்லை, இசை வடிவம் தந்தவர்கள் இல்லை, இயக்கியவரும் போய் விட்டார், நடித்தவர்களும் மறைந்து விட்டனர். பாடியவர் மட்டும் இருக்கிறார். பல்லாண்டு வாழ்க.

(எங்கள் பிள்ளைக்கு இப்போதே இந்தப்படங்களைப்போட்டுக் காட்டுகிறோம். ஏனென்றால் நாளை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முதியோர் இல்லத்துக்கு அவன் அப்ளிகேஷன் வாங்கிக்கொண்டு வந்து நிற்கக்கூடாதில்லையா?)

இப்படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள்…..

பத்மநாப ஐயரின் திருமண நாள் கொண்டாட்டத்தில் பாடும் பாடல் “உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே (உண்மைதானே) உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பும் இதயமே“. இப்பாடலை நான்கு வித்தியாசமான மெட்டுக்களில் அமைத்திருப்பார் மாமா.


வயதான காலத்தில், தங்களின் திருமண ஃபோட்டோவைப் பார்க்கும்போது, இருவரது கண்களிலும் விரியும் ஃப்ளாஷ்பேக் பாடல் “பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா“. படத்திலேயே நடிகர் திலகமும், நாட்டியப் பேரொளியும் இளமைத் தோற்றத்தில் முழுக்க வருவது இந்தப் பாடல் காட்சியில் மட்டும்தான்.

இளைஞர்களைக் கவர்வதற்கென்று, கல்லூரி மாணவர்கள் பாடுவதாக போடப்பட்ட பாடல் “மை லேடி கட்பாடி நீயே எந்தன் ஜோடி“. (ஏ.எல்.ராகவன் குழுவினர்) இப்படத்தின் தரத்துக்கு தேவையில்லாத பாட்டு. நாகேஷ், தங்கவேலு போன்றவர்கள் இருந்தும் கடும் நகைச்சுவைப் பஞ்சம். ஈட்டிக்காரனிடம் கடன் வாங்கி விட்டு, அவன் துரத்த, இவர்கள் ஓடுவது எல்லாம் காமெடியா?.

கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, திரையிசைத்திலகம் கே.வி.எம். மாமா இசையமைத்திருந்தார். கதை வசனம் எழுதியவரை எங்கே எல்லோரும் மறந்துவிடப்போகிறார்களோ என்ற எண்ணத்தில் பின்னாளில் ‘வியட்நாம் வீடு சுந்தரமாகவே‘ ஆகிப்போனார்.

படம் எப்படி முடியப்போகிறது என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருப்பார் இயக்குனர் பி.மாதவன். பத்மநாபன் ஆபரேஷனுக்குப் போகும்போது சோகமாக முடியப் போவது போலிருக்கும். ஆபரேஷனுக்காக ஸ்ட்ரெச்சரில் படுக்கப்போகும் பத்மநாபன், தன் கையில் வாட்ச் இருப்பதைப் பார்த்ததும் அதைக் கழற்றி மனைவியிடம் கொடுக்கப் போகும்போது பார்த்துவிட்டுச் சொல்வார் – “கடிகாரம் நின்னு போச்சுடி சாவித்திரி” (இந்த இடத்தில் தியேட்டரில் ‘ஐயோ’ என்ற முணுமுணுப்பு கேட்கும்).

ஆனால் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சுபமான முடிவை எதிர்நோக்கியிருப்பது போலிருக்கும். திடீரென மீண்டும் கதை மாறி, பத்மநாபன் இறந்து போவதுபோல முடிந்து நம் நெஞ்சில் சோகத்தை சுமக்க வைத்துவிடும். ஆனால் அழுகை, சத்தம், கூக்குரல் என்று எதுவுமில்லாமல் சோகத்தை அப்படியே ஸ்டில்களில் நிறுத்தி படத்தை முடித்திருப்பது அருமையான உத்தி.

சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி, திருச்சி பிரபாத் உட்பட தமிழகத்தில் ஐந்து நகரங்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடிய இப்படம் நடிகர் திலகத்தின் திறமையின் உரைகல்லாக அமைந்த படங்களில் ஒன்று.

‘வியட்நாம் வீடு’ என்ற காவியப்படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

** படமாக்கப்படுவதற்கு முன்னர் இது சிவாஜி நாடக மன்றத்தால் பல நூறு முறை மேடை நாடகமாக நடத்தப்பட்டது. படத்தில் பத்மினி நடித்த ரோலில், நாடகத்தில் (நடிகர் திலகத்தின் ஜோடியாக) நடிகை ஜி.சகுந்தலா நடித்திருந்தார். (சி.ஐ.டி.சகுந்தலா அல்ல, ஜி.சகுந்தலா)

** வியட்நாம் வீடு திரைப்படம், 1970-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக (தி.மு.க. தலைமையிலான) தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு பெற்றது. (‘தி.மு.க. தலைமையிலான’ என்ற சொற்றொடர் எதற்கு? “அன்றைக்கு காங்கிரஸ் அரசு இருந்தது, சிவாஜி காங்கிரஸ்காரர் என்பதால் கொடுத்தார்கள்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதைத் தவிர்க்கத்தான்).

** ” I AM COUNTING MY DAYS TO GRAVE” என்ற வார்த்தைகளை டைப் செய்தபின்னர், சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு என்னால் டைப் செய்ய முடியவில்லை. கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. கைகள் நடுங்கின. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தேன்.

——————————————————————-

மீண்டும் ஆர்வி: என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் சாரதாவின் விவரிப்பைப் படிக்கும்போதே மனம் கனக்கிறது. பார்ப்பவர்களுக்கு எப்படி இருந்திருக்கும், அதுவும் படம் வந்த காலகட்டத்தில் என்று சுலபமாக யூகிக்கலாம். படம் வந்தபோது தமிழ் கூறும் நல்லுலகம் என்ன நினைத்தது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த விகடன் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம், படங்களின் பட்டியல், சாரதா பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆர்வியின் விமர்சனம்
விகடன் விமர்சனம்

கே.வி. மகாதேவன் பேட்டி


விகடனில் 29-12-1968 அன்று வெளியான பேட்டி. கே.வி. மகாதேவன் கந்தன் கருணை படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளராக இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது எடுக்கப்பட்டது. விகடனுக்கு நன்றி!

கோல்டன் ஸ்டுடியோ தியேட்டரில் பாட்டு ஒன்று ஒலிப்பதிவாகிக் கொண்டிருக்கிறது. பி.சுசீலா தனது கவர்ச்சிக் குரலில் சுந்தரத் தெலுங்கிலே பாடிக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் நின்று கொண்டு, ஏதோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

நம்மைக் கவனித்த கே.வி.எம். “ஒரு நிமிஷம்!” என்று சொல்லிவிட்டு, தன் உதவியாளர் புகழேந்தியிடம் போய்ப் பேசுகிறார். தியேட்டரை அடுத்து இருக்கும் ஒலிப்பதிவாளர் அறைக்கு வருகிறோம். அங்கு வந்த கே.வி.எம். நம்மை உட்காரச் சொல்லிவிட்டுத் தானும் உட்காருகிறார்.

“ஒரு தெலுங்குப் பாட்டு ரிக்கார்டிங் நடக்குது! அதுக்குத்தான் ஒத்திகை பார்க்கிறோம்! பாட்டும் டியூனும் எப்படி?”

“பாட்டைப் பத்தி எனக்குத் தெரியாது. டியூன் நல்லா இருக்கு. ஏன் சார், இந்தச் சினிமா சங்கீதத்தை டப்பா சங்கீதம்னு சில பேர் சொல் றாங்களே?” – கேள்வியை முடிக்கும்முன், “யார் சொன்னது? இப்போ, கர்னாடக சங்கீதத்தையும், மேல்நாட்டுச் சங்கீதத்தையும் கலந்து போடறோம்; சில நாட்டுப் பாடல் மெட்டுகளையும் கலந்து போடறோம். இது டப்பா சங்கீதமா? வேணுமானால் எல்லாம் கலந்த பஞ்சாமிர்தம்னு சொல்லலாம்!”

“எனக்கு ஐம்பது வயசாகிறது! ஏதோ, நானும் கஷ்டப்பட்டு உழைச்சிட்டுதான் இருக்கேன்! இப்போதுதான், இந்த வருஷம்தான் என் உழைப்பின் வெற்றி ஜனாதிபதி பரிசா கிடைச்சுது. அதற்கு, என் உதவியாளர்கள், என் இசைக் குழுவினர், பின்னணிப் பாடகர்கள், என் ரசிகர்கள் எல்லாரும்தான் முக்கிய காரணம்!”

“பரிசை நீங்க எதிர்பார்க்கவே இல்லையா?”

“இல்லை! முதல்லே ஏ.எல்.எஸ்சுக்கு நியூஸ் வந்தது. ‘நம்ப கந்தன் கருணையிலே மியூஸிக்குக்காக டெல்லியிலே உங்களுக்குப் பரிசு தராங்க’ன்னாரு. கனவா நினைவான்னு என்னையே நான் ஒரு தடவை கிள்ளிக்கிட்டேன். அப்புறம் ரேடியோ நியூஸைக் கேட்டு வீட்டிலேயும் சொன்னாங்க. அந்தப் பரிசை எனக்கு ஜனாதிபதி கொடுத்ததா நினைக்கலே; ஆண்டவன் கொடுத்ததாவே நினைக்கிறேன்!” என்று சொல்லி, கைகளை உயர்த்திக் கூரையைக் காட்டுகிறார்.

“நீங்கள் சங்கீதத்தை நம்பித்தான் சென்னைக்கு வந்தீங்களா?”

“முதல்லே அப்படித்தான் வந்தேன். அப்புறம்…” சிறிது நேர அமைதிக்குப் பின் தொடருகிறார்.

“நான் மெட்ராஸ்லே பல ஓட்டல்களில் சர்வரா கூட வேலை செய்திருக்கேன். அந்த நாள்லே ஹார்பருக்குப் பக்கத்திலிருந்து அரை நிஜார், பனியனோடு சைக்கிள்லே தினமும் சூளைக்குப் போவேன். லாரி சம்பந்தமா ஏதோ சீட்டு கொடுப்பாங்க; அதைக் கொண்டு போய்க் கொடுக்கணும்! மெஸஞ்சர் மாதிரி வேலை செய்தேன். அந்த நாளிலே கிராமபோன் ரிக்கார்டு எடுக்க டைமிங் வாத்தியம் கூட வாசிச்சிருக்கேன். அதுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? ஒரு பக்கத்துக்கு எனக்குப் பத்தணாவோ பன்னிரண்டணாவோ தருவாங்க! இதையெல்லாம் சொல்ல நான் வெட்கப்படவே மாட்டேன். திருடாம, பொய் சொல்லாம, பிச்சை எடுக்காம எந்தத் தொழில் செய்து பணம் சம்பாதிச்சாலும், அதிலே தப்பு இல்லை.” இதைச் சொல்லும்போது, அவர் கண்களின் ஓரத்தில் நீர் தளும்புகிறது.

“கஷ்டப்பட்டா என்னிக்கும் பலன் உண்டு! கொலம்பியா, எச்.எம்.வி. ரிக்கார்டிங் கம்பெனிகளிலே வாசிச்சிருக்கேன். வேல் பிக்சர்ஸ்லே துணை நடிகனா மாசம் 15 ரூபாய் சம்பளத்துக்கு நடிச்சிருக்கேன். நாடகங்களிலே ஸ்த்ரீபார்ட் போட்டிருக்கேன்! கதா காலட்சேபத்துக்குப் பின்பாட்டுப் பாடியிருக்கேன். என் வாழ்க்கையின் முன் பகுதியில் ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போ அப்படி இல்லை!”

ஒலிப்பதிவு முடிந்து, எல்லோரும் சாப்பாட்டுக்குக் கலைந்து செல்கிறார்கள். “ஃபிரண்ட்ஸ்! எல்லாரும் சாப்பிட்டுட்டு வந்துடுங்க! மத்தியானம் இன்னொரு ஸாங் இருக்கு” என்று குரல் கொடுக்கிறார் ஒருவர். சில விநாடிகளில், இசைப் புயல் வீசிக் கொண்டிருந்த தியேட்டரில் அமைதி நிலவுகிறது.

கே.வி.எம். நம்மோடு பேசிக் கொண்டு இருக்கும்போது, அந்த வழியே வந்த படத் தயாரிப்பாளர் ஒருவர், “என்ன மாப்பிள்ளை, சௌக்கியமா?” என்று கேட்டுக் கொண்டே போகிறார். கே.வி.எம்.முக்கு அவர் நண்பர்கள் இட்ட செல்லப் பெயர் ‘மாப்பிள்ளை’.

“மாப்பிள்ளைக்கு எத்தனை குழந்தைகள்?” என்று நாமும் கேட்கிறோம்.

“ஐந்து குழந்தைகள்! ரெண்டு பையன், மூணு பெண்கள்! பெரியவங்க காலேஜிலேயும், சின்னவங்க கான்வென்டிலேயும் படிக்கிறாங்க. மூத்த பையனுக்குக் கல்யாணப் பேச்சு நடக்குது!” என்று பெருமையாகச் சொல்கிறார்.

“உங்க இசையமைப்பில் யார் யார் பாடியிருக்காங்க?”

பாகவதர், சின்னப்பா, பெரிய நாயகி, மகாலிங்கம் முதல் இப்போ முன்னணியிலே இருக்கிற பின்னணிப் பாடகர்கள் வரை எல்லோரும் பாடியிருக்காங்க! நான் எலந்தப்பயத்திலிருந்து நலந்தானா வரைக்கும் போட்டிருக்கேன். மக்கள் எதை விரும்பறாங்களோ, அதைக் கொடுப்பதுதான் கலைஞனுக்கு அழகு, இல்லையா? பொங்கலுக்கு அடிமைப் பெண் வந்தா, தமிழிலே சுமார் 150 படங்களாகிறது! தெலுங்கிலே இதுவரைக்கும் சுமார் 50 படங்கள் இருக்கும்!” என்கிறார் அடக்கமாக.

கே.வி.எம். அணிந்திருக்கும் வெள்ளைச் சட்டை போலவே அவரது உள்ளமும் வெள்ளையாகத்தான் இருக்கிறது.

அடிமைப் பெண் – என் விமர்சனம்



சின்ன வயதில் டென்டு கொட்டாயில் பார்த்த படம். இன்னும் நினைவில் இருப்பவை: எம்ஜிஆர் க்ளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை போடுவது; பாலைவனக் காட்சிகள்; எம்ஜிஆர் இரட்டை வேஷம் என்றார்களே எங்கே இன்னொரு எம்ஜிஆர் என்று காத்திருந்தது (அது அப்பா எம்ஜிஆர், முதலில் பத்து நிமிஷம் வந்துவிட்டு செத்துப்போய் விடுவார்) அப்போதெல்லாம் அசோகனின் தீவிர பக்தன் ஆகவில்லை.

ஒரு above average சாகசப் படம். சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், அம்மா செண்டிமெண்ட் காட்சிகள், ஜெவின் பெல்லி டான்ஸ், புதுப்பையன் எஸ்பிபிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாட்டு, திமிராக ஜெ பேச சில காட்சிகள், ஜெ பாட ஒரு பாட்டு, சண்டைக் காட்சிகள் இவற்றை சுற்றி எம்ஜிஆருக்காக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை.

1969-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்தப் படம். அவரே இயக்கம். பொதுவாக அவர் நடிக்கும் படங்களை – முக்கியமாக அவர் நடிக்கும் காட்சிகளை – அவர்தான் உண்மையில் இயக்குவார் என்று சொல்வார்கள். இந்தப் படத்தில் டைட்டிலிலேயே அவர் இயக்கியதாக வரும். (நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டும் அவர் இயக்கிய மற்ற படங்கள்) ஜெயலலிதா இரட்டை வேஷம், அசோகன், சந்திரபாபு, சோ, மனோகர், பண்டரிபாய் நடித்து, கே.வி. மகாதேவன் இசையில் வந்த படம்.

அசோகன் (செங்கோடன்?) பண்டரிபாயிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ய, பண்டரிபாய் அவர் காலை வெட்டிவிடுகிறார். பண்டரிபாயின் கணவர் எம்ஜிஆர் அசோகனுடன் ஒரு காலை கட்டிக்கொண்டு – எம்ஜிஆர் எப்பவும் அப்படித்தான். எதிராளியின் கத்தி உடைந்துவிட்டால் தன கத்தியையும் தூக்கிப் போட்டு விடுவார். எப்படியும் அவர்தான் ஜெயிக்கப் போகிறார் – சண்டை போட்டு ஜெயிக்கிறார். ஆனால் அசோகன் பின்னால் இருந்து அவரை குத்தி கொன்றுவிடுகிறார். எம்ஜிஆரின் clan ஆட்கள எல்லாம் அடிமை. பண்டரிபாய் காட்டில் மறைந்து வாழ்கிறார். பையன் எம்ஜிஆர் ஜெயிலில் கூனனாக வளர்கிறார். எப்படியோ ஆற்றில் குதித்து தப்பி, ஜெவிடம் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் கம்பு போன்ற அரிய உண்மைகளை கற்று கூன் போய் வீரனாகிறார். பிறகு எப்படி பாலைவனத்துக்கு போகிறார் என்று மறந்துவிட்டது. (ரொம்ப முக்கியம்!) அங்கே போய் ஏமாறாதே ஏமாற்றாதே என்று ரசிகர்களை ஏமாற்றாமல் பாடுகிறார். பிறகு இன்னொரு திமிர் ஜெவிடம் மாட்டிக் கொள்கிறார். அந்த ஜெவும் இவர் மேல் காதல் ஆகிவிட ஆயிரம் நிலவை கூப்பிடுகிறார். பிறகு அந்த ஜெவுக்கு எல்லாம் நாடகம் என்று தெரிய அவர் கடுப்பாகி இவரை அசோகனிடம் காட்டி கொடுக்கிறார். அசோகன் பப்ளிக்காக அம்மாவை கற்பழிக்கப் போவதாக அறிக்கை விட (படம் பார்த்தபோது இந்த இடம் புரியவில்லை) உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது என்று பாட்டு பாடிக் கொண்டே கோட்டைக்குள் நுழைந்து சிங்கத்தை கொன்று அம்மாவிடம் உருகி சுபம்!

எம்ஜிஆருக்கு காட்சிகளை உருவாக்க தெரிந்திருக்கிறது. சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெயில், ஆற்றில் தப்பி போவது எல்லாம் நன்றாக அமைத்திருப்பார்.

சந்திரபாபு, சோ இருவர் இருந்தும் சிரிப்பு வருவது கஷ்டம்.

ஆயிரம் நிலவே வா ஒன்றுதான் ஏ க்ளாஸ் பாட்டு. ஏமாறாதே ஏமாற்றாதே, காலத்தை வென்றவன் நீ, தாயில்லாமல் நானில்லை, அம்மா என்றால் அன்பு, உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது எல்லாம் சுமார்தான். ஆனால் ஆயிரம் நிலவே வா பாட்டில் மிச்ச எல்லா குறையும் மறந்துவிடுகிறது.

பார்க்கலாம். டைம் பாஸ் படம். எம்ஜிஆருக்கு இது ஒரு க்ளாசிக் படம். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

தெலுங்கு படங்கள்


கொல்லப்புடி மாருதி ராவ் தனக்கு பிடித்த தெலுங்கு படங்களை பற்றி இங்கே சொல்கிறார். கொல்லப்புடி தெலுங்கு நடிகர், எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது எல்லாம் வாங்கி இருக்கிறார். நம்மூர் டெல்லி கணேஷ் மாதிரி stature உள்ள தெலுங்கு நடிகர்.

அவரது லிஸ்டும் என் குறிப்புகளும்:

  • யோகி வேமனா: நான் பார்த்ததில்லை. நாகையா, எம்.வி. ராஜம்மா நடித்து, கே.வி. ரெட்டி இயக்கியது. கே.வி. ரெட்டி பெரிய இயக்குனர் – புகழ் பெற்ற மாயா பஜார், பாதாள பைரவி ஆகியவை இவர் இயக்கியவைதான். விஜயா (வாகினி) ஸ்டுடியோஸ் தயாரிப்பு. வேமனா புகழ் பெற்ற தெலுங்கு கவிஞர் – நம் அவ்வையார் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
  • லைலா மஜ்னு: – நான் பார்த்ததில்லை. நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்து, சி.ஆர். சுப்பராமன் இசையில், பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது.
  • சவுகாரு: நான் பார்த்ததில்லை. என்.டி. ராமராவ், ஸௌகார் ஜானகி நடித்து எல்.வி. பிரசாத் இயக்கியது. விஜயா ஸ்டுடியோஸ் தயாரிப்பு. ஸௌகார் ஜானகிக்கு உள்ள அடைமொழி இந்த படத்திலிருந்து வந்ததுதான். அவரது முதல் படம். எல்.வி. பிரசாத் முதல் தமிழ் படமான காளிதாசிலும், முதல் தெலுங்கு படமான நடித்திருக்கிறார். கமலஹாசனின் ராஜ பார்வை படத்தில் மாதவிக்கு தாத்தாவாக நடிப்பார். மனோகரா, இருவர் உள்ளம், மிஸ்ஸியம்மா ஆகிய படங்களை இயக்கியவர் இவரே.
  • தீக்ஷா – ஜி. வரலக்ஷ்மி, யாரோ ராம்கோபால் நடித்து, ஆத்ரேயா பாடல்களுடன், கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கியதாம். கேள்விப்பட்டது கூட இல்லை.
  • தேவதாஸ்: ஏ.என்.ஆர்., சாவித்ரி, சி.ஆர். சுப்பராமன் இசை, வேதாந்தம் ராகவையா இயக்கம். இதுதான் எல்லாவற்றிலும் சிறந்த தேவதாஸ் என்று கருதப்படுகிறது – குறைந்த பட்சம் தெலுங்கர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ஓ ஓ ஓ தேவதாஸ் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
  • மல்லேஸ்வரி: பிரமாதமான படம். கிருஷ்ண தேவராயர் ஒரு இரவு பானுமதி தன காதலனிடம் தான் ராணி போல வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். அவளை தனது அந்தப்புரத்துக்கு கூட்டி வருகிறார். ஏ.என்.ஆர்., என்.டி.ஆர். நடித்து, எஸ். ராஜேஸ்வர ராவ் இசையில் பி.என். ரெட்டி இயக்கியது.
  • விப்ரநாராயணா: தொண்டரடிபொடி ஆழ்வாரின் கதை. ஏ.என்.ஆர்., பானுமதி நடித்து, பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். பார்த்ததில்லை.
  • மாயாபஜார்: அருமையான படம். சாவித்ரி, ரங்காராவ் இருவருக்காக மட்டுமே பார்க்கலாம். இசையில் கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் கலக்கி இருப்பார்கள். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர். வேறு. என்.டி.ஆர். இந்த மாதிரி படங்களால்தான் தெலுங்கர்களின் கண்ணில் தேவுடுவாகவே மாறிவிட்டார். இயக்கம் கே.வி. ரெட்டி. தயாரிப்பு விஜயா ஸ்டுடியோஸ்.
  • மூக மனசுலு: ஏ.என்.ஆர., சாவித்ரி. பார்த்ததில்லை.
  • மனுஷுலு மாறாலி: சாரதா நடித்தது. பார்த்ததில்லை.
  • பிரதிகடனா:விஜயசாந்தி நடித்து கிருஷ்ணா இயக்கியது. பார்த்ததில்லை.
  • சங்கராபரணம்: எனக்கு கர்நாடக சங்கீதத்தை கேட்டால் ஓட வேண்டாம் என்று தைரியம் கொடுத்த படம். முதன் முதலாக ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த படம். (க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் 2.10 பைசா டிக்கெட்டை இரண்டரை ரூபாய்க்கு வாங்கினோம்) பாட்டுகள் மிக அருமையாக இருந்தன. கவர்ச்சி நடனம் இல்லாவிட்டால் படம் வேஸ்ட் என்று நினைத்த ஸ்கூல் நாட்களிலேயே இந்த படம் எங்கள் செட்டுக்கு பிடித்திருந்தது. கே.வி. மகாதேவன், எஸ்பிபி, மஞ்சு பார்கவி எல்லாரும் கலக்கிவிட்டார்கள். சோமயாஜுலு, கே. விஸ்வநாத் இருவருக்கு இதுதான் மாஸ்டர்பீஸ்.
  • சுவாதி முத்யம்:தமிழர்களுக்கு தெரிந்த படம்தான். கமல் “நடிப்பதற்காக” எடுக்கப்பட்ட படம். பார்க்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ராதிகா ஹீரோயின், கே. விஸ்வநாத் இயக்கம். வடபத்ர சாயிக்கு பாட்டில் இழையோடும் சோகம் மிக நன்றாக இருக்கும். இசை யார், இளையராஜாவா?
  • ஓசே ராமுலம்மா: தாசரி நாராயண ராவ் இயக்கி நடித்தது. விஜயசாந்தியும் உண்டு. பார்த்ததில்லை.
  • அயித்தே: நீல்காந்தம் என்பவர் இயக்கிய நியூ வேவ் சினிமாவாம். கேள்விப்பட்டதில்லை.
  • ஷிவா: ராம் கோபால் வர்மாவின் முதல் படம். நாகார்ஜுன், அமலா நடித்தது, இளையராஜா இசை. இது வெளியானபோது நான் செகந்தராபாதில் வாழ்ந்தேன். பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஒரு cult film என்றே சொல்லலாம். இன்று யோசித்துப் பார்த்தால் அப்போது புதுமையாக இருந்த திரைக்கதைதான் காரணம் என்று தோன்றுகிறது. மிகவும் taut ஆன, நம்பகத்தன்மை நிறைந்த காலேஜ் காட்சிகள். ரவுடி ரகுவரன், அரசியல்வாதி கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மிக லாஜிகலாக யோசித்தார்கள்.
  • இவற்றுள் யோகி வேமனா, தேவதாஸ், மல்லேஸ்வரி, விப்ரநாராயணா, மாயாபஜார், லைலா மஜ்னு, சவுகாரு, சங்கராபரணம் போன்றவற்றை க்ளாசிக்குகள் என்று சொல்லலாம். நான் பார்த்தவற்றில் மல்லேஸ்வரி, மாயாபஜார், சங்கராபரணம், ஷிவா ஆகியவற்றை சிபாரிசு செய்வேன். நான் சிபாரிசு செய்யும் மற்ற படங்கள்: குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா, கீதாஞ்சலி. மாயாபஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா ஆகியவற்றை 20 வருஷங்களுக்கு முன் செகந்தராபாதில் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம் – தியேட்டர் பாதி நிறைந்திருக்கும், பார்ப்பவர்கள் மிகவும் என்ஜாய் செய்து பார்ப்பார்கள். (அதே போல் பழைய ஹிந்தி படங்களை ஹைதராபாத் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம். பார்ப்பவர்கள் உண்மையில் என்ஜாய் செய்வார்கள். சி.ஐ.டி. படத்தில் வஹீதா ரெஹ்மான் கஹி பே நிகாஹென் கஹி பே நிஷானா என்று பாடிக் கொண்டு வரும்போது தியேட்டர் கூட சேர்ந்து ஆடியது.)

    தமிழ் தயாரிப்பாளர்கள்


    போன பதிவு ஏவிஎம் செட்டியார் அளித்த ஒரு பழைய பேட்டி. செட்டியார் பற்றி நானும் ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன், எனக்கு தயாரிப்பாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. அதே நேரத்தில் நண்பர் சூர்யா தன் தளத்தில் சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி ஒரு அருமையான பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். சரி, தயாரிப்பாளர்களை பற்றி பொதுவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

    தமிழ் தயாரிப்பாளர்களில் எஸ்.எஸ். வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், செட்டியார், தேவர் நான்கு பேரும் பல வருஷம் கொடி கட்டி பறந்தவர்கள்.

    ஏவிஎம் செட்டியார்

    ஏவிஎம் இத்தனை வருஷம் கழித்தும் நன்றாக இருப்பது பெரிய விஷயம். செட்டியார் நடுவில் ஒரு பத்து வருஷம் படமே வேண்டாம் என்று இருந்ததாகவும், அவர் இறந்த பிறகுதான் சரவணன் மீண்டும் முரட்டுக் காளை படத்துடன் அடுத்த இன்னிங்சை ஆரம்பித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கென்னவோ பெரிய செட்டியார் இருந்தபோதுதான் நல்ல படங்கள் வந்தன என்று தோன்றுகிறது. நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறுபதுகளின் முற்பாதி வரைக்கும் பல நல்ல படங்கள் வந்தன. சபாபதி, நாம் இருவர், ஓரிரவு, வாழ்க்கை, பராசக்தி, பெண், அந்த நாள், நானும் ஒரு பெண், அன்னை, மேஜர் சந்திரகாந்த் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சரவணன் வந்த பிறகு மசாலா படங்கள்தான் வருகின்றன.

    எஸ்.எஸ். வாசன்

    எஸ்.எஸ். வாசன் ஒரு பத்து வருஷம் கொடி கட்டி பறந்தார். மங்கம்மா சபதம், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் எல்லாம் பெரும் வெற்றி. நாற்பதுகளிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அவருக்கு அப்புறம் படம் எடுப்பதில் இண்டரஸ்ட் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரும்புத் திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு மாதிரி படங்கள் வந்தாலும், ஜெமினி ஃபில்ம்ஸ் அறுபதுகளிலேயே அமுங்கிவிட்டது.

    டி.ஆர். சுந்தரம்

    டி.ஆர். சுந்தரம் பெரிய ஆள். பாரதிதாசன், எம்ஜிஆர், கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் எல்லாரும் அவரிடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். மந்திரி குமாரி, திரும்பிப் பார், அலி பாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அறுபதுகளில் வல்லவன் சீரிஸ் – வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன் மாதிரி – படங்கள் மட்டுமே எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

    தேவர்

    இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தாலும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வட்டத்தில் name recognition இருந்த ஒரே தயாரிப்பாளர் தேவர்தான். தேவரின் மிருகப் படங்கள் எங்கள் வட்டத்தில் பெரிய ஹிட். புலியையும், சிங்கத்தையும், யானையையும் நாங்கள் வேட்டைக்காரன் மாதிரி ஏதாவது படத்தில் பார்த்தால்தான் உண்டு. (உயிர் காலேஜ் எல்லாம் போனதில்லை.)

    தேவர் படங்கள் எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய காவியங்கள் இல்லை. அவருடைய ஆடியன்சுக்கு மன அளவில் ஒரு எட்டு வயதுதான் இருக்கும். எம்ஜிஆர், முருகன், மிருகங்கள் இவற்றை வைத்தே காலத்தை ஓட்டியவர். ஆனால் ஒரு நாளும் படம் பார்ப்பார்களை ஏமாற்றியதில்லை. அவர் கடை சமாசாரம் எப்படி இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. அது பிடிக்காதவர்கள் போக வேண்டாம்!

    எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். எதுவும் எம்ஜிஆரின் சிறந்த படங்கள் லிஸ்டில் கூட வராது. வேட்டைக்காரன், நல்ல நேரம், தேர் திருவிழா, முகராசி இந்த மாதிரி படங்கள் நினைவு வருகின்றன. வேட்டைக்காரன், நல்ல நேரம் இரண்டும் பிரமாதமாக ஓடியன. இந்த நாலு படமும் தண்டம், இப்போது வேறு எதுவும் நினைவு வரவில்லை. எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். இவர் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

    அவருக்கென்று ஒரு ஆஸ்தான டீம் இருந்தது. கே.வி. மகாதேவன், எம்.ஏ. திருமுகம், தூயவன், ஆரூர் தாஸ், நாகேஷ், மேஜர், அசோகன் இல்லாமல் அவர் சாதாரணமாக படம் எடுப்பதில்லை.

    ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல், ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

    அவருடைய படங்களில் தெய்வம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது. படம் நன்றாக இருக்கும் என்று இல்லை, தண்டம்தான். ஆனால் கோவில்களின் அந்த கால நிலையை ஒரு டாக்குமெண்டரி போல நன்றாக எடுத்திருப்பார்.

    இவர்களைத் தவிரவும் பல தயாரிப்பாளர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். எம்ஜிஆர் புகழிலே கொஞ்சம் மங்கி தெரியும் பந்துலு, ஜூபிடர் சோமு, பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் பல வெற்றி படங்கள் எடுத்தாலும் தெலுங்கு கம்பெனியான விஜயா பிக்சர்ஸ் நாகி ரெட்டி, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், பி.எஸ். வீரப்பா, முரசொலி மாறன், ஸ்ரீதர், ஜி.என். வேலுமணி, ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர் படங்களை தயாரித்த கலாகேந்த்ரா, பாலாஜி, பிற்காலத்தில் ஜீவி, ஆர்.பி. சௌத்ரி, கமல், கோவைத் தம்பி, பிரகாஷ் ராஜ், என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர்களில் பலருக்கும் வேறு முக்கியமான முகங்கள் இருந்தன – எம்ஜிஆரை தயாரிப்பாளர் என்றா நினைவு வைத்துக் கொள்கிறோம்? அப்படி இல்லாதவர்கள் பலரும் நிலைத்து நிற்கவில்லை.

    இன்றைக்கு இவர்களுக்கு சமமாக சொல்லக் கூடிய கோலிவுட் பாதுஷாக்கள் இருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

    தேவரை பற்றி சாரதா இன்னும் விவரங்கள் தருகிறார்.

    மேலும் சில படங்கள்: தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தொழிலாளி, கன்னித் தாய், தனிப் பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, காதல் வாகனம் ப்ளஸ் நீங்கள் சொன்ன படங்கள் நாலு. இவற்றில் சில மட்டும் 100 நாட்கள் என்ற எல்லைக்கோட்டைத் தொட்டன. பெரும்பாலானவை 50-ஐக்கூட கடக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழில் கண்ட ஒரே வெள்ளிவிழாப்படம் ஆட்டுக்கார அலமேலு மட்டும்தான். சில படங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் ஒரே மாதிரி இருக்கும். திருக்குறள் மாதிரி இரண்டு வரிக் கதைகளைத்தான் படமாக எடுப்பார். தேவர் படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கட்டின் பின்பக்கம் எழுதிவிடலாம் என்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு.

    ஜெய்சங்கரை வைத்து கெட்டிக்காரன், நேர்வழி போன்ற குப்பைப் படங்களையும், அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற நல்ல படங்களையும் எடுத்தவர். ரவிச்சந்திரனை வைத்து மகராசி என்ற படத்தையும் எடுத்தார். சிவகுமாரை கதாநாயனாக வைத்து ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், (பழைய) ஸ்ரீகாந்தை நாயகனாகவும் பிரமீளாவை நாயகியாகவும் போட்டு கோமாதா என் குல மாதா ஆகிய வெற்றிப்படங்களை எடுத்தார். இடையிடையே ஏ.வி.எம்.ராஜனை வைத்து துணைவன், தெய்வம், திருவருள் என் பக்திப்படங்களின் பக்கமும் தலைநீட்டினார்.

    ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தாய் வீடு மற்றும் கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை (எத்தனை தாய்கள்), ராம் லக்ஷ்மண் போன்றவை அவர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுகளால் தயாரிக்கப்பட்டவை. கடைசியாக ஆனந்த பாபுவை வைத்து தர்மம் என்ற படம் எடுக்கப்போக, படம் அட்டர் ஃப்ளாப். தேறவேயில்லை. தேவர் பிலிம்ஸ் அத்துடன் நொடித்துப்போனது. இதனிடையே வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை தலைதூக்க தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூடுவிழா கொண்டாடியது.

    சின்னப்பா தேவர் யாரையும் எளிதில் நம்பி விடுவார். யாரும் அவரை சுலபமாக ஏமாற்றிவிடலாம். கே.வி.மகாதேவன் கூட வெறும் நாலு மெட்டுக்களை வைத்துக்கொண்டு அவருக்கு நாற்பது பாட்டுக்கள் போட்டுக்கொடுத்து விடுவார். தேவரின் நல்ல மனதுக்கு அவை பாப்புலராகிவிடும். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடியை கண்ணதாசன் தேவருக்கு அறிமுகப்படுத்த, தேவர் அவர்களுக்கு படங்களில் வாய்ப்புக்கொடுத்ததால், படங்களில் டைட்டில்களில் ‘கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்’ என்று போட்டு தங்கள் நன்றியை காணிக்கையாக்கினர்.

    எனக்கு தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரிய ஹிட்கள் என்று நினைவு. என் impression டெண்டு கோட்டையில் இருந்த ரெஸ்பான்சை பார்த்து ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் சாரதா என்னை விட விஷயம் தெரிந்தவர். ஞாபகம் வராத எம்ஜியார் படங்களின் பேரை எடுத்து தந்த சாரதாவுக்கு நன்றி! எனக்கு அசோகன் அண்ணனாக வரும் படம் (தாய்க்கு தலை மகன்), அசோகன் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் படம் (தர்மம் தலை காக்கும்) என்றுதான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. எம்ஜிஆர் ஒரு படத்தில் பறந்து கூட போவார் என்று ஞாபகம். என்ன படமோ தெரியவில்லை.

    சாரதா சொல்வது போல பாட்டுகள் – எம்ஜிஆர் படத்தில் கூட – பிரமாதமாக இருக்காது. சூர்யா சொல்வது போல மூன்று மாதத்தில் படம் எடுப்பதால் இருக்கலாம்.

    ஞாபகம் வரும் இன்னும் சில படங்கள் – நீலமலை திருடன் (ரஞ்சன்), சொர்க்கம் நரகம், இளஞ்ஜோடிகள், தர்மத்தின் தலைவன். கோமாதா என் குல மாதா ஹிந்தியிலும் காய் அவுர் கௌரி என்று வந்தது.

    தொகுக்க்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

    தொடர்புடைய சுட்டிகள்:
    ஆரூர் தாஸ் தேவரை நினைவு கூர்கிறார்
    பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம் பற்றி பதிவர் சூர்யா
    தேவர் புத்தகம் பற்றி முகில், இதே புத்தகம் பற்றி பா. ராகவன்
    தேவர் பற்றி முரளி கண்ணன்

    வியட்நாம் வீடு – என் விமர்சனம்


    படம் வெளிவந்த போது விகடனில் வந்த விமர்சனம் இங்கே.

    வியட்நாம் வீடு சிவாஜியின் பெரும் சாதனையாக சிலாகிக்கப்படும் படம். எனக்கு இது சுமாரான படம் என்றுதான் தோன்றுகிறது.

    நீங்கள் இன்றைக்கு ஒரு விஜய் படம் பார்த்தால் அது சில ஸ்டாண்டர்ட் சீன்களை ஒட்டியும் வெட்டியும் எடுக்கப்பட்டிருக்கும். ஒரு ஓபனிங் சாங், நாலு பாட்டு, மூன்று சண்டை, ஐந்து பன்ச் டயலாக், விஜய் “அப்டிங்க்னா, இப்டிங்க்னா” என்று யாரையாவது கலாய்ப்பது, வடிவேலு/விவேக் காமெடி, ஒரு அம்மா/அப்பா/தங்கை/அக்கா செண்டிமெண்ட் சீன். சிவாஜியின் படங்களுக்கும் அப்படி ஸ்டாண்டர்ட் சீன்கள் இருந்தன. அவை எல்லாவற்றையும் இந்த படத்தில் காணலாம். அவருக்கு உலகத்தில் இருக்கும் எல்லா கஷ்டமும் வரும். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அவர் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு வாழ்வார். இதிலும் அப்படி நிறைய சீன்கள் உண்டு – புகழ் பெற்ற “நீ முந்திண்டா நோக்கு, நான் முந்திண்டா நேக்கு”, ரிடயர் ஆன பிறகு அவர் பம்மி பம்மி ஆஃபீசுக்குள் நுழைவது, அவரும் பத்மினியும் ஒருவர் கண்ணீரை ஒருவர் துடைப்பது, பிள்ளைகள்/மருமகள்கள் கொடுமை இந்த மாதிரி நிறைய.

    படத்தின் முக்கிய குறையே சிவாஜியை தவிர மிச்ச எல்லாரும் கார்ட்போர்ட் கட்அவுட்களாக இருப்பதுதான். யாருக்கும் ரோல் கிடையாது – நாகேஷ், ஸ்ரீகாந்த் எல்லாரும் வேஸ்ட். யாருக்கும் சோபிக்கும்படி பாத்திரம் அமையவில்லை. பத்மினிக்கு மட்டும் கொஞ்சம் பெரிய ரோல். துணை கதாபாத்திரங்கள் வலிமையாக அமையாவிட்டால் கதை உருப்படுவது கஷ்டம். கதையின் முக்கிய முடிச்சோ மிக செயற்கையானது – ஒரு ஜெனரல் மானேஜருக்கு எப்போது ரிடையர் ஆகிறோம் என்பது கூட தெரியவில்லை. அப்புறம் என்ன திரைக்கதை அமையும்?

    சிவாஜியின் நடிப்பை அவர் ஒரு பிராமண குடும்பத் தலைவரை தத்ரூபமாக சித்தரித்தார் – முக்கியமாக பேச்சில் – என்பதற்காக பாராட்டுகிறார்கள். அவர் பேச்சு அந்த காலத்துக்கு தத்ரூபமாக இருந்திருக்கும்தான். அதற்கு அவர் கடினமாக உழைத்திருக்க வேண்டும்தான். அந்த ஒரு பாயின்ட் மட்டுமே ஒரு நல்ல படத்துக்கு போதாது என்பதுதான் பிரச்சினை.

    1970-இல் வந்த படம். சிவாஜி, பத்மினி, நாகேஷ், ஸ்ரீகாந்த், ரமாப்ரபா நடித்தது. வியட்நாம் வீடு சுந்தரம் கதை வசனம். பி. மாதவன் இயக்கம். கே.வி. மகாதேவன் இசை. சிவாஜியின் சொந்தப் படம். நாடகமாக வெற்றிகரமாக ஓடியது. பிராமண பின்புலம் கொண்ட நாடகம் அந்த காலத்து சென்னையில் நன்றாகவே ஓடி இருக்கும். நாடகத்திலும் சிவாஜியே நடித்திருக்கிறார். எழுதிய சுந்தரமோ வியட்நாம் வீடு சுந்தரம் என்று அடைமொழி பெற்றுவிட்டார். சமீபத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் இதை மீண்டும் மேடை ஏற்றி இருக்கிறார்.

    தெரிந்த கதைதான். கம்பெனியில் ஜெனரல் மானேஜராக கொடி கட்டி பறக்கும் சிவாஜி ரிடையர் ஆகிறார். வீட்டில் பிள்ளைகளின் கலாசார சீரழிவு – நாகேஷ் யாரையோ காதலிக்கிறார். மை லேடி கட்பாடி என்றெல்லாம் பாட்டு பாடுகிறார். ரிடையர் ஆனதும் சிவாஜிக்கே கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை. அவரை புரிந்து நடந்துகொள்ளும் ஒரே ஜீவன் அவர் மனைவி பத்மினி. அவருக்கு ஆபரேஷன் வேறு நடக்க வேண்டும். பயம். பேருக்கு பிள்ளை உண்டு, வெறும் பேச்சுக்கு சொந்தம் உண்டு, என் தேவையை யாரறிவார், உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும் என்று மனைவியை பார்த்து பாட்டு பாடுகிறார். ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வருபவர் தனக்கு ஆஃபீசில் எக்ஸ்டென்ஷன் கிடைக்கும் செய்தி கேட்டு அந்த அதிர்ச்சியில் இறந்துவிடுகிறார்.

    சிவாஜி ரசிகர்களுக்காக ஒன்றை தெளிவாக்கிவிடுகிறேன். சிவாஜி திறமை வாய்ந்த நடிகர். இந்த படத்திலும் கொடுத்த ரோலை நன்றாக செய்திருக்கிறார். இந்த பாத்திரத்துக்கு அவரது நாடகத்தனம் நிறைந்த மிகை நடிப்பு பொருந்தி வருகிறது. பாத்திரம் அப்படித்தான். மிகையாகத்தான் பேசுவார். உலகத்தில் எல்லாரும் அசோகமித்திரன் கதாபாத்திரங்கள் மாதிரி குறைவாகவே பேசுவதில்லை.

    பத்மினியும் கொடுத்த வேலையை திறமையாக செய்திருக்கிறார்.

    குறை கதையில். ரிடையர் ஆனதும் பெரிசுகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வருவது நடப்பதுதான். பெரிசுகளுக்கு தங்கள் பிள்ளைகள் சீரழிகிறார்கள் என்ற எண்ணம் இருப்பது சகஜம்தான். மனைவியைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற மனநிலை வருவதும் சகஜம்தான். அதை அப்படியே காட்டி இருக்கலாம். ரிடையர்மென்ட் ஒரு அதிர்ச்சி மாதிரி காட்டுவது கதையை பலவீனப்படுத்துகிறது. மற்ற பாத்திரங்கள் எல்லாம் மிக வீக்காக இருப்பது கதையை மிக தட்டையாக மாற்றுகிறது. கழிவிரக்கம் மட்டுமே கதையின் உணர்ச்சியாக இருக்கிறது.

    கே.வி. மகாதேவன் இசையில் பாலக்காட்டு பக்கத்திலே, உன் கண்ணில் நீர் வழிந்தால் இரண்டு பாட்டும் நன்றாக இருக்கின்றன. பாட்டுகளை இங்கே கேட்கலாம். மை லேடி கட்பாடி பாட்டும் கொடுமை, வரிகளும் கொடுமை. வீடியோ எதுவும் கிடைக்கவில்லை. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ மாதிரி யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ், சரண்யா ரீமிக்சை கொடுத்திருக்கிறேன்.

    ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் பார்க்கலாம். தட்டையான கதைதான், ஆனால் எனக்கு போரடிக்கவில்லை. சிவாஜி, பத்மினி இருவரின் உழைப்பும் நடிப்பும், கண்ணதாசன்+கேவிஎம்மின் இரண்டு பாட்டுகளும், அந்த கால பிராமண குடும்ப பின்புலம் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருப்பதும் படத்தின் ப்ளஸ்கள். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

    தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம், படங்களின் பட்டியல்

    தொடர்புடைய சுட்டிகள்:
    சாரதாவின் விமர்சனம்
    விகடன் விமர்சனம்

    எல்.ஆர். ஈஸ்வரி – எல்லார் ஈஸ்வரி


    எல்.ஆர். ஈஸ்வரி

    எல்.ஆர். ஈஸ்வரி

    இன்னும் ஒரு ஓசி போஸ்ட் – 22-12-1974 அன்று விகடனில் வந்த எல்.ஆர். ஈஸ்வரியின் பேட்டி. நன்றி, விகடன்!

    உங்களுடைய முதல் பாடல் ரேடியோவில் எந்த நிலையத்தில் ஒலிபரப்பப்பட்டது? அதைக் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?
    நான் பாடிய முதல் பாடல் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்ட போது என்னிடம் ரேடியோவே இல்லை. பக்கத்து வீடுகளில் ரேடியோ வைக்கும்போது, அதை உரக்க வைக்கச் சொல்லிக் கேட்பேன். எப்போதாவது என் பாட்டை ஒலிபரப்புவார்கள்.அதைக் கேட்டுச் சந்தோஷத்தில் நான் துள்ளிக் குதிப்பேன்.
    பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் ரேடியோ வாங்கக்கூடிய வசதி எனக்கு ஏற்பட்டது. நான் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவள். இன்று என் சொந்தப் பங்களாவில் ஓரளவிற்கு வசதியாக வாழ்கிறேன் என்றால், அதற்கு என் தெய்வம் திரு. கே.வி. மகாதேவன் அவர்கள்தான் காரணம். நல்ல இடத்து சம்பந்தம் படத்தில் என் திறமையை நம்பி நான்கு பாடல்கள் பாடும் சந்தர்ப்பத்தைத் தந்தார் அவர். அதுதான் என் முதல் படம்.

    எத்தனை மொழிகளில் பாடியிருக்கிறீர்கள்?
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, துளு, கொங்கணி ஆகிய மொழிகளில் பல பாடல்கள் பாடியிருக்கிறேன். நன்ன கண்ட எல்லி (என் கணவன் எங்கே) என்ற கன்னடப் படத்தில் ஒரே பாடலில் 14 மொழிகளில் பாடியிருக்கிறேன்.

    இந்திப் பாடகர், பாடகிகளில் உங்களுக்குப் பிடித்தவர்கள் யார்?
    முகம்மது ரஃபி, மன்னா டே, ஆஷா போன்ஸ்லே. ஆஷா போன்ஸ்லேயை ஒரு பாடல் பதிவில் சந்தித்தேன். நான் பாடிய பட்டத்து ராணி பாடலைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் என்னை ஏராளமாகப் புகழ்ந்தார். அவ்வளவு பெரிய பாடகியிடமிருந்து கிடைத்த பாராட்டை நான் பெற்ற பெரும் பாக்கியம் என்றே எண்ணுகிறேன்.

    இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷூக்கும் தங்களுக்கும் ஏதோ தகராறு என்றும், அதன் காரணமாக அவர்கள் இசை அமைக்கும் படங்களில் நீங்கள் பாடுவதில்லை என்றும் கூறப்படுவது உண்மையா?
    இப்படிச் சில வதந்திகளைக் கிளப்பிவிடுவதில் சிலர் மனத் திருப்தி அடைகிறார்கள். சங்கர், கணேஷ் இருவருமே என்னை மம்மி என்றுதான் அழைப்பார்கள். கடந்த வாரம் கூட அவர்களின் இசையமைப்பில் நான் இரண்டு பாடல்களைப் பாடினேன்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை நீங்கள் எப்படிக் கொண்டாடுகிறீர்கள்?
    நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் சர்ச்சுக்குப் போவேன். கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தனியே விசேஷமாகக் கொண்டாடுவது இல்லை. எல்லா மதத்தையும் ஒன்றாகவே கருதுபவள் நான். ஆகவே நான் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என எல்லாப் பண்டிகைகளையுமே கொண்டாடுவேன். நான்தான் ‘எல்லார் ஈஸ்வரி’ ஆயிற்றே!

    சில அருமையான எல்.ஆர். ஈஸ்வரி பாட்டுகளை இங்கே கேட்கலாம். எம்எஸ்வி ஒரு முறை தனக்கு பிடித்த பாட்டுகளை தேர்ந்தெடுத்திருந்தார். ஒவ்வொரு பாடகருக்கும் ஒரு பாட்டு மாதிரி – எல்.ஆர். ஈஸ்வரிக்கு அவர் தேர்ந்தெடுத்த பாட்டு கறுப்பு பணம் படத்திலிருந்து வரும் ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாட்டுதான். அந்த பாட்டும் இந்த லிஸ்டில் இருக்கிறது.

    துள்ளுவதோ இளமை பாட்டு யூட்யூபில் கீழே.

    தில்லானா மோகனாம்பாளில் நாதசுரம் வாசித்த எம்.பி.என். பொன்னுசாமி, சேதுராமன் சகோதரர்கள்


    நன்றி, விகடன்!

    தில்லானா மோகனாம்பாள் படத்தில் வருகின்ற நலம்தானா? என்னும் பாடலும், அந்த நடன கீதத்துக்கு ஏற்ப நலமாக ஒலிக்கும் நாதசுர இசையும் எல்லோரையும் ஈர்த்துக்கொண்டிருக்கின்றன. நமக்கெல்லாம் அந்த இனிய இசையை வழங்கியவர்கள், நாதசுரக் கலைஞர்களான திருவாளர்கள் மதுரை எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்கள் ஆவர்.

    பம்பாய், டெல்லி போன்ற பெரிய நகரங்களிலும், தமிழகத்தின் பல இடங்களிலும் நாதசுர இசையினால் பலருடைய இதயங்களைக் குளிர்விக்கும் இவர்கள் ராஷ்டிரபதி பவனிலும் இசை மழை பொழிந்திருக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் முன்னாள் ராஷ்டிரபதி டாக்டர் ராதாகிருஷ்ணனும் இவர்கள் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார். திரு.காமராஜர் இந்தச் சகோதரர்களின் இனிமையான நாதசுர வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்து இவர்களுக்கு அளித்த தங்க மெடலை, மத்திய உள்துறை அமைச்சர் திரு.சவானிடம் யுத்த நிதிக்காக மனமுவந்து கொடுத்துத் தங்கள் மனமும் தங்கமென அறிவித்திருக்கிறார்கள்.

    தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன், இயக்குநர் ஏ.பி.என், திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் இருவர் முன்னிலையில் முதலில் வாசித்திருக்கிறார்கள்.

    அடுத்த நாள், இன்னொரு முக்கியஸ்தர் முன்னிலையிலும் வாசிக்க வேண்டியிருந்தது. ஒரு மணியல்ல, இரண்டு மணியல்ல, மூன்று மணி நேரத்துக்கு மேல் அவர்களின் நாதசுர இசையைக் கேட்டுக் களித்த பிறகே படத்துக்கு ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தாராம் அந்த முக்கியஸ்தர்.

    அவர் வேறு யாருமல்ல. தில்லானா மோகனாம்பாளில் நாதசுர கலைஞராகத் தோன்றி, நாதசுரக் கலைஞர்களே வியக்கும் வண்ணம் முகபாவங்களுடன் அற்புதமாக வாசித்த பிறவிப் பெரும் நடிகர் சிவாஜி கணேசன்தான்.

    நாதசுர வித்துவான்கள் நாங்களா, அவரா என்று வியக்கும் வண்ணம் சிக்கல் சண்முக சுந்தரம் வெளுத்து வாங்கிவிட்டார் என வாய்க்கு வாய் நடிகர் திலகத்தை மெச்சிப் பூரிக்கிறார்கள் நாதசுர சகோதரர்கள்.

    ஏ.பி.நாகராஜன் பற்றிக் கேட்ட போது “அவர் எங்களின் உற்ற நண்பர். அவரை எங்கள் குடும்பமே தெய்வமாக வணங்கி வருகிறது. தில்லானா மோகனாம்பாள் வெளியாவதற்கு முன் எனக்கு ஓர் ஆபரேஷன் நடந்தது. அச்சமயம் அதற்கான செலவுத் தொகை பூராவையும் கொடுத்து, என் உயிரையே மீட்டுக் கொடுத்த இரக்க உள்ளம் படைத்தவர் ஏ.பி.என்.” என்றார் சேதுராமன்.

    ஆர்வி: நலம்தானா பாட்டை இங்கே கேட்கலாம்

    நாகி ரெட்டி


    விகடனில் 17-4-1994 அன்று வந்த நாகி ரெட்டியின் பேட்டி. விகடனுக்கு நன்றி!

    விதியின் குழந்தை நான்!” – நாகி ரெட்டி

    உங்கள் வாழ்க்கையில் ரொம்பவும் சந்தோஷமான நேரம்?
    அந்தப் பதினெட்டு வயது… திரும்பக் கிடைக்குமா? அப் போது என் அப்பா நரசிம்ம ரெட்டி எனக்குச் சொல்லிக் கொடுத்த வியாபார நுணுக்கங்கள் பல. மலேசியா, சிங்கப்பூர், பர்மா என்று பல நாடுகளுக்கு என்னை வியாபாரத்துக்காக அனுப்பி வைத்தார் அப்பா. புது இடங்களுக்குப் போன அற்புத அனுபவம் அது! சந்தோஷத்தை அனுபவித்தேன். அங்கே போய் நான் செய்த பிஸினஸ் என்ன தெரியுமா? வெங்காய வியாபாரம்!

    சினிமா உலகில் உங்களை அசத்திய நண்பர்?
    எஸ்.எஸ்.வாசன்! அப்போது ஜெமினி ஸ்டுடியோவுக்கு விருந்தாளியாக வந்திருந்தார் மத்திய நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய். அப்படியே அவரை எங்கள் வாஹினிக்கும் கூட்டி வந்தார் வாசன். மொரார்ஜி தேசாய் வாஹினியை ஒரு ரவுண்ட் சுற்றிப் பார்த்துவிட்டு, என் தோளைத் தட்டினார். ‘எத்தனையோ சினிமா ஸ்டுடியோக்களுக்குப் போயிருக்கிறேன். பம்பாயில் கூட இவ்வளவு பிரமாண்டமாக இல்லை. ஜெமினி, வாஹினியைப் பார்த்த பிறகு, சினிமா என்பது கூட பெரிய இண்டஸ்ட்ரி வகைதான் என்று தோன்றுகிறது’ என்றார்.சினிமாவை இண்டஸ்ட்ரியாக ஏற்றுக்கொண்டதற்கு வாசன்தான் காரணம். எங்களுடைய நட்பு சினிமாவுக்கும் அப்பாற்பட்ட தூய நட்பு. தங்க செயின், பட்டுப் பாவாடை தகதகவென்று மின்ன, தனது நான்கு வயது பேத்தியை மடியில் உட்கார வைத்து, தானே காரை ஓட்டிக் கொண்டு என்னைப் பார்க்க வருவார் வாசன். அந்தக் கம்பீரமே தனி!

    சினிமா, பத்திரிகை தவிர வேறென்ன துறையில் உங்களுக்கு விருப்பம் அதிகம்?
    பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன்! நீங்கள் வடபழனியில் பார்க்கும் விஜயா கார்டன், சந்தமாமா பில்டிங், விஜயா மருத்துவமனை என்று பல கட்டடங்கள் எனது கை வண்ணத்தில் உருவானவைதான். எங்கள் பில்டிங்கின் ஒவ்வொரு செங்கல்லுடனும் நான் பேசியிருக்கிறேன். நான் முதலில் பில்டிங் கட்டும்போது கோடம்பாக்கத்தில் ரோடு கூட இல்லை.

    சினிமா எனும் கற்பனைக் கோட்டைக்குள் எப்படிக் காலடி வைத் தீர்கள்?
    என் அண்ணன் பி.என்.ரெட்டி கொஞ்சம் வித்தியாசமானவர். எனக்கு வியாபாரக் கண் என்றால், அவருக்கு கலை. அவரால்தான் முதல் முறையா மெட்ராஸூக்கு வந்தேன். அப்போது என் வயது 14. நாடகத் துறையில் பிரபலமாக இருந்த ராகவாச்சாரி, நரசிம்மராவ் போன்றவர்களுடன் அண்ணன் நாடகத்துறைக்கு வந்து, படிப்படியாக முன்னேறிய நேரம் அது. ‘ரோஹிணி பிக்சர்ஸ்’ என்று ஆரம்பித்து, ‘வந்தே மாதரம்’ என்று ஒரு படம் எடுத்தார். நான் அந்தப் படத்துக்கு ‘பப்ளிஸிடி’ வேலைகளைச் செய்தேன். ரோஹிணியை வாஹினியாக்கி கோடம்பாக்கத்தில் நிறையக் கட்டடங்களை எழுப்பினோம். அதில் ஒன்றுதான் வாஹினி ஸ்டுடியோ. ஜெமினிக்குப் பிறகு மெட்ராஸில் இரண்டாவது ஸ்டுடியோ வாஹினிதான். பிறகு படத் தயாரிப்பில் ஈடுபட்டோம். ஆரம்பத்தில் நானே ஒரு படம் இயக்கியுள்ளேன்.

    இன்று வரை நீங்கள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் பொருள் உண்டா?
    அப்படி எதுவும் இல்லை. ஆனால் நான் கொடுத்த பொருளை ஒருவர் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவதாக அறிந்தேன். எங்கள் ‘சந்தமாமா கம்பைன்ஸ்’ அந்த வி.ஐ.பி-யை ஹீரோவாக வைத்துப் படமெடுத்தது. நான் அவருக்குப் பட பூஜையன்று 101 சவரனில் பொற்காசுகள் பரிசளித்தேன். அவர் அதைப் பூஜித்து வருகிறாராம். அவருக்கு நான் பொற்காசுகள் வழங்கிய அந்தக் காட்சியை பெரிய சைஸ் போட்டோவாக தனது வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்! அவர் வேறு யாருமல்ல, ரஜினிகாந்த்!

    நீங்கள் வாய்ப்புக் கொடுத்து இன்றைக்கு முன்னணியில் இருப்பவர்களைப் பற்றி?
    என்.டி.ராமராவ்! ‘விஜயா வாஹினி’யில் வேலை பார்த்தவர். படிப்படியாக உழைத்து முன்னேறியவர். என் பல படங்களின் ஹீரோ என்.டி.ஆர்-தான். நடிகர் ரங்காராவ் கூட என்னிடம் பணி புரிந்தவர்தான். அந்தக் காலத்தில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை தருவார்கள். அதுவே எங்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம். நாங்கள் கொடுத்து அனுப்பும் சினிமா வசனங்களை வீட்டில் முழுவதுமாக ஒத்திகை பார்த்து விட்டுத்தான் மறுநாள் செட்டுக்கு வருவார்கள் நடிகர்கள். இன்று இதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா?

    உங்கள் மனதுக்குப் பிடித்த பாடல்கள்?
    கண்டசாலா, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்கள் ரொம்பவும் பிடித்தவை. சங்கராபரணத்தை பாடல்களுக்காகவே பார்த்தேன். கண்ணதாசனைப் பற்றியும் சொல்ல வேண்டும். அவர் ஒரு ஜீனியஸ். அவருடன் சேர்ந்து பணியாற்றியபோது பல தத்துவக் கவிதைகளைக் கேட்டு அசந்து போயிருக்கிறேன்.

    பல தடைகளைத் தாண்டி வெற்றி கண்டவர் நீங்கள். உங்களது சாதனைகள் திருப்தியளிக்கிறதா?
    நான் விதியின் குழந்தை. எனக்கு எல்லாம் தந்தது கடவுள்தான். நான் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்! தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தேன். அன்று வயலும் தோட்டமும்தான் என் உலகம். வெங்காயம், உருளைக்கிழங்கு ஏற்றுமதியில் ஈடுபட்டேன். பின்பு மெட்ராஸில் பிரின்ட்டிங் பிஸினஸ். அப்போதே நவீன வசதிகளோடு என்னுடைய பிரஸ் செயல்பட்டது. பம்பாய்க்காரர்களே என்னிடம் வந்து பிரிண்ட் செய்யும் அளவுக்கு நவீன கருவிகள் வைத்திருந்தேன். பத்திரிகை, சினிமா உலகில் வலம் வந்தேன். ஆப்செட் பிரின்ட்டிங்கில் புதுமைகள் செய்தேன். ஆல் இந்தியா மாஸ்டர் பிரின்ட்டர்ஸின் தலைவர், திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன், வெங்கடேஸ்வரா யூனிவர்ஸிடி மற்றும் கிருஷ்ண தேவராயர் யூனிவர்ஸிடியிடமிருந்து இரண்டு டாக்டர் பட்டங்கள், தாதாசாகிப் பால்கே விருது… இதெல்லாம் கடவுளே இந்தச் சாதாரண மனிதனுக்குத் தந்த பரிசுகள். நான் எந்தத் துறையில் கால் வைத்தாலும், மிகவும் ஈடுபாட்டோடு செய்தேன். பெருமைக்காகச் சொல்லவில்லை… இப்போது மருத்துவ சேவையில் ஈடுபட்டிருக்கிறேன். விரைவில் முதியவர்களுக்கான காப்பகம் அமைக்க ஆசை!

    பத்திரிகைத் துறை உங்களது இரண்டாவது சாதனை… எப்படி ஜெயித்தீர்கள்?
    சினிமாவில் நுழைவதற்கு முன்பே, ஜார்ஜ் டவுன் ஆச்சாரப்பன் தெருவில் ஒரு குட்டி அச்சகம் நடத்தி வந்தோம். அங்கேயே ‘சந்தமாமா’ என்ற பெயரில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் வெளியிட்டேன். பிற்பாடு கிட்டத்தட்ட 14 மொழியில் அதை வெளியிட்டேன். என்னதான் சினிமாக்கள் எடுத்தாலும் நான் பத்திரிகைத் துறையில்தான் ஆத்ம திருப்தி அடைகிறேன்.

    சினிமா அன்றும் இன்றும் – உங்கள் பார்வையில் எப்படித் தெரிகிறது?
    அன்று சினிமாவுக்குப் பொற்காலம்! கதை, இசை, இயக்கம் என்று ஒரு குழுவாகச் செயல்படுவோம். திறமைசாலிகள் இணையும்போது வெற்றிக்கு உத்தரவாதம் இருக்கும். கதைக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். இன்றைய சினிமாவில் ‘கவர்ச்சி’தான் மேலோங்கி நிற்கிறது!

    நீங்கள் சந்திக்க விரும்பும் நபர்?
    ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். – இவர்களெல்லாம் எனக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தவர்கள். இவர்களை மீண்டும் சந்திக்கலாம் என்று ஆசைதான். யாருமில்லையே! ஒரு பிரின்ட்டராகச் சொல்கிறேன்… நெடுங்கால நண்பர் பழனியப்பா. அவரைச் சந்திக்க விருப்பம். அவர் வெளியிட்ட பல கைடுகளை பிரின்ட் செய்திருக்கிறேன். அந்த கைடுகள், தமிழகத்தில் ரொம்பப் புகழ்பெற்ற கோனார் நோட்ஸ்!

    உங்களது நெடிய அனுபவத்தில், வாழ்க்கையில் நீங்கள் கற்றுக் கொண்ட நீதியை இரண்டே வரியில் சொல்லுங்களேன்..?
    அன்று குணம் இருந்தால் மதிப்பு. இன்று பணம் இருந்தால்தான் மதிப்பு. இதுதான் வாழ்க்கை, கண்ணா!

    ராணி சம்யுக்தா (Rani Samyuktha)


    1962இல் வெளி வந்தது. எம்ஜிஆர், பத்மினி, எஸ்.வி. ஸஹஸ்ரநாமம், எம்.ஜி. சக்ரபாணி, தங்கவேலு, எம்.என். ராஜம், ராகினி, நம்பியார் நடித்து, கே.வி. மஹாதேவன் இசையில், யோகானந்த் இயக்கி இருக்கிறார். கண்ணதாசனும் அவினாசி மணியும் கதை வசனம் பாட்டுக்களை எழுதி இருக்கிறார்கள். எம்ஜிஆர் இறப்பதாக வருவதால் படம் ஓடி இருக்காது என்று நினைக்கிறேன்.

    எம்ஜிஆர் இறப்பதாக நடித்த எந்த படமாவது வெற்றி பெற்றிருக்கிறதா? சின்ன அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்ற புத்தகத்தில் அவர் ஒரு அனுபவத்தை சொல்கிறார். ஒரு பயணத்தின் போது இரவு வேளையில் ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தாராம். நைட் ஷோ முடிந்து மக்கள் திரும்பிக் கொண்டிருந்தார்களாம். என்ன படம் என்று இவர் கேட்டிருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றும் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்தும் பலர் பேசினார்களாம், ஆனால் ஒருவர் இதெல்லாம் ஒரு படமா என்ற தோரணையில் பேசி இருக்கிறார். இவர் ஏன் உங்களுக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். அவர் சொன்னாராம், “நடிப்பெல்லாம் கிடக்குதுங்க, இதுவே எம்ஜிஆரா இருந்தா வெள்ளைக்காரங்களை எல்லாம் ஒரு போடு போட்டுட்டு குதிரை மேல ஏறி வந்து முடி சூட்டிக்கிட்டிருப்பாரு!” என்றாராம். தமிழனான கட்டபொம்மனே எம்ஜிஆர் நடித்தால் தோற்கமாட்டார் என்றால் அவ்வளவாக தெரியாத ப்ரித்விராஜின் கதி என்ன? இது உண்மைக் கதை என்றே நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.

    ப்ரித்விராஜ் சம்யுக்தா கதை வடக்கே மிகவும் பிரபலமானது. நம்மூரில் முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, கட்டபொம்மன் கதை போன்று அதற்கும் ஒரு folk ballad பாரம்பரியம் உண்டு. அழையாத ஸ்வயம்வரத்துக்கு போய் சம்யுக்தையை தூக்கி வரும் சாகசத்தில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. எம்ஜிஆரும் அந்த வீர சாகசத்தால் கவரப்பட்டுத்தான் இந்த படத்தை எடுத்திருக்கவேண்டும்.

    கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு கதையை அங்கங்கே மாற்றி இருக்கிறார்கள். ஜெயச்சந்திரனும் தில்லி அரசுக்கு ஒரு வாரிசு என்றும் அதனால்தான் அவருக்கும் ப்ரித்விராஜுக்கும் பகை ஆரம்பித்தது என்று ஒரு ரீல் விட்டிருக்கிறார்கள். மற்றபடி தெரிந்த கதைதான். சம்யுக்தாவை காதலிக்கும் ப்ரித்விராஜ் அவரை ஜெயச்சந்திரனுக்கு பாவ்லா காட்டிவிட்டு சம்யுக்தாவை தூக்கி சென்று மனம் செய்துகொள்கிறார். முஹம்மது கோரி ஜெயச்சந்திரன் உதவியுடன் ப்ரித்விராஜை தோற்கடிக்கிறார்.

    ப்ரித்விராஜ் போர்க்களத்தில் இறப்பதாக காட்டுகிறார்கள். அவர் சிறைப்படுத்தப்பட்டு இறக்கிறார். ப்ரித்விராஜ் ராஸோவின் படி அவர் குருடாக்கப்படுகிறார். கோரி பிறகு ப்ரித்விராஜின் சத்தம் மட்டுமே கேட்டு அம்பு விடும் திறமையை பார்க்க விரும்பும்போது அவர் கோரியின் குரலை வைத்து கோரியை தன் அம்பால் கொன்றுவிடுகிறார். இந்த பழி வாங்கல் ராஸோவை எழுதிய சாந்த் பர்டாயின் உதவியோடு செயப்படுகிறது.

    பிரிண்ட் கொஞ்சம் மோசம். அங்கங்கே ஸ்கிப் ஆகிக்கொண்டே இருக்கிறது.

    நீண்ட நாள் தயாரிக்கப்பட்ட படம். பத்மினி இந்த பட்டத்தில் சில பகுதிகள் எடுக்கப்பட்டபோது கர்ப்பமாம்.

    ரிச்சாக எடுத்திருக்கிறார்கள். நல்ல செட்கள், அழகான எம்ஜிஆர், பத்மினி.

    பல பாட்டுகளை நான் முன்னால் கேட்டதில்லை. ஆனால் இனிமையாக இருந்தன. நினைவில் இருக்கும் பாட்டுகள் இவைதான்.

    “முல்லை மலர்க்காடு எங்கள் மன்னவர் தம் நாடு” என்ற பாட்டுக்கு ராகினி நன்றாக ஆடுகிறார்.

    “நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்” என்ற பாட்டு வேறு ஒரு பாட்டை நினைவுபடுத்துகிறது. அந்த பாட்டு நெஞ்சில் இருக்கிறது, நினைவு வர மாட்டேன் என்கிறது. பாட்டின் இரண்டாவது வரி “நினைவினில் தெரியுது அழகு முகம், ஆசை முகம்” என்பது. என்ன பாட்டு என்பத தொண்டை வரைக்கு வந்துவிட்டது, இன்னும் தெரியவில்லைசாரதா கண்டுபிடித்து மிச்சம் இருக்கும் தலை முடியையும் பிய்த்துக்கொள்வதிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டார். அது “‘நெஞ்சினிலே நினைவு முகம்” என்ற பாட்டு. சித்ராங்கி படத்தில் வேதா இசையில் அமைந்தது.

    “இதழ் இரண்டும் பாடட்டும் இமை இரண்டும் மூடட்டும்” பாட்டும் நன்றாக இருக்கிறது. கண்ணதாசன். வைரமுத்துவுக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் பாட்டு இதுதானாம். டிஎம்எஸ், ஏ.பி. கோமளா பாடி இருக்கிறார்கள்.

    “சித்திரத்தில் பெண்ணெழுதி” சுமாரான பாட்டு.

    இந்த 4 பாட்டுகளையும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்கள் மட்டும் இங்கே கேட்கலாம்.

    “நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்” என்பது மிக அருமையான பாட்டு. டிஎம்எஸ்ஸும் சுசீலாவும் கலக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள். அந்தப் பாட்டின் போது படம் அநியாயத்துக்கு ஸ்கிப் ஆனது பெரிய கொடுமை.

    “ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா” என்பது மட்டும்தான் நான் முன்னால் கேட்டிருக்கிறேன். அருமையான பாட்டும் கூட. இந்த வீடியோவையும் கட்டாயம் பாருங்கள்.

    இந்த இரண்டு பாட்டுகளையும் இங்கே கேட்க மட்டும் செய்யலாம்.

    இன்னும் ஒன்று இரண்டு பாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் மறந்துவிட்டன.

    தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் பார்க்கலாம். இல்லை என்னைப் போல் பழைய பாட்டு பைத்தியங்கள் சில பாட்டுகளை discover செய்ய பார்க்கலாம். எதிர்பாராமல் இனிமையாக அமைந்த பாட்டுகளுக்காக 10க்கு 6 மார்க். C- grade.