உத்தமபுத்திரன் – விகடன் விமர்சனம்


16-2-58 அன்று விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

முனுசாமி – மாணிக்கம்

மாணி: ஏண்ணே! நீ ‘உத்தமபுத்திரன்‘ பார்த்துட்டியா?

முனு: இல்லியே! நீ பார்த்துட்டியா? கதை என்ன?

மாணி: ஒரு ராணிக்குக் குழந்தை பிறக்குது. இது ராணியின் தம்பி நாகநாதனுக்குப் பிடிக்கலே. குழந்தையைக் கொல்ல ஏற்பாடு பண்றான். ராணிக்கு உடனே இரண்டாவதா, ஒரு குழந்தை பிறக்குது.

முனு: சரிதான். கொல்லச் சொன்ன அந்தக் குழந்தை என்ன ஆவுது?

மாணி: வழக்கம் போல அந்தக் கையாளு அந்தக் குழந்தையைக் கொல்லலே! ரகசியமா தன் பெண்சாதிகிட்ட கொடுத்து வேற இடத்துக்கு அனுப்பிடறான். ராஜா வீட்டுக் குழந்தை குடிசைலே நல்லவனா வளருது. அரண்மனையிலே இருக்கிற குழந்தையை சேனாதிபதி நாகநாதன் குடிகாரனா வளக்கறாரு; அக்கிரம ஆட்சி நடத்தறாரு.

முனு: சரி, நடிப்பைப் பற்றிச் சொல்லு!

மாணி: குடிசையில வளர்ற சிவாஜி கணேசன், குடிகாரனா வளர்ற சிவாஜிகணேசன்… ஆளு ஒண்ணுன்னாலும் வேஷம் இரண்டில்லே? ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிடறாங்க! ரெண்டு வேஷம் என்ன அண்ணே, 20 வேஷம் குடுத்தா லும் தத்ரூபமா நடிப்பாரு அவரு!

முனு: சரி; ஹீரோயின் எப்படி?

மாணி: பத்மினியாச்சே, கேக்கணுமா? மேக்கப் அள்ளுது; நடை, உடை, ஜடை மூணும் துள்ளுது; நடிப்பு வெல்லுது! ஆஹா! ஒரு சீன்லே நீளமா சடை போட்டு பூ வச்சுப் பின்னிக்கிட்டு வருது பாரு!

முனு: நம்பியாருக்கு என்ன வேஷம்?

மாணி: அவர்தான் ராணியின் தம்பி. வழக்கம் போல அமர்க்களப்படுத்தியிருக்காரு.

முனு: நம்பியார் வராரு இல்லே! அப்ப, கத்திச்சண்டை இருக்குமே?

மாணி: அது மட்டும் இல்லே! இரண்டு சிவாஜிகளுக்குள்ளேயே சண்டை நடக்குது!

முனு: காட்சி ஜோடனை?

மாணி: இயற்கைக் காட்சிகள் பிரமாதம்! மைசூர் பிருந்தாவனத்திலே ஒரு டான்ஸ் எடுத்திருக்காங்க. அற்புதம்! உயரமான கோட்டைச் சுவரிலேருந்து குதிரை மேல குதிக்கிறாரு சிவாஜி! நம்பவே முடியலே அண்ணே!

முனு: குதிரை தாங்குதா இல்லையா? அப்புறம் நீ ஏன் கவலைப்படறே? சரி, படம் எப்படி?

மாணி: ஒரு சில குறைங்க இருந் தாலும், நிச்சயமா இது ஒரு நல்ல படம் அண்ணே!

சிவாஜி தி.மு.கழகத்தில் இருந்து பிரிந்து காங்கிரஸில் சேர்ந்த வரலாறு


1955-ம் ஆண்டு காவேரி, முதல் தேதி, உலகம் பலவிதம், மங்கையர் திலகம், கோடீஸ்வரன், கள்வனின் காதலி ஆகிய 6 படங்களில் சிவாஜி நடித்தார்.

இவற்றில் மங்கையர் திலகம் மிகச் சிறந்த படமாக அமைந்தது. சிவாஜிக்கு சித்தியாக பத்மினி நடித்தார். இருவரும் நடிப்பில் முத்திரை பதித்தனர். குறிப்பாக பத்மினி, தான் சிறந்த குணச்சித்திர நடிகை என்பதை நிரூபித்தார்.

கள்வனின் காதலி கல்கி எழுதிய பிரபல நாவல். இதில் சிவாஜியின் ஜோடியாக பானுமதி நடித்தார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் வெற்றி படம். மாறுபட்ட வேடங்களில் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று சிவாஜி நிரூபித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் இது.

இந்த சமயத்தில், சிவாஜி கணேசன் திருப்பதி சென்றார். அது, தி.மு.கழகத்தில் புயலை உண்டாக்கியது. திருப்பதிக்குச் சென்றது ஏன் என்பதை பின்னர் சிவாஜி விளக்கினார். அவர் கூறியதாவது:

நான் திராவிடக் கழகத்திலோ, தி.மு.கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்தது இல்லை. பெரியாருடைய கொள்கைகளையும், அண்ணாவின் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டேன். ஆகையால் அதைப் பிரசாரம் செய்தேன். அந்தக் கொள்கைகளை நான் ஒத்துக்கொண்டேனே தவிர, கட்சி உறுப்பினராக இருந்தது இல்லை.

எனது குடும்பம் தேச பக்தியுள்ள குடும்பம். நாங்கள் எல்லாம் தேசியவாதிகள். அதோடு நாங்கள் இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர். மேலும், குடும்பத்தில் எல்லோரும் பக்தி மிக்கவர்கள். இவை அனைத்தையும் நான் உதறித் தள்ளிவிடவில்லை. சில பகுத்தறிவுக் கொள்கைகள் எனக்கு சரி என்று பட்டது. அந்தக் கருத்துக்களை படங்கள் மூலம் சொன்னேன். அவ்வளவுதான்.

1956-ல் ஒரு புயல் வந்து, பல இடங்களில் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. “புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூலித்துக் கொடுங்கள்” என்று அறிஞர் அண்ணா கூறினார்கள். அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். விருதுநகரில், தெருவில் சென்று துண்டை விரித்து, பராசக்தி வசனம் பேசி, பணம் வசூல் செய்தேன். நிறைய பணம் சேர்ந்தது. அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, படப்பிடிப்புக்காக நான் சேலம் சென்றுவிட்டேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அப்போது, அதிக அளவில் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு அண்ணா ஒரு பாராட்டு விழா வைத்தார். சேலத்தில் இருந்த நான், சென்னையில் இருந்த என் தாயாருக்கு டெலிபோன் செய்து, “இன்று விழா நடக்கிறதே! யாராவது எனக்கு அழைப்பு கொடுத்தார்களா?” என்று கேட்டேன். “இல்லை” என்று என் தாயார் கூறினார்கள்.

உடனே நான் சேலத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன். விழாவிற்காக என்னை கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். யாரும் என்னைக் கூப்பிடவரவில்லை. மாலை 6 மணி அளவில் தொடங்கிய பாராட்டுக் கூட்டத்தில் முதன் முதலாக எம்ஜிஆரைக் கூட்டிச்சென்று, மேடையில் ஏற்றி கவுரவித்தார்கள். அதிகமாக நிதி வசூலித்தவன் நான்தான். ஆனால், எம்ஜிஆர் அவர்களை அக்கூட்டத்தில் மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.

“எங்கே கணேசன், வரவில்லையா?” என்று அண்ணா அவர்கள் கேட்டிருக்கிறார்கள். “இல்லை; கணேசன், `வரமுடியவில்லை’ என்று சொல்லிவிட்டார் என்று அண்ணாவிடம் சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி, என்னை பாதித்தது. பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன்.

அண்ணன் எம்ஜிஆருக்கும், கட்சிக்கும் அப்போது சம்பந்தமே கிடையாது. சின்னப் பிள்ளையில் இருந்து அந்த இயக்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்தவன் நான். என்னை ஒதுக்கி வைப்பதற்காகத்தான் இவ்வாறு செய்தார்கள். இதுதான் உண்மை. நான் பல நாட்கள் வருத்தமாக இருந்தேன். ஒரு நாள் என் நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார். “சிவாஜி! ஏன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறீர்கள். திருப்பதிக்கு போய் வரலாம், வாருங்கள்” என்று அழைத்தார்.

நான் கோவிலுக்கு அதிகம் போனதில்லை. ஆனால் பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். திருப்பதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு “விஸ்வரூப தரிசனம்” என்று ஒரு தரிசனம் உண்டு. அதைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்றெல்லாம் எழுதினார்கள்.

எனக்கு ஒரு புகலிடம் தேவைப்பட்டது. ஒரு வழிகாட்டியைத் தேடினேன். அப்போது எனக்கு ஒருவர் கிடைத்தார். அவர்தான் பெருந்தலைவர் காமராஜர். அவருடன் சேர்ந்தேன். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டேன்.

இந்த நிகழ்ச்சியால், எனது திரைப்பட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்று சிலர் கேலி செய்த நேரத்தில், திருப்பதி ஏழுமலையான் கண் விழித்துப் பார்த்து அருள் புரிந்துவிட்டார்.

இதன் பிறகுதான், நான் ஸ்டூடியோவிலேயே 24 மணி நேரமும் தங்கி, மூன்று ஷிப்டாக வேலை செய்தேன். பெற்றோரை, மனைவியை பார்க்கமுடியவில்லை. குழந்தைகளைப் பார்க்கவில்லை. ஸ்டூடியோவுக்கு உள்ளேயே இருந்தேன். நான் நடித்த படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. மக்கள் பாராட்டைப் பெற்று, விருதுகள் வாங்கித் தந்தன.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்

வியட்நாம் வீடு – சாரதாவின் விமர்சனம்


சாரதா கொடுத்த சுட்டியிலிருந்து மீள்பதிவு செய்திருக்கிறேன். நன்றி, சாரதா!

வியட்நாம் வீடு ஒரு quintessential சிவாஜி படம். ஆனால் வி. வீடு பற்றி எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதை நான் சிவாஜியின் இரண்டாம் நிலை படங்களில் ஒன்றாகத்தான் கருதுகிறேன். ஒரே நேரத்தில் சிவாஜி படங்களின் பலத்தையும் பலவீனத்தையும் காட்டும் படம். இப்படி நினைக்கும் என்னையே சாரதாவின் இந்த விமர்சனம் – இல்லை இல்லை புகழுரை – கவர்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காமல், ஓவர் டு சாரதா!

——————————————————————-
சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், நடிகர் திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைக் கொண்ட படங்களில் கண்டிப்பாக இடம் பெறுவது. ஏற்கெனவே விடிவெள்ளி (பிரபுராம் பிக்சர்ஸ்), பாசமலர், குங்குமம் (ராஜாமணி பிக்சர்ஸ்), புபுதிய பறவை (சிவாஜி பிலிம்ஸ்), அன்னை இல்லம் (கமலா பிக்சர்ஸ்), தெய்வ மகன் (சாந்தி பிலிம்ஸ்) போன்ற படங்கள் சொந்தப் படமாக இருந்தபோதிலும் ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் படமாக தயாரிக்கப்பட்டது. இப்போதும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் எம்ப்ளமாக நடிகர் திலகமும், ராஜாமணி அம்மையாரும் சாமி படங்களுக்கு பூஜை செய்வதைக் காட்டும்போது அங்கு வியட்நாம் வீடு படத்தின் கிளாப் போர்டு இருப்பதைப் பார்க்கலாம்.

ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒரு பிராமண குடும்பத் தலைவருக்கு பொறுப்பில்லாத பிள்ளைகளால் ஏற்படும் வாழ்க்கைப் போராட்டமே கதையின் ஆணிவேர். புதிதாக வீடு கட்டி குடி புகும் விழாவோடு படம் துவங்குகிறது. எல்லாவற்றிலும் கௌரவம் பார்க்கும் (கர்வம் அல்ல) பத்மநாப ஐயர். அதனால் பெயரே பிரஸ்டிஜ் பத்மநாபன். கோடு போட்டதுபோல வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு அதன்படியே நெறி பிறழாமல் வாழ நினைக்கும் அவருக்கு, ஜாடிக்கு ஏற்ற மூடியாக மனைவி சாவித்திரி (பத்மினி) அமைந்தாரே தவிர, அவரது பிள்ளைகளை அவரைப் போல நேர்கோட்டில் வளர்க்க முடியவில்லை. ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் பணி புரியும் மூத்தபிள்ளை ஸ்ரீதர் (ஸ்ரீகாந்த்). மனைவி சொல்லே மந்திரமாக மனைவியின் சொல்வதற்கெல்லாம் ‘பூம் பூம் மாடாக’ தலையாட்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. அவன் அடிமைத்தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாமனார், மாமியார் பற்றி வத்தி வைப்பதையே வேலையாக அலையும் அவன் மனைவி மாலா (ரமாப்ரபா). ரமாப்ரபாவுக்கு இப்படியெல்லாம் வில்லியாக நடிப்பில் கொடிகட்ட முடியுமா என்பது நமக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், மாமியாருக்கு எதிராக வில்லத்தனம் என்றால்தான் நம் பெண்கள் வெளுத்து வாங்குவாங்களே (ஆனால் நான் ரொம்ப நல்ல் பொண்ணுங்க, என் மாமியாரைக் கேட்டுக்குங்க).

இரண்டாவது மகனாக, அன்றைய கல்லூரி மாணவர்களின் ஸ்டைலில் நீளமாக தலைமுடி வளர்த்துக்கொண்டு அலையும் கல்லூரி மாணவன் (நாகேஷ்), இவர்கள் இருவருக்கும் கீழே பருவமெய்திய ஒரு தங்கை. குழந்தைகள் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே என்று எண்ணி மனதுக்குள் குமுறும் தந்தை, ஆனாலும் அவருக்கு வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆறுதல் சொல்லும் மனைவி. அதனால்தான் வேலையிலிருந்து திடீரென்று ரிட்டையர் ஆகும்போது அது அவருக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. கையில் தானே சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் அவர், நேராக அம்மாவின் படத்துக்கு முன்பு போய் நின்று கொண்டு “அம்மா, நான் ரிட்டையர் ஆயிட்டேன், உன் பிள்ளைக்கு இன்னைக்கு அம்பத்தஞ்சு வயசு ஆயிடுத்து. I AM COUNTING MY DAYS TO GRAVE” என்று குரல் உடைந்து தடுமாறுகிறார். அப்போது அங்கே வரும் மனைவியிடம் “சாவித்திரி, நான் ரிட்டயர் ஆயிட்டேண்டி” என்று சொல்ல “என்னன்னா சொல்றேள்? அதுக்குள்ளாகவா?” அன்று கேட்க “என்னடி பண்றது, திடீர்னு கூப்பிட்டு ‘உனக்கு வயசாடுச்சு, நீ வீட்டுக்கு போடா’ன்னு அனுப்பிச்சுட்டான். அந்த கம்பெனியோட வளர்ச்சிக்காக நான் என்னவெல்லாம் பாடுபட்டிருப்பேன்! எல்லாத்தையும் மறந்திட்டு போடான்னு அனுப்பிட்டானே” என்று குமுறும்போது முகத்தில், சோகம், ஏமாற்றம், விரக்தி, இனி மிச்சமுள்ள காலத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற அச்சம், இனி நாளையிலிருந்து வேலையில்லாதவனாகிவிட்டோம் என்ற சூன்யம்… எல்லாம் கலந்த கலவையாக அந்த ஒரு முகத்தில்தான் எத்தனை முகபாவம், என்னென்ன உணர்ச்சிப்பிரவாகம்!

(அடப்பாவி மனுஷா… எங்கிருந்தய்யா கத்துக்கிட்டே இதையெல்லாம்?. உனக்குப்பிறகு வந்தவர்கள் உன்னை காப்பியடித்து செய்திருக்கலாம். ஆனால் நீ யாரையும் காப்பியடிக்கவில்லையே..!. காரணம், உனக்கு முன் எவனும் இதையெல்லாம் செய்து காட்டவேயில்லையே… பின் எங்கிருந்து உனக்கு மட்டும் இப்படியெல்லாம்…!!!)

வேலை முடிந்து வீட்டுக்குள் நுழையும் மூத்த மகனிடம், தாய் மெதுவான குரலில் “டேய் ஸ்ரீதரா, உங்க அப்பா ரிட்டயர்ட் ஆயிட்டாருடா. நீ உங்க அப்பா கிட்டே போயி ‘அப்பா கவலைப்படாதீங்க, இனிமே குடுமபத்தை நான் பாத்துக்கறேன்’ன்னு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லுடா” என்ற் கெஞ்சுவது போல கேட்கும் தாயின் குரலுக்கு செவி மடுத்து அப்பாவின் அறைக்குப் போகப்போகும் கணவனை மனைவி மாலா வழி மறித்து, தன் அறைக்கு அழைத்துச்சென்று அவனுக்கு தூபம் போடுவது டிபிகல் நடுத்தர வர்க்க குடும்பத்தின் அச்சடித்த பிரதிபலிப்பு என்றால்…

அப்பா ரிட்டையர் ஆன முதல் மாதம் மகன் சம்பளத்தை வாங்கி வந்து தங்களிடம் தருவான் என்று எதிர்பார்த்திருக்கும்போது, அவன் வந்து “அம்மா, இந்த மாதத்துக்கு எனக்கும் மாலாவுக்கும் சாப்பாட்டுப் பணம்” என்று நீட்டுவது கொடுமை.

தங்களுக்குள் திறந்த புத்தகமாக வாழ்ந்து விட்ட பத்மநாபன்-சாவித்திரி தம்பதியினரிடையே, எந்த ஒளிவு மறைவுமில்லை என்பதை எடுத்துக் காட்டும் அந்த வசனம். ரிட்டையராகி வீடு வந்த பத்மநாபன், தயங்கி தயங்கி தன் மனைவியிடம் “சாவித்திரி, என்னுடைய சம்பளத்தில் இருந்து மாசாமாசம் எதுவும் சேர்த்து வச்சிருக்கியா?” என்று கேட்க “என்னன்னா, உங்களுக்கு தெரியாமல் நான் என்னைக்கு…”, முடிக்கும் முன்பாகவே அவர் “இல்லையில்லை, சும்மாதான் கேட்டேன்” என்று பதறும் இடம்.

பார்க்கில் வாக்கிங் போகும்போது எவனோ ஒருத்தன், “நாளைக்கு இந்நேரம் நான் பிரஸ்டிஜ் பத்மனாபனுடைய மாப்பிள்ளையாகியிருப்பேன்” என்று சொல்வதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோகும் அவர், வீட்டுக்குத் தெரியாமல் அந்த எவனோ ஒருவனுடன் ஓடிப்போகும் மகளை ரயில்வே ஸ்டேஷனில் தோளில் கைவைக்க, திரும்பிப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோகும் மகளை, கோபமும், ‘நீயாடி இப்படி’ என்று அதிர்ச்சியுமாக பார்க்கும் அந்த பார்வை, அந்த பாவம், அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு… நூறு பக்க வசனங்களுக்கு சமம்.

மனைவி மாலாவின் பேராசையால் அலுவலக வேலைகளில் ஊழல் செய்து லஞ்சம் வாங்கி தன் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் ஸ்ரீதர், அப்படி தவறான பாதையினால் ஏற்பட்ட கூடா நட்புகளின் காரணமாக மதுவருந்திவிட்டு, தள்ளடியபடி வீட்டுக்குள் நுழைய, அதைப் பார்த்து பதறிப் போன அம்மா, இந்த விஷயம் பத்பநாபனுக்கு தெரியாமல் மறைக்க, அவனது ரூம் வரை கொண்டு விட்டு விட்டுத் திரும்பும்போது, இத்தனையையும் பார்த்துக்கொண்டு கண்களில் ரௌத்ரமும், அதிர்ச்சியும் பொங்க பத்மநாபன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து பத்மினி அதிர்வது உச்சம்.

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவருக்கு இடையூறாக அண்ணனும் அண்ணியும் ட்ரான்ஸிஸ்டரில் சத்தமாக கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த தங்கை, அவர்களுடன் சண்டைபோட்டு, ட்ரான்ஸிஸ்டரைப் பிடுங்கி வீச, தங்கையை அவன் கை நீட்டி அடிக்க, தான் செல்லமாக வளர்த்த தன் மகளை கைநீட்டி அடிப்பதைப் பார்த்து பத்மநாபன் மகனை அடிக்க, அவனும் அவன் மனைவியும் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, அப்படியே கேமரா சுவரின் பக்கம் திரும்ப சுவரில் விரிசல். (சுவரில் தெரிவது விரிசல் மட்டுமல்ல, இயக்குனர் பி.மாதவனின் முகமும்தான்).

கோபித்துக்கொண்டு தன் தந்தை வீட்டுக்குப் போகும் மாலாவையும் ஸ்ரீதரையும், அவளுடைய தந்தை மட்டும் ஏற்றுக்கொள்வாரா? பிரஸ்டிஜ் பத்மநாபனின் சம்மந்தியாயிற்றே! வாசலிலேயே நிற்க வைத்து அவர்களைக் கண்டித்து, மீண்டும் பத்மநாபன் வீட்டுக்கே அழைத்து வருகிறார். நடந்தவற்றைக் கொஞ்சம் கூட மனதில் வைத்துக்கொள்ளாமல் “ஏன் இன்னும் நிக்கறேள்? மேலே போங்கோ” என்று அனுப்பிவைக்க, அவர்கள் மாடியில் ஏறும் சமயம் இன்னொரு பெரிய வில்லங்கம் வருகிறது. ஆம், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி விஜயன், தன் சக அதிகாரிகள் சகிதம் வீட்டை சோதனை போட வருகிறார். சோதனையின்போது, ஏராளமான சொத்துக்கள், நகைகள், பக்கத்து வீட்டுப் பெண் பெயரில் ஓடும் டாக்ஸி போன்றவை சிக்க பத்மநாபன் அதிர்ந்து போகிறார். ஸ்ரீதரை அரெஸ்ட் பண்ணி அழைத்துப் போகும்போது, மாலாவின் அப்பா வி.எஸ்.ராகவனைப் பார்த்து, “சம்மந்தி, பாத்தேளா? இந்த வீட்டோட பிரஸ்டிஜும் போயிடுத்து, ஜஸ்டிஸும் போயிடுத்து” என்று பத்மநாபன் புலம்பும்போது நம்மை பரிதாபத்தின் உச்சத்துக்கு கொண்டு போய்விடுவார்.


நம்மை நெஞ்சைப் பிழியும் இன்னொரு முக்கியமான கட்டம், ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்‘ பாடல் காட்சி. முதலிரண்டு வரிகளை மட்டும் பாரதியார் பாடலில் இருந்து எடுத்துக் கொண்டு, மேற்கொண்டு காட்சிக்கு தகுந்தாற்போல கவியரசர் கண்னதாசன் புனைந்த அற்புத பாடல், ‘மாமா’வும் ‘சின்ன மாமா’வும் (புகழேந்தி) சேர்ந்தமைத்த மனதை வருடும் மெட்டு. இந்த மாதிரிப் பாடல்களைப் பாடுவதற்கென்றே பிறந்த டிஎம்எஸ் பாட, அதற்கு நடிகர் திலகமும், நாட்டியப் பேரொளியும் முகபாவங்காளாலேயே உணர்ச்சிகளைக் கொட்ட…

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

பல்லவி முடிந்து இடையிசையில், கைப்பிடித்தபடி மணவறையை சுற்றி வரும் பஞ்சகச்சம் கட்டிய பத்மநாபன், மடிசார் கட்டிய சாவித்திரி தம்பதியின் இளமைக் கால நினைவுகள். அந்த நினைவில் தொடரும் அனுபல்லவி…

உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

நம்பிய பிள்ளைகள் ஏமாற்றி விட்டனர். விழுதுகளாய் நின்று தங்களைத் தாங்குவார்கள் என்று நம்பியிருந்த விழுதுகள் ஒவ்வொன்றாக மறைய, துவண்டு விழப் போகும் சமயம், மனைவி ஓடிவந்து தாங்கி அணைத்துக்கொள்ள…

சாலைச் சுமைதாங்கி போலே மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

மீண்டும் தம்பதிகளின் பழைய முதலிரவுக் காட்சி. மடிசார் மாமியின் மடியில் தலைவைத்து உறங்கும் இளைய பத்மநாபன். அவரது அழகான முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் சாவித்திரி, சட்டென்று காட்சி மாறி தரையில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் மடியில் தலை வைத்து தரையில் படுத்திருக்கும் பத்மநாபனைக் காணும்போது, கல்மனம் படைத்தவர்கள் தவிர அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும்.

முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும்
பிள்ளைக் குலமடியோ என்னை பேதமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
தேவையை யாரறிவார்… என்…… தேவையை யாரறிவார்
உன்னைப்போல தெய்வம் ஒன்றேயறியும்

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில்…. நீர் வழிந்தால்…. என் நெஞ்சில்…..
(இருவரின் விம்மல் நம் நெஞ்சுக்குள் ஊடுருவும்)

பாடல் முடிந்ததும் அமைதி, எங்கும் நிசப்தம், ஒரு கைதட்டல் இல்லை, விசில் இல்லை. மாறாக சத்தமில்லாத விம்மல்கள், கைக்குட்டைகளிலும், வேஷ்டி நுனிகளிலும், முந்தானையிலும் கண்களைத் துடைத்துக் கொள்ளும் ரசிகர் கூட்டம்.

எழுதியவர் இல்லை, இசை வடிவம் தந்தவர்கள் இல்லை, இயக்கியவரும் போய் விட்டார், நடித்தவர்களும் மறைந்து விட்டனர். பாடியவர் மட்டும் இருக்கிறார். பல்லாண்டு வாழ்க.

(எங்கள் பிள்ளைக்கு இப்போதே இந்தப்படங்களைப்போட்டுக் காட்டுகிறோம். ஏனென்றால் நாளை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முதியோர் இல்லத்துக்கு அவன் அப்ளிகேஷன் வாங்கிக்கொண்டு வந்து நிற்கக்கூடாதில்லையா?)

இப்படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள்…..

பத்மநாப ஐயரின் திருமண நாள் கொண்டாட்டத்தில் பாடும் பாடல் “உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே (உண்மைதானே) உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பும் இதயமே“. இப்பாடலை நான்கு வித்தியாசமான மெட்டுக்களில் அமைத்திருப்பார் மாமா.


வயதான காலத்தில், தங்களின் திருமண ஃபோட்டோவைப் பார்க்கும்போது, இருவரது கண்களிலும் விரியும் ஃப்ளாஷ்பேக் பாடல் “பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா“. படத்திலேயே நடிகர் திலகமும், நாட்டியப் பேரொளியும் இளமைத் தோற்றத்தில் முழுக்க வருவது இந்தப் பாடல் காட்சியில் மட்டும்தான்.

இளைஞர்களைக் கவர்வதற்கென்று, கல்லூரி மாணவர்கள் பாடுவதாக போடப்பட்ட பாடல் “மை லேடி கட்பாடி நீயே எந்தன் ஜோடி“. (ஏ.எல்.ராகவன் குழுவினர்) இப்படத்தின் தரத்துக்கு தேவையில்லாத பாட்டு. நாகேஷ், தங்கவேலு போன்றவர்கள் இருந்தும் கடும் நகைச்சுவைப் பஞ்சம். ஈட்டிக்காரனிடம் கடன் வாங்கி விட்டு, அவன் துரத்த, இவர்கள் ஓடுவது எல்லாம் காமெடியா?.

கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, திரையிசைத்திலகம் கே.வி.எம். மாமா இசையமைத்திருந்தார். கதை வசனம் எழுதியவரை எங்கே எல்லோரும் மறந்துவிடப்போகிறார்களோ என்ற எண்ணத்தில் பின்னாளில் ‘வியட்நாம் வீடு சுந்தரமாகவே‘ ஆகிப்போனார்.

படம் எப்படி முடியப்போகிறது என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருப்பார் இயக்குனர் பி.மாதவன். பத்மநாபன் ஆபரேஷனுக்குப் போகும்போது சோகமாக முடியப் போவது போலிருக்கும். ஆபரேஷனுக்காக ஸ்ட்ரெச்சரில் படுக்கப்போகும் பத்மநாபன், தன் கையில் வாட்ச் இருப்பதைப் பார்த்ததும் அதைக் கழற்றி மனைவியிடம் கொடுக்கப் போகும்போது பார்த்துவிட்டுச் சொல்வார் – “கடிகாரம் நின்னு போச்சுடி சாவித்திரி” (இந்த இடத்தில் தியேட்டரில் ‘ஐயோ’ என்ற முணுமுணுப்பு கேட்கும்).

ஆனால் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சுபமான முடிவை எதிர்நோக்கியிருப்பது போலிருக்கும். திடீரென மீண்டும் கதை மாறி, பத்மநாபன் இறந்து போவதுபோல முடிந்து நம் நெஞ்சில் சோகத்தை சுமக்க வைத்துவிடும். ஆனால் அழுகை, சத்தம், கூக்குரல் என்று எதுவுமில்லாமல் சோகத்தை அப்படியே ஸ்டில்களில் நிறுத்தி படத்தை முடித்திருப்பது அருமையான உத்தி.

சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி, திருச்சி பிரபாத் உட்பட தமிழகத்தில் ஐந்து நகரங்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடிய இப்படம் நடிகர் திலகத்தின் திறமையின் உரைகல்லாக அமைந்த படங்களில் ஒன்று.

‘வியட்நாம் வீடு’ என்ற காவியப்படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

** படமாக்கப்படுவதற்கு முன்னர் இது சிவாஜி நாடக மன்றத்தால் பல நூறு முறை மேடை நாடகமாக நடத்தப்பட்டது. படத்தில் பத்மினி நடித்த ரோலில், நாடகத்தில் (நடிகர் திலகத்தின் ஜோடியாக) நடிகை ஜி.சகுந்தலா நடித்திருந்தார். (சி.ஐ.டி.சகுந்தலா அல்ல, ஜி.சகுந்தலா)

** வியட்நாம் வீடு திரைப்படம், 1970-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக (தி.மு.க. தலைமையிலான) தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு பெற்றது. (‘தி.மு.க. தலைமையிலான’ என்ற சொற்றொடர் எதற்கு? “அன்றைக்கு காங்கிரஸ் அரசு இருந்தது, சிவாஜி காங்கிரஸ்காரர் என்பதால் கொடுத்தார்கள்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதைத் தவிர்க்கத்தான்).

** ” I AM COUNTING MY DAYS TO GRAVE” என்ற வார்த்தைகளை டைப் செய்தபின்னர், சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு என்னால் டைப் செய்ய முடியவில்லை. கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. கைகள் நடுங்கின. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தேன்.

——————————————————————-

மீண்டும் ஆர்வி: என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் சாரதாவின் விவரிப்பைப் படிக்கும்போதே மனம் கனக்கிறது. பார்ப்பவர்களுக்கு எப்படி இருந்திருக்கும், அதுவும் படம் வந்த காலகட்டத்தில் என்று சுலபமாக யூகிக்கலாம். படம் வந்தபோது தமிழ் கூறும் நல்லுலகம் என்ன நினைத்தது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த விகடன் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம், படங்களின் பட்டியல், சாரதா பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆர்வியின் விமர்சனம்
விகடன் விமர்சனம்

வஞ்சிக்கோட்டை வாலிபன்


Vanjikkottai Valibanமுப்பது வருஷத்துக்கு முன்னால் இன்றைக்கு டிவி எப்படியோ அப்படி ரேடியோ இருந்தது. விவித்பாரதி கேட்டு வளர்ந்த ஜெனரேஷன் அது. கடைத்தெருவில் நடந்து போனால் நாலு கடையிலாவது ரேடியோ பாட்டு கேட்கும். அப்படி காற்றினிலே வரும் கீதங்களில் இரண்டு கீதம் எப்போதும் என்னைப் பிடித்து நிறுத்திவிடும். என்ன அவசர வேலையாக இருந்தாலும் அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டுதான் அடுத்த அடி வைப்பேன். அதில் ஒன்று வஞ்சிக் கோட்டை வாலிபனின் போட்டி நடனப் பாட்டு.

என்ன அற்புதமான பாட்டு? காதல் என்பது இதுதானா என்று மெதுவாக ஆரம்பிக்கும். அப்புறம் கண்ணும் கண்ணும் கலந்து என்று கொஞ்சம் டெம்போ ஏறும். வீரப்பா சரியான போட்டியைக் கண்டு சபாஷ் போடுவார். வைஜயந்திமாலா களத்தில் ஜிலுஜிலுவென குதிப்பார். பத்மினி ஆறு பெருகி வரின் ஆணை கட்டலாகும் என்று சொல்லிப் பார்ப்பார். வை. மாலா இன்னொருத்தி நிகராகுமோ என்று அலட்டுவார். ஆடு மயில் முன்னே ஆணவத்தில் வந்தவரும் பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடுபவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடிப் பாடுவார்கள். சி. ராமச்சந்திரா சும்மா புகுந்து விளையாடிவிட்டார். வை. மாலா பாடும்போது ஒரு துள்ளல்; பத்மினி பாட்டில் சரணத்துக்கு சரணத்துக்கு ஏறிக் கொண்டே போகும் டெம்போ. ஆஹா!

இந்த பாட்டை கேட்டதிலிருந்தே படம் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் என் துரதிருஷ்டம், சின்ன வயதில் அக்கம்பக்கம் எங்குமே இந்தப் படம் திரையிடப்படவில்லை. சன் டிவியில் சில சமயம் ராஜா மகள் பாட்டு போடுவார்கள். வீடியோ லேசில் கிடைப்பதில்லை. கடைசியில் முழுவதும் பார்த்தது சன் டிவி தயவில்தான்.

சந்திரலேகா, அபூர்வ சகோதரர்களை விட ஒரு மாற்று குறைவுதான், ஆனால் நல்ல பொழுதுபோக்குப் படம். கப்பலில் ஜெமினி புரியும் சாகசம், கடைசியில் கோட்டையில் போடும் சண்டை எல்லாமே நன்றாக இருக்கும். வாசன் ஹிந்தியிலிருந்து சி. ராமச்சந்திராவை ஏன் இறக்குமதி செய்தாரோ தெரியாது, ஆனால் அவர் வூடு கட்டி அடித்திருக்கிறார்.

கதை சிம்பிள். ஜெமினி விசுவாசமான மந்திரி? மகன். ராஜ குடும்பத்தை சதி செய்து பி.எஸ். வீரப்பா துரத்திவிட்டு தான் ராஜாவாகிவிடுகிறார். ஆனால் மந்திரி இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார். ஜெமினியும் ராஜகுமாரி பத்மினியும் வழக்கம் போல காதலிக்கிறார்கள். நடுவில் வை. மாலாவின் தீவில் ஜெமினி மாட்டிக் கொள்கிறார். மாலா ஜெமினியைப் பார்த்து உருக, மாலா உதவியால் ஜெமினி மீண்டும் வஞ்சிக்கோட்டைக்கு வந்து போராட, ஆனால் மாலாவுக்கு பத்மினி விஷயம் தெரிந்துவிடுகிறது. போட்டி நடனம். மாலா ஜெமினியைக் காட்டிக் கொடுத்துவிடுகிறார். பிறகு தப்பிக்கவும் வைக்கிறார். அப்புறம் வழக்கம் போல சண்டை, மாலா முழ நீளம் வசனம் பேசி விட்டு இறக்கிறார்.

ராஜா மகள் இன்னொரு நீளமான நல்ல பாட்டு. பாப்புலரும் கூட.

நண்பர் ராஜு சிலாகிக்கும் ஒரு நல்ல பாட்டு வெண்ணிலவே தண்மதியே. வீடியோ

ஜாலியான பொழுதுபோக்குப் படம். பாட்டுக்காகவே பார்க்கலாம். பத்துக்கு 7 மார்க். B- grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கம்: விகடன் விமர்சனம்

வஞ்சிக் கோட்டை வாலிபன்


படம் வந்தபோது (மே 1958) விகடனில் வந்த விமர்சனம். கூடிய விரைவில் என் விமர்சனமும் வரும். நன்றி, விகடன்!

முனுசாமி – மாணிக்கம்

முனுசாமி: என்ன தம்பி, ரொம்ப வேகமாப் போய்க்கிட்டு இருக்கியே, எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறே?

மாணிக்கம்: கோட்டை யைப் பிடிக்கத்தான் புறப்பட்டேன்; நீ குறுக்கே வந்துட்டே. வஞ்சிக்கோட்டை வாலிபனிலே இடம் பிடிக்கப் போறேன்.

முனு: அதென்ன இந்நேரம் பொறுத்து? இப்ப இன்டர்வெல் முடிஞ்சிருக்குமே!

மாணி: படத்தை நாலுவாட்டி பார்த்துட்டேன் அண்ணே! இன்டர்வெல்லுக்கப்புறம் ஒரு டான்ஸ் போட்டி வருது. அதைப் பார்க்கத்தான் தினம் போய்க்கிட்டு இருக்கேன்.

முனு: அதென்னப்பா அவ்வளவு ஒசத்தியான போட்டி?

மாணி: வைஜயந்திமாலாவும் பத்மினியும் டான்ஸிலே போட்டி போட்டுக்கிட்டு ஆடியிருக்காங்க!

முனு: சரி, போட்டியிலே யாரு ஜெயிக்கறாங்க?

மாணி: படம் பிடிச்சவங்கதான்! இது உண்மையிலே கலைப் போட்டி இல்லே, அண்ணே! காதல் போட்டி. கடைசியில் காதல்தான் ஜெயிக்குது. ஒருத்தி தன் உயிரைக் கொடுத்து காதலனைக் காப்பாத்தறா; யாருகிட்டே போட்டிக்குப் போனாளோ, அவ கையையே பிடிச்சுக் காதலனிடம் ஒப்படைக்கிறா.

முனு: என்ன தம்பி இது, அதுக்குள்ளே முடிவுக்குப் போயிட்டியே, ஆரம்பத்தைச் சொல்லு!

மாணி: அது ஒரு பெரிய புயல் அண்ணே..!

முனு: காதல் புயலா? பொறாமைப் புயலா?

மாணி: இரண்டும் இல்லே! ஒரு கப்பல் புயலிலே மாட்டிக்குது. ஒரு வாலிபன் துணிச்சலா கம்பத்திலே ஏறி பாய்மரத்தை வெட்டிக் கப்பலைக் காப்பாத்திடறான். அந்தக் காட்சியே ரொம்ப ஜோர் அண்ணே! சும்மா இங்கிலீஷ் படம் பார்க்கறாப்போல இருக்குது.

முனு: ஜெமினி கணேசன்தானே அந்த வாலிபன்! அவரு எப்படி?

மாணி: பிரமாதப்படுத்தியிருக்காரு. கப்பல் பாய்மரத்துலே ஏறி, பாயை வெட்டறாரு பாரு… அடேங்கப்பா படா திரில்லு! கடைசி சீன்லே கோட்டை உச்சியிலே வீரப்பாவோடு கோடாலிச் சண்டை போட்டுக் குப்புறத் தள்ளறாரு. ஸ்டன்ட் செய்யறபோது எம்.ஜி.ஆர் கணக்கா இருக்குது; உணர்ச்சியா நடிக்கிறபோது சிவாஜி மாதிரி தோணுது. ரத்ன வியாபாரியா வரபோது சக்கைப் போடு போடறாரு; அடிமையா வந்து வைஜயந்தி எதிரில் நின்னு டாண்டாண்ணு பதில் சொல்றபோது, ‘சபாஷ்… சபாஷ்’னு சொல்லத் தோணுது.

முனு: வைஜயந்தி என்னமா வருது?

மாணி: தளதளன்னு வருது; ஜிலுஜிலுன்னு பாடுது. இந்தப் படத்திலே அதைப் பார்க்கிறபோது, மங்கம்மா சபதத்திலே அவங்க அம்மா வசுந்தரா ஆடினதும் பாடினதும் ஞாபகம் வருது. ‘ராஜா மகள்… ரோஜா மலர்’னு ஒரு டான்ஸ் ஆடுது பாரு..!

முனு: அது நாட்டியம் ஆடறது ஒரு அதிசயமா தம்பி!

மாணி: இல்லேண்ணே, நடிப்பும் ரொம்ப அபாரம். துண்டு துண்டா ஒரு வார்த்தைதான் பேசுது. எத்தனை அர்த்தம்… எத்தனை பாவம்..! எத்தனை உணர்ச்சியை அதிலே கொட்டுது தெரியுமா? கண்ணைச் சிமிட்டினா ஒரு குறும்புத்தனம்; உதட்டைக் கடிச்சா ஒரு உணர்ச்சி; நடந்தா ஒரு அர்த்தம்; உட்கார்ந்தா ஒரு பாவம்; நின்னா ஓவியம்; திரும்பினால் காவியம்..!

முனு: போதும்டா தம்பி, பத்மினி எப்படி?

மாணி: இது என்ன கேள்வி அண்ணே? பௌர்ணமியிலே நிலவுண்டான்னு கேக்கிற மாதிரி இருக்குது. பத்மினி ஆக்டைப் பத்திக் கேட்கறியே? அதுக்குக் குடுத்திருக்கிற வேஷமே நெஞ்சை உருக்குது.

முனு: கதையைச் சொல்லேன், கேட்போம்.

மாணி: நாட்டுக்காக தந்தை தன் வீட்டையே தியாகம் செய்யறார். கடமைக்காக மகன் காதலையும் உதறித் தள்ளிட்டு, தன் தகப்பனுக்கும் தாய்க்கும் தங்கைக்கும் தாய் நாட்டுக்கும் துரோகம் செய்தவனைப் பழி வாங்குகிறான். இதை வச்சுக்கிட்டு, கோட்டையும் கொத்தளமும் கப்பல் சண்டையும் பிரமாண்டமா எடுத்திருக்காங்க. படத்தைப் பார்த்தாலே பிரமிப்புத் தட்டுது! அழகு சொட்டுது!

இந்தப் படத்திலே இன்னொரு விசேஷம் அண்ணே! நம்ப வீரப்பா சிரிக்காமலே சிறப்பா நடிச்சிருக்காரு!

முனு: மொத்தத்திலே படம் எப்படி?

மாணி: நல்ல விறுவிறுப்பண்ணே! பார்க்கப் பார்க்கத் திகட்டல்லே! சந்திரலேகா மாதிரி ஜமாய்க்குது!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

வீரபாண்டிய கட்டபொம்மன்


சிவாஜியைப் பற்றி பொதுவாக சொல்லப்படும் குறை அவர் ஓவர்ஆக்ட் செய்கிறார், மெலோட்ராமா என்பதுதான். உண்மையில் குறை அதுவல்ல. மெலோட்ராமா என்பது ஒரு விதமான ஸ்டைல். பாய்ஸ் நாடகங்கள், தெருக்கூத்து, ஜப்பானிய கபூகி நாடகங்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், musicals எல்லாவற்றுக்கும் ஒரு ஸ்டைல், இலக்கணம் இருக்கிறது. சிவாஜியின் படங்களையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். குறை அவர் படங்கள் – அதுவும் பிற்காலப் படங்கள் – அவருக்கு “நடிக்க” ஸ்கோப் உள்ள காட்சிகளின் தொகுப்பாக இருப்பதுதான். சினிமா என்பது வெறும் சீன்களின் தொகுப்பல்ல. இதை அவரும் உணரவில்லை, அவர் காலத்து இயக்குனர்களும் உணரவில்லை. அந்த காலத்து ரசிகர்கள் உணர்ந்தார்களா என்பதும் சந்தேகமே.

இதனால்தான் அவரது significant number of படங்கள் உணர்ச்சிகளின் உச்சத்தை வெளிப்படுத்தும் சீன்களின் தொகுப்பாக, அவர் மட்டுமே வியாபித்திருக்கும் கதைகளாக, மிக சுலபமாக கிண்டல் அடிக்கப்படுபவையாக இருக்கின்றன. கமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் – சிவாஜி சிங்கம், ஆனால் அவருக்கு தயிர் சாதம் மட்டுமே போடப்பட்டது என்று. அதில் உண்மை இருக்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த குறைகளை சுலபமாக தாண்டுகின்றது. கட்டபொம்மன் உணர்ச்சிப் பிழம்புதான். ஓவர் ஆக்டிங், மெலோட்ராமா, over the top performance போன்ற வழக்கமான “குற்றச்சாட்டுகளை” அள்ளி வீசலாம்தான். ஆனால் யாராக நடிக்கிறார்? ஒரு larger than life icon, நாட்டுப்புற பாட்டுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தொன்மம், சரித்திரத்தை தாண்டி ஐதீகமாக மாறிவிட்ட ஒரு மனிதனை இப்படி நடித்துக் காட்டுவது மிக பொருத்தமாக இருக்கிறது.

கட்டபொம்மன் ஜாக்சன் துரையை பார்த்து எங்கள் மங்கலப் பெண்டிருக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா என்று கேட்டாரா என்பது சந்தேகம்தான். அப்படி கட்டபொம்மன் கர்ஜித்திருந்தால் அது ஜாக்சன் துரைக்கு புரிந்திருக்குமா என்பது அதை விட பெரிய சந்தேகம். ஆனால் சிவாஜி கொண்டு வருவது சரித்திரத்தை தாண்டிப்போய்விட்ட கட்டபொம்மன் என்ற இதிகாச மனிதரை. கட்டபொம்மனை ஒரு இதிகாசமாக, தொன்மமாக, icon ஆக மாற்றியதில் நாட்டுப்புற பாடல்களுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே அளவு பங்கு இந்த நடிப்புக்கும் உண்டு. இந்த performanceஇன் தாக்கம் இல்லாத தமிழ் நடிகர் யாருமில்லை. பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன் மூன்று படங்களும் மெலோட்ராமா என்பது கெட்ட வார்த்தை இல்லை என்பதை இன்றும் உணர்த்தும் படங்கள்.

பந்துலு சிறந்த தயாரிப்பாளர். பணம் முக்கியம்தான், ஆனால் படம் நன்றாக வருவது அதை விட முக்கியம் என்று நம்பியவர். கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் மாதிரி படங்களில் பணத்தை வாரி இறைத்தார். வெள்ளைக்காரனை எதிர்த்து போராடியவர்களை திரைப்படத்தில் கொண்டு வந்ததற்காக எப்போதும் நினைவிளிருப்பார். (கன்னடத்தில் கிட்டூர் ராணி சென்னம்மா எடுத்தார். சென்னம்மா கன்னட கட்டபொம்மி.)

1959-இல் வந்த படம். சிவாஜி, எஸ். வரலக்ஷ்மி, ஜெமினி, பத்மினி, ஓ.ஏ.கே. தேவர், ராகினி, ஜாவர் சீதாராமன், வி.கே. ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், ஏ. கருணாநிதி, டி.பி. முத்துலட்சுமி நடித்தது. ஜி. ராமநாதனின் அற்புதமான இசை. பந்துலுவே இயக்கினார் என்று நினைக்கிறேன்.

சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களில் அனல் பறக்கிறது. அவற்றை ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க சிம்மக் குரல். பத்திக்கிச்சு!

இதற்கும் கதை எழுத வேண்டுமா என்ன?

சிவாஜி ஜாக்சன் துரையிடம் பேசுவது தமிழ் சினிமாவில் ஒரு seminal moment. Enough said.

ஜெமினி-பத்மினி காதல் கதை படத்தின் வீக்னஸ். படத்தின் தீவிரத்தை குறைக்கிறது. அதுதான் இயக்குனரின் எண்ணம், என்றாலும் சுலபமாக தம் அடிக்க வெளியே போய்விடலாம். படத்தின் தீவிரத்தை அதிகரிக்க ஊமைத்துரையின் காரக்டரை டெவலப் செய்திருக்கலாம். ஓ.ஏ.கே. தேவருக்கு ஏதாவது வசனம் உண்டா என்று யோசித்துப் பார்க்கிறேன், அவர் வாயை திறந்த மாதிரியே தெரியவில்லை. அதே போல எட்டப்பனும் ஒரு கார்ட்போர்ட் கட்அவுட்தான். ஜாவர் ஒருவர்தான் படத்தில் கொஞ்சம் நிற்கிறார்.

பாட்டுகள் அபாரம். ஜி. ராமநாதன் கொன்றுவிட்டார்.

இன்பம் பொங்கும் வெண்ணிலாதான் என் ஃபேவரிட். அதுவும் பிபிஎஸ் “உன்னைக் கண்டு” என்று கேட்கும் தருணம்!

எஸ். வரலக்ஷ்மி கலக்கிய படம். அவருடைய கனமான குரல் என்ன சுகமாக “சிங்காரக் கண்ணே உன் தேனூறும் செவ்வாயால்” என்று பாடுகிறது? அதுவும் “உன் வாய் முத்தம் ஒன்றாலே” என்ற வார்த்தைகளை கொஞ்சம் வேகமாக பாடுவது மிக நன்றாக இருக்கும். “மனம் கனிந்தருள் வேல்முருகா” குழந்தைகளுக்கு சாமி பாட்டாக சொல்லித் தரலாம். அப்புறம் “டக்கு டக்கு” என்று ஒரு பாட்டு. கேட்கக் கூடிய பாட்டுதான், ஆனால் இதை எல்லாம் கருணை காட்டாமல் எடிட்டிங் டேபிளில் கட் பண்ணி இருக்க வேண்டும். படத்தின் ஓட்டத்தில் ஒரு ஸ்பீட்பிரேக்கர் மாதிரி வரும்.

ஜி. ராமநாதனின் பாட்டுகள் எப்போதும் இரண்டு வகை. ஒன்று கர்நாடக சங்கீதத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட highbrow பாட்டுகள். இரண்டு நாட்டுப்புற பாட்டு, டப்பாங்குத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட lowbrow பாட்டுகள். “மாட்டு வண்டியை பூட்டிக்கிட்டு” இரண்டாவது வகை. நல்ல, ஆனால் கவனிக்கப்படாத பாட்டு. “ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி” என்ற இன்னொரு நல்ல பாட்டும் “அஞ்சாத சிங்கம் உன் காளை” என்று ஒரு சுமாரான பாட்டும் உண்டு. ஆத்துக்குள்ளே பாட்டு (ஏ.கருணாநிதி நகைச்சுவை பகுதி எல்லாமே) ஸ்பீட்ப்ரேக்கர்தான்.

Highbrow வகையில், நாடக பாரம்பரியம் உள்ள பாட்டு போகாதே போகாதே என் கணவா. எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை. அதுவும் படமாக்கப்பட்ட விதம்! சின்னப்பிள்ளைக்கு சொல்கிற மாதிரி வாழை மரம் விழக் கண்டேன் என்றால் ஒரு வாழை மரத்தை வெட்டி காண்பிப்பார்கள். அதுவும் பத்மினியின் ஓவர்ஆக்டிங் வேறு கொடுமையாக இருக்கும்.

சிவாஜிக்கு பாட்டு கிடையாதோ? வெற்றி வடிவேலனே என்று ஒரு தொகையறா வரும் அது யார் பாடுவதாக வரும் என்று நினைவில்லை. சிவாஜிதானோ?

வேறு பாட்டுகள் எனக்கு நினைவில்லை. சாரதா எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

சிவாஜியின் seminal நடிப்பு, பந்துலுவின் நல்ல தயாரிப்பு, ஜி. ராமநாதனின் அற்புதமான இசை, எஸ். வரலக்ஷ்மியின் குரல், எடுத்துக்கொள்ளப்பட்ட subject matter ஆகியவற்றுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.

தொடர்புடைய பதிவுகள்
வீரபாண்டிய கட்டபொம்மன் விகடன் விமர்சனம்
ம.பொ.சி – ஒரு மதிப்பீடு
கப்பலோட்டிய தமிழன்
மனோகரா, விகடன் விமர்சனம்
பராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்
ஆயிரத்தில் ஒருவன்
எஸ். வரலக்ஷ்மி அஞ்சலி

வீரபாண்டிய கட்டபொம்மன் – விகடன் விமர்சனம்


படம் வந்தபோது – மே 1959 – விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

மாணி: வெற்றிவேல்! வீரவேல்!

முனு: என்ன தம்பி, முதல் காட்சியே பார்த்துட்டியா?

மாணி: முதல் முழக்கம் செய்த தமிழ் மகனுடைய படம். தமிழிலே முதல் சரித்திரப் படம். பார்க்காம இருப்பேனா? அதிலும் சிவாஜி நடிப்பு இருக்கே…

முனு:- ஒண்ணும் சொல்லாதே தம்பி!

மாணி:- ஏன் அண்ணே..?

முனு:- அவர் நடிப்பைப் பற்றி இனி யாரும் புகழ வேண்டிய அவசியம் கிடையாது. அவர் ஒரு தனிப்பிறவி தம்பி! சரி, சண்டைக் காட்சியெல்லாம் எப்படி இருக்கு?

மாணி: நல்லா எடுத்திருக்காங்க அண்ணே! இங்கிலீஷ்கார சோல்ஜர்களும் தமிழ்நாட்டு வீரர்களும் ரொம்ப ரோசமாச் சண்டை போடறாங்க. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளைக்காரன் குண்டு போட்டுத் தகர்த்தெறிகிற காட்சியைப் பார்க்கிறபோது, இவ்வளவு கொடுமை செஞ்சிருக்கிறானே வெள்ளைக்காரன், அவனைச் சாதாரணமா ஊருக்குப் போக விட்டுட்டோமேன்னு தோணிச்சண்ணே!

கவிதையும் வசனமும் கரும்பு போல் இருக்கு. காதலும் வீரமும் போட்டி போட்டுக்கிட்டு வருது.

முனு: காதலர்கள் யார் யார்?

மாணி: ஜக்கம்மாவா எஸ். வரலட்சுமி வருது. சொந்தக் குரல்லே இரண்டு பாட்டு உருக்கமா பாடுது. நல்லா நடிச்சிருக்குது. ஊமைத் துரையா ஓ.ஏ.கே. தேவரும், அவரு மனைவியா ராகினியும் வராங்க. ஊமைத்துரையைப் பேருக்குப் பொருத்தமா விட்டுட்டாங்க.நடிப்புக்கு அதிக வாய்ப்பில்லே! வெள்ளையத் தேவரா ஜெமினி கணேசன் வராரு.

முனு: வெள்ளையம்மா யாரு?

மாணி: பத்மினிதான்! ‘போகாதே போகாதே என் கணவா’ன்னு பாடி வழியை மறைக்கிறபோது பெண் குலமே அழுதுடும். கணவன் போரில் இறந்தவுடனே, தானும் போர்க்களத்திலே குதிச்சு பழி வாங்கற காட்சியைப் பார்த்தா ஆண் குலத்துக்கு வீரம் வந்துடும். வீரத் தமிழ் மங்கைன்னா அதுதான் அண்ணே!

முனு: கலர் எப்படி?

மாணி: கண் குளிர்ந்தது அண்ணே! வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் குளுகுளுன்னு இருக்கு. திருச்செந்தூர் முதல் ஜெய்ப்பூர் வரைக்கும் பார்க்கப் பார்க்க அழகாயிருந்தது. பணச் செலவைப் பார்க்கவேயில்லை.

முனு: மற்ற நடிகர்களைப் பற்றி ஏதாவது…

மாணி: வி.கே. ராமசாமி எட்டப்பனா வராரு. ஜாவர் சீதாராமன் பானர்மென் துரையா வந்து பஸ்டு கிளாஸா நடிச்சிருக்காரு. இன்னும் கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால், பக்கிரிசாமி, முத்துலட்சுமி…

முனு: எல்லாருமே இதை ஒரு பாக்கியமா எண்ணி நடிச்சிருப்பாங்க தம்பி. சரி, அப்புறம்..?

மாணி: பிரமாண்டமான சண்டைகளுக்கு நடுப்புற குளோசப்லே வர கத்திச் சண்டைகள் சுமார்தான்! டைரக்டர் பி.ஆர்.பந்துலு முதல்லே நேரிலே வந்து, அவையடக்கமாப் பேசறாரு. அப்புறம், படம் பூரா அவருடைய திறமை தெரியுது.

முனு: மொத்தத்திலே…

மாணி: பார்த்தவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத படம் கட்டபொம்மன். சிவாஜி கணேசன் அப்படி நடிச்சிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை தரும் படம் அண்ணே!

தொடர்புடைய பதிவுகள்
ம.பொ.சி. – ஒரு மதிப்பீடு

ஏவிஎம் பேட்டி


ஏவிஎம்

ஏவிஎம்

ஏ.வி.எம் செட்டியாரை விகடனில் எப்போதோ எடுத்த பேட்டி. நன்றி, விகடன்!

“இந்தத் தொழிலில் நாங்கள் போடுகிற மூலதனத்துக்கும் உழைக்கிற உழைப்புக்கும், படுகிற பாட்டுக்கும் பதிலாக வேறொரு தொழிற்சாலையைத் தொடங்கியிருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும்.”- இப்படிச் சொல்கிறவர் யார்? ஏவி.எம். ஸ்டூடியோ அதிபர் திரு. மெய்யப்பன் அவர்கள்தான்.

“அப்படியானால் இந்தத் தொழிலை விட்டு விடுவதுதானே?” என்று கேட்டால், “எப்படி விட முடியும்? புலியின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாலை விட்டால் திரும்பி நம் மீது பாய்ந்து விடுமோ என்று அஞ்சி, கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதில்லையா? அந்த மாதிரியேதான்” என்கிறார்.

திரு மெய்யப்பன் இத் தொழிலை விரும்பி மேற்கொண்டார் என்பதைக் காட்டிலும், சந்தர்ப்பம் இவரை இழுத்துக்கொண்டது என்று கூறுவதுதான் பொருந்தும்.

இவருடைய தந்தை ஆவிச்சி செட்டியார் காரைக்குடியில் ஒரு ஸ்டோர் வைத்திருந்தார். கிராமபோன் ரிக்கார்டுகள் விற்பனை செய்யும் டீலராகவும் இருந்தார். அவர் தொடங்கிய அந்த ஸ்டோர் ஏவி. அண்ட் ஸன்ஸ் என்ற பெயரில் இப்போதும் நடந்து வருகிறது. கிராமபோன் ரிக்கார்டு வியாபாரத்தை விரிவாகச் செய்யும் நோக்குடன் 1932-ல் சென்னைக்கு வந்த திரு. ஏவி.எம்., நாராயண அய்யங்கார், சிவன் செட்டியார் இவர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, சரஸ்வதி ஸ்டோர்ஸைத் தொடங்கினார்.

முசிரி சுப்பிரமணிய அய்யர், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், சுப்பையா பாகவதர் இவர்களுடைய ரிக்கார்டுகளே அந்தக் காலத்தில் பிரசித்தமாயிருந்தன. ‘அதிகமாக விற்பனையான இசைத் தட்டு எது?’ என்று கேட்டதற்கு, “முசிரியின் கர்னாடக இசைத் தட்டுகள் மட்டும் 30,000-க்கு மேல் விற்பனை ஆயின. கர்னாடக இசைத்தட்டு விற்பனையில் அது ஒரு பெரிய ரெக்கார்ட்! ‘டிரியோ டிரியோடேயன்னா’, ‘எட்டுக்குடி வேலனடி’, ‘செந்தூர் வேலாண்டி’ பாட்டெல்லாம் அந்தக் காலத்தில் ரொம்பப் பாப்புலர்!” என்கிறார்.

ரேடியோவும் சினிமாவும் வந்த பிறகு கிராமபோன் ரிக்கார்டுகளுக்கு மவுசு குறைந்துவிட்டதால், மெய்யப்பனின் கவனம் படத் தயாரிப்புத் தொழிலில் திரும்பியது.

சரஸ்வதி டாக்கி புரொடியூஸிங் என்ற பெயரில் ஒரு படக் கம்பெனி யைத் துவக்கினார். அப்போதெல்லாம் சென்னையில் ஸ்டுடியோக்கள் கிடையாதாகையால், கல்கத்தா நியூ தியேட்டர்சுக்குச் சென்று அல்லி அர்ஜுனா என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து முடித்தார். கே.எஸ்.அனந்தநாராயணய்யர் அந்தப் படத்தில் கிருஷ்ணனாகவும், குறத்தியாகவும் நடித்தார்.

‘படம் எப்படி இருந்தது?’ என்று கேட்டதற்கு, “அதை ஏன் கேட்கிறீர்கள்? படம் முழுவதும் எடுத்து விட் டோம். அப்போதெல்லாம் உடனுக்குடன் ரஷ் பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. மொத்தமாகப் படத்தைப் போட்டுப் பார்த்தபோது 10,500 அடி கூடத் தேறவில்லை. படத்தில் எல்லோருடைய கண்களும் மூடிக் கிடந்தன. வெயிலில் படம் எடுத்த தால் கூச்சத்தில் கண்களை மூடிக் கொண்டுவிட்டார்கள். எடுக்கிறவர்களுக்கும் வெயில்தானே? நடிக்கிறவர்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார்களா, திறந்து கொண்டிருக்கிறார்களா என்று பார்க்க முடியவில்லை. அப்புறம் கார்ட்டூன் படங்களைச் சேர்த்துக் காண்பித்து நேரத்தைச் சரிக்கட்டினோம்.” என்றார்.

அல்லி அர்ஜுனாவுக்குப் பிறகு இவர் எடுத்த படம் ரத்னாவளி. நடித்தவர்கள் ரத்னாபாய் – சரஸ்வதிபாய் சகோதரிகள். இந்தச் சகோதரிகளுக்கு 30 நாள் ஷூட்டிங்குக்கு 25,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. ‘வசூல் எப்படி?’ என்ற நமது கேள்விக்கு, ‘பிரயோஜனமில்லை’ என்பதுதான் அவர் பதில்.

‘இனி சொந்தத்தில் ஸ்டுடியோ இல்லாமல் படம் எடுக்கக் கூடாது. ஸ்டுடியோ ஆரம்பிப்பதாயிருந்தால் அது பங்களூரில்தான் இருக்க வேண்டும். ஸ்டூடியோவுக்கேற்ற சீதோஷ்ண நிலை அங்கேதான் இருக்கிறது’ என்ற முடிவுக்கு வந்தார். அதற்கேற்றாற்போல் ஜயந்திலால் என்பவர் (பூனா பிரபாத் ஸ்டுடியோவுடன் தொடர்பு கொண்டவர்) பங்களூரில் இருந்தார். அவருடைய கூட்டுறவோடும் தம் சகாக்களின் கூட்டுறவோடும் பங்களூரில் பிரகதி என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோவைத் தொடங்க முடிவு செய்தார் ஏவி.எம். வெளி நாட்டிலிருந்து சாதனங்கள் வந்து சேர ஆறு மாத காலம் ஆகும்போல் இருந்ததால், அதற்குள் பூனா சென்று இந்தி நந்தகுமாரைத் தமிழில் எடுக்க முயன்றார்கள். இந்திப் படம் திரையிடப்பட்ட இரண்டு நாளைக்கெல்லாம் வசூல் குறைந்துவிடவே, தமிழை அடியோடு மாற்றி எடுப்பதென முடிவு செய்தனர். இந்தி ஏன் ஓடவில்லை என்று கேட்டால், “கிருஷ்ணலீலா வித்அவுட் கம்சன் என்றால், படம் எப்படி ஓடும்?” என்று திருப்பிக் கேட்கிறார். தமிழ் நந்தகுமாரில் பணம் கிடைத்தது. ஆனால், பங்களூர் பார்ட்னர்கள் தங்கள் பங்கைப் பிரித்துவிட்டதால், ஏவி.எம். பிரகதி ஸ்டுடியோவை பங்களூரில் அமைப்பதற்குப் பதில் சென்னையில் நிறுவ வேண்டியதாயிற்று.

ஒஷியானிக் ஓட்டலுக்கு அருகே யுள்ள விஜயநகரம் பேலஸ்தான் பிரகதி ஸ்டுடியோ இருந்த இடம். வாடகை ரூ.350-தான். பூகைலாஸ், அரிச்சந்திரா, சபாபதி, ஸ்ரீவள்ளி ஆகிய படங்களே ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்டவை.

“சபாபதி ரொம்பத் தமாஷான படம்” என்று நாம் சொன்னபோது, “பூகைலாஸ் எடுத்தது அதைவிட வேடிக்கை” என்றார். “தெலுங்கு பேசும் படம், தமிழ் புரொடியூஸர், இந்தி டைரக்டர், கன்னட ஆர்ட்டிஸ்ட்ஸ்! இதுதான் பூகைலாஸ்!”

1944-ல் ஏவி.எம். டைரக்ஷனில் உருவாக்கப்பட்ட ராஜ யோகி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. வசுந்தராவும் தியாகராஜ பாகவதரும் சேர்ந்து நடித்த முதல் – கடைசிப் படம் அதுதான். பாதியிலேயே நின்று போனதற்குக் காரணம், நட்சத்திரங்கள் ஒத்துழைப்பு இல்லாததுதான்!

ஏவி.எம் தம் சொந்த டைரக்ஷனில் எடுத்த வெற்றிப் படம் ஸ்ரீவள்ளி. டி.ஆர்.மகாலிங்கமும் ருக்மிணியும் இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரை ஒருவர் நிஜ வாழ்க்கையிலும் காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள். படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் அது. இரண்டாவது காரணம், இந்தப் படத்தில் வந்த யானை. மூன்றாவது காரணம், இயற்கை அழகு மிக்க அவுட்டோர் காட்சிகள்.

1947-ல் உலக யுத்தம் வந்துவிடவே, மின்சார வசதி இல்லாமல், ஸ்டுடியோவை காரைக்குடிக்குக் கொண்டு போக நேர்ந்தது. இடம் மாறிய போது ஸ்டுடியோவின் பெயரும் ஏவி.எம். என்று மாற்றப்பட்டது. தேவகோட்டை ரோடில் ஓர் இடத்தைப் பிடித்து ஐம்பது குடிசைகள் போட்டு, நட்சத்திரங்களை அங்கேயே குடியேற்றி, நாம் இருவர், வேதாள உலகம் போன்ற படங்களை உருவாக்கினார். ராமராஜ்யாவைத் தமிழில் டப் செய்து வெளியிட்டார். பாரதியார் பாடல்களுடன் வெளியான படம் நாம் இருவர். லலிதா-பத்மினி பாம்பாட்டி நடனத்துடன் வெளியானது வேதாள உலகம்.

ரூ.25,000 கொடுத்து பாரதியார் பாடல்களை விலைக்கு வாங்கி வைத்திருந்த உரிமையை, அப்போ தைய முதலமைச்சர் திரு. ஓ.பி. ராமசாமி ரெட்டியாரின் விருப்பத்துக்கிணங்க எவ்விதப் பிரதிப்பயனும் எதிர்பாராமல் பொதுச் சொத்தாக மாற்றிச் சர்க்காரிடம் ஒப்படைத்தார் ஏவி.எம்.

ஏவி.எம். ஸ்டுடியோ கோடம்பாக்கத்துக்குக் குடியேறியது 1948-ல். பராசக்தி, வாழ்க்கை, அந்த நாள் போன்ற படங்கள் உருவானது இங்கேதான்.

‘இந்திப் படம் எடுத்தது எப்போது?’ என்று கேட்டதற்கு, “திரு. வாசன் அவர்கள் இந்தியில் சந்திரலேகா எடுத்து, வட நாட்டில் வெற்றிகரமாக ஓட்டி வழிகாட்டிய பிறகுதான், இந்தி மார்க்கெட்டில் நாங்களும் தைரியமாகப் புகுந்தோம்” என்கிறார் திரு. ஏவி.எம்.

ஏவி.எம். முத்திரையில் எடுக்கப்பட்ட ஹம் பஞ்சி ஏக் டால் கே என்னும், குழந்தைகள் நடித்த இந்திப் படத்துக்குப் பிரதம மந்திரி அவார்ட் கிடைத்தது மட்டுமல்ல; அந்தப் படத்தைப் பார்த்து மகிழ்ந்த நேருஜி ஏவி.எம். அவர்களையும், அந்தக் குழந்தைகளையும் தம் வீட்டுக்கு அழைத்து விருந்தோபசாரமும் செய்தார்.

ஐந்து முறை ஜப்பான் சென்று வந்துள்ள ஏவி.எம்., “அந்த நாட்டுக்கு இணையான இன்னொரு நாட்டைப் பார்த்ததில்லை. நேர்மையும், நாணயமும், உபகார குணமும் அந்த நாட்டின் தனிச் சிறப்பு” என்கிறார்.

ஆவிச்சி உயர்நிலைப் பள்ளி, ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் – இவ்விரண்டும் திரு. மெய்யப்பனின் தர்ம ஸ்தாபனங்கள். இவர் புதிதாகத் தொடங்கியுள்ளது, படங்கள் எடுப்பதற்குத் தேவையான பிலிம் வியாபாரம். பெயர்: ஆர்வோ.

வியட்நாம் வீடு – என் விமர்சனம்


படம் வெளிவந்த போது விகடனில் வந்த விமர்சனம் இங்கே.

வியட்நாம் வீடு சிவாஜியின் பெரும் சாதனையாக சிலாகிக்கப்படும் படம். எனக்கு இது சுமாரான படம் என்றுதான் தோன்றுகிறது.

நீங்கள் இன்றைக்கு ஒரு விஜய் படம் பார்த்தால் அது சில ஸ்டாண்டர்ட் சீன்களை ஒட்டியும் வெட்டியும் எடுக்கப்பட்டிருக்கும். ஒரு ஓபனிங் சாங், நாலு பாட்டு, மூன்று சண்டை, ஐந்து பன்ச் டயலாக், விஜய் “அப்டிங்க்னா, இப்டிங்க்னா” என்று யாரையாவது கலாய்ப்பது, வடிவேலு/விவேக் காமெடி, ஒரு அம்மா/அப்பா/தங்கை/அக்கா செண்டிமெண்ட் சீன். சிவாஜியின் படங்களுக்கும் அப்படி ஸ்டாண்டர்ட் சீன்கள் இருந்தன. அவை எல்லாவற்றையும் இந்த படத்தில் காணலாம். அவருக்கு உலகத்தில் இருக்கும் எல்லா கஷ்டமும் வரும். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அவர் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு வாழ்வார். இதிலும் அப்படி நிறைய சீன்கள் உண்டு – புகழ் பெற்ற “நீ முந்திண்டா நோக்கு, நான் முந்திண்டா நேக்கு”, ரிடயர் ஆன பிறகு அவர் பம்மி பம்மி ஆஃபீசுக்குள் நுழைவது, அவரும் பத்மினியும் ஒருவர் கண்ணீரை ஒருவர் துடைப்பது, பிள்ளைகள்/மருமகள்கள் கொடுமை இந்த மாதிரி நிறைய.

படத்தின் முக்கிய குறையே சிவாஜியை தவிர மிச்ச எல்லாரும் கார்ட்போர்ட் கட்அவுட்களாக இருப்பதுதான். யாருக்கும் ரோல் கிடையாது – நாகேஷ், ஸ்ரீகாந்த் எல்லாரும் வேஸ்ட். யாருக்கும் சோபிக்கும்படி பாத்திரம் அமையவில்லை. பத்மினிக்கு மட்டும் கொஞ்சம் பெரிய ரோல். துணை கதாபாத்திரங்கள் வலிமையாக அமையாவிட்டால் கதை உருப்படுவது கஷ்டம். கதையின் முக்கிய முடிச்சோ மிக செயற்கையானது – ஒரு ஜெனரல் மானேஜருக்கு எப்போது ரிடையர் ஆகிறோம் என்பது கூட தெரியவில்லை. அப்புறம் என்ன திரைக்கதை அமையும்?

சிவாஜியின் நடிப்பை அவர் ஒரு பிராமண குடும்பத் தலைவரை தத்ரூபமாக சித்தரித்தார் – முக்கியமாக பேச்சில் – என்பதற்காக பாராட்டுகிறார்கள். அவர் பேச்சு அந்த காலத்துக்கு தத்ரூபமாக இருந்திருக்கும்தான். அதற்கு அவர் கடினமாக உழைத்திருக்க வேண்டும்தான். அந்த ஒரு பாயின்ட் மட்டுமே ஒரு நல்ல படத்துக்கு போதாது என்பதுதான் பிரச்சினை.

1970-இல் வந்த படம். சிவாஜி, பத்மினி, நாகேஷ், ஸ்ரீகாந்த், ரமாப்ரபா நடித்தது. வியட்நாம் வீடு சுந்தரம் கதை வசனம். பி. மாதவன் இயக்கம். கே.வி. மகாதேவன் இசை. சிவாஜியின் சொந்தப் படம். நாடகமாக வெற்றிகரமாக ஓடியது. பிராமண பின்புலம் கொண்ட நாடகம் அந்த காலத்து சென்னையில் நன்றாகவே ஓடி இருக்கும். நாடகத்திலும் சிவாஜியே நடித்திருக்கிறார். எழுதிய சுந்தரமோ வியட்நாம் வீடு சுந்தரம் என்று அடைமொழி பெற்றுவிட்டார். சமீபத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் இதை மீண்டும் மேடை ஏற்றி இருக்கிறார்.

தெரிந்த கதைதான். கம்பெனியில் ஜெனரல் மானேஜராக கொடி கட்டி பறக்கும் சிவாஜி ரிடையர் ஆகிறார். வீட்டில் பிள்ளைகளின் கலாசார சீரழிவு – நாகேஷ் யாரையோ காதலிக்கிறார். மை லேடி கட்பாடி என்றெல்லாம் பாட்டு பாடுகிறார். ரிடையர் ஆனதும் சிவாஜிக்கே கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை. அவரை புரிந்து நடந்துகொள்ளும் ஒரே ஜீவன் அவர் மனைவி பத்மினி. அவருக்கு ஆபரேஷன் வேறு நடக்க வேண்டும். பயம். பேருக்கு பிள்ளை உண்டு, வெறும் பேச்சுக்கு சொந்தம் உண்டு, என் தேவையை யாரறிவார், உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும் என்று மனைவியை பார்த்து பாட்டு பாடுகிறார். ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வருபவர் தனக்கு ஆஃபீசில் எக்ஸ்டென்ஷன் கிடைக்கும் செய்தி கேட்டு அந்த அதிர்ச்சியில் இறந்துவிடுகிறார்.

சிவாஜி ரசிகர்களுக்காக ஒன்றை தெளிவாக்கிவிடுகிறேன். சிவாஜி திறமை வாய்ந்த நடிகர். இந்த படத்திலும் கொடுத்த ரோலை நன்றாக செய்திருக்கிறார். இந்த பாத்திரத்துக்கு அவரது நாடகத்தனம் நிறைந்த மிகை நடிப்பு பொருந்தி வருகிறது. பாத்திரம் அப்படித்தான். மிகையாகத்தான் பேசுவார். உலகத்தில் எல்லாரும் அசோகமித்திரன் கதாபாத்திரங்கள் மாதிரி குறைவாகவே பேசுவதில்லை.

பத்மினியும் கொடுத்த வேலையை திறமையாக செய்திருக்கிறார்.

குறை கதையில். ரிடையர் ஆனதும் பெரிசுகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வருவது நடப்பதுதான். பெரிசுகளுக்கு தங்கள் பிள்ளைகள் சீரழிகிறார்கள் என்ற எண்ணம் இருப்பது சகஜம்தான். மனைவியைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற மனநிலை வருவதும் சகஜம்தான். அதை அப்படியே காட்டி இருக்கலாம். ரிடையர்மென்ட் ஒரு அதிர்ச்சி மாதிரி காட்டுவது கதையை பலவீனப்படுத்துகிறது. மற்ற பாத்திரங்கள் எல்லாம் மிக வீக்காக இருப்பது கதையை மிக தட்டையாக மாற்றுகிறது. கழிவிரக்கம் மட்டுமே கதையின் உணர்ச்சியாக இருக்கிறது.

கே.வி. மகாதேவன் இசையில் பாலக்காட்டு பக்கத்திலே, உன் கண்ணில் நீர் வழிந்தால் இரண்டு பாட்டும் நன்றாக இருக்கின்றன. பாட்டுகளை இங்கே கேட்கலாம். மை லேடி கட்பாடி பாட்டும் கொடுமை, வரிகளும் கொடுமை. வீடியோ எதுவும் கிடைக்கவில்லை. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ மாதிரி யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ், சரண்யா ரீமிக்சை கொடுத்திருக்கிறேன்.

ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் பார்க்கலாம். தட்டையான கதைதான், ஆனால் எனக்கு போரடிக்கவில்லை. சிவாஜி, பத்மினி இருவரின் உழைப்பும் நடிப்பும், கண்ணதாசன்+கேவிஎம்மின் இரண்டு பாட்டுகளும், அந்த கால பிராமண குடும்ப பின்புலம் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருப்பதும் படத்தின் ப்ளஸ்கள். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம், படங்களின் பட்டியல்

தொடர்புடைய சுட்டிகள்:
சாரதாவின் விமர்சனம்
விகடன் விமர்சனம்

வியட்நாம் வீடு விகடன் விமர்சனம்


வியட்நாம் வீடு

வியட்நாம் வீடு

படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

புகழ் பெற்ற நாடகம் ஒன்று திரைப்படமாகும்போதெல்லாம், ஒரு கேள்வி எழுந்துதான் தீரும்: நாடகம் மாதிரி படம் இருக்கிறதா?

வியட்நாம் வீடு திரைப்படம், நாடகம் மாதிரி இல்லை. நாடகத்தில் புலனாகாத சில விஷயங்கள் படத்தில் ஜொலிக்கின்றன. ஒன்றிரண்டு அம்சங்கள் சோபிக்கத் தவறியுமிருக்கின்றன.

நெருக்கக் காட்சிகளில் காணக் கிடைத்த பிரெஸ்டீஜ் கணேசனின் முக பாவங்கள், திரையில் கிடைத்த அபூர்வ விருந்து. ஆடி ஓய்ந்து முதுமை எய்திவிட்ட தம்பதியரின் பிணைப்பையும் இழைவையும் பத்மனாபன் தம்பதியர் (சிவாஜி-பத்மினி) சித்திரித்திருக்கும் நேர்த்தி, திரையுலகிலேயே ஒரு புதிய சாதனை.

”சாமி பேரை ஏம்பா வச்சுக்கிறீங்க! வையக் கூட முடியலை!” என்று வேலைக்காரனிடம் அலுத்துக் கொள்ளும் இடத்திலும் சரி, “வெற்று மிஷினில் டைப் அடிக்கக் கூடாது!” என்று டைப்பிஸ்டை நாசூக்காகக் குத்திக் காட்டும் காட்சியிலும் சரி, “நீ முந்தினால் உனக்கு, நான் முந்தினால் எனக்கு” என்று அத்தையிடம் விடைபெறும் காட்சியிலும் சரி, சிவாஜியின் நடிப்பில் நயம், முதிர்ச்சி, முழுமை அத்தனையும் பொலிகின்றன.

முழுக்க முழுக்க ஒரு வயோதிகரைக் கதாநாயகனாகக் கொண்டே, துளியும் சுவை குன்றாமல் குடும்ப மணம் கமழ ஒரு திரைப்படத்தைத் தயாரித்த சாமர்த்தியத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

பிரெஸ்டீஜ் தம்பதியருக்கு இரண்டு டூயட்! முதலிரவு காட்சியில் (பிளாஷ்பேக்) பாடலைவிட சிவாஜி-பத்மினி அபிநயம் பிரமாதம்.

உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடல் இசையமைப்பாலும், படமாக்கியிருக்கும்விதத்தாலும் நன்கு சோபிக்கிறது.

பத்மினியின் தோற்றத்துக்கு முதுமையின் கம்பீரமும், அமைதியும் அவ்வளவாகப் பொருந்தவில்லை. இருந்தாலும் தாம்பத்திய இனிமை இழையோடும் பகுதிகளில் அவர் மின்னுகிறார்.

ஹிப்பியாக அறிமுகமாகும் நாகேஷ், நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிவிடுகிறார். காந்த் அழகாக மனைவிக்குப் பயப்படுகிறார்.

ரமாபிரபாவுக்கு இப்படி மிரட்டி உருட்டவும் தெரியுமா என்று வியக்கிறோம். வில்லி பாத்திரத்தைச் சாமர்த்தியமாகச் செய்கிறார்.

ரிட்டயராகக் கூடிய காலத்தை ஒரு ஜெனரல் மானேஜர் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம்தான். அதைப் போலவே, வசதியான ஒரு பதவியிலிருந்து ரிட்டயராகும் அதிகாரி, அளவுக்கு அதிகமாக அலட்டிக்கொள்வது அந்தப் பாத்திரத்தின் பிரெஸ்டீஜுக்குப் பொருத்தமாக இல்லை. மூலக் கதையிலுள்ள இந்த பலவீனமான அம்சம் திரையில் பெரிதாகத் தெரிகிறது.

படத்துக்கு பிரெஸ்டீஜ் (கௌரவம்) சிவாஜியின் நடிப்பு; அவருடைய நடிப்பின் பிரெஸ்டீஜ்… அப்பப்பா!

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம், படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆர்வியின் விமர்சனம்
சாரதாவின் விமர்சனம்