கொடி மலர்


1966ல் ஸ்ரீதர் டைரக்‌ஷனில் வந்த திரைப்படம்.  கதை மாந்தர்களைக் காட்டிலும் கதையை நம்பி எடுக்கப்பட்டத் திரைப்படம். ஸ்ரீதர் பொதுவாகவே அப்படித்தானே. அவருடைய அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் சில திரைப்படங்கள் இந்த இலக்கணத்தைப் பின்பற்றாமல் போனாலும்  அதற்கு முன்னர் வந்த திரைப்படங்களின் தரத்தை நாம் எப்படி சீர்தூக்கிப் பார்த்தாலும் சோடை போனதில்லை. கொடி மலர் அப்படிபட்ட தரமான ஒரு திரைப்படம்.

பிரபல நடிகர்கள் – முத்துராமன், ஏவிஎம் ராஜன், நாகேஷ்

பிரபல நடிகைகள் – காஞ்சனா, விஜயகுமாரி, எஸ்.என். பார்வதி, (முத்துராமனின் தாய் காரக்டரரில் நடித்தவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் முக்கிய ரோல். பிற்சேர்க்கை – எம்.வி.ராஜம்மா  – நன்றி அப்துல்)

இசை – எம்.எஸ்.விஸ்வனாதன் பாடல்கள் – கண்ணதாசன்

டைரக்‌ஷன் – C.V.ஸ்ரீதர்

சமூக மாற்றத்தின் விளம்பில் அகப்பட்டுக்கொள்ளும் குடும்பங்கள் எது சரி, எது தவறு, ஏற்றுக் கொள்வதா, ஏற்க மறுக்கவேண்டுமா என்று தடுமாறுகிறார்கள். குடுமபத்தில் சிலர் மற்றங்களை ஏற்றுக் கொள்வதும், சிலர் ஏற்க மறுப்பதும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இந்தப் பிரச்சனையை படம் பிடித்துக் காட்டும் ஒரு முயற்சியை கொடிமலிர்ல் ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார்.

முத்துராமன் அண்ணன். ஏவிஎம் ராஜன் தம்பி. இருவரும் இரு துருவங்கள். ஏவிஎம் ராஜன் கல்லூரியில் படித்து முடித்து வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது ”மாற்றம்” எனும் முன்னேற்றக் கொள்கைகளுடன் நுழைகிறார். பழமைவாதங்களில் மூழ்கியிருக்கும் தாயுடன் போராட்டம் துவங்குகிறது. மிகுந்த வசதி படைத்தவர்களாயினும் இளைய மகனின் மோட்டார் சைக்கிளையே தேவையற்ற ஒரு பொருளாக கருதுகிறார் தாய். அனாவசிய பண விரயம் என்று கருதுகிறார். தன்னிடம் அனுமதி வாங்காமல் மகன் த்ன்னிச்சையாக செயல்படுவதும் மரபிலிருந்து விலகிச்செல்வதும் தாய்க்கு ஒரு சுமையாகத் தெரிகிறது.  மகனோ தாயிடம் மரியாதையாகவும், அன்புடன் இருக்கவேண்டும், ஆனால் தன் வாழ்க்கை தனது, அதில் முடிவுகள் தனதாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் உறுதியாக இருக்கிறார். இதனால் மகனுக்கும் தாய்க்கும் இடைவெளி பெரிதாக உருவாகிவிடுகிறது. அதனால் தாயும் இளைய மகன் நம் கை அடக்கத்தில் இல்லை என்பதை மனதளவில் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் மகன் தன்னைவிட்டுப் போய்விடுவானோ என்ற பயம் இருப்பதால் அவன் வழியில் குறுக்கிடாமலும், மகன் சற்றே ஓங்கிப் பேசினால் பயந்து விடுவதும் இயல்ப்பாகிப் போகிறது.

மூத்த மகன் முத்துராமன். மூத்த மகன் இன்னொரு துருவம். அம்மா மேல் பக்தியே வைத்திருக்கிறார். அம்மா சிறிது மனம் கோணல் அடந்தாலும் துடித்து விடுகிறார். அம்மாவுக்கும் மகன் கையடக்கமாக இருப்பதில் பரம திருப்தி. தம்பியை பல முறை அம்மாவுக்காக கண்டித்தாலும், தம்பியின் மேலும் மிக பாசமாக உள்ளவர். தமபியைப் போல் அல்லாம்ல் மாமாவிடமும் மிகுந்த மரியாதையுடையவர். வீட்டிலேயே வளர்ந்து அம்மா வா என்றால் வருவதும், போ என்றால் போவதுமாக அம்மாவின் நிழலாக இருப்பவர்.

தாய் மாமா நாகேஷ். அவருக்கு அக்காவை விட்டால் பூவாவுக்கு வழியில்லை. இடமும் கிடையாது. அக்காவை காக்கா பிடித்துக் கொண்டும், அக்கா கொடுக்கும் இடத்தினால் கணக்கராக இருந்து வீட்டிலும், வயலிலும் எல்லோரையும் வேலை வாங்குவதும், அக்கா மகன்களையும், அக்காவையுமே தன் சொந்தங்களாகவும் கொண்டிருக்கிறார். தன் பாச்சா இளைய மகனிடம் பலிக்காவிட்டாலும் துணிச்சலாக அக்காவுக்காக பரிந்து இளைய மகனிடம் மோதிக் கொண்டு காலம் தள்ளுகிறார்.

பைக்கில் கிராம்ங்களை வலம் வருகையில் இயற்க்கையிலேயே துணிச்சலான காஞ்சனாவை சந்திக்கிறார் இளைய மகன். காதல் மலர்கிறது. விஜயகுமாரி காஞ்சனாவின் அக்கா. ஊமைப்பெண். இவர்கள் தந்தை பரம் ஏழை. தாய் எஸ்.என்.பார்வதி. ஊமையானாதால் மூத்த மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் வெதும்புகிறார் தந்தை. ஊமைப் பெண்ணை தன் அசட்டு மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார் பஞ்சாயத்து தலைவர்.  காஞ்சனாவின் துணிச்சலாலும், மதி நுட்பத்தாலும் குடுமபம் ஒருவாறு தாக்குப்பிடிக்கிறது. மூத்த மகளுக்கு திருமணம் ஆகாது என்று நினைத்து இளைய மகளுக்குத் திருமணம் செய்யத் தயாராகிறார்கள் பெற்றோர்கள்.

முத்துராமனுக்கு மனம் செய்ய தாய் தயாராகிறார். திருமணம் நடை பெறவிருக்கும் சமயத்தில் தாய் உடல் நலம் குன்றுகிறது. அதனால் தாய் மாமா தலைமையில் சகோதரர் இருவரும் செல்கிறார்கள். மனப்பெண் காஞ்சனா. அதே முகூர்த்தத்தில் விஜயகுமாரி பஞ்சாயத்து தலைவரின் அழுத்தம் தாங்க முடியாமல் அவரின் அசட்டு மகனுக்கு மணம் செய்யத் தயாராகிறார்கள். ஏவிஎம் ராஜனும் காஞ்சனாவும் பரிதவிக்கிறார்கள்.

இந்த இடத்தில் சினிமாத்தனம் புகுந்து விடுகிறது. விஜயகுமரி கிணத்தில் குதிக்க முத்துராமன் காப்பாற்ற பெருந்தன்மையுடம் ஊமைப்பெண்ணை மனம் செய்து கொள்கிறார். அனால் தாய் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. தாய்க்கு எதிராகப் பேசி பழக்கமில்லாத மகன் விஜயகுமாரியை அவர் வீட்டிற்கே அனுப்பிவிடுகிறார் மகன்.

அதன் பிறகு ஏவிஎம் ராஜன் காஞ்சனா திருமணம் நடக்கிறதா, முத்துராமன் விஜயகுமாரியுடன் சேருகிறாரா? என்பதயெல்லாம் வெள்ளித்திரையில காண வாருங்கள் என்று கமர்சியல் தான் போடமுடியும். கதையை கொடுத்துவிட்டேன் (அப்படியெல்லாம் இல்லாமலேயே) என்று ஒரு வாசகர் கொந்தளித்துவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு எங்கேயாவது டிவிடி கிடைக்கமலா போய்விடும்?

”மௌணமே பார்வையாய்” என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் பாட்டு பெரிய ஹிட். எம்.எஸ்.வியின் இசையில் அருமையாக இருக்கிறது.

அம்மா கேரக்டர் யாரென்று கண்டு பிடித்து கூறுபவர்களுக்கு நூறு கைத்தட்டல்கள் இனாம்.

நூற்றுக்கு அறுபத்தைந்து மதிப்பெண்கள்.

திருப்பதி கோவிலுக்கு 15 கோடி ரூபாய் கொடுத்த காஞ்சனா


கோபால் அனுப்பிய இன்னொரு செய்தி. இது உண்மையா, யாராவது confirm செய்ய முடியுமா?

கோபால் இந்த செய்தியை உறுதிப்படுத்துகிறார். திருப்பதி தேவஸ்தானம் இந்த செய்தி அறிக்கையை வெளியிட்டிருக்கிறதாம்.

சென்னை : “பழம் பெரும் நடிகை காஞ்சனா அளித்த நிலம் ஆன்மிக பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்’ என, திருமலை – திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரி கிருஷ்ண ராவ் அளித்த பேட்டி: சென்னை, தி. நகர், ஜி.என். செட்டித் தெருவில் உள்ள தனக்கு சொந்தமான 9,360 சதுரடி நிலத்தை நடிகை காஞ்சனாவும், அவரது சகோதரி கிரிஜா பாண்டேவும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அளித்துள்ளனர். இதில், 4,500 சதுரடி காலி நிலமாகும். இதன் மார்க்கெட் மதிப்பு 20 கோடிக்கு மேலாகும். பொதுவாக, திருமலை கோவிலுக்கு தானமாக அளிக்கப்படும் நிலங்களை நிர்வாக வசதிக்காக, விற்பனை செய்யும் பழக்கம் உண்டு. ஆனால், “இந்த நிலத்தை விற்பனை செய்யக் கூடாது அதை ஆன்மிக பணிகளுக்கே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என நடிகையும், அவரது சகோதரியும் கேட்டுக் கொண்டனர். அவர்களது வேண்டுகோளை நாங்கள் மதிக்கிறோம். இன்று, அந்த நிலத்தை பார்வையிட்டோம். அந்த இடத்தை எப்படி ஆன்மிக பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

கொஞ்ச நாள் முன்புதான் காஞ்சனா பணமுடையால் அவதி என்று படித்தேன். இப்போது இந்த செய்தி.

திருப்பதி: திருமலை ஏழுலையான் கோயிலுக்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகை காஞ்சனா.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் நடித்தவர் நடிகை காஞ்சனா. தெலுங்கிலும் ஏராளமான படங்கள் நடித்துள்ள இவர் தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

இந்த நிலையில், சென்னை ஜிஎன் செட்டி சாலையில் தனக்கு சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான நிலத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக அளித்து பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார். இந்த இடத்தில் கல்யாண மண்டபம் அல்லது சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் என்றும் அவர் தேவஸ்தான அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு கூட காஞ்சனா மிகுந்த பணக் கஷ்டத்தில் இருப்பதாக செய்திகள் வந்தன. மனநிலை சரியில்லாததால் அவரை உறவினர்கள் கைவிட்டுவிட்டதாகவும், குடியிருக்க வீடு கூட இல்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதை உடனடியாக மறுத்து விளக்கமளித்திருந்தார் காஞ்சனா.

அவரிடம் இவ்வளவு நிலம் இருப்பது பற்றி யாருக்கும் தெரியவும் இல்லை. அவரும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

நடிகை காஞ்சனா – அன்றும் இன்றும்


நண்பர் கோபால் அனுப்பிய ஃபோட்டோக்கள்

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->கோபால் பதிவுகள்

காதலிக்க நேரமில்லை (Part 4)


காதலிக்க நேரமில்லை – பிற வகைகள் ( மணிவன்னன் – இது ஸ்ரீதர் பற்றியது இல்லை – மகிழ்ச்சி தானே?)

வகை ஒன்று

தெலுங்கில் காதலிக்க நேரமில்லை அடுத்த வருடம் அதாவது 1965ல் ”பிரெமின்ச்சு சூடு” (Preminchu Choodu) என்ற பெயரில் black & whiteல் வெளிவந்தது.

நாகேஸ்வர்ராவ், ராஜஸ்ரீ, காஞ்சனா நடித்தது. P. புல்லையா டைரக்ட் செய்ய மாஸ்டர் வேணு பாடல்களை ரீமேக் செய்தார். தமிழ் வெற்றியயை தொடர்ந்து P.புல்லையாவும், சாந்தகுமாரும் தைரியமாக காசை செல்வழித்தார்கள்.

இங்கே இரண்டு பாடல் காட்சிகள்:

இங்கே பிற பாடல்கள்

வகை இரண்டு

மனோபாலா ஸ்ரீதரிடம் அனுமதி பெற்று காதலிக்க நேரமில்லை திரைபடத்தை ரீமேக் பண்ணுகிறார். இதில் சினேகா, நமிதா, பிருத்திவிராஜ், வினய், வடிவேல், சந்தியா, கீர்த்தி சாவ்லா எல்லாம் நடிப்பதாக ஒரு கிசு கிசு. வடிவேலுவை பாலையாவாகவோ, நாகேஷாகவோ பார்ப்போம். யுவன் சங்கர் ராஜா இசை. ப்ரசன்னா நடிப்பதாக ஒரு வதந்தி. பார்ப்போம் கடைசியில் என்ன நடக்கிறது என்று.

வகை மூன்று

விஜய் டி.வி. காதலிக்க நேரமில்லை என்ற ஒரு சீரியல் நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்னும் வருகிறதா என்று தெரியவில்லை. டைடில் மியூசிக் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிங்கப்பூரில் மாட்டிக் கொண்ட இரண்டு பேருக்கு கல்யாணம் ஒரு சுமையாக இருப்பது கதை என நினக்கிறேன். எனக்கு விஜய் டி.வி. பார்க்கும் வாய்ப்பு இல்லததால் அதிகம் தெரியாது.

(ஒரு வழியாக ஸ்ரீதரின் ஆத்மாவை சாந்தி அடைய வைத்துவிட்டோம் என நினைக்கிறேன்)

காதலிக்க நேரமில்லை – Part 3


1964லில் சித்ராலயா வெளியிட்ட திரைப்படம்.

இந்த சினிமாவை ஒரு பத்துமுறையாவது நான் பார்த்திருப்பேன். இன்னும் ஒரு பத்து முறை பார்த்தாலும் ஆச்சரியம் இல்லை.

நடிகர்கள் – பாலையா, முத்துராமன், நாகேஷ், ரவிச்சந்திரன் (அறிமுகம்),  வி.எஸ். ராகவன், வீராசாமி

நடிகைகள் – ராஜஸ்ரீ, சச்சு, காஞ்சனா (அறிமுகம்)

கதை வசனம் – ஸ்ரீதர் & கோபு

பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன் உதவி: பஞ்சு அருணாசலம்

பின்னணி – P.B.ஸ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா, L.R.ஈஸ்வரி, ராஜூ

நடனம் – தங்கப்பன் உதவி: M.சுந்தரம் – பின்னாளில் தங்கப்பனிடம் கமல் உதவி நடன இயக்குநராக சில வருடங்கள் பணியாற்றினார்.

இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வனாதன், ராமமூர்த்தி உதவி- கோவர்த்தன், ஹென்றி டேனியல்

அசோசியேட் டைரக்டர் – C.V.ராஜேந்திரன் அசோசியேட் டைரக்டராக – C.V.ராஜேந்திரன் பணியாற்றிய முதல் படம். தனது உறவினராக (தம்பி முறை) இருந்தாலும் பல முறை கேட்டும் அவருக்கு திறமை வந்த பிறகே அசோசியேட் ஆக்கினார்.

உதவி டைரக்டர் – லெனின்

டைரக்‌ஷன் – ஸ்ரீதர்

ஸ்ரீதரின் மாஸ்டர்பீஸ். இரண்டு நண்பர்கள் ஒரு செல்வந்தரை ஏமாற்றி அவர் பெண்களை கைப்பிடிப்பதுதான் கதை. ஒரு வரியில் சொல்லிவிடக்கூடிய இந்த கதையை திரைகதையினால் மூன்று மணி நேர எண்டர்டெய்ன்மண்டாக மற்றுவதில் தான் ஒரு இயக்குனரின் ingenuity தெரிகிறது. இதைத் தான் ஸ்ரீதர் வெளிப்படுத்திஇருக்கிறார்.

இதில் நுணுக்கமான ஒரு டெக்னிக் ஸ்ரீதர் கையாண்டிருக்கிறார். வழக்கமாக ஒரு சோகமான மெய்ன் கதை இருக்குமிடத்தில் ஒரு மாற்றத்திற்க்காக ஒரு காமெடி ட்ராக் இருக்கும். உதாரணத்திற்கு கல்யாணப்பரிசில் மன்னார் & கோ மற்றும் போலி பைரவன். ஆனால் இதில் மெய்ன் கதையே காமெடி தான். காமெடியில் ஒரு காமெடி ட்ராக். சிலர் இதை ஸ்ரீதர் கோட்டை விட்ட விஷயம் என்று கூறலாம். என்னை பொறுத்தவரையில் இரண்டுமே (main and comedy tracks) வெளுத்து வாங்கியது. அதனால் இந்த டெக்னிக் சக்ஸஸ் தான்.

பொள்ளாச்சிக்கு அருகில் அருமையான மலைகள், மற்றும் தண்ணீர் நிறைந்த இயற்க்கை சூழலில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான, பெரும்பாலும் அரசியல்வாதிகளும், junketல் செல்லும் பெரிய சர்க்கார் பதவியில் இருக்கும் ஆஃபீஸர்களும் அனுபவிக்க கட்டபட்ட ஒரு Traveller’s Bungalow (TB) பாலையாவின் வீடாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஓரு சீனில் இரவில் எல்லோரும் டின்னர் சாப்பிடும் காட்சி. ரம்யமான் சூழ்நிலயை படத்தில் பிரதிபலித்திருக்கிறார்கள். அனேகமாக அது சினிமா ஷூட்டிங்கிற்க்கு வந்த அனைவரும் enjoy பண்ணிய ஒரு டின்னராக இருந்திருக்க வேண்டும்.

ரவிச்சந்திரனும், காஞ்சனாவும் அறிமுகமாக இருந்தாலும் நன்றாக திரைகதையுடன் ஒன்றி இருக்கிறார்கள். ரவிச்சந்திரனின் நடனம் கொஞசம் அலட்டலாக இருந்தாலும் அந்த காலத்து தேவ் ஆனந்த், சஷிகபூர் style போன்று இருப்பதால் ரசிகர்களுக்கு பழக்கமாகி இருக்க வேண்டும். அவர் பாலையா மற்றும் முத்துராமனுடன் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.

காஞ்சனா மென்மையான அக்கா ரோலில் வந்து முத்துராமனை காதலித்துவிட்டு செல்கிறார். பசுமையான இயற்ககை காட்சிக்கு இவருடைய ஈஸ்ட்மென் பிங்க் கலர் கலர்ஃபுல் தான்.

ராஜஸ்ரீ தங்கை ரோல். இவர் ரவிசந்திரனுடன் இரண்டு, மூன்று பாடல்கள் பாடிச் செல்கிறார். இவருடைய காதல் கதையை முடிப்பதற்க்கு முத்துராமனை பாலையாவிடம் கதைவிட வைத்து ஸ்ரீதர் கதைவிட்டிருக்கிறார்.

இப்படி இவர்கள் விட்டுக்கொண்டிருக்கும் பொழுது நாகேஷ் தந்தை பாலையாவிடம் சினிமா எடுக்கப் போகிறேன் என்று கதைவிட்டுக்கொண்டிருப்பார். இவருடைய சினிமா கம்பெனி பெயர் “ஓஹோ ப்ரொடக்‌ஷன்ஸ்”. இவருடைய காமெடி அன்று பெரிய அளவில் ஹிட்.  முத்துராமனை பார்ப்பதற்க்காக காத்துக்கொண்டிருக்கும் பாலையாவிற்க்கு கதை சொல்கிறேன் பேர்வழி என்று அவரை பயமுறுத்தும் காட்சி இவர் கொடுத்த ஹிட்.

அவர் சச்சுவை ஹீரோயினாக ஆக்கியதும் போடும் கண்டிஷன்களும் சினிமாவிற்க்கு ஃபாலோ பண்ண வேண்டிய ரூல்ஸை சொல்லும் விதம் மிகவும் அற்புதமாக அமைந்திருக்கும். சினிமாவிற்க்கு ஃபைனான்ஸ் பண்ண யாரும் இல்லததால் ”ஒஹோ ப்ரொடக்‌ஷன்ஸ்” அவருடன் தங்கி விடுகிறது.

பாலையா அப்பாவியாக நடித்து வெளுத்து கட்டியிருக்கிறார். அவருடைய பண ஆசை அவருடைய அறிவை மயக்கிவிடுகிறது. அவர் வா, போ, என்று தன் சின்னமலை எஸ்டேட் மேனேஜர் அசோக்கிற்க்கு  (ரவிச்சந்திரன்) கட்டளையிட்டு கொண்டிருப்பார். ஆனால் செல்வந்தர் சிதம்பரத்தின் (முத்துராமன்) மகன் எனத் தெரிந்ததும் ஆச்சரியத்தில் ”அசோகர் உங்க மகரா?” என்று கேட்பது அருமையான் ஹாஸ்யம். (கல்லூரியில் படிக்கும் போது இந்த ஒரு காட்சி எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.) இப்படி பல காட்சிகள்.

நடிப்பு செல்வந்தர் சிதம்பரமாக வரும் முத்துராமன் அபாரமாக நடித்திருக்கிறார். முத்துராமனின் மிடுக்கான நடிப்பு எதோ உண்மையில் 1960களில் ஒரு பெரிய செல்வந்தர் பேசுவது போல் இருந்தது. டைமிங் அருமையாக synchronize ஆகியிருக்கிறது.

சென்னை காசினோ தியேட்டரில் வெளியிடப்பட்டு முதல் 25 நாட்கள் அனைத்து ஷோவும் ஹவுஸ் புல்லாகி ரிகார்ட் ஏற்படுத்திய படம்.

(இன்னும் ஒரு சிறிய பார்ட் எழுதுவதாக இருக்கிறேன். அது அடுத்த வாரம்.)

காதலிக்க நேரமில்லை (Part 2 -ஒலியும் ஒளியும்)


(ஆனந்த விகடன் விமர்சனம்  – Part 1)

Eisenhower Down Down!

Eisenhower Down Down!

Eisenhower Down Down!

விஸ்வனாதன் வேலை வேண்டும்!

விஸ்வனாதன் வேலை வேண்டும்!

விஸ்வனாதன் வேலை வேண்டும்!

குடியரசு கட்சியின் சார்பாக அமெரிக்காவின் 34ஆவது ஜனாதிபதியாக இருந்து வந்த Dwight Eisenhowerஐ எதிர்த்து கோஷம் எழுப்பிய அன்றைய அமெரிக்கர்கள் குழம்பிக்கொண்டிருந்த MSVக்கு ”இந்தா பிடி மெட்டுக்கு ஐடியா” என்று இந்த உதவியை செய்து விட்டுப் போனார்கள்.

பிறந்து விட்டது “மாடி மேலே மாடி கட்டி” என்ற இந்த ஹிட் பாடல்

பிய்த்து விட்டார் MSV

பொன்னான கைகள் புண்ணாகலாமா? விட்டுவிடுவோமா?

ராஜஸ்ரீ அவர்களுக்கு அனுபவம் புதுமை.

முத்துராமனின் பார்வை இடை மெலியவைப்பது ஆனால் காஞ்சனாவின் பார்வை முத்துராமனை தனனை மறக்கவைப்பது.

வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியில்லை; ஆனால் இப்பொழுது காதலிக்க காதலி இல்லை; மனைவி உண்டு; த்ரில் உண்டா?

மலரென்ற முகம் சிரிக்கட்டும்

நெஞ்சத்தை அள்ளிக் கொஞசம் தா

காதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்


காதலிக்க நேரமில்லை பற்றி எழுத பக்ஸுக்கு இன்னும் நேரமில்லை. ஆனந்த விகடன் விமர்சனம் கீழே.

சின்னமலை ஏலக்காய் எஸ்டேட் முதலாளிக்கு இரண்டு பெண்கள். மூத்த பெண் காஞ்சனாவைப் பணக்கார வாலிபன் வாசுவும், இளையவள் நிர்மலாவை, அவனுடைய ஏழை நண்பனான அசோக்கும் காதலிக்கிறார்கள். நண்பனின் காதல் நிறைவேறுவதற்காக வாசு, அசோக்கின் கோடீஸ்வர தந்தை போல் வேஷம் போடுகிறான். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிகிறது. நகைச்சுவை நிகழ்ச்சிகள் பல நடக்கின்றன. கடைசியில் குட்டு வெளிப்பட்ட போதிலும், இருவர் காதலும் திருமணத்தில் முடிகிறது.

கதை: ஸ்ரீதர்-கோபு

சேகர்: படம் பிரமாதம் சந்தர், நீ என்ன சொல்றே?

சந்தர்: சந்தேகமென்ன? இரண்டரை மணி நேரம் ஒரு இடத்திலும் ‘போர்’ அடிக்காமல், வயிறு குலுங்க குலுங்கச் சிரிக்கும்படி இந்த மாதிரி ஒரு படம், இதுவரை தமிழில் வந்ததே இல்லை.

சேகர்: புதுப் புது முயற்சிகள் செய்யும் ஸ்ரீதரின் மற்றொரு சாதனை இந்தப் படம்.

சந்தர்: தமிழ்ப்படமென்றால், கட்டிலும் கண்ணீரும்தான் இருக்கும் என்ற கெட்ட பெயரை அடியோடு மாற்றிவிட்டார். இருமலும் உறுமலும் இல்லாமல், கதையை ஜாலியாகப் பின்னியிருக்கிறார்.

சேகர்: ஆமாம்! ‘கல்யாணப் பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இரண்டு படங்களிலும் காதலின் துன்பமான பகுதியை எடுத்துக் காட்டியவர், இதில் காதலின் நகைச்சுவையை மிக அழகாக சித்திரித்திருக்கிறார்.

சந்தர்: புதுமுகம் காஞ்சனா புடவை அணிந்து நம் நாட்டுப் பாணியில் காட்சி அளிக்கும்போது தான் அழகாக இருக்கிறார். அநாவசியமாக அவருக்கு மேனாட்டுப் பாணி உடை அணிவித்திருக்க வேண்டாம்.

சேகர்: யு ஆர் ரைட்! மற்றபடி, பார்த்த முகங்களையே பார்த்துப் பார்த்து அலுத்துப்போன கண்களுக்கு, புதுமுகங்களை வண் ணத்தில் புதுமையான பாத்திரத்தில் பார்க்கும்போது, பெரிய விருந்தாக இருக்கிறது.

சந்தர்: ஆமாம் சேகர், நீ புதுமுகம் என்று சொன்ன பிறகு தான் நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தில் அவர்கள் புதுமுகம் மாதிரியா நடித்திருக்கிறார்கள்?

சேகர்: நோ, நோ! பழக்கப்பட்ட நடிகர்களைப் போல ‘ஃப்ரீ’யாகத் துள்ளித் திரிந்து விளையாடி இருக்கிறார்கள்.

சந்தர்: பாலையா, முத்துராமன், நாகேஷ் எல்லோரும் சக்கைப் போடு போட்டுவிட்டார்கள்.

சேகர்: ஆமாம். அதுவும் ‘வில்லன்’ பாலையா, இந்தப் படத்தில் ஒரு ‘ஃபஸ்ட் க்ளாஸ்’ காமெடியனாகக் காட்சியளிக்கிறார். அவர் கோடீஸ்வரர்கிட்டே ‘குழைஞ்சு குழைஞ்சு’ பேசுவதை இப்போ நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சந்தர்: நாகேஷ் மட்டும் என்ன? ‘ஓகோ’ன்னு நடிச்சிருக்கார். அவர் பேசற ஒவ்வொரு டயலாக்கும் ஒரு சிரிப்பு வேட்டு! அதுவும் பாலையாவிடம் ‘சஸ்பென்ஸ்’ கதை சொல்ற காட்சியிருக்கே, பைத்தியம் பிடிச்ச மாதிரியில்லே தியேட்டர்லே அத்தனை பேரும் வயிறு வெடிக்க சிரிக்க வேண்டியிருக்கு.

சேகர்: வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் ரொம்ப ஜோர்!

சந்தர்: இந்தியிலோ, தமிழிலோ இது மாதிரி ஒரு கலர்ப் படம் இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. ஆகா… எத்தனை குளிர்ச்சி, என்ன அழகு! ஒவ்வொரு காட்சியும் ஒரு சிறந்த வண்ண ஓவியம் மாதிரி இருந்தது. இதனால் வின்சென்ட் மேலும் ஒரு படி உயர்ந்திருக்கிறார்.

சேகர்: படம் கடைசி அரை மணிதான் கொஞ்சம் இழுத்த மாதிரி இருந்தது.

சந்தர்: ஆமாம்! அதுகூட ‘போலீஸ் ஸ்டேஷன் ஹாஸ்யத்திலே’ மறைந்து போய்விடுகிறது.

சேகர்: மொத்தத்திலே சித்ராலயா கலைக் குழுவினர், ஸ்ரீதர், ஜெமினி கலர் லாபரடரி எல்லோருமாகச் சேர்ந்து தமிழ்ப் பட உலகுக்கு ஒரு சிறந்த, புதுமையான பொழுதுபோக்கு நகைச் சுவைச் சித்திரத்தை அளித்திருக்கிறார்கள்.