இவர்கள் வித்தியாசமானவர்கள்


(By Saradha – Originally published in Forum Hub)

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இன்னொரு வித்தியாசமான படம்.

எழுபதுகளின் இறுதிப்பகுதிகளில், முழுநேர நாடக நிறுவனங்களில் மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸ் போன்ற ஒரு சிலவே தொடர்ந்து நாடகங்கள் நடத்திக்கொண்டிருக்க, சென்னை நாடக அரங்குகளில் பெரும்பாலும் அமெச்சூர் நாடகமன்றங்களே கோலோச்சிக்கொண்டிருந்தன. அப்படியான அமெச்சூர் நாடகக்குழுவில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒருவர் கதாசிரியர், வசனகர்த்தா, மற்றும் இயக்குனர் என்ற முப்பரிமாணங்களுடன் 1979-ல் திரையுலகில் கால் பதித்தார். அவர்தான் இன்றைக்கும் திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கும் “மௌலி”. அவருடைய வித்தியாசமான சிந்தனையில் உருவானதுதான் ‘இவர்கள் வித்தியாசமானவ்ர்கள்’ திரைப்படம்.

ஒரு அலுவலகத்தில் மாதச்சம்பளத்தில் மேனேஜராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த். அவருக்கு பாந்தமான மனைவியாக ஸ்ரீவித்யா மற்றும் இரண்டு குழந்தைகள் என அழகான அளவான குடும்பம். வித்யாவின் சித்தப்பாவாக நாகேஷ். இந்நிலையில் அதே அலுவலகத்துக்கு உதவி மேனேஜராக தலைமை அலுவலகத்திலிருந்து பணி மாற்றம் செய்யப்பட்டு வந்து சேரும் ‘படாபட்’ ஜெயலட்சுமி. திருமணம் ஆகியிராத அவருக்கு ஆதரவு நிழகாக இருக்கும் தந்தை பூர்ணம் விஸ்வநாதன். அலுவலகத்தில் மேனேஜர் ஸ்ரீகாந்துக்கும், உதவி மேனேஜர் ஜெயலட்சுமிக்கும் ‘ஈகோ’ பிரச்சினை படிப்படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலை வரும்போது, அங்கிருந்தே மாற்றல் வாங்கி சென்றுவிடத்துடிக்கும் ஜெயலட்சுமி. அவரை அப்படியே ஸ்ரீகாந்த் போக விட்டிருந்தாரானால் படம் மூன்றாவது ரீலில் முடிந்துவிட்டிருக்கும் (?). ஆனால் போகாமல் தடுக்கும்போது, ஸ்ரீகாந்தின் நல்ல மனம் ஜெயலட்சுமியின் மனதில் சலனத்தை ஏற்படுத்த, வந்தது வினை. காந்த் திருமணமாகி, குழந்தைகளுடன் வாழ்பவர் என்று தெரிந்தும் ஜெயலட்சுமி அவரைக் காதலிக்க, அதைத்தவிர்க்க முடியாத நிலையில் ஸ்ரீகாந்தும் ஏற்றுக்கொள்ள, இதற்கு அப்பாவியான முதல் மனைவி ஸ்ரீவித்யாவும் சம்மதிக்க, தந்தை பூர்ணம் ஊரில் இல்லாதநேரம் அவர்கள் திருமணம் நடந்துவிடுகிறது. அதைத்தொடர்ந்து இரண்டு பெண்டாட்டிக்காரரான ஸ்ரீகாந்த் வாழ்வில் படும் அவஸ்தைகளை வைத்து சுவையாக படத்தைக்கொண்டு சென்றிருப்பார் மௌலி. இன்னொன்றைக் குறிப்பிட விட்டுவிட்டேன். கதை, வசனம், இயக்கத்தோடு நிற்காமல் நான்காவது பரிமாணமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராகவும் உருவெடுத்திருப்பார் மௌலி. மனைவியிழந்தவராக வரும் இவர், கைவிடப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஸ்ரீகாந்துக்கு இப்படத்தில் கிடைத்த பொறுப்புமிக்க கதாபாத்திரம், ஏற்கெனவே அவர்மேல் திணிக்கப்பட்டிருந்த இமேஜை உடைத்து, எந்த ரோலிலும் தன்னால் சோபித்துக்காட்ட முடியும் என்ற புதிய முகவரியைத்தந்தது என்றால் மிகையல்ல. இரண்டு வீட்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு திண்டாடும் நிலையை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். கடைசியில் இரண்டு வீடுமே இல்லாமல் போய், தனியாளாக அலையும் போது (பின்னணியில் மெல்லிசை மன்னரில் குரலில் ‘இரண்டு வீடு இரண்டு கட்டில், படுக்க இடமில்லை’ பாடல் ஒலிக்க) கடற்கரை மணலில் அலையும் அவர், ஒன்றுமாற்றி ஒன்று அறுந்து போகும் இரண்டு செருப்புக்களையும் உதறி எறிந்துவிட்டு வெறும் காலுடன் செல்வது நல்ல டைரக்டோரியல் டச்.

ஸ்ரீவித்யா அப்படியே ஒரு அப்பாவி மனைவியை கண்முன் கொண்டு வந்திருப்பார். கணவர் ஸ்ரீகாந்தை ‘ராமுப்பா… ராமுப்பா..’ என்று அழைத்தவண்ணம் படத்தின் முற்பகுதியில் வளைய வரும்போதே அனைவரது அபிமானத்தையும் பெற்றுவிடுகிறார். (அதென்ன ராமுப்பா?. தன் மகன் ராமுவுடைய அப்பாவாம்). கணவரின் இரண்டாவது மனைவியான படாபட் ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்ததைப் பார்க்கச்செல்லும் அவர், தன் கணவர் தன்னையும் தன் குழந்தைகளையும் மறந்து இரண்டாவது மனைவியே கதி என்று இருப்பதைச் சுட்டிக்காட்ட, அங்கு கிடக்கும் தூசி படிந்த தலையணையைத் தட்டி, ‘அப்பப்பா தலையணையெல்லாம் ஒரே தூசி படிஞ்சு கிடக்கு’ என்று சொல்லும் இடத்தில் மௌலி தெரிகிறார்.

இவரது சித்தப்பாவாக வரும் நாகேஷ் பற்றி சொல்லவே வேண்டாம். பிரமாதப்படுத்தியிருப்பார். அத்தானின் இரண்டாவது திருமணத்துக்கு ஸ்ரீவித்யா சம்மதித்து விட்டார் என்பதையறிந்து கொடுப்பாரே ஒரு பஞ்ச் டயலாக்.. சூப்பர். கடைசியில் ஸ்ரீவித்யாவிடம் ‘உன் புருஷனோட கல்யாணத்தில் நீ எங்கே இருப்பே?. புருஷனோட ரெண்டாவது கல்யாணத்துல முதல் மனைவி எங்கே இருக்கணும்னு இந்து தர்மத்துல சொல்லலியேம்மா’ என்று கேட்கும் இடத்தில் அவர் முகத்தில் தெரியும் அந்த ஏக்கமும் ஏமாற்றமும்.. யப்பா.

‘படாபட்’ ஜெயலட்சுமியிடம் நல்ல பாந்தமான நடிப்பு. அந்த நேரத்தில் அவர் முள்ளும் மலரும், தியாகம், 6 லிருந்து 60 வரை என அசத்திக்கொண்டிருந்த நேரம். இந்தப்படத்திலும் அசத்தியிருந்தார். தேனிலவுக்காக ஸ்ரீகாந்துடன் வெளியூர் சென்று ஓட்டல் அறையில் நுழைந்த சற்று நேரத்திலேயே, வித்யாவின் குழந்தைக்கு விபத்து என்று போன் வர, முகத்தில் தோன்றும் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, ‘புறப்படுங்க.. போகலாம்’ என்று சொல்வாரே, அந்த இடத்தில் அவர் பார்வையும், அதற்கு பதிலளிப்பது போல ‘என்னை மன்னித்துவிடு, வேறு வழியில்லை’ என்பது போல ஸ்ரீகாந்த் அவரைப் பார்ப்பாரே அந்தப்பார்வையும் வசனமின்றி உணர்ச்சிகளைக்கொட்டும். அதேபோல இன்னொரு கட்டத்தில், வெளியூரிலிருந்து வரும் பூர்ணம் தன் வீட்டில் ஸ்ரீகாந்த் குளித்துக்கொண்டிருப்பதை கேள்விக்குறியுடன் பார்க்க, ‘அவர் யாருடைய வீட்டிலோ குளிக்கிறார்னு பார்க்காதீங்கப்பா. அவருக்கு உரிமையான வீட்டில்தான் குளிச்சிக்கிட்டிருக்கார்’ என்று சொல்லி, தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்துவிட்டதை நாசூக்காக உணர்த்துமிடமும் அப்படியே. ஆனால் அதைக்கேட்டதும் அதிரும் பூர்ணம் மகளிடம் ஒரு வார்த்தையும் பேசாமல், நேராகச்சென்று சுவரில் மாட்டப்பட்டிருக்கும் சாமி படத்தை உடைப்பதும், அதைப்பார்த்து ஜெயலட்சுமி அதிர்வதும் உணர்ச்சிகளின் உச்சம்.

மனதில் எதையும் மறைக்கத்தெரியாத வெள்ளந்தியான அப்பாவாக வரும் ‘பூர்ணம்’ விஸ்வநாதனுக்கு யார் அந்தப்பெயர் வைத்தார்களோ தெரியாது. ஆனால் பெயருக்கேற்றாற்போல நடிப்பில் பரி’பூரணம்’. மகளின் திருமணத்துக்கு முன் மகளின் மேலதிகாரியான ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வரும் அவர், அங்கிருக்கும் நாகேஷ் ஒரு பழைய பட்டாளத்து வீரர் எனப்தையறிந்து, பட்டாளத்திலிருக்கும் யாரோ (நாகேஷுக்கு முன்பின் தெரியாத) தன் பழைய நண்பனைப்பற்றி அசால்ட்டாக விசாரிக்கும்போது தெரியும் அப்பாவித்தனம் அவரது தேர்ந்த நடிப்புக்கு ஒரு சான்று.

ஸ்ரீகாந்த், ஸ்ரீவித்யா, ‘படாபட்’ஜெயலட்சுமி, மௌலி, நாகேஷ், பூரணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்திருந்த இப்படத்துக்கு ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். வித்யாவுக்காக வாணி ஜெயராம் பாடிய பாடலும் (முதலடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்), எம்.எஸ்.வி. பாடிய (நான் முன் குறிப்பிட்ட) பாடலும் மனதைக்கவர்ந்தன. குடும்பக்கதைக்கேற்ற சுகமான ரீ-ரிக்கார்டிங். படம் துவங்கும்போது ஆகாசவாணியின் இசையை மெல்ல பின்னணியில் ஒலிக்கவிட்டிருப்பது ஜோர்.

வித்தியாசமான ஒரு படத்தைத்தந்த ‘இவர்கள்’ நிச்சயம் ‘வித்தியாசமானவர்கள்’தான்.

தெய்வீக ராகங்கள்


(By Saradha – Originally published in ForumHub)

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்து 1980-ல் இப்படி ஒரு படம் வந்தது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை. கதாநாயகனால் வாழ்வு சூறையாடப்பட்டு, உயிரை இழந்த மூன்று பெண்கள் ஆவியாக வந்து (?????) அவரைப் பழிவாங்கும் கதை. நம் திரைப்படங்களுக்கு கதை ‘பண்ணுபவர்களும்’ கதாநாயகன் ஒரு படத்தில் நடித்ததை மனதில் கொண்டு, அந்த மாதிரியே அவருக்குத் தொடர்ந்து கதை பண்ணுவார்கள் போலும். அல்லது இம்மாதிரி கதை என்றால், அதுக்கு ஸ்ரீகாந்த் தான் என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள் போலும். இப்படி குறிப்பிட்ட நடிகருக்கு குறிப்பிட்ட முத்திரை குத்துவதால்தான் அவர்கள் உண்மையான திறமைகள் வெளிவராமல், அல்லது வெளிவர வாய்ப்பளிக்கப்படாமல் போகிறது. ஒரு படத்தில் அவன் பிச்சைக்காரனாக நடித்தால் போச்சு. அப்புறம் பிச்சைக்காரன் ரோலா? கூப்பிடு அவரை என்ற கதைதான். (‘ஞான ஒளி’யில் பாதிரியார் ரோலில் மணவாளன் என்கிற கோகுல்நாத் அருமையாக நடித்தார். சரி. உடனே ‘பாரதவிலாஸ்’ படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் பாதிரியாராக வந்து ‘நிற்பதற்கு’ அவரை தேடிப்போய் அழைத்து வந்தார்கள்). சார்லிக்கு ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் சேரன் துணிந்து கொடுத்த அற்புதமான ரோலின் மூலம்தானே சார்லியின் பன்முகத்திறமை வெளித்தெரிந்தது?. அப்படியில்லாமல், ‘கற்பழிப்புக்காட்சி கொண்ட பாத்திரமா?. கொண்டா ஸ்ரீகாந்தை’ என்று அப்போதைய இயக்குனர்கள் கடிவாளம் பூட்டிய குதிரைகளாக இருந்தனர், சிலரைத்தவிர. (ஸேஃப்டிக்கு இப்படி ஒரு வார்த்தையை போட்டு வச்சிக்குவோம்).

தன்னிடம் வேலைக்கு வரும் பெண்களை கற்பை சூறையாடி, அவர்களை அருவியில் தள்ளி, தற்கொலை அல்லது விபத்துபோல செட்டப் செய்யும் ஸ்ரீகாந்தை, சட்டமோ, போலீஸோ தண்டிக்க முடியாத காரணத்தால், அவரால் கொல்லப்பட்ட மூன்று பெண்களே பேயாக மாறி, ஆனால் பெண் உருக்கொண்டு அவரைப்பழி வாங்குவதான (??) புதுமையான (??) கதை. அதில் ஒரு பேயாக, அதாவது ஸ்ரீகாந்தினால் ஏமாற்றப்பட்ட பெண்ணாக வடிவுக்கரசி நடித்திருந்தார். மற்ற இருவர் யாரென்பது சட்டென நினைவுக்கு வரவில்லை, எனினும் அப்போதிருந்த இரண்டாம் நிலைக் கதாநாயகிகள்தான்.

ஆரம்பத்தில் ஸ்ரீகாந்தை ஒரு சிதார் இசைக்கலைஞனாக அறிமுகப்படுத்தி, கேட்போர் மனம் உருகும் வண்ணம் சிதார் இசைப்பவராக காண்பித்தபோது, ‘பரவாயில்லையே, நல்ல கௌரவமான ரோல் கொடுத்திருக்காங்களே என்று தோன்றும். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே (அடடே நாம ஸ்ரீகாந்துக்கல்லவா கதை பண்ணுறோம் என்பது கதாசிரியருக்கும் இயக்குனருக்கும் நினைவு வந்திருக்க வேண்டும்) அவரை காம விகாரம் கொண்டவராகக் காண்பித்து, வழக்கமான ட்ராக்கில் திருப்பி அந்தப் பாத்திரத்தின் தன்மையையே குட்டிச்சுவர் பண்ணி, கதையை சொதப்பி விட்டனர்.

படத்தில் பாதிக்கு மேல் பேய்கள் ஸ்ரீகாந்தின் வீட்டில் வந்து டேரா போட்டுக்கொண்டு அவரை பாடாய் படுத்துவது, பார்க்க கொஞ்சம் தமாஷாக இருக்கும். மூன்று பேயகளுக்குள் நல்ல கூட்டணி. அதனால் கொஞ்சம்கூட பிசகாமல் ஸ்ரீகாந்திடமிருந்து அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றுகின்றன. பேய்களுக்கு கால்கள் இல்லையென்று யார் சொன்னது?. அதில் ஒரு பேய் பரதநாட்டியமே ஆடுகிறது. பேய்களின் அட்டகாசத்திலிருந்து தன்னைக் காப்பாற்றச்சொல்லி ஸ்ரீகாந்த் ஒரு ஏஜென்ஸியை நாடிப்போக, அதிலிருந்து வரும் இரண்டு அதிகாரிகள் சரியான கோமாளிகள். தங்களது அசட்டுத்தனத்தால் நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் பேய்களை அண்டாவுக்குள் தேடுவது நல்ல தமாஷ். அவர்களில் ஒருவர் வி.கோபாலகிருஷ்ணன், இன்னொருவர் வெண்ணிற ஆடை மூர்த்தியா? நினைவில்லை.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இன்னொருவர் சுருளிராஜன். பேய்களுக்குப்பயந்து தன்னுடன் இரவில் தங்க ஸ்ரீகாந்த் சுருளியை அழைத்துவர, அவரோ கனவில் பேயைக்கண்டு அலறி ஸ்ரீகாந்தை இன்னும் அச்சமூட்டுகிறார். கனவில் சுடுகாட்டுவழியே செல்லும் சுருளி, அங்கே ஒரு சமாதியின்மேல் அமர்ந்திருக்கும் ஒரு பெரியவரிடம், ‘ஏன்யா, எந்த பெரிய மனுஷன் சமாதியோ. அதுல காலையும் மேலே வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கியே’ என்று கேட்க அதற்கு அவர் (அது..?) ‘நான்தான் தம்பி, உள்ளே புழுக்கம் தாங்கலைன்னு வெளியே வந்து உட்கார்ந்திருக்கேன்’ என்றதும் அலறியடித்துக்கொண்டு ஓடும்போது, அங்கே நடந்து போய்க்கொண்டிருக்கும் இன்னொரு பெரியவரிடம் ‘ஏங்க இந்த பேய் பிசாசையெல்லாம் நம்புறீங்களா?’ என்று கேட்க, அவர் ‘எவனாவது உயிரோடு இருப்பன்கிட்டே போய்க்கேளு. நான் செத்து அஞ்சு வருஷமாச்சு’ என்று சொன்னதும் அலறிக்கொண்டு எழுவாரே… அந்த இடத்தில் தியேட்டரே சிரிப்பில் அதிரும்.

பேய்களுக்குப்பயந்து வீட்டைவிட்டுத் தப்பிப்போகும் ஸ்ரீகாந்தை ஒவ்வொருமுறையும் பேய்கள் வழியில் மடக்கி வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பது சுவையான இடங்கள். அதுபோலவே, தனக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோனதை நியூஸ் பேப்பர் மூலம் படிக்கும் ஸ்ரீகாந்த், அப்படியானால் தான் திருமணம் செய்துகொண்டு அழைத்து வந்த பெண்கூட உண்மையான பெண்ணல்ல அதுவும் கூட ஒரு பேய்தான் என்று அதிர்ச்சியடைவதும் இன்னொரு சுவாரஸ்யமான இடம். பேய்களின் அட்டகாசத்துக்குத் தோதாக ஒரு காட்டு வனாந்திரத்தில் இருக்கும் ஸ்ரீகாந்தின் பங்களா, முடிந்தவரையில் திகிலூட்டுவதற்காக பெரும்பாலான காட்சிகளை இரவு நேரத்திலேயே (தமிழில் சொன்னால் ‘நைட் எஃபெக்ட்’) எடுத்திருக்கும் புத்திசாலித்தனம் தெரிகிறது.

நடிப்பைப்பொறுத்தவரை ஸ்ரீகாந்த் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அவருடைய ரோல் ஒருமாதிரியாக சித்தரிக்கப் பட்டிருந்தபோதிலும், அதிலும் தன் திறமையான நடிப்பால், ஈடுகட்டி பேலன்ஸ் பண்ணியிருந்தார். கதை இவரைச்சுற்றியே அமைந்ததாலும், படத்தில் குறைவான கதாபாத்திரங்களே பயன்படுத்தப்பட்டிருந்ததாலும், படத்தின் அதிகப்படியான காட்சிகளில் இவரே நிறைந்திருந்தார். இவருக்கு அடுத்து மூன்று பேய்களுமே நன்றாக நடித்திருந்தனர். மூவரும் பெண்ணாக வந்ததை விட பேயாக வந்தபோது கச்சிதமாகப்பொருந்தினர். (same side goal).

படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். ஆரம்பத்தில் சிதார் இசைக்கலைஞராக ஸ்ரீகாந்தைக் காண்பிக்கும்போது, அழகாக இதமான சிதார் இசையால் வருடியிருப்பார். பின்னர் பேய்கள் அட்டகாசம் துவங்கியதும் அவருக்கே உரிய அதிரடி திகில் பின்னணி இசையால் நம்மை பயமுறுத்துவார். இவரது இசையில் இப்படத்தில் வாணி ஜெயராம் பாடிய இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருந்தன. ஆனால் முதலடிதான் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு எட்ட மறுக்கிறது. படத்தில் கேட்டதோடு சரி. பின்னர் வானொலி/தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் அல்லவா நினைவில் நிற்கும்?. அவர்கள் ஒரு பட்டியல் போட்டு வைத்துக்கொண்டு அவற்றையே திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… ஒளிபரப்பிக்கொண்டு இருப்பார்கள்.

எல்லாம் சரிம்மா, படம் எப்படி ஓடியதுன்னு கேட்கிறீங்களா?. இயக்குனர் (பாடலாசிரியர்/இசையமைப்பாளர்) கங்கை அமரன் (இப்படத்தின் இயக்குனர் அவர் அல்ல) தான் இயக்கிய சில படங்கள் வெற்றி வாய்ப்பை இழந்த நேரங்களில் ஒரு காரணம் சொல்வார். அதாவது, ‘தன்னுடைய படம் வெளியான நேரம், மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாமல் போனதால், மக்களால் அந்தப்படத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டது’ என்பார். அதுபோலவே ‘தெய்வீக ராகங்கள்’ என்ற இந்தப்படம் வெளியான நேரத்திலும் மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாமல் போய்விட்டது. புரிந்திருக்குமே..!

மிஸ்டர். சம்பத்


By ஈ. கோபால்

படம் வெளியான தேதி: 13.4.1972,

நடிகர்கள் : சோ, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், பூர்ணம் விசுவநாதன், நீலு, மாலி,  வெண்ணீராடை  மூர்த்தி, செந்தாமரை மற்றும் பலர்…
நடிகைகள்: ஜெயா, மனோரமா, சுகுமாரி, தேவகி, புஷ்பா, ராமலக்ஷ்மி மற்றும் பலர்
திரைக்கதை, வசனம், இயக்கம் : சோ,

மூலக்கதை : ஆர்.எம்.நாராயண்,

பாடல்கள் :கவிஞர் வாலி
பின்னனிப்பாடகர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், எம்.எஸ்.விசுவநாதன் (title song), எஸ்.பி.பாலசுப்ரமண்யம், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா
இசை: எம்.எஸ்.விசுவநாதன்

தன் தந்தையின் சாவுக்குக்காரணமான ‘நேர்மை’யும், அவரின் ஈமச்சடங்குக்கு பணமில்லாமல் பட்ட வேதனைகளையும் பார்த்து, மனது மாறி இனி ஒருபோதும் உண்மையைச் சொல்லி வாழ்வதில்லை என்று சபதமேற்று, பொய்யை ஒரு தொழிலாகவே செய்து வாழ்வு நடத்தும் கதாநாயகனாக வலம் வருகிறார் சோ.

இவரின் நண்பரும், பள்ளிப்பருவ தோழரான மேஜர் சுந்தர்ராஜனை தற்செயலாக ரயில் பயணத்தில் சந்திக்கிறார்.  டிக்கட் பரிசோதகரிடம் தன் சித்தப்பாதான் ரயில்வேயில் ‘ஜெனரல் மேனேஜர்’ என்று கூறி தான் பயணச்சீட்டு எடுக்காத்தை மறைத்து தப்பிக்கிறார்.  நேர்மையானவரும், எதிலுமே ஒரு வித தர்மத்தை
கடைபிடிப்பவருமான மேஜருக்கு சோவின் செயல் அருவெறுப்பைத்தருகிறது.  சோ செய்வது முற்றிலும் தவறு என்று வாதிடுகிறார். அவரின் தந்தையின் பண்பாட்டை கடைபிடிக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

இதை பொருட்படுத்தாத சோ, நேர்மை, தர்மம் என்பதெல்லாம் ஒரு ‘புருடா’ என்றும், அது இக்காலத்தில் சோறு போடாதென்றும் மறுத்துக்கூறி, தன்னுடைய இப்பழக்கத்தை மாற்றப்போவதில்லை என்கிறார்.  இருவருக்கும் ஒரு எழுதாப் பந்தயம் போட்டுக்கொள்கிறார்கள்.  மேஜரோ, ‘காலம் ஒரு நாள் உனக்கு பாடம்
புகட்டும்போது நான் சொன்னது உண்மை என்று நீ அறிவாய்” என்று கூறி ஒருவேளை ஏதாவது ஒரு நிகழ்வில் சோ பிடிக்கப்பட நேர்ந்தாலும், காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறி விடைபெறுகிறார்.

மேஜர் தன் கொள்கையில் வெற்றி பெற்றாரா, சோ வெற்றி பெற்றாரா என்பது மீதிக்கதை. ஒரு சின்ன சூட்கேஸ், ஒரு வெத்தலைப்பொட்டி, ஜிப்பா, ஜொலிக்கும் மூக்குக்கண்ணாடி, நக்கல் கலந்த முகபாவமும் அதனால் பிறக்கும் பேச்சு — இதுதான் இவரது மூலதனம். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பொய்சொல்வது, லாவகமாக அத்தருணத்தை தனது வெற்றியாக்கிக்கொள்வதும் சிரித்துக்கொண்டே காரியத்தை
சாதிப்பதும், குறுகிய நேரத்தில் ஒருவருடைய பலகீனத்தை கணித்து அவர்களை மடக்குவதையும் அநாசயமாக செய்திருக்கிறார் சோ.   நம்மிடம் உள்ள மிகப்பெரிய பலகீனமான சினிமா என்ற போதையை வைத்தே காயை நகர்த்துகிறார்.  இப்பொறியில் மாட்டும், மனோரமா, பூர்ணம் விசுவநாதன், மாலி, வீட்டு உரிமையாளர் நீலு, மரச்சாமான் விற்பனையாளர், என்று அனைவரையும் மிளகாய் அரைப்பது சிரிப்பை
மூட்டுகிறது. ஏதாவது ஒரு எண்ணை சுழற்றி, நடிகையிடம் பேசுவது போல் பாவ்லா காட்ட, ஒரு முறை பயில்வானுக்கு அந்த ஃபோன் போக, அவனோ இவன் யாரென்று கண்டுபிடித்து அங்கு வர, இவர் நீலுவை மாட்டிவிட்டு தப்பிப்பது நல்ல நகைச்சுவை.  வாடகை கொடுக்காமல், காசில்லாமல் வாய் ஜாலத்தை ஒன்றே வைத்து படத்தை ஓட்டுவது சோவின் சாதுர்யம்.

இவரின் பாச்சா முத்துராமனிடம் பலிக்காமல், மனோரமாவை பேச்சில் மயக்கி விழவைப்பது சுவையான பகுதி. இதில் மனோரமா இவர் மேல் காதல் வயப்பட்டு, இவரின் கடின வேலையை சுலபமாக்க, மற்றவர்களும் வலையில் விழுகிறார்கள். சினிமாவினால் ஈர்க்கப்படும் நான்குபேரை வைத்துக் கொண்டு கதையை நகர்த்தியிருப்பது அலுப்பை சில சமயம் தந்தாலும், காட்சிகளில் நகைச்சுவை
இருப்பதால் அறுக்கவில்லை.  கடைசியில் இவர் சொல்லும் வசனம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது ..…. ”எங்கப்பா செத்துப்போனப்ப கார்யத்துக்கே காசு இல்லாம போச்சு, நான் செத்துப்போனா எனக்கு கார்யம் பண்ண மனுஷனே இல்லாம போய்டுவா போலிருக்கு”.

இப்படத்தில் வெண்ணீராடை மூர்த்தி எப்போது வருகிறார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரின் பெயர் தலைப்பில் இருக்கிறது.  முத்துராமன் கோபக்கார, கண்டிப்பான இயக்குனராக நடித்துள்ளார்,
படப்பிடிப்பில் நடிக்கும் நடிகையையே இவர் காதலிப்பது அவ்வளவாக காட்சிக்குப்பொருந்தி வரவில்லை.  இவரின் பாத்திரம் அவ்வளவாக எடுபடவில்லை. கதாநாயகி ஜெயா ஒரு பாட்டுக்கு வந்து போகிறார். மீதி காட்சிகளில் மனோரமாவின் தோளிலேயே தொத்திக்கொண்டு போகிறார்.  மனோரமா ப்ரமாதம், இவரின்
பேச்சும், ஏற்ற இறக்கமும், வசன நடையை கையாளும்போது செலுத்தும் நடிப்பும் – இவரை மிஞ்ச இவரால்தான் முடியும்.  பயங்கர ‘timing’. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் எப்போதும் திண்று கொண்டிருப்பதும், அழைப்பு பத்திரிகை கொடுக்க வந்த சுகுமாரி, மற்றும் நண்பிகளை தவறாக புரிந்துகொண்டு வாங்கு வாங்கு என்று வாங்குவதும் ரசிக்கவைக்கிறது.

மூன்று பாடல்களும் அருமை, “ஹரே ராம ஹரே கிருஷ்ணா” (எம்.எஸ்.வி), ”ஆரம்பம் ஆவது உன்னிடம் தான்” எஸ்.பி.பி, சுசீலா மற்றும், ‘அலங்காரம் எதற்கடி’ (டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி/மனோரமா).

இது ஒரு கருப்பு வெள்ளைப்படம், முக்கால்வாசி ‘செட்’டிலேயே எடுக்கப்பட்டுள்ளது.  பல காட்சிகள் நாடகத்தனமாக உள்ளது. வசனங்கள் எல்லா சோ படம் போலவும் தத்துவத்தை தூக்கலாக வைத்துள்ளதும் யதார்த்தமாக உள்ளது.

இப்படம் வந்து அவ்வளவாக ஓடவில்லை என்கிறான்  என் நண்பன்.  தெரியவில்லை. இப்படத்தின் பிரதி எங்கும் கிடைக்காது, ஒருவேளை மலேசியா, சிங்கப்பூரில் கிடைக்கலாம், இந்தியாவில் இல்லை. சிறந்த படம், நல்ல பொழு்துபோக்குப் படம்  பாருங்கள்.

கலைக்கோவில்


By E. Gopal
திரைப்பட விமர்சனம் – கலைக்கோவில் (kalai kovil)

படம் வெளியான தேதி: 25.9.1964,

நடிகர்கள் : எஸ்.வி.சுப்பையா, முத்துராமன், நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன், வி.எஸ்.ராகவன்
நடிகைகள்:
சந்த்ரகாந்தா, ராஜ்ஸ்ரீ, ஜெயந்தி, எஸ்.என்.லக்ஷ்மி
பின்னனி வீணை இசை: சிட்டிபாபு
பாடியவர்கள் : டி.எம்.எஸ், பாலமுரளிகிருஷ்ணா, எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா
திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீதர்.சி.வி.
தயாரிப்பு : எம்.எஸ்.விசுவநாதன் – கங்கா (கலை இயக்குனர்)

இசை: எம்.எஸ்.விசுவநாதன்-ராமமூர்த்தி

இப்படத்தைப் பற்றிய நுணுக்கமான, சங்கீதத் தகவல்களை அள்ளித்தெளித்ததற்கும்,  இப்படத்தை பற்றிய அறிய தகவல்களைத்தந்து, அதனை பார்க்கத்தூண்டிய நண்பர் அசோக்கிற்கு நன்றி.

தன் வீணை வித்வத்தால் புகழின் உச்சிக்குப்போகும் வித்வான் தனக்கு ஏற்படும் துரோகத்தால் எப்படி வீழ்ந்து மடிகிறார் என்பதே கதை.  ஆரம்பத்திலேயே அற்புதமான கச்சேரியுடன் தொடங்கும் பகுதியில் எஸ்.வி.சுப்பையா வீணை வித்வானாகவே மாறிவிடுகிறார்.  பின் இசையில் வீணைவாசித்திருப்பவர் சிட்டி பாபு.  மிகவும் ரம்மியமாகவும், லயத்துடனும் படமாக்கப்பட்டுள்ளது.

எஸ்.வி.சுப்பையா பிரம்மசாரி. மிகப்பெரிய நாணிலம் போற்றும் வீணை வித்வான்.  தன் அக்காள் (எஸ்.என்.லக்ஷ்மி), மற்றும் அவர் மகள் (சந்த்ரகாந்தா)வுடன் மகிழ்ச்சியாக வசித்துவருகிறார். கச்சேரி முடிந்த கையோடு, தன் நன்றியை கடவுளுக்கு தெரிவிக்க கோவிலுக்கு சென்று வரும் போது வெளியில் முத்துராமன் 2 நாட்களாக பசியினால் மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அவரை தன் காரில் ஏற்றி, வீட்டிற்கு கொண்டுவந்து, ஊணும் உடையும் கொடுத்து பேணுகிறார்.  அவர் கூடவே வசிக்கும் முத்துராமன், காலப்போக்கில் வீணையை கற்றுக்கொண்டு கலையில் தேர்ச்சி பெறுகிறார்.  வாரிசு இல்லாத எஸ்.வி.யோ இவரை தன் மகனாகவே சுவீகரித்து தன் இசைக்கும் இவர்தான் வாரிசு என்று போற்றி வளர்க்கிறார். முத்துராமனின் அரங்கேற்றம் நடக்கிறது, எல்லோரும் எஸ்.விக்கு இதை விட ஒரு வாரிசு கிடைக்காது என்று பாராட்டுகிறார்கள்.

இதனிடையில், எஸ்.வி.சுப்பையாவின் அக்காள் மகளும் அவருக்கு பணிவிடை செய்து அங்கேயே வளர்ந்துவரும் முத்துராமனுக்கும் காதல் பற்றிக்கொள்கிறது.  இருவரையும் தனிமையில் காணும் எஸ்.வி., அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அவ்வாறே செய்கிறார்.

பிரபல நாட்டியக்காரியான (ரஜ்யஸ்ரீ), முத்துராமனின் வீணை இசைக்கு அடிமையாகிறார்.  அவரின் காரியதரசியிடம் (வி.கோபாலகிருஷ்ணன்) தம்வீட்டிற்கு எப்பாடியாவது முத்துராமனை சாப்பாட்டிற்கு அழைக்க வேண்டும் என்று கூறுகிறார்.  அவரும் சபாக்களில் கச்சேரி பிடித்துத்தருபவரும், சபா ஒருங்கிணைப்பாளரான  சுப்புவிடம் (நாகேஷ்) தன் கோரிக்கையை முன்வைக்கிறார்.  இது ஒன்றும் பெரிய காரியமில்லை என்று திருமணமான கையோடு – தம்பதிகளை ராஜ்ஸ்ரீ வீட்டிற்கு சாப்பாட்டு விருந்துக்கு அழைக்கிறார்.  அவர்களும் வந்து கௌரவிக்கிறார்கள்.  யாருக்கும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் – முத்துராமனை ஒரு அரை மணித்துளிகள் வீணை வாசிக்க வேண்டுமென்று கேட்கிறார் ராஜ்யஸ்ரீ.  தன் மனைவியை தயக்கத்துடன் பார்த்தபடியே, வீணை கொண்டுவரவில்லை என்று கூற, அவரிடம் ஒரு வீணை இருப்பதாக எடுத்து வந்து வாசிக்குமாறு வற்புறுத்துகிறார்.  அவர் வாசிக்கிறார், வாசித்துக்கொண்டிருக்கும்போதே, எல்லொரும் புருவத்தை உயர்த்தும் வண்ணம், ராஜ்யஸ்ரீ வீணை வாசிப்பில் மயங்கி ஆடத்தொடங்கி, பாட்டும் பாடுகிறார் (தேவியர் இருவர் – ராகம் – ஷண்முகப்ரியா), இப்பாட்டில் உள்ள வரிகள், மிகவும் சச்சரவாக பிண்ணப்பட்டிருக்கவே, சந்தேகம் உணர்ச்சிகளில் குழைந்து முகத்தில் பீறிட, பாட்டை நிறுத்தச்சொல்லுமாறு கத்துகிறார் சந்த்ரகாந்தா.  முதல் முறை அவருக்கு எங்கே தன் கணவர் பாதை மாறிபோய்விடுவாரோ என்று பலவீன ரேகைகள் முகத்திலும், உள்ளத்திலும் இரட்டை குதிரை சவாரி செய்கின்றன. இந்நிகழ்சியிலிருந்து அவர்கள் சற்று இளைப்பாற, சுற்றுலா கிளம்பிப்போகிறார்கள்.
இதற்கிடையே – தனக்கு எல்லாத்திறமைகள் இருந்தும் ஏன் சபாக்களில் கச்சேரி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் நீறுபூத்த நெருப்பாக மனதில் புகையை மூட்ட, அதை சுப்புவின் காதுகளில் போட்டு விளக்கம் கேட்க, அவரோ எல்லாம் நேரம்தான் காரணம், திறமை இருந்தாலும், ஒரு வீட்டில் இரு வித்வான் இருந்தால் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும், பெரியவர் இருக்கும் வரை இவர் குட்டிக்கரணம் போட்டாலும் கிடைப்பது கடினம் என்று மனதில் ஏற்பட்ட புகையில் சாம்பிராணையை தூவ – புகை, பகையாக மாறி நெருப்பாக நாக்கின் வழி எட்டிப்பார்க்கிறது.

ஒரு முறை எஸ்.வி.சு. ஒப்புக்கொண்ட கச்சேரிக்கு தன் உடல் நிலையை காரணம் காட்டி ரத்து செய்யச்சொல்லும் போது – அக்கச்சேரி வாய்ப்பை ஏன் தனக்கு கொடுக்கச்சொல்லி கோரிக்கை வைக்க, அவரோ முகமலர்ந்து அதற்கென்னா, “பேஷா செய்துடலாம்” என்று சபா ஒருங்கிணைப்பாளரிடம் இக்கருத்தை மையப்படுத்த, அவரோ மிகவும் கண்டிப்பாக,  ”நடந்தால் உங்கள் கச்சேரி, இல்லையேல் நிகழ்ச்சி ரத்து” என்று கூற – இப்போது முத்துராமனின் உடம்பின் எல்லாப்பாகத்திலும் தீ ஜுவாலை பரவுகிறது.

தன்னுடைய ஆதங்கத்தைத்தீர்க்க வடிகால் தேடி, சுப்பு, ரஜ்யஸ்ரீ கூட்டுக்குழுவினரிடம் போய் கொட்ட – அவர்கள் இவருக்கு குடியையும் பழக்கி தவறான பாதைக்கு போக அடித்தளமிடுகிறார்கள். ஒரு நாள் பூஜை நடக்கும்போது எஸ்.வி. வீணை வாசித்துக்கொண்டிருக்கும்போது அங்கு ஒரு முடிவோடு வரும் முத்துராமன், எஸ்.வி.யிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். அந்த வரம் தன் வாழ்கையையே பிறட்டிப்போடப்போவது என்பதை அறியாமல், அது என்ன கோரிக்கையானாலும், தான் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறார்.  “இனிமேல் நீங்கள் வீணையை வாசிக்க்க்கூடாது” என்று சத்தியம் செய்யச்சொல்கிறார். எமாற்றமோ, கோபமோ இல்லாமல் அத்ர்ச்சியை மட்டும் தன்னுள் இறக்கிக்கொண்டு, சமாளித்து அவ்வாறே செய்து கொடுக்கிறார்.

எந்த ஒரு நாதத்தை தன் மூச்சாக கொண்டு வசித்து வந்தாரோ, அதுவே இல்லாத போது அதன் நினைவு வந்து  வாட்டுவதால் இனி அங்கிருப்பது சரியில்லை என்று, கடிதம் எழுதிவிட்டு, கோவில் மண்டபத்திற்கே – எங்கு முத்துராமனை கண்டு, தூக்கிவந்தாரோ – அங்கேயே வந்து வாழ ஆரம்பிக்கிறார்.  முத்துராமனும் இந்த அதிர்ச்சியை மறைக்க, ராஜ்யஸ்ரீ கும்பலுடன் சேர்ந்து நேரத்தைப்போக்கி, குடித்து கெடுகிறார்.  குடியை விடாவிட்டாலும், கச்சேரியால் புகழின் உச்சியை அடைகிறார். எஸ்.வி-யோ பிச்சைக்காரனை போல் வாழ்கிறார். பாதி நேரம் நாட்டியக்காரியினூடேயே வசிக்கும் முத்துராமனால் வீட்டிற்க்கு வருவதைத்தவிர்க்கிறார். இதனால், வீடும் களையிழந்து, அவர் மனைவியும் பலாக்காணம் பாடிக்கொண்டு ஓட்டுகிறார்.

இங்கு தான் இயக்குனர் பெரிய ரம்பத்தை எடுத்து நம் கழுத்தில் வைக்கிறார். இதுவரை நன்றாக போய்க்கொண்டிருந்த கதையை ஜவ்வு போல் இழுத்து அறுக்கிறார்.  ஒருபுரம் முத்துராமனின் வரட்டு கௌரவம், ஒரு புரம் எஸ்.வி.சுப்பையாவின் பிடிவாதம், இரண்டுக்கும் நடுவில் சந்த்ரகாந்தாவின் அழுகுரல் – மூன்றும் மிளகாயை அரைத்து புண்ணில் தடவுகிறது. முத்துராமனின் ஈகோவால் எல்லாம் சீரழிந்து, பின் கடைசியில் பக்கவாதம் வந்து பாதிக்கப்படுகிறார். முத்துராமனுக்கு பக்கவாதம் வந்த பின்தான் நமக்கு பக்காவாக பாதம் நகர்கிறது. கடைசியில், வரட்டுப்பிடிவாதத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே உச்சக்கட்டம்.

முத்துராமனின் வெறுப்பு, எஸ்.வி-யின் சோகம் ததும்பும் முகம், சந்த்ரகாந்தா எப்போதும் கண்களில் வாசிக்கும் ஜலதரங்கம் எல்லாம் பிற்பகுதியில் நம்மை அவர்களிடம் பரிவை ஏற்படுத்துவதற்குப்பதிலாக, எரிச்சலையே ஏற்படுத்துகிறது. கடைசிசொதப்பலால் ஒருவேளை இப்படம் தோல்வியைச் சந்தித்ததோ தெரியவில்லை.

எஸ்.வி.சுப்பையா-வின் நடிப்பு நிறைவைத்தருகிறது.  முத்துராமன், சந்த்ரகாந்தா, ராஜ்யஸ்ரீ, நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தம்தம் பாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.  முதலில் விறுவிறுப்பாக போகும் படத்தில், முத்துராமன்மேல் இனம்புரியாத கோபம் வருவது திரைக்கதைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நாகேஷ் பிச்சு உதறுகிறார்.  சபா ஒருங்கிணைப்பாளராகவும், ஜெயந்தியின் கணவராகவும் ஜமாய்க்கிறார்.  ராஜ்யஸ்ரீயால் கைவிடப்பட்ட முத்துராமன், குடிப்பதற்க்கு நாகேஷின் உறவை தேர்ந்தெடுக்க, அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ஜெயந்தியை வாரு வாரு என்று வாருவது பிரமாதமான நகைச்சுவை.

இசையைப் பற்றி சொல்லவில்லையென்றால் முழுமை பெறாது.  மிகவும் அற்புதமான மெட்டுக்கள், தேன்சுவையை பாடல்கள் மூலம் தந்த இரட்டையர் பாராட்டுக்குறியவர்களே.  பாலமுரளியின் “தங்கரதம் வந்தது” (ஆபோகி ராகம்….) “நான் உன்னை சேர்ந்த”, தேவியர் இருவர் முருகனுக்கு (ஷண்முகப்ப்ரியா), மேற்கத்திய பாணியில் முள்ளில் ரோஜா ஆகியவை அருமை.
இப்படம் சிந்துபைரவிக்கு முன்னோடியாக்க்கருதப்படுகிறது.  படம் வந்து ஒருவாரத்தில் படுதோல்வி அடைந்தது. இப்படத்தின் பிரதியை எல்லா இடத்திலும் தேடினோம்.  சென்னை, மதுரை என்று – கிடைக்கவில்லை.  சென்னையில் சங்கரா ஹாலில் (ஏவிஎம்) முக்கால்வாசி படங்கள் கிடைக்கும், ஆனால் இங்கும் இல்லை.  அங்கு இருக்கும் பொறுப்பாளர் கருணாகரன் இப்படம் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.  இப்படம் எம்.எஸ்.வியின் சொந்தப்படமாதலால், தோல்வியுற்றபோது, பிரதியை எங்கோ தூக்கி போட்டுவிட்டார் போலும். மலேசியா, சிங்கப்பூரில் விசிடி பதிப்பு கிடைக்கிறது. இந்தியாவில் எனக்குத்தெரிந்து கிடைக்கவில்லை. சிறந்த படம்– அருமையான பாட்டிற்காகவும், முன் திரைக்கதைக்காகவும் பார்க்கலாம்.

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை


(இது ஈஷ்வர் கோபால் அனுப்பியுள்ள செய்தி)
திரு. உமர் எழுதிய ‘கலை உலகச் சக்கரவர்த்திகள்’ என்ற நூலிலிருந்து சில சுவாரசியமான தொகுப்புகள் :-

‘நாதசுவரச் சக்ரவர்த்தி’ டி.என். ராஜரத்தினம் பிள்ளை பிரயாணம் செய்யும்போது, ரயிலிலும் சரி, காரிலும் சரி, கச்சேரிக்குச் செல்லும்போது ஒரு பெரும்படையுடன்தான் செல்வார்.  ஒருதரம் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் அவர் வந்து இறங்கியபோது அவருடன் வந்தவர்கள் சாரதா (அவர் மனைவிகளுள் ஒருவர், அவருக்கு ஐந்து மனைவிகள்), 2 அல்சேஷன் நாய்கள், 1 தாளம் போடுபவர், 1 ஒத்து ஊதுபவர், 2 தவில் வித்வான்கள், 1 நாதசுவர வித்வான், 2 எடுபிடிகள் ஆக பத்து நபர்களுடன் வந்திறங்கினார். பிரயாணத்திலும் கூட அவரது ஆடம்பர வாழ்வு தெரிந்தது.

இவர் ஒரு தனிப் பிறவி! சுகபோகங்களின் சிகரம்.  கேவலம், கையொப்பம் இடட்டும் – கொட்டைக் கொட்டை எழுத்துகள். அரைப் பக்கம் நிரம்பிவிடும். லெட்டர் பேப்பரும் வால் நோட்டீஸ் மாதிரித்தான். அதன் ஜோடி கவர் 15 அங்குலம் நீளமாகவும் இருக்கும். தபால் இலாகாவுக்கு நல்ல லாபம். கவரின் மேல் அச்சிட்டுள்ள பட்டம், பதவிகளின் போக்கும் கொஞ்சமும் இளைத்தவையல்ல, ரொம்பவும் பொருத்தமான பட்டங்களும் கூட. ‘நாதஸ்வரச் சக்கரவர்த்தி’, ‘ அகில உலக ஜோதி’…

மோட்டார் கார் பெரிய ரதம், காலனுக்கு (gallon) எட்டு மைலுக்கு மேல் ஓடாது. கச்சேரிகளுக்குப் பிரயாணம் செய்யும்போது,பக்கவாத்திய பரிவாரம், குடும்பம் சகலமும் காரில் அடங்கிவிடும். காதுகளில் மோட்டார் ‘ஹெட் லைட்’டுக்குச் சமமான வைரக் கடுக்கன் ஜோடி, அதை எஸ்.ஜி. கிட்டப்பாவிடம் விலைக்கு வாங்கி அணிந்துகொண்டதாகச் சொல்லுவார்கள், ஜரிகை மயமான ஆடை, அழுத்த வர்ணங்களில் பட்டுச் சட்டை, கவுன் போலவும் கழுத்து முதல் பாதம் வரை சில சமயங்களில் அணிந்துகொள்வார், முதலாளி மட்டுமேயல்ல, செட்டிலுள்ள பையன்களும் ஆடம்பரமான வேஷத்துடந்தான் இருப்பார்கள்.

பொடி டப்பி, பேர் பொடி டப்பியானாலும், டிரங்க் என்றுதான் சொல்லவேண்டும். பாப்பா கே.எஸ்.வெங்கட்ராமையா, வெள்ளியும் பொன்னும் கலந்த பெரிய பொடி டப்பியைப் பிரத்தியேகமாகத் தயாரித்து, ராஜரத்தினம் பிள்ளைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். வெற்றிலைப் பெட்டி, ஒரு கூட்ஸ் வண்டி மாதிரி இருக்கும். கூஜா ஒரு வெள்ளி டிரங்க். இவ்வளவையும் தூக்கிக்கொண்டு, ரயில் பிரயாணம் முதல் வகுப்பில் வருவார்.

டி.என்.ஆர். ஓட்டல் தாசப்பிரகாஷில் தங்கியிருந்தபோது உஸ்தாத் கான்சாகிப் படே குலாம் அலி கான் அதே விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் ஜி.என்.பியை அழைத்துக் கொண்டு டி.என்.ஆர். இருந்த அறைக்கு வந்துவிட்டார். இருவர் வரவையும் கண்டு பூரித்துப் போனார் டி.என்.ஆர். சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்த்தும், கான்சாகிபின் பாட்டைக் கேட்க ஆசைப்பாட்டார் டி.என்.ஆர். டி.என்.ஆரின்  ஆசையை ஜி.என்.பி. சொன்னது, ‘மாண்ட்’ ராகத்தில் அற்புதமாக அரை மணி நேரம் பாடினார் உஸ்தாத். கான்சாகிப் பாட்டைக் கேட்டதும் ஜி.என்.பி. அப்படியே மயங்கிவிட்டார். ராஜரத்தினம் பிள்ளைக்கு குஷி வந்துவிட்ட்து. விடுவாரா பிள்ளை, படே குலாம் வாசித்த அதே ‘மாண்ட்’ ராகத்தை தனது நாதசுவரத்தில் இரண்டு மணி நேரம் வாசித்தார். ஜி.என்.பி-யும் படே குலாம் அலி கானும் வியந்துவிட்டார்கள்.

“நாதசுவரச் சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை’ என்று விலாசமிட்டு வந்தால்தான் கடிதங்களையோ, அழைப்பிதழ்களையோ பிரித்துப் பார்ப்பார். ‘நாதசுரச் சக்கரவர்த்தி’ என்று தனது பெயருக்கு முன் போடாத, மொட்டையாக டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று மட்டும் வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்காமலேயே குப்பையில் வீசிவிடுவார்.

நாகப்பட்டினத்தில் ஒரு நாதஸ்வர வித்வான். அவர் கையில் நாதஸ்வரம், வாசிப்பில் அபஸ்வரம், ஆனால் வேஷத்தில் ராஜரத்தினம் பிள்ளை அவர்களை அப்பட்டமாகக் காப்பியடித்துக் கொண்டிருந்தார். முன்பு அவர் குடுமி வைத்துக் கொண்டிருந்தார். பின்னர் கிராப்புத் தலை ஆனார்.  அதே ஜொலிப்புக் கடுக்கன், அதே டால் வீசும் மோதிரங்கள் போதாக்குறைக்கு “ஏகலைவன் மாதிரி அண்ணாச்சியை மனசிலே வச்சுக்கிட்டு வாசிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அத்துடன் நிற்காமல் ராஜரத்தினத்துக்கு நாதஸ்வரம் செய்து தரும் ஆசாரியைப் பிடித்து, அவருடைய வாத்தியத்தின் பிரத்தியேக அமைப்பையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  அத்துடனாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். “அண்ணாச்சி வாத்தியம் இருபத்தேழு இஞ்சு தானே, என்னுடைய வாத்தியத்தை இருபத்தெட்டரையாகப் பண்ணிவிடு” என்று வேறு சொல்லி வைத்தார். இது எப்படியோ பிள்ளைவாளின் காதுக்கு எட்டிவிட்டது.  அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டார்.  கொஞ்ச நாள் கழித்து ராஜரத்தினம் பிள்ளை நாகப்பட்டினம் போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே ஒரு கச்சேரி. போன உடனேயே உள்ளூர் நாதஸ்வரத் தம்பிக்கு சொல்லியனுப்பினார். தம்பிக்கு ஒரு புறம் சந்தோஷம், இன்னொரு புறம் பயம். ஒருவாறு மனதைத் திடப்படுத்திக்கொண்டு ராஜரத்தினத்தின் முன் தயங்கித் தயங்கி நின்றார்.

“என்ன தம்பி, சவுக்கியமாயிருக்கியா”?

“இருக்கேன், உங்க ஆசீர்வாதம்”.

“அசப்பிலே பார்த்தா என்னை மாதிரியே இருக்கே. என்னைப் போலவே ஊதறியாமே? பேஷ், பேஷ், யாருகிட்டே பாடம்”?

“உங்களையே குருவா மனசிலே எண்ணிக்கிட்டேனுங்க, கேட்கப் போனா இந்த வட்டாரத்திலே என்னை எல்லோரும் ‘சின்ன ராஜரத்தினம்’னுதான் சொல்லுவாங்க. எல்லாம் உங்க ஆசீர்வாதம்!”

“அது சரி நீ என்னவோ ஆசாரிகிட்டே உன் வாத்தியத்தை இன்னும் கொஞ்சம் நீளமாகச் செய்யச் சொன்னயாமே, என்ன ரகசியம் அதிலே”?

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, மந்தர ஸ்தாயியை இன்னும் கொஞ்சம் அழுத்தமாப் பேச வைக்கலாம்னு ஓர் இஞ்ச் கூடுதலா பண்ணச் சொன்னேனுங்க”.

“அது போவட்டும், டிரஸ், கிரஸ், ஆபரணங்கள் எல்லாம் என்னைப் போலவே போட்டுகிட்டு இருக்கியே?”

உள்ளூர்த்தம்பி ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்தார். தம்பிக்கு நிறைய காப்பி, பலகாரம் வாங்கிக் கொடுத்த பின், இருவரும், ஒரு காரில் ஏறி, வெளியே போனார்கள். ராஜரத்தினம் தன் ஓட்டுனரை விளித்து, “நேரே சலூனுக்கு ஓட்டப்பா!” என்றார். கார் சலூன் போய்ச் சேர்ந்த்து. தாம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு உள்ளூர்த் தம்பியைப் பக்கத்து நாற்காலியில் உட்காரச் சொன்னார். தம்பிக்கு பகீரென்றது. “என்ன விபரீதம் நடக்குமோ”? என்று தயங்கினார்.

“சும்மா உட்காருப்பா!” என்றதும் தயங்கித் தயங்கி நாற்காலியில் ஏறி உட்கார்ந்திருந்தார். முடி திருத்தும் கலைஞரைப் பார்த்து, “இரண்டு பேருக்கும் மொட்டை அடி, திருப்பதி ஸ்டைலில்” என்றார். உள்ளூர்த் தம்பி அலறி, “என்னங்க இது! நான் என்ன தப்பு செய்தேன்?” என்று கதறியே விட்டார். “பின்னே என்னவென்று நினைச்சுகிட்டே? எல்லாத்திலேயும் நீ என்னைக் காப்பி அடிக்கிறே. நான் கடுக்கன் போட்டா நீ கடுக்கன் போடறே. நான் தோடா போட்டா நீயும் ‘தோடா’ போடறே. கழுத்து சங்கிலியிலே பாதியை
ஜிப்பாவுக்கு வெளியே எடுத்து விடுக்கிறே. கட்டுக்குடுமி வச்சுக்கிடா கட்டுக்குடுமி வச்சுக்கிறே, கிராப்பு வச்சிக்கிட்டா கிராப்பு வச்சிக்கிறே. வாத்யம் பண்றதிலே என்னை ஒரு படி மிஞ்சி ஒன்றரை இஞ்ச் கூட வைச்சு ஆர்டர் பண்றே. நான் இப்ப மொட்டை அடிச்சுக்கப்போறேன். நீயும் அடிச்சுக்க!” என்றார். தம்பிக்கு புத்தி வந்து சரணாகதி அடைந்த பிறகுதான் சலூனை விட்டு வெளியே வந்தார்.

டி.என்.ஆர். 1956ஆம் ஆண்டில் மாரடைப்பால் காலமானார். இவர் சம்பாதித்த தொகையின் மதிப்பு அக்காலத்திலேயே கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பார்கள். ஒரு கச்சேரிக்கு 1950ம் ஆண்டிலேயே பத்தாயிரம் ரூபாய் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவ்வளவு பணம் குவிந்தும் சிக்கனமாகச் செலவு செய்யாது மிகவும் ஆடம்பரமாக செலவு செய்துவிட்டார். கடைசிக் காலத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. இவரின் இறப்புச் சடங்குகளை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான் ஏற்றுக்கொண்டார்.