மனோகரா



மனோகராதான் வசனங்களின் உச்சக் கட்டம் என்று நினைக்கிறேன். தீ பறக்கும் வசனங்கள், அதை உணர்ச்சி பொங்க பேசும் சிவாஜி இது இரண்டே போதும். ஆனால் அதற்கும் மேலாக சிவாஜிக்கே சவால் விட்ட கண்ணாம்பா, பிய்த்து உதறிய டி.ஆர். ராஜகுமாரி, மெலோட்ராமாவை அருமையாக வெளிப்படுத்தும் காட்சிகள் – பொறுத்தது போதும், பொங்கி எழு என்ற கண்ணாம்பாவின் கட்டளை ஒன்றே போதும் – , அருமையாக நடித்த சதாசிவ ராவ் (மன்னர்), பழி வாங்கும் முஸ்தஃபா (வசந்த சேனையின் முதல் கணவன்), ஓவர் த டாப் வில்லன் எஸ்.ஏ. நடராஜன் என்று நல்ல பாத்திரங்கள், அருவம் கிருவம் என்று தந்திரக் காட்சிகள் என்று பல அருமையான விஷயங்களை கலந்து ஒரு சூப்பர் டூப்பர் படத்தை உருவாக்கிவிட்டார்கள்.

மனோகராவை நான் முதலில் பார்த்தது டெண்டு கொட்டாயில்தான். பத்து வயதிருக்கலாம். அது வரை நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன். எம்ஜிஆர் சண்டை போடுவார், சிவாஜி அழுவார் என்ற ஒரு சிம்பிள் பிம்பம் இருந்த காலம் அது. முதல் காட்சியில் அருவம் என்ற போதே ஆ என்று பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு பிறகு வசந்த சேனையின் முதல் கணவன் போடும் நாடகம், வ. சேனை கண்ணாம்பாவுக்கு பழி ஏற்படுத்த செய்யும் சதி எல்லாமே த்ரில்லிங் ஆக இருந்தது. ஆனால் மனோகரன் அரச சபைக்கு வரும் காட்சிதான் என்னை சிவாஜி ரசிகனாக மாற்றியது. அடுத்த நாலைந்து வருஷம் சிவாஜி தும்மினாலும் என்ன நடிப்பு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். உண்மையில் ஓரிரு நிமிஷங்களுக்கு அப்புறம் சிவாஜி என்ன சொல்கிறார் என்று கூட தெரியவில்லை. அந்த காட்சியில் அவர் பேசும் வசனங்கள் கலைஞரின் மாஸ்டர்பீஸ், சிவாஜி என்ன அற்புதமாக வசனம் பேசுகிறார் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அவர் ஒன்றுமே பேசி இருக்காவிட்டாலும் அவரது வேகம், உணர்ச்சிகளை காட்டும் விதம் இவை மட்டுமே போதும் அந்த காட்சிக்கு. வசனங்கள் சூப்பர்தான், ஆனால் சிவாஜியின் பெருமை அவர் நடிப்பினால்தான், அந்த வசனங்களால் அல்ல.

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகம். ஹாம்லெட் நாடகத்திலிருந்து நாடகத்துக்குள் நாடகம் என்ற ஒரு ஐடியாவை எடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. மிச்சம் எல்லாம் அவரது சுய கற்பனையாகத்தான் இருந்திருக்க வேண்டும். இது ஏன் நல்ல நாடகம் என்று குறிப்பிட்டு பேசப்படவில்லை என்று தெரியவில்லை. சாரங்கதாரா, பாணபுரத்து வீரன், ஜெனோவா, ஞான சவுந்தரி, தூக்குத் தூக்கி போன்ற நாடகங்களை விட நல்ல கதை இருக்கிறது. ஒரு வேளை முதலியார் எழுதிய நாடகம் கொஞ்சம் போர், அதனால் அப்படியே திரைப்படம் ஆக்கப்படவில்லையோ என்னவோ? முதல் கணவன் ஆவியாக சித்தரிக்கப்பட்டதாகவும், பகுத்தறிவு தாக்கத்தால் கலைஞர் அதை அருவம் ஆக ஆகியதாகவும் எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது.

முதலியார் இந்த நாடகத்தை 1936-இல் படமாக இயக்கி இருக்கிறாராம். அது படு தோல்வியாம்.

கலைஞரின் மாஸ்டர்பீஸ் இதுதான். இதை விட சிறப்பான வசனங்களை அவர் எழுதியதில்லை, இனி மேல் யாரும் எழுதப் போவதுமில்லை. மொழியை ஒரு bludgeon ஆக பயன்படுத்தி இருக்கிறார்.

1954-இல் வந்த படம். ஜூபிடர் தயாரிப்பு என்று நினைக்கிறேன். எல்.வி. பிரசாத் இயக்கம். சிவாஜியை தவிர, கண்ணாம்பா, டி.ஆர். ராஜகுமாரி, எஸ்எஸ்ஆர் (மனோகரனின் நண்பன் ராஜப்ரியன்), சதாசிவ ராவ்(மனோகரனின் அப்பா), முஸ்தஃபா (வசந்த சேனையின் முதல் கணவன்), காகா ராதாகிருஷ்ணன் (வசந்த சேனையின் மகன்), கிரிஜா (மனோகரனின் மனைவி), ஜாவர் சீதாராமன் (அமைச்சர்), எஸ்.ஏ. நடராஜன் (சேர மன்னன்) ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இசை எஸ்.வி. வெங்கட்ராமன். ஜி. ராமநாதன் என்று நினைவு.

வசந்த சேனை தன் கணவனுக்கு விஷம் வைத்துவிட்டு மன்னரை மயக்கி தன் பிடிக்குள் வைத்திருக்கிறாள். இதனால் மனம் நொந்த மனோகரனும் அவர் அம்மாவும் விலகி வாழ்கிறார்கள். முதல் கணவன் இறக்கவில்லை, ஏதோ ஆராய்ச்சி செய்து தான் யார் கண்ணிலும் தெரியாமல் இருக்க ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறான். மனோகரன் நடுவில் பாண்டிய நாட்டை வென்று, பாண்டிய இளவரசியை மணக்கிறார். அவர் ஒரு கட்டத்தில் வ. சேனையை அவமதிக்க, வ. சேனை மன்னரை மனோகரனின் தாய் தவறான உறவு வைத்திருப்பதாக நம்ப வைக்கிறாள். அப்போதுதான் அந்த ராஜ சபை சீன். மனோகரனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மனோகரனின் தாயும் மனைவியும் சிறையில். ஆனாலும் வ. சேனையின் மகனான வசந்தனுக்கு இளவரசு பட்டம் கட்ட மன்னர் மறுக்கிறார். சேர மன்னனுடன் வ. சேனை சதி செய்து மன்னரை சிறையில் அடைக்கிறாள். மனோகரன் தப்பி மாறு வேஷத்தில் அரண்மனைக்கு வருகிறான், மாட்டிக் கொள்கிறான். அவனை கட்டிப் போட்டுவிட்டு, அவன் சின்னக் குழந்தையை கொலை செய்வதற்கு முன் வழக்கம் போல கெக்கே பிக்கே என்று வில்லன் எஸ்.ஏ. நடராஜன் சிரிக்க, கண்ணாம்பா பொறுத்தது போதும் பொங்கி எழு என்று ஆணை இடுகிறாள். மனோகரன் கட்டி இருக்கும் சங்கிலிகளை உடைத்து விட்டு சண்டை போடுகிறார். அவருக்கு அருவமான முதல் கணவனும் உதவுகிறான். வெற்றி! பிறகு அருவமான கணவன் வ. சேனையை தன் குகைக்கு அழைத்துப் போய் துடிக்க துடிக்க கொல்கிறான். பிறகு எல்லாரும் ஒன்று சேர்ந்து, சுபம்!

ஒரு சாகசக் கதை என்ற அளவில் இந்த கதை வெற்றி. இதில் எவ்வளவு தூரம் முதலியாரின் ஒரிஜினல் கற்பனை, எவ்வளவு தூரம் கலைஞர் சேர்த்த மசாலா என்று தெரியவில்லை.

வசனங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். வீடியோ கிடைத்தால் நன்றாக இருக்கும், தேடிப் பார்த்தேன், தென்படவில்லை. கிடைத்த ஒரு excerpt இங்கே.

புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே! குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே! என் தாய் அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை. தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடி விடும். புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்! ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும்! ஏன், அவமானமாக இருக்கிறதா? என் அன்னையை தூஷித்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்? ஏ ராஜ விக்ரகமே! பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும்! அசையாமல் நில்லும்! இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில்! அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்.

கலைஞரின் வசனங்களை பலர் திறமையாக பேசக் கூடியவர்கள்தான். எஸ்.எஸ்.ஆர், கே.ஆர். ராமசாமி, ஏன் எம்ஜிஆர் கூட அப்போது பேசி இருக்கலாம். ஆனால் சிவாஜி மாதிரி யாரும் பேசி இருக்க முடியாது.

சிவாஜிக்கே சவால் விட்ட நடிகை கண்ணாம்பா. சிவாஜியே கண்ணாம்பா என்னை பொறுத்தது போதும் என்ற ஒரே வசனத்தை வைத்துக் கொண்டு என்னை தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்று சொல்வாராம். மனோகரா நாடகத்தில் சிவாஜி கண்ணாம்பா ரோலில் நடித்திருக்கிறாராம்.

கண்ணாம்பா இதற்கு பிறகு typecast ஆனது ஒரு துரதிருஷ்டம். மக்களை பெற்ற மகராசி, உத்தம புத்திரன் ஆகிய படங்களில் இதே ஸ்டைலில் நடிப்பார். கண்ணாம்பாவுக்கே இந்த நிலை என்றால் சிவாஜியை பற்றி சொல்லவே வேண்டாம். ஐம்பதுகளின் பிற்பாதியில் அவர் பல படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசி நடித்தால் போதும், அங்கங்கே பொங்கி எழுந்தால் போதும் என்று ஒரு தவறான கணக்கு போட ஆரம்பித்தார். படங்கள் அந்த பொங்கி எழும் சீன்களை சுற்றி அமைக்கப் பட்டன. (குறவஞ்சி, வணங்காமுடி ஆகியவை நினைவுக்கு வருகின்றன)

டி.ஆர். ராஜகுமாரி கலக்கி விட்டார். அலட்டிக் கொள்ளாமல் அற்புதமாக நடித்திருப்பார். அவர் இன்னும் நிறைய நடித்திருக்கலாம்.

எஸ்.எஸ்.ஆரின் நடிப்பு பலரால் சிலாகிக்கப்பட்டது. நன்றாக நடித்திருந்தார், ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. மன்னராக நடித்த சதாசிவ ராவ், வ. சேனையின் கணவனாக வந்த முஸ்தஃபா, ஆகியோரின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது.

இசை ஒன்றும் சுகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வசந்த விழா, வசந்த திருவிழா என்ற ஒரே பாட்டுதான் கொஞ்சம் மங்கலாக ஞாபகம் இருக்கிறது. வடிவேல் முருகன் “சிங்காரப் பைங்கிளியே பேசு” என்ற பாட்டையும், “சந்தேகம் இல்லே” என்ற பாட்டையும் நினைவூட்டுகிறார்.

கட்டாயம் பாருங்கள். பத்துக்கு எட்டு மார்க். A- grade.

1954-இல் தமிழ் சினிமா


இந்த வருஷம் 34 படங்கள் வந்திருக்கின்றனவாம். நான் பார்த்தவை அந்த நாள், இல்லற ஜோதி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, கூண்டுக் கிளி, தூக்குத் தூக்கி, பெண், மலைக் கள்ளன், மனோகரா, ரத்தக் கண்ணீர் ஆகிய 9 படங்கள்தான்.

அந்த நாள் 1954-இன் சிறந்த படம் மட்டும் இல்லை, அது தமிழ் சினிமாவின், இல்லை இந்திய சினிமாவின் மிக சிறந்த படங்களில் ஒன்று. ராஷோமொன் வந்திராவிட்டால் அதை உலக அளவிலேயே குறிப்பிட்டு சொல்லலாம். அதைப் பற்றி பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம். அதைப் பற்றி ஏற்கனவே எழுதி விட்டதால் இந்த வருஷத்துக்கு வேறு படத்தை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

இல்லற ஜோதி சுமாரான படம். எங்களுக்கு cult favorite ஆனா அசோகன் இந்த படத்தில்தான் அறிமுகம் ஆகி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நடு நடுவே நாடகங்கள், பத்மினி நடனம் இதை வைத்து ஓட்டுவார்கள்.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி அந்த காலத்து காமெடி. கொஞ்சம் சிரிக்கலாம்.

கூண்டுக் கிளி ஒரு முக்கியமான முயற்சி. எம்ஜிஆரும் சிவாஜியும் சேர்ந்து நடித்த படம் என்பதற்காக அல்ல. அது கீழ் மத்திய தர வாழ்க்கையை ஓரளவு உண்மையாக சித்தரிக்க முயற்சி செய்தது. எதார்த்தமான படங்கள் தமிழில் மிக குறைவு. இது ஒரு pioneering attempt. வெற்றி பெற்றிருந்தால் எதார்த்தமான படங்கள் மேலும் வந்திருக்கக் கூடும்.

தூக்கு தூக்கி புகழ் பெற்ற நாடகம். ஜி. ராமநாதன் அற்புதமாக இசை அமைத்திருந்தார். டி.எம்.எஸ். தமிழ் சினிமாவில் இந்த படத்துக்கு பிறகுதான் காலூன்றினார். சிவாஜி அருமையாக நடனம் ஆடி இருப்பார். கதையோ, நடிப்போ பிரமாதம் என்று சொல்ல முடியாது. இந்த நாடகம்/சினிமா ஏன் வெற்றி அடைந்தது என்று புரிந்து கொள்ள அந்த காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

பெண் ஒரு charming படம். அதன் விமர்சனம் இங்கே.

மலைக் கள்ளன் எம்ஜிஆரை உச்சத்துக்கு கொண்டு போன படங்களில் முக்கியமான ஒன்று. அதற்கு முன் சர்வாதிகாரி, மந்திரி குமாரி, மர்ம யோகி போன்ற படங்கள் வெற்றி அடைந்திருந்தாலும், அவர் ஒரு மாஸ் ஹீரோ ஆனது இந்த படத்துக்கு பிறகுதான். கதையில் அவர் செய்யும் சாகசங்கள் அந்த காலத்து ரசிகர்களை கவர்ந்தன. மலைகளுக்கு நடுவில் உள்ள கயிற்று பாதை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் படத்தை இப்போது ரசிக்க முடிவதில்லை. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாட்டை கேட்டு விட்டு போக வேண்டியதுதான். (நாமக்கல் கவிஞர் எழுதிய இந்த நாவலும் பெருவெற்றி பெற்றது. ஹிந்தியிலும் ஆசாத் என்று திலிப் குமார், மீனா குமாரி நடித்து வந்த இந்த படம் சக்கைப்போடு போட்டது)

மனோகரா வசனங்களின் உச்சம். கலைஞரின் உச்சமாக இதையும் பராசக்தியையும்தான் நான் கருதுகிறேன். சிவாஜிக்கு இது ஒரு உச்சம். பம்மல் சம்பந்த முதலியாரின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டனவாம். யாராவது அவர் எழுதியதை புத்தகமாக போடுங்கள் அப்பா!

எம்.ஆர். ராதா நினைவு கூரப்ப்படும்போதெல்லாம் ரத்தக் கண்ணீர் நினவு கூரப்படும். அவருடைய signature film. அவருடைய ஸ்டைலில் வசனம் பேசி கலக்குவார் – ராகுவும் சுக்ரனும் நாளைக்கு ஒன்றாக வருகிறார்கள், நாளைக்கு நல்ல முகூர்த்தம் என்று சொல்லும் ஜோசியரிடம், அவங்களை அடுத்த வாரம் வர சொல்லேன், எனக்கு நாளைக்கு வேலை இருக்கு என்ற மாதிரி பிச்சு உதறுவார். அவருக்கு வரவேற்பு கூட்டம் நடக்கும்போது அவர் பேசுவது கலக்கல். ஆனால் கலை ரீதியாக படம் எனக்கு ரசிக்கவில்லை. இந்த படத்தின் பலம் எம்.ஆர். ராதா பேசும் வசனங்கள்தான். அந்த காலத்தில் தொழு நோயாளியை நாடக மேடையிலும், சினிமாவிலும் காட்டுவது பலருக்கும் ஒரு ஷாக்காக இருந்திருக்க வேண்டும். அதனால் இந்த நாடகம்/சினிமா பெரிதும் பேசப்பட்டிருக்க வேண்டும்.

இவற்றை தவிர எதிர்பாராதது (சிவாஜி, பத்மினி, நாகையா, ஸ்ரீதர்), சார்லி சாப்ளின் நடித்த City Lights படத்தை உல்டா செய்து டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த ராஜி என் கண்மணி (மல்லிகைபூ ஜாதி ரோஜா என்ற பாட்டுக்காகவே) பார்க்க ஆசை. ஸ்ரீதர் எழுதி, டி.கே.எஸ். சகோதரர்கள் நடித்த ரத்த பாசம் (ஹிந்தியில் அசோக் குமார், கிஷோர் குமார் நடித்து பாய் பாய் என்று வந்தது) பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் பாருங்கள் என்று சிபாரிசு செய்வது அந்த நாள், கூண்டுக் கிளி, தூக்கு தூக்கி (பாட்டுகளுக்காக), பெண், மனோகரா ஆகியவைதான். இவற்றில் மனோகரா பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

இந்த வருஷம் பற்றி முரளிகண்ணன் எழுதிய சிறப்பான கட்டுரையை இங்கே காணலாம்.

திரும்பிப் பார்


thirumbip_paar

1953-இல் வந்த படம். கலைஞரின் கதை வசனம். சிவாஜி, பண்டரிபாய், தங்கவேலு, டி.எஸ். துரைராஜ், டி.பி. முத்துலக்ஷ்மி நடித்தது. மற்றவர்கள் ஞாபகம் இல்லை. ஜி. ராமநாதன் இசை. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. டி.ஆர். சுந்தரம் இயக்கம்.

பாட்டுகளும் எதுவும் பெரிதாக ஞாபகம் இல்லை. ஜி. ராமநாதனின் பலமான கர்நாடக இசையை வைத்து எந்த பாட்டும் இல்லையோ? கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம் என்று தொடங்கும் ஒரு பாட்டு மட்டும்தான் கொஞ்சம் மங்கலாக நினைவிருக்கிறது. எஸ்.சி. கிருஷ்ணன் பாடியது.

சுவாரசியமான கதை. சிவாஜி ஒரு தொழிற்சங்கத் தலைவர். தொழிலாளிகள் அவரின் பேச்சில் மயங்கி அவரை ஆதரிக்கிறார்கள். அவரோ உண்மையில் கோழை. பெண் பித்தர் வேறு. சிறைக்கு போக நேரிடும் என்று பயந்து தலைமறைவாகிறார், மாட்டிக் கொண்ட பிறகு கோர்ட்டில் மன்னிப்பு கேட்டு தப்பித்து கொள்கிறார். நடுவில் தொழிலாளர் தங்கவேலுவின் மனைவி முத்துலக்ஷ்மியுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார், எதிர்பாராத விதமாக வீடு திரும்பும் தங்கவேலு அவரை துரத்தி விடுகிறார். அவர் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும்போது அக்கா பண்டரிபாய் உனக்கு ஒரு உடல்தானே வேண்டும், என்னை எடுத்துக் கொள், அவளை விட்டுவிடு என்று சொல்ல, துடிதுடித்து திருந்துகிறார். அவர் மீது இன்னும் சந்தேகப்படும் அக்கா அவரை வேறு ஒரு பெண்ணின் அருகே பார்க்கும்போது அவரை சுட்டு கொன்றுவிடுகிறார். பிறகு அக்காவுக்கு தூக்கு.

தங்கவேலு நன்றாக நடித்திருப்பார். சிவாஜியை ஒரேயடியாக நம்பும்போதும் சரி, பிறகு உண்மை தெரியும்போதும் சரி, அவர் நடிப்பு இயற்கையாக இருக்கும்.

சிவாஜியும் நன்றாக நடித்திருப்பார். அவர் கோர்ட்டில் மன்னிப்பு கேட்கும் காட்சி இயற்கையாக இருக்கும். அவர் உணர்ச்சிப் பிழம்பாக தொழிலாளர் நலம் பற்றி பேசும் காட்சிகளும் நன்றாகத்தான் இருக்கும். அவர் மற்றவர்களை நம்ப வைக்க உணர்ச்சிகரமாக நடிக்கிறார்போல இருக்கும்.

கலைஞரின் கதை வசனம் நன்றாக இருக்கும். இந்த வசனங்கள் பராசக்தி, மனோகரா அளவுக்கு புகழ் பெற வில்லை என்றாலும், நன்றாகத்தான் எழுதி இருப்பார். அவர் யாரையாவது மனதில் வைத்துக் கொண்டு சிவாஜி பாத்திரத்தை உருவாக்கினாரா தெரியவில்லை. அன்றைய காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை தாக்குகிறாரோ? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

ராண்டார் கை அவர் நேருவை கிண்டல் செய்கிறார் என்று சொல்கிறார். நேரு திராவிட இயக்கத்தை நான்சென்ஸ் என்று சொன்னாராம். சிவாஜி நேரு போல உடை அணிந்து நான்சென்ஸ் என்று சொல்வாராம். இங்கே இருக்கும் ஃபோட்டோவை பார்த்தால் நேரு டிரஸ் மாதிரிதான் இருக்கிறது. மேலும் அவர் சொல்கிறார் – “Thirumbi Paar fared well at the box office and acquired the status of a mini cult film because it had political innuendoes.” எனக்கு அந்த innuendoes எல்லாம் முழுதாக புரியாவிட்டாலும் அது ஒரு cult film ஆக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆனால் கொஞ்சம் dry ஆன கதை. அதனால்தான் (ராண்டார் கை படம் நன்றாக ஓடியது என்று சொன்னாலும்) படம் ஓடவில்லை என்று நினைக்கிறேன்.

படம் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். திராவிட இயக்கத்தின் முக்கியமான படங்களில் ஒன்று. பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

திரும்பி பார் சிவாஜி பற்றி எம்ஜிஆர்


1962ல், நடிகர் திலகம் கலைத் தூதராக அழைக்கப்பட்டு அமெரிக்க அரசால் கௌரவப்படுத்தப்பட்டார். இதற்காக, சிவாஜி அமெரிக்கா சென்று திரும்பிய போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலே எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது அவ் விழாவில்தான். அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். அவ்விழாவில் எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது

நல்ல குணங்களுள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறலாம். பாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரும் இடம் பெறுவது இயற்கை. ஆனால் மக்களால் வெறுக்கப்படும் பாத்திரங்களைத் தாங்கி, மக்கள் மனதில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். ‘திரும்பிப் பார்’ என்ற படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார் சிவாஜி. பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்குமளவுக்கு, ‘ஆங்கில பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ் பெற்றார் அவர். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், ‘ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்த பாத்திரங்களைப் போலவே அவர் நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படம் எடுத்த போது) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புத மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும் தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்!

1953-இல் தமிழ் சினிமா


1953-இல் 36 படங்கள் வந்திருக்கின்றன என்று தமிழ் சினிமா சைட் சொல்கிறது. நான் பார்த்தது வழக்கம் போல மிகக் குறைவுதான். அவ்வையார், திரும்பிப் பார் இரண்டுதான் நினைவில் இருக்கின்றன. சின்ன வயதில் டெண்டு கோட்டையில் பானுமதி நடித்து இயக்கிய சண்டி ராணி (வான் மீதிலே இன்பத் தேன் மாரி தூவுதே என்ற இனிமையான பாடல் கொண்ட பாட்டு), ஜெனோவா என்ற எம்ஜிஆர் படம் பார்த்திருக்கிறேன். அப்போதே அது இரண்டும் கடி படம் என்று தோன்றியது. ஜெனோவா எம்ஜிஆர் நாயகனாக நடித்திருந்தாலும் எம்ஜிஆர் படம் அல்ல. இவற்றைத் தவிர தேவதாஸ் படமும் மங்கலாக நினைவு இருக்கிறது.

பார்க்க விரும்பும் படங்கள் இருக்கின்றன. தலையாயது மனம் போல் மாங்கல்யம். ஜெமினி, சாவித்ரி நடித்தது. சாவித்ரியின் முதல் படமோ? மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் என்ற அருமையான பாட்டு இதில் வருவதுதான். அந்த ஒரு பாட்டுக்காகவே இந்த படம் பார்க்க ஆசை.

சாண்டில்யன் கதை வசனம் எழுதி நாகையா நடித்த என் வீடு என்ற படத்தையும் பார்க்க ஆசை. சாண்டில்யன் இந்த படத்தை பற்றி நிறைய பீற்றி கொண்டிருக்கிறார். அனேகமாக பிரிண்டே இருக்காது என்று நினைக்கிறேன். சாண்டில்யனும் நாகையாவும் நெருங்கிய நண்பர்கள் போலிருக்கிறது. நாகையாவை பற்றி அவர் தனது memoirs-களில் – போராட்டங்கள் என்ற புத்தகம் – புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

ஏ.பி. நாகராஜன் நடித்த நால்வர் என்ற படத்தை பார்க்கவும ஆசை. இதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

மனிதன் டி.கே. ஷண்முகம் தனது நாடகம் ஒன்றை படமாக்கியதாம். அகலிகை கதைதான் inspiration ஆக இருந்திருக்கும் போலிருக்கிறது. கணவனை விட்டு நெடு நாட்களாக பிரிந்திருக்கும் மனைவி, வேறு ஒருவனுடன் கூடுகிறாள். கணவன் விஷயம் தெரிந்தும் அவளை ஏற்றுக் கொள்கிறான். பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

எம்ஜிஆருக்கு இந்த வருஷம் இரண்டு படம். அவரும், பி.எஸ். வீரப்பாவும், கலைஞரும் பார்ட்னர்களாக சேர்ந்து தயாரித்த நாம் ஒன்று, ஜெனோவா இன்னொன்று. ஜெனோவா ஓடியதாம். நாம் ஓடவில்லையாம்.

சிவாஜிக்கும் 1952-இல் புயல் போல நுழைந்தும், அடுத்த வருஷமே சொல்லிக் கொள்கிற மாதிரி படம் எதுவும் இல்லை. அன்பு, பூங்கோதை என்று இரண்டு. மனிதனும் மிருகமும் கூட சிவாஜி படமோ?

திரும்பிப் பார், அவ்வையார், தேவதாஸ் மூன்றும் குறிப்பிட வேண்டிய படங்கள்தாம்.

தேவதாஸ் எப்படி ஓடியது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. அது மெலொட்ராமாவின் தோல்வி என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் அந்த நாவல் மிக வெற்றி பெற்றது. படம் எந்த மொழியில் எடுத்தாலும் பிய்த்துக் கொண்டு ஓடியது. அதை புரிந்து கொள்ள நான் அந்த கால கட்டத்தில் பிறந்திருக்க வேண்டும் போல. ஆனால் “ஓ, ஓ, ஓ, தேவதாஸ்” பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

அவ்வையார் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் அதில் கதை என்று ஒன்றுமே இல்லை. பல கர்ண பரம்பரைக் கதைகளை ஒன்றாக இணைத்து படம் எடுத்துவிட்டார்கள். ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடுவார். பின்னால் ஏதோ ஒரு கர்ண பரம்பரை கதையில் குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் பாடுவார். கே.பி. சுந்தராம்பாள் அந்த ரோலுக்கு மிக பொருத்தமாக இருந்தார். அவரது மணியான குரலும் அருமையாக பொருந்தியது.

மிச்சம் இருக்கும் திரும்பிப் பார்தான் எனக்கு இந்த வருடம் வந்த சிறந்த படம். அதுவும் மிக அற்புதம் என்றெல்லாம் இல்லை, இந்த வருஷம் வந்த படங்களில் சிறந்தது, அவ்வளவுதான்.

பராசக்தி


km_parashakthi
கலைஞர் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டிருந்த நேரம். சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார். அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி. சூப்பர்ஸ்டார் கலைஞரை விட இந்த படத்தில் தெரிபவர் சிவாஜிதான். இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி!

இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.

செட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

நினைவில் நிற்கும் சில வசனங்கள்.
கல்யாணி: இட்லிக் கடையா?
பக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்!

குணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்
போலீஸ்காரன்: ஏய்
குணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்
போலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.

பார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா? முழிக்கிறே?
குணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்?

பாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!

1952-இல் வந்த படம். ஏ.வி.எம். தயாரிப்பு. பெருமாள் ஒரு பாகஸ்தர். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., பண்டரிபாய் ஆகியோருக்கு முதல் படம். எஸ்.வி. ஸஹஸ்ரனாமம் ஒரு முக்கிய ரோலில். இதில் அவருக்கு தங்கையாக வருபவர் பேர் மறந்துவிட்டது.ஸ்ரீரஞ்சனி (நன்றி கிருஷ்ணமூர்த்தி!) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான் படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் நிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி!) வி.கே. ராமசாமி உண்டோ? இசை சுதர்சனம். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு. அவர்கள் ஏ.வி.எம்முக்குள் நுழைந்தது இந்த படம் மூலமாகத்தான் போலிருக்கிறது. செட்டியார் சொல்வதை இங்கே பாருங்கள்.

கதை தெரிந்ததுதான். ரங்கூனில் மூன்று அண்ணன்கள். கல்யாணி தமிழ் நாட்டில். கல்யாணியின் கல்யாணத்தை பார்க்க ஒரு அண்ணன்தான் வர முடியும் நிலை. சென்னையில் வந்து இறங்கும் சிவாஜி பணத்தை ஒரு நாட்டியக்காரியிடம் இழக்கிறார். கல்யாணியோ கணவனை இழந்து இட்லிக் கடை வைத்து பிழைக்கிறாள். கல்யாணியை கண்டுபிடிக்கும்போது அவள் உன் மாமன் உன்னை சீராட்ட பெரும் பணத்தோடு வருவான் என்று பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். பணம் எல்லாம் போய் ஏழை ஆகிவிட்டேன் என்று சொல்ல விரும்பாத சிவாஜி தான்தான் அண்ணன் என்று சொல்லாமல் கிறுக்காக நடித்து அதே நேரத்தில் கல்யாணிக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார். கல்யாணியை ஒரு பூசாரி படுக்கைக்கு கூப்பிட, கல்யாணி வெறுத்து போய் தன் குழந்தையை காப்பாற்ற முடியாததால் அதை அற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயல, போலீசில் பிடிபடுகிறார். பூசாரியை தாக்கும் சிவாஜியும் போலீசில் பிடிபடுகிறார். பிறகு புகழ் பெற்ற நீதி மன்ற வசனங்கள். நடுவில் அவருக்கு பண்டரிபாயிடம் இட்லி திருட்டு, மற்றும் காதல். பண்டரிபாய்க்கு தன்னிடமிருந்து இட்லி திருடிக் கொண்டு போன அழுக்கான வாலிபன்தான் காதலிக்க கிடைத்தானா என்றெல்லாம் கேட்கக் கூடாது. ரங்கூனிலிருந்து தப்பி வரும் சின்ன அண்ணன் எஸ்.எஸ்.ஆர். காலை இழந்து பிச்சைக்காரனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்து அவர்கள் நல்வாழ்வுக்கு போராடுகிறார். பெரிய அண்ணன் சஹஸ்ரனாமம்தான் கேசை விசாரிக்கும் ஜட்ஜ். பிறகு ஆற்றில் வீசப்பட்ட குழந்தை காப்பாற்றப்பட்டு, எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்!

சிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை. இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார். அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது. என், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.

பண்டரிபாய் சின்ன பெண்ணாய், சொப்பு மாதிரி இருப்பார்.

இன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா எனபது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.

மிகவும் charming, quaint பாட்டுக்கள். சுதர்சனம் கலக்கிவிட்டார்.


அந்த “போறவரே” என்ற வார்த்தையில் இருக்கும் கொஞ்சல் அபாரம். எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் பாப்பா மாதிரி இருக்கும் பண்டரிபாய்க்கு நன்றாக பொருந்துகிறது.

ஓ ரசிக்கும் சீமானே வா ஒரு பிரமாதமான பாட்டு. பாடியது, எழுதியது யார்? எழுதியது கலைஞர்தானாம். விவரம் சொன்ன தாசுக்கு நன்றி!

சி.எஸ். ஜெயராமன் பாடும் “தேசம் ஞானம் கல்வி” எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்று. உடுமலை நாராயண கவி அருமையாக எழுதி இருப்பார்.
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே
காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே
கட்டி அழும்போதும் தாண்டவக் கோனே – பணப்
பெட்டியிலே கண் வையடா தாண்டவக் கோனே
நல்ல வரிகள்!

அப்புறம் “கா கா கா” – அதற்கு காக்காய் கத்துவதை போலவே பின்னணியில் வயலின் சூப்பர். கலைஞர் எழுதிய பாட்டோ? சி.எஸ். ஜெயராமன் பாடியது.

“நெஞ்சு பொறுக்குதில்லையே” பாரதியார் பாட்டு. சி.எஸ். ஜெயராமன். சுமார்தான்.

இதை தவிர “என் வாழ்விலே ஒளி ஏற்றும்”, “பூ மாலையை புழுதியிலே”, “பொருளே இல்லார்க்கு”, “திராவிட நாடு வாழ்கவே”, “கொஞ்சும் மொழி சொல்லும்”, “பேசியது நானில்லை” என்ற பாட்டுகளும் இருக்கின்றனவாம். நினைவில்லை.

பாட்டுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே கேட்கலாம்.

பிற்காலத்தில் விவேக் அந்த நீதி மன்ற வசனங்களை மாற்றி பேசும் காட்சியும் புகழ் பெற்றது. கீழே அது.

திராவிட இயக்கத்தின் தலை சிறந்த பங்களிப்பு, கலைஞரின் வசனங்கள், சிவாஜி, quaint பாட்டுக்கள் ஆகியவற்றுக்காக இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.

பராசக்தி – நீதிமன்ற வசனம்


பராசக்தியை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அதனால்தான் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் எனக்கு தாமதம் ஆகி கொண்டே போகிறது. அது எனக்கு உண்மையிலேயே பிடித்த படங்களில் ஒன்று. சிவாஜியும் கலைஞரும் தமிழ் சினிமாவை அதற்கு முன் காணாத உயரங்களுக்கு கொண்டு போனார்கள். அது ஒரு மைல் கல். திராவிட இயக்க படங்களின் உச்ச கட்டம் அதுதான்.

இன்று பார்ப்பவர்களுக்கு அந்த தாக்கம் ஏற்படாதுதான் – அது ஓரளவு சினிமாத்தனமாக கூட தோன்றலாம். ஆனால் வாழ்க்கை எப்போதும் அசோகமித்திரன் கதை போல் subtle ஆகவே செல்வது இல்லை.

முதலில் அந்த நீதிமன்ற வசனத்துடன் ஆரம்பிக்கிறேன். இதற்கு ஒரு வீடியோ கிடைக்க மாட்டேன் என்கிறதே! கிடைத்துவிட்டது! (Opens in a separate browser.)

sivaji_parasakthi

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.

கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.

கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான். தன் குழந்தையை இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவள் விரும்பவில்லை. அவளே கொன்றுவிட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?

என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?

அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்

ஏ.வி.எம். செட்டியார் சொன்னது போல கலைஞர் அண்ணாவையே மிஞ்சி விட்டார். இதையும் மிஞ்சிய வசனங்கள் உள்ள படம் மனோகராதான்.

ஸ்லம்டாக் மில்லியனர் – ஸ்ரேயாவின் விமர்சனம்


நேற்று தயங்கி தயங்கி ஹேமா என் பத்து வயது பெண் ஸ்ரேயாவை ஸ்லம்டாக் மில்லியனர் பார்க்க அழைத்து சென்றாள். அவளுக்கு peer pressure – அவள் சக மாணவிகள் எல்லாம் பார்த்துவிட்டார்களாம்.

ஸ்ரேயாவின் ஒரு வரி விமர்சனம்:

For this long a movie, there should be more than two songs!

I don’t understand how the kids talk in Hindi before they fall of the train and in English after the fall from the train!

அன்னையின் ஆணை


பராசக்தி பற்றி எழுத இன்னும் முடியவில்லை. அதற்குள் விகடனின் அன்னையின் ஆணை விமர்சனம். 20-7-1958-இல் வந்தது. கிருஷ்ணமூர்த்தி, கவனியுங்கள். புத்தம் புது படம்!

விகடனுக்கு நன்றி!

சந்தர்: ஹலோ சேகர், எங்கே இப்படி?
சேகர்: மார்லன் பிராண்டோ படம் ஒண்ணு ஓடுகிறதே, அதைப் பார்க்கப் போயிருந்தேன்!
சந்தர்: என்ன மிஸ்டர் அளக்கறே? எனக்குத் தெரிந்து அப்படி ஒரு படம் எங்கேயுமே ஓடலியே?
சேகர்: தமிழ்நாட்டு மார்லன் பிராண்டோ சிவாஜிகணேசன் நடித்த படம்!
சந்தர்: ஓ… சிவாஜியா? ஏன் அந்த மார்லன் பிராண்டோ தான் ஆங்கில நாட்டின் சிவாஜிகணேசனாக இருக்கட்டுமே! நீயா அவருக்குப் பட்டங்களெல்லாம் கொடுக்காதே!
சேகர்: நான் கொடுக்கலே. படத்திலேயே கொடுத்திருக்காங்க! ‘சாம்ராட் அசோகன்’ நாடகம் ஆன பிறகு, கணேசனை இப்படிப் புகழ்ந்து பாராட்டுகிறார் கருணாகரர்.
சந்தர்: சரி, ஸ்டோரி என்ன?
சேகர்: கொஞ்சம் புதுமை! பிளாஷ்பாக் கதையும் நேர்முறைக் கதையையும் மாற்றி மாற்றிக் காட்டுகிறார்கள்.
சந்தர்: ‘அவுட்லைன்’ சொல்லேன்?
சேகர்: பலரை வஞ்சித்து வாழுகிறார், பணக்கார பரோபகாரம். மானேஜர் சங்கர் இல்லாத சமயம் அவர் மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயல்கிறார். விஷயம் அறிந்த சங்கர், சண்டைக்குப் போகிறான். ஆனால், தந்திரமாக அவன் மீதே கொலைக் குற்றம் சாட்டி விடுகிறார் பரோபகாரம். சங்கர் சிறைப்படுகிறான்.பிரசவ வேதனையில் இருக்கும் தன் மனைவியை நினைத்துக்கொண்டு, ஒரு நாள் சிறையிலிருந்து தப்பித்துவிடுகிறான். ஆனால், போலீசாரால் சுடப்பட்டு இறந்துவிடுகிறான். அந்த இடத்தில் கணேசனின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது!
சந்தர்: என்னது… வந்த உடனேயே இறந்துவிடுகிற வேஷமா அவருக்கு?
சேகர்: முழுக்கக் கேளேன்… இறந்தது தந்தை கணேஷ்! பிறகுதான் மைந்தன் கணேஷ் வருகிறார்.
சந்தர்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? டபிள் ரோலா?
சேகர்: டபிள் மட்டும் இல்லை இன்னும் அநேக ரோல்கள்! கல்லூரி மாணவனாக கலாட்டா செய்யும் போதும், சாம்ராட் அசோகனாக நடிக்கும்போதும், பரோபகாரத்தைப் பழி வாங்கும்போதும் அவருடைய நடிப்பில் எவ்வளவு முகபாவங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், உள்ளப் போராட்டங்கள்! அநேக இடங்களில் இங்கிலீஷிலேயே வெளுத்துவாங்குகிறார். லவர்ஸ் அறிமுகமே பிரமாதம்! ‘பூப்பறிக்கக் கூடாது என்ற போர்டு கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்கிற தோரணையே ஜோர்! அப்புறம் ‘வெரி மிஸ்ச்சிவஸ் கேர்ள்’னு அலட்சியமாக…
சந்தர்: வில்லன் யார்?
சேகர்: பரோபகாரம் ரங்காராவ்தான் வில்லன். நம்பியார் அவருக்கு மேலே பெரிய வில்லன். எம்.என். ராஜத்தை மயக்கி, கடைசியில் வேறு வழியில்லாமல் மணந்துகொண்டு, பரோபகாரத்திற்கும் அவர் மகள் சாவித்திரிக்கும் தீங்கு செய்கிறார். இந்தப் படத்தில் எல்லோர் நடிப்புமே அற்புதம். ஆனால், அன்னையின் ஆணையை நிறைவேற்ற பரோபகாரத்தைப் பழிவாங்கும் படலம்தான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இருந்தாலும் நாராயண மூர்த்தியின் டைரக்ஷனும், மாறனின் வசனங்களும் பிரமாதம். எல்லாவற்றையும்விட சிவாஜி நடிப்புதான்…
சந்தர்: சிகரமா..?
சேகர்: சாதாரண சிகரமல்ல; எவரெஸ்ட்!

கலைஞரும் சினிமாவும்


பராசக்தி விமர்சனம் எழுத இன்னும் கை வரவில்லை. கலைஞரின் சினிமா பங்களிப்பை பற்றி கூட்டாஞ்சோறில் பதிந்தது இங்கே.