சிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்


இன்னுமொரு விகடன் விமர்சனம், நன்றி விகடன்!

டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.

வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

ஷீலா: இந்தப் படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்புக்கு அடுத்தபடியா என்னைக் கவர்கிறது ‘எடிட்டிங்’. அதுவும் அந்த ரேப்பிங் ஸீனில் எடிட்டிங் ரொம்ப நல்லா இருந்தது. அதேபோல, லதாவின் நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.

வதூது: டைரக்டரோட திறமைக்கு எடுத்துக்காட்டா அந்த ரேப் ஸீன்லே ரிக்கார்டு வால் யூமை அதிகப்படுத்துவதுபோல் காட்டுவது நன்றாக இருக்கிறது. ரேப் முடிஞ்சதும் ரிக்கார்டில் ஊசி தேய்ந்துகொண்டிருப்பது நல்ல டெக்னிக்!

ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!

(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.

நேற்று இன்று நாளை


திரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.

ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.

மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.

ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!

நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.

கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?

“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!

“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.

ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.

கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்… ‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.

நண்பர் சிமுலேஷன் தந்திருக்கும் பாட்டு சுட்டி.

எம்ஜிஆர் படங்களில் அவருக்கு என்ன பேர்?


எம்ஜியார் என்ற பேருக்கு இன்னும் மவுசு இருக்கத்தான் செய்கிறது. இங்கே பாருங்கள் ஒருவர் எம்ஜிஆர் திரைப்படங்களில் ஏற்ற பாத்திரங்களின் பேரை தொகுத்து வெளியிட்டிருக்கிறார்! Ultimate trivia!

தொகுக்கப்பட்ட பக்கம்: எம்ஜிஆர் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
எம்ஜிஆர் நடித்த பாத்திரப் பேர்கள்

சந்திரபாபு – 25


நன்றி : ஆனந்த விகடன், விமல்

சந்திரபாபு – தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?

1. கடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலைமுத்து. பனிமயதாசன் என்று பெயர். கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார்!

2. பெற்றோர் ரோட்ரிக்ஸ் – ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையும் நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட, கூடவே சென்ற சந்திரபாபுவும் கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்!

3. கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாழு. ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்!

4. காமராஜருக்கு அறிமுகமான குடும்பம் பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில் அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே!

5. சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!

6· மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது- பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்சுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா!

7. முதல் படம், தன அமராவதி (1947), கடைசிப் படம் பிள்ளைச் செல்வம் (1974), 50-களில் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்!

8· புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது!

9. ரப்பரைப் போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!

10. எம்.ஜி.ஆரை `மிஸ்டர் எம்.ஜி.ஆர்.’ என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அது பற்றி இவர் கவலைப்படவும் இல்லை!

11· `புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்கை. ஆனால், புகழ் பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு’ என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்!

12· ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!

13· ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போதும் அழுகின்றான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்துல’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா’ ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!
(இந்த ஒரு பாட்டுக்குத்தான் வீடியோ கிடைத்தது!)

14. எஸ்.எஸ். வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். `நான் தீக்குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது’ என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார !

15· சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். சகோதரி படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!

16· எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் `எனக்காக அழு’, ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!

17· ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!

18· நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். `சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல’, அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல’ என்று சொன்னார்!

19· மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். “மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன்; ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத் தந்த என்னுடைய மாமனார்; ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத் தந்தவர் ஜெமினி கணேசன்’’ என்றவர்!

20· ‘பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும்போது, ‘ஓ ஜீசஸ்!’ என்று சொல்லியபடிதான் நுழைவார்!

21· ஜனாதிபதி மாளிகையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் பிறக்கும் போதும் அழுகின்றான் பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட, உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு, `கண்ணா நீ ரசிகன்டா’ என்று அவரது தாடையைத் தடவ, ஜனாதிபதியும் மகிழ, உற்சாகமான பொழுது அது!

22· தட்டுங்கள் திறக்கப்படும் அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்‌ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!

23· நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஒவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும் கூட. `ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்’ என்று சிரிப்பார்!

24· ‘நீ ஒரு கலைஞன், கற்பனை வளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்’ என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!

25· ‘என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப் போல நடித்துக் காட்டட்டும், பார்க்கலாம்!’ என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை!

பிற்சேர்க்கை: சாரதாவின் மறுமொழியிலிருந்து –

சந்திரபாபு இறப்பதற்கு சில காலம் முன்பு, பிலிமாலயா என்ற சினிமா மாதப் பத்திரிகையில் மாடி வீட்டு ஏழையின் கண்ணீர்க் கதை என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒளிவு மறைவின்றி எழுதியிருந்தார். அதனால் அந்த பத்திரிகை அலுவலகம் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, தொடர் நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுக்காதவர் என்ற அவப்பெயர் இவருக்கு உண்டு. அதுபற்றி பல பேர் பல சமயங்களில் கூறியிருக்கிறார்கள். அவருக்கிருந்த மார்க்கெட் வால்யூவுக்காக படங்களில் போட வேண்டியிருந்தபோதிலும், முடிந்தவரையில் ‘கழட்டி விடவே’ பார்த்தனர். அந்த நேரம் ஆபத்பாந்தவனாக நாகேஷ், புயலாக திரையுலகில் நுழைய, இவர் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டார்.

அது போலவே பாடல் பதிவின்போதும் இவரை வைத்து பாடல் ஒலிப்பதிவு செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்பார்கள். சமீபத்தில் கூட ஜெயா டி.வி.யின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் டி.கே.ராமமூர்த்தி சொன்னார். சிரத்தை எடுத்துப் பாடமாட்டார், திருப்பி திருப்பி டேக் வாங்குவார். அப்போதெல்லாம் ட்ராக் சிஸ்டம் கிடையாது என்பதால் பாடகர் ஒருவர் தப்பு செய்தாலும் அனைத்து இசைக்கருவி வாசிப்பவர்களும் திருப்பி திருப்பி வாசிக்க வேண்டும். அதனால் இவர் பாட்டு என்றால் இன்ஸ்ட்ருமெண்ட் பிளேயர்கள் ஜகா வாங்கி ஓடுவார்களாம்.

புகழின் உச்சியில் இருக்கும்போது இது போன்ற வேண்டாத பழக்கங்களால் மார்க்கெட்டை இழந்து தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர். (தற்போதைய நடிகர் கார்த்திக் போல. வளமாக ஒளி வீச வேண்டிய அருமையான வயதுகளை கார்த்திக் எப்படி தொலைத்து நின்றார் என்பது நமக்குத் தெரியும்தானே).

நடிகர் ஜெமினி கணேசன் சாவி வார இதழில் எழுதி வந்த ஆசையாக ஒரு அசை வாழ்க்கைத் தொடரில், ‘நடிகை சாவித்திரியின் வேண்டாத பழக்கங்களுக்கும், விபரீத முடிவுக்கும் சந்திரபாபுதான் காரணம்’ என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இவைற்றையெல்லாம் மீறியும் சந்திரபாபு சுடர் விட்டாரென்றால் அது அவருடைய அபார திறமையால் என்பதில் சந்தேகமில்லை.

எந்த உயரத்திலிருந்தும் தானே குதிப்பார் என்பதை மெய்ப்பிக்கும் ஒரு இடம் – ஆண்டவன் கட்டளையில் சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடலில் ஒரு பஸ்ஸின் டாப்பிலிருந்து படுக்கை வசத்தில் பொத்தென்று விழுவார். கீழே நிற்பவர்கள் அவர் குதிக்கத் துவங்கிய பின்னர்தான் கைகளைக் கோர்ப்பார்கள். அவர்கள் கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும் விபரீதமாகியிருக்கும். ரொம்பவே தைரியம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சந்திரபாபுவும் புதுமைப்பித்தனும்
1964-இல் சந்திரபாபுவின் பேட்டி
சந்திரபாபுவின் மாஸ்டர்பீஸ் – சபாஷ் மீனா
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் முகில்
சந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு புக் ஆன கதை

இதயக்கனி – விகடன் விமர்சனம்


திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த (1975 செப்டம்பர்) விமர்சனம். நன்றி, விகடன்!

தேனிலவுக்குப் போய் வந்த அவசரத்தில் காபி எஸ்டேட் முதலாளி மோகனுக்கு போலீஸ் இலாகாவின் அழைப்பு வருகிறது. தன் கணவன் எஸ்டேட் முதலாளி மட்டுமல்ல, உளவு போலீஸ் அதிகாரி என்பதும் அப்போதுதான் தெரிகிறது இளம் மனைவிக்கு. துப்பு துலக்குவதற்காகத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கொலை வழக்கில், கொலையின் தொடர்பில் தேடப்படும் பெண் தன் மனைவியே என்பது தெரிந்ததும் மோகனுக்கு அதிர்ச்சி! மனைவியின் கடந்த கால நடவடிக்கைகளைக் கண்டறியும் முயற்சியில் மோகன் முனைய, ஒரு சதிகாரக் கும்பலே அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

எம்.ஜி.ஆரிடம் இளமை துள்ளுகிறது. காதல் சுவை சொட்டச் சொட்ட ராதா சலூஜாவுடன் ஆடிப் பாடுவதும், குறும்பு செய்வதும் கொள்ளைக் கவர்ச்சி! போலீஸ் அதிகாரியாகக் கடமையில் ஈடுபடும் போது எஸ்டேட் முதலாளிக்கு நேர் எதிரான ஒரு பாத்திரமாக எம்.ஜி.ஆர். மாறி விடுகிறார். சதிக் கும்பலுக்குள் புகுந்து அவர்களின் ரகசிய இடங்களுக்குச் சென்று வளைத்துப் பிடிக்கும் காட்சிகள் ‘திரில்’ மூட்டுகின்றன.

கதாநாயகி ராதா சலூஜாவின் தமிழில் மழலை கொஞ்சுகிறது. ஆனாலும், சாதுரியமாகச் சமாளித்திருக்கிறார். இந்தி நடிகை என்று எண்ண முடியாதபடி, காதல் நெருக்கத்திலும் உருக்கத்திலும் உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கிறார்.

கொலையில் சம்பந்தப்பட்ட மாலாவும் கதாநாயகி லட்சுமியும் இரட்டையர்கள் என்று கதையை அமைக்காமல் இருவரும் ஒருவரே என்பதை நம்ப வைத்திருப்பது நல்ல டெக்னிக். இறந்து போனதாகச் சொல்லப்படும் மாலா, உயிருடன்தான் இருக்கிறாள் என்று ராதா சலூஜாவை சதிக் கும்பலின் முன் கொண்டு வந்து வீரப்பா நிறுத்துகிறாரே, அங்கிருந்து தொடரும் சஸ்பென்ஸ், கடைசியில் அருமையாக அவிழ்க்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கு டயலாக் பேசி தேங்காய் சீனிவாசன் குலுங்க வைத்திருக்கிறார்.

மெர்க்காராவின் பசுமையும், பிச்சாவரம் உப்பங்கழியின் பயங்கரமும் படமாக்கப்பட்டுள்ள நேர்த்தி நெஞ்சை நிறைக்கிறது. ஒளிப்பதிவோடு இசையும், கலரும் போட்டியிட்டிருக்கின்றன.

இதயக்கனி இனிக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: விகடன் விமர்சனங்கள், திரைப்படங்கள்

ஆரூர்தாஸ் நினைவுகள் – 3


(ஜெயா தொலைக்காட்சியின் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் அவர் சொன்னது – நன்றி, சாரதா!)

ஒரே நேரத்தில் எம்ஜிஆர் படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதிய ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருக்க வேண்டும். 1962-ம் ஆண்டு ஒரே நாளில் நான் வசனம் எழுதிய எம்ஜிஆரின் தாயைக் காத்த தனயன் படமும் சிவாஜியின் படித்தால் மட்டும் போதுமா படமும் ரிலீஸானது. ஒன்று தேவர் படமும் இன்னொன்று ரெங்கநாதன் பிக்சர்ஸ் படமுமாக இருந்த போதிலும், முறையே ஒன்றை எம்ஜியார் பிக்சர்ஸும், இன்னொன்றை சிவாஜி ஃபிலிம்ஸும் சென்னை நகரில் வெளியிட்டிருந்தார்கள். இரண்டுமே சூப்பர் வெற்றியடைந்து 100 நாட்களைத்தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக் காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தது.

அன்று காலை எம்ஜிஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச் சென்றிருந்தபோது எம்ஜிஆர் என்னை அழைத்து, ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை. இப்போ தாயைக் காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ணே, உங்க அன்பு இருந்தா போதும்’ என்றேன். ‘அப்படியா அப்போ நானே ஏதாவது பண்றேன்’ என்று சொல்லிவிட்டார்.

அன்று பிற்பகல் சிவாஜி பட ஷூட்டிங் போனபோது அவர் என்னை தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போ நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு. அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித் தர்ரேன்” என்று கேட்டதும் நான் ஆடிப்போனேன். அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு ஆச்சரியப்பட்டேன். எம்ஜிஆருக்கு சொன்ன அதே பதிலையே இவருக்கும் சொன்னேன். ‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார். நான் ஒண்ணும் சொல்லவில்லை.

இரண்டு நாள் கழித்து எம்ஜிஆர் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி வரச் சொன்னாங்க. போனபோது எம்ஜிஆர் இருந்தார். ஒரு பெரிய வெள்ளித் தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத் தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர் தாஸ் அவர்களுக்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

மறு நாள் பிற்பகல் சிவாஜி பிலிம்ஸிலிருந்து அழைப்பு வந்தது. போனால் அங்கே சிவாஜி அவர்கள், மூன்றரை சவரன் எடையுள்ள, உள்ளங்கையைவிட அகலமான தங்கப்பதக்கம் ஒன்றை எனக்கு அணிவித்தார். அதில் ‘சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100வது நாள் வெற்றிவிழா’ என்று சிவாஜி பிலிம்ஸ் எம்ப்ளத்துடன் பொறிக்கப்பட்டிருந்தது.

அவ்விரண்டு பரிசுகளையும் என் வீட்டு வரவேற்பறை ஷோகேஸில் பக்கம் பக்கமாக வைத்திருக்கிறேன் (அதை தொலைக்காட்சியிலும் காண்பித்தனர்). அவற்றைப் பார்க்கும்போது அந்தப் பரிசுகளை விட அவ்விரண்டு மேதைகளின் முகம்தான் என் கண்ணில் காட்சியளிக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எம்ஜிஆர் பக்கம், சிவாஜி பக்கம், ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆரூர்தாஸ் நினைவுகள் – 1
ஆரூர்தாஸ் நினைவுகள் – 2
ஆரூர் தாஸ் நினைவுகள் 3

ஆரூர் தாஸ் நினைவுகள் 1


சினிமா வசனகர்த்தா ஆரூர் தாஸ் எழுதிய புத்தகத்தில் இருந்து (நன்றி : தினமலர், விமல்)

ஒரு நாள் ஒப்பனை அறையில் நாங்கள் தனித்திருந்த வேளையில் எம்ஜிஆர், என்னிடம் (ஆரூர் தாஸ்) சொன்னார்:

“பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான். அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கேன். இப்போ புகழின் உச்சியிலே இருக்கேன். வசதிக்குப் பஞ்சம் இல்லே. தினமும் என் வீட்டுல மூணு வேளையும் குறைஞ்சது 50–60 இலைங்க விழுது. ஆனாலும், ரெண்டே ரெண்டு குறைகளை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது. ஒண்ணு: குழந்தைங்க வாரிசு இல்லாத குறை ! இன்னொண்ணு…’

நான் இடைமறித்து, “ஏன், பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க வாரிசு இல்லே. அதனால் என்ன குறைஞ்சி போயிட்டாரு !’ என்றேன்.

“அப்படி இல்லே. காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்தால குழந்தைங்க இல்லாம போயிடுச்சி; ஆனா, எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே!

எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா?’ அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.

பெரிய, பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சி என் ஜாதகத்தைக் காட்டிக் கலந்து ஆலோசனை பண்ணுவேன், ஜோதிடர் கலையில் நிபுணர்களான ரெண்டு, மூணு பேரு மட்டும் ஒத்து ஒரே கருத்தைச் சொன்னாங்க.

இது பலதார ஜாதகம்! ஒங்க வாழ்க்கையிலே பல பெண்கள் குறுக்கிடுவாங்க. அவுங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க; ஆனா, அவுங்க யாரும் ஒங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க; குடுக்கவும் முடியாது. குறை அவுங்ககிட்டே இல்லே’ன்னு சொன்னாங்க.

சமீபத்தில் ஆயுள் இன்சூரன்சுக்காக முக்கியமான ஒரு பெரிய மருத்துவர்கிட்டே உடல் பரிசோதனை பண்ணிக்கிட்டேன். அவர் உங்க மாதிரி என் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். இனிமே எனக்கு குழந்தை உண்டாகிறதுக்கு வாய்ப்பே இல்லேன்னு உறுதியா சொல்லிட்டாரு.

அதைக் கேட்டு நான் அப்படியே உடைஞ்சி நொறுங்கிப் போயிட்டேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கவே இல்லே. அழுது, அழுது தலையணையே நனைஞ்சிடுச்சி.

என் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு, எனக்கு ஒரு குழந்தை – ஒரே ஒரு குழந்தையைக் கூட குடுக்க மனசு வரலே பாத்தீங்களா?

எத்தனையோ சகோதரிகள், தாய்மார்கள் அவங்க பெத்தக் குழந்தைகளை என் கையில் கொடுத்து என்னைப் பேர் வைக்கச் சொல்லும்போது, உள்ளுக்குள்ளே என் நெஞ்சு பதறும். ஆனாலும், அதை வெளியில் காட்டிக்காம, அந்தக் குழந்தைகளுக்கு அப்பப்போ எனக்குத் தோணுற பேரை வச்சி, அவுங்க ஆசையை நிறைவேத்துறேன். போகட்டும்… நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்!

என்னோட ரெண்டாவது குறை என்னன்னா ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்திலே கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர பெரிசா ஒண்ணும் படிக்கத் தெரிஞ்சுக்கலே. இளமையிலே பட்ட வறுமை காரணமா அந்த வாய்ப்பு, வசதி இல்லாமப் போயிடுச்சி.

அண்ணாதுரை, கிருபானந்த வாரியார் இவுங்களோட சொற்பொழிவைக் கேட்கும்போது, என்னால அவுங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைச்சி வருத்தப்படுவேன். ஆனாலும், எப்படியோ பேசிச் சமாளிச்சி, மத்தவங்களை சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும் குறை, குறைதானே! அதுவும் பூர்த்தி செய்ய முடியாத குறை. அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா அதுலயாவது நான் பெரிய புள்ளைக் குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!

நடிப்பிற்கு அப்பாற்பட்டு அவரது கண்கள் நீர் நிலைகளானதை நேரில் நான் கண்டது அதுவே முதல் முறை!

நண்பர் கண்பத் எம்ஜிஆர் யாரிடமும் மனம் திறந்து பேசமாட்டார், இது சும்மா ஆரூர் தாஸ் அடிக்கும் உடான்ஸ் என்று கருதுகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எம்ஜிஆர் பக்கம், ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆரூர்தாஸ் நினைவுகள் – 2
ஆரூர் தாஸ் நினைவுகள் 3

சிவாஜி தி.மு.கழகத்தில் இருந்து பிரிந்து காங்கிரஸில் சேர்ந்த வரலாறு


1955-ம் ஆண்டு காவேரி, முதல் தேதி, உலகம் பலவிதம், மங்கையர் திலகம், கோடீஸ்வரன், கள்வனின் காதலி ஆகிய 6 படங்களில் சிவாஜி நடித்தார்.

இவற்றில் மங்கையர் திலகம் மிகச் சிறந்த படமாக அமைந்தது. சிவாஜிக்கு சித்தியாக பத்மினி நடித்தார். இருவரும் நடிப்பில் முத்திரை பதித்தனர். குறிப்பாக பத்மினி, தான் சிறந்த குணச்சித்திர நடிகை என்பதை நிரூபித்தார்.

கள்வனின் காதலி கல்கி எழுதிய பிரபல நாவல். இதில் சிவாஜியின் ஜோடியாக பானுமதி நடித்தார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் வெற்றி படம். மாறுபட்ட வேடங்களில் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று சிவாஜி நிரூபித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் இது.

இந்த சமயத்தில், சிவாஜி கணேசன் திருப்பதி சென்றார். அது, தி.மு.கழகத்தில் புயலை உண்டாக்கியது. திருப்பதிக்குச் சென்றது ஏன் என்பதை பின்னர் சிவாஜி விளக்கினார். அவர் கூறியதாவது:

நான் திராவிடக் கழகத்திலோ, தி.மு.கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்தது இல்லை. பெரியாருடைய கொள்கைகளையும், அண்ணாவின் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டேன். ஆகையால் அதைப் பிரசாரம் செய்தேன். அந்தக் கொள்கைகளை நான் ஒத்துக்கொண்டேனே தவிர, கட்சி உறுப்பினராக இருந்தது இல்லை.

எனது குடும்பம் தேச பக்தியுள்ள குடும்பம். நாங்கள் எல்லாம் தேசியவாதிகள். அதோடு நாங்கள் இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர். மேலும், குடும்பத்தில் எல்லோரும் பக்தி மிக்கவர்கள். இவை அனைத்தையும் நான் உதறித் தள்ளிவிடவில்லை. சில பகுத்தறிவுக் கொள்கைகள் எனக்கு சரி என்று பட்டது. அந்தக் கருத்துக்களை படங்கள் மூலம் சொன்னேன். அவ்வளவுதான்.

1956-ல் ஒரு புயல் வந்து, பல இடங்களில் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. “புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூலித்துக் கொடுங்கள்” என்று அறிஞர் அண்ணா கூறினார்கள். அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். விருதுநகரில், தெருவில் சென்று துண்டை விரித்து, பராசக்தி வசனம் பேசி, பணம் வசூல் செய்தேன். நிறைய பணம் சேர்ந்தது. அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, படப்பிடிப்புக்காக நான் சேலம் சென்றுவிட்டேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அப்போது, அதிக அளவில் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு அண்ணா ஒரு பாராட்டு விழா வைத்தார். சேலத்தில் இருந்த நான், சென்னையில் இருந்த என் தாயாருக்கு டெலிபோன் செய்து, “இன்று விழா நடக்கிறதே! யாராவது எனக்கு அழைப்பு கொடுத்தார்களா?” என்று கேட்டேன். “இல்லை” என்று என் தாயார் கூறினார்கள்.

உடனே நான் சேலத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன். விழாவிற்காக என்னை கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். யாரும் என்னைக் கூப்பிடவரவில்லை. மாலை 6 மணி அளவில் தொடங்கிய பாராட்டுக் கூட்டத்தில் முதன் முதலாக எம்ஜிஆரைக் கூட்டிச்சென்று, மேடையில் ஏற்றி கவுரவித்தார்கள். அதிகமாக நிதி வசூலித்தவன் நான்தான். ஆனால், எம்ஜிஆர் அவர்களை அக்கூட்டத்தில் மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.

“எங்கே கணேசன், வரவில்லையா?” என்று அண்ணா அவர்கள் கேட்டிருக்கிறார்கள். “இல்லை; கணேசன், `வரமுடியவில்லை’ என்று சொல்லிவிட்டார் என்று அண்ணாவிடம் சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி, என்னை பாதித்தது. பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன்.

அண்ணன் எம்ஜிஆருக்கும், கட்சிக்கும் அப்போது சம்பந்தமே கிடையாது. சின்னப் பிள்ளையில் இருந்து அந்த இயக்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்தவன் நான். என்னை ஒதுக்கி வைப்பதற்காகத்தான் இவ்வாறு செய்தார்கள். இதுதான் உண்மை. நான் பல நாட்கள் வருத்தமாக இருந்தேன். ஒரு நாள் என் நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார். “சிவாஜி! ஏன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறீர்கள். திருப்பதிக்கு போய் வரலாம், வாருங்கள்” என்று அழைத்தார்.

நான் கோவிலுக்கு அதிகம் போனதில்லை. ஆனால் பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். திருப்பதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு “விஸ்வரூப தரிசனம்” என்று ஒரு தரிசனம் உண்டு. அதைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்றெல்லாம் எழுதினார்கள்.

எனக்கு ஒரு புகலிடம் தேவைப்பட்டது. ஒரு வழிகாட்டியைத் தேடினேன். அப்போது எனக்கு ஒருவர் கிடைத்தார். அவர்தான் பெருந்தலைவர் காமராஜர். அவருடன் சேர்ந்தேன். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டேன்.

இந்த நிகழ்ச்சியால், எனது திரைப்பட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்று சிலர் கேலி செய்த நேரத்தில், திருப்பதி ஏழுமலையான் கண் விழித்துப் பார்த்து அருள் புரிந்துவிட்டார்.

இதன் பிறகுதான், நான் ஸ்டூடியோவிலேயே 24 மணி நேரமும் தங்கி, மூன்று ஷிப்டாக வேலை செய்தேன். பெற்றோரை, மனைவியை பார்க்கமுடியவில்லை. குழந்தைகளைப் பார்க்கவில்லை. ஸ்டூடியோவுக்கு உள்ளேயே இருந்தேன். நான் நடித்த படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. மக்கள் பாராட்டைப் பெற்று, விருதுகள் வாங்கித் தந்தன.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்

வி.சி.கணேசன் “சிவாஜி கணேசன்” ஆக மாறிய கதை


திராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.

மாநாட்டில் நடிப்பதற்காக “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார்.

இந்த நாடகத்தின் கதைச்சுருக்கம் வருமாறு:- சிவாஜி பெரிய மாவீரன். சாதாரணக் குடிமகனாக இருந்து பெரிய மன்னனானவன். அந்நியர் ஆட்சியை எதிர்த்தவன். மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியபோதிலும், அவன் மன்னனாக முடி சூட்டிக் கொள்ள பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், அவன் கீழ் சாதி! இதனால், காசியில் இருந்து காகப்பட்டர் என்ற பெரிய மதத் தலைவரை அழைத்து வந்து, சிவாஜியை சத்திரியனாக மாற்றுகிறார்கள். அதன் பிறகு தான் அவர் சிம்மாசனம் ஏற, இந்துக்கள் சம்மதிக்கிறார்கள்.

இப்படி செல்லும் இந்த நாடகத்தில், சிவாஜியாக எம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது.

இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். காங்கிரஸ் அனுதாபியாகவும், பக்தராகவும் இருந்தார். என்ன காரணத்தினாலோ, எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நடிக்கவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி அண்ணாவை சந்தித்து, எம்.ஜி.ஆர். தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.

திராவிட நாடு” அலுவலகத்தில் தங்கியிருந்த வி.சி. கணேசன் (இன்னும் சிவாஜி கணேசன் ஆகவில்லை), இதற்குள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். சிவாஜியின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.

எனவே, சிவாஜியை அழைத்து, “கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?” என்று கேட்டார்.

இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி! தன் காதுகளையே நம்பமுடியவில்லை. “என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?” என்றார்.

“நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்” என்றார், அண்ணா.

மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, “நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். “கணேசா! வசனத்தைப் படித்தாயா?” என்று கேட்டார்.

சிவாஜி அவரிடம், “அண்ணா! நீங்கள் இப்படி உட்காருங்கள்!” என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார்.

அண்ணா சிவாஜியை கட்டித் தழுவி “கணேசா! நீ இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை” என்றார். அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.

திராவிட கழக மாநாட்டில், “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர். 3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார்.

“நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா” என்று பாராட்டினார். அத்துடன், “யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?” என்று கேட்டார்.

சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, “இந்தப் பையன்தான். பெயர் கணேசன்” என்று அறிமுகம் செய்து வைத்தனர். “சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!” என்று பெரியார் வாழ்த்தினார்.

பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை “வி.சி.கணேசன்” என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் “சிவாஜி கணேசன்” ஆனார்.

“என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்! ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப் பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜி கணேசன் ஆனேன். `சிவாஜி’ என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்ட பிச்சை” என்று சிவாஜி கணேசன் தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்

ஆயிரத்தில் ஒருவன் – சாரதா விமர்சனம்


சாரதா சிவாஜியின் முரட்டு பக்தை என்பது இந்த தளத்தின் வாசகர்களுக்கு தெரிந்த விஷயம். அவர் எம்ஜிஆருக்கு “எதிரி” இல்லை என்பதும் இந்த விமர்சனத்தைப் படித்தால் புரியும். ஓவர் டு சாரதா!

தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.

ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.

கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.

எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.

கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.

பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.

பாடல்களும் இசையும்:

இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.

  • 1. பருவம் எனது பாடல்
  • நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.

    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
    கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்

    பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர‌, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து

    இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்

    என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.

    (நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).

  • 2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
  • வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.

    ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
    நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
    வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
    நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே

    இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத‌ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.

  • 3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

  • இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க‌ள். பாதிப் பாட‌ல் அர‌ண்ம‌னை செட்டிலும் பாதிப்பாட‌ல் கார்வார் க‌ட‌ற்க‌ரையிலும் க‌ண்டினியூட்டி கெடாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

  • 4. உன்னை நான் ச‌ந்தித்தேன் நீ ஆயிர‌த்தில் ஒருவ‌ன்
  • பி.சுசீலா தனியாக‌ப் பாடிய‌ பாட‌ல். கூட‌வே ஆண்க‌ளின் கோர‌ஸ். ம‌ணிமாற‌னைப் பிரிந்த‌ பூங்கொடி, செங்க‌ப்ப‌ரின் அர‌ண்ம‌னையில் சோக‌மே உருவாக‌ பாடும் பாட‌ல், கூட‌வே க‌ப்ப‌லில் போய்க்கொண்டிருக்கும் ம‌ணிமாற‌னைக் காண்பிக்கும்போது, அவ‌ர‌து கூட்டாளிக‌ளின் உற்சாக‌மான‌ கோர‌ஸ்.

    பொன்னைத்தான் உட‌ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம‌ன‌மென்பேன்
    க‌ண்க‌ளால் உன்னை அள‌ந்தேன் தொட்ட‌ கைக‌ளால் நான் ம‌ல‌ர்ந்தேன்
    உள்ள‌த்தால் வ‌ள்ள‌ல்தான் ஏழைக‌ளின் த‌லைவ‌ன்

    அடுத்து வ‌ரும் இசை ‘பிட்’டைக் கேட்க‌ முடியாது, கார‌ண‌ம் ப‌ல‌த்த‌ கைத‌ட்ட‌லும், விசில் ச‌த்த‌மும். பாட‌ல் முடியும்போது, கோர‌ஸுட‌ன் க‌ப்ப‌ல்க‌ள் முல்லைத்தீவு க‌ரையில் ஒதுங்குவ‌தாக‌ காட்டுவ‌து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).

  • 4. ஆடாமல் ஆடுகிறேன்
  • கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.

    ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
    ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
    நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
    வா…வா…வா…. வா….வா…வா…

    முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.

    விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
    ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
    அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
    அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்

    ‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.

    (மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).

  • 5. நாணமோ… இன்னும் நாணமோ
  • நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).

    தோட்டத்துப் பூவினில் இல்லாதது
    ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
    ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
    ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?

    ஆடவர் கண்கள் காணாதது
    அது காலங்கள் மாறினும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது – அது இது

    பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.

  • 6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
  • அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.

    கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
    கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
    அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
    அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

    இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

    இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”

    நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.

    எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

    தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பதிவுகள், திரைப்படங்கள்

    தொடர்புடைய பதிவுகள்: ஆயிரத்தில் ஒருவன் – ஆர்வி விமர்சனம், ஜெயலலிதா நினைவுகள்