தர்மம் எங்கே?


சிவாஜியின் சொந்தப் படம் போலிருக்கிறது. சிவாஜி, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ், நம்பியார், குமாரி பத்மினி, ராமதாஸ், செந்தாமரை நடித்தது. இசை எம்எஸ்வி. வசனம் சக்தி கிருஷ்ணசாமி. இயக்கம் திருலோகச்சந்தர். 1972-இல் வந்திருக்கிறது.

ஒரு கற்பனை நாட்டில் படம் நடக்கிறது. நம்பியார் கொடுமைக்கார ராஜப் பிரதிநிதி. (ராஜாவை கடைசி வரைக்கும் காணவில்லை.) சிவாஜி கொஞ்சம் அப்பாவி கிராமத்தான். ஊர்க்காரர்கள் ராணுவத்தின் கொடுமையைப் பற்றி நம்பியாரிடம் முறையிடப் போகும்போது சிவாஜியையும் கூட்டிக் கொண்டு போகிறார்கள். நம்பியார் என்ன சாட்சி என்று கேட்க, எல்லாரும் பயப்படுகிறார்கள். சிவாஜி முன் வந்து நான் சாட்சி சொல்கிறேன், என் கண்ணால் பார்த்தேன் என்கிறார். நம்பியார் எல்லாரையும் சரி போங்கள் என்று விரட்டிவிட்டு சிவாஜியை அப்புறம் கைது செய்கிறார். சிவாஜி தப்பிக்கிறார். ஜெயலலிதா காப்பாற்றுகிறார். ஜெ இருக்கும் நாடோடி கும்பல் அவருக்கு ஆதரவு தருகிறது. மைத்துனர் முத்துராமன் அவரோடு சேர்ந்துகொள்கிறார். கலகம், புரட்சி, சிவாஜி நம்பியாரை விரட்டிவிட்டு புது ராஜபிரதிநிதி ஆகிறார். தனக்குப் பதவி தரவில்லை என்ற கோபத்தில் முத்துராமன் சிவாஜிக்கு எதிராக கிளம்புகிறார். கடைசியில் அவர் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி, க்ளைமாக்சுக்காக செஞ்சி போய் சண்டை போட்டு, சுபம்!

மூன்று விஷயங்கள் நன்றாக இருந்தன.

சிவாஜி ராணுவத்தின் கொடுமையைப் பற்றி சாட்சி சொல்ல வரும்போது நம்பியார் என்ன ரியாக்ஷன் காட்டுகிறாரோ அதே ரியாக்ஷன் சிவாஜி முத்துராமனின் கழகத்தைப் பற்றி ஒருவன் சாட்சி சொல்லும்போதும். பதவி மனிதனை மாற்றுகிறது என்று அருமையாக டெவலப் செய்திருக்கலாம். ஆனால் எழுபதுகளில் சிவாஜி நெகடிவ் ரோல்களைத் தவிர்த்தார். ரொம்ப நல்லவராகத்தான் வருவார். அதனால் ஒரு சீனோடு இது முடிந்துவிடுகிறது. இருந்தாலும் திரைக்கதை எழுதியவருக்கு ஒரு சபாஷ்!

முத்துராமன் தூக்குமேடையில் இருக்கும்போது மனோகரா ஸ்டைலில் சிவாஜி வசனம் பேசுகிறார். நல்ல வசனங்கள். சக்தி கிருஷ்ணசாமிக்கு ஒரு சபாஷ்!

சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் என்ற பாடல் அருமை. அருமையான சந்தம். எழுதிய கண்ணதாசன், இசை அமைத்த எம்எஸ்வி, பாடிய டிஎம்எஸ், சிவாஜியின் முதுகில் ஒரு பெரிய பூக்கூடையை வைத்து வித்தியாசமாக படமேடுத்திருந்த ஒளிப்பதிவாளர்+இயக்குனர்+உடை இன் சார்ஜ் எல்லாருக்கும் ஒரு சபாஷ்! சாரதா, நீங்கள் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஓபனிங் சாங் என்று இந்த காலத்தில் வருவதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள். இவ்வளவு நல்ல பாட்டுக்கு ஆடியோ வீடியோ எதுவும் கிடைக்கவில்லை.

இதைத் தவிர பள்ளியறையில் வந்த புள்ளி மயிலே என்ற கொஞ்சம் பிரபலமான பாட்டு ரிச்சாக படமாக்கப்பட்டிருக்கிறது.

மற்றபடி படத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நாகேஷ் காமெடி, சண்டைக் காட்சிகள் எதுவும் தேறவில்லை. நம்பியார் வழக்கம் போல கையைப் பிசைகிறார். அம்மாவாக வருபவர் உருகி உருகி வசனம் பேசுகிறார். சிவாஜி அங்கங்கே ஓவர் ஆக்டிங் செய்கிறார். எல்லாரும் ஹிப்பி ஸ்டைலில் வருகிறார்கள்.

சிவாஜி ரசிகர்கள் நிச்சயமாக பார்க்கலாம். மற்றவர்களுக்கு கொஞ்சம் சினிமா பைத்தியம் இருக்க வேண்டும்.

நீதிபதி


நீதிபதி என்ற படம் கொஞ்ச நாள் முன் விஜய் டிவியில் வந்தது. இது சிவாஜி நடித்த படம் இல்லை. 1955-ஆம் ஆண்டு வந்த படம். கே.ஆர். ராமசாமி, ஜெமினி கணேசன், எஸ்.வி. சஹஸ்ரநாமம், டி.எஸ். பாலையா, எம்.என். ராஜம், ராஜசுலோச்சனா என்று கொஞ்சம் தெரிந்த முகங்கள். தெரியாத பல முகங்களும் உண்டு. இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இயக்கம் ஏ.எஸ்.ஏ. சாமி.

நான் பழைய தமிழ் படம்+பாட்டு பைத்தியம்தான். தியாகராஜ பாகவதர் பாட்டைக் கூட விரும்பிக் கேட்பேன். ஆனால் நடிப்பிசைப் புலவர் என்றெல்லாம் புகழப்படும் கே.ஆர். ராமசாமி பாடிய ஒரு பாட்டைக் கூட நான் கேட்டதில்லை. இந்தப் படத்தில்தான் முதல் முறையாக கேட்டேன். நாடகங்களுக்கு ஏற்ற குரல். மைக்கே தேவை இல்லை. ஓங்கி ஒலிக்கும், ஆனால் இயற்கையான குரல். இருந்தாலும் இந்தப் படத்தில் பாட்டுகள் எல்லாம் (பறக்குது பார் பொறி பறக்குது பார், ஜிலுஜிலுவென ஜொலிக்கும் மிட்டாய்) சுமார்தான்.

சம்பிரதாயமான மெலோட்ராமா கதைதான். சஹஸ்ரநாமம் செத்துப் போன அண்ணனின் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டு அண்ணிக்கு நாமம் போட்கிறார். அண்ணி இடுப்பில் ஒன்று, வயிற்றில் ஒன்றோடு உயிருக்கு பயந்து ஓடிவிடுகிறார். ஒரு சர்ச்சில் தஞ்சம் அடைகிறார். முதல் பையன் – கே.ஆர். ராமசாமி – நம்பிக்கையான பழைய வேலைக்காரனிடம் ஒரு உடன்பிறவா தங்கையோடு வளர்கிறான். சஹஸ்ரநாமத்தின் ஆட்களின் சூழ்ச்சியால் அண்ணி ஜெயிலுக்குப் போகிறார். இரண்டாவது பையன் – ஜெமினி – சர்ச்சில் வளர்ந்து பெரிய வக்கீல் ஆகிவிடுகிறான். சஹஸ்ரநாமம் கே.ஆர். ராமசாமியின் தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, அவள் இறந்துவிடுகிறாள். கே.ஆர்.ஆர். சஹஸ்ரநாமத்தைப் பழி வாங்க வரும்போது ஏற்படும் சண்டையில் சஹஸ்ரநாமம் தற்செயலாக தன் ஆசைநாயகி எம்.என். ராஜத்தை கொன்றுவிடுகிறார். பழி கே.ஆர்.ஆர். பேரில். போலீஸ் கான்ஸ்டபிள் பாலையா கே.ஆர்.ஆரைத் தேடி அலைகிறார். ஜெயிலிலிருந்து வந்த அம்மா ஜெமினியைப் பார்க்க இருவருக்கும் நடுவில் வழக்கமான இனம் புரியாத பாசம். அம்மாவுக்கும் கே.ஆர்.ஆருக்கும் அதே இனம் புரியாத பாசம். ஜெமினியின் மனைவி ராஜசுலோச்சனாவைக் காப்பாற்ற கே.ஆர்.ஆர். சஹஸ்ரநாமத்தை கொன்றுவிடுகிறார். இதற்குள் நீதிபதி (பின்னே! டைட்டில் வரவேண்டாமா?) ஆகிவிடும் ஜெமினி அண்ணன் என்று தெரிந்தும் தண்டனை அளிக்கிறார்.

என்னைக் கவர்ந்த பகுதி தப்பி ஓடும் கே.ஆர்.ஆர். ஒரு நாடகம் ஆடும் சீன்தான். பின்பாட்டுக்காரர் ஸ்வரம் இழுக்க கே.ஆர்.ஆர். கடுப்பாகி அவர் அருகே நின்று கொண்டு இன்னும் ஸ்வரம் இழுப்பதென்ன, அவர் காலை முழங்கால் வரை தூக்கி தூக்கி நடப்பதென்ன, அவ்வப்போது கைக்குட்டையை வைத்து விசிறிக் கொள்வதென்ன, கோவலன் நாடகத்தில் நாயகி பசும்பாலில் டிகாக்ஷனைக் கலந்து காப்பி தாங்கடி என்று பாடுவதென்ன, மிகவும் அருமையாக இருந்தது.

நாடகத்தில் பின்பாட்டு பாடுபவர் குண்டு கல்யாணம் போலவே இருக்கிறார். அதே மாதிரி முகம், அதே மாதிரி உடல். குண்டு கல்யாணத்தின் அப்பாவும் நடிகரா?

எல். விஜயலட்சுமி அப்போது ரொம்பவும் சின்னப் பெண் போலிருக்கிறது. ஒரு டான்ஸ் ஆடிவிட்டுப் போகிறார்.

கே.ஆர்.ஆர். நாடக நடிகர் என்றும் ஜெமினி அடுத்த ஜெனரேஷன் சினிமா நடிகர் என்றும் தெளிவாகத் தெரிகிறது.

என் போன்ற சினிமாப் பைத்தியங்கள் தவிர மற்றவர்கள் தவிர்க்கலாம்.

கொடி மலர்


1966ல் ஸ்ரீதர் டைரக்‌ஷனில் வந்த திரைப்படம்.  கதை மாந்தர்களைக் காட்டிலும் கதையை நம்பி எடுக்கப்பட்டத் திரைப்படம். ஸ்ரீதர் பொதுவாகவே அப்படித்தானே. அவருடைய அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் சில திரைப்படங்கள் இந்த இலக்கணத்தைப் பின்பற்றாமல் போனாலும்  அதற்கு முன்னர் வந்த திரைப்படங்களின் தரத்தை நாம் எப்படி சீர்தூக்கிப் பார்த்தாலும் சோடை போனதில்லை. கொடி மலர் அப்படிபட்ட தரமான ஒரு திரைப்படம்.

பிரபல நடிகர்கள் – முத்துராமன், ஏவிஎம் ராஜன், நாகேஷ்

பிரபல நடிகைகள் – காஞ்சனா, விஜயகுமாரி, எஸ்.என். பார்வதி, (முத்துராமனின் தாய் காரக்டரரில் நடித்தவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் முக்கிய ரோல். பிற்சேர்க்கை – எம்.வி.ராஜம்மா  – நன்றி அப்துல்)

இசை – எம்.எஸ்.விஸ்வனாதன் பாடல்கள் – கண்ணதாசன்

டைரக்‌ஷன் – C.V.ஸ்ரீதர்

சமூக மாற்றத்தின் விளம்பில் அகப்பட்டுக்கொள்ளும் குடும்பங்கள் எது சரி, எது தவறு, ஏற்றுக் கொள்வதா, ஏற்க மறுக்கவேண்டுமா என்று தடுமாறுகிறார்கள். குடுமபத்தில் சிலர் மற்றங்களை ஏற்றுக் கொள்வதும், சிலர் ஏற்க மறுப்பதும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இந்தப் பிரச்சனையை படம் பிடித்துக் காட்டும் ஒரு முயற்சியை கொடிமலிர்ல் ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார்.

முத்துராமன் அண்ணன். ஏவிஎம் ராஜன் தம்பி. இருவரும் இரு துருவங்கள். ஏவிஎம் ராஜன் கல்லூரியில் படித்து முடித்து வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது ”மாற்றம்” எனும் முன்னேற்றக் கொள்கைகளுடன் நுழைகிறார். பழமைவாதங்களில் மூழ்கியிருக்கும் தாயுடன் போராட்டம் துவங்குகிறது. மிகுந்த வசதி படைத்தவர்களாயினும் இளைய மகனின் மோட்டார் சைக்கிளையே தேவையற்ற ஒரு பொருளாக கருதுகிறார் தாய். அனாவசிய பண விரயம் என்று கருதுகிறார். தன்னிடம் அனுமதி வாங்காமல் மகன் த்ன்னிச்சையாக செயல்படுவதும் மரபிலிருந்து விலகிச்செல்வதும் தாய்க்கு ஒரு சுமையாகத் தெரிகிறது.  மகனோ தாயிடம் மரியாதையாகவும், அன்புடன் இருக்கவேண்டும், ஆனால் தன் வாழ்க்கை தனது, அதில் முடிவுகள் தனதாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் உறுதியாக இருக்கிறார். இதனால் மகனுக்கும் தாய்க்கும் இடைவெளி பெரிதாக உருவாகிவிடுகிறது. அதனால் தாயும் இளைய மகன் நம் கை அடக்கத்தில் இல்லை என்பதை மனதளவில் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் மகன் தன்னைவிட்டுப் போய்விடுவானோ என்ற பயம் இருப்பதால் அவன் வழியில் குறுக்கிடாமலும், மகன் சற்றே ஓங்கிப் பேசினால் பயந்து விடுவதும் இயல்ப்பாகிப் போகிறது.

மூத்த மகன் முத்துராமன். மூத்த மகன் இன்னொரு துருவம். அம்மா மேல் பக்தியே வைத்திருக்கிறார். அம்மா சிறிது மனம் கோணல் அடந்தாலும் துடித்து விடுகிறார். அம்மாவுக்கும் மகன் கையடக்கமாக இருப்பதில் பரம திருப்தி. தம்பியை பல முறை அம்மாவுக்காக கண்டித்தாலும், தம்பியின் மேலும் மிக பாசமாக உள்ளவர். தமபியைப் போல் அல்லாம்ல் மாமாவிடமும் மிகுந்த மரியாதையுடையவர். வீட்டிலேயே வளர்ந்து அம்மா வா என்றால் வருவதும், போ என்றால் போவதுமாக அம்மாவின் நிழலாக இருப்பவர்.

தாய் மாமா நாகேஷ். அவருக்கு அக்காவை விட்டால் பூவாவுக்கு வழியில்லை. இடமும் கிடையாது. அக்காவை காக்கா பிடித்துக் கொண்டும், அக்கா கொடுக்கும் இடத்தினால் கணக்கராக இருந்து வீட்டிலும், வயலிலும் எல்லோரையும் வேலை வாங்குவதும், அக்கா மகன்களையும், அக்காவையுமே தன் சொந்தங்களாகவும் கொண்டிருக்கிறார். தன் பாச்சா இளைய மகனிடம் பலிக்காவிட்டாலும் துணிச்சலாக அக்காவுக்காக பரிந்து இளைய மகனிடம் மோதிக் கொண்டு காலம் தள்ளுகிறார்.

பைக்கில் கிராம்ங்களை வலம் வருகையில் இயற்க்கையிலேயே துணிச்சலான காஞ்சனாவை சந்திக்கிறார் இளைய மகன். காதல் மலர்கிறது. விஜயகுமாரி காஞ்சனாவின் அக்கா. ஊமைப்பெண். இவர்கள் தந்தை பரம் ஏழை. தாய் எஸ்.என்.பார்வதி. ஊமையானாதால் மூத்த மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் வெதும்புகிறார் தந்தை. ஊமைப் பெண்ணை தன் அசட்டு மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார் பஞ்சாயத்து தலைவர்.  காஞ்சனாவின் துணிச்சலாலும், மதி நுட்பத்தாலும் குடுமபம் ஒருவாறு தாக்குப்பிடிக்கிறது. மூத்த மகளுக்கு திருமணம் ஆகாது என்று நினைத்து இளைய மகளுக்குத் திருமணம் செய்யத் தயாராகிறார்கள் பெற்றோர்கள்.

முத்துராமனுக்கு மனம் செய்ய தாய் தயாராகிறார். திருமணம் நடை பெறவிருக்கும் சமயத்தில் தாய் உடல் நலம் குன்றுகிறது. அதனால் தாய் மாமா தலைமையில் சகோதரர் இருவரும் செல்கிறார்கள். மனப்பெண் காஞ்சனா. அதே முகூர்த்தத்தில் விஜயகுமாரி பஞ்சாயத்து தலைவரின் அழுத்தம் தாங்க முடியாமல் அவரின் அசட்டு மகனுக்கு மணம் செய்யத் தயாராகிறார்கள். ஏவிஎம் ராஜனும் காஞ்சனாவும் பரிதவிக்கிறார்கள்.

இந்த இடத்தில் சினிமாத்தனம் புகுந்து விடுகிறது. விஜயகுமரி கிணத்தில் குதிக்க முத்துராமன் காப்பாற்ற பெருந்தன்மையுடம் ஊமைப்பெண்ணை மனம் செய்து கொள்கிறார். அனால் தாய் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. தாய்க்கு எதிராகப் பேசி பழக்கமில்லாத மகன் விஜயகுமாரியை அவர் வீட்டிற்கே அனுப்பிவிடுகிறார் மகன்.

அதன் பிறகு ஏவிஎம் ராஜன் காஞ்சனா திருமணம் நடக்கிறதா, முத்துராமன் விஜயகுமாரியுடன் சேருகிறாரா? என்பதயெல்லாம் வெள்ளித்திரையில காண வாருங்கள் என்று கமர்சியல் தான் போடமுடியும். கதையை கொடுத்துவிட்டேன் (அப்படியெல்லாம் இல்லாமலேயே) என்று ஒரு வாசகர் கொந்தளித்துவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு எங்கேயாவது டிவிடி கிடைக்கமலா போய்விடும்?

”மௌணமே பார்வையாய்” என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் பாட்டு பெரிய ஹிட். எம்.எஸ்.வியின் இசையில் அருமையாக இருக்கிறது.

அம்மா கேரக்டர் யாரென்று கண்டு பிடித்து கூறுபவர்களுக்கு நூறு கைத்தட்டல்கள் இனாம்.

நூற்றுக்கு அறுபத்தைந்து மதிப்பெண்கள்.

முதல் தேதி


By E.Gopal


படம் வெளியான தேதி: 12.3.1955,

நடிகர்கள் சிவாஜி, கே.டி.சந்தானம், என்.எஸ்.கிருஷ்ணன், குலதெய்வம் ராஜகோபால், ஆர்.பாலசுப்ரமணியம், டி.பி.பொன்னுசாமிப்பிள்ளை, எம்.கே.முஸ்தஃபா, மாஸ்டர் ரங்கநாதன்
நடிகைகள் அஞ்சலி தேவி, டி.ஏ.மதுரம், குமாரி சுசீலா, பேபி உமா,  மற்றும் பலர்
பின்னணி இசை அரசு எம்.எம்.தண்டபானி தேசிகர், டி.வி.ரத்னம்,என்.எஸ்.கிருஷ்ணன்,கோமளா, ராணி
பாடல்கள் உடுமலை நாராயணகவி, கே.டி.சந்தானம்
பின்னணி இசை டி.ஜி.லிங்கப்பா புகைப்படம் வி.ராமமூர்த்தி
கதை தாதா மிராஸி தயாரிப்பு பி.ஆர்.பந்துலு
படத்தொகுப்பு தேவராஜன் கலை ஏ.கே.சேகர்
திரைக்கதை, வசனம், இயக்கம் பா.நீலகண்டன்


கதை ஒரு சிறு குப்பியில்

நடுத்தர வர்கத்தின் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும், அவர்களின் அன்றாட வாழ்வும், வேலை பறி போய்விட்டால் என்ன பாடுபடும் என்று யதார்த்தமாக சோகத்தையும், நகைச்சுவையும் சேர்த்து முறுக்கு பண்ணி சுவைக்க விட்டுள்ளார்கள்.  வேலையில்லாத் திண்டாட்டத்தை நேர்த்தியாகவும், பிற்பகுதியில் நம் பொறுமையை கூழாக்கிக் குடித்தும் சொல்லியிருக்கிறார்கள்.  அந்தக்காலத்து ‘வறுமையின் நிறம் சிவப்பு” படம்.

கையடக்கக்கதை

சிவாஜியும், என்.எஸ்கிருஷ்ணனும் ஒரு வங்கியில் குமாஸ்தாவாக பணிபுரிகிறார்கள். சிவாஜி நடுத்தரத்தட்டிற்கு கீழே உள்ள, வங்கிச்சம்பளத்தை ஒண்ணாம் திகதி ஆவலுடன் எதிர்நோக்கி, வரவுசெலவு கணக்குகளை கச்சிதமாகச்செதுக்கி நடத்திச்செல்லும் குடும்ப வாழ்க்கை வாழும் சாதாரண நடுத்தர வர்க்கம்.  வேலை இல்லாவிட்டால்  வறுமைதான் அடுத்த கட்டம் – என்ற கத்திமேல் நடத்தும் வாழ்க்கையிலும் ஒரு வித இன்பத்தோடு தொடங்குகிறது கதை. இவருக்கு வயதுக்குவந்த மகளும், இளம்வயதில் ஒரு மகளும், ஒரு பையனும், அன்பான மனைவியாக அஞ்சலிதேவியும் வருகிறார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணன் மனைவி டி.ஏ.மதுரம் வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர்.  அதனால் என்.எஸ்.கேக்கு வேலை பார்த்தெல்லாம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் இல்லை.  இருப்பினும், மதுரத்தின் நமச்சல் தாங்காமல்  வங்கி குமாஸ்தாவாக பணிக்குப்போகிறார். சிவாஜியும் இவரும் நண்பர்கள். இப்போதுதான் மிகவும் பிரபலமான பாடலான “ஒண்ணுல இருந்து 20 வரைக்கும்” என்ற பாட்டை நகைச்சுவையோடு பாடுகிறார்.

ஒருநாள் அலுவலகத்திற்குச் செல்லும் அவர்களுக்கு, வங்கி பூட்டப்பட்டிருப்பதும், ஒரு கரும்பலகையில் இனி வங்கி மூடப்பட்டது என்ற அறிவிப்பும் செவிட்டில் படார் என்று அடித்த அடியாக இறங்குகிறது. இதில் என்.எஸ்.கே மகிழ்ச்சியுற்றாலும், சிவாஜியின் கதை அதோ கதியாகிறது.  வேலைபோய்விட்டதை நினைத்து குடும்பமே அதிர்ச்சியில் துவண்டுவிடுகிறது. இதற்கிடையில், ஏற்கனவே மாமா பையனுக்கு, தன் மகளை பேசிமுடிப்பதாக கடிதாசி போட, அவர்களும் அதையேற்று பெண்பார்க்க வீட்டிற்கு வந்து உட்கார்ந்திருக்க, இவர் வேலையும் போய், வீட்டிற்குள் நுழைந்தால் இந்த அதிர்ச்சி வேறு.  இப்போது கல்யாணம் வேண்டாமென்று கூற – மாமாவோ “நீதானே எங்களை கடிதாசு போட்டு அழைத்தாய்” என்று கூற, அப்போது பார்த்து ஒருவர் வந்து “என்ன சிவஞானம், வேலை போய்விட்டதாமே” என்று சமயம் தெரியாமல் மண்பானையை போட்டு உடைக்க, எல்லாம் நிலைகுலைந்து நிச்சயதார்த்தம் நின்று போகிறது.

பின் வேலை தேடும் படலம் ஆரம்பமாகிறது. பல இடங்களில் வேலைதேடியும் கிடைக்காமல் சோர்ந்துபோகிறார் நாயகன்.  அவர் மனைவி என்னதான் அவரின் நிழலாக ஆறுதல் சொன்னாலும், கடன் தொல்லைகளும், பணமின்மையால் ஏற்படும் இன்னபிற துன்பங்களும் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப்பார்க்கின்றன.  இவருக்கு தொழில் ரீதியான ஒரு தேர்ச்சிபெற்ற வேலை தெரியாததாலும், வெறும் குமாஸ்தாவிற்கு வேலை கிடைக்காதென்பதாலும், அலைந்து அலைந்து வெறுப்பையும், சோர்வையுமே பலனாகப் பெருகிறார். இதனால் ஆங்காங்கே வெளிப்படும் கோபம் உரசி, உரசி பெரிதாக, அவரின் கையாலாகாத்தனம் கொப்பளித்து வெறுப்பை மற்றவர்கள் மீது உமிழ வைக்க – வீடே தீப்பிடித்த வைக்கப்படப்பாக  எரிகிறது.

கடன்காரர்களை அடித்து விரட்ட, பொய்யே சொல்லாத நாயகன் – பொய்சொல்லி அவன் குடும்பத்தையும் வறுமையினால் அப்பிழையை செய்யச்சொல்வது சோகம்.  இப்படியாயிருக்க அவரின் வறுமைப்பசியைப் போக்க, என்.எஸ்.கே கொஞ்சம் உதவுகிறார்.  அவருக்கு அவர் மாமனார் ஏற்பாடுசெய்திருந்த வேலையை தனக்கு வேண்டாமென்றும் அதை தன் நண்பனுக்கு கொடுக்கும்படியும் கூற, மிகுந்த நம்பிக்கை கொண்டு அங்கு செல்லும் நாயகனை வரவேற்று பேசும் அந்த நிறுவன அதிபர், இவரை வேலையில் சேர்த்துக்கொள்வதாகவும், நூறு ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும் கூறுகிறார்.  இதைக்கேட்ட சிவாஜிக்கு மகிழ்ச்சி மின்னல்போல் வந்து மறையும் படி, அந்நேரத்தில் நிறுவனருக்கு தந்தி வர “ஆங், என்ன கப்பல் கவிழ்ந்துவிட்டதா” என்று அதைப்படித்த மாத்திரத்திலேயே, அவர் மரணிக்க, இவரின் வேலை ஆசையில் மண்விழுகிறது.

பின் அவர் தன் குடும்பத்தை எப்படி காபாற்றினார்? அவருக்கு வேலை கிடைத்ததா? யாராவது இறக்கம் காட்டினார்களா இல்லை தற்கொலைசெய்து கொண்டாரா? தன்குடும்பத்தின் பசியை எப்படி போக்கினார்? என்ற விடைக்கு பாருங்கள் ‘முதல் தேதி’.

மொத்தக்கருத்து

படம் சுவாரசியமாக ஆரம்பமாகிறது. மிகவும் எளிமையான காட்சிகள், நடுத்தரவர்கத்தினர் சந்திக்கும் தினப்பிரச்சனை என்று ஒரு புறம் சற்று சோகக்காட்சிகள் இடம்பெற்றாலும் ஒரு புறம் நகைச்சுவைப் போர்வையில் தூள் கிளப்புகிறார்கள் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், குலதெய்வம் ராஜகோபால் கோஷ்டியினர். “ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும்” பாட்டுடன் கூடிய காட்சிகள் சிரிப்பை வரவைக்கின்றன. சிவாஜியின் மிதமான நடிப்பு, அஞ்சலிதேவியின், தேவையான நடிப்பு, என்.எஸ்.கி-டி.ஏ.மதுரம்-குல.ராஜகோபால் குழுவின் விலாநோக சிரிக்கவைக்கும் காட்சிகள் நன்றாக இருக்கிறது.

என்.எஸ்.கேக்கு தெரியாமல் டி.ஏ.எம். ராஜகோபாலை சமயல்காரராக வீட்டில் வேலைக்கு அமர்த்த, அது தெரியாமல் என்.எஸ்.கே வீட்டிற்குள் வந்து அமர, அவரை கத்தியால் துரத்தி வெளியேற்ற, பின்  டி.ஏ.எம் அவர்தான் எஜமானன் என்று கூற, அவர் பின் மன்னிப்பு கேட்க, “உன் பெயர் என்ன” என்று கேட்க, அவர் “கோவிந்தன்” என்று சொல்ல, என்.எஸ்.கே “கோவிந்தா” என்று கூப்பிட இவர் “ங்கேவ்” என்று கொக்கரிக்க, முன்னால் தயிர் விற்றதால் இந்தப்பழக்கம் வந்ததாகக் கூற, என்.எஸ்.கே அதை திருத்த பாடம் எடுக்க – வயிறு வலித்ததுதான் மிச்சம். அதேபோல் என்.எஸ்.கே மாமனார் ஏற்பாடு செய்திருந்த வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு வேண்டாவெறுப்பாக ராஜகோபாலையும் கூட்டிக்கொண்டு போய் அங்கு அடிக்கும் ‘லூட்டி’ குளு குளு ‘ஊட்டி’.

எங்கள் ஊரில் ரம்ப ஆலை

சிறுவயதில் பள்ளிசெல்லும்போது எங்கள் ஊரிலேயே மிகப்பெரிய ரம்ப ஆலை ஒன்று இருந்தது. அதைக்கடந்து செல்லும்போது பெரிய மரத்தை சமன் செய்து இருவர் பெரியதொரு ரம்பத்தை இருபக்கமும் பிடித்து மெதுவாக அறுக்கத்தொடங்குவார்கள்.  பள்ளி சென்று திரும்பும்போதும் ஒரு பாதி மரம் அறுத்திருப்பார்கள்.  “சே, இதை அறுக்க ஒரு இயந்திரம் கண்டுபிடிக்க மாட்டேன்கிறார்களே” என்று மனது அறுப்பவர்கள் மீது பரிதாபம் கொள்ளும்.  என்னைப்போல், இப்படத்தின் இயக்குனர் திரு ப.நீலகண்டனும் அவர் ஊரில் ரம்பம்வைத்து அறுப்பதை பார்த்து நீங்கா பழியுணர்ச்சி அடிமனதில் தேக்கிவைத்திருப்பார் போலும்.  இடைவேளைக்கு சற்று பின், நாம் சாப்பிட்ட பக்கோடாவும், தண்ணி ‘டீ’யும் வாய் வழியே வெளிவரும் அளவுக்கு ஒரு ரம்பத்தை போடுகிறார்.  அதுவும் சிவாஜி செய்த காப்பீட்டுப்பணம் தன் குடும்பத்தை காப்பாற்றும் என்று கருதி, தற்கொலை செய்து கொண்டு மேல் உலகம் செல்ல, அங்கு இருக்கும் யமன், சிவன், விஷ்ணு போன்றவர்கள் “நீ செய்தது கோழைத்தனம்”, மீண்டும் பூலோகத்துக்கு போய் உன் குடும்பம் எப்படி பாடாய்படுகிறது என்று அமைதியாக பார் என்று சொல்ல, இவர் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொள்ள – “ஐயா நீலகண்டரே, அவர் விஷம் குடித்தால் கழுத்தில் நின்றது. எங்களுக்கு நீங்கள் குடுத்த விஷம் கழுத்திலிருந்து கீழேவரை இறங்கி விட்டது”. 1955-லேயே இப்படிப்பட்ட ஒரு ரம்பத்தை போட்ட உங்களை ரம்பா கூட மன்னிக்கமாட்டார்.  திரைக்கதை எழுதும்போது பாதிக்குமேல் ஏதோ ஒரு விக்கல் வந்திருக்க வேண்டும்.  இதற்கு கைமாறாக நீங்கள் “விருதகிரி” படத்தை தனி ஆளாக கொட்டகையில் நான்கு முறை பார்க்கவேண்டும்.

கடைசியில் எதிர்பார்த்தது போலவே, சிவாஜி கனவிலிருந்து விடுபட்டு அதிர்ச்சியுடன் எழுந்திருக்கும் போதுதான் “அப்பாடா நம் விஷம் முறிந்தது” – என்று நாமும் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறோம்.

நடிகர்கள்

சிவாஜியின் அதிகதுடிப்பு காட்டாத நடிப்பு கவர்கிறது.  உணர்ச்சிகளை அற்புதமாக வெளிக்காட்டும் திறமைக்கு திலகத்திற்கு ஈடு இணை கிடையாது. எந்த ஒளிப்பதிவாளரும் இவர் முகத்தைத்தவிர எந்த நடிகர் முகத்தையும் மிக அருகே காட்டமுடியாது. இப்படம் வந்த போது தமிழ் பட உலகம் ஒரு பாதைக்கு மாறிக்கொண்டிருந்தது. தமிழ் வசன நடையில் பேசிக்கொண்டிருப்பதும், சாதாரண நடைஉரையில் பேசுவதுமாக இரட்டை குதிரை சவாரி செய்துள்ளது (உதாரணம்: கல்யாணப்பரிசு).  இதில் சிவாஜி பழைய வசன நடைஉரையில் பேச, மற்ற பாத்திரங்கள் சாதரண உரையில் பேச, ஒரே தமாஷ்தான்.  என்.எஸ்.கிருஷ்ணன் மட்டும் இல்லையென்றால் – (ப)நீலகண்டர் கழுத்தில் பாம்பை எடுத்து விட்டு படச்சுருளை சுற்றிவிட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்..

இசை

இசை மெச்சத்தகுந்த படி இருக்கிறது. பாடல்களில் கேட்கும் இனிமை அதிகம்.  அந்தக்காலத்திலேயே வேலையில்லாத்திண்ட்டம் எப்படி இருந்திருக்கிறது என்பதை நன்றாக விவரித்திருக்கிறார்கள். எளிமையான வரிகளில் உடுமலை கவிஞர் பெயர் பதிக்கிறார்.

இப்படம் வந்து ஓடியதா என்றும் தெரியவில்லை, நான் அப்போது பிறக்கவில்லை.  பின் காட்சிகளை அப்போது இருந்த ரசனையில் மக்கள் ரசித்திருப்பார்களோ என்று தோன்றுகிறது.  நல்ல வேளை. சிவாஜி மற்றும் எல்லோருடைய அமைதியான நடிப்பாற்றலால் தப்பித்தோம்.  யாராவது ஒரு நடிகர் இழுத்திருந்தாலும் ஜவ்வுதான்.

ஒரு ஐந்து சுற்று சுருளை வெட்டிவிட்டு பார்த்தால், ரசிக்கலாம்.  முன்பாதிக்காகவும், அருமையான நகைச்சுவைக் காட்சிகளுக்காகவும், பாட்டிற்காகவும் பார்க்கலாம். இப்போது எல்லோருமே வட்டத்தகடில் பார்ப்பதால் – பின் பாதியை வெட்டிஎடுத்து விடுங்கள் அல்லது ஓட்டிவிடுங்கள். இப்பட்த்தின் பிரதி ராஜ் வீடியோ, அண்ணா சாலை, சென்னையில் கிடைக்கிறது.

மயங்குகிறாள் ஒரு மாது (1975)


By E. Gopal

படம் வெளியான தேதி: 30.5.1975,

நடிகர்கள் : முத்துராமன், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், அசோகன், செந்தாமரை நடிகைகள்: சுஜாதா, ஃபடாபட் ஜயலக்ஷ்மி, எம்.என்.ராஜம், காந்திமதி, புஷ்பா பின்னணி பாயிருப்பவர்கள் : கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜயராம் பின்னணி இசை: விஜய பாஸ்கர் பாடியவர்கள் : கே.ஜெ.யேசுதாஸ், தயாரிப்பு: பாஸ்கர்
வசனம்: பஞ்சுஅருணாசலம்
திரைக்கதை, வசனம், இயக்கம் : எஸ்.பி.முத்துராமன்

மாத்திரையடக்க கதை

மனச்சஞ்சலத்தால் சற்று வழிமாறிப்போகும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண், குடும்பவாழ்க்கையில் சந்திக்கும் பதற்றங்களும், சவால்களையும் பரபரப்பான பிண்ணனியில் விளக்கியிருக்கும் படம் “மயங்குகிறாள் ஒரு மாது”.

கதைச்சுருக்கம்

கல்லூரியில் படித்துக்கொண்டு, தங்கும் விடுதியில் பெண்தோழிகளுடன் தங்கியிருக்கிறார் சுஜாதா.  இவரின் அறைநண்பியான ஃபடாபட் ஜயலட்சுமி மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்கிறார். படிக்கற காலத்தில் படிக்க வேண்டும், மற்ற சஞ்சலங்களில் மனதைச்செலுத்தி விடக்கூடாதென்று நினைக்கிறார். இக்கருத்தை உடைக்க முற்பட்டு சுஜாதாவின் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறார்கள் தோழிகள். உணர்ச்சிகளை தூண்டும் புத்தகங்களைக் கொடுத்தும், திரைப்படத்திற்கு திருட்டுத்தனமாக கூட்டிப்போயும் அவர் மனதில் பாதையைப்போடுகிறார்கள். இதனால் ஏற்படும் கருத்துவேறுபாடில் சுஜாதாவை, ஃபடாபட் அடித்துவிட, இருவருக்கும் மனதில் பிளவு ஏற்பட்டு பேச்சுவார்த்தை நின்று போகிறது. பருவக்கோளாறினால் ஏற்படும் மயக்கம் ஒருபுறம் தள்ள, உடம்பு என்ற நெருப்பு மனதை வினாடியில் சாம்பலாக்க, காதல் என்ற பல்லக்கு பயணிக்கத்தொடங்குகிறது.

விஜயகுமாரின் அப்பா (செந்தாமரை) ஒரு  பெண் சபலஸ்தர், பணக்காரர்.  இவர் பெண்கள் கூட குஜாலாக இருக்கும்போது தெரியாமல் புகைப்படம் எடுத்து அதைகாட்டி மிரட்டுகிறார் புகைப்படக்கலைஞரும் எப்படியும் பணத்தை சம்பாதிக்கத்துடிக்கும் தேங்காய் சீனிவாசன். விஜயகுமார் தேங்காயின் மகன், சுஜாதாவின்மேல் காதல்வயப்பட்டு அவர் பின்னால் சுற்றுகிறார்.  ஆரம்பத்தில் நிராகரிக்கும் சுஜாதா, இன்னபிற பருவக்கோளாறுகளும் சேர்த்து உந்த, விரித்த வலையில் சிக்குகிறார்.  விஜயகுமாரின் பங்களாக்கு போகும் ஒருமுறை தன்னை மறந்த நிலையில் இருவரும் தவறு செய்ய, பேயரைந்தவர்போல் விடுதிக்கு வருகிறார்.  வருத்தம் தெரிவிக்கும் விஜயகுமார், கல்யாணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறார். இந்நிகழ்ச்சிக்குப் பின் இவரின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் வர, சந்தேகிக்கிறார் ஃபடாபட்.  மறுநாளிலிருந்து விஜயகுமாரை காணாமல் தேட, ஒரு வண்டி அமர்த்திக்கொண்டு அவரின் இருப்பிட்த்திற்கே போக, அங்கோ, காவலர்கள் அவரையும், அவர் அப்பாவையும் கடத்தல் காரணமாக கைது பண்ணி ஜீப்பில் ஏற்றிக்கொண்டுபோகிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள ஒரே வழி, விஷம் குடிப்பதுதான் என்று முடிவு செய்து – அதையும் செய்கிறார். இவர் மயங்கி விழ, ஃபடாபட் ஓடிப்போய் விடுதியின் மருத்துவரான எம்.என்.ராஜத்தை கூட்டி வந்து சிகிச்சை அளிக்கிறார்.  இவரின் விஷத்தை குடலிலிருந்து எடுத்த மருத்துவர், இவர் கர்ப்பமாக இருப்பதாகவும், உள் இறங்கிய விஷம் அதை முறித்துவிட்டது என்றும் – இவ்விஷயம் யாருக்கும் தெரியவேண்டாமென்றும், அதனால் சுஜாதாவின் வருங்காலம் பாதிக்கப்படலாம் என்றும் ஃபடாபட்டிடம் உறுதி வாங்கிக்கொள்கிறார். ஒருமுறை ஒன்றுகூடிய உடன் கர்ப்பமாகத்தான் வேண்டும், புற்று நோய் வந்தால் சாகத்தான் வேண்டும், இரண்டு மனைவி இருந்தால் ஒரு மனைவி சாகத்தான் வேண்டும் (அ) அப்புறம் போய்விடவேண்டும், வில்லன் கடைசி காட்சிகளில் இறக்கத்தான் வேண்டும், கடத்தல்காரன் பணத்தை சுருட்டிக்கொண்டு சிங்கப்பூருக்கு கப்பலில் (இதில் கடவுச்சீட்டும், பயணச்சீட்டும் வேறு
இருக்கும்) தப்பிக்க ஒரு அதிரடி திட்டம் இருக்கத்தான் வேண்டும், மனைவியை விட்டு ஓடிவிட்டால், கடைசி காட்சியில் சேரும்போது மனைவி கணவன் காலில் விழத்தான் வேண்டும் – இது போன்ற மாற்றமுடியாத, மாற்ற விரும்பும் ஆனால் மாற்றக்கூடாதென்ற ஊறிப்போன தமிழ்பட தலைவிதிகள் இதிலும் உண்டு.

அவர் நலனையே கருதும், ஃபடாபட், எல்லாவற்றையும் மறக்க ஆதரவளித்து, கல்லூரி நாட்கள் முடிந்தவுடன் பிரிந்து செல்கிறார்கள்.  சுஜாதாவின் தந்தையான அசோகன், தன் மனைவி உயிருடன் இல்லாத காரணத்தினால், அவருக்கு சீக்கிரமாக கல்யாணம் செய்து வைக்க முற்படுகிறார். முத்துராமனும் அவர் அக்காவும் பெண்பார்க்க வருகிறார்கள்.

அவர் அக்காவாக வரும் எம்.என்.ராஜத்தை கண்டு அதிரிச்சியை உள்வாங்கும் நாயகி, தனியே அவரை கூட்டிப்போய், இக்கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துமாறு மன்றாடுகிறார்.  “வாழ்க்கையில் அப்படிப்பார்த்தால் யாரும் உயிருடனே இருக்க முடியாது” என்று வாதிடும் ராஜம், அவரின் குணத்திற்குத்தான் பண்ணிக்கொள்வதாகவும், நடத்தையை பார்த்து அல்ல என்றும், தனக்கு இதில் பரிபூரண சம்மதம் என்றும் கூறி சம்மதிக்க வைக்கிறார்.  முதல் இரவில், முத்துராமனும், தனக்கும் ஒரு காதலி இருந்த்தாகவும், கல்யாணம் கைகூடவில்லை என்றும் கூற, சற்று ஆறுதலடைகிறார்.

இதற்க்குப்பின், இனிமையாக பயணம் செய்யும் வாழ்க்கை, ஒரு குழந்தை பிறந்து வளர, திடீரென்று புடவைக்கடையில் ஃபடாபட்டை சந்திக்கும் போது பாதை மாறுகிறது.  அவரின் கணவர்தான் தேங்காய்.  ஏற்கனவே இருவரின் மனைவியும் நண்பிகளாதலால், குடும்ப நண்பர்கள் ஆகிறார்கள்.  ஒரு நாள் தேங்காய், தனிமையில் இருக்கும் சுஜாதாவிடம் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொடுக்க, அதை பார்த்துக்கொண்டு வரும் நாயகிக்கு – அவரும், விஜயகுமாரும் கூடியபோது எடுக்கப்பட்டபடங்களையும் இடைச்செருகல் செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின் தேங்காய், ஒரு பெரிய பணமுடிப்பு கொடுத்தால் இதன் மூலச்சுருளை கொடுத்துவிடுவதாகவும், அப்பணமுடிப்பை எப்படி அவர் கணவர் செய்யும் தொழிலிலிருந்து அவர் அறியாமல் எடுக்கக் முடியும் என்ற லாவகத்தை  கற்றுக்கொடுப்பதாகவும் கூறி, அவகாசமும் கொடுத்துச்செல்கிறார்.

இவ்வதிரிச்சியிலிருந்து மீள்வதற்குள், மாலை, அவர் கணவரோ, புதிதாக ஒரு ஓட்டுனரை நியமித் திருப்பதாகக்கூறி விஜயகுமாரை கொண்டு நிறுத்துகிறார்.
கள் குடித்த குரங்காக தலை சுற்றுகிறது நாயகிக்கு.

இச்சுழலிலிருந்து அவர் எப்படி மீண்டார், தேங்காயை எப்படி சமாளித்தார், முன்னாள் காதலனை எப்படி தவிர்த்தார், கணவனுக்கு குட்டு வெளிப்பட்ட்தா என்பதை வெள்ளித்திரையில் காண்க.

மொத்தக்கருத்து

ஆரம்பம்முதலே கல்லூரி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட படமோ என்று நினைக்கத்தோன்றும் காட்சிகள் வேகவேகமாக மாறி குடும்பத்துக்குள் புகுந்து சுவை கூட்டுகிறது.  திரைக்கதையை நம் கலாசாரக் கண்ணோட்டத்தில் எடுத்திருக்கிறார்கள்.  பிற்பாதியில் ஒருவித சோர்வு ஏற்பட்டு, கதை இப்படித்தான் பயணிக்கும் என்று தோன்றிவிடுவது எதிர்பாராத திருப்பங்களை மனதில் ஏற்படுத்த வில்லை.  ஆனாலும்,  சிறு சிறு பாத்திரங்கள் மூலம் எல்லோருடைய படைப்பும் நிறைவைத்தருகிறது.  ஆரம்பக் காட்சிகளில் புஷ்பாவின் உடையலங்காரம் அப்போதிருந்த நாகரீகத்தை காட்டுவதாக இருந்தாலும், கல்லூரி இளைஞர்களை திருப்திப்படுத்தும் நோக்கோடு எடுத்திருப்பது தெரிகிறது.

நடிகர்கள்

ஃபடாபட் ஜயலட்சுமி, எம்.என்.ராஜம், தேங்காய், முத்துராமன், விஜயகுமார் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே தேய்த்திருக்கிறார்கள். சுஜாதாவிற்கு நிறைவான பாத்திரம்.
நன்றாகச்செய்துள்ளார். ஃபடாபட்டின் பாத்திரம் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் சமூகச்சங்கிலிகளை அறுப்பதாக இருந்தது. இங்கு அதற்கு நேர்மார். எக்காரணம் கொண்டும் ஊறிவிட்ட கோட்பாடுகளை அறுக்கக்கூடாதென்று கூறும் பாத்திரம்.
சுஜாதாவின் உற்ற தோழியாகவும், அவரை காட்டிக்கொடுக்கூடாதென்று நினைக்கும் உன்னதமான பாத்திரத்தில் மிளிர்கிறார். விஜயகுமார் அமைதியாக வந்து போகிறார். தேங்காய்க்கு என்னவோ வில்லத்தனம் அவ்வளவாக இப்படத்தில் பொருந்தவில்லை. ஃபடாபட் தன்னை மாய்த்துக்கொள்வதாக கூறுவது, பின் தேங்காய் திருந்துவது எல்லாம் தமிழ்படத்திற்கென்று காலில் போட்ட சங்கிலிகள்.
செந்தாமரையும், அசோகனும் வந்து போகிறார்கள்.  சிறு பாதிரங்கள் நிறைவாகச்செய்திருக்கிறார்கள்.

இசை

இசை இப்படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். விஜயபாஸ்கர் அவர்களின் இசை மிகவும் மெச்சத்தகுந்த வகையில் போடப்பட்டிருக்கிறது.  “சுகம் ஆயிரம்”, “வரவேண்டும் வாழ்க்கையில்”, “சம்சாரம் என்பது வீணை”, “ஒரு புறம் வேடன், ஒருபுறம் நாகம்” போன்ற இன்றும் பிரபலமாக உள்ள பாடல்களை தன் இனிய இசை மூலம் அள்ளித்தெளித்திருக்கிறார். இவர் ஒரு கன்னட இசையமைப்பாளர், இருப்பினும், ஹிந்தி, மற்றும் எல்லா தெற்கு மாநில மொழிகளிலும் இசைகோர்த்திருக்கிறார். இவரின் இசை எனக்குப்பிடித்தமான ஒன்று.  பல அதிரடி வெற்றி இசை கொடுத்திருக்கிறார். எம்.எஸ்.வி. என்ற புயல் காற்றில் அவ்வளவாக அறியப்படாதவர், இருப்பினும் அற்புதமான இசை வித்தகர்.  சில ஆண்டுகளுக்கு முன்தான் காலமானார். இவரின் மற்ற சில படங்கள்:
தெய்வக்குழந்தை (முதல்படம்), தப்புத்தாளங்கள், ஆடுபுலிஆட்டம், உங்கள் விருப்பம், சௌந்தர்யமே வருக வருக, எங்கம்மா சபதம், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, பேர் சொல்ல ஒரு பிள்ளை.

பஞ்சுஅருணாசலத்தின் வசனங்களும் கூர்மை, கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளும் இதம் சேர்ப்பவை.  பஞ்சு அருணாசலமும் பாட்டெழுகியிருக்கிறார்.  பாபுவின் புகைப்பட காட்சிகள் மனதை கொள்ளைகொள்வதோடு, புதுக்கோணப் பரிமாணங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் நல்லதொரு படம் கொடுதிருக்கிறார்.

இப்படம் வந்து ஓடியதா என்று தெரியவில்லை, நான் படித்துக்கொண்டிருக்கும்போது வெளிவந்து, படம் பார்க்க வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. அதற்குப்பின் 25 வருடம் கழித்து இப்போதுதான் பார்த்தேன்.

பாட்டிற்காகவும், அறுவையாக இல்லாத திரைக்கதைக்காகவும் நீங்கள் பார்க்கலாமே! இப்படத்தின் பிரதி இப்போது இந்தியாவில், சென்னையில், சங்கரா ஹாலில் கிடைக்கிறது. முதலில் கிடைக்காமல்  நானும் அசோக்கும் சிரமப்பட்டுத் தேடி எடுத்தோம்.

மூச்சு வாங்குகிற நேரம்


ஓடி கொண்டேயிருக்கிறோம். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது (அதென்ன மேல்-கீழ் மூச்சு என்று கேட்காதீர்கள்) கொஞ்சம் நிற்பதில்லையா? அது போல் தான் தவிர, நாங்கள் சோர்ந்துவிடவில்லை, தளர்ந்து விடவில்லை. குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, அவர்களுக்கு கோச்சாக இருப்பது எல்லாம் எங்கள் தலையில் வந்து விழுகிறது.  ஸ்கூல், காலேஜ் காலங்களில் எல்லாம் படிக்காமல் ஓப்பி அடித்தாகிவிட்டது. இப்பொழுது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டுமானால் நாமும் கொஞ்சம் படிக்க வேண்டியிருக்கிறது. (படிக்காமல் விடமாட்டர்கள் போலிருக்கிறது.)

இந்த மாதிரி கால கட்டங்களில் சாரதா, ஈஷ்வர் கோபால் போன்றோர்கள் கைகொடுத்தார்கள். சாரதா எங்கே போய்விட்டீர்கள்? சமீபத்தில் கொடிமலர் என்று முத்துராமன், ஏ.வி.எம் ராஜன், விஜயகுமாரி, காஞ்சனா நடித்த திரைப்படம் ஒன்று பார்த்தேன். நல்ல குடுமபப் படம். எழுதுவதற்கு நேரமில்லை. சாரதா, கோபால் உங்கள் ரிவ்யூ இருக்கிறதா?