அப்பாவின் அசரீரிதான்…. – விசாலி கண்ணதாசன்


நக்கீரன் இதழில் வந்த பேட்டி, விமல் அனுப்பி இருக்கிறார். கொஞ்சம் நீளமான பேட்டி, ஆனால் சுவாரசியமாக இருக்கிறது! நக்கீரனுக்கும் விமலுக்கும் நன்றி!

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று எழுதியதை மெய்ப்பிக்கிறார் கண்ணதாசன். ஆமாங்க, அப்பாவின் அசரீரிதான் என் இலக்கியங்கள் என்கிறார் அவரின் மகள் விசாலி.

விசாலியின் ஐந்து வயதுக்கு ஆறு மாதங்கள் இருக்கும் முன்பே கண்ணதாசனுக்கு காலனின் அழைப்பு வந்துவிட்டது. அந்த சோகம் வாட்டியிருக்கிறது விசாலியை. அதனால்தான் அப்பாவின் பாடல்கள்தான் எனக்கு அம்மாவானது என்கிறார் விசாலி.

அம்மாதான் எனக்கு தந்தையுமானார். இப்போ கணவர்தான் தாயும், தந்தையுமானார் என்று உணர்வுப்பூர்வமாக தன்னை விவரித்தார் விசாலி

‘’அவரு மாதிரியே உயரம். அவரு மாதிரியே நெறம். அவரு மாதிரியே கண்ணு. அவரு மாதிரித்தான் பார்க்குற. அவரு மாதிரித்தான் நடக்குற. அவரு மாதிரித்தான் சிரிக்குற. ஒன்ன பார்க்குறது அவரப் பார்க்குற மாதிரியே இருக்கு சாலான்னு சொல்லுவாங்க அம்மா. நான் மட்டுமில்ல அப்பாவும் உன்ன சாலான்னுதான் கூப்பிடுவாங்கன்னு சொல்லுவாங்க அம்மா.

அம்மா என் கூட விழாக்களுக்கு வரும்போது, ‘அவரோடயும் விழாக்களுக்கு வருவேன். இப்ப ஒன் கூடயும் வர்றேன். ஒரு வித்யாசமும் தெரியல. அவருக்குஇருந்த கம்பீரம் ஒனக்கும் இருக்கு. உன்ன விசாலின்னு சொல்லக்கூடாது. புடவ கட்டின கண்ணதாசன்னுதான் சொல்லணும்’னு என்னை அப்பாகவே பார்ப்பாங்க, எனக்கு அப்பாவாக இருந்த என் அம்மா.’’ என்று சொல்லும் விசாலி, அப்பாவுக்கு பதினைந்தாவது குழந்தை. அம்மாவுக்கோ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு.

‘அப்பாவோட சொத்துன்னு எனக்கு எதுவும் கொடுக்கல. ஆனா நிலம், பணம்தான் சொத்துன்னும் நான் நினைக்கல. ‘ஒருவன் பூமியில் எவ்வளவு இடம் வைத்திருக்கிறான் என்பது பொருட்டே அல்ல. உலக இன்பங்களை அனுபவித்து லயிக்க உள்ளத்தில் எவ்வளவு பெரிய இடம் வைத்துள்ளான் என்பதே முக்கியம்.’ (தான் எழுதி வரும் ‘சிந்தித்தேன் சிந்தியதேன்’ என்ற தொகுப்பிலிருந்து சொன்னார்.)

ஆனா, யாருக்கும் இல்லாத பெரிய சொத்து ஒண்ணு எனக்காக விட்டுட்டு போயிருக்கிறார் அப்பா. அப்பா கடைசியா எழுதுன பாட்டு ‘கண்ணே கலைமானே’தான் அது. மூன்றாம் பிறை படத்துக்காக எழுதிய அந்த பாட்டுதான் எனக்கான பெருஞ்சொத்து.

அப்பா சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்புனபோது(1981) டைரக்டர் பாலுமகேந்திரா வந்திருக்கிறார். அப்பா காரில் உட்கார்ந்துகிட்டே அந்த பாட்டை எழுதிக் கொடுத்திருக்கிறார்.


அந்த பாட்டுக்கான சூழலை அப்பாவிடம் விவரித்திருக்கிறார் டைரக்டர். நாயகி ஸ்ரீதேவி குழந்தைத்தனத்துடன் இருப்பது மாதிரி கதை என்று நாயகியின் சில காட்சிகளை சொல்லியிருக்கிறார். அதில் கமலின் காதை பிடித்து திருகும் ஸ்ரீதேவியின் காட்சியை சொன்னபோது “அட, என் மகள் சாலா மாதிரியே இருக்குதே இந்த கேரக்டர். சாலா இப்படித்தான் என் காதை பிடிச்சு திருகிக்கிட்டு இருக்கும்” என்று சொன்ன அப்பா, கடகடவென அந்தப் பாட்டைஎழுதிக் கொடுத்திருக்கிறார்.

அந்தப் பாடலை எழுதுவதற்கு முன்பு அதாவது அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக கிளம்பும் சமயத்தில் என்னைப் பற்றி அம்மாகிட்ட “நான் திரும்பி வரமாட்டேன். நீ சாலாவ பத்திரமா பாத்துக்க”ன்னு சொல்லியிருக்காங்க அப்பா. அப்படிச் சொல்லிவிட்டு கிளம்பி போகும் போதுதான் அந்த குழந்தைத்தனமான நாயகி சூழலை சொல்ல பாட்டு எழுதியிருக்கிறார்.

அந்த பாடலுக்கு யார் எப்படி வேண்டுமானால் அர்த்தம் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால் அது எனக்காக என் அப்பா எழுதிய பாட்டு. நானே அந்த பாட்டை சூழ்நிலைக்கு தக்க மாற்றி நினைத்துக் கொள்வேன்.

“அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்” என்று அந்திம காலத்தில் சிகிச்சைக்காக கிளம்பும் இந்த பகலில் உன்னை கடைசியாக பார்க்கிறேன். திரும்பி வருவேன் என்று நம்பிக்கையில்லை. ஆண்டவனே இனி நீ பார்த்துக்கொள் என்று எழுதியிருப்பதாக நினைத்துக்கொள்கிறேன்.

நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு துக்கம் வராத பொழுதுகளில் அப்பாவின் இந்த பாட்டுதான் எனக்கு தாலாட்டு. சின்ன வயசில் நான் தூக்கம் வராமல் அழுதுகொண்டிருந்தால் ‘இரு அப்பாவ தாலாட்டு பாடச்சொல்லுறேன்’ என்று சொல்லிவிட்டு அந்த பாடலை காற்றில் மிதக்க விடுவாங்க அம்மா. இரவும் பகலும் உன்னை பார்த்துக்கிட்டு இருக்காங்க என்று அம்மா சொல்லுவாங்க.

அம்மா பாடும் தாலாட்டை விட அந்த பாடலில் வரும் ஆரிராரோ ஓ ராரிராரோ வரிகள்தான் என்னை சுகமாய் தூங்க வைக்கும்’’ என்று சொல்லிவிட்டு இந்தப் பாட்டு எனக்காக எழுதுன பாட்டுதான் இல்ல எனக்காக எழுதுன பாட்டுன்னு சகோதரரிடம் சண்டையிட்ட அனுபவத்தையும் அந்த சகோதரரும் இப்போது இல்லை என்று சொன்னபோது விசாலியின் வார்த்தைகளில் கனத்த சுமை இருந்தது.

‘’அப்பாவோட பதினான்கு பிள்ளைகளில் (ஒன்பது ஆண்மக்கள் – ஐந்து பெண்மக்கள்) கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என் கூட ஒட்டல.

அவனும் நானும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தபோது கண்ணே கலைமானே பாட்டில் கலை என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்றான். நான் மறுத்து எனக்காக எழுதிய பாட்டு என்று வாதிட்டேன். அவன் கடைசி வரை ஒப்புக்கொள்ளவேயில்லை.

இந்த பாட்டு யாருக்காக எழுதினேன்னு அப்பாகிட்ட கேட்க அப்பாகிட்டேயே போயிட்டான். அவன் சாகக் கூடிய வயசில்ல. எமனுக்கு இது தெரியல. ரத்த உறவுன்னு இருந்த ஒண்ணும் போச்சு.

கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான்’’என்ற சுமை மிகுந்த வார்த்தையை விசாலி வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது அவரது எட்டு வயது மகன் விஷ்வா குடுகுடுன்னு ஓடிவந்து காதில் கிசுகிசுத்து ஏதோ கேட்க, ஆமாம் தாத்தாதான் என்று சிரித்தார்.

‘’அப்பா எனக்காக இன்னொரு பெருஞ்சொத்து கொடுத்திருக்கிறார். வெளியூரில் இருந்த அப்பாவுக்கு நான் பிறந்த செய்தி கிடைத்ததும் எனக்காக எழுதின பாட்டுதான் அது.

சித்திரை மாதம்
திருவம்மாவாசை
சத்தியமகவாய்
தாய்விசாலாட்சி
அவதரித்ததை என்
அகக்கண் அறியும்
ஆண்மை அதிலே
பிறக்குமானால்
அவலம் சோகம்
அடிக்கடி நிகழும்
பெண்மை அதிலே
பூத்துக் குழுங்கினால்
ஞானம் பெருமன
நவில்வது வேதம்!

என்று அப்பா எழுதியிருக்கிறார்.

அப்பா இன்னொரு கவிதையும் எழுதியிருக்காங்க. (ஒரு சின்ன சிரிப்புக்குப் பின்) நான் பிறந்த சமயம் (1977) சென்னையில் ஒரு கவியரங்கத்தில் அப்பா கலந்து கொண்டிருந்திருக்காங்க. அப்போ அப்பாவுக்கு ‘அழுகை’ தலைப்பு கொடுத்திருக்காங்க.

எனக்கு இப்போ பொருத்தமான தலைப்புதான் கொடுத்திருக்காங்க என்று சொல்லிவிட்டு கவிதை வாசித்திருக்கிறாங்க. அந்தக் கவிதையின் முடிவில் ‘என்னை ஆசையாய் பெற்ற தாயோ அழுவதற்கென்றே பெற்றாள்’ என்று முடிச்சிருக்காங்க. (மீண்டும் ஒரு சின்ன சிரிப்புக்குப் பின் )

அப்பா கடைசியா படைச்சது ஏசு காவியம். நான் முதன்முதலா எழுதின கவிதை ஏசு பற்றித்தான். கிருஸ்துமஸ் எனும் தலைப்பில்தான் ஏழு வயதில் அந்தக் கவிதையை எழுதினேன்.

அப்பா கூட பதினேழு வயதில்தான்(1944) முதல் கவிதை எழுதினார். அவரு மகள் ஏழு வயதிலேயே கவிதை எழுதிவிட்டாய் என்று என்னை கொண்டாடினாங்க.

மாட்டுத் தொழுவத்திலே தேவன் மனிதரிலே தேவன் மனிதனாக வந்த புனிதன் என்று அந்தக் கவிதையில் எழுதியிருப்பேன். இத்தனை சின்ன வயதில் எப்படி இப்படி எழுத முடியும்? மனிதரிலே புனிதன் என்று ஏழு வயதில் எப்படி எழுத முடிந்ததுன்னு என்னை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்க.

ஆனால் அம்மா மட்டும், ‘ நீ எழுதல சாலா. நீ எழுதுகோல்தான். உன்னை பிடிச்சு அப்பாதான் எழுதுறாரு’ன்னு சொன்னாங்க. அப்பாவின் அசரீரிதான் என் எழுத்துக்கள் என்பது அப்போது எனக்கும் தெரியல.

அந்த ஒரு கவிதைக்கு பிறகு நான் எதுவும் எழுதல. ஒரு கவியரசரின் பொண்ணு இப்படி இருக்கலாமான்னு அம்மா என்னை சும்மா இருக்க விடல.

அப்பா எழுதுன கவிதைகள், பாடல்கள், இன்ன பிற இலகியப்படைப்புகள் எல்லாவற்றையும் படிக்கச் சொல்லுவாங்க. அவற்றை படிக்காமல் யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால் காதை திருகி படிக்கச் சொல்லுவாங்க. அம்மா காதைத் திருகி திருகி நான் அப்பாவின் படைப்புகளை படிச்சேன்.

அப்போ எல்லாம் தொணதொணன்னு யார் கிட்டேயாவது பேசிக்கிடே இருப்பேன். சும்மா பேசிக்கிட்டே இருக்கியே எதாவது ஒரு கலையை வளர்த்துக் கொள்ளுன்னு சொல்லுவாங்க. அதைத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்னு அம்மாவுக்கு அப்போ தெரியல’’ என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தவர்,

சில காலங்களாகத்தான் நான் பேச்சை குறைத்துக்கொண்டேன். நட்பு வட்டத்தை சுருக்கிக்கிட்டேன். என்னை வாயாடின்னு சொல்லுவாங்க. இப்போ அனாவசிய பேச்சுக்கு இடங்கொடுக்கக் கூடாதுன்னு மொபைல் போன் கூட தவிர்த்துவிட்டேன் என்று தான் இப்போது வெளியுலகை விட்டு விலகி இருப்பதற்கான காரணத்தைச் சொன்னார்.

இலக்கியம், சினிமா, டிவி நிகழ்ச்சிகள் தொகுப்பாளர் என்று பரபரப்பாய் இருந்தவர் திடீரென்று இருக்குற இடமே தெரியாமல் இருப்பதற்கான காரணத்தைச் சொன்னார்.


கம்மங்காடு’ பாட்டுக்கு ஆட்டம் போட்ட பொண்ணா இப்படி என்று ஆச்சர்யப்பட வைத்தது.

விசாலியின் வீட்டு முகப்பில் சிவாலயம் என்று எழுதப்பட்டிருந்ததற்கான அர்த்தம் அப்போதுதான் புரிந்தது. பொதுவாக சிலருடைய வீட்டு முகப்பில் எழுதப்பட்டிருப்பது போல் இங்கேயும் எழுதப்பட்டிருக்கு என்று நினைத்தது தவறு என்பதை உணர முடிந்தது.

‘’மரியாதைக்குரிய டைரக்டர் பாலசந்தர் சார் கேட்டுக்கிட்டதால வானமே எல்லை படத்தில் நடிச்சேன்.

கம்மங்காடு கம்மங்காடு காடை இருக்கு பசியோடுன்னு ஆடுனேன்.

விருப்பப்பட்டுத்தான் நடிச்சேன். ஆனா அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தா இதுக்கு சம்மதிச்சிருக்கவே மாட்டாங்கன்னு அம்மா சொன்னாங்க.

அப்பா இருந்திருந்தா நான் செய்த பலவற்றை மன்னித்திருக்க மாட்டார். ஒவ்வொரு மனிதரிடமும் நிறை குறைகள் உண்டு. அப்படித்தான் கலைஞருக்கும்.

ஒருவரை பற்றி விமர்சனம் செய்வதென்றால் அவருடைய நிறைகுறைகள் இரண்டையும் பற்றி சொல்லணும். அவர் என் திருமணத்துக்கு எல்லாம் வந்திருக்கிறார். ஆனால் நான் மனசில் வச்சிப் பார்க்காம அவரின் குறைகளை மட்டுமே நிறைய பேசிட்டேன். இப்போது அதெல்லாம் தவறு என்று உணந்திட்டேன்.

அதுக்காக இதைப் போய் அவருகிட்ட சொல்லணும்னு நினைக்கல. என் மனசுக்கு தவறுன்னு படுது. திருத்திக்கிட்டேன்; அவ்வளவுதான். இது என்னோட குணம்.

எழுதுறது ஒண்ணு பேசுறது ஒண்ணு ஆனா நடக்குறது ஒண்ணுன்னு வைரமுத்து சாரை நான் கடுமையா விமர்சனம் பண்ணுனேன். அது தப்புன்னும் உணர்ந்திட்டேன்.‘கலங்கம் வந்தாலென்ன பாரு அதுக்கும் நெலான்னுதான் பேரு அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு’ன்னு அவரு எழுதுன வரிகள கேட்கும் போதெல்லாம் அவர தவறா விமர்சனம் பண்ணியிருக்க கூடாதுன்னு நினைக்குறேன்.

இது எல்லாத்தையும் இப்போ எழுதிக்கிட்டு இருக்குற ‘சத்தியவாக்கு’ புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

டிவி நிகழ்ச்சி தொகுப்புகளில் பெரும்பாலும் பெண்ணியம் பேசவேண்டியிருக்கு. அது எனக்கு ஒத்து வரல. நான் எல்லாத்தையும் பொதுவான பார்வையில் பார்க்குறேன். அப்படியே பேசினாலும் என்ன, அங்கே இருக்குறவங்க கைதட்டுவாங்க. அவ்வளவுதான்.

வெளி நிகழ்ச்சிகளுக்கு போவதையும் தவிர்த்திட்டேன். பணம் இருக்கும் ரசிகர்கள் தங்களின் அபிமானத்துக்குரியவர்களை தங்கள் இடத்துக்கே அழைத்து வருகிறேன் என்று அவர்கள் வட்டத்தில் சவால் விட்டு சிரிக்கிறார்கள்.

நான் அந்தப் பாடகியின் பெயரை சொல்ல விரும்பல. ஆனா அவர் பட்ட அவமானத்தை சொல்லுறேன். நான் நெடுநாள் ரசிகர். எனக்காக நீங்கள் வந்து இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பாடவேண்டும். உங்கள் பாட்டுக்காக என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொல்லி வெளிநாட்டில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.

அந்தப் பாடகியும் சென்றிருக்கிறார். அங்கே போனால் அவருக்கு அதிர்ச்சி. பார் டான்ஸ் நிகழ்ச்சியில் பாடுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று மனம் புழுங்கியிருக்கிறார். ஆனால் என்ன பண்ணுவது வாங்கிய பணத்துக்காக இரண்டு பாடலை பாடிவிட்டு வந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பதால் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையே தவிர்த்துவிட்டேன். அதற்காக ஒட்டுமொத்த ரசிகர்களையும் நான் அப்படிச்சொல்லல. எந்த ரசிகர் எப்படிப்பட்டவர் என்று இனங்காண வேண்டிய அவசியம் இல்லாமல்தான் என் பாதை இப்போது மாறிவிட்டது.

சிவசக்தி’ என்று நான் இசையமைத்து பாட்டு எழுதி, பாடியிருக்கும் பக்தி ஆல்பம் விசயமாக இளையராஜா சாரை பார்க்கப் போனேன். அப்போ ‘அப்பா கண்ணன் மேல் ஈடுபாடு உள்ளவர். நீங்க சிவன் மேல ஈடுபாடா இருக்குறீங்க. பரவாயில்ல என்று சிரித்துவிட்டு கண்ணனை ப்பற்றி ஒரு பாட்டு எழுதிக்கொடுங்க என்றார்.

என் சோம்பேறித்தனத்தை அறியாத அவர் ஒரு வாரம் கழிச்சு பாட்டு எழுதியாச்சான்னு கேட்டார். ரெண்டு நாள்ல எழுதிக் கொடுத்திடுறேன்னு சொன்னேன். இதே அப்பான்னா டக்கு டக்குன்னு எழுதிக் கொடுத்திடுவாங்க’ன்னு சொன்னார். நான் இப்டித்தான்னு சிரித்தேன். பரவாயில்ல டைம் எடுத்தே எழுதிக் கொடும்மான்னு சொன்னார்.

கண்ணனுக்கு என்ன வேணும்’னு எழுதிக் கொடுத்த அந்த பாட்டு தனம் படத்தில் இடம்பெற்றிருந்தது.

அது என்னவோ தெரியல எனக்கு நவீன இலகியங்கள் மீது நாட்டமில்லாம போயிட்டு. மரபுக்கவிதைகள் மட்டுமே எழுதி வந்திருக்குறேன். அதுவும் இப்போது ஏன் எழுதுனோம்னுதான் தோணுது. எத்தனையோ புத்தகங்கள் எழுதிவிட்டேன். ஆனா இப்போ எழுதிக்கிட்டு இருக்குற சத்தியவாக்கு புத்தகத்தை தான் முதல் படைப்பாக நினைக்கிறேன்.

அப்பா இறந்த சில நாட்களிலேயே என்னை சென்னை ஸ்ரீகாளிகாம்பாளிடம் தத்து கொடுத்திருக்காங்க அம்மா. அந்த அம்மாதான் எனக்கு இன்னொரு அம்மா. அப்போதிலிருந்தே எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு.

வளர்ந்து விட்ட பிறகு சிவன் மீதுதான் அதீத ஈடுபாடு உண்டு. அதுவும் திருவண்ணாமலை சென்று வந்த பிறகு நான் தீவிர சிவபக்தையாகி விட்டேன்.

அப்பா தீவிர கண்ணன் பக்தனாக இருந்தார். ஆரம்பத்தில் அவர் நாத்திகவாதியாக இருந்ததை அவரே மனம் வருந்தி ‘நாத்திகம் -என் இருண்ட காலம்’ என்று சொல்லியிருக்காங்க.

‘இருபதில் ஏதோ ஏதோ என்று தூண்டப்படுகின்ற கற்பனைகள், அறுபதில் இதுதானா இதுதானா என்று அடங்கிவிடுகிறது. ஆக, அந்த அறுபதிற்குரிய பக்குவத்தை இருபதிலேயே அடைந்துவிட ஆன்மீகம் மேற்கொள்வோமானால் இடைப்பட்ட நாற்பது வருட காலம் உண்மையாக வாழ்ந்தவன் என்ற கவுரவப்பட்டத்தை எப்படியேனும் நம் வாசலுக்கு கொண்டு வந்துவிடும்.’ (சிந்தித்தேன் சிந்தியதேன்)

திருவாடுதுறை ஆதீனம் மூலமாக சைவ சித்தாந்த வகுப்புகளுக்கு போய் கற்று வருகிறேன். ஒரு மனிதனை நல்வழிப்படுத்துதல் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்தை எல்லோருக்கும் ஏற்ற வகையில் எளிமைப்படுத்தித் தரும் முயற்சியில் இருக்கிறேன்.

ஆன்மீக ஈடுபாடு பற்றி சிலர் ஆச்சர்யமாக பார்க்குறாங்க. ‘நான் ஒரு லூசு மாதிரியே பேசத் தீர்மானித்து பிதற்றத் தொடங்கியதும்தான் கண்ணாரக் கண்டு களித்தேன் எனக்கு அறிவுரை வழங்க வந்த அத்தனை லூசுகளையும்.’ (சிந்தித்தேன் சிந்தியதேன்)

சதா சர்வ காலமும் ஆன்மீக தேடலிலேயே இருந்து வருவதால் வேறு எதையும் நினைக்கவோ செய்யாவோ முடியல. என் பிள்ளைக்கு பாடமெடுப்பதோ, பள்ளிவிழாக்களுக்கு தயார் செய்வதோ, நண்பர்களோடு கேளிக்கை விருந்துகளுக்கு ஏற்பாடு செய்வதோ, என்று எதுவுமே செய்யாத இந்த பொறுப்பற்ற தாய் தெரியாமல் ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தந்துவிட்டேன். அது சிவாயநம.

இப்போ இருக்குற காலத்துல குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம்.’தொலைக்காட்சியில் ஆணுறைக்கான விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க என் எட்டு வயதுமகன் என்னிடம் திரும்பி என்னம்மா அர்த்தம் என்ன அர்த்தம் என்று விடாமல் கேட்க நான் அமைதியாவே உட்கார்ந்திருப்பேன். அடி வயிற்றில் நெருப்போடு.

எத்தனையோ முறை கேட்டும் பதில் வராததாலோ என்னவோ இப்போதெல்லாம் அந்த விளம்பரம் வரும்போது அதை மவுனமாக கவனிக்கிறான். இப்போதுதான் நான் உணர்கிறேன் என் அடிவயிற்று நெருப்பு நெஞ்சுவரை பரவுவதை!’(சிந்தித்தேன் சிந்தியதேன்)

அம்மா (வள்ளியம்மை) வைணவ கல்லூரியில படிச்ச தமிழ்ப் புலவர். என்னை சென்னைக் கல்லூரியில பி.ஏ. ஆங்கிலம் படிக்க வச்சாங்க. அவுங்களும் 45 வயதுல இறந்துட்டாங்க.

அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல இந்த சமயத்துலதான் அம்மா இறந்த ஆறு மாசத்துல அவர(மனோகரன்) கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

உன் உயரத்துக்கு ஏற்ற மாதிரி, வாயாடித்தனத்துக்கு ஏற்ற மாதிரி யாரு வரப் போறாரோன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. எனக்கு ஏற்ற மாதிரியே ஆர்டர் பண்ணி வந்தது மாதிரி அவர் எனக்கு கிடைச்சிருக்கிறார்.

இந்த உலகத்தில் மிக முக்கியமான ஒன்றைப் போல என்னை நினைக்கிறார். பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்.’’

-என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பூனைக்குட்டி தாவி வந்து அவர் மடியில் உட்கார்ந்து கொண்டது.

தூக்கி எடுத்து முத்தமிட்டார். பின்னர் மடியில் போட்டுக் கொண்டு தடவிக்கொடுத்தார்.

‘’அப்பாவுக்கு நாய் மேல் ரொம்ப பிரியம். அவர் வளர்த்த நாய்க்கு‘சீசர்’ன்னு பேர் வச்சிருந்தார். சீசர் இறந்த பிறகு அதன் சோகம் தாங்காமல்‘என் இனிய சீசர்’ என்று கவிதை எழுதி அந்த கவிதையில் சீசரின் பிரிவுத் துயரத்தை சொல்லியிருந்தார்.

எனக்கு பூனைகள் மேல் பிரியம். நான் விஷ்வாவை (குழந்தையை) கொஞ்சுவதைவிடவும் இந்த மியாவ்வைத்தான்.அதிகம் கொஞ்சுவேன். அதனால் விஷ்வா அடிக்கடி சண்டை பிடிப்பான்.

அப்பாவை எல்லோரும் குழந்தை மனசுன்னு சொல்லுவாங்க. நிறைய நேரங்களில் அவர் குழந்தை மாதிரித்தான் நடந்துகொண்டிருக்கிறார்.

ஒரு நாள்(1962) மதியம் தூங்கி எழுந்தவருக்கு தீடீர் எண்ணம் வந்திருக்கு. நாம இறந்திட்டா என்ன நடக்கும், எல்லோரும் என்ன பண்ணுவாங்க’ன்னு பார்க்கஆசைப்பட்டிருக்காங்க.

உதவியாளரை அழைத்து திடீரென்று இறந்துவிட்டதாக எல்லோருக்கும் தகவல் அனுப்புன்னு சொல்லியிருக்கிறாங்க. அவரும் அப்படியே செய்ய, அலறி அடிச்சுக்கிட்டு எல்லோரும் வீட்டுக்கு வந்துட்டாங்களாம்.

எம்எஸ்வி சார், இயக்குநர் ஸ்ரீதர் சார் என்று சினிமா, அரசியல்பிரபலங்கள் அத்துனை பேரும் வந்துட்டாங்களாம். அவரோட உடம்பு இன்னும் வரல ஆஸ்பத்திரியில இருக்குன்னு சொல்லவும் எம்.எஸ்.வி.சார் அழுதிருக்கிறார். ஸ்ரீதர் சார் முகம் பொத்தி அழுதிருக்கிறார்.

இதையெல்லாம் மாடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த அப்பா இதுக்கு மேலயும் தாமதிக்கக்கூடாதுன்னு இறங்கி வந்திருக்காங்க.

என்னய்யா இப்படி பண்ணிட்டேன்னு அழுதவர்கள் எல்லோரும் பொய்க்கோவம் காட்டியிருக்கிறார்கள்.

அம்மாவும் சரி, அவரும்(கணவர்) சரி, என்னைப் பற்றி தெரிந்தவங்களும் சரி, என்னை குழந்தைன்னுதான் சொல்லுவாங்க. என்னை புதுசா பார்க்குறவங்க நான் பண்ணும் சேட்டைகளைப் பார்த்துட்டு ஆள் வளர்ந்த அளவுக்கு மெச்சூர் இல்லேன்னு சொலிட்டுப் போவாங்க.

அந்த அளவுக்கு இருக்கும் என் குழந்தைத்தனம். நானும் என் விஷ்வாவும் சேர்ந்துட்டா போதும் வீடே ரெண்டாகும். இந்த குழந்தைகளையும் வச்சிக்கிட்டு சமாளிக்க முடியலியேன்னு அவரு தலையில கையை வச்சிக்கிட்டு உட்கார்ந்திடுவாரு.

‘ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ பார்வையிலே குமரியம்மா பழக்கத்திலே குழந்தையம்மா நீ!’ என்று அப்பா எழுதிய பாடல் எனக்காவே எழுதப்பட்டிருக்கு என்று சொல்வாங்க அம்மா. இப்போ அவரும் அப்படித்தான் சொல்றாரு.

மேடைகளில் நான் பேசுவதை பார்த்துவிட்டு எப்படி சமாளிக்கிறீங்க என்று அவரிடம் எல்லோரும் கேட்கிறார்களாம். அவருக்குத்தானே தெரியும் நான் வீட்டில் குழந்தைன்னு’’ பெரிதாக சிரித்தார். தந்தையைப் போலவே தன்னையும் அரசியலுக்கு வரும்படி அழைக்கிறார்கள் என்றார். அழைப்புகள் இருந்தும் தான் இன்னும் வராமல் இருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார்.

‘’அப்பா 1949ல் திமுகவில் ஆரம்ப கால உறுப்பினர். 1957ல் திமுக சார்பில் திருக்கோஷ்டியூர் இரண்டாவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துவிட்டார். காங்கிரஸிலும் இருந்தார்.

அப்பாவிடம் சகிப்பு தன்மையும் கொஞ்சம் பணிந்து போகும் குணமும் இருந்தது. அதனால் அவர் அரசியலில் இருந்தார். என்னிடம் பணிந்து போகும் குணம் இல்லை. நான் எப்படி அரசியலுக்கு வரமுடியும்?

மேலும், அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லோரையும் ஏகத்துக்கும் புகழ்ந்துதள்ளனும், கூழைக்கும்பிடு போடனும். இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது.

‘நான் ஒரு ஞானக்குழந்தை/நான் ஒரு தெய்வப்பிறவி/நான் ஒரு வள்ளலின் வழித்தோன்றல்/நான் மனிதருள் ஒரு மாணிக்கம்/என்ன கைகொட்டி சிரிப்பீரோ?/பிறன் ஒருவனை நான் இப்படியெல்லாம் புகழ்ந்து அதன் மூலம் ஏதோ ஒன்றை அடைந்து அதன் வழியே நான் மகிழ்ச்சி பெறுவேன் என்று இருந்தால் அந்த மகிழ்ச்சியை என்னை நானே புகழ்ந்து பெற்றுவிடப்போகிறேன்.

இதற்கு பேர்தான் தன்னையே நேசிக்கும் கலை. இது கைவரப் பெற்றால் உலகையே ஆளும் மகாராஜாவைக் கூட உனக்கு மேற்பட்டவனாகப் பார்க்கத் தோன்றாது. இதுவே மனித குலம் பெறவேண்டிய தனித்துவம்.

எந்த நாய் இன்னொரு நாய்க்கு பாராட்டு விழா எடுக்கிறது? பன்றிக்கு பன்றி சால்வையா போர்த்திவிடுகிறது? மாறுங்கள் மனிதர்களே, இல்லையேல் மாறிவிடும் மிருகங்கள்.(சிந்தித்தேன் சிந்தியதேன்)

இதனால்தான் நான் அரசியலுக்கு வரத்தயங்குகிறேன். மற்றபடி அரசியல் குறித்த அறியாமை எல்லாம் என்னிடம் இல்லை’’ என்றார்.

தனது அறியாத வயதில் தந்தை இற்ந்துவிட்டார் என்றும் அவர் இன்று இருந்திருந்தால் இரண்டு கேள்விகள் கேட்டிருப்பேன் என்றும் பேச்சின் திசையை மாற்றினார்.

‘’ஆண் வேசி வீட்டுக்கு போய்விட்டு வந்தாலும் நல்ல மனைவி இன்முகம் காட்டுவாள் என்று அப்பா எழுதியிருக்காங்க. இது ஆணாதிக்கம்.

ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண் என்பவள் இப்படித்தான் இருக்கனும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. சமமான பார்வை வேண்டும்.

அப்புறம் ஒண்ணு, ‘என்னதான் நெஞ்சக்காயங்களுக்கு மருந்து போட்டு விடுகிறது என்றாலும், உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்பதும் ஒரு வகை வக்கிரம்தானே!(அப்பா மன்னிப்பீராக) என்று தான் எழுதி வரும் சிந்தித்தேன் சிந்தியதேனிலிருந்து சொன்னார்.

தந்தை செய்ய வேண்டும் என்று நினைத்து காலனின் அழைப்புக்கு இணங்கி ஓடிவிட்டதால் முடியாமல் போன காரியங்களை தான் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

‘’பதினான்கு வயதில் நான் எழுதிய ‘கிருஷ்ண கானம்’ நூல் வெளியீட்டு விழா சென்னை சோழா ஓட்டலில் நடந்தது. இந்த விழாவுக்கு ம.பொ.சி. ஐயா வந்தார்.அப்போது அவர் என்னிடம், ‘அப்பா எனது வாழ்க்கையை எழுதப் போவதாக சொன்னார். அதில் அவர் அதிகம் ஆர்வம் வைத்திருந்தார். எனக்கு கொடுப்பினை இல்லை. அதான் அதற்குள் அவர் போய்விட்டார் என்றார்.

அதனாலென்ன நான் இருக்கிறேனே என்றேன். அவரும் உன்னால் இது முடியுமா என்றெல்லாம் கேட்கவில்லை. எழுது என்றுவிட்டார்.

அவர் கூடவே ஒரு வருடம் இருந்து அவர் சொல்லச் சொல்ல எல்லாவற்றையும் கேட்டு தொகுத்து ‘ம.பொ.சி. ஒரு சகாப்தம்’ என்று எழுதினேன். அதுவும் மரபுக் கவிதை வடிவில் எழுதினேன்.

நீ எழுதல, உன்னை கண்ணதாசன் எழுத வச்சிருக்கிறாரு என்று அவர் என்னை பாராட்டினார். அது உண்மைதான். அந்த பதினான்கு வயதில் இவ்வளவு பெரிய விசயங்களையும் பொறுமையாக கேட்டறிந்து எழுதும் பக்குவம் எனக்கு எப்படி வந்தது? அது எனக்குள் இருந்து அப்பா எழுதியது.

அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் எழுதிய அப்பா அடுத்து குரான் பற்றி எழுதும் தீவிரத்தில் இருந்திருக்கிறார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

அந்த குறையை நான் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

திருக்குறளில் காமத்துப்பாலுக்கு எளிய வடிவில் புதுக்கவிதை நடையில் விளக்க உரை எழுதியிருக்கும் (1977) அப்பா, அடுத்து அறம்,பொருள் இரண்டையும் எழுதி முடிக்க பகவான் ஆரோக்கியத்தை எனக்கு அருள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் அப்பாவுக்கு பகவான் ஆரோக்கியத்தை அருளவில்லை. அறம், பொருள் இரண்டுக்கும் நான் விளக்க உரை எழுதப்போகிறேன்’’ என்றவர், தந்தை தயாரிப்பாளராக இருந்து மாலையிட்ட மங்கை, சிவகங்கை சீமை, கவலை இல்லாத மனிதன்,வானம்பாடி, ரத்தத்திலகம், கறுப்புப்பணம் என்று நிறையப்படங்களை தயாரித்தார்.

அதை நினைவுபடுத்தியதோடு இல்லாமல் நாமும் அப்படிச் செய்வோம். அதுக்கான ஆரம்பம்தான் இது என்று தன் கணவர் ரஷ் ஹவர், ஜாஸ்த்ரி, கேட் உமன் என்று வெளிநாட்டு படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வருதாக குறிப்பிட்டார்.

‘5000 திரைப்பாடல்கள், காவியங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,நாடகங்கள், புதினம், சுயசரிதை என நூற்றுக்கும் வேற்பட்ட நூல்களை படைத்திருக்கிருக்கும் கண்ணதாசனுக்கு கண்ணதாசன் பல்கலைக்கழகம், கண்ணதாசன் அறக்கட்டளை என்றெல்லாம் கொண்டு வர வேண்டும்’ என்று சொன்னதோடு இல்லாமல் அதற்கான முயற்சியில் தன் கணவர் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தந்தை பல பரிணாமங்களில் வாழ்ந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் ஒரே கோணத்திலேயே பார்க்கிறார்கள் என்று குறைப்பட்டுக்கொண்டார்.

‘’அப்பா ஒரு திறந்த புத்தகம். எதையும் அவர் ஒளித்து வைக்கவில்லை. மது, மாது என்கிற கோணத்திலேயே அவரை பெரும்பாலும் பார்க்கிறார்கள். கண்ணதாசன் காரைக்குடி பேரைச் சொல்லி ஊத்திக் குடி’ன்னு பாடுறாங்க.

அவர் பிறந்த சிறுகூடல்பட்டியில் சின்னவங்க, பெரியவங்க எத்தனையோ பேர் வந்து மண்ணை தொட்டு கும்பிடுவதை நானே பல முறை நேரில் பார்த்திருக்கிறேன்.’’என்றார்.

தன் தந்தை இறந்தபோது நாலரை வயதில் தான் செய்த அறியாமையை எண்ணி இப்போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

‘’அமெரிக்காவில் சிகாகோ ஆஸ்பத்திரியில் வச்சிருந்தாங்க அப்பாவை. (24.71981) இரண்டு மாசத்துக்கு பிறகு(17.10.1981, சனிக்கிழமை, இந்தியநேரப்படி 10.45க்கு) இறந்திட்டார்.

விமானத்தில் அப்பாவின் சடலத்துடன் அம்மாவோடு நானும் வந்திருக்கிறேன். அப்பாவின் சவப்பெட்டி மேல் ஏறி விளையாடியதும் அம்மா அழுதபடியே அதட்டியிருக்கிறாங்க.

சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும் (20.10.1981)பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்திருக்கிறார்கள். போட்டோ ப்ளாஷ்களுக்கு சிரித்திருக்கிறேன்.

அந்த நாலரை வயதில் நான் ரொம்ப புஷ்டியாக இருந்திருக்கிறேன். அதனால்தான், கண்ணதாசன் சடலத்துடன் அவரது பத்து வயது மகள் வந்தார் என்று பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள்’’ என்றவர், தான் அர்த்தமற்ற 15வது குழந்தையாக அப்பாவுக்கு பிறக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

நீ எழுதல சாலா, அப்பாதான் உனக்குள் இருந்து எழுதுறாருன்னு அம்மா சொன்னதை இப்போதுதான் உணர்கிறேன். எழுத ஆரம்பிக்கும் வரை என் மனநிலை வேறு. எழுதணும் என்று உட்கார்ந்துவிட்டால் என் மனநிலை எனக்கே ஆச்சர்யாமக இருக்கும். எனக்குள் அசரீரியாய் இருந்து என்னை எழுதவைப்பதும் அப்பாதான்.

அப்பா ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்ன நிறைய விசயங்கள் நடந்திருக்கு. 18 வயசில சாலா நல்ல நிலையில இருப்பான்னு சொல்லியிருக்காங்க அப்பா. அது நடந்துச்சு.

எழுத்தாளர்களும் பேச்சாளர்களுமான நெல்லை கண்ணன் ஐயாவும், தமிழருவி மணியன் ஐயாவும் என் மேடைப் பேச்சைக் கேட்டு ‘அப்பா பேசுனது மாதிரி இருக்குன்னு’ சொல்லியிருக்காங்க.

எத்தனையோ பேர் என்னை ‘நீ கண்ணதாசனின் மிச்சம்’னு சொல்லியிருக்காங்க. அதை காப்பாற்றணும்னு உணர்கிறேன்.

அப்பா அமெரிக்கா செல்லும்போது அம்மாவிடம் நான் திரும்பி வருவேன் என்பது நிச்சயம் இல்லைன்னு சொன்னவங்க சாலாவ பத்திரமா பார்த்துக்கோன்னு சொன்னதோடு மட்டுமில்லாம, ‘சாலாவுக்கு நான் வானவீதியில் இருந்து வாழ்த்துப்பா பாடிக்கிட்டே இருப்பேன்’ன்னு சொல்லியிருக்காங்க.

எழுதி முடித்துவிட்ட போதெல்லாம், நல்ல விசயங்கள் பேசி முடித்துவிட்டபோதெல்லாம், நல்ல விசயங்கள் செய்து முடித்துவிட்ட போதெல்லாம், மனசுக்கு சந்தோசமான நேரத்துல எல்லாம் நான் வான வீதியை பார்க்கத் தவறுவதில்லை’’என்று நெகிழ்ந்தவர் நெஞ்சோடு பூனைக்குட்டியை அணைத்துக் கொண்டு அண்ணாந்து பார்த்து கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொண்டார்.

(நன்றி – நக்கீரன்)

கண்ணதாசன் கவிதை


பொதுவாக எனக்கும் கவிதைக்கும் கொஞ்ச தூரம். பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்றால் அனுப்பிய நண்பர் விமலை வாழ்த்திக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் திட்டிக் கொள்ளுங்கள்!

ஓவர் டு கண்ணதாசன்!

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான் !

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான் !

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான் !

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான் !

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான் !

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான் !

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான் !

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான் !

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான் !

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன
இறந்து பாரென இறைவன் பணித்தான் !

அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன் !

ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான் என்றான்

சுகுமாரி – அன்றும் இன்றும்


விமலுக்கு மீண்டும் நன்றி!

ரேவதி – அன்றும் இன்றும்


விமலுக்கு மீண்டும் நன்றி!

விக்ரம் – அன்றும் இன்றும்


விமல் அனுப்பிய சில ஃபோட்டோக்கள் இன்னும் மிச்சம் இருக்கிறது என்பதை சமீபத்தில்தான் உணர்ந்தேன். இந்த முறை விக்ரம். நன்றி, விமல்!

சந்திரபாபு – 25


நன்றி : ஆனந்த விகடன், விமல்

சந்திரபாபு – தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?

1. கடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலைமுத்து. பனிமயதாசன் என்று பெயர். கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார்!

2. பெற்றோர் ரோட்ரிக்ஸ் – ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையும் நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட, கூடவே சென்ற சந்திரபாபுவும் கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்!

3. கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாழு. ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்!

4. காமராஜருக்கு அறிமுகமான குடும்பம் பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில் அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே!

5. சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!

6· மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது- பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்சுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா!

7. முதல் படம், தன அமராவதி (1947), கடைசிப் படம் பிள்ளைச் செல்வம் (1974), 50-களில் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்!

8· புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது!

9. ரப்பரைப் போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!

10. எம்.ஜி.ஆரை `மிஸ்டர் எம்.ஜி.ஆர்.’ என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அது பற்றி இவர் கவலைப்படவும் இல்லை!

11· `புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்கை. ஆனால், புகழ் பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு’ என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்!

12· ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!

13· ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போதும் அழுகின்றான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்துல’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா’ ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!
(இந்த ஒரு பாட்டுக்குத்தான் வீடியோ கிடைத்தது!)

14. எஸ்.எஸ். வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். `நான் தீக்குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது’ என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார !

15· சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். சகோதரி படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!

16· எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் `எனக்காக அழு’, ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!

17· ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!

18· நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். `சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல’, அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல’ என்று சொன்னார்!

19· மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். “மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன்; ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத் தந்த என்னுடைய மாமனார்; ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத் தந்தவர் ஜெமினி கணேசன்’’ என்றவர்!

20· ‘பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும்போது, ‘ஓ ஜீசஸ்!’ என்று சொல்லியபடிதான் நுழைவார்!

21· ஜனாதிபதி மாளிகையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் பிறக்கும் போதும் அழுகின்றான் பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட, உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு, `கண்ணா நீ ரசிகன்டா’ என்று அவரது தாடையைத் தடவ, ஜனாதிபதியும் மகிழ, உற்சாகமான பொழுது அது!

22· தட்டுங்கள் திறக்கப்படும் அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்‌ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!

23· நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஒவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும் கூட. `ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்’ என்று சிரிப்பார்!

24· ‘நீ ஒரு கலைஞன், கற்பனை வளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்’ என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!

25· ‘என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப் போல நடித்துக் காட்டட்டும், பார்க்கலாம்!’ என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை!

பிற்சேர்க்கை: சாரதாவின் மறுமொழியிலிருந்து –

சந்திரபாபு இறப்பதற்கு சில காலம் முன்பு, பிலிமாலயா என்ற சினிமா மாதப் பத்திரிகையில் மாடி வீட்டு ஏழையின் கண்ணீர்க் கதை என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒளிவு மறைவின்றி எழுதியிருந்தார். அதனால் அந்த பத்திரிகை அலுவலகம் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, தொடர் நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுக்காதவர் என்ற அவப்பெயர் இவருக்கு உண்டு. அதுபற்றி பல பேர் பல சமயங்களில் கூறியிருக்கிறார்கள். அவருக்கிருந்த மார்க்கெட் வால்யூவுக்காக படங்களில் போட வேண்டியிருந்தபோதிலும், முடிந்தவரையில் ‘கழட்டி விடவே’ பார்த்தனர். அந்த நேரம் ஆபத்பாந்தவனாக நாகேஷ், புயலாக திரையுலகில் நுழைய, இவர் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டார்.

அது போலவே பாடல் பதிவின்போதும் இவரை வைத்து பாடல் ஒலிப்பதிவு செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்பார்கள். சமீபத்தில் கூட ஜெயா டி.வி.யின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் டி.கே.ராமமூர்த்தி சொன்னார். சிரத்தை எடுத்துப் பாடமாட்டார், திருப்பி திருப்பி டேக் வாங்குவார். அப்போதெல்லாம் ட்ராக் சிஸ்டம் கிடையாது என்பதால் பாடகர் ஒருவர் தப்பு செய்தாலும் அனைத்து இசைக்கருவி வாசிப்பவர்களும் திருப்பி திருப்பி வாசிக்க வேண்டும். அதனால் இவர் பாட்டு என்றால் இன்ஸ்ட்ருமெண்ட் பிளேயர்கள் ஜகா வாங்கி ஓடுவார்களாம்.

புகழின் உச்சியில் இருக்கும்போது இது போன்ற வேண்டாத பழக்கங்களால் மார்க்கெட்டை இழந்து தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர். (தற்போதைய நடிகர் கார்த்திக் போல. வளமாக ஒளி வீச வேண்டிய அருமையான வயதுகளை கார்த்திக் எப்படி தொலைத்து நின்றார் என்பது நமக்குத் தெரியும்தானே).

நடிகர் ஜெமினி கணேசன் சாவி வார இதழில் எழுதி வந்த ஆசையாக ஒரு அசை வாழ்க்கைத் தொடரில், ‘நடிகை சாவித்திரியின் வேண்டாத பழக்கங்களுக்கும், விபரீத முடிவுக்கும் சந்திரபாபுதான் காரணம்’ என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இவைற்றையெல்லாம் மீறியும் சந்திரபாபு சுடர் விட்டாரென்றால் அது அவருடைய அபார திறமையால் என்பதில் சந்தேகமில்லை.

எந்த உயரத்திலிருந்தும் தானே குதிப்பார் என்பதை மெய்ப்பிக்கும் ஒரு இடம் – ஆண்டவன் கட்டளையில் சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடலில் ஒரு பஸ்ஸின் டாப்பிலிருந்து படுக்கை வசத்தில் பொத்தென்று விழுவார். கீழே நிற்பவர்கள் அவர் குதிக்கத் துவங்கிய பின்னர்தான் கைகளைக் கோர்ப்பார்கள். அவர்கள் கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும் விபரீதமாகியிருக்கும். ரொம்பவே தைரியம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சந்திரபாபுவும் புதுமைப்பித்தனும்
1964-இல் சந்திரபாபுவின் பேட்டி
சந்திரபாபுவின் மாஸ்டர்பீஸ் – சபாஷ் மீனா
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் முகில்
சந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு புக் ஆன கதை

“களவாணி” (திரைப்பட விமர்சனம்)


பழைய படங்களுக்கு விமரிசனம் எழுதி கலக்கும் சாரதா இந்த முறை புதுப்படம் களவாணிக்கு விமர்சனம் எழுதுகிறார். ஓவர் டு சாரதா!

படம் பார்த்தபோதே ரொம்ப விரிவாக எழுதணும்னு நினைச்சேன். நேரமில்லையோ அல்லது வேறென்னமோ, முடியவில்லை. (இப்போ படம் ஓடிக்கிட்டிருக்கா அல்லது எடுத்துட்டாங்களா தெரியவில்லை இன்னமும் ஓடிக்கொண்டிருக்கணும்னு நினைக்கிறது எனது பேராசையாகக்கூட இருக்கலாம்). இருந்தபோதிலும் இந்த விமர்சனம் என் ஆத்ம திருப்திக்காக.

தற்போதைய படங்களில் கிராஃபிக்ஸை கையில் வைத்துக் கொண்டு செப்படி வித்தை காட்டிக் கொண்டிருப்பவர்களூக்கு மத்தியில் எவ்வளவு நாளாச்சு இப்படி ஒரு மனதை வருடும் படத்தைப்பார்த்து.

தும்பைப்பூ போல வெள்ளை வெளேர் வேஷ்டியும் சட்டையுமாக வரும் கதாநாயகன் அறிவழகன் (நண்பர்களுக்கு அறிக்கி) செய்வதெல்லாம் அநியாயம். வீட்டில் அம்மாவை மிரட்டி பணம் பறித்துச்சென்று தண்ணியடிப்பது, கூட்டாளிகளோடு பொறுப்பில்லாமல் ஊர்சுற்றுவது என்று திரிந்தாலும் அவன் மேல் கொஞ்சம் கூட நமக்கு கோபமோ வெறுப்போ வரவில்லை. காரனம் நம் மனதைக் கட்டிப் போடும் விமலின் புன்னகையா? பார்க்கின்ற ஸ்கூல் பொண்ணுங்களையெல்லாம் பார்த்து என்னை ‘கட்டிக்கிறேன்னு சொல்லு’ என்று வேடிக்கையாக சொல்லி வைக்க, ஒரு நாள் நிஜமாக அப்படி சொல்லவைக்கக்கூடிய ஓவியாவைப் பார்த்ததும் சொக்கிப் போவது, தன் வயலில் நெல் பிடுங்கியவளை அவளுடைய தோழிகள் முன்னால் கண்டித்துவிட்டு, பின்னர் தோழிகளைப் போகச் சொல்லிவிட்டு தனியாக, ‘எவ்வளவு வேணும்னாலும் நெல் பிடுங்கிக்கோ. ஆனா என்னை கட்டிக்கிறேன்னு மட்டும் சொல்லிடு’ என்று குழைவதும், பல முறை அவன் கோரிக்கையை மறுக்கும் ஓவியா, தனக்காக விடிய விடிய உட்கார்ந்து வீட்டுப் பாடம் எழுதி வரும் அவன் அன்பில் நெகிழ்ந்துபோய், அவன் கேட்காமலேயே ‘உன்னை கட்டிக்கிறேன்’னு சொல்வதும் கவிதை நயம்.

ஆனால் அண்ணன் சொன்னதுக்காக யாருக்காகவோ விடிய விடிய வீட்டுப்பாடம் எழுதும் அந்த தங்கை கேரக்டர் கண்ணிலேயே நிற்கிறாள். அப்பா தனக்காக துபாயிலிருந்து வாங்கிவந்த பொருட்களையெல்லாம் அண்ணன் தனக்குத் தெரியாமல் அவன் காதலிக்கு கொடுத்துவிட்டான் என்று தெரியாமல், அலமாரியிலிருந்த பொருட்களைத் தேடி ஏமாறும் அந்தக் குழந்தையைக் காண பரிதாபமாக இருக்கிறது.

சரண்யா, யாரோ ஒரு ஜோசியன் சொன்னதைக் கேட்டு, ‘ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா எம் மகன் டாப்ல வந்துருவான்’ என்று நம்பிக் கொண்டு அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடு கொடுப்பதும், அதே சமயம் துபாயிலிருந்து கணவன் அனுப்பும் பணத்தை மகனுக்குத் தெரியாமல் மறைக்க நினைப்பதும், வெளிநாட்டில் தன் கணவனோடு வேலை செய்யும் நண்பர் வீட்டுக்கு வந்து பையனுடைய நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள, அதை தன் கணவனிடம் சொல்லவேண்டாமென்று கேட்டுக் கொள்வதுமாக ‘அரசனூர் அத்தாச்சி’யாகவே மாறிட்டார்னு சொல்லணும். (மறைத்து என்ன பயன்? கணவர் துபாயிலிருந்து திரும்பும்போது, டாக்ஸியில் வரும்போதே மகனைப் பத்தி நேரில் பார்த்தே தெரிஞ்சிக்கிறார்).

கிட்டத்தட்ட தான் வரும் காட்சிகளில் முக்கால்வாசி இடங்கள் பள்ளி யூனிபார்மிலேயே வரும் ஓவியா, அரை இஞ்ச் மேக்கப் ஏற்றப்பட்ட செயற்கை நாயகி அல்ல. தினமும் நம் கண்ணெதிரே நடமாடும் இயற்கை நாயகி. அபூர்வமாக வரும் பாவாடை தாவணியிலும் கொள்ளை அழகு. எப்போதும் முகத்தில் கள்ளமில்லா குழந்தைக்குரிய குதூகலம். இவரைத் தேடிப் பிடித்த இயக்குனர் சற்குணத்தைப் பாராட்ட வேண்டும்.

தண்ணியடிக்க, ஊர் சுற்ற வீட்டில் காசு பெயராத நேரங்களில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் போவதாக வெளியூர்களில் வசூல் செய்து காசு தேற்றிக் கொள்வது நல்ல தமாஷ். இருந்தாலும் நண்பர்கள் சதா தண்ணியில் தள்ளாடுவது நெருடுகிறது. அதுபோல, நண்பனுக்காக அடுத்த ஊரில் போய் பெண்ணைத் தூக்கி வருவதும், அவர்கள் விரட்டி வருவதும், பஞ்சரான காரிலிருந்து இறங்கி, வெளிநாட்டிலிருந்து அப்பா வந்துகொண்டிருக்கும் டாக்ஸியிலேயே ஏறிக்கொள்வதும், அப்பா பின் சீட்டில் இருப்பது தெரியாமல் தன் வீரப் பிரதாபங்களை டிரைவரிடம் அவிழ்த்து விடுவதும் ரொம்ப தமாஷாக, அதாவது சுவையாக எடுக்கப்பட்டுள்ளது. (வழக்கமாக இம்மாதிரி விஷயங்களில் இரண்டு தலைகளாவது உருளும்).

இதில் அதிசயப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், இரண்டு ஊர்களுக்கும் நடுவில் இவ்வளவு பகையிருந்தும், அது காலம் காலமாக புகைந்து கொன்டிருந்தும் ஒரு சண்டைக் காட்சி கூட இல்லாதது. அட ஆமாங்க, கிளைமாக்ஸில் கூட சண்டை இல்லாத அதிசயப்படம் சமீபத்தில் இதுவாகத்தான் இருக்கும். கல்யாணத்தன்று பெண்ணைத் தூக்கிப் போவதைத் தொடர்ந்து இவ்வளவு கார் துரத்தல்கள் இருந்தும் கூட சண்டையில்லாமல் படம் முடிவது பெரிய ஆறுதல்.

அதோடு சந்தோஷப்பட வைக்கும் விஷயமும் உண்டு. கதாநாயகனை வீர சூர பராக்கிரமனாகக் காண்பிக்காமல், சாதாரண மனிதனாகக் காண்பித்திருப்பது. ஐம்பது பேர் சுற்றி வளைத்தால் கூட பறந்து பறந்து அடித்து, அவர்களை துவைத்து துவம்சம் செய்து, சட்டை கசங்காமல் எழுந்து நிற்கும் கதாநாயர்களையே பார்த்து அலுத்து, சலித்து, நொந்துபோயிருக்கும் நமக்கு, ஐந்து பேர் சுற்றி வளைத்தாலே தப்பி ஓடுவதில் குறியாக இருக்கும் யதார்த்த கதாநாயகன் புதுசுதானே!

கஞ்சா கருப்பு பற்றி சொல்லலேண்ணா எப்படி? தாமிரபரணியில் காவேரி தண்ணீரைக் கலந்த பிறகு, இந்தப்படத்தில்தான் அவர் மீண்டும் சோபிக்கிறார். இவரை பகடையாக வைத்து கதாநாயகனும் அவனது நண்பர்கள் கூட்டமும் அடிக்கும் லூட்டி, அமர்க்களம். பஞ்சாயத்தாக வரும் அவர் பாலிடால் குடித்து விட்டதாக புரளி கிளப்பி விடுவதென்ன, அதைக்கேட்டு ஓடிவரும் அவர் மனைவியிடம் ‘உன் நடத்தையில் சந்தேகப்ப்பட்டுத்தான் விஷம் குடித்தார்’ என்று திசை திருப்பிவிடுவதென்ன, தான் செத்துவிட்டதாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படுவதை தன் காதாலேயே கேட்க நேருவதென்ன, ரிக்கார்ட் டான்ஸ் ஆடும் பெண்ணுக்கு அவர் அன்பளிப்பு செய்ததாக சீட்டு அனுப்பி குடும்பத்தில் குழப்பம் விளைவிப்பதென்ன… அட்டகாசம்தான்.

காதலில் விழுந்துவிட்ட நாயகன், தன் காதலி கையால் நடப்பட்ட நாற்றுக்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கேர் எடுத்து உரம் போடுவதும், பூச்சிமருந்து தெளிப்பதும், அதனால் அவை மட்டும் மற்ற பயிர்களை விட உயரமாக வளர்வதும் அழகான இடைச்செருகல்கள். குறிப்பாக LC112 புதிய ரக நெல் பற்றி புரளி கிளப்புவதும், ஊர் முழுக்க எழுதி வைத்து ஓவியாவை பயமுறுத்துவதும் சின்ன சின்ன கவிதைகள்.

கதைக்களம் பச்சைப்பசேல் என்றிருக்கும் எங்கள் தஞ்சை மாவட்டம். திரும்பும் இடமெல்லாம் (தார்ச்சாலைகள் தவிர்த்து) பசுமைக் கம்பளம் விரித்தாற்போன்று கண்களுக்கு குளிர்ச்சி. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, அரசனூர், ராணிமங்கலம் என இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். காமன் பண்டிகை விழாவிலும் அதையொட்டி நடக்கும் ரிக்கார்ட் டான்ஸிலும் மனதைக் கவரும் மண்வாசனை. அதற்கேற்றாற்போல மனதை வருடும் இசை. ஒளிப்பதிவு செய்த ஓம் பிரகாஷுக்கும், இசையமைத்த எஸ்.எஸ். குமரனுக்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் படம் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்ட கிராஃபிக்ஸ் பிரியாணி அல்ல. ஓலைக்குடிசையில் சாம்பார், வத்தல் குழம்புடன் உண்ட ருசியான கிராமத்து உணவு.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பக்கம், திரைப்படங்கள்

ஆரூர் தாஸ் நினைவுகள் 1


சினிமா வசனகர்த்தா ஆரூர் தாஸ் எழுதிய புத்தகத்தில் இருந்து (நன்றி : தினமலர், விமல்)

ஒரு நாள் ஒப்பனை அறையில் நாங்கள் தனித்திருந்த வேளையில் எம்ஜிஆர், என்னிடம் (ஆரூர் தாஸ்) சொன்னார்:

“பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான். அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கேன். இப்போ புகழின் உச்சியிலே இருக்கேன். வசதிக்குப் பஞ்சம் இல்லே. தினமும் என் வீட்டுல மூணு வேளையும் குறைஞ்சது 50–60 இலைங்க விழுது. ஆனாலும், ரெண்டே ரெண்டு குறைகளை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது. ஒண்ணு: குழந்தைங்க வாரிசு இல்லாத குறை ! இன்னொண்ணு…’

நான் இடைமறித்து, “ஏன், பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க வாரிசு இல்லே. அதனால் என்ன குறைஞ்சி போயிட்டாரு !’ என்றேன்.

“அப்படி இல்லே. காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்தால குழந்தைங்க இல்லாம போயிடுச்சி; ஆனா, எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே!

எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா?’ அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.

பெரிய, பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சி என் ஜாதகத்தைக் காட்டிக் கலந்து ஆலோசனை பண்ணுவேன், ஜோதிடர் கலையில் நிபுணர்களான ரெண்டு, மூணு பேரு மட்டும் ஒத்து ஒரே கருத்தைச் சொன்னாங்க.

இது பலதார ஜாதகம்! ஒங்க வாழ்க்கையிலே பல பெண்கள் குறுக்கிடுவாங்க. அவுங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க; ஆனா, அவுங்க யாரும் ஒங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க; குடுக்கவும் முடியாது. குறை அவுங்ககிட்டே இல்லே’ன்னு சொன்னாங்க.

சமீபத்தில் ஆயுள் இன்சூரன்சுக்காக முக்கியமான ஒரு பெரிய மருத்துவர்கிட்டே உடல் பரிசோதனை பண்ணிக்கிட்டேன். அவர் உங்க மாதிரி என் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். இனிமே எனக்கு குழந்தை உண்டாகிறதுக்கு வாய்ப்பே இல்லேன்னு உறுதியா சொல்லிட்டாரு.

அதைக் கேட்டு நான் அப்படியே உடைஞ்சி நொறுங்கிப் போயிட்டேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கவே இல்லே. அழுது, அழுது தலையணையே நனைஞ்சிடுச்சி.

என் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு, எனக்கு ஒரு குழந்தை – ஒரே ஒரு குழந்தையைக் கூட குடுக்க மனசு வரலே பாத்தீங்களா?

எத்தனையோ சகோதரிகள், தாய்மார்கள் அவங்க பெத்தக் குழந்தைகளை என் கையில் கொடுத்து என்னைப் பேர் வைக்கச் சொல்லும்போது, உள்ளுக்குள்ளே என் நெஞ்சு பதறும். ஆனாலும், அதை வெளியில் காட்டிக்காம, அந்தக் குழந்தைகளுக்கு அப்பப்போ எனக்குத் தோணுற பேரை வச்சி, அவுங்க ஆசையை நிறைவேத்துறேன். போகட்டும்… நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்!

என்னோட ரெண்டாவது குறை என்னன்னா ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்திலே கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர பெரிசா ஒண்ணும் படிக்கத் தெரிஞ்சுக்கலே. இளமையிலே பட்ட வறுமை காரணமா அந்த வாய்ப்பு, வசதி இல்லாமப் போயிடுச்சி.

அண்ணாதுரை, கிருபானந்த வாரியார் இவுங்களோட சொற்பொழிவைக் கேட்கும்போது, என்னால அவுங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைச்சி வருத்தப்படுவேன். ஆனாலும், எப்படியோ பேசிச் சமாளிச்சி, மத்தவங்களை சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும் குறை, குறைதானே! அதுவும் பூர்த்தி செய்ய முடியாத குறை. அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா அதுலயாவது நான் பெரிய புள்ளைக் குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!

நடிப்பிற்கு அப்பாற்பட்டு அவரது கண்கள் நீர் நிலைகளானதை நேரில் நான் கண்டது அதுவே முதல் முறை!

நண்பர் கண்பத் எம்ஜிஆர் யாரிடமும் மனம் திறந்து பேசமாட்டார், இது சும்மா ஆரூர் தாஸ் அடிக்கும் உடான்ஸ் என்று கருதுகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எம்ஜிஆர் பக்கம், ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆரூர்தாஸ் நினைவுகள் – 2
ஆரூர் தாஸ் நினைவுகள் 3

இசை அமைப்பாளர் சந்திரபோஸ் மறைவு


விமல் எழுதிய அஞ்சலி செய்தி கீழே.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் உடல்நலக் குறைவால் இன்று காலை (30/09/2010) காலமானார்.

சந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் கோமா நிலைக்குச் சென்றார்.

இதையடுத்து சென்னை ராயப்பேட்டை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை மிகவும் அபாய கட்டத்தில் இருந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவியது.

ஆனால், அவர் கொஞ்சம் உடல் நிலை தேறினார். அவர் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை (30/09/2010) சந்திரபோஸ் காலமானார்.

வி.சி.குகநாதன் டைரக்டு செய்த ‘மதுரகீதம்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், சந்திரபோஸ். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய ஏண்டி முத்தம்மா அவரை மிகப் பிரபலமாக்கியது.

பின்னர் இவர் இசையமைத்த மச்சானைப் பார்த்தீங்களா படத்தில் இடம்பெற்ற ‘மாம்பூவே சிறு மைனாவே’ என்ற பாடல் மிகப் பிரபலமடைந்தது.

தொடர்ந்து மாங்குடி மைனர், முதல் குரல், மைக்கேல்ராஜ், சங்கர் குரு, தாய் மேல் ஆணை, ராஜா சின்ன ரோஜா, விடுதலை உள்பட 120 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

ரஜினியின் மனிதன், ராஜா சின்ன ரோஜா, விடுதலை போன்ற படங்களுக்கு தொடர்ந்து இசையமத்து முன்னணியில் இருந்தார் சந்திரபோஸ். ஏவிஎம் தயாரித்த 12 படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தவர் சந்திரபோஸ்.

தமிழ் சினிமாவில் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் சந்திரபோஸ்.

மனிதன் படத்தில் வரும் வானத்தைப் பார்த்தேன், மனிதன் மனிதன், அண்ணா நகர் முதல் தெரு படத்தில் இடம்பெற்ற ‘மெதுவா மெதுவா’, சங்கர் குருவில் இடம் பெற்ற ‘காக்கிச் சட்ட போட்ட மச்சான்’, மக்கள் என் பக்கம் படத்தில் வரும் ‘ஆண்டவனைப் பாக்கணும்’ போன்ற பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை.

கடந்த சில ஆண்டுகளாக டிவி தொடர்களிலும் அவர் நடித்து வந்தார். மலர்கள், வைரநெஞ்சம், ஜனனம் போன்ற தொடர்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்தார்.

சமீபத்தில் தன் மகனுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்த சந்திரபோஸ், மனைவியுடன் மயிலாப்பூரில் வசித்து வந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

சந்திரபோசின் இசையில் எனக்கு (விமலுக்கு) பிடித்த பாடல்கள்

  1. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு (அண்ணா நகர் முதல் தெரு)
  2. நீலக்குயில்கள் ரெண்டு (விடுதலை)
  3. மாம்பூவே சிறு மைனாவே (மச்சானைப் பார்த்தீங்களா)
  4. இளங்குயில் பாடுதோ..யார் வரக்கூடுமோ… (கலியுகம்)
  5. ரவிவர்மன் எழுதாத கலையோ (வசந்தி)
  6. சின்ன சின்ன பூவே… நீ கண்ணால் பாரு (சங்கர் குரு)
  7. தோடி ராகம் பாடவா …மெல்லப்பாடு (மாநகரக் காவல்)
  8. ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே (வாய்க் கொழுப்பு)
  9. சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது..பொன்னாய் மணியாய் (சுவாமி ஐயப்பன்)
  10. பச்சப்புள்ள அழுதிச்சின்னா (புதிய பாதை)
  11. ஏதோ நடக்கிறது (மனிதன்)
  12. மனிதன் மனிதன் (மனிதன்)

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், ஆளுமைகள்

நாகேஷ்–25


அனுப்பிய விமலுக்கும், விகடனுக்கும் நன்றி!

நாகேஷ் மாறும் உடல் மொழி, ஏறி இறங்கும் குரல் ஜாலம், தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!

  1. பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்.
  2. பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா.
  3. பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
  4. இளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
  5. முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
  6. கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலர வைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!
  7. ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால் தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
  8. இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
  9. முதல் படம் `தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர். ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!
  10. `அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்!
  11. முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
  12. எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
  13. திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
  14. நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்!
  15. `அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்!
  16. இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்.
  17. டைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.
  18. பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
  19. `சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி.
  20. `நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.
  21. பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’
  22. `தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்!’
  23. தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.
  24. இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்.
  25. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாகேஷ் பக்கம்