சக்கரம்: பழைய திரைப்படம்


இந்தத் தளத்தில் பழைய திரைப்படங்களைப் பற்றித்தான் எழுதுவேன். வாரம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்று எண்ணம். ஆனால் பழைய படம் ஒன்றைப் பார்த்து கொஞ்ச நாளாகிவிட்டதால் தாமதமாக பதிவு வருகிறது.

சக்கரம் படத்தைப் பற்றிய எனது ஒரே நினைவு – அதில் “காசேதான் கடவுளப்பா” என்ற பிரபலமான பாடல் உண்டு.

நான் ஏ.வி.எம். ராஜன் நடித்த படங்களை பொதுவாக ரசிப்பதில்லை. அவர் சிவாஜியின் சுமாரான நகல் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. (இத்தனைக்கும் “என்னதான் முடிவு” எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்று.) அதனால் பழைய திரைப்படங்களை விரும்பிப் பார்த்தாலும் இதைத் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

கடைசியாக ஒரு வழியாகப் பார்த்தேன். வழக்கமான காட்சிகள் உண்டுதான் என்றாலும் தமிழுக்கு வித்தியாசமான படம்தான். வழக்கமான காதல், குடும்பம், பாசம் என்று இல்லாமல் இருப்பதே கொஞ்சம் refreshing ஆக இருக்கிறது. ராஜனின் பாத்திரமும் நடிப்பும் நன்றாகவே வந்திருக்கின்றன. அவருக்கு “வில்லன்” பாத்திரம்தான் என்றாலும் அவர்தான் நாயகன், ஜெமினி கணேசன் சும்மா ஒப்புக்கு சப்பாணிதான்.

1968-இல் வந்த திரைப்படம். ஜெமினி, ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா, சௌகார் ஜானகி, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், எம்.ஆர்.ஆர். வாசு, ஓ.ஏ.கே. தேவர், வி.எஸ். ராகவன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. திரைக்கதை, இயக்கம் ஏ. காசிலிங்கம்.

எளிய கதைதான். ஜம்பு (ராஜன்) மைசூர் காடுகளில் வாழும் நல்ல மனம் படைத்த கொள்ளைக்காரன். திருடும் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்துவிடுகிறான். பண்ணையார் (வி.எஸ். ராகவன்) வீட்டில் திருடப் போகும்போது அங்கு பிரசவ வலியால் துடிக்கும் பண்ணையார் பெண்ணைக் காப்பாற்றி அவளை தங்கையாக ஏற்றுக் கொள்கிறான். பணக்காரப் பையனோடு காதல் தோற்றுவிடும் என்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போகும் பாபுவின் (ஜெமினி) தங்கையைக் காப்பாற்றுகிறான். ஜம்புவை பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்திருக்கிறது.

பாபுவின் தங்கை காதலிப்பது அவனது எஜமானி அம்மாளின் (சௌகார்) பையனை. சௌகார் வசதி படைத்த குடும்பத்தவர்தான், ஆனால் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறார். 50000 ரூபாய் கொடுத்தால் உன் தங்கையை மருமகளாக ஏற்கிறேன் என்கிறார்.

பாபு ஜம்புவைப் பிடித்துக் கொடுத்து லட்ச ரூபாய் பரிசை வெல்லலாம் என்று கிளம்புகிறான். அவனுக்கு துணையாக அவன் காதலி (நிர்மலா); மற்றும் காடுகளைப் பற்றி நன்கு அறிந்த வழிகாட்டி (நாகேஷ்), கத்தி வீசும் நிபுணன் (ஓ.ஏ.கே. தேவர்), வர்மக்கலை நிபுணன் (வாசு), கயிறு வீசும் நிபுணன் ஒருவன் சம்பளம் பேசி சேர்ந்து கொள்கிறார்கள். ஜம்புவின் தோழர்களை இந்த நிபுணர்கள் கொன்றுவிட, பாபு ஜம்புவை சண்டை போட்டு தோற்கடிக்கிறான். ஜம்பு பாபுவிடம் சரண், தப்பி ஓடமாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறான்.

லட்ச ரூபாய் பரிசு, தங்களுக்கு நூறுகளில்தான் சம்பளம் என்று உணரும் தோழர்கள் பணத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். ஜம்புவின் தங்கைதான் நாகேஷின் மனைவி (மனோரமா). அண்ணனைப் பிடித்துக் கொடுத்தால் லட்ச ரூபாய் பரிசு என்றதும் பிடித்துக் கொடுக்க அவளும் தயாராக இருக்கிறாள். ராஜன் பணத்துக்கு முன் நட்பும் உறவும் ஒரு பொருட்டில்லை என்று காசேதான் கடவுளப்பா என்று பாட்டு பாடுகிறார். கடைசியில் சௌகார்தான் ராஜனின் மனைவி வேறு. சௌகார் தற்கொலை செய்து கொள்ள, பத்தினிக்கு பணம் தூசு என்று வசனம் பேசிவிட்டு ராஜனும் தற்கொலை. பணம் தேவையில்லை என்று எல்லாரும் மறுக்கிறார்கள்.

தமிழ் திரைப்படங்களில் எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள், twists எல்லாம் உண்டுதான். ஆனால் கதைக்களம் வித்தியாசமாக இருப்பதால் திரைப்படம் பிழைக்கிறது. ராஜன் நன்றாகவே நடித்திருக்கிறார். ஜெமினியும் நாகேஷும் தண்டத்துக்கு வந்து போகிறார்கள். நாகேஷுக்காக படம் கொஞ்சம் ஓடலாம் என்ற காலம். நிர்மலா அதை விட தண்டம்.

பழைய படம் விரும்பிகள் பார்க்கலாம். பத்துக்கு 6.5 மதிப்பெண். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: யூட்யூபில் திரைப்படம்

 

கொடி மலர்


1966ல் ஸ்ரீதர் டைரக்‌ஷனில் வந்த திரைப்படம்.  கதை மாந்தர்களைக் காட்டிலும் கதையை நம்பி எடுக்கப்பட்டத் திரைப்படம். ஸ்ரீதர் பொதுவாகவே அப்படித்தானே. அவருடைய அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் சில திரைப்படங்கள் இந்த இலக்கணத்தைப் பின்பற்றாமல் போனாலும்  அதற்கு முன்னர் வந்த திரைப்படங்களின் தரத்தை நாம் எப்படி சீர்தூக்கிப் பார்த்தாலும் சோடை போனதில்லை. கொடி மலர் அப்படிபட்ட தரமான ஒரு திரைப்படம்.

பிரபல நடிகர்கள் – முத்துராமன், ஏவிஎம் ராஜன், நாகேஷ்

பிரபல நடிகைகள் – காஞ்சனா, விஜயகுமாரி, எஸ்.என். பார்வதி, (முத்துராமனின் தாய் காரக்டரரில் நடித்தவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் முக்கிய ரோல். பிற்சேர்க்கை – எம்.வி.ராஜம்மா  – நன்றி அப்துல்)

இசை – எம்.எஸ்.விஸ்வனாதன் பாடல்கள் – கண்ணதாசன்

டைரக்‌ஷன் – C.V.ஸ்ரீதர்

சமூக மாற்றத்தின் விளம்பில் அகப்பட்டுக்கொள்ளும் குடும்பங்கள் எது சரி, எது தவறு, ஏற்றுக் கொள்வதா, ஏற்க மறுக்கவேண்டுமா என்று தடுமாறுகிறார்கள். குடுமபத்தில் சிலர் மற்றங்களை ஏற்றுக் கொள்வதும், சிலர் ஏற்க மறுப்பதும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இந்தப் பிரச்சனையை படம் பிடித்துக் காட்டும் ஒரு முயற்சியை கொடிமலிர்ல் ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார்.

முத்துராமன் அண்ணன். ஏவிஎம் ராஜன் தம்பி. இருவரும் இரு துருவங்கள். ஏவிஎம் ராஜன் கல்லூரியில் படித்து முடித்து வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது ”மாற்றம்” எனும் முன்னேற்றக் கொள்கைகளுடன் நுழைகிறார். பழமைவாதங்களில் மூழ்கியிருக்கும் தாயுடன் போராட்டம் துவங்குகிறது. மிகுந்த வசதி படைத்தவர்களாயினும் இளைய மகனின் மோட்டார் சைக்கிளையே தேவையற்ற ஒரு பொருளாக கருதுகிறார் தாய். அனாவசிய பண விரயம் என்று கருதுகிறார். தன்னிடம் அனுமதி வாங்காமல் மகன் த்ன்னிச்சையாக செயல்படுவதும் மரபிலிருந்து விலகிச்செல்வதும் தாய்க்கு ஒரு சுமையாகத் தெரிகிறது.  மகனோ தாயிடம் மரியாதையாகவும், அன்புடன் இருக்கவேண்டும், ஆனால் தன் வாழ்க்கை தனது, அதில் முடிவுகள் தனதாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் உறுதியாக இருக்கிறார். இதனால் மகனுக்கும் தாய்க்கும் இடைவெளி பெரிதாக உருவாகிவிடுகிறது. அதனால் தாயும் இளைய மகன் நம் கை அடக்கத்தில் இல்லை என்பதை மனதளவில் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் மகன் தன்னைவிட்டுப் போய்விடுவானோ என்ற பயம் இருப்பதால் அவன் வழியில் குறுக்கிடாமலும், மகன் சற்றே ஓங்கிப் பேசினால் பயந்து விடுவதும் இயல்ப்பாகிப் போகிறது.

மூத்த மகன் முத்துராமன். மூத்த மகன் இன்னொரு துருவம். அம்மா மேல் பக்தியே வைத்திருக்கிறார். அம்மா சிறிது மனம் கோணல் அடந்தாலும் துடித்து விடுகிறார். அம்மாவுக்கும் மகன் கையடக்கமாக இருப்பதில் பரம திருப்தி. தம்பியை பல முறை அம்மாவுக்காக கண்டித்தாலும், தம்பியின் மேலும் மிக பாசமாக உள்ளவர். தமபியைப் போல் அல்லாம்ல் மாமாவிடமும் மிகுந்த மரியாதையுடையவர். வீட்டிலேயே வளர்ந்து அம்மா வா என்றால் வருவதும், போ என்றால் போவதுமாக அம்மாவின் நிழலாக இருப்பவர்.

தாய் மாமா நாகேஷ். அவருக்கு அக்காவை விட்டால் பூவாவுக்கு வழியில்லை. இடமும் கிடையாது. அக்காவை காக்கா பிடித்துக் கொண்டும், அக்கா கொடுக்கும் இடத்தினால் கணக்கராக இருந்து வீட்டிலும், வயலிலும் எல்லோரையும் வேலை வாங்குவதும், அக்கா மகன்களையும், அக்காவையுமே தன் சொந்தங்களாகவும் கொண்டிருக்கிறார். தன் பாச்சா இளைய மகனிடம் பலிக்காவிட்டாலும் துணிச்சலாக அக்காவுக்காக பரிந்து இளைய மகனிடம் மோதிக் கொண்டு காலம் தள்ளுகிறார்.

பைக்கில் கிராம்ங்களை வலம் வருகையில் இயற்க்கையிலேயே துணிச்சலான காஞ்சனாவை சந்திக்கிறார் இளைய மகன். காதல் மலர்கிறது. விஜயகுமாரி காஞ்சனாவின் அக்கா. ஊமைப்பெண். இவர்கள் தந்தை பரம் ஏழை. தாய் எஸ்.என்.பார்வதி. ஊமையானாதால் மூத்த மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் வெதும்புகிறார் தந்தை. ஊமைப் பெண்ணை தன் அசட்டு மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார் பஞ்சாயத்து தலைவர்.  காஞ்சனாவின் துணிச்சலாலும், மதி நுட்பத்தாலும் குடுமபம் ஒருவாறு தாக்குப்பிடிக்கிறது. மூத்த மகளுக்கு திருமணம் ஆகாது என்று நினைத்து இளைய மகளுக்குத் திருமணம் செய்யத் தயாராகிறார்கள் பெற்றோர்கள்.

முத்துராமனுக்கு மனம் செய்ய தாய் தயாராகிறார். திருமணம் நடை பெறவிருக்கும் சமயத்தில் தாய் உடல் நலம் குன்றுகிறது. அதனால் தாய் மாமா தலைமையில் சகோதரர் இருவரும் செல்கிறார்கள். மனப்பெண் காஞ்சனா. அதே முகூர்த்தத்தில் விஜயகுமாரி பஞ்சாயத்து தலைவரின் அழுத்தம் தாங்க முடியாமல் அவரின் அசட்டு மகனுக்கு மணம் செய்யத் தயாராகிறார்கள். ஏவிஎம் ராஜனும் காஞ்சனாவும் பரிதவிக்கிறார்கள்.

இந்த இடத்தில் சினிமாத்தனம் புகுந்து விடுகிறது. விஜயகுமரி கிணத்தில் குதிக்க முத்துராமன் காப்பாற்ற பெருந்தன்மையுடம் ஊமைப்பெண்ணை மனம் செய்து கொள்கிறார். அனால் தாய் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. தாய்க்கு எதிராகப் பேசி பழக்கமில்லாத மகன் விஜயகுமாரியை அவர் வீட்டிற்கே அனுப்பிவிடுகிறார் மகன்.

அதன் பிறகு ஏவிஎம் ராஜன் காஞ்சனா திருமணம் நடக்கிறதா, முத்துராமன் விஜயகுமாரியுடன் சேருகிறாரா? என்பதயெல்லாம் வெள்ளித்திரையில காண வாருங்கள் என்று கமர்சியல் தான் போடமுடியும். கதையை கொடுத்துவிட்டேன் (அப்படியெல்லாம் இல்லாமலேயே) என்று ஒரு வாசகர் கொந்தளித்துவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு எங்கேயாவது டிவிடி கிடைக்கமலா போய்விடும்?

”மௌணமே பார்வையாய்” என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் பாட்டு பெரிய ஹிட். எம்.எஸ்.வியின் இசையில் அருமையாக இருக்கிறது.

அம்மா கேரக்டர் யாரென்று கண்டு பிடித்து கூறுபவர்களுக்கு நூறு கைத்தட்டல்கள் இனாம்.

நூற்றுக்கு அறுபத்தைந்து மதிப்பெண்கள்.

தமிழ் தயாரிப்பாளர்கள்


போன பதிவு ஏவிஎம் செட்டியார் அளித்த ஒரு பழைய பேட்டி. செட்டியார் பற்றி நானும் ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன், எனக்கு தயாரிப்பாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. அதே நேரத்தில் நண்பர் சூர்யா தன் தளத்தில் சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி ஒரு அருமையான பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். சரி, தயாரிப்பாளர்களை பற்றி பொதுவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் தயாரிப்பாளர்களில் எஸ்.எஸ். வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், செட்டியார், தேவர் நான்கு பேரும் பல வருஷம் கொடி கட்டி பறந்தவர்கள்.

ஏவிஎம் செட்டியார்

ஏவிஎம் இத்தனை வருஷம் கழித்தும் நன்றாக இருப்பது பெரிய விஷயம். செட்டியார் நடுவில் ஒரு பத்து வருஷம் படமே வேண்டாம் என்று இருந்ததாகவும், அவர் இறந்த பிறகுதான் சரவணன் மீண்டும் முரட்டுக் காளை படத்துடன் அடுத்த இன்னிங்சை ஆரம்பித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கென்னவோ பெரிய செட்டியார் இருந்தபோதுதான் நல்ல படங்கள் வந்தன என்று தோன்றுகிறது. நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறுபதுகளின் முற்பாதி வரைக்கும் பல நல்ல படங்கள் வந்தன. சபாபதி, நாம் இருவர், ஓரிரவு, வாழ்க்கை, பராசக்தி, பெண், அந்த நாள், நானும் ஒரு பெண், அன்னை, மேஜர் சந்திரகாந்த் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சரவணன் வந்த பிறகு மசாலா படங்கள்தான் வருகின்றன.

எஸ்.எஸ். வாசன்

எஸ்.எஸ். வாசன் ஒரு பத்து வருஷம் கொடி கட்டி பறந்தார். மங்கம்மா சபதம், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் எல்லாம் பெரும் வெற்றி. நாற்பதுகளிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அவருக்கு அப்புறம் படம் எடுப்பதில் இண்டரஸ்ட் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரும்புத் திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு மாதிரி படங்கள் வந்தாலும், ஜெமினி ஃபில்ம்ஸ் அறுபதுகளிலேயே அமுங்கிவிட்டது.

டி.ஆர். சுந்தரம்

டி.ஆர். சுந்தரம் பெரிய ஆள். பாரதிதாசன், எம்ஜிஆர், கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் எல்லாரும் அவரிடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். மந்திரி குமாரி, திரும்பிப் பார், அலி பாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அறுபதுகளில் வல்லவன் சீரிஸ் – வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன் மாதிரி – படங்கள் மட்டுமே எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

தேவர்

இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தாலும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வட்டத்தில் name recognition இருந்த ஒரே தயாரிப்பாளர் தேவர்தான். தேவரின் மிருகப் படங்கள் எங்கள் வட்டத்தில் பெரிய ஹிட். புலியையும், சிங்கத்தையும், யானையையும் நாங்கள் வேட்டைக்காரன் மாதிரி ஏதாவது படத்தில் பார்த்தால்தான் உண்டு. (உயிர் காலேஜ் எல்லாம் போனதில்லை.)

தேவர் படங்கள் எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய காவியங்கள் இல்லை. அவருடைய ஆடியன்சுக்கு மன அளவில் ஒரு எட்டு வயதுதான் இருக்கும். எம்ஜிஆர், முருகன், மிருகங்கள் இவற்றை வைத்தே காலத்தை ஓட்டியவர். ஆனால் ஒரு நாளும் படம் பார்ப்பார்களை ஏமாற்றியதில்லை. அவர் கடை சமாசாரம் எப்படி இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. அது பிடிக்காதவர்கள் போக வேண்டாம்!

எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். எதுவும் எம்ஜிஆரின் சிறந்த படங்கள் லிஸ்டில் கூட வராது. வேட்டைக்காரன், நல்ல நேரம், தேர் திருவிழா, முகராசி இந்த மாதிரி படங்கள் நினைவு வருகின்றன. வேட்டைக்காரன், நல்ல நேரம் இரண்டும் பிரமாதமாக ஓடியன. இந்த நாலு படமும் தண்டம், இப்போது வேறு எதுவும் நினைவு வரவில்லை. எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். இவர் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

அவருக்கென்று ஒரு ஆஸ்தான டீம் இருந்தது. கே.வி. மகாதேவன், எம்.ஏ. திருமுகம், தூயவன், ஆரூர் தாஸ், நாகேஷ், மேஜர், அசோகன் இல்லாமல் அவர் சாதாரணமாக படம் எடுப்பதில்லை.

ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல், ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

அவருடைய படங்களில் தெய்வம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது. படம் நன்றாக இருக்கும் என்று இல்லை, தண்டம்தான். ஆனால் கோவில்களின் அந்த கால நிலையை ஒரு டாக்குமெண்டரி போல நன்றாக எடுத்திருப்பார்.

இவர்களைத் தவிரவும் பல தயாரிப்பாளர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். எம்ஜிஆர் புகழிலே கொஞ்சம் மங்கி தெரியும் பந்துலு, ஜூபிடர் சோமு, பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் பல வெற்றி படங்கள் எடுத்தாலும் தெலுங்கு கம்பெனியான விஜயா பிக்சர்ஸ் நாகி ரெட்டி, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், பி.எஸ். வீரப்பா, முரசொலி மாறன், ஸ்ரீதர், ஜி.என். வேலுமணி, ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர் படங்களை தயாரித்த கலாகேந்த்ரா, பாலாஜி, பிற்காலத்தில் ஜீவி, ஆர்.பி. சௌத்ரி, கமல், கோவைத் தம்பி, பிரகாஷ் ராஜ், என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர்களில் பலருக்கும் வேறு முக்கியமான முகங்கள் இருந்தன – எம்ஜிஆரை தயாரிப்பாளர் என்றா நினைவு வைத்துக் கொள்கிறோம்? அப்படி இல்லாதவர்கள் பலரும் நிலைத்து நிற்கவில்லை.

இன்றைக்கு இவர்களுக்கு சமமாக சொல்லக் கூடிய கோலிவுட் பாதுஷாக்கள் இருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

தேவரை பற்றி சாரதா இன்னும் விவரங்கள் தருகிறார்.

மேலும் சில படங்கள்: தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தொழிலாளி, கன்னித் தாய், தனிப் பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, காதல் வாகனம் ப்ளஸ் நீங்கள் சொன்ன படங்கள் நாலு. இவற்றில் சில மட்டும் 100 நாட்கள் என்ற எல்லைக்கோட்டைத் தொட்டன. பெரும்பாலானவை 50-ஐக்கூட கடக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழில் கண்ட ஒரே வெள்ளிவிழாப்படம் ஆட்டுக்கார அலமேலு மட்டும்தான். சில படங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் ஒரே மாதிரி இருக்கும். திருக்குறள் மாதிரி இரண்டு வரிக் கதைகளைத்தான் படமாக எடுப்பார். தேவர் படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கட்டின் பின்பக்கம் எழுதிவிடலாம் என்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு.

ஜெய்சங்கரை வைத்து கெட்டிக்காரன், நேர்வழி போன்ற குப்பைப் படங்களையும், அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற நல்ல படங்களையும் எடுத்தவர். ரவிச்சந்திரனை வைத்து மகராசி என்ற படத்தையும் எடுத்தார். சிவகுமாரை கதாநாயனாக வைத்து ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், (பழைய) ஸ்ரீகாந்தை நாயகனாகவும் பிரமீளாவை நாயகியாகவும் போட்டு கோமாதா என் குல மாதா ஆகிய வெற்றிப்படங்களை எடுத்தார். இடையிடையே ஏ.வி.எம்.ராஜனை வைத்து துணைவன், தெய்வம், திருவருள் என் பக்திப்படங்களின் பக்கமும் தலைநீட்டினார்.

ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தாய் வீடு மற்றும் கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை (எத்தனை தாய்கள்), ராம் லக்ஷ்மண் போன்றவை அவர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுகளால் தயாரிக்கப்பட்டவை. கடைசியாக ஆனந்த பாபுவை வைத்து தர்மம் என்ற படம் எடுக்கப்போக, படம் அட்டர் ஃப்ளாப். தேறவேயில்லை. தேவர் பிலிம்ஸ் அத்துடன் நொடித்துப்போனது. இதனிடையே வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை தலைதூக்க தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூடுவிழா கொண்டாடியது.

சின்னப்பா தேவர் யாரையும் எளிதில் நம்பி விடுவார். யாரும் அவரை சுலபமாக ஏமாற்றிவிடலாம். கே.வி.மகாதேவன் கூட வெறும் நாலு மெட்டுக்களை வைத்துக்கொண்டு அவருக்கு நாற்பது பாட்டுக்கள் போட்டுக்கொடுத்து விடுவார். தேவரின் நல்ல மனதுக்கு அவை பாப்புலராகிவிடும். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடியை கண்ணதாசன் தேவருக்கு அறிமுகப்படுத்த, தேவர் அவர்களுக்கு படங்களில் வாய்ப்புக்கொடுத்ததால், படங்களில் டைட்டில்களில் ‘கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்’ என்று போட்டு தங்கள் நன்றியை காணிக்கையாக்கினர்.

எனக்கு தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரிய ஹிட்கள் என்று நினைவு. என் impression டெண்டு கோட்டையில் இருந்த ரெஸ்பான்சை பார்த்து ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் சாரதா என்னை விட விஷயம் தெரிந்தவர். ஞாபகம் வராத எம்ஜியார் படங்களின் பேரை எடுத்து தந்த சாரதாவுக்கு நன்றி! எனக்கு அசோகன் அண்ணனாக வரும் படம் (தாய்க்கு தலை மகன்), அசோகன் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் படம் (தர்மம் தலை காக்கும்) என்றுதான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. எம்ஜிஆர் ஒரு படத்தில் பறந்து கூட போவார் என்று ஞாபகம். என்ன படமோ தெரியவில்லை.

சாரதா சொல்வது போல பாட்டுகள் – எம்ஜிஆர் படத்தில் கூட – பிரமாதமாக இருக்காது. சூர்யா சொல்வது போல மூன்று மாதத்தில் படம் எடுப்பதால் இருக்கலாம்.

ஞாபகம் வரும் இன்னும் சில படங்கள் – நீலமலை திருடன் (ரஞ்சன்), சொர்க்கம் நரகம், இளஞ்ஜோடிகள், தர்மத்தின் தலைவன். கோமாதா என் குல மாதா ஹிந்தியிலும் காய் அவுர் கௌரி என்று வந்தது.

தொகுக்க்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆரூர் தாஸ் தேவரை நினைவு கூர்கிறார்
பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம் பற்றி பதிவர் சூர்யா
தேவர் புத்தகம் பற்றி முகில், இதே புத்தகம் பற்றி பா. ராகவன்
தேவர் பற்றி முரளி கண்ணன்

தில்லானா மோகனாம்பாள் – என் விமர்சனம்


அந்த காலத்தில் இந்த படத்தை பற்றி என்ன நினைத்தார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் விகடன் விமர்சனம் இங்கே

மோகனாம்பாளை நான் நாலைந்து முறை பார்த்திருக்கிறேன். முதல் முறை பார்த்தபோது சிவாஜியின் நடிப்புக்கு கண்மூடித்தனமான ரசிகனாக இருந்த காலம். அவர் தும்மினாலும் என்ன நடிப்பு என்றுதான் சொல்லுவேன். அப்போது சிவாஜி நன்றாக நடித்திருந்தார், ஆனால் அவரை மனோரமாவும் நாகேஷும் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள் என்று தோன்றியது. பாலையா நடிப்பு பிடித்திருந்தது. பாட்டுக்கள் பிடித்திருந்தன. மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாட்டில் பத்மினியின் மூக்குத்தி டாலடிக்கும் காட்சி அற்புதமாகத் தோன்றியது.

யாரையும் கண்மூடித்தனமாக ரசிக்கும் காலகட்டம் போனதும் இந்த படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க நேர்ந்தது. ஏற்கனவே இருந்த நல்ல அபிப்ராயம் எல்லாம் நொறுங்கிவிட்டன. மெலோட்ராமாவை பிழிந்து எடுப்பார்கள். அதுவும் அந்த நலம்தானா பாட்டு வரும்போது ஏண்டா எல்லாரும் இப்படி கொலை வெறி பிடிச்சு அலயறீங்க என்று கத்த வேண்டும் போலிருந்தது. சிவாஜியே மோசம்; ஆனால் பத்மினி! இதுக்குத்தான் அமெரிக்காவிலிருந்து வந்து ரசிகர்களை இப்படி ஒரேயடியாக ஒழிக்க வேண்டுமா? நாகேஷ் இவர்களுக்கு மாறாக அலட்டிக்கொள்ளாமல் நடித்திருப்பதால்தான் முன்னாலும் அவர் நடிப்பு பிடித்திருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். மனோரமாவுக்கு ஓவர் த டாப் ரோல்தான். ஆனாலும் அவர் நன்றாகத்தான் நடித்திருந்தார். கொடுமை என்னவென்றால் இந்த படத்தை என் அம்மாவோடு பார்த்தேன். என் அம்மாவுக்கு இது ஒரு டாப் டென் திரைப்படம். நிமிஷத்துக்கு நிமிஷம் சிவாஜி என்னமா நடிக்கிறார், பத்மினி எப்படி கலக்கறா, என்றெல்லாம் கமென்ட் விட்டுக் கொண்டே இருந்தார். எனக்கோ சிவாஜியின் சொதப்பலையும் மிஞ்சிய பத்மினி என்றுதான் ஒன் லைன் விமர்சனம் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு ஒரு ஐம்பது வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு இந்த படம் பிடிக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். என் மனைவி பார்த்தாலே ஓடி விடுவாள்.

அதற்கு ஒரு preparation வேண்டும். தி. மோகனாம்பாளை விகடனில் வாராவாரம் படித்தவர்கள் ரியாக்ஷன் வேறு மாதிரிதான் இருக்கும். நான் அந்த நாவலை வாங்கிப் படித்தேன். படு சுமாரான நாவல். இல்லை இது எப்போது படமாக வரப்போகிறது என்று எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து பார்த்தவர்களின் ரியாக்ஷன் வேறு மாதிரிதான் இருக்கும். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் இந்த படம் பிடிப்பது கஷ்டம்.

கடைசியாக இரண்டு மூன்று வருஷம் முன்னால் மீண்டும் இந்த படத்தை டிவியில் பார்த்தேன். பத்மினி இமாலய சொதப்பல் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நாகேஷ் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. பாலையா, மனோரமா குறிப்பிடும்படி நடித்திருந்தார்கள் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சிவாஜியின் நடிப்பை பற்றிய எண்ணம் மீண்டும் ஒரு முறை மாறியது. சிக்கல் ஷண்முக சுந்தரம் ஒரு அப்பாவி, வெட்டி பந்தா நிறைய உள்ளவன். அவன் எப்படி நடந்து கொள்வான்? அவன் வாழ்க்கையில் அண்டர்ப்ளே என்பது ஏது? எல்லாவற்றுக்கும் உணர்ச்சிவசப்படத்தான் படுவான். சிவாஜி கொந்தளிப்பதில் என்ன ஆச்சரியம்? அதுதான் அந்த காரக்டர்! (ஆனால் நலம்தானா மெலோட்ராமாவை கசக்கி பிழிவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை)

1968-இல் வந்த படம். சிவாஜி, பத்மினி, நாகேஷ், மனோரமா, பாலையா நடித்தது. தங்கவேலு, டி.ஆர். ராமச்சந்திரன், நம்பியார், சி.கே. சரஸ்வதி, சுகுமாரி, நாகையா, ஏ.வி.எம். ராஜன், சாரங்கபாணி, பாலாஜி, செந்தாமரை மாதிரி நிறைய பேர் வந்து போவார்கள். கே.வி. மகாதேவன் இசை. எம்.பி.என். பொன்னுசாமி/சேதுராமன் சகோதரர்கள் நாதஸ்வரம். கொத்தமங்கலம் சுப்புவின் மூலக்கதை. ஏ.பி. நாகராஜன் இயக்கம்.

ஏ.பி.என். நாகேஷ், பத்மினி ஆகியோருக்காக காத்திருந்து எடுத்த படமாம்.

கதை தெரிந்ததுதான். கோபக்கார, ஆனால் வித்தைக்கார நாதஸ்வர வித்வான் சிக்கல் ஷண்முக சுந்தரம். அழகர் மலையில் புது ஆட்டக்காரி மோகனாவோடு முதல் சந்திப்பிலேயே சண்டை, சவால். ஆனால் மோகனாவின் ஆட்டத்தை சிக்கலார் மறைந்திருந்து பார்க்கும் மர்மத்தை மோகனா புரிந்து கொள்கிறாள். தாசி குலத்தில் பிறந்த மோகனாவை ஏழை ஷண்முக சுந்தரத்திடம் ஒப்படைக்க அவள் அம்மாவுக்கு மனதில்லை. அவளுக்கு சவடால் வைத்தி துணை. மோகனாவை தவறாக புரிந்து கொண்டு ஜில் ஜில் ரமாமணியுடன் மலேயாவுக்கு போக திட்டமிடும் சிக்கலாரை மோகனா சவாலை நினைவூட்டி நிறுத்தி விடுகிறாள். சவால் போட்டியின்போது ஷண்முக சுந்தரத்துக்கு கத்திக்குத்து, நாதஸ்வரத்தை தூக்க முடியவில்லை. குணமாகி வந்த பிறகும் காதலர்கள் ஒன்று சேர மோகனாவின் அம்மா தடையாக இருக்கிறாள். சவடால் வைத்தியின் சதியால் மீண்டும் ஷண்முக சுந்தரம் மோகனாவை தவறாக புரிந்துகொள்ள, மோகனா தற்கொலைக்கு முயற்சி செய்ய, அம்மா மனம் மாறி காதலர்கள் ஒன்று சேர்ந்து சுபம்!

நடிப்பை பற்றி பேசியாயிற்று. இசை! அற்புதம்!

பாண்டியன் நானிருக்க அற்புதமான டப்பாங்குத்து. குத்துன்னா இது! அதுவும் அஜக்தா, மஜக்தா, சதக் சதக் சதக்தா என்று வார்த்தை பிரயோகம் அபாரம்! ராகிங் காலத்தில் இந்த பாட்டை பாடினால் சில சீனியர்கள் விட்டுவிடுவார்கள்!

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன நல்ல பாட்டு. அழகாக படமாக்கப்பட்டிருக்கும். அதுவும் பாலையா மேலே விழும் கையை ஒதுக்குவதும், பிறகு அது சிவாஜி கை என்று தெரிந்து பயந்து ஓடுவதும் அருமை!

நலம்தானா பாட்டாக கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் பத்மினி ஏன் இப்படி கொலை வெறி பிடிச்சு அலைஞ்சாங்க என்றுதான் கேள்வி எழுகிறது.

சிவாஜி இங்கிலிஷ் நோட்ஸ் வாசிப்பது நன்றாக வந்திருக்கும்.

எல்லா பாட்டுகளையும், நாதஸ்வர இசையையும் இங்கே கேட்கலாம்.

எனக்கு பாட்டு கேட்கத்தான் தெரியும். சிவாஜி நிஜ நாதஸ்வர வித்வான் போல அழகாக வாசித்திருப்பார் என்று சொல்வார்கள். கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். கிடைத்த ஒரு யூட்யூப் க்ளிப் கீழே.

மொத்தத்தில் மெலோட்ராமாவை ஓரளவாவது சகித்துக் கொள்வீர்கள் என்றால் நாகேஷ், சிவாஜியின் நடிப்பு, அருமையான இசை, நல்ல பாட்டுக்கள் ஆகியவற்றுக்காக பாருங்கள். பத்மினி நடிக்கும் காட்சிகளில் தம் கிம் அடிக்க போய்விடுங்கள். பத்துக்கு 6.5 மார்க். B- grade.

அன்னையும் பிதாவும் (Annaiyum Pithavum)


1969ல் வந்த படம். AVM ப்ரொடெக்‌ஷன்ஸில் வெளிவந்தது.

நடிகர்கள் AVM ராஜன், நாகையா, கோபாலக்கிருஷ்ணன், சிவக்குமார், சோ, T.R. ராமச்சந்திரன், V.K. ராமசாமி, ஒர் விரல் கிருஷ்ணாராவ்
நடிகைகள் வாணிஸ்ரீ, லக்‌ஷ்மி, SN லக்ஷ்மி, S.சகுந்தலா, மனோரமா, பானுமதி
வசனம் நிர்மலா
ஒளிப்பதிவு தம்பு
பாடல்கள் கண்ணதாசன்
இசை M.S. விஸ்வனாதன்
பின்னணி L.R.ஈஸ்வரி. T.M.S, P.சுசீலா
தயாரிப்பு M.முருகன், M.சரவணன், M.குமரன்
டைரக்‌ஷன் கிருஷ்ணன்-பஞ்சு

நாகையா, மனைவி S.N.லக்‌ஷ்மி இருவருக்கும் கோபாலகிருஷ்ணன், AVM ராஜன், ஊனமுற்ற தங்கை லக்‌ஷ்மி ஆகியோர் வாரிசுகள்.  நாகையாவுக்கு ஃபாக்டரியில் வேலை செய்யும் போது கண் போய்விடுகிறது. அதன் பின் மருமகள் சகுந்தலா கொடுமை படுத்துகிறாள். AVM ராஜன் பொறுப்பு வந்து பாண்ட், ஷர்ட் போட்டுக்கொண்டு கட்டட வேலை செய்யப் போன இடத்தில் வேலையை இன்னொருவருக்கு தியாகம் செய்துவிட்டு தத்துவப் பாடல் ஒன்றை அவிழ்த்துவிடுகிறார். அந்தப் பாடல் ”சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்”.

பின்னர் ராமச்சந்திரன் வாலட்டை கண்டுபிடித்துக்கொடுத்து அவர் மூலமாக டிரைவர் வேலை கண்டுபிடித்துக்கொள்கிறார். எந்த வேலையிலும் நிலைக்காமல் கடைசியில் வாணிஸ்ரீயின் தந்தை வி.கே.ராமசாமி கம்பெனியில் அண்ணன் மேனேஜர், தம்பி குமாஸ்தா.

சோ  VKராமிசாமியை நல்ல மிளகாய் அரைக்கிறார். ராமச்ச்ந்திரனின் மகன் சிவக்குமார் லக்‌ஷ்மியுடன் ஜோடி சேருகிறார்.

அண்ணன் கோபாலகிருஷ்ணன் மனைவி பேச்சைக் கேட்டு குடும்பத்தை கைவிட்ட பிறகு AVM ராஜன் குடும்பத்தை பல கஷ்டங்களுக்கு இடையில் காப்பாற்றுவதுதான் கதை. திரைகதையை நன்றாக சிரத்தை எடுத்து பண்ணியிருக்கிறார்கள் கிருஷ்ணன் பஞ்சு.

“முத்தான ஊர்கோலமோ”, “மோதிரம் போட்டது”, “மலரும் மங்கையும் ஒரு ஜாதி”, “இறைவா உனக்கொரு கேள்வி” என்ற பாடல்கள் சுசீலா பாடுகிறார். ”பொன்னாலே” என்ற பாட்டை வெ.நிர்மலாவிற்க்காக LR ஈஸ்வரி பாடுகிறார். பாடல்கள் ஒன்றும் மனதில் நிற்க்கவில்லை. வார்த்தைகள் பரவாயில்லை

வசனம் நன்றாக இருக்கிறது. நார் பெருமையானதா? பூ பெருமையானதா என்று சோ விளக்குவது இது: “பூ இவ்வளவு தானா?” என்று பூவை அலட்சியம் பண்ணுவார்கள். ஆனால் நாரையோ பெருமையாக மாம”நாரு” என்று பெருமையாக சொல்வார்கள்.

வாணிஸ்ரீ அழகாக இருக்கிறார்.

நல்ல பாசம் நிறைந்த குடும்பக் கதை. ஆனாலும் 19 ரீல் பாசம் கொஞசம் ஓவர் தான்.

கடைசி சீன் ஜோக் – சோ மனம் திருந்துகிறார். அவர் கைவிட்ட பானுமதியிடம் “நான் திருந்திட்டேன்”  என்கிறார். அவர் “அப்படிச் சொல்லாதிர்கள்” என்று சொல்ல,  “இல்லை, அப்படித்தான் சொல்லனும்” என்கிறார் சோ, கடைசி சீன் என்பதை குறிப்பிட்டு.

6/10 மார்க்.

இந்த வாரப் படங்கள் (Week of Oct 6)


இந்த வாரம் 4 கறுப்பு வெள்ளை ஒரு கலர் படம். இரண்டு சிவாஜி, 0 எம்.ஜி.ஆர், ஓர் ஏ.வி.எம். ராஜன்-வாணிஸ்ரீ (shri என்பதை தமிழில் எப்படி எழுதவேண்டும்?)

திங்கள் – குறவஞ்சி – சிவாஜி நடித்தது – பார்த்ததில்லை, கேள்விப்பட்டதுமில்லை

செவ்வாய் – பாலாபிஷேகம் – ஸ்ரீப்ரியா நடித்தது – பார்த்ததில்லை ஆனால் கேள்விப்பட்டதுண்டு

புதன் – அன்னையும், பிதாவும் – AVM ராஜன், வாணிஸ்ரீ, நடித்தது – ட்ரைலரில் வாணி நன்றாக இருக்கிறார் (பாரதி மாதிரி) பார்த்ததில்லை

வியாழன் – தங்க மலை ரகசியம் – சிவாஜி காட்டில் வளர்ந்தவர். (அடிமைப் பெண் MGR போல்). நன்றாக பூ சுற்றுவார்கள். மாயாஜாலப் படம். பார்த்ததில்லை, நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.

வெள்ளி – வெண்ணிற ஆடை – கலரில்; நிர்மலா (டெபு) மற்றும் மூர்த்திக்கு (டெபு) டைட்டில் கொடுத்தது. பார்த்ததில்லை. Das சொல்வது இது: Jayalaitha (debut) is also there in this movie. We have melodious songs. Also, Hemamalini was supposed to have failed the audition test and the chance came to ammA.

மேஜர் சந்திரகாந்த் II (Major Chandrakanth)


இந்த போஸ்ட் கிடைத்துவிட்டது. அன்னை கிடைக்கவில்லை, மீண்டும் எழுத வேண்டியதுதான் போலிருக்கிறது. நாளைக்குத்தான்.

1966இல் வந்த படம். பாலச்சந்தரின் புகழ் பெற்ற மேடை நாடகம். ஏவிஎம் தயாரிப்பில் அவரே இயக்கியது. மேஜர், முத்துராமன், ஜெயலலிதா, நாகேஷ், ஏவிஎம் ராஜன் நடித்தது. வி.குமார் இசை. வெற்றி அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன், நிச்சயமாக தெரியாது.

ஹிந்தியிலும் “ஊஞ்சே லோக்” என்று எடுத்திருக்கிறார்கள். மேஜருக்கு பதில் அசோக் குமார், முத்துராமனுக்கு பதில் ராஜ் குமார், ஏவிஎம் ராஜனுக்கு பதில் ஃபெரோஸ் கான், ஜெவுக்கு பதில் கே.ஆர். விஜயா.

நான் பார்த்து ஒரு இருபது இருபத்தைந்து வருஷம் இருக்கும். அப்போது தமிழில் வந்த மிக நல்ல படங்களில் ஒன்று என்று நினைத்தேன். நேற்று பார்த்திருந்தால் என் கருத்து ஒரு வேளை மாறி இருக்கலாம். நான் இங்கே எழுதுவது அன்றைய கருத்தை வைத்து.

இது பாலச்சந்தர் ஏஜிஸ் அலுவலகத்தில் வேலை செய்யும்போது எழுதப்பட நாடகமாம். முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாம். யாரோ தமிழ் தெரியாத மேலதிகாரி சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது அவரை வரவேற்க எழுதப்பட்டிருக்கிறது. பிறகு நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மேஜர் நடித்திருக்கிறார். ஏவிஎம் செட்டியார் நாடகத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆகி படமாக்க முன் வந்திருக்கிறார்.

வி. குமார் பிரமாதமான பாட்டுகளை போட்டிருக்கிறார். “நேற்று நீ சின்ன பாப்பா” என்ற பாட்டில் துள்ளல், “ஒரு நாள் யாரோ” என்ற பாட்டில் இனிமை, “கல்யாண சாப்பாடு போடவா” என்ற பாட்டில் குத்து, “துணிந்து நில்” என்ற பாட்டில் கம்பீரம். “நானே பனி நிலவு” என்பதும் நல்ல பாட்டுதான். இவரை தமிழ் திரை உலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. டிஎம்எஸ், சீர்காழி எல்லாரும் நன்றாக பாடி இருந்தாலும், சுசீலா எல்லாரையும் மிஞ்சிவிட்டார். “துணிந்து நில்” பாட்டு சுரதா எழுதியது. மற்ற எல்லாம் வாலி. “ஜிங்கிடுச்சான் ஜிங்கிடுச்சான் ஜிங்கிடிச்சிச்சான் சிச்சான் சான்” போன்ற காவிய நயம் மிக்க வரிகளை அந்த காலத்தில் எழுதக் கூடியவர்கள் தஞ்சை ராமையா தாசும் வாலியும்தான்.

“நேற்று நீ”, “ஒரு நாள் யாரோ”, “கல்யாண சாப்பாடு” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.

மேஜரின் மாஸ்டர்பீஸ் இதுதான். குருட்டுத்தனத்தை வெல்லும் தன்னம்பிக்கை, மன உறுதி, ஒழுக்கத்தின் மீதுள்ள அழுத்தமான நம்பிக்கை எல்லாவற்றையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். இதை விட சிறப்பாக அவர் நடித்ததில்லை. எவ்வளவோ திறமைசாலியான அவர் எப்போதும் ஒரு டம்மி அப்பா ரோலில் வந்து போனது கொடுமை. ஒரு விதத்தில் பார்த்தால் இந்த படத்தில் நடித்தது அவரது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும் – இதற்கு பிறகு முக்கால்வாசி படங்களில் அவர் நடித்தது திருப்பி திருப்பி இதே ரோல்தான்!

முத்துராமன் மிக அருமையாக நடித்திருப்பார். நாகேஷ் முதல் பகுதியில் சிரிக்க வைப்பார். அவர் அழ வைக்கும் இரண்டாவது பகுதி கொஞ்சம் மெலோட்ராமாவாக இருந்தாலும் மோசம் என்று சொல்ல முடியாது.

மேஜரின் நண்பராக வருபவர் யார்? யாருக்காவது தெரியுமா?

நல்ல plot. குருடரான ரிடையர்ட் மேஜர் மே. சுந்தரராஜன் தன் பலவீனத்தை உறுதியுடன் சமாளித்து வாழ்கிறார். அவரது முதல் பையன் முத்துராமன் கடமை தவறாத போலிஸ் அதிகாரி. இளைய மகன் ஏவிஎம் ராஜனோ ஒரு ப்ளேபாய். ஜெயை மயக்கி கைவிட்டுவிடுகிறார். ஜெ தற்கொலை செய்து கொள்ள, அவரது அண்ணன் நாகேஷ் ராஜனை தேடி கண்டுபிடிக்கிறார். ராஜனிடம் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் எதிர்பார்க்கும் அவரிடம் பயப்படும் ராஜன் பணம் தருகிறேன் என்னை விட்டுவிடு என்கிறார். வெறியில் நாகேஷ் ராஜனை கொன்றுவிட்டு தப்பி ஓடி, மேஜரின் வீட்டுக்குள் ஒளிகிறார். குருடராய் இருந்தாலும் மேஜர் நாகேஷ் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்து விடுகிறார். நாகேஷ் மேஜருக்கு கண் தெரியாது என்று தெரிந்து அதிசயப்படுகிறார். அவரிடம் தான் கொலை செய்ததை சொல்கிறார். மேஜருக்கு அது தவறாக தெரியவில்லை. ஆனால் நாகேஷ் தன் வீட்டில் ஒளிந்துகொள்ளக்கூடது என்று சொல்கிறார். நாகேஷ் மேஜரின் போலித்தனத்தை சாடுகிறார். பிறகுதான் அவருக்கு மேஜரின் மகன் போலீஸ்காரர் என்று தெரிகிறது. தான் கொலை செய்தது மேஜரின் இன்னொரு மகன் என்றும் தெரிகிறது. மேஜர் உடைந்துபோனாலும், நாகேஷ் செய்தது சரிதான் என்று சொல்கிறார். நாகேஷுக்கு இடம் கொடுக்கிறார். முத்துராமன் நாகேஷை கண்டுபிடித்து அவரையும் அவருக்கு இடம் கொடுத்த மேஜரையும் கைது செய்கிறார்.

“ஊஞ்சே லோக்” என்றால் “உயர்ந்த மனிதர்கள்” என்று அர்த்தம். மேஜர், நாகேஷ், முத்துராமன் ஆகியவர்களின் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே உயர்ந்தவர்கள்தான்.

சில காட்சிகள் பிரமாதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. மேஜர் தான் குருடனாக இருப்பதால் தனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை என்று நாகேஷுக்கு சொல்வார். வீட்டில் ஒவ்வொரு பொருளும் எங்கே இருக்கிறது என்று தனக்கு ஒரு கணக்கு இருக்கிறது என்று காண்பிப்பார். அடுத்த வினாடி கீழே விழுந்துவிடும்போது என்ன கணக்கு இருந்தாலும் கண் தெரியாத குறை எவ்வளவு பெரியது என்று தெரிகிறது.

“ஒரு நாள் யாரோ” படமாக்கப்பட்ட விதம் – ரேடியோவில் தங்கை ஜெ பாடுவதை தன் அக்கம்பக்கத்தார் கேட்க நாகேஷ் வாங்கும் ஓட்டை ரதியோ சரியாக எல்லாரும் வந்ததும் உடைந்துவிட, ஜெயை லைவ் ஆக பாட வைத்து, சமையல் பாத்திரங்களைக் கொண்டு நாகேஷ் இசை அமைப்பது அமர்க்களம்! காட்சியை அமைத்தவருக்கு ஒரு சபாஷ்! இதை youtubeஇல் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. வீடியோ இருந்தால் ரசிக்கலாம், யாராவது நல்ல மனம் upload செய்யுங்களேன்!

மீண்டும் பார்த்திருந்தால் ஒரு வேலை கொஞ்சம் நாடகத்தனம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வேறு குறைகள் எதுவும் எனக்கு தெரிந்திருக்காது என்று தோன்றுகிறது.

பார்க்க வேண்டிய படம். 10க்கு 7.5 மார்க். B+ grade.

இந்த வாரம் (Week of September 22)


தவறாமல் ஒரு சுமார் MGR படம், வர வர ஒரு பாடாவதி சிவாஜி படம் – இது மினிமம் காரண்டி. இது போக என்ன ஃபார்முலா வைத்திருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. எனக்கு (Bags) வெறுப்பு ஏற்ற வேண்டும் என்றே, ஏன் சிவாஜி ரசிகர்களுக்குக் கூட வெறுப்பு ஏற்ற வேண்டுமென்று திட்டம் போட்டு படம் போடுகிறார்கள் போலும்.

திங்கள் – சிரஞ்சீவி – சிவாஜி நடிததது. பார்த்தாலே பயஙகர தோற்றம். நான் இது வரை பார்த்ததில்லை

செவ்வாய் – மேஜர் சந்திரகாந்த் (பார்த்ததில்லை) நல்ல படம் போல் தெரிகிறது

புதன் – அன்னை (பார்த்ததில்லை)

வியாழன் – வந்தாளே மகராசி (பார்த்ததில்லை)

வெள்ளி – அரசிளங்குமரி – MGR நடித்தது. சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். ”சின்னப் பயலே, சின்னப் பயலே, சேதி கேளடா” என்ற பாடல் ஹிட்.

இன்னும் சில விவரங்கள்:

சிரஞ்சீவி 1984இல் வந்திருக்கிறது. சிவாஜியின் post-Thirisoolam, தொப்பை phase. ஸ்ரீப்ரியா ஹீரோயின். நானும் பக்ஸும் காலேஜில் படித்துக்கொண்டிருந்தோம். காலேஜில் எல்லா குப்பை படமும் பார்ப்போம், எங்களுக்கு வந்ததே தெரியவில்லை என்றால் படம் ஓடி இருக்காது.

மேஜர் சந்திரகாந்த்: நல்ல படம். இந்த நாடகம், படத்தில் நடித்துத்தான் மேஜர் சுந்தரராஜனுக்கு மேஜர் என்ற அடைமொழி வந்தது. பாலச்சந்தரின் நாடகம் படமாக்கப்பட்டது. அவரே இயக்கியதா என்று தெரியவில்லை. உடன், முத்துராமன், ஜெயலலிதா, நாகேஷ், ஏ.வி.எம். ராஜன் நடித்திருக்கிறார்கள். “நேற்று நீ சின்ன பாப்பா”, “நானே பனி நிலவு”, “ஒரு நாள் யாரோ”, “கல்யாண சாப்பாடு போடவா” பாட்டுக்கள். “ஒரு நாள் யாரோ” படமாக்கப்பட்ட விதம் எனக்கு பிடிக்கும்.

அன்னை: பானுமதி. “அழகிய மிதிலை நகரினிலே”, “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று”, “பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா” என்ற நல்ல பாட்டுகளும், சந்திரபாபு பாடிய “புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை” என்ற ஒரு சூப்பர் பாட்டும் உண்டு. தாய்க்குல படம்.

வந்தாளே மஹராஸி: ஜெய், ஜெ நடித்து, கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். கேள்விப்பட்டதில்லை. ஆனால் கே.எஸ்.ஜி. எப்போதும் குடும்பப் படம் எடுப்பவர்.

பூவும் பொட்டும் (Poovum Pottum)


1968இல் வந்த படம். ஏ.வி.எம். ராஜன், பாரதி, எஸ்.வி. ரங்காராவ், பானுமதி, நாகேஷ், முத்துராமன், ஜோதிலக்ஷ்மி, எஸ். ராமாராவ், கே.டி. சந்தானம், பண்டரிபாய் நடிப்பில் கோவர்தனம் இசையில் தாதா மிராசி இயக்கத்தில் வந்த படம். தாதா மிராசிதான் “புதிய பறவை” படத்தின் இயக்குனர். டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன். அதனால் மற்ற கலைஞர்களை தெரியவில்லை. நாகேஷின் நண்பராக வந்து தூய தமிழில் பேசும் ரிக்க்ஷாக்காரர் எஸ்.எஸ். சந்திரனா இல்லை ஏ. வீரப்பனா என்று சரியாகத் தெரியவில்லை. படத்தைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை. அதனால் படம் வெற்றி பெறவில்லை என்று யூகிக்கிறேன். முத்துராமன் நீண்ட காலம் காரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறார். 68இல் கூட வில்லன் ரோல்தான். பானுமதிக்கு அம்மா ரோல்.

கோவர்தனம் ஒரு almost man. ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஆர். சுதர்சனத்தின் தம்பி. 1953இலேயே தனியாக ஜாதகம் என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். அவர் இசை அமைத்த முக்கால்வாசி படங்களின் இசை வெற்றி அடைந்திருக்கிறது. கைராசி, பட்டணத்தில் பூதம் போன்ற படங்களும் வெற்றி அடைந்தன. ஆனால் அவரது வாழ்க்கை உதவி இசை அமைப்பாளராகவே முடிந்துவிட்டது. சி.ஆர். சுப்பராமன், சுதர்சனம், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எம்எஸ்வி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ் எல்லாருக்கும் உதவி! தேவாவுக்கு கூட உதவியாக இருந்தாராம்! இவ்வளவு திறமை இருந்தும் ஏன் அவரால் ஒரு இரண்டாம் தட்டு இசை அமைப்பாளராகக் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது ஒரு புதிர்தான்.

இளையராஜா வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் அவரும் கோவர்தனமும் சேர்ந்து ஒன்றாக இசை அமைப்பதாக இருந்ததாம். பஞ்சு அருணாசலம் வற்புறுத்தியதால் இளையராஜா தனியாக இசை அமைத்தாராம்.

“நாதஸ்வர ஓசையிலே” இந்த படத்தின் மாஸ்டர்பீஸ். டிஎம்எஸ் “நாதஸ்வர ஓசையிலே” என்று பாடும்போது நெஞ்சில் ஒரு அமைதி நிரவுகிறது. ஒரு underrated gem. டிஎம்எஸ் குரலும் சுசீலா குரலும் made for each other.

இந்தப் படத்தில் நிறைய underrated gems. “உன் அழகை கண்டு கொண்டால்”, “எண்ணம் போல கண்ணன் வந்தான்” இரண்டுமே இனிமையான பாட்டுகள். முன்னது பி.பி.ஸ்ரீனிவாஸ், சுசீலா பாடியது. பின்னது சுசீலா. இதைத் தவிர எல்.ஆர். ஈஸ்வரி பாடிய “பொன்வண்டு பிரிக்காத மல்லிகை” என்ற ஸ்விங் இசை பாட்டும் நன்றாக இருந்தது. இது எனக்கு வேறு ஏதோ ஒரு பாட்டை ஞாபகப்படுத்துகிறது, நினைவு வரவில்லை. தவிர முதலில் வெறும் ஸ்விங் இசையுடன் பாட்டு ஏதும் இல்லாமல் ஜோதிலக்ஷ்மியின் ஒரு நடனம் இருந்தது. Feet tapping swing music.

ில பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.

கோவர்தனத்தின் இசையில் உருவான வேறு சில புகழ் பெற்ற பாடல்கள் – வரப்ரசாதத்தில் “கங்கை நதியோரம் ராமன் நடந்தான்”, பட்டணத்தில் பூதத்தில் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி”, “நான் யார் யாரென்று சொல்லவில்லை”, கைராசியில் “கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ”, “பத்து பதினாறு முத்தம் முத்தம்”. இவை எல்லாமே underrated gemsதான்.

கோவர்தனம் இசை அமைத்த சில பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.

கதை தாய்க்குலத்தை குறி வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ரங்காராவின் மனைவி பானுமதியும் மகள் ஜோதிலக்ஷ்மியும் க்ளப், கச்சேரி என்று வீட்டை கவனிக்காமல் ஊர் சுற்றுகிறார்கள். இந்த கவலையால் அவர்கள் மகனான நாகேஷ் குடிகாரனாகிவிடுகிறார். ரங்காராவின் வளர்ப்பு மகள் பாரதிதான் குடும்ப விளக்காக இருந்து வீட்டை கவனித்துக் கொள்கிறார். ரங்காராவின் முதல் மனைவியான கண் தெரியாத பண்டரிபாய், பண்டரிபாயின் மகன் ஏ.வி.எம். ராஜன் பிரிந்து வாழ்கிறார்கள். அதுவும் ஏ.வி.எம். ராஜன் தன் அப்பாவை பார்த்ததே இல்லை. ஃபோட்டோ கூட பார்த்ததில்லை. அதனால் எல்லாரும் நமக்கு அவர்களது உறவை புரிந்து கொள்ள நிறைய hint கொடுக்கிறார்கள். முத்துராமன் ஜோதிலக்ஷ்மியை சுலபமாக ஏமாற்றுகிறார். கடைசியில் பல்டி அடித்து ஜோதிலக்ஷ்மிக்கு பூவும் பொட்டும் கொடுக்க வரும்போது ஜோதிலக்ஷ்மி விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறார். அப்பாவை வெறுக்கும் ஏ.வி.எம். ராஜனும் தன் அம்மா ஒரு நிமிஷம் பூ – பொட்டு டயலாக் ஒன்று விட்டதும் “நீ புலம்பாமல் இருந்தால் போதும்” என்று நினைத்து சமத்தாக மனம் மாறி எல்லாரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். சுபம்!

நாகேஷ் போடும் ட்ராமா ஒன்று என்னை புன்முறுவலிக்க வைத்தது. அதே போல் அவரும், எஸ். ராமாராவும், ராமாராவின் மனைவியும் வரும் காட்சிகள் கொஞ்சம் புன்முறுவலை வர வைத்தன.

படம் நான் எதிர்பார்த்த அளவு மோசம் இல்லை. கோவர்தனத்தின் இசை ஒரு பெரிய ப்ளஸ் பாயின்ட்.

பூவும் பொட்டும் – Preview


நான் இந்தப் படத்தைப் பற்றி எதுவுமே கேள்விப்பட்டதில்லை. ஆனால் ட்ரெய்லர் பார்த்து 3 நல்ல பாட்டுக்கள் இருக்கின்றன என்று தெரிந்துகொண்டேன். “நாதஸ்வர ஓசையிலே”, “எண்ணம் போல கண்ணன் வந்தான்”, “உன்னழகை கண்டு கொண்டால்” மூன்றுமே நல்ல, ஆனால் பெரிய அளவு வெற்றி பெறாத பாட்டுக்கள். “நாதஸ்வர ஓசையிலே” பாட்டில் ஒரு அமைதி தெரியும். இசை அமைப்பாளர் கோவர்தனம் நல்ல ஆனால் வெற்றி பெறாத ஒரு இசை அமைப்பாளர். ஏ.வி.எம். ராஜன், முத்துராமன், பாரதி நடித்திருக்கிறார்கள். புதிய பறவை படத்தை இயக்கிய தாதா மிராசிதான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். பேரிலிருந்து பெண்களை அழவைக்கும் ஒரு சென்டிமெண்ட் படம் என்றும், பாட்டுக்களைத் தவிர வேறு ஒன்றும் நன்றாக இருக்காது என்றும் யூகிகிறேன். குறைந்த பட்சம் பாட்டாவது இருக்கிறதே!