சந்திரபாபு – 25


நன்றி : ஆனந்த விகடன், விமல்

சந்திரபாபு – தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?

1. கடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலைமுத்து. பனிமயதாசன் என்று பெயர். கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார்!

2. பெற்றோர் ரோட்ரிக்ஸ் – ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையும் நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட, கூடவே சென்ற சந்திரபாபுவும் கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்!

3. கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாழு. ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்!

4. காமராஜருக்கு அறிமுகமான குடும்பம் பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில் அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே!

5. சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!

6· மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது- பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்சுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா!

7. முதல் படம், தன அமராவதி (1947), கடைசிப் படம் பிள்ளைச் செல்வம் (1974), 50-களில் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்!

8· புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது!

9. ரப்பரைப் போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!

10. எம்.ஜி.ஆரை `மிஸ்டர் எம்.ஜி.ஆர்.’ என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அது பற்றி இவர் கவலைப்படவும் இல்லை!

11· `புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்கை. ஆனால், புகழ் பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு’ என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்!

12· ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!

13· ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போதும் அழுகின்றான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்துல’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா’ ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!
(இந்த ஒரு பாட்டுக்குத்தான் வீடியோ கிடைத்தது!)

14. எஸ்.எஸ். வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். `நான் தீக்குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது’ என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார !

15· சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். சகோதரி படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!

16· எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் `எனக்காக அழு’, ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!

17· ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!

18· நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். `சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல’, அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல’ என்று சொன்னார்!

19· மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். “மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன்; ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத் தந்த என்னுடைய மாமனார்; ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத் தந்தவர் ஜெமினி கணேசன்’’ என்றவர்!

20· ‘பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும்போது, ‘ஓ ஜீசஸ்!’ என்று சொல்லியபடிதான் நுழைவார்!

21· ஜனாதிபதி மாளிகையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் பிறக்கும் போதும் அழுகின்றான் பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட, உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு, `கண்ணா நீ ரசிகன்டா’ என்று அவரது தாடையைத் தடவ, ஜனாதிபதியும் மகிழ, உற்சாகமான பொழுது அது!

22· தட்டுங்கள் திறக்கப்படும் அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்‌ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!

23· நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஒவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும் கூட. `ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்’ என்று சிரிப்பார்!

24· ‘நீ ஒரு கலைஞன், கற்பனை வளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்’ என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!

25· ‘என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப் போல நடித்துக் காட்டட்டும், பார்க்கலாம்!’ என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை!

பிற்சேர்க்கை: சாரதாவின் மறுமொழியிலிருந்து –

சந்திரபாபு இறப்பதற்கு சில காலம் முன்பு, பிலிமாலயா என்ற சினிமா மாதப் பத்திரிகையில் மாடி வீட்டு ஏழையின் கண்ணீர்க் கதை என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒளிவு மறைவின்றி எழுதியிருந்தார். அதனால் அந்த பத்திரிகை அலுவலகம் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, தொடர் நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுக்காதவர் என்ற அவப்பெயர் இவருக்கு உண்டு. அதுபற்றி பல பேர் பல சமயங்களில் கூறியிருக்கிறார்கள். அவருக்கிருந்த மார்க்கெட் வால்யூவுக்காக படங்களில் போட வேண்டியிருந்தபோதிலும், முடிந்தவரையில் ‘கழட்டி விடவே’ பார்த்தனர். அந்த நேரம் ஆபத்பாந்தவனாக நாகேஷ், புயலாக திரையுலகில் நுழைய, இவர் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டார்.

அது போலவே பாடல் பதிவின்போதும் இவரை வைத்து பாடல் ஒலிப்பதிவு செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்பார்கள். சமீபத்தில் கூட ஜெயா டி.வி.யின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் டி.கே.ராமமூர்த்தி சொன்னார். சிரத்தை எடுத்துப் பாடமாட்டார், திருப்பி திருப்பி டேக் வாங்குவார். அப்போதெல்லாம் ட்ராக் சிஸ்டம் கிடையாது என்பதால் பாடகர் ஒருவர் தப்பு செய்தாலும் அனைத்து இசைக்கருவி வாசிப்பவர்களும் திருப்பி திருப்பி வாசிக்க வேண்டும். அதனால் இவர் பாட்டு என்றால் இன்ஸ்ட்ருமெண்ட் பிளேயர்கள் ஜகா வாங்கி ஓடுவார்களாம்.

புகழின் உச்சியில் இருக்கும்போது இது போன்ற வேண்டாத பழக்கங்களால் மார்க்கெட்டை இழந்து தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர். (தற்போதைய நடிகர் கார்த்திக் போல. வளமாக ஒளி வீச வேண்டிய அருமையான வயதுகளை கார்த்திக் எப்படி தொலைத்து நின்றார் என்பது நமக்குத் தெரியும்தானே).

நடிகர் ஜெமினி கணேசன் சாவி வார இதழில் எழுதி வந்த ஆசையாக ஒரு அசை வாழ்க்கைத் தொடரில், ‘நடிகை சாவித்திரியின் வேண்டாத பழக்கங்களுக்கும், விபரீத முடிவுக்கும் சந்திரபாபுதான் காரணம்’ என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இவைற்றையெல்லாம் மீறியும் சந்திரபாபு சுடர் விட்டாரென்றால் அது அவருடைய அபார திறமையால் என்பதில் சந்தேகமில்லை.

எந்த உயரத்திலிருந்தும் தானே குதிப்பார் என்பதை மெய்ப்பிக்கும் ஒரு இடம் – ஆண்டவன் கட்டளையில் சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடலில் ஒரு பஸ்ஸின் டாப்பிலிருந்து படுக்கை வசத்தில் பொத்தென்று விழுவார். கீழே நிற்பவர்கள் அவர் குதிக்கத் துவங்கிய பின்னர்தான் கைகளைக் கோர்ப்பார்கள். அவர்கள் கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும் விபரீதமாகியிருக்கும். ரொம்பவே தைரியம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சந்திரபாபுவும் புதுமைப்பித்தனும்
1964-இல் சந்திரபாபுவின் பேட்டி
சந்திரபாபுவின் மாஸ்டர்பீஸ் – சபாஷ் மீனா
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் முகில்
சந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு புக் ஆன கதை

எம்.எஸ். விஸ்வநாதன்–25


விமலுக்கும், விகடனுக்கும் நன்றி!

  1. எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17.
  2. அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை !.
  3. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான் !.
  4. நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்’, `காதலா…. காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி !.
  5. இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி. கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால் வைத்தது இல்லை !.
  6. மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி… தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை ! (வருவான் வடிவேலன் படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதை தமிழக அரசிடம் பெற்றார் என்று சாரதா சொல்கிறார்.)
  7. குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறைவேற்றினார் !
  8. இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான் !
  9. மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம் !
  10. சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்ச ஸ்தாயியில் பாடின பாடல்கள் பெரும் புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி !
  11. எம்.எஸ். விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடி கட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன்–ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள் !
  12. மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார் !
  13. இளையராஜாவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட இளையராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம் !
  14. `புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக் கோர்ப்பு செய்தார் !
  15. தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு இறக்கும் வரை, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார் !
  16. 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக் காட்டியவர் சந்திரபாபு !
  17. தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது !
  18. உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவைகளிலும்’, லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டு வந்தார் !
  19. `நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது !
  20. இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான். சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது !
  21. கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறுசுறுப்பாக இருக்கிறார் !
  22. பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும் !
  23. சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல். வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள் !
  24. வி. குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்எஸ்வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது !
  25. `அத்தான்….. என்னத்தான்….’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப் பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிர்ந்தது அரங்கம் !

இங்கே சொல்லப்பட்ட பாட்டுகளில் சிலவற்றின் வீடியோக்கள்:

பட்டத்து ராணி

நினைத்தேன் வந்தாய் நூறு வயது

பன்சாயி காதல் பறவைகள்

யார் அந்த நிலவு

கண் போன போக்கிலே கால் போகலாமா

பிற்சேர்க்கை: சாரதாவின் மறுமொழியிலிருந்து – எம்எஸ்வி இசையமைத்த மொத்தப்படங்களின் எண்ணிக்கை 518. இவற்றுள் ராமமூர்த்தியுடன் சேர்ந்து இசையமைத்த படங்கள் 88, இளையராஜாவுடன் சேர்ந்து இசையமைத்தவை 4 , தனித்து இசையமைத்த படங்கள் 426.

சங்கர் கணேஷ், இளையராஜா, ஜி.கே.வெங்கடேஷ், ஆர்.கோவர்த்தனம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இவருடைய உதவியாளர்களாகப் பணியாற்றியவர்களே.

வருவான் வடிவேலன் படத்துக்கு இசையமைத்ததற்காக தமிழக அரசு இவருக்கு (தெரியாத்தனமாக) 1978-க்கான சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கி விட்டது. (அதாவது தகவல் # 6 தவறு என்று சாரதா சொல்கிறார்.) ஆனால் அடுத்த ஆண்டே (1979) சுதாரித்துக்கொண்டு, எல்லோரும் எதிர்பார்த்த நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு பதிலாக நிறம் மாறாத பூக்களூக்காக இளையராஜாவுக்கு விருதைக் கொடுத்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்


நாடோடி மன்னன்

நண்பர் ஜெகதீஸ்வரனின் தளத்தில்தான் நான் எம்ஜிஆர் தான் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றி ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். ஜெகதீஸ்வரன் இந்த புத்தகத்திலிருந்து பல excerpt-களை பதித்திருக்கிறார்.

படத்தை உருவாக்க பாடுபட்ட சக நடிகர்கள் – நம்பியார், வீரப்பா, சரோஜா தேவி, பானுமதி, சந்திரபாபு, ஏன் எக்ஸ்ட்ராவாக வரும் துணை நடிகர்களைப் பற்றிக் கூட எழுதி இருக்கிறார் – இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு, வசனம் எழுதிய கண்ணதாசன், எடிட்டர் ஜம்பு, பின்னணியில் இருந்த இயக்குனர் கே. சுப்பிரமணியம், ஆர்.எம்.வீ. என்று அத்தனை பேரின் பங்கையும் பற்றி எழுதி இருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருக்கிறது!

இந்த தளத்திலிருந்து விகடன் விமர்சனம் மற்றும் உப்பிலி ஸ்ரீனிவாஸ் அளித்த விவரங்களையும் கூட போட்டிருக்கிறார், அவருக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கங்கள்:
நாடோடி மன்னன் புத்தகம் – Excerpts

நாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம், விகடன் விமர்சனம்

சந்திரபாபுவும் புதுமைப்பித்தனும்


விகடனில் எப்போதோ பார்த்தது. நன்றி, விகடன்!

1942-ம் வருடம்..

சென்னை மவுண்ட் ரோடிலுள்ள தினமணி காரியாலயத்திற்குச் சென்றார் சந்திரபாபு. உள்ளே நுழைந்தவரை கூர்க்கா தடுத்து நிறுத்திவிட்டான். பசியினாலும் களைப்பினாலும் மயங்கி அங்கேயே ‘தடால்’ என்று விழுந்தார். உதவி ஆசிரியர் விருத்தாசலம்தான் இவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினார்.

இருவரும் நண்பர்கள் ஆயினர். சந்திரபாபு அவரிடம், ”நீலப் பந்து என்ற கதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ஸ்டார் ரைட்டர் புதுமைப்பித்தன் எக்ஸலென்ட்டா டச்சஸ் கொடுத்து எழுதி இருக்கான்…” என்று பிரஸ்தாபித்தார். தனக்கு புதுமைப்பித்தன் எழுதும் கதை, கட்டுரைகள் என்றால் உயிர் என்றும் கூறினார்.

பிறகு சந்திரபாபு, பிரபல எழுத்தாளரான பி.எஸ்.ராமையா தயாரித்த ‘தன அமராவதி’யில் நடிக்க ஒப்பந்தமானார். பி.எஸ்.ராமையாவும் விருத்தாசலமும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் விருத்தாசலம் ‘நீலப் பந்து’ கதை பற்றி ராமையாவிடம் கூற ஆரம்பித்தார். ”உன் கதைன்னா நம் பாபுவுக்கு உயிர்” என்றார் ராமையா.

”நீலப் பந்து கதை இவருடையது அல்ல; அது புதுமைப்பித்தன் எழுதினது” என்று குறுக்கிட்டுச் சொன்னார் சந்திரபாபு.

”அந்தப் புதுமைப்பித்தன் இவன்தான்” என்று ராமையா விருத்தாசலத்தைக் காட்டினார்.

சந்திரபாபுவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘எழுத்தாள மேதை புதுமைப்பித்தன்தான் தனக்கு இது நாள் வரை உற்சாகம் கொடுத்து ஆதரித்தவர் என்பதைக்கூடத் தான் அறிவியல்லையே! அவன், இவன் என்றெல்லாம் அவரைப் பற்றி அவரிடத்திலேயே ஏக வசனத்தில் பேசி விட்டோமோ’ என மனம் வருந்தினார் சந்திரபாபு.

கொசுறு: சரவணகுமரன் “கண்ணீரும் புன்னகையும்” புத்தகத்திலிருந்து சந்திரபாபுவுக்கு எம்ஜிஆரை ஏன் பிடிக்காது என்பது பற்றி விவரங்களை எடுத்துத் தந்திருக்கிறார். சுவாரசியமான பதிவு. படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
1964-இல் சந்திரபாபுவின் பேட்டி
சந்திரபாபுவின் மாஸ்டர்பீஸ் – சபாஷ் மீனா
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் முகில்
சந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு புக் ஆன கதை

சந்திரபாபுவுக்கு எம்ஜிஆரை ஏன் பிடிக்காது?

புதுமைப்பித்தன் மறைவு பற்றி விகடன்

நாடோடி மன்னன்


நாடோடி மன்னன்

எம்ஜிஆர் படங்கள் சில பர்ஃபெக்டாக வந்து விடுகின்றன. பொதுவாக அவர் படங்களில் காணப்படும் சின்னப் பிள்ளைத்தனமான கதை, செயற்கையான திரைக்கதை எல்லாவற்றையும் மீறி அவரது இமேஜுக்கு மிக பொருத்தமாக எல்லாம் அமைந்துவிடுகின்றன. அவருக்கு இப்படி ஒரு பத்து படம் தேறினால் ஜாஸ்தி. அந்த டாப் டென்னில் நாடோடி மன்னன் டாப்பில் இருக்கிறது.

எம்ஜிஆரின் பொதுவான பலங்கள் என்று பார்த்தால் பாட்டுகள்; அருமையான தயாரிப்பு; சண்டைக் காட்சிகள், குறிப்பாக கத்தி சண்டை காட்சிகள், சிலம்ப சண்டை காட்சிகள்; அழகான ஹீரோயின்கள். சில சமயம் நல்ல பொழுதுபோக்கு கதை, நல்ல நகைச்சுவை அமைந்துவிடும். இந்த படத்தில் மிக பிரமாதமான பாட்டுகள்; காசை தண்ணீர் போல செலவழித்து எடுக்கப்பட்ட படம்; அவருக்கு இணையாக திரையில் சண்டை போடக்கூடிய நம்பியார், வீரப்பா என்று இரண்டு வில்லன்கள்; பானுமதி, சரோஜா தேவி என்று இரண்டு ஹீரோயின்கள்; நன்றாக எழுதப்பட்ட திரைக்கதை, வசனம். நகைச்சுவைதான் சரியில்லை. சந்திரபாபுவை விட எம்ஜிஆர் பானுமதி ஜெயிலில் சந்திக்கும் காட்சியே கொஞ்சம் புன்முறுவலை வரவழைக்கும்.

1958-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்த படம். அவரே இயக்கம். எம்ஜிஆர், பானுமதி, சரோஜா தேவி, சந்திரபாபு, வீரப்பா, நம்பியார், சக்ரபாணி, ஜி. சகுந்தலா (மந்திரி குமாரியில் எம்ஜிஆருக்கு ஜோடி; இதில் சந்திரபாபுவுக்கு ஜோடி!) என்று ஒரு நட்சத்திரக் கூட்டம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. எல்லா பாட்டும் பட்டுக்கோட்டையா என்று தெரியவில்லை, ஆனால் பட்டுக்கோட்டை நிறைய பாட்டுகளை எழுதி இருக்கிறார்.

கதை தெரியாதவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தில் குறைவு. Prisoner of Zenda கதைதான் inspiration . நாடோடி எம்ஜிஆர் ஜெயிலில் தூங்காதே தம்பி என்று பாட்டு பாடுகிறார். பானுமதியின் குரல் மட்டுமே கேட்கும். பானுமதி தான் கிழவி என்று சொல்லி அவரை ஏமாற்றுகிறார். பிறகு இருவரும் ஒன்றாக செல்ல சம்மதமா, உமக்கு சம்மதமா என்று பானுமதி பாட்டிலேயே கேட்டு அடுத்த நாட்டுக்கு செல்கிறார்கள். அங்கே வாரிசு பிரச்சினை. மன்னன் எம்ஜிஆர்தான் வாரிசு என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ராஜகுரு வீரப்பா, சதிகார சக்ரபாணி, பிரபு பிங்கலன் (நம்பியார்) யாருக்கும் இது பிடிக்கவில்லை. சதி நடக்கிறது. மன்னன் எம்ஜிஆரும் நாடோடியும் சந்திக்கிறார்கள். மன்னன் எம்ஜிஆர் மயக்கம் அடைகிறார். நேரம் தவறிவிடக்கூடாது என்பதற்காக நாடோடி எம்ஜிஆர் மன்னனாக பதவி ஏற்கிறார். காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்று பாடும் பானுமதி மனம் குளிர புதிய சட்டங்களை கொண்டு வருகிறார். மன்னன் எம்ஜிஆரை வீரப்பா தன் தீவுக்கு கடத்தி சென்று விடுகிறார். நடுவில் பானுமதி இறந்துவிட, எம்ஜிஆர் வழக்கம் போல முகத்தை மூடிக்கொண்டு அழ, ஹீரோயின் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக வீரப்பாவின் தீவுக்குப் போய், மானத் தேடி மச்சான் வரப் போறான் என்று பாடும் சரோஜா தேவியை பார்த்து, காதலித்து, சண்டை போட்டு, மன்னனை மீட்டு, சுபம்!

வசனங்கள் அருமை. வீரப்பா கேட்பார் – சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்ககூடாது போல! எம்ஜிஆரின் பதில் – இல்லை, ஏழைகளே இருக்கக்கூடாது! வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் – ரத்னா, அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை!

படம் எம்ஜிஆருடையது. படத்தில் அவர் பூராவும் வியாபித்திருக்கிறார். மிச்ச எல்லாருமே டம்மிதான் – பானுமதி மட்டும் கொஞ்சம் ஈடு கொடுக்கிறார். வீரப்பாவுக்கு அவ்வப்போது அவரது ட்ரேட்மார்க் சிரிப்பு, சண்டை போடுங்கள், போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருக்கு அது கை வந்த கலை. நம்பியாருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் கடைசியில் அவர் எம்ஜிஆருடம் கடற்கரையில் மோதும் சண்டை பிரமாதம். சந்திரபாபு வேஸ்ட். இரண்டு பாட்டு பாடிவிட்டு போகிறார். விகடன் அவர் முட்டை தின்று கோழியை துப்பும் காட்சியை சிலாகிக்கிறது. இதெல்லாம் ஒரு காமெடியா? சரோஜா தேவிக்கு சும்மா கொஞ்சம் வெட்கப்பட்டு, சிரித்து, பாம்பைக் கண்டு பயந்து எம்ஜிஆர் மேல் ஒட்டிக்கொண்டு, ரவிக்கையை கழற்றி முதுகை காட்டி (அப்போதுதான் அவர் காணாமல் போன இளவரசி என்று மச்சத்தை பார்த்து எம்ஜிஆர் கண்டுபிடிக்க முடியும்.) கடைசியில் எம்ஜிஆர் அவரை மீட்க வரும்போது வீர மாமுகம் தெரியுதே அது வெற்றி புன்னகை புரியுதே என்று பாடினால் போதும். சக்ரபாணி எந்த படத்திலும் நன்றாக நடித்து நான் பார்த்ததில்லை. சொந்தப் படத்திலும் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. தேறுவது பானுமதி ஒருவர்தான். எம்ஜிஆரை தான் கிழவி என்று சொல்லி கலாய்ப்பதாகட்டும், காடு விளைஞ்சென்ன மச்சான் என்று கேட்பதாகட்டும், நன்றாக ஈடு கொடுத்து நடிக்கிறார். அவர் சரோஜா தேவி போல சம்பிரதாயமான தமிழ் ஹீரோயின் இல்லை, பாம்பு வந்தால் எம்ஜிஆர்தான் பயந்து அவர் மேல் ஒட்டிக்கொள்ள வேண்டும். பார்வையிலேயே தைரியத்தை காட்டுகிறார். ஸ்டீரியோடைப் நாயகியாக அவர் இல்லாமல் இருப்பது பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

எம்ஜிஆருக்கு அடுத்தபடி படத்தை வியாபிப்பவர் சுப்பையா நாயுடு. என்ன மணி மணியான பாட்டுகள்!

காடு விளைஞ்சென்ன மச்சான்தான் படத்தில் டாப். என்ன அருமையான வரிகள்! சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாம பாடுபட்டு என்று ஆரம்பிக்கும்போதே களை கட்டிவிடுகிறது. நாட்டுப்புற மெட்டின் இனிமையே தனிதான். பட்டுக்கோட்டை கலக்குகிறார்!

மானைத் தேடி மச்சான் வரப் போறான் கலக்கலான இன்னொரு பாட்டு. Feet tapping number!

தூங்காதே தம்பி தூங்காதே புகழ் பெற்ற பாட்டு. நல்ல வரிகள். பட்டுக்கோட்டை புகுந்து விளையாடுகிறார். கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் – அருமை!

அவ்வளவாக தெரியாத இன்னொரு பாட்டு சம்மதமா உமக்கு சம்மதமா. பானுமதி மிக அருமையாக பாடி இருப்பார்.

சாதாரணமாக சீர்காழியின் குரல் எம்ஜிஆருக்கு பொருந்தவே பொருந்தாது. ஆனால் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா பாட்டில் மிக நன்றாக பொருந்தி இருக்கும். அது என்ன மாயமோ தெரியவில்லை.

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே ஹை பிச்சில் (லீலாவா?) பாடும்போது அம்மாடி, பாத்தும்மா என்றுஒரு பயம் வரும்!

சந்திரபாபுவுக்கு தடுக்காதே என்னை தடுக்காதே என்று ஒரு பாட்டு.

படத்தின் மூன்றாவது ஹீரோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். மனிதர் பிரமாத ஃபார்மில் இருந்திருக்கிறார்.

பாட்டுகள் இணையத்தில் எங்கே கிடைக்கும் என்று தேட நேரமில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

எம்ஜிஆர் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவழித்திருக்கிறார். மாளிகைகள், தீவு, கழுகு குகை, இடிந்து விழும் பாலம், குகையில் தண்ணீர் நிரம்பும் காட்சி என்று மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். செலவழிந்த பணத்தைப் பற்றி “ஓடினால் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி” என்று சொன்னாராம். படம் ஓடிவிட்டது. அவரும் தமிழ் நாட்டுக்கே மன்னர் ஆகிவிட்டார்.

தமிழின் மிக சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் ஒன்று. கட்டாயமாக paarungaL என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
விகடன் விமர்சனம்
நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்

நாடோடி மன்னன்


நாடோடி மன்னன்

நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்! அடுத்த இன்ஸ்டால்மென்டில் என் விமர்சனம்.

முனுசாமி – மாணிக்கம்

மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!

முனு: எதுக்கடா?

மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.

முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?

மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!

முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?

மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.

முனு: ரொம்பப் பெரிய படமாமே?

மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!

முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?

மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!

முனு: கத்திச் சண்டை உண்டா?

மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!

முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?

மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.

முனு: காமிக் இருக்குதா?

மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!

முனு: என்ன தம்பி சொல்றே?

மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கங்கள்:
நாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம்

நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்

அடிமைப் பெண் – என் விமர்சனம்



சின்ன வயதில் டென்டு கொட்டாயில் பார்த்த படம். இன்னும் நினைவில் இருப்பவை: எம்ஜிஆர் க்ளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை போடுவது; பாலைவனக் காட்சிகள்; எம்ஜிஆர் இரட்டை வேஷம் என்றார்களே எங்கே இன்னொரு எம்ஜிஆர் என்று காத்திருந்தது (அது அப்பா எம்ஜிஆர், முதலில் பத்து நிமிஷம் வந்துவிட்டு செத்துப்போய் விடுவார்) அப்போதெல்லாம் அசோகனின் தீவிர பக்தன் ஆகவில்லை.

ஒரு above average சாகசப் படம். சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், அம்மா செண்டிமெண்ட் காட்சிகள், ஜெவின் பெல்லி டான்ஸ், புதுப்பையன் எஸ்பிபிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாட்டு, திமிராக ஜெ பேச சில காட்சிகள், ஜெ பாட ஒரு பாட்டு, சண்டைக் காட்சிகள் இவற்றை சுற்றி எம்ஜிஆருக்காக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை.

1969-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்தப் படம். அவரே இயக்கம். பொதுவாக அவர் நடிக்கும் படங்களை – முக்கியமாக அவர் நடிக்கும் காட்சிகளை – அவர்தான் உண்மையில் இயக்குவார் என்று சொல்வார்கள். இந்தப் படத்தில் டைட்டிலிலேயே அவர் இயக்கியதாக வரும். (நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டும் அவர் இயக்கிய மற்ற படங்கள்) ஜெயலலிதா இரட்டை வேஷம், அசோகன், சந்திரபாபு, சோ, மனோகர், பண்டரிபாய் நடித்து, கே.வி. மகாதேவன் இசையில் வந்த படம்.

அசோகன் (செங்கோடன்?) பண்டரிபாயிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ய, பண்டரிபாய் அவர் காலை வெட்டிவிடுகிறார். பண்டரிபாயின் கணவர் எம்ஜிஆர் அசோகனுடன் ஒரு காலை கட்டிக்கொண்டு – எம்ஜிஆர் எப்பவும் அப்படித்தான். எதிராளியின் கத்தி உடைந்துவிட்டால் தன கத்தியையும் தூக்கிப் போட்டு விடுவார். எப்படியும் அவர்தான் ஜெயிக்கப் போகிறார் – சண்டை போட்டு ஜெயிக்கிறார். ஆனால் அசோகன் பின்னால் இருந்து அவரை குத்தி கொன்றுவிடுகிறார். எம்ஜிஆரின் clan ஆட்கள எல்லாம் அடிமை. பண்டரிபாய் காட்டில் மறைந்து வாழ்கிறார். பையன் எம்ஜிஆர் ஜெயிலில் கூனனாக வளர்கிறார். எப்படியோ ஆற்றில் குதித்து தப்பி, ஜெவிடம் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் கம்பு போன்ற அரிய உண்மைகளை கற்று கூன் போய் வீரனாகிறார். பிறகு எப்படி பாலைவனத்துக்கு போகிறார் என்று மறந்துவிட்டது. (ரொம்ப முக்கியம்!) அங்கே போய் ஏமாறாதே ஏமாற்றாதே என்று ரசிகர்களை ஏமாற்றாமல் பாடுகிறார். பிறகு இன்னொரு திமிர் ஜெவிடம் மாட்டிக் கொள்கிறார். அந்த ஜெவும் இவர் மேல் காதல் ஆகிவிட ஆயிரம் நிலவை கூப்பிடுகிறார். பிறகு அந்த ஜெவுக்கு எல்லாம் நாடகம் என்று தெரிய அவர் கடுப்பாகி இவரை அசோகனிடம் காட்டி கொடுக்கிறார். அசோகன் பப்ளிக்காக அம்மாவை கற்பழிக்கப் போவதாக அறிக்கை விட (படம் பார்த்தபோது இந்த இடம் புரியவில்லை) உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது என்று பாட்டு பாடிக் கொண்டே கோட்டைக்குள் நுழைந்து சிங்கத்தை கொன்று அம்மாவிடம் உருகி சுபம்!

எம்ஜிஆருக்கு காட்சிகளை உருவாக்க தெரிந்திருக்கிறது. சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெயில், ஆற்றில் தப்பி போவது எல்லாம் நன்றாக அமைத்திருப்பார்.

சந்திரபாபு, சோ இருவர் இருந்தும் சிரிப்பு வருவது கஷ்டம்.

ஆயிரம் நிலவே வா ஒன்றுதான் ஏ க்ளாஸ் பாட்டு. ஏமாறாதே ஏமாற்றாதே, காலத்தை வென்றவன் நீ, தாயில்லாமல் நானில்லை, அம்மா என்றால் அன்பு, உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது எல்லாம் சுமார்தான். ஆனால் ஆயிரம் நிலவே வா பாட்டில் மிச்ச எல்லா குறையும் மறந்துவிடுகிறது.

பார்க்கலாம். டைம் பாஸ் படம். எம்ஜிஆருக்கு இது ஒரு க்ளாசிக் படம். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

சந்திரபாபு, சபாஷ் மீனா


சந்திரபாபு பற்றிய முந்தைய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

சபாஷ் மீனா விமர்சனம் இங்கே.

எழுத்தாளர் முகிலின் பதிவிலிருந்து, நண்பர் சூர்யா எடுத்துத் தந்த பகுதி கீழே.

பத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர். பந்தலு, ப. நீலகண்டன் ஆகியோர் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள்.

கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு சிவாஜி, ‘அந்த கேரக்டருக்கு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா வரும்’ என்றார் அவர்களிடம்.

ப. நீலகண்டன் தமது அலுவலகத்துக்குச் சென்று சந்திரபாபுவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்திக்க வருவதாகக் கூறினார். அதற்குச் சந்திரபாபு, ‘நீங்க அங்கேயே இருங்க. நான் கிளம்பி வர்றேன்’ என சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பி வந்தார் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலிருந்த பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு.

‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார் நீலகண்டன்.

‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல, பிரமாதமான ஆக்டர். என் திறமைய புரிஞ்சுக்கிட்டிருக்கார். அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார்’ என சந்திரபாபு சொல்ல, நீலகண்டனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. சுதாரித்துக்கொண்டு, ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்’ என கேட்டார் நீலகண்டன்.

‘சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’ என்றார் சந்திரபாபு.

நீலகண்டனுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை. சிவாஜியிடம் நடந்ததைச் சொன்னார் நீலகண்டன்.

‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில ஸீன்களில அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். விடுங்க.’ – சிவாஜி சொன்னார்.

சந்திரபாபு II


சந்திரபாபுவைப் பற்றி இரண்டு அருமையான சுட்டிகளை சூர்யாவும் உஷா ராமச்சந்திரனும் கண்டுபிடித்து சொன்னார்கள். ஒன்று பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியது. இன்னொன்று சந்திரபாபுவின் பயாக்ரஃபியை எழுதிய முகில் அவர்களுடையது. படித்து பாருங்கள்!

சந்திரபாபுவை பற்றிய முந்தைய பதிவு இங்கே.

உஷா ஒரு எழுத்தாளர் என்பது தெரிந்திருக்கலாம். அவரது பதிவுகளை இங்கே காணலாம்.

சபாஷ் மீனா


sabash_meena

இந்த ஆள் மாறாட்ட கதை இன்றைக்கும் பயன்படுகிறது. உள்ளத்தை அள்ளித் தா இதே கதைதான். காதலா காதலா படத்தில் இதன் சாயல் உண்டு.

1958-இல் வந்த படம். பந்துலுவின் சொந்தப் படம். அவரே இயக்கியும் இருக்கிறார். சிவாஜி, சந்திரபாபு, மாலினி, சரோஜா தேவி, குலதெய்வம் ராஜகோபால், பந்துலு டி. பாலசுப்ரமணியம் (திருத்திய நல்லதந்திக்கு நன்றி!), எஸ்.வி. ரங்காராவ் நடித்தது. இசை டி.ஜி.லிங்கப்பா. வெற்றிப் படம் என்று நினைக்கிறேன். ஹிந்தியில் இந்த படம் தில் தேரா தீவானா என்று ஷம்மி கபூர், மெஹ்மூத் நடித்து வந்தது.

திருச்சியில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த சிவாஜி நாடகம், கீடகம் என்று சந்திரபாபுவோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பொறுப்பு வருவதற்காகவும், அப்படியே பணக்கார ரங்காராவ் வீட்டில் சம்பந்தம் செய்வதற்காகவும் சிவாஜியை அவர் அப்பா பந்துலு பாலசுப்ரமணியம் சென்னைக்கு ரங்காராவ் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். சிவாஜி தன் நண்பன் சந்திரபாபுவை அங்கே ஆள் மாறாட்டம் செய்ய வைக்கிறார். சேரியில் ஒரு பெண்ணோடு லவ்வுகிறார். ஏறக்குறைய சந்திரபாபுவை மறந்தே விடுகிறார். ரங்காராவ் மகள் சரோஜா தேவிக்கும் சந்திரபாபுவுக்கும் இங்கே லவ் டெவலப் ஆகிறது. ஆனால் சந்திரபாபுவுக்கு ஒரே பயம். அவர் சரோஜா தேவியின் சொன்னதற்காக ஒரு நாடகத்தில் ரிக்ஷாக்காரன் வேஷம் போடுகிறார். பிறகு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். ஒரு நிஜ ரிக்ஷாக்காரன் (டபிள் ரோல்) சந்திர பாபு போலிருப்பதால் அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். டாக்டர் ரிக்ஷாக்காரன் ரோலில் மூழ்கிவிட்டதால் அவருக்கு மனம் பேதலித்துவிட்டது என்று சொல்கிறார். பிறகு ஒரே கூத்துதான். கடைசியில் உண்மை தெரிந்து ஜோடிகள் சேர்ந்து சுபம்!

சிவாஜி ஹீரோ என்றாலும் இது சந்திரபாபு படம். கொஞ்சம் நாடகத் தன்மை இருந்தாலும் நிறைய சிரிக்கலாம்.

பந்துலு பாலசுப்ரமணியம் ரங்காராவை பார்க்க வரும் காட்சி சூப்பர்! சிவாஜி ஆஃபீஸில் இருக்கும் பாபுவிடம் போய் அப்பா வந்திருப்பதை சொல்வார். அப்பா பந்துலு பாலசுப்ரமணியம் அங்கே நுழைந்ததும் சிவாஜி தான்தான் மானேஜர் போல் நடிப்பார். பிறகு ரங்காராவ் நுழையும்போது பாபு இங்க்லீஷில் போட்டு தாக்குவது அபாரம்! அடுத்த சீனில் பந்துலு, ரங்காராவ் இருவரும் ஒன்றாக உள்ளே நுழைவார்கள். இரண்டு பேரும் பந்துலுவின் பாலசுப்ரமணியத்தின் “மகனிடம்” பேசுவார்கள். வாயையே திறக்காமல் சிவாஜியும் பாபுவும் சமாளிப்பார்கள். அருமையான இந்த காட்சியை கீழே காணலாம்.

பாபுவுக்கு பேய் பிடித்துவிட்டது என்று அவரை தலை கீழே கட்டிப் போட்டிருப்பார்கள். பூசாரி “ஓடிட்ரயா” என்று கேட்பார். பாபு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தலைகீழா கட்டிபோட்டு ஓடிட்ரயா என்றால் எப்படிய்யா என்பார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.

ரிக்ஷாக்காரன் வீட்டுப் பக்கம் தவறுதலாக போய்விடும் பாபு ரிக்ஷாக்காரன் மனைவியை பார்த்து நீ யாரம்மா என்பார். கூச்சல் போட்டு எல்லாரும் வந்து உன் மனைவி குழந்தைகளையே யாரென்று கேட்கிறாயா என்று அடி போடுவார்கள். பாபு உடனே ஆமாமாம் என் மனைவிதான், என் குழந்தைகள்தான் என்று நாலு குழந்தைகளை அணைத்துக் கொள்வார். அடி போட்டவர்களில் ஒருவன் யோவ் அது என் குழந்தைய்யா என்று ஒரு குழந்தையை பிடுங்கிக் கொள்வான்!

ராண்டார்கை இந்த ரிக்ஷாக்காரன் ரோலை செய்ய பாபு கொஞ்ச நாள் ரிக்ஷா இழுத்து பார்த்தார் என்று சொல்கிறார்!

மாலினி வேறு எந்தப் படத்திலும் நடித்ததாக தெரியவில்லை. சரோஜா தேவி இரண்டாவது கதாநாயகி. அவர் சந்திரபாபுவுக்கு ஜோடியாக வேறு எதிலும் நடித்ததில்லை என்று நினைக்கிறேன். ரங்காராவுக்கு எக்சலண்ட், மார்வலஸ், அதாவது பிரமாதம் என்று இங்க்ளிஷும் தமிழும் பேசும் ஒரு அப்பா ரோல். குலதெய்வம் ராஜகோபாலுக்கு கொஞ்சம் பெரிய ரோல் என்று ஞாபகம். பாபு தனக்கு சிவாஜியை விட ஒரு ரூபாயாவது அதிக சம்பளம் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கிக் கொண்டாராம் என்று பக்ஸ் சொல்கிறான்.

நல்ல பாட்டுகள். இப்போது ஞாபகம் வருவது சித்திரம் பேசுதடி. என்ன அற்புதமான பாட்டு? சிவாஜிக்கு கொஞ்சமும் பொருந்தாத குரல் டி.ஏ. மோதி. அவர் காணா இன்பம் கனிந்ததாலே என்று ஒரு பாட்டு பாடி இருப்பார். இந்த இரண்டு பாட்டுகளையும் இங்கே கேட்கலாம். இதைத் தவிர ஆசைக் கிளியே கோபமா என்ற ஒரு நல்ல பாட்டும் நினைவில் இருக்கிறது. பாபுவுக்கு சீர்காழி குரல் கொடுத்திருப்பார்! அதுதான் முதலும் கடைசி முறையுமாக இருக்கும்! அதன் வீடியோவை இங்கே பார்க்கலாம்.

பாபு, பாட்டுகளுக்காக பாருங்கள். பத்துக்கு 7 மார்க். B grade.