ரஹ்மானின் சினிமா வரவுக்கு முதல் காரணம் இளையராஜாதான்!


விமல் அனுப்பிய தகவல். அவரே எழுதியதா இல்லை எங்கிருந்தாவது கட் பேஸ்ட் செய்தாரா தெரியவில்லை. அவர் சுட்டி எதுவும் தரவில்லை; ஆனாலும் யாருக்காவது சுட்டியோ, இல்லை ஏதாவது பத்திரிகையில் வந்ததது என்பது தெரிந்தாலோ சொல்லுங்கள், குறைந்தபட்சம் ஒரு acknowledgment ஆவது பதித்துவிடுகிறேன். இது விகடனில் வந்த கட்டுரை என்று இலா தகவல் தருகிறார். அவருக்கும் விகடனுக்கும் நன்றி! ஓவர் டு விமல்!

1989 தீபாவளி சமயம். கவிதாலயா நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி.

கே.பாலசந்தர்

கே.பாலசந்தர்

புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர வேண்டிய சூழலில் இருந்ததால் ‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர்
இளையராஜா

இளையராஜா

மிகுந்த பரபரப்பில் இருந்தார். பி்ன்னணி இசைக் கோர்ப்பு மட்டும் முடிந்தால், அடுத்து வெளியீட்டு வேலையில் இறங்கிவிடலாம் என்ற நினைப்பில் இசைஞானிக்காக கவிதாலயா காத்திருந்தது.

அதே நேரம் இசைஞானிக்காக பல திரைப்படங்களின் இசைக் கோர்ப்புகளும் காத்திருந்தன. அவரும் சும்மா இல்லை, கைவசம் 15 திரைப்படங்களை வைத்திருந்தார். ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கென்று கால்ஷீட்டை ஒதுக்கி நோட்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு, மறுநாள் வேறொரு திரைப்படத்திற்குச் சென்று சளைக்காமல் பணி செய்து கொண்டிருந்தார்.

புதுப்புது அர்த்தங்களில் இசைஞானியின் திரைப்பாடல்கள் அமர்க்களமாக வந்திருக்க, அதே போல் பின்னணி இசையிலும் அமர்க்களப்பட வைக்க வேண்டும் என்பதற்காக இசைஞானியை நேரடியாக இசைக்கோர்ப்புப் பணியில் ஈடுபட வைக்க கவிதாலயா முயற்சி செய்தது. இசைஞானி சிக்கவில்லை. கடும் போராட்டத்திற்குப் பின் அவரிடம் பேசியபோது மிகுந்த கோபப்பட்டுவிட்டாராம்.

ஒரு ஆடியோ கேஸட்டை கொடுத்து, ‘நீங்க கூப்புடுற நேரத்துக்கெல்லாம் என்னால வர முடியாது. நான் வேணும்னா நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும். இல்லைன்னா, நான் ஏற்கெனவே போட்ட டிராக்ஸ் இதுல நிறைய இருக்கு. நீங்களே இருக்குறத பார்த்து போட்டுக்குங்க’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இசைஞானி.

இதனை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்ட கவிதாலயா, இனி எந்தத் திரைப்படத்திற்கும் இசைஞானியை அணுகுவதில்லை என்ற முடிவை அப்போதுதான் எடுத்தது.

கோபம்தான். சட்டென்று எழுந்த கோபம். படைப்பாளிகளுக்கு எப்போதுமே ஈகோவும், அதன் பக்கவாத நோயான முன்கோபமும்தான் முதலிடத்தில் இருக்கும். முதலில் வந்தது இசைஞானிக்கு. இது எங்கே போய் முடியும் என்று அப்போது அவருக்கும் தெரியாது. இரண்டாவதாக கோபப்பட்ட இயக்குநர் சிகரத்திற்கும் தெரியாது.

மறு ஆண்டு. மும்பை. தளபதி திரைப்படத்திற்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணியில் ராப்பகலாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் இசைஞானி. படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் இசை, தியேட்டரிலேயே ரசிகர்களை எழுந்து ஆட வைக்கப் போகிறது என்பதை இயக்குநர் மணிரத்னமும், இசைஞானியும் அறிந்ததுதான். அதேபோல் மணிரத்னமும் தான் நினைத்தபடியே பி்ன்னணி இசையும் அதே வேகத்தில், அதே பாணியில் இருக்க வேண்டும் என்று சொல்லி இசைஞானியிடம் வற்புறுத்திக் கொண்டிருந்த நேரம்.

ஏதோ ஒரு மதிய நேரம் என்கிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு சிறிய வார்த்தை பிரயோகம் எழுந்து, அது மணிரத்னத்தை ஸ்டூடியோவைவிட்டு வெளியேறச் செய்திருக்கிறது. மறுநாள் விடியற்காலையிலேயே தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஷ்வரன் சென்னையிலிருந்து மும்பைக்கு ஓடோடிப் போய் இருவருக்குமிடையில் சமாதானம் செய்து பார்த்தும், அது முடியாமல் போனது. இங்கேயும் முதலில் கோபம் எழுந்தது இசைஞானியிடமிருந்துதான். நிமிட நேரம் கோபம்தான். தொடர்ந்து எழுந்தது மணிரத்னத்தின் கோபம்.

இந்த முக்கோண முறைப்பு, தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய இசைப் புயலை உருவாக்கப் போகிறது என்று மூவருமே அந்த நேரத்தில் நினைத்திருக்க மாட்டார்கள்! ஆனால் உருவாக்கப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்! இறைவனின் விருப்பமும் இதுவே.

இப்போது மணிரத்னத்திற்கும் இதே எண்ண அலைகள்தான். தன்னால் மறுபடியும் இசைஞானியை வைத்து வேலை வாங்க முடியாது. அல்லது அவரிடம் பணியாற்ற முடியாது என்பதுதான்.

இந்த நேரத்தில்தான் கே.பி. தனது கவிதாலயா நிறுவனத்திற்காக ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்று கேட்டு மணிரத்னத்தை சந்தித்தார். சந்தித்த நிமிடத்தில் அதனை ஒத்துக் கொண்ட மணிரத்னம் கதையைவிட, இசைக்கு யாரை அணுகுவது என்கிற தேடலில் மூழ்கிப் போனார்.

அவரை எப்போதும் போல் அன்றைக்கும் சந்திக்க வந்த அப்போதைய விளம்பரப்பட இயக்குநரான ராஜீவ் மேனன், ‘இந்த மியூஸிக்கை கேட்டுப் பாருங்க’ என்று சொல்லி ஒரு ஆடியோ கேஸட்டை மணிரத்னத்தின் கையில் திணித்தார். அது ராஜீவ் மேனனின் ஒரு மூன்று நிமிட விளம்பரத்திற்கு ரஹ்மான் போட்டிருந்த இசை. அந்த இசையைக் கேட்டுவிட்டு அதில் ஈர்ப்படைந்த மணிரத்னம், தொடர்ந்து ரஹ்மான் போட்டிருந்த அனைத்து விளம்பர ஜிங்கிள்ஸ்களையும் வாங்கிக் கேட்டுப் பார்த்துவிட்டு, அப்போதே முடிவு செய்து கொண்டார் இவர்தான் தனது அடுத்த இசையமைப்பாளர் என்று.

ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்

ஒரு ஆட்டோவில் சாதுவாக வந்திறங்கிய அந்தப் பையனைப் பார்த்து, கவிதாலாயா நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்கூட நம்பவில்லையாம், இவர்தான் நமது அடுத்தப் படத்தின் இசையமைப்பாளர் என்று.

ஆனால் அலுவலகத்தில் இருந்த ஒருவர் மட்டும் டேப் ரிக்கார்டரில் அந்த இளைஞர் போட்டிருந்த விளம்பர இசையைக் கேட்ட மாத்திரத்தில், சந்தோஷமாக துள்ளிக் குதித்து சம்மதித்தார். அவர் கவிதாலயாவின் தூணாக விளங்கிய திரு.அனந்து. உலக சினிமாவின் சரித்திரத்தையும், கதைகளையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த உன்னதப் படைப்பாளி, இந்த இசையமைப்பு வேறு ஒரு ரீதியில் தமிழ்த் திரையுலகைக் கொண்டு போகப் போகிறது என்பதை மிக எளிதாகப் புரிந்து கொண்டு புத்தம் புது இசையமைப்பாளருக்கு முழு ஆதரவு கொடுக்க, சங்கடமில்லாமல், கேள்வி கேட்காமல் கே.பி.யால் இது அங்கீகரிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் இப்போதும் சொல்கிறார்கள் படத்தின் பாடல்களை கேட்கின்றவரையில் யாருக்குமே நம்பிக்கையில்லை என்று!

தளபதி வரையிலும் வாலியுடன் இருந்த நெருக்கத்தை, அப்போதைக்கு முறித்துக் கொண்டு புதிதாக வைரமுத்துவுடன் கூட்டணி வைத்தார் மணிரத்னம். இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் படத்தின் அனைத்துப் பாடல்களுமே இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப் போகிறது என்பதை கே.பி.யும், வைரமுத்துவும், மணிரத்னமும் உணர்ந்தார்கள்.

ரோஜா திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை சோழா ஹோட்டலில் நடந்தபோது பேசிய கே.பாலசந்தர், “இந்தப் படத்தோட இசையமைப்பாளர் ரஹ்மானை எனக்கு அறிமுகப்படுத்த மணிரத்னம் அழைத்து வந்தபோது, நான் கூட ஏதோ எனக்குத் தெரியாத வேற்று மொழிக்காரரையோ, அல்லது வயதான, திரையுலகம் மறந்து போயிருந்த ஒருத்தரையோ அழைத்து வரப்போகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வந்தது இந்தச் சின்னப் பையன்தான். ஆனால் படத்தின் இசையைக் கேட்டபோது இது ஒரு புயலாக உருவெடுக்கப் போகிறது என்பதை இப்போது உணர்கிறேன். நிச்சயம் அதுதான் நடக்கப் போகிறது” என்றார். அவருடைய வாக்கு அடுத்த சில வருடங்களில் நிஜமாகவே நடந்துவிட்டது.

வீட்டிலேயே சிறிய அளவில் ஸ்டூடியோ வைத்து அதில் விளம்பரப் படங்களுக்கு இசையமைப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ரஹ்மான், தனக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கான முழுத் திறமையும் அவருக்குள் இருந்து, அதனை கொஞ்சமும் தயக்கமோ, சோம்பேறித்தனமோ இல்லாமல் சரியான சமயத்தில், கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் சிகரத்தின் நிறுவனம் என்கிற பேனர். மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குநர். இவர்கள் இருவரின் நேரடி பார்வையில் தன்னை பட்டென்று பற்றிக் கொள்ளும் சூடமாக ஆக்கிக் கொண்டு ஜெயித்தது திறமைதான்.

ராஜீவ் மேனன் மட்டும் அன்றைக்கு அந்தச் சூழலில் ரஹ்மானைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருந்தால்,

இதன் காரணமாக ரஹ்மான், மணிரத்னம் கண்ணில் படாமல் போய் அவர் தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த ஹிந்தி இசையமைப்பாளர்களையே அழைத்து வந்திருந்தால்,

இந்த ‘ரோஜா’ வாய்ப்பே ரஹ்மானிடம் சிக்காமல் போயிருந்திருக்கும்.

இதன் பின்னால் அவருக்கு யார் இப்படி ஒரு கோல்டன் சான்ஸை கொடுத்திருப்பார்கள் என்று யோசிக்க முடியவில்லை. ஆனால் ரஹ்மான் சொல்வது போல் இது தெய்வீகச் செயல். கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது, கிடைத்துவிட்டது.


வேறொரு இயக்குநரால் ரஹ்மான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை அவரால் பெற்றிருக்க முடியுமா? சின்னச் சின்ன ஆசை உருவாகியிருக்குமா? அது இயக்குநரின் கற்பனையாச்சே! யோசித்தால் நடந்தும் இருக்கலாம், அல்லது நடவாமலும் இருக்கலாம் என்றுதான் என் மனதுக்குத் தோன்றுகிறது.

இந்த நன்றிக் கடனுக்காகத்தான் ஏவிஎம் நிறுவனம், தனது 150-வது படத்திற்கு ரஹ்மானை இசையமைப்பாளராக புக் செய்துவிட்டு, “யாரை இயக்குநராகப் போடலாம்?” என்று கேட்டபோது ரஹ்மான் தயங்காமல் கை காட்டியது ராஜீவ் மேனனை. தயக்கமே இல்லாமல் ஏற்றுக் கொண்டது ஏவிஎம். நன்றிக் கடன் தீர்க்கப்பட்டது. அத்திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று, ரஹ்மானுக்கே விருதுகளை வாரிக் கொடுத்தது.

ரஹ்மானின் திரையுலக வாழ்க்கை நமக்குச் சொல்கின்ற பாடங்கள் நிறைய!

சிந்துபைரவி படத்தின் பாடல்களைப் போல் ஒரு இயக்குநருக்கு கதைக்கேற்ற சிறந்த பாடல்கள் வேறெங்கே கிடைத்திருக்கும்?

தளபதி படத்தின் இசையைப் போல் ஒரு சூப்பர்ஹிட் கமர்ஷியல் படத்தின் தாக்கத்தை யாராவது உருவாக்க முடியும்?

ஆனால் இந்த இரண்டுமே ஒரு நொடியில் உடைந்து போனதே? அதன் பின் இன்றுவரையிலும் அது போன்ற இசை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைக்கவில்லையே? நாம் நிச்சயம் இழந்திருக்கிறோம்!

ஆனால், ‘எல்லா சோகத்திலும் ஒரு வழி பிறக்கும்’ என்பார்கள். ‘எப்பேர்ப்பட்ட துக்கத்திலும் ஒரு செய்தி கிடைக்கும்’ என்பார்கள். இது இங்கே தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு இசைஞானியால் கிடைத்தது.

இளையராஜா என்ற மனிதரின் ஒரு நிமிட கோபத்தின் விளைவு, இப்போது ஆசியக் கண்டத்துக்கே பெருமை…

இந்தியாவுக்கே சிறப்பு…

தமிழ்த் திரைப்பட உலகத்திற்கே ஒரு மகுடம்…

எல்லாவற்றிலும் ஒரு காரண, காரியம் உண்டு. நம்புங்கள்! எல்லாம் இறைவன் செயலே!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!


பாலகுமாரன் பிரபலமாக ஆரம்பித்திருந்த நேரத்தில் முந்தானை முடிச்சு கதை டிஸ்கஷனில் பங்கேற்றிருக்கிறார். அப்போதிலிருந்து அவருக்கு சினிமாவில் நுழைய ஆசை. கூடவே ஒரு தயக்கம். அப்புறம் நுழைந்துவிட்டார். அந்த அனுபவங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் சிறு memoir-தான் இந்த புத்தகம்.

முதல் முதலாக பாக்யராஜ் அவருக்கு அறுபது ரூபாய் ஃபீஸ் கொடுத்திருக்கிறார். இது எண்பதுகளின் முற்பாதியில். அப்போது பாக்யராஜுக்கு ஜி.எம். குமாரும் லிவிங்ஸ்டனும் உதவியாளர்கள். பாக்யராஜ் இவரையும் வந்து சேருங்கள் என்று கூப்பிட்டிருக்கிறார். குறைந்த சம்பளம், கொஞ்சம் பயம் – அதனால் பாலா மறுத்துவிட்டார். பிறகு மு. முடிச்சு படம் பார்த்தபிறகு கமல், சிவகுமார், சுகாசினி, பாலு மகேந்திரா எல்லாரிடமும் அறிவுரை கேட்டிருக்கிறார். யாரும் வா என்று சொல்லவில்லை. சிவகுமார் இவரை நீங்கள் ஏற்கனவே சபல கேஸ், இங்கே தப்பு பண்ண நிறைய சான்ஸ் என்று இடித்திருக்கிறார். சுகாசினி மூன்று வருஷத்துக்கு ஒரு முறை ஏதாவது தப்பு பண்ண வேண்டும் என்று விரதமா என்று கேட்டிருக்கிறார். கோபம், ஒரு கை பார்க்கிறேன் என்று இறங்கி இருக்கிறார். அப்போது கமல் வரவேற்றாராம்! முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும், யாரிடம் யோசனை கேட்கக்கூடாது என்று சொன்னாராம்!

சிந்துபைரவி படத்தில் உதவி இயக்குனர். வசந்த் இன்னொரு உதவி இயக்குனர். அனந்த் தலைமை நிர்வாகி மாதிரி. இவர் ஆஃபீஸ் போவது போல ஒன்பது மணி வாக்கில் போக நான்காவது நாள் அனந்து பிடித்து எகிறி இருக்கிறார். சிவகுமாரிடம் பொரும, அவர் “சவுகரியமா வளர்ந்துட்டீரு ஓய்!” என்று கமென்ட் விட்டிருக்கிறார். அப்புறம் பாலகுமாரன் கொஞ்சம் கொஞ்சமாக நெளிவு சுளிவுகளை புரிந்துகொண்டிருக்கிறார்.

சினிமாவின் சில முகங்களைப் பற்றி – இளையராஜாவின் “கர்வம்”, பாலச்சந்தரின் கோபம்+அன்பு, ஒரு டீமாக வேலை செய்வது என்று வெளியே தெரியாத முகங்களைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்: பாலகுமாரனும் சினிமாவும் – அருன்மொழிவர்மனின் பதிவு

எம்.எஸ். விஸ்வநாதன்–25


விமலுக்கும், விகடனுக்கும் நன்றி!

  1. எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17.
  2. அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை !.
  3. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான் !.
  4. நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்’, `காதலா…. காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி !.
  5. இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி. கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால் வைத்தது இல்லை !.
  6. மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி… தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை ! (வருவான் வடிவேலன் படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதை தமிழக அரசிடம் பெற்றார் என்று சாரதா சொல்கிறார்.)
  7. குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறைவேற்றினார் !
  8. இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான் !
  9. மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம் !
  10. சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்ச ஸ்தாயியில் பாடின பாடல்கள் பெரும் புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி !
  11. எம்.எஸ். விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடி கட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன்–ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள் !
  12. மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார் !
  13. இளையராஜாவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட இளையராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம் !
  14. `புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக் கோர்ப்பு செய்தார் !
  15. தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு இறக்கும் வரை, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார் !
  16. 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக் காட்டியவர் சந்திரபாபு !
  17. தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது !
  18. உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவைகளிலும்’, லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டு வந்தார் !
  19. `நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது !
  20. இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான். சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது !
  21. கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறுசுறுப்பாக இருக்கிறார் !
  22. பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும் !
  23. சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல். வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள் !
  24. வி. குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்எஸ்வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது !
  25. `அத்தான்….. என்னத்தான்….’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப் பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிர்ந்தது அரங்கம் !

இங்கே சொல்லப்பட்ட பாட்டுகளில் சிலவற்றின் வீடியோக்கள்:

பட்டத்து ராணி

நினைத்தேன் வந்தாய் நூறு வயது

பன்சாயி காதல் பறவைகள்

யார் அந்த நிலவு

கண் போன போக்கிலே கால் போகலாமா

பிற்சேர்க்கை: சாரதாவின் மறுமொழியிலிருந்து – எம்எஸ்வி இசையமைத்த மொத்தப்படங்களின் எண்ணிக்கை 518. இவற்றுள் ராமமூர்த்தியுடன் சேர்ந்து இசையமைத்த படங்கள் 88, இளையராஜாவுடன் சேர்ந்து இசையமைத்தவை 4 , தனித்து இசையமைத்த படங்கள் 426.

சங்கர் கணேஷ், இளையராஜா, ஜி.கே.வெங்கடேஷ், ஆர்.கோவர்த்தனம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இவருடைய உதவியாளர்களாகப் பணியாற்றியவர்களே.

வருவான் வடிவேலன் படத்துக்கு இசையமைத்ததற்காக தமிழக அரசு இவருக்கு (தெரியாத்தனமாக) 1978-க்கான சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கி விட்டது. (அதாவது தகவல் # 6 தவறு என்று சாரதா சொல்கிறார்.) ஆனால் அடுத்த ஆண்டே (1979) சுதாரித்துக்கொண்டு, எல்லோரும் எதிர்பார்த்த நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு பதிலாக நிறம் மாறாத பூக்களூக்காக இளையராஜாவுக்கு விருதைக் கொடுத்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

பயணங்கள் முடிவதில்லை – விகடன் விமர்சனம்


இதுவும் விமல் அனுப்பியதுதான், அவருக்கும் விகடனுக்கும் நன்றி!

புதுசா அறிமுகமாகும் ஒரு டைரக்டரோட (ஆர்.சுந்தர்ராஜன்) படமாச்சே, எப்படி இருக்குமோ ஏதா இருக்குமோனு பயந்துகிட்டே தியேட்டருக்குள் போனேன். இரண்டாவது ரீல்லேயே எனக்கு சரியான நோஸ் கட்!

துணிக்குப் போடற கஞ்சியைக் குடிச்சே வயித்தை நிரப்பிக்கிற ஏழ்மை; இருந்தாலும் பாடகனா ஆகணுங்கற லட்சியம்- இது கதாநாயகன் ரவி (மோகன்). ரவியின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுத்து, அவனைக் காதலிக்கவும் செய்யும் கதாநாயகி ராதா (பூர்ணிமா ஜெயராம்). இவங்க ரெண்டு பேரையும் சுற்றி, டைரக்டர் திரைக்கதையைப் பின்னியிருக்கும் அழகு அப்படியே அசத்திடுது.

முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ‘ பாடலும், டி.விக்காக ரவி பாடும் இன்னொரு பாடலும் படமாக்கப்பட்டுள்ள விதம் டைரக்டரோட எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்குது! (இளையராஜாவும் எஸ்பிபியும் இவருக்கு அசைக்க முடியாத இரு தூண்கள்!)

தனக்கு பிளட் கான்சர்ங்கறதை ராதாகிட்டே சொல்ல முடியாம ரவி திண்டாடறது, தன் மீதுள்ள காதலை அவ மறக்கணும்கறதுக்காக அவளை டீஸ் பண்றது, மூன்றாவது ஒரு மதுரை டாக்டர் (ராஜேஷ்) அறிமுகமாறது – பின் பகுதி விவகாரங்கள்லே துளிக்கூட அமெச்சூர்த்தனமே தெரியலே!

படத்துலே என்னதான் குறை?

ஹீரோவோட பிளட் கான்சர், வாழ்வே மாயத்தின் பாதிப்பு! டாக்டர் குமார் விஷயத்தில் அந்த 7 நாட்கள் பாதிப்பு!

இருந்தாலும், ஒரு ஊக்க போனஸ் மாதிரி 48 மார்க் தரலாம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

அன்னக்கிளி – விகடன் விமர்சனம்


இதை விமல் ஸ்கான் செய்து அனுப்பி இருக்கிறார், அவருக்கும் விகடனுக்கும் நன்றி!

இளையராஜாவின் முதல் படமான இதில் அவரது இசையை பற்றி ஒரு வார்த்தை கூட இந்த விமர்சனத்தில் இல்லாதது ஏன் என்று விமல் வியக்கிறார். நானும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

ராஜாதி ராஜா – விகடன் விமர்சனம்


இதுவும் விமல் அனுப்பியதுதான். அவருக்கும் விகடனுக்கும் நன்றி!

மினி! – படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். ஹாஸ்யம், ரௌத்ரம், காமம், குரோதம் எல்லாம் கலந்து, ரஜினிக்கென்றே மசாலா தூவி வைக்கப்பட்டிருக்கும் ரெடிமேட் ஃபார்முலா படம். சரி எதிர்காலத்தில் ரஜினிக்கு எப்படித் தீனி போடவேண்டும் என்று டைரக்டர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

மாக்ஸி! – ‘அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்கறேன்” என்று பல்லைக் கடித்தபடி உறுமுகிறார் பட்டணத்து ரஜினி. அதே மாதிரி, ”எப்படியாவது 50,000 ரூபாயை என் மாமன் மூஞ்சியில கடாசிட்டு லட்சுமி(நதியா)யைக் கட்டிக்கறேன்” என்று கிளம்புகிறார் பட்டிக்காட்டு ரஜினி. செய்யாத கொலைக்காகப் பட்டணத்து ரஜினிக்கு மரண தண்டனை வழங்கப்பட, அவர் ஜெயிலுக்குப் போய் அங்கிருந்து தப்பி ஓடும்போது, வழியில் இன்னொரு ரஜினியைப் பார்க்கிறார். ”எனக்குப் பதில் பதினைந்து நாள் நீ உள்ளே இரு. நான் நிரபராதினு நிரூபிச்சுட்டு உன்னை விடுதலை பண்றேன். உன் கல்யாணத்துக்குப் பணமும் தர்றேன்” என்று சொல்ல, பட்டிக்காட்டார் தலையாட்டி விட்டு, ‘உள்ளே’ போகிறார். தலையில் கறுப்புத் துணி மாட்டி, கழுத்தில், சுருக்கை இறுக்குகிற பரபரப்பான சமயத்தில், முன்னவர் ஆதாரங்களோடு பாய்ந்து வந்து இவரை மீட்கிறார்.

சட்டம் தெரிந்தவர்கள் படத்தைப் பார்த்தால், புழுவாக நெளிந்து போவார்கள். அத்தனை குளறுபடி! ஆனால், அண்ணன்(!) ரஜினி பண்ணுகிற அட்டகாசத்தில் குளறுபடியெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிடுகிறது என்பது வேறு விஷயம்!

இடப்பக்கக் கடை வாயைக் கடித்தபடி வசனம் பேசிக்கொண்டு படம் முழுக்கச் சண்டை போடுகிறார் சூப்பர் ஸ்டார்! கையால் அடிக்கிறாரா, காலால் உதைக்கிறாரா, எதிராளிக்கு அடி கண்ணில் விழுந்ததா, வயிற்றில் இறங்கியதா என்று ஊகிப்பதற்குள் சண்டையே முடிந்து போகிறது. சும்மா சொல்லக் கூடாது… தமிழ் சினிமாக்களில் ஸ்டன்ட் ரொம்பவும்தான் முன்னேறி வருகிறது!

மேக்கப்காரர் வித்தியாசமே காட்டவில்லையென்றாலும், இரண்டு காரெக்டர்களுக்கும் நடிப்பில் செமத்தியான வித்தியாசம் காட்டிவிடுகிறார் ரஜினி.

கோடீஸ்வரர் வேஷம் போட்டாலும், ரிக்ஷாக்காரர் ஜனகராஜால் மசால் வடை, சைனா டீயை மறக்கமுடியவில்லை. ராதாரவியிடம் அடிக்கடி உளறி அப்புறம் சமாளிக்கிறார். அநியாயத்துக்கும் வயிற்றில் கத்தி வாங்கிக்கொண்டு, தவளை மாதிரி காலைப் பரப்பிக்கொண்டு அவர் செத்துப்போவதிலும் பரிதாபம் இருக்கிறது.

முழுக்க முழுக்க ஹீரோ படம் என்பதால், ராதா, நதியா இரண்டு பேருமே டெபாஸிட் இழக்கிறார்கள்! சொந்தப் படம் என்பதால் பார்த்துப் பார்த்து அடித்திருக்கிறார் இளையராஜா. ஆனால், டியூன்களில் பழைய வாசனை கொஞ்சம் அதிகம்தான்!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

பசங்க திரைப்படத்துக்கு விருதுகள்


2009-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழிலிருந்து பசங்க திரைப்படம் பல விருதுகளை வென்றிருக்கிறது. இந்த ஒரு தமிழ் படத்துக்குத்தான் விருதுகள் கிடைத்திருக்கின்றன.

படத்தில் “ஹீரோவாக” நடித்த கிஷோரும், “வில்லனாக” நடித்த ஸ்ரீராமும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுகளை பெற்றிருக்கிறார்கள். சிறந்த திரைக்கதைக்கான விருதை (இயக்குனர்) பாண்டியராஜ் பெற்றிருக்கிறார். சிறந்த தமிழ் படமாகவும் (தயாரிப்பாளர் சசிகுமார்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

பக்ஸுக்கு பிடித்த படம். பக்ஸ், விமர்சனம் எழுதுகிறாயா?

பழசி ராஜா திரைப்படத்துக்காக இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் (shared with Amit Trivedi for Dev D). ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியும் இந்த படத்திற்காக சிறந்த ஒலி அமைப்பு விருது பெறுகிறார் (Shared with Subhash Sahoo for Kaminey and Anup Dev for 3 Idiots). படத்துக்கு ஸ்பெஷல் ஜூரி அவார்டும் (shared with Kaminey and Kutty Srank) கிடைத்திருக்கிறது. படத்திலிருந்து ஒரு பாட்டு கீழே.

2009-இன் சிறந்த படமாக மம்முட்டி நடித்து ஷாஜி கருண் இயக்கிய குட்டி ஸ்ரான்க் என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. குட்டி ஸ்ரான்க் திரைப்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் (அஞ்சலி சுக்லா), சிறந்த திரைக்கதை (பி. எஃப். மாத்யூஸ்+ஹரிகிருஷ்ணா, award shared with Pasanga and a Kannada movie), சிறந்த ஆடை அலங்காரம் (ஜெயகுமார்), மற்றும் ஸ்பெஷல் ஜூரி அவார்டும் கிடைத்திருக்கிறது.

3 இடியட்ஸ் திரைப்படம் சிறந்த பாப்புலர் திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. லாகூர் என்ற படம் இயக்குனருக்கு (சஞ்சய் பூரண் சிங் சவுஹான்) சிறந்த முதல் படமாகவும், டெல்லி-6 தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் விருதும், வெல் டன் அப்பா (ஷ்யாம் பெனகல்) சமுதாய பிரச்சினைகளை சிறப்பாக காட்டியதற்கும் விருதுகளை வென்றிருக்கின்றன. லாகூரில் நடித்ததற்காக ஃபரூக் ஷேக் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது வென்றிருக்கிறார்.

அபோஹோமன் என்ற வங்காள மொழி திரைப்படத்தை இயக்கிய ரிதுபர்னோ கோஷ் சிறந்த இயக்குனர் விருதை வென்றிருக்கிறார். இதே படத்தில் நடித்த அனன்யா சட்டர்ஜிக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்திருக்கிறது.

அமிதாபுக்கு பா படத்துக்காக சிறந்த நடிகர் விருது. இதே படத்தில் நடித்த அருந்ததி நாகுக்கு சிறந்த குணசித்திர நடிகை விருதும் கிடைத்திருக்கிறது. சிறந்த மேக்கப்புக்கான அவார்டும் (கிறிஸ்டியன் டின்ஸ்லி+டொமினி டில்) இந்த படத்துக்கு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படம் சிறந்த ஹிந்தி மொழி படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அரசின் அறிவிப்பை இங்கே காணலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய பதிவுகள்:
விருதுகள் பற்றிய இந்திய அரசின் அறிவிப்பு
விருது பற்றி பாண்டியராஜ்
வெல் டன் அப்பா
3 இடியட்ஸ்(3 Idiots), விகடன் விமர்சனம், Lessons from 3 Idiots

பிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்


இனிமையான குரலால் 23 வருடங்கள் ரசிகர்களை மயங்க வைத்த பாடகி சொர்ணலதா(37) இன்று (12/09/2010) சென்னையில் காலமானார்.

நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.

கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் 23 ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார். கருத்தம்மா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் ‘போறாளே பொன்னுத்தாயி…’பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்றார்.

இவரின் தந்தை கே.சி.செருகுட்டி பிரபல ஹார்மோனியக் கலைஞர். தாய் கல்யாணி இசைப் பிரியர். கீபோர்டு மற்றும் ஹார்மோனியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர் சொர்ணலதா.

மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. சொர்ணலதாவின் திடீர் மரணத்தால் அவரது இசை ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

1982ம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.

தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத் தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் மிகப்பிரபலம்.

  1. எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலை பாயுதே)
  2. சொல்லாயோ சோலைக்கிளி(அல்லி அர்ஜூனா)
  3. குச்சி குச்சி ராக்கம்மா (பம்பாய்)
  4. உசிலம்பட்டி பெண்குட்டி (ஜெண்டில்மேன்)
  5. அக்கடான்னு நாங்க (இந்தியன்)
  6. மாயா மச்சீந்திரா (இந்தியன்)
  7. அஞ்சாதே ஜீவா (ஜோடி)
  8. முக்காலா முக்காபலா (காதலன்)
  9. காதலெனும் தேர்வெழுதி (காதலர் தினம்)
  10. போறாளே பொன்னுத்தாயி (கருத்தம்மா)
  11. உளுந்து வெதைக்கையிலே (முதல்வன்)
  12. பூங்காற்றிலே.. (உயிரே)
  13. ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு (உழவன்)
  14. காதல் யோகி (தாளம்)

என்பன உட்பட ஏ.ஆர்.ரகுமான் இசையில் 35க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.

  1. மலைக்கோயில் வாசலில்(வீரா)
  2. மாடத்திலே கன்னி மாடத்திலே(வீரா)
  3. என்னுள்ளே என்னுள்ளே(வள்ளி)
  4. ராக்கம்மா கையத் தட்டு(தளபதி)
  5. உத்தம புத்திரி நானே(குரு சிஷ்யன்)
  6. நான் ஏரிக்கரை மேலிருந்து (சின்னத்தாயி)
  7. மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை)
  8. மணமகளே (தேவர் மகன்)
  9. ஆட்டமா தேரோட்டமா (கேப்டன்பிரபாகரன்)
  10. நீ எங்கே என் அன்பே (சின்னதம்பி)
  11. போவோமா ஊர்கோலம் (சின்னதம்பி)
  12. மாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன்)

என்பன உட்பட இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களைத் தந்துள்ளார்.

தனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்த ஸ்வர்ணலதா இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று (12/09/2010) காலை வீட்டில் இருந்தபோது திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகி்ச்சை அளித்தும் பலனின்றி காலமானார்.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது இறுதிச் சடங்குகள் நாளை (13/10/2010) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(விவரங்களை அனுப்பியது விமல்)

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல்


சிந்துபைரவி திரைப்படத்திலிருந்து மஹாகணபதிம் பாட்டு (ஜேசுதாஸ், இளையராஜா, முத்துசாமி தீட்சிதர் கிருதி, நாட்டை ராகம்)

சும்மா ஜாலிக்காக அன்னை ஓர் ஆலயம் படத்திலிருந்து அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே பாட்டு (எஸ்பிபி, சுசீலா, இளையராஜா, வாலி – நன்றி, சாரதா!)

தொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள்

நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி


இந்த விவரங்களும் விமல் அனுப்பியது என்பதை குறிப்பிட மறந்துவிட்டேன்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த நடிகர் முரளி இதுவரை 99 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக நடித்த பாணா காத்தாடி படத்தில் கூட எம்.பி.பி.எஸ். மாணவராக நடித்து, காலேஜூக்கு போகணும் என்று சொல்லிவிட்டு தியேட்டரில் குபீர் சிரிப்பை வரவழைத்த முரளி தமிழ் சினிமா பிரபலங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான குணாதியங்களைக் கொண்டவர். முரளியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஒருபுறமென்றால் அவரது மறைவுச் செய்தியை நம்ப முடியவில்லை என்று சொல்பவர்கள் இன்னொரு புறம். அவர்களில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் விஜய் டிவி காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகர் முரளியும், அவரது மகன் அதர்வாவும் கலந்து கொண்டு பேசியதை நினைவு கூர்ந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் முரளி அளித்த பேட்டி அவரது கடைசி பேட்டியாக அமைந்து விட்டது. அந்த பேட்டியில் முரளி மிகவும் இயல்பாக, கலகலப்பாக பேசிய விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது. (ஆர்வி: Murali comes across a simple, straightforward man with no hangups.) கண் முன்னே சிரித்துப் பேசிய அந்த 46 வயது இளைஞர் இன்று நம்மிடையே இல்லை. அந்தப் பேட்டி கீழே.

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

பார்க்க சோம்பேறித்தனப்படுபவர்களுக்காக விவரம் கீழே.

எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். சூட்டிங்கிற்கு போகும்போது கூட கிரிக்கெட் பேட், ‌‌டென்னிஸ் பேட்டெல்லாம் எடுத்துட்டு போயிடுவேன். வீட்டில் இருக்கும்போது என் பசங்களோட கிரிக்கெட்தான் விளையாடிட்டு இருப்பேன். சின்ன வயசுல இருந்தே விளையாட்டுல ரொம்ப ஆர்வம் இருந்துச்சி. தெருவில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவேன். எல்லோரும் சபிச்சிட்டு போவாங்க. எப்ப, எந்த வீட்டு கண்ணாடி உடையும்னு தெரியாது. ஆனா உடைஞ்ச கண்ணாடிக்கு பதிலா புது கண்ணாடி வாங்கி மாட்டி கொடுத்துடுவோம். ஆனாலும் எங்களை பார்த்தாலே திட்டுவாங்க. கதாநாயகன் ஆனதுக்கு பிறகு அதே ரோட்டில் கிரிக்கெட் விளையாடியிருக்கோம். சின்ன வயசுல எங்களை திட்டுனவங்க கூட தம்பி நீ நல்லா நடிச்சிருக்கன்னு பாராட்டியிருக்காங்க. நீயெல்லாம் இப்படி வருவேன்னு நான் எதிர்பார்க்கலன்னுகூட ஒரு சிலர் சொல்லியிருக்காங்க. என்னை திட்டுனவங்க, மரியாதையா பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துது.

தமிழ்நாடு மக்கள் ரொம்ப நல்லவங்க. நடிகர்கள் மீது ரொம்ப மரியாதை ‌‌‌வெச்சிருக்காங்க. அவங்கக்கிட்ட நாம ஒரு நடிகரா நிற்கக்கூடாதுங்க. அவங்கக்கிட்ட நானும் மனிதன்ங்கிற மாதிரிதான் நிற்கணும். அப்படி நின்னா எந்த தொந்தரவும் இருக்காது. நான் நடிகனா ரோடுல நின்னாத்தான் தனித்துவம் ஆயிடும். நான் மக்களோடு மக்களா நிற்பேன். எங்க ஏரியா ரோடுல இருக்குற மரங்கள்ல்லாம் நான்தான் வெச்சிருக்கேன். ஞாயிற்றுக்கிழமைகள்ல மரத்தை வெட்டுவேன். களை எடுப்பேன். தோட்ட ‌வேலைகள்லயும் எனக்கு ஆர்வம் அதிகம். நான் ரொம்ப யதார்த்தமான வாழ்க்கையை விரும்புறேன். என் வீட்டில் சினிமா சம்பந்தப்பட்ட எந்த போட்டோவும் இருக்காது. சினிமா வேறு. குடும்பம் வேறு.

என்னோட அப்பா டைரக்டர். இங்கே கே.பாலசந்தர் சார் மாதிரி கன்னடத்துல என்னோட அப்பா பெரிய ‌டைரக்டர். அவரோட படங்கள்ல அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணினேன். நான் 8ம் வகுப்பு பெயில் ஆயிட்டேன். அப்ப இருந்தே அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்‌‌டேன். எனக்கு டைரக்டர் ஆகணும்னுதான் ஆசை. அப்பா படத்துல நடிக்குற சின்னச் சின்ன கேரக்டர்களுக்கெல்லாம் நான்தான் டயலாக் சொல்லிக் கொடுப்பேன். அந்த டயலாக்கை நைட் பேசிப் பார்ப்பேன். அதை பார்த்த என் அப்பா நீ ஏன் ஹீரோவா நடிக்கக் கூடாதுன்னு கேட்டார். தெலுங்குல வெளியான பூவிலங்கு படம் செம ஹிட் ஆச்சு. அதை பார்த்த கே.பாலசந்தர் சார், பூவிலங்கு படத்தை தமிழ்ல எடுத்து உன் மகனை ஹீரோவா போடுவோம்னு அப்பாகிட்ட கேட்டாரு. அமீர் ஜான் சார் டைரக்ஷன்ல எடுத்தாங்க. என்னோட வரப்பிரசாதமே இசைஞானி இளையராஜாதான். முதல் படத்தில் இருந்தே என்னோட எல்லா படங்களையும் பாடல்கள் சூப்பர் ஹிட்டா இருக்கும். அதுக்கு காரணம் இளையராஜா சார்தான்.

பூவிலங்கு வெற்றி பெற்றதால எனக்கு அடுத்தடுத்த படங்கள்ல நடிக்கணும்னு ஆர்வம் வந்துச்சி. அதுவும் நல்ல படங்கள்ல நடிக்கணும் ஆசைப்பட்டேன். வெறும் கமர்ஷியல் படங்கள்ல நடிக்கிறதை நான் விரும்பல. குண்டுசட்டிக்கிட்ட நாலு பைட் நாலு சாங்னு இல்லாம ஒரு கருத்துள்ள படங்கள்ல நடிக்கணும் நினைச்சேன். அதே மாதிரி பெண்மைக்கு முதலிடம் கொடுத்துத்தான் நான் நடிச்சிருப்பேன். எந்த இடத்துலயும் டபுள் மீனிங் டயலாக்கோ, விரசமான டயலாக்கோ, ஆபாசமோ, கவர்ச்சி ஓவராவோ நான் பண்ணுனதே இல்‌ல. என்னோட படம் பார்த்தீங்கன்னா சேனலே மாத்தத் தேவையில்ல. ஆரம்பத்துல இருந்து கடைசி வரை முரளி படம்னா குடும்பத்தோட இருந்து பார்க்கலாம்.

நான் எதுவா இருந்தாலும் என் அப்பாகிட்ட கேட்க மாட்‌டேன். என் அம்மாதான் எனக்கு எல்லாமே. அதே மாதிரிதான் இப்ப என் பசங்க இருக்காங்க. எல்லாத்தையும் அம்மாகிட்டதான் கேட்பாங்க. நான் நடிகன் ஆனாலும் என்னோட பிரண்ட்ஸ் மாறலை. ராஜா, கந்தா, நந்தா, வினய்னு ஆறேழு பிரண்ட்ஸ் இருக்காங்க. அவங்க எல்லாருமே இன்னிக்கும் என்னை பார்த்தால் ஒரு ஹீரோவா பார்க்க மாட்டாங்க. அவங்கதான் ரொம்ப கமெண்ட் பண்ணுவாங்க. ஓவரா அழுகாத‌டா நீ நடிச்ச படத்தை பார்க்க நாங்க ஒரு பக்கெட்டை தூக்கிட்டு வர வேண்டியிருக்குன்னு ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க.

இப்ப என் மகனும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டான். இதுல ஒரு ஆச்சர்யமான விசேஷம் என்னன்னா 1985 சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார் தயாரிப்பாளர், மணிரத்னத்தின் முதல் படம், இசைஞானி இளையராஜாவின் இசை. அது ரொம்ப ஹிட் கூட்டணியா இருந்தது. அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்கள்ல இந்த கூட்டணி தொடர்ந்தது. இப்ப என் மகன் நடிச்சிருக்குற பாணா காத்தாடி படத்தை தயாரிச்சிருக்கிறதும் சத்யஜோதி பிலிம்ஸ்தான். தியாகராஜன் சாரோட வாரிசுகள்தான் செந்தில் தியாகராஜன் – அர்ஜூன்தான் தயாரிப்பாளர். இளையராஜா சாரின் வாரிசு யுவன் ஷங்கர் ராஜாதான் இசை. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கிறது.


எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இதயம் படத்தில் இடம்பெற்ற பொட்டு வெச்ச வட்ட நிலா பாட்டுதான். அந்த பாட்டை எத்தனை த‌டவை கேட்டாலும் சலிக்காது. உன்‌மையான காதலை சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பை நல்லா சொல்லுற பாட்டு. டான்ஸ்னு எடுத்துக்கிட்டா அதர்வா நல்லா டான்ஸ் பண்றாரு. எனக்கு டான்ஸ் ஆடவே தெரியாது. நான் மிகப் பெரிய டான்சரும் கிடையாது. முகபாவனையை வைத்து சமாளிச்சிட்டு போயிடுவேன்.

அந்த காலத்துல எனக்கு நாலே புரொடியூசர்தான். தியாகு சார், சிவசக்தி பாண்டியன், காஜா பாய், ஆர்.பி.சவுத்ரி இவங்கதான் எனக்கு புரொடியூசர்ஸ். இன்னிக்கு இருக்குற ட்ரெண்ட் அந்த மாதிரி இல்ல. ஒரு படம் பண்ணிட்டா, அடுத்த படத்தில் அதிக சம்பளம் வாங்கணும்னு நினைக்கிறாங்க. அதனால முந்தைய பட தயாரிப்பாளரை விட்டுட்டு அடுத்த தயாரிப்பாளருக்கு ஜம்ப் பண்ணிடுறாங்க. அப்படி போகக் கூடாது. பணத்துக்காக குதிச்சி குதிச்சி போயிடுறாங்க. பணத்துக்காக காத்திருக்கணும். அது நம்மை ‌தேடி வரும்வரை காத்திருக்கணும்.

இவ்வாறு முரளி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

(நன்றி : தினமலர்)

தொடர்புடைய சுட்டிகள்:
முரளி – அஞ்சலி
பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்
முரளி பட லிஸ்ட்