நந்தா என் நிலா


By Eshwar gopal

திரைப்பட விமர்சனம்

படம்
வெளியான தேதி: 9.12.1977 (35 mm)

நடிகர்கள் விஜயகுமார், செல்வகுமார், வீராச்சாமி
நடிகைகள் சுமித்ரா, ஃபடாபட் ஜெயலட்சுமி, எம்.என்.ராஜம், குசல குமாரி, ஜெயகீதா, அனுபமா மற்றும் பலர்
பின்னணி எஸ்.பி.பி (நந்தா நீ என் நிலா), ஜெயசந்திரன், டி.கே.கலா (ஒரு காதல் சாம்ராஜ்யம்),
பி.சுசீலா (கோயிலுக்கு), எஸ்.ஜானகி (கண்ணுக்குட்டி செல்லம்மா),
பாடல்கள் கவிஞர் இரா பழனிச்சாமி (நந்தா என் நிலா), நா.காமராஜன் (ஒருகாதல் சாம்ராஜ்யம்)
பின்னணி இசை வி.தட்சிணாமூர்த்தி புகைப்படம் தத்
கதை புஷ்பா தங்கதுரை தயாரிப்பு ஆர்.எஸ்.சங்கரன்
படத்தொகுப்பு விஜய் ஆனந்த் திரைக்கதை, இயக்கம் ஜகன்னாதன். B.A.

கதை ஒரு வரியில்

ஒரே போல் இருக்கும் இருவரில் ஒருவரை காதலித்து (ஒரு தலைக்காதல்), காதலித்தவர் நாயகியை முதலில் விரும்பாததால் ஏற்படும் மனக்காயங்களும், குழப்பங்களும் – அதனால் ஏற்படும்  சச்சரவுகளையும் நேர்த்தியாகவும், தடுமாறியும் படமாக்கி பரிமாறி இருக்கிறார் இயக்குனர் ஜகன்னாதான் (B.A).

விரிவானகதை

நந்தா (சுமித்ராவின்) குடும்பம் சாதாராண நடுத்தரக்குடும்பம், கிராமத்தில் வாழ்கிறது.  அவர் தந்தை (வீராச்சாமி) சிறு நிலங்களை வைத்து பராமரித்தாலும், வலுவான வசதியில்லாத குடும்பம்.  அவருக்கு கல்யாண ஏற்பாடுகளை செய்ய முனைக்கும்போது அதை வேண்டாமென்று தட்டிவிடுகிறார், அதற்கான காரணத்தை தந்தையிடமே  கூற மறுக்கிறார்.  அதற்கு காரணம் – நாயகன் விஜயகுமார். ஒருமுறை நாயகியின் தந்தையின் நண்பர் அழைத்ததை ஏற்று ஒரு வாரம் தங்க சென்னைக்கு குடும்பத்துடன் செல்லும் நாயகிக்கு முதல் முறையாக விஜயகுமாரை பார்த்ததில் ‘ஆயிரம் பட்டாம்பூச்சி’ வேலை செய்கிறது. இதற்கிடையில் நாயகனின் அம்மா எம்.என்.ராஜம் வேறு, இவர்களை கூட்டிக்கொண்டு சென்னையை சுற்றிக்காட்டுமாறு கட்டளையிட, நாயகியும் குதூகலமாக கடற்கரை, எல்.ஐ.சி கட்டிடம் (அப்போது வந்த படங்களில் அதை பார்க்காமல் ஊர் வந்து சேரக்கூடாது போலிருக்கிறது.  உதாரணம்: நாயகி “அப்பா, எம்மாம்பெரிய கட்டிடம்” என்று மலைப்பது). இப்படத்திலும் நாயகன் வாங்கிக்கொடுக்கும் சாப்பாடு, ஐஸ்கிரீம், மலைக்கோயிலுக்கு போகும்போது நாயகி விருப்பப்பட்ட பொம்மையை வாங்கிக்கொடுப்பது, அவரின் பண்பு, அமைதி, கைப்பந்து விளையாடும் திறன், வசீகரம், பணக்கார நாகரீகம் எல்லாம் சேர்ந்து நாயகியின் மனதிற்குள் மத்தாப்பாய் ஜொலிக்க, வயதின் பருவமும், மயக்கத்தில் தோன்றும் ஒற்றை எண்ணமும் அவர் மேல்  காதல் கொள்ளச்செய்கிறது.  பல இடங்களுக்குச் செல்லும் அவர்கள் மைதானத்தில் நடக்கும் ‘நட்சத்திர துடுப்பாட்டப் போட்டி’யையும் கண்டு களிக்கிறார்கள்.  (அன்றைய பெரிய ‘தலை’கள் லட்சுமி, ஜெய்சங்கர், தேங்காய், கமல், ஜெயசித்ரா, சீமா, சசி மைதானத்தில் ஆட வருவதை ஒய்.ஜி.மஹேந்திரன் நக்கலாக வர்ணனை செய்கிறார் – அதை இங்கே பாருங்கள்)
http://www.youtube.com/watch?v=h1n_RicokC8

நாயகியின் ஒருதலைக்காதல்

நாயகி ஒரு தலைக்காதல் வயப்பட்டு, நாயகன் வாங்கிக்கொடுத்த பொம்மையை வைத்துக்கொண்டு நாட்களை கிராமத்தில் ஓட்டுகிறார்.  இதனிடையே வரும் வரனை தட்டிக்கழிக்க, நாயகியின் அப்பா அதிர்ச்சியில், ஏக்கத்தில் உறைந்து உயிரை விடுகிறார்.  ஆண்பிள்ளையில்லா குடும்பத்தை, அதுவும் நிலங்களை கடன்களாக மாற்றி வைத்துவிட்டு இறந்து போன தந்தைக்குப்பின் யாரும் இல்லாததால், பொருளாதாரத்தை ஈட்ட நாயகி முற்பட்டு, பண்ணையாரிடம் வேலைக்கு சிபாரிசுக்கடிதம் வாங்கிக்கொண்டு சென்னை வந்து சேர்கிறது.  சுமித்ரா அங்கு அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வந்து அங்கிருக்கும் காரியதரசியான ஃபடாபட்டை பார்க்க, வேலை காலி இல்லாவிட்டாலும், கடிதம் கொண்டுவந்ததால், தற்காலிகமாக, ‘குப்பியில் அடைக்கும் பொறுப்பு’ வேலையாக கிடைக்கிறது.  வேலையில் சேர்ந்த அன்று தான் எதேர்ச்சியாக அந்த நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குனர் விஜயகுமாரே என்று தெரிந்து கொள்கிறார். ஒரு புறம் வேலை கிடைத்த மகிழ்ச்சி, இன்னொரு புறம் விஜயகுமாரைப்பற்றி அங்குதான் உள்ளார் என்று தெரிந்து கொண்டது என்று பறக்கிறார் நாயகி. இம்மகிழ்ச்சி அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.

நாயகியை அலுவலகத்தில் வைத்து பார்க்கும் அவருக்கும் இவர் மேல் காதல் வருகிறது. அவரை மேலும் கவர, வேலைமுடிந்தவுடன் டென்னிஸ் விளையாட்டை பார்க்கப்போகிறார். அங்கு நிர்வாக இயக்குனரக ஒரு விஜயகுமாரும், டென்னிஸ் விளையாடுபவராக ஒருவரும் வந்து அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.   தான் காலித்தது டென்னிஸ் வீரரைத்தான் என்பதையும், மற்றவரை பார்த்து ஏமாந்து போனோம் என்றும் நினைத்து குழப்பத்தில் டென்னிஸ் வீரர் விஜயகுமாரை அவர் வீட்டிற்கு சந்திக்கப்போகிறார்.  அங்கோ இவரின் உள் அர்த்தத்தை புரிந்துகொண்ட விஜயகுமாரின் அம்மா, இவரிடம் ஏற்கனவே ஒரு பணக்காரப்பெண்ணை அடையாளம் காட்டி அவர்தான் இவருக்கு துணைவியாக போவதாக மேலும் இறுக்குகிறார்.  எப்படியாவது விஜயை தனியாக சந்தித்து இவரின் மென்மையான பாசத்தை கொட்டிவிடத்துடிக்கும் நாயகிக்கு – நாயகனின் செய்கைகள் ‘வெந்தபுண்ணில் மிளகாய்பொடியை மயிலிறகால்’ தடவினதைப்போல் உள்ளது.  நாயகியின் தங்கை இவரிடம் நட்பு பாராட்டினாலும், அவர் அம்மா ஒரு படி மேலே போய், தன் அந்தஸ்துக்கிற்கு ஏற்ற ஒரு பெண்ணா- கத்தான் அவரை மணம் முடிக்க ஆசையென்றும் நாயகியின் அந்தஸ்த்து ஒருபோதும் ஒத்துவராதென்றும் கூறி இனி இங்கு வரவேண்டாமென்று கூறிவிடுகிறார். நாயகியின் மணக்கணக்கு மனக்கணக்காகிறது.  அப்போது கக்குகிறார் தத்துவத்தை பாடலாக இதோ :-

ஃபடாபட்டின் நட்பு

இதற்கிடையில் ஃபடாபட்டின் அலுவலக நட்பு கூடி நல்ல நண்பர்களாக ஆகிவிடுகிறார்கள். சுமித்ராவின் அழகையும், நற்பண்புகளையும் பார்த்து வீழ்ந்த இரண்டாவது விஜயகுமார் அம்மாவிடம் அவரை தனக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்குமாறு வேண்டுகிறார். இப்பணியை ஃபடாபட்டிடம் கொடுக்கும் அவரது அம்மா, ஒரு முறை அவரை பார்க்க கூட்டிக்கொண்டு வருமாறு கூறுகிறார். அவரை பார்த்து பிடித்துப்போகவே, உடனேயே அவரை இரண்டாவது நாயகனுக்கு மனைவியாக தெரிவுசெய்யக்கூறுகிறார்.  இதற்கிடையில், ஃபடாபட்டிடம் வரும் சுமித்ரா தன்னுடைய ஒருதலைக்காதலையும், முதல் நபரை எவ்வளவு ஆழமாக காதலிப்பதாகவும் கூறி, ஃபடாபட்டின் அனுபவத்தை கூறுமாறு விண்ணப்பிக்க, அவரோ காதலால் தான் ஏற்கனவே, மனதாலும், உடலாலும், ஒருவனால் நோகடிக்கப்பட்டுவிட்டதாகவும், அதனால் காதலில் தனக்கு பெரிய நம்பிக்கை இல்லையென்றும் கூறுகிறார். நோகடிக்கப்பட்ட ஃபடாபட் பாடும் ‘ஒரு காதல் சாம்ராஜ்யம்’ பாட்டு பாடி நம்மை மகிழ்விக்கிறார் – இதோ:

தன் காதலில் உறுதியாக உள்ள சுமித்ரா, திருமண வாய்ப்பை தட்டுவதோடு, வீட்டிற்கு வந்து ஏற்கனவே வாக்குக்கொடுத்த அம்மாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். பின் வேலையை ராஜினாமா செய்கிறார். ஃபடாபட்டின் சிபாரிசில் விளம்பரக்கம்பனி வேலை கிடைக்க, அங்கும் தொடர்கிறது காதல் கதை.  அங்கு போனால் ‘விளம்பர மாதிரிகளை’ தேர்ந்தெடுக்க அவர் போகும் நிறுவனத்தின் தலைவர்தான்  டென்னிஸ் விஜயகுமார்.  இவரிடம் வாங்கிய அடியில், சுமித்ரா வியாபரா சம்பந்தமாக மட்டுமே கறாராக பேசுகிறார்.  மற்றபடி கண்டுகொள்வதில்லை.  இதற்கிடையில், இரண்டாவது கதாநாயகனுக்கு இவர் மேல் பைத்தியம் பிடித்து மூளைக்கலக்கம் பிடித்து விடுகிறது.  ஃபடாபட்டின் ஆலோசனையின் பெயரில் அவர் அம்மாவுடன் பெங்களூரி போய் 2 மாதம் தங்கினால் அவர் மாறுதலடையக்கூடும் என்று கூறி அங்கு அனுப்பிவிடுகிறார்.  அங்கு போயும், நந்தா (சுமித்ரா) நினைவாகவே இருப்பதால், அவர் அம்மா ஃபடாபட்டை உடன் பெங்களூரி வருமாறு பணிக்கிறார்.  அங்கு செல்லும் அவர், அவர் மனதை மாற்ற நந்தாவும் அவர் நினைவாகவே உள்ளதாகக்கூறி ஒரு பூச்செண்டையும் அவர் கொடுத்ததாகக் கூற, குதூகலமாகும் நாயகன் நந்தாவை நினைத்து பாடுகிறார் அருமையாக :

நந்தா நந்தா என்று கூறி மயக்கத்தில் (ஃபடாபட்டை) நந்தாவாக எண்ணி படுக்கையறையில் சூரையாடிவிடுகிறார். (மனநிலை பாதிக்கப்பட்டு மயக்கத்தில் இருக்கும் நாயகன் இதை மட்டும் சரியாக பண்ணிவிடுவான் – அவன் தமிழ்பட கதாநாயகனல்லவா).  இக்கதையை நந்தாவிடம் கூறி ஃபடாபட் தூக்க மாத்திரை உண்டு மரிக்கிறார்.

இதெற்கிடையில் டென்னிஸ் விஜயகுமாரின் பெரியைடத்துப்பெண் அவரிடம் வியாபாரத்தனமாக நடந்து கொள்ள, நந்தாவை நினைத்து மன மாறுதல் அடையும் அவருக்கு, அவர் தங்கையின் நந்தாவைப்பற்றிய கருத்தும் வலுவூட்ட, நந்தாவிடம் தன் மனதை கொட்ட, நந்தா அதை (வரட்டு பிடிவாதமாக) தட்டிவிட, கடைசியில் கோவிலுக்கு போகும் அங்கு இருவரும் சந்தித்து டட்டடய்ங்ங்ங்ங்ங்……..

இசை

இடைக்காலப்பாடல்கள்,அதைவிட பழய பாடல்கள் எல்லாம் கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுதாக இருக்கிறது. இப்படத்தில் இரண்டு பாட்டுக்கள் மிக அற்புதமாக உள்ளது, மற்ற இரண்டில் ஒன்று (எஸ்.ஜானகியின் கண்ணுக்குட்டி செல்லம்மா-எழுத்து போடும்போதுபாட்டு), சுசீலாவின் கோவிலுக்கு பூஜை செய்ய (தத்துவம்). ஒரு பாடல் தத்துவப்பாடல். இதன் இசை, திரு.வி.தக்ஷிணாமூர்த்தி.  அற்புதமான கர்நாடக இசை வல்லுனர். எம்.எஸ்.வியைபோலவே கர்நாடக இசையை கையாள்வதில் தேர்வுபெற்றவர். இவர் பல இன்றய, பழய இசையமைப்பளர்களுக்கு (இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்) ஆகியோரின் குரு. இவரின் 1950-70-களில் மலையாள பட உலகில் கொடிகட்டி பறந்திருக்கிறார். தமிழிலும் அற்புதமான  நமக்குத்தெரிந்த இரண்டு படங்களில் (‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’) இசை பிண்ணி பெடலெடுத்திருக்கிறார்.  இளையராஜா இவரிடம்தான் துவக்ககாலத்தில் கர்நாடக இசையின் பரிமாணங்களை கற்றுக்கொண்டுள்ளார். இவரைப்பற்றி கூறிய இளையராஜா “இவரைப்பற்றி கூற எனக்கு அருகதை இல்லை” என்று பணிவுடன் முடித்துக்கொண்டார். அப்படிப்பட்ட இசை மேதை.  பல சிங்களப்படத்திற்கும் இவர் இசை அமைத்திருக்கிறார்.  முற்றிலும் திரைப்படத்துறையை விட்டுவிட்டு – வயோதிகத்தில் பாலக்காடில் இருப்பதாகக்கேள்வி.

நடிப்பு, நடிகர்கள்

புஷ்பா தங்கதுரையின் கதையை படமாக்கியிருக்கிறார்கள். இருவேடங்களில் நடிப்பதென்றால் தமிழில் சிவாஜியைத் தவிர யாருக்கும் இரு வேறு நடிப்புத் திறமையைக்கையாளும் கலை இருப்பதாகத்தெரியவில்லை.  மற்ற நடிகர்கள் எல்லாம், தலைமுடி, சட்டை, கையைச்சொடுக்குவது, வெகுளியாக இருப்பது என்று ஏதாவது அடையாளம் வைத்தால்தான் நமக்கு குழப்பம் தீரும். இதிலும் விஜயகுமார் அதையே செய்கிறார், ஒரு விஜயகுமாருக்கு சட்டையின் கழுத்துப்பட்டை நீளமாக இருக்கிறது, மற்றவருக்கு சாதாரணம் – மற்றபடி இருவரும் ஒரே நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். தபால் தலை போல் ஒரே சீரான நடிப்பு.  உணர்ச்சியை கொட்டும்போது தடுமாறுகிறார். சுமித்ரா பிச்சு உதறுகிறார். பொம்மை போல் அழகாகவும் இருப்பது இவருக்கு ஒரு கூடுதல் ஏற்றம்.   ஃபடாபட் தன் திறமையை திறம்பட காட்டுகிறார். ஒரு பாட்டிலும் நன்றாக பரிமளிக்கிறார். (‘ஒரு காதல் சாம்ராஜ்யம்’ – இப்பாடலில் ஆண்நடிகர் [செல்வகுமார்?] அணைக்கும் லாவகத்தில் கால் பாவாடைத்தலைப்பை லேசாக தூக்க, நாசூக்காக இவர் கீழிறக்குவது கூர்மையாகப்பார்த்தால் தெரியும்.)  ‘மயங்குகிறாள் ஒரு மாதுவில் ஒல்லியாக’ இருக்கும் இவர், இதில் நல்ல குண்டாக உள்ளார். எம்.என்.ராஜம், மற்றொரு விஜயின் அம்மா (குசலகுமாரி), சுமித்ரா அம்மா (அனுபமா), தங்கை வந்து போகிறார்கள்.

மருந்துக்கும் நகைச்சுவை இல்லாததாலும், படம் முழுக்க சுமித்ரா, ஃபடாபட், விஜயகுமார் போன்றவர்களையே கதை சுற்றி சுற்றி வருவதாலும், நடுவில் படத்தின் ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டு சலிப்பை உண்டு பண்ணுகிறது. இருப்பினும், ஜெகன்னாதன் பி.ஏ – ஒருவாறு சமாளித்து கரை சேர்த்து விடுகிறார்.  ஃபடாபட்டை நாயகன் மயக்கத்தில் கெடுப்பது – சுமித்ரா முதல் நாயகனை திருமணம் செய்துகொள்வதற்காகவே ஏற்படுத்தப்பட்ட காட்சி, இது தமிழ்படத்திற்கே உள்ள சாபக்கேடு.  அதிலும், நாயகன் ஃபடாபட்டை கற்பழித்துவிட்டு, அவரும் இறக்க, பின் சுமித்ராவிடம் நீ யாரைவேண்டு மானாலும் திருமணம் செய்துகொள் என்று அப்பாவியாகச் சொல்வது ரௌடிகளின் மொழி. அவருக்கு தண்டனை – ஒன்றும் கிடையாது, இந்நிகழ்சிக்குப்பின் அவருக்கு ஏற்பட்ட மூளைகலக்கமும் நீங்கிவிடுகிறது (என்னே கண்டுபிடிப்பு).

இப்படத்தின் பாடல்களை படிக்கும்பொது பலமுறை ரசித்திருக்கிறேன்.  இப்படத்தில் பிரதியை மதுரையில் உள்ள (modern cinema) மாடர்ன் சினிமா வெளியிட்டுள்ளது.  படத்தின் ஆரம்ப கட்டங்களுக்காகவும், பாட்டிற்காகவும் பார்க்கலாம்.

நல்ல தீர்ப்பு


காலா பானி என்ற வெற்றி பெற்ற ஹிந்திப் படம் ஒன்று உண்டு. எதேச்சையாக டிவியை ஆன் செய்தபோது ஏறக்குறைய அந்த மாதிரியே தெரிந்த ஒரு தமிழ் படம். தேவ் ஆனந்துக்கு பதில் ஜெமினி கணேசன். மதுபாலாவுக்கு பதில் ஜமுனா. நளினி ஜய்வந்துக்கு பதில் எம்.என். ராஜம். என்னடா இது தமிழில் காலா பானி வந்ததாக கேள்விப்பட்டதே இல்லையே என்று பார்க்க ஆரம்பித்தேன். காலா பானியே ஏ.ஜே. க்ரானின் (A.J. Cronin) எழுதிய Beyond this Place என்ற ஒரு கதையை வைத்து எடுக்கப்பட்டது என்று கேள்வி.

படத்தின் பேர் நல்ல தீர்ப்பு. 1959-ஆம் ஆண்டு வந்த படம். ஜெமினி, ஜமுனா, எம்.என். ராஜம், கண்ணாம்பா, நாகையா, டி.ஆர். ராமச்சந்திரன், டி.எஸ்.துரைராஜ், எம்.ஜி. சக்ரபாணி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், ராகினி, சரோஜா ஆகியோரை அடையாளம் காண முடிந்தது. கதை வசனம் முரசொலி மாறன். இசை சுப்பையா நாயுடு. இயக்கம் டி. பிரகாஷ் ராவ்.

ஜெமினி இளம் வக்கீல். விதவைத் தாய் கண்ணாம்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார். தொழில் நன்றாக நடக்கிறது. லட்சாதிபதி பெண் தருகிறேன் என்கிறார். வீட்டுக்கு வந்தால் அதிர்ச்சி #1. இது நாள் வரை பேசாமல் இருந்த அம்மா சீப்பாக இப்போதுதான் கிடைத்தது என்றோ என்னவோ முகத்தில் குங்குமத்தோடு காட்சி அளிக்கிறாள். அதிச்சி #2 ஆக அப்பா நாகையா செய்யாத கொலைக்காக ஜெயிலில் இருக்கிறார் என்கிறாள். அப்பாவை பார்க்க வேலூர் ஜெயிலுக்கு ஜெமினி போகிறார். நாகையா வழக்கம் போல பரிதாபமாக இருக்கிறார். கொலையை துப்பு துலக்க ஜெமினி திருச்சி போகிறார். அங்கே பத்திரிகை ஆசிரியர் ஜமுனாவை சந்திக்கிறார். பின் வழக்கமான காதல் ஒரு பக்கம். துப்பு துலக்க போன இடத்தில் எம்.என். ராஜம் இவரை வில்லிகளின் இலக்கணப்படி சைட் அடிக்கிறார். மெதுமெதுவாக ஜெமினிக்கு கேஸ் பற்றி தெரிகிறது. மீண்டும் விசாரணை நடத்தி குற்றவாளி யாரென்று திடுக்கிடும் தகவல் தெரிகிறது. நாகையா விடுதலை, சுபம்!

முதல் பாதி பரவாயில்லை. இரண்டாம் பாதி இசு இசு என்று இசுக்கிறார்கள். அதுவும் ஜெமினி பயங்கர தத்தியாக இருக்கிறார், சின்னப் பையனுக்கு கூட புரிந்துவிடும் விஷயங்கள் எல்லாம் அவருக்கு புரியமாட்டேன் என்கிறது. ஒரு ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் அவருக்கு கிடைக்கும் க்ளூவை எல்லாம் விலாவாரியாக விளக்க வேண்டி இருக்கிறது. கண்ணாம்பா பொறுத்தது போதும் பொங்கி எழு ரோலையே மீண்டும் மீண்டும் செய்கிறார். நாகையா அதே ஐயோ பாவம் லுக் விடுகிறார். நகைச்சுவை என்று துரைராஜ், சரோஜா, டி.ஆர். ராமச்சந்திரன் படுத்துகிறார்கள்.

பாட்டு ஒன்றும் சரியில்லை. முதலில் ராகினி ஆடிப் பாடும் ஒரு பாட்டுதான் கொஞ்சம் சுமார், ஆனால் இப்போது மறந்துவிட்டது. அது இருந்தால் இது இல்லே இது இருந்தால் அது இல்லே என்ற பாட்டு மிஸ்ஸியம்மா படத்தில் வரும் படியுமென்றால் முடியாது முடியுமென்றால் படியாது பாட்டை நினைவுபடுத்தியது.

ஸ்டில் எதுவும் கிடைக்கவில்லை. எம்.ஜி. சக்ரபாணி இருக்கும் ஒரு சின்ன கிளிப் மட்டும் கிடைத்தது.

பேசாமல் காலா பானி பாருங்கள். அருமையான பாட்டுகளையாவது கேட்கலாம்!

நீதிபதி


நீதிபதி என்ற படம் கொஞ்ச நாள் முன் விஜய் டிவியில் வந்தது. இது சிவாஜி நடித்த படம் இல்லை. 1955-ஆம் ஆண்டு வந்த படம். கே.ஆர். ராமசாமி, ஜெமினி கணேசன், எஸ்.வி. சஹஸ்ரநாமம், டி.எஸ். பாலையா, எம்.என். ராஜம், ராஜசுலோச்சனா என்று கொஞ்சம் தெரிந்த முகங்கள். தெரியாத பல முகங்களும் உண்டு. இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இயக்கம் ஏ.எஸ்.ஏ. சாமி.

நான் பழைய தமிழ் படம்+பாட்டு பைத்தியம்தான். தியாகராஜ பாகவதர் பாட்டைக் கூட விரும்பிக் கேட்பேன். ஆனால் நடிப்பிசைப் புலவர் என்றெல்லாம் புகழப்படும் கே.ஆர். ராமசாமி பாடிய ஒரு பாட்டைக் கூட நான் கேட்டதில்லை. இந்தப் படத்தில்தான் முதல் முறையாக கேட்டேன். நாடகங்களுக்கு ஏற்ற குரல். மைக்கே தேவை இல்லை. ஓங்கி ஒலிக்கும், ஆனால் இயற்கையான குரல். இருந்தாலும் இந்தப் படத்தில் பாட்டுகள் எல்லாம் (பறக்குது பார் பொறி பறக்குது பார், ஜிலுஜிலுவென ஜொலிக்கும் மிட்டாய்) சுமார்தான்.

சம்பிரதாயமான மெலோட்ராமா கதைதான். சஹஸ்ரநாமம் செத்துப் போன அண்ணனின் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டு அண்ணிக்கு நாமம் போட்கிறார். அண்ணி இடுப்பில் ஒன்று, வயிற்றில் ஒன்றோடு உயிருக்கு பயந்து ஓடிவிடுகிறார். ஒரு சர்ச்சில் தஞ்சம் அடைகிறார். முதல் பையன் – கே.ஆர். ராமசாமி – நம்பிக்கையான பழைய வேலைக்காரனிடம் ஒரு உடன்பிறவா தங்கையோடு வளர்கிறான். சஹஸ்ரநாமத்தின் ஆட்களின் சூழ்ச்சியால் அண்ணி ஜெயிலுக்குப் போகிறார். இரண்டாவது பையன் – ஜெமினி – சர்ச்சில் வளர்ந்து பெரிய வக்கீல் ஆகிவிடுகிறான். சஹஸ்ரநாமம் கே.ஆர். ராமசாமியின் தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, அவள் இறந்துவிடுகிறாள். கே.ஆர்.ஆர். சஹஸ்ரநாமத்தைப் பழி வாங்க வரும்போது ஏற்படும் சண்டையில் சஹஸ்ரநாமம் தற்செயலாக தன் ஆசைநாயகி எம்.என். ராஜத்தை கொன்றுவிடுகிறார். பழி கே.ஆர்.ஆர். பேரில். போலீஸ் கான்ஸ்டபிள் பாலையா கே.ஆர்.ஆரைத் தேடி அலைகிறார். ஜெயிலிலிருந்து வந்த அம்மா ஜெமினியைப் பார்க்க இருவருக்கும் நடுவில் வழக்கமான இனம் புரியாத பாசம். அம்மாவுக்கும் கே.ஆர்.ஆருக்கும் அதே இனம் புரியாத பாசம். ஜெமினியின் மனைவி ராஜசுலோச்சனாவைக் காப்பாற்ற கே.ஆர்.ஆர். சஹஸ்ரநாமத்தை கொன்றுவிடுகிறார். இதற்குள் நீதிபதி (பின்னே! டைட்டில் வரவேண்டாமா?) ஆகிவிடும் ஜெமினி அண்ணன் என்று தெரிந்தும் தண்டனை அளிக்கிறார்.

என்னைக் கவர்ந்த பகுதி தப்பி ஓடும் கே.ஆர்.ஆர். ஒரு நாடகம் ஆடும் சீன்தான். பின்பாட்டுக்காரர் ஸ்வரம் இழுக்க கே.ஆர்.ஆர். கடுப்பாகி அவர் அருகே நின்று கொண்டு இன்னும் ஸ்வரம் இழுப்பதென்ன, அவர் காலை முழங்கால் வரை தூக்கி தூக்கி நடப்பதென்ன, அவ்வப்போது கைக்குட்டையை வைத்து விசிறிக் கொள்வதென்ன, கோவலன் நாடகத்தில் நாயகி பசும்பாலில் டிகாக்ஷனைக் கலந்து காப்பி தாங்கடி என்று பாடுவதென்ன, மிகவும் அருமையாக இருந்தது.

நாடகத்தில் பின்பாட்டு பாடுபவர் குண்டு கல்யாணம் போலவே இருக்கிறார். அதே மாதிரி முகம், அதே மாதிரி உடல். குண்டு கல்யாணத்தின் அப்பாவும் நடிகரா?

எல். விஜயலட்சுமி அப்போது ரொம்பவும் சின்னப் பெண் போலிருக்கிறது. ஒரு டான்ஸ் ஆடிவிட்டுப் போகிறார்.

கே.ஆர்.ஆர். நாடக நடிகர் என்றும் ஜெமினி அடுத்த ஜெனரேஷன் சினிமா நடிகர் என்றும் தெளிவாகத் தெரிகிறது.

என் போன்ற சினிமாப் பைத்தியங்கள் தவிர மற்றவர்கள் தவிர்க்கலாம்.

மயங்குகிறாள் ஒரு மாது (1975)


By E. Gopal

படம் வெளியான தேதி: 30.5.1975,

நடிகர்கள் : முத்துராமன், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், அசோகன், செந்தாமரை நடிகைகள்: சுஜாதா, ஃபடாபட் ஜயலக்ஷ்மி, எம்.என்.ராஜம், காந்திமதி, புஷ்பா பின்னணி பாயிருப்பவர்கள் : கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜயராம் பின்னணி இசை: விஜய பாஸ்கர் பாடியவர்கள் : கே.ஜெ.யேசுதாஸ், தயாரிப்பு: பாஸ்கர்
வசனம்: பஞ்சுஅருணாசலம்
திரைக்கதை, வசனம், இயக்கம் : எஸ்.பி.முத்துராமன்

மாத்திரையடக்க கதை

மனச்சஞ்சலத்தால் சற்று வழிமாறிப்போகும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண், குடும்பவாழ்க்கையில் சந்திக்கும் பதற்றங்களும், சவால்களையும் பரபரப்பான பிண்ணனியில் விளக்கியிருக்கும் படம் “மயங்குகிறாள் ஒரு மாது”.

கதைச்சுருக்கம்

கல்லூரியில் படித்துக்கொண்டு, தங்கும் விடுதியில் பெண்தோழிகளுடன் தங்கியிருக்கிறார் சுஜாதா.  இவரின் அறைநண்பியான ஃபடாபட் ஜயலட்சுமி மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்கிறார். படிக்கற காலத்தில் படிக்க வேண்டும், மற்ற சஞ்சலங்களில் மனதைச்செலுத்தி விடக்கூடாதென்று நினைக்கிறார். இக்கருத்தை உடைக்க முற்பட்டு சுஜாதாவின் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறார்கள் தோழிகள். உணர்ச்சிகளை தூண்டும் புத்தகங்களைக் கொடுத்தும், திரைப்படத்திற்கு திருட்டுத்தனமாக கூட்டிப்போயும் அவர் மனதில் பாதையைப்போடுகிறார்கள். இதனால் ஏற்படும் கருத்துவேறுபாடில் சுஜாதாவை, ஃபடாபட் அடித்துவிட, இருவருக்கும் மனதில் பிளவு ஏற்பட்டு பேச்சுவார்த்தை நின்று போகிறது. பருவக்கோளாறினால் ஏற்படும் மயக்கம் ஒருபுறம் தள்ள, உடம்பு என்ற நெருப்பு மனதை வினாடியில் சாம்பலாக்க, காதல் என்ற பல்லக்கு பயணிக்கத்தொடங்குகிறது.

விஜயகுமாரின் அப்பா (செந்தாமரை) ஒரு  பெண் சபலஸ்தர், பணக்காரர்.  இவர் பெண்கள் கூட குஜாலாக இருக்கும்போது தெரியாமல் புகைப்படம் எடுத்து அதைகாட்டி மிரட்டுகிறார் புகைப்படக்கலைஞரும் எப்படியும் பணத்தை சம்பாதிக்கத்துடிக்கும் தேங்காய் சீனிவாசன். விஜயகுமார் தேங்காயின் மகன், சுஜாதாவின்மேல் காதல்வயப்பட்டு அவர் பின்னால் சுற்றுகிறார்.  ஆரம்பத்தில் நிராகரிக்கும் சுஜாதா, இன்னபிற பருவக்கோளாறுகளும் சேர்த்து உந்த, விரித்த வலையில் சிக்குகிறார்.  விஜயகுமாரின் பங்களாக்கு போகும் ஒருமுறை தன்னை மறந்த நிலையில் இருவரும் தவறு செய்ய, பேயரைந்தவர்போல் விடுதிக்கு வருகிறார்.  வருத்தம் தெரிவிக்கும் விஜயகுமார், கல்யாணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறார். இந்நிகழ்ச்சிக்குப் பின் இவரின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் வர, சந்தேகிக்கிறார் ஃபடாபட்.  மறுநாளிலிருந்து விஜயகுமாரை காணாமல் தேட, ஒரு வண்டி அமர்த்திக்கொண்டு அவரின் இருப்பிட்த்திற்கே போக, அங்கோ, காவலர்கள் அவரையும், அவர் அப்பாவையும் கடத்தல் காரணமாக கைது பண்ணி ஜீப்பில் ஏற்றிக்கொண்டுபோகிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள ஒரே வழி, விஷம் குடிப்பதுதான் என்று முடிவு செய்து – அதையும் செய்கிறார். இவர் மயங்கி விழ, ஃபடாபட் ஓடிப்போய் விடுதியின் மருத்துவரான எம்.என்.ராஜத்தை கூட்டி வந்து சிகிச்சை அளிக்கிறார்.  இவரின் விஷத்தை குடலிலிருந்து எடுத்த மருத்துவர், இவர் கர்ப்பமாக இருப்பதாகவும், உள் இறங்கிய விஷம் அதை முறித்துவிட்டது என்றும் – இவ்விஷயம் யாருக்கும் தெரியவேண்டாமென்றும், அதனால் சுஜாதாவின் வருங்காலம் பாதிக்கப்படலாம் என்றும் ஃபடாபட்டிடம் உறுதி வாங்கிக்கொள்கிறார். ஒருமுறை ஒன்றுகூடிய உடன் கர்ப்பமாகத்தான் வேண்டும், புற்று நோய் வந்தால் சாகத்தான் வேண்டும், இரண்டு மனைவி இருந்தால் ஒரு மனைவி சாகத்தான் வேண்டும் (அ) அப்புறம் போய்விடவேண்டும், வில்லன் கடைசி காட்சிகளில் இறக்கத்தான் வேண்டும், கடத்தல்காரன் பணத்தை சுருட்டிக்கொண்டு சிங்கப்பூருக்கு கப்பலில் (இதில் கடவுச்சீட்டும், பயணச்சீட்டும் வேறு
இருக்கும்) தப்பிக்க ஒரு அதிரடி திட்டம் இருக்கத்தான் வேண்டும், மனைவியை விட்டு ஓடிவிட்டால், கடைசி காட்சியில் சேரும்போது மனைவி கணவன் காலில் விழத்தான் வேண்டும் – இது போன்ற மாற்றமுடியாத, மாற்ற விரும்பும் ஆனால் மாற்றக்கூடாதென்ற ஊறிப்போன தமிழ்பட தலைவிதிகள் இதிலும் உண்டு.

அவர் நலனையே கருதும், ஃபடாபட், எல்லாவற்றையும் மறக்க ஆதரவளித்து, கல்லூரி நாட்கள் முடிந்தவுடன் பிரிந்து செல்கிறார்கள்.  சுஜாதாவின் தந்தையான அசோகன், தன் மனைவி உயிருடன் இல்லாத காரணத்தினால், அவருக்கு சீக்கிரமாக கல்யாணம் செய்து வைக்க முற்படுகிறார். முத்துராமனும் அவர் அக்காவும் பெண்பார்க்க வருகிறார்கள்.

அவர் அக்காவாக வரும் எம்.என்.ராஜத்தை கண்டு அதிரிச்சியை உள்வாங்கும் நாயகி, தனியே அவரை கூட்டிப்போய், இக்கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துமாறு மன்றாடுகிறார்.  “வாழ்க்கையில் அப்படிப்பார்த்தால் யாரும் உயிருடனே இருக்க முடியாது” என்று வாதிடும் ராஜம், அவரின் குணத்திற்குத்தான் பண்ணிக்கொள்வதாகவும், நடத்தையை பார்த்து அல்ல என்றும், தனக்கு இதில் பரிபூரண சம்மதம் என்றும் கூறி சம்மதிக்க வைக்கிறார்.  முதல் இரவில், முத்துராமனும், தனக்கும் ஒரு காதலி இருந்த்தாகவும், கல்யாணம் கைகூடவில்லை என்றும் கூற, சற்று ஆறுதலடைகிறார்.

இதற்க்குப்பின், இனிமையாக பயணம் செய்யும் வாழ்க்கை, ஒரு குழந்தை பிறந்து வளர, திடீரென்று புடவைக்கடையில் ஃபடாபட்டை சந்திக்கும் போது பாதை மாறுகிறது.  அவரின் கணவர்தான் தேங்காய்.  ஏற்கனவே இருவரின் மனைவியும் நண்பிகளாதலால், குடும்ப நண்பர்கள் ஆகிறார்கள்.  ஒரு நாள் தேங்காய், தனிமையில் இருக்கும் சுஜாதாவிடம் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொடுக்க, அதை பார்த்துக்கொண்டு வரும் நாயகிக்கு – அவரும், விஜயகுமாரும் கூடியபோது எடுக்கப்பட்டபடங்களையும் இடைச்செருகல் செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின் தேங்காய், ஒரு பெரிய பணமுடிப்பு கொடுத்தால் இதன் மூலச்சுருளை கொடுத்துவிடுவதாகவும், அப்பணமுடிப்பை எப்படி அவர் கணவர் செய்யும் தொழிலிலிருந்து அவர் அறியாமல் எடுக்கக் முடியும் என்ற லாவகத்தை  கற்றுக்கொடுப்பதாகவும் கூறி, அவகாசமும் கொடுத்துச்செல்கிறார்.

இவ்வதிரிச்சியிலிருந்து மீள்வதற்குள், மாலை, அவர் கணவரோ, புதிதாக ஒரு ஓட்டுனரை நியமித் திருப்பதாகக்கூறி விஜயகுமாரை கொண்டு நிறுத்துகிறார்.
கள் குடித்த குரங்காக தலை சுற்றுகிறது நாயகிக்கு.

இச்சுழலிலிருந்து அவர் எப்படி மீண்டார், தேங்காயை எப்படி சமாளித்தார், முன்னாள் காதலனை எப்படி தவிர்த்தார், கணவனுக்கு குட்டு வெளிப்பட்ட்தா என்பதை வெள்ளித்திரையில் காண்க.

மொத்தக்கருத்து

ஆரம்பம்முதலே கல்லூரி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட படமோ என்று நினைக்கத்தோன்றும் காட்சிகள் வேகவேகமாக மாறி குடும்பத்துக்குள் புகுந்து சுவை கூட்டுகிறது.  திரைக்கதையை நம் கலாசாரக் கண்ணோட்டத்தில் எடுத்திருக்கிறார்கள்.  பிற்பாதியில் ஒருவித சோர்வு ஏற்பட்டு, கதை இப்படித்தான் பயணிக்கும் என்று தோன்றிவிடுவது எதிர்பாராத திருப்பங்களை மனதில் ஏற்படுத்த வில்லை.  ஆனாலும்,  சிறு சிறு பாத்திரங்கள் மூலம் எல்லோருடைய படைப்பும் நிறைவைத்தருகிறது.  ஆரம்பக் காட்சிகளில் புஷ்பாவின் உடையலங்காரம் அப்போதிருந்த நாகரீகத்தை காட்டுவதாக இருந்தாலும், கல்லூரி இளைஞர்களை திருப்திப்படுத்தும் நோக்கோடு எடுத்திருப்பது தெரிகிறது.

நடிகர்கள்

ஃபடாபட் ஜயலட்சுமி, எம்.என்.ராஜம், தேங்காய், முத்துராமன், விஜயகுமார் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே தேய்த்திருக்கிறார்கள். சுஜாதாவிற்கு நிறைவான பாத்திரம்.
நன்றாகச்செய்துள்ளார். ஃபடாபட்டின் பாத்திரம் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் சமூகச்சங்கிலிகளை அறுப்பதாக இருந்தது. இங்கு அதற்கு நேர்மார். எக்காரணம் கொண்டும் ஊறிவிட்ட கோட்பாடுகளை அறுக்கக்கூடாதென்று கூறும் பாத்திரம்.
சுஜாதாவின் உற்ற தோழியாகவும், அவரை காட்டிக்கொடுக்கூடாதென்று நினைக்கும் உன்னதமான பாத்திரத்தில் மிளிர்கிறார். விஜயகுமார் அமைதியாக வந்து போகிறார். தேங்காய்க்கு என்னவோ வில்லத்தனம் அவ்வளவாக இப்படத்தில் பொருந்தவில்லை. ஃபடாபட் தன்னை மாய்த்துக்கொள்வதாக கூறுவது, பின் தேங்காய் திருந்துவது எல்லாம் தமிழ்படத்திற்கென்று காலில் போட்ட சங்கிலிகள்.
செந்தாமரையும், அசோகனும் வந்து போகிறார்கள்.  சிறு பாதிரங்கள் நிறைவாகச்செய்திருக்கிறார்கள்.

இசை

இசை இப்படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். விஜயபாஸ்கர் அவர்களின் இசை மிகவும் மெச்சத்தகுந்த வகையில் போடப்பட்டிருக்கிறது.  “சுகம் ஆயிரம்”, “வரவேண்டும் வாழ்க்கையில்”, “சம்சாரம் என்பது வீணை”, “ஒரு புறம் வேடன், ஒருபுறம் நாகம்” போன்ற இன்றும் பிரபலமாக உள்ள பாடல்களை தன் இனிய இசை மூலம் அள்ளித்தெளித்திருக்கிறார். இவர் ஒரு கன்னட இசையமைப்பாளர், இருப்பினும், ஹிந்தி, மற்றும் எல்லா தெற்கு மாநில மொழிகளிலும் இசைகோர்த்திருக்கிறார். இவரின் இசை எனக்குப்பிடித்தமான ஒன்று.  பல அதிரடி வெற்றி இசை கொடுத்திருக்கிறார். எம்.எஸ்.வி. என்ற புயல் காற்றில் அவ்வளவாக அறியப்படாதவர், இருப்பினும் அற்புதமான இசை வித்தகர்.  சில ஆண்டுகளுக்கு முன்தான் காலமானார். இவரின் மற்ற சில படங்கள்:
தெய்வக்குழந்தை (முதல்படம்), தப்புத்தாளங்கள், ஆடுபுலிஆட்டம், உங்கள் விருப்பம், சௌந்தர்யமே வருக வருக, எங்கம்மா சபதம், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, பேர் சொல்ல ஒரு பிள்ளை.

பஞ்சுஅருணாசலத்தின் வசனங்களும் கூர்மை, கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளும் இதம் சேர்ப்பவை.  பஞ்சு அருணாசலமும் பாட்டெழுகியிருக்கிறார்.  பாபுவின் புகைப்பட காட்சிகள் மனதை கொள்ளைகொள்வதோடு, புதுக்கோணப் பரிமாணங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் நல்லதொரு படம் கொடுதிருக்கிறார்.

இப்படம் வந்து ஓடியதா என்று தெரியவில்லை, நான் படித்துக்கொண்டிருக்கும்போது வெளிவந்து, படம் பார்க்க வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. அதற்குப்பின் 25 வருடம் கழித்து இப்போதுதான் பார்த்தேன்.

பாட்டிற்காகவும், அறுவையாக இல்லாத திரைக்கதைக்காகவும் நீங்கள் பார்க்கலாமே! இப்படத்தின் பிரதி இப்போது இந்தியாவில், சென்னையில், சங்கரா ஹாலில் கிடைக்கிறது. முதலில் கிடைக்காமல்  நானும் அசோக்கும் சிரமப்பட்டுத் தேடி எடுத்தோம்.

நாடோடி மன்னன்


நாடோடி மன்னன்

நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்! அடுத்த இன்ஸ்டால்மென்டில் என் விமர்சனம்.

முனுசாமி – மாணிக்கம்

மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!

முனு: எதுக்கடா?

மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.

முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?

மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!

முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?

மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.

முனு: ரொம்பப் பெரிய படமாமே?

மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!

முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?

மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!

முனு: கத்திச் சண்டை உண்டா?

மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!

முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?

மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.

முனு: காமிக் இருக்குதா?

மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!

முனு: என்ன தம்பி சொல்றே?

மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கங்கள்:
நாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம்

நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்

அலி பாபாவும் 40 திருடர்களும்


அலி பாபாவும் 40 திருடர்களும்

அலி பாபாவும் 40 திருடர்களும்

மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் சாகசக் கதைப் பிரியர் போலிருக்கிறது. அவர் ஆயிரத்தோர் இரவுகளிலிருந்து இந்த கதையை பிடித்திருக்கிறார். அருமையான த்ரில்லிங் கதை. கதை தெரியாதவர்கள் பார்த்தால் உண்மையிலேயே திருப்தி அடைவார்கள். மாஸ் ஹீரோவாகிக் கொண்டிருக்கும் எம்ஜிஆர், வீரப்பா, பானுமதி. ஒரு பிரமாதமான குகை. ஒன்பது முத்தான பாட்டுகள். பைசா வசூல்.
1956-இல் வந்த படம். எம்ஜிஆர், பானுமதி, பி.எஸ். வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி, சாரங்கபாணி, எம்.என். ராஜம், தங்கவேலு, ஓ.ஏ.கே. தேவர் நடித்தது. பின்னாளில் புதிய வார்ப்புகளில் தொடங்கி ஒரு ரவுண்ட் வந்த கே.கே. சவுந்தரும் ஒரு சிறு ரோலில் வருவார். இசை எஸ். தக்ஷிணாமூர்த்தி. பாடல்கள் மருதகாசி. இயக்கம் டி.ஆர். சுந்தரம்.

தெரிந்த கதைதான். பணக்கார அண்ணன் காசிம் (சக்ரபாணி) மனைவி பேச்சை கேட்டு தம்பி அலி பாபா (எம்ஜிஆர்), அம்மா, தங்கை எம்.என். ராஜத்தை விரட்டி விடுவார். அலி பாபா விறகு வெட்டி பிழைப்பார். அழகான பொண்ணுதான் என்று பாட்டு பாடி பிழைப்பு நடத்தும் மார்ஜியானாவையும் (பானுமதி) அவருக்கு டோலக் வாசிக்கும் சாரங்கபானியையும் முரடர்களிடமிருந்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருவார். மீண்டும் ஒரு நாள் விறகு வெட்ட காட்டுக்கு போகும்போது 40 திருடர்களையும், அவர்களது ரகசிய குகையையும் பார்ப்பார். அவர்கள் போனதும் குகைக்குள் நுழைந்து கொஞ்சம் செல்வத்தை அள்ளிக் கொண்டு வருவார். தங்கக் காசுகளை என்ன முடியாது, அளக்கவோ வீட்டில் ஒன்றுமில்லை. அண்ணன் வீட்டிலிருந்து ஒரு மரக்காலை இரவலாக வாங்கி வருவார். ஏழைகளான இவர்கள் எதை அளக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள அண்ணி மரக்காலின் அடியில் கொஞ்சம் புளியை ஒட்டி அனுப்புவார். புளியோடு ஒரு தங்கக் காசு போகும். அதைப் பார்த்து தங்கக் காசுகளை மரக்காலில் அளக்கும் அளவுக்கு இவர்களுக்கு எப்படி பணம் வந்தது என்று தெரிந்து கொள்ள அலி பாபாவுக்கு காசிம் ஒரு விருந்து கொடுப்பார். அலி பாபாவை மிகவும் வற்புறுத்தி ரகசியத்தை தெரிந்து கொள்ளும் காசிம் குகைக்கு போவார். ஆனால் வெளியே வரும் கட்டளை மறந்து விடும். திருடர்கள் அவரைக் கொன்று அவர் பிணத்தை துண்டுகளாக வெட்டி குகையில் ஒரு எச்சரிக்கையாக மாட்டி வைப்பார்கள். காசிம் திரும்பி வராததால் அலி பாபா குகைக்கு செல்வார். பிணத்தை கொண்டு வருவார். யாருக்கும் விஷயம் தெரியாமல் இருக்க தையல்கார தங்கவேலுவை அழைத்து பிணத்தை தைக்க சொல்வார் மார்ஜியானா. பிணம் காணமல் போனதால் ரகசியம் தெரிந்த மனிதரை திருடர்கள் தேடுவார்கள். அவர்கள் தந்திரத்தை மார்ஜியானா முறியடிப்பார். கடைசியில் வீரப்பா தங்கவேலு மூலமாக வீட்டை தெரிந்து கொள்வார். அங்கே மாறு வேஷத்தில் வருவார். ஆனால் மார்ஜியானா அவரை அடையாளம் கண்டு கொள்வார். எண்ணை பீப்பாய்களில் இருக்கும் திருடர்களை கொன்று ஆற்றில் வீசி விடுவார். வீரப்பா மார்ஜியானவை கடத்தி செல்ல, அலி பாபா அவரை பின் தொடர்ந்து குகைக்கு செல்ல, அங்கே ஒரு த்ரில்லிங் சண்டைக்கு பின் அலி பாபா வீரப்பாவை கொன்று, மார்ஜியானாவை மணந்து, சுபம்!

ஒரிஜினல் கதையிலிருந்து சில மாறுதல்கள் இருக்கின்றன. மார்ஜியானா ஒரிஜினலாக அலி பாபாவின் அடிமைப் பெண். அவளது திறமையை மெச்சி அலி பாபா அவரை தன் அண்ணன் மகனுக்கு மனம் செய்து வைப்பார்.

இந்த படத்தில் நடிப்பு கிடிப்பு என்பதெலாம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் திரைக் கதை நன்றாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அந்த குகை அற்புதம்! அதை திறக்க ஒரு பெரிய செக்கு மாதிரி ஒன்று சுழல்வதும், உள்ளே கொதிக்கும் நீருக்கு மேல் உள்ள குறுகலான பாலமும், அற்புதமான செட். வீரப்பா மிக பொருத்தமான casting. பானுமதி, எம்ஜிஆர் கூடத்தான். அதற்காகவே பாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் காண்பியுங்கள்.

பாட்டுகள் இந்த படத்தின் ஒரு பெரிய பலம். பாட்டுகள் கொஞ்சம் quaint ஆக இருக்கும். மருதகாசியின் வரிகள் மிக நன்றாக இருக்கும். என்ன அதிர்ஷ்டமோ எல்லாமே யூட்யூபில் இருக்கின்றன. நிறைய குத்துப் பாடல்கள்தான். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, எஸ்.சி. கிருஷ்ணன், ஜமுனா ராணி பாடிய சின்னஞ்சிறு பூவே எந்தன் சீனா கல்கண்டே பாட்டுதான். கீழே காணலாம்.

அழகான பொண்ணுதான் பாட்டு மிக பிரபலமானது.

மாசிலா உண்மைக் காதலே குத்துப் பாட்டு இல்லை. 🙂 படத்தில் மிக புகழ் பெற்ற பாட்டு இதுதான் என்று நினைக்கிறேன். ஏ.எம். ராஜா அபூர்வமாக எம்ஜிஆருக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

சலாம் பாபு பாட்டுக்கு ஆடுவது வஹீதா ரெஹ்மான்! அந்த காலத்து ஐட்டம் நம்பர் போல. வஹீதா ரெஹ்மான் இன்னும் பிரபலம் ஆகாத காலம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் திருடா திருடி படத்தில் இந்த பாட்டையே வண்டார் குழலி வண்டார் குழலி என்று காப்பி அடித்திருந்தார்கள்.

மற்ற பாட்டுகள் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனால் எனக்கு பிடிக்கும்.

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தங்கவேலு மேல் படமாக்கப்பட்டது. சமீபத்தில் ஜெயம்கொண்டான் படத்தில் இதை ரீமிக்ஸ் செய்திருந்தார்கள்.

நம்ம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு ஒரு நல்ல குத்துப் பாட்டு.

உன்னை விட மாட்டேன், என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டைக்குத்தான், அமீர் பூபதி ஆகியவை சுமாரான பாட்டுகள். இவற்றுக்கும் யூட்யூபில் வீடியோக்கள் இருக்கின்றன. இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

நல்ல சாகசக் கதை, அருமையான செட்கள், பாட்டுகள், டான்ஸ்கள் ஆகியவற்றுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். மொத்தத்தில் பத்துக்கு ஏழு மார்க். B grade.

அன்னையின் ஆணை


பராசக்தி பற்றி எழுத இன்னும் முடியவில்லை. அதற்குள் விகடனின் அன்னையின் ஆணை விமர்சனம். 20-7-1958-இல் வந்தது. கிருஷ்ணமூர்த்தி, கவனியுங்கள். புத்தம் புது படம்!

விகடனுக்கு நன்றி!

சந்தர்: ஹலோ சேகர், எங்கே இப்படி?
சேகர்: மார்லன் பிராண்டோ படம் ஒண்ணு ஓடுகிறதே, அதைப் பார்க்கப் போயிருந்தேன்!
சந்தர்: என்ன மிஸ்டர் அளக்கறே? எனக்குத் தெரிந்து அப்படி ஒரு படம் எங்கேயுமே ஓடலியே?
சேகர்: தமிழ்நாட்டு மார்லன் பிராண்டோ சிவாஜிகணேசன் நடித்த படம்!
சந்தர்: ஓ… சிவாஜியா? ஏன் அந்த மார்லன் பிராண்டோ தான் ஆங்கில நாட்டின் சிவாஜிகணேசனாக இருக்கட்டுமே! நீயா அவருக்குப் பட்டங்களெல்லாம் கொடுக்காதே!
சேகர்: நான் கொடுக்கலே. படத்திலேயே கொடுத்திருக்காங்க! ‘சாம்ராட் அசோகன்’ நாடகம் ஆன பிறகு, கணேசனை இப்படிப் புகழ்ந்து பாராட்டுகிறார் கருணாகரர்.
சந்தர்: சரி, ஸ்டோரி என்ன?
சேகர்: கொஞ்சம் புதுமை! பிளாஷ்பாக் கதையும் நேர்முறைக் கதையையும் மாற்றி மாற்றிக் காட்டுகிறார்கள்.
சந்தர்: ‘அவுட்லைன்’ சொல்லேன்?
சேகர்: பலரை வஞ்சித்து வாழுகிறார், பணக்கார பரோபகாரம். மானேஜர் சங்கர் இல்லாத சமயம் அவர் மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயல்கிறார். விஷயம் அறிந்த சங்கர், சண்டைக்குப் போகிறான். ஆனால், தந்திரமாக அவன் மீதே கொலைக் குற்றம் சாட்டி விடுகிறார் பரோபகாரம். சங்கர் சிறைப்படுகிறான்.பிரசவ வேதனையில் இருக்கும் தன் மனைவியை நினைத்துக்கொண்டு, ஒரு நாள் சிறையிலிருந்து தப்பித்துவிடுகிறான். ஆனால், போலீசாரால் சுடப்பட்டு இறந்துவிடுகிறான். அந்த இடத்தில் கணேசனின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது!
சந்தர்: என்னது… வந்த உடனேயே இறந்துவிடுகிற வேஷமா அவருக்கு?
சேகர்: முழுக்கக் கேளேன்… இறந்தது தந்தை கணேஷ்! பிறகுதான் மைந்தன் கணேஷ் வருகிறார்.
சந்தர்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? டபிள் ரோலா?
சேகர்: டபிள் மட்டும் இல்லை இன்னும் அநேக ரோல்கள்! கல்லூரி மாணவனாக கலாட்டா செய்யும் போதும், சாம்ராட் அசோகனாக நடிக்கும்போதும், பரோபகாரத்தைப் பழி வாங்கும்போதும் அவருடைய நடிப்பில் எவ்வளவு முகபாவங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், உள்ளப் போராட்டங்கள்! அநேக இடங்களில் இங்கிலீஷிலேயே வெளுத்துவாங்குகிறார். லவர்ஸ் அறிமுகமே பிரமாதம்! ‘பூப்பறிக்கக் கூடாது என்ற போர்டு கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்கிற தோரணையே ஜோர்! அப்புறம் ‘வெரி மிஸ்ச்சிவஸ் கேர்ள்’னு அலட்சியமாக…
சந்தர்: வில்லன் யார்?
சேகர்: பரோபகாரம் ரங்காராவ்தான் வில்லன். நம்பியார் அவருக்கு மேலே பெரிய வில்லன். எம்.என். ராஜத்தை மயக்கி, கடைசியில் வேறு வழியில்லாமல் மணந்துகொண்டு, பரோபகாரத்திற்கும் அவர் மகள் சாவித்திரிக்கும் தீங்கு செய்கிறார். இந்தப் படத்தில் எல்லோர் நடிப்புமே அற்புதம். ஆனால், அன்னையின் ஆணையை நிறைவேற்ற பரோபகாரத்தைப் பழிவாங்கும் படலம்தான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இருந்தாலும் நாராயண மூர்த்தியின் டைரக்ஷனும், மாறனின் வசனங்களும் பிரமாதம். எல்லாவற்றையும்விட சிவாஜி நடிப்புதான்…
சந்தர்: சிகரமா..?
சேகர்: சாதாரண சிகரமல்ல; எவரெஸ்ட்!

வந்தாளே மகராசி (Vanthale Maharasi)



சன் டிவிக்காரர்கள் எமலோகத்தில் சித்ரகுப்தன் டிபார்ட்மென்டில் ஏதாவது வேலை காலி இருந்தால் அப்ளை செய்யலாம். பல புது முறையான சித்திரவதைகளை கண்டுபிடிக்கிறார்கள். அவற்றை டெஸ்டும் செய்து பார்க்கிறார்கள். எங்கிருந்து இந்த மாதிரி பாடாவதி படங்களை பிடிக்கிறார்கள்? இப்படி ஒரு படம் வந்தது இவர்களுக்கு எப்படி தெரிந்தது? ஒரு வேளை யாராவது ஒரு அதிகாரி சின்ன வயதில் பார்த்துவிட்டு யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தில் இதையெல்லாம் ஷெட்யூல் செய்கிறாரா? இல்லை என்னை பிடிக்காத யாரோ சன் டிவியில் வேலை செய்கிறார்களா? யப்பா சாமி, கொஞ்சம் கருணை காட்டப்பா!

1973இல் வந்திருக்கிறது. வந்த சுவடு தெரியாமல் தியேட்டரை விட்டு ஓடியிருக்கும். ஜெய்ஷங்கர், ஜெயலலிதா, சோ, புஷ்பலதா, எம்.என். ராஜம், சி.கே. சரஸ்வதி, வி.எஸ். ராகவன், டி.கே.பகவதி, வி. கோபாலகிருஷ்ணன், கே.டி.சந்தானம், “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” வீராசாமி, காகா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராசன் நடிப்பு. ஷங்கர் கணேஷ் இசை. வாலி பாடல்கள். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம். ஜெக்கு இரட்டை வேஷம்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கற்பகம், கை கொடுத்த தெய்வம், பணமா பாசமா மாதிரி கொஞ்சம் மெலோட்ராமா உள்ள குடும்பப் படங்களை எடுத்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் கே.எஸ்.ஜி., பாலச்சந்தர் இருவரையும் ஏறக்குறைய ஒரே லெவலில் பார்த்தார்கள். இந்த மாதிரி படம் எடுத்து அவர் தன் பெயரை கெடுத்துக்கொண்டிருக்க வேண்டாம்.

ஜெய் ஒரு டாக்டர். அவரது பக்கத்து வீட்டு அம்மாவான எம்.என். ராஜம், தன் கணவர் வி.எஸ்.ராகவன், மூத்த தாரத்து மகள் (விதவை)புஷ்பலதா, தன் தம்பி சோ, தனக்கு தற்செயலாக திருட்டு பட்டம் வாங்கிக் கொடுத்த அசட்டு கிராமத்துப் பெண்+சோவின் மனைவி ஜெ, எல்லாரையும் கொடுமைப்படுத்துகிறார். பட்டணத்து துணிச்சல்காரி ஜெ ஆள் மாறாட்டம் செய்து அவரது கொட்டத்தை அடக்குகிறார்.

ஒரு பாட்டும் உருப்படியில்லை. ஜெவே வேறு ஒரு பாட்டு பாடியிருக்கிறாராம்.

படத்தில் ஏதாவது ஒரு நல்ல விஷயமாவது சொல்லவேண்டும் என்று ஆசை. அப்படி எதுவும் இல்லாததால், இரண்டு மோசமில்லாத விஷயங்கள்:
1. கிராமத்து பெண்ணாக ஜெ இழுத்து இழுத்து பேசுவது வித்தியாசமாக இருக்கிறது.
2. சோ ஜெவை முதல் இரவில் ஒரு பாட்டு பாடும்படி கேட்கிறார். ஜெ பாடுவது “மம்மி மம்மி மாடர்ன் ப்ரெட்” என்ற விளம்பர ஜிங்கிள். அதற்கு சோ வேறு அப்பப்போ “போஷாக்கானது, சத்து நிறைந்தது” என்று கமெண்டரி கொடுக்கிறார். கடைசியில் இரண்டு ஜெவில் எது தன் மனைவி என்று அடையாளம் தெரியாமல் சோ திணறும்போது, ஜெ “மம்மி மம்மி” என்ற தன் குடும்பப் பாட்டை பாடி சோவுடன் சேர்ந்து கொள்கிறார்.

சோவுக்கு ஜெ ஜோடி அபூர்வமாய் இருக்கிறது. இருவரும் இப்போதும் நல்ல நண்பர்கள் என்று கேள்வி.

துட்டு கொடுத்தால் கூட பார்க்காதீர்கள். ஓடி விடுங்கள். 10க்கு 2 மார்க். F grade.

ராணி சம்யுக்தா (Rani Samyuktha)


1962இல் வெளி வந்தது. எம்ஜிஆர், பத்மினி, எஸ்.வி. ஸஹஸ்ரநாமம், எம்.ஜி. சக்ரபாணி, தங்கவேலு, எம்.என். ராஜம், ராகினி, நம்பியார் நடித்து, கே.வி. மஹாதேவன் இசையில், யோகானந்த் இயக்கி இருக்கிறார். கண்ணதாசனும் அவினாசி மணியும் கதை வசனம் பாட்டுக்களை எழுதி இருக்கிறார்கள். எம்ஜிஆர் இறப்பதாக வருவதால் படம் ஓடி இருக்காது என்று நினைக்கிறேன்.

எம்ஜிஆர் இறப்பதாக நடித்த எந்த படமாவது வெற்றி பெற்றிருக்கிறதா? சின்ன அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்ற புத்தகத்தில் அவர் ஒரு அனுபவத்தை சொல்கிறார். ஒரு பயணத்தின் போது இரவு வேளையில் ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தாராம். நைட் ஷோ முடிந்து மக்கள் திரும்பிக் கொண்டிருந்தார்களாம். என்ன படம் என்று இவர் கேட்டிருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றும் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்தும் பலர் பேசினார்களாம், ஆனால் ஒருவர் இதெல்லாம் ஒரு படமா என்ற தோரணையில் பேசி இருக்கிறார். இவர் ஏன் உங்களுக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். அவர் சொன்னாராம், “நடிப்பெல்லாம் கிடக்குதுங்க, இதுவே எம்ஜிஆரா இருந்தா வெள்ளைக்காரங்களை எல்லாம் ஒரு போடு போட்டுட்டு குதிரை மேல ஏறி வந்து முடி சூட்டிக்கிட்டிருப்பாரு!” என்றாராம். தமிழனான கட்டபொம்மனே எம்ஜிஆர் நடித்தால் தோற்கமாட்டார் என்றால் அவ்வளவாக தெரியாத ப்ரித்விராஜின் கதி என்ன? இது உண்மைக் கதை என்றே நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.

ப்ரித்விராஜ் சம்யுக்தா கதை வடக்கே மிகவும் பிரபலமானது. நம்மூரில் முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, கட்டபொம்மன் கதை போன்று அதற்கும் ஒரு folk ballad பாரம்பரியம் உண்டு. அழையாத ஸ்வயம்வரத்துக்கு போய் சம்யுக்தையை தூக்கி வரும் சாகசத்தில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. எம்ஜிஆரும் அந்த வீர சாகசத்தால் கவரப்பட்டுத்தான் இந்த படத்தை எடுத்திருக்கவேண்டும்.

கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு கதையை அங்கங்கே மாற்றி இருக்கிறார்கள். ஜெயச்சந்திரனும் தில்லி அரசுக்கு ஒரு வாரிசு என்றும் அதனால்தான் அவருக்கும் ப்ரித்விராஜுக்கும் பகை ஆரம்பித்தது என்று ஒரு ரீல் விட்டிருக்கிறார்கள். மற்றபடி தெரிந்த கதைதான். சம்யுக்தாவை காதலிக்கும் ப்ரித்விராஜ் அவரை ஜெயச்சந்திரனுக்கு பாவ்லா காட்டிவிட்டு சம்யுக்தாவை தூக்கி சென்று மனம் செய்துகொள்கிறார். முஹம்மது கோரி ஜெயச்சந்திரன் உதவியுடன் ப்ரித்விராஜை தோற்கடிக்கிறார்.

ப்ரித்விராஜ் போர்க்களத்தில் இறப்பதாக காட்டுகிறார்கள். அவர் சிறைப்படுத்தப்பட்டு இறக்கிறார். ப்ரித்விராஜ் ராஸோவின் படி அவர் குருடாக்கப்படுகிறார். கோரி பிறகு ப்ரித்விராஜின் சத்தம் மட்டுமே கேட்டு அம்பு விடும் திறமையை பார்க்க விரும்பும்போது அவர் கோரியின் குரலை வைத்து கோரியை தன் அம்பால் கொன்றுவிடுகிறார். இந்த பழி வாங்கல் ராஸோவை எழுதிய சாந்த் பர்டாயின் உதவியோடு செயப்படுகிறது.

பிரிண்ட் கொஞ்சம் மோசம். அங்கங்கே ஸ்கிப் ஆகிக்கொண்டே இருக்கிறது.

நீண்ட நாள் தயாரிக்கப்பட்ட படம். பத்மினி இந்த பட்டத்தில் சில பகுதிகள் எடுக்கப்பட்டபோது கர்ப்பமாம்.

ரிச்சாக எடுத்திருக்கிறார்கள். நல்ல செட்கள், அழகான எம்ஜிஆர், பத்மினி.

பல பாட்டுகளை நான் முன்னால் கேட்டதில்லை. ஆனால் இனிமையாக இருந்தன. நினைவில் இருக்கும் பாட்டுகள் இவைதான்.

“முல்லை மலர்க்காடு எங்கள் மன்னவர் தம் நாடு” என்ற பாட்டுக்கு ராகினி நன்றாக ஆடுகிறார்.

“நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்” என்ற பாட்டு வேறு ஒரு பாட்டை நினைவுபடுத்துகிறது. அந்த பாட்டு நெஞ்சில் இருக்கிறது, நினைவு வர மாட்டேன் என்கிறது. பாட்டின் இரண்டாவது வரி “நினைவினில் தெரியுது அழகு முகம், ஆசை முகம்” என்பது. என்ன பாட்டு என்பத தொண்டை வரைக்கு வந்துவிட்டது, இன்னும் தெரியவில்லைசாரதா கண்டுபிடித்து மிச்சம் இருக்கும் தலை முடியையும் பிய்த்துக்கொள்வதிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டார். அது “‘நெஞ்சினிலே நினைவு முகம்” என்ற பாட்டு. சித்ராங்கி படத்தில் வேதா இசையில் அமைந்தது.

“இதழ் இரண்டும் பாடட்டும் இமை இரண்டும் மூடட்டும்” பாட்டும் நன்றாக இருக்கிறது. கண்ணதாசன். வைரமுத்துவுக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் பாட்டு இதுதானாம். டிஎம்எஸ், ஏ.பி. கோமளா பாடி இருக்கிறார்கள்.

“சித்திரத்தில் பெண்ணெழுதி” சுமாரான பாட்டு.

இந்த 4 பாட்டுகளையும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்கள் மட்டும் இங்கே கேட்கலாம்.

“நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்” என்பது மிக அருமையான பாட்டு. டிஎம்எஸ்ஸும் சுசீலாவும் கலக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள். அந்தப் பாட்டின் போது படம் அநியாயத்துக்கு ஸ்கிப் ஆனது பெரிய கொடுமை.

“ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா” என்பது மட்டும்தான் நான் முன்னால் கேட்டிருக்கிறேன். அருமையான பாட்டும் கூட. இந்த வீடியோவையும் கட்டாயம் பாருங்கள்.

இந்த இரண்டு பாட்டுகளையும் இங்கே கேட்க மட்டும் செய்யலாம்.

இன்னும் ஒன்று இரண்டு பாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் மறந்துவிட்டன.

தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் பார்க்கலாம். இல்லை என்னைப் போல் பழைய பாட்டு பைத்தியங்கள் சில பாட்டுகளை discover செய்ய பார்க்கலாம். எதிர்பாராமல் இனிமையாக அமைந்த பாட்டுகளுக்காக 10க்கு 6 மார்க். C- grade.

நான் பெற்ற செல்வம் (Naan Petra Selvam)


முன் குறிப்பிட்டது போல் 1956இல் வந்த படம். சிவாஜி, ஜி. வரலக்ஷ்மி, நம்பியார், சாரங்கபாணி, வி.கே. ராமசாமி, ஏ. கருணாநிதி, எம்.என். ராஜம் நடித்திருக்கிறார்கள். ஜி. ராமநாதன் இசை. ஏ.பி. நாகராஜன் கதை வசனம். ஏ.பி. நாகராஜன் இதிலும் ஒரு தருமி-நக்கீரன்-சிவன் காட்சியை வடித்திருக்கிறார். சிவாஜியே நக்கீரனாகவும் சிவனாகவும் நடிக்கிறார். திருவிளையாடல் படக் காட்சியில் இந்தக் காட்சியின் தாக்கம் தெரிகிறது. ஜி. வரலக்ஷ்மி அரிச்சந்திரா படத்திலும் சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.

“காட்டுக்குள்ளே கண்ட பூவு கண்ணைப் பறிக்குது” என்ற lowbrow பாட்டு மிகவும் நன்றாக இருந்தது. சுலபமான சந்தத்தில், நல்ல தாளத்தோடு அமைந்திருந்தது. திடீரென்று வீதியில் இரண்டு பேர் வந்து பாட்டுப் பாடி டான்ஸும் ஆடி பணம் சம்பாதிப்பார்கள். நான் சில பாம்பு பிடாரன்களைப் பார்த்திருக்கிறேன். லேகியம் விற்கும் மோடி மஸ்தான்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் இப்படி எந்த டான்ஸையும் பார்த்ததில்லை. இப்படி உண்மையிலேயே அந்தக் காலத்தில் நடக்குமா? இல்லை உடான்ஸா? யாராவது பார்த்திருக்கிறீர்களா?

“பூவா மரமும் பூத்ததே” என்ற பாட்டு பிரபலமானது. ஜிக்கியின் குரலில் ஒரு துள்ளல் இருக்கிறது. 

“வாழ்ந்தாலும் ஏசும்”, “நான் பெற்ற செல்வம்” என்ற பாட்டுக்கள் இன்றும் கேட்கப்படுகின்றன. டி.எம். சவுந்தரராஜன் 50களில் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில்தான் பாடுவார். இந்தப் பாடல்களில் அதை நன்றாக உணரலாம். அவரது ஆதர்சமான தியாகராஜ பாகவதரின் தாக்கம்தான்.

“மாதா பிதா குரு தெய்வம்” என்பதும் நல்ல பாட்டு.

கொஞ்சமாகவே திரைப் பாடல்கள் எழுதி இருக்கும் கா.மு. ஷெரிப் இந்தப் படத்தில் பல பாட்டுக்களை எழுதி இருக்கிறார். “காட்டுக்குள்ளே கண்ட பூவு”, “பூவா மரமும்”, “. நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” அவர் எழுதியவையே.

“நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.

கதை என்னவோ இழுவைதான். அப்பா சாரங்கபாணியை எதிர்த்துக்கொண்டு ஏழை வரலக்ஷ்மியை மணக்கும் சிவாஜி வாழ்க்கையில் உள்ள அத்தனை கஷ்டங்களையும் படுவார். ஏழ்மையிலே தவிப்பார், ஆனால் வேலை கீலை எதுவும் தேடாமல் தன் ஏழ்மையைப் பற்றியும் அப்பாவின் கடின உள்ளத்தையும் பற்றி நீள நீள வசனங்கள் பேசிக்கொண்டிருப்பார். அவருக்கு கஷ்டம் கொடுக்க விரும்பாத அவரது மைத்துனர் நம்பியார் வீட்டை விட்டு ஓடி தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சி செய்து தலையில் அடிபட்டு பைத்தியமாகிவிடுவார். அவர் வீட்டை விட்டு ஓடியது சிவாஜியின் நீள நீள வசனங்களை தாங்கமுடியாமல்தான் என்று நான் யூகிக்கிறேன். வேலை கிடைக்காத துயரத்தாலோ என்னவோ, சிவாஜி நடுவில் தனது மனைவியை கர்ப்பமும் ஆக்கிவிடுவார். தப்பித் தவறி அவருக்கு ஒரு வேலை கிடைக்கும், ஆனால் அவரது அப்பாவே அந்த வேலையையும் பறித்துவிடுவார். உடனே சிவாஜி “வாழ்ந்தாலும் ஏசும்” என்று பாட்டு பாடிக்கொண்டே நெடுந்தூரம் தன் மனைவியோடு நடந்து செல்வார். மனைவிக்கு மருந்து வாங்கப் பணம் இல்லாமல் திருடப் போவார். ஆனால் அங்கே அவரை மன்னித்து விட்டுவிடுவார்கள். என்னடா ஜெயிலுக்கு போகாமல் தப்பித்துவிட்டாரே, உணர்ச்சி பொங்க வசனம் பேசும் ஒரு வாய்ப்பு போய்விட்டதே என்று நினைத்தால், அந்த செய்தி தெரிந்து அவர் மனைவி அவமானத்தால் இறந்துவிடுவார். அப்போது சிவாஜி தன் சுயரூபத்தைக் காட்டி சிம்மக் குரலில் வசனம் பேசுவார். படம் முடியும் வேளையில் தன் காணாமல் போன மகனை தேடும் போது அவரை போலிஸ்காரர்கள் திருடன் என்று நினைத்து கைது செய்துவிடுவார்கள். அவரும் “நான் இந்த செல்வத்தை அல்ல, நான் பெற்ற செல்வத்தைத்தான் தேடுகிறேன்” என்று நமது கண்களை குளமாக்குவார். அவரும் அழுது, நம்மையும் அழவைத்துவிட்டு, கடைசியில் சிவாஜியும் அவரது அப்பாவும் 2 நாட்களுக்கு முன்னால் காணாமல் போன அவரது மகனும் சிறு வயதில் காணாமல் போன சிவாஜியின் தங்கையும் வீட்டை விட்டு ஓடிப் போய் பைத்தியமாக இருந்து குணமான சிவாஜியின் மைத்துனரும் எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்! செத்துப் போன மனைவியும், முதல் அரை மணி நேரத்திலேயே செத்துப் போன சிவாஜியின் மாமாவும் உயிர் பிழைத்து வந்திருந்தால் இன்னும் முழுமையாக இருந்திருக்கும். Director missed a trick!

பாட்டுக்களை மட்டும் கேட்கலாம்.