பழைய கமல் திரைப்படம்: குமார விஜயம்


நான் பழைய திரைப்படங்களைப் பார்ப்பதே அனேகமாக பாடல்களுக்காகத்தான். குமாரவிஜயத்தையும் சிறு வயதில் விரும்பிக் கேட்ட ஒரு பாடலுக்காகத்தான் பார்த்தேன் – கன்னி ராசி என் ராசி. தேவராஜன் இசையில் ஜேசுதாஸ், சுசீலா பாடியது.  ஜேசுதாஸ் ரிஷபக் காதல் என்று ரிஷபத்தை அழுத்தும் விதம் நிறையவே பிடிக்கும். எழுதியது யாரென்று தெரியவில்லை.

படத்தைப் பார்க்கும்போது அந்தக் கால சபா நாடகம் ஒன்றைப் பார்க்கும் உணர்வு வந்தது. கடைசியில் பார்த்தால் கோமல் ஸ்வாமிநாதன் எழுதிய நாடகம் ஒன்றைத்தான் – பெருமாள் சாட்சி – திரைப்படம் ஆக்கி இருக்கிறார்கள்.

ஊர் பெரிய மனிதர் வி.கே. ராமசாமியின் சிறு வயது திருவிளையாடலில் பிறந்தவன்(ள்) என்று சொல்லிக் கொண்டு கமலும் ஜெயசித்ராவும் அவரை சந்திக்கிறார்கள். விகேஆர் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் இருவருக்கும் வேலை கொடுத்து வீட்டில் தங்கவும் வைப்பார் என்று நீங்கள் ஊகித்தால் உங்களுக்கு அந்தக் கால சபா நாடகங்களைப் பார்த்த அனுபவம் உண்டு என்று சொல்லிவிடலாம். இருவரும் ஒருவரை ஒருவர் கவிழ்க்க திட்டம் போடுகிறார்கள், திட்டத்தின் ஒரு பகுதியாக கன்னி ராசி என் ராசி என்று டூயட் பாடுகிறார்கள், விகேஆரின் மகன், மகளை ஏமாற்ற முயல்பவர்களை தோற்கடிக்கிறார்கள், விகேஆரை ஏமாற்றும் அவரது மைத்துனன் தேங்காயை கண்டுபிடிக்கிறார்கள், கடைசியில் பார்த்தால் இருவரும் கணவன்-மனைவி, கமல்தான் விகேஆரின் மகன். விகேஆரின் மனைவி சுகுமாரி கமலை ஏற்கிறார், சுபம்!

கணவனும் மனைவியும் எதற்காக ஒருவரை ஒருவர் கவிழ்க்க வேண்டும் என்றெல்லாம் கேட்கக் கூடாது.

1976-இல் வந்த திரைப்படம். ஏ. ஜகன்னாதன் இயக்கியது. கமல், ஜெயசித்ரா, வி.கே. ராமசாமி, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், சுகுமாரி, மலையாள நடிகர் சோமன், கல்லாப்பெட்டி சிங்காரம் நடித்தது. தேவராஜன் இசை.

கன்னி ராசி என் ராசி பாட்டை மட்டும் கேட்பது நலம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: விக்கி குறிப்பு

 

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

பின்னூட்டமொன்றை இடுக