அப்பாவின் அசரீரிதான்…. – விசாலி கண்ணதாசன்


நக்கீரன் இதழில் வந்த பேட்டி, விமல் அனுப்பி இருக்கிறார். கொஞ்சம் நீளமான பேட்டி, ஆனால் சுவாரசியமாக இருக்கிறது! நக்கீரனுக்கும் விமலுக்கும் நன்றி!

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று எழுதியதை மெய்ப்பிக்கிறார் கண்ணதாசன். ஆமாங்க, அப்பாவின் அசரீரிதான் என் இலக்கியங்கள் என்கிறார் அவரின் மகள் விசாலி.

விசாலியின் ஐந்து வயதுக்கு ஆறு மாதங்கள் இருக்கும் முன்பே கண்ணதாசனுக்கு காலனின் அழைப்பு வந்துவிட்டது. அந்த சோகம் வாட்டியிருக்கிறது விசாலியை. அதனால்தான் அப்பாவின் பாடல்கள்தான் எனக்கு அம்மாவானது என்கிறார் விசாலி.

அம்மாதான் எனக்கு தந்தையுமானார். இப்போ கணவர்தான் தாயும், தந்தையுமானார் என்று உணர்வுப்பூர்வமாக தன்னை விவரித்தார் விசாலி

‘’அவரு மாதிரியே உயரம். அவரு மாதிரியே நெறம். அவரு மாதிரியே கண்ணு. அவரு மாதிரித்தான் பார்க்குற. அவரு மாதிரித்தான் நடக்குற. அவரு மாதிரித்தான் சிரிக்குற. ஒன்ன பார்க்குறது அவரப் பார்க்குற மாதிரியே இருக்கு சாலான்னு சொல்லுவாங்க அம்மா. நான் மட்டுமில்ல அப்பாவும் உன்ன சாலான்னுதான் கூப்பிடுவாங்கன்னு சொல்லுவாங்க அம்மா.

அம்மா என் கூட விழாக்களுக்கு வரும்போது, ‘அவரோடயும் விழாக்களுக்கு வருவேன். இப்ப ஒன் கூடயும் வர்றேன். ஒரு வித்யாசமும் தெரியல. அவருக்குஇருந்த கம்பீரம் ஒனக்கும் இருக்கு. உன்ன விசாலின்னு சொல்லக்கூடாது. புடவ கட்டின கண்ணதாசன்னுதான் சொல்லணும்’னு என்னை அப்பாகவே பார்ப்பாங்க, எனக்கு அப்பாவாக இருந்த என் அம்மா.’’ என்று சொல்லும் விசாலி, அப்பாவுக்கு பதினைந்தாவது குழந்தை. அம்மாவுக்கோ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு.

‘அப்பாவோட சொத்துன்னு எனக்கு எதுவும் கொடுக்கல. ஆனா நிலம், பணம்தான் சொத்துன்னும் நான் நினைக்கல. ‘ஒருவன் பூமியில் எவ்வளவு இடம் வைத்திருக்கிறான் என்பது பொருட்டே அல்ல. உலக இன்பங்களை அனுபவித்து லயிக்க உள்ளத்தில் எவ்வளவு பெரிய இடம் வைத்துள்ளான் என்பதே முக்கியம்.’ (தான் எழுதி வரும் ‘சிந்தித்தேன் சிந்தியதேன்’ என்ற தொகுப்பிலிருந்து சொன்னார்.)

ஆனா, யாருக்கும் இல்லாத பெரிய சொத்து ஒண்ணு எனக்காக விட்டுட்டு போயிருக்கிறார் அப்பா. அப்பா கடைசியா எழுதுன பாட்டு ‘கண்ணே கலைமானே’தான் அது. மூன்றாம் பிறை படத்துக்காக எழுதிய அந்த பாட்டுதான் எனக்கான பெருஞ்சொத்து.

அப்பா சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்புனபோது(1981) டைரக்டர் பாலுமகேந்திரா வந்திருக்கிறார். அப்பா காரில் உட்கார்ந்துகிட்டே அந்த பாட்டை எழுதிக் கொடுத்திருக்கிறார்.


அந்த பாட்டுக்கான சூழலை அப்பாவிடம் விவரித்திருக்கிறார் டைரக்டர். நாயகி ஸ்ரீதேவி குழந்தைத்தனத்துடன் இருப்பது மாதிரி கதை என்று நாயகியின் சில காட்சிகளை சொல்லியிருக்கிறார். அதில் கமலின் காதை பிடித்து திருகும் ஸ்ரீதேவியின் காட்சியை சொன்னபோது “அட, என் மகள் சாலா மாதிரியே இருக்குதே இந்த கேரக்டர். சாலா இப்படித்தான் என் காதை பிடிச்சு திருகிக்கிட்டு இருக்கும்” என்று சொன்ன அப்பா, கடகடவென அந்தப் பாட்டைஎழுதிக் கொடுத்திருக்கிறார்.

அந்தப் பாடலை எழுதுவதற்கு முன்பு அதாவது அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக கிளம்பும் சமயத்தில் என்னைப் பற்றி அம்மாகிட்ட “நான் திரும்பி வரமாட்டேன். நீ சாலாவ பத்திரமா பாத்துக்க”ன்னு சொல்லியிருக்காங்க அப்பா. அப்படிச் சொல்லிவிட்டு கிளம்பி போகும் போதுதான் அந்த குழந்தைத்தனமான நாயகி சூழலை சொல்ல பாட்டு எழுதியிருக்கிறார்.

அந்த பாடலுக்கு யார் எப்படி வேண்டுமானால் அர்த்தம் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால் அது எனக்காக என் அப்பா எழுதிய பாட்டு. நானே அந்த பாட்டை சூழ்நிலைக்கு தக்க மாற்றி நினைத்துக் கொள்வேன்.

“அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்” என்று அந்திம காலத்தில் சிகிச்சைக்காக கிளம்பும் இந்த பகலில் உன்னை கடைசியாக பார்க்கிறேன். திரும்பி வருவேன் என்று நம்பிக்கையில்லை. ஆண்டவனே இனி நீ பார்த்துக்கொள் என்று எழுதியிருப்பதாக நினைத்துக்கொள்கிறேன்.

நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு துக்கம் வராத பொழுதுகளில் அப்பாவின் இந்த பாட்டுதான் எனக்கு தாலாட்டு. சின்ன வயசில் நான் தூக்கம் வராமல் அழுதுகொண்டிருந்தால் ‘இரு அப்பாவ தாலாட்டு பாடச்சொல்லுறேன்’ என்று சொல்லிவிட்டு அந்த பாடலை காற்றில் மிதக்க விடுவாங்க அம்மா. இரவும் பகலும் உன்னை பார்த்துக்கிட்டு இருக்காங்க என்று அம்மா சொல்லுவாங்க.

அம்மா பாடும் தாலாட்டை விட அந்த பாடலில் வரும் ஆரிராரோ ஓ ராரிராரோ வரிகள்தான் என்னை சுகமாய் தூங்க வைக்கும்’’ என்று சொல்லிவிட்டு இந்தப் பாட்டு எனக்காக எழுதுன பாட்டுதான் இல்ல எனக்காக எழுதுன பாட்டுன்னு சகோதரரிடம் சண்டையிட்ட அனுபவத்தையும் அந்த சகோதரரும் இப்போது இல்லை என்று சொன்னபோது விசாலியின் வார்த்தைகளில் கனத்த சுமை இருந்தது.

‘’அப்பாவோட பதினான்கு பிள்ளைகளில் (ஒன்பது ஆண்மக்கள் – ஐந்து பெண்மக்கள்) கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என் கூட ஒட்டல.

அவனும் நானும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தபோது கண்ணே கலைமானே பாட்டில் கலை என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்றான். நான் மறுத்து எனக்காக எழுதிய பாட்டு என்று வாதிட்டேன். அவன் கடைசி வரை ஒப்புக்கொள்ளவேயில்லை.

இந்த பாட்டு யாருக்காக எழுதினேன்னு அப்பாகிட்ட கேட்க அப்பாகிட்டேயே போயிட்டான். அவன் சாகக் கூடிய வயசில்ல. எமனுக்கு இது தெரியல. ரத்த உறவுன்னு இருந்த ஒண்ணும் போச்சு.

கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான்’’என்ற சுமை மிகுந்த வார்த்தையை விசாலி வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது அவரது எட்டு வயது மகன் விஷ்வா குடுகுடுன்னு ஓடிவந்து காதில் கிசுகிசுத்து ஏதோ கேட்க, ஆமாம் தாத்தாதான் என்று சிரித்தார்.

‘’அப்பா எனக்காக இன்னொரு பெருஞ்சொத்து கொடுத்திருக்கிறார். வெளியூரில் இருந்த அப்பாவுக்கு நான் பிறந்த செய்தி கிடைத்ததும் எனக்காக எழுதின பாட்டுதான் அது.

சித்திரை மாதம்
திருவம்மாவாசை
சத்தியமகவாய்
தாய்விசாலாட்சி
அவதரித்ததை என்
அகக்கண் அறியும்
ஆண்மை அதிலே
பிறக்குமானால்
அவலம் சோகம்
அடிக்கடி நிகழும்
பெண்மை அதிலே
பூத்துக் குழுங்கினால்
ஞானம் பெருமன
நவில்வது வேதம்!

என்று அப்பா எழுதியிருக்கிறார்.

அப்பா இன்னொரு கவிதையும் எழுதியிருக்காங்க. (ஒரு சின்ன சிரிப்புக்குப் பின்) நான் பிறந்த சமயம் (1977) சென்னையில் ஒரு கவியரங்கத்தில் அப்பா கலந்து கொண்டிருந்திருக்காங்க. அப்போ அப்பாவுக்கு ‘அழுகை’ தலைப்பு கொடுத்திருக்காங்க.

எனக்கு இப்போ பொருத்தமான தலைப்புதான் கொடுத்திருக்காங்க என்று சொல்லிவிட்டு கவிதை வாசித்திருக்கிறாங்க. அந்தக் கவிதையின் முடிவில் ‘என்னை ஆசையாய் பெற்ற தாயோ அழுவதற்கென்றே பெற்றாள்’ என்று முடிச்சிருக்காங்க. (மீண்டும் ஒரு சின்ன சிரிப்புக்குப் பின் )

அப்பா கடைசியா படைச்சது ஏசு காவியம். நான் முதன்முதலா எழுதின கவிதை ஏசு பற்றித்தான். கிருஸ்துமஸ் எனும் தலைப்பில்தான் ஏழு வயதில் அந்தக் கவிதையை எழுதினேன்.

அப்பா கூட பதினேழு வயதில்தான்(1944) முதல் கவிதை எழுதினார். அவரு மகள் ஏழு வயதிலேயே கவிதை எழுதிவிட்டாய் என்று என்னை கொண்டாடினாங்க.

மாட்டுத் தொழுவத்திலே தேவன் மனிதரிலே தேவன் மனிதனாக வந்த புனிதன் என்று அந்தக் கவிதையில் எழுதியிருப்பேன். இத்தனை சின்ன வயதில் எப்படி இப்படி எழுத முடியும்? மனிதரிலே புனிதன் என்று ஏழு வயதில் எப்படி எழுத முடிந்ததுன்னு என்னை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்க.

ஆனால் அம்மா மட்டும், ‘ நீ எழுதல சாலா. நீ எழுதுகோல்தான். உன்னை பிடிச்சு அப்பாதான் எழுதுறாரு’ன்னு சொன்னாங்க. அப்பாவின் அசரீரிதான் என் எழுத்துக்கள் என்பது அப்போது எனக்கும் தெரியல.

அந்த ஒரு கவிதைக்கு பிறகு நான் எதுவும் எழுதல. ஒரு கவியரசரின் பொண்ணு இப்படி இருக்கலாமான்னு அம்மா என்னை சும்மா இருக்க விடல.

அப்பா எழுதுன கவிதைகள், பாடல்கள், இன்ன பிற இலகியப்படைப்புகள் எல்லாவற்றையும் படிக்கச் சொல்லுவாங்க. அவற்றை படிக்காமல் யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால் காதை திருகி படிக்கச் சொல்லுவாங்க. அம்மா காதைத் திருகி திருகி நான் அப்பாவின் படைப்புகளை படிச்சேன்.

அப்போ எல்லாம் தொணதொணன்னு யார் கிட்டேயாவது பேசிக்கிடே இருப்பேன். சும்மா பேசிக்கிட்டே இருக்கியே எதாவது ஒரு கலையை வளர்த்துக் கொள்ளுன்னு சொல்லுவாங்க. அதைத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்னு அம்மாவுக்கு அப்போ தெரியல’’ என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தவர்,

சில காலங்களாகத்தான் நான் பேச்சை குறைத்துக்கொண்டேன். நட்பு வட்டத்தை சுருக்கிக்கிட்டேன். என்னை வாயாடின்னு சொல்லுவாங்க. இப்போ அனாவசிய பேச்சுக்கு இடங்கொடுக்கக் கூடாதுன்னு மொபைல் போன் கூட தவிர்த்துவிட்டேன் என்று தான் இப்போது வெளியுலகை விட்டு விலகி இருப்பதற்கான காரணத்தைச் சொன்னார்.

இலக்கியம், சினிமா, டிவி நிகழ்ச்சிகள் தொகுப்பாளர் என்று பரபரப்பாய் இருந்தவர் திடீரென்று இருக்குற இடமே தெரியாமல் இருப்பதற்கான காரணத்தைச் சொன்னார்.


கம்மங்காடு’ பாட்டுக்கு ஆட்டம் போட்ட பொண்ணா இப்படி என்று ஆச்சர்யப்பட வைத்தது.

விசாலியின் வீட்டு முகப்பில் சிவாலயம் என்று எழுதப்பட்டிருந்ததற்கான அர்த்தம் அப்போதுதான் புரிந்தது. பொதுவாக சிலருடைய வீட்டு முகப்பில் எழுதப்பட்டிருப்பது போல் இங்கேயும் எழுதப்பட்டிருக்கு என்று நினைத்தது தவறு என்பதை உணர முடிந்தது.

‘’மரியாதைக்குரிய டைரக்டர் பாலசந்தர் சார் கேட்டுக்கிட்டதால வானமே எல்லை படத்தில் நடிச்சேன்.

கம்மங்காடு கம்மங்காடு காடை இருக்கு பசியோடுன்னு ஆடுனேன்.

விருப்பப்பட்டுத்தான் நடிச்சேன். ஆனா அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தா இதுக்கு சம்மதிச்சிருக்கவே மாட்டாங்கன்னு அம்மா சொன்னாங்க.

அப்பா இருந்திருந்தா நான் செய்த பலவற்றை மன்னித்திருக்க மாட்டார். ஒவ்வொரு மனிதரிடமும் நிறை குறைகள் உண்டு. அப்படித்தான் கலைஞருக்கும்.

ஒருவரை பற்றி விமர்சனம் செய்வதென்றால் அவருடைய நிறைகுறைகள் இரண்டையும் பற்றி சொல்லணும். அவர் என் திருமணத்துக்கு எல்லாம் வந்திருக்கிறார். ஆனால் நான் மனசில் வச்சிப் பார்க்காம அவரின் குறைகளை மட்டுமே நிறைய பேசிட்டேன். இப்போது அதெல்லாம் தவறு என்று உணந்திட்டேன்.

அதுக்காக இதைப் போய் அவருகிட்ட சொல்லணும்னு நினைக்கல. என் மனசுக்கு தவறுன்னு படுது. திருத்திக்கிட்டேன்; அவ்வளவுதான். இது என்னோட குணம்.

எழுதுறது ஒண்ணு பேசுறது ஒண்ணு ஆனா நடக்குறது ஒண்ணுன்னு வைரமுத்து சாரை நான் கடுமையா விமர்சனம் பண்ணுனேன். அது தப்புன்னும் உணர்ந்திட்டேன்.‘கலங்கம் வந்தாலென்ன பாரு அதுக்கும் நெலான்னுதான் பேரு அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு’ன்னு அவரு எழுதுன வரிகள கேட்கும் போதெல்லாம் அவர தவறா விமர்சனம் பண்ணியிருக்க கூடாதுன்னு நினைக்குறேன்.

இது எல்லாத்தையும் இப்போ எழுதிக்கிட்டு இருக்குற ‘சத்தியவாக்கு’ புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

டிவி நிகழ்ச்சி தொகுப்புகளில் பெரும்பாலும் பெண்ணியம் பேசவேண்டியிருக்கு. அது எனக்கு ஒத்து வரல. நான் எல்லாத்தையும் பொதுவான பார்வையில் பார்க்குறேன். அப்படியே பேசினாலும் என்ன, அங்கே இருக்குறவங்க கைதட்டுவாங்க. அவ்வளவுதான்.

வெளி நிகழ்ச்சிகளுக்கு போவதையும் தவிர்த்திட்டேன். பணம் இருக்கும் ரசிகர்கள் தங்களின் அபிமானத்துக்குரியவர்களை தங்கள் இடத்துக்கே அழைத்து வருகிறேன் என்று அவர்கள் வட்டத்தில் சவால் விட்டு சிரிக்கிறார்கள்.

நான் அந்தப் பாடகியின் பெயரை சொல்ல விரும்பல. ஆனா அவர் பட்ட அவமானத்தை சொல்லுறேன். நான் நெடுநாள் ரசிகர். எனக்காக நீங்கள் வந்து இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பாடவேண்டும். உங்கள் பாட்டுக்காக என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொல்லி வெளிநாட்டில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.

அந்தப் பாடகியும் சென்றிருக்கிறார். அங்கே போனால் அவருக்கு அதிர்ச்சி. பார் டான்ஸ் நிகழ்ச்சியில் பாடுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று மனம் புழுங்கியிருக்கிறார். ஆனால் என்ன பண்ணுவது வாங்கிய பணத்துக்காக இரண்டு பாடலை பாடிவிட்டு வந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பதால் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையே தவிர்த்துவிட்டேன். அதற்காக ஒட்டுமொத்த ரசிகர்களையும் நான் அப்படிச்சொல்லல. எந்த ரசிகர் எப்படிப்பட்டவர் என்று இனங்காண வேண்டிய அவசியம் இல்லாமல்தான் என் பாதை இப்போது மாறிவிட்டது.

சிவசக்தி’ என்று நான் இசையமைத்து பாட்டு எழுதி, பாடியிருக்கும் பக்தி ஆல்பம் விசயமாக இளையராஜா சாரை பார்க்கப் போனேன். அப்போ ‘அப்பா கண்ணன் மேல் ஈடுபாடு உள்ளவர். நீங்க சிவன் மேல ஈடுபாடா இருக்குறீங்க. பரவாயில்ல என்று சிரித்துவிட்டு கண்ணனை ப்பற்றி ஒரு பாட்டு எழுதிக்கொடுங்க என்றார்.

என் சோம்பேறித்தனத்தை அறியாத அவர் ஒரு வாரம் கழிச்சு பாட்டு எழுதியாச்சான்னு கேட்டார். ரெண்டு நாள்ல எழுதிக் கொடுத்திடுறேன்னு சொன்னேன். இதே அப்பான்னா டக்கு டக்குன்னு எழுதிக் கொடுத்திடுவாங்க’ன்னு சொன்னார். நான் இப்டித்தான்னு சிரித்தேன். பரவாயில்ல டைம் எடுத்தே எழுதிக் கொடும்மான்னு சொன்னார்.

கண்ணனுக்கு என்ன வேணும்’னு எழுதிக் கொடுத்த அந்த பாட்டு தனம் படத்தில் இடம்பெற்றிருந்தது.

அது என்னவோ தெரியல எனக்கு நவீன இலகியங்கள் மீது நாட்டமில்லாம போயிட்டு. மரபுக்கவிதைகள் மட்டுமே எழுதி வந்திருக்குறேன். அதுவும் இப்போது ஏன் எழுதுனோம்னுதான் தோணுது. எத்தனையோ புத்தகங்கள் எழுதிவிட்டேன். ஆனா இப்போ எழுதிக்கிட்டு இருக்குற சத்தியவாக்கு புத்தகத்தை தான் முதல் படைப்பாக நினைக்கிறேன்.

அப்பா இறந்த சில நாட்களிலேயே என்னை சென்னை ஸ்ரீகாளிகாம்பாளிடம் தத்து கொடுத்திருக்காங்க அம்மா. அந்த அம்மாதான் எனக்கு இன்னொரு அம்மா. அப்போதிலிருந்தே எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு.

வளர்ந்து விட்ட பிறகு சிவன் மீதுதான் அதீத ஈடுபாடு உண்டு. அதுவும் திருவண்ணாமலை சென்று வந்த பிறகு நான் தீவிர சிவபக்தையாகி விட்டேன்.

அப்பா தீவிர கண்ணன் பக்தனாக இருந்தார். ஆரம்பத்தில் அவர் நாத்திகவாதியாக இருந்ததை அவரே மனம் வருந்தி ‘நாத்திகம் -என் இருண்ட காலம்’ என்று சொல்லியிருக்காங்க.

‘இருபதில் ஏதோ ஏதோ என்று தூண்டப்படுகின்ற கற்பனைகள், அறுபதில் இதுதானா இதுதானா என்று அடங்கிவிடுகிறது. ஆக, அந்த அறுபதிற்குரிய பக்குவத்தை இருபதிலேயே அடைந்துவிட ஆன்மீகம் மேற்கொள்வோமானால் இடைப்பட்ட நாற்பது வருட காலம் உண்மையாக வாழ்ந்தவன் என்ற கவுரவப்பட்டத்தை எப்படியேனும் நம் வாசலுக்கு கொண்டு வந்துவிடும்.’ (சிந்தித்தேன் சிந்தியதேன்)

திருவாடுதுறை ஆதீனம் மூலமாக சைவ சித்தாந்த வகுப்புகளுக்கு போய் கற்று வருகிறேன். ஒரு மனிதனை நல்வழிப்படுத்துதல் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்தை எல்லோருக்கும் ஏற்ற வகையில் எளிமைப்படுத்தித் தரும் முயற்சியில் இருக்கிறேன்.

ஆன்மீக ஈடுபாடு பற்றி சிலர் ஆச்சர்யமாக பார்க்குறாங்க. ‘நான் ஒரு லூசு மாதிரியே பேசத் தீர்மானித்து பிதற்றத் தொடங்கியதும்தான் கண்ணாரக் கண்டு களித்தேன் எனக்கு அறிவுரை வழங்க வந்த அத்தனை லூசுகளையும்.’ (சிந்தித்தேன் சிந்தியதேன்)

சதா சர்வ காலமும் ஆன்மீக தேடலிலேயே இருந்து வருவதால் வேறு எதையும் நினைக்கவோ செய்யாவோ முடியல. என் பிள்ளைக்கு பாடமெடுப்பதோ, பள்ளிவிழாக்களுக்கு தயார் செய்வதோ, நண்பர்களோடு கேளிக்கை விருந்துகளுக்கு ஏற்பாடு செய்வதோ, என்று எதுவுமே செய்யாத இந்த பொறுப்பற்ற தாய் தெரியாமல் ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தந்துவிட்டேன். அது சிவாயநம.

இப்போ இருக்குற காலத்துல குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம்.’தொலைக்காட்சியில் ஆணுறைக்கான விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க என் எட்டு வயதுமகன் என்னிடம் திரும்பி என்னம்மா அர்த்தம் என்ன அர்த்தம் என்று விடாமல் கேட்க நான் அமைதியாவே உட்கார்ந்திருப்பேன். அடி வயிற்றில் நெருப்போடு.

எத்தனையோ முறை கேட்டும் பதில் வராததாலோ என்னவோ இப்போதெல்லாம் அந்த விளம்பரம் வரும்போது அதை மவுனமாக கவனிக்கிறான். இப்போதுதான் நான் உணர்கிறேன் என் அடிவயிற்று நெருப்பு நெஞ்சுவரை பரவுவதை!’(சிந்தித்தேன் சிந்தியதேன்)

அம்மா (வள்ளியம்மை) வைணவ கல்லூரியில படிச்ச தமிழ்ப் புலவர். என்னை சென்னைக் கல்லூரியில பி.ஏ. ஆங்கிலம் படிக்க வச்சாங்க. அவுங்களும் 45 வயதுல இறந்துட்டாங்க.

அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல இந்த சமயத்துலதான் அம்மா இறந்த ஆறு மாசத்துல அவர(மனோகரன்) கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

உன் உயரத்துக்கு ஏற்ற மாதிரி, வாயாடித்தனத்துக்கு ஏற்ற மாதிரி யாரு வரப் போறாரோன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. எனக்கு ஏற்ற மாதிரியே ஆர்டர் பண்ணி வந்தது மாதிரி அவர் எனக்கு கிடைச்சிருக்கிறார்.

இந்த உலகத்தில் மிக முக்கியமான ஒன்றைப் போல என்னை நினைக்கிறார். பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்.’’

-என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பூனைக்குட்டி தாவி வந்து அவர் மடியில் உட்கார்ந்து கொண்டது.

தூக்கி எடுத்து முத்தமிட்டார். பின்னர் மடியில் போட்டுக் கொண்டு தடவிக்கொடுத்தார்.

‘’அப்பாவுக்கு நாய் மேல் ரொம்ப பிரியம். அவர் வளர்த்த நாய்க்கு‘சீசர்’ன்னு பேர் வச்சிருந்தார். சீசர் இறந்த பிறகு அதன் சோகம் தாங்காமல்‘என் இனிய சீசர்’ என்று கவிதை எழுதி அந்த கவிதையில் சீசரின் பிரிவுத் துயரத்தை சொல்லியிருந்தார்.

எனக்கு பூனைகள் மேல் பிரியம். நான் விஷ்வாவை (குழந்தையை) கொஞ்சுவதைவிடவும் இந்த மியாவ்வைத்தான்.அதிகம் கொஞ்சுவேன். அதனால் விஷ்வா அடிக்கடி சண்டை பிடிப்பான்.

அப்பாவை எல்லோரும் குழந்தை மனசுன்னு சொல்லுவாங்க. நிறைய நேரங்களில் அவர் குழந்தை மாதிரித்தான் நடந்துகொண்டிருக்கிறார்.

ஒரு நாள்(1962) மதியம் தூங்கி எழுந்தவருக்கு தீடீர் எண்ணம் வந்திருக்கு. நாம இறந்திட்டா என்ன நடக்கும், எல்லோரும் என்ன பண்ணுவாங்க’ன்னு பார்க்கஆசைப்பட்டிருக்காங்க.

உதவியாளரை அழைத்து திடீரென்று இறந்துவிட்டதாக எல்லோருக்கும் தகவல் அனுப்புன்னு சொல்லியிருக்கிறாங்க. அவரும் அப்படியே செய்ய, அலறி அடிச்சுக்கிட்டு எல்லோரும் வீட்டுக்கு வந்துட்டாங்களாம்.

எம்எஸ்வி சார், இயக்குநர் ஸ்ரீதர் சார் என்று சினிமா, அரசியல்பிரபலங்கள் அத்துனை பேரும் வந்துட்டாங்களாம். அவரோட உடம்பு இன்னும் வரல ஆஸ்பத்திரியில இருக்குன்னு சொல்லவும் எம்.எஸ்.வி.சார் அழுதிருக்கிறார். ஸ்ரீதர் சார் முகம் பொத்தி அழுதிருக்கிறார்.

இதையெல்லாம் மாடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த அப்பா இதுக்கு மேலயும் தாமதிக்கக்கூடாதுன்னு இறங்கி வந்திருக்காங்க.

என்னய்யா இப்படி பண்ணிட்டேன்னு அழுதவர்கள் எல்லோரும் பொய்க்கோவம் காட்டியிருக்கிறார்கள்.

அம்மாவும் சரி, அவரும்(கணவர்) சரி, என்னைப் பற்றி தெரிந்தவங்களும் சரி, என்னை குழந்தைன்னுதான் சொல்லுவாங்க. என்னை புதுசா பார்க்குறவங்க நான் பண்ணும் சேட்டைகளைப் பார்த்துட்டு ஆள் வளர்ந்த அளவுக்கு மெச்சூர் இல்லேன்னு சொலிட்டுப் போவாங்க.

அந்த அளவுக்கு இருக்கும் என் குழந்தைத்தனம். நானும் என் விஷ்வாவும் சேர்ந்துட்டா போதும் வீடே ரெண்டாகும். இந்த குழந்தைகளையும் வச்சிக்கிட்டு சமாளிக்க முடியலியேன்னு அவரு தலையில கையை வச்சிக்கிட்டு உட்கார்ந்திடுவாரு.

‘ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ பார்வையிலே குமரியம்மா பழக்கத்திலே குழந்தையம்மா நீ!’ என்று அப்பா எழுதிய பாடல் எனக்காவே எழுதப்பட்டிருக்கு என்று சொல்வாங்க அம்மா. இப்போ அவரும் அப்படித்தான் சொல்றாரு.

மேடைகளில் நான் பேசுவதை பார்த்துவிட்டு எப்படி சமாளிக்கிறீங்க என்று அவரிடம் எல்லோரும் கேட்கிறார்களாம். அவருக்குத்தானே தெரியும் நான் வீட்டில் குழந்தைன்னு’’ பெரிதாக சிரித்தார். தந்தையைப் போலவே தன்னையும் அரசியலுக்கு வரும்படி அழைக்கிறார்கள் என்றார். அழைப்புகள் இருந்தும் தான் இன்னும் வராமல் இருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார்.

‘’அப்பா 1949ல் திமுகவில் ஆரம்ப கால உறுப்பினர். 1957ல் திமுக சார்பில் திருக்கோஷ்டியூர் இரண்டாவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துவிட்டார். காங்கிரஸிலும் இருந்தார்.

அப்பாவிடம் சகிப்பு தன்மையும் கொஞ்சம் பணிந்து போகும் குணமும் இருந்தது. அதனால் அவர் அரசியலில் இருந்தார். என்னிடம் பணிந்து போகும் குணம் இல்லை. நான் எப்படி அரசியலுக்கு வரமுடியும்?

மேலும், அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லோரையும் ஏகத்துக்கும் புகழ்ந்துதள்ளனும், கூழைக்கும்பிடு போடனும். இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது.

‘நான் ஒரு ஞானக்குழந்தை/நான் ஒரு தெய்வப்பிறவி/நான் ஒரு வள்ளலின் வழித்தோன்றல்/நான் மனிதருள் ஒரு மாணிக்கம்/என்ன கைகொட்டி சிரிப்பீரோ?/பிறன் ஒருவனை நான் இப்படியெல்லாம் புகழ்ந்து அதன் மூலம் ஏதோ ஒன்றை அடைந்து அதன் வழியே நான் மகிழ்ச்சி பெறுவேன் என்று இருந்தால் அந்த மகிழ்ச்சியை என்னை நானே புகழ்ந்து பெற்றுவிடப்போகிறேன்.

இதற்கு பேர்தான் தன்னையே நேசிக்கும் கலை. இது கைவரப் பெற்றால் உலகையே ஆளும் மகாராஜாவைக் கூட உனக்கு மேற்பட்டவனாகப் பார்க்கத் தோன்றாது. இதுவே மனித குலம் பெறவேண்டிய தனித்துவம்.

எந்த நாய் இன்னொரு நாய்க்கு பாராட்டு விழா எடுக்கிறது? பன்றிக்கு பன்றி சால்வையா போர்த்திவிடுகிறது? மாறுங்கள் மனிதர்களே, இல்லையேல் மாறிவிடும் மிருகங்கள்.(சிந்தித்தேன் சிந்தியதேன்)

இதனால்தான் நான் அரசியலுக்கு வரத்தயங்குகிறேன். மற்றபடி அரசியல் குறித்த அறியாமை எல்லாம் என்னிடம் இல்லை’’ என்றார்.

தனது அறியாத வயதில் தந்தை இற்ந்துவிட்டார் என்றும் அவர் இன்று இருந்திருந்தால் இரண்டு கேள்விகள் கேட்டிருப்பேன் என்றும் பேச்சின் திசையை மாற்றினார்.

‘’ஆண் வேசி வீட்டுக்கு போய்விட்டு வந்தாலும் நல்ல மனைவி இன்முகம் காட்டுவாள் என்று அப்பா எழுதியிருக்காங்க. இது ஆணாதிக்கம்.

ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண் என்பவள் இப்படித்தான் இருக்கனும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. சமமான பார்வை வேண்டும்.

அப்புறம் ஒண்ணு, ‘என்னதான் நெஞ்சக்காயங்களுக்கு மருந்து போட்டு விடுகிறது என்றாலும், உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்பதும் ஒரு வகை வக்கிரம்தானே!(அப்பா மன்னிப்பீராக) என்று தான் எழுதி வரும் சிந்தித்தேன் சிந்தியதேனிலிருந்து சொன்னார்.

தந்தை செய்ய வேண்டும் என்று நினைத்து காலனின் அழைப்புக்கு இணங்கி ஓடிவிட்டதால் முடியாமல் போன காரியங்களை தான் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

‘’பதினான்கு வயதில் நான் எழுதிய ‘கிருஷ்ண கானம்’ நூல் வெளியீட்டு விழா சென்னை சோழா ஓட்டலில் நடந்தது. இந்த விழாவுக்கு ம.பொ.சி. ஐயா வந்தார்.அப்போது அவர் என்னிடம், ‘அப்பா எனது வாழ்க்கையை எழுதப் போவதாக சொன்னார். அதில் அவர் அதிகம் ஆர்வம் வைத்திருந்தார். எனக்கு கொடுப்பினை இல்லை. அதான் அதற்குள் அவர் போய்விட்டார் என்றார்.

அதனாலென்ன நான் இருக்கிறேனே என்றேன். அவரும் உன்னால் இது முடியுமா என்றெல்லாம் கேட்கவில்லை. எழுது என்றுவிட்டார்.

அவர் கூடவே ஒரு வருடம் இருந்து அவர் சொல்லச் சொல்ல எல்லாவற்றையும் கேட்டு தொகுத்து ‘ம.பொ.சி. ஒரு சகாப்தம்’ என்று எழுதினேன். அதுவும் மரபுக் கவிதை வடிவில் எழுதினேன்.

நீ எழுதல, உன்னை கண்ணதாசன் எழுத வச்சிருக்கிறாரு என்று அவர் என்னை பாராட்டினார். அது உண்மைதான். அந்த பதினான்கு வயதில் இவ்வளவு பெரிய விசயங்களையும் பொறுமையாக கேட்டறிந்து எழுதும் பக்குவம் எனக்கு எப்படி வந்தது? அது எனக்குள் இருந்து அப்பா எழுதியது.

அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் எழுதிய அப்பா அடுத்து குரான் பற்றி எழுதும் தீவிரத்தில் இருந்திருக்கிறார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

அந்த குறையை நான் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

திருக்குறளில் காமத்துப்பாலுக்கு எளிய வடிவில் புதுக்கவிதை நடையில் விளக்க உரை எழுதியிருக்கும் (1977) அப்பா, அடுத்து அறம்,பொருள் இரண்டையும் எழுதி முடிக்க பகவான் ஆரோக்கியத்தை எனக்கு அருள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் அப்பாவுக்கு பகவான் ஆரோக்கியத்தை அருளவில்லை. அறம், பொருள் இரண்டுக்கும் நான் விளக்க உரை எழுதப்போகிறேன்’’ என்றவர், தந்தை தயாரிப்பாளராக இருந்து மாலையிட்ட மங்கை, சிவகங்கை சீமை, கவலை இல்லாத மனிதன்,வானம்பாடி, ரத்தத்திலகம், கறுப்புப்பணம் என்று நிறையப்படங்களை தயாரித்தார்.

அதை நினைவுபடுத்தியதோடு இல்லாமல் நாமும் அப்படிச் செய்வோம். அதுக்கான ஆரம்பம்தான் இது என்று தன் கணவர் ரஷ் ஹவர், ஜாஸ்த்ரி, கேட் உமன் என்று வெளிநாட்டு படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வருதாக குறிப்பிட்டார்.

‘5000 திரைப்பாடல்கள், காவியங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,நாடகங்கள், புதினம், சுயசரிதை என நூற்றுக்கும் வேற்பட்ட நூல்களை படைத்திருக்கிருக்கும் கண்ணதாசனுக்கு கண்ணதாசன் பல்கலைக்கழகம், கண்ணதாசன் அறக்கட்டளை என்றெல்லாம் கொண்டு வர வேண்டும்’ என்று சொன்னதோடு இல்லாமல் அதற்கான முயற்சியில் தன் கணவர் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தந்தை பல பரிணாமங்களில் வாழ்ந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் ஒரே கோணத்திலேயே பார்க்கிறார்கள் என்று குறைப்பட்டுக்கொண்டார்.

‘’அப்பா ஒரு திறந்த புத்தகம். எதையும் அவர் ஒளித்து வைக்கவில்லை. மது, மாது என்கிற கோணத்திலேயே அவரை பெரும்பாலும் பார்க்கிறார்கள். கண்ணதாசன் காரைக்குடி பேரைச் சொல்லி ஊத்திக் குடி’ன்னு பாடுறாங்க.

அவர் பிறந்த சிறுகூடல்பட்டியில் சின்னவங்க, பெரியவங்க எத்தனையோ பேர் வந்து மண்ணை தொட்டு கும்பிடுவதை நானே பல முறை நேரில் பார்த்திருக்கிறேன்.’’என்றார்.

தன் தந்தை இறந்தபோது நாலரை வயதில் தான் செய்த அறியாமையை எண்ணி இப்போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

‘’அமெரிக்காவில் சிகாகோ ஆஸ்பத்திரியில் வச்சிருந்தாங்க அப்பாவை. (24.71981) இரண்டு மாசத்துக்கு பிறகு(17.10.1981, சனிக்கிழமை, இந்தியநேரப்படி 10.45க்கு) இறந்திட்டார்.

விமானத்தில் அப்பாவின் சடலத்துடன் அம்மாவோடு நானும் வந்திருக்கிறேன். அப்பாவின் சவப்பெட்டி மேல் ஏறி விளையாடியதும் அம்மா அழுதபடியே அதட்டியிருக்கிறாங்க.

சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும் (20.10.1981)பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்திருக்கிறார்கள். போட்டோ ப்ளாஷ்களுக்கு சிரித்திருக்கிறேன்.

அந்த நாலரை வயதில் நான் ரொம்ப புஷ்டியாக இருந்திருக்கிறேன். அதனால்தான், கண்ணதாசன் சடலத்துடன் அவரது பத்து வயது மகள் வந்தார் என்று பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள்’’ என்றவர், தான் அர்த்தமற்ற 15வது குழந்தையாக அப்பாவுக்கு பிறக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

நீ எழுதல சாலா, அப்பாதான் உனக்குள் இருந்து எழுதுறாருன்னு அம்மா சொன்னதை இப்போதுதான் உணர்கிறேன். எழுத ஆரம்பிக்கும் வரை என் மனநிலை வேறு. எழுதணும் என்று உட்கார்ந்துவிட்டால் என் மனநிலை எனக்கே ஆச்சர்யாமக இருக்கும். எனக்குள் அசரீரியாய் இருந்து என்னை எழுதவைப்பதும் அப்பாதான்.

அப்பா ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்ன நிறைய விசயங்கள் நடந்திருக்கு. 18 வயசில சாலா நல்ல நிலையில இருப்பான்னு சொல்லியிருக்காங்க அப்பா. அது நடந்துச்சு.

எழுத்தாளர்களும் பேச்சாளர்களுமான நெல்லை கண்ணன் ஐயாவும், தமிழருவி மணியன் ஐயாவும் என் மேடைப் பேச்சைக் கேட்டு ‘அப்பா பேசுனது மாதிரி இருக்குன்னு’ சொல்லியிருக்காங்க.

எத்தனையோ பேர் என்னை ‘நீ கண்ணதாசனின் மிச்சம்’னு சொல்லியிருக்காங்க. அதை காப்பாற்றணும்னு உணர்கிறேன்.

அப்பா அமெரிக்கா செல்லும்போது அம்மாவிடம் நான் திரும்பி வருவேன் என்பது நிச்சயம் இல்லைன்னு சொன்னவங்க சாலாவ பத்திரமா பார்த்துக்கோன்னு சொன்னதோடு மட்டுமில்லாம, ‘சாலாவுக்கு நான் வானவீதியில் இருந்து வாழ்த்துப்பா பாடிக்கிட்டே இருப்பேன்’ன்னு சொல்லியிருக்காங்க.

எழுதி முடித்துவிட்ட போதெல்லாம், நல்ல விசயங்கள் பேசி முடித்துவிட்டபோதெல்லாம், நல்ல விசயங்கள் செய்து முடித்துவிட்ட போதெல்லாம், மனசுக்கு சந்தோசமான நேரத்துல எல்லாம் நான் வான வீதியை பார்க்கத் தவறுவதில்லை’’என்று நெகிழ்ந்தவர் நெஞ்சோடு பூனைக்குட்டியை அணைத்துக் கொண்டு அண்ணாந்து பார்த்து கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொண்டார்.

(நன்றி – நக்கீரன்)

கண்ணதாசன் கவிதை


பொதுவாக எனக்கும் கவிதைக்கும் கொஞ்ச தூரம். பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்றால் அனுப்பிய நண்பர் விமலை வாழ்த்திக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் திட்டிக் கொள்ளுங்கள்!

ஓவர் டு கண்ணதாசன்!

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான் !

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான் !

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான் !

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான் !

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான் !

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான் !

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான் !

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான் !

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான் !

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன
இறந்து பாரென இறைவன் பணித்தான் !

அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன் !

ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான் என்றான்

தர்மம் எங்கே?


சிவாஜியின் சொந்தப் படம் போலிருக்கிறது. சிவாஜி, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ், நம்பியார், குமாரி பத்மினி, ராமதாஸ், செந்தாமரை நடித்தது. இசை எம்எஸ்வி. வசனம் சக்தி கிருஷ்ணசாமி. இயக்கம் திருலோகச்சந்தர். 1972-இல் வந்திருக்கிறது.

ஒரு கற்பனை நாட்டில் படம் நடக்கிறது. நம்பியார் கொடுமைக்கார ராஜப் பிரதிநிதி. (ராஜாவை கடைசி வரைக்கும் காணவில்லை.) சிவாஜி கொஞ்சம் அப்பாவி கிராமத்தான். ஊர்க்காரர்கள் ராணுவத்தின் கொடுமையைப் பற்றி நம்பியாரிடம் முறையிடப் போகும்போது சிவாஜியையும் கூட்டிக் கொண்டு போகிறார்கள். நம்பியார் என்ன சாட்சி என்று கேட்க, எல்லாரும் பயப்படுகிறார்கள். சிவாஜி முன் வந்து நான் சாட்சி சொல்கிறேன், என் கண்ணால் பார்த்தேன் என்கிறார். நம்பியார் எல்லாரையும் சரி போங்கள் என்று விரட்டிவிட்டு சிவாஜியை அப்புறம் கைது செய்கிறார். சிவாஜி தப்பிக்கிறார். ஜெயலலிதா காப்பாற்றுகிறார். ஜெ இருக்கும் நாடோடி கும்பல் அவருக்கு ஆதரவு தருகிறது. மைத்துனர் முத்துராமன் அவரோடு சேர்ந்துகொள்கிறார். கலகம், புரட்சி, சிவாஜி நம்பியாரை விரட்டிவிட்டு புது ராஜபிரதிநிதி ஆகிறார். தனக்குப் பதவி தரவில்லை என்ற கோபத்தில் முத்துராமன் சிவாஜிக்கு எதிராக கிளம்புகிறார். கடைசியில் அவர் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி, க்ளைமாக்சுக்காக செஞ்சி போய் சண்டை போட்டு, சுபம்!

மூன்று விஷயங்கள் நன்றாக இருந்தன.

சிவாஜி ராணுவத்தின் கொடுமையைப் பற்றி சாட்சி சொல்ல வரும்போது நம்பியார் என்ன ரியாக்ஷன் காட்டுகிறாரோ அதே ரியாக்ஷன் சிவாஜி முத்துராமனின் கழகத்தைப் பற்றி ஒருவன் சாட்சி சொல்லும்போதும். பதவி மனிதனை மாற்றுகிறது என்று அருமையாக டெவலப் செய்திருக்கலாம். ஆனால் எழுபதுகளில் சிவாஜி நெகடிவ் ரோல்களைத் தவிர்த்தார். ரொம்ப நல்லவராகத்தான் வருவார். அதனால் ஒரு சீனோடு இது முடிந்துவிடுகிறது. இருந்தாலும் திரைக்கதை எழுதியவருக்கு ஒரு சபாஷ்!

முத்துராமன் தூக்குமேடையில் இருக்கும்போது மனோகரா ஸ்டைலில் சிவாஜி வசனம் பேசுகிறார். நல்ல வசனங்கள். சக்தி கிருஷ்ணசாமிக்கு ஒரு சபாஷ்!

சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் என்ற பாடல் அருமை. அருமையான சந்தம். எழுதிய கண்ணதாசன், இசை அமைத்த எம்எஸ்வி, பாடிய டிஎம்எஸ், சிவாஜியின் முதுகில் ஒரு பெரிய பூக்கூடையை வைத்து வித்தியாசமாக படமேடுத்திருந்த ஒளிப்பதிவாளர்+இயக்குனர்+உடை இன் சார்ஜ் எல்லாருக்கும் ஒரு சபாஷ்! சாரதா, நீங்கள் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஓபனிங் சாங் என்று இந்த காலத்தில் வருவதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள். இவ்வளவு நல்ல பாட்டுக்கு ஆடியோ வீடியோ எதுவும் கிடைக்கவில்லை.

இதைத் தவிர பள்ளியறையில் வந்த புள்ளி மயிலே என்ற கொஞ்சம் பிரபலமான பாட்டு ரிச்சாக படமாக்கப்பட்டிருக்கிறது.

மற்றபடி படத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நாகேஷ் காமெடி, சண்டைக் காட்சிகள் எதுவும் தேறவில்லை. நம்பியார் வழக்கம் போல கையைப் பிசைகிறார். அம்மாவாக வருபவர் உருகி உருகி வசனம் பேசுகிறார். சிவாஜி அங்கங்கே ஓவர் ஆக்டிங் செய்கிறார். எல்லாரும் ஹிப்பி ஸ்டைலில் வருகிறார்கள்.

சிவாஜி ரசிகர்கள் நிச்சயமாக பார்க்கலாம். மற்றவர்களுக்கு கொஞ்சம் சினிமா பைத்தியம் இருக்க வேண்டும்.

கொடி மலர்


1966ல் ஸ்ரீதர் டைரக்‌ஷனில் வந்த திரைப்படம்.  கதை மாந்தர்களைக் காட்டிலும் கதையை நம்பி எடுக்கப்பட்டத் திரைப்படம். ஸ்ரீதர் பொதுவாகவே அப்படித்தானே. அவருடைய அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் சில திரைப்படங்கள் இந்த இலக்கணத்தைப் பின்பற்றாமல் போனாலும்  அதற்கு முன்னர் வந்த திரைப்படங்களின் தரத்தை நாம் எப்படி சீர்தூக்கிப் பார்த்தாலும் சோடை போனதில்லை. கொடி மலர் அப்படிபட்ட தரமான ஒரு திரைப்படம்.

பிரபல நடிகர்கள் – முத்துராமன், ஏவிஎம் ராஜன், நாகேஷ்

பிரபல நடிகைகள் – காஞ்சனா, விஜயகுமாரி, எஸ்.என். பார்வதி, (முத்துராமனின் தாய் காரக்டரரில் நடித்தவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் முக்கிய ரோல். பிற்சேர்க்கை – எம்.வி.ராஜம்மா  – நன்றி அப்துல்)

இசை – எம்.எஸ்.விஸ்வனாதன் பாடல்கள் – கண்ணதாசன்

டைரக்‌ஷன் – C.V.ஸ்ரீதர்

சமூக மாற்றத்தின் விளம்பில் அகப்பட்டுக்கொள்ளும் குடும்பங்கள் எது சரி, எது தவறு, ஏற்றுக் கொள்வதா, ஏற்க மறுக்கவேண்டுமா என்று தடுமாறுகிறார்கள். குடுமபத்தில் சிலர் மற்றங்களை ஏற்றுக் கொள்வதும், சிலர் ஏற்க மறுப்பதும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இந்தப் பிரச்சனையை படம் பிடித்துக் காட்டும் ஒரு முயற்சியை கொடிமலிர்ல் ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார்.

முத்துராமன் அண்ணன். ஏவிஎம் ராஜன் தம்பி. இருவரும் இரு துருவங்கள். ஏவிஎம் ராஜன் கல்லூரியில் படித்து முடித்து வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது ”மாற்றம்” எனும் முன்னேற்றக் கொள்கைகளுடன் நுழைகிறார். பழமைவாதங்களில் மூழ்கியிருக்கும் தாயுடன் போராட்டம் துவங்குகிறது. மிகுந்த வசதி படைத்தவர்களாயினும் இளைய மகனின் மோட்டார் சைக்கிளையே தேவையற்ற ஒரு பொருளாக கருதுகிறார் தாய். அனாவசிய பண விரயம் என்று கருதுகிறார். தன்னிடம் அனுமதி வாங்காமல் மகன் த்ன்னிச்சையாக செயல்படுவதும் மரபிலிருந்து விலகிச்செல்வதும் தாய்க்கு ஒரு சுமையாகத் தெரிகிறது.  மகனோ தாயிடம் மரியாதையாகவும், அன்புடன் இருக்கவேண்டும், ஆனால் தன் வாழ்க்கை தனது, அதில் முடிவுகள் தனதாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் உறுதியாக இருக்கிறார். இதனால் மகனுக்கும் தாய்க்கும் இடைவெளி பெரிதாக உருவாகிவிடுகிறது. அதனால் தாயும் இளைய மகன் நம் கை அடக்கத்தில் இல்லை என்பதை மனதளவில் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் மகன் தன்னைவிட்டுப் போய்விடுவானோ என்ற பயம் இருப்பதால் அவன் வழியில் குறுக்கிடாமலும், மகன் சற்றே ஓங்கிப் பேசினால் பயந்து விடுவதும் இயல்ப்பாகிப் போகிறது.

மூத்த மகன் முத்துராமன். மூத்த மகன் இன்னொரு துருவம். அம்மா மேல் பக்தியே வைத்திருக்கிறார். அம்மா சிறிது மனம் கோணல் அடந்தாலும் துடித்து விடுகிறார். அம்மாவுக்கும் மகன் கையடக்கமாக இருப்பதில் பரம திருப்தி. தம்பியை பல முறை அம்மாவுக்காக கண்டித்தாலும், தம்பியின் மேலும் மிக பாசமாக உள்ளவர். தமபியைப் போல் அல்லாம்ல் மாமாவிடமும் மிகுந்த மரியாதையுடையவர். வீட்டிலேயே வளர்ந்து அம்மா வா என்றால் வருவதும், போ என்றால் போவதுமாக அம்மாவின் நிழலாக இருப்பவர்.

தாய் மாமா நாகேஷ். அவருக்கு அக்காவை விட்டால் பூவாவுக்கு வழியில்லை. இடமும் கிடையாது. அக்காவை காக்கா பிடித்துக் கொண்டும், அக்கா கொடுக்கும் இடத்தினால் கணக்கராக இருந்து வீட்டிலும், வயலிலும் எல்லோரையும் வேலை வாங்குவதும், அக்கா மகன்களையும், அக்காவையுமே தன் சொந்தங்களாகவும் கொண்டிருக்கிறார். தன் பாச்சா இளைய மகனிடம் பலிக்காவிட்டாலும் துணிச்சலாக அக்காவுக்காக பரிந்து இளைய மகனிடம் மோதிக் கொண்டு காலம் தள்ளுகிறார்.

பைக்கில் கிராம்ங்களை வலம் வருகையில் இயற்க்கையிலேயே துணிச்சலான காஞ்சனாவை சந்திக்கிறார் இளைய மகன். காதல் மலர்கிறது. விஜயகுமாரி காஞ்சனாவின் அக்கா. ஊமைப்பெண். இவர்கள் தந்தை பரம் ஏழை. தாய் எஸ்.என்.பார்வதி. ஊமையானாதால் மூத்த மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் வெதும்புகிறார் தந்தை. ஊமைப் பெண்ணை தன் அசட்டு மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார் பஞ்சாயத்து தலைவர்.  காஞ்சனாவின் துணிச்சலாலும், மதி நுட்பத்தாலும் குடுமபம் ஒருவாறு தாக்குப்பிடிக்கிறது. மூத்த மகளுக்கு திருமணம் ஆகாது என்று நினைத்து இளைய மகளுக்குத் திருமணம் செய்யத் தயாராகிறார்கள் பெற்றோர்கள்.

முத்துராமனுக்கு மனம் செய்ய தாய் தயாராகிறார். திருமணம் நடை பெறவிருக்கும் சமயத்தில் தாய் உடல் நலம் குன்றுகிறது. அதனால் தாய் மாமா தலைமையில் சகோதரர் இருவரும் செல்கிறார்கள். மனப்பெண் காஞ்சனா. அதே முகூர்த்தத்தில் விஜயகுமாரி பஞ்சாயத்து தலைவரின் அழுத்தம் தாங்க முடியாமல் அவரின் அசட்டு மகனுக்கு மணம் செய்யத் தயாராகிறார்கள். ஏவிஎம் ராஜனும் காஞ்சனாவும் பரிதவிக்கிறார்கள்.

இந்த இடத்தில் சினிமாத்தனம் புகுந்து விடுகிறது. விஜயகுமரி கிணத்தில் குதிக்க முத்துராமன் காப்பாற்ற பெருந்தன்மையுடம் ஊமைப்பெண்ணை மனம் செய்து கொள்கிறார். அனால் தாய் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. தாய்க்கு எதிராகப் பேசி பழக்கமில்லாத மகன் விஜயகுமாரியை அவர் வீட்டிற்கே அனுப்பிவிடுகிறார் மகன்.

அதன் பிறகு ஏவிஎம் ராஜன் காஞ்சனா திருமணம் நடக்கிறதா, முத்துராமன் விஜயகுமாரியுடன் சேருகிறாரா? என்பதயெல்லாம் வெள்ளித்திரையில காண வாருங்கள் என்று கமர்சியல் தான் போடமுடியும். கதையை கொடுத்துவிட்டேன் (அப்படியெல்லாம் இல்லாமலேயே) என்று ஒரு வாசகர் கொந்தளித்துவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு எங்கேயாவது டிவிடி கிடைக்கமலா போய்விடும்?

”மௌணமே பார்வையாய்” என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் பாட்டு பெரிய ஹிட். எம்.எஸ்.வியின் இசையில் அருமையாக இருக்கிறது.

அம்மா கேரக்டர் யாரென்று கண்டு பிடித்து கூறுபவர்களுக்கு நூறு கைத்தட்டல்கள் இனாம்.

நூற்றுக்கு அறுபத்தைந்து மதிப்பெண்கள்.

கண்ணதாசன் கேள்வி-பதில்கள்


கண்ணதாசன் கேள்வி-பதில்கள் புத்தகத்திலிருந்து…(கோபால் அனுப்பியது)

கே: எனது கிராமத்தில் ஆற்றில் ஒரு பெண் நீராடிக்கொண்டிருந்தாள். அவ்வழியே சென்ற நான், அவளைப் பார்த்துக் கிண்டலாக, “நீராடும் போது உன் உடம்பில் நனையாத இடம் எது?” என்று கேட்டேன். அதற்கு அவள், “நீர் உமது மனைவியோடு உறவாடும்போது அசையாத இடம் எதுவோ, அதுவே எனக்கு நனையாத இடம்” என்று பதில் கூறினாள். என் மனைவியிடம் கேட்டதில் அசையாத இடம் எதுவென்று அவளுக்கும் தெரியவில்லை. பல தமிழ்ப் புலவர்களிடம் கேட்டதில் அவர்களுக்கும் தெரியவில்லை. தயவு செய்து என் சந்தேகத்தைத் தெளிவுபடுத்துங்கள்.
ப: உடலுறவில் ஒரு இடம் அசையவில்லை என்றால், கணவன் பலஹீனன் என்று அர்த்தம். குளிக்கும்போது ஒரு இடம் நனையவில்லை என்றால், அவள் ஒழுங்காகக் குளிக்கவில்லை என்று அர்த்தம். நீர், அவள் குளிப்பதைக் கேலி செய்தீர், அவள் உம் ஆண்மையையே கேலி செய்துவிட்டாள்.

கே: ‘பெண்களுக்கு ஐந்து இடங்கள் ரசிக்கவேண்டியவை, மூன்று இடங்கள் சுவைக்க வேண்டியவை’ – இதற்கு விளக்கம் தேவை.
ப: நான் சொன்னதையே என்னிடம் திருப்புகிறீரா? விளக்கம் கேளும்; கூந்தல், நெற்றி, கழுத்து, இடை, பாதம் – இவை ரசிக்க வேண்டியவை, உதடு, மார்பு, ஜன்னேந்திரியம் – இவை சுவைக்க வேண்டியவை.

கே: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான நீராடும் கடலுடுத்த என்று தொடங்கும் பாடல், இசைக்காகப் பிரிக்கப்பட்டதில் குறை உள்ளதாக தாங்கள் பேசியதாக்க் கேள்விப்பட்டேன், உண்மையா? ஆஸ்தான கவிஞர் என்ற முறையிலே ஒரு புதிய பாடலைத் தாங்கள் ஏன் எழுதக் கூடாது?
ப: புதிய பாடல் எழுதித் தருவதாகத்தான் ஏற்கனவே அறிவித்து உள்ளேன். ஆனால் இன்றைய அரசு தமிழ்த் தாய் வாழ்த்தை ஒரு பிரச்சினையாக்க விரும்பவில்லை. இப்போதுள்ள பாடலைக் கேட்டால் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையே கண்ணீர் வடிப்பார். முதல் பாடலில் இரண்டாம் பாடலின் இரண்டு வரிகளைத் தூக்கிப் போட்டு, அதையும் தலைகீழாகத் தூக்கிப் போட்டிருப்பது மிகவும் கொடுமை. பெரியவர்கள் எழுத்தில் சிறியவர்கள் கை வைத்தால் இந்தக் கதிதான் வந்து சேரும்.

கே: நீங்கள் குறுகிய நேரத்தில் எழுதிய பாடல் எது?
ப: நெஞ்சில் ஓர் ஆலயம் பட்த்தில் வரும் முத்தான முத்தல்லவோ

கே: கேரளத்தவரிடையே உள்ள தோழமை உணர்ச்சி தமிழர்களுக்கு இல்லை. தமிழர்கள் அவ்வுணர்வைப் பெற தாங்கள் கூறும் வழி என்ன?
ப: எந்தத் தலைமுறையிலும் தமிழனுக்கு அந்த உணர்ச்சி வராது. இது ஒரு சொரணை கெட்ட ஜாதி, கீழே விழுந்தவனை ஏறி மிதிக்குமே தவிர, கை கொடுக்க மனம் வராது. மேல்நாட்டு ஆசிரியர் ஒருவர் இந்திய இனங்களை வருணித்தார். பஞ்சாபியரை, ‘ஒட்டகம் மாதிரி’ என்றார், அப்படி உழைப்பார்களாம். ராஜஸ்தானியர்களை ‘சிங்கம்’ மாதிரி’ என்றார். வங்காளிகளை ‘பந்தயக் குதிரை’ என்றார். கேரளத்தவரை ‘கலைமான்கள்’ என்றார், தமிழனை மட்டும் ‘நாய் மாதிரி’ என்றார். காரணம் சொல்லும்போது ‘தமிழன் வேலை பார்க்கும் இட்த்துக்கு விசுவாசமாக இருப்பானாம், சக தமிழனைக் கண்டால் குரைப்பானாம். நாய் அப்படித்தானே?

கே: இலங்கை வானொலி நிலயையம் 15.10.1978 அன்று ஒலிபரப்பிய ‘பொதிகைத் தென்றல்’ பகுதியில் தங்களின் பாடலான மனிதன் நினைப்பதுண்டு (அவன்தான் மனிதன் படப் பாடல்) பாடலில் ‘நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்’ என்ற வரியில் ‘நாலு விலங்குகள்’ என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று விளக்கம் அறிய உங்களுக்கு வானொலியில் வேண்டுகோள் விடுத்தார்கள். விளக்கத்தை நாங்களும் அறிய ‘கண்ணதாசன்’ இதழில் பதில் தருமாறு வேண்டுகிறேன்.
ப: ‘நாலும் தெரிந்தவன்’ என்கிறார்களே. அதற்குப் பொருள் என்ன? ‘நாலு பேருக்கு நல்லவன்’ என்கிறார்களே அதற்குப் பொருள் என்ன? நான் குறிப்பிடும் நான்கும் நான்கு திசைகள். எந்த திசையிலும் போக முடியாமல் விலங்குகளை மாட்டிக் கொண்டு தவிக்கிறோம் என்பதே அதன் பொருள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கோபால் பக்கங்கள், ஆளுமைகள்

நாகேஷ்–25


அனுப்பிய விமலுக்கும், விகடனுக்கும் நன்றி!

நாகேஷ் மாறும் உடல் மொழி, ஏறி இறங்கும் குரல் ஜாலம், தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!

  1. பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்.
  2. பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா.
  3. பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
  4. இளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
  5. முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
  6. கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலர வைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!
  7. ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால் தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
  8. இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
  9. முதல் படம் `தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர். ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!
  10. `அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்!
  11. முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
  12. எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
  13. திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
  14. நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்!
  15. `அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்!
  16. இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்.
  17. டைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.
  18. பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
  19. `சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி.
  20. `நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.
  21. பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’
  22. `தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்!’
  23. தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.
  24. இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்.
  25. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாகேஷ் பக்கம்

நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)


சாரதா நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் பற்றி படித்த ஒரு விஷயத்தை இங்கே எழுதுகிறார். ஒரு கல்லூரிப் பேராசிரியை சொன்னதாம். பேராசிரியையின் வார்த்தைகளில்:

ஒரு முறை சென்னை வானொலியில் ‘இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்’ என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். நான் உரை நிகழ்த்தியபோது, இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி, கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது. ஒலிபரப்பாகி சுமார் அரை மணி நேரம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, எடுத்துப்பேசினேன். மறு முனையில் “நான் கண்ணதாசன் பேசுகிறேன்” என்று கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

கண்னதாசன் தொடர்ந்து பேசினார். “சற்று முன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன். மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன். பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள், உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன. ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது. அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.

உதாரணமாக, திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

ஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா?” என்று கண்ணதாசன் கேட்டார். அவர் சொன்னதைக் கேட்டது முதல் கண்னதாசன் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது”.

கவியரசர் சொன்னது ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தானே!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள், சாரதா பக்கம்

பல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) – பாடல் பிறந்த கதைகள் 7


சாரதா இன்னொரு பாடல் பிறந்த கதையை அனுப்பி இருக்கிறார்.

தன்னிடம் ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பரொருவர் வைத்திருந்த வெளிநாட்டுக்கார் மீது கண்ணதாசனுக்கு ஆவல். நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதைக் கேள்விப்பட்ட கவிஞர், அதைத் தனக்கே தரவேண்டுமென்று விலையும் பேசிவிட்டார். முழுப் பணமும் கொடுக்க கண்ணதாசனிடம் பணமில்லை. எனவே மூன்றில் ஒரு பங்கு பணம் அப்போதே தருவதாகவும், பாக்கியை விரைவில் தந்துவிடுவதாகவும் சொல்ல ந்ண்பரும் சம்மதித்தார். அது முதல் கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே கனவு காணத் துவங்கினார். மறுநாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து வருவதாக ஏற்பாடு.

ஆனால் முதல் நாள் அந்த நண்பரின் மற்ற நண்பர்கள் சிலர், ‘கண்ணதாசன் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப மோசமென்றும், அவருக்கு ஊரைச் சுற்றி நிறைய கடன் இருப்பதாகவும், எனவே நண்பரின் பாக்கிப் பணம் வசூலாவது கடினம்’ என்றும் சொல்ல நண்பர் உஷாரானார்.

‘இந்தியாவின் ஜனாதிபதியைப் போல சம்பாதித்து ம்கூட, இந்தியாவைப் போல கடன் வாங்கியவர் கண்ணதாசன்‘ என்று கவிஞரைப் பற்றி ஒரு சொல்வழக்கு உண்டு.

மறுநாள் காலை கவிஞர் குளித்து, உணவருந்திவிட்டு, வண்டியை எடுத்து வர தன் ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குச் செல்ல, நண்பரோ குண்டைத் தூக்கிப் போட்டார். ‘அந்த கார் தனக்கு ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் விருப்பமில்லை’ என்றும் கூற, கவிஞர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். தான் ஆசைப்பட்டு தனதாகவே நினைத்திருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் மனதில் தங்கியிருந்தது.

அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு, இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்த ‘பணக்கார குடும்பம்’ படத்துக்கு ஒரு சோகப் பாடல் எழுத அமர்ந்த கவிஞருக்கு அன்று காலை நடந்த சம்பவம் மனதைக் குடைய, பல்லவியை இப்படி துவங்கினார்…

பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக – நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக

சூழ்நிலைகளை தன் பாடலுக்குள் புகுத்திக்கொள்வதில் கவிஞருக்கு நிகர் அவர்தான்.

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) – பாடல் பிறந்த கதை 6


இந்த சீரிஸில் என் பங்குக்கு ஒன்று.

நல்லி குப்புசாமி செட்டியார் எம்எஸ்விக்கு ஏதோ விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் இதை சொல்லி இருக்கிறார் – இரவெல்லாம் ரெகார்டிங் முடித்துவிட்டு எம்எஸ்வி களைத்துப் போய் தூங்கிவிட்டாராம். ஆனால் அவருக்கு காலை ஏழு மணிக்கு கண்ணதாசனோடு அடுத்த ரெகார்டிங் இருந்திருக்கிறது. எம்எஸ்வி எழுந்து அவசர அவசரமாக ஸ்டுடியோவுக்கு போய்ச் சேரும்போது ஒன்பது மணி ஆகிவிட்டதாம். கண்ணதாசன் ஒரு பேப்பரில் இந்தப் பாட்டை எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாராம் – அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா?

ஹிந்துவிலிருந்து:

After a recording that went on till the wee hours of the morning, the composer came home and hit the sack to catch some sleep before he left for the next recording at 7. When he woke up and rushed to the studio it was 9. But by then Kannadasan, who was to provide the lyric, had left leaving a sheet of paper behind. On it were the lines to be tuned – ‘Avanukkenna Thoongi Vittaan Agapattavan Naan Allava’ – a dig at the composer for having overslept! This and a couple of other anecdotes from MSV’s life, which Nalli Kuppuswamy Chetti narrated, were enlivening.

என்ன படம், யாருக்காவது நினைவிருக்கிறதா?பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள்

தொடர்புடைய சுட்டி:
ஹிந்து கட்டுரை
பெரிய இடத்துப் பெண்

லேட்டஸ்ட் 5 பாடல் பிறந்த கதைகள்:
விஸ்வநாதன் வேலை வேணும்
சொன்னது நீதானா
கேட்டவரெல்லாம் பாடலாம்
என்னை யாரென்று எண்ணி எண்ணி
அண்ணன் காட்டிய வழியம்மா

அண்ணன் காட்டிய வழியம்மா (படித்தால் மட்டும் போதுமா?)


சாரதா பாடல் பிறந்த கதைகள் சீரிஸில் இன்னும் ஒரு பாட்டைப் பற்றி எழுதுகிறார்.

1956ல் பதிபக்தியில் தொடங்கி 1970ல் நடிகர் திலகத்தை வைத்து கடைசியாக இயக்கிய பாதுகாப்பு வரையில் ‘ப’ மற்றும் ‘பா’ வரிசையில் மட்டுமே படங்களை இயக்கிய பீம்சிங் (விதிவிலக்கு: ராஜாராணி, சாந்தி) அந்த வரிசையில் இயக்கிய அற்புதப் படைப்புதான் படித்தால் மட்டும் போதுமா.

1962ல் வெளியான படித்தால் மட்டும் போதுமா படப்பிடிப்பு 1961லேயே நடந்து வந்தது. அப்போதுதான் கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வை விட்டு விலகி (ஏப்ரல் 11, 1961) ஈ.வெ.கி.சம்பத் தலைமையில் தமிழ் தேசியக் கட்சியைத் துவங்கி அதில் முக்கிய பொறுப்பிலிருந்தார். அப்போது அவர் எழுதிய பாடல்களிலும் கட்டுரைகளிலும் தி.மு.க. தலைவர் அண்ணாதுரையை கடுமையாக தாக்கி வந்தார். அந்த நேரம் பார்த்து இயக்குனர் பீம்சிங், படித்தால் மட்டும் போதுமாவுக்காக, தம்பியை ஏமாற்றிய அண்ணனைப் பற்றி பாடல் எழுத வேண்டும் என்று கேட்டபோது, கவிஞருக்கு அண்ணாதுரையை தாக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது என்று மகிழ்ந்து, உடனே விஸ்வநாதன்-ராமமூர்த்தி குழுவினருடன் அமர்ந்து விட்டார்.

அவர் பாடல் வரிகளைச் சொல்லச் சொல்ல இவர்களுக்கு சிவாஜியை ஏமாற்றிய பாலாஜியைப் பற்றித்தான் சொல்கிறார் என்று நினைத்தார்கள். படம் வெளியான பின்புதான் கவிஞர் சொன்னார், அது அண்ணாதுரையை தாக்கி நான் எழுதியது என்று. கவிஞரைப் பொறுத்த வரை அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னுடைய சொந்த விஷயங்களுக்கு சினிமா பாடல்களை பயன் படுத்திக்கொள்வது வழக்கம்.

அண்ணன் காட்டிய வழியம்மா – இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா – என்
கையே என்னை அடித்ததம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்

அடைக்கலம் என்றே நானிருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்

அவனை நினைத்தே நானிருந்தேன் – அவன்
தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
இன்னும் அவனை மறக்கவில்லை – அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை

வீடியோ கிடைக்கவில்லை. யாருக்காவது சுட்டி தெரிந்தால் கொடுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள், சாரதா பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
விஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் 1
சொன்னது நீதானா – பாடல் பிறந்த கதைகள் 2
கேட்டவரெல்லாம் பாடலாம் – பாடல் பிறந்த கதைகள் 3
என்னை யாரென்று எண்ணி எண்ணி – பாடல் பிறந்த கதைகள் 4