மிஸ்டர். சம்பத்


By ஈ. கோபால்

படம் வெளியான தேதி: 13.4.1972,

நடிகர்கள் : சோ, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், பூர்ணம் விசுவநாதன், நீலு, மாலி,  வெண்ணீராடை  மூர்த்தி, செந்தாமரை மற்றும் பலர்…
நடிகைகள்: ஜெயா, மனோரமா, சுகுமாரி, தேவகி, புஷ்பா, ராமலக்ஷ்மி மற்றும் பலர்
திரைக்கதை, வசனம், இயக்கம் : சோ,

மூலக்கதை : ஆர்.எம்.நாராயண்,

பாடல்கள் :கவிஞர் வாலி
பின்னனிப்பாடகர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், எம்.எஸ்.விசுவநாதன் (title song), எஸ்.பி.பாலசுப்ரமண்யம், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா
இசை: எம்.எஸ்.விசுவநாதன்

தன் தந்தையின் சாவுக்குக்காரணமான ‘நேர்மை’யும், அவரின் ஈமச்சடங்குக்கு பணமில்லாமல் பட்ட வேதனைகளையும் பார்த்து, மனது மாறி இனி ஒருபோதும் உண்மையைச் சொல்லி வாழ்வதில்லை என்று சபதமேற்று, பொய்யை ஒரு தொழிலாகவே செய்து வாழ்வு நடத்தும் கதாநாயகனாக வலம் வருகிறார் சோ.

இவரின் நண்பரும், பள்ளிப்பருவ தோழரான மேஜர் சுந்தர்ராஜனை தற்செயலாக ரயில் பயணத்தில் சந்திக்கிறார்.  டிக்கட் பரிசோதகரிடம் தன் சித்தப்பாதான் ரயில்வேயில் ‘ஜெனரல் மேனேஜர்’ என்று கூறி தான் பயணச்சீட்டு எடுக்காத்தை மறைத்து தப்பிக்கிறார்.  நேர்மையானவரும், எதிலுமே ஒரு வித தர்மத்தை
கடைபிடிப்பவருமான மேஜருக்கு சோவின் செயல் அருவெறுப்பைத்தருகிறது.  சோ செய்வது முற்றிலும் தவறு என்று வாதிடுகிறார். அவரின் தந்தையின் பண்பாட்டை கடைபிடிக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

இதை பொருட்படுத்தாத சோ, நேர்மை, தர்மம் என்பதெல்லாம் ஒரு ‘புருடா’ என்றும், அது இக்காலத்தில் சோறு போடாதென்றும் மறுத்துக்கூறி, தன்னுடைய இப்பழக்கத்தை மாற்றப்போவதில்லை என்கிறார்.  இருவருக்கும் ஒரு எழுதாப் பந்தயம் போட்டுக்கொள்கிறார்கள்.  மேஜரோ, ‘காலம் ஒரு நாள் உனக்கு பாடம்
புகட்டும்போது நான் சொன்னது உண்மை என்று நீ அறிவாய்” என்று கூறி ஒருவேளை ஏதாவது ஒரு நிகழ்வில் சோ பிடிக்கப்பட நேர்ந்தாலும், காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறி விடைபெறுகிறார்.

மேஜர் தன் கொள்கையில் வெற்றி பெற்றாரா, சோ வெற்றி பெற்றாரா என்பது மீதிக்கதை. ஒரு சின்ன சூட்கேஸ், ஒரு வெத்தலைப்பொட்டி, ஜிப்பா, ஜொலிக்கும் மூக்குக்கண்ணாடி, நக்கல் கலந்த முகபாவமும் அதனால் பிறக்கும் பேச்சு — இதுதான் இவரது மூலதனம். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பொய்சொல்வது, லாவகமாக அத்தருணத்தை தனது வெற்றியாக்கிக்கொள்வதும் சிரித்துக்கொண்டே காரியத்தை
சாதிப்பதும், குறுகிய நேரத்தில் ஒருவருடைய பலகீனத்தை கணித்து அவர்களை மடக்குவதையும் அநாசயமாக செய்திருக்கிறார் சோ.   நம்மிடம் உள்ள மிகப்பெரிய பலகீனமான சினிமா என்ற போதையை வைத்தே காயை நகர்த்துகிறார்.  இப்பொறியில் மாட்டும், மனோரமா, பூர்ணம் விசுவநாதன், மாலி, வீட்டு உரிமையாளர் நீலு, மரச்சாமான் விற்பனையாளர், என்று அனைவரையும் மிளகாய் அரைப்பது சிரிப்பை
மூட்டுகிறது. ஏதாவது ஒரு எண்ணை சுழற்றி, நடிகையிடம் பேசுவது போல் பாவ்லா காட்ட, ஒரு முறை பயில்வானுக்கு அந்த ஃபோன் போக, அவனோ இவன் யாரென்று கண்டுபிடித்து அங்கு வர, இவர் நீலுவை மாட்டிவிட்டு தப்பிப்பது நல்ல நகைச்சுவை.  வாடகை கொடுக்காமல், காசில்லாமல் வாய் ஜாலத்தை ஒன்றே வைத்து படத்தை ஓட்டுவது சோவின் சாதுர்யம்.

இவரின் பாச்சா முத்துராமனிடம் பலிக்காமல், மனோரமாவை பேச்சில் மயக்கி விழவைப்பது சுவையான பகுதி. இதில் மனோரமா இவர் மேல் காதல் வயப்பட்டு, இவரின் கடின வேலையை சுலபமாக்க, மற்றவர்களும் வலையில் விழுகிறார்கள். சினிமாவினால் ஈர்க்கப்படும் நான்குபேரை வைத்துக் கொண்டு கதையை நகர்த்தியிருப்பது அலுப்பை சில சமயம் தந்தாலும், காட்சிகளில் நகைச்சுவை
இருப்பதால் அறுக்கவில்லை.  கடைசியில் இவர் சொல்லும் வசனம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது ..…. ”எங்கப்பா செத்துப்போனப்ப கார்யத்துக்கே காசு இல்லாம போச்சு, நான் செத்துப்போனா எனக்கு கார்யம் பண்ண மனுஷனே இல்லாம போய்டுவா போலிருக்கு”.

இப்படத்தில் வெண்ணீராடை மூர்த்தி எப்போது வருகிறார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரின் பெயர் தலைப்பில் இருக்கிறது.  முத்துராமன் கோபக்கார, கண்டிப்பான இயக்குனராக நடித்துள்ளார்,
படப்பிடிப்பில் நடிக்கும் நடிகையையே இவர் காதலிப்பது அவ்வளவாக காட்சிக்குப்பொருந்தி வரவில்லை.  இவரின் பாத்திரம் அவ்வளவாக எடுபடவில்லை. கதாநாயகி ஜெயா ஒரு பாட்டுக்கு வந்து போகிறார். மீதி காட்சிகளில் மனோரமாவின் தோளிலேயே தொத்திக்கொண்டு போகிறார்.  மனோரமா ப்ரமாதம், இவரின்
பேச்சும், ஏற்ற இறக்கமும், வசன நடையை கையாளும்போது செலுத்தும் நடிப்பும் – இவரை மிஞ்ச இவரால்தான் முடியும்.  பயங்கர ‘timing’. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் எப்போதும் திண்று கொண்டிருப்பதும், அழைப்பு பத்திரிகை கொடுக்க வந்த சுகுமாரி, மற்றும் நண்பிகளை தவறாக புரிந்துகொண்டு வாங்கு வாங்கு என்று வாங்குவதும் ரசிக்கவைக்கிறது.

மூன்று பாடல்களும் அருமை, “ஹரே ராம ஹரே கிருஷ்ணா” (எம்.எஸ்.வி), ”ஆரம்பம் ஆவது உன்னிடம் தான்” எஸ்.பி.பி, சுசீலா மற்றும், ‘அலங்காரம் எதற்கடி’ (டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி/மனோரமா).

இது ஒரு கருப்பு வெள்ளைப்படம், முக்கால்வாசி ‘செட்’டிலேயே எடுக்கப்பட்டுள்ளது.  பல காட்சிகள் நாடகத்தனமாக உள்ளது. வசனங்கள் எல்லா சோ படம் போலவும் தத்துவத்தை தூக்கலாக வைத்துள்ளதும் யதார்த்தமாக உள்ளது.

இப்படம் வந்து அவ்வளவாக ஓடவில்லை என்கிறான்  என் நண்பன்.  தெரியவில்லை. இப்படத்தின் பிரதி எங்கும் கிடைக்காது, ஒருவேளை மலேசியா, சிங்கப்பூரில் கிடைக்கலாம், இந்தியாவில் இல்லை. சிறந்த படம், நல்ல பொழு்துபோக்குப் படம்  பாருங்கள்.

என் பெண்களுக்காக இரண்டு பாட்டுகள் (Two Songs for My Daughters)


இந்த பதிவை என் பெண்களும் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

In general, neither of my daughters have much interest in Tamil movies. The elder one had a phase where she liked Hindi movies – specifically NRI Hindi movies – but even that seems to be over.

We had gone to a Tamil music concert here recently. The singers wore costumes that mimicked the way the songs were picturised and happily danced around. Both my daughters liked the “Rapper Hat Song” and the “Sombrero Dude Song“. Can you figure out what these songs are? 🙂

Rapper Hat Song

They really love the way SPB dances in this song.

Sombrero Dude Song

பயணங்கள் முடிவதில்லை – விகடன் விமர்சனம்


இதுவும் விமல் அனுப்பியதுதான், அவருக்கும் விகடனுக்கும் நன்றி!

புதுசா அறிமுகமாகும் ஒரு டைரக்டரோட (ஆர்.சுந்தர்ராஜன்) படமாச்சே, எப்படி இருக்குமோ ஏதா இருக்குமோனு பயந்துகிட்டே தியேட்டருக்குள் போனேன். இரண்டாவது ரீல்லேயே எனக்கு சரியான நோஸ் கட்!

துணிக்குப் போடற கஞ்சியைக் குடிச்சே வயித்தை நிரப்பிக்கிற ஏழ்மை; இருந்தாலும் பாடகனா ஆகணுங்கற லட்சியம்- இது கதாநாயகன் ரவி (மோகன்). ரவியின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுத்து, அவனைக் காதலிக்கவும் செய்யும் கதாநாயகி ராதா (பூர்ணிமா ஜெயராம்). இவங்க ரெண்டு பேரையும் சுற்றி, டைரக்டர் திரைக்கதையைப் பின்னியிருக்கும் அழகு அப்படியே அசத்திடுது.

முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ‘ பாடலும், டி.விக்காக ரவி பாடும் இன்னொரு பாடலும் படமாக்கப்பட்டுள்ள விதம் டைரக்டரோட எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்குது! (இளையராஜாவும் எஸ்பிபியும் இவருக்கு அசைக்க முடியாத இரு தூண்கள்!)

தனக்கு பிளட் கான்சர்ங்கறதை ராதாகிட்டே சொல்ல முடியாம ரவி திண்டாடறது, தன் மீதுள்ள காதலை அவ மறக்கணும்கறதுக்காக அவளை டீஸ் பண்றது, மூன்றாவது ஒரு மதுரை டாக்டர் (ராஜேஷ்) அறிமுகமாறது – பின் பகுதி விவகாரங்கள்லே துளிக்கூட அமெச்சூர்த்தனமே தெரியலே!

படத்துலே என்னதான் குறை?

ஹீரோவோட பிளட் கான்சர், வாழ்வே மாயத்தின் பாதிப்பு! டாக்டர் குமார் விஷயத்தில் அந்த 7 நாட்கள் பாதிப்பு!

இருந்தாலும், ஒரு ஊக்க போனஸ் மாதிரி 48 மார்க் தரலாம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

சுமதி என் சுந்தரி – சாரதா விமர்சனம்


  • இப்படி ஒரு படம் எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, எந்த விதமான சத்தமும் இன்றி வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த படம்.
  • 1970ல் வந்த பாதுகாப்பு படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, 1971ல் நான்கு மாதங்களுக்குள், ஆறு படங்கள் (இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா, சுமதி என் சுந்தரி, பிராப்தம் என) வரிசை கட்டி வந்ததில், தனித்து நின்ற படம். மிகவும் ரம்மியமான படம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்ட படம்.
  • சிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம். குறிப்பாக ஏராளமான பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை நடிகர் திலகத்தின் ரசிகர்களாக மாற்றிய படம். அந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களிலேயே கல்லூரி மாணவ, மாணவியரின் முதல் சாய்ஸாக தெரிவு செய்யப்பட்ட படம். காதலை மையமாகக் கொண்ட படமானாலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் அளவுக்கு, விரசமின்றி எடுக்கப்பட்ட படம்.
  • ‘நடிகர் திலகத்தின் படங்களைக் காணச் செல்வதென்றால் கைக்குட்டையை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று கேலி பேசிய தருக்கர்களின் முகத்தில் கரியைப் பூசிய படம்.
  • கதாநாயகி கிராமத்துப் பெண்ணோ அல்லது குடும்பத்துப் பெண்ணோவாக இருந்தாலும் கூட, ஒரு காட்சியிலாவது அவளைக் கவர்ச்சியாக காட்டிவிடத் துடிக்கும் திரையுலகில், கதாநாயகியை ஒரு திரைப்பட நடிகையாக காண்பித்தபோதிலும் கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை அவளை சேலையிலேயே காண்பித்த படம்.
  • ஒளிப்பதிவு, வண்ணம், வெளிப்புறக் காட்சிகளில் நம் கண்களையும், தேனான இசை மற்றும் பாடல்களில் நம் காதுகளையும் கொள்ளையடித்த படம்.
  • இளைஞர்களைக் கவரும் வண்ணம் புதுமையான முறையில் டைட்டில் அமைந்திருக்க, டைட்டில் ஓடி முடிந்ததும் ஆலயமாகும் மங்கை மனது பாடலோடு கதாநாயகி சுமதி (ஜெயலலிதா) அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே நமக்கு அதிர்ச்சி. ‘என்னது ஜெயலலிதாவுக்கு சுதர்சனுடன் கல்யாணம் முடிந்து கணவன், குழந்தை என்று குடும்பம் நடத்துகிறாரா? அப்படீன்னா இந்தப் படத்திலும் நடிகர் திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா?’ என்று மனம் சோர்ந்து போகும் நேரத்தில்தான், பாடிக் கொண்டே நடந்து வரும் ஜெயலலிதா, வாசற்படியில் கால் தடுக்கி கேமராவைப் பார்த்து ‘ஸாரி’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் ‘கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு’ என்று தொடரும்போது, ‘அடடே இது ஏதோ வேறே’ என்று நாம் நிமிர்ந்து உட்கார, பாடல் முடிவில் அரிக்கேன் விளக்கின் திரியை சுருக்கும்போது நம்முடைய கேமரா பின்னோக்கி நகர, அங்கு படப்பிடிப்பில் இருக்கும் கேமரா மற்றும் மொத்த யூனிட்டையும் நம் கேமரா படம் பிடிக்க, (படத்தில்) இயக்குனரான வி.கோபாலகிருஷ்ணன் “கட்” என்று சொல்லிவிட்டு, நடிகை சுமதியைப்பாராட்ட, ‘அடடே ஷூட்டிங்தான் நடந்ததா’ என்று நாம் ஆசுவாசப்பட… (“யப்பா ராஜேந்திரா (சி.வி.ஆர்) எங்க வயித்துல பாலை வார்த்தேப்பா”) கதாநாயகி அறிமுகம் முடிந்தது. அடுத்து காட்சி மாற்றம்…

    தேயிலை எஸ்டேட்டில், கொழுகொழுவென்றிருக்கும் குதிரையில் சவாரி செய்தபடி வெள்ளை பேண்ட், பிங்க் கலர் ஃபுல் ஸ்லீவ், தலையில் ஸ்டைல் தொப்பி, கண்களில் குளிர்க் கண்ணாடியுடன், (யார் யாரெல்லாமோ இப்படி ஸ்டைலாக அறிமுகமாகிறார்களே, இவர் ஒரு படத்தில் கூட இப்படி ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுக்க மாட்டேன்கிறாரே என்று ஏங்கி நின்ற ரசிகர்கள் கை வலிக்குமளவுக்கு, கை சிவக்குமளவுக்கு, தியேட்டர் சுவர்கள் விரிசல் விடும் அளவுக்கு, ரோட்டில் போகிறவர்களுக்குக் கூட கேட்குமளவுக்கு கைதட்டலால் குலுங்க வைக்க) அழகான, இளமையான, ஸ்லிம்மான நடிகர் திலகம் அறிமுகம்.

    (ராஜேந்திரா, நீதான்யா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒரு இயக்குனர். நடிகர் திலகத்தை படத்துக்கு புக் பண்ணிய கையோடு, ‘எத்தனை பாட்டில் கிளிசரின் வாங்கலாம்’ என்று கணக்குப் போடும் இயக்குனர்களுக்கு மத்தியில் நீ ரொம்ப வித்தியாசமானவன். நடிகர் திலகத்தை எப்படி ஜாலியாக, ஜோவியலாக, இளமையாக காண்பிக்கலாம் என்றே உன் மனம் சிந்திக்கும். கலாட்டா கல்யாணத்தில் துவங்கினாய், சுமதி என் சுந்தரியில் அதை முழுமையாக்கினாய். ராஜாவிலும் அதைத் தொடர்ந்ததன் மூலம் நடிகர் திலகத்தின் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமானாய்.)

    காதல் கல்யாணம் இவற்றை கட்டோடு வெறுக்கும் கட்டை பிரம்மச்சாரி மது(நடிகர் திலகம்). தன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி நச்சரிக்கும், எஸ்டேட் ஓனரின் தொல்லை தாங்க முடியாமல், தனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி விட்டதாகவும் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய்விட்டதாகவும் பொய்யை சொல்லி சமாளிக்கிறார்.

    ஒட்டு மொத்த நகைச்சுவைப் பட்டாளமும் (சோ தவிர) படத்தில் இறக்குமதியாகி இருந்தது. அங்கே எஸ்டேட்டில் நாகேஷ், தங்கவேலு, சச்சு… இங்கே சென்னையில் படப்பிடிப்பு யூனிட்டில் வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், மாலி, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை மூர்த்தி என படம் களை கட்டியிருந்தது.

    பிரைவஸி என்ற சிறையில் இருந்து வெளியே வந்து மக்களோடு மக்களாக பழக விரும்பும் நடிகை சுமதி, கொத்தவால் சாவடிக்கு வந்து பேரம் பேசி காய்கறி வாங்க, அதிசயத்தைக் கண்ட மக்கள் கூட்டம் கூடிவிட அங்கிருந்து மீட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். (பேரம் பேசி வாங்கும்போது ஜெயலலிதாவின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம்). வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் (கதாநாயகியாயிற்றே) தன் டச்சப் பெண்ணுடன் பயணம் செய்யும்போது, தன் யூனிட்டில் இருக்கும் சக ஊழியர்கள், மூன்றாம் வகுப்பு பெட்டியில் (இரண்டாம் வகுப்பு பெட்டி இப்போது ஒழிக்கப்பட்டதால், பழைய முன்றாம் வகுப்பு இப்போது இரண்டாம் வகுப்பு ஆகிவிட்டது) ஜாலியாக ஆடிப் பாடிக்கொண்டு வருவதை அறிந்து, அங்கே போய் அவர்களோடும் சந்தோஷமாக பயணம் செய்ய விரும்பி, தன் தோழியிடம் சொல்கிறாள். இதனிடையில், கூட வந்த பெண் தூங்கிக்கொண்டு இருக்கும் சமயம், ஏதோ காரணத்துக்காக (சிக்னல் கிடைக்காமல்?) ரயில் நின்றுகொண்டு இருக்க தன் பெட்டியில் இருந்து மற்றவர்கள் இருக்கும் பெட்டிக்குச் செல்ல சுமதி (ஜெ) இறங்கி நடக்க முறபடும்போது சட்டென வண்டி புறப்பட, அவர்கள் இருக்கும் இடத்துக்கும் போக முடியாமல், தான் இருந்த பெட்டிக்கும் திரும்ப முடியாமல் திகைக்க ரயில் போயே விடுகிறது. நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்து செல்லும் சுமதியின் கண்ணில் தூரத்தில் ஒரு வீடு தெரிய அதை நோக்கி நடந்து அந்த வீட்டுக்குள் நுழைய, அதுதான் மது தனியாக தங்கியிருக்கும் அழகான, வித்தியாசமான சின்னஞ்சிறிய வீடு.

    பெண்கள் வாடையே பிடிக்காத மதுவிடம், தன் நிலைமையை சொல்லி கெஞ்சி அங்கு இரவு மட்டும் தங்க அனுமதி பெற்று, தங்கும் நடிகை சுமதி, பேச்சுவாக்கில் மதுவுக்கு சினிமா என்பதே பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு, தான் ஒரு சாதாரணப் பெண்ணாக காண்பித்துக்கொள்கிறார். அதனால்தான், மது தன் பெயரைக்கேட்டபோதுகூட சுமதி என்று சொல்ல வாயெடுத்தவர் ‘சு’ வரையில் வந்துவிட்டு சட்டென்று சுந்தரி என்று மற்றிச்சொல்வார். (அதனால்தான் பிற்பாடு சிலமுறை மது அவரை ‘சு..சுந்தரி’ என்று அழைப்பார்).

    பால்காரன் மூலமாக மதுவின் மனைவி திரும்பி வந்துவிட்டதாக தங்கவேலு நினைத்து சுந்தரியை தன் மருமகளாகவே நினைத்து கொண்டாட, மது தர்ம சங்கடத்தில் சிக்கி தவிக்க, பாலம் உடைந்து ரயில் பாதை சரியாகாததால் சுமதி (சுந்தரி) மேலும் சில நாட்கள் மது வீட்டிலேயே தங்க, பரபரப்பான நகர சூழ்நிலையில் உழன்ற சுமதிக்கு அமைதியான அந்த எஸ்டேட் சூழலும், மதுவின் அன்பும் பிடித்துப் போய் அங்கேயே தங்கி விட முடிவு செய்ய, இதனிடையில் மதுவுக்கும், சுமதிக்கும் காதல் அரும்ப, தங்கவேலுவின் மகள் சச்சுவின் முறைமாமன் நாகேஷுக்கு, சுந்தரிதான் நடிகை சுமதி என்று ஒரு (மேஜர் சந்திரகாந்த்) பேப்பர் விளம்பரம் மூலம் தெரிந்துபோக, அதை அவர் சுந்தரியிடமே கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும்போது, தனக்கு நடிகை வாழ்க்கை பிடிக்கவில்லையென்றும், மதுவின் காதலும் அந்த ரம்மியமான சூழ்நிலையும் பிடித்துப்போய் விட்டதாகவும், அதிலிருந்து தன்னை பிரித்துவிட வேண்டாமென்றும் நாகேஷிடம் கெஞ்ச, அவரும் சுமதிக்கு உறுதியளிக்க, அப்பாடா நிம்மதியென்று சுமதி இருக்கும்போது, அதிர்ச்சி தரும் விதமாக, அவரை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் டைரக்டர் வி.கோபாலகிருஷ்ணன், தன் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கவேலுவைப் பார்க்க அங்கே வர, மீண்டும் சுமதிக்கு குழப்பம் ஆரம்பம்.

    ஏற்கெனவே தன் படக் கதாநாயகியைக் காணாமல் படப்பிடிப்பு நின்று போயிருக்கும் நிலையில், அவரைப் போலவே ஒரு பெண் தன் அண்ணன் வீட்டில் எப்படி என்று யோசித்து நாகேஷிடம் விவரத்தைக்கேட்க, சுதாரித்துக்கொண்ட நாகேஷ், ‘ஏற்கெனவே சுந்தரியைப் பார்த்து நடிகை சுமதி மாதிரி இருக்கிறாள் என்று சொன்னதற்காக ஒருத்தன் மதுவிடம் செருப்படி வாங்கிக்கொண்டு போனான்’ என்று சொல்லி மிரட்டி வைக்க, வி.கோ. பயந்து போகிறார். (ஒரு கட்டத்தில் சுந்தரியைப் பார்த்து, ‘இவரைப் பார்த்தால் யார் மாதிரி இருக்கு தெரியுமா?’ என்று மது (சிவாஜி) முன்னால் வி.கோ. குட்டை உடைக்கப்போகும் சமயம், நாகேஷ் தன் காலில் இருந்து செருப்பை கழற்றி தட்டிக் காட்ட, பயந்துபோன வி.கோ. ‘அதாவது இவங்க மகாலட்சுமி மாதிரி இருக்காங்க என்று சொல்ல வந்தேன்’ என்று ச்மளிக்கும் இடம், அரங்கில் பெரிய சிரிப்பலையை வரவழைக்கும்).

    ஆனாலும் தன் முயற்சியை விடாத வி.கோ., நடிகை சுமதி இங்கே இருப்பதாக தன் படப்பிடிப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்க, தேங்காய் தலைமையில் மொத்த யூனிட்டும் எஸ்டேட்டில் ஆஜர். சுமதியை தூக்கி வருவதற்காக ஒரு அடியாளை நியமிக்க, அவர்கள் தவறுதலாக மதுவீட்டில் இருந்து வெளியே வரும் சச்சுவை கோணியில் கட்டி தூக்கிப்போகும் சமயம், குதிரையில் வரும் மது அந்த கடத்தலைப்பார்த்து அவர்களைத்தொடர்ந்து சென்று சண்டை போட்டு காப்பாற்றி, கடத்தல்காரர்களைப்பிடித்து விசாரிக்க, அவரகள் படப்பிடிப்பு கம்பெனியின் ஆட்களிடம் கூட்டிச் செல்ல, அவர்களிடம் மது விவரம் கேட்க, அவர்கள் சுமதியின் போட்டோ ஆல்பத்தைக் காட்டி விவரத்தைச் சொல்ல, மதுவின் தலையில் பேரிடி.

    ‘இத்தனை நாளும் தன் வீட்டில் தன் காதலி சுந்தரியாக தங்கியிருந்தவள் நடிகை சுமதியா?’ என்று அதிர்ந்து போகும் மது, அவர்களிடம் ‘நீங்க சொலறது மட்டும் உண்மையா இருந்தால் நானே அவளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்று உறுதியளித்து அவர்கள் காட்டிய ஆல்பத்துடன் வீட்டிற்குப் போகும் மது, அங்கே எந்த கவலையுமில்லாமல், தன் புதிய வாழ்க்கையை நினைத்து ஆனந்தமாக பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியிடம், ஆல்பத்தைக் காட்டி விவரம் கேட்க, அதிர்ச்சியின் உச்சிக்குப் போகும் சுமதி, வேறு வழியின்றி அதை ஒப்புக்கொண்டாலும், தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிப் போக கொஞ்சமும் விருப்பமில்லை என்றும் மதுவை மணந்து கொண்டு வாழப் போகும் இந்த நிம்மதியான வாழ்க்கையைப் பறித்து விட வேண்டாமென்றும் கெஞ்சிக் கதறி மன்றாட, அதற்கு கொஞ்சமும் இரங்காத மது அவளை ஜீப்பில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று யூனிட்டாரிடம் ஒப்படைக்கப் போகும் சமயம், தன் பிடிவாதத்தை விடும்படி தங்கவேலுவும் நாகேஷும் மதுவிடம் கெஞ்சியும் விடாப்பிடியாக, சுமதியை ரயிலில் ஏற்றிவிட்டு ரயில் நகர, சோகம் கப்பிய முகத்துடன் தண்டவாளத்தின் மீது மது நடந்துபோக, அதே நேரம் மதுவுடன் வாழ்ந்தே தீருவது என்ற தீர்மானத்துடன், ரயிலில் இருந்து குதிக்கும் சுமதி (சுந்தரி) “மதூ….” என்று சத்தமிட்டு கத்த, திடுக்கிட்டுப் பார்க்கும் மது, தண்டவாளத்தின் மீது ஓடி வரும் சுமதியைப் பார்த்து, சந்தோஷ அதிர்ச்சியில் அவரை நோக்கி ஓடி வர, படம் முழுக்க ரீரிக்கார்டிங்கில் நம்மை மயக்கிய அந்த HUMMING இசை மயக்கத்தை மெல்லிசை மன்னர் பரவ விட, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வரும் வேகம் அதிகரிக்க, அதே வேகத்தில், தன் சுந்தரியாகிவிட்ட சுமதியை மது தூக்க, அந்த காட்சி அப்படியே ஸ்டில்லாக உறைந்து போக… திரையில் வணக்கம்.

    வரிசையாக நடிகர் திலகத்தின் சீரியஸான படங்களைப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ஒரு பெரிய ரிலாக்ஸாக, ஒரு திருப்பமாக, ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வண்ணமாக வந்த படம்தான் இந்த ‘சுமதி என் சுந்தரி’. இப்படத்தின் சிறப்பம்சங்களை துவக்கத்திலேயே பட்டியலிட்டு விட்டதால் அதையே திரும்ப சொல்ல வேண்டியதில்லை. இதே நாளில் (1971 தமிழ்ப் புத்தாண்டு) வெளியான ‘பிராப்தம்’ (நடிகையர் திலகத்தின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்ததால்) மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தபோது, இப்படமும் சேர்ந்து வெளியானதால் இப்படம் (சு.எ.சு) தேறாது என்று, படம் வெளியாகும் முன்பு ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் நிலைமை தலைகீழானது.

    அது கருப்பு வெள்ளையில், இதுவோ வண்ணத்தில்.
    அது முழுக்க சோகம் மற்றும் செண்டிமென்ட், இதுவோ முழுக்க முழுக்க நகைச்சுவை என்று மட்டும் சொன்னால் போதாது, அத்துடன், ரம்மியம், அழகு, மனதைக் கவரும் எல்லா அம்சங்களும்.
    அது ரொம்ப எதிர்பார்க்கப்பட்டு சிறிது ஏமாற்றிய படம். இதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியளித்த படம்.
    அது, நடுத்தர வயது ரசிகர்கள் கூட தயங்கி தயங்கி சென்று பார்த்த படம். இதுவோ ‘ஆறிலிருந்து அறுபது வரை’.
    (நடிகர் திலகத்தின் ஒரு படத்தை உயர்த்தி சொல்வதற்காக இன்னொன்றை குறைத்து சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை நிலை அதுதான். தன் அபிமான நடிகரின் படத்தைப் பார்த்து விட்டு, அது நன்றாக இல்லையென்றால், நன்றாக இல்லையென்று தயங்காமல் சொல்பவர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் என்பது ஊரறிந்த உணமை).


    மெல்லிசை மன்னரின் மனதைக் கவரும் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள், வைரங்கள், நவரத்தினங்கள். படத்தின் முதல் காட்சியாக அமைந்து நம்மை ஏமாற்றும் “ஆலயமாகும் மங்கை மனது” பாடல் பின்னர் சிவாஜி வீட்டில் ஜெயலலிதா தங்கியிருக்கும்போது மீண்டும் முழுமையாகப் பாடுவார். பி.சுசீலாவின் குரலில் அழகான அமைதியான பாடல். சிதார், புல்லாங்குழலுடன் மூன்றாவது இடையிசையில் ‘ஷெனாய்’ கொஞ்சும்.


    படப்பிடிப்பு குழுவினர் ரயிலில் போகும்போது பாடும் “எல்லோருக்கும் காலம் வரும், சம்பாதிக்கும் நேரம் வரும் வருவது என்ன வழியோ” ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடியிருப்பார்கள். பின்னணியில் ரயில் ஓடும் சத்தம் (மெல்லிசை மன்னருக்கு இதெல்லாம் அத்துப்படி)


    எஸ்டேட் தொழிலாளர் விழாவில், டிஎம்எஸ், ஈஸ்வரி பாடும் ஏ புள்ளே சஜ்ஜாயி பாடலில் நடிகர் திலகம், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு ஆகியோர் ஆடுவார்கள். தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து நடப்பது போல நடிகர் திலகம் காட்டும் அபிநயம் கைதட்டல் பெறும். (இப்பாடல் முடிந்து காட்டு வழியே வீட்டுக்கு நடந்து போகும்போது, ஏதோ சத்தம் கேட்டு பயந்து சுமதி, மதுவை அணைத்துக் கொள்ள, நிலா வெளிச்சத்தில் சுமதி கையிலிருந்த பலூன்கள் காற்றில் பறந்து போக அப்போது மெல்லிசை மன்னர் கொடுக்கும் அந்த LADIES CHORUS HUMMING)


    எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பததற்கு மதுவுடன் ஜீப்பில் வரும் சுமதி, இயற்கை சூழலில் கவரப்பட்டு, ஜீப்பை விட்டு இறங்கி தோட்டத்துக்குள் சுற்றி பாடும் ஓராயிரம் பாவனை காட்டினாள் பாடலில் துவக்கத்தில் வரும் சுசீலாவுக்கு ஒரு சின்ன சவால். ஊதித் தள்ளி விடுவார். ஆரஞ்ச வண்ண அரைக்கை சட்டை, அதே வண்ண பேண்ட்டில் நடிகர் திலகம், கையில் குச்சியுடன் அட்டகாச நடை நடந்து வருவார். இந்தப் படத்தில் அவருக்கு என்ன அருமையான டிரஸ் சென்ஸ்! காஸ்ட்யூமருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள். (இதற்கு முன் ஒரு பாவி கூட எங்கள் நடிகர்திலகத்தை இவ்வளவு அழகாக காட்டியதில்லை).


    வெள்ளை பேண்ட், வெள்ளை ஆஃப் ஸ்லாக்கில் நடிகர் திலகம், ஆரஞ்சு வண்ண சேலையில் கலைச் செல்வி, இயற்கை எழில் சிந்தும் ஏரிக்கரையில் யாருமில்லாத் தனிமை பாடலுக்கு என்ன குறை? “ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம், இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்” பல டூயட் பாடல் சவால்களை அனாயாசமாக சந்தித்த டிஎம்எஸ், சுசீலா ஜோடியின் இன்னொரு தேன் சிந்தும் பாடல். இடையிசையில் வேகமான ஃப்ளூட், திடீரென வேகம் குறைந்த கிடாராக மாறும் புதுமை, ஒரு கட்டத்தில் நடிகர்திலகம், கிரிக்கெட் பௌலர் போல பாவனை செய்யும் அழகு. சொலறதுன்னா சொல்லிக்கிட்டே போகலாம்.


    கிளைமாக்ஸில் (மதுவுக்கு உண்மை தெரிய சில நிமிடங்களுக்கு முன்) சுமதி பாடியாடும் இண்டோர் பாட்டு “கல்யாணச் சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது” சுசீலாவின் இன்னொரு மாஸ்டர்பீஸ்.


    எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் “ஆயிரம் நிலவே வா”வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர் திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது “பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ” என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 ‘டாப் டென்’ பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர் திலகம் மற்றும் அழகான கலைச் செல்வி… மொத்தத்தில் அழகு.

    இப்பாடலில் நடிகர் திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். (இந்த த்ரெட்டில் கூட, அன்றைய இளைஞர்களான முரளி, பாலாஜி போன்றோர் தங்கள் அனுபவத்தைச் சொல்லியிருந்தனர்). அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.

    பாடல்களில் மட்டுமல்லாது, ரீரிக்கார்டிங்கில் படம் முழுக்க மெல்லிசை மன்னர் அளித்திருக்கும் அந்த பெண்கள் கோரஸ், (HUMMING) என்ன ஒரு அழகு, என்ன ஒரு அருமை, படத்தின் இளமைக்கேற்ற இளமை இசை. மொத்தத்தில் படத்தின் இன்னொரு பெரிய பலம் மெல்லிசை மாமன்னர் அண்ணன் எம்எஸ்வி அவர்கள்.

    தம்புவின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு. (‘தரையோடு வானம் விளையாடும் நேரம்’ என்ற பாடல் வரிகளுக்கான அந்த லொக்கேஷனை எங்கே கண்டு பிடித்தார்கள்..!)

    இயக்குனர் சி.வி.ராஜேந்திரனைப் பற்றி சொல்வதென்றால், நண்பர் ராகவேந்திரன் குறிப்பிட்டது போல, அவர் ‘சிவாஜி ரசிகர்களின் டார்லிங்’. அந்த ஒரு வரியே போதும் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.

    உண்மையில் இந்தக் கட்டுரையை முடிக்க எனக்கு மனம் வரவில்லை. எழுதிக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது. காரணம், பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் படம் இது. இப்படத்தின் மேட்னி காட்சி பார்த்து விட்டு வெளியே வந்து, அப்படியே மாலைக் காட்சிக்கான கியூவில் போய் நின்றவர்கள் பலர்.

    ‘சுமதி என் சுந்தரி’ படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

    தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், சாரதா பக்கம்

    தொடர்புடைய சுட்டிகள்:
    ஆர்வி விமர்சனம்
    பொட்டு வைத்த முகமோ பாட்டு

    பொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)


    விமல் அனுப்பிய சிவாஜி பாட்டு சீரிஸில் இரண்டாவது இன்ஸ்டால்மென்ட்

    சிவாஜிக்காக முதன் முதலில் எஸ்பிபி பாட வந்த போது…

    பொட்டு வைத்த முகமோ என்ற பாடலுக்கு முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. ஆனால் மெல்லிசை மன்னர் எஸ்பிபியைத்தான் தேர்ந்தெடுத்தார். சிவாஜியிடம் தான் பெயரெடுக்கவேண்டும் என்று எஸ்பிபி மனத்திற்குள் ஒரு முடிவு செய்து கொண்டார். சிவாஜிக்குப் பாடப் போகும் முதல் பாடல் என்ற பயத்தோடு ஒத்திகைக்குச் சென்றார். பாடல் பதிவு நாள் வந்தது. ரிக்கார்டிங் தியேட்டரினுள் பாலு சென்றார். அங்கே நடிகர் திலகம் காத்திருந்தார். எஸ்பிபிக்கு நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் எதற்காக வந்திருக்கிறார் எனப்புரியவில்லை. பாலுவைத் தனியாக அழைத்துச் சென்றார் சிவாஜி.

    ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ளவர்களுக்கு ஒரே சஸ்பென்ஸ். சாதாரணமாக பாடல் பதிவுகளுக்கு சிவாஜி வருவது வழக்கம் இல்லையே, இன்று மட்டும் ஏன் வந்திருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.

    அந்தக் காலத்தில் சிவாஜிக்கு அதிகமாக பின்னணி பாடிவந்தவர் டிஎம்எஸ் அவர்கள்தான். டிஎம்எஸ். பாடல் பதிவுக்குக் கூட வராத நடிகர் திலகம், எஸ்பிபி பாடல் பதிவுக்கு வந்தது மெல்லிசை மன்னரைக் கூட வியப்பில் ஆழ்த்தியது.

    எஸ்பிபியும் சிவாஜியும், ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்த ரூமிற்குள் சென்றார்கள். கண்ணாடி பதிக்கப்பட்ட அந்த அறையில் சிவாஜி எஸ்பிபியிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. பத்து நிமிடத்திற்குப் பிறகு சிவாஜியும் எஸ்பிபியும் வெளியே வந்தார்கள். சிவாஜி நேரே மெல்லிசை மன்னரிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

    நடிகர் திலகம் சிவாஜி, எஸ்பிபியிடம் என்ன சொல்லியிருப்பார் என்பது எல்லாருக்கும் சஸ்பென்ஸாக இருந்தது. மெல்லிசை மன்னர் எஸ்பிபியிடம் எதுவும் கேட்கவில்லை. ‘பொட்டு வைத்த முகமோ’ பாடல் திட்டமிட்டபடி எடுத்து முடிக்கப்பட்டது. பாடல் மிக நன்றாக வந்திருப்பதாக ரிக்கார்டிங் தியேட்டரில் பேசிக் கொண்டார்கள். ஆனால் பாடலைக் கேட்ட போது, டிஎம்எஸ்ஸின் குரலைப் போல இந்த புதிய குரல் அதுவும் மென்மையான குரல் நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா என்று சிலர் சந்தேகப்படவும் செய்தனர். ‘சுமதி என் சுந்தரி’ படம் முடிந்தவுடன் பிரிவியூக்கு வழக்கம் போல் எல்லாத் தொழில் நுட்ப கலைஞர்களும் அழைக்கப்பட்டனர். சாதாரணமாக எஸ்பிபி இது போன்ற காட்சிகளுக்குப் போகும் வழக்கமில்லை. ஆனால் ‘சுமதி என் சுந்தரி’ படத்திற்கு குடும்பத்தோடு சென்றார். இவர் சென்ற அதே காட்சிக்குத்தான் மெல்லிசை மன்னரும் வந்திருந்தார். அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எஸ்பிபியின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் திலகம். சந்தேகப்பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள். பிரமிப்பின் மறு பெயர்தானே நடிகர் திலகம்!

    படத்தில் ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலுக்கு பாலுவின் குரலுக்கு ஏற்ப தன் நடிப்பு ஸ்டைலை மாற்றிக் கொண்டு நடிகர் திலகம் நடித்திருப்பதைப் பார்த்து வியந்தார் பாலு. படம் முடிந்து வெளியே வந்தபோது, எம்.எஸ்.வி. பாலுவிடம் “உங்க பாட்டு ஓஹோன்னு வந்திருக்கிறது” எனக் கூறி பாராட்டினார். அதற்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பல பாடல்களைப் பாடக்கூடிய வாய்ப்புகள் எஸ்பிபிக்குக் கிட்டியது. நடிகர் திலகம் முதல் ரிகார்டிங்கில் பாலுவைச் சந்தித்து என்ன கூறினார் தெரியுமா?

    “பாலு! எனக்குப் பாடப்போறேன்னு நினைச்சு உன்னுடைய ஸ்டைலை மாத்திப் பாட முயற்சி பண்ணாதே. உன்னுடைய ரிக்கார்டிங் கேட்கணும்னு நான் இங்க வரலை. இங்கே சில பேர் உன்கிட்ட வேற ஒரு பாடகர் ஸ்டைலில் பாடினாத்தான் எனக்குப் பிடிக்கும்னு சொல்லி உன்னை கன்ஃப்யூஸ் பண்ணக்கூடாது என்பதால்தான், நானே நேரா வந்தேன். உன்னோட ஒரிஜினல் ஸ்டைல்ல பாடு அதுக்கு ஏத்த மாதிரி நான் நடிக்க முயற்சி செய்றேன்” என்பதுதான்.

    உண்மையில் நடிகர் திலகத்தின் அறிவுரைகள் எஸ்பிபிக்கு தைரியத்தைக் கொடுத்தது. சிவாஜி கொடுத்த டானிக் பாலுவை அந்தப் பாடலை அற்புதமாகப் பாட வைத்தது. சிவாஜி சொன்னபடி எஸ்பிபி தமக்கே இயல்பான நளினம் கொஞ்சும் நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார். அவருடைய ஸ்டைலுக்காக தன் ஆக்டிங் ஸ்டைலை மாற்றிக் கொண்ட அந்த நடிப்புச் செல்வத்தை, மனதார பாராட்டிக் கொண்டும் அதே நேரத்தில் அவரின் திறமையைக் கண்டு பிரமித்துக் கொண்டும் இருக்கிறார் எஸ்பிபி. இன்றளவும் எஸ்பிபி வியக்கும் ஒரு விஷயம் இது.

    அந்தப் பாடல் சுமதி என் சுந்தரி படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த ’பொட்டு வைத்த முகமோ’.

    காலப் புயலில் கலைந்து போகாத பாட்டு தீபங்களில் இன்றும் இளமை ஊஞ்சலாடும் இந்தப் பாடலும் பாடல் காட்சியும் ஒரு வசந்த வரலாறு.

    பிற்சேர்க்கை: சிமுலேஷன் இந்தப் பாட்டின் மெட்டு தங்கப் பதக்கம் படத்தில் இடம் பெற்ற “தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு” என்ற பாடலை நினைவுபடுத்துகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார். அந்தப் பாட்டுக்கு வீடியோ கிடைக்கவில்லையே!

    சாரதா சொல்கிறார்:

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் “ஆயிரம் நிலவே வா”வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர் திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது “பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ” என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 ‘டாப் டென்’ பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர் திலகம் மற்றும் அழகான கலைச் செல்வி… மொத்தத்தில் அழகு.

    இப்பாடலில் நடிகர் திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். (இந்த த்ரெட்டில் கூட, அன்றைய இளைஞர்களான முரளி, பாலாஜி போன்றோர் தங்கள் அனுபவத்தைச் சொல்லியிருந்தனர்). அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.

    தொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள்

    தொடர்புடைய சுட்டிகள்:
    சுமதி என் சுந்தரி விமர்சனம்
    யார் அந்த நிலவு? (சாந்தி)
    நீயும் நானுமா? (கெளரவம்)

    பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல்


    சிந்துபைரவி திரைப்படத்திலிருந்து மஹாகணபதிம் பாட்டு (ஜேசுதாஸ், இளையராஜா, முத்துசாமி தீட்சிதர் கிருதி, நாட்டை ராகம்)

    சும்மா ஜாலிக்காக அன்னை ஓர் ஆலயம் படத்திலிருந்து அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே பாட்டு (எஸ்பிபி, சுசீலா, இளையராஜா, வாலி – நன்றி, சாரதா!)

    தொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள்

    அடிமைப் பெண் – என் விமர்சனம்



    சின்ன வயதில் டென்டு கொட்டாயில் பார்த்த படம். இன்னும் நினைவில் இருப்பவை: எம்ஜிஆர் க்ளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை போடுவது; பாலைவனக் காட்சிகள்; எம்ஜிஆர் இரட்டை வேஷம் என்றார்களே எங்கே இன்னொரு எம்ஜிஆர் என்று காத்திருந்தது (அது அப்பா எம்ஜிஆர், முதலில் பத்து நிமிஷம் வந்துவிட்டு செத்துப்போய் விடுவார்) அப்போதெல்லாம் அசோகனின் தீவிர பக்தன் ஆகவில்லை.

    ஒரு above average சாகசப் படம். சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், அம்மா செண்டிமெண்ட் காட்சிகள், ஜெவின் பெல்லி டான்ஸ், புதுப்பையன் எஸ்பிபிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாட்டு, திமிராக ஜெ பேச சில காட்சிகள், ஜெ பாட ஒரு பாட்டு, சண்டைக் காட்சிகள் இவற்றை சுற்றி எம்ஜிஆருக்காக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை.

    1969-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்தப் படம். அவரே இயக்கம். பொதுவாக அவர் நடிக்கும் படங்களை – முக்கியமாக அவர் நடிக்கும் காட்சிகளை – அவர்தான் உண்மையில் இயக்குவார் என்று சொல்வார்கள். இந்தப் படத்தில் டைட்டிலிலேயே அவர் இயக்கியதாக வரும். (நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டும் அவர் இயக்கிய மற்ற படங்கள்) ஜெயலலிதா இரட்டை வேஷம், அசோகன், சந்திரபாபு, சோ, மனோகர், பண்டரிபாய் நடித்து, கே.வி. மகாதேவன் இசையில் வந்த படம்.

    அசோகன் (செங்கோடன்?) பண்டரிபாயிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ய, பண்டரிபாய் அவர் காலை வெட்டிவிடுகிறார். பண்டரிபாயின் கணவர் எம்ஜிஆர் அசோகனுடன் ஒரு காலை கட்டிக்கொண்டு – எம்ஜிஆர் எப்பவும் அப்படித்தான். எதிராளியின் கத்தி உடைந்துவிட்டால் தன கத்தியையும் தூக்கிப் போட்டு விடுவார். எப்படியும் அவர்தான் ஜெயிக்கப் போகிறார் – சண்டை போட்டு ஜெயிக்கிறார். ஆனால் அசோகன் பின்னால் இருந்து அவரை குத்தி கொன்றுவிடுகிறார். எம்ஜிஆரின் clan ஆட்கள எல்லாம் அடிமை. பண்டரிபாய் காட்டில் மறைந்து வாழ்கிறார். பையன் எம்ஜிஆர் ஜெயிலில் கூனனாக வளர்கிறார். எப்படியோ ஆற்றில் குதித்து தப்பி, ஜெவிடம் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் கம்பு போன்ற அரிய உண்மைகளை கற்று கூன் போய் வீரனாகிறார். பிறகு எப்படி பாலைவனத்துக்கு போகிறார் என்று மறந்துவிட்டது. (ரொம்ப முக்கியம்!) அங்கே போய் ஏமாறாதே ஏமாற்றாதே என்று ரசிகர்களை ஏமாற்றாமல் பாடுகிறார். பிறகு இன்னொரு திமிர் ஜெவிடம் மாட்டிக் கொள்கிறார். அந்த ஜெவும் இவர் மேல் காதல் ஆகிவிட ஆயிரம் நிலவை கூப்பிடுகிறார். பிறகு அந்த ஜெவுக்கு எல்லாம் நாடகம் என்று தெரிய அவர் கடுப்பாகி இவரை அசோகனிடம் காட்டி கொடுக்கிறார். அசோகன் பப்ளிக்காக அம்மாவை கற்பழிக்கப் போவதாக அறிக்கை விட (படம் பார்த்தபோது இந்த இடம் புரியவில்லை) உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது என்று பாட்டு பாடிக் கொண்டே கோட்டைக்குள் நுழைந்து சிங்கத்தை கொன்று அம்மாவிடம் உருகி சுபம்!

    எம்ஜிஆருக்கு காட்சிகளை உருவாக்க தெரிந்திருக்கிறது. சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெயில், ஆற்றில் தப்பி போவது எல்லாம் நன்றாக அமைத்திருப்பார்.

    சந்திரபாபு, சோ இருவர் இருந்தும் சிரிப்பு வருவது கஷ்டம்.

    ஆயிரம் நிலவே வா ஒன்றுதான் ஏ க்ளாஸ் பாட்டு. ஏமாறாதே ஏமாற்றாதே, காலத்தை வென்றவன் நீ, தாயில்லாமல் நானில்லை, அம்மா என்றால் அன்பு, உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது எல்லாம் சுமார்தான். ஆனால் ஆயிரம் நிலவே வா பாட்டில் மிச்ச எல்லா குறையும் மறந்துவிடுகிறது.

    பார்க்கலாம். டைம் பாஸ் படம். எம்ஜிஆருக்கு இது ஒரு க்ளாசிக் படம். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

    அடிமைப் பெண் – விகடன் விமர்சனம்


    அடிமைப் பெண்

    அடிமைப் பெண்

    அடிமைப் பெண் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். அன்றைய பிரபலங்கள் கூடி தங்கள் கருத்துகளை சொல்கிறார்கள். இப்போது தெரிவது நடிகை தேவிகாவும், டென்னிஸ் வீரர் கிருஷ்ணனும்தான். எஸ்.பி.பி. பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள்! விகடனுக்கு நன்றி, ஓவர் டு விகடன்!

    கிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே!

    லலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.

    சேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க! ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.

    ஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.

    ராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே! அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்!

    சேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.

    தேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.

    கமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.

    தேசிகாமணி: ஆமாம்! ஆனால் மனசிலே பதியற பாட்டு…

    பல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..!’

    சேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.

    ஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..?

    கமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே! குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.

    தேசிகாமணி: சண்டைக் காட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.

    தேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.

    லலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.

    கமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே?

    கிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது! அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே!

    ஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

    கமலம்: கரெக்ட்! அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.

    சேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.

    தெலுங்கு படங்கள்


    கொல்லப்புடி மாருதி ராவ் தனக்கு பிடித்த தெலுங்கு படங்களை பற்றி இங்கே சொல்கிறார். கொல்லப்புடி தெலுங்கு நடிகர், எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது எல்லாம் வாங்கி இருக்கிறார். நம்மூர் டெல்லி கணேஷ் மாதிரி stature உள்ள தெலுங்கு நடிகர்.

    அவரது லிஸ்டும் என் குறிப்புகளும்:

  • யோகி வேமனா: நான் பார்த்ததில்லை. நாகையா, எம்.வி. ராஜம்மா நடித்து, கே.வி. ரெட்டி இயக்கியது. கே.வி. ரெட்டி பெரிய இயக்குனர் – புகழ் பெற்ற மாயா பஜார், பாதாள பைரவி ஆகியவை இவர் இயக்கியவைதான். விஜயா (வாகினி) ஸ்டுடியோஸ் தயாரிப்பு. வேமனா புகழ் பெற்ற தெலுங்கு கவிஞர் – நம் அவ்வையார் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
  • லைலா மஜ்னு: – நான் பார்த்ததில்லை. நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்து, சி.ஆர். சுப்பராமன் இசையில், பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது.
  • சவுகாரு: நான் பார்த்ததில்லை. என்.டி. ராமராவ், ஸௌகார் ஜானகி நடித்து எல்.வி. பிரசாத் இயக்கியது. விஜயா ஸ்டுடியோஸ் தயாரிப்பு. ஸௌகார் ஜானகிக்கு உள்ள அடைமொழி இந்த படத்திலிருந்து வந்ததுதான். அவரது முதல் படம். எல்.வி. பிரசாத் முதல் தமிழ் படமான காளிதாசிலும், முதல் தெலுங்கு படமான நடித்திருக்கிறார். கமலஹாசனின் ராஜ பார்வை படத்தில் மாதவிக்கு தாத்தாவாக நடிப்பார். மனோகரா, இருவர் உள்ளம், மிஸ்ஸியம்மா ஆகிய படங்களை இயக்கியவர் இவரே.
  • தீக்ஷா – ஜி. வரலக்ஷ்மி, யாரோ ராம்கோபால் நடித்து, ஆத்ரேயா பாடல்களுடன், கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கியதாம். கேள்விப்பட்டது கூட இல்லை.
  • தேவதாஸ்: ஏ.என்.ஆர்., சாவித்ரி, சி.ஆர். சுப்பராமன் இசை, வேதாந்தம் ராகவையா இயக்கம். இதுதான் எல்லாவற்றிலும் சிறந்த தேவதாஸ் என்று கருதப்படுகிறது – குறைந்த பட்சம் தெலுங்கர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ஓ ஓ ஓ தேவதாஸ் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
  • மல்லேஸ்வரி: பிரமாதமான படம். கிருஷ்ண தேவராயர் ஒரு இரவு பானுமதி தன காதலனிடம் தான் ராணி போல வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். அவளை தனது அந்தப்புரத்துக்கு கூட்டி வருகிறார். ஏ.என்.ஆர்., என்.டி.ஆர். நடித்து, எஸ். ராஜேஸ்வர ராவ் இசையில் பி.என். ரெட்டி இயக்கியது.
  • விப்ரநாராயணா: தொண்டரடிபொடி ஆழ்வாரின் கதை. ஏ.என்.ஆர்., பானுமதி நடித்து, பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். பார்த்ததில்லை.
  • மாயாபஜார்: அருமையான படம். சாவித்ரி, ரங்காராவ் இருவருக்காக மட்டுமே பார்க்கலாம். இசையில் கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் கலக்கி இருப்பார்கள். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர். வேறு. என்.டி.ஆர். இந்த மாதிரி படங்களால்தான் தெலுங்கர்களின் கண்ணில் தேவுடுவாகவே மாறிவிட்டார். இயக்கம் கே.வி. ரெட்டி. தயாரிப்பு விஜயா ஸ்டுடியோஸ்.
  • மூக மனசுலு: ஏ.என்.ஆர., சாவித்ரி. பார்த்ததில்லை.
  • மனுஷுலு மாறாலி: சாரதா நடித்தது. பார்த்ததில்லை.
  • பிரதிகடனா:விஜயசாந்தி நடித்து கிருஷ்ணா இயக்கியது. பார்த்ததில்லை.
  • சங்கராபரணம்: எனக்கு கர்நாடக சங்கீதத்தை கேட்டால் ஓட வேண்டாம் என்று தைரியம் கொடுத்த படம். முதன் முதலாக ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த படம். (க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் 2.10 பைசா டிக்கெட்டை இரண்டரை ரூபாய்க்கு வாங்கினோம்) பாட்டுகள் மிக அருமையாக இருந்தன. கவர்ச்சி நடனம் இல்லாவிட்டால் படம் வேஸ்ட் என்று நினைத்த ஸ்கூல் நாட்களிலேயே இந்த படம் எங்கள் செட்டுக்கு பிடித்திருந்தது. கே.வி. மகாதேவன், எஸ்பிபி, மஞ்சு பார்கவி எல்லாரும் கலக்கிவிட்டார்கள். சோமயாஜுலு, கே. விஸ்வநாத் இருவருக்கு இதுதான் மாஸ்டர்பீஸ்.
  • சுவாதி முத்யம்:தமிழர்களுக்கு தெரிந்த படம்தான். கமல் “நடிப்பதற்காக” எடுக்கப்பட்ட படம். பார்க்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ராதிகா ஹீரோயின், கே. விஸ்வநாத் இயக்கம். வடபத்ர சாயிக்கு பாட்டில் இழையோடும் சோகம் மிக நன்றாக இருக்கும். இசை யார், இளையராஜாவா?
  • ஓசே ராமுலம்மா: தாசரி நாராயண ராவ் இயக்கி நடித்தது. விஜயசாந்தியும் உண்டு. பார்த்ததில்லை.
  • அயித்தே: நீல்காந்தம் என்பவர் இயக்கிய நியூ வேவ் சினிமாவாம். கேள்விப்பட்டதில்லை.
  • ஷிவா: ராம் கோபால் வர்மாவின் முதல் படம். நாகார்ஜுன், அமலா நடித்தது, இளையராஜா இசை. இது வெளியானபோது நான் செகந்தராபாதில் வாழ்ந்தேன். பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஒரு cult film என்றே சொல்லலாம். இன்று யோசித்துப் பார்த்தால் அப்போது புதுமையாக இருந்த திரைக்கதைதான் காரணம் என்று தோன்றுகிறது. மிகவும் taut ஆன, நம்பகத்தன்மை நிறைந்த காலேஜ் காட்சிகள். ரவுடி ரகுவரன், அரசியல்வாதி கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மிக லாஜிகலாக யோசித்தார்கள்.
  • இவற்றுள் யோகி வேமனா, தேவதாஸ், மல்லேஸ்வரி, விப்ரநாராயணா, மாயாபஜார், லைலா மஜ்னு, சவுகாரு, சங்கராபரணம் போன்றவற்றை க்ளாசிக்குகள் என்று சொல்லலாம். நான் பார்த்தவற்றில் மல்லேஸ்வரி, மாயாபஜார், சங்கராபரணம், ஷிவா ஆகியவற்றை சிபாரிசு செய்வேன். நான் சிபாரிசு செய்யும் மற்ற படங்கள்: குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா, கீதாஞ்சலி. மாயாபஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா ஆகியவற்றை 20 வருஷங்களுக்கு முன் செகந்தராபாதில் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம் – தியேட்டர் பாதி நிறைந்திருக்கும், பார்ப்பவர்கள் மிகவும் என்ஜாய் செய்து பார்ப்பார்கள். (அதே போல் பழைய ஹிந்தி படங்களை ஹைதராபாத் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம். பார்ப்பவர்கள் உண்மையில் என்ஜாய் செய்வார்கள். சி.ஐ.டி. படத்தில் வஹீதா ரெஹ்மான் கஹி பே நிகாஹென் கஹி பே நிஷானா என்று பாடிக் கொண்டு வரும்போது தியேட்டர் கூட சேர்ந்து ஆடியது.)

    அவர்கள் (Avargal)


    avargal

    1977ல் வந்தது.

    அவர்கள் மூன்று ஆண்கள், ஒரு பெண். ஆண்கள் – ரஜினி காந்த், ரவிகுமார், கமல்ஹாசன். பெண் – சுஜாதா.மூவரும் சுஜாதாவுடன் தொடர்புடையவர்கள். ரஜினிகாந்த் சாடிஸ மனப்போக்குடைய மாஜிக் கணவன். ரவிகுமார் மென்மையான மனப்போக்கு கொண்ட மாஜிக் காதலன். கமல் அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் கேரள “அசடு”.

    வீட்டில் மனைவிடம் குத்தல், குதர்க்க வார்த்தைகள், மற்றும் சுடுசொற்கள் பேசும் ஈவிறக்கமற்ற கே.ராமனாதன் (ரஜினி), பம்பாய் அலுவலகத்தின் ஏரியா மானேஜர். அவர் திருமணம் செய்வது மனைவியை கொடுமைப்படுத்தவே என்பது போல் சித்தரிப்பது சிறிது உதைக்கிறது. ஏற்கனவே ஒருவரை நேசித்தபெண் என்று தெரிந்தே அனுபாமாவை திருமணம் செய்துகொள்கிறார்.பின் ஏன் கொடுமைப்படுத்துகிறார் என்பது பாலசந்தருக்கே வெளிச்சம். ரஜனி வழக்கமான ஸ்டைலுடன் அசத்துகிறார். வில்லன் ரோல், காமடி ரோல் இவை இரண்டிலும் ரஜினி சோடை போனதில்லை. இதிலும் அப்படித்தான். கதாபாத்திரத்தின் மேல் வெறுப்பை மிக அற்புதமாக வரவழைத்திருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு. (என் மனைவிக்கு மிஸ்டர். ராமனாதன் மேல் வந்த ஆத்திரத்தைப் பார்த்து அதை ஊர்ஜிடப்படுத்த முடிந்தது.) சட்டரீதியாக விவாகரத்து பெற்று, மன ரீதியாக ஜீவனாம்ஸமும் வேண்டாம் என்று அனு கூறிவிட, ராமனாதன் சந்தோஷமாக தன் வழியே போவதை விட்டு விட்டு தன் ஜென்மத்தின் தலையாய குறிக்கோள் அனுவை மாஜிக் காதலனுடன் சேர விடாமல் இருப்பதே என்று கங்கனம் கட்டுவது திரைக்கதையில் பெரிய ஓட்டை.

    பரணியை (ரவிக்குமார்) ஏதோ வேறு ஒரு திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். சட்டென்று நினைவிற்கு வரவில்லை. பாவமான முகத்தை வைத்துக் கொண்டு ஒரு ஜெண்டில்மேன் ஆக வந்து போகிறார். அவர் முக்கிய கேள்விகளுக்கு சிம்பாலிக்காகவே பதில் சொல்வதில் (டெலிபோன் மூலமாக, அனுவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்பதை ஷேவ் செய்து கொண்டு வருவது மூலம் சொல்வது)பாலசந்தருக்கே உரித்தான டச் தெரிகிறது. மாஜிக் கணவன் மீண்டும் வரும் பொழுது தான் ஒதுங்கிக் கொள்வது பரணிக் கேரக்டருக்கு மேலும் மெருகு சேர்க்கிறது. புல்லாங்குழல் ஊதும் பொழுது ஒருவித போஸில் நிற்பது கொடுமையாக இருக்கிறது. பிங் பாங் விளையாடுவதைப் பார்க்கும் பொழுது இவர் நிஜமாகவே இது நிறைய விளையாடியிருப்பார் என்று தோன்றுகிறது. அருமையான் ஸ்மாஷ் ஸ்டைல்கள். எதிரில் ரஜினி கொடுமையாக விளையாடிக் கொண்டிருப்பார்.

    ஜனார்த்தன் – சுருக்கமாக ஜானி சீனியர் – கமல்; ஜானி ஜூனியர் – கமலின் பொம்மையும், வெண்டிரிலோக்விஸமும். ஜானி ஜூனியர் பாலசந்தர் முத்திரை. சீனியர் எப்படா அனு மெட்ராஸ் வருவார் என்று காத்திருந்தவர் போல் உதவுகிறார். மனைவியை ஸ்டவ் பலியாக்கியது முதல் கும்மிடி அடுப்பு தான் உபயோகப்படுத்துவதாக கூறுகிறார். சொதப்பல். திருவனந்தபுரம் புறப்படும் அனுவிடம் தன் காதலுக்கு சாதகமாக பதில் வந்துவிடாதா என்று கடைசிவரை ட்ரெயின் ஜன்னலில் தோன்றி தோன்றி மறைவது அருமையான சீன். அழுத்தக்கார அனு பதிலே பேசாமல் ஏமாற்றிவிடுகிறார். ஆனால் மிகவும் பிராக்டிகல். ஜூனியர் மூலமாக தன் காதலை வெளிப்படுத்தியும் திரைக்கதையின் வசதிக்காக அனு புரிந்துகொள்ளாமல் இருந்துவிடுவது பரணியுடன் மறைமுகமாகவே அதாவது சிம்பாலிக்காகவே சம்பாஷனை செய்யும் அனு காரக்டருக்கு பொருந்தவில்லை. அப்பாவி ஜானி சீனியர் ரோலில் கமல் அலட்சியமாக ஜமாய்த்திருக்கிறார்.

    அனுபாமா (சுஜாதா) மிகுந்த புத்திசாலியாக அறிமுகப்படுத்தப்படுகிறார். பின் உண்மையில் ஒரு முட்டாள் பெண் என்று ராமனாதனின் அம்மா எல்லோருக்கும் புரிய (?) வைத்துவிடுகிறார். முற்போக்கிற்கும், பாரம்பரியத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு முட்டாள் என்ற பெயர் பொருத்தம் நியாயம் அளிக்காது. எதற்க்கும் அழாத அனு கடைசியில் தன் சுகங்களை துறந்து தன்னுடன் திருவனந்தபுரம் கிளம்பிவிடும் மாமியாரின் மேன்மையான, மென்மையான குணத்த்திற்கு அணையை உடைத்து விடுகிறார்.

    ராமனாதனின் அம்மா – (யாரிவர்? – லீலாவதி என்று பெயர் பார்த்தேன்)  குற்ற உணர்ச்சி மிக்க மாமியார். மகன் செய்யும் கொடுமைகளுக்கு இவர் வேலைக்கார ஆயாவாக வந்து பிராயசித்தம் செய்துகொள்கிறார். பாத்திரம் கற்பனைக்கு நன்றாக இருக்கிறது.பெண்களை நிச்சயம் கவரும். ஆமாம். எல்லாருக்கும் தலை சிறந்த மாமியார் கிடைப்பது என்பது கற்பனையுடன் நின்று விடுகிறது.

    கே.பாலச்சந்தரின் டிலெம்மா இதுவே. சட்டபூர்வமாக விவாக ரத்து ஆன பெண், மத பூர்வமாக திருமணத்தின் போது கணவனால் கட்டப்பட்ட தாலியை என்ன செய்யவேண்டும்? போனால் போகட்டும் என்று கழுத்திலேயே விட்டுவிடுவதா? மறுமணத்திற்கு இடைஞ்சல் கொடுக்குமே? கடைசியில் கோவில் உண்டியலில் விடைப் பெற்றுவிடுகிறார்.

    ”இப்படிஓர் தாலாட்டு”, ”ஜூனியர் ஜூனியர், இரு மனம்” மற்றும் “காற்றுக்கென்ன வேலி” பாடல்கள் கேட்கும் படியாக இருக்கிறது.  அனைத்துப் பாடல்களையும் SPB, S.ஜானகி மட்டுமே பாடியிருக்கிறார்கள்.  M.S. விஸ்வனாதன் இசை.

    பாலச்சந்தர் கிளாசிக்.

    10க்கு 6.