விடுதலை போராட்டத்தில் பிரபல நடிகர்கள்


இந்திய விடுதலையின் வெள்ளி விழா சமயத்தில் – ஆகஸ்ட் 1972இல் – விகடனில் வந்த கட்டுரை. பல நாடக நடிகர்கள் சுதந்திரப் போராட்ட காலத்து நினைவுகளை, போராட்டத்தில் அவர்கள் பங்கை நினைவு கூர்கிறார்கள். விகடனுக்கு நன்றி!

பொழுதுபோக்குக்காகத்தான் கலை என்ற சிந்தனையை மாற்றி, தங்களுடைய வீரமிகு பேச்சாலும், உணர்ச்சிமிகு நடிப்பாலும் தேசியப் பணியாற்றியுள்ளார்கள் எண்ணற்ற கலைஞர்கள். அவர்களில் சிலர் தங்கள் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

கே.சாரங்கபாணி:
சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, நான் திரு.ஜகன்னாதையர் கம்பெனியான மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சித சங்கீத சபாவில்தான் நடிகனாக இருந்தேன்.

காலைப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், கருத்துகளையும் அன்றைய நாடகத்திலேயே சிலேடையாகப் புகுத்திப் பிரசாரம் செய்வோம். பதிபக்தி, பஞ்சாப் மெயில், தேசியக் கொடி, கதரின் வெற்றி என்று பல நாடகங்களைப் போட்டிருக்கிறோம்.

கதரின் வெற்றி நாடகம், இங்கிலாந்தில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் முன்னால் எங்கள் குழுவினரால் நடித்துக் காட்டப்பட்டு, மெடல், சர்ட்டிபிகேட் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தது. ஆனால், அதே நாடகம் இந்தியாவில் நடத்தக்கூடாது என்று தடை செய்யப்பட்டது.

நாடகத்திலே தேசியக் கொடியைக் காட்டக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்கள். எப்படியாவது காட்டிவிடவேண்டும் என்று எங்களுக்குள் ஒரு தீர்மானம். போலீஸ் கெடுபிடி வேறு. கடைசியில் ஒரு தந்திரம் செய்தோம். மூன்று பையன்களுக்கு தேசியக் கொடியின் மூன்று கலர்களிலும் உடை அணிவித்து, கொடியைப் போல் மேடையில் நிற்க வைத்தோம். அதைப் புரிந்துகொண்டுவிட்ட மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

கே.பி.சுந்தராம்பாள்:
அப்போதெல்லாம் சத்தியமூர்த்தி மேடைகளில் முழங்குவார். நான் தேசியப் பாடல்களைப் பாடுவேன். ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம் என்று நாங்கள் இருவரும் போகாத இடமேயில்லை. ‘பாட்டாலேயே சுந்தராம்பாள் வெள்ளைக்காரனை அடிச்சு விரட்டிடுவார்’ என்று நண்பர்கள் சொல்லுமளவுக்கு என் பாட்டில் உணர்ச்சி கொப்பளிக்கும்.

எனக்கு எங்கே போனாலும் தடை. பின்னாலேயே சி.ஐ.டி-க்கள்! என் பாட்டைக் கேட்டுப் பல ஆங்கிலேயர்கள் கூடக் கட்சியில் வந்து சேர்ந்தார்கள்.

நாகையா:
நான் சித்தூரில் ரெவின்யூ துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். வருஷம் 1922.

கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு நாள் சத்தியமூர்த்தி சித்தூருக்கு வந்து, நானும் போராடவேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டார். அப்போது என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. இருந்தாலும் சுதந்திர உணர்ச்சி காரணமாக நான் கிளம்பிவிட்டேன்.

சித்தூரிலிருந்து 30, 40 மைல் தள்ளி ஒரு கிராமத்தில் கள்ளுக் கடை மறியல் போராட்டம் நடந்தது. அந்தக் கிராமத்தில் போய் இறங்கியவுடனேயே, ஒரு கள்ளுக்கடையின் முன்னால் உருக்கமாகத் தேசியப் பாடல்களைப் பாடினேன். அப்போது கள்ளுக்கடையிலிருந்து ஒருவன் வெளியே வந்து, வாயில் இருந்த கள்ளை என் முகத்தில் காறித் துப்பிவிட்டான். அப்படியும் நான் விடமல், அவன் காலில் விழுந்து, குடிப்பதை விடும்படி வேண்டினேன்.

அன்று மறியல் செய்துவிட்டு நான் சித்தூர் திரும்பியபோது, என் மனைவி சித்தூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறந்து கிடந்தாள்!

டி.கே.சண்முகம்:
அரசியல் விஷயங்களில் எங்கள் நாடகக் குழு தொடர்பு கொள்ள ஆரம்பித்தது 1931-ம் ஆண்டில்தான். பண்டித மோதிலால் நேரு இறந்தபோது கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஓர் அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதல் முதலாகப் பாட்டுக்கள் பாடினேன்.

அப்போது கிளம்பிய தேசிய உணர்ச்சியில், வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘பாணபுரத்து வீரன்’ என்ற நாடகத்தை நடத்த எண்ணினோம். ஆனால் அது சர்க்காரால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த நாட கத்தை ‘தேசபக்தி’ என்று மாற்றி நடத்தினோம். அந்த நாடகம் மக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எஸ்.வி.சகஸ்ரநாமம்:
அப்போது நான் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் டி.கே.எஸ். அவர்களோடு இருந் தேன். அவர் நடத்திய ‘தேச பக்தி’ நாடகத்தில் வாலீசன் என்ற பாத்திரத்தை நான் ஏற்றேன். அது ஏறக்குறைய பகத் சிங்கைப் பிரதிபலிப்பதுதான். நான் வாலீசனாக மேடையில் தோன்றினாலே, ஜனங்கள் எல்லாம் ‘பகத்சிங்குக்கு ஜே’ என்று கோஷம் போடுவார்கள்.

முதல் முதலாக இந்த நாடகத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காந்திஜியின் வரலாற்றை வில்லுப் பாட்டாகப் பாடி அரங்கேற்றினார்.

கமல் சிபாரிசுகள் – திரையில் வந்த புத்தகங்கள்


ஒரிஜினல் லிஸ்ட் இங்கே. பாஸ்டன் பாலாவுக்கு நன்றி!

சைரனோ டி பெர்கராக், Cyrano de Bergerac – எட்மண்ட் ரோஸ்டாண்ட் எழுதிய புத்தகம். வெகு நாட்களுக்கு முன் படித்த நாடகம், கதை மட்டுமே மங்கலாக நினைவிருக்கிறது. ஹோசே ஃபெர்ரர் நடித்து ஒரு முறை, ஜெரார்ட் டிபார்டியூ நடித்து ஒரு முறை வந்திருக்கிறது. இரண்டையும் கமல் குறிப்பிடுகிறார், இரண்டையும் நான் பார்த்ததில்லை.

ஸ்பார்டகஸ், Spartacus – ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய நாவல். ஸ்டான்லி குப்ரிக் இயக்கி கிர்க் டக்ளஸ் நடித்த புகழ் பெற்ற படம். என் கண்ணில் சுமாரான படம்தான். நாவல் படித்ததில்லை.

எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச், A Clockwork Orange – அந்தோனி பர்ஜஸ் எழுதிய நாவல். படித்ததில்லை. ஸ்டான்லி குப்ரிக் இயக்கி மால்கம் மக்டொவல் நடித்தது. பிரமாதமான படம். குப்ரிக் கலக்கிவிட்டார்.

லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட், Last Temptation of Christ – நிகோலாய் கசான்ட்சாகிஸ் எழுதிய நாவல். மார்டின் ஸ்கொர்ஸஸி இயக்கி இருக்கிறார். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.

பீயிங் தேர், Being There – ஜெர்சி கொசின்ஸ்கி எழுதிய நாவல். ஹால் ஆஷ்பி இயக்கி பீட்டர் செல்லர்ஸ் நடித்தது. படித்ததில்லை, ஆனால் படம் பார்த்திருக்கிறேன். சுமாரான படம்.

ட்ரெய்ன்ஸ்பாட்டிங், Trainspotting – இர்வின் வெல்ஷ் எழுதிய நாவல். ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் டான்னி பாயில் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

பர்ஃப்யூம், Perfume – யாரோ பாட்ரிக் சுஸ்கிண்ட் எழுதியதாம். டாம் டைக்வர் இயக்கியதாம். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

சிட்டி சிட்டி பாங் பாங், Chitti Chitti Bang Bang – ஜேம்ஸ் பாண்ட் புகழ் இயன் ஃப்ளெமிங் எழுதிய சிறுவர்களுக்கான புத்தகம். டிக் வான் டைக் நடித்தது. படம் சிறுவர் சிறுமிகளுக்கு பிடிக்கும். நாவல் படித்ததில்லை.

க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன், Curious Case of Benjamin Button – ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதிய சிறுகதை. ப்ராட் பிட் நடித்து டேவிட் ஃபிஞ்சர் இயக்கியது. இந்த வருஷ ஆஸ்கார் போட்டியில் ஸ்லம்டாக் மில்லியனருக்கு பெரும் போட்டியாக இருந்தது. படித்ததில்லை, இன்னும் பார்க்கவும் இல்லை.

ஃபாரஸ்ட் கம்ப், Forrest Gump – வின்ஸ்டன் க்ரூம் எழுதியது. டாம் ஹாங்க்ஸ் நடித்து ராபர்ட் ஜெமகிஸ் இயக்கியது. சராசரிக்கு மேலான படம். பல ஆஸ்கார் விருதுகளை வென்றது. ஆனால் அந்த சமயத்தில் வந்த பல்ப் ஃபிக்ஷன், ஷாஷான்க் ரிடம்ப்ஷன் ஆகியவை இதை விட சிறந்த படங்கள். புத்தகம் படித்ததில்லை.

மாரத்தான் மான், Marathon Man– வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். டஸ்டின் ஹாஃப்மன், லாரன்ஸ் ஒலிவியர் நடித்து ஜான் ஷ்லேசிங்கர் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.

மாஜிக், Magic – இதுவும் வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். அந்தோனி ஹாப்கின்ஸ் நடித்து ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

டிராகுலா, Dracula – ப்ராம் ஸ்டோகர் எழுதிய நாவல். கமல் ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய படத்தை சொல்கிறார். நான் பார்த்திருப்பது பழைய பேலா லுகோசி நடித்த படம்தான். லுகொசி ஒரு eerie உணர்வை நன்றாக கொண்டு வருவார். நாவல் சுமார்தான், ஆனால் ஒரு genre-இன் பிரதிநிதி.

காட்ஃபாதர், Godfather – மரியோ பூசோ எழுதியது. அல் பசினோ, மார்லன் பிராண்டோ நடித்து ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய மிக அருமையான படம். நல்ல நாவலும் கூட.

கமல் கொஞ்சம் esoteric படங்களை விரும்புவார் போல தெரிகிறது. எனக்கு மிகவும் பிடித்த, மிக அற்புதமான நாவலும், அருமையான படமும் ஆன To Kill a Mockingbird-ஐ விட்டுவிட்டாரே!

கமலின் லிஸ்டில் காட்ஃபாதர் மட்டுமே நல்ல புத்தகம், மற்றும் நல்ல படம் – என்னைப் பொறுத்த வரையில். நான் படித்திருக்கும் புத்தகமும் அது ஒன்றுதான். கமல் சொல்லி இருக்கும் படங்களில் நான் பாதிக்கு மேல் பார்த்ததில்லை. பார்த்த வரையில் காட்ஃபாதர் மற்றும் எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச் மட்டுமே பார்க்க வேண்டிய படம். ஆனால் அவர் சொல்லி இருக்கும் படங்களில் பல பிரபலமான படங்கள் – ஸ்பார்டகஸ், ஃபாரஸ்ட் கம்ப், பெஞ்சமின் பட்டன், சிட்டி சிட்டி பாங் பாங் – இருக்கின்றன. பார்த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். நீங்கள் கமலின் தேர்வுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தொடர்புடைய பதிவுகள்
கமல் சிபாரிசுகள் – சிறந்த திரைக்கதைகள் உள்ள தமிழ் படங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன்


சிவாஜியைப் பற்றி பொதுவாக சொல்லப்படும் குறை அவர் ஓவர்ஆக்ட் செய்கிறார், மெலோட்ராமா என்பதுதான். உண்மையில் குறை அதுவல்ல. மெலோட்ராமா என்பது ஒரு விதமான ஸ்டைல். பாய்ஸ் நாடகங்கள், தெருக்கூத்து, ஜப்பானிய கபூகி நாடகங்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், musicals எல்லாவற்றுக்கும் ஒரு ஸ்டைல், இலக்கணம் இருக்கிறது. சிவாஜியின் படங்களையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். குறை அவர் படங்கள் – அதுவும் பிற்காலப் படங்கள் – அவருக்கு “நடிக்க” ஸ்கோப் உள்ள காட்சிகளின் தொகுப்பாக இருப்பதுதான். சினிமா என்பது வெறும் சீன்களின் தொகுப்பல்ல. இதை அவரும் உணரவில்லை, அவர் காலத்து இயக்குனர்களும் உணரவில்லை. அந்த காலத்து ரசிகர்கள் உணர்ந்தார்களா என்பதும் சந்தேகமே.

இதனால்தான் அவரது significant number of படங்கள் உணர்ச்சிகளின் உச்சத்தை வெளிப்படுத்தும் சீன்களின் தொகுப்பாக, அவர் மட்டுமே வியாபித்திருக்கும் கதைகளாக, மிக சுலபமாக கிண்டல் அடிக்கப்படுபவையாக இருக்கின்றன. கமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் – சிவாஜி சிங்கம், ஆனால் அவருக்கு தயிர் சாதம் மட்டுமே போடப்பட்டது என்று. அதில் உண்மை இருக்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த குறைகளை சுலபமாக தாண்டுகின்றது. கட்டபொம்மன் உணர்ச்சிப் பிழம்புதான். ஓவர் ஆக்டிங், மெலோட்ராமா, over the top performance போன்ற வழக்கமான “குற்றச்சாட்டுகளை” அள்ளி வீசலாம்தான். ஆனால் யாராக நடிக்கிறார்? ஒரு larger than life icon, நாட்டுப்புற பாட்டுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தொன்மம், சரித்திரத்தை தாண்டி ஐதீகமாக மாறிவிட்ட ஒரு மனிதனை இப்படி நடித்துக் காட்டுவது மிக பொருத்தமாக இருக்கிறது.

கட்டபொம்மன் ஜாக்சன் துரையை பார்த்து எங்கள் மங்கலப் பெண்டிருக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா என்று கேட்டாரா என்பது சந்தேகம்தான். அப்படி கட்டபொம்மன் கர்ஜித்திருந்தால் அது ஜாக்சன் துரைக்கு புரிந்திருக்குமா என்பது அதை விட பெரிய சந்தேகம். ஆனால் சிவாஜி கொண்டு வருவது சரித்திரத்தை தாண்டிப்போய்விட்ட கட்டபொம்மன் என்ற இதிகாச மனிதரை. கட்டபொம்மனை ஒரு இதிகாசமாக, தொன்மமாக, icon ஆக மாற்றியதில் நாட்டுப்புற பாடல்களுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே அளவு பங்கு இந்த நடிப்புக்கும் உண்டு. இந்த performanceஇன் தாக்கம் இல்லாத தமிழ் நடிகர் யாருமில்லை. பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன் மூன்று படங்களும் மெலோட்ராமா என்பது கெட்ட வார்த்தை இல்லை என்பதை இன்றும் உணர்த்தும் படங்கள்.

பந்துலு சிறந்த தயாரிப்பாளர். பணம் முக்கியம்தான், ஆனால் படம் நன்றாக வருவது அதை விட முக்கியம் என்று நம்பியவர். கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் மாதிரி படங்களில் பணத்தை வாரி இறைத்தார். வெள்ளைக்காரனை எதிர்த்து போராடியவர்களை திரைப்படத்தில் கொண்டு வந்ததற்காக எப்போதும் நினைவிளிருப்பார். (கன்னடத்தில் கிட்டூர் ராணி சென்னம்மா எடுத்தார். சென்னம்மா கன்னட கட்டபொம்மி.)

1959-இல் வந்த படம். சிவாஜி, எஸ். வரலக்ஷ்மி, ஜெமினி, பத்மினி, ஓ.ஏ.கே. தேவர், ராகினி, ஜாவர் சீதாராமன், வி.கே. ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், ஏ. கருணாநிதி, டி.பி. முத்துலட்சுமி நடித்தது. ஜி. ராமநாதனின் அற்புதமான இசை. பந்துலுவே இயக்கினார் என்று நினைக்கிறேன்.

சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களில் அனல் பறக்கிறது. அவற்றை ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க சிம்மக் குரல். பத்திக்கிச்சு!

இதற்கும் கதை எழுத வேண்டுமா என்ன?

சிவாஜி ஜாக்சன் துரையிடம் பேசுவது தமிழ் சினிமாவில் ஒரு seminal moment. Enough said.

ஜெமினி-பத்மினி காதல் கதை படத்தின் வீக்னஸ். படத்தின் தீவிரத்தை குறைக்கிறது. அதுதான் இயக்குனரின் எண்ணம், என்றாலும் சுலபமாக தம் அடிக்க வெளியே போய்விடலாம். படத்தின் தீவிரத்தை அதிகரிக்க ஊமைத்துரையின் காரக்டரை டெவலப் செய்திருக்கலாம். ஓ.ஏ.கே. தேவருக்கு ஏதாவது வசனம் உண்டா என்று யோசித்துப் பார்க்கிறேன், அவர் வாயை திறந்த மாதிரியே தெரியவில்லை. அதே போல எட்டப்பனும் ஒரு கார்ட்போர்ட் கட்அவுட்தான். ஜாவர் ஒருவர்தான் படத்தில் கொஞ்சம் நிற்கிறார்.

பாட்டுகள் அபாரம். ஜி. ராமநாதன் கொன்றுவிட்டார்.

இன்பம் பொங்கும் வெண்ணிலாதான் என் ஃபேவரிட். அதுவும் பிபிஎஸ் “உன்னைக் கண்டு” என்று கேட்கும் தருணம்!

எஸ். வரலக்ஷ்மி கலக்கிய படம். அவருடைய கனமான குரல் என்ன சுகமாக “சிங்காரக் கண்ணே உன் தேனூறும் செவ்வாயால்” என்று பாடுகிறது? அதுவும் “உன் வாய் முத்தம் ஒன்றாலே” என்ற வார்த்தைகளை கொஞ்சம் வேகமாக பாடுவது மிக நன்றாக இருக்கும். “மனம் கனிந்தருள் வேல்முருகா” குழந்தைகளுக்கு சாமி பாட்டாக சொல்லித் தரலாம். அப்புறம் “டக்கு டக்கு” என்று ஒரு பாட்டு. கேட்கக் கூடிய பாட்டுதான், ஆனால் இதை எல்லாம் கருணை காட்டாமல் எடிட்டிங் டேபிளில் கட் பண்ணி இருக்க வேண்டும். படத்தின் ஓட்டத்தில் ஒரு ஸ்பீட்பிரேக்கர் மாதிரி வரும்.

ஜி. ராமநாதனின் பாட்டுகள் எப்போதும் இரண்டு வகை. ஒன்று கர்நாடக சங்கீதத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட highbrow பாட்டுகள். இரண்டு நாட்டுப்புற பாட்டு, டப்பாங்குத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட lowbrow பாட்டுகள். “மாட்டு வண்டியை பூட்டிக்கிட்டு” இரண்டாவது வகை. நல்ல, ஆனால் கவனிக்கப்படாத பாட்டு. “ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி” என்ற இன்னொரு நல்ல பாட்டும் “அஞ்சாத சிங்கம் உன் காளை” என்று ஒரு சுமாரான பாட்டும் உண்டு. ஆத்துக்குள்ளே பாட்டு (ஏ.கருணாநிதி நகைச்சுவை பகுதி எல்லாமே) ஸ்பீட்ப்ரேக்கர்தான்.

Highbrow வகையில், நாடக பாரம்பரியம் உள்ள பாட்டு போகாதே போகாதே என் கணவா. எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை. அதுவும் படமாக்கப்பட்ட விதம்! சின்னப்பிள்ளைக்கு சொல்கிற மாதிரி வாழை மரம் விழக் கண்டேன் என்றால் ஒரு வாழை மரத்தை வெட்டி காண்பிப்பார்கள். அதுவும் பத்மினியின் ஓவர்ஆக்டிங் வேறு கொடுமையாக இருக்கும்.

சிவாஜிக்கு பாட்டு கிடையாதோ? வெற்றி வடிவேலனே என்று ஒரு தொகையறா வரும் அது யார் பாடுவதாக வரும் என்று நினைவில்லை. சிவாஜிதானோ?

வேறு பாட்டுகள் எனக்கு நினைவில்லை. சாரதா எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

சிவாஜியின் seminal நடிப்பு, பந்துலுவின் நல்ல தயாரிப்பு, ஜி. ராமநாதனின் அற்புதமான இசை, எஸ். வரலக்ஷ்மியின் குரல், எடுத்துக்கொள்ளப்பட்ட subject matter ஆகியவற்றுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.

தொடர்புடைய பதிவுகள்
வீரபாண்டிய கட்டபொம்மன் விகடன் விமர்சனம்
ம.பொ.சி – ஒரு மதிப்பீடு
கப்பலோட்டிய தமிழன்
மனோகரா, விகடன் விமர்சனம்
பராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்
ஆயிரத்தில் ஒருவன்
எஸ். வரலக்ஷ்மி அஞ்சலி

வீரபாண்டிய கட்டபொம்மன் – விகடன் விமர்சனம்


படம் வந்தபோது – மே 1959 – விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

மாணி: வெற்றிவேல்! வீரவேல்!

முனு: என்ன தம்பி, முதல் காட்சியே பார்த்துட்டியா?

மாணி: முதல் முழக்கம் செய்த தமிழ் மகனுடைய படம். தமிழிலே முதல் சரித்திரப் படம். பார்க்காம இருப்பேனா? அதிலும் சிவாஜி நடிப்பு இருக்கே…

முனு:- ஒண்ணும் சொல்லாதே தம்பி!

மாணி:- ஏன் அண்ணே..?

முனு:- அவர் நடிப்பைப் பற்றி இனி யாரும் புகழ வேண்டிய அவசியம் கிடையாது. அவர் ஒரு தனிப்பிறவி தம்பி! சரி, சண்டைக் காட்சியெல்லாம் எப்படி இருக்கு?

மாணி: நல்லா எடுத்திருக்காங்க அண்ணே! இங்கிலீஷ்கார சோல்ஜர்களும் தமிழ்நாட்டு வீரர்களும் ரொம்ப ரோசமாச் சண்டை போடறாங்க. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளைக்காரன் குண்டு போட்டுத் தகர்த்தெறிகிற காட்சியைப் பார்க்கிறபோது, இவ்வளவு கொடுமை செஞ்சிருக்கிறானே வெள்ளைக்காரன், அவனைச் சாதாரணமா ஊருக்குப் போக விட்டுட்டோமேன்னு தோணிச்சண்ணே!

கவிதையும் வசனமும் கரும்பு போல் இருக்கு. காதலும் வீரமும் போட்டி போட்டுக்கிட்டு வருது.

முனு: காதலர்கள் யார் யார்?

மாணி: ஜக்கம்மாவா எஸ். வரலட்சுமி வருது. சொந்தக் குரல்லே இரண்டு பாட்டு உருக்கமா பாடுது. நல்லா நடிச்சிருக்குது. ஊமைத் துரையா ஓ.ஏ.கே. தேவரும், அவரு மனைவியா ராகினியும் வராங்க. ஊமைத்துரையைப் பேருக்குப் பொருத்தமா விட்டுட்டாங்க.நடிப்புக்கு அதிக வாய்ப்பில்லே! வெள்ளையத் தேவரா ஜெமினி கணேசன் வராரு.

முனு: வெள்ளையம்மா யாரு?

மாணி: பத்மினிதான்! ‘போகாதே போகாதே என் கணவா’ன்னு பாடி வழியை மறைக்கிறபோது பெண் குலமே அழுதுடும். கணவன் போரில் இறந்தவுடனே, தானும் போர்க்களத்திலே குதிச்சு பழி வாங்கற காட்சியைப் பார்த்தா ஆண் குலத்துக்கு வீரம் வந்துடும். வீரத் தமிழ் மங்கைன்னா அதுதான் அண்ணே!

முனு: கலர் எப்படி?

மாணி: கண் குளிர்ந்தது அண்ணே! வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் குளுகுளுன்னு இருக்கு. திருச்செந்தூர் முதல் ஜெய்ப்பூர் வரைக்கும் பார்க்கப் பார்க்க அழகாயிருந்தது. பணச் செலவைப் பார்க்கவேயில்லை.

முனு: மற்ற நடிகர்களைப் பற்றி ஏதாவது…

மாணி: வி.கே. ராமசாமி எட்டப்பனா வராரு. ஜாவர் சீதாராமன் பானர்மென் துரையா வந்து பஸ்டு கிளாஸா நடிச்சிருக்காரு. இன்னும் கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால், பக்கிரிசாமி, முத்துலட்சுமி…

முனு: எல்லாருமே இதை ஒரு பாக்கியமா எண்ணி நடிச்சிருப்பாங்க தம்பி. சரி, அப்புறம்..?

மாணி: பிரமாண்டமான சண்டைகளுக்கு நடுப்புற குளோசப்லே வர கத்திச் சண்டைகள் சுமார்தான்! டைரக்டர் பி.ஆர்.பந்துலு முதல்லே நேரிலே வந்து, அவையடக்கமாப் பேசறாரு. அப்புறம், படம் பூரா அவருடைய திறமை தெரியுது.

முனு: மொத்தத்திலே…

மாணி: பார்த்தவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத படம் கட்டபொம்மன். சிவாஜி கணேசன் அப்படி நடிச்சிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை தரும் படம் அண்ணே!

தொடர்புடைய பதிவுகள்
ம.பொ.சி. – ஒரு மதிப்பீடு

நாடோடி – என் விமர்சனம்


நாடோடி எம்ஜிஆரின் தண்டப் படங்களில் ஒன்று. எம்ஜிஆரும் தயாரிப்பாளர்-இயக்குனர் பந்துலுவும் சொதப்பிவிட்டார்கள். எனக்கென்னவோ இது சிவாஜிக்காக எழுதப்பட்ட கதையோ என்று ஒரு சந்தேகம். கதையில் ஆக்ஷன் குறைவு, செண்டிமெண்ட் அதிகம். அதுவும் குழந்தைக்கதை மாதிரி நம்பியார் மருந்து போட்டு டெம்பரரியாக ஆனால் பெர்மனேன்டாக எம்ஜிஆரையும் சரோஜா தேவியையும் குருடாக வைத்திருப்பார். என்ன சின்னப்பிள்ளைத்தனமா இல்ல இருக்கு?

ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு பந்துலு எம்ஜிஆர் கூட்டணியில் வந்த படம் இதுதான் என்று நினைக்கிறேன். 1966இல் வந்திருக்கிறது. பந்துலு நஷ்டப்பட்டிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். இதை விட மோசமான முகராசி, தேர்த்திருவிழா எல்லாம் எம்ஜிஆர் முக ராசியில் கையை கடிக்கவில்லையாம். இதை விட மோசமாக படம் எடுப்பது பெரும் கஷ்டம், அதை எல்லாம் தேவர்தான் செய்ய முடியும். சாரதா மாதிரி யாராவது இந்த படம் எப்படி ஓடியது என்று தெரிந்தால் சொல்லுங்களேன்!

இதுக்கு கதை எல்லாம் சொல்லி நானும் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. பாரதி இந்த படத்தில்தான் அறிமுகம் ஆனார். பார்க்க அழகாக இருப்பார். பந்துலு கன்னட நடிகைகளை – தங்கமலை ரகசியத்தில் சரோஜா தேவி, ஆயிரத்தில் ஒருவனில் மைசூர் பாரம்பரியம் உள்ள ஜெயலலிதா, இதில் பாரதி – என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் ஒரே ப்ளஸ் பாயின்ட் பாட்டு. எம்எஸ்வி இரண்டு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். உலகமெங்கும் ஒரே மொழி மிக நல்ல பாட்டு. எனக்கு மிக பிடித்த பாட்டு இதுதான். அன்றொரு நாள் இதே நிலவில் இன்னொரு நல்ல பாட்டு. என் கண்ணில் இரண்டாம் இடம்தான், ஆனால் இதுதான் பிரபலமான பாட்டு. இரண்டையும் இங்கே கேட்கலாம். உலகமெங்கும் ஒரே மொழி வீடியோ கீழே.

இவற்றைத் தவிர நாடு அதை நாடு என்று ஒரு சுமாரான பாட்டு உண்டு. எனக்கு வேறு பாட்டுகள் நினைவில்லை. சாரதா லிஸ்ட் கொடுத்திருக்கிறார் – அப்படியும் நினைவு வரவில்லை.

  1. அன்றொரு நாள் இதே நிலவில் – டிஎம்எஸ், சுசீலா
  2. அன்றொரு நாள் இதே நிலவில் – சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி
  3. உலகமெங்கும் ஒரே மொழி – டிஎம்எஸ், சுசீலா
  4. திரும்பி வா ஒளியே திரும்பி வா – டிஎம்எஸ், சுசீலா
  5. நாடு அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு – டிஎம்எஸ், சுசீலா
  6. ரசிக்கத்தானே இந்த அழகு – சுசீலா
  7. பாடும் குரலிங்கே பாடியவன் எங்கே – சுசீலா
  8. கண்களினால் காண்பதெல்லாம் – டிஎம்எஸ், சுசீலா (படத்தில் இல்லை)

சாரதா “விமர்சனம் என்றால் அப்படத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் (ஓரளவேனும்) உள்ளடக்கியதாக இருக்க வேண்டாமா?. இரண்டு பேர் உட்கார்ந்து வெறுமனே கதைச்சுருக்கம் பேசுவதுதான் விமர்சனமா?” என்று கேட்கிறார். நியாயம்தான். ஆனால் படம் மகா தண்டம். விகடன் விமர்சனத்தில் முனுசாமி சொல்வது – “ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.” மிகச்சரி. எனக்கு பிடித்த பாட்டுகள்தான் விகடனுக்கும் பிடித்திருந்தனவோ என்னவோ.

பாட்டு மட்டும் கேளுங்கள்/பாருங்கள். படம் தண்டம். பத்துக்கு மூன்று மார்க். (உலகமெங்கும், அன்றொரு நாள் பாட்டுகளுக்கு தலா ஒரு மார்க், பாரதிக்கு ஒரு மார்க்). D grade.

தொடர்புடைய பதிவுகள்
விகடன் விமர்சனம்

நாடோடி – விகடன் விமர்சனம்


படம் வந்தபோது – மே 1966இல – விகடனில் வந்த விமர்சனம். விகடனுக்கு நன்றி!
.
முனுசாமி – மாணிக்கம்

முனுசாமி: தாழ்ந்த சாதியிலே பிறந்த தியாகுவை, உயர்ந்த சாதியிலே பிறந்த மீனாங்கற பெண் காதலிக்குது. சாதி வெறி பிடிச்ச மீனாவின் தந்தை தர்மலிங்கம் இதைத் தடுக்கிறாரு. அதனாலே மீனா உயிரை விட்டுடுது.

மாணிக்கம்: அடப் பாவமே! ஆமா, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு வருதே! எந்தக் காலத்துக் கதை இது?

முனு: கிராஸ் பண்ணாதே! கதையைக் கேளு. மீனாவுக்கு ராதான்னு ஒரு தங்கை. மீனாவின் காதலன் தியாகுவை, தானே மணந்து சாதி வெறியைத் தரை மட்டமாக்கப் போறேன்னு அது அப்பங்காரனைப் பார்த்துச் சவால் விடுது.

மாணி: இது என்ன சவால்? இந்தப் பொண்ணு அவனை மணந்துக்கிட்டா, சாதி வெறி தரை மட்டமாயிடுமா?

முனு: பார்த்தியா! பணம் குடுத்துப் படம் பார்த்த நானே இதெல்லாம் கேட்கமுடியலே! நீ என்னமோ…

மாணி: சரி, அப்புறம்?

முனு: ஒரு வில்லன்.

மாணி: நம்பியார்தானே?

முனு: ஆமாம். அவரும் ஒரு தாழ்ந்த சாதிக்காரரு. தர்மலிங்கத்தாலே ஜெயிலுக்குப் போறாரு. அதனால தர்மலிங்கத்தின் பேரிலே அவருக்கு படா கோவம். தியாகுவா வர எம்.ஜி.ஆரும், ஜம்புவா வர நம்பியாரும் ஒரே ஜெயில்லே சந்திக்கிறாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் பொது எதிரி தர்மலிங்கம். ஜம்பு விடுதலை ஆகி வெளியே போனதும், முதல் காரியமா தர்மலிங்கத்தைப் பழி வாங்கறதுக்காக அவர் பெண் ராதாவைக் கடத்திக்கிட்டுப் போய் குகையிலே வெச்சு, கண்ணைக் குருடாக்கிடறாரு. குருடுன்னா எப்போதும் குருடு இல்லே! வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஒரு மருந்து போட்டு அந்தப் பெண்ணைக் குருடாக்கிடுவாரு. அதாவது வாரக் குருடு! அந்தக் குகைக்கு எம்.ஜி.ஆர் வந்து சேர்ராரு. அங்கே ராதாவைச் சந்திக்கிறாரு, அவளை வில்லனுக்குத் தெரியாம கடத்த முயற்சிக்கிறாரு. அது தெரிஞ்சதும் எம்.ஜி.ஆர். கண்ணுக்கும் மருந்து போட்டு குருடாக்கிடறாரு வில்லன்.

மாணி: முடிவா என்னதான் சொல்றே?

முனு: ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.

குமாஸ்தாவின் பெண்


ராண்டார்கை திரும்பவும் ஒரு ரொம்ப பழைய படத்தை பற்றி ஹிந்துவில் வரும் Blast from the Past பத்தியில் எழுதி இருக்கிறார். குமாஸ்தாவின் பெண். 1941-இல் வந்திருக்கிறது. படத்தின் பேரை எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறது. “Remembered for: its interesting storyline, impressive performances by Rajamma, Shanmugham and KRR.” என்று எழுதுகிறார். இவர் இந்த படத்தை, performance-ஐ எல்லாம் பார்த்தாரா இல்லை எங்கேயாவது படித்ததை வைத்து ஓட்டுகிறாரா என்று தெரியவில்லை. இந்த மாதிரி பழைய படம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பிரிண்ட் இருக்கிறதா?

டி.கே. ஷண்முகம், டி.கே. பகவதி, கே.ஆர். ராமசாமி, எம்.வி. ராஜம்மா (இவர் பந்துலுவின் மனைவி என்று நினைக்கிறேன்), எம்.எஸ். திரௌபதி நடித்திருக்கிறார்கள். நாடகமாகவும் சக்கைப்போடு போட்டதாம். இயக்குனர் ஏ.பி. நாகராஜன்தான் நாடகத்தில் ஸ்த்ரீபார்ட்!

ராண்டார்கையின் account சுவாரசியமாக இருக்கிறது. இதில் ஒரு டைரக்டரை வேறு கிண்டல் செய்து எடுத்திருக்கிறார்களாம். அவர் எழுதியதை படித்தால் மெலோட்ராமா நாவலாக, சினிமாவாக இருக்கும் போல தோன்றுகிறது.

நான் பார்த்த மிக பழைய தமிழ் படம் 1941-இல் வந்த சபாபதிதான். 40-களில் வந்த மங்கம்மா சபதம், நந்தனார் (தண்டபாணி தேசிகர் நடித்தது, கே.பி. சுந்தராம்பாள் நடித்தது இல்லை) நாம் இருவர், வேதாள உலகம், அபூர்வ சகோதரர்கள் (அமேரிக்காவில் வீடியோ கிடைத்தது), சந்திரலேகா, நல்லதம்பி பார்த்திருக்கிறேன். நீங்கள் பார்த்த மிக பழைய தமிழ் படம் எது? உங்களுக்கு ஞாபகம் இருப்பதை எழுதுங்களேன்!

தொடர்புடைய பதிவுகள்:
ராண்டார்கை பத்திகள் – அபிமன்யு, ராஜி என் கண்மணி
சபாபதி (Sabapathi)
சந்திரலேகா

நாடோடி மன்னன்


நாடோடி மன்னன்

எம்ஜிஆர் படங்கள் சில பர்ஃபெக்டாக வந்து விடுகின்றன. பொதுவாக அவர் படங்களில் காணப்படும் சின்னப் பிள்ளைத்தனமான கதை, செயற்கையான திரைக்கதை எல்லாவற்றையும் மீறி அவரது இமேஜுக்கு மிக பொருத்தமாக எல்லாம் அமைந்துவிடுகின்றன. அவருக்கு இப்படி ஒரு பத்து படம் தேறினால் ஜாஸ்தி. அந்த டாப் டென்னில் நாடோடி மன்னன் டாப்பில் இருக்கிறது.

எம்ஜிஆரின் பொதுவான பலங்கள் என்று பார்த்தால் பாட்டுகள்; அருமையான தயாரிப்பு; சண்டைக் காட்சிகள், குறிப்பாக கத்தி சண்டை காட்சிகள், சிலம்ப சண்டை காட்சிகள்; அழகான ஹீரோயின்கள். சில சமயம் நல்ல பொழுதுபோக்கு கதை, நல்ல நகைச்சுவை அமைந்துவிடும். இந்த படத்தில் மிக பிரமாதமான பாட்டுகள்; காசை தண்ணீர் போல செலவழித்து எடுக்கப்பட்ட படம்; அவருக்கு இணையாக திரையில் சண்டை போடக்கூடிய நம்பியார், வீரப்பா என்று இரண்டு வில்லன்கள்; பானுமதி, சரோஜா தேவி என்று இரண்டு ஹீரோயின்கள்; நன்றாக எழுதப்பட்ட திரைக்கதை, வசனம். நகைச்சுவைதான் சரியில்லை. சந்திரபாபுவை விட எம்ஜிஆர் பானுமதி ஜெயிலில் சந்திக்கும் காட்சியே கொஞ்சம் புன்முறுவலை வரவழைக்கும்.

1958-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்த படம். அவரே இயக்கம். எம்ஜிஆர், பானுமதி, சரோஜா தேவி, சந்திரபாபு, வீரப்பா, நம்பியார், சக்ரபாணி, ஜி. சகுந்தலா (மந்திரி குமாரியில் எம்ஜிஆருக்கு ஜோடி; இதில் சந்திரபாபுவுக்கு ஜோடி!) என்று ஒரு நட்சத்திரக் கூட்டம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. எல்லா பாட்டும் பட்டுக்கோட்டையா என்று தெரியவில்லை, ஆனால் பட்டுக்கோட்டை நிறைய பாட்டுகளை எழுதி இருக்கிறார்.

கதை தெரியாதவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தில் குறைவு. Prisoner of Zenda கதைதான் inspiration . நாடோடி எம்ஜிஆர் ஜெயிலில் தூங்காதே தம்பி என்று பாட்டு பாடுகிறார். பானுமதியின் குரல் மட்டுமே கேட்கும். பானுமதி தான் கிழவி என்று சொல்லி அவரை ஏமாற்றுகிறார். பிறகு இருவரும் ஒன்றாக செல்ல சம்மதமா, உமக்கு சம்மதமா என்று பானுமதி பாட்டிலேயே கேட்டு அடுத்த நாட்டுக்கு செல்கிறார்கள். அங்கே வாரிசு பிரச்சினை. மன்னன் எம்ஜிஆர்தான் வாரிசு என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ராஜகுரு வீரப்பா, சதிகார சக்ரபாணி, பிரபு பிங்கலன் (நம்பியார்) யாருக்கும் இது பிடிக்கவில்லை. சதி நடக்கிறது. மன்னன் எம்ஜிஆரும் நாடோடியும் சந்திக்கிறார்கள். மன்னன் எம்ஜிஆர் மயக்கம் அடைகிறார். நேரம் தவறிவிடக்கூடாது என்பதற்காக நாடோடி எம்ஜிஆர் மன்னனாக பதவி ஏற்கிறார். காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்று பாடும் பானுமதி மனம் குளிர புதிய சட்டங்களை கொண்டு வருகிறார். மன்னன் எம்ஜிஆரை வீரப்பா தன் தீவுக்கு கடத்தி சென்று விடுகிறார். நடுவில் பானுமதி இறந்துவிட, எம்ஜிஆர் வழக்கம் போல முகத்தை மூடிக்கொண்டு அழ, ஹீரோயின் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக வீரப்பாவின் தீவுக்குப் போய், மானத் தேடி மச்சான் வரப் போறான் என்று பாடும் சரோஜா தேவியை பார்த்து, காதலித்து, சண்டை போட்டு, மன்னனை மீட்டு, சுபம்!

வசனங்கள் அருமை. வீரப்பா கேட்பார் – சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்ககூடாது போல! எம்ஜிஆரின் பதில் – இல்லை, ஏழைகளே இருக்கக்கூடாது! வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் – ரத்னா, அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை!

படம் எம்ஜிஆருடையது. படத்தில் அவர் பூராவும் வியாபித்திருக்கிறார். மிச்ச எல்லாருமே டம்மிதான் – பானுமதி மட்டும் கொஞ்சம் ஈடு கொடுக்கிறார். வீரப்பாவுக்கு அவ்வப்போது அவரது ட்ரேட்மார்க் சிரிப்பு, சண்டை போடுங்கள், போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருக்கு அது கை வந்த கலை. நம்பியாருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் கடைசியில் அவர் எம்ஜிஆருடம் கடற்கரையில் மோதும் சண்டை பிரமாதம். சந்திரபாபு வேஸ்ட். இரண்டு பாட்டு பாடிவிட்டு போகிறார். விகடன் அவர் முட்டை தின்று கோழியை துப்பும் காட்சியை சிலாகிக்கிறது. இதெல்லாம் ஒரு காமெடியா? சரோஜா தேவிக்கு சும்மா கொஞ்சம் வெட்கப்பட்டு, சிரித்து, பாம்பைக் கண்டு பயந்து எம்ஜிஆர் மேல் ஒட்டிக்கொண்டு, ரவிக்கையை கழற்றி முதுகை காட்டி (அப்போதுதான் அவர் காணாமல் போன இளவரசி என்று மச்சத்தை பார்த்து எம்ஜிஆர் கண்டுபிடிக்க முடியும்.) கடைசியில் எம்ஜிஆர் அவரை மீட்க வரும்போது வீர மாமுகம் தெரியுதே அது வெற்றி புன்னகை புரியுதே என்று பாடினால் போதும். சக்ரபாணி எந்த படத்திலும் நன்றாக நடித்து நான் பார்த்ததில்லை. சொந்தப் படத்திலும் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. தேறுவது பானுமதி ஒருவர்தான். எம்ஜிஆரை தான் கிழவி என்று சொல்லி கலாய்ப்பதாகட்டும், காடு விளைஞ்சென்ன மச்சான் என்று கேட்பதாகட்டும், நன்றாக ஈடு கொடுத்து நடிக்கிறார். அவர் சரோஜா தேவி போல சம்பிரதாயமான தமிழ் ஹீரோயின் இல்லை, பாம்பு வந்தால் எம்ஜிஆர்தான் பயந்து அவர் மேல் ஒட்டிக்கொள்ள வேண்டும். பார்வையிலேயே தைரியத்தை காட்டுகிறார். ஸ்டீரியோடைப் நாயகியாக அவர் இல்லாமல் இருப்பது பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

எம்ஜிஆருக்கு அடுத்தபடி படத்தை வியாபிப்பவர் சுப்பையா நாயுடு. என்ன மணி மணியான பாட்டுகள்!

காடு விளைஞ்சென்ன மச்சான்தான் படத்தில் டாப். என்ன அருமையான வரிகள்! சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாம பாடுபட்டு என்று ஆரம்பிக்கும்போதே களை கட்டிவிடுகிறது. நாட்டுப்புற மெட்டின் இனிமையே தனிதான். பட்டுக்கோட்டை கலக்குகிறார்!

மானைத் தேடி மச்சான் வரப் போறான் கலக்கலான இன்னொரு பாட்டு. Feet tapping number!

தூங்காதே தம்பி தூங்காதே புகழ் பெற்ற பாட்டு. நல்ல வரிகள். பட்டுக்கோட்டை புகுந்து விளையாடுகிறார். கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் – அருமை!

அவ்வளவாக தெரியாத இன்னொரு பாட்டு சம்மதமா உமக்கு சம்மதமா. பானுமதி மிக அருமையாக பாடி இருப்பார்.

சாதாரணமாக சீர்காழியின் குரல் எம்ஜிஆருக்கு பொருந்தவே பொருந்தாது. ஆனால் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா பாட்டில் மிக நன்றாக பொருந்தி இருக்கும். அது என்ன மாயமோ தெரியவில்லை.

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே ஹை பிச்சில் (லீலாவா?) பாடும்போது அம்மாடி, பாத்தும்மா என்றுஒரு பயம் வரும்!

சந்திரபாபுவுக்கு தடுக்காதே என்னை தடுக்காதே என்று ஒரு பாட்டு.

படத்தின் மூன்றாவது ஹீரோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். மனிதர் பிரமாத ஃபார்மில் இருந்திருக்கிறார்.

பாட்டுகள் இணையத்தில் எங்கே கிடைக்கும் என்று தேட நேரமில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

எம்ஜிஆர் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவழித்திருக்கிறார். மாளிகைகள், தீவு, கழுகு குகை, இடிந்து விழும் பாலம், குகையில் தண்ணீர் நிரம்பும் காட்சி என்று மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். செலவழிந்த பணத்தைப் பற்றி “ஓடினால் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி” என்று சொன்னாராம். படம் ஓடிவிட்டது. அவரும் தமிழ் நாட்டுக்கே மன்னர் ஆகிவிட்டார்.

தமிழின் மிக சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் ஒன்று. கட்டாயமாக paarungaL என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
விகடன் விமர்சனம்
நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்

சில பிரச்சினைகள்


கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கெட்டுப்போய்விட்டது. பாதி ஸ்க்ரீன் தெரிவதில்லை. இதில் பதிவு எழுதுவது கஷ்டமாக இருக்கிறது. ஏதோ தட்டு தடுமாறி மெயில் பார்த்துக்கொண்டும், என்னுடைய சில ப்ராஜெக்ட்களை செய்துகொண்டும் காலத்தை ஓட்டுகிறேன். இதை ரிப்பேர் செய்ய கேட்கப்படும் பணம் புது கம்ப்யூட்டர் விலைக்கு கிட்டத்தட்ட வருகிறது. கிருஸ்துமஸ் சமயத்தில் கொஞ்சம் சீப்பாக கிடைக்குமோ அப்போது புது கம்ப்யூட்டர் வாங்கலாமோ என்று ஒரு எண்ணம். அதனால் பதிவு கிதிவு எல்லாம் எழுத சோர்வாக இருக்கிறது. சிறுகதை வாரம் பாதியில் நின்ற கதை இதுதான். சிவாஜி வாரம் என்று ஒன்று ஆரம்பிக்க போட்டிருந்த திட்டமும் ஆஃப் ஆகிவிட்டது. எழுத நிறைய விஷயம் இருக்கிறது, நேரம் குறைவாக இருப்பதும், கம்ப்யூட்டர் கெட்டுப் போயிருப்பதும் கஷ்டப்படுத்துகின்றன…

பதிவு என்று எழுதினால், அதுவும் சினிமா பற்றி எழுதினால் பாட்டு எங்கே கிடைக்கும், ஸ்டில் எங்கே கிடைக்கும் என்று தேடுவது வழக்கம். கொஞ்ச நாளைக்கு அதெல்லாம் விட்டுவிட்டு நான் ஒருவனே input என்ற ரேஞ்சில்தான் எழுதப் போகிறேன். அதுவும் ரொம்ப ரெகுலராக எழுதமுடியாது. இந்த கம்ப்யூட்டரில் இப்போதைக்கு அதுதான் சரிப்படும்.

பக்சும் வேலைப் பளுவில் மூழ்கி இருக்கிறான். என் அம்மா சொல்லும் பழமொழி ஒன்று நினைவு வருகிறது – அவன் நல்ல நாளிலேயே தில்லைநாயகம். 🙂

பிரச்சினைகள் சீக்கிரமே தீரும் என்ற நம்பிக்கையோடு
ஆர்வி

அபிமன்யு


இன்று ராண்டார்கை இந்த படத்தை பற்றி எழுதியதை படித்தேன். 1948-இல் வந்த படமாம். படம் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. கலைஞர் பேர் டைட்டிலில் வராதபோதும் அவர்தான் வசனம் எழுதி இருக்கிறார். இதுதான் அவருக்கு முதல் படமாக இருக்க வேண்டும். எம்ஜிஆருக்கு அப்பா ரோல் – அவர்தான் அர்ஜுனன்! எம்எஸ்வி இசை அமைத்த முதல் பாட்டும் இந்த படத்தில்தானனாம். அவர் பேரும் டைட்டிலில் கிடையாது.

ராண்டார்கை பாட்டுக்கு எழுதுகிறார். ஆனால் இந்த படத்துக்கு எல்லாம் பிரிண்ட் இருக்கிறதா? அவர் இதையெல்லாம் பார்த்த ஞாபகத்தை வைத்து எழுதுகிறாரா இல்லை எதையாவது படித்து விட்டு ஓட்டுகிறாரா? பிரிண்ட் இருக்கிறதா, பாட்டுகள் கிடைக்குமா, வசன புத்தகம், பாட்டு புத்தகம், போஸ்டர் ஏதாவது இருக்கிறதா என்பதையும் அவர் தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும். யாராவது பார்த்திருக்கிறீர்களா?

பின் குறிப்பு: சில சமயம் எனக்கு stuck ஆகிவிடுகிறது. நாடோடி மன்னன் என் விமர்சனம் இன்னும் முடிக்க முடியவில்லை. பாட்டுகள் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். இனி மேல் இப்படி நடக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்:
அபிமன்யு பற்றி ராண்டார்கை
நாடோடி மன்னன் விகடன் விமர்சனம்