அஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்


துபாய் நண்பர் ஈஸ்வர் கோபாலின் விமர்சனம். ஓவர் டு கோபால்!

anjaanஇப்படம் நாளை (ஆகஸ்ட் 15) இந்தியாவிலும், இன்று ஐக்கிய அரபு அமிரகத்திலும் வெளியாகிறது. கோல்டன் சினிமாவில் முதல் காட்சி பார்த்தேன்.

துபாயில் வெளியிடப்படும் படத்தில் ஒரு மவுசு உண்டு. அதாவது நம்மூரில் வெளியிடப்படும் அன்றோ அல்லது ஒருவாரத்திற்கோ படத்திற்கு அனுமதிச்சீட்டு கிடைப்பதே குதிரைக்கொம்பு. ஆனால் இங்கு எந்தக்கவலையுமில்லாது முதல் காட்சியில், மெதுவாக ஒரு பாப்கார்னை கொரித்துக்கொண்டு, முன்பதிவு இல்லாமல், அனுமதிச்சீட்டை வாங்கி உள்ளே புகுந்து எந்தவித ஆர்பாட்டமோ, நெருக்கடியோ இல்லாமல் பார்க்கலாம். ரசிக்க முடியுமா என்பது உங்களின் ரசனையைப் பொறுத்துள்ளது.

இப்படத்தில் சூர்யாவையும், ஓரளவு சமந்தா மற்றும் (பரோட்டா) சூரியையும் தவிர்த்து எல்லாம் ‘சப்பாத்தி’ இறக்குமதி. கதைச்சுருக்கம் இதுவே. சூர்யா (ராஜு பாய்) மும்பையில் பிரபல தாதா. இவரும் சந்த்ருவும் உற்ற நண்பர்கள், பெரிய பெரிய தாதா இருக்கும் போது அவர்களைக் காலி செய்துவிட்டு காலூன்றப் பார்க்கிறர்கள். இதில் சூர்யா எதற்கும் துணிந்தவர். (பின்னே அஞ்சான் ஆச்சே!) ஒரு கட்டத்தில் பெரிய தாதாவிற்கும், இவர்களுக்கும் சின்ன பிரச்சனை இவர்களின் ஆணவத்தைக் கிளப்ப, சூர்யாவின் நண்பரான சந்த்ருவை (வித்யுத்) போட்டுத் தள்ளி, சூர்யாவையும், இரண்டு குண்டுகளைப் பாய்ச்சி தண்ணீரில் விழ வைக்கிறார்கள். மதுரையிலிருக்கும் அவர் தம்பி க்ருஷ்ணா அவரைத் தேடி மும்பாய் வர, வில்லன் கோஷ்டி அவரை என்ன செய்தது, பழைய சூர்யா என்ன ஆனார், நொண்டி நடக்கும் சூர்யா யார் என்பது மீதிக்கதை.

சூர்யா ஓரளவு பரவாயில்லாமல் நடித்துள்ள போதிலும், லிங்குசாமி கதையை லிங்க் பண்ணத்தவறிவிட்டார். மொத்தத்தில் நாயகன், பாட்ஷா படங்களை ஒரு அரவையில் அரைத்து, ஒரு கோப்பை எடுத்தால் அஞ்சான் வரும். இப்பொழுது வரும் தமிழ்த் திரைப்படங்களில் நாயகி ஒரு ரௌடியை காதலித்துத்தான் ஆகவேண்டும் என்ற நியதியை இப்படத்திலும் தவறாமல் கடைப்பிடித்து மானத்தைக் காப்பாற்றியுள்ளார்கள். சமந்தா நடிப்பை விட தன் உடம்பின்பால் நல்ல நம்பிக்கை வைத்துள்ளார். ஆடி மாதம் என்று யார் கூறினார்களோ தெரியவில்லை, ரங்கநாதன் தெரு தோற்கும் அளவிற்கு தள்ளுபடி செய்து, தன்னால் முடிந்த மட்டும் ஒரு 80% ஆடைக்குறைப்பை வெற்றிகரமாக செய்து, ஒரு காட்சியில் சிறு கைக்குட்டையை இரண்டாகக் கிழித்து தனது உடம்பை மறைத்து தமிழ்ப் பண்பாடை சங்க காலத்திற்கு கொண்டு செய்துள்ளது பாராட்டத் தக்கது. நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார். ஒரு பெரிய போலீஸ் ஐ.ஜி யின் மகளாய் வந்து அந்த அப்பாவை காமடி போலீஸாக மாற்றுகிறார். சமந்தாவின் அப்பாவாக வரும் ஐ.ஜி. துவக்கக் காட்சியில் புலி போல் கொக்கரித்து, ஏதோ பெரிய்தாக செய்யப் போகிறார் என்று பார்த்தால், படம் முடிந்து வீட்டிற்கு வரும்வரை ஆளைக் காணோம்.

பரொட்டா சூரி கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டுகிறார். இசை: யுவன். ஒரே இரைச்சல் மட்டுமல்லாமல், பின்னணி இசைக்குப் பின்னால் ஆஹா, ஓஹோ என்று ஒரே காட்டுக்கூச்சல். அப்பாவிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கலாம். பாடல்கள் ஒவ்வொன்றும் தேன்சுவை – என்று சொல்ல ஆசையாகத்தான் உள்ளது.

மொத்தத்தில் – கொலை, காதல், காமம், தாதாவின் செயல்கள் எல்லாமே நியாயப்படுத்தப்பட்டுள்ளன. என்ன செய்ய, மக்களான நாம் எல்லாவற்றையும் ஜீரணிக்க பழகிவிட்டோம். முக்கியமான வில்லன் – பெரிய வில்லனுக்கு ஒரு முஸ்லிம் பெயரை வைத்த காரணத்தினாலேயே, சூர்யாவிற்கு ஒரு நண்பரை முஸ்லீமாக (நல்லவராக) காட்டி பிரச்சனையிலிருந்து தப்பித்துள்ளார் இயக்குனர்.

சூர்யா முழுத்திறமையும் காட்டியிருந்தாலும், ஒருவித ஈர்ப்பு இல்லை. பொண்டாட்டி நம்மை வெளியில் தள்ளி இன்று திண்ணையில்தான் தூக்கம் என்று சொல்லிவிட்டால் – அரங்கத்தில் போய் இந்த காட்சியில் உட்கார்ந்துவிட்டு வாருங்கள். இதற்கு செலவு தண்டம் என்றால், ஆர்யாசில் இரண்டு சாம்பார் இட்லியை வாங்கி வயற்றுக்கு தானமாகக் கொடுங்கள்.

லிங்குசாமி, சூர்யாவின் திறமையை சரியாக உபயொகிக்கவில்லை என்றே தோன்றுகிறது. பல இடங்களில் படன் ஒரு கோர்வையாக இல்லை. ஒரு பாட்டும் மனதில் ஒட்டவில்லை.

ஒரு காட்சியில் நாயகியும், நாயகனும் ‘தண்ணி’ அடிப்பது சமீபத்திய தமிழ்ப்படத்தின் பரிணாமம். இதுதான் தமிழ்ப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வது போலும்.

அஞ்சான் ……….நோஞ்சான்

ஜிகிர்தண்டா


நண்பர் ராஜன் ஜிகிர்தண்டா திரைப்படத்தை விமர்சிக்கிறார்.

சினிமா சிபாரிசுகள் சில – ஜிகிர்தண்டா
———————————————————

jigirthandaதமிழ் சினிமா 60 ஆண்டுகளாக படங்கள் எடுத்தாலும் கூட இன்னும் தமிழ் சினிமா முதிர்ச்சி அடையவில்லை உருப்படியாக ஒரு ஐந்து படங்கள் கூட தமிழில் தேறாது என்பது என் தீர்மானமான முடிவு. மலையாளப் படங்களுடன் ஒப்பிடும் பொழுது தமிழ் சினிமாக்களை நான் மிகவும் கேவலமானதாகவும் மட்டமானதாகவும் தரமற்றதாகவும் நுட்பம் கலையுணர்வு இல்லாதவைகளாகவுமே எப்பொழுதுமே கருதுவேன். இப்பொழுதும் தமிழ் சினிமாக்கள் மீதான என் அபிப்ராயம் மாறி விடவில்லை.

கலாபூர்வமாக தமிழ் சினிமாக்கள் முன்னேறாவிட்டாலும் கூட டெக்னாலஜியிலும் நவீன படங்களுக்கு இணையாக சினிமாக்கள் எடுப்பதிலும் முன்னேறியே இருக்கிறார்கள். சமீப காலங்களில் கொரிய சினிமாக்கள் உலக அளவில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வருகின்றன. கொரியன் மற்றும் ஹாங்காங் சினிமாக்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அந்தப் படங்கள் தொழில் நுட்பத்திலும் நேர்த்தியான கச்சிதமான கதைகள் மூலமாகவும் கொடூரமான வன்முறைகள் மூலமாகவும் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றையும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன். பல கொரிய சினிமாக்கள் ஹாலிவுட் சினிமாக்களாக ரீமேக் செய்யப் பட்டு ஆஸ்கார் அவார்ட் வரையிலும் போயுள்ளன. இண்ட்டர்னல் அஃபயர்ஸ், ஓல்டு பாய் போன்ற கொரியன் சினிமாக்கள் ஹாலிவுட் படங்களாக மீண்டும் எடுக்கப் பட்டன. இருந்தாலும் கொரியன் படங்களின் நேர்த்தியை அவை அடையவில்லை.

ஹாலிவுட் சினிமாவில் டொராண்ட்டினோ, கோயான் பிரதர்ஸ் போன்றோர் தங்களுக்கு என்று ஒரு வித பாணி வைத்து ஸ்டைலிஷ் சினிமாவை பல காலமாக எடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமா மலையாள சினிமாவின் ஒரு பத்மராஜனின், ஒரு ஜெயராஜின், ஒரு ஹரிஹரனின், ஒரு அரவிந்தனின் இடத்தை என்றுமே பிடிக்க முடியாது. ஆனால் தமிழ் சினிமா இன்று கொரியன் சினிமாக்களின் டொராண்ட்டினோ வகை அபத்தப் படங்களின் எல்லையை எட்டியுள்ளது. அந்த வகையில் ஆரண்ய காண்டம், சூது கவ்வும், ஜிகிர்தண்டா போன்ற படங்கள் அடைந்து விட்டன. அந்த வகை வளர்ச்சியின் ஒரு தாண்டுதலாக இந்த ஜிகிர் தண்டா அமைந்துள்ளது.

நான் அபூர்வமாக தியேட்டருக்குச் சென்று பார்த்த தமிழ் படங்களில் ஒன்று இந்த ஜிகிர்தண்டா. அருமையான ஒரு எண்ட்டர்டெயினர். இந்த வகை சினிமாக்களை எடுப்பதில் தமிழ் சினிமாவின் புது இயக்குனர்கள் அபாரமாக இயங்குகிறார்கள். அந்த வகைப் படங்களில் தமிழ் சினிமா வயசுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது

இந்த சினிமா மதுரையின் பயங்கரமான கொலைகார ரவுடிகளை அபத்தப் பார்வை பார்த்து கோமாளிகளாக மாற்றுகிறது. தமிழில் தங்களைத் தாங்களே கேலி செய்து கொண்டு சுயபார்வை பார்த்துக் கொள்வது அரிது. அந்த வகையில் இந்த சினிமா பல கோணங்களில் செல்கிறது. இதில் ரவுடிகளைக் கோமாளிகளாக்கியது போலவே பதிலாக தமிழ் சினிமாவின் பிதாமகர்களாகக் கருதப் படும் கமல் சார், ரஜினி சார், அஜித் சார், விஜய் சார், பாலச்சந்தர் சார், சிம்பு சார் போன்ற அனைத்து சினிமாக்காரர்களையும் கேமாளிகளாக உணர வைத்து ஒரே தாண்டாக தாண்டியிருக்கிறார்கள் கார்த்திக் சுப்புராஜ் குழுவினர்.

தமிழ் சினிமாவில் ஒரு செம்மீனையோ, ஒரு காழ்ச்சாவையோ, ஒரு ஒழிமுறியையோ ஒரு தூவானத் தும்பிகளையோ ஒரு மூணாம் பக்கத்தையோ ஒரு அரப்பட்ட கட்டிய கிராமத்திலையோ ஒரு உத்தரத்தையோ ஒரு களியாட்டத்தையோ ஒரு தேஷாடனத்தையோ என்றுமே எதிர்பார்த்து விட முடியாது. ஆனால் ஒரு நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மேனையோ, ஒரு ஃபார்காவையோ, ஒரு ரிசர்வாயர் டாக்சையோ, ஒரு செக்வஸ்ட்ரவையோ, ஒரு ஓல்ட் பாயையோ ஒரு டிஜாங்கோ அன்செயிண்டையோ ஒரு கில் பில்லையோ இனி எதிர் பார்க்கலாம் என்று இந்த இளம் இயக்குனர்களும் நடிகர்களும் இந்தப் படங்கள் மூலமாக அறிவிக்கிறார்கள். இந்த ஜிகிர்தண்டா நான் ரசித்த எந்தவொரு கொரியன் சினிமாவுக்கும் எந்தவொரு ஸ்டைலிஷ் வகைப் படங்களுக்கும் குறைந்தது அல்ல. 3 மணி நேர நான் ஸ்டாப் லாஃபிங் ரயாட். அவசியம் காணலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.