பாலசந்தருக்கு அவார்ட்


பிரபல இயக்குனர் பாலசந்தருக்கு மேலும் ஒரு feather in the cap. தாதா சாகேப் அவார்ட் வழங்கப்பட்டுள்ளது.

மனிதர் தளாராமல் சேவை புரிந்துள்ளார்.

எனக்கு பிடித்த பாலசந்தர் சினிமாக்கள் எல்லாம் 60,70களில் தான். 80ல் கொஞ்சம் தேறும். ஆனால் அதற்கு பிறகு ஒன்றும் சரியில்லை.

அட்லஸ் ஷ்ரக்ட் திரைப்பட விமர்சனம்


நான் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று அட்லஸ் ஷ்ரக்ட் (Atlas Shrugged). அதன் தாக்கம் இன்னும் என் மேல் இருக்கிறது.

எதேச்சையாக போன வெள்ளிக்கிழமை திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்று தெரிந்தது. போகலாம் என்று முடிவு செய்தேன். இந்த தளத்தின் சக ஆசிரியரான பக்சும் வந்தான். தியேட்டருக்குள் நுழைந்தால் எங்களையும் சேர்த்து நான்கு பேர்தான் இருந்தோம்.

படத்தின் தரம் அப்படி. ஏறக்குறைய புத்தகத்தில் உள்ளபடிதான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் நடிப்பு எல்லாம் படு சுமார். அதுவும் ஹாங்க் ரியர்டனாக நடிக்கும் கிரான்ட் பௌலர் மரம் மாதிரி நிற்கிறார். எல்லிஸ் வ்யாட்டாக வரும் கிரஹாம் பெக்கல் மட்டுமே நன்றாக நடித்திருக்கிறார்.

கதையின் முதல் பாகம் மட்டுமே இப்போது திரைப்படமாக வந்திருக்கிறது. திறமைசாலி தொழிலதிபர்கள் எல்லாரும் மெதுமெதுவாக மறைந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ரயில் கம்பெனி நடத்தும் டாக்னி டாகர்ட் தன்னுடைய அண்ணன் மற்றும் கம்பெனி CEO ஆன ஜிம் டாகர்ட் உட்பட்ட பலரிடமிருந்து முட்டுக்கட்டைகளை சந்திக்கிறாள். ஜிம் லஞ்சம் கிஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிக்கும் டைப். டாக்னியோ உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று என்னும் டைப். எல்லிஸ் வாட் என்ற பெட்ரோலிய கம்பெனி முதலாளி தான் உற்பத்தி செய்யும் பெட்ரோலை ஏற்றிச் செல்லும் ரயில் கம்பெனியை ஜிம் தன் அரசியல் நண்பர்களை வைத்து மூடிவிடுகிறான். வ்யாட்டுக்கு டாகர்ட் ரயில் கம்பெனியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை. ஆனால் டாகர்ட் ரயில் கம்பெனி ரயில்களை சரியாக ஓட்டுவதில்லை. தண்டவாளத்தின் தரம் மோசமாக இருப்பதால் ரயில்கள் நேரத்தில் வருவதில்லை, விபத்துகள் ஏற்படுகின்றன. டாக்னி புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ரியர்டன் உலோகத்தை வைத்து தண்டவாளத்தைப் போடுகிறாள். ரியர்டன் உலோகக் கம்பெனி முதலாளி ஹாங்க் ரியர்டன் அவளுக்கு பல உதவிகளை செய்கிறார். அவர்களுக்கு எதிராக ஊடகங்கள், அரசு ஆராய்ச்சி நிறுவனம், பலரும் வேலை செய்கிறனர். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தண்டவாளம் போடப்படுகிறது, ரியர்டன் உலோகம் உண்மையிலேயே ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு என்று உலகம் உணர்கிறது. ஆனால் வியாட் இனி மேல் கம்பெனி நடத்த முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்துகிறது. வியாட் தன் பெட்ரோல் கிணறுகளில் தீ வைத்துவிட்டு மறைந்து போய்விடுகிறார்.

இந்த மாதிரி பிரச்சாரக் கதைகளை படமாக்குவதும் கஷ்டம். இது கம்யூனிசத்தை எதிர்த்து காபிடலிசத்தின் புகழ் பாடும் கதை. கதையின் ஒரு பகுதியில் ஐம்பது அறுபது பக்கங்களுக்கு ஒரு சொற்பொழிவு வரும். 🙂 இதையெல்லாம் படத்தில் வைத்தால் ஒருவரும் வரமாட்டார்கள்.

டெய்லர் ஷில்லிங் டாக்னியாகவும், மாத்யூ மார்ஸ்டன் ஜிம் டாகர்ட்டாகவும், சு கார்சியா ஃ பிரான்சிஸ்கோ டன்கோனியாவாகவும், கிரான்ட் பௌலர் ஹாங்க் ரியர்டனாகவும், கிரஹாம் பெக்கல் எல்லிஸ் வ்யாட்டாகவும் நடித்திருக்கிறார்கள். இயக்கம் பால் ஜொஹான்சன்.

படம் தீவிர அட்லஸ் ஷ்ரக்ட் புத்தக ரசிகர்களுக்கு மட்டும்தான். திரைப்படம் என்ற வகையில் தோல்வியே.

தியேட்டரை விட்டுப் போகும்போது மீண்டும் எண்ணிப் பார்த்தேன். பத்து பேர் இருந்தோம். முதல் நாளே, அதுவும் வெள்ளி இரவு அன்றே இப்படி நிலைமை என்றால் படம் ஓடாது!

P.S. புத்தக தளமான சிலிகான் ஷெல்ஃபிலும் இந்த விமர்சனம் வந்திருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
திரைப்படத்தின் தளம்
ஐஎம்டிபி குறிப்பு

ஹாரி பாட்டர் சினிமா ட்ரெய்லர் – டெத்லி ஹாலோஸ் இரண்டாம் பகுதி


திரைப்படம் ஜூலை 15-ஆம் தேதி வெளியாகிறது.

நடிகை சுஜாதா மறைவு



சுஜாதா எனக்குப் பிடித்த நடிகைகளில் ஒருவர். நடிக்கவும் தெரியும், பார்க்க லட்சணமாகவும் இருப்பார். 58 வயதில் அவர் மறைந்தது அதிர்ச்சியைத் தருகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என் condolences .