பாஹுபலி


பாஹுபலி திரைப்படத்தைப் பற்றி நண்பர் திருமலைராஜன்:

bahubaliசிறு வயதில் மாயா பஜார், மாய மோதிரம், விடாக்கண்டன் கொடாக்கண்டன், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற தெலுங்கில் இருந்து தமிழுக்குக் கொண்டு வரப் பட்ட காந்தாராவ், ரெங்காராவ், விட்டலாச்சார்யா படங்கள் அளித்த பிரமிப்பை எந்தவொரு பிரம்மாண்டமான தமிழ் படமும் அளித்ததில்லை. அந்த வகையில் சிறுவர்களின் கற்பனைகளுக்கும் ஆர்வங்களுக்கும் தீனி போடும் வகையிலான மாயாஜால படங்களையும் ஃபேண்டஸி படங்களையும் ஆந்திரா சினிமாக்காரர்களே எடுத்து வந்தார்கள். மாயாபஜார் ஒரு முக்கியமான சினிமா. அம்புலிமாமா அளித்த வாசிப்பனுவங்களை அவை தூண்டிய கற்பனைக் காட்சிகளை ஈடுகட்டக்கூடிய சினிமாக்கள் தெலுங்கில் இருந்தே இறக்குமதியாயின.

இன்றைய நவீன ஐபேட், வீ, நின்டண்டோ, எக்ஸ் பாக்ஸ், சோனி சிறுவர்களின் ஃபேண்டஸி தேடல்களுக்கு பெரும்பாலும் ஆங்கிலப் படங்களே தீனி போடுகின்றன. டிஸ்னி சினிமாக்களும், பிக்சார் சினிமாக்களும், ஹாரி பாட்டர்களும், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்களும் சிறுவர்கள் விரும்பிப் பார்க்கும் சினிமாக்களாகின்றன. அவர்களது கற்பனைகளில் விரியும் காட்சிகளும் அந்த ஆங்கில நாவல்களே உருவாக்குகின்றன. அவர்களுக்கு ஒரு இந்தியக் காடோ, இந்திய இமய மலையோ கற்பனையில் கூட அறிமுகமாவதில்லை.

முன்பு கல்கி, கோகுலம் பத்திரிகைகளில் இந்திய ஓவியர்களினால் வரையப்பட்ட இந்திய காமிக்ஸ் கதைகள் வந்து கொண்டிருந்தன. 007 பாலு, மூன்று மந்திரவாதிகள் போன்றவை அற்புதமான இந்திய காமிக்ஸ் கதைகளாக வந்தன. அம்புலிமாமாவும், சந்தமாமாவும் இந்திய புராணங்களையும் கதைகளையும் அருமையான வண்ணப் படங்களில் கொணர்ந்து சிறுவர்களின் கற்பனையில் காட்சிகளை விரித்தன வளர்த்தன. காலப் போக்கில் ஹாரி பாட்டர்களும், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்களுமே அவர்களின் கற்பனை பிம்பங்களை உருவாக்க ஆரம்பித்தன

ஜெயமோகனின் பனிமனிதன் ஒரு அருமையான ஃபேண்டஸி நாவல். சாதாரண கற்பனைகளைத் தாண்டி பிருமாண்டமான காட்சி அனுபவங்களை அளிக்கும் ஒரு நாவல். அத்தகைய ஒரு நாவலை இந்தியச் சூழலில் காட்சி அனுபவமாக மாற்றும் கற்பனா சக்தியும், காட்சி ரூபமாக சினிமாவில் அளிக்கும் தொழில் நுட்பமும், சினிமா மொழியும், நிதி வளமும் உடைய இந்திய இயக்குனர் எவரும் இல்லையே என்று ஏங்கியதுண்டு. பனிமனிதனை சினிமாவாக உருவாக்க ஒரு ஹாலிவுட் அல்லது ஆங்கில திரைப்பட இயக்குனரால் மட்டுமே முடியும் என்று நினைத்திருந்தேன். அந்தக் குறையைப் போக்கியுள்ளார் பாஹுபலி ராஜமெளலி.

இனி மஹாபாரதமும், ராமாயணமும் பிற இந்திய புராணக் கதைகளும், இந்திய சாகசக் கதைகளும், இந்திய விஞ்ஞானக் கதைகளும் கோரும் பிரம்மாண்டமான காட்சிகளை தத்ரூபமாக இந்திய இயக்குனர்களினாலும் இந்திய டெக்னீஷியன்களினாலும் உருவாக்க முடியும் என்றும் அதற்கேற்ற தொழில்நுட்பமும் நிதியும் இந்தியாவில் இருந்தே உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் அத்தகைய படங்களுக்கு உலக அளவில் ஒரு சந்தையையும் உருவாக்க முடியும் என்பதையும் ராஜமெளலி தனது பஹுபலி சினிமாவின் மூலமாக நிரூபித்துள்ளார். மோடியின் மேக் இன் இண்டியா திட்டத்திற்கான சினிமா சாத்தியத்தை உருவாக்கியுள்ளார். விட்லாச்சார்யாவின் நவீன வாரிசாக தன்னை முன்னிறுத்தியுள்ளார். ஹாரி பாட்டர், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் போன்ற சினிமாக்களை இந்தியக் கதைகளுடனும் இந்தியப் பின்ணணியில் உருவாக்க முடியும் என்ற சாத்தியட்தை நிறுவியுள்ளார். இந்த சினிமா இந்தியக் கலைஞர்களுக்கும் இந்திய சினிமாவுக்கும் அளவற்ற தன்னம்பிக்கையை உருவாக்கப் போகிறது. இந்த மேக் இன் இண்டியா சினிமா இந்திய சினிமாவின் கற்பனை எல்லைகளையும் அதன் அளவற்ற திறன்களையும் உலக சந்தைக்கு விரிவாக்கப் போகின்றது.

பாஹுபலியின் கதை வெகு சாதாரணமானது. தமிழில் உத்தமபுத்திரன், அரசகட்டளை, அடிமைப் பெண் என்று நூறு முறையாவது அடித்துத் துவைக்கப் பட்ட பழைய ராஜா கதைதான். சிறு சிறு சாகச சம்பவங்களின் தொகுப்பே. சினிமாக்களில் டூயட் காட்சிகள், சண்டைக் காட்சிகளிலும் மட்டுமே தேவையில்லாமல் பல கோடி ரூபாய்கள் செலவில் செய்யப் பட்ட கிராஃபிக்ஸ் மற்றும் ஆர்ட்ஸ் காட்சிகளை வைத்துக் கொண்டிருந்தனர். அது அந்த சினிமாவின் கதையுடன் ஒட்டாமலும் யதார்த்தமில்லாமலுமே பெரும்பாலும் அமைந்திருந்தன. அந்த அபத்தங்களையெல்லாம் போக்கி ஒரு பிரம்மாண்டமான காட்சிகளைக் கோரும் கதையை உருவாக்கிக் கொண்டு அதற்குத் தேவையான பிரம்மாண்ட காட்சிகளை மட்டுமே அமைத்துள்ளார்.

இந்த சினிமாவில் கதையோ, யதார்த்தமான நுண்ணுணர்வு காட்சிகளோ, நம்பகத்தன்மையோ கிடையாது. ஒரு அம்புலிமாமா கதைக்குத் தேவையான அனைத்து சூழல்களையும் தத்ரூபமாக உருவாக்கி பெரும் காட்சியாக அளித்துள்ளதே இந்த சினிமாவின் பெரும் வெற்றி.

ஒரு பெரும் போர்க்களக் காட்சியைத் தத்ரூபமாக அமைப்பதற்கோ பெரும் மாளிகைகளையும் நகரங்களையும் கற்பனையில் உருவாக்குவதற்கோ, விரிவான பிரமிக்க வைக்கும் இயற்கைக் காட்சிகளையும் கற்பனையில் நினைத்துப் பார்ப்பதற்கோ அபாரமான அசாத்தியமான கற்பனைத் திறன் வேண்டும். அப்படியே கற்பனையில் ஒரு பிரம்மாண்டமான அருவியையோ மலையையோ அரண்மனைகளையோ போர்க்களத்தையோ கண்டு விட்டாலும் அதை சினிமா திரையில் கொணர்வதற்கு அளவற்ற தொழில் நுட்பத் திறனும் பொருட் செலவும் வேண்டும். முதலில் அடிப்படையான அந்த கற்பனா சக்தியில்லாமல் எவ்வளவு பொருட் செலவு செய்திருந்தாலும் அது வீணாகவே போயிருந்திருக்கும்.

பிரம்மாண்டமான காட்சிகளை தன் கற்பனையில் உருவாக்கிக் கொண்டு அதை அப்படியே காட்சி ரூபமாகவும் அளித்துள்ளதே இந்தப் படத்தின் முக்கியமான வெற்றியாகும். நமது சாதாரண கற்பனைகளையெல்லாம் மீறி நம் சிந்தனை அளவுகளின் எல்லைகளையெல்லாம் மீறி காட்சிகளை அமைத்ததினாலேயே ஒரு வில்லோவும், ஒரு லார்ட் ஆஃப் த ரிங்க்ஸும் ஒரு ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க்கும், ஸ்டார் வார்ஸ் சினிமாக்களும் பெரும் வெற்றிகளை அடைந்தன. அவை போன்ற சினிமாக்களுக்கு சற்றும் குறையாமல் பிருமாண்டமான காட்சி அனுபவங்களை ஒரு இந்திய சினிமாவில் முதன் முதலாக வழங்கியுள்ளார் ராஜமெளலி

பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகளுக்கும், போர்க்களக் காட்சிகளுக்கும் செய்த செலவைப் போலவே இசைக்கும் செலவு செய்திருந்தால் இன்னும் பெரிய அளவை இந்த சினிமா எட்டியிருந்திருக்கும். பின்ணணிப் பாடல்களுக்காவது இளையராஜாவை அமர்த்தியிருந்திருக்கலாம்.

வில்லோ சினிமாவையும், ஸ்டார் வார்ஸ் சினிமாக்களையும் காணும் பொழுதெல்லாம் என்றாவது இந்தியக் கதைகள் இந்த விதமான கற்பனைக்கெட்டாத காட்சிகளுடன் கூடிய சினிமாவாக என்றாவது எடுக்கப்படுமா என்று நினைத்ததுண்டு. அந்த ஆதங்கத்தை நிஜமாக்கியிருக்கிறார் ராஜமெளலி. மாயாபஜாரின் பாரம்பரியத்தில் ஒரு உலக அளவிலான சினிமாவை இன்று இன்னொரு தெலுங்கு இயக்குனரும் அவருடன் இணைந்துள்ள ஏராளமான இந்தியத் தொழில் நுட்பக் கலைஞர்களும் அளித்துள்ளார்கள். இந்திய சினிமாவீல் ஒரு மைல்கல்லை இந்த பாஹுபலி மூலமாக அடைந்துள்ளார்கள். குழுவினருக்கு பாராட்டுக்கள்.

பார்க்கவில்லையென்றால் அவசியம் தியேட்டரில் மட்டும் பாருங்கள். சிறுவர்களுக்கான படம்தான் ஆனால் பெரியவர்களும் கூட இப்படி ஒரு இந்திய சினிமாவை அதன் வேர்களில் இருந்து உருவாக்கப்பட்ட சினிமாவைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. அவசியம் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ராஜன் பதிவுகள்