நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்


இரண்டு வாரமாக இந்த பாட்டுதான் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கரம் மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க்கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

பாடும்போதே சுகமாக இருக்கிறது!

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என்ற வரிகளில் குறை காணலாம். அதுதான் முகத்தை மூடியாயிற்றே, அப்புறம் என்ன பயம்? ஆனாலும் பொன்வண்டொன்று என்று ஆரம்பிக்கும் படிமம் அழகாக இருக்கிறது!

காட்சி இன்று செயற்கையாக இருக்கிறது. அதுவும் ஜெய்ஷங்கர் காட்டும் ஸ்டைலும் எல். விஜயலக்ஷ்மியின் முக பாவமும் கொஞ்சம் outdated-தான். ஆனால் ஜெய் அணிந்திருக்கும் உடை இன்றைய ஃபாஷனுக்கு சரியாக இருக்கும்!

திரைப்படம் இரு வல்லவர்கள். பாடியவர்கள் டிஎம்எஸ், சுசீலா. எழுதியது யார்? இசை வேதாவா? 1966 -இல் வந்த திரைப்படம். ஜெய் ஹீரோ, மனோகர் ஆன்டி-ஹீரோ. இரு வல்லவர்கள் ஐந்து வருஷம் கழித்து ஹிந்தியில் ஹாத் கி சஃபாய் என்ற பேரில் வந்தது. ஜெய் ரோலில் ரந்தீர் கபூரும் மனோகர் ரோலில் வினோத் கன்னாவும் நடித்தார்கள். கிட்டத்தட்ட பத்து வருஷம் கழித்து அதை ரீமேக் புகழ் பாலாஜி சவால் என்று தமிழில் எடுத்தார். இரு வல்லவர்கள் படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய்தான் சவாலில் ஆன்டி-ஹீரோ ரோலில் நடித்தார். கமல் ஒரிஜினல் ஜெய் ரோலில்!

அவர் எனக்கே சொந்தம்


திரைப்பட விமர்சனம் – By Eashwar Gopal


படம் வெளியான தேதி: 1.1.1977


நடிகர்கள் ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், விஜயகுமார், வெண்ணிறாடை மூர்த்தி – வி.கே.ராமசாமி,
குலதெய்வம் ராஜகோபால், டைபிஸ்ட் கோபு, கே.விஜயன், வி.கோபாலகிருஷ்ணன்
நடிகைகள் ஸ்ரீவித்யா, ஃபடாபட் ஜெயலட்சுமி, Y.விஜயா, பேபி பபீதா, பேபி வந்தனா மற்றும் பலர்
பின்னணி டி.எம்.சௌந்திரராஜன்,.கே.ஜே யேசுதாச், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி, பி.சுசீலா, பூரணி, ரேணுகா, இந்திரா
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம்
பின்னணி இசை இளையராஜா புகைப்படம் டி.எஸ்.விநாயகம்
கதை, வசனம் பஞ்சு அருணாசலம் தயாரிப்பு பி.ஏ.ப்ரொடக்ஷன்ஸ்
படத்தொகுப்பு பி.கந்தசாமி கலை இயக்குனர் பாபு
திரைக்கதை, இயக்கம் பட்டு


கதை ஒரு சிறு குப்பியில்

ஒரு ஒழுக்கமில்லாமல் வாழும் இயல்பைக்கொண்ட நாயகனுக்கும், எல்லாவற்றிலும் ஒரு ஒழுக்கம், நேர்த்தியை கடைபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தையுடைய நாயகிக்கும் ஏற்படும் உரசல்களும், இது போன்ற எண்ணங்கள் சேர்ந்து வாழும்போது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் சுவையாக காட்டியிருக்கிறார்கள்.

விரிவான கதை

ஜெய்சங்கர் ஒரு மாடலிங் நிறுவனம் நடுத்துகிறார். புகைப்படங்கள் எடுக்கும்போதும், பழகும்போதும் இயல்பாகவே பெண்கள் கூட பழகும் வாய்ப்பு வந்துபோனாலும், வேறு கெட்ட எண்ணங்களோ, பழக்கங்களோ ஏற்படுவதில்லை. இந்நிலையில், அவரின் சித்தப்பா அவருக்குப் பெண்பார்க்கிறார். ஒரு வரன் மலர்ந்து வந்திருப்பதாகவும், அப்பெண்ணை காண மறுநாள் ஒரு நேரத்தை குறிப்பிட்டு வருமாறும் கூறுகிறார். சரி என்று தலைஅசைத்து, தலையணைக்குள் தன்னைப்புதைத்து மறக்கிறார். பெண்பார்க்க போகும் இடத்தில் ஸ்ரீவித்யாவைத்தான் பெண்பார்க்க ஏற்பாடு. குறித்த நேரத்தில் வராததால், ஸ்ரீவித்யாவோ, “இப்பவே அவரால் நேரத்தை கடைபிடிக்க முடியாதவர் ஒழுங்கீனத்தை கடைபிடிப்பவராகவே இருப்பார் அதனால் இந்த மாப்பிள்ளை வேண்டாமென்று அப்பாவிடம் கூற, அவரோ, “சரி ஒருவேளை வந்தால் பார்த்துவிட்டு போகட்டும், பின் ஜாதகம் சரியில்லை என்று தட்டிக்கழித்துவிடலாம்” என்றும் கூற சமாதானம் அடைகிறார்.  அங்குவரும் நாயகன், உன்மையான காரணத்தை கூற, பின் சில பல சமுதாய வழக்கங்கள் கைப்பந்து விளையாட, உள்ளத்திலே நாயகிக்கு அவரை பிடித்துப்போகிறது.  நாயகனின் வசீகரத்தில்  முன் கூறிய கறார் ஆணையை அரசியல்வாதி கொடுக்கும் வாக்குறுதி போல் நாயகி மறக்க, இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

திருமணமான புதிதிலிருந்தே இருவரும் இரு துருவமாக இருக்கிறார்கள்.  நாயகிக்கு எதிலும் ஒரு ஒழுக்கம் தேவை, சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் எழுந்து எல்லா வேலைகளையும் செய்து, இராணுவ மிடுக்குடன் கையாள்வது பிடிக்கிறது.  நாயகரோ, நினைத்த நேரத்தில் எழுந்து, குளித்து, அலுவல் பணிகளை முடித்து, நினைத்த நேரத்தில் வீடு வந்து சேருவது வாடிக்கை. தொடக்கத்தில் பெருங்காய டப்பாவாக மணக்கும் நாயகியின் மோகத்தால், அவர் செயல்முறைப்படுத்தும் கட்டுப்பாடுகளை பொறுத்துக்கொள்ளும் நாயகன், நாளாக நாளாக அவைகள் தன்னையறியாமலே பெரும் தலைவலியாக உருவாவதை உணர்கிறான். இதனிடையில், அவன் அலுவலகத்தில் பெண்களும் வேலைபார்ப்பதால், சந்தேகம் பொறிதட்ட, தன் வீட்டில் வேலை பார்க்கும் வேலையாளை அய்யாவுக்கு திருமணத்திற்கு முன் ஏதாவது பொம்பளை தொடர்பு உண்டா என்று வினவ, விசுவாசியான அவன் அவரிடம் போட்டுக்கொடுக்க, பழங்காலச்சுவரின் நடுவில் செடிவ ளர்ந்தது போல் கருத்துவேறுபாடு துளிர்விடுகிறது.  இந்த வண்டி குறிப்பிட்ட இலக்கை அடையுமா என்று சந்தேகம் வருகிறது நாயகனுக்கு.

ஒருமுறை வேலைக்காரன் துடைக்கும்போது ஒருபொருளை தவறுதலாக கீழே நழுவ விட்டு அது உடைய, கடிந்து கொள்ளும் ஸ்ரீவித்யா, அவனை வேலையை விட்டு தூக்க, அவனுக்கு ஆதரவாக நாயகன் அங்கு வந்து பேச சண்டை வலுக்கிறது.  அவனே வேலையை விட்டு நின்று விடுகிறான். இதற்கிடையில், இவர்கள் அடிக்கும் ‘லூட்டியில்’, இரு குழந்தைகளும் பிறந்து வளர்கின்றன. அவர்களிடமும் கண்டிப்பு காட்டுகிறார் நாயகி.  வெளியில் சாப்பிடக்கூடாது, நேரத்திற்கு சாப்பிடவேண்டும், விளையாட்டு நேரத்தில் விளையாட்டு, படிப்பு நேரத்தில் படிப்பு, ஐஸ்கிரீம் உண்ணக்கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாட்டால், குழந்தைகள் அப்பாவிடம் வடிகால் தேடுகின்றன.  அப்பாவோ இதிலிருந்து தப்பிக்க, புதிதாக வந்த டைபிஸ்ட்டான ஃபடாபட் ஜெயலட்சுமியிடம் வடிகால் தேடுகிறார். அவரின் அன்பு, சிரித்துப்பேசும் குணம், எப்பொழுதும் உல்லாசமாக இருக்கும் குதூகலம் இவையெல்லாம் பிடித்துபோக, அவரை தன் உள்ளத்தை பகிர்ந்து கொள்ளும் சுமைதாங்கியாக எண்ணுகிறார் நாயகன்.  வெ.மூர்த்தியின் காதலிக்கு டைபிஸ்ட் வேலை கிடைக்காத்தால், சாப்பாடு கொண்டு வரப்போகும்போது நாயகியிடம் தன் பங்குக்கு தீக்குச்சியை உரசி விடுகிறார். இதற்கிடையில், இவர்களில் பக்கத்து வீட்டு வளாகத்தில், குழந்தைக்கு பாட்டு பாடிக்கொண்டே அமுதூட்டும் கைம்பெண்ணாக ஒய்.விஜயா.  குழந்தைகளை வேடிக்கைகாட்ட உப்பரிகைக்கு போகும் அவர், அவரின் குழந்தையையும் குதூகலப்படுத்த பாட்டுப்பாட, “நீங்கள் அருமையாகப் பாடுகிறீர்களே” என்று பாராட்ட, அந்த சமயத்தில் நாயகி அங்கு வர, தகாத வார்த்தைகளால் ஒய்.விஜயாவை திட்ட, ஆத்திரத்தில் அடித்துவிடுகிறார் நாயகன்.  இப்போது செடி, மரமாக வளர்ந்து, வீட்டைவிட்டு போய்விடுகிறார்.

ஸ்ரீவித்தியாவின் தந்தை சமாதானப்படுத்தி கூட்டிவருகிறார். இருந்தும் நீருபூத்த நெருப்பாக பிரச்சனை அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்க, ஒருமுறை குழந்தைகளுக்கு பணத்தை எடுத்த்தற்காக சூடு போட, அவர்களை கூட்டிக்கொண்டு ஃபடாபட் வீட்டிற்கு போகிறார் நாயகன்.

ஃபடாபட்டிற்கும் ஒரு சோகம், அவர் காதலித்த நபருக்கு, இவருக்கும் விபத்து ஏற்பட, இவர் பிழைக்க, அவர் மரிக்க, காதலினின் நாட்களையே மனதில் ஏந்தி காலம் தள்ளுகிறார். இவருக்கு அப்பொழுது மண்டையில் ஏற்பட்ட அடியினால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, அமரிக்கா சென்றால்தான் (அப்போது வந்த படங்களில் எழுதப்படாத விதி இது) பிழைக்க முடியும் என்று மருத்துவர் கூற, நாயகன் அதற்குண்டான செலவை ஏற்றுக்கொள்ள முன்வருகிறார். நாயகி மீண்டும் தந்தைவீட்டுக்கு நடையைக்கட்டுகிறார், இனி திரும்புவதில்லை என்ற உறுதியோடு.

பின் உன்மை விளங்க, ஃபடாபட்டை அமரிக்கா போக அவரும் வற்புறுத்த, ஒரு மருத்துவரோடு விமானநிலயத்திற்கு ஓடிப்போக, அங்கு ஏற்கனவே குறிப்பிட்ட விமானம் ஓடுதளத்தில் ஊர்ந்துபோக, கட்டுப்பாட்டு அறைக்கு போய் விமானத்தை நிறுத்தச்சொல்ல (இப்படியெல்லாம் செய்யமுடியுமா என்ன?), பின் அதை நிறுத்தி அதில் ஏறும் ஃபடாபட் உயிரைவிட, இருவரும் சேர்ந்து “மங்களம்”.

நடிப்பு

கதாநாயகனாக ஜெய்சங்கர் நன்றாக நடித்துள்ளார். அவரின் கடைசிக்கால பட வரிசையில் இவை வருகிறது போலும். இருதலைக்கொள்ளி எறும்பாக நன்றாக அபிநயத்துள்ளார். ஸ்ரீவித்யாவும் தன் பங்குக்கு கண்டிப்பானதொரு மனைவியாகவும், தாயாகவும் நடித்துள்ளார்.  குமாஸ்தாவாக வரும் தேங்காய், வெண்ணீராடை மூர்த்தி வந்து போகிறார்கள். ஃபடாபட் ஜெயலட்சுமிக்கு கிருஸ்துவப் பெண் வேடம்.  அவர் கிரிஸ்துவர் என்று நமக்கு எப்படி தெரிவிப்பது? அதற்காக, கிட்டத்தட்ட எல்லாக்காட்சிகளிலும் – ஒரு பெரிய சிலுவையை எப்பொழுதும் வெளியில் தெரியும்படி அணிந்து கொண்டு வருகிறார்(விஜயகுமாரும் அப்படியே, கோட், சூட் அதற்குமேல் சங்கிலி). ஃபடாபட் நல்ல நடிகை என்பதில் சந்தேகமில்லை. விஜயகுமார் ஒருபாட்டுக்கு வந்து போகிறார். அதேபோல் ஒய்.விஜயாவும் பக்கத்துவீட்டு கைம்பெண்ணாக வந்து ஒரு பாட்டு பாடிவிட்டுப்போகிறார்.  ‘சுராங்கனி’ பாட்டு தொடங்குவதற்க்கு முன்பு ஆரம்பமாகும் கர்நாடக இசையை ரசிக்கும் நாயகியின் முகபாவத்தை குதூகலமாக காட்டி  நாயகனின் வாடிய பாவத்தையும், பின் ‘துள்ளல்’ பாட்டு தொடங்கியவுடன் இருவர் முகபாவனைகளை மாற்றிக்காட்டுவதும் நல்ல இயக்கச் சிந்தனை.

பாடல்கள்

பாடல்கள் அருமை. இப்படம் இளையராஜாவின் ஐந்தாவது படம் என்று நினைக்கிறேன். அருமையானதொரு இசையை, தேனை நூல்போல் திரித்து செவியில் பாய்ச்சியிருக்கிறார்.  தத்துவப்பாடல்களை எழுத வேண்டுமென்றால், ‘இருட்டுக்கடை அல்வாவை’ சாப்பிடுவது போல் சுவையுடன் கூடிய வெறி வந்துவிடும்போல நமது அற்புதக்கவிஞருக்கு.  அவருக்கு ஈடு இணை அவரே. இப்பாடலைக் கேளுங்கள்.  “குதிரையிலே நான் அமர்ந்தேன் கிழக்குப்பக்கம் போவதற்கு” அருமை,

http://www.mediafire.com/?ef6dyxqg32jy9rw

கதாநாயகனின் இயலாமையை பாட்டில் கொட்டியிருக்கிறார்.

ஒரு வீடு இரு உள்ளம்’ (எஸ்.பி.பி) பாட்டிலும் தன் நிலையையும், தன் குழந்தைகளின் நிலையையும் சோகமாக கொடுத்திருக்கிறார்.

http://www.mediafire.com/?dk5v26x1pvq7l7d

இளையராஜா ராஜங்கம் புரிந்திருக்கிறார். ‘தேவன் திருச்சபை மலர்களே” பாட்டில் வரும் பிண்ணனி ‘கிடார்’ இசையில் பட்டையை கிளப்புவதோடு, எல்லா முக்கிய சோக, குதூகுலக் காட்சிகளின் பிண்ணனியிலும் ‘கிடாரை’ மெல்லிய இழையாக வாசித்து அற்புதமாக லயிக்கச்செய்திருக்கிறார்.  ‘ப்ரதித்வானி’ என்ற கன்னட படத்திற்கு இசையமைத்த திரு.ஜி.கே.வெங்கடேஷுக்கு இதே ‘கிடார்’ வாத்யத்தை வைத்து பாட்டின் கட்டுரையை வாசித்ததாக எங்கோ படித்தேன்.

சுராங்கனி பாடல் ‘பாய்லா’ பாட்டுப்போல் உள்ளது. இப்பாடல்களில் இருவரின் ரசனையையும் நன்றாக காட்டியிருக்கிறார்கள்.  ‘கபி கபி மேரே தில்மே’ என்ற ஹிந்தி பாட்டுடன் தொடங்கும் வி.கே.ராமசாமியின் ஒரு நகைச்சுவை பாடல் கதாகாலட்சேபமாக உள்ளது.  “ஒரு வீடு இரு உள்ளம்” எஸ்.பி.பி. (இதை எழுதியவர் பஞ்சுஅருணாசலம்), “தேனில் ஆடும் ரோஜா”, “தேவன் திருச்சபை மலர்களே” (இரண்டு முறை) – எல்லாமே திரும்பத்திரும்ப கேட்கவைக்கும் சுகம்.

வேதம் ஒலிக்கின்ற மலரிது……http://www.youtube.com/watch?v=ZnN9FKddpTI

கபி கபி மேரே தில்மே (இளையராஜா/டிஎம்.எஸ்) http://www.youtube.com/watch?v=SzxVaAj7Y_Y

சுராங்கனி சுராங்கனி…(மலே.வாசு, பூரணி ) http://www.youtube.com/watch?v=5lUFTMXNzPM

தேவன் திருச்சபை மலர்களே…..(பூரணி) http://www.youtube.com/watch?v=MZuraxUzmsA

கடைசி ஒரு 30 நிமிடம் தமிழ் படத்துக்கேஉள்ள கலாச்சார, மாற்றமுடியாத, அந்நாளைய நடைமுறையை கத்தி எடுத்து கழுத்தில் பதம் பார்க்கிறார்கள். இதை தவிர்த்துப்பார்த்தால், பாட்டிற்க்காகவும், முன்பாதிக்காகவும் படத்தை பார்க்கலாம்.

இப்படன் ஓடியதா சுத்தமாக நினைவில்லை. இப்பாடல்களை இலங்கை வானொலியில் பல முறை கேட்டிருக்கிறேன்.  இப்பட்த்தில் பிரதி மதுரையில் கிடைக்கிறது (modern cinema). பொதுவாக, படங்களின் கதைகள் திருமணத்திற்கு பின் தொடங்கினால், அப்படம் நன்றாக வரும். இப்படமும் அந்த எதிர்பார்ப்பை பொய்க்கவில்லை.

நூத்துக்கு நூறு


திருப்பி கொஞ்சம் விமர்சனங்களை ஆரம்பிக்கலாம் என்று பார்க்கிறேன்.

நூத்துக்கு நூறு கொஞ்சம் புத்திசாலித்தனமான படம். அன்றைக்கு புத்திசாலித்தனமாகத் தெரிந்த முடிச்சு, காட்சி அமைப்பு இன்றைக்கும் புத்திசாலித்தனமாக இருப்பதில்லைதான், ஆனாலும் ஒரிஜினல் எண்ணம் தெளிவாகத் தெரிகிறது, பாராட்ட வேண்டிய முயற்சி.

ராஷோமான், அந்த நாள் மாதிரி காட்சி அமைப்பு. ஒரு சம்பவம் இப்படி நடந்தது என்று ஒருவர் ஃப்ளாஷ்பாக்காக சொல்வார்; இல்லை இப்படித்தான் நடந்தது என்று அடுத்தவர் சொல்வார். காமெரா கோணம் விரிந்துகொண்டே போய் இன்னும் இன்னும் காட்சிகள் தெரிவது போல ஒரு உணர்வு.

கல்லூரியில் பாப்புலர் ப்ரொஃபசர் ஜெய்ஷங்கர். ஆங்கிலோ-இந்தியர் வி.எஸ். ராகவன் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். ராகவனோடு நல்ல உறவு. தன் மாணவன் நாகேஷின் சகோதரி லக்ஷ்மியோடு நிச்சயதார்த்தம் ஆகிறது. திடீரென்று அவர் மீது ஒருவர் மாற்றி பெண்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மாணவி ஸ்ரீவித்யா ஜெய் தன்னை கெடுக்க முயன்றார் என்று குற்றம் சாட்டுகிறார். இன்னொரு மாணவி தனக்கு அவர் லவ் லெட்டர் கொடுத்தார் என்கிறார். வி.எஸ். ராகவனின் மகள் விஜயலலிதா ஜெய்தான் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா என்கிறார். ஜெய் கைது செய்யப்படுகிறார். பிறகு?

பழைய படம், எல்லாரும் பார்த்திருப்பார்கள். அதனால் சஸ்பென்ஸ் எல்லாம் வைக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். கதையின் முக்கியமான முடிச்சு – தன்னை கெடுக்க முயலும் ப்ரொஃபசரிடமிருந்து தப்பி ஓடும் பெண் பாடப்புத்தகங்களையும் பையையும் கவனமாக எடுத்துக் கொண்டு போகமாட்டாள் என்ற பாயின்ட் – நன்றாக வந்திருக்கிறது. அதில் நான் மிகவும் ரசித்தது இயக்குனரின், அன்றைய ரசிகர்களின் tacit முடிவு – அப்படி புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்தாள் என்று பெண்ணின் அம்மா உண்மையைத்தான் சொல்வாள், பொய் சாட்சி சொல்லமாட்டாள் என்பதுதான். கதாபாத்திரங்கள் பொதுவாக உண்மையைத்தான் சொல்வார்கள் என்பது அன்றைக்கு ஒரு unspoken assumption ஆக இருந்திருக்கிறது.

ஜெய் நன்றாக நடித்திருக்கிறார். அதுவும் ஸ்ரீவித்யா என்ன நடந்தது என்று சொல்லும்போது ஃப்ளாஷ்பாக்கில் அவர் விடும் ரொமாண்டிக் லுக்கும், தானே விவரிக்கும்போது அவர் முகத்தில் காட்டும் கண்டிப்பும் நல்ல கான்ட்ராஸ்ட். நாகேஷை மாணவனாக ஒத்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். கொஞ்சம் மிகை நடிப்புதான். ஆனால் போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த் அவரை விசாரிக்கும்போது அவர் பேசுவது நன்றாக இருக்கும். காலேஜ் பிரின்சிபால் ஜெமினி கணேசன் சின்ன ரோலில் திறமையாக நடித்திருப்பார். வி.எஸ். ராகவனுக்கு over the top ரோல். சிவாஜி சாயல் அடிக்கிறது. அது சரி, இன்றைக்கும் கூட சிவாஜி சாயல் இல்லாத நடிப்பைப் பார்ப்பது கஷ்டம்தான்.

சில வசனங்களில் புத்திசாலித்தனம் தெரிகிறது. ஜெய் மீது எல்லாரும் குறை சொல்லும்போது நாகேஷ் வெள்ளை சுவரில் ஒரு கறுப்புப் புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். கறுப்புப் புள்ளி என்று சஹஸ்ரநாமம் சொன்னதும் இவ்வளவு பெரிய வெள்ளைச் சுவர் தெரியவில்லையா என்பார்.

சில இடங்களில் இயக்குனர் கோட்டை விடுகிறார். ஜெய் ஸ்ரீவித்யா தன் மேல் ஆசைப்படுகிறார் என்ற உண்மையை முதலில் சொல்லமாட்டார். ஏனென்றால் அது வெளியே தெரிந்தால் அவளை எல்லாரும் கேவலமாகப் பார்ப்பார்கள் என்பார். ஆனால் அவரே இதை எல்லாருக்கும் தெரியப்படுத்துகிறேன் என்று ஸ்ரீவித்யாவை மிரட்டுவார். அதனால்தான் ஸ்ரீவித்யா பொய்யாக அவர் மேல் பழி போடுவதே!

1970-இல் வந்த படம். ஜெய், லக்ஷ்மி, நாகேஷ், வி.எஸ். ராகவன், விஜயலலிதா, ஜெமினி, ஸ்ரீகாந்த் தவிர எஸ்.வி. சஹஸ்ரநாமம், வி. கோபாலகிருஷ்ணன், நீலு, ஒய்.ஜி. மகேந்திரன் (முதல் படம்), மனோகர், சுகுமாரி, எஸ்.என். லட்சுமி முகங்கள் தெரிகிறது. ஒரு சின்ன அம்மா ரோலில் வருவது ஜெயந்தி மாதிரி இருக்கிறது, ஆனால் 70-இலேயே ஜெயந்திக்கு அம்மா ரோலா என்று சந்தேகமாக இருக்கிறது. கதை வசனம் இயக்கம் பாலச்சந்தர். பாடல்கள் வாலி என்று நினைக்கிறேன். இசை வி. குமார்.

படத்தில் இரண்டு ஹிட் பாட்டுகள் – நான் உன்னை மாற்றிப் பாடுகிறேன் ஒன்று. அதுவும் மூன்று முறை வரும். ஒரு முறை விஜயலலிதா முதலில் விவரிக்கும் கோணத்தில், ஒரு முறை ஜெய்யின் கோணத்தில், இன்னொரு முறை முழு உண்மையாக. இப்போது கூட புத்திசாலித்தனமான காட்சியாகத்தான் தெரிகிறது.

இன்னொன்று நித்தம் நித்தம் ஒரு புத்தம் புது சுகம். இதுவும் அன்றைக்கு புதுமையான முறையில் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. Silhoutte உத்தி நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாட்டில் இருக்கும் துள்ளலும் பொருத்தமாக இருக்கிறது.

பூலோகமா என்று தொடங்கும் ஒரு நாடகப் பாட்டு ஒன்று. நாகேஷ் சத்தியவான் சாவித்திரி நாடகம் போடுகிறார். பிரமாதம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் பார்க்கலாம், கேட்கலாம்.

உங்களில் ஒருவன் நான் என்று இன்னொரு பாட்டு. மறந்துவிடலாம்.

சுருக்கமாக பாலச்சந்தரின் சிறந்த படங்களில் ஒன்று. பார்க்கலாம். பத்துக்கு ஏழு மார்க். பி க்ரேட்.

ஜெய்ஷங்கரின் கல்யாண ஆல்பம்


ரொம்ப நாளாயிற்று ஒரு ஃபோட்டோ பதிவு போட்டு. ஜெய்ஷங்கரின் கல்யாண ஆல்பத்திலிருந்து சில ஃபோட்டோக்கள். பல வாரங்களுக்கு முன் குமுதத்தில் வந்த ஒரு கட்டுரையிலிருந்து இங்கே மீள்பதித்திருக்கிறேன். நன்றி, குமுதம்!

முதல் படத்தில் ஜெமினி, சோ, சிவகுமார் தெரிகிறார்கள். இரண்டாவது படத்தில் நாகேஷ். கடைசி படத்தில் ரவிச்சந்திரன். வேறு யாரும் எனக்கு அடையாளம் தெரியவில்லை. தெரிந்தவர் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அன்றும் இன்றும் (ஃபோட்டோ பதிவுகள்)

நல்லதந்தியின் ஜெய்ஷங்கர் புராணம்


நல்லதந்தியின் பல மறுமொழிகளை இங்கே படித்திருக்கலாம். அவர் எழுதமாட்டாரா என்று நான் எப்போதும் ஆவலுடன் இருப்பேன். அவர் ஜெய்ஷங்கர் பற்றி எழுதிய ஒரு மறுமொழி மிக சுவாரசியமாக இருக்கிறது, அதையே இங்கே பதிவாக போட்டிருக்கிறேன்.

நல்லதந்தி சேலத்துக்காரர். நானும் பக்சும் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள். எங்களுக்கு பொழுதுபோக்கு சினிமாதான். டவுனுக்கு போனால் (பழைய) பஸ் ஸ்டாண்டிலிருந்து சங்கீத் தியேட்டர் வரை உள்ள ஒரு மைல் ஏரியாவில் எழுபது என்பது தியேட்டர் இருக்கும். படம் பார்த்துவிட்டு பெங்களூர் பஸ் கண்டக்டர்களிடம் சண்டை போட்டு, அது பலிக்காவிட்டால் கெஞ்சி காலேஜில் இறங்குவோம். அவர் அப்சரா, உமா, பழனியப்பா, ஓரியண்டல் என்று தியேட்டர் பேரை அள்ளிவிடும்போது நாஸ்டால்ஜியா தாக்குகிறது!

நான் சின்ன வயதில் ரஜினி வருவதற்கு முன்பு ஜெய்யோட விசிறி. எனக்கு இன்னும் சேலத்தில ஓரியண்டல் தியேட்டரில் பொன்வண்டு பார்த்ததும், அத்தையா மாமியா? பார்த்ததும், ஜெயா தியேட்டரில் அக்கரை பச்சை, அப்சராவில் கல்யாணமாம் கல்யாணம் பார்த்ததும் பசுமையா நினைவிருக்கு!.

ஒருமுறை சங்கம் தியேட்டரில் ஜம்பு ரிலீஸ் ஆன முதல் நாள் படம் பார்க்கப் போனபோது (காலைக் காட்சி) (பெண்கள் பக்கம் தரை டிக்கட்) கவுண்டரில் இருந்த ஆள் எங்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டார். எங்கள் கும்பலுக்கு (நான், என் சித்தி பையன், எனது தாய் மாமன் பையன்கள் 2) அது A படம் அதனால் கொடுக்கவில்லை என்ற விபரம் தெரியவில்லை. A படம் என்றாலே என்ன என்கிற விபரம் எங்களுக்குத் தெரியாது. அந்த டிக்கெட் கவுண்டர் நீண்ட திறந்த நடையாலானது என்பதால் நாங்கள் வெளியே சென்று அவருக்குத் கண்ணுக்குத் தெரியும்படியாகக் காத்திருந்தோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு பெண்கள் யாரும் வராததால் அவர் மனமிரங்கியோ, எதற்கு வந்த டிக்கெட்டை இழக்க வேண்டும் என்று நினைத்தோ எங்களைக் கூப்பிட்டு டிக்கெட் கொடுத்து உள்ளே அனுப்பினார். ஆண்கள் பக்கம் உள்ளே போகாததற்குக் காரணம் நாங்கள் எங்கள் அம்மாக்களுடன் பிற சினிமாக்களுக்குப் போகும் போது அந்தப் பக்கமே போனோம் என்பதைத் தவிர ஆண்கள் பக்கம் சரியான கூட்டம். உள்ளே போய் படம் பார்க்கும் போதுதான் A படம் என்றால் என்ன என்று தெரிந்தது! .

ஜெய்சங்கருக்கு சேலம் என்றால் ரொம்பப் பிரியம் அங்கே அவருக்கு நிறைய நண்பர்கள் கூட்டம் உண்டு. அவர் 70களில் சிறு தயாரிப்பாளர்களின் படத்தில் நடித்து வெள்ளிக் கிழமை ஹீரோ என்று புகழ் பெற்ற காலத்தில் அவரது பெரும்பான்மையான படங்கள் சேலத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டூடியோவிலேயே தயாரிக்கப்பட்டன.

ஒருமுறை குமுதம் வார இதழ் மாறு வேடத்தில் நடிகர்கள் இருக்க இரசிகர்கள் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு என்று ஒரு போட்டியை நடத்தியது. வாரவாரம் வெவ்வேறு ஊர்களில் பல நடிகர்கள் மாறு வேடமிட்டு தெருக்களில் அலையும் போது பொதுமக்கள் கண்டு பிடிக்க வேண்டும். ஜெய் வழக்கம் போல சேலத்தையே தேர்வு செய்தார். அதில் அவர் போட்டிருந்தது பிச்சைக்காரன் வேசம்!.

வண்டிக்காரன் மகன் பெருத்த வெற்றியைப் பெற்றவுடன், பிறகு தொடர்ச்சியாக கலைஞர் கைவண்ணத்தில் ஆடு பாம்பே, மாயாண்டி, காலம் வெல்லும் போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்த போது அவருக்கு தி.மு.க. முத்திரை குத்தப்பட்டது. கருணாநிதி ராசி அவரையும் தாக்கியது. அந்தக் குறிப்பிட்ட படங்கள் எதுவும் வெற்றியைப் பெறவில்லை. அந்த நேரத்தில் அவர் நடித்து வெளி வந்த (மேள தாளங்கள் சுமாரான வெற்றி சாந்தியில் வெளிவந்தது) அத்தனைப் படங்களும் காலி. எனவே பிற்காலத்தில் கலைஞர் கதை வசனம் எழுதி அழித்த நடிகர்களின் சகாப்தத்தை தொடங்கி வைத்த முதல் நடிகர் என்ற பெருமை மக்கள் கலைஞரை சென்றடைந்தது.(இதுவும் அந்த நேரத்தில் வழங்கப்பட்ட பட்டம்தான்).

ஒரு வருடம் சும்மா இருந்த அவரைக் கண்டு வருந்திய திரையுலகம் (ஜெய் திரைக்கு வந்த நாள் முதல் அவரை விரும்பாதவர்களே திரைஉலகில் இல்லை, என்கின்ற அளவிற்கு அவ்வளவு நல்ல பெயர் எடுத்திருந்தார். பத்திரிக்கைகள் கூட அவருக்கு படம் இல்லாமல் இருந்த காலத்தில் கூட ஆதரவு தந்தன. சினிமா நடிகர்களை புகழ்ந்து எழுதாத கல்கண்டு கூட அவரைப் பாராட்டியே எழுதியது) முரட்டுக் காளையில் வில்லனாக திரும்பவும் கொண்டு வந்து அவர் திரை வாழ்க்கையைப் பரபரப்பாக்கியது. அவரது இரசிகர்களுக்கு அவர் வில்லனாக நடிப்பது பிடிக்கவில்லை. பத்திரிக்கைகளுக்குக் கூட அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லனாக நடிப்பது பிடிக்காவிட்டாலும், ஜெய்சங்கருக்கு வில்லன் வேடம் பொருந்தவில்லை இருந்தாலும் அவரது நடிப்புத் திறமையால் அதைச் சாமர்த்தியமாக சரி செய்து ஜெயித்துவிட்டார் என்று எழுதின.

நான் முரட்டுக்காளை வெளிவந்த நேரம் தீவீர ரஜினி ரசிகனாக மாறிவிட்டிருந்தேன்.விடியற்காலை ஐந்து மணிக்கு ஓரியண்டல் தியேட்டரில் எங்கள் கும்பல் படம் பார்க்க நின்றது, ரஜினிக்காக மட்டுமல்ல ஜெய்க்காகவும்தான்.

(இந்தப் படம் வரும்போது எனக்கு பதிமூன்று வயது இருக்கும். எவ்வளவு சுதந்திரமாக நான் இருக்க வீட்டில் விட்டிருக்கிறார்கள்.அப்போது ஊரும் கொஞ்சம் நன்றாக இருந்தது. இப்போது இந்த மாதிரி பையன்கள் இருக்க முடியுமா?)

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்: நல்லதந்தியின் தளம்

பட்டணத்தில் பூதம்


பட்டணத்தில் பூதம் கதையைப் பற்றி சாரதா விலாவாரியாக எழுதி இருக்கிறார். விகடன் விமர்சனத்தில் அந்தக் காலத்தில் இது எப்படி வரவேற்கப்பட்டது என்று தெரிகிறது. இனி மேல் புதிதாக என்ன எழுதுவது என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

பாட்டுகள்: கோவர்த்தனம் ஏன் பெரிய இசை அமைப்பாளராக வளர முடியவில்லை என்று வியந்திருக்கிறேன். இதிலும் சரி, இது வருவதற்கு ஐந்தாறு வருஷம் முன் வந்த கைராசி படத்திலும் சரி பாட்டுகள் பெரிய ஹிட். ஆனால் கோவர்த்தனம் எம் எஸ்வியின் உதவியாளராகத்தான் முடிந்தார். ஏன் என்று தெரியவில்லை. இத்தனைக்கு இவர் ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான சுதர்சனத்தின் தம்பி. பல தொடர்புகள் இருந்திருக்கும்.

பூவும் பொட்டும் விமர்சனத்தில் நான் கோவர்தனத்தை பற்றி எழுதிய சில வரிகள் –

கோவர்தனம் ஒரு almost man. ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஆர். சுதர்சனத்தின் தம்பி. 1953இலேயே தனியாக ஜாதகம் என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். அவர் இசை அமைத்த முக்கால்வாசி படங்களின் இசை வெற்றி அடைந்திருக்கிறது. கைராசி, பட்டணத்தில் பூதம் போன்ற படங்களும் வெற்றி அடைந்தன. ஆனால் அவரது வாழ்க்கை உதவி இசை அமைப்பாளராகவே முடிந்துவிட்டது. சி.ஆர். சுப்பராமன், சுதர்சனம், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எம்எஸ்வி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ் எல்லாருக்கும் உதவி! தேவாவுக்கு கூட உதவியாக இருந்தாராம்! இவ்வளவு திறமை இருந்தும் ஏன் அவரால் ஒரு இரண்டாம் தட்டு இசை அமைப்பாளராகக் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது ஒரு புதிர்தான்.

இளையராஜா வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் அவரும் கோவர்தனமும் சேர்ந்து ஒன்றாக இசை அமைப்பதாக இருந்ததாம். பஞ்சு அருணாசலம் வற்புறுத்தியதால் இளையராஜா தனியாக இசை அமைத்தாராம்.

கண்ணதாசன் காமராஜரிடம் தான் காங்கிரசில் சேர விரும்புவதை குறிப்பாக சொல்லவே அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்று பாட்டு எழுதினாராம். எனக்கு நம்பிக்கை இல்லை. இது வந்தபோது கண்ணதாசன் தீவிர காங்கிரஸ்காரர் என்று நினைக்கிறேன். அப்படியே இல்லாவிட்டாலும் எழுதும் பாதி பாட்டு ரிலீஸ் ஆவதில்லை; படங்கள் எல்லாம் எப்போது ரிலீஸ் ஆகுமோ சொல்ல முடியாது. மேலும் காமராஜுக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். கண்ணதாசன் படம் ரிலீசாகி, பாட்டு ஹிட்டாகி, அதை காமராஜ் கேட்டு, இவரது உள்குத்தை புரிந்து கொண்டு இவரை சேர்த்துக் கொள்வார் என்று நினைத்திருந்தார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. கண்ணதாசனோ, கோவர்த்தனமோ, காமராஜரோ, இல்லை யாராவது சினிமாக்காரர்களோ இப்படி சொல்லி இருக்கிறார்களா? இல்லை இது சும்மா யாரோ கிளப்பிவிட்ட கதையா?

சிவகாமி மகனிடம்தான் சிறந்த பாட்டு. கண்ணிலே கண்டதெல்லாம் காட்சியா, நான் யார் யாரென்று சொல்லவில்லை இரண்டும் நன்றாக இருக்கும். உலகத்தில் சிறந்தது எது சுமார். இதழ்கள் விரித்தது ராஜா என்றும் ஒரு பாட்டு இருக்கிறதாம். கேட்ட மாதிரியே இல்லை. எல்லா பாட்டையும் இங்கே கேட்கலாம்.

படத்தின் சிறந்த காட்சியே அந்த செய்தித்தாளிலிருந்து எம்ஜிஆர் கிளம்பி வந்து நான் ஆணையிட்டால் என்று முழங்குவதும் சிவாஜி பாட்டும் நானே என்று பாடுவதும்தான். மிக அழகாக எடுக்கப்பட்டிருக்கும். ஸ்ரீனிவாஸ் வீடியோ சுட்டி கொடுத்திருக்கிறார்.

கே.ஆர். விஜயா சிக்கென்று அழகாக இருந்த காலமும் உண்டு. 4 சிம்ரன் ஒன்றாக நிற்பது போல இருந்த காலமும் உண்டு. நல்ல வேளையாக இந்த படம் வந்த போது ஒல்லிதான். இதற்கப்புறம் நீச்சல் உடை போட்டுக் கொண்டு வரவில்லை என்று சாரதா எழுதி இருந்தார். இரண்டு மூன்று வருஷம் கழித்து எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் நீச்சல் உடை தேவைப்பட்டிருக்கும்! நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற வரிக்கு அவரை ஆடவிடலாம்!

படம் பிராஸ் பாட்டில் என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாம். எஃப். அன்ஸ்டே எழுதிய நாவல் படமாகி இருக்கிறது. ராண்டார்கை இதைப் பற்றி விரிவாக சொல்கிறார். அவர் கட்டுரையில் அன்ஸ்டேயின் பெயர் தவறாக அச்சாகி இருக்கிறது. மேலும் ப. பூதம் படம் வந்த வருஷம் 1964 இல்லை, 67.

பாஸ்கெட்பால் காட்சியை ஆப்சென்ட் மைண்டட் ப்ரொஃபசர் படத்தில் பார்த்திருக்கலாம். எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.

நாகேஷ் காமெடி தேறவில்லை. ஜெய், விஜயா பார்க்க இளமையாக, அழகாக இருப்பார்கள். ஒரு நீளமான கிளிப் கீழே – ஜெய்யும் நாகேஷும் ஜாவரை முதல் முறை சந்திக்கிறார்கள்.

1967-இல் வந்த படம். ஜெய்ஷங்கர், நாகேஷ், கே.ஆர். விஜயா, பாலாஜி, வி.கே. ராமசாமி, வி.எஸ். ராகவன், ஜாவர் சீதாராமன் நடித்திருக்கிறார்கள். கதை ஜாவர். இயக்கம் எம்.வி. ராமன். இசை கோவர்த்தனம். வெற்றிகரமாக ஓடிய படம். பத்துக்கு 6.5 கொடுக்கலாம். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களில் பட்டியல்

தொடர்புடைய சுட்டிகள்:
பட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்
பட்டணத்தில் பூதம் விகடன் விமர்சனம்
பாட்டுகளை கேட்க
ராண்டார்கை குறிப்பு
Brass Bottle படம் IMDB தளத்தில்
F. Anstey பற்றிய விக்கி குறிப்பு
பூவும் பொட்டும் விமர்சனம்

பட்டணத்தில் பூதம் – விகடன் விமர்சனம்


பட்டணத்தில் பூதம்   (நன்றி – ஆனந்த விகடன் – விகடன் பொக்கிஷம் (24 -02 -2010 )

காதலரைப் பிரிப்பதும், கடைசியில் அவர்களை ஒன்று சேர்ப்பதும், மூவாயிரம் வருடங்கள் ஒரு ஜாடியில் அடைபட்டுக் கிடந்த பூதத்தின் முக்கிய வேலை. அது நமக்கு முழு நேரப் பொழுதுபோக்கு.

ஆகா! எத்தனை விதமான தந்திரக் காட்சிகள்! எத்தனை அழகான வண்ணக் காட்சிகள்! பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே! பத்திரிகை விளம்பரத்தில் இருக்கும் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் பாடுகிறார்களே!

படத்தில் இருக்கும் கார் ஒன்று உயிர் பெற்று, பெரிதாகி, போர்டிகோவில் வந்து நிற்கிறது. ஹெலிகாப்டர், படகைத் துரத்துகிறது. அந்த ஹெலிகாப்டரை எதிர்த்து கார் ஒன்று வானத்தில் பறந்து செல்கிறது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்! துப்பாக்கிச் சண்டை – ஆவி கக்கும் பயங்கர டார்ச், மின்சாரக் கதவு… இங்கிலீஷ் சினிமா கெட்டுது போங்கள்!

நாகேஷ் அந்த ஜாடியைக் கையில் வைத்துக் கொண்டு, விருந்து சாப்பிட முடியாமல் திண்டாடும்போது வயிறு வலிக்கச் சிரிக்கிறோம். முதலில் காதல் மன்னனாக இருக்கும் ஜெய்சங்கர், பின்னால் புரட்சி நடிகராக மாறுகிறார். நீச்சல் உடையில் இருக்கும் கே.ஆர்.விஜயா மழையில் நன்றாக நனைகிறார். அப்படியிருந்தும் ஜலதோஷம் பிடிக்கவேயில்லை! வில்லன் பாலாஜி தோள்பட்டையைக் குலுக்கும் ஸ்டைலுக்கு, கை குலுக்கி ‘சபாஷ்’ சொல்ல வேண்டும்.முன்பு ஆங்கிலத்தில் பேசிய பூதத்தை இப்போது தமிழில் பேச வைத்திருப்பவர் ஜாவர் சீதாராமன். பூதமாக வரும் அவருடைய நடிப்பு அற்பூதம்!

பூதத்தின் சாதனை, ஒளிப்பதிவாளரின் வெற்றி!

-ஜெய் ரவிகாந்த் நிகாய்ச்!

பட்டணத்தில் பூதம் படத்தின்  இசை அமைப்பாளர் திரு . ஆர் . கோவர்த்தனம் .

ஆர் .கோவர்த்தனம்  அவர்கள் ” ட்யூன்” போட்டு விட்டு பாடலை எழுதச் சொல்வதில் அவருக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை ,

அவர் இசை அமைத்த எல்லாப் பாடல்களுக்கும் , பாடல்கள் தான் முதலில் எழுதப்பட்டது .  பிறகு தான் பாடலுக்கு ” ட்யூன் ” போடப்பட்டது !

அதனால் அவர் இசை அமைத்த எல்லாப் பாடல்களும் ஜீவனுடன் இருக்கின்றன !

இப்படி ஒரு கொள்கையை வைத்திருந்த ஆர். கோ . அவர்களுக்கும் ஒரு சோதனை வந்தது !

” பட்டணத்தில் பூதம் ” படத்திற்கு அவர் இசை அமைத்தபோது , அவர் வழக்கம் போல பாட்டு எழுதச் சொல்லி “ட்யூன் ”  போட்டார் .

ஆனால் ஒரே ஒரு ” டூயட்” பாடலுக்கு ” கஜல் ” இசையில் பாட்டு அமைக்க அப்படத்தின் இயக்குனர் விரும்பினார் !

எனவே கண்ணதாசனும் பாட்டை எழுதிக் கொடுத்துவிட்டு  சென்றார் !   கோவர்த்தன் ” கஜல் ” முறையில் இசை அமைக்க முயன்றார் ! முடியவில்லை !

மறுபடியும் முயன்றார் !   முடியவில்லை ! கண்ணதாசனின் பாடல் வரிகளை மாற்றிக் கொடுத்தால்   முடியும் .

ஆனால் கண்ணதாசன் அப்பாடலை மிகச சிறப்பாக எழுதிஇருந்ததால்,   கோவர்த்தனம் அதனை மாற்ற மறுத்துவிட்டார் .

( அதற்கு ஒரு காரணம் இருந்தது , அது பின்னர் உங்களுக்கு தெரியவரும் ! )

எனவே , இயக்குனரின் அனுமதி பெற்று , ” கஜல் ” இசையைத் தள்ளி  வைத்து வீணையுடன் கூடிய மெல்லிசையை பயன்படுத்தி , ஓர்  அழகான பாடலை நமக்கு கொடுத்தார் !

அந்தப் பாடல்தான் :

‘பட்டணத்தில் பூதம்’ (1967) படத்தில் இடம் பெற்ற,
சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – எனை
சேரும் நாள் பார்க்க சொல்லடி!
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி”

67 பொதுத் தேர்தலின் போது தீவிர தேர்தல் பணிக்காக தன்னை அழைக்க காமராஜருக்கு கண்ணதாசன் விடுத்த விண்ணப்பமாக அப்போது இவ்வரிகள் அர்த்தம் கொள்ளப்பட்டது.

செய்தித்தாளில் வீடியோ – பட்டணத்தில் பூதம் படத்தின் புகழ் பெற்ற “தந்திரக் காட்சி”

சுஜாதா பதில்கள் – பாகம் 1  (உயிர்மை பதிப்பகம்)

மா.வி. கோவிந்தராசன், ஆரணி.
“பட்டணத்தில் பூதம்” என்கிற திரைப்படத்தில் பூதமாய் வருகிற ஜாவர் சீதாராமன் ஒரு செய்திப் பத்திரிகையைப் பார்ப்பார்.  அந்தப் பத்திரிகையில் சினிமா பார்ப்பதுபோல பாடல் காட்சி (பாட்டும் நானே பாவமும் நானே) வரும்.  அதுபோல இன்றைய விஞ்ஞானம் தருமா ?
அதுபோல இன்றைய விஞ்ஞானம் தந்துகொண்டிருப்பதுதான் இன்டர்நெட் இதழ்கள்.  இதில் சோகம் இன்னமும் அந்த “பாட்டும் நானே” பாடலைத்தான் கட்டிக்கொண்டு அழுகிறோம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்
தொடர்புடைய பதிவுகள்: பட்டணத்தில் பூதம் – சாரதா விமர்சனம்

பட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்


சாரதாவின் ஃபோரம்ஹப்-இல் எழுதும் ஜெய்ஷங்கர் திரி சுவாரசியமான ஒன்று. இன்று அதிலிருந்து ஒரு விமர்சனம். மிக அருமையாக இருக்கிறது.

பட்டணத்தில் பூதம் வைத்தே இரண்டு மூன்று பதிவு ஓட்டிவிடலாம் என்று இருக்கிறேன். நானும் ஒன்று எழுதுவேன்!

மக்கள் கலைஞரின் முதல் வண்ணப்படம்

1964-ல் அறிமுகமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு 1967 வரை சுமார் இருபத்தைந்து கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல் வண்ணப் படம் வெளியானது. முதல் வண்ணப் படமே யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான படமாக அமைந்தது. ‘இருபதாம் நூற்றாண்டில் பூதமாவது பிசாசாவது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன?’ என்ற பகுத்தறிவு மற்றும் லாஜிக் இவற்றையெல்லாம் மறக்கச் செய்து மக்களைப் பார்த்து மகிழ வைத்த சிறந்த பொழுதுபோக்குப் படமாக வந்தது ‘பட்டணத்தில் பூதம்’. காட்சியமைப்புகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி, எண்டெர்டெய்ன்மெண்ட் டெம்போ கொஞ்சம்கூட குறையாமல் இறுதி வரை கொண்டு சென்றிருந்தனர்.

‘கொஞ்சும் சலங்கை’ என்ற அருமையான டெக்னிகலர் படத்தை இயக்கிய எம்.வி.ராமன் பட்டணத்தில் பூதம் படத்தை இயக்கியிருந்தார். வசனம் எழுதிய ஜாவர் சீதாராமன் படத்தின் மிக முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆம், ‘ஜீ பூம்பா’ என்ற பூதம் அவர்தான். ஜெய்சங்கருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருக்க, நகைச்சுவையில் நாகேஷ் தூள் கிளப்பியிருந்தார். அவரது ஜோடியாக ரமாபிரபா. வில்லன்களாக மனோகர், பாலாஜி மற்றும் நாம் எதிர்பாராத ஒருவர் பிரதான வில்லனாக உருமாறுவார். வி.கே.ராமசாமி வழக்கம் போல நகைச்சுவை கலந்த அப்பா ரோலில்.

பாஸ்கருக்கும் (ஜெய்) லதாவுக்கும் (கே.ஆர்.வி) ரயில் பயணத்தில் ஏற்படும் சின்ன மோதலோடு படம் துவங்குகிறது. மோதல் சிறிது நேரத்திலேயே ராசியாகி ஒருவருக்கொருவர் நல்ல அறிமுகமாக, ஜெய் கல்லூரியில் ஒரு பாஸ்கட்பால் பிளேயர் என்றும், விஜயா கல்லூரியின் நல்ல பாடகி என்றும் தெரிந்து கொள்கின்றனர். லதாவின் அப்பா தங்கவேலு முதலியார் (வி.கே.ஆர்), சிங்கப்பூரில் ஒரு கலை நய மிக்க புராதன ஜாடி ஒன்றை ஏலத்தில் எடுத்து வருகிறார். அது ராசியில்லாத ஜாடி என்று சிங்கையிலேயே பலர் சொல்லியும் கேளாமல் அவர் எடுத்து வந்து தன் அலுவலகத்தில் வைக்க, அது வந்த கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு தொழிலில் பெரிய நஷ்டம் என்று தகவல் வருகிறது. சரி அதை வீட்டுக்காவது எடுத்துப்போகலாம் என்று முடிவு செய்யும் போதே வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாக போனில் தகவல் வர, அதிர்ச்சியடைகிறார். அவரது பார்ட்னர் சபாபதியுடன் (வி.எஸ் ராகவன்) , அந்த ஜாடியை எப்படி வெளியேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கல்லூரி கவிதைப் போட்டிக்கு டொனேஷன் கேட்டு வரும் பிரமுகர்களிடம் கவிதைப்போட்டியில் முதலில் வருபவருக்கான பரிசாக தன்னுடைய ஜாடியை வழங்க விரும்புவதாகக் கூறி அவர்கள் தலையில் ஜாடியைக் கட்டிவிடுகிறார். கவிதைப்போட்டியில் தாய்மையைப் பற்றிப் பாடி பாஸ்கர் அந்த ஜாடியை பரிசாகப் பெறுகிறார்.

இதற்குள் பாஸ்கருக்கும் லதாவுக்கும் காதல் ஏற்பட, தன் காதலியின் தந்தை தங்கவேலு முதலியாரின் பிறந்த நாள் விழாவில் அவருக்கு பரிசளிக்க வேறு எதுவும் இல்லாததால், தனக்குப் பரிசாகக் கிடைத்த ஜாடியையே அவருக்குக் கொடுத்து விட முடிவு செய்து (அது முதலியாரிடமிருந்து வந்த ஜாடிதான் என்று தெரியாமல்) பாஸ்கரும், நண்பன் சீஸர் சீனுவும் (நாகேஷ்) எடுத்துப்போக, அதைப் பார்த்த முதலியார் அதிர்ச்சியடைந்து, அதை ஏற்க மறுத்து அவர்களை ஜாடியுடன் விரட்டி விடுகிறார். கோபமடைந்த பாஸ்கரும் சீனுவும் அந்த ஜாடிக்குள் அப்படி என்னதான் இருக்கிறதென்று திறந்து பார்க்க, உள்ளிருந்து ‘ஜீ பூம்பா’ என்று உச்சரித்துக் கொண்டே ஒரு பூதம் வெளிப்படுகிறது. அந்த பூதத்தை இருவரும் விரட்டத்துணிய, அதுவோ, ‘மூவாயிரம் ஆண்டுகள் ஜாடிக்குள் அடைந்து கிடந்த தன்னை விடுவித்த எஜமானர்கள் அவர்கள்’ என்று சொல்லி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் நிறைவேற்றுவதாகச் சொல்லி நிறைவேற்றத் துவங்குகிறது.

அதிலிருந்து படம் முழுக்க பூதத்தின் சித்து வேலைகள்தான், போரடிக்காமல் எடுக்கப்பட்டிருக்கிறது. (படத்தில் அது செய்யும் வித்தைகளையெல்லாம் பார்க்கும்போது, ‘அடடா நமக்கும் இப்படி ஒரு பூதம் கிடைத்தால் எப்படியிருக்கும்?’ என்ற நப்பாசை ஏற்படுகிறது)

பூதத்தின் சித்துவேலைகளில், நம் பகுத்தறிவு சிந்தனைகளையும் மீறி ரசிக்க வைக்கும் இடங்கள்…

திருப்பதி லட்டு பிரசாதம் கேட்டதும் வரவழைப்பது.

பாஸ்கருக்கும், சீனிக்கும் ஒரு பெட்டி நிறைய தங்கக்கட்டிகளைக் கொடுப்பது. பின்னர் போலீஸில் அவர்கள் மாட்டிக் கொண்டதும் அதையே சாக்லேட்டுகளாக மாற்றுவது.

செய்தித் தாள் விளம்பரங்களில் ‘திருவிளையாடல்’, ‘எங்கவீட்டுப்பிள்ளை’ படங்களை ஓடச் செய்வது.

நாகேஷின் உடம்புக்குள் புகுந்து கொண்டு, அவரை மனோகருடன் சண்டையிடச் செய்து, மனோகரையும் ரமாபிரபாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்துவது.

பாஸ்கட்பால் போட்டியில், சீனுவின் கோரிக்கையைத் தவறாகப் புரிந்துகொண்டு, முதலில் எதிர் அணியில் பந்துகளை விழச் செய்வது, பின்னர் கடைசி நிமிடத்தில் சுதாரித்து பாஸ்கர் அணியை மயிரிழையில் வெற்றி பெற வைப்பது.

பாலாஜி ஓட்டிவரும் ஹெலிகாப்டரை வாயால் ஊதி ஊதி நிலை குலையச் செய்வது.

இப்படி நிறைய விஷயங்களை குழந்தை மனதோடு ரசித்து மகிழலாம். தந்திரக் காட்சிகளை ரவிகாந்த் நிகாய்ச் என்பவர் அமைத்திருந்தார்.

கவியரசர் கண்ணதாசன் பாடல்களுக்கு ஆர்.கோவர்த்தனம் இசையமைத்திருந்தார். அத்தனையும் தேன் சொட்டும் அற்புதமான பாடல்கள். அப்பாவின் பிறந்தநாளில் கே.ஆர்.விஜயா பாடும் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” பாடலின் (கண்ணதாசன் – காமராஜர்) பின்னணி பற்றி ஏற்கெனவே நிறையப் பேருக்கு தெரியும். அதிலும் “மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்” வரிகளின் போது டி.எம்.எஸ். குரல் அச்சு அசலாக ஜெய்சங்கர்தான்.

கல்லூரி பாட்டுப் போட்டியில் நாகேஷ், கே.ஆர்.விஜயா, ஜெய்சங்கர் தனித் தனியாகப் பாடும் “உலகத்தில் சிறந்தது எது, ஓர் உருவமில்லாதது எது” பாடல் டி.எம்.எஸ்., சுசீலா, ஏ.எல்.ராகவன் மூவரும் பாடியது. இப்பாடலில் குறிப்பாக நாகேஷின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகளுக்கு தனியாக கைதட்டல் விழுந்தது.

கே.ஆர்.விஜயா முதலும் கடைசியுமாக நீச்சல் உடையில் நடித்த பாடல்,
“கண்ணே கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா”
ஜெய்சங்கர், விஜயா பங்குபெறும் இப்பாடல் நீச்சல் குளத்தில் இரவு நேரத்தில் படமாக்கப்பட்டிருந்தது. விஜயா நீச்சல் உடையில் நடித்தது ‘அப்போது’ பரபரப்பாகப் பேசப்பட்டது.

கோவர்த்தனம், தன் இசைத்திறமையனைத்தையும் பயன்படுத்தியிருந்தது
“நான் யார் யார் யாரென்று சொல்லவில்லை
நீ யார் யார் யாரென்று கேட்கவில்லை”
பாடலில்தான். வரிக்கு வரி வித்தியாசமாக கர்நாடக இசை, வடநாட்டு இந்துஸ்தானி இசை, எகிப்திய அரேபிய இசை என்று பிரமாதப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு வரிக்கான இடையிசையிலும் புகுந்து விளையாடியிருப்பார்.

தமிழ்ப்படங்களிலேயே முதன்முதலாக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில்தான். (இதையடுத்து இரண்டாவதாக ‘சிவந்த மண்’ படத்தில் இடம்பெற்றது. இப்போது சாதாரணமாக படங்களில் பயன்படுத்தப்படுகிறது). இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சமீபத்தில் தொலைக்காட்சிப் பேட்டியில், இக்காட்சியில் எப்படி கேமரா பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்கினார். ‘ஹெலிகாப்டரில் ஒரு கேமரா வைத்து, கீழே ‘போட்’டைப் படம் பிடிக்க வேண்டும். படகில் ஒரு கேமராவைப் பொருத்தி ஹெலிகாப்டரைப் படம் பிடிக்க வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். பின்னர் அவையிரண்டையும் எடிட்டிங் மேஜையில் போட்டு மாற்றி மாற்றி எடிட் செய்ய வேண்டும்’ என்று விளக்கினார். (படங்களைப் பார்த்துவிட்டு நாம் ரொம்ப லேசா கமெண்ட் அடிச்சிட்டு போயிடுறோம். ஆனால் அந்தந்த தொழில் நுட்ப கலைஞர்கள் அதை விளக்கும் போதுதான் இமாலய பிரமிப்பு ஏற்படுகிறது).

படம் முழுதும் பூதத்தின் உதவியிலேயே போய்க் கொண்டிருந்தால், கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்று கருதி, இறுதிக் காட்சிகளில் ஜெய்யும், விஜயாவும் ‘ஜீ பூம்பா’ வை விரட்டி விடுவதாகக் காட்டியிருப்பார்கள். அதனால் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் வழக்கம் போல சூடு பறக்கும். ஜெய், ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழும் நேரம் விஜயா மீண்டும் பூதத்தை அழைக்க, அப்போதுதான் மீண்டும் ‘ஜீ பூம்பா’ வருவதாகக் காட்டி முடித்திருப்பார்கள்.

பதினெட்டு ரீல் படமாதலால், மூன்று மணி நேரம் மன உளைச்சல்களில் இருந்து விடுபட்டு ஜாலியாக பொழுதுபோக்கும் படமாக அமைந்ததால் ஏ.பி.சி. என்று எல்லா சென்ட்டர்களிலும் அபார வெற்றி பெற்ற படமாக அமைந்தது ‘பட்டணத்தில் பூதம்’.

(சில படங்களுக்கு, படம் வெளியாகும் நேரத்தில் பாட்டுப் புத்தகங்கள் சற்று வித்தியாசமாக வெளியிடுவார்கள். அது போல் இப்படத்தின் பாட்டுப் புத்தகம் ‘ஜாடி’ வடிவத்தில் வெளியிடப்பட்டிருந்தது).

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
ஃபோரம்ஹப்-இல் ஜெய்ஷங்கர் திரி

தன் கதைகள் படமானதைப் பற்றி சுஜாதா


சுஜாதா

சுஜாதா

நண்பர் ஸ்ரீனிவாஸ் சுஜாதா பதிவாக போட்டுத் தாக்குகிறார். என் பங்குக்கு நானும் ஒன்று. நண்பர் வெங்கட்ரமணன் அனுப்பிய ஒரு மறுமொழியை இங்கே பதிவாக போட்டிருக்கிறேன். நன்றி, வெங்கட்!

பஞ்சு அருணாச்சலம் பற்றி தன் பார்வை-360 பதிவில் சுஜாதா:

சினிமாவாக மாறிய என் முதல் கதை ‘காயத்ரி’ 1977ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும் ஸ்ரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்துகொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம். அது, ஒரு வகையில் ‘ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தலைமுடியுடன் வசீகரமான தோற்றத்துடன் வீற்றிருக்க, இரண்டு பேரும் சிகரெட் பிடித்துக் கொண்டு தனியாகப் பார்த்தோம். ரஜினிகாந்த் அதில் வில்லன். கதாநாயகன் ஜெய்சங்கர் வந்து காப்பாற்றுவதற்குள் ஸ்ரீதேவி படத்தில் இறந்துவிடுவார்.

30 ஆண்டுகளும், அவர் 153 படங்களும், நான் 250 கதைகளும் கடந்து ‘சிவாஜி’யில் மறுபடி சந்தித்தபோது, அந்த முதல் நாட்கள் அவருக்கு நினைவிலிருக்கிறதை அறிந்தேன்.

‘காயத்ரி’ முடிந்த கையோடு பஞ்சு அருணாசலம் குமுதத்தில் வெளிவந்த ‘அனிதா இளம் மனைவி’யையும் படமாக எடுக்க முடிவு செய்திருந்தார். அப்போது ‘16 வயதினிலே’ படம் வெளிவந்து பாரதிராஜா என்னும் புதிய சகாப்தத்தைத் துவக்கியது. அந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘இது எப்படி இருக்கு?’ என்று அடிக்கடி சொல்வார். பஞ்சு அருணாசலம் அதையே தன் புதிய படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, எல்.விஜயா நடித்தனர். இதில் நடித்த காலஞ்சென்ற மேஜர் சுந்தர்ராஜனை பல நாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ‘நீங்கதான் எழுதினீங்களா? என்ன கதை என்று தெரியாமலேயே நடித்தேன். அதில் நான் யாரு?’ என்று கேட்டார்.

‘உண்மையா சொன்னா நீங்கள் அதில் ஒரு டெட் பாடி’ என்றேன்.

‘அனிதா இளம் மனைவி’ கதை அதுதான். இறந்துபோய்விட்டதாக அடையாளம் காட்டப்பட்டவர் உயிரோடுதான் இருக்கிறார். ‘இது எப்படி இருக்கு?’ ‘16 வயதினிலே’ என்ற புயலில் காணாமற் போயிற்று. பஞ்சு அருணாசலம் கவலைப்படவில்லை. ‘ப்ரியா’வில் எடுத்துரலாம்ங்க’ என்றார்.
……
பத்திரிகைகளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷயம். ஹெமிங்வேயிடம் Farewell to Arms, For Whom the Bell Tolls போன்ற கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது ‘Take the money and run’ என்றாராம். ‘ப்ரியா’ ஓர் உத்தம உதாரணம்.

பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.

‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார்.

இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது.

கதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பல மாடிக் கட்டிடங்கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.

‘ப்ரியா’ படம் வெற்றிகரமாக 110 நாள் ஓடினதுக்கு எனக்கு ட்ராஃபி தந்தார்கள். இப்போது கூட இதன் பின் கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டைலாக் சார்’ என்று சிலாகிக்கும்போது எங்கோ நிறுத்தாமல் உறுத்துகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
காயத்ரி திரைப்படம்
கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு
சுஜாதா சொன்ன சில, சுஜாதாவைப் பற்றி சொல்லப்பட்டவை சில – தொகுப்பு

சில நேரங்களில் சில மனிதர்கள் – சாரதாவின் விமர்சனம்


நானே பழைய சினிமா பைத்தியம். சாரதா என்னை விட பெரிய பைத்தியம். 🙂 இந்த ப்ளாக் எழுதியதில் பெரிய லாபமே அவரைப் போன்றவர்கள் பரிச்சயமானதுதான். அவர் ஸ்ரீகாந்த், ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் படங்களை பற்றி forumhub தளத்தில் எழுதி இருக்கிறார். சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தைப் பற்றி அங்கே இருப்பதை இங்கே மீள்பதிவு செய்ய அனுமதி கொடுத்தார். அவருக்கு என் நன்றி!

ஸ்ரீகாந்தின் புகழ் மகுடத்தில் ஒளிவீசும் வைரம்
லட்சுமிக்கு ஊர்வசி பட்டம் தந்த காவியம்
பீம்சிங்கின் கடைசி வெற்றிச்சித்திரம்
கருப்பு வெள்ளை யுகத்தின் கடைசி வெற்றி அத்தியாயம்
ஜெயகாந்தனின் ஒப்பற்ற திரை ஓவியம்

…..இப்படி புகழ்மாலை சூட்டிக்கொண்டே போகலாம் இப்படத்துக்கு.

ஆர்ட் பிலிம் என்றாலே வெற்றிக்கும் அதற்கும் வெகுதூரம். மக்களைச் சென்றடையாது என்ற சித்தாந்தங்களைப் பொய்யாக்கி மாபெரும் வெற்றியடைந்ததன் மூலம், இதுபோன்ற திரைப்படங்களை எடுக்கும் தைரியத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தந்த உன்னதச் சித்திரம்.

ஒரே வீட்டில் பல குடித்தனங்கள் சேர்ந்து, அதே சமயம் தனித்தனியாக வாழும் ஒண்டுக்குடித்தன வாழ்க்கையில் தன் தாயுடன் வசிக்கும் ஒருத்தி ஒரு மழைபெய்த மாலை நேரத்தில் காரில் வந்த காமுகனால் சூறையாடப்பட, அதை மறைக்கத்தெரியாமல் தாயிடம் வெகுளித்தனமாகச் சொல்லப்போக, அதை அந்தத்தாய் அவளைவிட வெகுளித்தனமாக, ஒண்டுக்குடித்தனக்காரர்கள் மத்தியில் விஷயத்தைப்போட்டு உடைத்து, மகளைத் அடிக்க, வெறும் வாய்களுக்கு கிடைத்த அவலாக, அவளது அந்த கருப்பு சம்பவம் அலசப்பட, அவள் களங்கப்படுத்தப்பட்டதை விட அதை வெளியில் சொன்னதுதான் மகா பாவம் என்ற நிலைமைக்கு ஆளாகிப்போனாள்.

முள்ளில் விழுந்த சேலையாக ரொம்ப ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டிய கதை. கொஞ்சம் நூலிழை பிசகினாலும் விரசம எனும் பள்ளத்துக்குள் விழுந்துவிடக்கூடிய கதையை, இந்திய பாகிஸ்தான் பிரிவினையை விட கவனமாகக் கையாண்டிருந்தார் இயக்குனர் பீம்சிங். அதற்கு அடித்தளமாக அமைந்தது ஜெயகாந்தனின் யதார்த்தமான நடை.

ஊர்வாயில் விழுந்த அவலாக மெல்லப்படும் அவள் அவஸ்தை தாங்காமல் துடிப்பதை லட்சுமியை விட இன்னொருவர் சிறப்பாகக் காண்பித்திருக்க முடியுமா என்ன?. அதிலும் அந்த ‘அக்கினிப்பிரவேசம்’ என்ற நாவலை தாயிடம் கொடுத்து, அதில் வரும் குறிப்பிட்ட இடத்தைச்சுட்டிக்காட்டும்போது, மீண்டும் பழைய காட்சி… அம்மா சுந்தரிபாய் லட்சுமியை அடிக்கும்போது, வீடு மொத்தமும் எழுந்துபார்க்க.. ‘ஒண்ணுமில்லே, இப்படி மழையிலே நனைஞ்சிட்டு வந்திருக்காளேன்னுதான் அடிச்சேன்’ என்று சொல்ல மொத்த வீடும், மீண்டும் தங்கள் வேலையைப் பார்ப்பதைக்காண்பித்து, ‘அன்னைக்கு மட்டும் நீ இப்படிச் சொல்லியிருந்தால், என் வாழ்க்கை இன்று சேற்றில் போட்டு இழுக்கப் பட்டிருக்குமா’ என்பது போல லட்சுமி பார்ப்பாரே ஒரு பார்வை. அப்பப்பா… (தேசிய விருதுக்கமிட்டி அந்த இடத்தில்தான் விழுந்திருக்க வேண்டும்). எப்பேற்பட்ட ஒரு நடிகையை வெறுமனே டூயட் பாடவைத்ததன் மூலம், ஒரு நாதஸ்வரத்தை அடுப்பு ஊத பயன்படுத்தியுள்ளோம் என்ற குற்ற உணர்வு எழுகிறது.

ஸ்ரீகாந்த் மட்டும் என்னவாம். சூப்பர்ப். பாத்திரத்தின் தன்மைக்கு ஈடுகொடுத்து அற்புதமாகச்செய்துள்ளார். ஆரம்பத்தில் லட்சுமியை ஏமாற்றிவிட்டுப்போனதும், அவருக்கு வழக்கமான ரோல்தானோ என்று தோன்றும். ஆனால் மீண்டும் லட்சுமியைச் சந்தித்தபின், அவர் தொடரும் அந்த உறவில் அவர் காட்டும் கண்ணியம், நேர்மை. ஏற்கெனவே தனக்கு ஒரு குடும்பம் இருந்தும், லட்சுமியிடம் அவர் காட்டும் அன்பு, வரம்பு மீறாத பெரியமனுஷத்தனம் …..வாவ். இன்னும் ஒரு நாலைந்து படம் இதுபோல தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் மனிதர் எங்கோ போயிருப்பார்.

மறக்காமல் குறிப்பிடப்படவேண்டிய இருவர் அம்மாவாக வரும் சுந்தரிபாய் (வெகுளியான அம்மா), மற்றும் மாமாவாக வரும் ஒய்.ஜி.பார்த்தசாரதி. தங்கை மகள் கெட்டுப்போய்விட்டாள் என்று தெரிந்ததும், அவளைத் தான் அடைய அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், பெரிய மனிதனின் வக்கிர புத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டே, கட்டிலில் படுத்திருக்கும் லட்சுமியிடம் செய்யும் சேஷ்டைகள் எல்லைமீறுமுன், கொதித்தெழும் லட்சுமி அவரை பெல்ட்டால் விளாச, தன் மனதில் இருந்த சாத்தான் விரட்டியடிக்கப்பட்டதும், லட்சுமி தூக்கி எறிந்த பெல்ட்டை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தும்போது, இந்த மனிதர் ஏன் நாடக மேடைகளிலேயே தன்னைக் குறுக்கிக்கொண்டார் என்ற ஆதங்கம் நமக்கு வரும். அதற்கு ஈடாக இன்னொரு காட்சியைச் சொல்வதென்றால், மறுநாள் பொழுது விடிந்ததும் ஒய்.ஜி.பி., லட்சுமியின் அறைக்கதவைத்தட்டி, ‘ஐ ஆம் லீவிங்’ என்று சொன்னதும், லட்சுமி சட்டென்று அவர் காலில் விழுந்து நமஸ்கரிப்பாரே அதைச்சொல்லலாம்.

இப்படி, படிப்படியாக நம்மை படத்துடன் ஒன்றவைத்து, படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைவை மாற்றி, அல்லது மறக்கடித்து, ஏதோ நம் கண்முன் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களில் நாமும் ஒன்றாகிப்போனோம் என்ற நினைவில் நம்மைக்கொண்டு விடுவதால்தான், அந்த கிளைமாக்ஸ் காட்சி நம்மை அப்படி பாதிக்கிறது.

நம் ஊனையும் உருக வைக்கும் வாணி ஜெயராம் குரலில்….
‘வேறு இடம் தேடிப்போவாளோ – இந்த
வேதனையில் இருந்து மீள்வாளோ’ என்ற பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க,
அவர் (ஸ்ரீகாந்த்) இனிமேல் வர மாட்டார் என்று தெரிந்தும், வாசலை வாசலைப் பார்த்துக்கொண்டும், திரைச்சீலை அசையும்போதெல்லாம் ஆவலோடு திரும்பிப் பார்த்துக்கொண்டும் இருக்கும் லட்சுமி இனி வரமாட்டார் என்ற நிதர்சனத்துடன் கடைசியில் ஸ்ரீகாந்த் கழற்றி வைத்துவிட்டுப்போன கோட்டை எடுத்து தன்னோடு அணைத்துக்கொள்ளும்போது, உணர்ச்சிப்பெருக்கால் நம் மனதில் விழும் சம்மட்டி அடி. (பின்னாளில், ‘பூவே பூச்சூட வா’ கிளைமாக்ஸில் நதியாவை ஆம்புலன்ஸில் கொண்டுபோனபின், கண்களில் நீருடன் மீண்டும் காலிங் பெல்லை பொருத்திக் கொண்டிருக்கும் பத்மினியைப் பார்த்தபோது, மீண்டும் மனதில் விழுந்த அதே சம்மட்டி அடி). ஆம், செல்லுலாய்டில் கவிதை வரையும் திறன் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

படம் முடிந்தபின்னும் பிரம்மை பிடித்தது போன்ற உணர்வுடன், இருக்கையை விட்டு எழக்கூட மனமில்லாமல் எழுந்து செல்கையில், அடுத்த காட்சிக்காக கியூவில் நிற்பவர்களைப்பார்த்து, ‘பீம்சிங் கொன்னுட்டாண்டா’ என்று கத்திக்கொண்டு போகும் ரசிகர் கூட்டம் (அன்று ‘பாகப்பிரிவினை’ பார்த்துவிட்டு இவர்களது அப்பாக்கள் கத்திக்கொண்டு போன அதே வார்த்தை).

இப்படத்துக்கு அற்புதமான இசையைத் தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். ‘கண்டதைச் சொல்லுகிறேன்’ என்ற பாடலும், ‘வேறு இடம் தேடிப்போவாளோ’ என்ற பாடலும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தின. பின்னணி இசையிலும் மனதை வருடியிருந்தார்.

தமிழ்த்தாயின் தலைமகன் ஜெயகாந்தன் எழுதி, முதலில் தினமணி கதிர் பத்திரிகையில் தொடர்கதையாகவும், பின்னர் முழுநாவலாகவும் வெளியாகி மக்கள் உள்ளங்களைக்கொள்ளை கொண்டு, கிடைத்தற்கரிய ‘சாகித்ய அகாடமி’ விருதையும் பெற்ற இந்நாவல், திரைப்படமாகிறது என்றதும் ஒரு பயம். காரணம் அதற்கு முன் திரைப்படமாக உருப்பெற்ற நாவல்களில் 95 சதவீதம், சிதைந்து உருமாறி, நாவலைப்படித்து விட்டு படம் பார்க்கச்சென்றோர் மனங்களை ரணமடையச்செய்தன என்பதுதான் உண்மை. ஆனால், இப்படி மாமல்லபுரம் சிற்பமாக இப்படம் உருப்பெற்று, உயர்ந்து நிற்கும் என்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்றால், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற இப்ப்டம் மாபெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தது தமிழ் ரசிகர்களை தலைநிமிரச்செய்தது. ஆம், 112-ம் நாள் படம் பார்க்கச்சென்று டிக்கட் கிடைக்காமல் ரசிகர்கள் திரும்பிய அதிசயமும் நடந்தேறியது.

லட்சுமிக்கு, இந்தியாவின் சிறந்த நடிகை என்ற தேசிய விருதான ‘ஊர்வசி’ விருதையும் பெற்றுத்தந்தது. ஸ்ரீகாந்த்தை நினைக்கும்போதெல்லாம் எனக்குத்தோன்றுவது, “உங்களுக்கு இந்த ஒரு படம் போதுமய்யா”.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: ஆர்வியின் விமர்சனம், பக்சின் விமர்சனம்
ஸ்ரீகாந்த் – ஃபோரம்ஹப் திரி
ஜெய்ஷங்கர் – ஃபோரம்ஹப் திரி
ரவிச்சந்திரன் – ஃபோரம்ஹப் திரி