ஏவிஎம் பேட்டி


ஏவிஎம்

ஏவிஎம்

ஏ.வி.எம் செட்டியாரை விகடனில் எப்போதோ எடுத்த பேட்டி. நன்றி, விகடன்!

“இந்தத் தொழிலில் நாங்கள் போடுகிற மூலதனத்துக்கும் உழைக்கிற உழைப்புக்கும், படுகிற பாட்டுக்கும் பதிலாக வேறொரு தொழிற்சாலையைத் தொடங்கியிருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும்.”- இப்படிச் சொல்கிறவர் யார்? ஏவி.எம். ஸ்டூடியோ அதிபர் திரு. மெய்யப்பன் அவர்கள்தான்.

“அப்படியானால் இந்தத் தொழிலை விட்டு விடுவதுதானே?” என்று கேட்டால், “எப்படி விட முடியும்? புலியின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாலை விட்டால் திரும்பி நம் மீது பாய்ந்து விடுமோ என்று அஞ்சி, கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதில்லையா? அந்த மாதிரியேதான்” என்கிறார்.

திரு மெய்யப்பன் இத் தொழிலை விரும்பி மேற்கொண்டார் என்பதைக் காட்டிலும், சந்தர்ப்பம் இவரை இழுத்துக்கொண்டது என்று கூறுவதுதான் பொருந்தும்.

இவருடைய தந்தை ஆவிச்சி செட்டியார் காரைக்குடியில் ஒரு ஸ்டோர் வைத்திருந்தார். கிராமபோன் ரிக்கார்டுகள் விற்பனை செய்யும் டீலராகவும் இருந்தார். அவர் தொடங்கிய அந்த ஸ்டோர் ஏவி. அண்ட் ஸன்ஸ் என்ற பெயரில் இப்போதும் நடந்து வருகிறது. கிராமபோன் ரிக்கார்டு வியாபாரத்தை விரிவாகச் செய்யும் நோக்குடன் 1932-ல் சென்னைக்கு வந்த திரு. ஏவி.எம்., நாராயண அய்யங்கார், சிவன் செட்டியார் இவர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, சரஸ்வதி ஸ்டோர்ஸைத் தொடங்கினார்.

முசிரி சுப்பிரமணிய அய்யர், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், சுப்பையா பாகவதர் இவர்களுடைய ரிக்கார்டுகளே அந்தக் காலத்தில் பிரசித்தமாயிருந்தன. ‘அதிகமாக விற்பனையான இசைத் தட்டு எது?’ என்று கேட்டதற்கு, “முசிரியின் கர்னாடக இசைத் தட்டுகள் மட்டும் 30,000-க்கு மேல் விற்பனை ஆயின. கர்னாடக இசைத்தட்டு விற்பனையில் அது ஒரு பெரிய ரெக்கார்ட்! ‘டிரியோ டிரியோடேயன்னா’, ‘எட்டுக்குடி வேலனடி’, ‘செந்தூர் வேலாண்டி’ பாட்டெல்லாம் அந்தக் காலத்தில் ரொம்பப் பாப்புலர்!” என்கிறார்.

ரேடியோவும் சினிமாவும் வந்த பிறகு கிராமபோன் ரிக்கார்டுகளுக்கு மவுசு குறைந்துவிட்டதால், மெய்யப்பனின் கவனம் படத் தயாரிப்புத் தொழிலில் திரும்பியது.

சரஸ்வதி டாக்கி புரொடியூஸிங் என்ற பெயரில் ஒரு படக் கம்பெனி யைத் துவக்கினார். அப்போதெல்லாம் சென்னையில் ஸ்டுடியோக்கள் கிடையாதாகையால், கல்கத்தா நியூ தியேட்டர்சுக்குச் சென்று அல்லி அர்ஜுனா என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து முடித்தார். கே.எஸ்.அனந்தநாராயணய்யர் அந்தப் படத்தில் கிருஷ்ணனாகவும், குறத்தியாகவும் நடித்தார்.

‘படம் எப்படி இருந்தது?’ என்று கேட்டதற்கு, “அதை ஏன் கேட்கிறீர்கள்? படம் முழுவதும் எடுத்து விட் டோம். அப்போதெல்லாம் உடனுக்குடன் ரஷ் பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. மொத்தமாகப் படத்தைப் போட்டுப் பார்த்தபோது 10,500 அடி கூடத் தேறவில்லை. படத்தில் எல்லோருடைய கண்களும் மூடிக் கிடந்தன. வெயிலில் படம் எடுத்த தால் கூச்சத்தில் கண்களை மூடிக் கொண்டுவிட்டார்கள். எடுக்கிறவர்களுக்கும் வெயில்தானே? நடிக்கிறவர்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார்களா, திறந்து கொண்டிருக்கிறார்களா என்று பார்க்க முடியவில்லை. அப்புறம் கார்ட்டூன் படங்களைச் சேர்த்துக் காண்பித்து நேரத்தைச் சரிக்கட்டினோம்.” என்றார்.

அல்லி அர்ஜுனாவுக்குப் பிறகு இவர் எடுத்த படம் ரத்னாவளி. நடித்தவர்கள் ரத்னாபாய் – சரஸ்வதிபாய் சகோதரிகள். இந்தச் சகோதரிகளுக்கு 30 நாள் ஷூட்டிங்குக்கு 25,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. ‘வசூல் எப்படி?’ என்ற நமது கேள்விக்கு, ‘பிரயோஜனமில்லை’ என்பதுதான் அவர் பதில்.

‘இனி சொந்தத்தில் ஸ்டுடியோ இல்லாமல் படம் எடுக்கக் கூடாது. ஸ்டுடியோ ஆரம்பிப்பதாயிருந்தால் அது பங்களூரில்தான் இருக்க வேண்டும். ஸ்டூடியோவுக்கேற்ற சீதோஷ்ண நிலை அங்கேதான் இருக்கிறது’ என்ற முடிவுக்கு வந்தார். அதற்கேற்றாற்போல் ஜயந்திலால் என்பவர் (பூனா பிரபாத் ஸ்டுடியோவுடன் தொடர்பு கொண்டவர்) பங்களூரில் இருந்தார். அவருடைய கூட்டுறவோடும் தம் சகாக்களின் கூட்டுறவோடும் பங்களூரில் பிரகதி என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோவைத் தொடங்க முடிவு செய்தார் ஏவி.எம். வெளி நாட்டிலிருந்து சாதனங்கள் வந்து சேர ஆறு மாத காலம் ஆகும்போல் இருந்ததால், அதற்குள் பூனா சென்று இந்தி நந்தகுமாரைத் தமிழில் எடுக்க முயன்றார்கள். இந்திப் படம் திரையிடப்பட்ட இரண்டு நாளைக்கெல்லாம் வசூல் குறைந்துவிடவே, தமிழை அடியோடு மாற்றி எடுப்பதென முடிவு செய்தனர். இந்தி ஏன் ஓடவில்லை என்று கேட்டால், “கிருஷ்ணலீலா வித்அவுட் கம்சன் என்றால், படம் எப்படி ஓடும்?” என்று திருப்பிக் கேட்கிறார். தமிழ் நந்தகுமாரில் பணம் கிடைத்தது. ஆனால், பங்களூர் பார்ட்னர்கள் தங்கள் பங்கைப் பிரித்துவிட்டதால், ஏவி.எம். பிரகதி ஸ்டுடியோவை பங்களூரில் அமைப்பதற்குப் பதில் சென்னையில் நிறுவ வேண்டியதாயிற்று.

ஒஷியானிக் ஓட்டலுக்கு அருகே யுள்ள விஜயநகரம் பேலஸ்தான் பிரகதி ஸ்டுடியோ இருந்த இடம். வாடகை ரூ.350-தான். பூகைலாஸ், அரிச்சந்திரா, சபாபதி, ஸ்ரீவள்ளி ஆகிய படங்களே ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்டவை.

“சபாபதி ரொம்பத் தமாஷான படம்” என்று நாம் சொன்னபோது, “பூகைலாஸ் எடுத்தது அதைவிட வேடிக்கை” என்றார். “தெலுங்கு பேசும் படம், தமிழ் புரொடியூஸர், இந்தி டைரக்டர், கன்னட ஆர்ட்டிஸ்ட்ஸ்! இதுதான் பூகைலாஸ்!”

1944-ல் ஏவி.எம். டைரக்ஷனில் உருவாக்கப்பட்ட ராஜ யோகி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. வசுந்தராவும் தியாகராஜ பாகவதரும் சேர்ந்து நடித்த முதல் – கடைசிப் படம் அதுதான். பாதியிலேயே நின்று போனதற்குக் காரணம், நட்சத்திரங்கள் ஒத்துழைப்பு இல்லாததுதான்!

ஏவி.எம் தம் சொந்த டைரக்ஷனில் எடுத்த வெற்றிப் படம் ஸ்ரீவள்ளி. டி.ஆர்.மகாலிங்கமும் ருக்மிணியும் இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரை ஒருவர் நிஜ வாழ்க்கையிலும் காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள். படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் அது. இரண்டாவது காரணம், இந்தப் படத்தில் வந்த யானை. மூன்றாவது காரணம், இயற்கை அழகு மிக்க அவுட்டோர் காட்சிகள்.

1947-ல் உலக யுத்தம் வந்துவிடவே, மின்சார வசதி இல்லாமல், ஸ்டுடியோவை காரைக்குடிக்குக் கொண்டு போக நேர்ந்தது. இடம் மாறிய போது ஸ்டுடியோவின் பெயரும் ஏவி.எம். என்று மாற்றப்பட்டது. தேவகோட்டை ரோடில் ஓர் இடத்தைப் பிடித்து ஐம்பது குடிசைகள் போட்டு, நட்சத்திரங்களை அங்கேயே குடியேற்றி, நாம் இருவர், வேதாள உலகம் போன்ற படங்களை உருவாக்கினார். ராமராஜ்யாவைத் தமிழில் டப் செய்து வெளியிட்டார். பாரதியார் பாடல்களுடன் வெளியான படம் நாம் இருவர். லலிதா-பத்மினி பாம்பாட்டி நடனத்துடன் வெளியானது வேதாள உலகம்.

ரூ.25,000 கொடுத்து பாரதியார் பாடல்களை விலைக்கு வாங்கி வைத்திருந்த உரிமையை, அப்போ தைய முதலமைச்சர் திரு. ஓ.பி. ராமசாமி ரெட்டியாரின் விருப்பத்துக்கிணங்க எவ்விதப் பிரதிப்பயனும் எதிர்பாராமல் பொதுச் சொத்தாக மாற்றிச் சர்க்காரிடம் ஒப்படைத்தார் ஏவி.எம்.

ஏவி.எம். ஸ்டுடியோ கோடம்பாக்கத்துக்குக் குடியேறியது 1948-ல். பராசக்தி, வாழ்க்கை, அந்த நாள் போன்ற படங்கள் உருவானது இங்கேதான்.

‘இந்திப் படம் எடுத்தது எப்போது?’ என்று கேட்டதற்கு, “திரு. வாசன் அவர்கள் இந்தியில் சந்திரலேகா எடுத்து, வட நாட்டில் வெற்றிகரமாக ஓட்டி வழிகாட்டிய பிறகுதான், இந்தி மார்க்கெட்டில் நாங்களும் தைரியமாகப் புகுந்தோம்” என்கிறார் திரு. ஏவி.எம்.

ஏவி.எம். முத்திரையில் எடுக்கப்பட்ட ஹம் பஞ்சி ஏக் டால் கே என்னும், குழந்தைகள் நடித்த இந்திப் படத்துக்குப் பிரதம மந்திரி அவார்ட் கிடைத்தது மட்டுமல்ல; அந்தப் படத்தைப் பார்த்து மகிழ்ந்த நேருஜி ஏவி.எம். அவர்களையும், அந்தக் குழந்தைகளையும் தம் வீட்டுக்கு அழைத்து விருந்தோபசாரமும் செய்தார்.

ஐந்து முறை ஜப்பான் சென்று வந்துள்ள ஏவி.எம்., “அந்த நாட்டுக்கு இணையான இன்னொரு நாட்டைப் பார்த்ததில்லை. நேர்மையும், நாணயமும், உபகார குணமும் அந்த நாட்டின் தனிச் சிறப்பு” என்கிறார்.

ஆவிச்சி உயர்நிலைப் பள்ளி, ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் – இவ்விரண்டும் திரு. மெய்யப்பனின் தர்ம ஸ்தாபனங்கள். இவர் புதிதாகத் தொடங்கியுள்ளது, படங்கள் எடுப்பதற்குத் தேவையான பிலிம் வியாபாரம். பெயர்: ஆர்வோ.

எல்லிஸ் ஆர். டங்கன்


எல்லிஸ் ஆர்.டங்கன்

எல்லிஸ் ஆர்.டங்கன்

30-1-1994 அன்று விகடனில் வந்த கட்டுரை/பேட்டி. நன்றி, விகடன்!

எம்.ஜி.ஆரின் முதல் இயக்குநர்!

சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கினுள் அன்று எக்கச்சக்கமான வயசாளிகள் கூட்டம்! பெரும்பாலோர் நம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் தலை காட்டியவர்கள். தலைநரைத்த தள்ளாத வயதிலும் மனசு கொள்ளாத பூரிப்புடன் அந்த வி.ஐ.பியைக் காண அத்தனை பேரும் ஆவலாய்க் காத்திருக்க கிட்டத்தட்ட எல்லோரையுமே அடையாளம் தெரிந்து கொண்டார் அந்த வி.ஐ.பி!

இத்தனைக்கும் அந்த வி.ஐ.பி. 42 வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறார். இத்தனை காலமும் அமெரிக்காவிலேயே வாழ்ந்து வந்த போதிலும், தமிழில் பல வார்த்தைகளை அவர் மறக்கவில்லை. சம்பிரதாயங்களைக் கூட மறக்காமல், தனக்கு ஆரத்தி எடுக்கப்பட்டபோது ”குங்குமம் எங்கே? என் நெற்றியில் இடுங்கள்!” என்று கேட்டு இட்டுக்கொண்டார்.

தென்னிந்திய டெக்னீஷியன்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த விழாவுக்கு வருகை தந்த அந்த வி.ஐ.பி. வேறு யாருமல்ல, எம்.ஜி. ஆரின் முதல் படம் (சதி லீலாவதி) முதற்கொண்டு மந்திரி குமாரி, இரு சகோதரர்கள், சகுந்தலை, மீரா, அம்பிகாபதி போன்ற புகழ் பெற்ற பல தமிழ்ப் படங்களை டைரக்ட் செய்த எல்லிஸ் ஆர்.டங்கன்தான்!

அமெரிக்காவில் திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட படிப்பு முடித்த டங்கன், 1935-ல் சென்னைக்கு வந்தவர்; கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சென்னையிலேயே வசித்திருக்கும் டங்கன், தமிழ் சினிமாவுக்குப் பல டெக்னிக்கல் உத்திகளைக் கற்றுக் கொடுத்தவர். காட்சியமைப்புகளிலும் புதுமை செய்து, தமிழ் சினிமாவைப் புரட்சி ஏணியில் தூக்கி நிறுத்தியவர்!

ஆனந்த விகடன் என்றதுமே, ”இந்தியாவில் முதன்முதலில் குறுக்கெழுத்துப் போட்டி நடத்திய வாரப் பத்திரிகை உங்களுடையது தான். வாசன் என் இனிய நண்பர்!” என்று நினைவுகூர்ந்தார். 82 வயதுக்கு நம்ப முடியாத தோற்றம் ப்ளஸ் குறும்புத்தனத்தோடு நிறையப் பேசினார்.

”அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து தமிழ் சினிமாவின் இயக்குநர் ஆனது எப்படி?!”
”என்னுடன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாண்டன் என்ற இந்தியர் படித்தார். அவர்தான் என்னைத் தன்னோடு இந்தியாவுக்கு அழைத்து வந்தார். டாண்டனின் அப்பா, அப்போது இந்தியாவின் பிரபல திரையுலகப் புள்ளி! அவர் பக்த நந்தனார் என்ற படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். அதில் கே.பி.சுந்தராம்பாள் நடித்தார். அப்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க, நாங்களும் டாண்டனோடு அவருடைய நண்பர்கள் எனும் முறையில் உதவ வந்திருந்தோம். அப்போது செல்லம் டாக்கீஸ் மருதாசலம் செட்டியார், தன் படத்துக்கு என்னை டைரக்டராகும்படி கேட்டார். ஆனேன்”.

”எம்.ஜி.ஆரை இயக்கிய அனுபவம் பற்றி?”
”சதி லீலாவதி – உங்கள் பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் வாசன் சாரின் ஸ்க்ரிப்ட்தான்! அது எம்.ஜி.ஆருக்கு, எனக்கு என்று பலருக்கும் முதல் படம். வெற்றிப் படமும் கூட!
ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு சினிமாவின் நுணுக்கங்கள் தெரியவில்லை. மேடை நாடகப் பரிச்சயத்தில் அவர் டயலாக்குகளைக் கூச்சல் போட்டே பேசி வந்தார். ஆவேசத்தோடு பேசுகையில் நடிப்பும் மிகையாகத்தான் வெளிப்பட்டது. ‘சினிமாவுக்கு இந்த மிகை நடிப்பு தேவையில்லை; இயல்பாகப் பேசுங்கள். அதுதான் சிறந்த நடிப்பு!’ என்று சொல்லித் தந்தேன். அவர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது, அவரைச் சந்திக்க முயன்றேன். அவரது உடல் நிலை கருதி, சுற்றியிருந்தவர்கள் மென்மையாக மறுத்துவிட்டார்கள்.”

”தமிழ் தெரியாதபோது, வசனங்களைச் சரிபார்த்திருக்க முடியாதே? முழுமையான இயக்குநர் பணிக்கு வாய்ப்பிருந்ததா?”
(சற்றே கோபத்தோடு) ”வொய் நாட்..?! நடிகர்கள் வசனங்களைச் சரியாகச் சொல்கிறார்களா என்பதை வெறுமனே முகபாவத்தைக் கொண்டே ஓர் இயக்குநரால் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தவிர, சச்சிதானந்தம், இளங்கோ போன்ற என் உதவியாளப் பொக்கிஷங்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர்கள். எனவே, எனக்கு ஒரு பிரச்னையும் இருந்ததில்லை.”

”தமாஷான ஷூட்டிங் அனுபவம் எதுவும் நினைவில் உண்டா?”
”உண்டு! வெளிநாட்டுக்காரன் என்பதால், அப்போதெல்லாம் என்னை எந்தக் கோயில்களிலும் அனுமதிக்கமாட்டார்கள். இதனால் கோயில்களில் ஷூட் பண்ணும்போது மட்டும் நான் வெளியே இருக்க நேரிடும். அப்போதும் நான் விடாப்பிடியாகக் கோயில் மதில் சுவர், கோபுரம் போன்ற இடங்களில் உட்கார்ந்துகொண்டு படப் பிடிப்பை மேற்பார்வையிடுவேன். உள்ளே என் உதவியாளர் இயக்கிக் கொண்டிருப்பார். ஒரு நாள், என் உதவியாளர் திடீரென ஒரு ஐடியா செய்தார். கோயிலில் படப்பிடிப்பு என்றால், எனக்கு ஒரு தலைப்பாகையைக் கட்டி, என்னைக் காஷ்மீர்க்காரர் ஆக்கிவிடுவார். அதற்குப் பின் நானும் தாராளமாகக் கோயில்களில் நுழைந்து படங்களை டைரக்ட் செய்தேன்!”

”1950-களில் மீண்டும் அமெரிக்கா போய் செட்டிலாகி விட்டீர்களே, அங்கே என்ன செய்கிறீர்கள்?”
”அங்கே செல்லும்போதே, என்னுடைய தமிழ்ப் பட க்ளிப்பிங்குகளையெல்லாம் எடுத்துக் கொண்டுதான் போனேன். அதைப் போட்டுப் பார்த்த ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர், ‘தமிழ்நாட்டில் இவ்வளவு தரமுள்ள லேப் வசதி பிராஸஸிங்கெல்லாம் உண்டா?’ என்று ஆச்சரியப்பட்டார். உடனேயே தான் இங்கே வந்து ஓர் ஆங்கிலப் படம் தயாரிக்கவும் ஆசைப்பட்டார். நானும் அந்தப் படத்துக்கு இணைத் தயாரிப்பாளராகிவிட, இங்கே மாடர்ன் தியேட்டர்ஸ்காரர்களோடு பேச்சு வார்த்தை நடந்தது. அவர்களும் தயாரிப்பில் இணைந்தார்கள். பெரிய பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்களைச் சென்னைக்குக் கூட்டி வந்தோம். இங்கே அவர்கள் ஒரு ஸ்டூடியோவில் தங்கினார்கள். அவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஆங்கிலேயச் சமையல்காரர், கார் வசதியெல்லாம் செய்து தரப்பட்டது. இங்குள்ள வசதிகளைக் கொண்டு தி ஜங்கிள் எனும் ஆங்கிலப் படம் உருவானது. அமெரிக்காவில் மட்டுமின்றிப் பல நாடுகளிலும் சக்கைப்போடு போட்டு, ஏகமாய்ச் சம்பாதித்துக் கொடுத்தது அந்தப் படம். அதற்குப் பிறகு, டார்ஜான் படங்கள் சிலவற்றை எடுக்கவும் நான் இந்தியாவுக்கு வந்திருக்கிறேன்!”

”42 வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறீர்களே, எதை அதிசயமாகப் பார்த்தீர்கள்?”
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலைத்தான் பிரமிப்போடு கேட்டேன். கொஞ்சமும் இனிமை கெடாமல், நான் மீராவை இயக்கியபோது கேட்ட மாதிரியே இருக்கிறதே, இது என்ன மாய மந்திரம் என்று அதிசயித்தேன்!”

”நடிப்புக்கு நீங்கள் தரும் இலக்கணம்?”
”ஒரு டைரக்டரால் நடிப்பின் மெக்கானிஸத்தை வேண்டுமானால் சொல்லித் தரமுடியும். ஆனால், நடிப்பு என்பதை முழுமையாக எந்த இயக்குநராலும் கற்றுத் தர முடியாது! அது நடிகனின் உள்ளிருந்து இயல்பாக வரவேண்டும்; உணர்வு பூர்வமாக வெளிப்பட வேண்டும்! ஆம், Acting is nothing but outward expressions of the inward emotions.”

ஆர்வி: டங்கன் இயக்கிய படங்களின் நான் மந்திரி குமாரி, மீரா (ஹிந்தி + தமிழ்), சகுந்தலை ஆகியவற்றை பார்த்திருக்கிறேன். என் கருத்தில் அவர் ஒரு footnote, அவ்வளவுதான். கே.எஸ். ரவிக்குமாருக்கு தமிழ் சினிமா வரலாற்றில் என்ன இடம் இருக்கும்? அதை மாதிரிதான்.

சந்திரபாபு


chandrababu

1957-இல் தமிழ் சினிமா பற்றி எழுத இந்த வார இறுதி ஆகும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னொரு ஓசி போஸ்ட் போட்டுக் கொள்கிறேன்.

1-3-64-இல் வெளி வந்த பேட்டி. நன்றி, விகடன், விகடன் பொக்கிஷம்!

தூத்துக்குடி காங்கிரஸ்காரர் ஜே.பி. ராட்ரிக்ஸின் பதின்மூன்று குழந்தைகளில் ஆறாவது மகன், சந்திரபாபு. சிறு வயதிலிருந்தே விகடம் பண்ணுவதுதான் அவனுடைய பொழுதுபோக்கு. பிறர் போல் பேசியும் நடித்தும் காட்டச் சளைக்கமாட்டான். ஆங்கில சினிமா பார்த்துவிட்டு வந்தால் போதும், சார்லஸ் போயர், லாரன்ஸ் ஒலிவியர், ஃப்ரெடரிக் மார்ச் ஆகியவர்களை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுவான். சரியாகப் பிடித்துவிட்டது சினிமாப் பைத்தியம்! இது தந்தைக்குப் பிடிக்கவில்லை. முடிவு – தனி மனிதனாகி விட்டான் கலைஞன் சந்திரபாபு.

ஒரு விதத்தில் சந்திரபாபு சென்னைக்கு வருவதற்குக் காரணமாக இருந்தது ஜப்பான்காரன்தான். சென்ற யுத்தத்தின்போது இலங்கையில் குண்டுகள் விழுந்ததும், அங்கு குடியேறியிருந்த ராட்ரிக்ஸின் குடும்பம் இந்தியாவில் வந்து குடியேறியது.

தூத்துக்குடியிலிருந்து தனியாகப் புறப்பட்ட சந்திரபாபு, கையில் ஆறணா காசுடன் எழும்பூரில் வந்து இறங்கினார். எங்கு போவது, யாரைப் பார்ப்பது என்று புரியவில்லை. அப்போது, தந்தை தினமணியில் பணிபுரிந்துகொண்டிருப்பது நினைவுக்கு வர, அங்கே போனார். ஆனால், அங்கு தந்தை இல்லை. வேலையை விட்டு விட்டுப் போய்விட்டார் என்றார்கள். எங்கு குடியிருக்கிறார் என்று கூட ஒருவருக்கும் தெரியவில்லை.

சந்திரபாபுவுக்குத் தலை சுற்றியது. களைப்பு, பசி, ஏமாற்றம்! உடல் பதறியது. நிற்க முடியவில்லை. தடார் என்று தரையில் சாய்ந்துவிட்டார். அருகே இருந்த அன்பர் ஒருவர் – விருத்தாசலம் என்று பெயர் – உதவியுடன் மயிலாப்பூர் மாருதி பார்மஸி வந்து சேர்ந்தார். மலேரியா ஜுரத்துக்கு மருந்து எழுதிக் கொடுத்த டாக்டர், தந்தை இருக்கும் விலாசத்தையும் கொடுத்தார். மருந்து புட்டியுடன் தந்தை வசித்த வீட்டிற்குள் நுழைந்தார் சந்திரபாபு.

பின், அங்கிருந்து திருவல்லிகேணி காங்கிரஸ்காரர் ஏ.ஆர்.வி.ஆச்சார் இருந்த லாட்ஜில் குடி புகுந்தார். அப்போதெல்லாம் இந்திப் பாட்டுக்களைப் பிரமாதமாகப் பாடிக்கொண்டு இருப்பார் பாபு. அதிசயப்பட்ட ஆச்சார், அவரை டைரக்டர் கே.சுப்ரமணியத்திடம் கொண்டு விட்டார். அங்கு பலவிதமான நடனங்களைப் பயின்றார் சந்திரபாபு. மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் ஒரு நடனப் படத்தில் நடிப்பதாகவும் ஏற்பாடாயிற்று. ஆனால், அது பாதியிலேயே நின்றுபோய்விட்டது.

”அப்புறம் மனம் உடைந்து போய், அலைஞ்சுக்கிட்டிருந்தேன். பி.எஸ்.ராமையாவின் முயற்சியால் ‘தன அமராவதி’ என்கிற படத்தில் ஒரு சான்ஸ் கிடைச்சுது. முதல் நாள் ஷூட்டிங்கிலேயே தகராறு பண்ண ஆரம்பிச்சுட்டேன். குடுமி வைக்கிறதுக்காக மொட்டை அடிச்சுக்கணும்னு சொன்னாங்க. நான் மாட்டேன்னேன். அப்போ என் தலை முடி சுருள் சுருளாக அழகாக இருக்கும். அதைத் தியாகம் செய்ய மனசு வரலே. அப்போ செட்டிலேயிருந்த பழைய நண்பர் விருத்தாசலம் (அவர்தான் புரட்சி எழுத்தாளர் புதுமைப்பித்தன்) ‘மொட்டை அடிச்சுக்கோ! அதனால என்ன? மறுபடியும் வளர்ந்துட்டுப் போகுது’ன்னார். சரின்னு ஒப்புக்கிட்டேன். ஆனால் மொட்டை அடிச்சுக்கிட்டதுதான் மிச்சம். படம் கோவிந்தா ஆயிடிச்சு! அதற்கப்புறம் எங்கெங்கேயோ போனேன். யார் யாரையோ கேட்டேன். எல்லோரும் என்னைப் பைத்தியக்காரன் மாதிரிதான் ட்ரீட் பண்ணினாங்களே ஒழிய, திறமையுள்ள கலைஞன் மாதிரி மதிக்கலே. கடைசியிலே ஜெமினி அதிபர் வாசனைப் போய்ப் பார்த்தேன். அவரும் உற்சாகமா பதில் சொல்லலே. சரி, இனிமேல் உயிரோடு இருந்து பிரயோசனம் இல்லை என்று முடிவுக்கு வந்து ஜெமினி ஸ்டுடியோவிலேயே விஷம் குடிச்சு மயக்கமா விழுந்தேன். கேமராமேன் தம்புவும், ஜெமினி கணேசனும்தான் என்னை ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணிக் காப்பாத்தினாங்க. அப்படி ஒரு ட்ராஜிடியிலே ஆரம்பிச்சதுதான் இந்தக் காமெடியனின் வாழ்க்கை.”

ஜெமினியின் மூன்று பிள்ளைகள் படத்தில் ஒரே ஒரு ஸீனில் ஒரு டைரக்டர் வேஷத்தில் நடித்து எஸ்.எஸ்.வாசனின் பாராட்டைப் பெற்றதையும், அதற்கு ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதையும் தன்னால் மறக்கவேமுடியாது என்கிறார் பாபு.

சகோதரி படத்தில் தன் பாத்திரம் அமைந்த விதம் பற்றிக் கூறினார். படத்தை முடித்து, அதைப் போட்டுப் பார்த்த ஏவி.எம். அவர்கள், அதில் காமிக் சேர்க்கவேண்டும் என்று விரும்பி, சந்திரபாபுவைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டாராம். சந்திரபாபு படத்தைப் பார்த்துவிட்டு, மனத்தில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அதற்கு வசனம் எழுதி, எங்கெங்கே நுழைக்கவேண்டும் என்றும் தீர்மானித்து, ஒரே வாரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டாராம்.

நான் ஒரு முட்டாளுங்க… ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க என்ற பல்லவி என்னுடையதுதான். மிச்சம்தான் கண்ணதாசனுடையது. ஒரே நாள்லே டியூன் போட்டு ரிக்கார்ட் பண்ணி, அந்தக் காட்சியையும் முடித்துக் கொடுத்தேன். அப்படி உருவானதுதான் அந்த அருமையான பால்காரர் வேஷம்!”

சந்திரபாபு வணங்கும் கடவுள்: சார்லி சாப்ளின்.

ஆர்வி: நான் ஒரு முட்டாளுங்க பாட்டை இங்கே கேட்கலாம்.

சந்திரபாபு நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சபாஷ் மீனாதான். அதைப் பற்றி அடுத்த பதிவில்.

நாகி ரெட்டி


விகடனில் 17-4-1994 அன்று வந்த நாகி ரெட்டியின் பேட்டி. விகடனுக்கு நன்றி!

விதியின் குழந்தை நான்!” – நாகி ரெட்டி

உங்கள் வாழ்க்கையில் ரொம்பவும் சந்தோஷமான நேரம்?
அந்தப் பதினெட்டு வயது… திரும்பக் கிடைக்குமா? அப் போது என் அப்பா நரசிம்ம ரெட்டி எனக்குச் சொல்லிக் கொடுத்த வியாபார நுணுக்கங்கள் பல. மலேசியா, சிங்கப்பூர், பர்மா என்று பல நாடுகளுக்கு என்னை வியாபாரத்துக்காக அனுப்பி வைத்தார் அப்பா. புது இடங்களுக்குப் போன அற்புத அனுபவம் அது! சந்தோஷத்தை அனுபவித்தேன். அங்கே போய் நான் செய்த பிஸினஸ் என்ன தெரியுமா? வெங்காய வியாபாரம்!

சினிமா உலகில் உங்களை அசத்திய நண்பர்?
எஸ்.எஸ்.வாசன்! அப்போது ஜெமினி ஸ்டுடியோவுக்கு விருந்தாளியாக வந்திருந்தார் மத்திய நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய். அப்படியே அவரை எங்கள் வாஹினிக்கும் கூட்டி வந்தார் வாசன். மொரார்ஜி தேசாய் வாஹினியை ஒரு ரவுண்ட் சுற்றிப் பார்த்துவிட்டு, என் தோளைத் தட்டினார். ‘எத்தனையோ சினிமா ஸ்டுடியோக்களுக்குப் போயிருக்கிறேன். பம்பாயில் கூட இவ்வளவு பிரமாண்டமாக இல்லை. ஜெமினி, வாஹினியைப் பார்த்த பிறகு, சினிமா என்பது கூட பெரிய இண்டஸ்ட்ரி வகைதான் என்று தோன்றுகிறது’ என்றார்.சினிமாவை இண்டஸ்ட்ரியாக ஏற்றுக்கொண்டதற்கு வாசன்தான் காரணம். எங்களுடைய நட்பு சினிமாவுக்கும் அப்பாற்பட்ட தூய நட்பு. தங்க செயின், பட்டுப் பாவாடை தகதகவென்று மின்ன, தனது நான்கு வயது பேத்தியை மடியில் உட்கார வைத்து, தானே காரை ஓட்டிக் கொண்டு என்னைப் பார்க்க வருவார் வாசன். அந்தக் கம்பீரமே தனி!

சினிமா, பத்திரிகை தவிர வேறென்ன துறையில் உங்களுக்கு விருப்பம் அதிகம்?
பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன்! நீங்கள் வடபழனியில் பார்க்கும் விஜயா கார்டன், சந்தமாமா பில்டிங், விஜயா மருத்துவமனை என்று பல கட்டடங்கள் எனது கை வண்ணத்தில் உருவானவைதான். எங்கள் பில்டிங்கின் ஒவ்வொரு செங்கல்லுடனும் நான் பேசியிருக்கிறேன். நான் முதலில் பில்டிங் கட்டும்போது கோடம்பாக்கத்தில் ரோடு கூட இல்லை.

சினிமா எனும் கற்பனைக் கோட்டைக்குள் எப்படிக் காலடி வைத் தீர்கள்?
என் அண்ணன் பி.என்.ரெட்டி கொஞ்சம் வித்தியாசமானவர். எனக்கு வியாபாரக் கண் என்றால், அவருக்கு கலை. அவரால்தான் முதல் முறையா மெட்ராஸூக்கு வந்தேன். அப்போது என் வயது 14. நாடகத் துறையில் பிரபலமாக இருந்த ராகவாச்சாரி, நரசிம்மராவ் போன்றவர்களுடன் அண்ணன் நாடகத்துறைக்கு வந்து, படிப்படியாக முன்னேறிய நேரம் அது. ‘ரோஹிணி பிக்சர்ஸ்’ என்று ஆரம்பித்து, ‘வந்தே மாதரம்’ என்று ஒரு படம் எடுத்தார். நான் அந்தப் படத்துக்கு ‘பப்ளிஸிடி’ வேலைகளைச் செய்தேன். ரோஹிணியை வாஹினியாக்கி கோடம்பாக்கத்தில் நிறையக் கட்டடங்களை எழுப்பினோம். அதில் ஒன்றுதான் வாஹினி ஸ்டுடியோ. ஜெமினிக்குப் பிறகு மெட்ராஸில் இரண்டாவது ஸ்டுடியோ வாஹினிதான். பிறகு படத் தயாரிப்பில் ஈடுபட்டோம். ஆரம்பத்தில் நானே ஒரு படம் இயக்கியுள்ளேன்.

இன்று வரை நீங்கள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் பொருள் உண்டா?
அப்படி எதுவும் இல்லை. ஆனால் நான் கொடுத்த பொருளை ஒருவர் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவதாக அறிந்தேன். எங்கள் ‘சந்தமாமா கம்பைன்ஸ்’ அந்த வி.ஐ.பி-யை ஹீரோவாக வைத்துப் படமெடுத்தது. நான் அவருக்குப் பட பூஜையன்று 101 சவரனில் பொற்காசுகள் பரிசளித்தேன். அவர் அதைப் பூஜித்து வருகிறாராம். அவருக்கு நான் பொற்காசுகள் வழங்கிய அந்தக் காட்சியை பெரிய சைஸ் போட்டோவாக தனது வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்! அவர் வேறு யாருமல்ல, ரஜினிகாந்த்!

நீங்கள் வாய்ப்புக் கொடுத்து இன்றைக்கு முன்னணியில் இருப்பவர்களைப் பற்றி?
என்.டி.ராமராவ்! ‘விஜயா வாஹினி’யில் வேலை பார்த்தவர். படிப்படியாக உழைத்து முன்னேறியவர். என் பல படங்களின் ஹீரோ என்.டி.ஆர்-தான். நடிகர் ரங்காராவ் கூட என்னிடம் பணி புரிந்தவர்தான். அந்தக் காலத்தில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை தருவார்கள். அதுவே எங்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம். நாங்கள் கொடுத்து அனுப்பும் சினிமா வசனங்களை வீட்டில் முழுவதுமாக ஒத்திகை பார்த்து விட்டுத்தான் மறுநாள் செட்டுக்கு வருவார்கள் நடிகர்கள். இன்று இதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா?

உங்கள் மனதுக்குப் பிடித்த பாடல்கள்?
கண்டசாலா, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்கள் ரொம்பவும் பிடித்தவை. சங்கராபரணத்தை பாடல்களுக்காகவே பார்த்தேன். கண்ணதாசனைப் பற்றியும் சொல்ல வேண்டும். அவர் ஒரு ஜீனியஸ். அவருடன் சேர்ந்து பணியாற்றியபோது பல தத்துவக் கவிதைகளைக் கேட்டு அசந்து போயிருக்கிறேன்.

பல தடைகளைத் தாண்டி வெற்றி கண்டவர் நீங்கள். உங்களது சாதனைகள் திருப்தியளிக்கிறதா?
நான் விதியின் குழந்தை. எனக்கு எல்லாம் தந்தது கடவுள்தான். நான் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்! தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தேன். அன்று வயலும் தோட்டமும்தான் என் உலகம். வெங்காயம், உருளைக்கிழங்கு ஏற்றுமதியில் ஈடுபட்டேன். பின்பு மெட்ராஸில் பிரின்ட்டிங் பிஸினஸ். அப்போதே நவீன வசதிகளோடு என்னுடைய பிரஸ் செயல்பட்டது. பம்பாய்க்காரர்களே என்னிடம் வந்து பிரிண்ட் செய்யும் அளவுக்கு நவீன கருவிகள் வைத்திருந்தேன். பத்திரிகை, சினிமா உலகில் வலம் வந்தேன். ஆப்செட் பிரின்ட்டிங்கில் புதுமைகள் செய்தேன். ஆல் இந்தியா மாஸ்டர் பிரின்ட்டர்ஸின் தலைவர், திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன், வெங்கடேஸ்வரா யூனிவர்ஸிடி மற்றும் கிருஷ்ண தேவராயர் யூனிவர்ஸிடியிடமிருந்து இரண்டு டாக்டர் பட்டங்கள், தாதாசாகிப் பால்கே விருது… இதெல்லாம் கடவுளே இந்தச் சாதாரண மனிதனுக்குத் தந்த பரிசுகள். நான் எந்தத் துறையில் கால் வைத்தாலும், மிகவும் ஈடுபாட்டோடு செய்தேன். பெருமைக்காகச் சொல்லவில்லை… இப்போது மருத்துவ சேவையில் ஈடுபட்டிருக்கிறேன். விரைவில் முதியவர்களுக்கான காப்பகம் அமைக்க ஆசை!

பத்திரிகைத் துறை உங்களது இரண்டாவது சாதனை… எப்படி ஜெயித்தீர்கள்?
சினிமாவில் நுழைவதற்கு முன்பே, ஜார்ஜ் டவுன் ஆச்சாரப்பன் தெருவில் ஒரு குட்டி அச்சகம் நடத்தி வந்தோம். அங்கேயே ‘சந்தமாமா’ என்ற பெயரில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் வெளியிட்டேன். பிற்பாடு கிட்டத்தட்ட 14 மொழியில் அதை வெளியிட்டேன். என்னதான் சினிமாக்கள் எடுத்தாலும் நான் பத்திரிகைத் துறையில்தான் ஆத்ம திருப்தி அடைகிறேன்.

சினிமா அன்றும் இன்றும் – உங்கள் பார்வையில் எப்படித் தெரிகிறது?
அன்று சினிமாவுக்குப் பொற்காலம்! கதை, இசை, இயக்கம் என்று ஒரு குழுவாகச் செயல்படுவோம். திறமைசாலிகள் இணையும்போது வெற்றிக்கு உத்தரவாதம் இருக்கும். கதைக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். இன்றைய சினிமாவில் ‘கவர்ச்சி’தான் மேலோங்கி நிற்கிறது!

நீங்கள் சந்திக்க விரும்பும் நபர்?
ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். – இவர்களெல்லாம் எனக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தவர்கள். இவர்களை மீண்டும் சந்திக்கலாம் என்று ஆசைதான். யாருமில்லையே! ஒரு பிரின்ட்டராகச் சொல்கிறேன்… நெடுங்கால நண்பர் பழனியப்பா. அவரைச் சந்திக்க விருப்பம். அவர் வெளியிட்ட பல கைடுகளை பிரின்ட் செய்திருக்கிறேன். அந்த கைடுகள், தமிழகத்தில் ரொம்பப் புகழ்பெற்ற கோனார் நோட்ஸ்!

உங்களது நெடிய அனுபவத்தில், வாழ்க்கையில் நீங்கள் கற்றுக் கொண்ட நீதியை இரண்டே வரியில் சொல்லுங்களேன்..?
அன்று குணம் இருந்தால் மதிப்பு. இன்று பணம் இருந்தால்தான் மதிப்பு. இதுதான் வாழ்க்கை, கண்ணா!

யுனெஸ்கோ லிஸ்ட்


யுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.

இந்திய லிஸ்ட்.

  1. 1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.
  2. 1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.
  3. 1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்
  4. 1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.
  5. 1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.
  6. 1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.
  7. 1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.
  8. 1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.
  9. 1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.
  10. 1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.
  11. பதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.
  12. ப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.
  13. மதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.
  14. மொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.
  15. சுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.

யுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.

நான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி? இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா? வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா? மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா? யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது?

எனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:

சிறந்த 5 படங்கள்:

  1. கப்பலோட்டிய தமிழன்
  2. தண்ணீர் தண்ணீர்
  3. நாயகன்
  4. தளபதி
  5. தேவர் மகன்

6 மைல் கல்கள்:

  1. சந்திரலேகா
  2. நாடோடி மன்னன்
  3. வீரபாண்டிய கட்டபொம்மன்
  4. பதினாறு வயதினிலே
  5. நாயகன்
  6. ஜென்டில்மன்

5 பொழுதுபோக்கு படங்கள்:

  1. சந்திரலேகா
  2. ஆயிரத்தில் ஒருவன்
  3. தில்லுமுல்லு
  4. மைக்கேல் மதன காம ராஜன்
  5. பஞ்ச தந்திரம்

நான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன? படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.

சந்திரலேகா (Chandralekha)


நினைவிலிருந்து இன்னொரு படத்துக்கு லேட்டான விமர்சனம்.

தமிழில் சினிமாவின் சாத்தியங்களை வெளிபடுத்திய முதல் படம் இதுதான். இன்றும் சுவாரசியம் குறையவில்லை. இதைத்தான் தமிழின் முதல் சினிமா என்று சொல்லவேண்டும். உண்மையிலேயே பிரம்மாண்டமான படம். 1948இல் பார்த்தவர்கள் அசந்து போயிருப்பார்கள். (அன்று விகடனிலோ கல்கியிலோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ எழுதப்பட்ட விமர்சனத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா?) அன்று வரையில் வந்த உலக சினிமாக்களின் வரிசையில் வைத்து பார்க்கக்கூடிய படம்.

யுனெஸ்கோ இந்திய சினிமாவின் மைல் கல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. (மற்ற இந்தியப் படங்கள் அடுத்த போஸ்டில்). அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்க்ரசில் இருக்கும் இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்று (மற்றது அவ்வையார். இந்த லிஸ்டில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு வெளியே தமிழ் சினிமா இல்லவே இல்லை என்று தெரிகிறது.) நியூ யார்க் டைம்ஸின் விமர்சனம் இங்கே.

இந்த படம் வந்த போது தமிழில் பதினேழு பதினெட்டு வருஷங்களாக படங்கள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹரிதாஸ், கண்ணகி, சேவா சதனம், தியாக பூமி, சிவகவி, மீரா, நந்தனார், திருநீலகண்டர், எஸ்.எஸ். வாசனே எடுத்த மங்கம்மா சபதம் உட்பட்ட பல படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றுள் அநேகமானவை பாட்டுக் களஞ்சியங்களே. அதுவும் தியாகராஜா பாகவதரின் படங்களில் பாட்டுகளுக்கு நடுவே சில சமயம் வசனம் பேசுவார்கள். அபூர்வமாக சபாபதி, சேவா சதனம் போல பாட்டுக்களை மட்டுமே நம்பி இருக்காத படங்கள் வந்தாலும் அவை நாடகங்களை வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன . சந்திரலேகாவுக்கு பிறகும் பல படங்கள் அப்படி வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன என்பது வேறு விஷயம்.

சொல்லப் போனால் இதற்கு முன் வந்த படங்களில் 1941இல் டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்து வெளி வந்த சபாபதி, 1945இல் எம். எஸ். சுப்புலக்ஷ்மி நடித்து வெளி வந்த மீரா ஆகியவற்றைத்தான் இன்றும் பார்க்கமுடியும். ஆனால் இந்த இரண்டைத் தவிர 1948க்கு முன் வெளி வந்து நான் பார்த்த படங்கள் குறைவுதான். 1942இல் தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்து வெளி வந்த நந்தனார், 1943இல் ரஞ்சன், வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி நடித்து வெளி வந்த மங்கம்மா சபதம், எந்த வருஷம் வந்தது என்று சரியாக தெரியாத எம். எஸ். நடித்த சகுந்தலை அவ்வளவுதான். பக்கத்து வீட்டுக்கு டிவி வந்த புதிதில் பார்த்த சிவகவி ரொம்ப மங்கலாக நினைவு இருக்கிறது. (எனது கருத்து படித்தும் கேட்டும் உண்டானது, படங்களைப் பார்த்து அல்ல.)

சபாபதி இன்றும் சிரிப்பு மூட்டக்கூடிய படம். மீராவின் பஜன்களை இன்றும் எம்.எஸ்ஸின் குரலில் கேட்கலாம். ஒரு வேளை இளங்கோவனின் வசங்களுக்காக புகழ் பெற்ற கண்ணகியும் இந்த லிஸ்டில் இருக்கலாம், ஆனால் நான் பார்த்ததில்லை, இன்று பார்க்கக்கூடிய பிரிண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. சதி லீலாவதி, தியாக பூமி, சேவா சதனம், திருநீலகண்டர், ஹரிதாஸ், கே.பி. சுந்தராம்பாள் நடித்த நந்தனார் இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பார்க்கக்கூடிய பிரிண்ட்கள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

1948இல் வெளி வந்த படம். ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், சுந்தரிபாய், எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி, ஜாவர் சீதாராமன் இவர்களை அடையாளம் தெரிகிறது. எஸ். எஸ். வாசன் இயக்கம். எஸ். ராஜேஸ்வர ராவ் இசை.

படத்தை எடுக்க 5 வருஷம் பிடித்ததாம். 30 லட்சம் ரூபாய் செலவாம். ஒரு கோடி ரூபாய் வசூலாம். 48இல் கோடீஸ்வரன்!

இந்த படத்திற்கு கதை எழுத வாசன் எல்லாரையும் சக்கையாக பிழிந்தாராம். இதை பற்றி ராண்டார்கை எழுதிய சுவையான குறிப்பு இங்கே.

கதை என்னவோ இந்த படத்தில் முக்கியம் இல்லை. (முக்கால்வாசி தமிழ் படங்களைப் போலத்தான்.) வாரிசுப் போட்டியில் வில்லனான தம்பி ரஞ்சன் நாட்டை கைப்பற்றுகிறார். அண்ணனான எம்.கே. ராதா காதலிக்கும் டி.ஆர். ராஜகுமாரியையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சரியான சமயம் பார்த்து ரஞ்சனை ராதா தோற்கடித்து நாட்டையும் காதலியையும் கை பிடிக்கிறார். இதுதான் கதை. இதில் முரசு டான்ஸ், சர்க்கஸ், யானைகள், அனல் பறக்கும் கத்தி சண்டைகள், வேகமாக ஓடும் குதிரைகள், தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி போன்ற மக்களை கவரும் பல விஷயங்கள்.

தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி வரும் காட்சி ஆபாசம் என்று பலத்த கண்டனம் செய்யப்பட்டதாம். கண்டித்தவர்கள் எல்லாரும் ஜொள்ளு விட்டுக்கொண்டே கண்டித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என் அம்மா சில சமயம் இந்த காலத்து சினிமாக்களை பார்த்து விட்டு “அந்த காலத்திலே சந்திரலேகாவிலே தாவணி இல்லாததற்கே…” என்று என்று துவங்கும் ஆபத்து எங்கள் குடும்பத்தில் இப்போதும் உண்டு. இதில் சர்க்கஸ் பெண்களுக்கும் ஜிப்சி பெண்களுக்கும் கூடத்தான் தாவணி இல்லை, ஆனால் அது ஏன் பேசப்படவில்லை?


எல்லாரும் சிலாகிக்கும் அந்த முரசு டான்ஸ் அபாரமானது. எத்தனை முரசுகள்? அருமையான காட்சி அமைப்பு. கொடுத்த காசு இந்த ஒரு காட்சிக்கே சரியாகிவிட்டது. விவரித்து மாளாது, மேலே உள்ள வீடியோவை பாருங்கள். அதற்கு ஈடான காட்சிகளை கொண்டு வரக்கூடியவர் இன்றைய இயக்குனர் ஜி. ஷங்கர் ஒருவர்தான். (டி.ஆர். ராஜேந்தருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால்…)

கிராமத்தில் நெருப்பு பிடிக்கும் காட்சி, எம்.கே. ராதாவின் கூடாரங்களை ரஞ்சன் தாக்கும் காட்சி, யானைகளை வைத்து எம்.கே. ராதா இருக்கும் குகையை மூடி இருக்கும் பாறையை நகர்த்தும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அருமையாக, நாடகம் போல இல்லாமல் படமாக்கப்பட்டிருந்தன. ஒரு சினிமா போல பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். சர்க்கஸ் கூட்டம் ஊரைவிட்டு ஊர் போகும் காட்சி, சர்க்கஸ் சாகசங்கள் எல்லாமே நன்றாக படமாக்கப் பட்டிருந்தன. அந்தக் காலத்தில் பெரும் அதிசயமாக இருந்திருக்கும்.

எல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரஞ்சனின் நடிப்பில் ஒரு உத்வேகம் இருக்கிறது. ஆனால் டி.ஆர். ராஜகுமாரி ஸ்லோ மோஷனில்தான் பேசுவார்.

என்.எஸ்.கேயின் காமெடி இன்று (எந்த படத்திலும்) பார்க்க முடிவதில்லை. இதில் அவர் கரடி வேஷம் போட்டுக்கொண்டு வரும்போது ஆளை விடுங்கப்பா என்றுதான் தோன்றுகிறது. கோட்டைக்குள் நுழைய அவர் எல்லா வார்த்தைகளையும் ரிவர்சில் பேசுவது கொஞ்சம் சிரிக்கலாம்.

எல்லா பாட்டுகளும் எனக்கு நினைவில் இல்லை. “நாட்டிய குதிரை நாட்டிய குதிரை”, “ஐநிலோ பக்கிரியாமா” கேட்கலாம்.

வி.என். ஜானகி நடனம் பார்க்க வேண்டுமா?

கட்டாயமாகப் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.

P.S. நெட்டில் தேடியபோது தட்டுப்பட்ட எம்.கே. ராதாவின் பேரன், பால கமலாகரன் எழுதும் ப்ளாக். ப்ளாகிலிருந்து இவர் க்ளிட்னிர் என்ற வங்கியில் பணி புரிகிறார் என்றும், சில மாதங்களுக்கு முன்னால்தான் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார் என்றும், பல மாரதான்களில் ஓடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இவர் தன் தாத்தா எம்.கே. ராதாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் இங்கே.

மோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)


சில நாட்களுக்கு முன்னால் இந்த ப்ரோகிராமில் பார்த்த படம். சாரதா/ப்ளம் ஆகியோரின் சில கடிதங்களால் நினைவு வந்தது.

1966இல் வந்த படம். ஜெமினி தயாரிப்பு. இயக்குனர் ஆனந்தவிகடன் ஆசிரியரான பாலசுப்ரமணியம் என்று நினைக்கிறேன். டைட்டில்களில் “பாலு” என்று போட்டிருந்தார்கள். அவர் இயக்கிய முதல் படமாம். சிவாஜியைத் தவிர, சௌகார் ஜானகி, மணிமாலா, முத்தையா(விவரத்துக்கு நன்றி, சாரதா), ஜெயலலிதா, காஞ்சனா, சிவகுமார், ரவிச்சந்திரன், நாகேஷ், எஸ். ராமாராவ், மேஜர் சுந்தரராஜன், நாகையா, சச்சு என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. இசை எம்எஸ்வி. நன்றாக ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக தெரியவில்லை.

நவராத்திரியில் சிவாஜிக்கு ஒரு டாக்டர் வேஷம் உண்டு. அந்த நடிப்பை இங்கே மீண்டும் உபயோகப்படுத்தி இருக்கிறார். ஒரு சாந்தமான, அன்பான (பெரிய) குடும்பத் தலைவன். 9 குழந்தைகள். கதையின் ஆரம்பத்தில் சௌகார் மீண்டும் கர்ப்பம் வேறு. பெரிய பணக்காரர். பட்டணத்தில் ஃபாக்டரி. ஒரு சிறு நகரத்தில் (காலேஜ் எல்லாம் இருக்கிறது) குடும்பம். வார இறுதியில் மட்டும் வீட்டுக்கு வருவார். அவரது வரவை எதிர்பார்த்திருக்கும் பிள்ளைகள். கொஞ்சம் அசடான அக்கா பையன் தான் வீட்டின் ஆண் பிள்ளை. திருமணமாகி இன்னும் கணவன் வீட்டுக்கு போகாத முதல் பெண் காஞ்சனா. காலேஜில் படிக்கும் இரண்டு பெண்கள், அதில் ஒன்று ஜெ. (ஜெ வேறு எந்தப் படத்திலாவது சிவாஜிக்கு மகளாக நடித்திருக்கிறாரா?) அவர்கள் இருவருக்கும் காதல். ஜெ காதலிப்பது லோகல் காலேஜ் ப்ரின்சிபல் மகன் ரவிச்சந்திரனை. இரண்டாவது பெண் ஸ்டேஷன் மாஸ்டர் பையனான காலேஜ் ப்ரொஃபஸரை காதலிக்கிறாள். காதலுக்கு பச்சை கொடி காட்டும் குடும்பங்கள். நிச்சயதார்த்தத்தின்போது சிவாஜிக்கு இன்னொரு மனைவியும் குடும்பமும் இருப்பது தெரியவருகிறது. ஊர் பெரிய மனிதனுக்கு இருக்கும் ஒழுக்க குறைவால் ஷாக்காகும் எல்லாரும் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட, சௌகார் கிடைத்தது சான்ஸ் என்று அழ ஆரம்பிக்க, கடைசியில் சிவாஜி சௌகாரின் தங்கை மணிமாலாவைத்தான் சௌகார் இறந்துவிட்டார் என்று நினத்து கல்யாணம் பண்ணிக்கொண்டது தெரிகிறது. இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்து, நின்று போன கல்யாணங்கள் நடக்க, சுபம்!

பாட்டுக்கள் சூப்பர். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு “மனமே முருகனின் மயில்வாகனம்”தான். பாடியது ராதா ஜெயலக்ஷ்மி. எழுதியது பத்மஸ்ரீ கொத்தமங்கலம் சுப்பு. கொத்தமங்கலம் சுப்பு ஜெமினி பிக்சர்ஸை தூக்கிப் பிடித்த ஒரு தூண். அவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். 4 வரிகள்தான், எல்லா வரிகளையும் தருகிறேன்.
மனமே முருகனின் மயில் வாகனம் – என்
மாந்தளிர் மேனி குகனாலயம்
குரலே செந்தூரின் கோவில் மணி – அதில்
குகனே ஷண்முகனே என்றொலி கூவு நீ

சில சினிமா பாட்டுக்கள் பொதுவாக புழங்கும் பக்தி பாடல்களை விட என் மனதை தொடுகின்றன. ‘மனம் கனிந்தருள் வேல்முருகா”, “சுந்தரி சௌந்தரி நிரந்தரியே”, “ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்”, “முருகா முருகா முருகா வருவாய் மயில் மீதினிலே”, “மாசறு பொன்னே வருக”, இந்த பாட்டுகளுக்கும் “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்”, “கற்பகவல்லி நின் பொற்பதங்கள் துதித்தேன்”, “ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்” போன்ற பாட்டுகளுக்கும் என் மனதில் வித்தியாசம் தெரியவில்லை. உண்மையை சொல்லப் போனால் “டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு” போன்ற வரிகள் வரும் கந்த சஷ்டி கவசத்தை விட இவற்றையே நான் விரும்புகிறேன். (இப்படி எழுதியதற்காக என் அம்மா என்னை மன்னிக்கப் போவதில்லை. ஆனால் அம்மா, காலையில் கந்த சஷ்டி கவசம் சொன்ன பிறகுதான் காப்பி என்று நீ சொன்ன நாட்களையும் நான் மறக்கவில்லை. :-))

“குபுகுபு நான் எஞ்சின்” ஒரு துள்ளலான பாட்டு. ஏ.எல். ராகவனின் கலக்கலான குரல் நாகேஷுக்கு (ஜெமினிக்கும்) நன்றாக பொருந்துகிறது. எல்.ஆர். ஈஸ்வரி இணைந்து பாடியது. “எதிரில் வந்தது பொண்ணு” என்றும் ஒரு ஏ.எல். ராகவன் பாட்டு உண்டு.

“காத்திருந்த கண்களே” பி.பி. ஸ்ரீனிவாசும், சுசீலாவும் பாடிய இனிமையான பாட்டு. எழுதியது கண்ணதாசன். ரவிசந்திரனும், ஜெயும் சாத்தனூர் அணைக்கட்டில் பாடுவார்கள். இந்த அணைக்கட்டு இன்னும் அழகாகத்தான் இருக்கிறதா? தெரிந்தவர்கள் எழுதுங்களேன்!

“துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு” சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இணைந்து பாடும் ஒரு நல்ல பாட்டு.

இதைத் தவிர “காதல் என்றால் என்ன” என்றும் ஒரு பாட்டு உண்டு.

பல பாடல்களை இங்கே கேட்கலாம்.

சிவகுமார் இப்போதும் இளமையானவர்தான். ஆனால் இதிலே உண்மையிலேயே காலேஜில் படிக்கும் பையன் போல இருந்தார். பார்த்ததும் நானும் என் மனைவியும் சிரித்துவிட்டோம்!

சிவாஜி இதிலே மிகவும் அடக்கி வாசித்திருப்பார். கடைசி காட்சியில் தான் மணிமாலாவை கல்யாணம் செய்து கொண்ட காட்சியிலேதான் கொஞ்சம் நடித்துப் பார்ப்பார். தான் 25 வருஷங்களாக பட்ட நரக வேதனையை விவரிக்கும் வசனத்தில்தான் நான் சிரித்துவிட்டேன். அந்த 25 வருஷங்களில் சௌகாருக்கு ஒன்பதோ பத்தோ குழந்தைகள், மணிமாலாவுக்கு நாலோ ஐந்தோ. ஆனால் இவருக்கு நரக வேதனையாம். இவரது சொர்க்கம் எப்படி இருந்திருக்குமோ?

நாகேஷின் நகைச்சுவை பகுதி துப்பறியும் சாம்புவிலிருந்து inspire ஆனது. சாம்புவைப் போலவே இவரும் ஏதாவது செய்யப் போய் திருடர்கள் அகப்பட்டுக்கொள்வார்கள். சிரிக்கும்படி இருந்தது.

நல்ல குடுமப்ப் படம். அருமையான பாட்டுக்கள். நல்ல நகைச்சுவை. சிவாஜியின் மிருதுவான நடிப்பு. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இரும்புத் திரை (Irumbuth Thirai)


“நெஞ்சில் குடியிருக்கும்” என்ற பாட்டை சின்ன வயதில் கேட்டதிலிருந்தே இந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. பி. லீலாவின் இனிமையான குரலும், டி.எம்.எஸ்.ஸின் வெண்கலக் குரலும், எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில் ஒரு சுகமான அனுபவம். சில சமயங்களில் சன் டிவியில் இரவு நேரங்களில் இந்தப் பாட்டைப் போடுவார்கள். அழகான வைஜயந்திமாலாவும், கம்பீரமான சிவாஜியும் பார்க்க அருமையாக இருக்கும். சில வருஷங்களுக்கு முன் இந்தப் படத்தின் Hindi version ஆன “பைகாம்” பார்த்தேன். இவை எல்லாம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டின. பல வருஷங்களாக ஆசைப்பட்டது இன்றுதான் நிறைவேறியது.

படம் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் மோசமும் இல்லை. சிவாஜி ஓவர் ஆக்டிங்தான் நடிப்பு என்று இன்னும் தீர்மானிக்கவில்லை. சாதாரணமாக நடித்திருக்கிறார். வைஜயந்திமாலா அழகாக வந்து போகிறார். சரோஜா தேவி, எஸ்.வி. ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, தங்கவேலு, வசுந்தரா தேவி (வைஜயந்திமாலாவின் அம்மா) போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். Hindi-யில் சிவாஜிக்கு பதிலாக திலிப் குமார், எஸ்.வி. சுப்பையாவுக்கு பதிலாக ராஜ்குமார், எஸ்.வி. ரங்கா ராவுக்கு பதிலாக மோதிலால். ஜெமினி பிக்சர்ஸ் படம். எஸ்.எஸ். வாசன் தயாரிப்பு. Hindi பாடல்கள் எதுவும் என் மனதில் நிற்கவில்லை.

தமிழ் பாடல்கள் பிரமாதம். “நெஞ்சில் குடியிருக்கும்”தான் மாஸ்டர்பீஸ். “என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே” என்ற பாட்டை முதல் முறையாக இன்றுதான் கேட்டேன். பாட்டு ஒரு கீர்த்தனைக்கு சமானமாக இருக்கிறது. அப்புறம் பார்த்தால் பாட்டை எழுதியது பாபநாசம் சிவன், பாடியது ராதா ஜெயலக்ஷ்மி. “ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டு” பாட்டும் நன்றாக இருந்தது, வைஜயந்திமாலாவின் ஆட்டமும் சிறப்பாக இருந்தது. “படிப்புக்கும் ஒரு கும்பிடு” என்ற பாட்டும் நன்றாக இருந்தது. “எளிய மக்கள் தலையில் காசு ஏறி மிதிக்குது”, “ஏரு பூட்டுறவனும் இங்கிலிஷ் பேசுபவனும்” என்ற இரண்டு பாட்டுகளும் ஊர்வலத்தில் பாட ஏற்ற பாட்டுக்கள். ஒரு சுலபமான சந்தத்தில் அமைந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் தொழிலாளர்கள் பாடுவதற்கு பொருத்தமாக இருந்திருக்கும். தங்கவேலு நடிக்கும் lowbrow பாட்டுக்கள் மூன்று – “டப்பா டப்பா டப்பா டப்பா” என்ற பாட்டு தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் “தில்லாண்டோமரி டப்பாங்குத்து” பாட்டை ஞாபகப்படுத்துகிறது. “கையிலே வாங்கினேன் பையிலே போடலே” சில சமயங்களில் சன் டிவியில் போடுவார்கள். ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய பாட்டு அல்ல.

எனக்கு இதெல்லாம் சாதாரணமாக கண்ணில் படாது, ஆனால் “நெஞ்சில் குடியிருக்கும்” பாட்டில் வைஜயந்திமாலா அணிந்திருக்கும் நெக்லஸ் நன்றாக இருந்தது. என் மனைவியிடம் நேற்றுத்தான் இந்த ப்ளாகைப் பற்றி சொன்னேன். அவள் இதைப் படித்தால் இப்போது புன்முறுவலிப்பாள். 🙂 அனேகமாக எனக்கு phone செய்வாள்.

கதையும் சாதாரணக் கதைதான். எல்லாரும் அந்தக் காலத்தில் உள்ள stock காரக்டர்கள்தான். தொழிலாளிகளை ஏமாற்றும் முதலாளி ரங்காராவ், மிகவும் naive ஆன தொழிலாளி எஸ்.வி. சுப்பையா, அநியாயங்களை எதிர்த்துப் போராடும் சுப்பையாவின் தம்பியான சிவாஜி, ரங்காராவால் கைவிடப்பட்ட வசுந்தரா தேவி, ஏழை கதாநாயகியான வசுந்தராவின் பெண் வைஜயந்திமாலா, சிவாஜி கதாநாயகன் என்பதை தவிர அவரைக் காதலிக்க் வேறு காரணம் தேவைப்படாத சரோஜாதேவி – இதற்கு மேல் கதையை விவரிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். எனக்கு பிடித்திருந்த ஒரு காட்சி – வைஜயந்திமாலாவை சிவாஜி தனது பத்து வயதில் தன் அருகில் அமர்ந்த ஒரு பெண்ணைப் பற்றி சொல்லி வெறுப்பேற்றும் காட்சி – சுலபமாக யூகிக்கக் கூடிய விஷயம்தான், ஆனால் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது.

இன்னொரு விஷயம் சுவாரசியமாக இருந்தது. பி.ஏ. படித்து டைப்பிஸ்ட் ஆக வேலைக்கு சேரும் வைஜயந்திமாலாவின் சம்பளம் மாதத்துக்கு 300 ரூபாய். ஆலை நின்று விடாமல் இருக்க தேவையான ஸ்பேர் பார்ட் செய்து கொடுத்து தலைமை மெக்கானிக் ஆக வேலைக்கு சேரும் சிவாஜியின் சம்பளம் 150 ரூபாய்தான். தொழிற்சாலைக்கு இன்றியமையாத மெக்கானிக்கை விட பி.ஏ. பட்டத்துக்குத்தான் மதிப்பு அதிகம். 1960-இல் எடுக்கப்பட்ட படம் என்று நினைக்கிறேன். அன்றைய மதிப்பீடுகள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அன்றைக்கு வேலைக்குப் போன யாராவது இது அந்தக் காலத்தில் உண்மைதானா என்று எழுதுங்களேன்!

பார்க்கலாம். சில பாட்டுக்களை இங்கு கேட்கலாம்

நீரும் நெருப்பும் (Neerum Neruppum)


எஸ். எஸ். வாசன் மறைந்தபோது அவரை கௌரவிக்க எம்ஜியார் வாசனின் மிக சிறந்த பொழுதுபோக்கு படங்களில் ஒன்றான அபூர்வ சகோதரர்களை மீன்டும் தயாரித்தார். திரைக்கதை ஏறக்குறைய அதேதான். இதே படம் Hindi-இல் கோரா அவுர் காலா என்று ராஜேந்திரகுமார், வைஜயந்திமாலா நடித்து வெளி வந்தது.

நீரும் நெருப்பும் அவ்வளவாக வெற்றி அடையவில்லை. முக்கியமான குறை நினைவில் நிற்காத பாட்டுக்கள்தான். எம்ஜியாரும் பாட்டுக்களில் கோட்டை விடலாம் என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அந்தக் காலத்து எம்ஜியார் ரசிகர்கள் அவர் தனது முகத்துக்கு கறுப்பு மேக்கப் போட்டதை ரசித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். உண்மையை சொல்லப் போனால் சிவப்பு எம்ஜியாருக்கும் மேக்கப் சரி இல்லை. பொருந்தாத விக், முகத்தில் ஒரு வயதான களை தெரிகிறது. ஒரிஜினல் இதை விட இரண்டு மடங்கு நன்றாக இருந்தது.

முன்பே குறிப்பிட்டது போல சண்டைகள் சாதாரணமாகத்தான் இருந்தன – க்ளைமாக்ஸ் சண்டையைத் தவிர. இரண்டு எம்ஜியார்களும் அசோகனுடன் மோதுவது நன்றாக இருந்தது. குறிப்பாக எம்ஜியாருக்கு இரண்டாவது கத்தி கிடைத்ததும் அவர் காட்டும் வேகம் அதிசயிக்க வைத்தது.

ஆனால் நான் படத்தை மிகவும் ரசித்தேன். காரணம் அசோகன் தான். அசோகன் full form-இல் இருந்தார். அவர் வரும் போதெல்லாம் சிரித்துக் கொண்டே இருந்தோம். குறிப்பாக அவரது அறிமுக காட்சி, அவர் டாக்டரிடம் இரட்டையர்களைப் பற்றி விசாரிக்கும் காட்சி, அவர் சீன வியாபாரியாக மாறு வேடம் போடுக்கொண்டு வந்திருக்கும் எம்ஜியாருடனும் ஜெயலலிதாவுடனும் நடிக்கும் காட்சி போன்றவற்றில் அவர் அவரையே மிஞ்சி விட்டார்.

அசோகனின் நடிப்பைப் பார்க்கும் போது நமது பாரம்பரியமான தெருக்கூத்தின் பாதிப்பு நன்றாகத் தெரிகிறது. நான் சிறு வயதில் ஒன்று இரண்டு கூத்துக்களைப் பார்த்திருக்கிறேன். துரியொதனனோ, ராவணனோ கொஞ்சம் அதிகமாகத்தான் கத்துவார்கள். பாய்ஸ் நாடகக் கம்பெனிகளிலும் இப்படித்தான் நடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்று கூத்து என்பது கல்லூரி தமிழ் நாடகது துறைகளிலும், ஏதாவது கலாச்சார விழாக்களிலும்தான் தென்படும் என்று தோன்றுகிறது. கூத்தோ பாய்ஸ் நாடகமோ பார்த்துள்ள பெரிசுகளோ, அதிசயப் பிறவிகளோ யாராவது இதைப் படித்தால் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்!

இந்த வாரப் படங்கள் (Week of Aug 4, 2008)


தாழம்பூ (பார்க்க முடியவில்லை), கன்னிப் பெண், டாக்டர் சிவா, மாமன் மகள், நீரும் நெருப்பும். இதில் நான் தாழம்பூ, கன்னிப் பெண் தவிர மற்றவற்றை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். டாக்டர் சிவா ஒரு சகிக்க முடியாத சிவாஜி படம். பாட்டுக்கள் தவிர (மலரே குறிஞ்சி மலரே) வேறு நல்ல விஷயங்கள் எதுவும் கிடையாது என்று ஞாபகம். மாமன் மகளில் சந்திரபாபு நகைச்சுவை என்ற பெயரில் கொலை செய்வார். நீரும் நெருப்பும் எஸ்.எஸ். வாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மறு பதிப்பு. ஒரிஜினல் பார்க்கக்கூடிய படங்களில் ஒன்று. நல்ல மசாலா. இது சரியான போர் என்று ஞாபகம். ஆனால் இந்த படத்தைப் பார்த்த போது நான் கத்தி சண்டை ரசிகன் அல்லன். சண்டைகள் நன்றாக இருந்திருக்கலாம், எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு பாட்டும் உருப்படியாக இல்லை என்று நினைக்கிறேன். கன்னிப் பெண்ணில் சில நல்ல பாட்டுக்கள் உண்டு – பவுர்ணமி நிலவில் பனி விழும் இரவில் மட்டும்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.