விடுதலை போராட்டத்தில் பிரபல நடிகர்கள்


இந்திய விடுதலையின் வெள்ளி விழா சமயத்தில் – ஆகஸ்ட் 1972இல் – விகடனில் வந்த கட்டுரை. பல நாடக நடிகர்கள் சுதந்திரப் போராட்ட காலத்து நினைவுகளை, போராட்டத்தில் அவர்கள் பங்கை நினைவு கூர்கிறார்கள். விகடனுக்கு நன்றி!

பொழுதுபோக்குக்காகத்தான் கலை என்ற சிந்தனையை மாற்றி, தங்களுடைய வீரமிகு பேச்சாலும், உணர்ச்சிமிகு நடிப்பாலும் தேசியப் பணியாற்றியுள்ளார்கள் எண்ணற்ற கலைஞர்கள். அவர்களில் சிலர் தங்கள் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

கே.சாரங்கபாணி:
சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, நான் திரு.ஜகன்னாதையர் கம்பெனியான மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சித சங்கீத சபாவில்தான் நடிகனாக இருந்தேன்.

காலைப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், கருத்துகளையும் அன்றைய நாடகத்திலேயே சிலேடையாகப் புகுத்திப் பிரசாரம் செய்வோம். பதிபக்தி, பஞ்சாப் மெயில், தேசியக் கொடி, கதரின் வெற்றி என்று பல நாடகங்களைப் போட்டிருக்கிறோம்.

கதரின் வெற்றி நாடகம், இங்கிலாந்தில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் முன்னால் எங்கள் குழுவினரால் நடித்துக் காட்டப்பட்டு, மெடல், சர்ட்டிபிகேட் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தது. ஆனால், அதே நாடகம் இந்தியாவில் நடத்தக்கூடாது என்று தடை செய்யப்பட்டது.

நாடகத்திலே தேசியக் கொடியைக் காட்டக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்கள். எப்படியாவது காட்டிவிடவேண்டும் என்று எங்களுக்குள் ஒரு தீர்மானம். போலீஸ் கெடுபிடி வேறு. கடைசியில் ஒரு தந்திரம் செய்தோம். மூன்று பையன்களுக்கு தேசியக் கொடியின் மூன்று கலர்களிலும் உடை அணிவித்து, கொடியைப் போல் மேடையில் நிற்க வைத்தோம். அதைப் புரிந்துகொண்டுவிட்ட மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

கே.பி.சுந்தராம்பாள்:
அப்போதெல்லாம் சத்தியமூர்த்தி மேடைகளில் முழங்குவார். நான் தேசியப் பாடல்களைப் பாடுவேன். ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம் என்று நாங்கள் இருவரும் போகாத இடமேயில்லை. ‘பாட்டாலேயே சுந்தராம்பாள் வெள்ளைக்காரனை அடிச்சு விரட்டிடுவார்’ என்று நண்பர்கள் சொல்லுமளவுக்கு என் பாட்டில் உணர்ச்சி கொப்பளிக்கும்.

எனக்கு எங்கே போனாலும் தடை. பின்னாலேயே சி.ஐ.டி-க்கள்! என் பாட்டைக் கேட்டுப் பல ஆங்கிலேயர்கள் கூடக் கட்சியில் வந்து சேர்ந்தார்கள்.

நாகையா:
நான் சித்தூரில் ரெவின்யூ துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். வருஷம் 1922.

கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு நாள் சத்தியமூர்த்தி சித்தூருக்கு வந்து, நானும் போராடவேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டார். அப்போது என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. இருந்தாலும் சுதந்திர உணர்ச்சி காரணமாக நான் கிளம்பிவிட்டேன்.

சித்தூரிலிருந்து 30, 40 மைல் தள்ளி ஒரு கிராமத்தில் கள்ளுக் கடை மறியல் போராட்டம் நடந்தது. அந்தக் கிராமத்தில் போய் இறங்கியவுடனேயே, ஒரு கள்ளுக்கடையின் முன்னால் உருக்கமாகத் தேசியப் பாடல்களைப் பாடினேன். அப்போது கள்ளுக்கடையிலிருந்து ஒருவன் வெளியே வந்து, வாயில் இருந்த கள்ளை என் முகத்தில் காறித் துப்பிவிட்டான். அப்படியும் நான் விடமல், அவன் காலில் விழுந்து, குடிப்பதை விடும்படி வேண்டினேன்.

அன்று மறியல் செய்துவிட்டு நான் சித்தூர் திரும்பியபோது, என் மனைவி சித்தூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறந்து கிடந்தாள்!

டி.கே.சண்முகம்:
அரசியல் விஷயங்களில் எங்கள் நாடகக் குழு தொடர்பு கொள்ள ஆரம்பித்தது 1931-ம் ஆண்டில்தான். பண்டித மோதிலால் நேரு இறந்தபோது கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஓர் அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதல் முதலாகப் பாட்டுக்கள் பாடினேன்.

அப்போது கிளம்பிய தேசிய உணர்ச்சியில், வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘பாணபுரத்து வீரன்’ என்ற நாடகத்தை நடத்த எண்ணினோம். ஆனால் அது சர்க்காரால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த நாட கத்தை ‘தேசபக்தி’ என்று மாற்றி நடத்தினோம். அந்த நாடகம் மக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எஸ்.வி.சகஸ்ரநாமம்:
அப்போது நான் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் டி.கே.எஸ். அவர்களோடு இருந் தேன். அவர் நடத்திய ‘தேச பக்தி’ நாடகத்தில் வாலீசன் என்ற பாத்திரத்தை நான் ஏற்றேன். அது ஏறக்குறைய பகத் சிங்கைப் பிரதிபலிப்பதுதான். நான் வாலீசனாக மேடையில் தோன்றினாலே, ஜனங்கள் எல்லாம் ‘பகத்சிங்குக்கு ஜே’ என்று கோஷம் போடுவார்கள்.

முதல் முதலாக இந்த நாடகத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காந்திஜியின் வரலாற்றை வில்லுப் பாட்டாகப் பாடி அரங்கேற்றினார்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

One Response to விடுதலை போராட்டத்தில் பிரபல நடிகர்கள்

  1. பிங்குபாக்: சத்தியமூர்த்தி – சிலிகான் ஷெல்ஃப்

பின்னூட்டமொன்றை இடுக