அவளுக்கென்று ஒரு மனம் (Avalukkenru Oru Manam)


இன்னும் ஒரு லேட்டான விமர்சனம்.

முதலில் என் தமிழ் புலமையை காட்டிக்கொள்கிறேன். 🙂 ஆங்கிலத்தில் a/an விதியைப் போல தமிழிலும் ஒரு/ஓர் சொற்களுக்கு ஒரு விதி உண்டு, தெரியுமா? அடுத்த சொல் ஓர் உயிரெழுத்தோடு ஆரம்பித்தால் “ஓர்” என்ற வார்த்தையையும் இல்லாவிட்டால் “ஒரு” என்ற வார்த்தையையும் பயன்படுத்தவேண்டும். அப்பாடா! நான் தமிழ் ஆசிரியையின் தவப்புதல்வன் என்பதை நிரூபித்துவிட்டேன்.

1971இல் வந்த படம். ஜெமினி, பாரதி, காஞ்சனா, முத்துராமன், மேஜர் நடித்து, எம்எஸ்வி இசையில் ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த படம். ஸ்ரீதர் இந்த படத்தை ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுத்தார். ஹிந்தியில் “துனியா க்யா ஜானே” என்ற பெயர். தமிழில் சுமாராக ஓடியது, ஆனால் ஹிந்தியில் படுபயங்கர flop. ஸ்ரீதரின் பணக்கஷ்டங்கள் இங்கிருந்துதான் ஆரம்பித்தது என்று சொல்வார்கள். (உரிமைக் குரலோடு எல்லா ப்ராப்ளமும் solved.) அருமையான பாட்டுக்கள்.

60களிலும் 70களிலும் விகடனில் தொடர்கதைகளாக வந்த மணியன் கதைகளை யாராவது படித்திருக்கிறீர்களா? அன்று மிகவும் விரும்பி படிக்கப்பட்ட கதைகள். முக்கால்வாசி கதைகளில் கதாநாயகி ஒரு ஆணுடன் மிகவும் “அபாயமான” அளவுக்கு நெருங்கி பழகுவாள், ஆனால் எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் அவள் “புனிதம்” மட்டும் கெடாது. இந்த படத்தை பார்க்கும்போது அவரது கதைகள் ஞாபகம் வந்தது. முத்துராமன் ரொம்ப ரொம்ப கெட்டவர். பல பெண்களை ஏமற்றியவர். பண மோசடி செய்பவர். பாரதிக்கு ஊற்றிக்கொடுப்பார், ராத்திரி 12 மணிக்கு அவர் நண்பர்கள் முன்னால் ஆடிக்காட்ட சொல்லுவார், படுக்கைக்கும் தூக்கிகொண்டு போவார். பாரதி அவர் என்ன சொன்னாலும் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார் (இந்த கட்டாயத்தைப் பற்றி பிறகு) ஆனால் ஒன்றும் செய்யாமல் பாரதியை வீட்டுக்கு அனுப்பிவிடுவார். முத்துராமன் புழங்கும் upper classஇன் values அப்படி! He is not just a crook, but he is an upper class, gentleman crook!

கதை இன்று விசித்திரமாக இருக்கிறது. பாரதியும் காஞ்சனாவும் கல்லூரி தோழிகள். முறைப்பையன் ஜெமினி வீட்டில் வளரும் பாரதி அவரை விரும்புகிறார். ஜெமினியின் அப்பா மேஜர் பாரதியை சுதந்திரமாக வளர்க்கிறார். காஞ்சனா முத்துராமனை விரும்பி அவருக்கு லவ் லெட்டர் எல்லாம் கொடுப்பார், ஆனால் அவர் மோசடி பேர்வழி என்று தெரிந்து விலகிவிடுவார். பிறகு ஜெமினியும் அவரும் காதலிப்பார்கள். பாரதி ஏமாற்றம் அடைந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளமாட்டார். கணவன் மனைவியன ஜெமினி காஞ்சனாவைக் கானும்போது பாரதிக்கு பொறாமையாக இருக்கும், அதனால் முத்துராமனுடன் டேட்டிங் போவார். முத்துராமன் காஞ்சனாவின் லவ் லெட்டர்களை வைத்துக்கொண்டு பாரதியை ப்ளாக்மெய்ல் செய்வார். தன்னுடன் டேட்டிங் வரவேன்டும் என்று வற்புறுத்துவார். த்யாகச்சுடர் பாரதியும் தன் மாமன் வீட்டு கௌரவம் பாழாகாமல் இருக்க முத்துராமன் சொன்னபடியெல்லாம் ஆடுவார். ராத்திரி வெகு நேரம் வெளித்தங்குவார், குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார், அவ்வப்போது அழுவார், கடைசியுல் முத்துராமனை கொன்றுவிட்டு வெள்ளைபுடவையில் ஜெயிலுக்கு போவார்.

லவ் லெட்டரால் குடும்ப கௌரவம் பாழாகிவிடும், ஆனால் கல்யாணம் ஆகாத பெண் குடித்துவிட்டு ராத்திரி கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடினால் பாழாகாது போலிருக்கிறது. விசித்திரமான கௌரவம். I think the director really tries to titilate the viewers by the Muthuraman-Bharathi relationship. “அவள்” படத்திலும் இப்படித்தான் தன்னை அறியாமலே குடி மயக்கத்தில் சோரம் போகும் காட்சி ஒன்றை வைத்திருப்பார். ஸ்ரீதர் 1960களின் hippies, free sex உலகத்தை புரிந்து கொள்ள செய்யும் முயற்சி!

இந்த படம் கலை ரீதியாக மிக நல்ல படம் என்று நினைப்பவர்கள் உண்டு. ஒரு பெண்ணின் மெல்லிய மன உணர்வுகளை அருமையாக சித்தரிக்கும் படம் என்று சொல்பவர்கள் உண்டு. அவர்களுக்கெல்லாம் மணியன் கதைகளும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்த வரை லாஜிக் இல்லாத முட்டாள்தனமான கதை.

இந்த கதையிலும் பாரதி நன்றாக நடித்திருப்பார். ஒரு வேளை அழகாக இருப்பதால் எனக்கு இப்படி தோன்றுகிறதோ என்னவோ? ஜெமினிக்கு சாம்பார் என்று பேர் வந்ததற்கு இந்த படமும் ஒரு காரணமாக இருக்க வேண்டும். அதுவும் சில பாட்டுகளுக்கு அவர் இடுப்பை வளைத்து கொடுக்கும் போஸ்கள் பெரும் கொடுமை. ஜெமினிக்கு இளம் கதாநாயகன் வேஷம் கொஞ்சம் பொருந்தவில்லை, வயதாகிவிட்டது.

கலர் படம் என்றால் எல்லா காட்சிகளிலும் அழுத்தமான கலர்கள் இருக்க வேண்டும் என்று நினைத்த காலம். எல்லா காட்சிகளும் அப்படித்தான்.

படம் எவ்வளவு மோசமாக எடுத்தாலும் ஸ்ரீதர் பாட்டுகளை அருமையாக தேர்ந்தெடுப்பார். அதுவும் எம்எஸ்வி ஸ்ரீதர் காம்பினேஷன் சோடை போவதே இல்லை. இந்தப் படமும் அப்படித்தான். பாட்டுக்கள் ஏ க்ளாஸ். கேட்க கேட்க அலுப்பதில்லை. படம் எவ்வளவு கடியாக இருந்தாலும் என்னைப் போன்ற பழைய பாட்டு கிறுக்குகள் இந்த படத்தை பார்த்தே தீருவார்கள். “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” பாட்டு ஒன்றே போதும். இது இல்லாவிட்டாலும் “மங்கையரில் மஹராணி” பாட்டுக்காக மட்டுமே பார்க்கலாம். இதற்கு மேல் “மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி” பாட்டு வேறு. “ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு” இந்த அளவுக்கு இல்லை என்றாலும் நல்ல பாட்டுதான். இந்தப் படம் எம்எஸ்வியின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்று. எஸ்பிபிக்கு முழு வாய்ப்பு கொடுத்த படம். எஸ்பிபியின் குரல் இன்னும் முழுமை அடையவில்லைதான், ஆனால் அவரது குரலில் ஒரு இளமை தெரிகிறது.

“உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” தமிழில் தலை சிறந்த பாட்டுகளில் ஒன்று. எஸ். ஜானகி, எம்எஸ்வி இருவருக்குமே ஒரு மகுடம். பாட்டின் வரிகளிலிருந்து கண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன். வாலி எழுதி இருந்தால் ஆச்சரியப்படமாட்டேன். அழகான பாரதி வேறு.

“மங்கையரில் மஹராணி” பாட்டும் “உன்னிடத்தில்” பாட்டுக்கு ஒரே ஒரு மாற்றுதான் கம்மி. எஸ்பிபியின் ஆரம்ப கால பாட்டுகளுக்கே ஒரு தனி இனிமை உண்டு. இந்த பாட்டும் அப்படித்தான். சுசீலா அருமையான ஜோடி. கண்ணதாசன் எழுதியது.

“மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி” ஒரு கலக்கலான பாட்டு. மெதுவாக “மலர் எது” என்று ஆரம்பித்து “கண்கள் தானென்று சொல்வேனடி” என்று அழுத்தமாக சொல்வது பிரமாதம். சுசீலா சுசீலாதான். இதுவும் கண்ணதாசன் எழுதியதாக இருக்கவேண்டும். இதில் இளையராஜா காம்போ ஆர்கன் வாசித்திருக்கிறாராம். இந்த பாட்டுக்கு எம்எஸ்வி இசை நடத்திய விதத்தையும், மெட்டையும் புகழ்ந்து எழுதி இருக்கிறார். எம்எஸ்வியின் மேல் அவருக்கு இருந்த மரியாதை இந்த பாட்டால் அதிகரித்தாக எழுதி இருக்கிறார்.

இந்த இரண்டு பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.

“ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு” நல்ல பாட்டுதான். இந்த மூன்று பாட்டுகளோடு ஒப்பிட்டால்தான் கொஞ்சம் குறைத்து மதிப்பிட வேண்டியிருக்கிறது. எஸ்பிபி, கண்ணதாசன்.

இதை தவிர இரண்டு பாட்டுகள் இருக்கின்றன. “எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை” எல்.ஆர். ஈஸ்வரி பாடியது. சுமாரான பாட்டு. “தேவியின் கோவில் பறவை” எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. முன்னால் கேட்டதும் இல்லை.

நான் மிகவும் மதிக்கும் சாரதாவின் மறுமொழியிலிருந்து நான் மிஸ் செய்து விட்ட ஒரு பாயின்ட்: யு.ராஜகோபாலின் அருமையான ஒளிப்பதிவு பற்றியும் சொல்லியிருக்கலாம். (வழக்கமாகவே ஸ்ரீதர் படங்களில் அவர்தான் முக்கிய கேமராமேன். அவர் ஒவ்வொரு ஆங்கிளும் செட் பண்ணும் அழகே தனி). குறிப்பாக ‘உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்’ பாடலின் போட் சீன் அருமை. அதுபோல், ‘மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி’ பாடலில், ஜெமினி கழற்றி வைத்திருக்கும் அவரது சன் கிளாஸ் வழியாக பாரதியைக்காட்டும் அழகு. அந்த போட் சீன் கொடைக்கானலில் எடுக்கப்பட்டதா என்று எங்கள் வீட்டில் பேசிக் கொண்டிருந்தோம்.

பாட்டுக்காகவும் பாரதிக்காகவும் பார்க்கலாம். 10க்கு 6.5 மார்க். பாட்டால்  B- grade.