தமிழ் தயாரிப்பாளர்கள்


போன பதிவு ஏவிஎம் செட்டியார் அளித்த ஒரு பழைய பேட்டி. செட்டியார் பற்றி நானும் ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன், எனக்கு தயாரிப்பாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. அதே நேரத்தில் நண்பர் சூர்யா தன் தளத்தில் சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி ஒரு அருமையான பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். சரி, தயாரிப்பாளர்களை பற்றி பொதுவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் தயாரிப்பாளர்களில் எஸ்.எஸ். வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், செட்டியார், தேவர் நான்கு பேரும் பல வருஷம் கொடி கட்டி பறந்தவர்கள்.

ஏவிஎம் செட்டியார்

ஏவிஎம் இத்தனை வருஷம் கழித்தும் நன்றாக இருப்பது பெரிய விஷயம். செட்டியார் நடுவில் ஒரு பத்து வருஷம் படமே வேண்டாம் என்று இருந்ததாகவும், அவர் இறந்த பிறகுதான் சரவணன் மீண்டும் முரட்டுக் காளை படத்துடன் அடுத்த இன்னிங்சை ஆரம்பித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கென்னவோ பெரிய செட்டியார் இருந்தபோதுதான் நல்ல படங்கள் வந்தன என்று தோன்றுகிறது. நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறுபதுகளின் முற்பாதி வரைக்கும் பல நல்ல படங்கள் வந்தன. சபாபதி, நாம் இருவர், ஓரிரவு, வாழ்க்கை, பராசக்தி, பெண், அந்த நாள், நானும் ஒரு பெண், அன்னை, மேஜர் சந்திரகாந்த் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சரவணன் வந்த பிறகு மசாலா படங்கள்தான் வருகின்றன.

எஸ்.எஸ். வாசன்

எஸ்.எஸ். வாசன் ஒரு பத்து வருஷம் கொடி கட்டி பறந்தார். மங்கம்மா சபதம், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் எல்லாம் பெரும் வெற்றி. நாற்பதுகளிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அவருக்கு அப்புறம் படம் எடுப்பதில் இண்டரஸ்ட் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரும்புத் திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு மாதிரி படங்கள் வந்தாலும், ஜெமினி ஃபில்ம்ஸ் அறுபதுகளிலேயே அமுங்கிவிட்டது.

டி.ஆர். சுந்தரம்

டி.ஆர். சுந்தரம் பெரிய ஆள். பாரதிதாசன், எம்ஜிஆர், கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் எல்லாரும் அவரிடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். மந்திரி குமாரி, திரும்பிப் பார், அலி பாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அறுபதுகளில் வல்லவன் சீரிஸ் – வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன் மாதிரி – படங்கள் மட்டுமே எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

தேவர்

இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தாலும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வட்டத்தில் name recognition இருந்த ஒரே தயாரிப்பாளர் தேவர்தான். தேவரின் மிருகப் படங்கள் எங்கள் வட்டத்தில் பெரிய ஹிட். புலியையும், சிங்கத்தையும், யானையையும் நாங்கள் வேட்டைக்காரன் மாதிரி ஏதாவது படத்தில் பார்த்தால்தான் உண்டு. (உயிர் காலேஜ் எல்லாம் போனதில்லை.)

தேவர் படங்கள் எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய காவியங்கள் இல்லை. அவருடைய ஆடியன்சுக்கு மன அளவில் ஒரு எட்டு வயதுதான் இருக்கும். எம்ஜிஆர், முருகன், மிருகங்கள் இவற்றை வைத்தே காலத்தை ஓட்டியவர். ஆனால் ஒரு நாளும் படம் பார்ப்பார்களை ஏமாற்றியதில்லை. அவர் கடை சமாசாரம் எப்படி இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. அது பிடிக்காதவர்கள் போக வேண்டாம்!

எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். எதுவும் எம்ஜிஆரின் சிறந்த படங்கள் லிஸ்டில் கூட வராது. வேட்டைக்காரன், நல்ல நேரம், தேர் திருவிழா, முகராசி இந்த மாதிரி படங்கள் நினைவு வருகின்றன. வேட்டைக்காரன், நல்ல நேரம் இரண்டும் பிரமாதமாக ஓடியன. இந்த நாலு படமும் தண்டம், இப்போது வேறு எதுவும் நினைவு வரவில்லை. எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். இவர் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

அவருக்கென்று ஒரு ஆஸ்தான டீம் இருந்தது. கே.வி. மகாதேவன், எம்.ஏ. திருமுகம், தூயவன், ஆரூர் தாஸ், நாகேஷ், மேஜர், அசோகன் இல்லாமல் அவர் சாதாரணமாக படம் எடுப்பதில்லை.

ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல், ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

அவருடைய படங்களில் தெய்வம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது. படம் நன்றாக இருக்கும் என்று இல்லை, தண்டம்தான். ஆனால் கோவில்களின் அந்த கால நிலையை ஒரு டாக்குமெண்டரி போல நன்றாக எடுத்திருப்பார்.

இவர்களைத் தவிரவும் பல தயாரிப்பாளர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். எம்ஜிஆர் புகழிலே கொஞ்சம் மங்கி தெரியும் பந்துலு, ஜூபிடர் சோமு, பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் பல வெற்றி படங்கள் எடுத்தாலும் தெலுங்கு கம்பெனியான விஜயா பிக்சர்ஸ் நாகி ரெட்டி, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், பி.எஸ். வீரப்பா, முரசொலி மாறன், ஸ்ரீதர், ஜி.என். வேலுமணி, ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர் படங்களை தயாரித்த கலாகேந்த்ரா, பாலாஜி, பிற்காலத்தில் ஜீவி, ஆர்.பி. சௌத்ரி, கமல், கோவைத் தம்பி, பிரகாஷ் ராஜ், என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர்களில் பலருக்கும் வேறு முக்கியமான முகங்கள் இருந்தன – எம்ஜிஆரை தயாரிப்பாளர் என்றா நினைவு வைத்துக் கொள்கிறோம்? அப்படி இல்லாதவர்கள் பலரும் நிலைத்து நிற்கவில்லை.

இன்றைக்கு இவர்களுக்கு சமமாக சொல்லக் கூடிய கோலிவுட் பாதுஷாக்கள் இருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

தேவரை பற்றி சாரதா இன்னும் விவரங்கள் தருகிறார்.

மேலும் சில படங்கள்: தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தொழிலாளி, கன்னித் தாய், தனிப் பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, காதல் வாகனம் ப்ளஸ் நீங்கள் சொன்ன படங்கள் நாலு. இவற்றில் சில மட்டும் 100 நாட்கள் என்ற எல்லைக்கோட்டைத் தொட்டன. பெரும்பாலானவை 50-ஐக்கூட கடக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழில் கண்ட ஒரே வெள்ளிவிழாப்படம் ஆட்டுக்கார அலமேலு மட்டும்தான். சில படங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் ஒரே மாதிரி இருக்கும். திருக்குறள் மாதிரி இரண்டு வரிக் கதைகளைத்தான் படமாக எடுப்பார். தேவர் படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கட்டின் பின்பக்கம் எழுதிவிடலாம் என்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு.

ஜெய்சங்கரை வைத்து கெட்டிக்காரன், நேர்வழி போன்ற குப்பைப் படங்களையும், அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற நல்ல படங்களையும் எடுத்தவர். ரவிச்சந்திரனை வைத்து மகராசி என்ற படத்தையும் எடுத்தார். சிவகுமாரை கதாநாயனாக வைத்து ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், (பழைய) ஸ்ரீகாந்தை நாயகனாகவும் பிரமீளாவை நாயகியாகவும் போட்டு கோமாதா என் குல மாதா ஆகிய வெற்றிப்படங்களை எடுத்தார். இடையிடையே ஏ.வி.எம்.ராஜனை வைத்து துணைவன், தெய்வம், திருவருள் என் பக்திப்படங்களின் பக்கமும் தலைநீட்டினார்.

ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தாய் வீடு மற்றும் கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை (எத்தனை தாய்கள்), ராம் லக்ஷ்மண் போன்றவை அவர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுகளால் தயாரிக்கப்பட்டவை. கடைசியாக ஆனந்த பாபுவை வைத்து தர்மம் என்ற படம் எடுக்கப்போக, படம் அட்டர் ஃப்ளாப். தேறவேயில்லை. தேவர் பிலிம்ஸ் அத்துடன் நொடித்துப்போனது. இதனிடையே வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை தலைதூக்க தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூடுவிழா கொண்டாடியது.

சின்னப்பா தேவர் யாரையும் எளிதில் நம்பி விடுவார். யாரும் அவரை சுலபமாக ஏமாற்றிவிடலாம். கே.வி.மகாதேவன் கூட வெறும் நாலு மெட்டுக்களை வைத்துக்கொண்டு அவருக்கு நாற்பது பாட்டுக்கள் போட்டுக்கொடுத்து விடுவார். தேவரின் நல்ல மனதுக்கு அவை பாப்புலராகிவிடும். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடியை கண்ணதாசன் தேவருக்கு அறிமுகப்படுத்த, தேவர் அவர்களுக்கு படங்களில் வாய்ப்புக்கொடுத்ததால், படங்களில் டைட்டில்களில் ‘கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்’ என்று போட்டு தங்கள் நன்றியை காணிக்கையாக்கினர்.

எனக்கு தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரிய ஹிட்கள் என்று நினைவு. என் impression டெண்டு கோட்டையில் இருந்த ரெஸ்பான்சை பார்த்து ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் சாரதா என்னை விட விஷயம் தெரிந்தவர். ஞாபகம் வராத எம்ஜியார் படங்களின் பேரை எடுத்து தந்த சாரதாவுக்கு நன்றி! எனக்கு அசோகன் அண்ணனாக வரும் படம் (தாய்க்கு தலை மகன்), அசோகன் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் படம் (தர்மம் தலை காக்கும்) என்றுதான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. எம்ஜிஆர் ஒரு படத்தில் பறந்து கூட போவார் என்று ஞாபகம். என்ன படமோ தெரியவில்லை.

சாரதா சொல்வது போல பாட்டுகள் – எம்ஜிஆர் படத்தில் கூட – பிரமாதமாக இருக்காது. சூர்யா சொல்வது போல மூன்று மாதத்தில் படம் எடுப்பதால் இருக்கலாம்.

ஞாபகம் வரும் இன்னும் சில படங்கள் – நீலமலை திருடன் (ரஞ்சன்), சொர்க்கம் நரகம், இளஞ்ஜோடிகள், தர்மத்தின் தலைவன். கோமாதா என் குல மாதா ஹிந்தியிலும் காய் அவுர் கௌரி என்று வந்தது.

தொகுக்க்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆரூர் தாஸ் தேவரை நினைவு கூர்கிறார்
பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம் பற்றி பதிவர் சூர்யா
தேவர் புத்தகம் பற்றி முகில், இதே புத்தகம் பற்றி பா. ராகவன்
தேவர் பற்றி முரளி கண்ணன்