டாப் டென் தமிழ் படங்கள்


தமிழ் பட லிஸ்டை வைத்து ஒரு பதிவு ஓட்டுகிறேன் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். லிஸ்ட் போட்டுவிட்டேன்.

தமிழில் நல்ல படங்கள் மிகக் குறைவு. நல்ல பொழுதுபோக்கு படங்கள் கூட மிக குறைவு. பொழுதுபோக்கு படம் மட்டுமே எடுத்த எம்ஜிஆரின் படங்களில் ஒரு ஆறேழுதான் நல்ல பொழுதுபோக்கு படம். ஜெய்ஷங்கருக்கு ஒன்றிரண்டு தேறினால் அதிகம். ரஜினிகாந்தின் எந்த படத்தை வேற்று மொழி நண்பர்களுக்கு பார்க்க சொல்லி சிபாரிசு செய்வீர்கள்? ஒரு அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, சீன, ஜப்பானிய, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, தெலுகு, கன்னட, பிஹாரி, வங்காள, மலையாள நண்பருக்கு என்ன தமிழ் படம் பார்க்க வேண்டியது என்று சொல்வீர்கள்?

உண்மையில் மொழி தெரியாதவர்களுக்கு என்ன படம் சிபாரிசு செய்யலாம் என்பதுதான் நல்ல படத்துக்கு இலக்கணம். அப்படி எனக்கு தேறுவது மிக குறைவே. (பொழுதுபோக்கு படங்களை சேர்த்தாலும்).

  1. எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – பிரமாண்டத்துக்காக.
  2. எஸ். பாலச்சந்தரின் அந்த நாள் – அற்புதமான திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம்.
  3. சிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் – சிறந்த நடிப்பு, இசை.
  4. சிவாஜி நடித்த நவராத்திரி – சிறந்த நடிப்பு.
  5. கே. பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த் – நல்ல கதை
  6. கே. பாலச்சந்தர், ரஜினிகாந்தின் தில்லுமுல்லு – அருமையான நகைச்சுவைப் படம். தேங்காய் கிழி கிழி என்று கிழித்துவிட்டார்.
  7. கே. பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் – ஒரு உண்மையான கதை, நல்ல நடிப்பு.
  8. மணிரத்னம், கமலின் நாயகன் – நல்ல திரைக்கதை, நடிப்பு, இசை.
  9. கமலின் மைக்கேல் மதன காமராஜன் – அருமையான நகைச்சுவைப் படம். கிரேசி மோகனுக்கு ஒரு ஜே!
  10. கமலின் தேவர் மகன் – நல்ல திரைக்கதை, நடிப்பு.

Honourable Mention என்று கொஞ்சம் தேறும்.

  1. எஸ்.எஸ். வாசனின் அபூர்வ சகோதரர்கள் – நல்ல மசாலா.
  2. கலைஞர், சிவாஜியின் பராசக்தி, மனோகரா – தமிழ் புரியாவிட்டால் இவற்றை பார்ப்பது கஷ்டம். நல்ல வசனங்கள், நடிப்பு.
  3. எம்ஜிஆரின் நாடோடி மன்னன் – நல்ல மசாலா
  4. சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் – மிகை நடிப்பின் சிறந்த பிரதிநிதி
  5. பானுமதியின் அன்னை – நல்ல நடிப்பு
  6. கே. பாலச்சந்தரின் பாமா விஜயம் – சிரிக்கலாம்.
  7. சோவின் முகமது பின் துக்ளக்- தமிழின் ஒரே சடையர்
  8. சிவாஜி நடித்த கெளரவம் – நல்ல நடிப்பு.
  9. மகேந்திரன், ரஜினிகாந்தின் முள்ளும் மலரும் – நல்ல கதை, நடிப்பு
  10. மணிரத்னம், ரஜினிகாந்தின் தளபதி – எனக்கு மகாபாரதப் பித்து அதிகம்.
  11. கமலின் பஞ்சதந்திரம் – சிரிக்கலாம்.

எனக்கு இப்போது நினைவு வராத படங்களையும் சேர்த்தால் என்ன ஒரு 25-30 நல்ல படம் தேறுமா? கிட்டத்தட்ட எண்பது வருஷமாக தமிழ் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆயிரம் படமாவது வந்திருக்கும். வருஷத்துக்கு ஒரு படமாவது தேறினால் கூட ஒரு என்பது படம் வந்திருக்க வேண்டாமா? நல்ல தமிழ் படங்கள் வருவது ஏன் இவ்வளவு அபூர்வமாக இருக்கிறது?

தொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
டாப் டென் உலக சினிமா
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்

விமர்சனங்கள்:
அந்த நாள், அந்த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது
அன்னை
சந்திரலேகா
கப்பலோட்டிய தமிழன்
மேஜர் சந்திரகாந்த்
மனோகரா, விகடன் விமர்சனம்
முகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்
நாடோடி மன்னன், விகடன் விமர்சனம்
பராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்

தமிழ் தயாரிப்பாளர்கள்


போன பதிவு ஏவிஎம் செட்டியார் அளித்த ஒரு பழைய பேட்டி. செட்டியார் பற்றி நானும் ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன், எனக்கு தயாரிப்பாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. அதே நேரத்தில் நண்பர் சூர்யா தன் தளத்தில் சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி ஒரு அருமையான பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். சரி, தயாரிப்பாளர்களை பற்றி பொதுவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் தயாரிப்பாளர்களில் எஸ்.எஸ். வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், செட்டியார், தேவர் நான்கு பேரும் பல வருஷம் கொடி கட்டி பறந்தவர்கள்.

ஏவிஎம் செட்டியார்

ஏவிஎம் இத்தனை வருஷம் கழித்தும் நன்றாக இருப்பது பெரிய விஷயம். செட்டியார் நடுவில் ஒரு பத்து வருஷம் படமே வேண்டாம் என்று இருந்ததாகவும், அவர் இறந்த பிறகுதான் சரவணன் மீண்டும் முரட்டுக் காளை படத்துடன் அடுத்த இன்னிங்சை ஆரம்பித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கென்னவோ பெரிய செட்டியார் இருந்தபோதுதான் நல்ல படங்கள் வந்தன என்று தோன்றுகிறது. நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறுபதுகளின் முற்பாதி வரைக்கும் பல நல்ல படங்கள் வந்தன. சபாபதி, நாம் இருவர், ஓரிரவு, வாழ்க்கை, பராசக்தி, பெண், அந்த நாள், நானும் ஒரு பெண், அன்னை, மேஜர் சந்திரகாந்த் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சரவணன் வந்த பிறகு மசாலா படங்கள்தான் வருகின்றன.

எஸ்.எஸ். வாசன்

எஸ்.எஸ். வாசன் ஒரு பத்து வருஷம் கொடி கட்டி பறந்தார். மங்கம்மா சபதம், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் எல்லாம் பெரும் வெற்றி. நாற்பதுகளிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அவருக்கு அப்புறம் படம் எடுப்பதில் இண்டரஸ்ட் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரும்புத் திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு மாதிரி படங்கள் வந்தாலும், ஜெமினி ஃபில்ம்ஸ் அறுபதுகளிலேயே அமுங்கிவிட்டது.

டி.ஆர். சுந்தரம்

டி.ஆர். சுந்தரம் பெரிய ஆள். பாரதிதாசன், எம்ஜிஆர், கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் எல்லாரும் அவரிடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். மந்திரி குமாரி, திரும்பிப் பார், அலி பாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அறுபதுகளில் வல்லவன் சீரிஸ் – வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன் மாதிரி – படங்கள் மட்டுமே எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

தேவர்

இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தாலும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வட்டத்தில் name recognition இருந்த ஒரே தயாரிப்பாளர் தேவர்தான். தேவரின் மிருகப் படங்கள் எங்கள் வட்டத்தில் பெரிய ஹிட். புலியையும், சிங்கத்தையும், யானையையும் நாங்கள் வேட்டைக்காரன் மாதிரி ஏதாவது படத்தில் பார்த்தால்தான் உண்டு. (உயிர் காலேஜ் எல்லாம் போனதில்லை.)

தேவர் படங்கள் எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய காவியங்கள் இல்லை. அவருடைய ஆடியன்சுக்கு மன அளவில் ஒரு எட்டு வயதுதான் இருக்கும். எம்ஜிஆர், முருகன், மிருகங்கள் இவற்றை வைத்தே காலத்தை ஓட்டியவர். ஆனால் ஒரு நாளும் படம் பார்ப்பார்களை ஏமாற்றியதில்லை. அவர் கடை சமாசாரம் எப்படி இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. அது பிடிக்காதவர்கள் போக வேண்டாம்!

எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். எதுவும் எம்ஜிஆரின் சிறந்த படங்கள் லிஸ்டில் கூட வராது. வேட்டைக்காரன், நல்ல நேரம், தேர் திருவிழா, முகராசி இந்த மாதிரி படங்கள் நினைவு வருகின்றன. வேட்டைக்காரன், நல்ல நேரம் இரண்டும் பிரமாதமாக ஓடியன. இந்த நாலு படமும் தண்டம், இப்போது வேறு எதுவும் நினைவு வரவில்லை. எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். இவர் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

அவருக்கென்று ஒரு ஆஸ்தான டீம் இருந்தது. கே.வி. மகாதேவன், எம்.ஏ. திருமுகம், தூயவன், ஆரூர் தாஸ், நாகேஷ், மேஜர், அசோகன் இல்லாமல் அவர் சாதாரணமாக படம் எடுப்பதில்லை.

ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல், ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

அவருடைய படங்களில் தெய்வம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது. படம் நன்றாக இருக்கும் என்று இல்லை, தண்டம்தான். ஆனால் கோவில்களின் அந்த கால நிலையை ஒரு டாக்குமெண்டரி போல நன்றாக எடுத்திருப்பார்.

இவர்களைத் தவிரவும் பல தயாரிப்பாளர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். எம்ஜிஆர் புகழிலே கொஞ்சம் மங்கி தெரியும் பந்துலு, ஜூபிடர் சோமு, பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் பல வெற்றி படங்கள் எடுத்தாலும் தெலுங்கு கம்பெனியான விஜயா பிக்சர்ஸ் நாகி ரெட்டி, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், பி.எஸ். வீரப்பா, முரசொலி மாறன், ஸ்ரீதர், ஜி.என். வேலுமணி, ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர் படங்களை தயாரித்த கலாகேந்த்ரா, பாலாஜி, பிற்காலத்தில் ஜீவி, ஆர்.பி. சௌத்ரி, கமல், கோவைத் தம்பி, பிரகாஷ் ராஜ், என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர்களில் பலருக்கும் வேறு முக்கியமான முகங்கள் இருந்தன – எம்ஜிஆரை தயாரிப்பாளர் என்றா நினைவு வைத்துக் கொள்கிறோம்? அப்படி இல்லாதவர்கள் பலரும் நிலைத்து நிற்கவில்லை.

இன்றைக்கு இவர்களுக்கு சமமாக சொல்லக் கூடிய கோலிவுட் பாதுஷாக்கள் இருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

தேவரை பற்றி சாரதா இன்னும் விவரங்கள் தருகிறார்.

மேலும் சில படங்கள்: தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தொழிலாளி, கன்னித் தாய், தனிப் பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, காதல் வாகனம் ப்ளஸ் நீங்கள் சொன்ன படங்கள் நாலு. இவற்றில் சில மட்டும் 100 நாட்கள் என்ற எல்லைக்கோட்டைத் தொட்டன. பெரும்பாலானவை 50-ஐக்கூட கடக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழில் கண்ட ஒரே வெள்ளிவிழாப்படம் ஆட்டுக்கார அலமேலு மட்டும்தான். சில படங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் ஒரே மாதிரி இருக்கும். திருக்குறள் மாதிரி இரண்டு வரிக் கதைகளைத்தான் படமாக எடுப்பார். தேவர் படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கட்டின் பின்பக்கம் எழுதிவிடலாம் என்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு.

ஜெய்சங்கரை வைத்து கெட்டிக்காரன், நேர்வழி போன்ற குப்பைப் படங்களையும், அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற நல்ல படங்களையும் எடுத்தவர். ரவிச்சந்திரனை வைத்து மகராசி என்ற படத்தையும் எடுத்தார். சிவகுமாரை கதாநாயனாக வைத்து ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், (பழைய) ஸ்ரீகாந்தை நாயகனாகவும் பிரமீளாவை நாயகியாகவும் போட்டு கோமாதா என் குல மாதா ஆகிய வெற்றிப்படங்களை எடுத்தார். இடையிடையே ஏ.வி.எம்.ராஜனை வைத்து துணைவன், தெய்வம், திருவருள் என் பக்திப்படங்களின் பக்கமும் தலைநீட்டினார்.

ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தாய் வீடு மற்றும் கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை (எத்தனை தாய்கள்), ராம் லக்ஷ்மண் போன்றவை அவர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுகளால் தயாரிக்கப்பட்டவை. கடைசியாக ஆனந்த பாபுவை வைத்து தர்மம் என்ற படம் எடுக்கப்போக, படம் அட்டர் ஃப்ளாப். தேறவேயில்லை. தேவர் பிலிம்ஸ் அத்துடன் நொடித்துப்போனது. இதனிடையே வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை தலைதூக்க தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூடுவிழா கொண்டாடியது.

சின்னப்பா தேவர் யாரையும் எளிதில் நம்பி விடுவார். யாரும் அவரை சுலபமாக ஏமாற்றிவிடலாம். கே.வி.மகாதேவன் கூட வெறும் நாலு மெட்டுக்களை வைத்துக்கொண்டு அவருக்கு நாற்பது பாட்டுக்கள் போட்டுக்கொடுத்து விடுவார். தேவரின் நல்ல மனதுக்கு அவை பாப்புலராகிவிடும். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடியை கண்ணதாசன் தேவருக்கு அறிமுகப்படுத்த, தேவர் அவர்களுக்கு படங்களில் வாய்ப்புக்கொடுத்ததால், படங்களில் டைட்டில்களில் ‘கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்’ என்று போட்டு தங்கள் நன்றியை காணிக்கையாக்கினர்.

எனக்கு தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரிய ஹிட்கள் என்று நினைவு. என் impression டெண்டு கோட்டையில் இருந்த ரெஸ்பான்சை பார்த்து ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் சாரதா என்னை விட விஷயம் தெரிந்தவர். ஞாபகம் வராத எம்ஜியார் படங்களின் பேரை எடுத்து தந்த சாரதாவுக்கு நன்றி! எனக்கு அசோகன் அண்ணனாக வரும் படம் (தாய்க்கு தலை மகன்), அசோகன் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் படம் (தர்மம் தலை காக்கும்) என்றுதான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. எம்ஜிஆர் ஒரு படத்தில் பறந்து கூட போவார் என்று ஞாபகம். என்ன படமோ தெரியவில்லை.

சாரதா சொல்வது போல பாட்டுகள் – எம்ஜிஆர் படத்தில் கூட – பிரமாதமாக இருக்காது. சூர்யா சொல்வது போல மூன்று மாதத்தில் படம் எடுப்பதால் இருக்கலாம்.

ஞாபகம் வரும் இன்னும் சில படங்கள் – நீலமலை திருடன் (ரஞ்சன்), சொர்க்கம் நரகம், இளஞ்ஜோடிகள், தர்மத்தின் தலைவன். கோமாதா என் குல மாதா ஹிந்தியிலும் காய் அவுர் கௌரி என்று வந்தது.

தொகுக்க்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆரூர் தாஸ் தேவரை நினைவு கூர்கிறார்
பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம் பற்றி பதிவர் சூர்யா
தேவர் புத்தகம் பற்றி முகில், இதே புத்தகம் பற்றி பா. ராகவன்
தேவர் பற்றி முரளி கண்ணன்

சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்


கணையாழி இன்னும் வருகிறதா என்று தெரியாது. ஆனால் சுஜாதா எழுதிய “கணையாழியின் கடைசி பக்கங்கள்’ இந்த காலத்து ப்ளாக்களின் முன்னோடி. சுருக்கமாக (எப்பவுமே வார்த்தைகளை வீணடிக்க மாட்டார்), சுவாரசியமாக எழுதப்பட்டவை. கணையாழி களஞ்சியம் என்ற தொகுப்பில் சில கடைசி பக்கங்களை படித்தேன். ஒன்று சினிமா பற்றியது.

இதை எழுதும்போது சுஜாதா டெல்லியில் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் பழைய படங்கள்தான் டெல்லிக்கு வரும்போல. இதை முழுவதுமாக இங்கே தரப்போவதில்லை. சில பகுதிகள் மட்டும்.

சுஜாதா நல்லபடியாக சொன்ன படங்கள் இவை.

அன்னை – பானுமதியின் நடிப்பை சிலாகித்திருக்கிறார். சில சமயங்களில் கண்ணீர் வந்ததாம். ஆனால் கூட இருக்கும் எல்லாரும், குறிப்பாக இளம் நடிகர்கள் (பெயர் குறிப்பிடவில்லை, ஹரிநாத் ராஜாவும் சச்சுவும் என்று நினைக்கிறேன்) சொதப்பிவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். பானுமதியை தவிர எனக்கு கண்ணில் தெரிந்த நடிகர்கள் ரங்காராவும் (பரவாயில்லை), ஸௌகாரும் (ஓவர் ஆக்டிங்) மட்டும்தான். இவர் கண்ணில் எல்லாரும் பட்டிருக்கிறார்கள்.

பாலச்சந்தரின் அந்த நாள், இது நிஜமா – அந்த நாள் பற்றி சாரதாவின் கருத்துகள் இங்கே, ராஜ்ராஜின் கருத்துகள் இங்கே, எனது கருத்துகள் இங்கே. இது நிஜமா கல்யாணராமனின் inspiration என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பாதை தெரியுது பார், உன்னை போல் ஒருவன் – நான் இரண்டையும் பார்த்ததில்லை. இதை எல்லாம் போட்டிருக்கக்கூடாதா?

நாலு வேலி நிலம் – இது படமாக வந்ததே தெரியாது. தி. ஜானகிராமனின் கதை. பாட்டுகள் இதை கெடுக்கின்றன என்று சொல்லி இருக்கிறார்.

குமார ராஜா – சில பகுதிகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி இருக்கிறார். எனக்கு தெரிந்த ஒரே விஷயம் சந்திரபாபு பாடிய “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” பாட்டு மட்டும்தான். பார்த்ததில்லை.

அவருக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பிடிக்கவில்லை. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார். நான் பார்த்து பல வருஷம் இருக்கும், பார்த்த போது படம் பிடித்துத்தான் இருந்தது.

வாலி மீது பாய்ந்திருக்கிறார். கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார். வாலி கேட்டால் கண்ணதாசனை காப்பி அடிப்பதில் எனக்கு பெருமைதான் என்று சொல்லி இருப்பார்.

சிவாஜி மீது ஏகமாக பாய்ந்திருக்கிறார். verbatim ஆக – “இவர் முக்கால் வாசிப் படங்களில் கேவிக் கேவி அழுகிறார். பின்னால் தாடி வளர்க்கிறார். அல்லது கை கால் கண் பார்வை ஏதாவது ஒன்று இழக்கிறார். இப்படி இல்லாத படங்கள் மிக சிலவே!…”

ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.

கே. பாலச்சந்தரை பற்றி குறிப்பிடவில்லை. அதனால் அனேகமாக இது அறுபதுகளின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது என் யூகம்தான், எழுதப்பட்ட தேதி புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. அப்பவே சிவாஜியை பற்றி இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்களா?

ராஜ வீழ்ச்சி


அன்னை” விமர்சனம் எழுதியபோது கதாநாயகன் அழகாய் இருந்தார் (நல்ல உயரமும் கூட), யாரென்று தெரியவில்லை என்று எழுதி இருந்தேன். அவரை ஞாபகம் இல்லாவிட்டாலும் “அழகிய மிதிலை நகரினிலே” பாட்டு ஞாபகம் இருக்கும். அவரை பற்றி இப்போது திரு ராஜநாயகம் எழுதும் ப்ளாகில் ஒரு குறிப்பு பார்த்தேன். சோகம்தான்.

அவர் பெயர் ஹரிநாத் ராஜாவாம். பேரிலிருந்தும், அவரது வசன உச்சரிப்பிலிருந்தும் தெலுகுக்காரர் என்று நினைக்கிறேன். சுமைதாங்கி, சரஸ்வதி சபதம், எங்கிருந்தோ வந்தாள் படங்களிலும் நடித்திருக்கிறாராம். கஷ்டம்தான்.

அன்னை (Annai)


பானுமதியின் மாஸ்டர்பீஸ். அவருக்காகவே எழுதப்பட்ட திரைக்கதையில் அவர் பிய்த்து உதறி இருக்கிறார். அவருக்கு இந்த படத்துக்கு தேசிய அளவில் சிறந்த நடிகை விருது கிடைத்தது. இதற்கு பிறகும் அவர் இரண்டு சிறந்த நடிகை விருதுகளை பெற்றிருக்கிறார்

1962இல் வந்த படம். வழக்கம் போல டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன். அடையாளம் தெரிந்தது ஸௌகார், ரங்காராவ், முத்தையா (வேறொரு படத்தில் இவர் யாரென்று சொன்ன சாரதாவுக்கு நன்றி), சச்சு, சந்திரபாபு. ஏவிஎம் படம். இசை சுதர்சனம். இயக்கம் ஏவிஎம்மின் ஆஸ்தான இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சுவா? பஞ்சு. அனேகமாக தெலுங்கிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். நாயகன் பேர் ஹரிநாத் ராஜா. தெலுங்கு நடிகர் என்று நினைக்கிறேன், யாரோ தெரியவில்லை. (பானுமதியின் மகனாக நடிக்க முதலில் ஜெய்ஷங்கரைத்தான் மேக்கப் டெஸ்ட் செய்து பார்த்தார்களாம். அவருக்கு சிறிய கண்கள் என்று அவரை நிராகரித்துவிட்டார்களாம்.)

ஒரு வங்காள மொழி நாடகம்தான் மூலக்கதை. ஹிந்தியில் மாய ம்ருகா என்று படமாக எடுக்கப்பட்டது. ஏவிஎம் செட்டியார் பார்த்தது நாடகமா இல்லை ஹிந்தி படமா என்று தெரியாது. ஆனால் இதை திரைக்கதையாகும் முயற்சியில் பானுமதிக்கும் பங்கு உண்டு என்று கேள்வி. பானுமதிக்கு மூலக்கதையில் வந்த பாத்திரம் கொஞ்சம் அசடாக இருக்கிறார் என்று தோன்றியதாம். அதனால் அவர் பாத்திரத்தை கொஞ்சம் மாற்றினாராம்.

தமிழ் படங்களில் சாதாரணமாக நல்லவர்களில் ஒரு குறையும் இருக்காது. கெட்டவர்களோ வடிகட்டின கெட்டவர்கள் – மருந்துக்கு கூட ஒரு நல்ல குணம் இருக்காது. இந்த படம் ஒரு அதிசயமான விதிவிலக்கு. ஒரு குறை உள்ள பாத்திரம், அதுவும் பெண் பாத்திரம்தான் கதாநாயகி. பானுமதி நாம் பார்க்கக்கூடிய ஒரு பாத்திரம். அவரது இன்செக்யுரிடியினால் அவர் செய்யும் தவறுகள் ரியலிஸ்டிக்காக சித்தரிக்கப்படுகின்றன. அவருக்கு அந்தஸ்து முக்கியம். ஆனால் எல்லா படங்களிலும் வருவது போல அவர் அந்தஸ்துக்காக வாழும் ஒரு கார்ட்டூன் காரக்டர் அல்லர். அதனால்தான் கதையும், அதனால் படமும் நன்றாக இருக்கிறது.

நல்ல முடிச்சு உள்ள கதை. பணக்கார குடும்பத்தில் பிறந்த பானுமதி, அவரது தங்கை ஸௌகார். ஸௌகார் ஏழை முத்தையாவை கல்யாணம் செய்துகொள்வதால் சிரமப்படுகிறார். குழந்தை இல்லாத தன் அக்காவுக்கு தன் குழ்ந்தையை கொடுக்கிறார். பதில் உதவி என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அக்காவிடம் பண உதவி பெற்றுக் கொண்டு வெளி நாடு போய்விடுகிறார். பானுமதி பையனை உயிருக்கு உயிராக வளர்க்கிறார். அடி மனதில் எப்போதாவது பையன் தன்னை பெரியம்மா என்று சொல்லிவிடுவானோ என்ற பயம் இருக்கிறது. இருபது வருஷம் கழித்து ஸௌகாரும் முத்தையாவும் ஏழையாகவே திரும்பிவரும்போது, தங்கை மேல் உள்ள பாசத்தை பையன் தன் நிஜ அம்மாவுடன் போய்விடுவானோ என்ற பயம் வென்றுவிடுகிறது. மகனும் தங்கையும் சந்திக்கக்கூடாது என்று முயற்சி செய்கிறார். தற்செயலாக அவர்கள் சந்தித்துவிட, பானுமதியின் பயம் அதிகரிக்கிறது. முத்தையா இறந்துவிட, ஸௌகார் அழுதுகொண்டே இருக்க, பையனுக்கு உண்மை தெரிந்து பெரியம்மா என்றே கூப்பிட்டுவிடுகிறான். வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறான். கடைசியில் பானுமதி ஸௌகாரிடம் இவன் நம் பிள்ளை என்று சொல்ல, சுபம்!

இது பானுமதியின் படம். மற்ற எல்லாரும் பானுமதிக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கத்தான். ரங்காராவ் நன்றாக நடித்திருக்கிறார். பானுமதி பல காட்சிகளில் கலக்குகிறார். குறிப்பாக தன் மகன் அடிபட்டு படுத்திருக்கும்போது சரக் சரக் என்று சத்தத்தோடு நடந்து வரும் நர்சை ஒரு அடி போடும் காட்சி பிரமாதம். ஸ்லீவ்லெஸ் ரவிக்கையோடு வரும் தன் prospective மருமகளிடம் “அவசரமா வந்ததால ரவிக்கை போடாம வந்துட்டா போலிருக்கு” என்று சொல்லும் இடம் அபாரம். தங்கையை நடத்தும் விதம் தவறு என்று தெரிந்தும் ரங்காராவிடம் இந்த ஒரு விஷயத்தை விட்டுடுங்க என்று சொல்லும் இடம், தங்கையை கண்டு கண் கலங்கும் இடம், எல்லாரும் என்னைத்தான் சொல்வீங்க என்று புலம்புவது – சும்மா புகுந்து விளையாடிவிட்டார்.

மிச்ச எல்லாரும் டம்மிதான். ஆனால் ஹீரோ பார்க்க நன்றாக இருக்கிறார்.

படம் முக்கால்வாசி முடிந்த பிறகுதான் ஒரே வீட்டில் வசிக்கும், தன்னை ஒரு தலையாக காதலிக்கும் சந்திரபாபுவை பார்த்து சச்சு அண்ணா என்று சொல்கிறார். அது வரைக்கும் எப்படி கூப்பிட்டார் என்று தெரியவில்லை. பஞ்சதந்திரம் படத்தில் தேவயானி சிம்ரன் சந்தேகப்பட்டு திட்டிவிட்டு போனதும் கமலை பார்த்து “ராமண்ணா ராமண்ணா” என்பார். கமல் “கரெக்டா அவ போனப்புறம் சொல்லு!” என்பார். அதுதான் ஞாபகம் வந்தது!

பாட்டுகள் எழுதி இருப்பது கண்ணதாசன். சந்திரபாபு பாடும் “புத்தி உள்ள மனிதரெல்லாம்”, பி.பி.எஸ்., சுசீலா பாடும் “அழகிய மிதிலை நகரினிலே”, சுசீலா பாடும் “பக் பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா”, பானுமதியே பாடும் “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று” எல்லாமே நல்ல பாட்டுகள். எனக்கு எப்போதுமே சந்திரபாபு பாட்டுக்கள் என்றால் ஒரு மயக்கம் உண்டு. இதில் அவர் கலக்கிவிடுவார். “அழகிய மிதிலை நகரினிலே” பாட்டில் “பருவத்து பெண்கள் தனித்திருந்தால்” என்று ஆரம்பித்து, “ஆஹா, ஓஹோ” என்று பி.பி.எஸ். பாடுவதும், “ம்ஹ்ம்ம்” என்று சுசீலா முறைப்பதும் அருமை! “பக்கும் பக்கும் மாடப்புறா” பாட்டுக்கு சந்திரபாபு என்ன ஜோராக டான்ஸ் ஆடுகிறார்! பானுமதியின் குரலில் கொஞ்சம் தெலுங்கு வாடை உண்டு. அது அவரது குரலுக்கு ஒரு special charmஐ கொடுக்கிறது.

“அழகிய மிதிலை நகரினிலே”, “புத்தி உள்ள மனிதரெல்லாம்” பாட்டுகளை இங்கே கேட்கலாம்.

பானுமதிக்காக பாருங்கள். 10க்கு 7 மார்க். B grade.

இந்த வாரம் (Week of September 22)


தவறாமல் ஒரு சுமார் MGR படம், வர வர ஒரு பாடாவதி சிவாஜி படம் – இது மினிமம் காரண்டி. இது போக என்ன ஃபார்முலா வைத்திருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. எனக்கு (Bags) வெறுப்பு ஏற்ற வேண்டும் என்றே, ஏன் சிவாஜி ரசிகர்களுக்குக் கூட வெறுப்பு ஏற்ற வேண்டுமென்று திட்டம் போட்டு படம் போடுகிறார்கள் போலும்.

திங்கள் – சிரஞ்சீவி – சிவாஜி நடிததது. பார்த்தாலே பயஙகர தோற்றம். நான் இது வரை பார்த்ததில்லை

செவ்வாய் – மேஜர் சந்திரகாந்த் (பார்த்ததில்லை) நல்ல படம் போல் தெரிகிறது

புதன் – அன்னை (பார்த்ததில்லை)

வியாழன் – வந்தாளே மகராசி (பார்த்ததில்லை)

வெள்ளி – அரசிளங்குமரி – MGR நடித்தது. சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். ”சின்னப் பயலே, சின்னப் பயலே, சேதி கேளடா” என்ற பாடல் ஹிட்.

இன்னும் சில விவரங்கள்:

சிரஞ்சீவி 1984இல் வந்திருக்கிறது. சிவாஜியின் post-Thirisoolam, தொப்பை phase. ஸ்ரீப்ரியா ஹீரோயின். நானும் பக்ஸும் காலேஜில் படித்துக்கொண்டிருந்தோம். காலேஜில் எல்லா குப்பை படமும் பார்ப்போம், எங்களுக்கு வந்ததே தெரியவில்லை என்றால் படம் ஓடி இருக்காது.

மேஜர் சந்திரகாந்த்: நல்ல படம். இந்த நாடகம், படத்தில் நடித்துத்தான் மேஜர் சுந்தரராஜனுக்கு மேஜர் என்ற அடைமொழி வந்தது. பாலச்சந்தரின் நாடகம் படமாக்கப்பட்டது. அவரே இயக்கியதா என்று தெரியவில்லை. உடன், முத்துராமன், ஜெயலலிதா, நாகேஷ், ஏ.வி.எம். ராஜன் நடித்திருக்கிறார்கள். “நேற்று நீ சின்ன பாப்பா”, “நானே பனி நிலவு”, “ஒரு நாள் யாரோ”, “கல்யாண சாப்பாடு போடவா” பாட்டுக்கள். “ஒரு நாள் யாரோ” படமாக்கப்பட்ட விதம் எனக்கு பிடிக்கும்.

அன்னை: பானுமதி. “அழகிய மிதிலை நகரினிலே”, “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று”, “பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா” என்ற நல்ல பாட்டுகளும், சந்திரபாபு பாடிய “புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை” என்ற ஒரு சூப்பர் பாட்டும் உண்டு. தாய்க்குல படம்.

வந்தாளே மஹராஸி: ஜெய், ஜெ நடித்து, கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். கேள்விப்பட்டதில்லை. ஆனால் கே.எஸ்.ஜி. எப்போதும் குடும்பப் படம் எடுப்பவர்.