பித்து பிடிக்க வைத்த “முத்தான படங்கள்”


சன் டிவியின் முத்தான படங்கள் – இல்லை, சொத்தையான 3 படங்கள்

1. தேன் கிண்ணம். இது தேன் கிண்ணம் இல்லை, விளக்கெண்ணெய் கிண்ணம். பாதிக்கு மேல் என்னாலேயே தாங்கமுடியவில்லை. ஆனால் அதை பாதி பார்த்த அனுபவம்தான் அடுத்த இரண்டு படங்களை முழுவதாக சகித்துக் கொள்ள வைத்தது.

2. நாலும் தெரிந்தவன். இயக்குனருக்கு நாலு வேண்டாம், ஒன்றாவது தெரிந்திருக்கலாம்.

3. வந்தாளே மகராசி. எனக்கு மோசமான ராசி!

வந்தாளே மகராசி (Vanthale Maharasi)



சன் டிவிக்காரர்கள் எமலோகத்தில் சித்ரகுப்தன் டிபார்ட்மென்டில் ஏதாவது வேலை காலி இருந்தால் அப்ளை செய்யலாம். பல புது முறையான சித்திரவதைகளை கண்டுபிடிக்கிறார்கள். அவற்றை டெஸ்டும் செய்து பார்க்கிறார்கள். எங்கிருந்து இந்த மாதிரி பாடாவதி படங்களை பிடிக்கிறார்கள்? இப்படி ஒரு படம் வந்தது இவர்களுக்கு எப்படி தெரிந்தது? ஒரு வேளை யாராவது ஒரு அதிகாரி சின்ன வயதில் பார்த்துவிட்டு யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தில் இதையெல்லாம் ஷெட்யூல் செய்கிறாரா? இல்லை என்னை பிடிக்காத யாரோ சன் டிவியில் வேலை செய்கிறார்களா? யப்பா சாமி, கொஞ்சம் கருணை காட்டப்பா!

1973இல் வந்திருக்கிறது. வந்த சுவடு தெரியாமல் தியேட்டரை விட்டு ஓடியிருக்கும். ஜெய்ஷங்கர், ஜெயலலிதா, சோ, புஷ்பலதா, எம்.என். ராஜம், சி.கே. சரஸ்வதி, வி.எஸ். ராகவன், டி.கே.பகவதி, வி. கோபாலகிருஷ்ணன், கே.டி.சந்தானம், “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” வீராசாமி, காகா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராசன் நடிப்பு. ஷங்கர் கணேஷ் இசை. வாலி பாடல்கள். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம். ஜெக்கு இரட்டை வேஷம்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கற்பகம், கை கொடுத்த தெய்வம், பணமா பாசமா மாதிரி கொஞ்சம் மெலோட்ராமா உள்ள குடும்பப் படங்களை எடுத்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் கே.எஸ்.ஜி., பாலச்சந்தர் இருவரையும் ஏறக்குறைய ஒரே லெவலில் பார்த்தார்கள். இந்த மாதிரி படம் எடுத்து அவர் தன் பெயரை கெடுத்துக்கொண்டிருக்க வேண்டாம்.

ஜெய் ஒரு டாக்டர். அவரது பக்கத்து வீட்டு அம்மாவான எம்.என். ராஜம், தன் கணவர் வி.எஸ்.ராகவன், மூத்த தாரத்து மகள் (விதவை)புஷ்பலதா, தன் தம்பி சோ, தனக்கு தற்செயலாக திருட்டு பட்டம் வாங்கிக் கொடுத்த அசட்டு கிராமத்துப் பெண்+சோவின் மனைவி ஜெ, எல்லாரையும் கொடுமைப்படுத்துகிறார். பட்டணத்து துணிச்சல்காரி ஜெ ஆள் மாறாட்டம் செய்து அவரது கொட்டத்தை அடக்குகிறார்.

ஒரு பாட்டும் உருப்படியில்லை. ஜெவே வேறு ஒரு பாட்டு பாடியிருக்கிறாராம்.

படத்தில் ஏதாவது ஒரு நல்ல விஷயமாவது சொல்லவேண்டும் என்று ஆசை. அப்படி எதுவும் இல்லாததால், இரண்டு மோசமில்லாத விஷயங்கள்:
1. கிராமத்து பெண்ணாக ஜெ இழுத்து இழுத்து பேசுவது வித்தியாசமாக இருக்கிறது.
2. சோ ஜெவை முதல் இரவில் ஒரு பாட்டு பாடும்படி கேட்கிறார். ஜெ பாடுவது “மம்மி மம்மி மாடர்ன் ப்ரெட்” என்ற விளம்பர ஜிங்கிள். அதற்கு சோ வேறு அப்பப்போ “போஷாக்கானது, சத்து நிறைந்தது” என்று கமெண்டரி கொடுக்கிறார். கடைசியில் இரண்டு ஜெவில் எது தன் மனைவி என்று அடையாளம் தெரியாமல் சோ திணறும்போது, ஜெ “மம்மி மம்மி” என்ற தன் குடும்பப் பாட்டை பாடி சோவுடன் சேர்ந்து கொள்கிறார்.

சோவுக்கு ஜெ ஜோடி அபூர்வமாய் இருக்கிறது. இருவரும் இப்போதும் நல்ல நண்பர்கள் என்று கேள்வி.

துட்டு கொடுத்தால் கூட பார்க்காதீர்கள். ஓடி விடுங்கள். 10க்கு 2 மார்க். F grade.

இந்த வாரம் (Week of September 22)


தவறாமல் ஒரு சுமார் MGR படம், வர வர ஒரு பாடாவதி சிவாஜி படம் – இது மினிமம் காரண்டி. இது போக என்ன ஃபார்முலா வைத்திருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. எனக்கு (Bags) வெறுப்பு ஏற்ற வேண்டும் என்றே, ஏன் சிவாஜி ரசிகர்களுக்குக் கூட வெறுப்பு ஏற்ற வேண்டுமென்று திட்டம் போட்டு படம் போடுகிறார்கள் போலும்.

திங்கள் – சிரஞ்சீவி – சிவாஜி நடிததது. பார்த்தாலே பயஙகர தோற்றம். நான் இது வரை பார்த்ததில்லை

செவ்வாய் – மேஜர் சந்திரகாந்த் (பார்த்ததில்லை) நல்ல படம் போல் தெரிகிறது

புதன் – அன்னை (பார்த்ததில்லை)

வியாழன் – வந்தாளே மகராசி (பார்த்ததில்லை)

வெள்ளி – அரசிளங்குமரி – MGR நடித்தது. சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். ”சின்னப் பயலே, சின்னப் பயலே, சேதி கேளடா” என்ற பாடல் ஹிட்.

இன்னும் சில விவரங்கள்:

சிரஞ்சீவி 1984இல் வந்திருக்கிறது. சிவாஜியின் post-Thirisoolam, தொப்பை phase. ஸ்ரீப்ரியா ஹீரோயின். நானும் பக்ஸும் காலேஜில் படித்துக்கொண்டிருந்தோம். காலேஜில் எல்லா குப்பை படமும் பார்ப்போம், எங்களுக்கு வந்ததே தெரியவில்லை என்றால் படம் ஓடி இருக்காது.

மேஜர் சந்திரகாந்த்: நல்ல படம். இந்த நாடகம், படத்தில் நடித்துத்தான் மேஜர் சுந்தரராஜனுக்கு மேஜர் என்ற அடைமொழி வந்தது. பாலச்சந்தரின் நாடகம் படமாக்கப்பட்டது. அவரே இயக்கியதா என்று தெரியவில்லை. உடன், முத்துராமன், ஜெயலலிதா, நாகேஷ், ஏ.வி.எம். ராஜன் நடித்திருக்கிறார்கள். “நேற்று நீ சின்ன பாப்பா”, “நானே பனி நிலவு”, “ஒரு நாள் யாரோ”, “கல்யாண சாப்பாடு போடவா” பாட்டுக்கள். “ஒரு நாள் யாரோ” படமாக்கப்பட்ட விதம் எனக்கு பிடிக்கும்.

அன்னை: பானுமதி. “அழகிய மிதிலை நகரினிலே”, “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று”, “பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா” என்ற நல்ல பாட்டுகளும், சந்திரபாபு பாடிய “புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை” என்ற ஒரு சூப்பர் பாட்டும் உண்டு. தாய்க்குல படம்.

வந்தாளே மஹராஸி: ஜெய், ஜெ நடித்து, கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். கேள்விப்பட்டதில்லை. ஆனால் கே.எஸ்.ஜி. எப்போதும் குடும்பப் படம் எடுப்பவர்.