குரு பார்வை II – ஒரு அலசல்


குரு திரைப்படத்துக்கு ராஜனின் தொடரும் விமர்சனம். கிண்டலும் கேலியும் நிறைந்த முதல் பகுதி இங்கே.

கிண்டல் இருக்கட்டும். முதலில் நான் இங்கு சினிமா நெல்லைத் தமிழில் பற்றிப் பேசுவது ஒரு கேலிக்காக மட்டுமே. மணிரத்னத்தின் சினிமா உலகில் அனைவருமே தமிழில்தான் பேசுகிறார்கள் என்பது ஒரு சிறிய கேலிக்குரிய குறையே. எனது முக்கிய குற்றச்சாட்டு படத்தில் எதுவுமே தெளிவாகச் சொல்லப் படவில்லல., மூலப் படத்தை இந்தியில் பார்த்திருந்தாலும் நான் அதையேதான் சொல்லியிருந்திருப்பேன். ஒரு பெரிய பிசினஸ்மேன் எப்படி வளர்கிறான் அவன் என்ன செய்கிறான் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். இதில் மணி கொஞ்சம் கூட அக்கறை செலுத்தவில்லை. இது போன்ற படங்களின் அச்சாணியே அதுதானே? அதை விட்டுவிட்டு அபிஷேக் பச்சன் பாட்டுப் பாடுவதும் ஆட்டம் ஆடுவதுமாகவே இருக்கிறார். ஒரு கத்துக்குட்டி டைரக்டர் கூட இப்படி ஒரு கூறு கெட்ட கதையமைப்பைத் தேர்ந்தெடுக்க மாட்டான். தயவு செய்து இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது கார்ப்பரேட் என்ற இந்திப் படத்தையும் அதில் கதைக்குக் கொடுக்கப் பட்டுள்ள முக்கியத்துவத்தையும் பாருங்கள் அடிப்படை வித்தியாசம் புரியும். இது ஒரு காதல் கதைப் படம் அல்ல, இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்? இதில் ஏன் இத்தனை ஆடல் பாடல்கள்? பிசினஸ் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி கூட தெளிவாக அமைக்கப்படவில்லை. ஏனோதானோவென்றும், குழப்பமாகவும் அவசர அடியாகவும் அமைக்கப் பட்டுள்ளன. மாறாக அவருக்கு இரட்டைக் குழந்தை பிறந்தவுடன் ஒரு பெரிய ஆட்டம் பாட்டம் இதெல்லாம் இது போன்ற படங்களுக்குத் தேவையா? நான் பாப்கார்னுக்குப் பிறகு அளவு கடந்த எரிச்சலுக்கு உள்ளானது இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான். என்னவிதமான படம் எடுக்கிறோம் அதில் எதை முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஒரு சினிமா எடுத்தால் எங்கு போய் முட்டிக் கொள்வது? ஒரு வாரென் பஃபெட்டைப் பற்றியோ ஒரு பில் கேட்ஸைப் பற்றியோ நாளைக்கு யாரேனும் சினிமா எடுத்தால் இப்படி எல்லாமா அச்சுப் பிச்சென்று எடுப்பார்கள். சிட்டிசன் கேன் படத்தை ஒரு சிறிய உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்களேன்.

நான் சொல்ல வந்தது இதுதான். மணிரத்னம் காதல் படம் எடுக்கிறாரா, பிஸினஸ்மேன் பற்றி எடுக்கிறாரா என்ற தெளிவு கூட இல்லாமல் ஒரு படம் எடுக்க அதை இத்தனை பேர் பாராட்டும் படி வேறு செய்து ஒரு பொதுப் புத்தியை உருவாக்கியதுதான் அவரது மோடி மஸ்தான் வேலையின் ரகசியம். நான் கேட்ப்பது மிக சிம்பிளானதொரு கேள்வி. இங்கு தனி நபர்களைப் பற்றிய படங்கள் நிறைய வருகின்றன, கம்பெனிகளின் வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிய படங்கள் வருகின்றன இவற்றில் எடுப்பவர்களுக்கு எவ்விதக் குழப்பமும் கிடையாது மிகத் தெளிவாக சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சொல்லிப் படம் எடுக்கிறார்கள். இந்த குரு படத்தில் மணி செய்திருப்பது என்ன? பிஸினஸ் சம்பந்தமாக ஒரு காட்சியாவது தெளிவாகக் குழப்பம் இல்லாமல் அள்ளித் தெளித்தது போல் இல்லாமல் எடுக்கப் பட்டுள்ளதா? தான் எடுப்பது மசாலாவா, ஆடல் பாடல் நிறைந்த ம்யூசிக்கலா, பையோகிராஃபியா என்ற தெளிவு இல்லாமல் ஒரு இயக்குனர் இந்தியாவில் மிகப் பிரபால்யம் அடைய முடிகிறது என்றால் யாரை நாம் குறை சொல்வது ?

படத்தின் மிகப் பெரிய குறை எடுத்து கொண்ட விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல முயலாதது. ஆங்கிலத்தில் நான் நூறு உதாரணம் தரலாம் அதையெல்லாம் விடுங்கள். பக்கத்தில் அதே இந்தியில் எடுக்கப்பட்டுள்ள கார்ப்பரேட் படத்தை போட்டுப் பாருங்கள். அது நிச்சயமாகச் சிறந்த படம் அல்ல. இருந்தாலும் அதைப் பாருங்கள். அப்புறம் இந்த குருவையும் பாருங்கள் அதன் பிறகு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும். அழகான பெண்களும், அழகான இடங்களும், ஒத்திசைந்த ஆடல்களும் அகலத் திரையும் இருந்து விட்டால் உங்களுக்கு மக்களுக்கு படம் பிடித்துப் போய் விடுகிறது. அதை நன்றாக பிருமாண்டமான விஷுவலாக காண்பிக்க மணிரத்தினம் தெரிந்து வைத்திருக்கிறார். நல்ல சினிமா என்பது அதையெல்லாம் தாண்டியது

தன்னை இலக்கியவாதி என்று தானே சொல்லிக் கொள்ளும் ஒருவர் சிலாகிக்கும் இடங்களைப் பாருங்கள் ஐஸ்வர்யா அபிஷேக்கைப் பார்த்து முழுங்குகிறாராம் அடக் கண்றாவியே? அதுவா படத்தின் மையக் கரு? அப்புறம் வித்யா பாலனின் நடிப்பு குறித்து சிலாகிக்கிறார். அது சாதாரண ரோல். படத்தில் அவர் பாத்திரம் எதற்கு வைக்கப் பட்டதென்றே எனக்குப் புரியவில்லை. அது ஒரு தனி டிராக்காக ஓடுகிறது, மாதவன் ஏதோ இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் பண்னுகிறாராம் அது என்ன இன்வெஸ்டிகேஷனோ என்ன ஜர்னலிசமோ, அப்புறம் தன் பத்திரிகை அதிபர் பொண்ணண ஒரு நாள் கொட்டும் மழையில் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறார். சரி அதுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்? சரியான எரிச்சல் அந்த சைட் டிராக். குருபாய் எப்படி வளர்ந்தார் எப்படி அரசாங்கத்தை ஏமாற்றினார் என்று காமிங்கடா என்றால் யாரோ ஒருவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாராம் அவரை யாரோ ஒருவர் காதலிக்கிறாராம் அதை விலாவாரியாகக் காண்பிக்கிறார்கள் எதற்கு அது? அது படத்தில் தனியாகத் தொங்குகிறது.

இந்த சினிமாவில் ஒரு புண்ணாக்கும் இல்லை. ஒருவர் சாதாராண நிலையில் இருந்து இந்தியாவிலேயே பெரிய தொழிலதிபர் ஆகிறார் என்றால் அதில் சொல்வதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கும்? அவர் எப்படி ஆரம்பத்தில் உழைத்தார்? முதலில் எப்படி என்ன பிசினஸ் செய்தார் அதில் எப்படி வெற்றி பெற்றார்? எப்படி அரசாங்கத்தை வளைத்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்? பிரதம மந்திரியும் அரசாங்கமும் ஏன் அந்த நிறுவனத்துக்குச் சாதகமாக இருந்தார்கள்? என்ன என்ன விதி மீறல்களை எப்படி எப்படிப் பண்ணினார் என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்ல வேண்டும் அல்லவா? அத்தாம் பெரிய கம்பெனியின் எம்டிக்கு யுஎஸ்ஏக்கும் அமெரிக்காவுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை, இதை விட ரிலையன்ஸை கேவலப்படுத்த முடியாது. அப்புறம் ஏதோ எக்சைஸ் ஊழல், விதி முறை மீறல் என்பதும் போகிற போக்கில் பேப்பரில் ஹெட்லைனாக மட்டுமே வரும். அட அது என்ன பிசினஸ் இவர் என்ன செய்தார் அதில் என்ன விதி முறை மீறல் இதையெல்லாம் சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்? அதையெல்லாம் சொல்லாமல் சும்மா முணுக்கென்றால் அத்தாம் பெரிய நிறுவனத்தை நடத்துபவர் ஒரு நூறு பேருடன் சேர்ந்து கொண்டு டப்பாங்குத்து ஆடுகிறார். இத்தனை பாடல்களை எடுத்த நேரத்தில் கதையை உருப்படியாகச் சொல்லியிருந்தால் ஒரு முழுப் படம் பார்த்த உணர்வு இருந்திருக்கும்.

சும்மா எல்கேஜி பசங்க டிராமா போட்ட கணக்கா ஒரு சினிமா. படு அமெச்சூர்த்தனம். சும்மா மணிரத்னத்தின் பெயரையும் ரஹ்மான் பெயரையும் போட்டு என்ன கழிசடையை எடுத்தாலும் அதைப் பார்த்து விட்டு ஆகா ஓகோ என்று சொல்ல நாலு பேர். இதுதான் இந்த நூற்றாண்டிலேயே சிறந்த படம் என்று அமெரிக்காவில் எழுத நாலு கோமாளிகள். அமெரிக்கா பத்திரிகையில் இந்தியாவில் இருந்து உரிய மார்க்கெட்டிங் பண்ணினால் இது என்ன இதுக்கு மேலேயும் எழுதுவார்கள். லகானை இந்தியாவின் சிறந்த படம் என்று எழுதுகிறவர்கள் இதை எழுத மாட்டார்களா என்ன?

மணிரத்னம் இது போன்ற போலித்தனமான அறிவு ஜீவிப் படங்கள் எடுப்பது ஒரு தொடர் வியாதியாகவே வைத்திருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்த்து விட்டு நான் மதிக்கும் ஒரு தேர்ந்த விமர்சகர் சொன்னது:

மணிரத்னம் சினிமா என்ற மீடியத்தை அறிந்தவர் என்றே நான் நம்புகிறேன். ஆனால் அவர் மீடியம் பற்றிய தன் அறிவிற்கும் பொதுவாக் தனக்கும் தான் கையாள் எடுத்துக்கொள்ளும் விஷயத்திற்கும் உண்மையாக இருப்பதில்லை. நிறைய காசு சம்பாதிக்க வேண்டும். அதுதான் குறி. ஆனால் அதே சமயம் வியாபார சிந்தனையே மேலிட்டிருப்பாதாகவும் காட்டிக் கொள்ளக் கூடாது. பெரிய சினிமா கலைஞ்னாக, நிகழ்கால சரித்திரத்தைப் பதிவு செய்பவனாக, மற்ற வணிக சினிமாக்காரர்களீடமிருந்து வேறுபட்டவனாக பல விஷயங்களில் முன்னோடியாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற் ஆசை. அதில் அவர் பிரமாதமாக வெற்றியடைந்துள்ளார். தன் பாவலாக்களையெல்லாம் கலை, சரித்திரம், அறிவார்த்தம், உத்தி சோதனை என்றெல்லாம் நம்பச் செய்து ரொம்பப் பேரை முட்டாளாக்கியுள்ளார். அவர் இன்னொரு ரக ரஜனி, நம் சினிமா சந்தையில். ரஜனி ஒரு பாமர மணிரத்னம். மணிரத்னம் ஒரு எலீட்டிஸ்ட ரஜினி.

எவ்வளவு உண்மையான அவதானிப்பு!

பின்குறிப்பு: ஒரு இலக்கியவாதி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார் என்றும் ஒரு தேர்ந்த விமர்சகர் இப்படி சொன்னார் என்றும் ராஜன் எழுதுகிறார். அவர்கள் யார் யார் என்றும் சொன்னால் நன்றாக இருக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், ராஜன் பக்கங்கள்

தொடர்புடைய பதிவுகள்: குரு பார்வை I

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to குரு பார்வை II – ஒரு அலசல்

  1. Ganpat says:

    மணிரத்தினம் ஒரு போலி என்பது அனைவரும் அறிந்ததே!ஆனால் எட்டு வருடங்களுக்கு முன் வந்த ஒரு படத்தை இப்போ போட்டு கிழிக்கவேண்டிய அவசியம்தான் எனக்கு புரியலே!

  2. Ganpat says:

    மன்னிக்கவும் …”மூன்று வருடங்களுக்கு முன் வந்த”..
    என்று இருக்கவேண்டும்

  3. ராஜன் says:

    கண்பத்

    படம் மூன்று வருடங்களுக்கு முன்னால் வந்ததோ முப்பது வருடங்களுக்கு முன்னால் வந்ததோ தெரியாது. நான் பார்க்கும் பொழுதுதானே அதைப் பற்றி எழுத முடியும்? எனது இந்த பார்வையும் கூட ஒரு இரண்டு வருடம் முன்னால் தனி மடல்களில் எழுதிப் பகிர்ந்து கொள்ளப் பட்டதே ஆர் வி கண்களி அவை இப்பொழுது பட்டு எடுத்துப் போட்டிருக்கிறார். ஆகவே எனக்கு எந்த வருடம் ஒரு சினிமா வந்தது என்றெல்லாம் கணக்கு கிடையாது நான் எப்பொழுது பார்த்து எப்பொழுது நேரம் கிட்டி அதைப் பற்றி ஏதாவது எழுதி அது ஆர் வி கண்களில் எப்பொழுது படுகிறதோ அப்பொழுது வெளி வருகிறது. அது சரி, மூன்று வருடம் முன்பு வந்த படத்திற்கு நான் இப்பொழுது எழுதியதற்கு காரணம் கேட்க்கிறீர்களே? 35 வருடத்திற்கு முன்பாக வந்த வெண்ணிற ஆடை பற்றி நான் இங்கு எழுதியிருந்தேனே படிக்கவில்லையா? அடுத்து சபாபதி, நடு இரவில் பற்றியெல்லாம் எழுதியதை ஆர் வி க்கு அனுப்பி வைக்கலாம் என்றிருக்கிறேன் :)) ஆகவே பழைய படங்கள் பற்றி நான் இப்பொழுது ஏதேனும் எழுதுவதில் உள்குத்து, அவசியம் காரணம் ஏதும் இல்லை. அது அது நடக்கும் பொழுது நடக்கிறது

    அன்புடன்
    ராஜன்

  4. Ganpat says:

    ராஜன்..
    //35 வருடத்திற்கு முன்பாக வந்த வெண்ணிற ஆடை பற்றி நான் இங்கு எழுதியிருந்தேனே படிக்கவில்லையா? அடுத்து சபாபதி, நடு இரவில் பற்றியெல்லாம் எழுதியதை ஆர் வி க்கு அனுப்பி வைக்கலாம் என்றிருக்கிறேன் //

    ஒரு அசாதாரணமான விஷயத்தை ஆயிரம் ஆண்டுகள் கழித்துகூட புகழலாம்.ஆனால் ஒரு அசட்டுத்தனத்தை அன்றே மறப்பது நன்று!!

    மணிரத்தினம் கொடுக்காத ஸ்கோப்பா?

    ராவணன் இன்னும் பார்க்கலையா?

    சுவாமி இது 2010!
    இரண்டு category தான் இப்போ!

    தோல்வியடைந்த,நல்ல
    கலைஞன்,அரசியல்வாதி,ஆசிரியர்,தொழில் செய்பவர்..ஏனையோர்

    வெற்றிபெற்ற,வியாபாரிகள்!

    நிறைய எழுதுங்கள்!
    நல்லவைகளைப்பற்றி!!

    நிறைய அன்பு,மதிப்புடன்,
    Ganpat

பின்னூட்டமொன்றை இடுக