இவர்கள் வித்தியாசமானவர்கள்


(By Saradha – Originally published in Forum Hub)

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இன்னொரு வித்தியாசமான படம்.

எழுபதுகளின் இறுதிப்பகுதிகளில், முழுநேர நாடக நிறுவனங்களில் மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸ் போன்ற ஒரு சிலவே தொடர்ந்து நாடகங்கள் நடத்திக்கொண்டிருக்க, சென்னை நாடக அரங்குகளில் பெரும்பாலும் அமெச்சூர் நாடகமன்றங்களே கோலோச்சிக்கொண்டிருந்தன. அப்படியான அமெச்சூர் நாடகக்குழுவில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒருவர் கதாசிரியர், வசனகர்த்தா, மற்றும் இயக்குனர் என்ற முப்பரிமாணங்களுடன் 1979-ல் திரையுலகில் கால் பதித்தார். அவர்தான் இன்றைக்கும் திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கும் “மௌலி”. அவருடைய வித்தியாசமான சிந்தனையில் உருவானதுதான் ‘இவர்கள் வித்தியாசமானவ்ர்கள்’ திரைப்படம்.

ஒரு அலுவலகத்தில் மாதச்சம்பளத்தில் மேனேஜராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த். அவருக்கு பாந்தமான மனைவியாக ஸ்ரீவித்யா மற்றும் இரண்டு குழந்தைகள் என அழகான அளவான குடும்பம். வித்யாவின் சித்தப்பாவாக நாகேஷ். இந்நிலையில் அதே அலுவலகத்துக்கு உதவி மேனேஜராக தலைமை அலுவலகத்திலிருந்து பணி மாற்றம் செய்யப்பட்டு வந்து சேரும் ‘படாபட்’ ஜெயலட்சுமி. திருமணம் ஆகியிராத அவருக்கு ஆதரவு நிழகாக இருக்கும் தந்தை பூர்ணம் விஸ்வநாதன். அலுவலகத்தில் மேனேஜர் ஸ்ரீகாந்துக்கும், உதவி மேனேஜர் ஜெயலட்சுமிக்கும் ‘ஈகோ’ பிரச்சினை படிப்படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலை வரும்போது, அங்கிருந்தே மாற்றல் வாங்கி சென்றுவிடத்துடிக்கும் ஜெயலட்சுமி. அவரை அப்படியே ஸ்ரீகாந்த் போக விட்டிருந்தாரானால் படம் மூன்றாவது ரீலில் முடிந்துவிட்டிருக்கும் (?). ஆனால் போகாமல் தடுக்கும்போது, ஸ்ரீகாந்தின் நல்ல மனம் ஜெயலட்சுமியின் மனதில் சலனத்தை ஏற்படுத்த, வந்தது வினை. காந்த் திருமணமாகி, குழந்தைகளுடன் வாழ்பவர் என்று தெரிந்தும் ஜெயலட்சுமி அவரைக் காதலிக்க, அதைத்தவிர்க்க முடியாத நிலையில் ஸ்ரீகாந்தும் ஏற்றுக்கொள்ள, இதற்கு அப்பாவியான முதல் மனைவி ஸ்ரீவித்யாவும் சம்மதிக்க, தந்தை பூர்ணம் ஊரில் இல்லாதநேரம் அவர்கள் திருமணம் நடந்துவிடுகிறது. அதைத்தொடர்ந்து இரண்டு பெண்டாட்டிக்காரரான ஸ்ரீகாந்த் வாழ்வில் படும் அவஸ்தைகளை வைத்து சுவையாக படத்தைக்கொண்டு சென்றிருப்பார் மௌலி. இன்னொன்றைக் குறிப்பிட விட்டுவிட்டேன். கதை, வசனம், இயக்கத்தோடு நிற்காமல் நான்காவது பரிமாணமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராகவும் உருவெடுத்திருப்பார் மௌலி. மனைவியிழந்தவராக வரும் இவர், கைவிடப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஸ்ரீகாந்துக்கு இப்படத்தில் கிடைத்த பொறுப்புமிக்க கதாபாத்திரம், ஏற்கெனவே அவர்மேல் திணிக்கப்பட்டிருந்த இமேஜை உடைத்து, எந்த ரோலிலும் தன்னால் சோபித்துக்காட்ட முடியும் என்ற புதிய முகவரியைத்தந்தது என்றால் மிகையல்ல. இரண்டு வீட்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு திண்டாடும் நிலையை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். கடைசியில் இரண்டு வீடுமே இல்லாமல் போய், தனியாளாக அலையும் போது (பின்னணியில் மெல்லிசை மன்னரில் குரலில் ‘இரண்டு வீடு இரண்டு கட்டில், படுக்க இடமில்லை’ பாடல் ஒலிக்க) கடற்கரை மணலில் அலையும் அவர், ஒன்றுமாற்றி ஒன்று அறுந்து போகும் இரண்டு செருப்புக்களையும் உதறி எறிந்துவிட்டு வெறும் காலுடன் செல்வது நல்ல டைரக்டோரியல் டச்.

ஸ்ரீவித்யா அப்படியே ஒரு அப்பாவி மனைவியை கண்முன் கொண்டு வந்திருப்பார். கணவர் ஸ்ரீகாந்தை ‘ராமுப்பா… ராமுப்பா..’ என்று அழைத்தவண்ணம் படத்தின் முற்பகுதியில் வளைய வரும்போதே அனைவரது அபிமானத்தையும் பெற்றுவிடுகிறார். (அதென்ன ராமுப்பா?. தன் மகன் ராமுவுடைய அப்பாவாம்). கணவரின் இரண்டாவது மனைவியான படாபட் ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்ததைப் பார்க்கச்செல்லும் அவர், தன் கணவர் தன்னையும் தன் குழந்தைகளையும் மறந்து இரண்டாவது மனைவியே கதி என்று இருப்பதைச் சுட்டிக்காட்ட, அங்கு கிடக்கும் தூசி படிந்த தலையணையைத் தட்டி, ‘அப்பப்பா தலையணையெல்லாம் ஒரே தூசி படிஞ்சு கிடக்கு’ என்று சொல்லும் இடத்தில் மௌலி தெரிகிறார்.

இவரது சித்தப்பாவாக வரும் நாகேஷ் பற்றி சொல்லவே வேண்டாம். பிரமாதப்படுத்தியிருப்பார். அத்தானின் இரண்டாவது திருமணத்துக்கு ஸ்ரீவித்யா சம்மதித்து விட்டார் என்பதையறிந்து கொடுப்பாரே ஒரு பஞ்ச் டயலாக்.. சூப்பர். கடைசியில் ஸ்ரீவித்யாவிடம் ‘உன் புருஷனோட கல்யாணத்தில் நீ எங்கே இருப்பே?. புருஷனோட ரெண்டாவது கல்யாணத்துல முதல் மனைவி எங்கே இருக்கணும்னு இந்து தர்மத்துல சொல்லலியேம்மா’ என்று கேட்கும் இடத்தில் அவர் முகத்தில் தெரியும் அந்த ஏக்கமும் ஏமாற்றமும்.. யப்பா.

‘படாபட்’ ஜெயலட்சுமியிடம் நல்ல பாந்தமான நடிப்பு. அந்த நேரத்தில் அவர் முள்ளும் மலரும், தியாகம், 6 லிருந்து 60 வரை என அசத்திக்கொண்டிருந்த நேரம். இந்தப்படத்திலும் அசத்தியிருந்தார். தேனிலவுக்காக ஸ்ரீகாந்துடன் வெளியூர் சென்று ஓட்டல் அறையில் நுழைந்த சற்று நேரத்திலேயே, வித்யாவின் குழந்தைக்கு விபத்து என்று போன் வர, முகத்தில் தோன்றும் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, ‘புறப்படுங்க.. போகலாம்’ என்று சொல்வாரே, அந்த இடத்தில் அவர் பார்வையும், அதற்கு பதிலளிப்பது போல ‘என்னை மன்னித்துவிடு, வேறு வழியில்லை’ என்பது போல ஸ்ரீகாந்த் அவரைப் பார்ப்பாரே அந்தப்பார்வையும் வசனமின்றி உணர்ச்சிகளைக்கொட்டும். அதேபோல இன்னொரு கட்டத்தில், வெளியூரிலிருந்து வரும் பூர்ணம் தன் வீட்டில் ஸ்ரீகாந்த் குளித்துக்கொண்டிருப்பதை கேள்விக்குறியுடன் பார்க்க, ‘அவர் யாருடைய வீட்டிலோ குளிக்கிறார்னு பார்க்காதீங்கப்பா. அவருக்கு உரிமையான வீட்டில்தான் குளிச்சிக்கிட்டிருக்கார்’ என்று சொல்லி, தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்துவிட்டதை நாசூக்காக உணர்த்துமிடமும் அப்படியே. ஆனால் அதைக்கேட்டதும் அதிரும் பூர்ணம் மகளிடம் ஒரு வார்த்தையும் பேசாமல், நேராகச்சென்று சுவரில் மாட்டப்பட்டிருக்கும் சாமி படத்தை உடைப்பதும், அதைப்பார்த்து ஜெயலட்சுமி அதிர்வதும் உணர்ச்சிகளின் உச்சம்.

மனதில் எதையும் மறைக்கத்தெரியாத வெள்ளந்தியான அப்பாவாக வரும் ‘பூர்ணம்’ விஸ்வநாதனுக்கு யார் அந்தப்பெயர் வைத்தார்களோ தெரியாது. ஆனால் பெயருக்கேற்றாற்போல நடிப்பில் பரி’பூரணம்’. மகளின் திருமணத்துக்கு முன் மகளின் மேலதிகாரியான ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வரும் அவர், அங்கிருக்கும் நாகேஷ் ஒரு பழைய பட்டாளத்து வீரர் எனப்தையறிந்து, பட்டாளத்திலிருக்கும் யாரோ (நாகேஷுக்கு முன்பின் தெரியாத) தன் பழைய நண்பனைப்பற்றி அசால்ட்டாக விசாரிக்கும்போது தெரியும் அப்பாவித்தனம் அவரது தேர்ந்த நடிப்புக்கு ஒரு சான்று.

ஸ்ரீகாந்த், ஸ்ரீவித்யா, ‘படாபட்’ஜெயலட்சுமி, மௌலி, நாகேஷ், பூரணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்திருந்த இப்படத்துக்கு ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். வித்யாவுக்காக வாணி ஜெயராம் பாடிய பாடலும் (முதலடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்), எம்.எஸ்.வி. பாடிய (நான் முன் குறிப்பிட்ட) பாடலும் மனதைக்கவர்ந்தன. குடும்பக்கதைக்கேற்ற சுகமான ரீ-ரிக்கார்டிங். படம் துவங்கும்போது ஆகாசவாணியின் இசையை மெல்ல பின்னணியில் ஒலிக்கவிட்டிருப்பது ஜோர்.

வித்தியாசமான ஒரு படத்தைத்தந்த ‘இவர்கள்’ நிச்சயம் ‘வித்தியாசமானவர்கள்’தான்.

பற்றி Bags
Trying out

9 Responses to இவர்கள் வித்தியாசமானவர்கள்

  1. BaalHanuman says:

    >>மனதில் எதையும் மறைக்கத்தெரியாத வெள்ளந்தியான அப்பாவாக வரும் ‘பூர்ணம்’ விஸ்வநாதனுக்கு யார் அந்தப்பெயர் வைத்தார்களோ தெரியாது.

    பாரதி மணி கூறுகிறார்….
    ————————-
    நெல்லை மாவட்டத்தில் பிறந்த இவருக்கு பூர்ணம் என்பது அவர் தந்தையின் பெயரான பூர்ண கிருபேசுவரன் என்பதன் சுருக்கம்.

    பூர்ணம் விசுவநாதனின் மூத்த சகோதரர், பூர்ணம் சோமசுந்தரம் ரேடியோ மாஸ்கோ தமிழ்ப்பிரிவின் தலைவராக இருந்தார். அங்கேயே ஒரு ரஷ்யப்பெண்மணியை மணம் புரிந்துகொண்டு மாஸ்கோவிலேயே செட்டிலாகிவிட்டார். ஐம்பதுகளில் ஒரு தமிழர் சேலையுடுத்திய வெளி நாட்டு மனைவியிடம் ரஷ்யமொழியில் பேசுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

    இன்னொரு சகோதரர் ஐம்பதுகளில் எழுத்தாளராகப் புகழ்பெற்றிருந்த உமாசந்திரன் -இவர் சென்னை டி.ஜி.பி.யாக இருந்த நடராஜ், ஐ.பி.எஸ். அவர்களின் தந்தை. உமாசந்திரனின் கதையைத் தான் டைரக்டர் மகேந்திரன் ‘முள்ளும் மலரும்’ திரைப்படமாக எடுத்தார்.

    விசுவநாதனின் தங்கை பூர்ணம் லட்சுமி தில்லி ஆல் இந்தியா ரேடியோ External Services Division தினமும் காலை 5.30-6.30மணிக்கு ஒலிபரப்பும் தென்கிழக்காசிய நேயர்களுக்கான தமிழ்ப்பிரிவில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தார். தில்லியில் அவர் மறையும் வரை எனக்குக் குடும்ப நண்பர். திருமண வாழ்க்கையில் விருப்பமில்லாமல் பெண்ணியத்தின் இலக்கணமாக இருந்தவர். என் வயதுள்ள யாழ்ப்பாண, மலேஷிய, சிங்கப்பூர்த் தமிழ் ரசிகர்களுக்கு பூர்ணம் லட்சுமியின் குரலும் பரிச்சயமாக இருந்தது.

    • சாரதா says:

      டியர் சீனிவாஸ்,

      பூர்ணம் விஸ்வநாதன் பற்றிய மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி.

      பூர்ணம் விஸ்வநாதனும் சென்னை ஆல் இண்டியா ரேடியோவில் (ஆகாஷவாணியாக இருந்த காலத்தில்) பணியாற்றியிருக்கிறார். மேடை நாடகங்களிலும் பிரபலமானவர். இவரது நடிப்பில் ‘தனிக்குடித்தனம்’ நாடகம் பிரசித்தி பெற்ற ஒன்று.

      • BaalHanuman says:

        அன்புள்ள சாரதா,

        உங்கள் மறுமொழிக்கு நன்றி.

        நீங்கள் கூறியது போல் அவர் 50 -களில் அவர் அகில இந்திய வானொலியில் தமிழ்ச் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். அவரது குரலைக்கேட்க தினமும் தமிழர்கள் ஆவலோடு காத்திருந்ததும் உண்மையே.

        இந்தியா சுதந்திரம் பெற்ற செய்தியை முதலில் தமிழில் உலகுக்குச் சொன்னவர் அவர்தான் என்பது நம்மில் பலரும் அறியாதது.

  2. Ramani says:

    70 80 களின் சாபக்கேடு இந்த ரேப் சீன்கள்
    இப்போ குத்து பாட்டை நம்பி பிழைப்ப‌துபோல் ஒரு ரேப் சீனும் கிளப் காபரே டான்சும்
    அதிலே இந்த ஸ்ரீகாந்த் காமுகன் என்பதற்கு இலக்கணம்
    அவனுக்கு தோரஹா மன்னன் என்று பட்டம் கூட இருந்தது
    தொடர்ந்து காமுகன் வேடன் போட்டுவிட்டு பிறகு கதாநாயகன் என்றால் உருப்படுமா
    அந்தப் கழிசடை பார்வை நமுட்டுச் சிரிப்பு கண்றாவி
    கர்மம் எல்லாமே காலப் போக்கில் ஓய்ந்து போனது

    • சாரதா says:

      ரமணி,

      உங்கள் பெயரையும், பதிலில் இருக்கும் காட்டத்தையும் பார்க்கும்போது, நீங்களும் ஒரு பெண்ணென்றே நினைக்கிறேன். அப்பப்பா பதிலில் என்ன சூடு.

      ஸ்ரீகாந்த் என்னம்மா பண்ணுவார்?. அவருக்குக்கிடைத்த ரோல்கள் அப்படி. கற்பழிப்பு நாயகன்னு முத்திரை குத்தியே வச்சுட்டாங்க. நடிக்க மாட்டேன்னு சொன்னால் வீட்டில் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். இந்த ரோல்தான் வேண்டும் என்று கண்டிஷன் போடும் அளவுக்கு அவர் பெரிய நாயகனும் அல்ல. அதனால இமேஜ் பார்க்காமல் நடிச்சார்.

      ஆனா நிஜ வாழ்க்கையில் நல்ல மனிதர். ரொம்ப SOFT டைப். ஒரு காலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு அவர் மீது ரொம்ப கிரேஸ் இருந்தது.

  3. eshwar gopal says:

    இப்படத்தின் பிரதி எங்குபிடித்தீர்கள்? சொன்னால் நலம். அதேபோல், எம்.எஸ்.வி பாடிய பாடல் தொகுப்பை சேர்த்துக்கொண்டருக்கிறேன். இப்பாடல் கிடைக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறது. உங்களிடம் உள்ளதா? இருந்தால் சுட்டி தந்தால் நலம். பார்க்க ஆவலை தூண்டுவதாக உள்ளது. விமர்சனம் அருமை. இதேபோல் மறைந்த சுவடை தேடிப்பிடித்து கொடுத்துக்கொண்டிருங்கள்.

    • சாரதா says:

      டியர் கோபால்,

      இப்படம் குறுந்தகட்டில் பார்த்ததல்ல. பல ஆண்டுகளுக்கு முன் திரையரங்கில் பார்த்ததுதான். அன்று பார்த்த நினைவுகளை வைத்தே இந்த விமர்சனம் எழுதினேன். உண்மையில் நானும் இப்போது இப்படத்தை மீண்டும் பார்க்க விரும்புகிறேன். பிரதி எங்கேனும் தென்பட்டால் கண்டிப்பாக இங்கே தெரிவிக்கிறேன்.

      அன்புடன்… சாரூ…

  4. kirubakaran says:

    nice ….very intersting posts ……very happy to see these …thank u

  5. senthil1966 says:

    மாமா ருக்மணி படம் விமர்சனம் விகடனில் வெளி வந்தபோது (1980) ராதிகா- பிரவீணா நடிப்பு பற்றி இப்படி விமர்சனம் எழுதியிருந்தனர். சௌகாரும் ஸ்ரீ வித்யாவும் படாபட்டும் வெற்றிக்கொடி நாட்டிய இரட்டைப் பெண்டாட்டி ரோலில் ராதிகாவும் பிரவீணாவும் முயற்சி செய்தால் முடியுமா…? எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டிருக்கிறார்கள் என் முடித்திருந்தார்கள். காரணம் இந்த பட விமர்சனம் வந்த ஓரிரு இதழ்களுக்கு முன்புதான் விகடன் இந்த இவர்கள் வித்தியாசமானவர்கள் படத்திற்கு விமர்சனம் எழுதியிருந்தது. அதற்கடுத்த வாரம் ஒரு வாசகர், வாசகர் கடிதம் பகுதியில் சௌகார், ஸ்ரீ வித்யா, படாபட் மூவர் பெயரைச் சொல்லி விட்டு ஜெயந்தியை மட்டும் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்களே என இரு கோடுகள் படத்தில் நடித்ததை நினைவு படுத்தி எழுதியிருந்தார்…அந்த வார வாசகர் கடிதம் பகுதியின் தலைப்பே “ஜெயந்தியை விட்டு விட்டீர்களே”….என்பதுதான்.

பின்னூட்டமொன்றை இடுக