சாரதா பதிவுகள்


தாய்ப் பக்கம்
நண்பர்கள்

சினிமா பதிவுகள்:
வியட்நாம் வீடு விமர்சனம்
தேனிலவு ஷூட்டிங் அனுபவங்கள் பற்றி இயக்குனர் ஸ்ரீதர்
நடிகர் ரவிச்சந்திரனை சந்தித்த சாரதா
காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்
ஸ்ரீதரின் “கல்யாணப் பரிசு” பற்றி சாரதா
      ஆர்வியின் விமர்சனம்
      விகடன் விமர்சனம்
அந்த நாள் பற்றி சாரதா
      ஆர்வியின் விமர்சனம்
      அந்த நாள் ரிலீஸ் ஆனபோது பார்த்த ராஜ்ராஜ்
அன்பை தேடி பற்றி சாரதா
      ஆர்வியின் விமர்சனம்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம்
பட்டணத்தில் பூதம் – சாரதா விமர்சனம்
      ஆர்வியின் விமர்சனம்
      விகடன் விமர்சனம்
      ராண்டார்கை குறிப்பு
சில நேரங்களில் சில மனிதர்கள் – சாரதா விமர்சனம்
      ஆர்வியின் விமர்சனம்
      பக்சின் விமர்சனம்

பாடல் பிறந்த கதைகள்
விஸ்வநாதன் வேலை வேணும்
சொன்னது நீதானா
கேட்டவரெல்லாம் பாடலாம்
என்னை யாரென்று எண்ணி எண்ணி
அண்ணன் காட்டிய வழியம்மா

படிப்பு
தி. ஜானகிராமன் + சிட்டி எழுதிய “நடந்தாய் வாழி காவேரி” – சாரதா அறிமுகம் செய்கிறார்
சாரதா இந்த புத்தகத்தை வாங்கிய அனுபவம்

35 Responses to சாரதா பதிவுகள்

 1. சாரதா says:

  நடிகர்திலகம் சிவாஜி – ஜெயலலிதா இணைந்து நடித்த ‘பாட்டும் பரதமும்’ படத்துக்கான எனது விமர்சனக்கட்டுரை.. இந்த இணைப்பில்:

  http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=14569&start=15&sid=d2635c0ee09e0861c3673fb8a79daa39

 2. சாரதா says:

  ‘பாடல் பிறந்த கதைகள்’ தலைப்பில் நான் எழுதிய கட்டுரைகள்….

  ‘விஸ்வநாதன் வேலை வேணும்’ (காதலிக்க நேரமில்லை)
  ‘சொன்னது நீதானா’ (நெஞ்சில் ஓர் ஆலயம்)
  ‘கேட்டவரெல்லாம் பாடலாம்’ (தங்கை)
  ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி’ (பாலும் பழமும்)

  கீழ்க்கண்ட இணைப்பில்…..

  http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=159

 3. சாரதா says:

  ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ பாடல் பற்றி நான் படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஒரு கல்லூரிப் பேராசிரியை சொன்னது. அவர் சொன்னதை அவர் வாயிலாகவே தருகிறேன். அவர் சொல்லியிருந்தார்:

  “ஒரு முறை சென்னை வானொலியில் ‘இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்’ என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். நான் உரை நிகழ்த்தியபோது, இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி, கிட்டத்தட்ட கண்னதாசன் பணடைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது. ஒலிபரப்பாகி சுமார் அரை மணி நேரம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, எடுத்துப்பேசினேன். மறுமுனையில் “நான் கண்ணதாசன் பேசுகிறேன்” என்று கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

  கண்னதாசன் தொடர்ந்து பேசினார். “சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன். பணடைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள், உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன. ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது. அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.

  உதாரணமாக, திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட
  ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’
  என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?.

  ஆனால் அதையே நான்

  “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”

  என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா?” என்று கண்ணதாசன் கேட்டார். அவர் சொன்னதைக் கேட்டது முதல் கண்னதாசன் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது”.

  இவ்வாறு அந்தப் பேராசிரியை சொல்லியிருந்தார்.

  கவியரசர் சொன்னது ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தானே..!!.

 4. சாரதா says:

  “அண்ணன் காட்டிய வழியம்மா”

  1956 ல் ‘பதிபக்தி’ யில் தொடங்கி 1970 ல் நடிகர் திலகத்தை வைத்து கடைசியாக இயக்கிய ‘பாதுகாப்பு’ வரையில் ‘ப’ மற்றும் ‘பா’ வரிசையில் மட்டுமே படங்களை இயக்கிய பீம்சிங் (விதிவிலக்கு: ராஜாராணி, சாந்தி) அந்த வரிசையில் இயக்கிய அற்புதப் படைப்புதான் ‘படித்தால் மட்டும் போதுமா’.

  1962 ல் வெளியான படித்தால் மட்டும் போதுமா, 1961 லேயே படப்பிடிப்பு நடந்து வந்தது. அப்போதுதான் கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வை விட்டு விலகி (ஏப்ரல் 11, 1961) ஈ.வெ.கி.சம்பத் தலைமையில் தமிழ் தேசியக் கட்சியைத் துவங்கி அதில் முக்கிய பொறுப்பிலிருந்தார். அப்போது அவர் எழுதிய பாடல்களிலும் கட்டுரைகளிலும் தி.மு.க.தலைவர் அண்ணாதுரையை கடுமையாக தாக்கி வந்தார். அந்த நேரம் பார்த்து இயக்குனர் பீம்சிங், படித்தால் மட்டும் போதுமாவுக்காக, தம்பியை ஏமாற்றிய அண்ணனைப்பற்றி பாடல் எழுத வேண்டும் என்று கேட்டபோது, கவிஞருக்கு அண்ணாதுரையை தாக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது என்று மகிழ்ந்து, உடனே விஸ்வநாதன் – ராமமூர்த்தி குழுவினருடன் அமர்ந்து விட்டார்.

  அவர் பாடல் வரிகளைச் சொல்லச் சொல்ல இவர்களுக்கு சிவாஜியை ஏமாற்றிய பாலாஜியைப் பற்றித்தான் சொல்கிறார் என்று நினைத்தார்கள். படம் வெளியான பின்புதான் கவிஞர் சொன்னார், அது அண்ணாதுரையை தாக்கி நான் எழுதியது என்று.

  “அண்ணன் காட்டிய வழியம்மா – இது
  அன்பால் விளைந்த பழியம்மா
  கண்ணை இமையே கெடுத்ததம்மா – என்
  கையே என்னை அடித்ததம்மா

  தொட்டால் சுடுவது நெருப்பாகும்
  தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
  தெரிந்தே கெடுப்பது பகையாகும்
  தெரியாமல் கெடுப்பது உறவாகும்

  அடைக்கலம் என்றே நானிருந்தேன்
  அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்
  கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
  கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்

  அவனை நினைத்தே நானிருந்தேன் – அவன்
  தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
  இன்னும் அவனை மறக்கவில்லை – அவன்
  இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை”

  கவிஞரைப் பொறுத்தவரை அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னுடைய சொந்த விஷயங்களுக்கு சினிமா பாடல்களை பயன் படுத்திக்கொள்வது வழக்கம்.

 5. சாரதா says:

  பாடல் பிறந்த கதைகள் – 7
  ———————————
  தன்னிடம் ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பரொருவர் வைத்திருந்த வெளிநாட்டுக்கார் மீது கண்ணதாசனுக்கு ஆவல். நண்பரும் அதை விற்கப்போகிறார் என்பதைக்கேள்விப்பட்ட கவிஞர், அதைத்தனக்கே தரவேண்டுமென்று விலையும் பேசிவிட்டார். முழுப்பணமும் கொடுக்க கண்ணதாசனிடம் பணமில்லை. எனவே மூன்றில் ஒரு பங்கு பணம் அப்போதே தருவதாகவும், பாக்கியை விரைவில் தந்துவிடுவதாகவும் சொல்ல ந்ண்பரும் சம்மதித்தார். அதுமுதல் கவிஞர் அந்தக்காரை தன்னுடைய கார் போலவே கனவு காணத்துவங்கினார். மறுநாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக்காரை எடுத்து வருவதாக ஏற்பாடு.

  ஆனால் முதல்நாள் அந்த நண்பரின் மற்ற நண்பர்கள் சிலர், ‘கண்ணதாசன் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப மோசமென்றும், அவருக்கு ஊரைச்சுற்றி நிறைய கடன் இருப்பதாகவும், எனவே நண்பரின் பாக்கிப்பணம் வசூலாவது கடினம்’ என்றும் சொல்ல நண்பர் உஷாரானார்.

  (‘இந்தியாவின் ஜனாதிபதியைப்போல சம்பாதித்தும்கூட, இந்தியாவைப்போல கடன் வாங்கியவர் கண்ணதாசன் ‘ என்று கவிஞரைப் பற்றி ஒரு சொல்வழக்கு உண்டு).

  மறுநாள் காலை கவிஞர் குளித்து, உணவருந்திவிட்டு, வண்டியை எடுத்துவர தன் ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குச் செல்ல, நண்பரோ குண்டைத்தூக்கிப்போட்டார். ‘அந்த கார் தனக்கு ராசியானது என்றும், அதைவிற்க தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் விருப்பமில்லை’ என்றும் கூற, கவிஞர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். தான் ஆசைப்பட்டு தனதாகவே நினைத்திருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் மனதில் தங்கியிருந்தது.

  அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு, இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்த ‘பணக்கார குடும்பம்’ படத்துக்கு ஒரு சோகப்பாடல் எழுத அமர்ந்த கவிஞருக்கு அன்று காலை நடந்த சம்பவம் மனதைக்குடைய, பல்லவியை இப்படி துவங்கினார்….

  “பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக – நான்
  பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக”.

  (சூழ்நிலைகளை தன் பாடலுக்குள் புகுத்திக்கொள்வதில் கவிஞருக்கு நிகர் அவர்தான்).

 6. சாரதா says:

  டியர் RV,

  தங்கள் இணையதளத்தில் எனது பதிவுகளை, தொடர்ந்து பிரதான பதிப்புக்களாக பதிப்பித்து அவற்றுக்கு புதிய கௌரவம் அளித்து வருவதற்கு மிக்க நன்றி.

  நண்பர் ராஜனுக்கு ஆதரவாக என்னோடு சண்டை போடுவீர்கள் என்று நினைத்து, முந்தானையை செருகிக்கொண்டு சண்டைக்கு தயாராக இருந்தேன். ஆனால் அதற்கு மாறாக, என் சார்பில் ராஜனை மிரட்டி விட்டீர்கள். அதற்கும் ஸ்பெஷல் நன்றி.

  • RV says:

   சாரதா, நன்றி நான்தான் சொல்ல வேண்டும். உங்கள் எழுத்துகளை இங்கே பதிக்க அனுமதி கொடுப்பதற்கு நன்றி! (உங்கள் ஈமெயில் முகவரி தரமுடியுமா? என் முகவரி rv அட் ஜிமெயில் டாட் காம் இங்கே பப்ளிக்காக கொடுக்க வேண்டாம், என் முகவரிக்கு மெயில் எழுதுங்கள்.)

 7. Pingback: ஆயிரத்தில் ஒருவன் – சாரதா விமர்சனம் « அவார்டா கொடுக்கறாங்க?

 8. சாரதா says:

  ஆரூர்தாஸ் நினைவுகள் – 3
  (ஜெயா தொலைக்காட்சியின் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் அவர் சொன்னது)

  ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர். படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதிய ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருக்க வேண்டும். 1962-ம் ஆண்டு ஒரே நாளில் நான் வசனம் எழுதிய எம்.ஜி.ஆரின் ‘தாயைக்காத்த தனயன்’ படமும் சிவாஜியின் ‘படித்தால் மட்டும் போதுமா’ படமும் ரிலீஸானது. ஒன்று தேவர் படமும் இன்னொன்று ரெங்கநாதன் பிக்சர்ஸ் படமுமாக இருந்த போதிலும், முறையே ஒன்றை எம்ஜியார் பிக்சர்ஸும், இன்னொன்றை சிவாஜி ஃபிலிம்ஸும் சென்னை நகரில் வெளியிட்டிருந்தார்கள். இரண்டுமே சூப்பர் வெற்றியடைந்து 100 நாட்களைத்தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக்காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தது.

  அன்று காலை எம்.ஜி.ஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச்சென்றிருந்தபோது எம்.ஜி.ஆர். என்னை அழைத்து, ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை. இப்போ தாயைக்காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னே, உங்க அன்பு இருந்தா போதும்’. என்றேன். ‘அப்படியா அப்போ நானே ஏதாவது பண்றேன்’ என்று சொல்லி விட்டார்.

  அன்று பிற்பகல் சிவாஜி பட ஷூட்டிங் போனபோது அவர் என்னை தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போ நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு. அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித்தர்ரேன்” என்று கேட்டதும் நான் ஆடிப்போனேன். அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு ஆச்சரியப்பட்டேன். எம்.ஜி.ஆருக்கு சொன்ன அதே பதிலையே இவருக்கும் சொன்னேன். ‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார். நான் ஒண்ணும் சொல்லவில்லை.

  இரண்டுநாள் கழித்து எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலக்த்தில் இருந்து போன் பண்ணி வரச்சொன்னாங்க. போனபோது எம்.ஜி.ஆர். இருந்தார். ஒரு பெரிய வெள்ளித்தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத்தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக்காத்த தனயன் வேற்றிக்கு ஆரூர்தாஸ் அவர்களுக்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

  மறூநாள் பிற்பகல் சிவாஜி பிலிம்ஸிலிருந்து அழைப்பு வந்தது. போனால் அங்கே சிவாஜி அவர்கள், மூன்றரை சவரன் எடையுள்ள, உள்ளங்கையைவிட அகலமான தங்கப்பதக்கம் ஒன்றை எனக்கு அணிவித்தார். அதில் ‘சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100வது நாள் வெற்றிவிழா’ என்று சிவாஜி பிலிம்ஸ் எம்ப்ளத்துடன் பொறிக்கப்பட்டிருந்தது.

  அவ்விரண்டு பரிசுகளையும் என் வீட்டு வரவேற்பறை ஷோகேஸில் பக்கம் பக்கமாக வைத்திருக்கிறேன் (அதை தொலைக்காட்சியிலும் காண்பித்தனர்). அவற்றைப்பார்க்கும்போது அந்தப்பரிசுகளைவிட அவ்விரண்டு மேதைகளின் முகம்தான் என்கண்ணில் காட்சியளிக்கும்.

 9. சாரதா says:

  “களவாணி” (திரைப்பட விமர்சனம்)

  படம் பார்த்தபோதே ரொம்ப விரிவாக எழுதணும்னு நினைச்சேன். நேரமில்லையோ அல்லது வேறென்னமோ, முடியவில்லை. (இப்போ படம் ஓடிக்கிட்டிருக்கா அல்லது எடுத்துட்டாங்களா தெரியவில்லை இன்னமும் ஓடிக்கொண்டிருக்கணும்னு நினைக்கிறது எனது பேராசையாகக்கூட இருக்கலாம்). இருந்தபோதிலும் இந்த விமர்சனம் என் ஆத்மதிருப்திக்காக.

  தற்போதைய படங்களில் கிராஃபிக்ஸை கையில் வைத்துக் கொண்டு செப்படி வித்தை காட்டிக் கொண்டிருப்பவர்களூக்கு மத்தியில் எவ்வளவு நாளாச்சு இப்படி ஒரு மனதை வருடும் படத்தைப்பார்த்து.

  தும்பைப்பூபோல வெள்ளை வெளேர் வேஷ்டியும் சட்டையுமாக வரும் கதாநாயகன் அறிவழகன் (நண்பர்களுக்கு அறிக்கி) செய்வதெல்லாம் அநியாயம். வீட்டில் அம்மாவை மிரட்டி பணம் பறித்துச்சென்று தண்ணியடிப்பது, கூட்டாளிகளோடு பொறுப்பில்லாமல் ஊர்சுற்றுவது என்று திரிந்தாலும் அவன் மேல் கொஞ்சம்கூட நமக்கு கோபமோ வெறுப்போ வரவில்லை. காரனம் நம் மனதைக்கட்டிப்போடும் விமலின் புன்னகையா?. பார்க்கின்ற ஸ்கூல் பொண்ணுங்களையெல்லாம் பார்த்து என்னை ‘கட்டிக்கிறேன்னு சொல்லு’ என்று வேடிக்கையாக சொல்லி வைக்க, ஒருநாள் நிஜமாக அப்படி சொல்லவைக்கக்கூடிய ஓவியாவைப்பார்த்ததும் சொக்கிப்போவது, தன் வயலில் நெல் பிடுங்கியவளை அவளுடைய தோழிகள் முன்னால் கண்டித்து விட்டு, பின்னர் தோழிகளைப் போகச்சொல்லிவிட்டு தனியாக, ‘எவ்வளவு வேணும்னாலும் நெல் பிடுங்கிக்கோ. ஆனா என்னை கட்டிக்கிறேன்னு மட்டும் சொல்லிடு’ என்று குழைவதும், பலமுறை அவன் கோரிக்கையை மறுக்கும் ஓவியா, தனக்காக விடியவிடிய உட்கார்ந்து வீட்டுப்பாடம் எழுதி வரும் அவன் அன்பில் நெகிழ்ந்துபோய், அவன் கேட்காமலேயே ‘உன்னை கட்டிக்கிறேன்’னு சொல்வதும் கவிதை நயம்.

  ஆனால் அண்ணன் சொன்னதுக்காக யாருக்காகவோ விடிய விடிய வீட்டுப்பாடம் எழுதும் அந்த தங்கை கேரக்டர் கண்ணிலேயே நிற்கிறாள். அப்பா தனக்காக துபாயிலிருந்து வாங்கிவந்த பொருட்களையெல்லாம் அண்ணன் தனக்குத் தெரியாமல் அவன் காதலிக்கு கொடுத்துவிட்டான் என்று தெரியாமல், அலமாரியிலிருந்த பொருட்களைத்தேடி ஏமாறும் அந்தக்குழந்தையைக் காண பரிதாபமாக இருக்கிறது.

  சரண்யா, யாரோ ஒரு ஜோசியன் சொன்னதைக்கேட்டு, ‘ஆனிபோய் ஆடிபோய் ஆவணி வந்தா எம்மகன் டாப்ல வந்துருவான்’ என்று நம்பிக்கொண்டு அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடு கொடுப்பதும், அதே சமயம் துபாயிலிருந்து கணவன் அனுப்பும் பணத்தை மகனுக்குத் தெரியாமல் மறைக்க நினைப்பதும், வெளிநாட்டில் தன் கணவனோடு வேலைசெய்யும் நண்பர் வீட்டுக்கு வந்து பையனுடைய நடவடிக்கைகளைத்தெரிந்து கொள்ள, அதை தன் கணவனிடம் சொல்லவேண்டாமென்று கேட்டுக்கொள்வதுமாக ‘அரசனூர் அத்தாச்சி’யாகவே மாறிட்டார்னு சொல்லணும். (மறைத்து என்ன பயன்?. கணவர் துபாயிலிருந்து திரும்பும்போது, டாக்ஸியில் வரும்போதே மகனைப்பத்தி நேரில் பார்த்தே தெரிஞ்சிக்கிறார்).

  கிட்டத்தட்ட தான் வரும் காட்சிகளில் முக்கால்வாசி இடங்கள் பள்ளி யூனிபார்மிலேயே வரும் ஓவியா, அரை இஞ்ச் மேக்கப் ஏற்றப்பட்ட செயற்கை நாயகி அல்ல. தினமும் நம் கண்ணெதிரே நடமாடும் இயற்கை நாயகி. அபூர்வமாக வரும் பாவாடை தாவணியிலும் கொள்ளை அழகு. எப்போதும் முகத்தில் கள்ளமில்லா குழந்தைக்குரிய குதூகலம். இவரைத் தேடிப்பிடித்த இயக்குனர் சற்குணத்தைப்பாராட்ட வேண்டும்.

  தண்ணியடிக்க, ஊர்சுற்ற வீட்டில் காசு பெயராத நேரங்களில், விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்போவதாக வெளியூர்களில் வசூல் செய்து காசு தேற்றிக்கொள்வது நல்ல தமாஷ். இருந்தாலும் நண்பர்கள் சதா தண்ணியில் தள்ளாடுவது நெருடுகிறது. அதுபோல, நண்பனுக்காக அடுத்தஊரில் போய் பெண்ணைத்தூக்கி வருவதும், அவர்கள் விரட்டி வருவதும், பஞ்சரான காரிலிருந்து இறங்கி, வெளிநாட்டிலிருந்து அப்பா வந்துகொண்டிருக்கும் டாக்ஸியிலேயே ஏறிக்கொள்வதும், அப்பா பின்சீட்டில் இருப்பது தெரியாமல் தன் வீரப்பிரதாபங்களை டிரைவரிடம் அவிழ்த்து விடுவதும் ரொம்ப தமாஷாக, அதாவது சுவையாக எடுக்கப்பட்டுள்ளது. (வழக்கமாக இம்மாதிரி விஷயங்களில் இரண்டு தலைகளாவது உருளும்).

  கஞ்சா கருப்பு பற்றி சொல்லலேண்ணா எப்படி?. தாமிரபரணியில் காவேரி தண்ணீரைக் கலந்தபிறகு, இந்தப்படத்தில்தான் அவர் மீண்டும் சோபிக்கிறார். இவரை பகடையாக வைத்து கதாநாயகனும் அவனது நண்பர்கள் கூட்டமும் அடிக்கும் லூட்டி, அமர்க்களம். பஞ்சாயத்தாக வரும் அவர் பாலிடால் குடித்து விட்டதாக புரளி கிளப்பி விடுவதென்ன, அதைக்கேட்டு ஓடிவரும் அவர் மனைவியிடம் ‘உன் நடத்தையில் சந்தேகப்ப்பட்டுத்தான் விஷம் குடித்தார்’ என்று திசை திருப்பிவிடுவதென்ன, தான் செத்துவிட்டதாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படுவதை தன் காதாலேயே கேட்க நேருவதென்ன, ரிக்கார்ட் டான்ஸ் ஆடும் பெண்ணுக்கு அவர் அன்பளிப்பு செய்ததாக சீட்டு அனுப்பி குடும்பத்தில் குழப்பம் விளைவிப்பதென்ன….. அட்டகாசம்தான்.

  காதலில் விழுந்துவிட்ட நாயகன், தன் காதலி கையால் நடப்பட்ட நாற்றுக்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கேர் எடுத்து உரம் போடுவதும், பூச்சிமருந்து தெளிப்பதும், அதனால் அவை மட்டும் மற்ற பயிர்களைவிட உயரமாக வளர்வதும் அழகான இடைச்செருகல்கள். குறிப்பாக LC112 புதிய ரக நெல் பற்றி புரளிகிளப்புவதும், ஊர் முழுக்க எழுதிவைத்து ஓவியாவை பயமுறுத்துவதும் சின்ன சின்ன கவிதைகள்.

  கதைக்களம் பச்சைப்பசேல் என்றிருக்கும் எங்கள் தஞ்சை மாவட்டம். திரும்பும் இடமெல்லாம் (தார்ச்சாலைகள் தவிர்த்து) பசுமைக் கம்பளம் விரித்தாற்போன்று கண்களுக்கு குளிர்ச்சி. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, அரசனூர், ராணிமங்கலம் என இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். காமன் பண்டிகை விழாவிலும் அதையொட்டி நடக்கும் ரிக்கார்ட் டான்ஸிலும் மனதைக்கவரும் மண்வாசனை. அதற்கேற்றாற்போல மனதை வருடும் இசை. ஒளிப்பதிவு செய்த ஓம் பிரகாஷுக்கும், இசையமைத்த எஸ்.எஸ்.குமரனுக்கும் பாராட்டுக்கள்.

  மொத்தத்தில் படம் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்ட கிராஃபிக்ஸ் பிரியாணி அல்ல. ஓலைக்குடிசையில் சாம்பார், வத்தல் குழம்புடன் உண்ட ருசியான கிராமத்து உணவு.

  • சாரதா says:

   இதில் அதிசயப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், இரண்டு ஊர்களுக்கும் நடுவில் இவ்வளவு பகையிருந்தும், அது காலம் காலமாக புகைந்துகொன்டிருந்தும் ஒரு சண்டைக்காட்சி கூட இல்லாதது. அட ஆமாங்க, கிளைமாக்ஸில் கூட சண்டை இல்லாத அதிசயப்படம் சமீபத்தில் இதுவாகத்தான் இருக்கும். கல்யாணத்தன்று பெண்ணைத்தூக்கிப்போவதைத் தொடர்ந்து இவ்வளவு கார் துரத்தல்கள் இருந்தும் கூட சண்டையில்லாமல் படம் முடிவது பெரிய ஆறுதல்.

   அதோடு சந்தோஷப்பட வைக்கும் விஷயமும் உண்டு. கதாநாயகனை வீரசூர பராக்கிரமனாகக் காண்பிக்காமல், சாதாரண மனிதனாகக் காண்பித்திருப்பது. ஐம்பது பேர் சுற்றி வளைத்தால்கூட பறந்து பறந்து அடித்து, அவர்களை துவைத்து துவம்சம் செய்து, சட்டை கசங்காமல் எழுந்து நிற்கும் கதாநாயர்களையே பார்த்து அலுத்து, சலித்து, நொந்துபோயிருக்கும் நமக்கு, ஐந்து பேர் சுற்றி வளைத்தாலே தப்பி ஓடுவதில் குறியாக இருக்கும் யதார்த்த கதாநாயகன் புதுசுதானே.

 10. Ganpat says:

  சாரதா ஜி,

  இப்போதான் படம் பார்த்து முடிச்சேன்.
  இவ்வளவு நல்ல படத்தை அறிமுகம் செய்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
  Excellent movie.
  நேரம் போனதே தெரியலே.
  இளங்கோ அம்மா கேரக்டர் பற்றி சொல்லவே இல்லையே!ஏற்கனவே பசங்க படத்தில் தூள் கிளப்பியவர்.
  இவ்வளவு nativity உடன் ஒரு படம் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது!

 11. raju says:

  Dear Sharadaji

  I will try and see this movie “Kalavani” this week end.

  thanks for the recommendation.

  raju-dubai

 12. சாரதா says:

  ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ படத்துக்கான எனது விமர்சனம், இந்த இணைப்பில்:

  http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13150&start=15

 13. சாரதா says:

  Dear RV,

  The personal mail, which I have sent to you in ‘forumhub’on October 18, is still not yet opened by you.

  Please go through.

 14. சாரதா says:

  (‘கூட்டாஞ்சோறு’ தளத்துக்காக நான் சமர்ப்பிக்கும் பதிவு)

  ‘நிலையாமை’ (சாரதாவின் மரண பயம்)

  தினம் தினம் இப்போதெல்லாம் மற்றவர்களின் மரணச்செய்திகள் கேட்கக் கேட்க மனதுக்குள் பயம் எட்டிப்பார்க்கத் துவங்கிவிட்டது. ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது சின்ன வயதிலிருந்தே கேள்விப்பட்டதுதான் என்றாலும் கூட, கண்முன்னேயே பச்சிளம் குழந்தைகள் கூட மரணிப்பத்தைக் கண்டபோதும் கூட ஆறிலும், பதினாறிலும், இருபத்தாறிலும் ஒரு அசட்டு தைரியம், நமக்கு இன்னும் வயதிருக்கிறதே என்று. (என்னவோ இத்தனை வயதுக்குப் பின்தான் மரணம் வருமென்று இறைவன் சொல்லிவிட்டது போல).

  ஆனால் இப்போதெல்லாம் அந்த அசட்டுத்துணிச்சலும் கூட இல்லை. ஒவ்வொரு மரண ஓலம் கேட்கும்போதும் அடுத்தது நாமோ என்ற பயம். இது ஒன்றும் வரிசையில் நின்று வாங்கும் பொருள் அல்ல, நமக்கு முன்னால் இன்னும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்று தைரியம் கொள்வதற்கு. உலகத்திலேயே மிகப்பெரிய பம்பர் குலுக்கல் நடத்திக் கொண்டு இருப்பவன், யாருக்கு அடுத்து மரணத்தை பரிசாகத் தருவானென்பது மிகப்பெரிய புதிர். நூறு வயது முதியோரை அடுத்து ஆறுமாதக் குழந்தையை அழைப்பான். அது தெரிந்தும் ஆட்டம் போடுகிறோம். மரணித்தவனை குழியில் தள்ளி மூடிவிட்டு வந்த நமக்கு அடுத்து சிரிப்பதற்கு எப்படி வாய் வருகிறது?. அடுத்த மரணத்தைப் பார்த்ததும் அந்த சிரிப்பை சிறிது காலம், அல்லது சிறிது நேரம் தற்காலிகமாக ஒத்திப்போட்டுவிட்டு மீண்டும் அழுகிறோமே அது எப்படி?.

  பெரிய பெரிய கோட்டை கொத்தளங்களையும், அரண்மனைகளையும் கண்டு ‘அடேயப்பா இதை எப்படிக் கட்டினார்கள்?’ என்று வியப்பதற்கு முன் நமக்கு (எனக்கு) தோன்றுவது ‘இதைக் கட்டியவர்கள் எல்லாம் இப்போது எங்கே?. இதை ஆண்டு அனுபவித்தவன் இப்போது எங்கே?. காலம் முழுவதும் நிலைத்திருப்போம் என்றுதானே இவற்றைக் கட்டினான்? அவன் ஆசைப்படி இருந்தானா?. மரணத்தைப்பற்றி சிறிது சிந்தித்திருந்தால் இவற்றைக் கட்டுவதில் மெனக்கெட் டிருப்பானா?’ என்ற எண்ணம்தானே தோன்றுகிறது?. என்னென்ன ஆடம்பரங்கள் எத்தனை வேலைப்பாடுகள். இவற்றைப்பாதுகாத்து அடுத்துவரும் தலைமுறைக்குத் தர வேண்டுமாம். எதற்கு?. நாமே ‘நாலாளுக்கு மேலாளாக’ப் போகும்போது யாருக்காக இவையெல்லாம்?..

  இப்போதெல்லாம் சுவையான உணவுகளை ஏற்பதற்குக்கூட நாவும், மனமும் மறுக்கிறது. விருந்துகளைப் புறக்கணிக்கிறேன். காரணம் அவ்வாடம்பர விருந்துகளில், இவ்வுலகின் நிலையாமை மறக்கப்படுகிறது. கேலிக்கூத்துகள், வேடிக்கைகள் முதலிடம் பிடிக்கின்றன. நமக்கோ மனம் கூசுகிறது. இதைவிட சுவையாகச்சாப்பிட்ட நம் முப்பாட்டன் எல்லாம், அடையாளத்துக்கு எலும்புக்கூடு கூட இல்லாமல் போய்விட்ட பிறகும் அதை மறந்து மீண்டும் கேளிக்கைகளில் மனம் ஈடுபட துணிவது எப்படி?. சில நாள் முன்பு வரை நாமும்தான் இந்த ஆட்டத்தில் கலந்துகொண்டு ஆடினோம் என்ற சமாதானத்தை இப்போது மனம் ஒப்பவில்லை. இளைய சமுதாயத்துக்கு நிலையாமை பற்றிய அச்சம் ஊட்டப்பட்டால், அனாச்சாரங்கள் குறைய வாய்ப்புண்டோ?. ‘நாம் இளைய தலைமுறையாய் இருந்தபோது சிந்தித்தோமா’ என்பதைவிட, நமக்கு அச்சமூட்ட வேண்டியவர்களின் மெத்தனப் போக்கும் காரணமாக இருந்திருக்கக்கூடும். முந்தைய தலைமுறை செய்த அதே தவறை நாமும் செய்து இளையோர்களின் வாழ்க்கையை அச்சமூட்டி நெறிப்படுத்துவதில் தவற வேண்டுமா?.

  வீடு : ஒரு காலத்தில் பார்த்தோர் வியக்கும் கலைக்கூடமாக இருந்த என் வீடு, இப்போது நேர்மாற்றமாக. இப்போது பார்ப்பவர்களும் வியக்கிறார்கள், இந்த வீட்டிலும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று. அப்படி அதிசயிக்கும் மானிடப்பிறவிகளே, நாம் நிரந்தரமாகப்போக இருக்கும் மண்ணறை, இதைவிட பலநூறு மடங்கு மோசமானதாயிற்றே. உணர்ந்தீரா?.

 15. சாரதா says:

  ஸ்ரீகாந்த், ஸ்ரீவித்யா, ‘படாபட்’ஜெயலட்சுமி, மௌலி, நாகேஷ், பூரணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்து, மௌலியின் கதை, வசனம், இயக்கத்தில் உருவான ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ படத்துக்கான எனது விமர்சனம், இந்த இணைப்பில்…..

  http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13689&postdays=0&postorder=asc&start=45

 16. சாரதா says:

  1967-ல் வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘அதே கண்கள்’ படத்துக்கான எனது விமர்சனம், இந்த இணைப்பில்….

  http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13618&postdays=0&postorder=asc&start=15

 17. Bags says:

  நன்றி சாரதா.

 18. சாரதா says:

  ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முதல்நாள் அறிவிக்கப்படும், குடியரசுத்தலைவரின் ‘பத்ம’ விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

  விருது பெறுவோர் பட்டியலில் தகுதியான பலர் இடம்பெற்றிருந்தபோதிலும், மிகத்தகுதியான ஒருவர் “வழக்கம்போல” விடுபட்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான்.

  எஸ்.பி.பி.க்கு பத்மபூஷண் அளிக்கப்பட்டிருப்பது சந்தோஷமானதுதான். மற்றபடி (பலருக்கு யாரென்றே தெரியாத இரண்டு பரதநாட்டியக்கலைஞர்கள் இருவர் உட்பட) பத்மஷ்ரீ பெற்றவர்களைப்பற்றியும் நாம் குறை சொல்வதற்கில்லை.

  நம் கேள்வி, ‘அவர்களுக்கு ஏன் கொடுத்தாய்?’ என்பது அல்ல, ‘இவருக்கு ஏன் தடுக்கிறாய்?’ என்பதுதான். சென்ற ஆண்டு காங்கிரஸ் தலைவர் திரு தங்கபாலு பங்குபெற்ற ஒரு விழா மேடையில் அவரிடமே இதுபற்றி கோரிக்கைவைத்தார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

  அவர் உச்சத்தில் இருந்தபோதே கொடுத்திருக்க வேண்டியது, இன்னும் அவருக்கு எட்டாமலே இருக்கிறது. ஏற்கெனவே அவர் தனது 83-வது வயதில் பயணித்துக்கொண்டு இருக்கிறார். இனிமேலா அவரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?.

  மறைந்த முதல்வர், முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் என எல்லா முதல்வர்களுடனும் தொடர்பிருந்தும் ஒரு மாபெரும் கலைஞர் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்.

  ஒருவேளை, ஒரே ஒரு முறை எம்.எஸ்.வி.க்கு பத்மபூஷணோ அல்லது பத்மஷ்ரீயோ வழங்கி அப்படியே விட்டுவிடுவதைவிட, வருஷாவருஷம் அவருக்கு ‘பத்மநாமம்’ வழங்கிக்கொண்டே இருக்கலாம் என்று முடிவெடுத்து விட்டதோ இந்திய அரசு?.

 19. Ganpat says:

  சில நாட்களுக்கு முன் திரு பீம்சென்ஜோஷிக்கு அஞ்சலி செலுத்தி இட்லிவடை தளத்தில் பதிவு இட்டிருந்தார்கள் அதில் ஒரு பின்னூட்டம் என்னை சங்கடப்படுத்தியது .
  ” சாருவோ அல்லது ஷாஜியோ என்னவெல்லாம் உளறிக் கொட்டப் போகிறார்களோ?” என்ற ரீதியில் அது எழுதப்பட்டிருந்தது.கூடவே எனக்கு உளவியல் ரீதியான ஒரு சந்தேகமும் நிவர்த்தி ஆயிற்று.
  சம்பந்தப்பட்டவர்கள் இவ்வாறான உளறல்களை மிகவும் ரசிக்கிறார்கள் ஆனால்
  வெளியில் அதை பற்றி வருத்தப்படுவது
  போலகாட்டிகொள்கிறார்கள்.

  இதைப்போல ……
  எந்த ஒரு விருதிற்கும் அர்த்தமில்லை என நன்கு தெரிந்தும்,
  அந்த விருதுகளுக்குப் பின் உள்ள அரசியல் விவகாரங்கள் தெரிந்தும்,
  அவ்வாறு அந்த விருது மறுக்கப்பட்டவர் ஒரு மேதை என தெளிந்தும் கூட,
  அதைப்பற்றி பேசுவதும் வருத்தப்படுவதும் ஒரு உளவியல் ரீதியான பிரச்சினைதான்
  dot

  • சாரதா says:

   நாலைந்துமுறை படித்தும் நிஜமாகவே எனக்குப்புரியவில்லை.

   உண்மையாகவே அற்புதத்திறமை கொண்ட ஒருவர், எப்போதோ இம்மாதிரி விருதுகள் வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஒருவர், அவரது மாணவர்களுக்கே இவ்விருதுகள் வழங்கப்பட்ட பின்னரும், எப்படியும் இவ்வாண்டாவது வழங்கி கௌரவிப்பார்கள் என்று ஆத்மார்த்தமான ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போதுதிரும்பத் திரும்ப பாராமுகமாகக் கண்டுகொள்ளப்படாதிருக்கும்போது, அதுபற்றி ஆதங்கபடுவது தவறு என்கிறீர்களா?.

   அல்லது உங்களது பதிவில் உட்பொதிந்திருக்கும் நுணுக்கமான உட்கருத்து எனது சிற்றறிவுக்கு எட்டவில்லையா?….. நிஜமாகவே எனக்குப்புரியவில்லை, குறிப்பாக ‘உளவியல்ரீதியான’ என்ற வார்த்தையின் சென்ஸிடிவ் அர்த்தம்.

   • Ganpat says:

    உண்மையாகவே இது நுட்பமான வார்த்தைதான்
    சாரதாஜி!
    விளக்கம் அளிக்கும் முன் உங்களிடம் ஒரு சிறிய கேள்வி.மனதை தொட்டு சொல்லுங்கள், உண்மையாகவே இம்மாதிரியான விருதுகளுக்கு ஏதேனும் மதிப்பு இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?
    அவ்வாறு நம்பாத பட்சத்தில் அது நம் மேதைகளுக்கு கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன?
    வழக்கு போடமுடியாத முட்டாள்தனங்களும்,திமிர்த்தனங்களும் ஒதுக்கப்படவேண்டியவை,மறக்கப்பட
    வேண்டியவை அல்லவா?எதற்காக வருந்த வேண்டும்?
    இனி நுட்பமான பகுதிக்கு வருவோம்.
    ஒரு டீக்கடை வாசலில் ஒரு ஏழை யாசகம் கேட்டு கொண்டிருக்கிறான்.நான் இரக்கப்பட்டு கடையில் பணம் கொடுத்து இவருக்கு ஒரு டீ கொடுங்கள் என்கிறேன்.உடனே அந்த ஏழை, டீ மாஸ்டரிடம், ஸ்ட்ராங்கா போடுங்க; நுரை போட்டு கொடுங்க, என்று சொல்ல ஆரம்பித்தால்
    என் நெஞ்சில் தோன்றும் நெருடல் போன்றது, இந்த விருது MSVக்கு கிடைக்கவில்லையே என்ற உங்கள் ஆதங்கம்.
    “இந்த உவமை, கொஞ்சம் புதுமை
    இன்னும் உனக்கேன் புரியவில்லை
    வேரென்ன சொல்வேன் தெரியவில்லை!”
    (தயவு செய்து அடுத்த அடிக்குப்போக வேண்டாம்;என்னால் அடி தாங்க முடியாது)
    நட்புடன்,
    குண்டூசி முனை அறிவுள்ள,
    கண்பத்
    பி.கு:
    இந்த ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதுகளை விருதுகள் பெறுவோர்:
    அனுஷ்கா,தமன்னா,நாஞ்சில் நாடன், ஏனையோர்
    (ஒரு லேட்டஸ்ட் மாடல் கம்ப்யூட்டர் வைத்து கூட இப்படி ஒரு random list தயாரிக்க முடியாது)

 20. Ganpat says:

  உண்மையாகவே இது நுட்பமான வார்த்தைதான்
  சாரதாஜி!
  விளக்கம் அளிக்கும் முன் உங்களிடம் ஒரு சிறிய கேள்வி.மனதை தொட்டு சொல்லுங்கள், உண்மையாகவே இம்மாதிரியான விருதுகளுக்கு ஏதேனும் மதிப்பு இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?
  அவ்வாறு நம்பாத பட்சத்தில் அது நம் மேதைகளுக்கு கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன?
  வழக்கு போடமுடியாத முட்டாள்தனங்களும்,திமிர்த்தனங்களும் ஒதுக்கப்படவேண்டியவை,மறக்கப்பட
  வேண்டியவை அல்லவா?எதற்காக வருந்த வேண்டும்?
  இனி நுட்பமான பகுதிக்கு வருவோம்.
  ஒரு டீக்கடை வாசலில் ஒரு ஏழை யாசகம் கேட்டு கொண்டிருக்கிறான்.நான் இரக்கப்பட்டு கடையில் பணம் கொடுத்து இவருக்கு ஒரு டீ கொடுங்கள் என்கிறேன்.உடனே அந்த ஏழை டீ மாஸ்டரிடம், ஸ்ட்ராங்கா போடுங்க; நுரை போட்டு கொடுங்க, என்று சொல்ல ஆரம்பித்தால்
  என் நெஞ்சில் தோன்றும் நெருடல் போன்றது, இந்த விருது MSVக்கு கிடைக்கவில்லையே என்ற உங்கள் ஆதங்கம்.
  “இந்த உவமை, கொஞ்சம் புதுமை
  இன்னும் உனக்கேன் புரியவில்லை
  வேரென்ன சொல்வேன் தெரியவில்லை!”
  (தயவு செய்து அடுத்த அடிக்குப்போக வேண்டாம்;என்னால் அடி தாங்க முடியாது)
  நட்புடன்,
  குண்டூசி முனை அறிவுள்ள,
  கண்பத்
  பி.கு:
  இந்த ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதுகளை விருதுகள் பெறுவோர்:
  அனுஷ்கா,தமன்னா,நாஞ்சில் நாடன், ஏனையோர்
  (ஒரு லேட்டஸ்ட் மாடல் கம்ப்யூட்டர் வைத்து கூட இப்படி ஒரு random list தயாரிக்க முடியாது)

 21. Ganpat says:

  Sorry Saradaji,
  என் பதில் தவறுதலாக இரண்டு முறை பதிவாகி விட்டது.நீங்கள் இதற்கான உங்கள் பதிலை ஒரு தடவை கொடுத்தாலே போதும்.. 🙂
  நன்றி

 22. எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய புகழ்பெற்ற மோகமுள் நாவலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ‘மோகமுள்’ திரைப்படத்துக்கான எனது விமர்சனம், இந்த இணைப்பில்…

  http://ennangalezuththukkal.blogspot.com/

 23. KAVIRIMAINDHAN says:

  சாரதா.. உங்களின் சேவை மகத்தானது. அறிமுகம் பெற விரும்புகிறேன். மின்னஞ்சல் கிடைப்பின் மகிழ்வேன். காவிரிமைந்தன் பொதுச் செயலாளர் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம், பம்மல், சென்னை 600 075 kaviri2012@gmail.com

 24. Pingback: ரிலீசே ஆகாத ஜெயகாந்தன் திரைப்படம் | சிலிகான் ஷெல்ஃப்

 25. Pingback: ஜெகெ -சில கட்டுரைகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: