அடிமைப் பெண் – விகடன் விமர்சனம்


அடிமைப் பெண்

அடிமைப் பெண்

அடிமைப் பெண் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். அன்றைய பிரபலங்கள் கூடி தங்கள் கருத்துகளை சொல்கிறார்கள். இப்போது தெரிவது நடிகை தேவிகாவும், டென்னிஸ் வீரர் கிருஷ்ணனும்தான். எஸ்.பி.பி. பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள்! விகடனுக்கு நன்றி, ஓவர் டு விகடன்!

கிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே!

லலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.

சேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க! ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.

ஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.

ராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே! அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்!

சேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.

தேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.

கமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.

தேசிகாமணி: ஆமாம்! ஆனால் மனசிலே பதியற பாட்டு…

பல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..!’

சேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.

ஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..?

கமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே! குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.

தேசிகாமணி: சண்டைக் காட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.

தேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.

லலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.

கமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே?

கிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது! அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே!

ஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

கமலம்: கரெக்ட்! அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.

சேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to அடிமைப் பெண் – விகடன் விமர்சனம்

  1. நல்ல முயற்சி தொடருங்கள்@

  2. BaalHanuman says:

    அடிமைப் பெண் – 1969
    .
    1968 ஆம் ஆண்டு எட்டு படங்களில் நடித்த எம்ஜிஆர், அடுத்த ஆண்டில் நடித்தது இரண்டே படங்களில்தான். அதில் ஒன்று அவரது சொந்தத் தயாரிப்பில் வெளி யான “அடிமைப் பெண்’ ஆகும்.

    “நாடோடி மன்னன்’ படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் தயாரித்த படமான “அடிமைப் பெண்’ பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. எனினும் கதை, நடிகர், நடிகைகள் என பல முறை மாற்றப்பட்டு, எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவைச் சேர்ந்த ஆர்.எம்.வீரப்பன், வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோரால் தொய்வில்லாமல் உருவாக்கப்பட்ட கதை இதோ.
    .
    வேங்கை நாட்டு ராணி மங்கம்மா மீது சூரக்காட்டு மன்னன் செங்கோடன் மோகம் கொள் கிறான். வேங்கை மலை மன்னனுக்கு மனைவியாகி, ஆண் குழந்தைக்குத் தாயான பிறகும் மங்கம்மாவின் மீது அவனது கழுகுப் பார்வை தொடருகிறது. ஒருநாள் இச்சைக்கு இணங்காவிட்டால் குழந்தையைக் கொன்று விடுவேன் என்று மிரட்டிய செங்கோடனின் காலை வெட்டி எறிகிறாள் மங்கம்மா.

    இதனால் வெறியனாகிய செங்கோடன் மங்கம்மாவின் கணவனைக் கொல்கிறான். அவளது இரண்டு வயது மகனை இருட்டுச் சிறையில் அடைக்கிறான். தப்பியோடிய மங்கம்மாவைக் கண்டுபிடித்து அவனது இரண்டு கால்களையும் அவளது கண்ணெ திரில் வெட்டி எறிவதாக சபதம் செய்கிறான்.

    வேங்கை மலைப் பெண்களை யெல்லாம் அடிமைகளாக்கி, கால்களில் விலங்கிட்டு கொடுமைப்படுத்துகிறான். எதிர்க்கும் ஆண்களின் தலைகளைச் சீவி எறிகிறான். சிறையில் கூனனாக மாறிய மங்கம்மாவின் மகன் வேங்கையன், ஒரு விசுவாசியின் உதவியால் சிறையி லிருந்து தப்பு கிறான். ஜீவா என்ற அழகிய இளம் பெண்ணின் அரவணைப்பில் கல்வி கற்கிறான், வாள் பயிற்சி பெறு கிறான், கொடுமை களை எதிர்த்துப் போராடுகிறான்.
    தாயின் சபதத்தை அறிந்து தன்நாட்டு பெண்களின் அடிமை விலங்கை ஒடித்து கொடியவனைக் கொன்று நாட்டை மீட்கிறான்.

    இந்தக் கதைக்கு வசனம் எழுதினார் சொர்ணம். திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கு படத்தில் பிரச்சாரம் செய்தார். “உதயசூரியன் நம்ம தெய்வம். நமக்கு மட்டுமல்ல, புல் பூண்டுகள் உள்ளிட்ட மற்ற உயிரினத்துக்கும் அது தான் தெய்வம்’ என்று படத்தின் நாயகி ஜெயலலிதா இந்த வசனத்தைப் பேசியதை இன்று பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.
    “இது திருட்டுக் கூட்டமல்ல, திருந்துங் கூட்டம்’,

    “பகைவனுக்குப் பாராட்டா, அழிக்கப்பட வேண்டியவனுக்கு ஆரத்தியா’, “எதிரிங்க யாருன்னு கண்டுபிடிக்கிற சக்தி மட்டும் மனிதனுக்கு இருந்தால் உலகத்தில் சண்டையே வராது’ “கழுத்துக்கு மேல தலை இருப்பன் எல்லாம் தலைவனாக முடியாது’ “எங்கள் நாட்டுக்கு கொடி இல்லை. உன் குடலையே அறுத்து கொடியா கட்டுறேன்’ போன்றவை வசன ஆளுமைக்கு சிறந்த உதாரணங்கள்.

    வேங்கையனாக எம்ஜிஆர், ஆரம்பத்தில் கூனனாக, ஆடுமாடுகள் தண்ணீர் குடிப்பது போலவும், பேச்சு வராமல் சைகையிலேயே செய்கைகளை வெளிப்படுத்துவதும் அவரது குணச்சித்திர நடிப்புக்குச் சாட்சியாகும்.

    உடற்பயிற்சியால் உரமேறிப் போன எம்ஜிஆரின் கட்டழகை வெளிப்படுத்தும் வகையில் பீதாம்பரத்தின் ஒப்பனையும், உடை அமைப்பும் காட்சிகளும் அமைந்திருந்தன. படத்தில் அவர் வில்லன்களுடன் போடும் சண்டைகளை ஆங்கிலப் படத்துக்கு இணையாக அமைத்திருந்தார் சியாம் சுந்தர்.
    கிளைமாக்சில் அவர் சிங்கத்துடன் மோதும் காட்சிகள் மயிர்க்கூச்செரியச் செய்பவை.
    கட்டழகி ஜீவாவாகவும், அவளது சகோதரி பவள நாட்டு ராணி பவளவல்லியாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஜெயலிதா. அவரது ஆடை அலங்காரமும், நடனமும், வில்லியாக வரும்போது உதட்டைக் சுழித்து அலட்சியத்தை வெளிப்படுத்தும் அனாயசமான நடிப்பும் அனைவரையும் அசர வைத்தன. இந்தப் படத்தில் ஜெயலலிதாவுக்கு முதன்முதலாக சொந்தக் குரலில் பாடும் வாய்ப்பையும் எம்ஜிஆர் வழங்கினார். “அம்மா என்றால் அன்பு’ என்ற கவிஞர் வாலியின் பாடலை அவர் பாடினார்.

    செங்கோடனாக அசோகன் கொடிய வில்லன் பாத்திரத்தில் கொடுங் கோன்மையை வெளிப்படுத்தினார். ஆர்.எஸ்.மனோகர், ஜஸ்டின் ஆகியோருடன் எம்ஜிஆர் போடும் சண்டைகள் சிலிர்ப்பை ஏற்படுத்தின. நகைச்சுவைப் பிரிவை சந்திரபாபு, சோ, புஷ்பமாலா கவனித்துக் கொண்டனர். கவர்ச்சிக்கு ஜெயலிதாவுடன், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் சேர்ந்து ரசிகர்களைக் கொள்ளை கொண்டனர். எம்ஜிஆரின் தாய் மங்கம்மாவாக பண்டரிபாய் உணர்ச்சிப் பிழம்பாக நடிப்பில் பரிணமித்தார்.

    ஜெய்ப்பூர் அரண்மனை, ராஜஸ்தான் பாலைவனம், மணலில் ஓட்டகங்கள் சேசிங் என படம் பிரம்மாண்டமாக உருவானது. கே.சங்கர் படத்தின் இயக்குனர் என்ற போதிலும் ஒவ்வொரு காட்சியிலும் எம்ஜிஆரின் முத்திரை காணப்பட்டது.

    கவிஞர் வாலியின் “அம்மா என்றால் அன்பு, “ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறேதே, ஏமாறாதே’,

    “உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது’ ஆலங்குடி சோமுவின் “தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை’, புலமைப்பித்தனின் “ஆயிரம் நிலவே வா’, அவினாசி மணியின் “காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ’ ஆகிய அருமையான பாடல்களுக்கு திரை இசைத் திலகம் கே.வி.மகா தேவன் இனிமையாக இசை யமைத்தார்.

    எஸ்.பி.பாலசுப்பிர மணியன் “ஆயிரம் நிலவே வா’ பாடல் மூலம் அறிமுகமானார். இன்று ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி சிகரம் தொட்ட அவரது சாதனைக்கு விதையாக அமைந்தது “அடிமைப் பெண்’.

    வண்ணத்தில் உருவாகி ரசிகர்களின் எண்ணத்தில் நீங்கா இடம் பிடித்த “அடிமைப் பெண்’ திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வெற்றி நடை போட்டது. மதுரை சிந்தாமணி திரையரங்கில் 176 நாள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

    1.5.1969 அன்று வெளியான இந்தப் படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் அமோக வெற்றி பெற்றதுடன் அந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான விருதையும் பெற்றது.
    இந்தப் படத்தின் வெள்ளி விழா விளம்பரத்தில் எம்ஜிஆர் இயக்கத்தில் எம்ஜிஆர் பிக்சர்சின் அடுத்த தயாரிப்பு “இணைந்த கரங்கள்’ என்ற அறிவிப்பு வந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ அந்தப் படம் கைவிடப்பட்டது.

    “அடிமைப் பெண்’னைத் தொடர்ந்து எம்ஜிஆர் நடித்து இயக்கி தயாரித்த “உலகம் சுற்றும் வாலிபன்’ படமும் சாதனைகள் பல படைக்கத் தவறவில்லை.

  3. BaalHanuman says:

    1969- ல் வெளி வந்த ” அடிமைப் பெண் ” படத்தை தயாரிக்க எம்ஜிஆர் 1966 – லேயே திட்டமிட்டார் !

    எனவேதான் 1966 – ல் வெளி வந்த ” நான் ஆணையிட்டால் ” படத்தில் இந்த படத்தைப் பற்றி ஒரு விளம்பரம் கொடுத்தார் !

    ஆனால் எதிர்பாராத விதமாக எம்ஜிஆர் அவர்கள் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கி குண்டடிபட்டு, பின்னர் சிறிது காலம் கழித்து குணம் அடைந்து மறுபடியும் “அடிமைப் பெண்” படத்தை தொடங்கினார் !

    எம்ஜிஆர் குண்டடிபடுவதற்கு முன்பே எடுத்த அடிமைப் பெண்ணில் கே.ஆர். விஜயா, சரோஜா தேவி ஆகியோர் நடித்தனர் !

    கே.ஆர். விஜயா 1966 -ல் எடுத்த ” அடிமைப் பெண்ணில் ஒரு பாத்திரத்தில் நாயகியாகவும் , இன்னொரு பாத்திரத்தில் வில்லியாகவும்
    நடித்தார் !

    அந்த படம் சில ஆயிரம் அடிகள் வளர்ந்த பின்னர், அடிமைப் பெண்ணை எம்.ஆர்.ராதா சுட்டுவிட்டதால்………….
    மன்னிக்கவும்– எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா சுட்டதால் ….. அந்த “அடிமைப் பெண்” நிறுத்தப்பட்டது !

    பின்னர் எம்ஜிஆர் குணம் அடைந்து மீண்டும் “அடிமைப் பெண்” எடுக்க நினைக்க , ஏற்கெனவே அவர் எடுத்தது அவருக்கு திருப்தி
    தராததால் அந்த “அடிமைப் பெண்” படச்சுருளை எரித்து விட்டார்!

    பின்னர் , கே.ஆர். விஜயா, சரோஜா தேவியை நீக்கி விட்டு ஜெயலலிதாவை இரு வேடங்களில் நடிக்க வைத்து, கே.ஆர்.விஜயா நடித்த வேடத்தில் ராஜஸ்ரீ நடித்து 01/05/1969 அன்று புதிய “அடிமைப் பெண்” வந்து சக்கை போடு
    போட்டது ! முன்னர் பிரம்மாண்டமான ” செட் ” களைப் போட்டு கே.ஆர்.விஜயா நடித்து எடுத்த காட்சிகளை தீயிட்டு கொளுத்த எம்ஜிஆரைத் தவிர வேறு யாருக்கு துணிவு இருக்கும் ?

    உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ?

    சென்னை- ‘” மிட்லண்ட் ” திரை அரங்கில் ” அடிமைப் பெண் ” முதல் 100 காட்சிகளுக்கு, அதாவது சுமார் 33 நாட்களுக்கு “ரிசர்வேஷன்” ஆகி படம் வெளி வராத முன்பே ” ஹவுஸ்புல்”
    ஆனது !

பின்னூட்டமொன்றை இடுக