சீர்காழி சிவசிதம்பரம் – அன்றும் இன்றும்


இந்த முறை சீர்காழி சிவசிதம்பரம். இவர் கணீர் குரல் புகழ் சீர்காழி கோவிந்தராஜனின் (தேவன் கோவில் மணியோசை பாட்டை கேளுங்கள், என்ன ஒரு கம்பீரமான குரல்!) மகன் என்பது தெரிந்திருக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

லேட்டஸ்ட் ஐந்து அன்றும் இன்றும் பதிவுகள்:
பிரபு தேவா – அன்றும் இன்றும்
லதா மங்கேஷ்கர் – அன்றும் இன்றும்
ஹாரிஸ் ஜெயராஜ் – அன்றும் இன்றும்
கோபிகா – அன்றும் இன்றும்
ராதா – அன்றும் இன்றும்

நாடோடி மன்னன்


நாடோடி மன்னன்

எம்ஜிஆர் படங்கள் சில பர்ஃபெக்டாக வந்து விடுகின்றன. பொதுவாக அவர் படங்களில் காணப்படும் சின்னப் பிள்ளைத்தனமான கதை, செயற்கையான திரைக்கதை எல்லாவற்றையும் மீறி அவரது இமேஜுக்கு மிக பொருத்தமாக எல்லாம் அமைந்துவிடுகின்றன. அவருக்கு இப்படி ஒரு பத்து படம் தேறினால் ஜாஸ்தி. அந்த டாப் டென்னில் நாடோடி மன்னன் டாப்பில் இருக்கிறது.

எம்ஜிஆரின் பொதுவான பலங்கள் என்று பார்த்தால் பாட்டுகள்; அருமையான தயாரிப்பு; சண்டைக் காட்சிகள், குறிப்பாக கத்தி சண்டை காட்சிகள், சிலம்ப சண்டை காட்சிகள்; அழகான ஹீரோயின்கள். சில சமயம் நல்ல பொழுதுபோக்கு கதை, நல்ல நகைச்சுவை அமைந்துவிடும். இந்த படத்தில் மிக பிரமாதமான பாட்டுகள்; காசை தண்ணீர் போல செலவழித்து எடுக்கப்பட்ட படம்; அவருக்கு இணையாக திரையில் சண்டை போடக்கூடிய நம்பியார், வீரப்பா என்று இரண்டு வில்லன்கள்; பானுமதி, சரோஜா தேவி என்று இரண்டு ஹீரோயின்கள்; நன்றாக எழுதப்பட்ட திரைக்கதை, வசனம். நகைச்சுவைதான் சரியில்லை. சந்திரபாபுவை விட எம்ஜிஆர் பானுமதி ஜெயிலில் சந்திக்கும் காட்சியே கொஞ்சம் புன்முறுவலை வரவழைக்கும்.

1958-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்த படம். அவரே இயக்கம். எம்ஜிஆர், பானுமதி, சரோஜா தேவி, சந்திரபாபு, வீரப்பா, நம்பியார், சக்ரபாணி, ஜி. சகுந்தலா (மந்திரி குமாரியில் எம்ஜிஆருக்கு ஜோடி; இதில் சந்திரபாபுவுக்கு ஜோடி!) என்று ஒரு நட்சத்திரக் கூட்டம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. எல்லா பாட்டும் பட்டுக்கோட்டையா என்று தெரியவில்லை, ஆனால் பட்டுக்கோட்டை நிறைய பாட்டுகளை எழுதி இருக்கிறார்.

கதை தெரியாதவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தில் குறைவு. Prisoner of Zenda கதைதான் inspiration . நாடோடி எம்ஜிஆர் ஜெயிலில் தூங்காதே தம்பி என்று பாட்டு பாடுகிறார். பானுமதியின் குரல் மட்டுமே கேட்கும். பானுமதி தான் கிழவி என்று சொல்லி அவரை ஏமாற்றுகிறார். பிறகு இருவரும் ஒன்றாக செல்ல சம்மதமா, உமக்கு சம்மதமா என்று பானுமதி பாட்டிலேயே கேட்டு அடுத்த நாட்டுக்கு செல்கிறார்கள். அங்கே வாரிசு பிரச்சினை. மன்னன் எம்ஜிஆர்தான் வாரிசு என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ராஜகுரு வீரப்பா, சதிகார சக்ரபாணி, பிரபு பிங்கலன் (நம்பியார்) யாருக்கும் இது பிடிக்கவில்லை. சதி நடக்கிறது. மன்னன் எம்ஜிஆரும் நாடோடியும் சந்திக்கிறார்கள். மன்னன் எம்ஜிஆர் மயக்கம் அடைகிறார். நேரம் தவறிவிடக்கூடாது என்பதற்காக நாடோடி எம்ஜிஆர் மன்னனாக பதவி ஏற்கிறார். காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்று பாடும் பானுமதி மனம் குளிர புதிய சட்டங்களை கொண்டு வருகிறார். மன்னன் எம்ஜிஆரை வீரப்பா தன் தீவுக்கு கடத்தி சென்று விடுகிறார். நடுவில் பானுமதி இறந்துவிட, எம்ஜிஆர் வழக்கம் போல முகத்தை மூடிக்கொண்டு அழ, ஹீரோயின் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக வீரப்பாவின் தீவுக்குப் போய், மானத் தேடி மச்சான் வரப் போறான் என்று பாடும் சரோஜா தேவியை பார்த்து, காதலித்து, சண்டை போட்டு, மன்னனை மீட்டு, சுபம்!

வசனங்கள் அருமை. வீரப்பா கேட்பார் – சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்ககூடாது போல! எம்ஜிஆரின் பதில் – இல்லை, ஏழைகளே இருக்கக்கூடாது! வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் – ரத்னா, அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை!

படம் எம்ஜிஆருடையது. படத்தில் அவர் பூராவும் வியாபித்திருக்கிறார். மிச்ச எல்லாருமே டம்மிதான் – பானுமதி மட்டும் கொஞ்சம் ஈடு கொடுக்கிறார். வீரப்பாவுக்கு அவ்வப்போது அவரது ட்ரேட்மார்க் சிரிப்பு, சண்டை போடுங்கள், போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருக்கு அது கை வந்த கலை. நம்பியாருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் கடைசியில் அவர் எம்ஜிஆருடம் கடற்கரையில் மோதும் சண்டை பிரமாதம். சந்திரபாபு வேஸ்ட். இரண்டு பாட்டு பாடிவிட்டு போகிறார். விகடன் அவர் முட்டை தின்று கோழியை துப்பும் காட்சியை சிலாகிக்கிறது. இதெல்லாம் ஒரு காமெடியா? சரோஜா தேவிக்கு சும்மா கொஞ்சம் வெட்கப்பட்டு, சிரித்து, பாம்பைக் கண்டு பயந்து எம்ஜிஆர் மேல் ஒட்டிக்கொண்டு, ரவிக்கையை கழற்றி முதுகை காட்டி (அப்போதுதான் அவர் காணாமல் போன இளவரசி என்று மச்சத்தை பார்த்து எம்ஜிஆர் கண்டுபிடிக்க முடியும்.) கடைசியில் எம்ஜிஆர் அவரை மீட்க வரும்போது வீர மாமுகம் தெரியுதே அது வெற்றி புன்னகை புரியுதே என்று பாடினால் போதும். சக்ரபாணி எந்த படத்திலும் நன்றாக நடித்து நான் பார்த்ததில்லை. சொந்தப் படத்திலும் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. தேறுவது பானுமதி ஒருவர்தான். எம்ஜிஆரை தான் கிழவி என்று சொல்லி கலாய்ப்பதாகட்டும், காடு விளைஞ்சென்ன மச்சான் என்று கேட்பதாகட்டும், நன்றாக ஈடு கொடுத்து நடிக்கிறார். அவர் சரோஜா தேவி போல சம்பிரதாயமான தமிழ் ஹீரோயின் இல்லை, பாம்பு வந்தால் எம்ஜிஆர்தான் பயந்து அவர் மேல் ஒட்டிக்கொள்ள வேண்டும். பார்வையிலேயே தைரியத்தை காட்டுகிறார். ஸ்டீரியோடைப் நாயகியாக அவர் இல்லாமல் இருப்பது பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

எம்ஜிஆருக்கு அடுத்தபடி படத்தை வியாபிப்பவர் சுப்பையா நாயுடு. என்ன மணி மணியான பாட்டுகள்!

காடு விளைஞ்சென்ன மச்சான்தான் படத்தில் டாப். என்ன அருமையான வரிகள்! சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாம பாடுபட்டு என்று ஆரம்பிக்கும்போதே களை கட்டிவிடுகிறது. நாட்டுப்புற மெட்டின் இனிமையே தனிதான். பட்டுக்கோட்டை கலக்குகிறார்!

மானைத் தேடி மச்சான் வரப் போறான் கலக்கலான இன்னொரு பாட்டு. Feet tapping number!

தூங்காதே தம்பி தூங்காதே புகழ் பெற்ற பாட்டு. நல்ல வரிகள். பட்டுக்கோட்டை புகுந்து விளையாடுகிறார். கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் – அருமை!

அவ்வளவாக தெரியாத இன்னொரு பாட்டு சம்மதமா உமக்கு சம்மதமா. பானுமதி மிக அருமையாக பாடி இருப்பார்.

சாதாரணமாக சீர்காழியின் குரல் எம்ஜிஆருக்கு பொருந்தவே பொருந்தாது. ஆனால் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா பாட்டில் மிக நன்றாக பொருந்தி இருக்கும். அது என்ன மாயமோ தெரியவில்லை.

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே ஹை பிச்சில் (லீலாவா?) பாடும்போது அம்மாடி, பாத்தும்மா என்றுஒரு பயம் வரும்!

சந்திரபாபுவுக்கு தடுக்காதே என்னை தடுக்காதே என்று ஒரு பாட்டு.

படத்தின் மூன்றாவது ஹீரோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். மனிதர் பிரமாத ஃபார்மில் இருந்திருக்கிறார்.

பாட்டுகள் இணையத்தில் எங்கே கிடைக்கும் என்று தேட நேரமில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

எம்ஜிஆர் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவழித்திருக்கிறார். மாளிகைகள், தீவு, கழுகு குகை, இடிந்து விழும் பாலம், குகையில் தண்ணீர் நிரம்பும் காட்சி என்று மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். செலவழிந்த பணத்தைப் பற்றி “ஓடினால் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி” என்று சொன்னாராம். படம் ஓடிவிட்டது. அவரும் தமிழ் நாட்டுக்கே மன்னர் ஆகிவிட்டார்.

தமிழின் மிக சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் ஒன்று. கட்டாயமாக paarungaL என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
விகடன் விமர்சனம்
நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்

வா ராஜா வா விகடன் விமர்சனம்


படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

வா ராஜா வா படத்தை ஏ.பி.நாகராஜன் தயாரித்திருக்கிறார் என்றால், சுலபத்தில் நம்ப முடியாது. நட்சத்திர மதிப்புப் பெற்ற நடிகர்களோ, பாடலாசிரியர்களோ, இசையமைப்பாளர்களோ கிடையாது. ஆனால், இந்தக் குறையையெல்லாம் ஈடு கட்டுவதற்காக வரிந்து கட்டிக்கொண்டவர்களைப் போல், படத்தின் ஒவ்வொரு மீட்டரிலும் ஏ.பி.என்னும் மாஸ்டர் பிரபாகரனும் இருக்கிறார்கள். துணைக்கு, கண்ணுக்கு இதமான வண்ணமும் இருக்கிறது.

சின்னஞ் சிறுவனை வைத்து முழுக்க முழுக்க மகாபலிபுரத்துச் சூழ்நிலையில், ஏழு உண்மைகளை விளக்க ஏழு கதைகளைப் புனைந்து, அவற்றை அவருக்கே கை வந்த நவராத்திரி பாணியில் கோவைப்படுத்தியிருக்கிறார்.

சோமசுந்தரம் தம்பதியர் கதையில் உருக்கம் இருக்கிறது; தமிழ் தெரியாத தமிழ்ப் பெண் சைலஸ்ரீ தலைமையில் வரும் யுவதிகள் கதையில் கவர்ச்சி இருக்கிறது; மனோரமா-கன்னையா பகுதியில் கலகலப்பு இருக்கிறது; பையனையும் பாம்பையும் சேர்த்துப் படம் எடுத்திருக்கும் காட்சியில் டைரக்டரின் திறமை இருக்கிறது; மற்ற பகுதிகளில் எல்லாம் வசனகர்த்தாவும் மாஸ்டர் பிரபாகரனும் மட்டுமே இருக்கிறார்கள்.

துடிப்பு மிக்க ராஜா திரைக்கு கவர்ச்சி மிக்க பாத்திரம்தான். ஆனால் அவனை ஸ்டன்ட் வீரனாகவும், ஞான பண்டிதனாகவும், சரித்திர நிபுணனாகவும் மாற்றி பெருஞ்சுமையைச் சுமக்க வைத்திருக்க வேண்டுமா?

மாஸ்டர் பிரபாகரனை சிவாஜி மாதிரி ஓரிடத்தில் நடித்துக் காட்ட வைத்திருக்கிறார்கள். ஆனால் அவனோ, படம் முழுவதுமே சிவாஜி மாதிரி நடிக்கிறானே!

பல இடங்களில் அதிக வசனம் பேசி நடிக்கவேண்டியிருந்தாலும், மாஸ்டர் பிரபாகரனின் நடிப்பாற்றல் ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிடுகிறது. அவனுடைய தங்கையாக வரும் பேபி சுமதியின் முகபாவம் அருமை. கிளி கொஞ்சுகிறது என்பார்களே, அப்படி!

வி.எஸ்.ராகவன், எஸ்.என்.லட்சுமி, மனோரமா ஆகியோர் மனத்தில் நிற்கிறார்கள். மனோரமா குடும்பத்தினர் போட்டோ எடுத்துக் கொள்ளும் காட்சி அமர்க்களம்!

புது இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் அறிமுகமாகியிருக்கிறார். கல்லெல்லாம் சிலை செஞ்சான் நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல படம். அரசாங்கப் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்!

ஆர்வி:சாதாரணமாக விகடன் விமர்சனம் ஒன்றை பதிவிட்டால் அடுத்த பதிவு என் விமர்சனமாக இருக்கும். இந்த முறை முடியாது, ஏனென்றால் நான் இந்த படத்தை பார்க்கவில்லை.

குன்னக்குடி வைத்யநாதன் இசை அமைத்த முதல் படம். தூள்.காம் தளத்தில் குன்னக்குடி பற்றிய ஒரு கட்டுரையில் பாட்டுகளின் விவரங்கள் இருக்கிறது. என் ஆப்பிள் கம்ப்யூட்டரில் தூள்.காம் வேலை செய்வதில்லை, அதனால் என்னால் பாட்டுகள் கேட்க முடியவில்லை. எனக்கு நினைவிருக்கும் பாட்டுகள் கல்லெல்லாம் சில செஞ்சான் பல்லவ ராஜா, தாயிற் சிறந்த கோவிலுமில்லை (டி.கே. கலாவுக்கு என்ன ஒரு கணீர் குரல்!) (இந்த பாட்டு அகத்தியர் படத்தில் வருவது, திருத்திய சாரதாவுக்கு நன்றி!), உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் தெரியலே, இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான் (சீர்காழியின் குரலை பற்றி சொல்லவே வேண்டாம்)

சபாஷ் மீனா


sabash_meena

இந்த ஆள் மாறாட்ட கதை இன்றைக்கும் பயன்படுகிறது. உள்ளத்தை அள்ளித் தா இதே கதைதான். காதலா காதலா படத்தில் இதன் சாயல் உண்டு.

1958-இல் வந்த படம். பந்துலுவின் சொந்தப் படம். அவரே இயக்கியும் இருக்கிறார். சிவாஜி, சந்திரபாபு, மாலினி, சரோஜா தேவி, குலதெய்வம் ராஜகோபால், பந்துலு டி. பாலசுப்ரமணியம் (திருத்திய நல்லதந்திக்கு நன்றி!), எஸ்.வி. ரங்காராவ் நடித்தது. இசை டி.ஜி.லிங்கப்பா. வெற்றிப் படம் என்று நினைக்கிறேன். ஹிந்தியில் இந்த படம் தில் தேரா தீவானா என்று ஷம்மி கபூர், மெஹ்மூத் நடித்து வந்தது.

திருச்சியில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த சிவாஜி நாடகம், கீடகம் என்று சந்திரபாபுவோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பொறுப்பு வருவதற்காகவும், அப்படியே பணக்கார ரங்காராவ் வீட்டில் சம்பந்தம் செய்வதற்காகவும் சிவாஜியை அவர் அப்பா பந்துலு பாலசுப்ரமணியம் சென்னைக்கு ரங்காராவ் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். சிவாஜி தன் நண்பன் சந்திரபாபுவை அங்கே ஆள் மாறாட்டம் செய்ய வைக்கிறார். சேரியில் ஒரு பெண்ணோடு லவ்வுகிறார். ஏறக்குறைய சந்திரபாபுவை மறந்தே விடுகிறார். ரங்காராவ் மகள் சரோஜா தேவிக்கும் சந்திரபாபுவுக்கும் இங்கே லவ் டெவலப் ஆகிறது. ஆனால் சந்திரபாபுவுக்கு ஒரே பயம். அவர் சரோஜா தேவியின் சொன்னதற்காக ஒரு நாடகத்தில் ரிக்ஷாக்காரன் வேஷம் போடுகிறார். பிறகு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். ஒரு நிஜ ரிக்ஷாக்காரன் (டபிள் ரோல்) சந்திர பாபு போலிருப்பதால் அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். டாக்டர் ரிக்ஷாக்காரன் ரோலில் மூழ்கிவிட்டதால் அவருக்கு மனம் பேதலித்துவிட்டது என்று சொல்கிறார். பிறகு ஒரே கூத்துதான். கடைசியில் உண்மை தெரிந்து ஜோடிகள் சேர்ந்து சுபம்!

சிவாஜி ஹீரோ என்றாலும் இது சந்திரபாபு படம். கொஞ்சம் நாடகத் தன்மை இருந்தாலும் நிறைய சிரிக்கலாம்.

பந்துலு பாலசுப்ரமணியம் ரங்காராவை பார்க்க வரும் காட்சி சூப்பர்! சிவாஜி ஆஃபீஸில் இருக்கும் பாபுவிடம் போய் அப்பா வந்திருப்பதை சொல்வார். அப்பா பந்துலு பாலசுப்ரமணியம் அங்கே நுழைந்ததும் சிவாஜி தான்தான் மானேஜர் போல் நடிப்பார். பிறகு ரங்காராவ் நுழையும்போது பாபு இங்க்லீஷில் போட்டு தாக்குவது அபாரம்! அடுத்த சீனில் பந்துலு, ரங்காராவ் இருவரும் ஒன்றாக உள்ளே நுழைவார்கள். இரண்டு பேரும் பந்துலுவின் பாலசுப்ரமணியத்தின் “மகனிடம்” பேசுவார்கள். வாயையே திறக்காமல் சிவாஜியும் பாபுவும் சமாளிப்பார்கள். அருமையான இந்த காட்சியை கீழே காணலாம்.

பாபுவுக்கு பேய் பிடித்துவிட்டது என்று அவரை தலை கீழே கட்டிப் போட்டிருப்பார்கள். பூசாரி “ஓடிட்ரயா” என்று கேட்பார். பாபு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தலைகீழா கட்டிபோட்டு ஓடிட்ரயா என்றால் எப்படிய்யா என்பார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.

ரிக்ஷாக்காரன் வீட்டுப் பக்கம் தவறுதலாக போய்விடும் பாபு ரிக்ஷாக்காரன் மனைவியை பார்த்து நீ யாரம்மா என்பார். கூச்சல் போட்டு எல்லாரும் வந்து உன் மனைவி குழந்தைகளையே யாரென்று கேட்கிறாயா என்று அடி போடுவார்கள். பாபு உடனே ஆமாமாம் என் மனைவிதான், என் குழந்தைகள்தான் என்று நாலு குழந்தைகளை அணைத்துக் கொள்வார். அடி போட்டவர்களில் ஒருவன் யோவ் அது என் குழந்தைய்யா என்று ஒரு குழந்தையை பிடுங்கிக் கொள்வான்!

ராண்டார்கை இந்த ரிக்ஷாக்காரன் ரோலை செய்ய பாபு கொஞ்ச நாள் ரிக்ஷா இழுத்து பார்த்தார் என்று சொல்கிறார்!

மாலினி வேறு எந்தப் படத்திலும் நடித்ததாக தெரியவில்லை. சரோஜா தேவி இரண்டாவது கதாநாயகி. அவர் சந்திரபாபுவுக்கு ஜோடியாக வேறு எதிலும் நடித்ததில்லை என்று நினைக்கிறேன். ரங்காராவுக்கு எக்சலண்ட், மார்வலஸ், அதாவது பிரமாதம் என்று இங்க்ளிஷும் தமிழும் பேசும் ஒரு அப்பா ரோல். குலதெய்வம் ராஜகோபாலுக்கு கொஞ்சம் பெரிய ரோல் என்று ஞாபகம். பாபு தனக்கு சிவாஜியை விட ஒரு ரூபாயாவது அதிக சம்பளம் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கிக் கொண்டாராம் என்று பக்ஸ் சொல்கிறான்.

நல்ல பாட்டுகள். இப்போது ஞாபகம் வருவது சித்திரம் பேசுதடி. என்ன அற்புதமான பாட்டு? சிவாஜிக்கு கொஞ்சமும் பொருந்தாத குரல் டி.ஏ. மோதி. அவர் காணா இன்பம் கனிந்ததாலே என்று ஒரு பாட்டு பாடி இருப்பார். இந்த இரண்டு பாட்டுகளையும் இங்கே கேட்கலாம். இதைத் தவிர ஆசைக் கிளியே கோபமா என்ற ஒரு நல்ல பாட்டும் நினைவில் இருக்கிறது. பாபுவுக்கு சீர்காழி குரல் கொடுத்திருப்பார்! அதுதான் முதலும் கடைசி முறையுமாக இருக்கும்! அதன் வீடியோவை இங்கே பார்க்கலாம்.

பாபு, பாட்டுகளுக்காக பாருங்கள். பத்துக்கு 7 மார்க். B grade.

ஸ்ரீதர் பற்றி எம்எஸ்வி


குமுதத்திலிருந்து:


இயக்குநர் ஸ்ரீதரின் படங்களுக்கு மறக்கமுடியாத பாடல்களைத் தந்தவர் எம்.எஸ்.வி. இயக்குநர் ஸ்ரீதர் பற்றிய தன் நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

“போலீஸ்காரன் மகள்’ படம் ஷூட்டிங் முடிந்து பூசணிக்காய் சுற்றி உடைக்கிற நேரம். டைரக்டர் ஸ்ரீதருக்கு என்ன தோணிச்சோ தெரியல. `பூசணிக்காய் உடைக்கவேண்டாம். இன்னும் ஒரு பாட்டு எடுத்தால் நல்லா இருக்கும்’னு சொல்லிவிட்டார். இருக்குற ஒரு நாள்ல எப்படி இது சாத்தியம்னு எல்லோருக்கும் குழப்பம். ஆனால் `என்ன செய்வீங்களோ தெரியாது கதாநாயகி இறந்த பிறகு சோகப்பாட்டு ஒன்று எடுக்கப் போகிறேன். விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் மூவரையும் தகவல் சொல்லி கூட்டிட்டு வாங்க’ன்னு சித்ராலயா கோபுகிட்ட சொல்லிட்டார். நாங்க உடனே போய் உட்கார்ந்து கம்போஸ் பண்ண, கவிஞர் `பூமறந்து போகிறாள்… பொட்டெடுத்துப்போகின்றாள் புன்னகையை சேர்த்தெடுத்து கன்னி மயில் போகின்றாள்’னு வேகமா எழுதி முடிச்சிட்டார். அருமையான பாட்டு. 20 நிமிஷத்துல ரெக்கார்டிங் முடிஞ்சது. சீர்காழி கோவிந்தராஜன் குரலில் கணீர்னு ஒலிச்சது. அதே வேகத்தில் இரண்டு மணி நேரத்துல பாட்டு படப்பிடிப்பை முடிச்சார் ஸ்ரீதர். அந்த வேகம் யாருக்கு வரும்? அதேபோல, நினைச்ச ட்யூன் வரலன்னா விடமாட்டார். இசைக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் அவர் படங்களில் தெரியும்.
மாசத்துல நாலு தடவை அவரைப் போய் பார்த்து பேசிட்டு வருவேன். போனவாரம்தான் பார்த்துட்டு வந்தேன். அதுதான் கடைசினு தெரியாமல் போச்சு” என்று கலங்குகிறார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.

நெஞ்சம் மறப்பதில்லை!.

அரசிளங்குமரி (Arasilankumari)


1961இல் வந்த படம். எம்ஜிஆர், பத்மினி, ராஜசுலோசனா, நம்பியார், தங்கவேலு, டி.ஏ. மதுரம், அசோகன், முத்துராமன் (இதுதான் முதல் படமாமே?) நடிப்பு. நம்பியாரின் அப்பாவாக வருவது யார்? ஜி. ராமநாதன் இசை. கலைஞர் கதை வசனம். பழம் பெரும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. வெற்றிப் படம்.

படம் வெளி வர தாமதம் ஆயிற்று என்று கேள்வி – நாடோடி மன்னனால் தாமதம் என்று சொல்வார்கள்.

ஜி. ராமநாதன் ஆச்சரியப்படுத்திவிட்டார். அவரது எல்லா படங்களிலும் கர்நாடக சங்கீதம் ஒரு அடி நாதமாக இருந்துகொண்டே இருக்கும். இந்தப் படத்தில் முக்கால்வாசி குத்து, கிராமப்புற மெட்டுக்கள்.

முதலில் நான் இதற்கு முன் கேட்டிராத, என்னை கவர்ந்த பாடல்கள்.
“ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு சேர்ந்து வருகிறார் வழியிலே” – வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. துரதிருஷ்டவசமாக பாட்டு நெட்டில் எங்கும் கிடைக்கவில்லை. வரிகளை வைத்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். பாடிய குரல்களில் டிஎம்எஸ் தவிர மற்ற குரல்கள் தெரியவில்லை. எம்ஜிஆரும் ராஜசுலோசனாவும் பார்க்க அழகாக இருந்தார்கள்.

“தூண்டிலிலே மாட்டிக்கிச்சு” – துடிப்பு நிறைந்த பாட்டு. இதுவும் நெட்டில் கிடைக்கவில்லை. ஒரு நாடகம் மாதிரி காட்சி அமைக்கப்பட்டிருந்தது – பார்க்க சுவாரசியமாக இருந்தது.

அடுத்த இரண்டும் நான் முன்னால் கேட்டு, எனக்கு பிடித்த பாட்டுக்கள்

“சின்னப் பயலே சின்னப் பயலே” மாஸ்டர்பீஸ். பட்டுக்கோட்டையின் ஸ்பெஷாலிடியே எளிமையான வார்த்தைகளில் அருமையான கருத்துகளை எழுதுவதுதான். டிஎம்எஸ் பிய்த்து உதறிவிட்டார்.

“தாரா அவர் வருவாரா” கு.மா. பாலசுப்ரமணியம் எழுதி எஸ். ஜானகி பாடியது. நல்ல பாட்டு. இதுதான் ராமநாதனின் முத்திரை உள்ள ஒரே பாடல். க்ளாசிக்கல் சங்கீதத்தின் தாக்கம் தெரிகிறது.

மிச்ச பாட்டுக்களை நான் கேட்டதில்லை.

“ஏற்றமுன்னா ஏற்றம்” பட்டுக்கோட்டை எழுதி சீர்காழியும் டிஎம்எஸ்ஸும் பாடியது. இரண்டு முறை கேட்டால் பிடித்துவிடும் என்று நினைக்கிறேன்.

இதை தவிர “தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும்” கண்ணதாசன் எழுதி சுசீலா பாடியது. “அத்தானே ஆசை அத்தானே” பிற்காலத்தில் பிரபலமான இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதி பி. லீலா பாடியது. கே.எஸ்.ஜிதான் நேற்று வந்தாளே மகராசி படத்துக்கு என் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டது.

இந்த படத்தின் பாட்டு கிடைக்காது அதிசயம்தான். ஒரு வேளை நான் தூக்க கலக்கத்தில் இருக்கிறேனா?

சின்னப் பயலே பாட்டு சமீபத்தில் திருட்டுப் பயலே படத்தில் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.

கதை எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. தளபதி நம்பியார் தான் ஒரு சாதாரண வீரன் என்று பொய் சொல்லி எம்ஜிஆரின் தங்கை பத்மினியை மணந்துகொள்கிறார். உழவர் மகனான எம்ஜிஆர் தன் பரம்பரை வாளை கொண்டுபோய்விட்ட நம்பியாரின் அப்பாவிடம் இருந்து அந்த வாளை மீட்டு வர செல்கிறார்.வழியில் ஆபத்தில் இருக்கும் இளவரசி ராஜசுலோசனாவையும் பிரமுகர் அசோகனையும் காப்பாற்றுகிறார். ராஜ சுலோ.வும் எம்ஜிஆரும் ஒருவரை ஒருவர் சைட் அடிக்க வசதியாக அசோகன் எம்ஜிஆரின் காவலில் சுலோவை விட்டுவிட்டு போகிறார். அவர்களும் பாட்டு எல்லாம் பாடிக்கொள்கிறார்கள். நம்பியார் ராஜாவாக ஆசைப்பட்டு பத்மினியை கழற்றிவிட்டுவிட்டு சுலோ பின்னால் ஸ்லோவாக போக ஆரம்பிக்கிறார். எம்ஜிஆர் ஒரு மல்லனை தோற்கடித்து தன் வீரத்தை நிரூபித்து நம்பியாரின் அப்பாவிடம் இருந்து தன் பரம்பரை வாளை மீட்கிறார். ஆனால் கிராமத்துக்கு போனால் பத்மினியும் நம்பியாரும் இல்லை. அவர்களை தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து நம்பியாரை கண்டு அதிர்ச்சி அடைகிறார். வீரம் இருந்தும் வாள் பயிற்சி இல்லாத எம்ஜிஆரை சுலோ முன்னால் சுலபமாக தோற்கடிக்கிறார். நடுவில் தன் தங்கை மகனை தூக்கிக்கொண்டு “சின்னப் பயலே சின்னப் பயலே” என்று புத்தி எல்லாம் சொல்கிறார். கணவன் சொல்லை தட்டாத பத்மினி நம்பியாரின் அப்பாவிடமே சேர்கிறார். எம்ஜிஆரும் நம்பியாரின் அப்பாவிடமே வாட்பயிற்சி பெறுகிறார். கடைசியில் நம்பியாரிடம் பெரிய சண்டை போட்டு, நம்பியார் திருந்தி, சுபம்!

எம்ஜிஆரும் நம்பியாரும் போடும் க்ளைமாக்ஸ் சண்டை பிரமாதம். எம்ஜிஆர் இரும்பு கையுறைகளோடு போடும் மல்யுத்தமும் அபாரம்.

கவுண்டருக்கு இந்த படம் என்ன இன்ஸ்பிரேஷனா? எம்ஜிஆரும் தங்கவேலுவும் ஒருவரை ஒருவர் “தேங்காய்ப்பூ தலையா” என்று கூப்பிட்டுக்கொல்கிறார்கள்.

எம்ஜிஆரும் சுலோவும் ஒருவரை ஒருவர் முட்டிக்கொள்கிறார்கள். ஆனால் திரும்பி முட்டிக்கொள்ளவில்லை. கொம்பு முளைத்துவிடும் என்ற பயமே இல்லையே!

டென்ட் கோட்டையில் பார்த்த அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது – பிரிண்ட் அவ்வளவு மோசம்!

அபூர்வமாக எனக்கு நம்பியாரின் நடிப்பு பிடித்திருந்தது. அவருடைய பாத்திரமும் one-dimensionalதான், ஆனால் நம்ப முடியாமல் இல்லை.

அசோகனை பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இதில் அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை. ஆசை காட்டி மோசம் செய்துவிட்டார்கள்.

பாட்டுக்களுக்காகவும், சண்டைகளுக்காகவும் பார்க்கலாம். 10க்கு 6 மார்க். C grade.

மேஜர் சந்திரகாந்த் II (Major Chandrakanth)


இந்த போஸ்ட் கிடைத்துவிட்டது. அன்னை கிடைக்கவில்லை, மீண்டும் எழுத வேண்டியதுதான் போலிருக்கிறது. நாளைக்குத்தான்.

1966இல் வந்த படம். பாலச்சந்தரின் புகழ் பெற்ற மேடை நாடகம். ஏவிஎம் தயாரிப்பில் அவரே இயக்கியது. மேஜர், முத்துராமன், ஜெயலலிதா, நாகேஷ், ஏவிஎம் ராஜன் நடித்தது. வி.குமார் இசை. வெற்றி அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன், நிச்சயமாக தெரியாது.

ஹிந்தியிலும் “ஊஞ்சே லோக்” என்று எடுத்திருக்கிறார்கள். மேஜருக்கு பதில் அசோக் குமார், முத்துராமனுக்கு பதில் ராஜ் குமார், ஏவிஎம் ராஜனுக்கு பதில் ஃபெரோஸ் கான், ஜெவுக்கு பதில் கே.ஆர். விஜயா.

நான் பார்த்து ஒரு இருபது இருபத்தைந்து வருஷம் இருக்கும். அப்போது தமிழில் வந்த மிக நல்ல படங்களில் ஒன்று என்று நினைத்தேன். நேற்று பார்த்திருந்தால் என் கருத்து ஒரு வேளை மாறி இருக்கலாம். நான் இங்கே எழுதுவது அன்றைய கருத்தை வைத்து.

இது பாலச்சந்தர் ஏஜிஸ் அலுவலகத்தில் வேலை செய்யும்போது எழுதப்பட நாடகமாம். முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாம். யாரோ தமிழ் தெரியாத மேலதிகாரி சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது அவரை வரவேற்க எழுதப்பட்டிருக்கிறது. பிறகு நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மேஜர் நடித்திருக்கிறார். ஏவிஎம் செட்டியார் நாடகத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆகி படமாக்க முன் வந்திருக்கிறார்.

வி. குமார் பிரமாதமான பாட்டுகளை போட்டிருக்கிறார். “நேற்று நீ சின்ன பாப்பா” என்ற பாட்டில் துள்ளல், “ஒரு நாள் யாரோ” என்ற பாட்டில் இனிமை, “கல்யாண சாப்பாடு போடவா” என்ற பாட்டில் குத்து, “துணிந்து நில்” என்ற பாட்டில் கம்பீரம். “நானே பனி நிலவு” என்பதும் நல்ல பாட்டுதான். இவரை தமிழ் திரை உலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. டிஎம்எஸ், சீர்காழி எல்லாரும் நன்றாக பாடி இருந்தாலும், சுசீலா எல்லாரையும் மிஞ்சிவிட்டார். “துணிந்து நில்” பாட்டு சுரதா எழுதியது. மற்ற எல்லாம் வாலி. “ஜிங்கிடுச்சான் ஜிங்கிடுச்சான் ஜிங்கிடிச்சிச்சான் சிச்சான் சான்” போன்ற காவிய நயம் மிக்க வரிகளை அந்த காலத்தில் எழுதக் கூடியவர்கள் தஞ்சை ராமையா தாசும் வாலியும்தான்.

“நேற்று நீ”, “ஒரு நாள் யாரோ”, “கல்யாண சாப்பாடு” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.

மேஜரின் மாஸ்டர்பீஸ் இதுதான். குருட்டுத்தனத்தை வெல்லும் தன்னம்பிக்கை, மன உறுதி, ஒழுக்கத்தின் மீதுள்ள அழுத்தமான நம்பிக்கை எல்லாவற்றையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். இதை விட சிறப்பாக அவர் நடித்ததில்லை. எவ்வளவோ திறமைசாலியான அவர் எப்போதும் ஒரு டம்மி அப்பா ரோலில் வந்து போனது கொடுமை. ஒரு விதத்தில் பார்த்தால் இந்த படத்தில் நடித்தது அவரது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும் – இதற்கு பிறகு முக்கால்வாசி படங்களில் அவர் நடித்தது திருப்பி திருப்பி இதே ரோல்தான்!

முத்துராமன் மிக அருமையாக நடித்திருப்பார். நாகேஷ் முதல் பகுதியில் சிரிக்க வைப்பார். அவர் அழ வைக்கும் இரண்டாவது பகுதி கொஞ்சம் மெலோட்ராமாவாக இருந்தாலும் மோசம் என்று சொல்ல முடியாது.

மேஜரின் நண்பராக வருபவர் யார்? யாருக்காவது தெரியுமா?

நல்ல plot. குருடரான ரிடையர்ட் மேஜர் மே. சுந்தரராஜன் தன் பலவீனத்தை உறுதியுடன் சமாளித்து வாழ்கிறார். அவரது முதல் பையன் முத்துராமன் கடமை தவறாத போலிஸ் அதிகாரி. இளைய மகன் ஏவிஎம் ராஜனோ ஒரு ப்ளேபாய். ஜெயை மயக்கி கைவிட்டுவிடுகிறார். ஜெ தற்கொலை செய்து கொள்ள, அவரது அண்ணன் நாகேஷ் ராஜனை தேடி கண்டுபிடிக்கிறார். ராஜனிடம் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் எதிர்பார்க்கும் அவரிடம் பயப்படும் ராஜன் பணம் தருகிறேன் என்னை விட்டுவிடு என்கிறார். வெறியில் நாகேஷ் ராஜனை கொன்றுவிட்டு தப்பி ஓடி, மேஜரின் வீட்டுக்குள் ஒளிகிறார். குருடராய் இருந்தாலும் மேஜர் நாகேஷ் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்து விடுகிறார். நாகேஷ் மேஜருக்கு கண் தெரியாது என்று தெரிந்து அதிசயப்படுகிறார். அவரிடம் தான் கொலை செய்ததை சொல்கிறார். மேஜருக்கு அது தவறாக தெரியவில்லை. ஆனால் நாகேஷ் தன் வீட்டில் ஒளிந்துகொள்ளக்கூடது என்று சொல்கிறார். நாகேஷ் மேஜரின் போலித்தனத்தை சாடுகிறார். பிறகுதான் அவருக்கு மேஜரின் மகன் போலீஸ்காரர் என்று தெரிகிறது. தான் கொலை செய்தது மேஜரின் இன்னொரு மகன் என்றும் தெரிகிறது. மேஜர் உடைந்துபோனாலும், நாகேஷ் செய்தது சரிதான் என்று சொல்கிறார். நாகேஷுக்கு இடம் கொடுக்கிறார். முத்துராமன் நாகேஷை கண்டுபிடித்து அவரையும் அவருக்கு இடம் கொடுத்த மேஜரையும் கைது செய்கிறார்.

“ஊஞ்சே லோக்” என்றால் “உயர்ந்த மனிதர்கள்” என்று அர்த்தம். மேஜர், நாகேஷ், முத்துராமன் ஆகியவர்களின் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே உயர்ந்தவர்கள்தான்.

சில காட்சிகள் பிரமாதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. மேஜர் தான் குருடனாக இருப்பதால் தனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை என்று நாகேஷுக்கு சொல்வார். வீட்டில் ஒவ்வொரு பொருளும் எங்கே இருக்கிறது என்று தனக்கு ஒரு கணக்கு இருக்கிறது என்று காண்பிப்பார். அடுத்த வினாடி கீழே விழுந்துவிடும்போது என்ன கணக்கு இருந்தாலும் கண் தெரியாத குறை எவ்வளவு பெரியது என்று தெரிகிறது.

“ஒரு நாள் யாரோ” படமாக்கப்பட்ட விதம் – ரேடியோவில் தங்கை ஜெ பாடுவதை தன் அக்கம்பக்கத்தார் கேட்க நாகேஷ் வாங்கும் ஓட்டை ரதியோ சரியாக எல்லாரும் வந்ததும் உடைந்துவிட, ஜெயை லைவ் ஆக பாட வைத்து, சமையல் பாத்திரங்களைக் கொண்டு நாகேஷ் இசை அமைப்பது அமர்க்களம்! காட்சியை அமைத்தவருக்கு ஒரு சபாஷ்! இதை youtubeஇல் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. வீடியோ இருந்தால் ரசிக்கலாம், யாராவது நல்ல மனம் upload செய்யுங்களேன்!

மீண்டும் பார்த்திருந்தால் ஒரு வேலை கொஞ்சம் நாடகத்தனம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வேறு குறைகள் எதுவும் எனக்கு தெரிந்திருக்காது என்று தோன்றுகிறது.

பார்க்க வேண்டிய படம். 10க்கு 7.5 மார்க். B+ grade.

கப்பலோட்டிய தமிழன் (Kappalottiya Thamizhan)


எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி படம் இதுதான். சிவாஜிக்கும் அப்படித்தான். தமிழின் சிறந்த படங்களில் ஒன்று. இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பே என் அம்மா எனக்கு இதைப் பற்றி ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தார். முதல் முறையாக பார்க்கும்போது பன்னிரண்டு வயதிருக்குமோ என்னவோ. வ.உ.சிக்கு தண்டனை அளிக்கப்பட்டதும் தூத்துக்குடியே பற்றி எரிவது போல் ஒரு காட்சி உண்டு. அந்தக் காட்சியில் எனக்கும் எதையாவது உடைக்கவேண்டும் என்று தோன்றியது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

ஓரளவு வயது வந்த பிறகுதான் சிவாஜி என்ற இமேஜைத் தாண்டி வ.உ.சி. என்ற ஒரிஜினல் மீது பிரமிப்பு உண்டாக ஆரம்பித்தது. பணக்கார பின்னணி. தூத்துக்குடி நகரத்தையே தன் கட்டுக்குள் வைக்கும் leadership skills. பலரையும் பணம் முதலீடு செய்யவைத்து, ஒரு கம்பெனியை உருவாக்கி established கம்பெனியுடன் போட்டி போட்டு சமாளிக்கும் management skills. ஆங்கில அரசை எதிர்த்தால் ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது தெரிந்தும் எதிர்த்த தைரியம். அவரை அந்த ஆபத்தை நோக்கி செலுத்திய சக்தி எது? எப்படி இது அவரால் முடிந்தது? என்னால் முடியாத விஷயம். இவராவது அதற்கு பிறகு பெரிய ரிஸ்க் எடுக்கவில்லை.சுப்ரமணிய சிவா அதற்குப் பிறகும், தொழுநோய் தாக்கிய பிறகும், சாகும் வரை போராடினார். இந்த உறுதி இவர்களுக்கு எப்படி ஏற்பட்டது?

வ.உ.சியின் இமேஜை உருவாகியதற்கு பெரிய காரணம் ம.பொ. சிவஞானம் எழுதிய கப்பலோட்டிய தமிழன் என்ற புத்தகம். 1946இலோ என்னவோ முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. பிறகு சின்ன அண்ணாமலை அதை பிரமாதமாக மார்க்கெட் செய்து பிரபலமாக்கினார். இந்த படத்துக்கும் “மூலக்கதை” அந்த புத்தகம்தான். தற்செயலாக மயிலாப்பூரில் உள்ள பூங்கொடி பதிப்பகத்தில் ஒரு முறை நுழைந்தபோது இந்த புத்தகத்தின் மறுபதிப்பு கிடைத்தது. ம.பொ.சிக்கு இவர் ஒரு தெய்வப்பிறவி என்பது தெளிவாகத் தெரிந்தது. இன்று நாட்டில் வ.உ.சி. பற்றி இருக்கும் இமேஜ் இந்தப் புத்தகத்தின் மூலமும், இந்த படத்தின் மூலமும் உருவானவையே. அதனால் இவரைப் பற்றிய நடு நிலைமையான மதிப்பீடு சரியாக பிடிபடவில்லை. என் வாழ்க்கையில் இவரைப் பற்றிய ஒரு criticism கூட நான் படித்ததில்லை. உதாரணத்துக்கு ஒன்று. இவர் ஜெயிலில் இருந்து வெளி வந்தது 1912இல். 1936இல் இறந்தார். அரசியலில் இருந்து விலகிவிட்டார். Jail broke him. தவிர பணக் கஷ்டங்கள், குடும்பக் கஷ்டங்கள். அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. இதில் தவறென்ன இருக்கிறது? இந்த உண்மையை ஒத்துக்கொண்டால் அவரது தியாகங்கள் மகத்தானவை இல்லை என்று ஆகிவிடுமா என்ன? ஆனால் எல்லாரும் அவருக்கு காந்திய வழி பிடிக்காததால்தான் அரசியலில் இருந்து விலகிவிட்டார் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். இது ஒன்றுதான் காரணம் என்றால் 1912இலிருந்து திலகர் மறைந்த 1920 வரைக்கும் ஈடுபட்டிருக்கலாமே? நம் நாட்டில் ஒரு ஹீரோவின் மேல் ஒரு சின்ன மறு கூட இருக்ககூடாது!

அடுத்த முறை இந்த படத்தை பார்த்தால் எந்த வித preconceived notionsஉம் இல்லாமல் ஒரு சினிமா என்ற அளவில் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். படத்தில் ஓட்டைகள் தெரிகின்றன, இருந்தாலும் இது ஒரு நல்ல படம் என்பது நிச்சயமாக தெரிந்தது.

முதலில் ஓட்டைகள்:

  1. வ.உ.சியும் சிவாவும் கலெக்டர் வின்ச்சிடம் பேசும் காட்சி ரொம்ப ஓவர். பாரதி எழுதிய இரண்டு பாட்டுகளை வைத்துக்கொண்டு இந்த காட்சியை உருவமைத்திருக்கிறார்கள். ஆனால் ஜில்லா கலெக்டரிடம் அவரது ஆதிக்க வெறியைப் பற்றி ஒரு திறமையான மானேஜரான வ.உ.சி. பேசி இருப்பார் என்பது நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் (கட்டபொம்மன் ஜாக்சன் துரையிடம் பேசும் காட்சியைப் போல) மிகவும் என்ஜாய் செய்த காட்சி இது.
  2. ஜெமினி, சாவித்ரி பகுதி எதற்கு? ஒரே லாபம் A++ grade பாட்டான “காற்று வெளியிடை“தான். அதுவும் அந்த வெடிகுண்டு காட்சிகள் சுத்த வேஸ்ட்.
  3. பிரிட்டிஷ் கம்பெனி இலவசமாக டிக்கெட் தந்ததா என்று தெரியாது, ஆனால் அப்படி அவர்கள் தந்திருந்தால் வியாபாரிகளும் பிரயாணிகளும் அதில்தான் போயிருப்பார்கள். வ.உ.சியின் கம்பெனி திவால் ஆக வேண்டியதுதான். விக்கிபீடியாவிலிருந்துTo thwart the new Indian company they resorted to the monopolistic trade practice of reducing the fare per trip to Re.1 (16 annas) per head. Swadeshi company responded by offering a fare of Re.0.5 (8 Annas). The British company went further by offering a free trip to the passengers plus a free umbrella, which had ‘S.S.Gaelia’ and ‘S.S.Lawoe’ running nearly empty. By 1909 the company was heading towards bankruptcy. இந்த உண்மையை ஒத்துக்கொண்டால் என்ன குறைந்துவிடும்? எதற்காக தன் பேச்சினால் வ.உ.சி. பிரயாணிகளையும், சரக்குகளையும் சுதேசி கப்பலுக்கு திருப்பினார் என்று காட்ட வேண்டும்?
  4. வ.உ.சி. ஒரு தலித்தை தத்து எடுத்துக்கொண்டார் என்பதெல்லாம் டூ மச். 1960இன் மதிப்பீடுகளை 1905இல் சுமத்தும் முயற்சி.
  5. 1960இல் எல்லாரும் மேல் சட்டையோடு அலைந்தார்களா? முக்கால்வாசி பேர் மேல் துண்டோடுதான் திரிந்திருப்பார்கள். இங்கே நாவிதர் கூட மேல் சட்டையோடுதான் அலைகிறார். பிராமணர் வீட்டு நடுக் கூடத்தில் தலையை மழிக்கிறார்.
  6. 1905இல் சாவித்ரி வயது பெண்ணுக்கு பெண்மணிக்கு அது வரை திருமணம் ஆகாமல் இருக்குமா?

1962இல் வந்த படம். சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, டி.கே. ஷண்முகம் (சுப்ரமணிய சிவா), எஸ்.வி. சுப்பையா(பாரதி), நாகையா, ஃப்ரெண்ட் ராமசாமி, ஓ.ஏ.கே. தேவர், டி.எஸ். துரைராஜ், ஏ. கருணாநிதி, டி.பி. முத்துலக்ஷ்மி, எஸ்.வி. ரங்காராவ், அசோகன், பாலாஜி (வாஞ்சிநாதன்), சாரங்கபாணி நடித்திருக்கிறார்கள். பி.ஆர். பந்துலு தயாரித்து திலகராகவும் நடித்திருக்கிறார். ஜி. ராமநாதன் இசை. எல்லாமே பாரதி பாடல்கள். இயக்கம் பந்துலு என்று நினைக்கிறேன், நிச்சயமாகத் தெரியவில்லை. வழக்கம் போல டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன், அதனால் நடிகைகள் பலரை அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை. சிதம்பரத்தின் மனைவியாக நடிப்பவர் யார்? ருக்மிணியாம். இவர் யாரென்று தெரியவில்லை. சாரதா, help! பிரபல நடிகை லக்ஷ்மியின் அம்மாவாம். (நன்றி, நல்ல தந்தி!)

வந்த புதிதில் இது ஒரு காங்கிரஸ் படம் என்ற கருத்து பரவலாக இருந்ததுதான் இது சரியாக ஓடாததற்கு காரணம் என்று எங்கேயோ படித்தேன். இது நன்றாக ஓடவில்லை என்பது ஒரு பெரிய சோகம். இதனால்தான் பாரதி படம் வர இத்தனை நாட்கள் ஆனதோ?

எஸ்.வி. சுப்பையாவின் நடிப்பு அபாரம். அவர் காட்டும் வேகம், “சொல்லிக் கொள்ளும். நன்றாக நானூறு முறை சொல்லிக் கொள்ளும்” என்று சொல்லும் அலட்சியம், மனைவி இரவல் வாங்கி வைத்திருக்கும் அரைப் படி அரிசியை குருவிகளுக்கு போடும் other worldliness, கடன்காரர்களிடம் “பராசக்தி கொடுப்பாள்” என்று சொல்லும் கையாலாகத்தனம் எல்லாமே அருமை. திரைக்கதை அமைத்தவருக்கு ஒரு சபாஷ்!

சிவாஜி சில சமயங்களில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தாலும், அது செயற்கையாகத் தெரியவில்லை. சிதம்பரத்தின் உறுதி, திறமை எல்லாவற்றையும் அருமையாக கொண்டு வந்திருக்கிறார். மிக சிறப்பான நடிப்பு! கட்டபொம்மனை அவரது மாஸ்டர்பீஸ் என்று சொல்வார்கள். அதன் திரைக்கதையில் ஒரு கூத்தின் செயற்கைத்தனம் இருக்கிறது. இந்த திரைக்கதையில் வெகு சில இடங்களில்தான் செயற்கைத்தனம் இருக்கிறது. திரைக் கதை அவரை ஒரு குறையும் இல்லாத மனிதராக சித்தரிப்பது ஒன்றுதான் குறை. மாசு மறுவற்ற நாயகனாக இல்லாமல் தன் குறைகளை வெல்லும் நாயகனாக சித்தரித்திருந்தால் சிவாஜியின் பாத்திரம் இன்னும் சோபித்திருக்கும்.

ஜி. ராமநாதனின் மாஸ்டர்பீஸ் இதுதான். திருச்சி லோகநாதனையும் சீர்காழியையும் பாடகர்களாக தேர்ந்தெடுத்தது ஒரு மாஸ்டர்ஸ்ட்ரோக். “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்“, “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்“, “வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம்“, “காற்று வெளியிடை கண்ணம்மா”, “ஓடி விளையாடு பாப்பா“, “வந்தே மாதரமென்போம்“, “நெஞ்சில் உரமுமின்றி“, “பாருக்குள்ளே நல்ல நாடு” எல்லாமே டாப் க்ளாஸ் பாட்டுக்கள். A++ grade பாட்டுக்கள். “உணவு செல்லவில்லை சகியே“, “சின்னக் குழந்தைகள் போல் விளையாடி” இரண்டுதான் ஒரு மாற்று கம்மியான பாட்டுக்கள். எல்லா பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.

பார்க்க வேண்டிய படம். பத்து superb பாட்டுக்கள், அருமையான நடிப்பு, ஒரு inspirational “நிஜக்”கதை. வேறென்ன வேண்டும்?10க்கு 8 மார்க். A grade.

P.S. இன்று (செப்டெம்பர் 10) காலை குமுதம் ரிபோர்ட்டரில் மதுரையில் வ.உ.சி. சிலைக்கு அருகே கம்யூனிஸ்ட் கட்சி எங்கோ தலித்துக்களுக்காக போராடுவதால் கோபம் அடைந்த சில பிள்ளைமார்கள் தி.மு.க. மூலம் வ.உ.சி.யை கம்யூனிஸ்ட்கள் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று தகராறு செய்வதாக படித்தேன். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. வ.உ.சியின் அடையாளம் அவர் பிள்ளை என்பது அல்ல. உ.வே.சாவின் அடையாளம் அவர் ஐயர் என்பது அல்ல. இவர்களின் பெயரில் இருக்கும் ஜாதிப் பெயர் அந்தக் காலத்து நாகரீகம், அவ்வளவுதான். தமிழ் நாட்டுக்கே ஆதர்சம் ஆன ஒருவரை ஏனய்யா ஒரு சின்ன ஜாதி வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கிறீர்கள்?

P.P.S நடிகர் திலகம் சைட்டில் உள்ள விமர்சனம் என் கருத்தில் முழுமையாக இல்லை. சாரதா, உங்களுக்கு வேறு ஏதாவது இங்கே லிங்க் செய்யக்கூடிய விமர்சனம் தெரியுமா?

வயலின் நாதத்துக்கு ஒரு வைத்யநாதன் (Kunnakkudi vaidyanathan)


குன்னக்குடி வைத்யநாதன் மறைந்துவிட்டார். சில purists அவர் gimmicks மூலம் வயலின் வாசிப்பை கொச்சைப்படுத்துகிறார் என்று சொன்னதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் வயலினை என்னை மாதிரி கர்நாடக சங்கீதம் பற்றி தெரியாதவர்களுக்கும் கொண்டு போய் சேர்த்தார். அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள். tfmpage அஞ்சலி இங்கே. சுதாங்கன் என்பவரின் நல்ல போஸ்ட் இங்கே.

இந்த ப்ளாகில் அவரது சினிமா பங்களிப்பை பற்றி மட்டும்தான் எழுதலாம். அதுதான் பொருத்தம் என்பது மட்டும் அல்ல, எனக்கு அதுதான் தெரியும்.

ஏ.பி. நாகராஜனுடன் அவர் அமைத்த கூட்டணி அருமை. சில தேவர் முருகன் படங்களுக்கு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். சாமி பாட்டு போடுவதில் கே.வி. மகாதேவனுக்கு பிறகு அவர்தான். ஒன்றிரண்டு எம்ஜிஆர் சிவாஜி படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். முதலில் எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் குழுவிலே வயலின் வாசித்திருக்கிறார்.

சினிமா உலகில் அவரது பங்கு குறைவுதான். பத்து பனிரண்டு படங்களுக்கு இசை அமைத்திருந்தால் அதிகம். ஆனால் நல்ல இசை அமைப்பாளர். வயலினுக்கோ நாதர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் ஏதாவது ஒரு படத்தை போட்டால் நன்றாக இருக்கும் 

இனி வருவது ஒரு listing exercise. இசை அமைத்த படங்கள், பாடல்களின் லிஸ்ட், அவ்வளவுதான். விவரங்கள் முழுமையாக இல்லை, நீங்கள் யாராவது சொன்னாலோ, இல்லை பின்னால் ஞாபகம் வந்தாலோ, நெட்டிலிருந்து பிட் அடிக்க முடிந்தாலோ முழுமைப் படுத்துகிறேன்.

அவர் இசை அமைத்த படங்கள்:

ஏ.பி. நாகராஜனுடன்:
வா ராஜா வா: இசை அமைத்த முதல் படம். 1968. மஹாபலிபுரத்தில் கைடாக இருக்கும் ஒரு சின்னப் பையன் சந்திக்கும் மனிதர்களை பற்றி என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை.

  1. கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா
  2. இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான்
  3. உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே 
  4. ஆடிப்பாடி சிரிக்க வைப்பது எங்க ஊருங்க
  5. சிறு குழந்தை வடிவினிலே தெய்வம் வந்து பேசுதம்மா

அகத்தியர்: சீர்காழி அகத்தியராக நடித்தது.

  1. தலைவா தவப் புதல்வா
  2. நமச்சிவாய என சொல்வோமே
  3. இசையாய் தமிழாய் இருப்பவனே
  4. வென்றிடுவேன் எந்த நாட்டையும் ராகத்தால் வென்றிடுவேன்
  5. தாயிற் சிறந்த கோவிலுமில்லை
  6. நடந்தாய் வாழி காவேரி
  7. உலகம் சம நிலை பெற வேண்டும்
  8. ஆண்டவன் தரிசனமே
  9. மலை நின்ற திருக்குமரா

கண்காட்சி: சென்னையில் நடைபெறும் எக்சிபிஷனில் நடக்கும் கதை.

  1. அனங்கன் அங்கதன் என்றும்
  2. காடை பிடிப்போம் கௌதாரி பிடிப்போம்  

ராஜ ராஜ சோழன்: இசை அமைத்த முதல் சிவாஜி படம்.

  1. தென்றலோடு உடன் பிறந்தாள்
  2. தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே
  3. நாதனை கண்டேனடி
  4. ஏடு தந்தானடி தில்லையிலே 

மேல் நாட்டு மருமகள்: வெள்ளைக்கார மருமகள் பிழிந்தால் ஒரு லிட்டர் கிடைக்கும் அளவுக்கு தமிழ் பண்பாட்டில் ஊறிவிடுவாள்.

  1. முத்தமிழில் பாடி வந்தேன்
  2. Come along sing with me

நவரத்தினம்: இசை அமைத்த ஒரே எம்ஜிஆர் படம்

  1. குருவிக்கார மச்சானே

தேவருடன்:
தெய்வம்: பட்டிதொட்டி எல்லாம் ஒலித்த “மருத மலை மாமணியே” இந்த படத்தில் மதுரை சோமு பாடியதுதான்.

  1. மருத மலை மாமணியே
  2. குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
  3. வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
  4. திருச்செந்தூரில் போர் புரிந்து
  5. திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
  6. றைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான் நாடறியும் நூறு மலை நானறிவேன் சுவாமிமலை (பித்துக்குளி முருகதாஸ்)
திருவருள்:
  1. கந்தன் காலடியை வணங்கினால்
  2. மருத மலைக்கு நீங்க வந்து பாருங்க
  3. கண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
  4. மாலை… வண்ண மாலை, இந்த உலகத்தில் ஆயிரம் மாலை 

மற்றவை:
மனிதனும் தெய்வமாகலாம்: இசை அமைத்த இன்னொரு சிவாஜி படம்

  1. என்னடா தமிழ்க்குமரா..
  2. பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்.

திருமலை தென்குமரி: ஒரு road trip படம். திருப்பதி, குருவாயூர் மாதிரி இடங்களுக்கு பெரிய கும்பலாக பாட்டு பாடிக் கொண்டே டூர் போவார்கள்.

  1. பாடணுண்ணு மனசுக்குள்ளே ஆச நிறைய கீது
  2. குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
  3. அழகே தமிழே நீ வாழ்க
  4. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
  5. மதுரை அரசாளும் மீனாட்சி
  6. நீலக்கடல் ஓரத்திலே நிலம் கொண்டு செல்லாமல்
  7. சிந்தனையில் மேடை கட்டி கந்தனையே ஆட வைத்தேன்

காரைக்கால் அம்மையார்:

  1. தகதகதக தகதகவென ஆடவா

தோடி ராகம்: குடும்பப் படம். படத்தின் எல்லா பொறுப்புகளையும் குன்னக்குடியின் குடும்பத்தினரே ஏற்றனராம். பார்த்ததும் அந்த ஒரே குடும்பம்தான் என்று கேள்வி.

நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு! (Hello Partner)


நேற்று வீட்டில் புரட்சி வெடித்தது. படத்தைப் போட்ட ஐந்தாவது நிமிஷத்தில் என் மனைவி “நாகேஷ்தான் heroவா? இது உங்களுக்கே அடுக்குமா?” என்று சொல்லி ரிமோட்டை வெற்றிகரமாக கைப்பற்றினாள். என் பெண்களோ Hannah Montanaவில் முழுகி இருந்தனர். அதுவும் என் 4 வயதுப் பெண்ணுக்கு ஒரு boss fixation உண்டு. அவளிடம் நான் தெரியாத்தனமாக “You are my boss” என்று சாயங்காலம்தான் சொல்லி இருந்தேன். “If I am the boss, I get to watch my TV, daddy!” என் எடை பலம், அவர்கள் குரல் பலத்தையும் கண் பலத்தையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக என் மனைவியின் பக்க பலத்தையும் ஜெயிக்க முடியவில்லை.

ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னால்தான் என்னால் பார்க்க முடிந்தது. பாதிக்கு பிறகு பார்ப்பது ரொம்ப கொடுமை – அரை மணி கஷ்டப்பட்டு பார்த்தேன், அவ்வளவுதான். அதனால் இன்று விமரிசனம் எழுதமுடியவில்லை. பார்த்த வேறு யாராவது எழுதுங்களேன்! நடுவில் ஒரு படத்தை விட்டுவிடுவதற்கு என்னவோ போல் இருக்கிறது. ப்ளீஸ்!

இந்த படத்தைப் பற்றி எனக்கு தெரிந்த சில விவரங்கள். 1972இல் வந்தது. இதே கதையை 1981இல் “எல்லாம் இன்ப மயம்” என்று கமல், ஜெய்ஷங்கர் நடிக்க பஞ்சு அருணாசலம் எடுத்தாராம். ஹலோ பார்ட்னர், எ.இ. மயம் இரண்டுக்குமே பஞ்சு அருணாசலம்தான் கதை வசனம் என்று உப்பிலி ஸ்ரீனிவாஸ் தகவல் தருகிறார். 1970களின் முற்பாதியில் சித்ரமகால் குழுவினர் (சித்ரமகால் கிருஷ்ணமூர்தி, பஞ்சு அருணாசலம்) லோ பட்ஜெட் நகைச்சுவை படங்கள் சிலவற்றை எடுத்தனர். சாதாரணமாக நாகேஷ்தான் கதநாயகன். விஜயலலிதா கதாநாயகி. எம்.ஆர்.ஆர். வாசு, வி.கே. ராமசாமி, தேங்காய், சுருளிராஜன் பொன்ற நகைச்சுவை நடிகர் பட்டாளமே நடிக்கும். (இதில் சச்சுவும் இருந்தார்). இந்தப் படம் லாபம் பார்த்திருக்கும் போலிருக்கிறது. இதைப் போலவே இந்த கோஷ்டி எடுத்த இன்னொரு (சகிக்க முடியாத) நகைச்சுவை படம் “தேன் கிண்ணம்“. (அதுவும் இந்த ப்ரோகிராமில் திரையிடப்பட்டது. அதையும் நான் பாதி படம்தான் பார்த்தேன். அதில் முன் பாதிக்கு பிறகு ஓடிவிட்டேன், இதில் பின் பாதி). விஜயலலிதாவின் கவர்ச்சியையும் நம்பி இந்த படங்கள் எடுக்கப்பட்டன. (அந்தக் காலத்து கவர்ச்சி – டைட்டான பான்ட் போட்டுக்கொண்டு வருவார், அவ்வளவுதான். இதை நம்பி யாரும் இந்தப் படங்களை பார்க்காதீர்கள்). 1973இல் வந்த “கல்யாணமாம் கல்யாணம்”உம் இந்த கோஷ்டிதான் எடுத்தது என்று நினைவு.

இசை அமைத்தவர் தாராபுரம் சுந்தரராஜன். இந்தப் படத்தில் “டிங்டாங் டிங்டாங் டிங்கியாலோ” என்ற ஒரு க்ளப் டான்ஸ் பாட்டை கேட்டிருக்கிறேன்.

தாராபுரம் சுந்தரராஜனுக்கு அதிர்ஷ்டம் கட்டை. நல்ல குரல், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. நாகேஷும் தாராபுரத்துக்காரர்தான். நாகேஷின் சிபாரிசோடு திரைப்படங்களில் பின்னணி பாடகராக நுழைய முயன்றார். எனக்குத் தெரிந்து அவர் பாடிய ஒரே வெற்றிப் பாட்டு “செல்வம்” படத்தில் இடம் பெற்ற “உனக்காகவா நான் எனக்காகவா”தான். ஜமுனா ராணியுடன் இணைந்து பாடியது. “ஆயிரம் பொய்” விமரிசனத்தில் நானும் tfmpage.காமிலிருந்து கட்-பேஸ்ட் பண்ணி இருந்தேன் – “தமிழ் விடு தூது முன்னாலே” என்று மனோரமாவுடன் ஒரு பாட்டு பாடி இருந்தார். “திருமலை தென்குமரி” படத்தில் “அழகே தமிழே நீ வாழ்க” என்ற பாட்டை பலரோடு இணைந்து பாடி இருக்கிறாராம். அந்தப் பாட்டில் சீர்காழியின் கம்பீரமான குரல் மற்ற எல்லார் குரலையும் டாமினேட் செய்துவிடுகிறது, இவர் குரல் என் நினைவில் கேட்கவில்லை. 1979இல் நீச்சல் குளம் என்ற படத்துக்கும் இசை அமைத்தாராம், அந்தப் படத்தில் “ஆடிப் பதினெட்டு” என்று எஸ். ஜானகி பாடும் பாட்டு நினைவிருக்கிறது. முறைப்படி இசை பயின்ற அவர் சென்னை இசைக் கல்லூரியிலும் பணி புரிந்தாராம். 1999இல் இறந்துவிட்டார்.

“உனக்காகவா எனக்காகவா” பாட்டை இங்கே கேட்கலாம்.

மீண்டும் கேட்டுக்கொள்ளுகிறேன், ப்ளீஸ், யாராவது விமரிசனம் எழுதுங்களேன்!

நண்பர் ராஜா அனுப்பி இருக்கும் குறிப்பு:

முதலாளியால் ஜெயிலுக்கு அனுப்பப்படும் அப்பாவி ஹீரோ (அப்பாவியை வச்சுகிட்டு காரியத்தை சாதிக்காம ஏன் ஜெயிலுக்கு அனுப்பறானுக மட முதலாளிகள்?) திரும்பி (வெவரமா) வந்து முதலாளிக்கு குடைச்சல் கொடுக்கும் கதை. (கொஞ்சம் கதை, நிறைய கவர்ச்சி..[வேறொரு வார்த்தை எழுத எண்ணி தவிர்த்துவிட்டேன்] லீலான்னு ஒரு பொண்ணு.. {தமிழ்வாணனின் காதலிக்க வாங்க.. தேவரின் கெட்டிக்காரன் போன்ற படங்களில் நடிச்சிருக்கு.. போணியாகாத பொண்ணு .. பாவம். குரு படத்தில் சைடு வில்லி.. கடைசி காட்சியில் ஸ்ரீதேவியோடு ஃபைட் போடும்} தேங்காயின் மனைவியா வந்து பொடவையைத் தவிர மத்த எல்லா ட்ரெஸ்ஸும் போட்டுகிட்டு தரை டிக்கெட்டை வாழவைக்கும்)

ஒவ்வொரு தடவையும் வில்லனுக்கு குடைச்சல் கொடுத்துட்டு, போன் ப‌ண்ணி, “ஹலோ பார்ட்னர்..!”ன்னு ஆரம்பிச்சு நாகேஷ் டயலாக் பேசி டைட்டிலை நியாயப்படுத்துவார். வில்லனின் சன் தேங்காய்.. தத்தி.. அசடு என்பதால் மட்டுமல்ல.. தண்ணியடிச்சுட்டு தத்தி தத்திதான் தவழ்வார்.

ஹ்ம்ம்ம்ம் .. என்னவோ நெனச்சு எடுத்து எப்படியோ முடிஞ்ச படம்.. என் விமர்சனத்தைப் போல..!

போஸ்டர்களின் கைங்கர்யத்தால் படுதோல்வி.. ( நான் 4 தடவை பார்த்துட்டேன்.. இருந்தும் கதையைக் கவனிக்கல..சாரி..!)

தொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்