எம்.ஜி.ஆரின் முதல் ரசிகன் !!


‘ஞானாம்பிகா’ ஜெயராமன் கூறுகிறார்…..

எம்.ஜி.ஆர். திரையுலகிலும், அரசியலிலும் கொடி கட்டி வாழ்ந்த காலத்தில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் முதல் ரசிகன் நான்தான் எனச் சொல்லிக் கொள்கிற பெரும் பாக்கியமும் உரிமையும் எனக்கு உண்டு.

அப்போது எனக்கு 13 வயது. எம்.ஜி.ஆருக்கு 16 வயது. கும்பகோணம் பாணாதுறை ஏரியாவில் இருந்த ஒரு பெட்டிக்கடைக்காரர்தான் எம்.ஜி.ஆரைத் தத்தெடுத்து வளர்த்தார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். துளியளவும் பெயர் பெற்றிருக்கவில்லை. ஆனால், பார்ப்பவர்களை நின்று நிலைத்துத் திரும்பிப் பார்க்கிற அளவுக்கு எம்.ஜி.ஆர். பேரழகுடன் இருந்தார். செக்கச் சிவந்தவரான எம்.ஜி.ஆரை எப்படியும் சினிமாவில் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு குஸ்தி விளையாட்டு கற்றுக் கொடுத்தார்கள்.

பாணாதுறையில் இருந்த அசேன் உசேன் என்கிற பிரசித்தி பெற்ற குஸ்தி வாத்தியார்தான் எம்.ஜி.ஆருக்குப் பயிற்சி கொடுத்து வந்தார். எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் அழகை தினமும் வேடிக்கை பார்ப்பேன். என்னோடு இன்னும் சிலரும் எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் வேகத்தைக் கண்டு வியந்து பேசுவார்கள். குஸ்தி கற்க வரும் எம்.ஜி.ஆரிடம் பல முறை வலியப் போய் பேசியிருக்கிறேன். நான் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். சினிமாவுக்குப் போகப் போகிறார் என்பதாலேயே பலரும் அவரோடு நெருங்கி வந்து பேசுவார்கள். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர்.  அதிகம் பேச மாட்டார். அவராக நம்மைப் பார்த்து ஒரு வார்த்தை கேட்க மாட்டாரா எனப் பல முறை ஏங்கி இருக்கிறேன்.
https://i0.wp.com/www.mgrhome.org/Pictures/image005.gif
பல வருடங்களுக்குப் பிறகு அவரே வாய் குளிர என்னையும், எனது சமையலையும் பாராட்டுகிற நேரம் எனக்கு வாய்த்தது. எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்குப் போய் தன் உடல்நிலையைச் சரிசெய்து கொண்டு திரும்பி வந்த நேரம். அவர் குணமடைந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அன்னதான  விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான முழுப் பொறுப்பும் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். மீது பேரபிமானம் கொண்டிருந்த எனக்கு சொல்ல வேண்டுமா என்ன? சாதத்தை மலை போல் சமைத்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்க கடகடவென ஏற்பாடு செய்தேன். அண்ணாமலையாரின் திருவுருவத்தை சாப்பாட்டாலேயே ஜோடித்து வைத்திருந்தேன். ஆனால் அந்த அன்னதான விழாவுக்கு எம்.ஜி.ஆரால் வர முடியாத சூழல். இருந்தாலும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் சாதத்தாலேயே வடிவமைக்கப்பட்ட அண்ணாமலையாரின் திருவுருவத்தைப் பற்றிய விஷயங்களை எல்லாம் சொல்லி எம்.ஜி.ஆரை அழைத்து வந்து விட்டனர்.

ஜானகி அம்மையாருடன் எம்.ஜி.ஆர். அந்த அன்னதான விழாவுக்கு வந்தார். சாதத்தால் உருவாக்கப்பட்ட அண்ணாமலையாரின் உருவத்தைக் கண்டார். அவர் என்ன சொல்லிப் பாராட்டப் போகிறார் எனப் புரியாமல் ஏக்கமாக நின்று கொண்டிருந்தேன். ‘இந்த ஏற்பாட்டை யார் செய்தது?’ எனக் கேட்டார். அருகே நின்ற அனைவரும் என்னைக் கைகாட்டினார்கள். சட்டென என் கையைப் பிடித்தவர், ‘இது அண்ணாமலையா…. இல்லை  அன்னமலையா!’ எனக் கவிதை பாணியில் பாராட்ட, நான் புல்லரித்துப் போனேன்.  அவரது சாதாரண வார்த்தைகளைக் கேட்கவே ஏங்கிய எனக்கு, அவர் வாஞ்சையோடு வாரியணைத்து வாழ்த்துச் சொனனபோது என்னையும் மீறி ஆனந்த அழுகை வந்துவிட்டது!


ஆசிரியர்: ஜெயராமன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: சமையல்
ISBN எண்: 978-81-8476-103-0
விலை:  ரூ. 45விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

ஒவ்வொரு டிசம்பர் சங்கீத சீஸனிலும் சென்னை நாரதகான சபாவில் ஞானாம்பிகாவின் கேன்டீன் ரொம்பப் பிரபலம். சபாவில் நடக்கும் கச்சேரிகளைக் கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ஞானாம்பிகாவின் அடை & அவியலுக்கு அணி திரண்டு வருபவர்கள் அநேக‌ர்! இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ வாங்கோ என்று வாய் நிறைய வாஞ்சையோடு அழைத்து விருந்தோம்பல் செய்யும் ஞானாம்பிகா ஜெயராமனின் குழுவினர் அதிகம் சம்பாதிப்பது நற்பெயரை!
தமது நிறுவனத்தின் பெயரை வாசித்தாலே, வயிறு நிறைகிற அளவுக்கு புகழையும் பூரிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஜெயராமன். தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி ஏங்கித் திரிந்த சோகத்தை அவர் சொல்கிறபோது மனது சுருக்கென வலிக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரையும் சுற்றிப் போடும் வலைப் பின்னலையும், அதன் திணறடிப்புகளையும் அவை அழுத்தமாக உரைக்கின்றன. அதே நேரம் உழைப்பும் திறமையும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக உயர்வு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதற்கும் இந்த அனுபவங்கள் சாட்சியாகின்றன!
தனது வாழ்வில் ஏற்பட்ட வலிகளையும், உள்ளத்தை உளியாக்கி அவற்றை உடைத்தெறிந்த வழிகளையும் தெளிந்த நீரோடையாக ஜெயராமன் சொல்வதை இந்த நூலில் படிக்கும்போது நெகிழ்ச்சியில் நெஞ்சு புடைக்கும். ஒரு சமையல்காரரால் இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்ற வியப்பு மனம் முழுக்க வியாபிக்கும்.
வறட்டி விற்று ஆகாரத்துக்கு வழி தேடிய ஆரம்ப காலப் போராட்டங்கள் தொடங்கி, சாப்பாட்டு உலகில் எவரும் எட்ட முடியாத அளவுக்கு சாம்ராஜ்யம் படைத்தது வரையிலான தமது அனுபவங்களை இதில் சுவையாக விவரிக்கிறார் ஜெயராமன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கூட்டாஞ்சோறு–>படிப்பு

9 Responses to எம்.ஜி.ஆரின் முதல் ரசிகன் !!

  1. RV says:

    Pleasant surprise! Welcome back, Srinivas!

  2. RV says:

    இதில் சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் சரியான தகவல்கள்தானா? இதில் சொல்லி இருப்பது போல எம்ஜிஆரை யாரும் தத்து எடுத்ததாக கேள்விப்பட்டதில்லை. எம்ஜிஆருக்கு 16 வயது என்றால் 1932-33 வருஷமாக இருக்க வேண்டும். அப்போது என்ன நாலைந்து தமிழ் சினிமா வந்திருந்தால் ஜாஸ்தி. அப்போதெல்லாம் நாடகம்தான் பிரபலமாக இருந்திருக்க வேண்டும். 32-இலேயே எம்ஜிஆர் சினிமாவுக்கு போகப் போகிறார் என்று எல்லாரும் வந்து அவரைப் பார்த்தார்கள் என்பது நம்பும்படியாக இல்லையே!

    ஜெகதீஸ்வரன் போன்ற எம்ஜிஆர் பக்தர்கள் clarify செய்யமுடியுமா?

  3. BaalHanuman says:

    ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் ரெடியாயிட்டிருந்த நேரம். பல பரபரப்புகளுக்கு நடுவுல எம்ஜியார் படத்தை ஆரம்பிச்சிருந்தார்.

    பாட்டு எழுத கவிஞர் வாலியை கூப்பிட்டிருக்காங்க. வாலி வழக்கம்போல வார்த்தைகளால ஜாலம் காட்ட, எம்ஜியாருக்கு ரொம்ப சந்தோஷம்.

    அமர்க்களமான ட்யூனோட வாலியோட வரிகளும் சேர, ரெக்கார்டிங் முடிஞ்சுது.

    பல பிரச்னைங்க இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு போய் ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்தார் தலைவர்.

    எடிட்டிங் முடிஞ்சு, இறுதிகட்ட வேலைங்க எல்லாம் முடிச்சு படம் கிட்டத்தட்ட ரெடி.

    படத்துல இருக்க அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்ஜியார் கூட இருந்தவங்க கிட்ட சொல்லிட்டிருந்தார்.

    எம்ஜியாருக்கு வாலி ரொம்ப செல்லம். “என்ன ஆண்டவரே..”ன்னு தான் கூப்பிடுவார்.. சரி.. வாலி கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு, எம்ஜியார் வாலிய கூப்பிட்டு, “இந்த படத்துல பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு.. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட போறதில்லை.. ” அப்டீன்னாராம்.

    வாலி சிரிச்சுகிட்டே கம்முனு இருந்திருக்கார்.

    “அட.. நிஜமா தான் சொல்றேன்.. உங்க பேர் வராது..”

    “என் பேரை போடாம உங்களால படத்தை ரிலீஸ் பண்ண முடியாது.”

    “அப்டியா..? நான் ரிலீஸ் பண்ணிட்டா..?”

    “எப்டிங்க ரிலீஸ் பண்ணுவீங்க..? படத்தோட பேரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’.. இதுல ‘வாலி’ங்கறத எடுத்துட்டா.. ‘உலகம் சுற்றும் பன்’ ஆயிடும்.. மக்கள் திலகம் நடிக்கும் ‘உலகம் சுற்றும் பன்’ அப்டீனா போஸ்டர் ஒட்டுவீங்க..?”

    எம்ஜியார் பலமாக சிரிச்சுகிட்டே வாலியை முதுகில் தட்டி, கட்டி பிடிச்சுகிட்டாராம்..!

  4. விமல் says:

    சினிமா வசனகர்த்தா ஆரூர் தாஸ் எழுதிய புத்தகத்தில் இருந்து (நன்றி : தினமலர்)
    _________________________________________

    ஒரு நாள் ஒப்பனை அறையில் நாங்கள் தனித்திருந்த வேளையில் எம்.ஜி.ஆர்., என்னிடம் (ஆரூர் தாஸ்) சொன்னார்:

    “பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான். அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கேன். இப்போ புகழின் உச்சியிலே இருக்கேன். வசதிக்குப் பஞ்சம் இல்லே. தினமும் என் வீட்டுல மூணு வேளையும் குறைஞ்சது 50–60 இலைங்க விழுது. ஆனாலும், ரெண்டே ரெண்டு குறைகளை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது. ஒண்ணு: குழந்தைங்க வாரிசு இல்லாத குறை ! இன்னொண்ணு…’

    நான் இடைமறித்து, “ஏன், பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க வாரிசு இல்லே. அதனால் என்ன குறைஞ்சி போயிட்டாரு !’ என்றேன்.

    “அப்படி இல்லே… காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்தால குழந்தைங்க இல்லாம போயிடுச்சி; ஆனா, எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே…

    “எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா?’ அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.

    “பெரிய, பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சி என் ஜாதகத்தைக் காட்டிக் கலந்து ஆலோசனை பண்ணுவேன், ஜோதிடர் கலையில் நிபுணர்களான ரெண்டு, மூணு பேரு மட்டும் ஒத்து ஒரே கருத்தைச் சொன்னாங்க…

    “இது பலதார ஜாதகம்! ஒங்க வாழ்க்கையிலே பல பெண்கள் குறுக்கிடுவாங்க… அவுங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க; ஆனா, அவுங்க யாரும் ஒங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க; குடுக்கவும் முடியாது. குறை அவுங்ககிட்டே இல்லே…’ன்னு…

    “சமீபத்தில் ஆயுள் இன்சூரன்சுக்காக முக்கியமான ஒரு பெரிய மருத்துவர்கிட்டே உடல் பரிசோதனை பண்ணிக்கிட்டேன். அவர் உங்க மாதிரி என் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். இனிமே எனக்கு குழந்தை உண்டாகிறதுக்கு வாய்ப்பே இல்லேன்னு உறுதியா சொல்லிட்டாரு.

    “அதைக் கேட்டு நான் அப்படியே உடைஞ்சி நொறுங்கிப் போயிட்டேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கவே இல்லே. அழுது, அழுது தலையணையே நனைஞ்சிடுச்சி.

    என் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு, எனக்கு ஒரு குழந்தை – ஒரே ஒரு குழந்தையைக் கூட குடுக்க மனசு வரலே பாத்தீங்களா ?

    “எத்தனையோ சகோதரிகள், தாய்மார்கள் அவங்க பெத்தக் குழந்தைகளை என் கையில் கொடுத்து என்னைப் பேர் வைக்கச் சொல்லும் போது, உள்ளுக்குள்ளே என் நெஞ்சு பதறும். ஆனாலும், அதை வெளியில் காட்டிக்காம, அந்தக் குழந்தைகளுக்கு அப்பப்போ எனக்குத் தோணுற பேரை வச்சி, அவுங்க ஆசையை நிறைவேத்துறேன். “போகட்டும்… நான் கொடுத்து வைச்சது அவ்வளவு தான் !

    என்னோட ரெண்டாவது குறை என்னன்னா… ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்திலே கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர பெரிசா ஒண்ணும் படிக்கத் தெரிஞ்சுக்கலே. இளமையிலே பட்ட வறுமை காரணமா அந்த வாய்ப்பு, வசதி இல்லாமப் போயிடுச்சி.

    “அண்ணாதுரை, கிருபானந்த வாரியார் இவுங்களோட சொற்பொழிவைக் கேட்கும்போது, என்னால அவுங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைச்சி வருத்தப்படுவேன். ஆனாலும், எப்படியோ பேசிச் சமாளிச்சி, மத்தவங்களை சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும் குறை, குறைதானே ! அதுவும் பூர்த்தி செய்ய முடியாத குறை. அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா அதுலயாவது நான் பெரிய புள்ளைக் குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும் !’

    நடிப்பிற்கு அப்பாற்பட்டு அவரது கண்கள் நீர் நிலைகளானதை நேரில் நான் கண்டது அதுவே முதல் முறை !

    — என அவர் எழுதி இருப்பதைப் படித்தபோது, எத்தனை பெரிய மனிதர்களானாலும், அவர்களுக்குள்ளும் ஏதோ குறை இருக்கத்தான் செய்யும் போலும் என எண்ணிக் கொண்டேன் !

  5. Ganpat says:

    90% இது நம்பக்கூடியதாக இல்லை.
    காரணம்:
    1.தன் நிழலைக்கூட நம்பாதவர் MGR.
    இவ்வளவு மனம் விட்டு அவர் யாரிடமும் பேசியிருக்க மாட்டார்.

    2. ஆரூர்தாசை விட நெருக்கமானவர்கள் அவருக்கு பலருண்டு.எனவே இதை அவரிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை

    10% அப்படி சொல்லியிருந்தாலும் அதை ஆரூர்தாஸ் வெளியிட்டது நாகரீகம் அன்று.

    அதேபோல்தான் ‘ஞானாம்பிகா’ ஜெயராமன் கூறியுள்ளதும்.

    மொத்தத்தில் ஒருவர் சமைத்திருக்கிறார்.ஒருவர் கதைவசனம் எழுதியிருக்கிறார்,என்றே நான் எண்ணுகிறேன்

  6. k.s.mani says:

    Aroordoss story of MGR was purely imaginary

பின்னூட்டமொன்றை இடுக