ஆயிரத்தில் ஒருவன் – சாரதா விமர்சனம்


சாரதா சிவாஜியின் முரட்டு பக்தை என்பது இந்த தளத்தின் வாசகர்களுக்கு தெரிந்த விஷயம். அவர் எம்ஜிஆருக்கு “எதிரி” இல்லை என்பதும் இந்த விமர்சனத்தைப் படித்தால் புரியும். ஓவர் டு சாரதா!

தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.

ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.

கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.

எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.

கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.

பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.

பாடல்களும் இசையும்:

இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.

  • 1. பருவம் எனது பாடல்
  • நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.

    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
    கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்

    பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர‌, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து

    இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்

    என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.

    (நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).

  • 2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
  • வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.

    ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
    நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
    வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
    நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே

    இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத‌ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.

  • 3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

  • இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க‌ள். பாதிப் பாட‌ல் அர‌ண்ம‌னை செட்டிலும் பாதிப்பாட‌ல் கார்வார் க‌ட‌ற்க‌ரையிலும் க‌ண்டினியூட்டி கெடாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

  • 4. உன்னை நான் ச‌ந்தித்தேன் நீ ஆயிர‌த்தில் ஒருவ‌ன்
  • பி.சுசீலா தனியாக‌ப் பாடிய‌ பாட‌ல். கூட‌வே ஆண்க‌ளின் கோர‌ஸ். ம‌ணிமாற‌னைப் பிரிந்த‌ பூங்கொடி, செங்க‌ப்ப‌ரின் அர‌ண்ம‌னையில் சோக‌மே உருவாக‌ பாடும் பாட‌ல், கூட‌வே க‌ப்ப‌லில் போய்க்கொண்டிருக்கும் ம‌ணிமாற‌னைக் காண்பிக்கும்போது, அவ‌ர‌து கூட்டாளிக‌ளின் உற்சாக‌மான‌ கோர‌ஸ்.

    பொன்னைத்தான் உட‌ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம‌ன‌மென்பேன்
    க‌ண்க‌ளால் உன்னை அள‌ந்தேன் தொட்ட‌ கைக‌ளால் நான் ம‌ல‌ர்ந்தேன்
    உள்ள‌த்தால் வ‌ள்ள‌ல்தான் ஏழைக‌ளின் த‌லைவ‌ன்

    அடுத்து வ‌ரும் இசை ‘பிட்’டைக் கேட்க‌ முடியாது, கார‌ண‌ம் ப‌ல‌த்த‌ கைத‌ட்ட‌லும், விசில் ச‌த்த‌மும். பாட‌ல் முடியும்போது, கோர‌ஸுட‌ன் க‌ப்ப‌ல்க‌ள் முல்லைத்தீவு க‌ரையில் ஒதுங்குவ‌தாக‌ காட்டுவ‌து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).

  • 4. ஆடாமல் ஆடுகிறேன்
  • கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.

    ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
    ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
    நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
    வா…வா…வா…. வா….வா…வா…

    முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.

    விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
    ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
    அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
    அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்

    ‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.

    (மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).

  • 5. நாணமோ… இன்னும் நாணமோ
  • நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).

    தோட்டத்துப் பூவினில் இல்லாதது
    ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
    ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
    ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?

    ஆடவர் கண்கள் காணாதது
    அது காலங்கள் மாறினும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது – அது இது

    பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.

  • 6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
  • அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.

    கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
    கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
    அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
    அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

    இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

    இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”

    நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.

    எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

    தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பதிவுகள், திரைப்படங்கள்

    தொடர்புடைய பதிவுகள்: ஆயிரத்தில் ஒருவன் – ஆர்வி விமர்சனம், ஜெயலலிதா நினைவுகள்

    பற்றி RV
    Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

    6 Responses to ஆயிரத்தில் ஒருவன் – சாரதா விமர்சனம்

    1. raja says:

      Simply Super….
      Even though i am 25 Now a days i used to watch MGR movies.
      But i saw this movie only because of my friend’s compulsion. its so super….

    2. Ganpat says:

      மிகவும் ஸ்ரத்தையாக ,கடும் உழைப்பிற்கு பிறகு எழுதப்பட்ட நேர்மையான விமரிசனம்.உங்கள் பெயர் ஸாரதாவா,ஸ்ரத்தாவா?

      (ம்ம்ம் எந்திரன் விமரிசனத்திற்கு கி.பி.2060 வரை காத்திருக்க வேண்டும் என்று நினைத்தால்தான் சற்று கஷ்டமாக இருக்கிறது!)

      (RV சொல்கிறார்:நமக்கு வாய்த்த வாசகர்கள் திறமைசாலிகள்.ஆனால் வாய்தான் சற்று அதிகம்!)

      ஆ.ஒ,MelBrooks படம் போல துவங்கினாலும் விறுவிறுப்பாக நகரும் படம்

      அமரர் பந்துலு அவர்கள் முதல் கப்பல் படத்தின் மூலம் உலகளாவிய புகழையும் இந்த கப்பல் படத்தின் மூலம் அளவிடமுடியாத செல்வத்தையும் பெற்றார்.

      இது அவரது நூற்றாண்டு வருடமாகும்.

      பி.கு.:S.S.சந்திரன் பற்றிய என் பின்னூட்டம் எங்கே RV ji?

    3. சாரதா says:

      //(ம்ம்ம் எந்திரன் விமரிசனத்திற்கு கி.பி.2060 வரை காத்திருக்க வேண்டும் என்று நினைத்தால்தான் சற்று கஷ்டமாக இருக்கிறது!)//

      கன்பத்…
      2060-ல் நான் பரலோகத்திலிருந்து அனுப்பும் விமர்சனம் பூலோகத்திலிருக்கும் ஆர்.வி.க்கு வந்து சேருமளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறிவிடுமா என்பது தெரியாது. அப்படி முன்னேறினாலும் ‘எந்திரன்’படத்துக்கு நான் விமர்சனம் எழுதுவது என்பது நடவாது.

      காரணம், ‘மாண்புமிகு டாக்டர் ஷங்கர் சார்’ மற்றும் ‘மாண்புமிகு டாக்டர் மணிரத்னம் சார்’ போன்றோரின் படங்களை விமர்சிக்கும் தகுதியோ, திறமையோ, அதற்கென தேவைப்படும் தனிப்பட்ட அறிவுஜீவித்தனமோ பாமரத்தியான எனக்கு சர்வ நிச்சயமாகக்கிடையாது.

      அதற்காக புதுப்படங்களைத் தொடக்கூடாது என்ற விரதம் எதுவுமில்லை. நம்ம லெவலுக்கு… ஸாரி.. என்னுடைய லெவலுக்கு ஏற்றாற்போல படங்களை விமர்சிக்கத்தான் செய்கிறேன்.

      அந்த வகையில் சமீபத்தில் வந்த ‘களவாணி’ என்ற மனதை வருடும் படத்துக்கு என் விமர்சனம், ‘சாரதா பதிவுகள்’ பகுதியில். (ஆர்.வி.யின் கருணையில் அது மெயின் பதிவுகள் பகுதியில் இடம்பெறக்கூடும்).

      • RV says:

        கருணை காட்டி வருவது நீங்கள்தான், சாரதா! நீங்களும் விமலும் பேசாமல் இணை பதிவர்களாக சேரலாம். அதைப் பற்றி பேசத்தான் உங்கள் ஈமெயில் கேட்டிருந்தேன்… விமலுக்கும் வேலைப் பளுவோ என்னவோ இன்னும் பதில் இல்லை…

    4. Ganpath says:

      சாரதா ஜி,

      எல்லாம் வல்ல சரஸ்வதி தேவியின் பரிபூரண அருளாலும் ஆசிகளாலும் நீங்கள் நூறுவயதை கடந்து சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள்! ததாஸ்து!

      சரியாக சொன்னீர்கள்! நிச்சயமாக நீங்கள் நம்ம லெவல் இல்லைதான் ..மிக உயரத்தில் இருக்கிறீர்கள்.என்னதான் முயன்றாலும் தருமி (நான்) சிவனாக(நீங்கள்) முடியுமா?

      “கலைவாணி தினம்” முடியட்டும் .**வாணி விமரிசனத்தைப்படிக்கிறேன்.

      பதிலுக்கு நன்றி

    பின்னூட்டமொன்றை இடுக